Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » சிதம்பர சுவாமிகள்
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
எழுத்தின் அளவு:
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்

பதிவு செய்த நாள்

21 பிப்
2015
05:02

நோயுற்று அடராமல் நொந்துமனம் வாடாமல்
பாயிற் கிடவாமல் பாவியன் காயத்தை
ஓற்நொடிக்குள் நீக்கியெனை என் போரூரா
நின் சீறடிக்கீழ் வைப்பாய் தெரிந்தே.

ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள்

சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரை திருவருள் துலங்கும் தெய்வ சன்னிதிகளுக்கும் குருவருள் விளங்கும் மகான்களுக்கும் பேர் பெற்ற தலம். பாண்டியர்களும் நாயக்கர்களும் போட்டி போட்டுக்கொண்டு ஆன்மிகத்தை வளர்த்து தர்மத்தின்படி ஆட்சி செலுத்திய பூமி இந்தப் புண்ணியம்பதியில் சங்கப் புலவர் மரபில் அவதரித்தவர். ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள்! (இவர் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் என்பர்.) ரிஷிமூலம் பார்க்கக்கூடாது என்று சொல்வது உண்டு. அருணகிரிநாதர் ஷீரடி பாபா முதலான மகான்களின் பெற்றோர் எவர் என்பது இன்றுவரை அறியப்படாத ஒன்று. இதேபோல் சிதம்பர சுவாமிகளை ஈன்றெடுத்த பாக்கியத்தை பெற்றவர்கள் எவர் என்பது குறித்து எதிலும் குறிப்பிடவில்லை. மதுரை மீனாட்சியம்மையின் திருக்குழந்தையாகவே வளர்ந்தவர் சுவாமிகள். சிறுவயதில் இருந்தே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். இலக்கியத்தின்பால் ஆர்வம் கொண்டு உரிய ஆசான் மூலம் கற்றறிந்தார். இறை வழிபாடு மற்றும் யோக காரியங்களிலும் நாட்டம் கொண்டிருந்தார். ஸ்ரீமீனாட்சியம்மனையே உபாசனாமூர்த்தியாக ஏற்று வாழ்ந்தார்.

தினமும் ஸ்ரீமீனாட்சியம்மனை தரிசித்த பிறகே, நித்யகர்மாக்களை தொடர்வது சுவாமிகளின் வழக்கம். இவரது இறை பக்தி மற்றும் நெறி தவறாத வாழ்க்கை ஆகியவற்றைக் கண்ட மதுரை மக்கள் அவரை உயர்ந்த ஞானாசிரியனாகவே பாவித்து போற்றினார். இதனால் சுவாமிகளின் புகழ் மெள்ள பரவியது. சுவாமிகளின் தமிழ்ப் புலமையை அறிந்து வியந்த ஆன்மிகச் சான்றோர் இவருக்கு கவிராயர் எனும் பட்டம் அளித்தனர். இதனால் சுவாமிகள் சிதம்பரக் கவிராயர் என அழைக்கப்பட்டார். கொங்கு தேசத்தில் உள்ள அவினாசியில், ரெட்டியார் சமூகத்து அன்பர் ஒருவர் வசித்தார். பெரும் செல்வந்தரான இவருக்கு குழந்தை இல்லை. திருத்தலங்கள் பலவற்றுக்குச் சென்று, எனக்கேன் இந்த நிலை? என பிரார்த்தித்து வந்தார். அவரது பிரார்த்தனை வீண்போகவில்லை. ஆம்... யோகி ஒருவர் அவரது இல்லத்துக்கு வந்து விபூதி வழங்கிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அந்த யோகி குமாரதேவர்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த குமாரதேவர் இராஜ குடும்பத்தில் பிறந்து சில காலத்துக்கு ராஜ்ஜியத்தை ஆளவும் செய்தார். ஆனால் இவரின் ராஜ வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்க முடிவு செய்தான் இறைவன். இவன் தனக்கானவன் என்று நிர்ணயித்த இறைவன். போக வாழ்க்கையில் இருந்து தவ வாழ்க்கைக்கு குமாரதேவரை மாற்றினான். அதன்படி குமாரதேவன் மணிமுடி துறந்தார். மலர் மஞ்சம் மறந்தார். அரசனாய் இருந்தவர் ஆண்டியாக மாறினார். யாத்திரையாகப் புறப்பட்டு கொங்கு தேசத்தில் உள்ள பேரூருக்கு வந்தார். அங்கு வாழ்ந்துவந்த சாந்தலிங்க சுவாமிகளிடம் சீடராகச் சேர்ந்தார். இறைவனுக்கும் குருநாதருக்கும் தொண்டு செய்வதே தவம் என வாழ்ந்தவர்.

