Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரணவ தியானம் மஹத் என்றால் என்ன? மஹத் என்றால் என்ன?
முதல் பக்கம் » தைத்திரீய உபநிஷதம்
மனிதன்
எழுத்தின் அளவு:
மனிதன்

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2015
02:07

(ஆனந்த வல்லி)

வாழ்க்கையைத் தன் போக்கில் போக விடாமல், உணர்ந்து, அனுபவித்து வாழுமாறு இந்த உபநிஷதம் கூறுவதாகக் கண்டோம். எந்த அம்சங்களால் அத்தகைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியுமோ அவற்றை முதற்பகுதியில் கண்டோம். இந்த இரண்டாம் பகுதி நம்மை இன்னும் ஒரு படி மேலே செல்லத் தூண்டுகிறது.

உலகின் சிந்தனையாளர்களுள் மிகப் பெரும்பாலாரை ஆக்கிரமித்த கேள்வி இது - மனிதன் என்பவன் யார்? அதாவது, நாம் யார்? உண்மையில் நாம் யார் - உடம்பா? மனமா? இவற்றின் சேர்க்கையா?  இவை தவிர வேறு ஏதாவதா? இந்தக் கேள்விக்குக் கிடைத்த விடைகள் பல. அவற்றுள் ஒன்றை இங்கே (1.2-6.1) காண்கிறோம். மொத்தத்தில், மனிதனைப்பற்றிய, அதாவது நம்மைப்பற்றிய ஒரு சிறந்த ஆராய்ச்சியாக அமைகிறது இந்தப் பகுதி படைப்பில் நமது இடம் எது, நாம் அனுபவிக்கத் தக்க ஆனந்தத்தின் உயர்ந்த எல்லை எது என்பவற்றையும் இந்தப் பகுதி ஆராய்கிறது.

1. பிரார்த்தனை

குறைகளும் தடைகளும் இல்லாமல் கல்வி நிறைவேற மாணவனும் ஆசிரியரும் தினமும் பிரார்த்திக்கின்ற மந்திரம் இது.

ஸஹ நாவவது ஸஹ நௌ புனத்து ஸஹ  வீர்யம்
கரவாவஹை தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி //

ஸஹ நௌ- நம் இருவரையும் ; அவது - காப்பாராக: ஸஹ நௌ- நம் இருவரையும்; புனக்து - அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாராக: ஸஹ - சேர்ந்து; வீர்யம் - ஈடுபாடுமிக்க ஆற்றலுடன்; கரவாவஹை - உழைப்போமாக; அதீதம் - கற்றது: நௌ - நமக்கு; தேஜஸ்வி - பயனுள்ளதாக; அஸ்து - விளங்கட்டும்; மா  வித்விஷாவஹை - வெறுக்காமல் இருப்போமாக!

ஆச்சாரியர், சீடர் ஆகிய நம் இருவரையும் இறைவன்
காப்பாராக! அறிவின் ஆற்றலை நாம் இருவரும்
அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாராக! நாம் இருவரும்
ஈடுபாடுமிக்க ஆற்றலுடன் உழைப்போமாக! கற்றது
நமக்குப் பயனுள்ளதாக விளங்கட்டும்! எதற்காகவும்
நாம் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாக!

2. வாழ்க்கையின் லட்சியம்

நமது வாழ்க்கை என்பது ஒரு மாபெரும் பயணம்; எங்கிருந்து புறப்பட்டோம். எங்கே போகிறோம் என்பது தெரியாத ஒரு பயணம் இதனை அறிவதற்கான ஒரு முயற்சியே ஆன்மீகம். நாம் புறப்பட்ட இடம் இறைவன், நாம் சேர வேண்டிய இடமும் அவரே என்று உபநிஷதங்கள் கூறுகின்றன. அப்படியானால் அவரைத் தேட வேண்டும்; அதுவே வாழ்க்கையின் லட்சியமாக இருக்க முடியும். அவரை எங்கே தேடுவது? இதயத்தில்.

ஓம் ப்ரஹ்மவிதாப்னோதி பரம் ததேஷாப்யுக்தா ஸத்யம்
ஜ்ஞானமனந்தம் ப்ரஹ்ம யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே
வ்யோமன் ஸோஸச்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா
விபச்சிதேதி//1.1//

ப்ரஹ்மவித் - இறைவனை அறிந்தவன்; பரம் - மிக மேலான நிலையை; ஆப்னோதி - அடைகிறான்; தத் - அதுபற்றி; ஏஷா - இவ்வாறு; அப்யுக்தா - சொல்லப்படுகிறது; ஸத்யம் - உண்மை; ஜ்ஞானம் - உணர்வு; அனந்தம் - எல்லையற்ற தன்மை; ப்ரஹ்ம - இறைவன்; ய; - யார்; வேத - அறிகிறானோ; குஹாயாம் - இதயக் குகையினுள்; பரமே - அனைத்தையும் கடந்த; வ்யோமன் - வெளி; நிஹிதம் - இருப்பது; ஸ; - அவனது; ஸர்வான் - எல்லா; காமான் ஸஹ - ஆசைகளும்; விபச்சிதா - அனைத்தையும் அறிபவரான; ப்ரஹ்மணா - இறைவனை; அச்னுதே - பெறுகிறான்; இதி - இவ்வாறு.

1.1 இறைவனை அறிந்தவன் மிக மேலான
நிலையை அடைகிறான். அதுபற்றி இவ்வாறு
சொல்லப்படுகிறது; இறைவன் உண்மை வடிவினர்;
உணர்வு வடிவினர்; எல்லையற்றவர். அனைத்தை
யும் கடந்தவரான அவர் இதயக் குகையில் வீற்றிருக்
கிறார். இந்த உண்மையை உணர்பவன்
அனைத்தையும் அறிபவரான அந்த இறைவனை
அடைகிறான். அவனுடைய எல்லா ஆசைகளும்
நிறைவேறுகின்றன.

1. உண்மை வடிவினர்: உலகில் எண்ணற்ற பொருட்களைக் காண்கிறோம். அந்தப் பொருட்களில் உள்ள உண்மை இறைவன்; அதாவது அந்தப் பொருட்களின் அடிப்படையாக அவர் இருக்கிறார். அவர் இல்லையென்றால் அந்தப் பொருட்கள் அந்தப் பொருட்களாக இருக்காது. ஒரு பொருள் என்று நாம் காண்கின்ற ஒன்று, அதற்கு அந்தப் பொருள் தன்மையைக் கொடுக்கின்ற ஒன்று என்று  ஒவ்வொரு பொருளும் இரண்டால் ஆனது. உதாரணமாக, பாலை நாம் காண்கிறோம்; ஆனால் பாலுக்குப் பால்தன்மையைத் தருகின்ற சுவையை நாம் காண்பதில்லை. அந்தச் சுவை இல்லாவிட்டால் அது பால் ஆகாது. இவ்வாறே ஒவ்வொரு பொருளிலும் அந்தப் பொருள்தன்மையைக் கொடுப்பதான ஒன்று உள்ளது. அந்தத் தன்மையாக இறைவன் இருக்கிறார்.

2. உணர்வு வடிவினர்: உயிருள்ளவற்றையும் உயிரற்றவைகளையும் வேறுபடுத்திக் காட்டுவது உணர்வு, தண்டவாளத்தின்மீது ரயில் விரைந்து ஓடுகிறது; வழியில் இருக்கின்ற சிறு புழு வழியைவிட்டு ஊர்ந்து செல்கிறது. உடனே நாம், ரயில் உயிரற்ற ஜடப்பொருள், வெறும் எந்திரம்; புழு உயிருள்ளது என்கிறோம். காரணம், புழு நியதியை மீற முயன்றது. எவ்வளவு பலமும் ஆற்றலும் நிறைந்ததானாலும் ரயில் ஒருபோதும் நியதியை மீற முடியாது; மனிதன் விரும்புகின்ற திசையில் இயங்குமாறு அது அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு மாறாக ரயில் எதுவும் செய்ய இயலாது. ஆனால் புழு சிறியதாக, சாதாரணமானதாக இருந்தாலும், நியதியை மீறி அபாயத்திலிருந்து தப்ப முயற்சி செய்தது; நியதியை மீறி தன்னை, தனது சுதந்திரத்தை நிலைநிறுத்த முயன்றது. அதனுள் கடவுள் இருக்கிறார். நாளை அதுவும் கடவுள் ஆகலாம் என்பதற்கு இந்த முயற்சியே அறிகுறியாக அமைகிறது. என்கிறார் சுவாமி விவேகானந்தர். இவ்வாறு ஒவ்வொன்றிலும் வாழ்க்கைக்கு அடையாளமான உணர்வாக விளங்குகிறார் இறைவன்.

3. எல்லையற்றவர்: அனைத்து உலகங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் அடிப்படையாக இருப்பதால் எந்த எல்லையையும் இறைவனுக்குக் கற்பிக்க முடியாது. அதாவது ஆண், பெண், மனிதன், மிருகம், தாவரம் போன்ற எல்லைகளைக் கடந்தவர் அவர்.

இவ்வாறு எங்கும் நிறைந்த, எல்லாமான இறைவனைக் தேட வேண்டும். உணர வேண்டும். இது வாழ்க்கையின் லட்சியம். அவரை எங்கே தேடுவது? இதயத்தில், இதயக் குகையில்; வேறு எங்கேயும் அல்ல-

மலைமேலே, பள்ளத்தே, மாமலையின் தொடரினிலே,
கலைநிறையும் கோயிலிலே, கவின்பள்ளி வாசலிலே,
கிறிஸ்தவநற் சபையினிலே கீர்த்திமிகும் மறைகளிலே,
சிறப்புயரும் பைபிளிலே, சீரார் குரான் அதிலே
ஒரு பயனும் இல்லாமல் உனைத்தேடி நான் அலைந்தேன்

என்று தாம் இறைவனை எங்கெங்கோ தேடி அலைந்ததாக குறிப்பிடுகின்ற சுவாமி விவேகானந்தர் இறுதியில் அவரைத் தம்முள் கண்டதாகக் கூறுகின்றார்.

விரைகின்ற வாழ்க்கை வியன்புனலில் ஈசன்நீ
நிறைந் தொளிரும் ஆன்மாவின் ஆன்மாவாய் நிற்கின்றாய்,
உன்னவன்நான் உன்னவன்நான் உண்மையில் நீ என் இறைவன்
என் அன்பே, இயம்புகிறேன் ஓம் தத் ஸத், ஓம் தத் ஸத்.

இதயம் என்பதுபற்றி 1:6.1- இல் விரிவாகக் கண்டோம்.

இதயத்தில் இறைவன் எப்படி இருக்கிறார் என்பது இங்கே சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. நிஹிதம் என்ற வார்த்தை அதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹிதம் என்றால் இருப்பது  நி என்றால் நித்யம் அதாவது என்றும் என்று பொருள். மற்றொரு பொருள் நிகூடம் அதாவது ஆழம் இறைவன் நம் இதயத்தில் என்றும் எப்போதும் இருக்கிறார். ஆழங்களில் இருக்கிறார். எப்போதும் இருக்கிறார். எனவே இந்த நேரத்தில் அவரை நாட வேண்டும். இந்த நேரத்தில் அவரைத் தேடக் கூடாது. என்பதெல்லாம் கிடையாது. அவர் ஆழங்களில் இருப்பவர் எனவே தேடினால்தான் கிடைப்பார்.

அந்த இறைவனை அடைபவனின் எல்லா ஆசைகளும் நிறைவேறுகின்றன. இதனை அற்புதமாக விளக்குகிறார். ஸ்ரீசங்கரர். சாதாரண மனிதனிடம் இருப்பதுபோன்ற ஆசைகள், அதாவது பொருட்களை அனுபவிப்பதற்கான ஆசை, பதவி ஆசை போன்ற ஆசைகள் நிறைவேறுகின்றன என்பது இதன்பொருள் அல்ல. ஏனெனில் அத்தகைய ஆசைகள் இருப்பவன் இறைவனை நாடவே முடியாது. இங்கே கூறப் படுவது வேறு. இறையனுபவம் பொறுபவனிடம் வேறு எந்த ஆசைகளும் தோன்றுவதில்லை என்பதே இதன் பொருள். அவன் பெறுகின்ற இறையனுபவம் அவனது ஆளுமையின் ஒவ்வொரு பகுதியிலும் புகுந்து அவனிடம் வேறு எந்த ஆசைகளும் எழாத அளவிற்கு ஆனந்தத்தை நிறைக்கின்றது. அந்த ஆனந்தம் படிப்படியாக வருவதில்லை. திடீரென்று சூரியன் உதிப்பதுபோல் அந்த அனுபவம் அவனில் தோன்றி நிறைகிறது. (ஏகக்ஷண உபாரூடேனேவ ஏகயோபலப்த்யா ஸவித்ரு ப்ரகாசவத் நித்யயா) அதன்பிறகு சாதாரண ஆசைகள் எதுவும் அவனிடம் எழுவதில்லை.

3. படைப்பில் நம் இடம்:

படைப்பு ஒரு மாபெரும் புதிர். இந்தப் படைப்பின் அடிப்படையாக ஐந்து மூலங்கள் அமைந்துள்ளன. அவை வெளி, காற்று, நெருப்பு, நீர், பூமி , படைப்பின் அடிப்படை மூலங்களாக இந்த ஐந்தினைக் கண்டுபிடித்தது. தத்துவ உலகிற்கு இந்தியாவின் கொடைகளுள் மகத்தான ஒன்றாகும். இவை ஐந்தும் பிரபஞ்சத்தின் அடிப்படை மூலங்களாக உள்ளன என்பதை உலகின் தத்துவ சிந்தனையாளர்களுள் மிகப் பெரும் பாலோரும் ஏற்றுக்கொள்கின்றனர். இந்த ஐந்தின் நிறைவாக, விளைவாக மனிதனைக் காண்கின்றன உபநிஷதங்கள்.

தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மன ஆகாச; ஸம்பூத; ஆகாசாத்
வாயு; வாயோரக்னி; அக்னேராப: அத்ப்ய; ப்ருதிவீ ப்ருதிவ்யா
ஓஷதய; ஓஷதீப்யோஸன்னம் அன்னாத்புருஷ: //1.2//

தஸ்மாத் - அதிலிருந்து; ஏதஸ்மாத் - இறைவனிலிருந்து; ஆத்மன; - ஆன்மாவிலிருந்து; ஆகாச; - வெளி; ஆகாசாத் - வெளியிலிருந்து; வாயு: - காற்று; வாயோ: - காற்றிலிருந்து; அக்னி; - நெருப்பு; அக்னே: - நெருப்பிலிருந்து;  ஆப;- நீர்; அத்ப்ய: - நீரிலிருந்து; ப்ருதிவீ - பூமி; ப்ருதிவ்யா - பூமியிலிருந்து; ஓஷதய: - செடி கொடிகள்; ஓஷதீப்ய: - செடிகொடிகளிலிருந்து; அன்னம் - உணவு; அன்னாத் - உணவிலிருந்து: புருஷ: - மனிதன், ஸம்பூத: - தோன்றினான்.

1.2. நம்மில் ஆன்மாவாக விளங்குகின்ற அந்த
இறைவனிலிருந்து வெளி தோன்றியது. வெளி
யிலிருந்து காற்று, காற்றிலிருந்து நெருப்பு, நெருப்
பிலிருந்து நீர், நீரிலிருந்து பூமி, பூமியிலிருந்து செடி
கொடிகள், செடிகொடிகளிலிருந்து உணவு, உண
விலிருந்து மனிதன் தோன்றினான்.

இறைவன் - வெளி - காற்று - நெருப்பு - நீர் - பூமி - செடிகொடிகள் - உணவு - மனிதன் என்ற வரிசையில் படைப்பு நிகழ்ந்தது. இந்த வரிசைப்படி படைப்பின் சிகரமாக மனிதன் விளங்குகிறான். இறைவன், ஐந்து அடிப்படைமூலங்கள் என்று எல்லாமே அவனில் உள்ளன. அதனால்தான் சுவாமி விவேகானந்தரும், கட்டிடங்களுள் தாஜ்மகால்போல் கோயில்களுள் மனிதனே சிறந்தவன் என்று கூறினார்.

4. மனிதன் (2.1-6.1)

படைப்பின் சிகரம் மனிதன். ஆனால் அந்த மனிதன் யார்? அதாவது நாம் யார்? இந்தக் கேள்வியைக் கேட்காத சிந்தனையாளர்களே இல்லை எனலாம். சாதாரண மனிதர்களின் வாழ்க்கையிலும் எப்போதாவது இந்தக் கேள்வி எழுகிறது. ஆனால் விடை மட்டும் என்னவோ அனைவரது சிந்தனையையும் கடந்தே நிற்கிறது. வேத காலத்திலிருந்தே நமது சிந்தனையாளர்களும் இதுபற்றி சிந்தித்துள்ளார்கள். அவற்றிலிருந்து நம்மைப் பற்றிய மூன்று முக்கிய சித்திரங்கள் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றுள் ஒன்றை இங்கு நாம் காண்கிறோம். (மற்ற இரண்டுள் ஒன்று மாண்டூக்ய உபநிஷதத்தில் வருகிறது. விழிப்பு, கனவு, தூக்கம் என்ற மூன்று நிலைகளில் சஞ்சரிப்பவர்கள் நாம் என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டது அது. மற்றொன்று தந்திர சாஸ்திரங்களில் காணப்படுவது. உணர்வே (சித்) ஆற்றல் (சக்தி) என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது அது.)

ஐந்து உடம்புகள்: 2.1 - 5.3

ஐந்து உடம்புகள் கொண்ட ஆன்மாவே மனிதன் என்கிறது. இந்த உபநிஷதம் ஓர் உடம்பு இருப்பது தெரியும்.
ஆனால் ஐந்து உடம்புகள் இருப்பதாக இந்த மந்திரங்கள் தெரிவிக்கின்றன. அன்னமய ஆன்மா (தூல - உடம்பு), பிராணமய ஆன்மா (பிராண - உடம்பு), மனோமய ஆன்மா (மன -உடம்பு), விஜ்ஞானமய ஆன்மா (புத்தி - உடம்பு), ஆனந்தமய ஆன்மா ( ஆனந்த - உடம்பு) என்பவையே அந்த உடம்புகள்.

உடம்பு என்பதைக் குறிப்பதற்கு சரீரம் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் ஆன்மா என்ற சொல் பயன்படுத்தப் படுவது கருத்தில்கொள்ள வேண்டிய ஒன்றாகும். இந்த உடம்புகளை உயிரற்ற சட்டைகள்போல் காணாமல் ஒவ்வொன்றையும் தனி வாழ்க்கை உள்ள ஓர் உயிர்ப்பொருளாகக் காண்கிறது உபநிஷதம்.

1. தூல- உடம்பு: 2.1-2.2

முதலாவதாக, நாம் புறத்தில் காண்கின்ற உடம்பு உடம்பின் செயல்பாடுகள், இயங்கும் முறை அதன் அடிப்படை போன்ற எதுவும் பெரிதாக நமக்குத் தெரியாத என்றாலும் உடம்பு என்ற ஒன்று இருப்பது நமக்குத் தெரியும். நமக்குத் தெரியாதது உடம்பிற்கு ஒரு தனி வாழ்க்கை உண்டு என்பதுதான். இதைக் குறிக்கத்தான் ஆன்மா என்ற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது.

உணவு செரிப்பது, ரத்த ஓட்டம், ரத்தம் சுத்தமாக்கப் படல், அடிபட்ட அல்லது நோயுற்ற பகுதிகளைப் பராமரித்தல், மூளை, இதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்றவற்றின் இயக்கம் என்று உடம்பின் செயல்பாடு பிரமிப்பூட்டக்கூடிய ஒன்று. ஆனால் இவற்றில் எதுவும் நமது கட்டுப்பாட்டில் இல்லை. இந்தச் செயல்பாடுகளை உடம்பே முடிவு செய்கிறது. இன்றைய விஞ்ஞானத்தின் துணையுடன் இதனைப் புரிந்துகொள்கின்ற நாம் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இதனை அறிந்து உடம்பை ஒரு தனி வாழ்க்கை உடையதாகக் குறிப்பிட்ட முனிவரின் அறிவுக்கூர்மையைக் கண்டு வியக்கிறோம்.

ஸ வா ஏஷ புருஷோ ஸன்னரஸமய: தஸ்யேதமேவ சிர:
அயம் தக்ஷிண: பக்ஷ: அயமுத்தர: பக்ஷ: அயமாத்மா இதம்
புச்சம் ப்ரதிஷ்ட்டா ததப்யேஷ ச்லோகோ பவதி//2.1//

ஏஷ: புருஷ: ஸ: - இந்த மனிதன்; அன்னரஸமய: வை - உணவால் ஆனவன்: தஸ்ய - அவனுக்கு; இதம்; ஏவ - இதுவே; சிர: - தலை; அயம் - இது; தக்ஷிண; பக்ஷ; - வலது பக்கம்; அயம் - இது; உத்தர: பக்ஷ: - இடது பக்கம்; அயம் - இது; ஆத்மா- உடம்பு; இதம் - இது; புச்சம் - கீழ்ப்பகுதி; ப்ரதிஷ்ட்டா - ஆதாரம்: தத் அபி - அதுபற்றி; ஏஷ: - இந்த; ச்லோக: - சுலோகம்; பவதி - உள்ளது.

2.1 மனிதன் உணவால் ஆனவன். இது அவனது
தலை, இது அவனது வலது பக்கம். இது இடது
பக்கம். இது நடுப்பகுதி, இது உடம்பைத் தாங்கு
கின்ற கீழ்ப்பகுதி இதுபற்றி கீழ்வரும் சுலோகமும்
உள்ளது.

தலை, இடது பக்கம் வலதுபக்கம், நடுப்பகுதி, கீழ்ப்பகுதி, என்று உடம்பின் ஐந்து முக்கியப் பகுதிகள் இங்கே கூறப்பட்டுள்ளன. இதன்மூலம் தூல உடம்பு குறிப்பிடப்படுகிறது.

உடம்பின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பது உணவு எனவேதான் மனிதன் உணவால் ஆனவன் என்று குறிப்பிடப்படுகின்றான்.

அன்னாத்வை ப்ரஜா: ப்ரஜாயந்தே யா: காச்ச ப்ருதிவீக்ம்
ச்ரிதா: அதோ அன்னேனைவ ஜீவந்தி அதைனதபியந்த்யந்தத:
அன்னக்ம் ஹி பூதானாம் ஜ்யேஷ்ட்டம் தஸ்மாத்
ஸர்வௌஷதமுச்யதே ஸர்வம் வை தேஸன்னமாப்னுவந்தி
யேஸன்னம் ப்ரஹ்மோபாஸதே அன்னக்ம் ஹி பூதானாம்
ஜ்யேஷ்ட்டம் தஸ்மாத் ஸர்வௌஷதமுச்யதே அன்னாத் பூதானி
ஜாயந்தே ஜாதான்யன்னேன வர்தந்தே அத்யதேஸத்தி ச பூதானி
தஸ்மாதன்னம் ததுச்யத இதி //2.2//

அன்னாத் வை - உணவிலிருந்தே: ப்ரஜா: - மக்கள்; ப்ரஜாயந்தே - தோன்றினர்; ப்ருதிவீம் - பூமியில்; யா - யாரெல்லாம்; கா: ச- எவையெல்லாம்; ச்ரிதா; - உள்ளனவோ; அத; - பிறகு; அன்னேன ஏவ - உணவினாலேயே; ஜீவந்தி- வாழ்கின்றனர்; அத - மேலும்; ஏனத் - அதிலேயே; அந்தத; - கடைசியில்; அபியந்தி - சேர்கின்றனர்; அன்னம் ஹி - உணவே; பூதானாம் - உயிர்களின்; ஜ்யேஷ்ட்டம் - ஆரம்பம்; தஸ்மாத் - அதனால்; ஸர்வ ஔஷதம் - அன்னத்திற்கும் மருந்து; உச்யதே - சொல்லப்படுகிறது; யே -யார்; அன்னம் - உணவை; ப்ரஹ்ம - தெய்வீகமாக; உபாஸதே - போற்றுகிறார்களோ; தே ஸர்வம்வை - அவர்கள் அனைவரும்; அன்னம் - உணவை; ஆப்னுவந்தி - பெறுகின்றனர்; அன்னாத் - உணவிலிருந்து; பூதானி - உயிர்கள்; ஜாயந்தே - தோன்றுகின்றன; ஜாதானி - தோன்றியவை; அன்னேன - உணவினால்; வர்தந்தே - வளர்கின்றன; அத்யதே - உண்ணப்படுகிறது. பூதானி - உயிர்களை; அத்தி ச- உண்கிறது; தஸ்மாத் - எனவே; தத் - அது; அன்னம் - உணவு; உச்யதே இதி - அழைக்கப்படுகிறது.

2.2 உணவிலிருந்தே மக்கள் தோன்றினர். பூமியில் யாரெல்லாம் உண்டோ, எவையெல்லாம் உண்டோ அவை அனைத்தும் உணவிலிருந்தே உண்டாயின. அனைத்தும் உணவினாலேயே வாழ்கின்றன. கடைசியில் உணவிலேயே கலக்கின்றன. உணவே உயிர்களின் ஆரம்பம் அதனால்தான் உணவு அனைத்திற்கும் மருந்து என்று சொல்லப்படுகிறது.
யார் உணவை தெய்வீகமாகப் போற்றுகிறார்களோ அவர்கள் தவறாமல் உணவைப் பெறுகின்றனர். உணவே உயிர்களின் ஆரம்பம் அதனால்தான் உணவு அனைத்திற்கும் மருந்து என்று சொல்லப்படுகிறது. உணவிலிருந்து உயிர்கள் தோன்றுகின்றன. தோன்றியவை உணவினாலேயே வளர்கின்றன. ஆரம்பத்தில் உயிர்கள் உணவை உண்கின்றன. கடைசியில் உணவே உயிர்களை உண்கிறது. எனவே தான் உணவு அன்னம் என்று அழைக்கப்படுகிறது.

உணவின் பெருமை, முக்கியத்துவம் போன்றவற்றை இவ்வளவு சிறப்பாகக் கூறுவதன்மூலம் அதனை நாம் எவ்வளவு கவனமாகக் கையாள வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. உபநிஷதம் உணவை தெய்வீகமாகப் போற்ற வேண்டும். எப்படி?

உணவு ஒரு மருந்து என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பசி என்னும் நோய்க்கான மருந்தே உணவு (க்ஷுத்வ்யாதிச்ச சிகித்ஸ்யதாம் - சாதன பஞ்சகம்.) என்கிறார் ஸ்ரீசங்கரர். அதாவது ருசிக்காக உண்ணக் கூடாது. மருந்தை எப்படி அளவறிந்து உரிய வேளையில் மட்டுமே உண்போமோ அப்படி அளவுடன் உரிய வேளையில் மட்டுமே உண்போமோ, அப்படி அளவுடன் உரிய வேளையில் மட்டும் உண்ண வேண்டும். இந்த நியதியைப் பின்பற்றி வாழ்பவனை உணவு வளர்க்கிறது. அவனுக்கு உணவு தவறாமல் கிடைக்கிறது. இந்த நியதியை மறந்தால் ஆரம்பத்தில் உயிர்கள் உணவை உண்கின்றன; கடைசியில் உணவே உயிர்களை உண்கிறது. என்று எச்சரிக்கிறது இந்த மந்திரம் எவ்வளவோ மிக ஆழ்ந்த சிந்தனையின் விளைவாக எழுந்தது. இந்தக் கருத்து நாம் உணவை உண்ண ஆரம்பிக்கிறோம். உணவு உடம்பை வளர்க்க என்ற நோக்கத்தை மறந்து உணவு சுவைக்காக என்று  உண்ண ஆரம்பிக்கும்போது, நாம் உணவை உண்கின்ற நிலைமை மாறி உணவு நம்மை உண்கின்ற நிலைமை உண்டாகிறது. அதாவது, உணவிற்கும் அதன் சுவைக்கும் நாம் அடிமையாகிவிடுகிறோம்; அளவை மறந்து உண்டு நோயுறுகிறோம். எனவே உணவை ஒரு மருந்துபோல் கையாள வேண்டும்.(இதன் ஒரு தொடர்ச்சிபோல் அமைந்துள்ள மேலும் நான்கு நியதிகள் 3.7-3:10.1 வரை கூறப்பட்டுள்ளன.)

அன்னம் என்ற சமஸ்கிருதச் சொல் அத் என்ற மூலச் சொல்லிலிருந்து பிறந்தது. உண்ணுதல் என்பது இதன் பொருள். உண்ணப்படுவதாலும் உண்பதாலும் அன்னம் என்று அழைக்கப்படுகிறது.

2. பிராண - உடம்பு, 2.3-2.4

தஸ்மாத்வா ஏதஸ்மாதன்ன ரஸமயாத் அன்யோஸந்தர ஆத்மா
ப்ராண மய: தேனைஷ பூர்ண: ஸ வா ஏஷ புருஷவித ஏவ தஸ்ய
புருஷவிததாம் அன்வயம் புருஷவித: தஸ்ய ப்ராண ஏவ சிர:
வ்யானோ தக்ஷிண: பக்ஷ: அபான உத்தர: பக்ஷ: ஆகாச ஆத்மா
ப்ருதிவீ புச்சம் ப்ரதிஷ்ட்டா ததப்யேஷ ச்லோகோ பவதி //2.3//

தஸ்மாத் - மேலும்; அன்ன ரஸ மயாத் - உணவினால்  ஆன - உடம்பை; ஏதஸ்மாத் வை -தவிர; அன்ய: - மற்றொன்று; அந்தர ஆத்மா- அக உடம்பு; ப்ராண மய: - பிராண சக்தியால் ஆனது; ஏஷ; - அது; தேன - பிராணனால்; பூர்ண;- நிறைக்கப்பட்டுள்ளது. ஸ; வை - அது; ஏஷ; - இந்த; புருஷவித: - உடம்பைப் போலவே; தஸ்ய - அவனது; புருஷவிததாம் - உடம்பைப் போன்றது; அனு - அதுபோல்; அயம் -இது; புருஷவித: - உடம்பைப்போல்; தஸ்ய - அதன்; சிர: - தலை: ப்ராண; ஏவ -பிராணனே; வ்யான; - வியானன்; தக்ஷிண; பக்ஷ - வலது பக்கம்; அபான; - அபானன்; உத்தர: பக்ஷ: - இடதுபக்கம்; ஆகாச; - வெளி; ஆத்மா- உடம்பு ப்ருதிவீ - பூமி ; புச்சம்- கீழ்ப்பகுதி; ப்ரதிஷ்ட்டா - ஆதாரம்; தத் அபி - அதுபற்றி: ஏஷ; - இந்த; ச்லோக; - சுலோகம்; பவதி - உள்ளது.

2.3. உணவினால் ஆன புறவுடம்பைத் தவிர மற்றோர்
உடம்பு உள்ளது. அது இந்த உடம்பின் உள்ளே உள்ளது;
பிராண சக்தியால் ஆனது. தூல உடம்பு இதனால் நிறைக்கப்பட்டுள்ளது
இது புறவுடம்பைப் போன்றது; அதுபோலவே தோற்றம்
உடையது. பிராணன் அதன் தலை, வியானன் வலது
பக்கம், அபானன் இடது பக்கம், வெளி இதன்
உடம்பாக உள்ளது. பூமி இதன் கீழ்ப்பகுதியான
ஆதாரமாக உள்ளது. இதுபற்றி கீழ்வரும் சுலோக
மும் உள்ளது.

ப்ராணம் தேவா அனுப்ராணந்தி மனுஷ்யா பசவச்ச யே
ப்ராணோ ஹி பூதானாமாயு: தஸ்மாத் ஸர்வாயுஷமுச்யதே
ஸர்வமேவ த ஆயுர்யந்தி யே ப்ராணம் ப்ரஹ்மோபாஸதே
ப்ராணோ ஹி பூதானாமாயு: தஸ்மாத் ஸர்வாயுஷமுச்யத
இதி தஸ்யைஷ ஏவ சாரீர ஆத்மா ய: பூர்வஸ்ய //2.4//

ப்ராணம் - பிராணனை: தேவா; - புலன்கள்; அனுப்ராணந்தி - தொடர்கின்றன; மனுஷ்யா; - மனிதர்கள்யே பசவ: ச- மிருகங்களும்; ப்ராண; ஹி - பிராணனே; பூதானாம் - உயிர்களின்; ஆயு: - வாழ்க்கை; தஸ்மாத் - அதனால்; ஸர்வ - ஆயுஷம் - அனைத்தின் வாழ்க்கை: உச்யதே - சொல்லப்படுகிறது; யே - யார்; ப்ராணம் - பிராணனை; ப்ரஹ்ம - தெய்வீகமாக; உபாஸதே - போற்றுகிறார்களோ; தே - அவர்கள்; ஸர்வம் -அனைவரும்; ஆயு: ஏவ -முழு ஆயுளை; யந்தி - அடைகிறார்கள்; தஸ்ய - அதனால், ய: - எது; பூர்வஸ்ய - முன்பு கூறப்பட்டதன்; சாரீர ஆத்மா- ஆதாரம்; ஏஷ ஏவ - இதுவே.

2.4 புலன்கள் பிராணனைத் தொடர்கின்றன.
மனிதர்கள் என்றல்ல, மிருகங்களின் விஷயத்திலும்
அப்படியே பிராணனே உயிர்களின் வாழ்க்கையாக
உள்ளது. (அதாவது உயிர்களின் ஆயுளை நிர்ணயிக்
கிறது.) அதனால் அது அனைத்தின் வாழ்க்கை என்று
சொல்லப்படுகிறது. யார் பிராணனை தெய்வீகமாகப்
போற்றுகிறார்களோ அவர்கள் முழு ஆயுளையும்
பெற்று வாழ்கிறார்கள். பிராணனே உயிர்களின்
வாழ்க்கையாக உள்ளது. அதனால் அது அன்னத்தின்
வாழ்க்கை என்று சொல்லப்படுகிறது. முன்பு
கூறப்பட்ட தூல உம்பின் ஆதாரமாக இருப்பது
இந்தப் பிராண- உடம்பே.

எங்கும் நிறைந்து பிரபஞ்சத்தை இயக்குகின்ற பிராண சக்தி மனிதனில் பத்து வகை சக்திகளாக செயல்பட்டு மனித வாழ்க்கையை நடத்துகிறது என்று  ஏற்கனவே (1:5.5) கண்டோம். அந்தப் பிராண சக்தி இங்கே ஒரு தனி வாழ்க்கை உடைய உடம்பாகச் சித்தரிக்கப்படுகிறது.

புலன்கள் பிராணனின் ஆற்றலாலேயே இயங்குகின்றன. சாப்பிடாததன் காரணமாகவோ, நோயுறுவதாலோ, பிராண சக்தி குறையும்போது புலன்கள் செயலிழப்பதை உணர்கிறோம். அதனால்தான் புலன்கள் பிராணனைத் தொடர்வதாக இங்கே கூறப்பட்டது.

பிராணனின் ஒழுங்கற்ற செயல்பாடே நோய்க்குக் காரணமாகிறது. எனவே தெய்வீகமாகப் போற்ற வேண்டும். என்றால் பிராணன் நோய்க்குக் காரணமாகாமல் ஒழுங்காகச் செயல்படுமாறு வாழ வேண்டும் என்பது பொருள். அத்தகையோர் நீண்ட ஆயுளுடன் வாழ்கிறார்கள்.

உண்ணும் உணவிலிருந்து பெறப்படுகின்ற ஆற்றலை ஆதாரமாகக் கொண்டே அந்தப் பிராண சக்தி மனிதனில் செயல்படுகிறது. அதனால்தான் இது உணவாலாகிய உடம்பின் ஆதாரம் என்று கூறப்பட்டது.

3. மன - உடம்பு: 3-4

தஸ்மாத்வா ஏதஸ்மாத் ப்ராணமயாத் அன்யோந்தர ஆத்மா
மனோமய: தேனைஷ பூர்ண: ஸ வா ஏக்ஷ புருஷவித ஏவ தஸ்ய
புருஷவிததாம் அன்வயம் புருஷவித: தஸ்ய யஜுரேவ சிர:
ரிக் தக்ஷிண: பக்ஷ ஸாமோத்தர; பக்ஷ; ஆதேச ஆத்மா
அதர்வாங்கிரஸ: புச்சம் ப்ரதிஷ்ட்டா ததப்யேஷ ச்லோகோ
பவதி//3//

தஸ்மாத் - மேலும்; ப்ராண மயாத் - பிராணனால் ஆன உடம்பை: ஏதஸ்மாத் வை - தவிர; அன்ய; மற்றொன்று; அந்தர ஆத்மா - அக உடம்பு; மனோ மய: - மனத்தால் ஆனது: ஏஷ: - அது: தேன - மனத்தால்; பூர்ண: - நிறைக்கப்பட்டுள்ளது; ஸ; வை -அது; ஏஷ: - இந்த: புருஷவித: - உடம்பைப்போலவே; தஸ்ய - அவனது; புருஷவிததாம் - உடம்பைப்போன்றது;  அனு - அதுபோல்; அயம் - இது; புருஷவித: - உடம்பைப்போல்: தஸ்ய - அதன்; சிர: -தலை: யஜு: ஏவ - யஜுர் வேதம்; ரிக் -ரிக் வேதம்; தக்ஷிண; பக்ஷ; - வலது பக்கம்; ஸாம: - சாம வேதம்; உத்தர: பக்ஷ: - இடது பக்கம்; ஆதேச: - இறையாணை; ஆத்மா - உடம்பு; அதர்வாங்கிரஸ: - அதர்வண வேதம்; புச்சம் - கீழ்ப்பகுதி; ப்ரதிஷ்ட்டா - ஆதாரம்; தத் அபி - அதுபற்றி; ஏஷ - இந்த; ச்லோக; - சுலோகம்; பவதி -உள்ளது.

3. பிராணனால் ஆன உடம்பைத் தவிர மற்றோர்
உடம்பும் உள்ளது. அது இந்த உடம்பின் உள்ளே
உள்ளது; மனத்தால் ஆனது. பிராண உடம்பு இத
னால் நிறைக்கப்பட்டுள்ளது. இது தூல - உடம்பைப்
போன்றது. அதுபோலவே தோற்றம் உடையது.
யஜுர் வேதம் இதன் தலை. ரிக் வேதம் வலது
பக்கம் சாம வேதம் இடது பக்கம் இறையாணை
இதன் உடம்பாக உள்ளது. அதர்வண வேதம் இதன்
கீழ்ப்பகுதியான ஆதாரமாக உள்ளது. இதுபற்றி
கீழ்வரும் சுலோகமும் உள்ளது.

மனம் பற்றி பேசப்படுகிறது. பிராண - உடம்பிற்கு அடுத்ததாக, அதைவிட நுண்ணியதாக அமைந்துள்ளது. இது. வேதங்கள் இதன் அங்கங்களாகச் சொல்லப்பட்டுள்ளது. வேதங்கள் அறிவின் சின்னம் வேதங்களை அங்கங்களாகச் சொன்னதன்மூலம் அறிவே மன - உடம்பின் ஆதாரம் என்பது உணர்த்தப்படுகிறது. அறிவு மட்டுமல்ல; உணர்ச்சிகள்.
கருத்துக்கள். அனுபவப் பதிவுகள் (சமஸ்காரங்கள்) அனைத்திற்கும் இருப்பிடம் மனமே.

யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி கதாசனேதி:
தஸ்யைஷ ஏவ சாரீர ஆத்மா ய பூர்வஸ்ய //4//

யத: - எங்கிருந்து; வாச; - வாக்கு: நிவர்த்தந்தே - திரும்புகிறதோ; அப்ராப்ய - அடையாமல்; மனஸா ஸஹ - மனத்துடன்; ஆனந்தம் - ஆனந்தம் ; ப்ரஹ்மண: - இறைவனின்; வித்வான் - அறிபவன்; ந பிபேதி - பயப்படுவதில்லை; கதாசன இதி - ஒருபோதும்; ய; பூர்வஸ்ய - முன்பு கூறப்பட்ட; தஸ்ய - அதன்; சாரீர ஆத்மா ஏவ - ஆதாரம்; ஏஷ - இது.

4. யாரை அடைய இயலாமல் மனமும் வாக்கும்
திரும்புகின்றனவோ அவரே இறைவன் அவரை
அனுபூதியில் உணர்கின்ற இறையானந்தத்தை
அறிபவன் ஒருபோதும் பயப்படுவதில்லை. முன்பு
கூறப்பட்ட பிராண உடம்பிற்கு ஆதாரமாக விளங்கு
வது இந்த மனம் ஆகும்.

அறிவுக்கு ஆதாரமாக இருப்பது மனம் மனத்தால் இறைவனை அடைய முடியாது என்கிறது இந்த மந்திரம். அதாவது அறிவினால் ஆண்டவனை அடைய இயலாது என்பது இங்கே சுட்டிக்காட்டப் படுகிறது.

4. புத்தி - உடம்பு: 5.1-5.2

தஸ்மாத்வா ஏதஸ்மான் மனோமயாத் அன்யோஸந்தர ஆத்மா
விஜ்ஞானமய தேனைஷ பூர்ண: ஸ வா ஏஷ புருஷவித ஏவ
தஸ்ய புருஷவிததாம் அன்வயம் புருஷவித: தஸ்ய ச்ரத்தைவ
சிர: ரிதம் தக்ஷிண; பக்ஷ; ஸத்யமுத்தர: பக்ஷ: யோக ஆத்மா
மஹ: புச்சம் ப்ரதிஷ்ட்டா ததப்யேஷ ச்லோகோ பவதி //5.1//

தஸ்மாத் - மேலும்; மனோ மயாத் - மனத்தால் ஆன உடம்பை: ஏதஸ்மாத் வை - தவிர; அன்ய: மற்றொன்று, அந்தர ஆத்மா - அக உடம்பு; விஜ்ஞானமய: - புத்தியால் ஆனது: ஏஷ: - அது: தேன -புத்தியால்; பூர்ண - நிறைக்கப்பட்டுள்ளது; ஸ: வை- அது: ஏஷ; -இந்த; புருஷவித: - உடம்பைப்போலவே; தஸ்ய - அவனது; புருஷவிததாம் - உடம்பைப்போன்றது; அனு - அதுபோல்: அயம் - இது: புருஷவித: - உடம்பைப்போல்; தஸ்ய - அதன்; சிர: - தலை: ச்ரத்தா ஏவ - சிரத்தை: ரிதம் - ரிதம்: தக்ஷிண; பக்ஷ - வலது பக்கம்: ஸத்யம் - சத்தியம்; உத்தர: பக்ஷ: - இடது பக்கம்: யோக: - யோகம்; ஆத்மா - உடம்பு: மஹ: - மஹத்: புச்சம் - கீழ்ப்பகுதி; ப்ரதிஷ்ட்டா- ஆதாரம்: தத் அபி - அதுபற்றி; ஏஷ: - இந்த: ச்லோக: - சுலோகம்; பவதி - உள்ளது.

5.1. மனத்தால் ஆன உடம்பைத் தவிர மற்றோர்
உடம்பும் உள்ளது. அது இந்த உடம்பின் உள்ளே
உள்ளது; புத்தியால் ஆனது. மன - உடம்பு இதனால்
நிறைக்கப்பட்டுள்ளது. இது புற உடம்பைப்
போன்றது: அதுபோலவே தோற்றம் உடையது.
சிரத்தை இதன் தலை. ரிதம் வலது பக்கம் சத்தியம்
இடது பக்கம் யோகம் இதன் உடம்பாக உள்ளது.
மஹத் இதன் கீழ்ப்பகுதியான ஆதாரமாக உள்ளது
இதுபற்றி கீழ்வரும் சுலோகமும் உள்ளது.

மன - உடம்பிற்கு உள்ளே, அதைவிட நுண்ணியதாக அமைந்துள்ளது. புத்தி - உடம்பு, எதிலும் நிலையாக நிற்காமல் அங்குமிங்கும் அலைபாய்ந்துகொண்டிருப்பது மனம்; எதையும் நிச்சயமாக முடிவு செய்வது புத்தி . (மனோ நாம ஸங்கல்ப விகல்பாத்மிக அந்த: கரண வ்ருத்தி புத்திர் நாம நிச்சயாத்மிக அந்த; கரண வ்ருத்தி: வேதாந்த சாரம், 66,65)
இது சாதாரண மனிதர்களில், முழுமையாகச் சொல்லப்படுவதில்லை. பிரார்த்தனை, காயத்ரீஜபம் போன்ற ஆன்மீக சாதனைகளால் இது விழிப்புற்று, மனத்தை வழிநடத்தும்போது ஒருவன்  செயற்கரியனவற்றைச் செய்ய வல்லவனாகிறான். அவன் மனத்தெளிவு பெறுகிறான். எதையும் ஆழ்ந்து சிந்தித்து உடனடியாக தெளிவு பெறும் வல்லமை பெறுகிறான். இத்தகையோரே மேதைகளாக, படைப்பாளிகளாக இருந்தார்கள். விழிப்படைந்த புத்தியுடன் செயல்படுபவனின் புலன்கள் தேரோட்டிற்கு அடங்கிய குதிரைகள்போல் வசப்படுகின்றன. அவன் தனது வாழ்க்கைப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்கிறான். (யஸ்து விஜ்ஞானவான் பவதி யுக்தேன மனஸா ஸதா தஸ்யேந்திரியாணி வச்யானி ஸதச்வா இவ ஸாரதே: ஸ து தத் பதமாப்னோதி கட உபநிஷதம், 1,3,6,8) ஆன்மீக வாழ்க்கையிலும் சரி, சாதாரண வாழ்க்கையிலும் சரி எதையும் சாதிக்க நினைப்பவர்கள் புத்தியைச் செயல்நிலைக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும்.

சிரத்தை, ரிதம், சத்தியம், யோகம் மஹத் ஆகியவை புத்தி - உடம்பின் அங்கங்களாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

சிரத்தை என்றால் செயல்பாட்டுடன் கூடிய நம்பிக்கை நம்புகிறேன் என்று சொல்லியபடி கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருப்பதல்ல; அந்த நம்பிக்கையைச் செயல்படுத்துவது அத்தகைய நம்பிக்கை வேண்டும்.

ரிதம் மற்றும் சத்தியம் பற்றி ஏற்கனவே (1:19) கண்டோம்.

யோகம், யோகம் என்றால் இணைதல், உடம்பில் பல அங்கங்கள் உள்ளன. அவை அனைத்தும் இணைந்து வேலை செய்தால் மட்டுமே உடம்பு சரிவர இயங்க முடியும் அதுபோல் சிரத்தை, ரிதம் போன்ற அனைத்தும் ஒருங்கிணைந்து, ஒரே நோக்கத்திற்காகச் செயல்பட்டால் மட்டுமே லட்சியத்தை அடைய முடியும். அத்தகைய லட்சியமும் லட்சிய நாட்டமும் தேவை. இது தனிநபர் வாழ்க்கையைப் பொறுத்தது. இனி, தனி -நபர் வாழ்க்கை சமுதாய வாழ்க்கையுடன், இயற்கையுடன் இறைவனுடன் இணைந்ததாக, இயைந்ததாக இருக்க வேண்டும். எனவே தான் புத்தி - உடம்பின் நடுப்பகுதியாக யோக வாழ்க்கை வைக்கப்பட்டுள்ளது.

புத்தி - உடம்பின் ஆதாரமாக இருப்பது மஹத்

 
மேலும் தைத்திரீய உபநிஷதம் »
temple news
வேதங்கள்: உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, பாரதத் திருநாடு ... மேலும்
 
temple news
சீக்ஷா (அதாவது சிக்ஷா) என்றால் கல்வி; வல்லீ என்றால் பகுதி. கல்விபற்றி சிறப்பாகக் கூறுவதால் இந்தப் பகுதி ... மேலும்
 
temple news
பிராணாயாமத்தால்தான். பிராணாயாமத்தால், உணரும் சக்தி மிக நுட்பமாகி, அதன்மூலம் கால் விரலிலோ அல்லது ... மேலும்
 
temple news
பிரணவ தியானம்: ஓமிதி ப்ரஹ்ம ஓமிதீதக்ம் ஸர்வம் ஓமித்யேததனுக்ருதிஹஸ்ம வா அப்யோச்ராவயேத்யாச்ராவயந்தி ... மேலும்
 
temple news
மஹத் என்றால் என்ன?நமது ஐந்து உடம்புகளைப்பற்றி இந்த மந்திரங்கள் கூறி வருகின்றன. ஒவ்வோர் உடம்பும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar