Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உபநிஷதங்களின் எண்ணிக்கையும் ...
முதல் பக்கம் » உபநிஷதங்கள் என்றால் ..
உபநிஷத காலப் பண்பாடும் கலாச்சாரமும்!
எழுத்தின் அளவு:
உபநிஷத காலப் பண்பாடும் கலாச்சாரமும்!

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2015
12:07

உபநிஷதங்களைப் படிக்கும்போது ஓரளவிற்கு அக்காலத்தின் சமுதாயத்தின் அமைப்பை அறிய முடிகிறது.

நமது நாடு வடமேற்கு பகுதியில் காந்தார தேசம் (ஆப்கானிஸ்தான்) வரை பரவி இருந்தது. மத்ரா (சைல்கோட்) குரு,(டெல்லி) கேகயா (பஞ்சாப்) பாஞ்சலம் (பெரலி கனௌஜ்) கோசலம் (அயோத்தியா), விதேகம் (தீர்கட்) கவுசாம்பி(கோசம்), காசி போன்ற பகுதிகளை நமது நாடு கொண்டிருந்தது. இந்த பகுதிகளை ஆண்டு வந்தஅரசர்கள் போர்களிலும் நிர்வாகத்திலும் சிறந்து விளங்கியதோடு மட்டுமல்லாமல் வேதங்களிலும் சிறந்து விளங்கிய க்ஷத்ரியர்களாக இருந்தனர். உண்மையில் உள்முக ஆராய்ச்சி அறிவியலுக்கு அவர்கள் பரம்பரை பாதுகாவலர்களாக விளங்கினர். பிராம்ணர்களையும் முனிவர்களையும் ஆதரித்ததோடு மட்டுமல்லாமல் வேத தர்மத்தை பரப்புவதிலும் பாடுபட்டனர். சத்தியத்தையும் தர்மத்தையும் முழுமையாக நிலை நாட்டுவதில் கடுமையான விதிமுறைகளை அமலாக்கினர். வர்ண ஆஸ்ரமங்கள் வழக்கில் இருந்தன. பிரம்மச்சரிய, கிருஹஸ்திய, வானபிரஸ்த்த ஆஸ்ரமங்கள் பொதுவாக வழக்கில் இருந்து வந்தன. சன்னியாச ஆசிரமும் வழக்கத்தில் இருந்ததற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. வாழ்க்கையில் மனிதனின் பதவிக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தூய்மை, நல்லொழுக்கம் ஆகியவைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.

சமயம், ஒழுக்கமுறைகள், தத்துவங்கள் மட்டுமில்லாது உலகியல் அறிவியலான இலக்கணம், இசை, நாட்டியம், வில்வித்தை, ஜோதிடம், வாசனை திரவியங்கள் செய்தல், தீய ஆவிகளை விரட்டுதல் போன்ற பல விஷயங்களை மக்கள் தெரிந்து வைத்திருந்தனர்.

வேதத்தில் குறிப்பிட்டுள்ளபடி யாகம், பலி கொடுப்பது மிக சாதாரணமான ஒன்றாக இருந்தது. அரசர்கள் புண்ணியத்தை தேடி தங்களது பரந்த மனப்பான்மையை காட்டினர். அதே நேரத்தில் அறிஞர்கள் தங்களது புலமையை வெளிகாட்டி பெயர் புகழையும், செல்வத்தையும் பெற்றனர்.

ஆக மொத்தத்தில் மக்கள் சரியான வழியில் செல்வத்தை சம்பாதித்து போதுமென்ற மனத்துடன் வாழ்ந்தனர். தங்களது துன்பங்களுக்கும் துரதிருஷ்டங்களுக்கும் காரணம் தாங்கள் முற்பிறவிகளில் செய்த செயல்களே என்று நம்பினர். மற்றவர்களை இதற்கான காரணமாக அவர்கள் கருதவில்லை.

மொழிநடை: உபநிஷதங்களின் மொழி நடை வேதங்களை வெகுவாக ஒட்டி உள்ளது. எனவே இது பழமையானது மட்டுமல்ல; வேதத்தின் பல மொழி நடைகளும், எடுத்தக்காட்டுக்களும் அவைகளில் காண்கிறோம். வேத சந்தங்களில் பெரும்பாலான உபநிஷதங்கள் புனையப்பட்டுள்ளன. மாண்டூக்ய, தைத்ரிய, ஐத்ரேய போன்ற சில உரை நடையிலேயே உள்ளது; சில உபநிஷதங்கள் உரைநடை மற்றும் கவிதையின் கலவையாக உள்ளன.

அழகான உதாரணங்களும், எடுத்துக்காட்டுகளும், உபநிஷதங்களில் நாம் காணும் சிறப்பான ஒரு பரிமாணம். ஒரே மரத்தின் (மனித உடல்) கிளைகளில் அமர்ந்திருக்கும் இரண்டு பறவைகள் (ஜீவாத்மன், பரமாத்மன்) உதாரணம் பல உபநிஷதங்களில் கையாளப்பட்டுள்ளது: கட (1.3.1) ஸ்வேதாஸ்வதர (4.6) மற்றும் முண்டக (3.1.1), ஆத்மனை தியானிக்கும் முறையை அம்பு, வில் உதாரணத்தின் மூலம் முண்டக உபநிஷதம் (2.2.3,4) எடுத்துரைக்கிறது. உலகத்தை, தலைகீழாக உள்ள மரத்துடனும் (6.1), மனித உடலை பதினொரு வாயில்களைக் கொண்ட நகரமாகவும் (5.1) கட உபநிஷதம் இயம்புகிறது. இறைவனின் முகத்தை மறைக்கின்ற தங்கத் தகடாக சூரியனை ஈஸாவாஸ்ய உபநிஷதம் (15) கூறுகிறது. உடல் -தேர், புலன்கள் -குதிரைகள், மனம் - கடிவாளம்,  புத்தி - தேரோட்டி, ஆத்மன் - தேரின் முதலாளி என்று கடஉபநிஷதம் உதாரணத்தை எடுத்துரைக்கிறது (3.3-4). சிலந்தி வலையைத் தன்னுள்ளேயிருந்து வெளிப்படுத்தி பின்னுவதைப் போன்று உடம்பில் முடி வளர்வதைப் போன்றும் பூமியில் பயிர்கள் தோன்றுவதும் போன்றும் உலகத்தை பிரம்மத்தின் பரிணாமமாக முண்டக உபநிஷதம் (1.1.7) கூறுகிறது.

முக்தியை அளிக்க இயலாததால் வேதச் சடங்குகளை ஓட்டை விழுந்த கட்டுமரத்திற்கு முண்டக உபநிடதம் (1.2.7) உதாரணமாகக் கூறுகிறது. ஆத்மன் பிரம்மத்தில் ஒன்றிவிடுவதை நதிகள் கடலில் கலப்பதற்கு சமானமாகக் கூறப்படுகிறது. (3.2.8) பிருஹதாரண்யக உபநிஷதத்திலும் அநேக உதாரணங்களைப் பார்க்க முடிகிறது: ஈரமான விறகை எரிக்கும்போது காணப்படும் புகையைப் போன்று பிரம்மத்திலிருந்து வேதம் தோன்றியது (2.4.10),  சக்கரத்தின் மத்தியில் ஆரங்கள் கட்டப்பட்டுள்ளன. அதுபோல்  எல்லா ஜீவராசிகளும் பரமாத்மனில் ஒடுங்குகின்றன. (2.5.15). ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு நீந்திச் செல்லும் பெரிய மீனைப் போன்று ஜீவாத்மா விழிப்பு நிலையிலிருந்து கனவு நிலைக்குச் செல்கிறது (4.3.18). வெட்டுக்கிளி அடுத்த இலையைப் பிடித்து முந்திய இலையின் பிடியை விட்டுத் தாவுவதைப் போன்று, ஜீவாத்மாவானது அடுத்த சூட்சும சரீரத்தை இறக்கும்போது பிடித்துக் கொள்கிறது. (4.4.3). பாம்பு தனது தோலை உரிப்பது போன்று ஜீவன் முக்தன் தனது உடலை உகுக்கிறான் (4.4.7). பாரம் நிறைந்த பலவீனமான மாட்டு வண்டியில் பயணம் செய்வதைப் போன்று உடலை உகுத்த பிறகு சாதாரண மனிதனின் பயணம் பரிதாபத்திற்கு உரியதாக உள்ளது. (4.3.35) உபநிஷதங்களின் நடை எளிமையாகவும், சிறப்பாகவும் மட்டுமல்லாது மிகுந்த ஆற்றல் வாய்ந்ததாகவும் உள்ளது.

கதைகள்: உயர்ந்த தத்துவங்களைக் கொண்டிருந்தாலும் உபநிஷதங்கள் அதிசயமாக அருமையான கதைகளையும் கூறுகின்றன. பிரம்ம யக்ஷவடிவில் வந்து இந்திரனுக்கும் தேவர்களுக்கும் பாடம் புகட்டியதை கேன உபநிஷதம் கூறுகிறது. (3.1 முதல் 11 வரை) நசிகேதன், யமன் கதையே கட உபநிஷதம் நாய்கள் உத்கீதாவை பாடுவதையும் (1.12), ரைக்வ முனிவரிடமிருந்து ஜானஸ்ருதி ராஜா  அறிவுரை பெறுவதையும் (4.1 முதல் 3 வரை), தனக்கு ஞானத்தை அளிக்க வேண்டும் என சத்யகாம ஜாபாலன் ஹாரித்ருமதரை அணுவதையும் (4.4 முதல் 9), சத்யகாமன் மற்றும் அவர் சீடன் உபகோசலர் கதையையும் (4.10 முதல் 15) ஸ்வேத கேது, அவன் பணிவான தந்தை கவுதமர், பிரவாஹன ஜைவாலி ராஜா கதையையும் (5.3 முதல் 10), நாரதருக்கு சனத்குமாரர் அறிவுரை செய்தலையும் (7.1 முதல் 26), ஆன்மாவைத் தெரிந்து கொள்ள வேண்டி பிரஜாபதியை இந்திரனும் விரோசனனும் அணுகுவதையும் (8.7 முதல் 12) சாந்தோக்ய உபநிஷத்தில் காண்கிறோம்.

பிருஹதாரண்யக உபநிஷதத்திலும் நிறைய கதைகள் வருகின்றன. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யார் பெரியவர்கள் என நடக்கும் போரும் (1.3), பாலாகி மற்றும் ஞானமுடைய அஜாதசத்ரு ராஜாவின் கதையும் (2.1), மைத்ரேயி தனது கணவன் யாக்ஞவல்கியரிடம் ஆன்மீக ஞானத்தைக் கேட்டலும் (2.4, 4.5) யாக்ஞ வல்கியர், ஜனக மகாராஜா (3-4) பற்றியும் பிருஹதாரண்ய உபநிஷதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

உபநிஷத ரிஷிகள்: பல ரிஷிகளின் பெயர்கள் உபநிஷதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. யாக்ஞவல்கியர் போன்றவர்கள் பெரும் மேதைகள், கவுதம ஆருணி- போன்ற மற்றவர்கள் சிறந்த ஆச்சாரியர்கள். ஸ்வேதகேது போன்ற சிலர் கடினமான ஆசிரியர்கள். செல்வம் படைத்த, ஆற்றல் மிகுந்த, பரந்த மனப்பான்மை கொண்ட ராஜாக்களின் சடங்குகள், யாகங்களின்போது ரிஷிகள் தங்களது திறமையை வெளிக்கொணர்ந்து பெயர், புகழ், செல்வம் ஆகியவற்றை பெற்றனர். முக்கிய உபநிஷதங்களில் வரும் சில ரிஷிகளின் பெயர்களை இங்கே தருகிறோம்.

அங்கிரஸ், பிருகு, கார்கி, கோர ஆங்கிரஸ, ஹாரித்ருமதர், மஹிதாச, ஐத்ரேயர், நாரதர், பிப்லாதர், ரைக்வர். சனத்குமாரர், சாண்டில்யர், சத்யகாம ஜாபாலர், உத்தாலக ஆருணி, வாமதேவர், வருண போன்றோர். மரண தேவன் யமன், படைப்புத் தொழில்அதிபர் பிரஜாபதி ராஜாக்கள் ஜனகர், அஜாதசத்ரு, பிரவாஹன ஜைவாலி போன்றோரும் ஆசிரியர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். இங்கே குறிப்பிடத்தக்க மிக முக்கியமான ஒன்று உள்ளது. இந்த ஆசிரியர்கள் எல்லோருமே அவர்களின் பிறப்பு, ஜாதி, இனம் என்ற வேறுபாடின்றி அவர்களது ஞானத்திற்காகவும், திறமைக்காகவும் மட்டுமே மதிக்கப்பட்டார்கள்.

முக்கிய உபநிஷதங்கள்: முக்கிய உபநிஷதங்களைப் பற்றிய சிறுகுறிப்பைக் கொடுத்துள்ளோம். அவை எந்த வேதங்களில் வருகின்றது, எத்தனை அத்தியாயங்கள், பகுதிகள், மந்திரங்கள் என்ற விபரங்களையும் கீழே கொடுத்துள்ளோம்.

ஐத்ரேய உபநிஷதம்: (ரிக்வேதம், 4 அத்தியாயங்கள், 6 பகுதிகள், 33 மந்திரங்கள்) உபநிஷதங்களிலேயே மிகவும் விளங்காததாக உள்ள இந்த சிறிய உபநிஷதம் இதரா முனிவரின் மகனான மஹிதாசு ஐத்ரேயரின் பெயரினால் வழங்கப்படுகிறது. ஐத்ரேய ஆரண்யகத்தின் ரிஷி அவரே. அதில் ஒரு பகுதியாக வருவதே இந்த உபநிஷதம். பரமாத்மா, எல்லாம் வல்ல இறைவன் மட்டுமே முதலில் இருந்தார். அவருக்கு உலகத்தைப் படைக்க வேண்டும். என்ற விருப்பம் தோன்றியது. எந்த ஒரு உதவியும் இன்றி தன்னிடமிருந்த சக்தியால் இந்த உலகை அவர் படைத்தார். படைத்த எல்லாவற்றுக்குள்ளும் அவர் ஊடுருவி இருந்தார். இது முதல் அத்தியாயத்தின் முக்கியக் கருத்து.

இரண்டாவது அத்தியாயத்தில் ஜீவாத்மனின் பிறப்பு, வளர்ச்சி, இறப்பு, மறுபிறப்பு ஆகியவைகள் மனித மனத்தில் வைராக்கியத்தை (பற்றற்றத் தன்மை) விழிப்புறச் செய்யும் எண்ணத்தில் விளக்கப்பட்டுள்ளன. நமது உண்மை இயல்பான ஆன்மாவை உணர்ந்தால் மட்டுமே நிலையற்ற, இந்த சம்சார பந்தத்திலிருந்து நாம் விடுபட முடியும். வாமதேவ ரிஷி தனது தாயின் கருவில் இருக்கும்போதே இந்த ஆன்மீக ஞானத்தை பெற்று முக்தி பெற்றார்.

கடைசிப் பகுதி மனஸ் என்றழைக்கப்படும். மனமானது சுத்த சைதன்யமான பிரஞ்ஞானத்திலிருந்து வேறுபட்டது என்பதை விளக்குகிறது. இந்த பிரஞ்ஞானமே உண்மையில் ஆன்மா அல்லது பிரம்மம், அதனை உணர்ந்தே வாமதேவர் முக்தி அடைந்தார்.

பிருஹதாரண்யக உபநிஷதம்: (சுக்ல யஜுர்வேதம், 6 அத்தியாயங்கள், 47 பகுதிகள், 435 மந்திரங்கள்) சுக்லயஜுர் வேதத்தின் சதபத பிராம்மணப் பகுதியின் முக்கியமான ஒரு பகுதி இது. இதுவே உபநிஷதங்களிலெல்லாம் பெரியது, பழமையானதும் கூட. இது உரைநடை வடிவிலேயே உள்ளது. இந்த உபநிஷதமும் பழமையான வேதத்தின் பகுதிகளிலிருந்து சில பகுதிகளை கவிதை வடிவில் கோடிட்டு குறிப்பிடுகிறது.

வேதத்திலுள்ள தேவர்களுக்கு அப்பால் இருப்பது ஆன்மா என்பதை முதல் இரண்டு அத்தியாயங்கள் விளக்க முயல்கின்றன. ஆன்மா எல்லாவற்றினுள்ளும் உள்ள ஒன்று, இது நமக்கு மிக நெருங்கியதும், அருகில் இருப்பதும் ஆகும். அது இருப்பதினால்தான் உயிரினங்கள் தங்களது செயல்களைச் செய்கின்றன. அதனை உணர்வதற்கு ஒருவன் உலக ஆசைகளை விட்டுவிட்டு, சன்னியாச வாழ்க்கையை தேர்ந்தெடுத்து, தனது உண்மை இயல்பை நினைத்து தியானம் செய்ய வேண்டும். ஆன்மாவை உணர்வது என்பது பேரண்டத்தின் ஆன்மாவான பிரம்மத்தை உணர்வதாகும்.

ரிஷிகளின் மேதையான யாக்ஞவல்கியர் தனது விளக்கத்தில் மூன்றாவது நான்காவது அத்தியாயங்களிலே சிறந்து விளங்குகிறார். விவாதத்தில் தனது எதிரிகளை வீழ்த்துவதோடு மட்டுமல்லாமல் வேதாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகளை மிகத் திறமையாக உறுதிப்படுத்துகிறார். அந்த கருத்துக்கள் என்ன? தான் செய்கின்ற கர்மத்தின் பலனாக ஒருவனது இவ்வுலக, மறுவுலக வாழ்க்கை நிர்ணயிக்கப்படுகிறது. நல்ல செயல்கள் நல்ல பலனையும், கெட்டச் செயல்கள் கெட்ட பலனையும் அளிக்கின்றன. உபாசனையுடன் வேதச் சடங்குகளாகிய கர்மங்கள் இணைக்கப்பட்டிருந்தாலும், அவை முக்தியை அளிக்க முடியாது. உடல்-மனம் இணைப் பிறகு அப்பாற்ப்பட்ட பிரம்மம் என்ற அந்த பரமாத்மாவின் அனுபூதி ஒன்றே நிலையற்ற இந்த நமது இருப்பிலிருந்து விடுதலை அளிக்க முடியும். ஆன்மாவை உணர்வதற்காக அறிவுள்ள பிரம்மணர்கள் தங்களது குடும்பத்தைத் துறந்து, செல்வம் மற்றும் சொர்க்க ஆசைகளை விடுத்து, சன்னியாச வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறார்கள்.

யாக்ஞவல்கியர் கூறுகிறார் - எது படைப்பில் எல்லாவற்றிலும் ஊடுருவி நிற்கிறதோ, எல்லாவற்றையும் கடந்து இருக்கிறதோ, அந்தர்யாமியாக உள்ளதோ, உள்ளிருந்து எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறதோ, அதுவே அழிக்க முடியாத அக்ஷரம் ஆகும், அதன் குணாதிசயங்களை பெரிய வரிசைப்படுத்தி அவர் விளக்க முயல்கிறார். ஆனால் விளக்க முடியாத ஒன்றை விளக்க முயல்வதால், அந்த குணாதிசயங்கள் குழப்பம் விளைவிப்பதாக ஒன்றுக்கொன்று முரணானதாகத் தெரிகின்றன. மூன்று உணர்வு நிலைகளை ஆராய்ந்து, ஆன்மாவின் உண்மை இயல்பான என்றும் பரமானந்த நிலையை உறுதி செய்கிறார். இறப்பின்போதும், பிறப்பு - இறப்பு சூழலிலும் சிக்கியுள்ள ஜீவன் மிகுந்த துன்பத்துக்குள்ளாவதே நமக்கு வைராக்கியம் ஏற்படுத்துவதற்காக அவர் விளக்கியுள்ளார்.

கடைசி இரண்டு அத்தியாயங்கள் ஓம், பிரணவம் போன்ற உபாசனைகளையும், சுயக்கட்டுப்பாடு, கருணை, தானம் போன்ற நல்லொழுக்கங்களை வளர்த்துக் கொள்வதின் தேவையையும் பஞ்சாக்னி வித்யையும், குழந்தை பிறந்தவுடன் செய்யப்படும் சில சடங்குகளையும் விளக்குகின்றன. வேதகால ஆசிரியர்களின் பெரிய பட்டியலுடன் உபநிஷதம் நிறைவுறுகிறது.

சாந்தோக்ய உபநிஷதம்: (சாமவேதம், 8 அத்தியாயங்கள், 154 பகுதிகள், 628 மந்திரங்கள்) உபநிஷதங்களிலேயே இது மிகப் பழமையானது என்று கருதப்படுகிறது. உத்கீத ஓம் மந்திர உபாசனையுடன் தொடங்கும் இது, உத்காதிர் பூஜாரியின் சாமவேதப் பாடல்கள், ஓம் என்னும் மந்திரத்தை பிராண சக்தியாகவும், சூரியனிலுள்ள பொன்னொளிர் தேவனை தியானம் செய்வதான பகுதிகளையும் முதல் அத்தியாயம் கொண்டுள்ளது. பலவித சாமாக்கள் (சாமவேத மந்திரங்கள்) உள்ளன. இரண்டாவது அத்தியாயம் சாம வேதத்தின் பல உபாசனைகளை பரிந்துரை செய்கின்றது. வாழ்க்கையின் நான்கு ஆஸ்ரமங்களைப் பற்றியும் பிரம்மத்தில் நிலைப்பெற்ற ஒருவன் அழியாப் பெருநிலை பெறுவதைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன.

மூன்றாவது அத்தியாயத்தில் மதுவித்யை உள்ளது. தேவர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதால் சூரியனானது மதுவாக அல்லது தேனாக கருதப்பட்டு தியானம் செய்யக் கூறப்படுகிறது. காயத்ரிமந்திரம் மூலமாக பிரம்ம தியானம் செய்ய கூறப்பட்டுள்ளது. புகழ்பெற்ற சாண்டில்ய வித்யையும் இந்த அத்தியாயத்தில் உள்ளது. இதில் ஒருவனுடைய இதயத்தில் ஆன்மாவை படைப்பவராகவும் பாதுகாப்பவராகவும் கருதி தியனாம் செய்ய உரைக்கப்படுகிறது. ஒருவனுடைய வாழ்க்கையை பெரிய யாகமாகக் கருதி மனிதன் எவ்வாறு அதிக ஆயுள் வரை வாழ முடியும் என்பதும் விளக்கப்பட்டுள்ளது. மகிதாச ஐத்ரேய உதாரணம் இவ்வித தியானத்திற்கு எடுத்துக்காட்டாக கூறப்படுகிறது.

ரைக்வா - முனிவரிடம் இருந்து ராஜா ஜன ஸ்ருதி புத்ராயனன் எப்படி ஞானத்தை பெற்றார் என்ற கதை அடுத்த அத்தியாயத்தில் உள்ளது. வெளிப்புறத்தில் வாயுவின்மேலும் உள்புறத்தில் எல்லாவற்றையும் தனக்குள்ளே ஈர்த்துக்கொள்ளும் சக்தியான பிராணனின் மேலும் செய்யப்படும் உபாசனை அவரது அறிவுரை ஆகும். இதனை சம்வர்க்க வித்யை என்று அழைக்கிறோம். அக்க்ஷி புருசர் (கண்ணில் உள்ள புருஷர்) என்று அழைக்கப்படும் பிரம்மத்தின் மேல் செய்யப்படும் தியானத்தின் பலனால் அர்ச்சிராதி மார்க்கத்தின் வழியாக பிரம்மலோகத்திற்கு ஜீவன் செல்வதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐந்தாவது அத்தியாயம் இறந்தவர்கள் உலகத்திற்கும் மீண்டும் வருவதை விளக்குகிறது. கவுதமருக்கு ராஜா பிரவாகன ஜெய்வாலியினால் எடுத்துரைக்கப்பட்ட இதற்கு பஞ்ஜாக்னி வித்யா என்று பெயர். வைஸ்வாநராத்மன் என்று அழைக்கப்படும் உடலின் உள்ளே வாழும் மேலான ஆன்மாவின் மேல் தியானம் செய்வது எல்லா உயிர்களின் மூலமாக எல்லா உணவுகளையும் உண்ணும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த அறிவுரை ராஜா அஸ்வபதி - தன்னை அணுகிய ஐந்து ரிஷிகளுக்கு எடுத்துரைத்தது.

ஆறாவது அத்தியாயம் மிக கவனத்தை கவருவதாகவும் அறிவூட்டுவதாகவும் அமைந்துள்ளது. தன்மகன் ஸ்வேதகேது குரு குலத்தில் கல்வி கற்ற பிறகும் அகங்காரம் உடையவனாக இருப்பதைக் கண்டு உத்தாலக ஆருணீ கேள்வி ஒன்றை கேட்கிறார். எதை அறிந்தால் எல்லாவற்றையும் அறிந்ததாக ஆகும்? ஸ்வேதகேதுவிற்கு பதில் தெரியாததினால் ஆருணி பலவழிகளில் உபதேசிக்க ஆரம்பிக்கின்றார். இந்த உலகம் படைப்பிற்கு முன்பு ஸத்- இல் ஒன்றுபட்டிருந்தது. அந்த ஸத் பலவாக மாற விரும்பியது. உலகம் அதிலிருந்து படிப்படியாக உருவாக்கப்பட்டது. அதே ஸத் உலகில் ஜீவாத்மனாக ஊடுருவி நிற்கின்றது. மூன்று உணர்வு நிலைகளை ஆராய்வதன் மூலம் ஆன்மாவின் உண்மை இயல்பை ஆருணீ உறுதிபடுத்துகிறார். முடிவாக ஸ்வேதகேதுவும் அவனது உண்மை இயல்பும் அந்த ஸத்-தான் என்று இயம்புகிறார்.

அடுத்த அத்தியாயம் சனத்குமாரருக்கும் அவரது சீடர் நாரதருக்கும் இடையிலான கலந்துரையாடலை கூறுகிறது. நாரதர் பல அறிவியல் துறைகளையும் கற்று தேர்ந்திருந்தாலும் அவரிடம் மன அமைதி இல்லை. ஏனெனில் அவர் ஆன்மாவை அறியவில்லை. சனத்குமாரர் படிப்படியாக பல உபாசனைகள் மூலம் நாரதரை முடிவாக பிரம்ம நிலைக்கு இட்டுச் செல்கிறார்.

கடைசி அத்தியாயம் தகரவித்யையை எடுத்துரைக்கிறது. இதயத்தின் சிறிய ஆகாச பகுதியில் ஆத்மனை தியானிப்பது இது. இங்கே தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு அவனது உண்மை இயல்பான உள்ளிருக்கும் ஆன்மாவை பற்றி பிராஜாபதி அறிவுறுத்தினார். முடிவாக ஜீவன் முக்த ஆன்மா எல்லாப் பாவங்களிலிருந்தும், விடுபட்டு பிரம்மத்தின் உலகத்தை அடைந்ததாக உரைப்பது போல் முடிகின்றது.

ஈசாவாஸ்ய உபநிஷதம்: (சுக்ல-யஜுர்வேதம், 18 சுலோகங்கள்)  பத்து முக்கியமான உபநிஷதங்களிலேயே மிகச் சிறிய உபநிஷதமாக இருந்தாலும் பல விளக்கவுரையாளர்களின் கவனத்தை இது ஈர்த்துள்ளது. இதில் வருகின்ற வித்யா, அவித்யா, சம்பூதி, அசம்பூதி, போன்ற தெளிவில்லாத பதங்கள் பலவிதமான முரண்பாடு உடைய விளக்கவுரைகளை ஏற்படுத்தி விட்டன. உலகம் முழுவதும் இறைவனால் (ஈசா) மூடப்பட்டுள்ளது. இது ஒருவனுடைய கடமையை செய்ய அறிவுறுத்துகிறது. மேலும் ஒருவனை நூறு வருடங்கள் முழு வாழக்கையை வாழும் படியும் கூறுகிறது. ஆன்மாவின் இயல்பை விளக்கிய பிறகு யார் ஒருவன் ஆன்மாவை தனக்குள்ளேயும், மற்றொருவருக்குள்ளும்  காண்கிறானோ அவன் துன்பத்தில் இருந்தும் மாயையில்  இருந்தும் விடுபடுகிறான். இது வித்யை (தியானம்) மற்றும் அவித்யை (தியானத்திற்கு உதவும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள கர்மம்) ஆகிய இரண்டின் சம விகித இணைப்பை எடுத்துரைக்கிறது. சம்பூதி (பிரம்மனின் மேல் தியானம்), அசம்பூதி (உலகத்தில் செய்யப்பட வேண்டிய கடமைகள்) ஆகியவற்றையும் ஒன்று சேர்த்து செயல்படுத்துமாறு கூறுகிறது. பரமாத்மாவைப் பற்றிய அழகிய வர்ணனையும் மரணத்தின் போது இறை தரிசனத்தை வேண்டிய ரிஷியின் பிரார்த்தனையும் உள்ளது.

ஜாபால உபநிஷதம்: (அதர்வணவேதம், 6- அத்தியாயங்கள், 6-பத்திகள்) இது உரைநடையில் உள்ள சிறிய உபநிஷதம். 6- அத்தியாயங்களும் நீண்ட பத்திகளையும் கொண்டுள்ளது. வாரணாசியை பற்றிய வர்ணனையும் அதனை புருவ மத்தியில் தியானிக்கும் உபாசனையும் இந்த உபநிஷதம் விளக்குகிறது. சதரூத்ரீயா -மந்திரத்தை ஜெபம் செய்வதும் கூறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சன்னியாசத்தை பற்றி யாக்ஞவல்கியர் ஜனகமகாராஜாவிற்கு அளித்த சொற்பொழிவு உள்ளது. அதனுடைய வழிமுறைகளும் விளக்கமாக தரப்பட்டுள்ளன. சம்வர்த்தகா, ஆரூணி, ரிபு, ஜடபரதர், தத்தாத்ரேயர் போன்ற பல ஆன்ம அனுபூதி பெற்ற ரிஷிகளின் வாழ்க்கை முறைகளும் அழகாக இந்த உபநிடதம் வர்ணிக்கிறது.

கைவல்ய உபநிஷதம்: (கிருஷ்ண யஜுர் வேதம், 2 அத்தியாயங்கள், 24 மந்திரங்கள்) படைக்கும் கடவுள் பிரம்மாவிற்கும் அவரது சீடர் ரிஷி ஆஸ்வலாயனருக்கும் இடையில் நடக்கும் உரையாடலே இந்த உபநிஷதம். பிரம்மத்தை அறிவதற்கு தியாகத்தை முக்கியமான ஒன்றாக இது கூறுகிறது. இதயத்தில் பிரம்மத்தை நிறுத்தி, தூய்மையான தனியான இடத்தில் அமர்ந்து தியானம் செய்வதைப் பற்றி இது எடுத்துரைக்கிறது. வேத யாகங்களில் நெருப்பை உண்டாக்க உரசப்படும் இரண்டு அரணி மரக்கட்டையின் செயலைத் தியானத்திற்கு உதாரணமாகக் கூறுகிறது. அதைத் தொடர்ந்து மற்ற உபநிஷதங்களில் உரைத்துள்ளது போன்று பிரம்மன் விளக்கப்பட்டுள்ளது. பின்பு சாதகன் அடையும் ஆன்மா- பிரம்ம அனுபூதியை எடுத்துரைக்கிறது.

கட உபநிஷதம்: (கிருஷ்ண யஜுர்வேதம், 6 அத்தியாயங்கள், 119 மந்திரங்கள்) இது காதக உபநிஷதம் என்னும் அழைக்கப்படுகிறது. இது எளிதாக படிக்கக்கூடிய ஒன்று. ரிஷி வாஜஸ்ரவஸ் செய்யும் யாகத்தில் இது ஆரம்பிக்கிறது. ஒன்றுக்கும் உதவாத பசுக்களை தானத்திற்காக வைத்துள்ளதைக் கண்டு அவரின் கவனத்தை மகன் நசிகேதன் திருப்புகிறான். மிகவும் கோபமடைந்த வாஜஸ்ரவஸ் தனது மகனை, உன்னை யமனுக்குத் தந்தேன் என்று கூறிவிடுகிறார். நசிகேதன் நேரடியாக யமலோகத்திற்குச் செல்கிறான். யமன் அங்கில்லாததால் உணவு, நீர் இன்றி மூன்று நாட்கள் அவருக்காக  காத்திருக்கிறான். திரும்பி வந்த யமன் தனது விருந்தினரை, நீர், ஆகாரம் இன்றி காக்க வைத்ததற்காக வருந்துகிறார். அதற்குப் பிராயசித்தமாக அவர் மூன்று வரங்களை அவனுக்கு அளிக்கிறார். மூன்றாவது வரமாக நசிகேதன் ஆன்மஞானத்தைக் கேட்கிறான். பல ஆசை வார்த்தைகளைக் கூறி நசிகேதனைச் சோதித்த பிறகு யமன் அவனுக்கு ஆன்மீக ஞானத்தை அளிக்கிறார்.

இரண்டு வாய்ப்புகள் ஒவ்வொரும் மனிதனுக்கும் முன்னால் வருகின்றன- பிரேயஸ் (புலனின்பம்) மற்றும் ஸ்ரேயஸ் (உயரியது) சாதாரண மனிதன் பிரேயஸைத் தேடிச் சென்று முடிவற்ற துன்பங்களுக்கு ஆளாகிறான். ஆனால் அறிஞர்கள் பிரேயஸை தவிர்த்து ஆன்மீக நலனை நல்கும் ஸ்ரேயஸைத் தேடுகின்றனர். ஸ்ரேயஸ் மட்டுமே நிலையான மகிழ்ச்சி, அமைதி, ஆனந்தத்தை அளிக்க முடியும்.

ஸ்ரேயஸின் முடிவான பரிமாணம் ஆன்மாவை அறிவதே. மனிதனின் உண்மை இயல்பான ஆன்மாவை புரிந்துகொள்வது மிகச் சூட்சுமமாக இருப்பினும் தகுதியான குருவினால் அறிவுறுத்தப்படும்போது அதனை சரியாகப் புரிந்துகொள்ள முடியும். சுயக்கட்டுப்பாடு ஒருபுறமும், இறைவனின் கருணை மறுபுறமும் ஆன்மாவை அனுபூதியில் உணர்வதற்கு வழி செய்கின்றன. ஆன்மாவை தேரின் உரிமையாளருக்கும், உடல் தேர் என்றும் யமன் உருவகப்படுத்தி கூறுகிறார். நல்ல குதிரைகளினால் இழுத்துச் செல்லப்படும் தேர் நல்ல தேரோட்டியினால் சரியான இடத்திற்குச் சென்று சேர்வது போல உடலும் புலன்களும் கட்டுப்படுத்தப்பட்டு புத்தியினால் ஒழுங்காகச் செலுத்தப்பட்டால் விஷ்ணு பதத்தை ஜீவன் சென்று அடைகிறான்.

புலன்களினால் இழுக்கப்பட்டு மனிதன் தனது மனத்தை வெளியில் அலைய விடுகின்றான். இருப்பினும் தனது மனத்தை வெளிப்புறத்திலிருந்து விடுவித்து உள்முகமாக அவன் திருப்பினால் ஆன்மாவை அடைய முடியும். மரணத்திற்குப் பின் ஜீவன் எங்கு செல்லும் என்பது அப்பிறவியில் செய்த கர்மங்களைப் பொறுத்தே அமைகிறது என்று யமன் கூறுகிறார். படைக்கப்பட்ட உலகம் தலைகீழாக இருக்கும் மரத்திற்கும், பிரம்மம் அதனைத் தாங்கும் வேர்களாகவும் உள்ளது என ஒப்பிடுகிறார் அவர். தகுதியான ஆசிரியரால் உபதேசிக்கப்பட்டு, ஆசைகளை வெல்வதின் மூலம் பிரம்மத்தை ஒருவன்அறியலாம். ஜீவாத்மன் பெருவிரல் அளவாகவும், மரணத்தின் போது அது உச்சந்தலை வழியாக வெளியேறினால் பிரம்மத்திடம் சென்று சேர்கிறது என்றும் கூட உபநிஷத் கூறுகிறது. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரே மரத்தில் வசிக்கும் இரு பறவைகள் போன்றவை என்றும் எடுத்துரைக்கின்றது.

கவுஸீதகி உபநிஷதம்: (ரிக் வேதம், 4 அத்தியாயங்கள், 51 மந்திரங்கள்) முழுவதும் உரைநடையில் உள்ள இந்த உபநிஷதம் கவுஸீதகி பிரம்மனோபநிஷதம் என்றும் அழைக்கப்படுகிறது. முதல் அத்தியாயம் தேவயானம், பித்ருயானம் என்ற இரு வழிகளைப் பற்றி இங்கும் கூறப்படுகிறது. அர்சிரதிமார்க்கம் (தேவயானம்) வழியாக பிரம்ம லோகத்தை அடைவதின் விளக்கத்தை மட்டும் அல்லாமல் பிரம்மலோகத்தைப் பற்றிய அழகிய வர்ணனையும் கூறப்பட்டுள்ளது.  பிரம்மத்தை பிராணனாகக் கருதும் உபாசனையான பிராணவித்யை இரண்டாம் அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளது. ஏகதானம் ( உயர்ந்த செல்வம்) விரும்புபவர்கள் செய்ய வேண்டிய சடங்கும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

திருவோதாசனின் மகனான பிரதர்தன ராஜாவிற்கு, பிரம்மத்தை உணர்த்தி அதனுடன் இணைந்து விட்ட இந்திரன் வழங்கிய விரிவுரையே பெரிய மூன்றாவது அத்தியாயம். இதில் ராஜா பிரதர்தனத்தை இந்திரன் தன்னை பிராணனாகக் கருதி தியானம் செய்யுமாறு அறிவுறுத்துகிறான். இங்கே பிராணன் என்பது பிரஜ்ஞானத்தைக் (சுத்த சைதன்யம் ) குறிக்கிறது. பண்டிதரான கார்க்ய பாலாகிக்கும் அஜாதசத்ரு ராஜாவிற்கும் இடையில் நடக்கும் உரையாடலே கடைசி அத்தியாயம். அது ஏறக்குறைய பிரஹதாரண்யக உபநிஷதத்தில் வரும் பகுதிபோன்று (2.1) உள்ளது.

கேன உபநிஷதம்: (சாமவேதம், 4 அத்தியாயங்கள், 35 மந்திரங்கள்) தலவகார உபநிஷதம் என்று அழைக்கப்படும் இது முதல் வார்த்தையான கேன (எதனால்) என்பதைக் கொண்டு கேன உபநிஷதம் என்று பெயர் பெற்றது. இதில் முதல் பாதி கவிதை வடிவிலும் கடைசி பாதி உரைநடை வடிவிலும் உள்ளன. புலன்களுக்கும், மனத்திற்கும் பின்னால் இருக்கும் ஆற்றலாக உடலிலிருக்கும் ஆன்மாவானது முதலில் விளக்கப்படுகிறது. அது பிரம்மத்துடன் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதனை முன்னிலைப் பொருளாக அறிய முடியாவிட்டாலும், அது தன்னிலைப் பொருளாக  இருப்பதால் ஒவ்வொரு எண்ணத்திற்கும் பின்னாலும் அதன் இருப்பை நாம் உணரலாம். இந்த உண்மைப் பார்வையாளரை உணரும்போது, ஒருவன் அழியாப் பெருநிலையைப் பெறுகிறான்.

சொர்க்கத்திலுள்ள கடவுளர்களைப் பற்றிய கதையை அடுத்த அத்தியாயம் கூறுகிறது. அசுரர்களை அழித்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்கு தேவர்கள் இந்திரன் தலைமையில் விழா எடுத்து வெற்றிக்களிப்பில் மூழ்கியிருக்கிறார்கள். பிரம்மத்தின் அருளினாலும்,  ஆற்றலினாலும் தங்கள் அசுரர்களை வெற்றிக் கொள்ள முடிந்தது. என்பதை மறந்துவிட்டனர். பிரம்மமாகிய பரமாத்மா ஒரு யட்சன் வடிவில் வந்து அவர்களுக்குப் பாடம் புகட்டுகிறார். பின்னர் உமா ஹைமவதி (பிரம்மவித்தையின் வடிவம்) வந்து இந்திரனுக்கு ஆன்மீக ஞானத்தை புகட்டுகிறாள். பிரம்மத்தை அடைவதற்கு தவம், தமம் ( சுயக்கட்டுப்பாடு), கர்மம் (சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள செயல்கள்) ஆகிய ஒழுக்கமுறைகள் அடிப்படைத் தேவைகள் என்று உபநிஷதம் குறிப்பிட்டுக் கூறுகிறது. முடிவில் பிரம்மஞானத்தை சிறப்பாகப் பாராட்டி முடிகிறது.

மஹாநாராயண உபநிஷதம்: (கிருஷ்ண யஜுர் வேதம், 80 பகுதிகள், 259 மந்திரங்கள்) கிருஷ்ண யஜுர் வேதத்தின் தைத்திரீய ஆரண்யகம் பகுதி இரண்டு முக்கிய உபநிஷதங்களை உள்ளடக்கியது. ஒன்று தைத்திரீய உபநிஷதம், மற்றொன்று மஹாநாராயண உபநிஷதம், இதனை நாராயண உபநிஷதம் என்றும் யாக்ஞனிகீ உபநிஷதம் என்றும் அழைப்பர். இரண்டு மூலபாட வடிவங்களில் இவை உள்ளன. ஆந்திர பாதம் மற்றும் திராவிட பாதம், முதலாவது மிக நீளமானது. இது வேறு ஏதோ ஒரு பகுதிக்கு இணைப்புப் போன்று பலவித விஷயங்களைக் கொண்ட படைப்பாக உள்ளது. எந்த ஒரு முக்கியக் கருத்தையும் முறையாகத் தெளிவாக விளக்கவில்லை. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு தனிப்பகுதி போன்று இருக்கின்றது. வேதத்தின் மூன்று பகுதிகளான கர்ம (சடங்குகள்), ஞானம் (அறிவு) மற்றும் உபாசனை (தியானை) ஆகிய எல்லாவற்றையும் விளக்குகின்றன.

சமயச் சடங்குகள், விழாக்களில் இன்னும் ஓதப்படும். வேதமந்திரங்களான நாராயண ஸூக்தம், துர்கா ஸூக்தம் மற்றும் மேதா ஸூக்தம் ஆகிவைகள் இந்த உபநிஷத்தில்தான் வருகின்றன. சந்தியாகால சடங்குகள், சன்னியாச தீட்சை மந்திரங்கள், பல கடவுளர்களுக்கான காயத்ரி மந்திரங்கள், த்ரிசுபர்ண மந்திரம் போன்ற புகழ் வாய்ந்த மந்திரங்கள் ஆகியவைகளும் இதில் இருக்கின்றன.

ஆன்மீக வாழ்க்கையின் பல பரிமாணங்களான சத்தியம் (உண்மை), தபஸ் (தவம்), தமம் (புலன்கட்டுப்பாடு), தானம், தர்மம் (ஒழுக்கமான வாழ்க்கை), சமம் ( மன அமைதி) ஆகியவை மிக முக்கியமானதாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. பேரண்ட புருஷனின் வர்ணனையும், யாகத்தின் பல பகுதிகளைத் தியானிப்பதை சூசகமாகவும், பிரம்மலோகத்திற்குச் செல்லும் பாதையை விளக்கமாகவும் இந்த உபநிஷதம் கூறுகிறது.

மாண்டூக்ய உபநிஷதம்: (அதர்வ வேதம், 12 மந்திரங்கள்) இது உரைநடை வடிவில் உள்ள பன்னிரண்டு மந்திரங்களை மட்டுமே கொண்டது. பிரணவம், ஆத்மா, பிரம்மன் ஆகிய தத்துவங்களை நேரடியாக விளக்குகின்றது. அழியாத உண்மையான பிரம்மத்தின் அழகிய சின்னமாக இருப்பது பிரணவம். மூன்று உணர்வு நிலைகளான - ஜாக்ரத் (விழிப்பு), ஸ்வப்ன (கனவு), ஸுஸூப்தி (ஆழ்ந்த தூக்கம்) ஆகியவைகளை ஆராய்ந்து இந்த உபநிஷதம் உடலுள்ளே இருக்கும். ஆன்மாவின் உண்மை இயல்பை உறுதி செய்கிறது. மேலும் அந்த ஆன்மாவும் பேரண்டத்தின் உண்மையான பிரம்மமும் முடிந்த ஆய்வு நிலையில் ஒன்றே என்றும் இயம்புகிறது.

அதனை துரீய ( மூன்று நிலைகளைக் கடந்த நான்காவது நிலை) நிலை என்றழைக்கிறோம். அது அசிந்திய (எண்ணத்திற்கு அப்பால்), அலக்ஷண (குணங்களுக்கு அப்பால்) இருப்பதால் அதனை விளக்க முடியாது. அதை நாம் அறிய வேண்டும். பிரணவ தியானம், குறிப்பாக அதன் கடைசி பகுதி ஆன்ம அனுபூதியில் சென்று முடிகிறது. கவிதை நடையில் உள்ள கவுடபாதரின் (கி.பி. 700) நீண்ட விளக்கவுரையான காரிகா பொதுவாக இதனுடன் இணைந்தே படிக்கப்படுகிறது. வேதாந்தத்தை படிக்கும் மாணவர்கள் இதனை ஆழ்ந்து படிக்கின்றனர்.

முண்டக உபநிஷதம்: (அதர்வ வேதம், 3 அத்தியாயங்கள், 6 பகுதிகள், 64 மந்திரங்கள்) முண்ட என்றால் மழித்த தலை என்று பொருள். இதிலுள்ள ஆன்மீக ஞானம் அதைப் படிப்பவர்களின் மயக்கத்தையும், மாயையையும் மழித்து விடுவதால் இதற்கு இந்தப் பெயர் வந்திருக்கலாம். அல்லது மழித்த தலைகளையுடைய சன்னியாசிகளுக்கு குறிப்பாக இது எழுதப்பட்டிருக்கலாம். அருமையான கவிதை வடிவில் உள்ள இது படித்து மகிழ வேண்டிய ஒன்று.

எல்லா ஞானத்தையும் இது இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கிறது - பரா ( உயர்ந்த) மற்றும் அபரா (தாழ்ந்த) அக்ஷரம் என்ற அழிக்க முடியாத பிரம்மத்தைத் தவிர மற்ற எல்லா ஞானமும் வேதங்களையும் சேர்த்து அபரா வித்யை என்றே அழைக்கப்படுகிறது! பின்னர் அக்ஷர பிரம்மத்தின் வர்ணனையும், உலகம் அதிலிருந்து எவ்வாறு தோன்றியது என்பதும் விளக்கப்பட்டுள்ளது.

வேதச் சடங்குகள் புனிதமானதாக, தேவையானதாகக் கருதப்பட்டாலும் அவைகளின் வரையறையை எல்லையை இது எடுத்துரைக்கிறது. சாதகனை ஆன்மீக ஞானம் பெற வேண்டுமெனில் இவைகளை ஓட்டை விழுந்த கட்டுமரமாக எண்ணச் சொல்கிறது. பின்னர் பிரம்ம ஞானத்தைப் பெறுவதற்காக தகுதியான குருவைத் தேடி துறவு வாழ்க்கையை வாழ இது அறிவுறுத்துகிறது. ஓம் என்ற பிரணவத்தின் மூலம் பிரம்மத்தைத் தியானம் செய்ய வேண்டிய முறையை வில் - அம்பு உதாரணம் மூலம் அழகாக எடுத்துரைக்கிறது. இத்தியானம் ஒருவன் தனக்குள்ளே ஆன்மா அல்லது பிரம்ம அனுபூதியை அளிக்கிறது. ஒருவனைக் கட்டுப்படுத்தியிருந்த அறியாமை என்ற பந்தங்கள் இதனால் அழிகின்றன.

ஜீவாத்மாவையும் பரமாத்வாவையும் உடல் என்னும் ஒரே மரத்தில் வாழும் இரண்டு பறவைகளுக்கு ஒப்பிடுகின்றனர். ஜீவாத்மன் பந்தத்திலுள்ளது, பரமாத்மா என்றும் சுதந்திரமானது. இருப்பினும் ஜீவாத்மா பரமாத்மாவை உணரும்போது நன்மை தீமைகளுக்கு அப்பால் சென்று தானும் பரமாத்மாவும் ஒன்றே என்பதை அறிந்துகொள்கிறது. வாய்மையே வெல்லும் என்ற புகழ்பெற்ற மொழி இந்த உபநிஷதத்தில்தான் வருகிறது.

புத்தியினாலேயோ, சொற்பொழிவுகளைக் கேட்பதினாலேயோ இதனை நாம் அறிய முடியாது. அனுபூதி பெற்ற ஆசிரியரால் மட்டுமே இதனை கற்றுத் தர முடியும். கடவுளுடைய கருணை இந்த அனுபூதி பெறுவதில் பெரும்பங்கு வகிக்கிறது. இருவிதமான முக்தி முடிவில் கூறப்பட்டுள்ளது. படிப்படியாக பிரம்மலோகத்தின் வழியாக பிரம்மத்தை அடைவது ஒரு வழி. உடல் வீழ்ந்த மறுகணமே பிரம்ம ஞானத்தைப் பெறுவது மற்றொரு வழி.

பிரச்ன உபநிஷதம்: (அதர்வ வேதம், 6 அத்தியாயங்கள், 67 மந்திரங்கள்) கேள்வி-பதில் வடிவில் இருப்பதால் இதற்கு பிரச்னோபநிஷதம் என்று பெயர். பிப்லாத முனிவரிடம் கபந்தி காத்யாயனர், பார்கவ வைதர்பி போன்ற ஆறு முனிவர்கள் தங்களது சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள வருகின்றனர். மாணவப் பருவத்து ஒழுக்க நெறிகளுடன் ஒரு வருடத்திற்கு அவரின் ஆணையின்படி வாழ்ந்த பிறகு மீண்டும் அவரிடம் ஆறு கேள்விகளுடன் வருகின்றனர். அவர்களுக்கு பிப்லாதர் அளித்த பதில்களே இந்த உபநிஷதத்தின் பெரும் பகுதி.

எல்லா உயிர்களின் ஆதிமூலம் எது என்ற கேள்வியுடன் முதல் பகுதி ஆரம்பிக்கிறது. உயிர்களின் தலைவனான பிரஜாபதியே பிராணன் ( அக்னி அல்லது ஆதித்யன்) மற்றும் ராயி (சோமா அல்லது கருப்பொருள்) ஆகிய இரண்டின் கலவையினால் இந்த உலகத்தைப் படைத்தார் என்றும் பிப்பலாதர் கூறுகிறார். மேலும் உத்தராயணம் (வடக்குப் பாதை) மற்றும் தக்ஷிணாயனம் (தெற்குப் பாதை) என்ற இரு பாதைகளைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது.

உடல், புலன்களுக்கு அடிப்படையாக இருப்பது முக்கிய பிராணன் (முக்கிய உயிர் சக்தி) என்பதை இரண்டாவது பகுதி விளக்குகிறது. பேரண்ட புருஷனிடமிருந்து (பரம புருஷர்) முக்கிய பிராணன் வெளிவருவதை மூன்றாவது பகுதி விளக்குகிறது. உடலினுள்ளே ஐந்து வடிவங்களில் அவர் செயல்புரிகிறார். மரணத்தின்போது உதானவாயு (முக்கிய பிராணத்தின் ஓர் வடிவம்) ஜீவனை அதனுடைய கர்மத்திற்கு ஏற்றவாறு சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ அல்லது இவ்வுலகத்திற்கோ இதயத்திலிருந்து செல்லும் நாடி (பிராணன் செல்லும் வழி) வழியாக எடுத்துச் செல்கிறது.

ஆழ்ந்த தூக்க நிலையைப் பற்றி நான்காவது பகுதி கூறுகிறது. அந்த நிலையில் ஜீவாத்மா பரமாத்மாவோடு ஒன்றியுள்ளது. ஓம் என்ற பிரணவ தியானத்தின் விளக்க முறைகளும், அதனால் கிடைக்கும் பலன்களும் அடுத்த பகுதியில் விளக்கப்பட்டுள்ளன. உயர்நிலை தியானம் பிரம்மலோக பிராப்தியை அளிக்கிறது. ஷோடசகல புருஷரைப் (பதினாறு அங்கங்களைக் கொண்டவர்) பற்றி கடைசிப் பகுதி விளக்குகிறது. அவர் ஜீவாத்மனே. அந்த நிலையற்ற பதினாறு அங்கங்கள் அழியும்போது ஜீவாத்மா அழியாப் பெரு நிலையை அடைகிறது.

ஸ்வேதாஸ்வதர உபநிஷதம்: (கிருஷ்ணய யஜுர் வேதம், 6 அத்தியாயங்கள், 113 மந்திரங்கள்) ஜகத் காரணம் என்ற உலகத்தின் ஆதிகாரணத்தைப் பற்றி முனிவர்களின் கலந்துரையாடலுடன் தொடங்கும் இந்த உபநிஷதம் தேவாத்ம சக்தி அல்லது பரமாத்மா (இறைவன்) தனது உள்ளடக்கிய சக்தி மூலம் இவ்வுலகை படைக்கிறார் என்ற முடிவையும் அதே அத்தியாயத்திலேயே உரைக்கிறது. தியானயோகம் (தியானம்) மூலம் இந்த உண்மையை அவர்கள் உணர்ந்தார்கள். இதனைத் தொடர்ந்து ஜீவாத்மா மற்றும் பரமாத்மாவின் வர்ணனை பல அழகான சொற்றொடர்கள் மூலம் விளக்கப்படுகிறது.

இரண்டாவது அத்தியாயம் தியான யோகத்தையும், அதன் வழிமுறைகளான மனக்கட்டுப்பாடு, மன ஒருமைப்பாடு போன்றவற்றையும், ஆசனத்தையும், பிராணாயாமத்தையும் (மூச்சுக் கட்டுப்பாட்டின் மூலம் பிராண சக்தியை ஒழுங்கு படுத்துதல்), யோகத்தின் பலன்களையும் விளக்குகிறது. ருத்ராத்யாய மற்றும் புருஷ ஸூக்தம் போன்ற வேத பகுதிகளில் உள்ள பல மந்திரங்களை மூன்றாவது அத்தியாயத்தில் இருப்பதைக் காண்கிறோம். ஜீவாத்மா பரமாத்மா வர்ணனையை மீண்டும் இங்கே பார்க்கிறோம். அதனைத் தொடர்ந்து பிரம்மம் என்ற அறுதி உண்மையை உணர்ந்தவன் அழியாப் பெருநிலையை அடைகிறான் என்பதனை உரைக்கிறது.

இறைவனான பரமேஸ்வரிடமிருந்து ஹிரண்யகர்ப (தங்க முட்டை, பேரண்ட புருஷர்) என்றழைக்கப்படும். கபிலர் வெளிவருவதை ஐந்தாவது அத்தியாயம் கூறுகிறது. படைப்பின் பலவித பரிமாணங்களின் விளக்கங்களும் அங்கே உள்ளன. வேதத்தின் ரகசியப் பகுதிகளின் மூலம் தான் ஆத்மாவை உணர முடியும் என்றும் அதை உணர்ந்தவன் அமரத்துவ நிலை அடைகிறான் என்றும் உரைக்கிறது.

ஜீவாத்மாக்களின் கர்மங்களுக்கு பலன் அளிக்கும் பரமாத்மாவாக இறைவன் இருப்பதையும் அவரின் உயர்ந்த குணங்களையும் ஆறாவது அத்தியாயம் விளக்குகிறது. பரமேஸ்வரிடம் மட்டும் என்றில்லாது தனது குருவிடம் யாருக்கு பக்தி இருக்கிறதோ அவனுக்கு மட்டுமே ஆன்மஞானம் கிடைக்கும் என்றும் இந்த உபநிடதம் முக்கியமாக எடுத்துரைக்கிறது.

தைத்திரீய உபநிஷதம்: (கிருஷ்ண யஜுர் வேதம், 3 அத்தியாயங்கள், 31 மந்திரங்கள்) மூன்று அத்தியாயங்களைக் கொண்டது இது; அத்தியாயத்தின் முதல் வார்த்தையைக் கொண்டு சிக்ஷா வல்லி, பிரம்மானந்த வல்லி மற்றும் பிருகு வல்லி என்று அவை அழைக்கப்படுகின்றன. முதல் அத்தியாயம் ஒலியியல் அறிவியலை விளக்குகிறது. அதனைத் தொடர்ந்து செல்வம், அறிவை விரும்புவர்கள் செய்ய வேண்டிய ஹோமம், மற்றும் ஜோதியின் மேல் தியானம் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. பூ போன்ற வியாகிருதியின் மூலமாக ஒருவனுக்குள்ளே பிரம்மத்தைத் தியானம் செய்யும் முறையும் சிறிது விளக்கப்பட்டுள்ளது. குருகுலத்திலிருந்து படிப்பை முடித்து வெளியேறும் மாணவனுக்கு ஆசிரியரின் விடைபெறும் உபதேசம் கடைசியில் கூறப்பட்டுள்ளது.

ஆன்மாவை மூடி மறைக்கின்ற ஐந்து கோசங்கள் அன்னமயம் (உடல்), பிராணமயம் (புலன்கள்), மற்றும் பிற இரண்டாவது அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளன. மனிதன் மகிழ்ச்சியையே விரும்புகிறான் என்ற அடிப்படையில் பார்த்தால்கூட பிரம்மானுபவத்தின் ஆனந்தமானது உலகிலோ அல்லது சொர்க்கத்திலோ கிடைக்கக் கூடிய உயர்ந்த ஆனந்தத்தை விட எல்லையற்ற மடங்கு அதிகமானது என்பதை விளக்க முற்படுகிறது.

கடைசி அத்தியாயம் தபஸ் (தவம் ) என்பது பிரம்மத்தை அறிய வழி என்பதும் உணவின் மேல் சில உபாசனைகளும் எடுத்துரைக்கின்றது. உணவை பாழாக்கக் கூடாது. விருந்தினர்களுக்கு உணவும் இடமும் அளிக்க வேண்டும் போன்ற கருத்துக்கள் வலியுறுத்தப்படுகின்றன. முடிவாக யார் ஒருவன் ஐந்து கோசங்களைக் கடந்து தனது ஆன்மாவை, சூரியனிலும் இருக்கும் அதனை அறிகிறானோ அவன் எல்லையற்ற ஆனந்தத்தை அடைகிறான்.

வஜ்ரசூசிகா உபநிஷதம் (சாமவேதம், 9 மந்திரங்கள்): முதல் மந்திரத்தைத் தவிர மற்றவைகள் உரைநடை வடிவில் அமைந்துள்ளன. இந்த சிறிய உபநிஷதம் யார் பிராம்மணன்? என்ற கேள்வியைக் கேட்டு அதற்குப் பதிலை அளிக்கிறது. உடல், ஜீவாத்மா, பிறப்பு, அறிவு, வேலை, சமயச் சடங்குகள் என எந்த ஒன்றும் ஒருவனை பிராம்மணனாக ஆக்குவதில்லை. நடத்தை ஒன்றே உண்மையான பிராம்மணனைக் குறிக்கிறது.

இரண்டற்ற ஒன்றான ஆன்மாவை எவன் ஒருவன் உணர்ந்து, அதனால் குறைபாடுகளிலிருந்தும் தவறுகளிடமிருந்தும் விடுபடுகிறானோ அவனே உண்மையில் பிராம்மணன். அமைதியான மனம் கொண்ட அவனிடம் ஆசை, பொறாமை, மயக்கம், அகங்காரம் ஆகியவைகள் இருப்பதில்லை. இவ்வாறு பிரம்மத்தை உணர்ந்து எல்லோரும் பிராம்மணராக வாழ வேண்டி அழைக்கிறது. கடைசிப் பகுதி,

முடிவுரை: வேதங்களின் தத்துவம் மற்றும் வேத மதத்தின் சாரத்தை கொண்டிருப்பவை உபநிஷதங்கள். ஸத்தர்சனங்கள் என்ற ஆறு இந்திய தத்துவ வகுப்புக்கள் இவைகளிலிருந்து ஊக்கத்தையும் பலத்தையும் பெறுகின்றன. வேதாந்த முறைகள் யாவுமே இவைகளின் முறையான ஆராய்ச்சியினால் வந்தவைகளே, பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் சமயங்களிலும் கலாச்சாரத்திலும் ஊடுருவி நிற்கும் முக்தி என்ற வாழ்க்கையின் அறுதி லட்சியம் இவைகளிலிருந்தே தோன்றியது. பிரஸ்தானத்ரயம் ( மூன்று ஆதி அடிப்படை சாஸ்திரங்கள்) என்பதில் இவைகளும் ஒன்று. மற்றவை பகவத் கீதையும், பிரம்ம சூத்திரமும். உபநிடதங்களின் பரந்த மற்றும் ஆழமான கருத்துக்கள் மற்ற வெளிநாட்டு சமயங்களையும் ஈர்த்து, உலகின் பல மொழிகளில் இவைகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. கொள்கை வெறி இன்றி பரந்த மனத்துடன் உபநிடதங்களைப் படித்தால் உண்மையான ஆன்மீக வாழ்க்கைக்கு அவை பெரும் தூண்டுகோலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

 
மேலும் உபநிஷதங்கள் என்றால் .. »
temple news
அறிமுகவுரை: பல நூற்றாண்டுகளாக இந்துக்களை வழிநடத்தி ஊக்குவித்து வரும் சாஸ்திரங்கள் எவை எனில் அவை ... மேலும்
 
temple news
உபநிஷதங்களின் பெயரில் இன்று பதிப்பில் உள்ளவை 200-க்கும் மேலானவை. முக்திகோபநிஷதம் 108 உபநிஷதங்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar