Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சோமப்பா சுவாமிகள்- தகவல்
முதல் பக்கம் » சோமப்பா சுவாமிகள்
சோமப்ப சுவாமிகள்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 நவ
2014
05:11

திருப்பரங்குன்றத்தில் காகபுசுண்டர் மலை எனப்படும் திருக்கூடல் மலையின் உச்சியில் பிரதான தெய்வமாக ஸ்ரீதண்டாயுதபாணி பிரதிஷ்டை ஆகி உள்ளார்.  கீழே- அதாவது அடிவாரத்தில் மாயாண்டி சுவாமிகளின் திருச்சமாதியையும் இன்ன பிற தெய்வங்களின் சந்நிதிகளையும் தரிசிக்கலாம்.

மாயாண்டி சுவாமிகள் திருச்சமாதியை வணங்கி விட்டு, தண்டாயுதபாணி ஸ்வாமி சந்நிதியைத் தரிசிக்க திருக்கூடல் மலையில் அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் மீது ஏறி நடந்தால், முதலில் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் தரிசனம்.  இதை அடுத்துச் சிறிது தொலைவு நடந்தால், சோமப்பா சுவாமிகளின் ஜீவ சமாதியைத் தரிசிக்கலாம்.  மிக அற்புதமான சித்த புருஷர் என்று மாயாண்டி சுவாமிகளால் அடையாளம் காணப்பட்டவர் சோமப்பா சுவாமிகள்.  தரை மட்டத்தில் இருந்து சுமார் ஐம்பதடி உயரத்தில் சோமப்பாவின் சமாதி அமைந்துள்ளது.  அமைதி தவழும் ரம்மியமான சூழ்நிலை. தியானம் செய்பவர்களுக்கு ஏற்ற இடம்.

பலிபீடம், நந்திதேவர், லிங்கத் திருமேனி பிரதிஷ்டை, பிராகாரம் என்று சோமப்பா சுவாமிகள் திருச்சமாதி முழுமையான அமைப்புடன் காணப்படுகிறது.  கருவறையில் லிங்கத் திருமேனியுடன் சோமப்பா சுவாமிகளின் திருவுருவப் படமும் உள்ளது.  சுவாமிகளின் அபிமானத்துக்கும் ஆசிர்வாதத்துக்கும் உள்ளான மதுரை பக்தர்கள்.  தினமும் இவரது திருச்சமாதிக்கு வந்து தியானம் மேற்கொள்கிறார்கள்.  தங்கள் குருநாதரைத் தொழுதுவிட்டு அன்றாடப் பணிகளைக் கவனிப்பவர்களும் இருக்கிறார்கள்.

சோமப்பா சுவாமிகளின் இயற்பெயர் எவருக்கும் தெரியாது.  தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்கள் உட்பட அனைவரையும், சோமப்பா.......சோமப்பா என்றே அழைப்பார் இவர்.  இதனாலேயே சோமப்பா சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார்.

சோமப்பா சுவாமிகளின் ஆசிர்வாதத்தைப் பரிபூரணமாகப் பெற்ற உள்ளூர் பக்தர்கள் பலர். சுதந்திரப் போராட்டக் காலத்தின் போது பசும்பொன்முத்துராமலிங்கத் தேவர்.  மாதம் இரு முறை இந்த மலைக்கு வருவது வழக்கம்.  சோமப்பா சுவாமிகளின் தீவிர பக்தர் அவர்.  சுவாமிகளை நேருக்கு நேர் பார்த்துப் பேசி அவரை வணங்கி, ஆசி பெற்றவர் தேவர்.  சோமப்பா சுவாமிகள், பக்தர்களுக்குத் தரிசனம் தந்து கொண்டிருக்கும் இடத்திலேயே ஒரு மூலையில் அமர்ந்து தியானம் மேற்கொள்வார் முத்துராமலிங்கத் தேவர்.  சோமப்பா, போ....போ என்று ஓங்கிய குரலில் சுவாமிகளிடம் இருந்து உத்தரவு வரும் வரையில் கடும் தியானத்தில் இருப்பார் முத்துராமலிங்கத் தேவர்.  இந்த உத்தரவு சோமப்பாவின் திருவாயில் இருந்து வந்தவுடன், சந்தோஷத்துடன் தியானத்தை முடித்துக்கொண்டு, சாஷ்டாங்கமாக அவரை நமஸ்கரிப்பார் தேவர்.  அதன் பின், சுவாமிகளின் ஆசி தனக்குக் கிடைத்து விட்ட திருப்தியுடன் சந்தோஷமாக அங்கிருந்து நகர்வாராம் முத்துராமலிங்கத் தேவர்.

கலைமாமணி மதுரை சோமு, நாதஸ்வரக் கலைஞர் எம்.எஸ்.பொன்னுத்தாயி உட்பட பல மதுரைக் கலைஞர்களும் சோமப்பா சுவாமிகளின் பக்தர்கள்.  சுவாமிகளின் குருபூஜையின்போது (ஸித்தி ஆனது 1968 ஆனி மிருகசீரிஷம்) மதுரை நாடகக் கலைஞர்கள் அனைவரும் கலந்துகொண்டு இந்தக் கைங்கர்யத்துக்கு உதவி வருகிறார்கள்.  சோமப்பா சுவாமிகள் சமாதித் திருக்கோயிலுக்குக் கடந்த 2003-ஆம் ஆண்டு அவரது குருபூஜை தினத்தில் திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.

தினமும் காலை, மாலை வேளைகளில் இவருடைய சந்நிதியில் வழிபாடு நடந்து வருகிறது.  அமாவாசை, பௌர்ணமி மற்றும் பிரதோஷ தினங்களில் சோமப்பா சுவாமிகள் திருச்சமாதியில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. திரளான பக்தர்கள் கூடுகிறார்கள்.

எங்கேயோ திரிகால ஞானியாகச் சுற்றிக் கொண்டிருந்த சோமப்பா சுவாமிகளைத் திருக்கூடல் மலைக்கு வரவழைத்ததே மாயண்டி சுவாமிகளின் விளையாடல் என்றுதான் சொல்ல வேண்டும் . நிரந்தரமாக இந்த மலையில் தங்கி, ஸ்ரீதண்டாயுதபாணி திருக்கோயிலின் திருப்பணிகளை மாயாண்டி சுவாமிகள் மேற்கொண்டிருந்த காலம் அது.  1920-களில் திருக்கூடல் மலைக்கு வந்தார் சோமப்பா.  அவர் இங்கு வந்த கதையைப் பார்ப்போம். ஒரு நாள் யாரோ ஆசாமி ஒருவர். அடிவாரத்தில் கொட்டப்பட்டிருக்கும் மணல் மேட்டில் வெகு நேரமாக அமர்ந்திருக்கும் தகவல் மாயாண்டி சுவாமிகளை அடைந்தது. அவருக்குத் தெரியாதா, புதியவன் எப்போது வருவான் என்று?  சோமப்பாவின் வருகை மாயாண்டி சுவாமிகளை ரொம்பவே பரவசப்படுத்தியது. அவரது முகத்தில் புன்கை ததும்பியது.

இருளப்ப கோனாரை இன்முகத்துடன் அழைத்தார்.  அப்பு.... திருக்கூடல் மலைக்குள் ஒரு சிவக் கனி வந்தாச்சு. போ, உடனே போய் அதைப் பத்திரமா  அழைச்சிட்டு வா என்று உத்தரவு போட்டார் மாயாண்டி சுவாமிகள்.  சுவாமிகளே இப்படிச் சொல்கிறார் என்றால்,  வந்திருப்பவர் யாரே ஒரு சித்த புருஷராகத்தான் இருக்கும் என்று தெளிந்த இருளப்ப கோனார் வெளியே வந்தார்.  அங்கே, கட்டட வேலைகளுக்காகக் குவித்து வைக்கப்பட்டிருந்த மணல் மேட்டில் கால்களை நீட்டிக் கொண்டு.  கைகளைப் பின்பக்கம் ஊன்றியபடி, கெச்சலான முகத்துடனும் மீசை-தாடியுடனும் ஒரு ஆசாமி உட்கார்ந்திருந்தார்.  இவரைத்தான்  சுவாமிகள் சொல்லி இருக்கிறார் போலிருக்கிறது என்பதாக அவரை நெருங்கி.  ஐயா...ஐயா என்று மெள்ளக் குரல் கொடுத்தார் இருளப்ப கோனார்.

அவ்வளவுதான்.  அந்த ஆசாமியின் முகத்தில் பிரகாசம் களை கட்டியது.  உத்தரவு வந்துவிட்டது அவருக்கு.  குதியாட்டம் போட்டு மணல் மேட்டில் இருந்து எழுந்தார்.  மலை உச்சியைப் பார்த்தவாறு சோமப்பா சொல்லிவிட்டதா?  அப்ப சரிதான்.  நீ போ.  சோமப்பா இனிமே இங்கேதான் தங்கப் போவுது என்று இருளப்ப கோனாரைப் பார்த்துச் சொல்லிவிட்டு, மலை உச்சியை நோக்கி ஒரு குழந்தை போல் குதூகலத்துடன் ஓட ஆரம்பித்தார் அந்த ஆசாமி.  அவர்தான்-சோமப்ப சுவாமிகள்.  சோமப்பா சுவாமிகள் யார் என்பதை அடையாளம் கண்டு கொண்டார் மாயாண்டி சுவாமிகள்.  இனம்தானே இனத்தை அறியும்? எத்தனையோ காலத் துக்குக் காடு மேடு என்று அலைந்து திரிந்து, உருண்டு திரண்டு பழுத்துப் பக்குவப் பட்ட ஞானிதாம்ப்பா சோமப்பா என்று இருளப்ப கோனாரிடம் சொன்னார் மாயாண்டி சுவாமிகள்.

சோமப்பா சுவாமிகளை மிகப் பெரிய சித்த புருஷர் என்று அவருடைய பக்தர்கள் சொல்கிறார்கள்.  இவர் பிறந்த ஊர் கொட்டாம்பட்டி என்றும், பசுமலை என்றும் இரு விதமான தகவல்கள் இருகின்றன. பெற்றோர்-எல்லப்பர், எல்லாம்மாள் என்பது செவி வழிச் செய்தி, முந்நூறு ஆண்டுகள் வாழ்ந்த சித்தர் இவர் என்று சொல்லப்படுகிறது.

சோமப்பாவைக் காணும்போதெல்லாம் மனம் இளகி அவருடன் உரையாடுவார். மாயாண்டி சுவாமிகள்.  அப்பு... என்னை எப்படி கரிசனத்துடன் பார்த்துக்கொள்கிறாயோ,  அதுபோல் சோமப்பாவையும் நீ கண்ணும் கருத்தமாகக் கவனித்துக்கொள்ள வேண்டும்.  அது சாதாரண ஆள் இல்லை அப்பு.  குருநாதரைவிடப் பெரியவர் என்று இருளப்ப கோனாரிடம் அவ்வப்போது சொல்வாராம் மாயாண்டி சுவாமிகள்.

இந்த வார்த்தைகளைத் தனக்கு இட்ட உத்தரவாகக் கருதி.  சோமப்பாவையும் நன்றாகவே கவனித்து வந்தார் இருளப்ப கோனார். இது குறித்து சோமப்பா சுவாமிகளை நன்கு அறிந்த ஒருவர் நம்மிடம் சொன்னார்; இருளப்ப கோனார் மாயாண்டி சுவாமிகளையும் சோமப்பா சுவாமிகளையும் தன் இரு கண் போல் கவனித்து வந்தார். மாயாண்டி சுவாமிகள் ஏதாவது ஒரு உத்தரவிட்டால், தெய்வமே தனக்கு இட்ட பணியாக அதை நினைப்பார் இருளப்ப கோனார்!

சோமப்பா சுவாமிகள் 1968-ல் மகா சமாதி அடையும் வரை இந்த அன்பான கவனிப்பை இருளப்ப கோனாரும் அவரது வாரிசுகளும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.

ஒரே காலத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளும் சோமப்பா சுவாமிகளும் திருக்கூடல்மலையில் இருந்து  ஆன்மிகப் பணியாற்றி, பக்தர்களைத் தங்கள் பக்கம் ஈர்த்தர்கள்.  மாயாண்டி சுவாமிகளின் காலத்துக்குப் பிறகு,  அவர் விட்ட இறைப் பணிகளை சோமப்பா சுவாமிகள் தொடர்ந்தார்.  திருக்கூடல் மலையின் அறிவிக்கப்படாத ஒரு வாட்ச்மேன் போல், மலை எங்கும் திரிந்து உலவுவார் சோமப்பா. ரொம்பவும் எளிமையாக இருப்பார்.  இரவு நேரங்களில் மாயாண்டி சுவாமிகளின் சமாதிக்கு அருகில் படுத்திருப்பார்.  பல நேரங்களில் மலையின் பிரமாண்ட பாறைகளிலோ, மரங்களின் அடிப் பாகத்திலோ தோதாகக் கால்களை நீட்டிப் படுத்திருப்பார். சில நேரங்களில் தனக்குத் தானே ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்.

சோமப்பாவைப் பொறுத்தவரை படுத்தல் என்பது ஒரு செயல்.  தூங்க மாட்டார்.  ஒரு பாயை விரித்து, அதில் படுத்திருப்பார்.  பாய் போட்டு சோமப்பா படுத்திருக்கும் இடத்தைச் சுற்றி கரையான்கள் கூட்டம் கூட்டமாகச் சுற்றிக் கொண்டே இருக்கும்.  ஆனால், இவர் படுத்துக் கொண்டிருக்கும் இடத்துக்குக் கரையான்கள் வரவே வராது.சோமப்பா தூங்கி, எவரும் பார்த்ததில்லை, அது போல் குளித்தோ, மல ஜலம் கழித்தோ எவரும் பார்த்ததில்லை. விசேஷ நாட்கள் என்றால், மலைக்கு மேல் தண்டாயுதபாணி ஸ்வாமி கோயிலுக்கு போய் அந்த சந்நிதிக்கு அருகில் உடலைச் சுருக்கிப் படுத்துக்கொள்வார்.  மற்ற வேளைகளில் திருக்கூடல் மலையின் பிற பகுதிகளில் திரிவார்.  அவர் எங்கு போகிறார், என்ன செய்கிறார் என்பது எவருக்கும் தெரியாது.

மலையில் தண்டாயுதபாணி ஸ்வாமியைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் வழியில்-பாயில் அமர்ந்திருக்கும் சோமப்பா சுவாமிகளைக் கண்டு கையெடுத்துக் கும்பிட்டு வணங்குவர்.  அப்போது சோமப்பா சுவாமிகள், சோமப்பா இங்கே இல்லை. மலை மேல் கோயில்ல நிக்குது என்பார்.  என்னடாது....கண்ணுக்கு நேரே தரிசனம் தருகிறார்.  பிறகு, சோமப்பா மலைக்கு மேலே இருக்கு என்கிறாரே.... என்று குழம்பி, அவரது பக்தர்கள் மலைக்கு மேலே போவார்கள்.  பொதுவாக, எவரையும் சோமப்பா என்றே அழைத்துப் பழக்கப்பட்டவர் இந்த சித்த புருஷர் என்று  ஏற்கெனவே சொல்லி இருந்தோம்.  மலைக்கு மேல் குடி கொண்டிருக்கிற ஸ்ரீதண்டாயுதபாணி யையும் சோமப்பா என்பார்.  மாயாண்டி சுவாமிகளையும் சோமப்பா என்பார்.

நல்ல உள்ளத்தோடு தன்னைத் தரிசிக்க வரும் அன்பர்களிடம் இன்னருள் பொழிவார் சோமப்பா. தூய உள்ளத்துடன் வரும் ஏழை எளியவர்கள் தரும் பழங்கள், திண்பண்டங்கள் போன்றவற்றை ஆர்வத்துடன் சாப்பிட்டு.  அவர் களுக்கு மிச்சம் மீதியைத் தருவார்.  சில வேளைகளில், அவர்களிடம் இருந்து பிடுங்கிக்கூடத் தின்பார் சோமப்பா.  அவர்கள் கைகளில் வைத்திருக்கும் மாலைகளை சில நேரம் வெடுக்கெனப் பிடுங்கித் தன் கழுத்தில் போட்டுக்கொண்டு காட்சி கொடுப்பார்.  இதைக் கண்டு பரவசமாவார்கள் பக்தர்கள்.  ஆசி வழங்குவார் சோமப்பா.

அதே வேளையில் உயர்ந்த அந்தஸ்திலும் பொறுப்பிலும் உள்ள சிலர், சோமப்பாவைத் தரிசிக்க மலர்மாலைகள், ஏராளமான பழங்கள் அடங்கிய தட்டுகளைக் கொண்டுவந்து சுவாமிகளின்  முன்னால் வைப்பார்கள்.  அவர்கள் எத்தகையவர்கள்,  எதற்காகத் தன்னிடம் வந்திருக்கிறார்கள் என்பதை சோமப்பா அறியாமல் இருப்பாரா? சுவாமிகளை தாஜா செய்து, தாங்கள் சில காரியம் சாதித்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்துடன் வந்த இவர்கள் கொண்டு வந்திருக்கும் தட்டுகளைக் காலால் எட்டி உதைப் பார் சோமப்பா.  போ.....இங்க நிக்கவே நிக்காதே....சோமப் பாவை ஏமாத்த நினைக்காதே.... சோமப்பா ஏமாறாது... போயிடு என்று கோபமாகக் கூறிவிட்டு.  அந்த இடத்தை விட்டு எங்கேனும் ஒடிப் போய்விடுவார். சோமப்பா சுவாமிகள் நிகழ்த்திய ஸித்து விளையாடல்கள் நிறைய உண்டு.

கட்டிக்குளத்தில் வசித்து வந்த ஆசிரியர் திருவாசகத்தின் உறவினர் பெயர் ராமு.  இவருக்கு சோமப்பாவைக் கண்டால் ஏனோ பிடிக்காது.  ஆனாலும், ராமுவின் மேல் சோமப்பாவுக்கு அளவு கடந்த  அன்பு உண்டு.  ஒரு நாள் ராமுவை நெருங்கி, அவரது வலக் கண்ணின் அருகே தன் வலக் கையைக் கொண்டு சென்று, ஓங்கிக் குத்தட்டுமா? என்று கேட்டார். சுவாமிகள் அடிக்கடி தன்னிடம் இப்படி விளையாடுவார். என்பதால், ராமு இதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை.  ஆனால், அடுத்த சில நாட்களிலேயே ராமுவின் வலக் கண் ஓர் அறுவை சிகிச்சைக்கு உள்ளானது.  இப்படி நடக்கப் போவதை முன்கூட்டியே குறிப்பால் உணர்த்துவார் சோமப்பா.

பஜணைக்கார அம்மா என்று ஒருவர் வசித்து வந்தார். ஒரு நாள் அந்த அம்மாளைத் தேடி அவரது வீட்டுக்குப் போன சோமப்பா, அந்த அம்மாவை அழைத்து, உன்னைப் பூச்சி கடிக்கும்.  ஆபத்து சூழும் என்று சொல்லிவிட்டுப் போனார்.  சுவாமிகள் என்ன சொல்ல வருகிறார்? என்கிற குழப்பத்தில் எதுவும் புரியாமல் தவித்தார். பஜனைக்கார அம்மா.  ஆனால் இதை அடுத்த ஒரு சில நாட்களில் பஜனைக்கார அம்மா பாம்பு கடித்து இறந்தே போனார். பூச்சி கடிக்கும் என்று சுவாமிகள் குறிப்பிட்டது பாம்பை.

மாயாண்டி சுவாமிகள் சமாதி ஆகிவிட்டதை (1930-ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 11-ஆம் தேதி) அறிந்து எங்கிருந்தோ வந்து சேர்ந்தார்.  சோமப்பா.  மாயாண்டி சுவாமிகளின் திருமுகத்தை திருச்சமாதி வைப்பதற்கு முன் ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும்  என்கிற ஆவலில்,  எத்தனையோ பக்தர்கள் எங்கெங்கிருந்தோ வந்து குவிந்திருந்தனர். சமாதி நிலையை எய்துவிட்ட சுவாமிகளின் திருமுகத்தையே வைத்த கண் வாங்காமல் வெகு நேரத்துக்குப் பார்த்துக் கொண்டிருந்தார் சோமப்பா.  முகம் இறுகிப் போயிருந்த சோமப்பா, திடீரென மலர்ந்தார்.  மாயாண்டி சுவாமிகள் இதழ்களில் ஒரு புன்னகை அரும்பியதை அப்போது சோமப்பா கவனித்துதான் இதற்குக் காரணம்.  இதை அடுத்து, அங்கு நிலவிய நிசப்தத்தைக் கலைக்கும் வகையில், சோமப்பா சாகவில்லை. சோமப்பா சாக மாட்டான் என்று பெருங்குரல் எடுத்துக் கத்திக்கொண்டே மலைக்கு ஓடி விட்டார்.

அதாவது. என் உடல் என்னை விட்டுப் பிரிந்தாலும், நான் என்றென்றும் உன்னுடனும் என் பக்தர்களுடன் இருந்து அருள் பாலிப்பேன்  என்கிற செய்தியை சோமப்பா வாயிலாக நமக்கெல்லாம் உணர்த்தி இருக்கிறார் மாயாண்டி சுவாமிகள்.  சமாதி ஆன பிறகும், மாயாண்டி சுவாமிகள் அருளிய புன்னகை இதைத்தான் நமக்குச் சொல்கிறது.  மாயாண்டி சுவாமிகளைப் போலவே, தான் திருச்சமாதி ஆகும் தினத்தையும் நேரத்தையும் முன்கூட்டியே சொல்லி விட்டுத்தான் சோமப்பா சுவாமிகளும் சமாதி ஆனார்.  ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி இருந்து.  இவரது திருச்சமாதி நிகழ்வு நடந்தது.

தூய உள்ளமும் நற்சிந்தனைகளும் இருப்பவர்களைத்தான் இன்றைக்கு சோமப்பா தன் ஜீவ சமாதிக்கு வரவழைத்து அருள் புரிகிறார்.  சித்தர்களை தரிசிப்பதில் ஆர்வம் உள்ள ஒவ்வொருவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய திருச்சமாதி இது!

 
மேலும் சோமப்பா சுவாமிகள் »
தலம்    : திருப்பரங்குன்றம் காகபுசுண்டர் மலை.சிறப்பு: சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதி (மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar