Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மனிதன் கடவுள் யார்? கடவுள் யார்?
முதல் பக்கம் » தைத்திரீய உபநிஷதம்
மஹத் என்றால் என்ன?
எழுத்தின் அளவு:
மஹத் என்றால் என்ன?

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2015
02:07

மஹத் என்றால் என்ன?

நமது ஐந்து உடம்புகளைப்பற்றி இந்த மந்திரங்கள் கூறி வருகின்றன. ஒவ்வோர் உடம்பும் அந்தந்த நிலையில் பிரபஞ்சத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது நாம் தனிநபர்களாகத் தோன்றினாலும் உண்மையில் பிரபஞ்சத்தின் அங்கமாக உள்ளோம். நமது தூல உடம்பு தூலப் பிரபஞ்சத்துடனும், மன- உடம்பு பிரபஞ்ச மனத்துடனும் இணைக்கப்பட்டுள்ளன. எல்லா மனங்களும் ஒரே தன்மை உடையவை ஒரே பெரிய மனத்தின் பகுதிகள். களிமண் கட்டி ஒன்றை அறிந்தவன், பிரபஞ்சத்திலுள்ள களிமண் அனைத்தையும் அறிந்தவன் ஆகிறான். தன் மனத்தை அறிந்து அடக்குபவன் ஒவ்வொரு மனத்தையும் பற்றிய ரகசியத்தை அறிகிறான்; ஒவ்வொரு மனத்தையும் அடக்க வல்லவன் ஆகிறான். என்கிறார் சுவாமி விவேகானந்தர், இவ்வாறு புத்தியும் அதன் நிலையில் பிரபஞ்ச புத்தியுடன், அதாவது ஒட்டுமொத்த புத்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பிரபஞ்ச புத்தியே மஹத். இந்த ஓட்டுமொத்த புத்தி தனி -நபர் புத்திக்கு ஆதாரமாக உள்ளது.

விஜ்ஞானம் யஜ்ஞம் தனுதே கர்மாணி தனுதேஸபி ச
விஜ்ஞானம் தேவாஸ் ஸர்வே ப்ரஹ்ம ஜ்யேஷ்ட்டமுபாஸதே
விஜ்ஞானம் ப்ரஹ்ம சேத்வேத தஸ்மாச்சேன்ன ப்ரமாத்யதி
சரீரே பாப்மனோ ஹித்வா ஸர்வான் காமான் ஸமச்னுத இதி
தஸ்யைஷ ஏவ சாரீர ஆத்மா ய: பூர்வஸ்ய //5.2.//

விஜ்ஞானம் - புத்தியே; யஜ்ஞம் - வேள்வியை; தனுதே - செய்கிறது; கர்மாணி அபி ச - செயல்களையும்; தனுதே - செய்கிறது; விஜ்ஞானம் - புத்தியை; ஸர்வே - எல்லா: தேவா: - தேவர்களும்; ஜ்யேஷ்ட்டம் - ஆதியான; ப்ரஹ்ம - இறைவனாக; உபாஸதே - போற்றுகின்றனர்; விஜ்ஞானம் - புத்தியை; ப்ரஹ்ம - தெய்வீகமாக: வேத சேத் - அறிந்தால், தஸ்மாத் - அதிலிருந்து; ந ப்ரமாத்யதி சேத் - விலகாமலிருந்தால், சரீரே - வாழும்போதே; பாப்மன; - பாவங்களிலிருந்து; ஹித்வா - விடுபட்டு; ஸர்வான் - எல்லா; காமான் - ஆசைகளும்; ஸமச்னுதே இதி - நிறைவேறுகின்றன; ய; பூர்வஸ்ய - முன்பு கூறப்பட்ட தஸ்ய - அதன்; சாரீர ஆத்மா ஏவ - ஆதாரம்; ஏஷ - இது.

5.2. புத்தியே வேள்வியைச் செய்கிறது; செயல்
களைச் செய்வதற்கும் அடிப்படையாக உள்ளது.
எல்லா தேவர்களும் புத்தியை ஆதி பரம்பொருளாகப்
போற்றுகின்றனர். புத்தி தெய்வீகமானது என்று
உணர்ந்து, அதற்கு ஏற்ப செயல்களில் ஈடுபட்டால்
வாழும்போதே பாவங்களிலிருந்து விடுபட்டு, எல்லா
ஆசைகளும் நிறைவேறப் பெறலாம். முன்பு கூறப்
பட்ட மன - உடம்பிற்கு ஆதாரமாக விளங்குவது
இந்த புத்தி ஆகும்.

வேள்விபற்றி ஏற்கனவே (1:7) கண்டோம். புத்தியே வேள்வியைச் செய்கிறது என்று இந்த மந்திரம் கூறுகிறது. இதன் பொருள் என்ன?

நாம் பெற்றதையெல்லாம் பிரபஞ்சமாகிய அக்கினியில் திருப்பிக் கொடுக்கும் வண்ணம் வாழ்வதே வேள்வி. ஆனால் அப்படி வாழ்கிறேன் என்று சொல்வதால் மட்டும் வாழ்க்கை ஒரு வேள்வி ஆகிவிடுவதில்லை. நமது சொல்லும் செயலும். ஏன், வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சமும் அதற்கேற்ப நிகழ வேண்டும். இதில் எதைச் சாதிக்க வேண்டுமானாலும் அதற்கு நம்மிடம் இருக்கின்ற ஒரே கருவி மனம் மட்டுமே நான் விரும்புவது போல் மனம் செயல்பட வேண்டுமானால் அது நமக்கு வசப்பட்டிருக்க வேண்டும்.

மனத்தை வசப்படுத்துவது எப்படி?

மனத்தைவிட உயர்ந்த ஒன்றால் மட்டுமே அதனை வசப்படுத்த முடியும். மனத்தைவிட உயர்ந்தது புத்தி. (மனஸஸ்து பரா: புத்தி: - கட உபநிஷதம் 1.3.10) எனவே புத்தியின் துணையுடன் மனத்தை வசப்படுத்த வேண்டும். ஆனால் புத்தி சாதாரணமாக எல்லோரிலும் செயல் நிலைக்கு வரவில்லை; விழிப்புறவில்லை. அதனை விழிப்புறச் செய்து அதன்மூலம் செயல்கள் செய்யப்படும் போது மட்டுமே செயல்கள் வேள்வியாகப் பரிணமிக்கும். அதாவது, புத்தி விழிப்புற்ற நிலையில் மட்டுமே சாதாரண செயல்களை வேள்வியாகச் செய்ய முடியும்; அவ்வாறு செய்யப்படுகின்ற செயல்களால் பாவ புண்ணியங்கள் சேர்வதில்லை. அத்தகைய ஒருவனிடம் ஆசைகள் ஏதாவது எழுமானால் அவையும் நிறைவேறுகின்றன.

5. ஆனந்த - உடம்பு

தஸ்மாத்வா ஏதஸ்மாத் விஜ்ஞானமயாத் அன்யோஸந்தர
ஆத்மாஸஸனந்தமய தேனைஷ பூர்ண ஸ வா ஏஷ புருஷவிதஏவ
தஸ்ய புருஷவிததாம் அன்வயம் புருஷவித; தஸ்ய ப்ரியமேவ
சிர: மோதோ தக்ஷிண: பக்ஷ: ப்ரமோத உத்தர: பக்ஷ:
ஆனந்த ஆத்மா ப்ரஹ்ம புச்சம் ப்ரதிஷ்ட்டா ததப்யேஷ
ச்லோகோ பவதி //5.3//

தஸ்மாத் -மேலும், விஜ்ஞான மயாத் - புத்தியால் ஆன உடம்பை; ஏதஸ்மாத் வை - தவிர: அன்ய: - மற்றொன்று; அந்தர ஆத்மா - அக உடம்பு; ஆனந்த மய: - ஆனந்தத்தால் ஆனது; ஏஷ: - அது: தேன - ஆனந்தத்தால்; பூர்ண; - நிறைக்கப்பட்டுள்ளது; ஸ: வை- அது: ஏஷ; - இந்த; புருஷவித: - உடம்பைப்போலவே; தஸ்ய - அவனது; புருஷவிததாம் - உடம்பைப்போன்றது; அனு - அதுபோல்; அயம் - இது; புருஷவித: - உடம்பைப்போல்; தஸ்ய - அதன்; சிர: - தலை: ப்ரியம் ஏவ - இன்பம்; மோத: - மகிழ்ச்சி: தக்ஷிண; பக்ஷ: - வலதுபக்கம்; ப்ரமோத: - சந்தோஷம்: உத்தர: பக்ஷ: - இடதுபக்கம்: ஆனந்த: - ஆனந்தம்: ஆத்மா - உடம்பு; ப்ரஹ்ம - ஆன்மா; புச்சம் - கீழ்ப்பகுதி; ப்ரதிஷ்ட்டா- ஆதாரம்; தத் அபி - அதுபற்றி, ஏஷ: - இந்த: ச்லோக: - சுலோகம்; பவதி - உள்ளது.

5.3.  புத்தியால் ஆன உடம்பைத் தவிர மற்றோர் உடம்பும் உள்ளது. அது இந்த உடம்பின் உள்ளே உள்ளது; ஆனந்தத்தால் ஆனது. புத்தி - உடம்பு இதனால் நிறைக்கப்பட்டுள்ளது. இது புற உடம்பைப் போன்றது; அதுபோலவே தோற்றம் உடையது. இன்பம் இதன் தலை, மகிழ்ச்சி வலது பக்கம், சந்தோஷம் இடது பக்கம், ஆனந்தம் இதன் உடம்பாக உள்ளது. ஆன்மா இதன் கீழ்ப்பகுதியான ஆதாரமாக உள்ளது. இதுபற்றி கீழ்வரும் சுலோகமும் உள்ளது.

ஐந்தாவதாக வருவது ஆனந்த - உடம்பு, இன்பம், மகிழ்ச்சி, சந்தோஷம் ஆகியவை இந்த உடம்பின் அங்கங்களாகக் கூறப்பட்டுள்ளன.

இன்பம் (ப்ரியம்): விருப்பத்திற்குரிய பொருளையோ நபரையோ பார்ப்பதால் பெறும் ஆனந்தம்.

மகிழ்ச்சி (மோத:): விருப்பத்திற்குரியதை அடைவதால் பெறும் ஆனந்தம்.

சந்தோஷம் (ப்ரமோத:): விருப்பத்திற்குரியதை அனுபவிப்பதுப் பெறும் உச்சக்கட்ட ஆனந்தம்.

ஆனந்தம் என்கின்ற நடுப்பகுதியைக் கொண்ட ஆனந்த - உடம்பு இத்தனை விதமான ஆனந்தங்களை உள்ளடக்கியதாக உள்ளது.

உடம்புகளின் தலைவன்: ஆன்மா:

அஸன்னேவ ஸ பவதி அஸத் ப்ரஹ்மேதி வேத சேத் அஸ்தி
ப்ரஹ்மேதி சேத் வேத ஸந்தமேனம் ததோ விதுரிதி தஸ்யைஷ:
ஏவ சாரீர ஆத்மா ய: பூர்வஸ்ய //6.1//

ப்ரஹ்ம -  ஆன்மா; அஸத் இதி - இல்லை என்று; வேத சேத் - அறிந்தால்; ஸ: - அவன்: அஸத் ஏவ - இல்லாதவனாக; பவதி - ஆகிறான்; அஸ்தி இதி - இருக்கிறது என்று; வேத சேத் - அறிந்தால்; தத; - பிறகு; ஏனம் - அவனை; ஸந்தம் இதி - சான்றோனாக; விது; - அறிகிறார்கள்; தஸ்ய - அதனால்; ய; - எது; பூர்வஸ்ய - முன்பு கூறப்பட்ட தன்; சாரீர ஆத்மா - ஆதாரம்; ஏஷ ஏவ - இதுவே.

6.1. ஆன்மா இல்லை என்று சாதிப்பவன் எதுவும் இல்லாதவனாக ஆகிறான். ஆன்மா இருக்கிறது என்று அறிபவன் எல்லாம் உள்ளவனாக ஆகிறான். இத்தகையவன் சான்றோனாகக் கருதப்படுகிறான். ஆன்மா அந்த ஆனந்தமயமான உடம்பின் ஆதாரமாக இருக்கிறது. இதுபற்றி கீழ்வரும் சுலோகமும் உள்ளது.

ஐந்து உடம்புகளின் தலைவனாக இருக்கிறது ஆன்மா, அதாவது, ஆன்மா ஐந்து உடம்புகளையும் கருவியாகக் கொண்டுள்ளது. இந்த ஆன்மாவே நாம். இந்த ஆன்மா மட்டுமே இறையம்சம் கொண்டது; உணர்வுப் பொருள். இது இருப்பதால்தான் ஐந்து உடம்புகளும் இயங்குகின்றன; உணர்வுடையவைபோல் தோன்றுகின்றன.

ஆன்மா இல்லை என்று கூறும்போது நம்மையே மறுத்தவர்கள் ஆகிறோம். அதனால்தான், அப்படி மறுப்பவன் எதுவும் இல்லாதவனாக ஆகிறான் என்று மந்திரம் கூறுகிறது. அதுபோல், உடம்பு மனம் போன்றவற்றை நாம் என்று கருதாமல் ஆன்மாவை நாம் என்று அறியும்போது நாம் அனைத்தையும் பெற்றவர்கள் ஆகிறோம்.

மனிதன் யார்? என்ற ஆராய்ச்சி இங்கே நிறைவுறுகிறது.

மனிதன்: ஐந்து உடம்புகள்: ஒரு கண்ணோட்டம்

மனிதன் என்று சொல்லும்போது அவனது ஆளுமையைக் (ணீஞுணூண்ணிணச்டூடிtதூ) குறிப்பிடுகிறோம். ஆளுமை என்பதை இந்த உபநிஷதம் ஐந்து அடுக்குகள் கொண்ட ஒரு தொகுதியாகக் காண்கிறது. அவை: அன்னமய ஆன்மா (தூல - உடம்பு), பிராணமய ஆன்மா (பிராண- உடம்பு), மனோமய ஆன்மா ( மன - உடம்பு). விஜ்ஞானமய ஆன்மா (புத்தி - உடம்பு), ஆனந்தமய ஆன்மா ( ஆனந்த - உடம்பு).

இந்த உடம்புகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு உணர்வு நிலையில் உள்ளவை; பரிணாமத்தின் பல்வேறு படிகளில் உள்ளவை. குழந்தைகளிலும் காட்டு மனிதர்களிலும் முதல் இரண்டு உடம்புகள் மட்டுமே முற்றிலுமாகச் செயல் நிலையில் உள்ளன. நாகரீகமும் அனுபவமும் வாய்ந்தவர்களிடம் மன உடம்பும் முழுமையாகச் செயல்படும். சற்று பக்குவம் பெற்றவர்களில் புத்தி - உடம்பு படிப்படியாக விழித்தெழத் தொடங்குகிறது. வாழ்க்கையின் ஏதோ சில கணங்களில் அவர்கள் அந்த உடம்பின் அனுபவத்தைப் பெறலாம். ஐந்தாவதான ஆனந்த - உடம்பு அனுபூதி பெற்ற மகான்களிடமே முழுமையாகச் செயல்படுகிறது.

ஆனால் உயர்வாழ்வு பற்றி சிந்திக்கின்ற, சிந்திக்கத் தொடங்கியுள்ள ஒவ்வொருவரிடமும் எல்லா உடம்புகளும் செயல்நிலையில் உள்ளன. கண நேரத்திற்காவது நாம் அந்த நிலையில் வாழ்கிறோம். சிலவேளைகளில் நாம் தூல - உடம்பு நிலையில் வாழ்கிறோம். அதாவது உண்பதிலும் உடம்பைப் பராமரிப்பதிலும் நமது நேரம் செலவழிகிறது. பிராண- உடம்பு என்பது பிராண சக்தியைக் குறிக்கிறது. எல்லா உடம்புகளும் செயல்படுவதற்கான சக்தியை அது அளிக்கிறது. சிலவேளைகளில் சிந்திக்கிறோம். கற்பனை செய்கிறோம். அப்போது மன - உடம்பு நிலையில் வாழ்கிறோம். சிலவேளைகளில் உள்ளதை உள்ளபடி காண்கிறோம். அதாவது உலகம் என்பதன் உண்மை, இறைவனை நாடவேண்டுவதன் அவசியம் போன்றவை நம்மில் எழுகின்றன. இது புத்தி - உடம்பின் செயல்பாடு. அனைத்தையும் மறந்து சிலநேரங்களில் நாம் ஆனந்தத்தில் திளைப்பதுண்டு. அது ஆனந்த- உடம்பின் செயல்நிலை. நமது மனப்பக்குவத்தின் உயர்வுக்கு ஏற்ப நாம் இந்த உணர்வு நிலைகளில் வாழ்வதும் அதிகரிக்கிறது.

இந்த ஒவ்வோர் உடம்பும் தூல - உடம்பைப் போலவே உள்ளது. ஒவ்வொன்றின் உள்ளே அடுத்த உடம்பு உள்ளது. தூல - உடம்பின் உள்ளே பிராண - உடம்பு தூல - உடம்பை நிறைத்தபடி உள்ளது. பிராண- உடம்பை நிறைத்தபடி மன - உடம்பு, மன - உடம்பை நிறைத்தபடி புத்தி - உடம்பு, புத்தி - உடம்பை நிறைத்தபடி ஆனந்த - உடம்பு, ஒன்றிற்குள் ஒன்று என்பதை அப்படியே புரிந்துகொள்ளக் கூடாது. ஒவ்வொன்றும் தனித்தனியானவை அல்ல, ஒன்றையொன்று சார்ந்தது, ஒன்றைவிட அடுத்தது நுண்ணியது என்பதே இதன் பொருள்.

இந்த ஐந்து உணர்வு நிலைகளையும் கடந்து ஆன்மா உள்ளது.

5. கடவுள் (6.2-8)

கடவுளை யார் அடைவார்கள்?

அறிந்தவற்றிலிருந்து அறியாத உண்மைகளுக்கு நம்மை அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறது இந்த உபநிஷதம், உடம்பு, மனம் என்று தொடங்கி படிப்படியாக ஆன்மா வரை கூறப்பட்டது. அடுத்ததாக கடவுளைப்பற்றி வருகிறது.

அதாதோஸனு ப்ரச்னா உதா வித்வானமும் லோகம் ப்ரேத்ய
கச்சன கச்சதீ (8) (1. இந்த எண்கள் வேத பாராயணத்திற்கு உரியவை, ஒரு சாதாரண எழுத்தை உச்சரிப்பதற்கான நேரம் ஒரு மாத்திரை. இந்த எண் குறிக்கப்பட்ட எழுத்தை அந்த எண்ணுக்கேற்ப நீட்டி உச்சரிக்க வேண்டும்.) ஆஹோ வித்வானமும் லோகம் ப்ரேத்ய கச்சித் ஸமச்னுதா (8) //6.2//

அத: - எனவே; அத - இப்போது; அனுப்ரச்னா: - கீழ்வரும் கேள்விகள்; அவித்வான் - பாமரன்; ப்ரேத்ய - விட்டபிறகு; அமும் லோகம் - கடவுளை; கச்சன - யாராவது; கச்சதி உத - அடைகிறானா; ஆஹோ - அல்லது; வித்வான் - அறிவாளி; கச்சித் - யாராவது; ஸமச்னுதே உ - போகிறானா;

6.2. இப்போது கீழ்வரும் கேள்விகள் எழுகின்றன;
உயிர்நீத்தபிறகு பாமரன் கடவுளை அடைகிறானா
அல்லது ஆன்மாவை உணர்ந்தவன் அடைகிறானா?

கடவுள் என்ற தலைப்பினுள் நுழைவதற்கு ஓர் அறிமுகமாக அமைகின்றன இந்தக் கேள்விகள்.

தவத்தால் தோன்றிய உலகம்: 6.3 - 7.1:

இறைவன் உலகைப் படைத்தார் எப்படி? தவத்தினால், இந்த உலகம் அற்புதமானது. மேன்மையானது. மேன்மையான, அற்புதமான ஒன்று வேண்டுமானால் அதற்கு வழி தவம் என்பதை இந்த மந்திரம் காட்டுகிறது.

ஸோஸகாமயத பஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி ஸ
தபோஸதப்யத ஸ தபஸ்தப்த்வா இதக்ம் ஸர்வமஸ்ருஜத
யதிதம் கிஞ்ச தத்ஸ்ருஷ்ட்வா ததேவானுப்ராவிசத்
ததனுப்ரவிச்ய ஸச்ச த்யச்சாபவத் நிருக்தம் சாநிருக்தம் ச
நிலயனம் சாநிலயனம் ச விஜ்ஞனாம் சாவிஜ்ஞனாம் ச
ஸத்யம் சான்ருதம் ச ஸத்யமபவத் யதிதம் கிஞ்ச தத்
ஸத்யமித்யாசக்ஷதே ததப்யேஷ ச்லோகோ பவதி //6.3//

ஸ: - இறைவன்; அகாமயத- விரும்பினார்; பஹு - பலவாக; ஸ்யாம் - ஆவேனாக; ப்ரஜாயேய - பிறப்பேனாக; இதி - என்று; ஸ: - அவர்; தப: - தவம்: அதப்யத - செய்தார்; ஸ: - அவர்; தப: - தவம்: தப்த்வா - செய்த பிறகு; இதம் - இவை; ஸர்வம் - அனைத்தும்; அஸ்ருஜத - படைத்தார்; யத் - எவை; இதம்; கிம் ச - இங்கே உண்டோ; தத் - அது; ஸ்ருஷ்ட்வா - படைத்த பிறகு; தத் ஏவ - அதனுள்ளே; அனுப்ராவிசத் - புகுந்தார்; தத் - அதனுள்; அனுப்ரவிச்ய - புகுந்தபிறகு; ஸத் ச - வெளிப்பட்டவையாக; த்யத் ச - வெளிப்படாதவையாக; அபவத் - ஆனார்; நிருக்தம் - விளக்கப்பட்டவை; அநிருக்தம் ச- விளக்கபட்டாதவை; நிலயனம் - இருப்பிடம் உடையவை; அநிலயனம் - இருப்பிடம் இல்லாதவை; விஜ்ஞானம் - அறிவு; அவிஜ்ஞனாம் - அறியாமை; ஸத்யம் - உண்மை; அன்ருதம் - உண்மையற்றவை, ஸத்யம் - உண்மை; யத் கிம் ச இதம் - இங்கே இருப்பவை அனைத்தும்; அபவத் - ஆனார்; தத் - எனவே; ஸத்யம் - அடிப்படை; இதி - என்று; ஆசக்ஷதே - அழைக்கப்பட்டார்; தத் அபி - அதுபற்றி; ஏஷ ; - இந்த; ச்லோக; - சுலோகம்; பவதி - உள்ளது.

6.3 நான் பிறப்பேனாக! நான் பலவாக ஆவே
னாக! என்று இறைவன் விரும்பினார். அதற்காக
தவத்தில் ஈடுபட்டார். தவம் செய்து இந்த
அனைத்தையும் படைத்தார். படைத்த பிறகு
படைப்பினுள் அவரே நிறைந்தார். வெளிப்
பட்டவை - வெளிப்படாதவை, விளக்கப்பட்டவை -
விளக்கப்படாதவை, இருப்பிடம் உடையவை -
இருப்பிடம் இல்லாதவை, அறிவு - அறியாமை,
உண்மை - உண்மையற்றவை என்று அனைத்துமாக
அவரே ஆனார். அதனால் அவர் அனைத்திற்கும்
அடிப்படை என்று அறியப்படுகிறார். அதுபற்றி
இந்தச் சுலோகமும் உள்ளது.

அஸத்வா இதமக்ர ஆஸீத் ததோ வை ஸதஜாயத
ததாத்மானக்க்ம் ஸ்வயமகுருத தஸ்மாத் தத் ஸுக்ருதமுச்யத
இதி //7.1//

அக்ரே - ஆரம்பத்தில்; இதம் - இந்த; அஸத் வை ஆஸீத் - இல்லாமைதான் இருந்தது: தத: - பிறகு; ஸத் வை - தோற்றம்; அஜாயத - உண்டாகியது; தத் - அது; ஸ்வயம் ஆத்மானம் - தன்னையே; அகுருத - தோற்றுவித்தது; தஸ்மாத் - அதனால்; தத் - அது; ஸுக்ருதம் இதி -தானே தோன்றியது என்று; உச்யதே - கூறப்படுகிறது.

7.1 ஆரம்பத்தில் எதுவும் இல்லை பிறகு
தோற்றம் உண்டாகியது. இறைவன் தம்மைத் தாமே
தோற்றுவித்தார். அதனால் தானே தோன்றியவர்.
என்று கூறப்படுகிறார்.

படைப்பு  என்பது சுழற்சியாக (ஞிதூஞிடூஞு) நடைபெறுவதாக வேதங்கள் கூறுகின்றன. அதாவது திடீரென எதுவும் தோன்றவில்லை; படைப்பும் ஒடுக்கமும் தொடர்ந்து மாறிமாறி வந்துகொண்டிருக்கின்றன. எவ்வாறு நம்வாழ்வில் விழிப்பு நிலையும் தூக்கமும் தொடர்ந்து மாறிமாறி வருகின்றனவோ அவ்வாறு படைப்பும் ஒடுக்கமும் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே ஆரம்பம் என்றால் ஒரு சுழற்சியின் ஆரம்பம் என்று பொருள். ஆரம்பம் என்பதற்கு யுகத்தின் ஆரம்பம் என்றுதான் பொருள். பிரபஞ்சம் முழுவதன் ஆரம்பம் என்று அதற்கு ஒருபோதும் பொருள் இல்லை. படைப்பிற்கு ஓர் ஆரம்பம் இருப்பது இயலாத காரியம். என்று இதனை விளக்கிறார் சுவாமி விவேகானந்தர்.

ஆரம்பத்தில் எதுவும் இல்லை என்றால் அனைத்தும் ஒடுக்க நிலையில் இருந்தன என்பது பொருள்.

கடவுள் ஆனந்தத்தின் இருப்பிடம்:

யத்வை தத் ஸுக்ருதம் ரஸோ வை ஸ: ரஸக்க்ம்
ஹ்யேவாயம் லப்த்வாஸஸனந்தீ பவதி கோ ஹ்யேவான்யாத் க:
ப்ராண்யாத் யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷ
ஹ்யேவானந்தயாதி //7.2//

யத் வை - எது உள்ளதோ; தத் - அது; ஸுக்ருதம் - தானே தோன்றியது; ஸ; - அவர்; ரஸ: வை - ஆனந்த மயமானவர்; அயம் - இந்த; ரஸ; ஹி - ஆனந்தத்தை; லப்த்வா ஏவ - பெற்றதாலேயே; ஆனந்தீ - ஆனந்தமாக; பவதி - இருக்கிறான்; அன்யாத் க: - வேறு யார்; க; - யார்; ப்ராண்யாத் - வாழ; யத் ஆனந்த; - எந்த ஆனந்தம்; ஏஷ; - இந்த; ஆகாசே - இதய வெளியில்; ந ஸ்யாத் - இல்லாவிட்டால்; ஏஷ ஹி ஏவ - அவரே; ஆனந்தயாதி - ஆனந்தம் தருகிறார்.

7.2. எது உள்ளதோ அது தானே தோன்றியது,
அந்த இறைவன் ஆனந்த மயமானவர். அவரிட
மிருந்து ஆனந்தத்தைப் பெற்றதாலேயே மனிதன்
ஆனந்தத்தை அனுபவிக்கிறான். இதய வெளியில்
அந்த ஆனந்தம் இல்லாவிட்டால் யார்தான் வாழ
முடியும்? அவரே ஆனந்தம் தருபவர்.

மலர்களை, மலையை, நதிகளை, கடலை, வானத்தை, நிலவை ரசிக்கிறோம். ஆனால் அந்த ரசனையில் பெறும் ஆனந்தம் எங்கிருந்து வருகிறது? மலர்களிலும் நதிகளிலும் இருந்தா? இல்லை என்கிறது. இந்த மந்திரம் ஆனந்தம் நம்முள்ளேயே உள்ளது. ரசிப்பதற்கான மனநிலையில் நாம் இருந்தால் மட்டுமே மலர்களும் மலைகளும் இன்பத்தைத் தரமுடியும். இல்லாவிடில் அவை நமக்கு இன்பத்தைத் தர முடியாதது மட்டுமின்றி, சிலவேளைகளில் ஆழ்ந்த துக்கத்தை எழுப்புவனவாகக் கூட அவை அமைவதை நாம் உணர்வ துண்டு. எனவே இன்பம் நம்முள் உள்ளது.

இன்பம் நம்முள் உள்ளது என்பதன் பொருள் என்ன? நம்முள் இருப்பது ஆன்மா. அது இறைவனின் அம்சம். இறைவன் ஆனந்தமயமானவர். எனவே ஆன்மாவும் ஆனந்தம் நிறைந்தது. அந்த ஆன்மா நம்முள் எங்கே இருக்கிறது? இதய வெளியில் (1:6:1) ஆனந்தத்தின் உறைவிடமான ஆன்மா அங்கே இருப்பதால்தான் நாம் இன்பம் பெற முடிகிறது.

கடவுள் பயமின்மையின் உறைவிடம்:

யதா ஹ்யேவைஷ ஏதஸ்மின் அத்ருச்யே ஸனாத்ம்யே
ஸநிருக்தே ஸநிலயனே ஸபயம் ப்ரதிஷ்ட்டாம் விந்ததே அத ஸோ
ஸபயம் கதோ பவதி யதா ஹ்யேவைஷ ஏதஸ்மின்னுதரமந்தரம்
குருதே அத தஸ்ய பயம் பவதி தத்வேவ பயம் விதுஷோ
ஸமன்வானஸ்ய ததப்யேஷ ச்லோகோ பவதி //7.3//

யதா - எப்போது; ஏஷ; - மனிதன்; அத்ருச்யே - காண முடியாத; அனாத்ம்யே - உடம்பு இல்லாத; அநிருக்தே - விளக்க முடியாத; அநிலயனே - ஆதாரமில்லாத; அபயம் - பயம் இல்லாத; ஏதஸ்மின் - இறைவனில்; ப்ரதிஷ்ட்டாம்- நிலைபேற்றை; விந்ததே - அடைகிறானோ; அத - பிறகு; ஸ: - அவன்; அபயம் - பயமற்ற நிலையை; கத: பவதி - அடைகிறான்; யதா - எப்போது; ஏஷ: - மனிதன்; ஏதஸ்மின் - அவரிலிருந்து; உத் அரம் - சிறிது; அந்தரம் குருதே - விலகினாலும்; அத - பிறகு; தஸ்ய - அவனுக்கு; பயம் - பயம்; பவதி - உண்டாகிறது; அமன்வானஸ்ய - சிந்திக்காத; விதுஷ: - பண்டிதனுக்கு: தத் உ ஏவ - அவரே; பயம் - பயம்.

7.3 இறைவன் காண முடியாதவர்; உடம்பு
இல்லாதவர், விளக்க முடியாதவர்; ஆதாரம்
இல்லாதவர்; பயம் அற்றவர். அந்த இறைவனில்
நிலைபெறும்போது மனிதன் பயமற்ற நிலையை
அடைகிறான். அவரிலிருந்து சிறிது விலகினாலும்
அவனுக்குப் பயன் உண்டாகிறது. சிந்திக்காத
பண்டிதனுக்கு இறைவனே பயத்தின் காரணமாகி
விடுகிறார்.

இறைவன் பயமின்மையின் உறைவிடமாக இருக்கிறார். அவரை அணுகுந்தோறும், அவரை வாழ்க்கையின் ஆதாரமாகக் கொள்ளுந்தோறும் பயம் நம்மைவிட்டு விலகுகிறது. அவரில் நிலைபெறும்போது முழுமையாக பயமற்றவர்கள் ஆகிறோம்.

சிந்திக்காத பண்டிதன் யார்? இந்த உலகை உலகமாகக் காண்பவன். இந்த உலகமாக இருப்பவர் இறைவன் என்பதை 2:6,3- இல் கண்டோம். அதை உணராமல், உலகை அதன் பல்வேறு தோற்றங்களுடன் காணும்போது இயல்பாகவே பயம் வருகிறது. இதனை ஸ்ரீராமகிருஷ்ணர் அழகாக விளக்குகிறார்.  புலித்தோலைப் போர்த்திக்கொண்டு ஒருவன் அனைவரையும் பயமுறுத்தினான். அவனது வெளித்தோற்றத்தை வைத்து புலி என்று நம்பியவர்கள் பயந்து ஓடினர். ஆனால் உண்மையை அறிந்தவன் மட்டும், டேய்! நீ யார் என்று எனக்குத் தெரியும். நீ நம்முடைய ஹரிதானே? என்று கேட்டான். அவ்வளவுதான். புலிவேஷக்காரன் சிரித்துக்கொண்டே மற்றவர்களைப் பயமுறுத்திச் சென்றான். அதுபோல் புறத்தோற்றமான உலகைக் காண்பவன் பயப்படுகிறான்.

இயற்கையின் தலைவர் கடவுள்:

பீஷாஸ்மாத் வாத: பவதே பீஷோதேதி ஸூர்ய:
பீஷாஸஸ்மாதக்னிச்சேந்த்ரச்ச ம்ருத்யுர் தாவதி பஞ்சம இதி //8//

அஸ்மாத் - அவரது; பீஷா - பயத்தால்; வாத: - காற்று; பவதே -வீசுகிறது; ஸூர்ய: - சூரியன்; உதேதி - உதிக்கிறான்; அக்னி; - நெருப்பு; இந்த்ர; - இந்திரன்; பஞ்சம - ஐந்தாவதான; ம்ருத்யு; - மரணம்; தாவதி - நடைபெறுகிறது.

8. இறைவன்மீது கொண்ட பயத்தால்தான் காற்று
வீசுகிறது; சூரியன் உதிக்கிறான்; நெருப்பு சுடுகிறது;
இந்திரன் வேலை செய்கிறான்; ஐந்தாவதான மரணம்
நடைபோடுகிறது.

இறைவன்மீது கொண்ட பயத்தினால்தான் இயற்கை செயல்படுவதாக இந்த மந்திரம் கூறுகிறது. அதாவது இயற்கையின் தலைவராக, இயற்கையை ஆள்பவராக உள்ளார் இறைவன்.

6. இன்பம் (9.1-9.12) இன்பத்தின் அளவீடு: 9-1-9.10

உபநிஷதங்கள் ஒவ்வொன்றும் இறைவாழ்விற்கான ஒரு தனிப் பாதையைக் காட்டுவதாக ஆரம்பத்தில் (பக்.15) கண்டோம். இது வித்யை எனப்படும். தைத்திரீய உபநிஷதம் இரண்டு வித்யைகளைக் கூறுகிறது. இங்கே வருவது ஆனந்தமய வித்யை.

சாதாரண மனித வாழ்க்கை இன்பத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது. பொதுவாக மனிதன் இறைவனை நாடாமல் இருப்பதற்கும் அதுவே காரணம். இறைவனை நாடினால் எங்கே இன்பங்களை இழக்க நேருமோ என்று அஞ்சுகிறான். அவன் அவனுக்கு உண்மை நிலைமையைப் புரியவைத்து, அவனை இறை வழியில் செலுத்துகிறது. இந்த வித்யை, இறைவனைப் பெறுவதால் வருகின்ற இன்பம் உலக இன்பங்களைவிட எத்தனையோ மடங்கு பெரியது என்று இந்த மந்திரங்கள் பட்டியல் இடுகின்றன. 11- ஆம் மந்திரம் இந்த வித்யையால் பெறப்படுகின்ற மிக மேலான இன்பமான இறையனுபூதியையும் கூறுகிறது.

ஸைஷாஸஸனந்தஸ்ய மீமாம்க்ம்ஸா பவதி யுவா ஸ்யாத்
ஸாது யுவாஸத்யாயக: ஆசிஷ்ட்டோ த்ருடிஷ்ட்டோ பலிஷ்ட்ட:
தஸ்யேயம் ப்ருதிவீ ஸர்வா வித்தஸ்ய பூர்ணா ஸ்யாத் ஸ
ஏகோ மானுஷ ஆனந்த: தே யே சதம் மானுஷா ஆனந்தா:
ஸ ஏகோ மனுஷ்ய கந்தர்வாணாமானந்த: ச்ரோத்ரியஸ்ய
சாகாமஹதஸ்ய //9.1//

ஸா ஏஷா - இந்த; ஆனந்தஸ்ய - இன்பத்தின்; மீமாம்ஸா பவதி - அளவு; யுவா - இளைஞனை; ஸ்யாத் - எடுத்துக்கொள்வோம்; ஸாது; - நல்லவன்; யுவா - வாலிபன்; அத்யாயக: - அறிவாளி; ஆசிஷ்ட்ட: - சுயக்கட்டுப்பாடு உடையவன்; த்ருடிஷ்ட்ட; - மன உறுதி உடையவன்; பலிஷ்ட்ட; - பலசாலி; தஸ்ய - அவனுக்கு; ஸர்வா - எல்லா; வித்தஸ்ய - செல்வங்களாலும்; பூர்ணா - நிறைந்த; அயம் - இந்த; ப்ருதிவீ - பூமி; ஸ்யாத் - உரியதானால்; ஸ; - அது; ஏக; -ஒரு; மானுஷ ஆனந்த; -மனித இன்பம்; தே யே - அத்தகைய: சதம் - நூறு; மானுஷா; ஆனந்தா: - மனித இன்பங்கள் ; ஸ: ஏக; - ஒரு; மனுஷ்ய கந்தர்வாணாம் ஆனந்த; - மனித- கந்தவர்வ இன்பம்; ச்ரோத்ரியஸ்ய -  அறிவாளி; அகாமஹதஸ்ய ச - ஆசைகள் அற்றவன்.

9.1. இன்பத்தின் அளவீட்டைப் பார்ப்போம். நல்ல,
வாலிப மிடுக்கு உடைய, அறிவாளியான, சுயக்
கட்டுப்பாடு உடைய, மன உறுதிகொண்ட, பலசாலி
யான இளைஞன் ஒருவனை அளவுகோலாகக் கொள்
வோம். அத்தகையதோர் இளைஞனுக்கு எல்லாவித
செல்வங்களாலும் நிறைந்த இந்த பூமி உரியதாவ
தாக வைத்துக்கொள்வோம். அந்த இளைஞன்
பெறும் இன்பம் ஒரு மனித இன்பம். அத்தகைய
நூறு மனித இன்பங்கள் சேர்ந்தால் அது ஒரு
மனித - கந்தர்வ இன்பம், ஆசைகள் அற்றவனும்
அறிவாளியுமான ஒருவன் இந்த இன்பத்தைப்
பெறுகிறான்.

தே யே சதம் மனுஷ்ய கந்தர்வாணாமானந்தா:
ஸ ஏகோ தேவ கந்தர்வாணாமானந்த: ச்ரோத்ரியஸ்ய
சாகாமஹதஸ்ய  //9.2//

9.2. நூறு மனித -கந்தர்வ இன்பங்கள் ஒரு தேவ
கந்தர்வ இன்பம். ஆசைகள் அற்றவனும் அறிவாளி
யுமான ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.
(1. 9.2-9.10 வரையுள்ள மந்திரங்களின் பதவுரை 9.1- ஆம் மந்திரத்தில் பதவுரை போன்றதே.)

தே யே சதம் தேவ கந்தர்வாணாமானந்தா: ஸ ஏக;
பித்ருணாம் சிர லோக லோகானாமானந்த; ச்ரோத்ரியஸ்ய
சாகாமஹதஸ்ய //9.3//

சிர லோக லோகானாம் - நீண்ட ஆயுளை உடைய; பித்ருணாம் - முன்னோர்களின்

9.3. நூறு தேவ - கந்தர்வ இன்பங்கள் நீண்ட
ஆயுளை உடைய முன்னோர்களின் ஒரு - இன்பத்
திற்குச் சமம்.ஆசைகள் அற்றவனும் அறிவாளி
யுமான ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.

தே யே சதம் பித்ருணாம் சிர லோக லோகானாமானந்தா:
ஸ ஏக ஆஜானஜானாம் தேவானாமானந்த; ச்ரோத்ரியஸ்ய
சாகாமஹதஸ்ய //9.4//

ஆஜானஜானாம் - தேவ லோகத்தில் பிறந்த.

9.4. நூறு பித்ரு - இன்பங்கள் தேவலோகத்தில்
பிறந்த தேவர்கள் அனுபவிக்கின்ற ஒரு தேவ-
இன்பம், ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான
ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.

தே யே சதம் ஆஜானஜானாம் தேவானாமானந்தா: ஸ ஏக:
கர்ம தேவானாம் தேவானாமானந்த: யே கர்மணா தேவானபி
யந்தி ச்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய //9.5//

யே - யார்; கர்மணா - செயல்களின்மூலம்; தேவான் - தேவர்களாக; அபி யந்தி - ஆனவர்கள்.

9.5. நூறு தேவ - இன்பங்கள் ஒரு கர்மதேவ-
இன்பம், செயல்களின்மூலம் தேவ நிலையை
அடைந்தவர்கள் கர்ம தேவர்கள், ஆசைகள்
அற்றவனும் அறிவாளியுமான ஒருவன் இந்த
இன்பத்தைப் பெறுகிறான்.

தேயே சதம் கர்மதேவானாம் தேவானாமானந்தா: ஸ ஏகோ
தேவானாமானந்த: ச்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய //9.6//

9.6 நூறு கர்மதேவ - இன்பங்கள் ஒரு முக்கியதேவ
இன்பம், ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான
ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.

தே யே சதம் தேவானாமானந்தா; ஸ ஏக இந்தரஸ்யானந்த;
ச்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய //9.7//

9.7. நூறு முக்கியதேவ இன்பங்கள் ஓர் இந்திர
இன்பம், ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான
ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.

தே யே சதமிந்தரஸ்யானந்தா: ஸ ஏதோ ப்ருஹஸ்பதே
ரானந்த; ச்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய //9.8//

9.8. நூறு இந்திர - இன்பங்கள் ஒரு பிருகஸ்பதி -
இன்பம், ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான
ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.

தேவர்களின் குரு பிருகஸ்பதி.

தே யே சதம் ப்ருஹஸ்பதேரானந்தா; ஸ ஏக; ப்ரஜாபதே
ரானந்த; ச்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய //9.9//

9.9 நூறு பிருகஸ்பதி- இன்பங்கள் ஒரு பிரஜாபதி இன்பம். ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான
ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.

தே யே சதம் ப்ரஜாபதேரானந்தா; ஸ ஏகோ ப்ரஹ்மண
ஆனந்த; ச்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய //9.10//

9.10. நூறு பிரஜாபதி - இன்பங்கள் ஒரு பிரம்ம
இன்பம் ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான
ஒருவன் இந்த இன்பத்தைப் பெறுகிறான்.

பிரம்மா என்பவர் படைக்கும் கடவுள்.

இந்த மந்திரங்களில் (9.1-9.10) கூறப்பட்ட தேவ, கந்தர்வ இன்பங்கள் எல்லாம், மனிதன் இறந்த பிறகு ஏதோ உலகங்களில் அனுபவிக்கப்படுகின்றன இன்பம் அல்ல, அவை இங்கேய அனுபவிக்கப்படுகின்ற இன்பங்கள் ஆகும்.

இன்பத்தைப்பற்றிய ஓர் அடிப்படை உண்மையை இங்கே நாம் காண்கிறோம். பொதுவாக, செல்வங்களைப் பெருக்குவதாலும் சூழ்நிலையை மாற்றுவதாலும் அதிக இன்பம் பெறலாம் என்று நினைக்கிறோம். குறிப்பிட்டுச் சொல்வதானால், புற உலகிலிருந்துதான் இன்பம் கிடைப்பதாக நினைக்கிறோம். ஆனால் நம்முள் இருந்துதான் ஆனந்தத்தைப் பெற முடியும் என்பதை ஏற்கனவே (2:7.2) கண்டோம். எனவே புறவுலகில் எத்தனை மாற்றங்கள் செய்தாலும் அதனால் இன்பத்தின் அளவு அதிகரிப்பதில்லை. ஒரு மாம்பழம் சாப்பிட்டால் ஓர் இன்பமும், பத்து மாம்பழங்கள் சாப்பிட்டால் பத்து மடங்கு இன்பமும் ஒருபோதும் கிடைப்பதில்லை. புறஉலகப் பொருட்களின் எண்ணிக்கையையோ அளவையோ அதிகரிப்பதால் இன்பத்தின் அளவு அதிகரிப்பதில்லை.

அக உணர்வில் மாற்றங்கள் செய்து, அதன்மூலம் ஆன்மாவை நெருங்கும்போது மட்டுமே இன்பத்தின் அளவு அதிகரிக்கிறது என்பதை இந்த மந்திரங்கள் ஆணித்தரமாகக் கூறுகின்றன. மனித இன்பம் முதலில் வைக்கப்பட்டது (9.1). அதன் பிறகு தொடரும் மந்திரங்களில் ஆனந்தத்தின் அளவீடு அதிகரிக்கப்பட்டது. ஆனால், அங்கெல்லாம், அவ்வாறு அதிகரித்த இன்பத்தை அனுபவிப்பவன். ஆசைகள் அற்றவனும் அறிவாளியுமான ஒருவன் என்று கூறப்பட்டது. செல்வம் அதிகம் உள்ளவனோ மற்ற சுகபோக வசதிகள் அதிகம் உள்ளவனோ அதிக இன்பத்தை அனுபவிக்கிறான் என்று சொல்லப்படவில்லை.

ஆசைகள் அற்றவனே இன்பத்தை அனுபவிக்கறான் என்பது மிக முக்கியமாக கருத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த அடிப்படை உண்மை எந்தக் காலத்தையும் விட இந்தக் காலத்திற்கு மிகவும் பொருந்துவதாகும். ஆசைகள் குறையக்குறைய இன்பம் பெருகும். ஆசைகள் குறைவது மட்டும் போதாது. ஆசைகளைக் குறைக்கின்ற அதே நேரத்தில் அக உணர்வில் மாற்றங்களைச் செய்து, ஆன்மாவை அணுகுவதன்மூலம் அதிக இன்பத்தைப் பெறுவது எப்படி என்பதை அவன் அறிந்திருக்க வேண்டும். அதனால்தான் அவன் அறிவாளியாக இருக்க வேண்டும். என்று மந்திரம் கூறியது. அதிக இன்பத்தைப் பெறுவதற்கு முதற்படி ஆசைகளைக் குறைப்பது; அக நாட்டம் இரண்டாம் படி.

இன்பத்தின் எல்லையும்
இறையனுபூதியின் நான்கு விளைவுகளும்: 9.11-9.12

படிப்படியாக அதிகரித்து வந்த இன்பம் இறையனுபூதியில் அதன் எல்லையைத் தொடுகிறது.

ஸ யச்சாயம் புருஷே யச்சாஸாவாதித்யே ஸ ஏக; ஸ ய
ஏவம் வித் அஸ்மாத் லோகாத் ப்ரேத்ய ஏதம் அன்னமய
மாத்மானம் உபஸ்ங்க்ராமதி ஏதம் ப்ராணமயமாத்மானம்
உபஸங்க்ராமதி ஏதம் மனோமயமாத்மானம் உபஸங்க்ராமதி
ஏதம் விஜ்ஞானமயமாத்மானம் உபஸங்க்ராமதி ஏதம் ஆனந்த
மயமாத்மானம் உபஸங்க்ராமதி ததப்யேஷ ச்லோகோ
பவதி //9.11//

அயம் - இந்த; புருஷே - மனிதனில்; ய; ச - யார்; ஸ; - அவர்; ஆதித்யே- சூரியனில்; ய; ச -யார்; அஸௌ - இருக்கிறாரோ; ஸ; - அவர்; ஏக: - ஒருவரே; ய; - யார்: ஏவம் - இவ்வாறு; வித் - அறிகிறானோ; ஸ; - அவன்; அஸ்மாத் - இந்த; லோகாத் - உலகிலிருந்து; ப்ரேத்ய - விடுபடும் போது; ஏதம் - இந்த; அன்னமயம் - உணவால் ஆகிய; ஆத்மானம் - உடம்பிலிருந்து; உபஸங்க்ராமதி - விடுபடுகிறான்; தத் அபி - அதுபற்றி; ஏஷ; - இந்த; ச்லோக; - சுலோகம்; பவதி - உள்ளது. (1. பலமுறை வருகின்ற சொற்களுக்கு ஒருமுறை மட்டுமே பொருள் தரப்பட்டுள்ளது.)

9.11 இந்த மனிதனில் இருப்பவரும் அந்தச்
சூரியனில் இருப்பவரும் ஒருவரே, இந்த
உண்மையை அறிபவன் உலக உணர்விலிருந்து
விடுபடும்போது அன்னமயம், பிராண மயம், மனோ
மயம், விஜ்ஞான மயம், ஆனந்த மயம் ஆகிய
உடம்புகளைக் கடந்து செல்கிறான். அதுபற்றி இந்தச்
சுலோகமும் உள்ளது.

இறையனுபூதியின் மிக உயர்ந்த நிலை இங்கே கூறப்படுகிறது.

சூரியன் இங்கே ஒரு சின்னமாகக் கொள்ளப்பட்டுள்ளது. மனிதன், இயற்கை என்று எல்லா இடங்களிலும் இருப்பவர் ஒருவரே என்பதை உணர்கின்ற ஒருவன் இன்பத்தின் எல்லையை அனுபவிக்கிறான். இறையனுபூதியின் முதல் விளைவு இது.

இத்தகைய காட்சியைப் பெறுபவன் உலக உணர்விலிருந்து விடுபடுகிறான். அதாவது உலகம் உலகமாகத் தெரியாமல் இறைமயமாக அவனுக்குக் காட்சியளிக்கிறது. அவள் மீண்டும் பிறப்பற்றவன் ஆகிறான். சாதாரண மனிதன் இறக்கும்போது தூல உடம்பு (அன்னமயம்) மட்டுமே விடுபடுகிறது; மற்ற நான்கு உடம்புகளும் பிறப்பு - இறப்பு பயணத்தைத் தொடர்கின்றன. இறையனுபூதி பெற்றவனின் விஷயத்தில் அனைத்து உடம்புகளும் விடுபடுகின்றன. அதாவது அவன் மீண்டும் பிறப்பதில்லை. இறைவனில் நிலைபெறுகிறான். இறையனுபூதியின் இரண்டாவது விளைவு இது.

யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதச்சனேதி
ஏதக்ம் ஹ வா வ ந தபதி கிமஹக்ம் ஸாது நாகரவம் கிமஹம்
பாபமகரவமிதி ஸ ய ஏவம் வித்வானேதே ஆத்மானக்க்ம்
ஸ்ப்ருணுதே உபே ஹ்யேவைஷ ஏதே ஆத்மானக்க்ம்
ஸ்ப்ருணுதே ய ஏவம் வேத இத்யுபநிஷத் //9.12//

யத: - எங்கிருந்து; வாச; - வாக்கு; நிவர்த்தந்தே - திரும்புகிறதோ; அப்ராப்ய - அடையாமல்; மனஸா ஸஹ - மனத்துடன்; ஆனந்தம் - ஆனந்தம்; ப்ரஹ்மண: - இறைவனின்; வித்வான் - அறிபவன்; ந பிபேதி - பயப்படுவதில்லை; குதச்சன இதி - எதற்கும்; ஹ - உண்மையில்; ஏதம் - இத்தகைய; வாவ - நிச்சயமாக; ந தபதி - அலைக்கழிப்பதில்லை; கிம் - ஏன்; அஹம் - நான்; ஸாது - நன்மை; ந அகரவம் - செய்யவில்லை; பாபம் - தீமை; அகரவம் - செய்தேன்; இதி - என்று; ய; - யார்; ஏவம் -இவ்வாறு; வித்வான் - அறிகிறானோ; ஸ; - அவன்; ஏதே- இவை; ஆத்மானம் - தன்னை; ஸ்ப்ருணுதே - திடப்படுத்துகின்றன; உபே - இரண்டும்; ஹி ஏஷ: ஏவ - இவ்வாறு; ய; - யார்; ஏவம் - இவ்வாறு; வேத - அறிகிறானோ, ஆத்மானம் - தன்னை; ஸ்ப்ருணுதே - திடப்படுத்துகின்றன; இதி - இவ்வாறு; உபநிஷத் - உபநிஷதம்.

9.12. யாரை அடைய இயலாமல் மனமும் வாக்கும்
திரும்புகின்றனவோ அவரே இறைவன் அவரை
அனுபூதியில் உணர்கின்ற இறையானந்தத்தை
அறிபவன் எதற்கும் பயப்படுவதில்லை. நான் ஏன்
நன்மை செய்யவில்லை? நான் ஏன் தீமை செய்
தேன்?போன்ற எண்ணங்கள் அவனை அலைக்
கழிப்பதில்லை. இத்தகைய எண்ணங்கள் அவனை
திடப்படுத்தவே செய்கின்றன. இவ்வாறு அறிபவனது
ஆன்ம ஞானம் உறுதிப்படுகிறது.

இவ்வாறு உபநிஷதம் நிறைவுறுகிறது.

இறையனுபூதியின் மூன்றாம் விளைவு பயமின்மை.

நான்காவதாக, நன்மை - தீமை, இன்பம் - துன்பம் போன்ற இருமைக் கருத்துக்களிலிருந்து விடுபட்ட நிலை. எங்கும் இறையுணர்வையே காண்கின்ற ஒருவன் எதையும் பிரித்துக் காண்பதில்லை. நன்மை, தீமை அனைத்தும் அவனுக்கு எல்லாம் இறைமயமாகத் தெரிகிறது.

ஓம் ஸஹ நாவவது...

இதி தைத்திரீயோபநிஷதி ஆனந்தவல்லி ஸமாப்தா

3. கடவுள்
(பிருகு வல்லீ)

வருண முனிவர் தன் மகனான பிருகுவிற்குப் போதிக்கின்ற பகுதி ஆதலால் இந்தப் பகுதி பிருகு வல்லி என்று பெயர் பெற்றது.

வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொண்டால் நாம் வாழ முடியும். என்பதை முதற்பகுதியில் கண்டோம். இரண்டாம் பகுதி நம்மைப்பற்றி ஆராய்ந்தது. வாழ்க்கை, அதாவது உலகம், நாம் அதாவது மனிதன் ஆகிய இரண்டிற்கும் தலைவர் கடவுள், கடவுள்பற்றி ஏற்கனவே இரண்டாம் பகுதியில் (2:6-2:8) ஆரம்பித்த ஆராய்ச்சி இந்தப் பகுதியில் தொடர்கிறது. கடவுளில் நிலைபெற்ற பிறகும் உலகை மறுக்காதிருப்பது பற்றிய விளக்கத்துடன் உபநிஷதம் நிறைவுபெறுகிறது.

உணவுபற்றிய நான்கு முக்கியமான நியதிகளையும் இங்கே நாம் காண்கிறோம்.

பிரார்த்தனை:

ஓம் ஸஹ நாவவது ஸஹ நௌ புனக்து ஸஹ வீர்யம்
கரவாவஹை தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

ஆச்சாரியர், சீடர் ஆகிய நம் இருவரையும் இறைவன்
காப்பாராக! அறிவின் ஆற்றலை நாம் இருவரும்
அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாராக! நாம் இருவரும்
ஈடுபாடுமிக்க ஆற்றலுடன் உழைப்போமாக! கற்றது
நமக்குப் பயனுள்ளதாக விளங்கட்டும்! எதற்காகவும்
நாம் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாக!

1. கடவுள் யார்? (1.1-6.1)

வருண முனிவரின் மகன் பிருகு, அவன் தன் தந்தையை அணுகி, கடவுள் என்பவர் யார்? என்று கேட்டான். அதற்கு வருணர் ஒருசில விளக்கங்களைக் கூறி தவம் செய்து உண்மையை அறியுமாறு கூறினார். தவம் செய்து படிப்படியாக உண்மையை உணர்ந்தான் பிருகு, இவ்வாறு படிப்படியாக உண்மையை அறிகின்ற முறையே தைத்திரீய உபநிஷதம் கூறும் இரண்டாவது வித்யையான பார்கவீ வாருணீ வித்யை.

அனைத்திற்கும் ஆதாரம் 1.1-1.2

ப்ருகுர்வை வாருணி; வருணம் பிதரமுபஸஸார அதீஹி
பகவோ ப்ரஹ்மேதி தஸ்மா ஏதத் ப்ரோவாச அன்னம் ப்ராணம்
சக்ஷு: ச்ச்ரோத்ரம் மனோ வாசமிதி //1.1//

ப்ருகு; வை - பிருகு; வாருணி ; - வருணனின் மகன்; பிதரம் - தந்தையாகிய; வருணம் - வருணனை;  உபஸஸார- சென்று; பகவ: - தெய்வத்திற்கு நிகரானவரே - அதீஹி- உபதேசியுங்கள்; ப்ரஹ்ம - கடவுள்; இதி - என்று; தஸ்மை - அவனிடம் ; ஏதத் - இதனை; ப்ரோவாச - கூறினார்; அன்னம் - உணவு; ப்ராணம் - பிராணன்; சக்ஷு - கண்; ச்ரோத்ரம் - காது; மன; - மனம்; வாசம் - பேச்சு; இதி - என்று.

1.1  வருண முனிவரின் மகன் பிருகு, அவன்
தந்தையை அணுகி தெய்வத்திற்கு நிகரானவரே.
கடவுள் என்பவர் யார் என்பதை எனக்கு
உபதேசியுங்கள் என்று கேட்டான். அதற்கு அவர்,
உணவு, பிராணன், கண், காது, மனம், பேச்சு
ஆகியவையே கடவுள் என்று கூறினார்.

இந்தப் பதிலிலிருந்து, பிருகுவால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. உணவு, பிராணன் போன்றவை எப்படி கடவுளாக முடியும்? என்று குழம்பி நின்றான். அவன், அவனது நிலைமையைக் கண்ட வருண முனிவர், அவன் புரிந்துகொள்வதற்காக, தாம் கூறியதைச் சற்று தெளிவுபடுத்தினார்.

தக்ம் ஹோவாச யதோ வா இமானி பூதானி ஜாயந்தே யேன
ஜாதானி ஜீவந்தி யத் ப்ரயந்த்யபி ஸம்விசந்தி தத்
விஜிஜ்ஞாஸஸ்வ தத் ப்ரஹ்மேதி ஸ தபோஸதப்யத ஸ
தபஸ்தப்த்வா //1.2//

தம் - அவனிடம்; உவாச ஹ- சொன்னார்; யத: வை- எங்கிருந்து; இமானி - இந்த; பூதானி - உயிரினங்கள்: ஜாயந்தே - பிறக்கின்றனவோ, ஜாதானி - பிறந்தவை; யேன - எதனால்; ஜீவந்தி - வாழ்கின்றனவோ; ப்ரயந்தி - மரணத்திற்கும் பிறகு; யத் - எதில்; அபிஸம்விசந்தி - ஒடுங்குகின்றனவோ; தத் - அதனை; விஜிஜ்ஞாஸஸ்வ- அறிந்துகொள்; தத் - அது; ப்ரஹ்ம - கடவுள்; இதி - என்று; ஸ: - அவன்; தப; -தவம்;அதப்யத - செய்தான்; ஸ: - அவன்; தப: - தவம்; தப்த்வா - செய்தபிறகு.

1.2. வருண முனிவர் உபதேசத்தைத் தொடர்ந்தார்;
யாரிடமிருந்து இந்த உயிரினங்கள் அனைத்தும்
பிறக்கின்றனவோ, பிறந்தவை யாரால் வாழ்
கின்றனவோ, மரணத்திற்குப் பிறகு யாரிடம் ஒடுங்கு
கின்றனவோ அவரே கடவுள், அவரை அறிய முயற்சி
செய். இந்த உபதேசத்தைக் கேட்டதும் பிருகு
தவத்தில் ஈடுபட்டான். தவம் நிறைவுற்ற பிறகு.....

 
மேலும் தைத்திரீய உபநிஷதம் »
temple news
வேதங்கள்: உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, பாரதத் திருநாடு ... மேலும்
 
temple news
சீக்ஷா (அதாவது சிக்ஷா) என்றால் கல்வி; வல்லீ என்றால் பகுதி. கல்விபற்றி சிறப்பாகக் கூறுவதால் இந்தப் பகுதி ... மேலும்
 
temple news
பிராணாயாமத்தால்தான். பிராணாயாமத்தால், உணரும் சக்தி மிக நுட்பமாகி, அதன்மூலம் கால் விரலிலோ அல்லது ... மேலும்
 
temple news
பிரணவ தியானம்: ஓமிதி ப்ரஹ்ம ஓமிதீதக்ம் ஸர்வம் ஓமித்யேததனுக்ருதிஹஸ்ம வா அப்யோச்ராவயேத்யாச்ராவயந்தி ... மேலும்
 
temple news

மனிதன் ஜூலை 20,2015

(ஆனந்த வல்லி)வாழ்க்கையைத் தன் போக்கில் போக விடாமல், உணர்ந்து, அனுபவித்து வாழுமாறு இந்த உபநிஷதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar