Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
இளையாற்றங்குடி மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 நவ
2014
05:11

ஆலயங்கள் நிறைந்து நிற்கும் புண்ணிய பூமி; சைவமும் வைணவமும் சரிசமமாக சஞ்சாரம் செய்யும் சமத்துவ பூமி; மொத்தத்தில் ஆன்மிகம் பல்கிப் பெருகி, மனதைப் பரவசமாக்கும் புனித பூமி காஞ்சி மாநகர்.  எண்ணற்ற திருக்கோயில்கள் இந்த நகரம் முழுதும் தரிசிக்கக் கிடைக்கின்றன.  அருள்மிகு காஞ்சி காமாட்சியின் திருச்சந்நிக்கும் ஸ்ரீவரதராஜ பெருமாளின் தரிசனத்துக்கும் இறையருள் பெறும் நாட்டத்துடன் எந்நேரமும் கூடும் பக்தர்கள் கூட்டத்துக்குஅளவே இல்லை! காஞ்சிக்குப் பெருமை சேர்ப்பதே சங்கர மடம்தான்.  ஆதிசங்கரரால் நிர்மாணிக்கப்பட்ட இந்த மடத்துக்கு அவரே முதல் ஆசார்யராக விளங்கினார்.  பேதங்கள் மலிந்திருந்த அந்தக் காலத்தில் இந்து மதத்தின் பெருமைகளை, அனைவருக்கும் எடுத்துக்கூறி, சமய உணர்வுகளை ஊட்டினார்.  இந்து மதம் ஏன் உயர்ந்தது என்பதை விளங்கினார்.

அவரில் துவங்கி, இன்று 69-வது காஞ்சி காமகோடி பீடாதிபதியாக ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும், 70-வது காஞ்சி காமகோடி பீடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் திகழ்ந்து வருகிறார்கள்.  இவர்களுக்கு முன் 68-வது பீடாதிபதியாக திகழ்ந்தவர்தான் - கலியுக தெய்வம் என்று நாடே போற்றும் ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸ்வாமிகள் என்கிற மகா பெரியவர். இந்த புனிதமான மடத்தில் 65-வது பீடாதிபதியாக விளங்கியவர் மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (காலம் கி.பி.1851-1890).  திருவிடைமருதூரில் அவதரித்தவர்.  காரைக்குடிக்கு அருகில் உள்ள இளையாற்றங்குடியில் நாட்டுக்கோட்டை செட்டியார்களுக்கு சொந்தமான நித்யகல்யாணி சமேத கயிலாயநாதர் ஆலயத்துக்கு அருகே அதிஷ்டானம் கொண்டுள்ளார்.  (நட்டுக்கோட்டை நகரத்தார் கொண்டாடும் ஒன்பது சிவாலயங்களுள் இது பிரதானமான தலம்).

இதை இளையாத்தங்குடி என்றும் சொல்கிறார்கள்.  புதுக்கோட்டையில் இருந்து சுமார் 42 கி.மீ. தொலைவு. புதுக்கோட்டையில் இருந்து  நமணசமுத்திரம், திருமயம், கீழச்செவல்பட்டி வழியாக இளையாற்றங்குடியை அடையலாம்.  கீழச்செவல்பட்டியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு.  காரைக்குடியில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவு.  பிள்ளையார்பட்டியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவு. திருப்பத்தூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவு. நாட்டில் பல பகுதிகளுக்கும் யாத்திரையாகச் சென்று, மக்களிடையே பல ஆன்மிகக் கருத்துக்களைப் போதித்து வந்த மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.  சிவகங்கை மற்றும் காளையார்கோவில் ஆகிய தலங்களையும் தரிசித்தார்.  அப்போது ஸ்வாமிகளைத் தரிசிக்க வந்த நகரத்தார், எங்கள் பகுதிக்கும் தாங்கள் எழுந்தருள வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.  ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ, வாத்தியங்கள் முழங்க இளையாற்றங்குடி ஷேத்திரத்துக்கு வந்தார்.

ஸ்ரீநித்யகல்யாணி சமேத கயிலாயநாதரை தரிசித்துவிட்டு, நகரத்தாரின் பக்தியையும் சேவையையும் பார்த்துப் பெரிதும் மகிழ்ந்தார்.  அதற்கேற்றாற்போல் ஸ்வாமிகள் தங்குவதற்கும் அவருடைய சிவ பூஜைக்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கச்சிதமாகச் செய்திருந்தனர்.  ஸ்வாமிகள் பல நாட்கள் இங்கு தங்கியிருந்து தங்களுக்கு ஆசி வழங்கிச் செல்லும்படி வேண்டினர் நாட்டுக்கோட்டை செட்டியார் பெருமக்கள்.  அவர்களது அன்பான வேண்டுகோளை ஏற்று, நிரந்தரமாகவே அங்கு தங்கிவிட்டார் ஸ்வாமிகள், என்பதுதான் உண்மை. தனது ஜீவன் முக்தியடையப்போவது இங்கேதான் என்பதையும் இறைவன் சித்தத்தால் ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்டார். மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் .  அதற்கான ஓர் இடத்தையும் அவரே தேர்ந்தெடுத்தார்,  நகரத்தாருக்குச் சொந்தமான  நிலத்தில், குறிப்பிட்ட ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து, அதை அவர்களிடம் இருந்து கேட்டு வாங்கிய ஸ்வாமிகள், அந்த இடத்தில்தான் சமாதி கொண்டுள்ளார்.  ஸ்வாமிகள் இன்று இளைப்பு ஆறும் குடிதான் இளையாற்றங்குடி.  காரணம் சிறு வயது முதல் அவர் சுற்றித் திரிந்த ஷேத்திரங்கள் ஏராளம்.  தனது இறுதிக் காலத்தில் அமைதியான சூழ்நிலையை விரும்பி இங்கே இளைப்பாற்றிக் கொண்டிருக்கிறார் என்பார்கள்.

தனக்குப் பிறகு ஓர் ஆசார்யரை நியமித்துவிட வேண்டும் என்று விரும்பினார் ஸ்வாமிகள் .  உதயம்பாக்கத்தைச் சேர்ந்தவரும் பிரம்மசர்ய விரதம் காத்துவரும் பாலாற்றங்கரையில் வசித்து வந்தவருமான சுவாமிநாதன் என்ற இளைஞரைத் தேர்ந்தெடுத்து சந்நியாச தர்மப்படி தீட்சை வழங்கினார். பூஜை விதிகளையும் மடத்து சம்பிரதாயங்களையும் உபதேசித்ததுடன்  ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்ற தீட்சா நாமத்தையும் அருளினார்.  இதையடுத்து, இளைய மடாதிபதியாக பொறுப்பேற்ற ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸ்வாமிகள் (மகா பெரியவர் அல்ல).  மகாதேவேந்திர ஸ்வாமிகளுக்குப் பணிவிடை செய்து வந்தார். தான் சமாதி ஆகப் போகும் சில நாட்களுக்கு முன்னரே , அதை சூசகமாக உணர்ந்துவிட்டார் மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.  முக்காலமும் உணர்ந்தவர் ஆயிற்றே! சமாதி அடைவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர், ஒரு மாலை வேளையில் இளையாற்றங்குடி கயிலாயநாதர் ஆலயத்துக்கு அருகில் உள்ள தோப்புகளையும் பிற பகுதிகளையும் சுற்றிப் பார்த்துக்கொண்டே வந்தார். ஓர் இடத்தை கடந்து செல்ல நேரிட்டபோது, அங்கேயே அப்படி நின்றார்.

அவர் மனதில் ஏதோ ஒரு மின்னல் தோன்றியது.  தனக்குப் பின்னால் பவ்வயமாக நடந்து வந்து கொண்டிருந்த தேவஸ்தானத்தின் டிரஸ்டியான செட்டியரசர் பிரமுகர் ஒருவரைத் தன்னருகே வருமாறு அழைத்தார் செட்டியார் ஓடோடி வந்து, ஸ்வாமிகள் முன் வணங்கி நின்றார். முட்சொடிகள் புதர்போல் மண்டிக் கிடந்த அந்த இடத்தைச் சுட்டிக்காட்டி, இந்த நிலத்தை எமக்குத் தருவீர்களா?  என்று கேட்டார்.  ஸ்வாமிகள்.  எந்த நோக்கத்துக்காக அந்த இடத்தை ஸ்வாமிகள் கேட்கிறார் என்று செட்டியாருக்கு புலப்படவில்லை என்றாலும், ஸ்வாமிகளே வாய்விட்டு ஓரிடத்தைத் தருமாறு கேட்டு விட்டாரே.  அவருக்குப் போய் செடி, கொடிகள் மண்டிப்போன இடத்தைத் தருவதா?  சிவன் கோயிலுக்கு அருகே நல்ல இடமாகப் பார்த்துத் தரலாம்.  தினமும் தரிசனத்துக்குச் சென்று வருவதற்கும்  அவருக்கு வசதியாக இருக்கும் என்று நினைத்து, தன் ஆசையை ஸ்வாமிகளிடம் பவ்யமாகச் சொன்னார். ஆனால் ஸ்வாமிகள், இந்த இடம்தான் எமக்குத் தேவை.  உங்களால் கொடுக்க இயலுமா? என்று கேட்டார்.

ஸ்வாமிகள் இப்படிக் கேட்டதும் மனம் உருகிய செட்டியார், தங்களின் விருப்பப்படியே நிறைவேற்றுகிறேன்.  கவலை வேண்டாம் ஸ்வாமி என்று சொன்னாரே தவிர, ஸ்வாமிகளின் எண்ணத்தை அவரால் அறிந்துக்கொள்ளமுடியவில்லை. ஸ்வாமிகள் தனது இறுதி நாட்களில் இருக்கிறார் என்பதை செட்டியார் அப்போது அறிந்திருக்கவில்லை. மறுநாள்! ஸ்வாமிகளின் உடல்நலன் லேசாக பாதிக்கப்பட்டது. மூன்றாம் நாள், 20.03.1890 அன்று ஸ்வாமிகள் முக்தி அடைந்தார். நாட்டுக்கோட்டை நகரத்தார் இன பிரமுகர்கள் உட்பட பலரும் மளமளவெனக் குவிந்தனர்.  இளையாற்றங்குடி என்கிற ஷேத்திரத்துக்குத் தனது வருகையால், ஒரு புதுப் பொலிவைக் கொடுத்தவர்.  மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்பதை அவர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள்.  அவருக்கு செய்ய வேண்டிய கடைசிக் காரியங்கள், முறையாக நடக்க வேண்டுமே என்கிற அக்கறையில் அனைவரும் கூடினர்.  குறிப்பிட்ட ஒரு நிலத்தை ஏன் விடாப்பிடியாகக் கேட்டார் ஸ்வாமிகள் என்பது இப்போதுதான் தேவஸ்தான டிரஸ்டியான அந்த செட்டியாருக்குப் புரிந்தது!

நாட்டின் பல பகுதிகளால் இருந்தும் ஆன்மிகப் பெருமக்கள் குவிந்தனர்.  காஞ்சி மடத்தில் 63வது ஆசிõரிய ஸ்வாமிகள் ஸித்தி ஆன செய்தியை எவரெவருக்குத் தெரிவிக்க வேண்டுமோ, அனைவருக்கும் ஆட்கள் மூலம் தகவல் அனுப்பினார்கள் நகரத்தார் பெருமக்கள். கீர்த்தனங்கள் பாடப்பட்டன.  நாம கோஷம் கோரஸாக வெளிப்பட்டது.  கயிலாயநாதர் கோயிலுக்கு வடக்குத் திசையில் உள்ள விரிவான ஒரு தோட்டத்தில் (ஸ்வாமிகள் விரும்பிக் கேட்ட அதே இடம்தான்) அதிஷ்டானம் அமைக்கப்பட்டது.  ஸித்தி பெற்ற தினத்தில் இருந்து தொடர்ந்து ஒரு மண்டல காலத்துக்கு பூஜைகள், பாராயணங்கள் என்று வேத கோஷம் நிறைந்து காணப்பட்டது.  விஜயநகரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கொல்லங்கோடு, கொச்சி போன்ற சமஸ்தானத்தில் பிரதிநிதிகள் மண்டலாபிஷேக காலத்தில் இளையாற்றங்குடிக்கு வந்திருந்து. ஸ்வாமிகளுக்கு தங்கள் சமஸ்தான சார்பாக உரிய மரியாதையை செலுத்தி வணங்கினார்கள்.

ஏழைகளுக்குப் பல வகையான தானங்கள் வழங்கப்பட்டன.  இறைத்திருப்பணியில் தங்களை பெரிய அளவில் ஈடுபடுத்திக் கொண்ட நகரத்தார் பெருமக்கள், பின்னாளில் ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தை திருக்கோயிலாக கட்டி, பராமரித்து வருகிறார்கள். கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ள திருவிடைமருதூரில் ஸ்வாமிகள் அவதரித்தார்.  அவருடைய தந்தையார் பெயர் சோஷத்ரி சாஸ்திரிகள்.  தந்தை ரிக் வேதத்திலும் அதன் பிரயோகங்களிலும் வல்லவர்; சிறந்த சிவபக்தர்.  திருவிடைமருதூரில் உறையும் மகாலிங்க ஸ்வாமியின் அருளால் தனக்கு மகன் பிறந்ததால் அவனுக்கு மகாலிங்கம் என்றே பெயர் சூட்டி மகிழ்ந்தார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு ஏற்ப பிற்காலத்தில் பிரகாசிக்கப் போகும் மகாலிங்கமும் குழந்தைப்பருவத்திலேயே சிறந்து விளங்கினார்.  அவன் முகத்தில் தெரிந்த கம்பீரமான தேஜஸ், கண்களில் தெரிந்த ஒளி, எந்த ஒரு காரியத்தையுமண சுறுசுறுப்புடன் செய்து முடிக்கும் சாதுர்யம் போன்றவை பலராலும் வியந்து பேசப்பட்ட விஷயங்கள்! ஐந்து வயது முடிந்த பிறகு உபநயனம் செய்து வைக்கப்பட்டது.  இளமைப் பருவத்தில் தன் தந்தையாரிடமே வேதத்தைக் கற்றார்,  தினமும் செய்ய வேண்டிய ஆசார அனுஷ்டானங்களை முறையாகச் செய்து வந்தார்.  அவருடைய கீர்த்தி, திருவிடைமருதூரில் மட்டுமில்லாமல் பல இடங்களிலும் பேசப்பட்டது.

அப்போது காஞ்சி சங்கர மடத்தில், 64வது பீடாதிபதியாக இருந்தவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (1814-1851)
வேதம், சாஸ்திரம் போன்றவற்றில் சிறந்து விளங்கிய திருவிடைமருதூர் மகாலிங்கம் என்ற இளைஞனைப் பற்றி இந்த ஆசார்யருக்கு தகவல் தெரிந்திருந்தது. அவர் 1846ல் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்குத் தாடங்கபிரதிஷ்டை (தாடங்கம் என்பது காதல் அணியும் ஆபரணம்) நடத்தினார்.  இந்த நிகழ்வுக்கான வைதீக விஷயங்களை முன்னின்று கவனிக்கும்படி மகாலிங்கத்தைப் பணித்தார். ஆசார்யர். அதை, சிரமேற்கொண்டு செய்து முடித்தார் மகாலிங்கம்.  இத்தனை சின்ன வயதில் இப்படிப்பட்ட ஒரு பெரும் பணியை ஏற்று நடத்தி முடித்த மகாலிங்கத்தின் சாதுர்யம், பலரையும் அவர் பக்கம் திரும்ப வைத்தது. அதற்கு ஆசார்யரும் விதிவிலக்கல்ல.  எத்தனையோ பண்டிதர்கள், மன்னர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்ட ஒரு நிகழ்வின் பிரதான வைதீக காரியத்தை இளைஞன் கச்சிதமாக முடித்துவிட்டானே! பலரும் பிரமிக்கும்படி பாரட்டுகளைப் பெற்று விட்டானே என்று சந்சோஷப்பட்டார் 64வது பீடாதிபதி.

அப்போது அவர் ஒரு தீர்மானத்துக்கும் வந்தார். நமக்குப் பிறகு இந்த பீடத்தை அலங்கரிக்க இவரே தகுதியானவர். இவரால்தான் மடத்தன் பெருமைகள் மேலும் உயரும் என்று தீர்மானித்தார். மகாலிங்கத்தின் பெற்றோரை வரவழைத்துப் பேசி, சம்மதம் வாங்கினார். ஒரு சுபதினத்தில் மகாலிங்கத்துக்கு சந்நியாச தீட்சை வழங்கினர். காஞ்சி காமகோடி மடத்தின் சம்பிரதாயப்படி என்னென்ன போதிக்க வேண்டுமோ அனைத்தையும் போதித்து அருளினார் 64வது பீடாதிபதி.  மகாலிங்கத்துக்கு மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்று தீட்சா நாமம் சூட்டினார்.  1851ல் கும்பகோணம் ஸ்ரீமடத்தில் 64வது பீடாதிபதி சமாதி எய்த பின், 65வது பீடாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். மகாலிங்கம் என்கிற மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.

புதுப்பெரியவர் வரவுக்குப் பின் காஞ்சி மடத்தின் பெருமையும் புகழும் திக்கெட்டும் பரவியது.  தினமும் நடக்கும் சந்திரமௌளீஸ்வர பூஜையைத் தவிர, வேத பாராயணங்கள், விசேஷ ஹோமம் என மடத்தில் எப்போதும் மந்திர கோஷம்தான். வேள்விப் புகைதான்.  புது ஆசார்யரின் கீர்த்தி பற்றிக் கேள்விப்பட்டுப் பல பண்டிதர்களும் பொது ஜனங்களும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து புறப்பட்டு காஞ்சிக்கு வந்து அவரை தரிசனம் செய்தனர். எத்தனை நாட்களுக்குத்தான் மடத்தில் இருந்துகொண்டே எல்லாவற்றையும் கவனிப்பது?  எனவே, ஷேத்திராடனம் புறப்பட விருப்பம் கொண்டார் ஸ்வாமிகள். மடத்தைச் சேர்ந்த பரிவாரங்களுடன் மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில், சிதம்பரம், விழுப்புரம் எனக் கிளம்பினார்.  செல்லும் இடத்தில் எல்லாம் சிறப்பான வரவேற்பு.  புது ஆசார்யர் வருகிறார் என்றதும், அக்கம்பக்கத்துக் கிராமங்களிலிருந்து எண்ணேற்றோர் தரிசிக்க வந்தனர். ஆந்திரப் பிரதேசம், பூரி ஜகந்நாதர் திருக்கோயில், விஜயநகர சாம்ராஜ்ஜியம் எனப் பயணம் தொடர்ந்தது. மடத்துக்கு தானமாகப் பல கிராமங்களை எழுதித் தந்தனர்.  ஆந்திர மன்னர்கள் .  3.7.1885 அன்று விஜயநகரத்துக்கு சென்றார். ஸ்வாமிகள்.  விஜயநகர ராஜாவான ஆனந்த கஜபதி மகாராஜா, நகரத்து எல்லையிலேயே யானை, குதிரை, ராஜபரிவாரம் ஆகியவை புடைசூழ, வாத்தியங்கள் முழங்க, பூர்ண கும்ப மரியாதையோடு வரவேற்று மகானின் கால்களில் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான்.  விஜயநகரத்திலேயே சாதுர்மாஸ்ய விரதத்தை மேற்கொண்டார்.  ஆந்திராவில் பிரபலமாகத் திகழ்ந்த ஜமீன்தார்களும் ராஜாக்களும் தங்களது ஊருக்கு ஸ்வாமிகள் எழுந்தருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் தூனி, பார்லிகிமேடி, பித்தாபுரம். பொப்பிலி, வெங்கடகிரி போன்ற நகரங்களுக்கு விஜயம் செய்தார்.கோதாவரி, கிருஷ்ண ஆகிய புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்து  காளஹஸ்தியை அடைந்தார்.  காளஹஸ்தி மகாராஜாவின் உபசரிப்பை ஏற்றுக்கொண்டு, காளஹஸ்தீஸ்வரரை தரிசித்தார்.

அதன்பின், சென்னை வழியாகக் காஞ்சிபுரத்தை அடைந்தார்.  சில நாட்களுக்குப் பிறகு யாத்திரை மீண்டும் தொடர்ந்து.  திருப்பாதிரிப்புலியூர்.  தாஞ்சாவூர், தென் ஆற்காடு, திருச்சி, கோவை, கேரள தேசம் ஆகிய இடங்களுக்குப் பயணித்து சூழ்நிலைக்கு ஏற்றாவறு ஆங்காங்கு தங்கி, பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.  அப்போது கும்பகோணம் வந்த ஸ்வாமிகள், மகாமக நிகழ்வில் கலந்துகொண்டார். தனது வாழ்நாளில் தெற்கே ராமேஸ்வரத்தில் இருந்து வடக்கே காசி வரை நாட்டின் பல பகுதிகளுக்கு பாதயாத்திரையாகவும் பல்லக்கிலுமாகப் பயணித்து, ஏராளமானோருக்கு ஆசிகளை வழங்கினார் மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். திறமை எவரிடம் இருந்தாலும் அவருக்கு உரிய மரியாதை கொடுத்து கௌரவிக்க ஸ்வாமிகள் எப்போதுமே தயங்க மாட்டார். சிவபுராணம் கேட்பதில் ஸ்வாமிகளுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.  அதைப் பொருத்தமான நபர் பிரசாங்கம் செய்தால் வெகு சுவாரஸ்யமாகக் கேட்டு ரசிப்பார். அந்தக் காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் ரிஷிவந்தியம் என்னும் கிராமத்தில் வெங்கட்ராம ஐயர் என்பவர் வசித்து வந்தார். சத்தான பல விஷயங்களைக் கற்றுக் தேர்ந்தவர்; பழுத்த சிவபக்தர்.  தவிர, மிராசுதாராகவும் இருந்தார்.  தனது பணிகள் போக எஞ்சிய நேரத்தில் உள்ளூர் அன்பர்களுக்கு சிவபுராண சொற்பொழிவு நிகழ்த்துவார். பக்தியுடனும் உருக்கத்துடனும் வெங்கட்ராம் ஐயர் நிகழ்த்தும் சிவபுராண உபன்யாசங்களைக் கேட்க, நூற்றுக்கணக்கான பேர் திரளுவார்கள்.

மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். வெங்கட்ராம ஐயரைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவருடைய சிவபுரணப் பிரசங்கத்தைக் கேட்க வெகுவாக ஆவல் கொண்டார்.  எனவே, கும்பகோண மடத்தில் தான் தங்கியிருந்த நாட்களில் வெங்கட்ராம ஐயரை அங்கே வரச் செய்து, சிவபுராண உபன்யாசம் செய்யுமாறு சொன்னார். வெங்கட்ராம ஐயரும், கும்பகோண மடத்துக்கு வந்து அங்கேயே சில நாட்களில் தங்கி, தினமும் சொற்பொழிவாற்றினார்.  உபன்யாச நாட்களில் தினமும் ஸ்வாமிகள் நேரில் வந்து அமர்ந்து, உபன்யாசத்தைக் கேட்டு வந்தார்.  இது, வெங்கட்ராம ஐயருக்குப் பெரும் சந்தோஷத்தைக் கொடுத்தது. சிவபூஜை செய்வதில் மிகவும் தேர்ந்தவர் மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.  அவர் சிவபூஜை செய்யும் நேர்த்தியைக் கண்டு, பண்டிதர்கள் பலரும் வியந்துள்ளனர்.  தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயருக்குப் பதினெட்டு வயதாக இருக்கும்போது, ஸ்வாமிகள் சிவபூஜை செய்யும் காட்சியை மனமாரக் கண்டு தரிசித்திருக்கிறாராம்.  அதோடு, உ.வே.சாமிநாதனின் புராணப் பிரசங்கங்களையும் ஸ்வாமிகள் கேட்டுப் பராட்டி இருக்கிறாராம், ஸ்வாமிகள், இசையிலும் வேதத்திலும் அபார ஞானமும் புலமையும் உள்ளவர்.  வேத வித்துக்களையும் சங்கீத வித்வான்களையும் தகுந்த நேரத்தில் ஆதரித்து அவர்களுக்கு ஊக்கம் அளித்திருக்கிறார்.

ஸ்வாமிகளிடம் கொண்டிருந்த அபரிமிதமான அன்பின் வெளிப்பாட்டால், அவர் மேல் கீர்த்தனம் இயற்றியவர்கள் பலர். அவர்களுள் மைசூர் சதாசிவராவ், முத்துசாமி தீட்சிதரின் வம்சத்தவரான சுப்பராம தீட்சிதர், திருவாரூர் யக்ஞேஸ்வர ஆஸ்ரமி, கவிகுஞ்சரா பாரதியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.  ஸ்ரீமகாதேவேந்திரசரஸ்வதி ஸ்வாமியின் திருக்கோயிலைத் தரிசிப்போமா? ஸ்வாமிகளது பூத உடலை வைத்து அதன் மேல் ஒரு சிவாலயத்தை எழுப்பி உள்ளனர்.  எனவே, ஒரு சிவ தலத்துக்கான பலிபீடம், நந்திதேவர் ஆகியவை இங்கே அமைந்துள்ளன. கருங்கல் திருப்பணி, உள்ளே நுழைவதற்கு முன் ஒரு கல்வெட்டு, அதில் அதிஷ்டானமும் அதைச் சேர்ந்த கட்டடங்களும் இளையாத்தங்குடி கயிலாயநாத ஸ்வாமி, நித்ய கல்யாணி அம்மை தேவஸ்தானத்துக்கு முற்றிலும் சொந்தமானது என்று குறிக்கப்பட்டுள்ளது.  கைலி, சட்டை, பனியன் அணிந்து உள்ளே செல்லக்கூடாது.  கருவறை பகுதி அத்தனை பவித்திரமானது. ஸ்வாமிகளின் சமாதியின் மேல் அமைந்துள்ளது லிங்கத் திருமேனி.  அர்த்த மண்டபம், மகா மண்டபம், பெரிய முன் ஹால் போன்றவை உள்ளன்.  மகா மண்டபத்தில் விநாயகரும் தண்டாயுதபாணியும் வீற்றிருக்கிறார்கள்.  இதை அடுத்த அர்த்த மண்டபத்தில் இன்னொரு விநாயகரும் ஆதிசங்கரரும் தரிசனம் தருகிறார்கள்.

கருவறையில் காணப்படும் லிங்கத் திருமேனியின் பாணம். சாளக்கிராமத்தால் ஆனது.  மடி மற்றும் ஆசாரம் காரணமாக இவருக்கான நைவேத்தியம் தினமும் குமுட்டி அடுப்பில்தான் தயராகிறது.  பெரும்பாலும் நெய் கலந்த சாதம் அல்லது தயிர் சாத்தை ஸ்வாமிகளுக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.  நகரத்தாரின் கட்டுப்பாட்டிலும் அருகிலும் இருக்கும் கயிலாயநாதர் ஆலயத்தில் இருந்து சிறிது அரிசி, வெல்லம், எண்ணெய் போன்றவை தினமும் அதிஷ்டானத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.  இந்த அதிஷ்டானத் திருக்கோயிலுக்கு 1992,2003 ஆகிய வருடங்களில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. தினமும் நான்கு கால பூஜைகள் நடந்து வருகின்றன.  லிங்கத்திருமேனிக்கு அபிஷேக காலத்தில் திரவியம், தேன், பால், சந்தனம் போன்ற பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடக்கிறது.  பிரதோஷ தினங்களில் நந்திதேவருக்கும், சதுர்த்தசியில் விநாயருக்கும், ஏகாதசி மற்றும் துவாதசியில் ஆதிசங்கரருக்கும் அபிஷேகங்கள் நடக்கின்றன. இங்கு சிறப்பாக நடந்துவரும் வேத பாடசாலையில். பதினைந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், கிருஷ்ண யஜுர் வேதம் பயின்று வருகிறார்கள்.  வேதம் படிக்கும் வித்துக்களைப் பார்த்தாலே அழகுதான்!

பாடசாலையும் ஆலய அபிஷேகங்களையும் கவனித்து வரும் வருணகுமார சர்மா, ஏகாதசி, துவாதசி போன்ற சில தினங்களில் லிங்கத் திருமேனிக்குப் பட்டு வஸ்திரம் அணிவிப்பேன்.  மற்ற நாட்களில் காவி வஸ்திரம்தான்.  இங்கு பூஜை செய்வதற்கு மடியும் ஆசாரமும் மிக மிக அவசியம்.  சுத்தபத்தம் இல்லாமல் உள்ளே போகக்கூடது. ஒருவேளை அப்படிப் போனாலும் வாசல் நிலைப்படி நம் உச்சந்தலையில் இடித்து, நமது சுத்தக் குறைவை உணர்த்திவிடும்.  ஸ்வாமிகளை ஆழ்ந்து தியானித்து தரிசிப்பவர்கள், அவருடைய சக்தியை இந்த சந்நிதியில் உணர முடியும்.  ஸ்வாமிகள் இன்றைக்கும் இங்கு மானசீகமாக இருக்கிறார்.  தன்னை வணங்கும் பக்தர்களைக் காத்து வருகிறார்.  பக்தர்கள் எவருமே இல்லாதபோது சந்நிதியில் ஸ்வாமிகள் சிரிப்பது போன்ற சத்தத்தையும் பேசுவது போன்ற ஒலியையும் நான் அவ்வப்போது கேட்டதுண்டு.  அந்த அனுபவங்களை நினைத்து மெய் சிலிர்க்கிறேன் என்றார் நம்மிடம்.  அதிஷ்டானம் மற்றும் வேத பாடசாலையின் தேவைகளை காஞ்சி மடத்தின் மேற்பார்வையுடன் அவ்வப்போது கவனித்து வருபவர் சுந்தரேச ஐயர்.  ஓய்வு பெற்ற ஆசிரியான இவர்.  புதுக்கோட்டையில் வசித்து வருகிறார்.

அதிஷ்டானத்தை ஒட்டி வெளிப்பக்கம் ஒரு பிரமாண்ட வில்வ மரம் இருக்கிறது.  மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். இங்கே தங்கியிருந்த காலத்தில் இருந்தே இந்த வில்வ மரம் இருந்து வருகிறது.  இதன் இலைகளை அவரே பறித்து ஸ்ரீசந்திரமௌளீஸ்வரருக்கு பூஜை செய்வாரம்.  இதுபோன்ற உயர்வான வில்வ இலைகளை இதுவரை சிவபூஜைக்குக் கிடைத்தில்லை என்பாராம் ஸ்வாமிகள்.  அந்த அளவுக்கு இந்த வில்வ மரத்தின் மேல் ஒர் ஈடுபாடு. காஞ்சி மகா பெரியவருக்கு, மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மேல், பெரும் அபிமானம் உண்டு.  புதுக்கோட்டை பகுதிக்கு யாத்திரையாக வரும்போதெல்லாம், மறக்காமல் இளையாற்றங்குடிக்கு வந்து அதிஷ்டானத்தில் தங்கி, தியானத்தில் ஈடுபடுவது வழக்கம்.  1925ல் காஞ்சி மகா பெரியவர்,  இனையாற்றங்குடிக்கு வந்தபோது இங்கு வியாஸ பூஜை நடத்தி, சாதுர்மாஸ்ய விரதம்  மேற்கொண்டார்.  தவிர, மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு ரொம்பவும் அபிமானமான வில்வ மரத்தடியில் ஒரு கொட்டகை போட்டு அதில் தங்குவாரம்.  வில்வ மரத்தை பிரதட்சணம் வருவாராம்.  ஸ்வாமிகளின் திருவடி பட்ட இந்த இடம் பவித்திரமானது என்று நெகிழ்வாராம்.  இந்த வில்வ இலைகளைக் கொண்டு, ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தை பூஜிப்பாராம்.

பாரத தேசமெங்கும், புனித யாத்திரை மேற்கொண்டு எத்தனையோ திருத்தலங்களைத் தரிசித்து, ஆன்மிக எழுச்சி ஏற்படுத்திய மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்,  இன்று இளையாற்றங்குடியில் இளைப்பாறிக்கொண்டிருக்கிறார். இது, அந்த மண்ணில் மைந்தர்கள் செய்த நற்பயனால் விளைந்தது என்றேதான் சொல்ல வேண்டும்.  நாட்டுக்கோட்டை நகரத்தார் இல்லையென்றால், வேதமும் இல்லை, கோயிலும் இல்லை என்று காஞ்சி மகா பெரியவர் அடிக்கடி சொல்வார். பூம்புகாரில் இருந்து சுமார் 400 வருடங்களுக்கு முன் இங்கு இடம் பெயர்ந்த அந்த நட்டுக்கோட்டை நகரத்தாரை ஆசிர்வதிக்க என்றே, இந்த அதிஷ்டானம் அந்தப் பகுதியில் அமைந்தது போலும்!

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar