Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » சுந்தர ஸ்வாமிகள்
சுந்தர ஸ்வாமிகள், கோடகநல்லூர்
எழுத்தின் அளவு:
சுந்தர ஸ்வாமிகள், கோடகநல்லூர்

பதிவு செய்த நாள்

09 மார்
2015
02:03

1831 ஆம் வருடம் டிசம்பர் 3 ஆம் தேதி சனிக்கிழமை அன்று அனுஷ நட்சத்திரம், ரிஷப லக்னத்தில் அமாவாசை நாளில் திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் அவதரித்தார். ஸ்ரீ சுந்தர சுவாமிகள். ஸ்ரீவத்ஸ கோத்ரத்தைச் சேர்ந்த யக்ஞேஸ்வர சாஸ்திரிகள் காமாட்சி அம்மாள் தம்பதியின் 2வது மகனாகப் பிறந்தார். மூத்தவன் குப்பாணி சிவம்.

அப்பய்ய தீட்சிதரின் பரம்பரையில் அவதரித்தவர் சுந்தர ஸ்வாமிகள். இவர் பிறந்த ஒண்ணரை ஆண்டிலேயே இவரின் பெற்றோர் இறந்தனர். எனவே தாய்மாமனான வேங்கடசுப்பய்யர்தான் சுந்தரத்தை வளர்த்து வந்தார். சிறுவர்களான குப்பாணி சிவம் மற்றும் சுந்தரம் இருவரும் கல்வி பயிலுவதற்காக கங்கை கொண்டானில் இருந்து பக்தமடைக்கு இடம் பெயர்ந்தனர். சுந்தரத்துக்கு 5 வயதில் அட்ச அப்பியாசமும் ஏழு வயதில் உபநயனமும் நடைபெற்றது. பத்தடையைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ண கனபாடிகளிடம் வேத அத்யயனம் பயின்ற சுந்தரம். கல்விகேள்விகளில் சிறந்து விளங்கினான். இவனது திறனைக் கண்டு வியந்த ஊர்க்காரர்கள் தெய்வீகப் பிறவியப்பா சுந்தரம். இப்படியொரு புள்ள நம்ம ஊர்ல வளர்றதுக்கு நாமெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும் என்று பெருமிதம் கொண்டனர்.

சிவபூஜை செய்வதில் ஈடுபாடு கொண்ட சுந்தரம் தினமும் ஒரு லட்சம் முறை பஞ்சாட்ர மந்திரத்தை ஜபித்து வந்தான். மேலும் யாகம், தவம் ஆகியவற்றிலும் கரை கண்டிருந்தான் சுந்தரம். நெல்லை மாவட்டம் அடைச்சாணி எனும் கிராமத்தைச் சேர்ந்த ராமசுப்பய்யரின் மகள் ஜானிக்கும் சுந்தரத்துக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது சுந்தரத்துக்கு வயது பதினாறு. தன்னுடைய மாப்பிள்ளையின் சிவபக்தியைக் கண்டு வியந்த ராமசுப்பய்யர். சிவ பூஜைக்கான நியமங்கள் சிலவற்றை அவருக்கு போதித்தார். அத்துடன் நெடுநாளாக தான் பூஜித்து வந்த பாணலிங்கம், ஸ்ரீநடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் ஆகிய விக்கிரகங்களையும் வழங்கினார்.

இந்த நிலையில் அடைச்சாணியில் உள்ள விஸ்வேஸ்வர சாஸ்திரிகள் என்பவரிடம் மந்திர உபதேசம் பெற்ற சுந்தரம். இவரை தமது குருவாகவும் ஏற்றார். இதையடுத்து பத்தமடைக்கு திரும்பிய சுந்தரம் ஸ்வாமிகள் தன் வாழ்க்கை முறையை மாற்றலானார். கணவரின் எண்ணத்துக்கு தக்கபடி சுவாமிகளின் துணைவியார் ஜானகியும் தியாகங்கள் சிலவற்றைச் செய்தார். பின்னர் தனது குருவின் ஆணைப்படி துணைவியார் ஜானகிக்கு மந்திரங்கள் உபதேசித்து அவரை தனது முதல் சீடராக ஏற்றார். துணைவியாரின் விருப்பமும் இதுவே, இதையெடுத்து சில ஆண்டுகளில் சுவாமிகளை அறிந்த அன்பர்கள் பலர் இவருக்கு சீடர்களானார்கள்.

ஒருமுறை தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள கோயில்கள் தரிசிக்க யாத்திரை மேற்கொண்டார் சுவாமிகள். பயணத்தின்போது சூத சமஹிதை குறித்து உரை நிகழ்த்தினார். (சிவபக்தி, சிவபூஜை, ஆசனங்கள் அஷ்டமாஸித்தி அஷ்டமாயோகம் ஆகியவை குறித்து சூத புவராணிகர் அருளியதே சூத சம்ஹிதை) சிவபூஜை செய்தார்.

புனித பூமியாம் காசிக்குச் சென்று கங்கையில் நீராடி காசி விஸ்வநாதர் விசாலாட்சி மற்றும் அன்னபூரணியை தரிசிக்க விரும்பிய சுவாமிகள் யாத்திரை புறப்பட்டார். மதுரை, திருச்சி, திருவையாறு, மாயவரம், சீர்காழி, சிதம்பரம், வேதாரண்யம், விருத்தாசலம் முதலான தலங்களை தரிசித்து அங்கு உள்ள பக்தர்களுக்கு ஆசி வழங்கி பின்னர் காசியை அடைந்தார். கங்கையில் நீராடினார். கோயில்கள் பலவற்றையும் தரிசித்தார். காசியில் உள்ள யோகிகள் பலரிடமும் உரையாடினார். அப்போது இறை பலமும் எண்ணற்ற கலைகளும் கைவரப்பெற்ற மகா கணபதி சுவாமிகளை சந்திக்க நேர்ந்தது. அதுவும் எப்படி?

தொடர்ந்து ஆறு மாத காலம் நீருக்கு அடியிலேயே வசிக்கும் யோகப் பயிற்சியை அறிந்த மகா கணபதி சுவாமிகளை அவர் கங்கை நதிக்குள் தவம் இருப்பதை அறிந்து தானும் அங்கு சென்று சந்தித்தார் சுந்தர ஸ்வாமிகளை இருவரும் பல அரிய தகவல்களை பரிமாறிக் கொண்டனர். மணிகர்ணிகா கட்ட படித்துறையில் இந்த இரண்டு துறவிகளது கல் விக்கிரகங்களை இன்றைக்கும் தரிசிக்கலாம்.

காசியிலிருந்து நெல்லைச் சீமைக்கு திரும்பிய சுந்தர ஸ்வாமிகள் பத்தமடை, கோடகநல்லூர் சுத்தமல்லி, கடையம் முதலான தலங்களுக்குச் சென்றார். (தனது குரு திருச்சமாதி அடைந்த அடைச்சாணிக்கும் சென்று தரிசித்தார்) கடையத்தில் சேஷாசல தீட்சிதர் என்பவரை சந்தித்த பின் சன்னியாசத்தைப் பெற்றார். அப்போது சுவாமிகளுக்கு வயது 21.

சுவாமிகள் ஒருமுறை சுத்தமல்லியில் தங்கி இருந்தபடி தினமும் சொற்பொழிவாற்றி செய்து வந்தார். திரளென குவிந்திருந்த பக்தர்கள் இடையே வடமொழியில் ஸ்லோகங்கள் சொல்லி அதற்கு தமிழில் விளக்கமும் அளித்தார். கட்டுக்குடுமியும் பூணூலையும் சுவாமிகள் உபந்யாசித்து வந்தபோது ஒருவர் திடீரென எழுந்து உள்ளே சென்றார். சில நிமிடங்களில் மீண்டும் திரும்பி வந்தார்.

அவரைக் கண்டு பலரும் அதிசயித்தனர். காரணம் சுவாமிகளது தலையில் கட்டுக்குடுமி இல்லை. திருமேனியில் பூணூலும் இல்லை. சட்டென அனைத்தையும் துறந்துவிட்டு தன் உபந்யாசத்தை தொடர்ந்தார். இதன், பின்னர் சுவாமிகளின் துறவு வாழ்க்கை முழுமை அடைந்ததாகக் கருதினர் அவரது சீடர்கள்.

தனது 23 ஆம் வயதில் நெல்லை சங்கர மடத்தில் சில காலம் வசித்த சுவாமிகள் அங்கு எதிர்பார்த்த அமைதி நிலை கிடைக்கப் பெறாததால் நெல்லையை அடுத்த கோடக நல்லூரை அடைந்தார். இவர் தாமிரபரணிக் கரையோரத்தில் நெடுநெடுவென வளர்ந்திருக்கும் நாணல் மற்றும் மூங்கில் புதர்களுக்குள் சென்று எவரும் தன்னை அணுக முடியாத நிஷ்டையில் ஆழ்ந்திருப்பார். சில தருணங்களில் அப்படியே சமாதி நிலையை எய்தி விடுவார் சுவாமிகள். அப்போது சுவாமிகளுக்கு உணவு எடுத்து வரும் சீடர்கள் சுவாமிகளை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க இயலாமல் உணவுடன் திரும்பிச் செல்வார்கள். ஆனால் பக்தனின் பசியை பரமன் பொறுப்பாரா? அன்ன ஆகாரம் எதுவுமின்றி சுவாமிகள் நிஷ்டையில் இருக்கும்போது ஆதிசிவனே அந்தணர் வடிவில் அன்னப் பாத்திரத்துடன் தோன்றியதுடன் சுந்தர ஸ்வாமிகளுக்கு தரிசனமும் அருளியுள்ளாராம்.

கோடகநல்லூரில் உள்ள சங்கர மடத்தில் தங்கி சொற்பொழிவு ஆற்றி இருக்கிறார் யோகிகளுக்கே உரித்தான பரிபக்குவ நிலையை அடைவதற்கு கோடகநல்லூர் வாசம் உதவியதால் பின்னாளில் ஸ்ரீ கோடகநல்லூர் சுந்தர ஸ்வாமிகள் ஆனார்.

ஒரு தீபாவளி தினம். காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் உபந்யாசம் செய்தார் சுந்தர ஸ்வாமிகள். ராமச்சந்திர மேத்தா உள்ளிட்ட அடியார்கள் பலரும் திரளான பக்தர்களும் அங்கு இருந்தனர். இரவு, சாஸ்திரம் குறித்த விளக்கங்களை தெளிவுற அறிந்த சுவாமிகள் பரிசுத்தமான ஒவ்வொருவரது உள்ளங்கையிலும் அக்னி பகவான் ஆட்சி செலுத்துகிறார். எனவே நெருப்பின் தாக்கம் உள்ளங்கையில் எப்போதும் குடிகொண்டிருக்கும். ஆகவே உள்ளங்கையில் படாமல் உணவைச் சாப்பிடுவதே உத்தமம் என்றார். இதை ராமச்சந்திர மேத்தா கூர்ந்து கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் காமாட்சி அம்மன் கோயில் அர்ச்சகரான சுப்ரமண்ய பட்டர் தெய்வ அலங்காரம் மற்றும் நைவேத்திய தயாரிப்புக்காக புஷ்பங்கள், அரிசி மற்றும் ஒரு  கொட்டாங்கச்சியில் நெருப்புத் துண்டுகள் ஆகியவற்றுடன் அங்கு வந்தார். திடீரென மழை பெய்யவே கொட்டாங்கச்சியில் இருந்த நெருப்புத் துண்டங்கள் மழையில் நனைந்து அணைந்தது. இது சுவாமிகளது திருவிளையாடல் என்பதை அப்போது எவரும் உணரவில்லை.

சுவாமிகளை வணங்கிய சுப்ரமண்ய பட்டர் பக்தர் எவரையேனும் அனுப்பி நெருப்புத் துண்டங்கள் கிடைக்க உதவும்படி வேண்டினார். உடனே சுவாமிகளும் அங்கு இருந்த ஆவுடையப்ப பிள்ளை என்பவரை அழைத்து அடுக்களைக்குச் சென்று நெருப்புத் துண்டங்களை எடுத்து வரும்படி உத்தரவிட்டார். அப்போது ராமச்சந்திர மேத்தாவுக்கு வந்தது ஒரு யோசனை. மெள்ள சுவாமிகளை நெருங்கி பூஜைக்கு தேவையான நெருப்பை தங்களது உள்ளங்கையில் இருந்து எடுத்துத் தர முடியாதா சுவாமி? என்று பவ்யமாகக் கேட்டார். அங்கு இருந்தவர்கள் அதிர்ந்தனர். சுவாமிகளையா சோதிப்பது? என்று முணுமுணுத்தனர்.

ராமச்சந்திர மேத்தாவைப் பார்த்துப் புன்னகைத்த சுவாமிகள் தாங்கள் மேலே அணிந்திருக்கும் வஸ்திரத்தைத் தாருங்கள் என்று வாங்கிக் கொண்டார். வஸ்திரத்தைத் தனது உள்ளங்கையில் பரபரவென தேய்த்தார். அவ்வளவுதான் தகித்து எழுந்தது நெருப்பு இதைக்கொண்டுபூஜைக்கு தேவையான அக்னி தயார் செய்யப்பட்டது. இதைக் கண்டு விதிர்த்துப் போன மேத்தா சுவாமிகளின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அவரை ஆசிர்வதித்த சுவாமிகள் இது இறைவனின் விளையாடலப்பா! கலங்க வேண்டாம் என்றார்.

சிருங்கேரி ஜகத்குரு மகாசன்னிதானம் ஒருமுறை திருநெல்வேலிக்கு விஜயம் செய்திருந்தார். சுந்தர ஸ்வாமிகளைப் பற்றி அறிந்திருந்ததால் அவரை தான் தங்கியிருந்த இடத்துக்கு அழைத்து அவருடன் பேசி மகிழ்ந்தார் சிருங்கேரி சன்னிதானம். அத்துடன் தன்னைச் சந்திக்கக்கூடி இருந்த மக்கள் இடையே சுந்தர சுவாமிகள் ஓர் அவதார புருஷர் என்று கூறி அவரது பெருமைகளை விவரித்தார்.

சுந்தர ஸ்வாமிகளது காலத்துக்குப் பிறகு வந்தவர்தான் எனினும் காஞ்சி மகா ஸ்வாமிகள் சுந்தர சுவாமிகள் குறித்து தன் பக்தர்களிடம் விவரித்துள்ளனார். அப்போது கோயில் திருப்பணிகளுக்கு அள்ளிக் கொடுத்து இறைப் பணியில் தங்களை பெரிதும் ஈடுபடுத்திக் கொண்டவர்கள் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள். இந்த கைங்கர்யத்தைத் தொன்று தொட்டு செய்து வந்தாலும் சமீப காலத்தில் இவர்களை அதிக அளவில் இறைப்பணியில் ஈடுபடச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் சுந்தர சுவாமிகள். இவரது காலத்தில் திருமேனியில் திருநீறும் கழுத்தில் ருத்ராட்சமும் அணியாத நாட்டுக் கோட்டை செட்டியாரைப் பார்ப்பதே அரிது. அந்த அளவுக்கு இவர்களுக்கு சிவபக்தியை புகட்டியவர் சுந்தர சுவாமிகள். இவரது உத்தரவை ஏற்று சிவன்கோயில்கள் பலவற்றுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளனார் என்று கூறி உள்ளார் காஞ்சி மகா சுவாமிகள். இந்தத் தகவல் சுந்தர சுவாமிகளது வரலாற்றுத் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.

செட்டி நாட்டுப் பகுதிகளுக்குச் சென்று உபந்யாசம் செய்யும்போது ஏகமூக ருத்ராட்சத்தின் மகிமையை எடுத்துரைப்பார் சுந்தர சுவாமிகள். இதைக்கேட்ட நாட்டுக்கோட்டை செட்டிமார்கள் பலரும் ஏகமுக ருத்ராட்சத்தை அணியத் துவங்கினர். சுவாமிகளை குருவாக ஏற்று வணங்கி வரும் எண்ணற்ற அன்பர்கள் ஏகமுக ருத்ராட்சத்தை அணிந்திருப்பதைக் காணலாம்.

திருவையாறு பகுதியில் உள்ள ஸப்த கோயில்களுக்கு (திருவையாறு, திருச்சோற்றுத்துறை திருநெய்த்தானம், திருவேதிக்குடி, திருக்கணிகை, திருப்பழனம், திருப்பூந்துருத்தி) 1872ல் கும்பாபிஷேகம் செய்துவைத்தார் சுவாமிகள்.

வைகாசி மாதத்தில் ஒரே நாளில் நேரத்தில் ஏழு கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆச்சரியம் என்னவெனில் எல்லா கோயில்களிலும் ஒரே நேரத்தில் அங்கு இருந்தார் சுவாமிகள். இதை அறிந்த அவரின் சீடர்களும் எண்ணற்ற பக்தர்களும் மெய்சிலிர்த்தனர்.

இந்தக் கும்பாபிஷேகத்தில் பங்கெடுத்த அந்தணர்கள் மதிய உணவுக்காக அமர்ந்திருந்தனர். அப்போது சயைலில் ஈடுபட்டிருந்த அன்பர் ஒருவர் ஓடிவந்து உணவில் சேர்ப்பதற்கும் அந்தணர்களுக்கு பரிமாறுவதற்கும் நெய் இன்னும் வந்தபாடில்லை என்ன செய்வது? என தவித்தபடி கேட்டார். உடனே சுவாமிகள் அவ்வளவுதானே கோயில் குளத்தில் நான்கு குடங்கள் தண்ணீர் எடுத்து வாருங்கள் என்றார்.

நெய் கேட்டதற்கு நீரை எடுத்து வரச் சொல்கிறாரே என்று அந்த அந்தணர் குழம்பியபடி அடி சீக்கிரமா எடுத்துட்டு வாங்க. அந்தணர்கள் பசியுடன் இருக்காங்க அவரை விரட்டினார் சுவாமிகள். உடனே அவர்கள் நான்கு குடங்களிலும் குளத்து நீரை எடுத்துவந்து சுவாமிகள் முன்னே வைத்தார்.

அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று அறியும் ஆவலுடன் அனைவரும் காத்திருந்தனர். கையில் கொஞ்சமாக திருநீரை எடுத்த சுவாமிகள் ஸ்ரீஐயாரப்பரை பிரார்த்தித்து திருநீறை நான்கு குடங்களிலும் மெள்ள தூவினார். மறுகணம் குடங்கள் அனைத்திலும் கமகமவென நெய் வாசனை அனைவரும் அதிசயித்துப் போனார்கள். இந்த நெய்தான் அன்னதானத்துக்குப் பயன்படுத்தப்பட்டது.

இதையடுத்து சில நிமிடங்களில் நெய் எடுத்து வந்து இறங்கினார் வியாபாரி. உடனே அன்பர் ஒருவரை அழைத்த சுவாமிகள் ஒரு குடநெய்யை மட்டும் கோயில் குளத்தில் விட்டுவிடுங்கள். இறைவன் கொடுத்ததை அவனுக்குத் திருப்பித் தருவதுதான் மரியாதை என்றார். அதன்படியே குட நெய் குளத்தில் விடப்பட்டது.

இந்த திருவையாறு கும்பாபிஷேகத்தில் இன்னொரு சம்பவமும் நடந்தது. சுந்தர ஸ்வாமிகளை எப்படியேனும் அவமானப்படுத்த வேண்டும் எனும் நோக்கத்துடன் அந்நிய மதத்தைச் சேர்ந்த ஒருவர் அங்கு வந்தார். சுவாமிகளுக்கு என் அன்பு காணிக்கை என்று சொல்லி பொட்டலம் ஒன்றை சுவாமிகளுக்கு முன்பு வைத்தார்.

மெள்ள புன்னகைத்த சுவாமிகள் தனது திருக்கரத்தால் அந்தப் பொட்டலத்தைத் தொட்டார். பிறகு அந்த ஆசாமியிடம் பொட்டலத்தைப் பிரிக்கும்படி கூறினார். சுவாமிகளுக்கு அவமானம் நேரப் போவதாக மகிழ்ந்த அந்த ஆசாமி பொட்டலத்தைத் திறந்தார். அதில் சுவையான பழங்கள் இருந்தது கண்டு அதிர்ந்தார். ஏனெனில் பொட்டலத்தில் வைத்திருந்தது மாமிசமாயிற்றே. தை அமாவாசையின் போது 1884 ஆம் ஆண்டு நெல்லை காந்திமதி அம்மன் கோயிலில் லட்சதீபம் ஏற்றுதல், பொதிகை மலை தரிசனம், குறுக்குத்துறை முருகப் பெருமானின் கோயில் விஜயம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டார் சுவாமிகள். இதையடுத்து புதுக்கோட்டை ஓட்டுத் திண்ணை பரதேசி சுவாமிகளது விருப்பத்துக்கு இணங்க புதுகைக்குச் சென்றார் சுவாமிகள்.

அப்போதுதான் அந்தணர் அல்லாதோருக்கும் பெண்களுக்கும் முறைப்படி தீட்சை வழங்கினார். இங்கு தங்கியிருந்த வேளையில் அரிமளம் சிவராமன் செட்டியார் மற்றும் புதுவயல் அழகப்பா செட்டியார் ஆகிய பக்தர்கள் இருவரும் சுவாமிகளைப் பெரிதும் கவர்ந்தனர்.

இதையடுத்து பல தலங்களுக்கும் சென்றவர் மீண்டும் புதுக்கோட்டைக்கு வந்தார். அங்கிருந்து ராமேஸ்வரத்துக்கு சென்றபோது அரிமளம் சிவராமன் செட்டியார் உட்பட பக்தர்கள் பலரும் உடன் சென்றனர். ரெட்டை மாட்டு வண்டிகளில் பயணம் செய்தவர்கள் திருமயத்தை அடைந்தபோது அந்த அற்புதம் நிகழ்ந்தது.

எதிரே சாலையில் நின்றபடி வண்டியை புதுக்கோட்டைக்குத் திருப்பு என்று சொல்லி மறைந்தார் சுந்தர ஸ்வாமிகள். வண்டிக்காரனுக்கோ குழப்பம், என்னடா இது? வண்டியில் அசந்து தூங்கிக்கிட்டிருந்த சாமீ திடீர்னு கீழே இறங்கி புதுக்கோட்டைக்குத் திருப்பச் சொல்றாரு என்று. பிறகு வண்டியைத் திருப்பி மீண்டும் புதுக்கோட்டை நோக்கிச் செலுத்தினான். சிறிது நேரத்தில் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட சுவாமிகள் இப்ப நாம எங்கேப்பா இருக்கோம் என்று கேட்க, புதுக்கோட்டையை நெருங்கிவிட்டு இருக்கோம். சாமீ என்று பதில் சொன்னான் வண்டிக்காரன். சுவாமிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. என்னது புதுக்கோட்டைக்கா? ராமேஸ்வரம் போகலையா? என்று கேட்டார். உடனே வண்டிக்காரன் என்ன சாமீ. நீங்கதானே வண்டிக்கு எதிரில் நின்னு புதுக்கோட்டைக்கே போடானு சொன்னீங்க? என்றான். ஆச்சரியப்பட்ட சுவாமிகள் வண்டியிலேருந்து நான் இறங்கவே இல்லியேப்பா என்று உறுதிபட தெரிவித்தார்.

பின்னர் திருமயத்தில் வண்டி எந்த இடத்தில் புதுகைக்குத் திரும்பியதோ அந்த இடத்துக்கு வெகு அருகில் பெரும் புயல் வீசியது. மரங்கள் விழுந்து வீடுகள் சரிந்து சாலையில் சென்ற வண்டிகள் அனைத்தும் நிலை தடுமாறி கவிழ்ந்துவிட்டன. ஆடுமாடுகள் கூட நாசமாகி விட்டன. மறுநாள் விடிந்ததும் இந்த தகவல் தெரிந்தது. அப்போதுதான் சுவாமிகளது உருவத்தில் வந்து இறைவனே தங்களை காப்பாற்றி உள்ளான் எனும் உண்மையை அறிந்து அனைவரும் சிலிர்த்தனர். பின்னர் சுவாமிகளை அரிமளத்துக்கு அழைத்துச் சென்ற சிவராமன் செட்டியார் சிவன்கோயிலுக்கு கும்பாபிஷேகம் மற்றும் அன்னதான சத்திரம் முதலான பணிகளை செய்து முடித்தார். மதுரையில் உள்ள விபூதி மடத்தில் பக்தர்கள் மற்றும் சிஷ்யர்களுடன் சில நாட்கள் தங்கினார் சுவாமிகள். இவரின் சீடரான நாராயணசிவம் என்பவர் தண்ணீரில் அமர்நது யோக நிஷ்டை இருப்பதில் தேர்ந்தவர். எனவே மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ள பொற்றாமரைக் குளத்துக்கு வந்து நீரின் மேல் யோகநிஷ்டையில் இருந்தார். நாராயணசிவம். இதைக்கண்ட அன்பர்கள் பலரும் அவரது யோக முறையை வியந்து அதிசயித்தனர். அதுவரை குளத்து நீரில் அமர்ந்தபடி யோகத்தில் இருந்த நாராயணசிவம் திடீரென மெள்ள மெள்ள நீருக்குள் மூழ்கினார். கரையில் நின்றவர்களுக்கு இவரது உடல் தெரியவே இல்லை. அங்கு இருந்த சுவாமிகளின் பக்தரான சுப்ரமண்ய குருக்கள் என்பவர் உடனே காவல்நிலையத்துக்கு ஓடோடிச் சென்று பொற்றாமரைக் குளத்துக்குள் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். காவல்துறையினர். இரண்டு நாளாகியும் உடல் கிடைக்கவே இல்லை.

மூன்றாம் நாள், அங்கு வந்தார் சுந்தர சுவாமிகள். நாராயண சிவத்தின் உடலை எப்படியேனும் தென்கரையிலுள்ள விபூதி விநாயகர் சிலைக்கு அருகே கொண்டு வந்து வைத்துவிடுங்கள் என்று காவல்துறையினரிடம் தெரிவித்தார் சுவாமிகள்.

இறந்த நாராயண சிவத்தை உயிர்ப்பிக்கும் எண்ணத்தில் இருக்கிறார் சுவாமிகள் என்பதை அறிந்து கொண்ட போலீசாரும் கோயில் ஊழியர்களும் சுவாமிகளை கேலி செய்தனர். தண்ணீரில் இறந்து மூணு நாளாச்சு. உடலையே இன்னும் கண்டுபிடிக்க முடியலை. இவர் உயிர்ப்பிக்க போறாராமா! என்று கிண்டல் செய்தனர். இருப்பினும் நடப்பதைத்தான் பார்ப்போம் என்று குளத்தில் இறங்கி தேட எத்தனித்தர். அப்போது திடீரென நீரில் உடல் மிதந்தது. அனைவரும் அதிர்ந்து போனார்கள். பின்னர் நாராயண சிவத்தின் உடலை விபூதி விநாயகர் சன்னிதிக்கு அருகே கொண்டு வந்து கிடந்தனர்.

சுவாமிகளை இறைவனை பிரார்த்தித்து நாராயண சிவத்தின் உடல் முழுவதும் திருநீறை அள்ளி பூசினார். சடலத்தின் வலது காதில் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதினார். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மெள்ள தடவி கொடுத்தார். அவ்வளவுதான், மூன்று நாட்கள் சடலமாகக் கிடந்த நாராயண சிவம் உயரித்தெழுந்தார். பின்னர் சுவாமிகளின் திருவடிகளில் விழுந்து வணங்கினார். சுவாமிகளின் அற்புதத்தை அறிந்து அங்கு இருந்தவர்கள் அவரை வணங்கினார்கள்.

இதையடுத்து மதுரையில் இருந்து திருச்சி, திருவையாறு, தஞ்சை, சென்னை முதலிய தலங்களுக்குச் சென்று இறைவனை தரிசித்த சுவாமிகள் பின்னர் கங்கைகொண்டான் ஆனந்தவல்லி சமேத கயிலாசநாதர் கோயிலின் கும்பாபிஷேகத்தை 1873 ஆம் ஆண்டு நடத்திக் கொடுத்தார்.

தம் வாழ்நாளில் 22 கும்பாபிஷேகங்களை நடத்தி வைத்திருக்கிறார் சுவாமிகள். அவர் நடத்திய முதல் கும்பாபிஷேகம் தான் ஸித்தி அடைந்த அரிமளத்தில் உள்ள கோயில். இறுதியில் நடத்திய கும்பாபிஷேகம் இவர் அவதரித்த கங்கைகொண்டானில் உள்ள கோயில்.

தான் சமாதி அடையும் நாள் நெருங்கி விட்டதை தமது சீடர்களிடம் தெரிவித்தார். சுந்தர ஸ்வாமிகள் அதன்படி 1878 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (ஐப்பசி 6) கிருஷ்ண பட்ச தசமி அன்று ஸித்தி அடைந்தார். அரிமளம் சிவராமன் செட்டியாரும் மற்ற சீடர்களும் சுவாமிகளது இறுதி காரியங்களை செய்து முடித்து சுவாமிகளது சமாதியின் மேல் அவர் பூஜித்து வழிபட்ட பாணலிங்கத்தை பிரதிஷ்டை செய்தனர்.

*அரிமளத்தில் உள்ள ஸ்ரீ சுந்தர சுவாமிகளின் அதிஷ்டானம்

இந்து சமய அறநிலையை ஆட்சித் துறைக்கு உட்பட்ட பொன்னமராவதி கொன்னையூர் முத்துமாரி அம்மன் கோயில் நிர்வாகத்தின் கீழ் வருகிறது. இந்த அதிஷ்டானம்.

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து தேனிப்பட்டி மற்றும் ஏம்பல் செல்லும் பேருந்துகள் அரிமளம் வழியாகச் செல்லும். தவிர அரிமளத்துக்கு நகரப் பேருந்து வசதியும் உள்ளது. அரிமளம் மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சற்றுத் தொலைவு நடந்தால் சுவாமிகளின் அதிஷ்டானத்தை அடையலாம். முகப்பில் ஒரு இரும்பு கேட். உள்ளே நுழைந்தால் நந்தவனம். கருவறை, உள்பிராகாரம், அர்த்தமண்டபம், வெளிப்பிரகாரம் என முழுவதும் கருங்கல் திருப்பணியாய் அமைந்து விஸ்தாராமாகவும் உள்ளது. கருவறையில் சுவாமிகளின் அதிஷ்டானம். சிலா வடிவில் உள்ள ஆவுடையாரின் மேல் சுவாமிகள் வழிபட்ட பாணலிங்கத்தை தரிசிக்கிறோம். இங்கு விபூதி அபிஷேகம் அடிக்கடி நடைபெறும். அதிஷ்டானத்தில் விநாயகர், பின்பக்க கோஷ்டத்தில் லிங்கோத்பவர், வெளியே நாகர் ஆகிய சன்னிதிகளும் உண்டு.

தினமும் காலையில் சுமார் எட்டரை மணியளவில் அபிஷேகம் நடைபெறும். தவிர பவுர்ணமி அன்று மாலை 4 மணிக்கும் ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு மற்றும் தேய்பிறை தசமி ஆகிய நாட்களில் பகல் 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். ஐப்பசி மாதம் தேய்பிறை தசமி அன்று (பூச நட்சத்திரம்) குருபூஜை சிறப்பாக நடைபெறுகிறது. அன்று மாலை சுவாமிகளின் உற்ஸவர் விக்கிரகம் வீதியுலா வரும். சுந்தர ஸ்வாமிகள் இங்கு இருந்தபடி உலகமெங்கும் உள்ள பக்தர்களை இன்றைக்கும் காத்து வருகிறார் என்பது நாட்டுக்கோட்டை செட்டியார் இனத்தவர் மட்டுமின்றி ஏனைய பக்தர்களது நம்பிக்கை.

தகவல் பலகை

தலம்    : அரிமளம்

சிறப்பு    : ஸ்ரீ சுந்தர சுவாமிகள் அதிஷ்டானம்.

எங்கே இருக்கிறது?: புதுக்கோட்டையில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது அரிமளம். அறந்தாங்கி மற்றும் திருமயத்தில் இருந்தும் சுமார் 22 கி.மீ. தொலைவு.

எப்படிப் போவது?: புதுக்கோட்டையில் இருந்து 22, 27, 27ஏ மற்றும் ஜான்ஸி ஆகிய பேருந்துகளும் அறந்தாங்கியிலிருந்து 6, லதா, எஸ்.எம்.ஆர். ரங்கநாதன், பி.எல்.ஏ ஆகிய பேருந்துகளும் திருமயத்தில் இருந்து 9டி மற்றும் ராஜா ஆகிய பேருந்துகளும் அரிமளம் செல்கின்றன.

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7.30 12.00 மாலை 4.00-7.30

நன்றி: திருவடி சரணம்

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar