Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » சத்ரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகள்
திருச்சி சத்ரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகள்
எழுத்தின் அளவு:
திருச்சி  சத்ரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகள்

பதிவு செய்த நாள்

21 பிப்
2015
05:02

மகான்களும் தவசீலர்களும் தவம் இருப்பதற்கு பொதுவாக மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடுப்பதாகத்தான் படித்திருக்கிறோம்; கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் மக்கள் அதிகம் வந்து போகும் ஒரு நீதிமன்ற வளாகத்தை ஒட்டிய பகுதியில் தவம் இருந்து, ஸித்துக்கள் பல புரிந்து, தன் பக்தர்களுக்கு ஆசி வழங்கிய ஒரு மகா சித்த புருஷர் இவர்.

நீதிமன்ற வளாகத்தில் தவம் இருந்த அந்த சத்புருஷரின் திருநாமம் - ஸ்ரீசத்ரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகள். இவர் தவம் இருந்த இடம் - திருச்சி மாநகரத்தில் நீதிமன்ற வளாகமும் தீயணைப்பு வளாகமும் அமைந்திருக்கும் பிரதான பகுதியில், நீதிமன்ற வளாகத்தின் அருகே தவம் இருந்தமையால், இவர் கோர்ட் சுவாமிகள் என்றும் தன் பக்தர்களால் அழைக்கப்பட்டிருக்கிறார்.

சுவாமிகளின் இயற்பெயர் - கனகசபாபதி, எப்போது இவர், சத்ரு சம்ஹாரமூர்த்தி என அழைக்கப்பட்டார்? பொதுவாக, சத்ரு சம்ஹாரமூர்த்தி என்கிற பெயர் முருகப் பெருமானுக்கு உண்டு. முருகனின் அருள் பெறுவதற்கும் நமக்கு இடையூறாக உள்ள சத்ருக்களை நாசம் செய்வதற்கும் சத்ரு சம்ஹார ஹோமத்தைச் செய்வது வழக்கம். முருகப் பெருமானை வேண்டி, சத்ரு சம்ஹாரப் பதிகம் (இதை சத்ரு சங்காரப் பதிகம் என்று பழைய நூல்கள் சொல்லும்) படித்தால், எவ்வளவு பெரிய எதிரிகள் நமக்கு இருந்தாலும். அவர்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடுவார்கள்.

அதே சமயம் முருகப் பெருமான் தனக்கு எதிரியாக வந்த சூரபத்மனை அழித்து அவனை ஆட்கொள்ளவும் செய்தார். தன்னுடனே வைத்துக்கொண்டார். சூரத்பமனுடனான போரில் அவனை இருக்கூறாகப் பிளந்த முருகப் பெருமான். ஒரு பாதியை சேவலாக மாற்றிக் தன் கொடியாகவும் மறுபாதியை மயிலாக மாற்றித் தன் வாகனமாகவும் கொண்டார் என்கின்றன புராணங்கள் ஆக, முருகப் பெருமான் எதிரிகளுக்கும் அருள்பவர் என்று புரிந்துகொள்ளலாம். இன்றும் கோயில்களில் முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும்போது. அர்ச்சகர் அஷ்டோத்திரம் சொல்லி சமர்ப்பிக்கும் புஷ்பங்கள் சூரபத்மனுக்கே செல்கின்றன. எப்படி என்கிறீர்களா? சேவல் கொடியின் மீதும் வாகனமான மயிலின் மீதும்தானே அந்தப் புஷ்பங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே, தன் எதிரிக்கும் எத்தகைய உயர்ந்த ஓர் இடத்தை முருகப் பெருமான் அளித்திருக்கிறார். பார்த்தீர்களா?

சத்ரு சம்ஹாரம் என்பதற்கு இன்னொரு விதமாகவும் பொருள் கொள்ளலாம். ஒரு மனிதன். பண்பட்ட மனிதனாக வாழ்வதற்குத் தனக்குள் இருக்கும் சத்ருக்களை (எதிரிகளை) முதலில் அவன் சம்ஹாரம் செய்ய (கொல்ல) வேண்டும். நமக்குள் இருக்கும் காம, குரோத, லோப மோக, மத, மாச்சர்யங்களை அழிக்கவேண்டும். இதுதான் நிஜமான சத்ரு சம்ஹாரம். திருச்செந்தூரில் தான் வசித்த காலத்தில் முதலில் சிவனையும் பிறகு முருகப் பெருமானையும் வழிபட்டவர் கனகசபாபதி. தன்னை வணங்கும் பக்தனது சத்ருக்களை இந்த சுவாமிகள் சம்ஹாரம் செய்ததால் பின்னாளில் இவர் சத்ரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார். இன்றைக்கு இவரது சன்னிதி தேடி, சத்ரு நாசம் செய்து கொள்வதற்குப் பல பக்தர்கள் வருகிறார்கள்.

சுவாமிகளின் அவதாரத் திருத்தலம் - திருச்சி மாவட்டத்தில் உள்ள வாதிரிப்பட்டி. 13.6.1880-ல் முத்துப்பிள்ளை - பொன்னம்மாள் தம்பதியருக்கு மூன்றாவது குழந்தையாக அவதரித்தார் சுவாமிகள் மூத்தவர்கள் இருவரும் பெண் குழந்தைகள். அவர்களின் பெயர்கள் - மீனாட்சி செல்வம். சாதாரண குடும்பம். கனகசபாபதி என்கிற இயற்பெயர் சூட்டப்பட்ட இந்தத் திருக்குழந்தை, பிறந்தது முதலே இறை பக்தியுடன் வளர்ந்தது. குடும்பச் சூழல் காரணமாக 1890-ல் சுவாமிகளின் குடும்பம் புதுச்சேரிக்கு இடம் பெயர்ந்தது. 1893-ல் சுவாமிகளின் தந்தையார் முத்துப்பிள்ளை உடல்நலக் குறைவால் காலமானார். தந்தையாரின் மறைவுக்கு முன் மீனாட்சிக்கும் மறைவுக்குப் பின் செல்வத்துக்கும் திருமணம் நடந்தது. தொடர்ந்து கஷ்டங்களையே அனுபவித்து வந்தார் சுவாமிகள் மூத்த சகோதரி மீனாட்சியும் அவரின் கணவரும் அடுத்தடுத்து இறந்தனர். 1900-ஆம் ஆண்டில் குடும்பம் புதுச்சேரியில் இருந்து மீண்டும் வாதிரிப்பட்டிக்கே வந்தது. இந்த நிலையில் 1901-ஆம் ஆண்டு மருதநாயகம் பிள்ளை என்பவரின் மகளான சொர்ணத்தம்மாளை சுவாமிகள் திருமணம் செய்து கொண்டார். நெல்லிக்குப்பத்துக்கு இடம் பெயர்ந்தனர். சுவாமிகள் தம்பதிக்கு கமலம் என்கிற பெண் குழந்தை பிறந்தது. அடுத்து, பொன்னமராவதியில் ஆசிரியப் பணிக்குச் சென்றார். சுவாமிகள் 1910-ஆம் ஆண்டில் அழகு என்கிற பெண் குழந்தைக்குத் தந்தை ஆனார் சுவாமிகள்.

இல்லறத்திலேயே எத்தனை நாட்களுக்கு இவனை உழல விடுவது? என்று தில்லை அம்பலத்தான் தீர்மானித்தானோ என்னவோ... தன் சன்னிதிக்கு சுவாமிகளை வரவழைத்தான் அந்தக் கூத்தபிரான். நடராஜப்பெருமானின் தரிசனம் அவருள் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. குடும்ப பந்தத்தில் இருந்து சட்டென்று விலகி, எவருக்கும் எதுவும் சொல்லாமல் கால் போன போக்கில் நடந்தார். ஒரு வருடத்துக்குப் பிறகு சுவாமிகளை ஓரிடத்தில் கண்டுபிடித்த அவரின் உறவினர் ஒருவர் மீண்டும் வீட்டுக்கே கூட்டிக்கொண்ட வந்தார். இல்லறத்தில் சுவாமிகளுக்கு 1916-ஆம் ஆண்டு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. பொன்னுராமு என்கிற பெயரை அவனுக்கு வைத்தார்கள் (1921-ஆம் ஆண்டில் இவன் இறந்து போனது பரிதாபம்). இல்லறம் ஓடிக் கொண்டிருந்தது. அடுத்த ஆண்டே சுவாமிகள் மீண்டும் காணாமல் போனார். இந்த நிலையில் மகள்கள் இருவருக்கும் திருமண முடிந்தது.


அதன் பின் 12 ஆண்டுகளுக்குப் பிறகுதான் (1928) சுவாமிகள் அறியப்பட்டார். இடைப்பட்ட காலத்தில் அவரை இறைவன் ஆட்கொண்ட விதத்தை சுவாமிகள் மட்டுமே அறிவார். திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள நாகநாத சுவாமி கோயிலில் கடும் தியானம் மேற்கொண்டார். சுவாமிகளை இங்கே அடையாளம் கண்டுகொண்ட அவரது உறவினர் ஒருவர். மனைவியான சொர்ணத்தம்மாளுக்கு சேதி அனுப்பினார். உறவின் முறைகள் தேடி வந்தனர். பாசம் பரிமாறப்பட்டது. ஆனால், சுவாமிகளின் மனதில் இல்லற ஆசை துளிகூட எட்டிப் பார்க்கவில்லை. 1929-ல் சுவாமிகளின் வாழ்வில் மீண்டும் ஒரு சோகம் சூழ்ந்தது. வாதிரிப்பட்டியில் இருந்து கடியாபட்டி சென்ற இரண்டாவது மகன் அழகுக்குத் திடீரென அம்மை போட்டுவிட்டது. தகவல் வாதிரிப் பட்டிக்கு வா..... அனைவரும் கிளம்பலாம் என்று பேசப்பட்டது. நாளை போகலாம் என்றார் சுவாமிகள் அனைவரும் சம்மதித்தனர். அப்போது சில மணித் துளிகள் இடைவெளிக்கு சுவாமிகளுக்கு இலை போட்டு சாப்பிட அழைத்தனர். தியானத்தில் இருந்த சுவாமிகள். அங்கே அழகு இறந்து கிடக்கும்போது, இங்கே சாப்பாட்டுக்கு இலையா? என்று பெருங்குரல் எடுத்துப் பேச, அனைவரும் பதறிப் போனார்கள். ஆம் இன்னும் சற்று நேரத்தில் இங்கே கார் வரும். சேதி தெரிய வரும் என்றார். அதன்படி, அடுத்த சில நேரத்தில் காரும் வந்தது. துயரச் செய்தியும் வந்தது.

அதன் பின் நார்த்தாமலைக்கு இடம் பெயர்ந்த சுவாமிகள், சிறிது காலத்துக்கு பிறகு அங்கிருந்து திருச்சி நீதிமன்ற வளாகத்தில் தீயணைப்பு நிலையம் எதிரில் உள்ள மகிழ மரத்தடியில் அமர்ந்தார். தியானம் தொடர்ந்தது. அப்போது வழக்குகளுக்காக நீதிமன்றம் வரும். பல அன்பர்கள், சுவாமிகளிடம் விபூதி பிரசாதம் வாங்கி, வழக்கில் தங்களுக்கு வெற்றி கிடைக்க அருளுமாறு வேண்டுவார்கள். சுவாமிகளின் அருள் பெற்ற பலர், வழக்குகளில் சுலபமாக வென்றனர். தகவல் பரவி, பலரும் இவரை நாடி வந்தனர். இந்தக் காலகட்டத்தில் திருவெறும்பூருக்கு அருகில் உள்ள சோழமாதேவியைச் சார்ந்த ஞானபிரகாசம் பிள்ளை என்பவர். ஒரு வழக்கு விஷயமாக நீதிமன்றத்துக்கு வந்தார். சுவாமிகளின் அருள் திறன் பற்றிக் கேள்விப்பட்டு அவரைச் சந்தித்தார். இது நட்பானது. ஒரு தினத்தில் ஞானபிரகாசம் பிள்ளையின் வழக்கு. நீதிமன்றத்துக்கு வந்தது. சாமீ..... நான் எந்தக் குற்றமும் செய்யாதவன். இந்த வழக்கு தள்ளுபடி ஆகவேண்டும். ஆசி புரியுங்கள் என்று வேண்டினார். அப்படியே ஆகும் என்று அவருக்குத் திருநீறு தந்து ஆசிர்வதித்தார் சுவாமிகள். என்னே அதிசயம். 27.7.1934 அன்று நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் முதல் கேஸாக, ஞானபிரகாசம் பிள்ளையின் வழக்கைத் திடீரென தள்ளுபடி செய்தார் நீதிபதி. அதன் பின் சுவாமிகளைக் குருநாதராக ஏற்றுக்கொண்டார் ஞானபிரகாசம் பிள்ளை.

ஒரு முறை மகிழ மரத்தடியில் வழக்கம்போல் தியானத்தில் இருந்தார் சுவாமிகள். அப்போது அந்த வழியே வந்த ஆங்கிலேய போலீஸ்காரர் ஒருவர் சுவாமிகளைக் காரணமே இல்லாமல் பூட்ஸ் காலால் எட்டி உதைத்தார். பலர் தடுத்தும், தன் வெறிச் செயலை போலிஸ்காரர் நிறுத்தவில்லை. விடப்பா... அவன் வினையை அவன் அறுத்துக் கொண்டிருக்கிறான் என்று சுவாமிகள். சினம் கொள்ளாமல் பதில் சொன்னார். உதைத்தவன் தன் வெறி அடங்கிய பின் ஓடிப் போனான். அதன் பின் ஞானபிரகாசம் பிள்ளை. சுவாமிகளைத் தன் சோழமாதேவி வீட்டுக்கு அழைத்துச் சென்று வைத்தியம் செய்து வைத்தார். இதற்கிடையில் சுவாமிகளை உதைத்த போலீஸ்காரரின் ஒரு கையும் காலும் இழுத்துக்கொண்டது. வலியால் துடிதுடித்தார். உயிர் பிரிவது போன்ற சூழ்நிலை வரும்போது, அவருடைய குடும்பத்தார்கள் இவரது வெறிச் செயல் பற்றி விசாரித்து அறிந்தார்கள். அதன் பின் சுவாமிகள் இருக்கும் இடத்துக்கு போலீஸ்காரரைக் கைத்தாங்கலாகக் கூட்டிச் சென்று காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வைத்தனர். மனம் இரங்குவதுதானே மகானின் இயல்பு! போலீஸ்காரரின் கையிலும் காலிலும் விபூதி தடவி விட்டார் சுவாமிகள். அடுத்த கணமே அவரைப் பிடித்த அவஸ்தை விலகியது. அன்று முதல் அந்த போலீஸ்காரர். சுவாமிகளின் பக்தர் ஆனார்.

பின்னாளில் சில காலத்துக்கு சுவாமிகள் விராலிமலைக்குச் சென்றார். சுவாமிகள் தீவிரமான முருக பக்தர். விராலிமலையில் முருப் பெருமானை வழிபடுவதும் சந்தைப்பேட்டையில் ஒரு வன்னிமரத்தடியில்  அமர்ந்து பலருக்கு அருளாசி சொல்வதும் வழக்கம் ஆனது. அங்கே சுவாமிகளின் அன்புக்கு மிகவும் பாத்திரமானார் ராமன் என்பவர். ஒரு முறை திருச்சியில் இருந்த ராமன் கடுமையான காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்தார். உயிர் பிழைப்பதே சிரமம் என்பதுபோல அவரது நிலை இருந்தது. அப்போது விராலிமலையில் இருந்த சுவாமிகள் ஞான திருஷ்டி மூலம் இதை உணர்ந்து திருச்சி சென்றார். அங்கே முனகலுடன் படுத்திருந்த ராமனின் கையில் ஒரு பச்சிலையைக் கட்டி குளிர்ந்த நீரில் அவரைக் குளிப்பாட்டினார் சுவாமிகள். ஜுரத்தால் படுத்திருப்பவரைக் குளிர்ந்த நீரில் குளிப்பாட்டினால், விளைவு விபரீதமாகுமே என்று பதைபதைப்புடன் கேட்ட ராமனின் குடும்பத்தினரைப் பார்த்து வெறும் புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தார் சுவாமிகள். அடுத்த சில நிமிடங்களில், ராமன் எழுந்து உட்கார்ந்தார். இயல்பு நிலைக்கு வந்தவர் சுவாமிகளின் திருப்பாதங்களில் விழுந்தார்.

ஒரு முறை விராலிமலையில் வன்னிமரத்தடியில் ராமனும் சுவாமிகளும் அமர்ந்திருந்தபோது ராமனிடம் சுவாமிகள் கூறினார். இன்னும் சற்று நேரத்தில் இங்கே வயிற்று வலிக்காரன் ஒருவன் வருவான் பார். திருவாக்கு அடுத்த கணமே பலித்தது. வலியின் அவஸ்தை காரணமாக வயிற்றைத் தடவிக்கொண்டே அங்கே வந்தார். புதுக்கோட்டையில் திவானாக இருந்த கிருஷ்ணசாமி சுவாமிகளின் திருவடி பணிந்து, வயிற்று வலி, நீங்க அருள் புரியுங்கள் சாமீ என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டார். திருநீற்றைக் கொடுத்து. அவரது வலியைப் போக்கிய சுவாமிகள், பலருக்கும் நீ செய்த தீவினைதான் உன்னைத் தொடர்ந்து வருகிறது. நல்லதே செய். நலம் பெருகும் என்று சுவாமிகள் ஆசிர்வதிக்க... அப்படியே நடந்து கொள்கிறேன் சாமீ என்று அங்கிருந்து அகன்றார் திவான். பல சித்த புருஷர்களைப் போலவே ஒரே நேரத்தில் - பல இடங்களில் காட்சி தந்து அருளி இருக்கிறார். ஸ்ரீசத்ரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகள். ஒரு முறை திருச்சியில் தன் பக்தர் ஒருவருடன் காவிரி ஆற்றில் புனித நீராடிக் கொண்டிருந்த சுவாமிகள். அதே நேரத்தில் விராலிமலையில் ராமனுடன் பேசிக் கொண்டிருந்தார். இது போல் பல முறை நிகழ்ந்திருக்கிறது. கூடு விட்டு கூடு பாய்ந்து பல அற்புதங்களையும் நிகழ்த்தி இருக்கிறார்.

ஒரு முறை தன் பக்தர் ஒருவருக்கு ஏதோ பரிகாரம் சொல்வதற்காக, கோயிலுக்கு சர்க்கரைப் பொங்கல் செய்து வழிபாடு என்று சொல்லி இருக்கிறார். சுவாமிகளும் அங்கே வந்திருந்தார். பொங்கல் பொங்கிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென பெரும் இடிச் சத்தத்துடன் மழை பொத்துக்கொண்டு ஊற்றியது, அந்த பக்தரோ சுவாமிகளிடம் ஓடி வந்து, சுவாமி..... இதென்ன சோகம்..  பொங்கல் பொங்கி வரும் வேளையில் மழை பெய்கிறதே? என்று பதற்றத்துடன் கேட்க.... அடுத்த கணம் அந்த அற்புதம் நிகழ்ந்தது. சுவாமிகள் அமர்ந்திருந்த இடத்திலும் பொங்கல் பொங்கிக் கொண்டிருக்கும் இடத்தையும் தவிர, அதைச் சுற்றி கன மழை பெய்தது. தனது பரம பக்தரான ஸ்ரீசத்ரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகளை, அந்த முருகப் பெருமானே கடைசி காலத்தில் ஆட்கொண்டார். திருச்செந்தூரில் 1938-ஆம் வருடம் அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி முருகனுக்கு உகந்த செவ்வாய்கிழமை அன்று சத்ரு சம்ஹாரமூர்த்தியின் ஆத்ம ஜோதி, திருச்செந்தூர் பெருமானிடம் கலந்தது.

திருச்செந்தூரில் சமாதி, தாண்டீஸ்வரம், வாதிரிப்பட்டி, குடுமியான் மலை, வீரப்பட்டி, சோழமாதேவி போன்ற ஊர்களிலும் சுவாமிகள் கோயில் கொண்டுள்ளார்.

ஸ்ரீசத்ரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகளின் திருச்சி மகிழ மரத்தடி ஆசிரமம்

ஸ்ரீசத்ரு சம்ஹாரமூர்த்தியின் அனைத்து வழிபாட்டு இடங்களுக்கும் இதுவே தலைமை பீடமாகக் கருதப்படுகிறது. தீயணைப்பு வளாகத்துக்கு எதிரில், சுவாமிகளின் திருச்சன்னிதி அமைந்துள்ளது. வெளியே - நாகராஜா, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகப் பெருமான் ஆகியோருக்கு விக்கிரகங்கள். உள்ளே-கருவறையில் பளிங்கு விக்கிரக வடிவத்தில் வீற்றிருந்து நம்மை ஆசிர்வதிக்கிறார். சத்ரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகள், இதன் பின்னால் சுவாமிகளின் திருவுருவப்படம் பளிங்கு விக்கிரகத்துக்கு முன்னால் சுவாமிகளின் உத்ஸவர் திருமேனி, லிங்கத் திருமேனி, வேல் ஆகியவற்றை தரிசிக்கிறோம். சத்ருக்கள் விலக சுவாமிகளைத் தரிசிக்க பல இடங்களிலும் இருந்து பக்தர்கள் வருகிறார்கள்.

தீயணைப்பு நிலைய வளாகத்தில் துவக்க காலத்தில் இருந்தே குடிகொண்டதால், இந்த ஊழியர்களுக்குக் கண் கண்ட தெய்வம் சுவாமிகள். இப்பவும் ஏதவாது அசம்பாவிதம் என்று தீயணைப்பு வண்டிகள் திடீரெனப் புறப்பட நேர்ந்தால், இந்த ஊழியர்கள், சுவாமிகளை வணங்கிவிட்டே புறப்படுகிறார்கள். பிரதியுபகாரமாக ஊழியர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் சுவாமிகளை காத்து வருவதாக பக்தர்கள் சிலர் நம்மிடம் சொன்னார்கள்.

இந்தத் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு மாற்றலாகிச் செல்லும் பல ஊழியர்களும் தாங்கள் பணிபுரியும் வளாகத்திலேயே ஸ்ரீசத்ரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகளுக்கு ஒரு சன்னிதி அமைத்து வழிபட்டு வருகிறார்கள் என்றால், சுவாமிகளின் அருளுக்கு எந்த அளவுக்கு இவர்கள் பாத்திரமாகி இருக்கிறார்கள் என்பது புலனாகும். இந்த வகையில் ஸ்ரீரங்கம், துறையூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருமயம், இலுப்பூர் ஆலங்குடி, நாகப்பட்டினம், நன்னிலம், கரூர், பட்டுக்கோட்டை பேராவூரணி, நாகப்பட்டினம் போன்ற ஊர்களில் அமைந்துள்ள தீயணைப்பு நிலைய வளாகங்களில் சுவாமிகளுக்கும் ஒரு திருச்சன்னிதி ஏற்படுத்தி, தங்கள் வழிபாட்டைத் தொடர்ந்து வருகிறார்கள் தீயணைப்பு நிலைய ஊழியர்கள்.

சுவாமிகளின் அவதார தினம் - ஆனி ஆயில்யம். சமாதி ஆன தினம் - புரட்டாசி பரணி. இந்த தினங்களில் இங்கே வழிபாடு. சிறந்த முறையில் அனுஷ்டிக்கப்படுகிறது. தவிர, ஒவ்வொரு மாத ஆயில்யம் மற்றும் பரணி தினங்களிலும், வியாழக்கிழமைதோறும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. தினமும் மதிய வேளையில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இது தவிர, ஏழை எளிய மாணவர்களுக்குக் காலை உணவு, இலவச பாட வகுப்பு என்றும் இந்த ஆசிரமத்தின் தொண்டு விரிகிறது.

சுவாமிகள் சமாதி ஆன இடமான திருச்செந்தூரில் அவருக்கு வழிபாடு நடக்கிறது. அகத்திலும் புறத்திலும் உள்ள சத்ரு பயம் நம்மிடம் இருந்து விலகவும் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கும் மகிழ மரத்தடியில் அமர்ந்து நிஷ்டையில் இருக்கும் ஸ்ரீசத்ரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகளை வணங்கி, அவரின் குருவருள் பெறுவோம்! நலம் விழைவோம்!

தகவல் பலகை

தலம்    : திருச்சி.

சிறப்பு    : சத்ரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகள் ஆசிரமம்.

எங்கே இருக்கிறது: திருச்சி மாநகரத்தில் நீதிமன்ற வளாகத்தில் - மத்திய மண்டல தீயணைப்பு நிலையத்தின் எதிரில் ஆசிரமம் இருக்கிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவு, சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு.

எப்படிச் செல்வது?: திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்துக்கு இரு வழித் தடம் உண்டு. அதில் தில்லை நகர், உறையூர் வழியாகச் செல்லும் நகரப் பேருந்துகளில் ஏறி, நீதிமன்ற வளாகம் நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டால் அருகே ஆசிரமம், மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிறுத்தத்துக்கும், சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையத்துக்கும் ஏராளமான நகரப் பேருந்துகள் உண்டு.

அரியலூர், பெரம்பலூர், கடலூர் போன்ற ஊர்களில் இருந்து வருபவர்கள் சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளலாம்.

புதுக்கோட்டை, நெல்லை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், கோவை, தஞ்சாவூர், நாகை போன்ற ஊர்களில் இருந்து வருபவர்கள் மத்திய பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளலாம்.

தொடர்புக்கு:

கே. சுந்தரேசன்
ஸ்ரீசத்ரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகள் ஆசிரமத் தலைவர்,
88, டி.டி.கே. ரோடு, ஆழ்வார் பேட்டை,
சென்னை-600 018.

என். சந்தானம்.
ஆசிரமம் நிர்வாக கமிட்டி உறுப்பினர்,
ஸ்ரீசத்ரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகள் ஆசிரமம்,
மகிழ மரத்தடி நீதிமன்ற வளாகம்,
திருச்சி-620001.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar