ஒரு சமயம் கைலாயத்தில் சிவபெருமான் அம்பிகையை விட்டு மாயமாய் மறைந்தார். தனியாய் தவித்த உமையவள், அருகிலிருந்த மரத்தில் கண்ணைப் பறிக்கும் ஒளியைக் கண்டாள். ஒளி வந்த இடத்தில் உடும்பு ஒன்று இருந்தது. சிவனே இப்படி உடும்பாய் மாறியிருந்தது உமையவளுக்குப் புரியவில்லை. அவள் அந்த அதிசய உடும்பைப் பிடிக்க முயற்சித்தாள். அது தப்பி ஓடியது. இறுதியில் செண்பகவனம் என்ற காட்டிலுள்ள மலையில் ஏறியது. அங்கு தவம் செய்த முத்கலர், உச்சாயினர் என்ற முனிவர்கள் உடும்பின் அழகில் தம்மைப் பறிகொடுத்து பின்னே சென்றனர். மலையேறிய உடும்பு லிங்கமாக மாறியது. அம்பிகை, அவளது தோழிகள், முனிவர்கள் ஆகியோர் அந்த லிங்கத்தைப் பூஜித்தனர். ஓசூரில் இந்த செண்பகவன மலை அமைந்துள்ளது. உடும்பாய் வந்த சிவன் மலைஉச்சியில் சந்திரசூடேஸ்வரர் என்ற பெயரில் மிகவும் சிறிய லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். லிங்கத்தின் சிரசில் பிறைநிலா ஒளி வீசும்.