பின்னர் தன் குருநாதரின் விருப்பப்படி விருத்தாச்சலத்தில் சிலகாலம் வசித்தார் குமாரதேவர். ஆறு மாதத்துக்கு ஒருமுறை இங்கிருந்து புறப்பட்டு பேரூருக்கு வந்து குருநாதரை தரிசித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் குமாரதேவர் ஒருமுறை... அப்படி பயணப்படும்போது வழியில் அவினாசியில் உள்ள ரெட்டியாரின் வீட்டில் ஓய்வு எடுக்க நேரிட்டது. ரெட்டியாரும் குமாரதேவரை அன்புடன் உபசரித்து மகிழ்ந்தார். அப்போது குழந்தைச் செல்வம் இல்லாத ஏக்கத்தில் ரெட்டியார் தவிப்பதை அறிந்து கொண்டார் குமாரதேவர். தன் குருநாதரை வணங்கிவிட்டு திருநீறு வழங்கினார். ரெட்டியாரையும் அவரின் மனைவியையும் உட்கொள்ளச் சொன்னார். மேலும் இந்த விபூதியை நெற்றி மற்றும் திருமேனியில் தினமும் பூசிக்கொள்ளுங்கள் என்றார். பிறகு அங்கிருந்து புறப்பட்டார். குமாரதேவர்! இதையடுத்து சில நாளிலேயே ரெட்டியாரின் மனைவி கருவுற்றார். சில மாதங்களில் ... ரெட்டியாருக்கு குழந்தை பிறந்தது.

பிறகு குழந்தை வளரத்துவங்கியதும் கல்வி முதலான கலைகளை குழந்தைக்கு பயிற்றுவிக்க தகுந்த ஆசிரியரைத் தேடினார் ரெட்டியார். தமிழ்ப் புலமை மற்றும் ஆன்மிக ஞானம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் சிதம்பரக் கவிராயர் குறித்து அறிந்த ரெட்டியார் அவரை தமது இல்லத்துக்கு வரவழைத்தார். தாம் பெற்ற ஞானக்குழந்தைக்கு கல்வி போதிக்கும்படி வேண்டினார். இதை ஏற்ற சுவாமிகளும் அங்கேயே தங்கி குழந்தைக்கு பாடங்களை போதிக்கலானார். ஒருமுறை விருத்தாச்சலத்தில் இருந்து பேரூருக்கு கிளம்பி வந்த குமாரதேவர் வழக்கம்போல் ரெட்டியாரின் இல்லத்தில் தங்கினார். அப்போது அங்கு சிதம்பர சுவாமிகளை சந்தித்தார்.

குமாரதேவரைக் கண்டதும் பரவசம் கொண்டார் சிதம்பர சுவாமிகள். அதேபோல் ரெட்டியாரின் குழந்தைக்கு அழகுற பாடம் நடத்திய சுவாமிகளைக் கண்டு உள்ளம் பூரித்த குமாரதேவர் குழந்தைக்கும் புரியும் வகையில் எளிதாகவும் ரத்தினச் சுருக்கமாகவும் போதிக்கிறார் இந்த ஆசிரியர் என்று பாராட்டினார். அத்துடன், சிதம்பர சுவாமிகளின் பக்குவப்பட்ட மனதை அறியவும் முடிவு செய்தார். அதன்படி இவர் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் மிகத் தெளிவாக பதிலுரைத்தார் சுவாமிகள். அப்போது சுவாமிகளிடம் இருந்த செருக்கு அகன்றது! அது மட்டுமா? குமாரதேவரை சந்தித்தபிறகுதான் சுவாமிகளின் வாழ்வில் மாற்றங்கள் நிகழத் துவங்கின. இதையடுத்து இப்படியொருவர் நம் குருநாதரை சந்திக்க வேண்டுமே என்று விரும்பினார் குமாரதேவர். உடன் அழைத்துச் சென்றபோது அங்கு சாந்தலிங்க சுவாமிகள் இவரை அன்புடன் வரவேற்றார். அவரிடம் சிதம்பர சுவாமிகள் புலமை குறித்து விவரித்தார்.  சிதம்பர சுவாமிகள் முகத்தில் தெரிந்த தீட்சண்யத்தைக் கண்டு மகிழ்ந்த சாந்தலிங்கர் தாம் இயற்றிய வைராக்கிய சதகம் வைராக்கிய கொலை மறுத்தல், அவிரோதவுந்தியார் மற்றும் கண்ணுடைய வள்ளலார் இயற்றிய ஒழிவிலொடுக்கம் ஆகிய ஐந்து ஞானநூல்களையும் சிதம்பர சுவாமிகளிடம் தந்து இவற்றுக்கு உரை எழுதுமாறு பணித்தார். இதனை பெரும்பேறாகக் கருதினார் சிதம்பர சுவாமிகள்.

பிறகு குமாரதேவரிடம் இவனை உன் புத்திரனாகக் கருதி தீட்சை கொடுத்து அருள் செய் என்றார் சாந்தலிங்கர். இதை தொடர்ந்து குமாரதேவர் வீர சைவ முறைப்படி சிதம்பர சுவாமிகளுக்கு 21 தீட்சைகள் செய்வித்து நிஷ்டை சமாதி முதலானவை கைகூடும் பேற்றையும் கூறி அருளினார். இதையடுத்து குமாரதேவர் சொன்னபடி தினமும் பல மணி நேரம் தியானத்தில் மூழ்கி எழுந்தார். சிதம்பர சுவாமிகள். ஒருநாள் சுவாமிகள் தியானத்தில் மூழ்கியிருந்தபோது தோகைவிரித்தபடி ஆடும் மயில் ஒன்றைக் கண்டார். இதுகுறித்து குருநாதர் குமாரதேவரிடம் கூறி விளக்கம் கேட்டார் சுவாமிகள். குருநாதரோ உடனே நீ மதுரைக்குச் சென்று மீனாட்சி அம்மையை தியானித்து வழிபடு இந்தத் தரிசனத்துக்கான காரணம் என்ன என்பது உனக்குப் புலப்படும் என்றார். எனவே அங்கிருந்து மதுரைக்கு வந்தவர் அன்னை மீனாட்சியின் கோயிலுக்குச் சென்று அவளை மனம் உருகி வழிபட்டார். அன்னையின் சன்னிதிக்கு எதிரே கடும் விரதம் மேற்கொண்டார். தொடர்ந்து 45 நாட்கள் கடுந்தவம் இருந்தார்.

அப்போது அவர் பாடியதே மதுரை மீனாட்சி கலிவெண்பா, இந்த பாடலில் மயங்கிய மீனாட்சியம்மை. அவருக்குக் காட்சி தந்தாள். பரவசம் அடைந்த சுவாமிகள், அன்னையை அலங்கரித்தார். அப்போது வடக்குத் திசையில் யுத்தபுரி எனும் ஊர் உள்ளது. அங்கு சென்று என் குமரனாகிய கந்தவேளின் திருமேனியை வழிபாட்டுக்கு உரியதாக்கி பழைய கோயில் கண்டுபிடித்து ஜீர்ணோத்தாரணம் செய் என்று சுவாமிகளுக்கு உத்தரவிட்டாள் அன்னை மீனாட்சி உத்தரவு தாயே. இப்போதே புறப்படுகிறேன். கந்தவேளின் கோயில் கண்டுபிடித்து வழிபாட்டை நெறிப்படுத்துகிறேன் என்று சுவாமிகள் உறுதிமொழி கொடுக்க காட்சி தந்த அன்னை சட்டென மறைந்து போனாள். மீனாட்சி அன்னையே மயிலாகக் காட்சி தந்து மதுரைக்கு அழைத்திருக்கிறாள் என்பதை அறிந்து சிலிர்த்தார் சுவாமிகள். யுத்தபுரி என்று அன்னை அருளியது காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள திருப்போரூரே என்பதை அறிந்த சிதம்பர சுவாமிகள் ஒரு நன்னாளில் மதுரையில் இருந்து புறப்பட்டார். வழியில் விருத்தாசலத்தில் உள்ள தன் குருநாதரை தரிசித்தார். அப்போது குமாரதேவர் சமாதி அடையும் தருணத்தில் இருந்தார். அவரை வணங்கி குருவருள் பெற்று யாத்திரையைத் தொடர்ந்தார் சிதம்பர சுவாமிகள்.

கிளியனூரில் ஞானம்மையார் என்பவர் சுவாமிகளுக்கு உணவளித்து உபசரித்தார். அந்தப் பெண்மணிக்கு அருளாசி வழங்கியவர். பொம்மபாளையத்தில் சிவஞானபாலைய சுவாமிகளைச் சந்தித்தார். இருவரும் கருத்துகள் பலவற்றை பரிமாறிக்கொண்டனர். தொடர்ந்து ஏழு நாட்கள்... இரவு-பகல் பாராமல் இருவரும் விவாதித்தனர். பின்னர் அங்கிருந்து யாத்திரையைத் தொடர்ந்தவர் திருபோரூரை வந்தடைந்தார். இங்கு முருகப் பெருமானின் கோயில் எங்கு உள்ளது? என்று ஊர்மக்களிடம் கேட்டார். முருகப் பெருமானுக்கு கோயிலா... இந்த ஊரிலா....? இங்கு வேம்படி விநாயகர்தான் இருக்கிறார். வேப்பமரத்தின் அடியில் உள்ள பிள்ளையாரைத்தான் கும்பிட்டு வருகிறோம் என்று கூறி அந்தக் கோயிலுக்குச் செல்லும் வழியைக் காட்டினர். அந்தக் காலத்தில் இந்தப் பகுதி பனங்காடாக இருந்தது. முருகப் பெருமான் கோயில் எப்படியேனும் கண்டுபிடித்துவிட வேண்டும். அன்னை மீனாட்சி நம் முயற்சிக்கு உதவுவாள் என்ற நம்பிக்கையுடன் வேம்படி விநாயகர் கோயில் அருகே ஓலைக்குடில் ஒன்றை அமைத்து தங்கினார். அருகில் உள்ள வள்ளையார் ஓடையில் தினமும் நீராடி வேம்படி விநாயகரை வழிபட்டு ஜபம் செய்துவந்தார். பகல்வேளையில் பனங்காட்டில் கந்தவேள் கோயில் தேடும் பணியில் ஈடுபட்டார்.

ஏழாம் நாள் பனங்காட்டில் தேடுதல் பணியில் இருந்தபோது பெண் பனைமரம் ஒன்றின் அடியில் ஸ்ரீசுந்தர பெருமனின் சுயம்பு வடிவைக் கண்டு பூரித்துப் போனார் சுவாமிகள். அந்த மூர்த்தத்தை அள்ளியெடுத்து ஆரத்தழுவிக் கொண்டார். பிறகு மூர்த்தத்தை குடிலுக்குக் கொண்டு வந்த சுவாமிகள் தினமும் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார். அழகன் முருகன் கிடைத்துவிட்டான்; அவன் குடி கொண்டுள்ள கோயிலும் கிடைத்துவிடும் என்று உற்சாகத்துடன் கோயிலைத் தேடும் பணியில் தீவிரமாக இறங்கினார். ஒருநாள் வள்ளையார் ஓடையில் நீராடி, மூலவரான கந்தவேளுக்கு அபிஷேக ஆராதனைகளை முடித்த வேளையில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. சிதம்பர சுவாமிகளின் குருவான குமார தேவரின் (இதற்கு முன்னரே குமாரதேவர் சமாதி ஆகிவிட்டார் என்றும் சொல்வர்) வடிவில் கந்தவேள் எழுந்தருளினார். இந்த நிலையில் குருநாதரை எதிர்பார்க்காத சிதம்பர சுவாமிகள் பெரிதும் மகிழ்ந்தார். அன்னை மீனாட்சியின் அருளுடன் முருகப் பெருமானின் கோயிலைக் கண்டுபிடிக்கவே இங்கு வந்திருக்கிறேன் எனும் தகவலைக் தெரிவித்தார். அப்போது குருநாதர் வடிவில் இருந்த முருகப் பெருமான் சிதம்பர சுவாமிகளின் நெற்றியில் திருநீறு பூசினார்.

அவ்வளவுதான்! மறுகணம் பிரகாரங்கள் தூண்களுடன் அமைந்த மண்டபங்கள் முதலான கோயில் அமைப்பு முழுவதும் சுவாமிகளுக்கு தெரிந்தது. மன நிறைவுடன் குருநாதரை திரும்பிப் பார்த்தார் சுவாமிகள். அப்போது குருநாதரின் வடிவில் இருந்த கந்தவேள் புன்னகைத்தபடியே நடந்தார். குடிலில் இருந்த மூர்த்தத்துக்குள் மறைந்தார். திகைத்துப்போன சுவாமிகள். கந்தவேளின் திருவிளையாடல் இது என்பதை உணர்ந்து சிலிர்த்தார். மூலவர் விக்கிரகத்தையும் கண்டுபிடித்தாயிற்று. கோயில் புதைந்திருக்கும் பகுதியையும் பார்த்தாயிற்று. சுமார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பல்லவர்களால் கட்டுவிக்கப்பட்ட கந்தவேளின் கோயில். மண்ணோடு மண்ணாகி புதருக்குள் மூழ்கிப் போயிருந்தது. இப்படிப்பட்ட பழமையான ஓர் கோயில் பக்தர்கள் தரிசிக்கும் பொருட்டு, அதைக் வெளிக் கொண்டு வரும் பொறுப்பை சுவாமிகளுக்கு அளித்திருந்தாள் அன்னை மீனாட்சி. அடுத்து கோயில் திருப்பணிகளைத் துவக்கினார் சுவாமிகள், ஊர்மக்களின் பிணி நீங்க, அவர்களுக்கு திருநீறு தந்து அருளினார். அனைவரும் நோயில் இருந்து மீண்டனர். குடும்பப் பிரச்சனைகளில் சிக்கித் தவித்தோரும் சுவாமிகளிடம் திருநீறு பெற்று மனம் தெளிந்தனர். அனைவரும் திருப்பணிக்கு தங்களால் இயன்ற தொகையை சுவாமிகளிடம் வழங்கினர்.

செல்வந்தர்கள் பலரும் தங்கத்தையும் பணத்தையும் அள்ளிக் கொடுத்தனர். கிளியனூர் ஞானம்மையாரும் தன்னிடம் இருந்த சிறு தங்கத்தை வழங்கினர். பொருள் மிகுந்தோர் சில கிராமங்களையே சுவாமிகளிடம் காணிக்கையாகக் கொடுத்தனர். குடில் நிறைய பொன் பொருளை சுவாமிகள் வைத்திருக்கும் நேரத்தை அறிந்த கொள்ளைக்கூட்டம் சுவாமிகள் தனியே இருந்தபோது அவரிடம் இருந்த தங்கத்தையும் பணத்தையும் அபகரிக்க திட்டமிட்டது. அதன்படி ஒருநாள் சுவாமிகளைத் தாக்கிவிட்டு இவை அனைத்தையும் கொள்ளை அடித்துக்கொண்டுபோய் விடலாம் என்கிற எண்ணத்தில் அவரைச் சூழ்ந்தபடி அவரைத் தாக்குவதற்காக கைகளை ஓங்கினர். அப்போது அவர்கள் இருவரையும் அமைதியாக பார்த்தபடியே இருந்தார் சுவாமிகள். அடுத்த கணம் கள்வர்களின் கைகள் செயலிழந்தன. பின் பார்வையும் பறிபோனது. தட்டுத்தடுமாறியபடி வந்து, சுவாமிகளின் பாதங்களில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். அது மட்டுமா?  இதுவரை திருடிய அனைத்து பொருட்களையும் கோயில் திருப்பணிக்குத் தந்து விடுவதாகவும் உறுதி அளித்தனர். அடுத்த கணம் அனைவரும் பார்வை கிடைக்கப் பெற்றனர்.

திருப்பணி முடிந்து கோயில் புதுப்பித்து பூஜைகள் நடத்துவது குறித்து விவரித்தவர் சுவாமிகள். கந்தவேளை வழிபடுவதற்கு திருப்போரூர் தலத்துக்கு வரும் அன்பர்கள் அவனது பெருமையையும் பேரரருளையும் சன்னிதியிலேயே பாடிப் பரவசப்படவேண்டும் என்பதற்காக திருப்போரூர் சன்னிதிமுறை எனும் 726 பாடல்களை கொண்ட பாராயண நூலை இயற்றினார். தவிர மதுரை மீனாட்சியம்மை கலிவெண்பா, திருக்கழுக்குன்றம் வேதகிரிசுரர் பதிகம், விருத்தாசலம் குமாரதேவர் நெஞ்சுவிடு தூது, விருத்தாசலம் குமாரதேவர் பதிகம், பஞ்சதிகார விளக்கம் ஆகிய நூல்களையும் அருளினார் சிதம்பர சுவாமிகள். மீனாட்சியம்மை இட்ட பணியை செவ்வனே நிறைவேற்றி விட்டதாக கருதினார் சுவாமிகள். திருப்போரூரில் உள்ள கந்தவேள் கோயில் ஒவ்வொரு கல்லும் சுவாமிகளின் அருமை பெருமையைச் சொல்லும் கோயில் வெளிப்பிரகாரத்தின் வடக்கே சுவாமிகளுக்கு சிறிய சன்னிதி இருக்கிறது. புராண சிறப்பு வாய்ந்த தலம் திருப்போரூர்! ஈசனின் அருளால் திருமாலும் லட்சுமியும் கண்ணுவ முனிவரால் தங்களுக்கு நேர்ந்த சாபத்தில் இருந்து விமோசனம் பெற்ற இடம். அகத்தியருக்கு முருகப் பெருமான் உபதேசித்தது இங்குதான்! அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம். சிதம்பர சுவாமிகளால் யந்திர ஸ்தாபனம் செய்து வைக்கப்பட்ட கோயில்; அசுரர்களை போர் புரிந்து முருகப் பெருமான் அழித்த தலம்.... என திருப்போரூருக்கு சிறப்புகள் பல உண்டு.

சில காலம் கழித்து, திருப்போரூரில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள கண்ணகப்பட்டு எனும் ஊருக்கு இடம் பெயர்ந்தார் சுவாமிகள். அங்கு மடாலயம், பூஜை மடம் மற்றும் ஒடுக்க அறை ஆகியவற்றை அமைத்தார். ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டார். சுவாமிகளின் பெருமைகளை அறிந்தவர்கள் பல ஊர்களில் இருந்தும் கண்ணகப்பட்டுக்கு வந்து அவரை தரிசித்துச் சென்றனர். அவரிடம் சிவ தீட்சை பெற்று சிலர் சீடரானார்கள். திருப்போரூர் முருகப்பெருமானின் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுவாமிகளை தரிசித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். சுவாமிகள் தினமும் நீராடிய வள்ளையர் ஓடை, சரவணப் பொய்கை எனும் பெயரில் வற்றாத தீர்த்தமாக முருகப் பெருமான் கோயிலுக்கு முன்னே இன்றும் உள்ளது.

கி.பி. 1659-ஆம் ஆண்டு வைகாசி மாத விசாக தினம் அது. மடாலயத்தில் ஒடுக்க அறைக்குள் இருந்து முன்பே வடிவமைத்துள்ள சுரங்கம் ஒன்றின் வழியே அடுத்துள்ள சமாதிக் குழிக்குள் பூஜா திரவியங்களுடன் சென்று இறைவனை பூஜித்து வழிபட்டு சமாதியின் உள்ளேயே பரிபூரணம் அடைந்தார் சிதம்பர சுவாமிகள் இதே நேரத்தில் திருப்போரூர் கோயில் மூலவர் கந்தசாமியின் திருச்சன்னிதியை நோக்கி கூப்பிய கரங்களுடன் சென்று மூலவர் திருமேனியுடன் இரண்டறக்கலந்தார். இதனை நேரில் கண்ட சுவாமிகளின் சீடர்களும் உண்டு. எனவே கண்ணகப்பட்டில் அமைந்த சுவாமிகளின் திருக்கோயில் அதிஷ்டானம் என்றோ ஜீவசமாதி என்றோ சொல்லப்படுவது இல்லை. ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள் மடாலயத் திருக்கோயில் என்றே வழங்கப்படுகிறது. ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள் ஏற்படுத்திய ஆதீன மரபில் அடுத்தடுத்து வரும் ஆதீனகர்த்தாக்கள் திருப்போரூர் கந்தசாமி கோயில் நிர்வாகித்து வருகின்றனர் (தற்போது 14 வது பட்டமான ஸ்ரீசிதம்பர சிவஞான சுவாமிகள் நிர்வகித்து வருகிறார்). கண்ணகப்பட்டு ஸ்ரீசிதம்பர சுவாமிகள் மடாலயத்துக்கு கும்பாபிஷேகம் செய்து வைக்க எண்ணி திருப்பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

சிதம்பர சுவாமிகளின் மடாலயத் திருக்கோயில்

சென்னையில் இருந்து திருப்போரூர் செல்லும் வழியில் திருப்போரூருக்கு முன்னே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் கண்ணகப்பட்டு எனும் கிராமத்தில் பிரதான சாலையை ஒட்டியே அமைந்துள்ளது மடாலயம். கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான பாலாலயம் செய்து ஒரு வருடம் ஆகிறது.

விஸ்தாரமான இடத்தில் கருவறை, அர்த்த மண்டபம் மகா மண்டபம் ஆகிய அமைப்பில் அழகுறக் காட்சி தருகிறது திருக்கோயில், ஆவுடையாரின் மேல் சலவைக் கல்லால் ஆன பாணலிங்கம். ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகளின் திருச்சன்னிதி இதுதான்! பலிபீடம் நந்திதேவர் சுவாமிகளுக்குப் பிறகு ஆதீனப் பொறுப்பில் இருந்த மாடதிபதிகள் பலரது சமாதியும் மகா மண்டபத்தை ஒட்டி இருக்கிறது.

பிரகார வலம் வரும்போது சற்று விலகிச் செல்லும் பாதை ஒன்றில் பயணித்தால் சுவாமிகளின் ஒடுக்க அறையைத் தரிசிக்கலாம். தவம் முதலான சுவாமிகளுக்கு ஸித்தியான இடம் இது. இங்கு பஞ்ச லோகத்தால் ஆன சுவாமிகளின் விக்கிரகம் உள்ளது. குருபூஜையின்போது மட்டும் (வைகாசி விசாகம்) விக்கிரகத்தை வெளியே எடுத்து அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. பிற நாட்களில் புனுகு ஜவ்வாது சார்த்தி மாலை அணிவிப்பது வழக்கம்.

ஒடுக்க அறையில் நிஷ்டை, யோகம் முதலானவற்றை சுவாமிகள் இப்போது அனுஷ்டித்து வருவதாக ஐதீகம். எனவே அவருக்குத் தொந்தரவு கூடாது என்பதால் இங்கு வழிபாடு இல்லை. ஒரேயொரு திருவிளக்கு மட்டும் 24 மணிநேரமும் சுடர்விட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. சுவாமிகள் பயன்படுத்திய சுரங்கத்தை மேடை போல் அமைத்து மூடி வைத்துள்ளனர். அவர் அமர்வதற்குப் பயன்படுத்திய புலித்தோல் மற்றும் பாதரட்சை ஆகியவற்றையும் தரிசிக்கலாம்.

தினமும் காலை 8 முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலுமாக இரண்டு வேளைகளில் பூஜை நடைபெறுகிறது. பவுர்ணமி தினங்களில் இரவு 7 முதல் நள்ளிரவு 12 மணி வரை அபிஷேகம். அலங்காரம், அன்னதானம், பஜனைகள் ஆகியவை சிறப்புற நடைபெறும். சுவாமிகளைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பலர் அன்றிரவு இங்கு தங்கிவிட்டு மறுநாள் காலையில் தரிசனம் முடித்து திரும்புகின்றனர். தவிர கிருத்திகை, ரோகினி, விசாகம், பரணி ஆகிய நட்சத்திர தினங்களிலும் சுவாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் சிறப்பாக இருக்கும்.

கண்ணகப்பட்டு திருப்போரூர் பாதையில், சாலையின் வலப்பக்கம் இருக்கிறது. சுவாமிகள் முதலில் வந்து வணங்கிய வேம்படி விநாயகர் திருக்கோயில். எனவே திருப்போரூர் வரும் அன்பர்கள் கண்ணகப்பட்டு மடாலயத் திருக்கோயில், வேம்படி விநாயகர் கோயில்.  அதன்பின் திருப்போரூர் முருகன் என்று தங்களது தரிசனத்தை அமைத்துக் கொள்ளலாம். ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகளின் வழியை பின்பற்றி வரும் ஏராளமான சீடர்கள் தங்கள் கழுத்தில் சிவலிங்கத்தைத் தொங்கவிட்டபடி வீரசைவராக இன்றைக்கும் இருக்கின்றனர். கண்ணகப்பட்டில் சுவாமிகளுக்கு எந்தவொரு ஆராதனை வைபவம் நிகழ்ந்தாலும்.... இவர்கள், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தவறாமல் இங்கு வந்து பங்கேற்கின்றனர்.

தகவல் பலகை

தலம்    : திருப்போரூர் கண்ணகப்பட்டு

சிறப்பு    : ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள் திருமடாலயம்.

எங்கே இருக்கிறது?: சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலையில் கேளம்பாக்கத்தை அடுத்து அமைந்துள்ளது கண்ணகப்பட்டு. இங்குதான் சிதம்பர சுவாமிகளின் திருமடாலயம் இருக்கிறது. கண்ணகப்பட்டில் இருந்து திருப்போரூருக்கு சுமார் ஒரு கி.மீ. தொலைவு.

எப்படி போவது?: அடையாறு, தி.நகர். தாம்பரம் உட்பட சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய ஊர்களில் இருந்தும் திருப்போருருக்கு நேரடி பேருந்து வசதி உண்டு.

தொடர்புக்கு:
அருள்மிகு கந்தசாமி கோயில்,
திருப்போரூர் ஆதீனம்,
திருப்போரூர் 603110.
காஞ்சி மாவட்டம்,
போன் (044) 2744 6226.

நன்றி: திருவடி சரணம்

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar