Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » காலி கம்பளிவாலா சாது!
காலி கம்பளிவாலா சாது
எழுத்தின் அளவு:
காலி கம்பளிவாலா சாது

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2016
03:06

பாரத நாட்டு சனாதன தர்மம் ஒரு குறிப்பிட்ட மனிதரால் உருவாக்கப்பட்டதல்ல. ஆன்மீகமே இந்தியாவின் பொக்கிஷம். இந்தியாவின் வரலாறு அரசியல்வாதிகளின் வரலாறு அல்ல. அது ரிஷிகளின் வரலாறு. அரசியல், சமூகம், கலை, பொருளாதாரம், மருத்துவம், கணிதம், விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் அதில் நம் பாரத நாட்டு முனிவர்களின் பங்கு கணக்கிலடங்காதது. காஷாய மணிந்த சன்யாசிகளும் சாதுக்களும் தங்களுடைய வெறும் தரிசனத்தின் மூலமாகவே அமைதியையும், சுயநலமற்ற சேவையையும் அளித்துள்ளனர். அவர்களின் முழு நோக்கமும் மக்களுக்கு அன்பையும், ஒளியையும் வழங்குவதே. அதனாலேயே அவர்கள் ஓரிடத்தில் நிலைத்து இருக்காமல் அங்குமிங்கும் அலைந்து திரிந்து கொண்டே இருப்பார்கள். இந்த உண்மையான சாதுக்கள் யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்ப்பது இல்லை.

நாம் எல்லோரும் ஹரித்வார் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். நிறைய பேர் ஹரித்வார் சென்று தரிசித்து வந்திருக்கிறோம். இமயமலையிலிருந்து கங்கை நதி கீழே விழுகையில் முதன் முதலாக பாயும் சமநிலப்பகுதி ஹரித்வார்தான். ஹரித்வாரிலிருந்து 180 மைல் தொலைவில் மலை மேலே பத்ரிநாத் உள்ளது. ரிஷிகேஷ் மற்றும் கேதார்நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி என எத்தனையோ ஸ்தலங்கள் இமயமலையின் பனியும், காடுகளும் நிறைந்த இடங்களில் உள்ளன.

அக்காலங்களில் ஹரித்வாரில் தொடங்கி இந்த ஸ்தலங்களைத் தரிசிக்க கங்கைக் கரையோரமாக கால்நடையாகத் தான் மலை மேல் ஏற வேண்டும். இப்போதைய சவுகர்யங்களை மனதில் கொண்டு அக்கால கடினமான யாத்திரையைப் புரிந்து கொள்வது கடினம். அவ்விடங்களில் அடர்ந்த காட்டையும் வன விலங்குகளையும் தவிர வேறு ஒன்றும் காண முடியாது. மிகச் சிறிய ஒற்றையடிப் பாதை. இப்பக்கம் பார்த்தால் உயர்ந்த இமயமலை. கீழே ஆயிரம் அடிகளுக்குக் கீழே பாய்ந்து ஓடும் கங்கை, கரணம் தப்பினால் மரணம். சாப்பிடுவதற்கோ, தங்குவதற்கோ எந்த வசதியும் இல்லாத காலம் அது. ஆனாலும் பல்லாயிரக்கணக்கான சாதுக்களும் சன்யாசிகளும் கங்கைக் கரை க்ஷேத்ரங்களை சென்று தரிசித்து அங்கேயே தங்கி தவமும் இயற்றி வந்திருக்கிறார்கள்.  அப்படிப்பட்ட ஒரு சாதுவின் கதை தான் இந்த காலி கம்பளிவாலா சாது:

உத்ரப்பிரதேசத்தில் மீரட் நகரில் ஒரு பணக்கார முஸ்லீம் தம்பதிகள் வசித்து வந்தனர். அவர்களின் அருமைப் பெண் குழந்தை நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்தது. எந்த மருத்துவத்திற்கும் அந்நோய் குணமாகாமல் அக்குழந்தை இறந்து போனது. பெற்றோர்களின் துயரத்திற்கு அளவில்லை. அச்சமயத்தில் ஒரு சாது அவ்வழியே சென்று கொண்டிருந்தவர் அவர்களின் அழுகைக் குரல் கேட்டு மனமிரங்கினார். அவர்கள் வீட்டில் நுழைந்து அப்படுக்கையின் அருகில் வந்து, குழந்தாய், எழுந்திரு என்று அன்புடன் கூறினார். என்ன ஆச்சர்யம்! இறந்துபோன அப்பெண் பிள்ளை பிழைத்துக்கொண்டது. வந்த வேலை முடிந்து விட்டது என்பது போல் சாது தன் வழியே சென்று விட்டார். பெற்றோரின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லாமல் போனது. தங்கள் குழந்தை பிழைத்த மகிழ்ச்சியில் தங்களை மறந்த அத்தம்பதியினர். பின்னர் அந்த அதிசய மகாத்மாவை தேடிக்கொண்டு கிளம்பினர். எங்கு தேடியும் அவர்களால் அந்த சாதுவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களின் ஒரே அடையாளம் அவர் கருப்புக் கம்பளியால் தன்னைப் போர்த்திக் கொண்டிருந்தார் என்பது ஒன்றுதான்.

ஆனாலும் அந்த நல்ல முஸ்லீம் குடும்பம் அந்த மகானை மறக்கவில்லை. மூன்று ஆண்டுகள் இடைவிடாமல் தேடி அவரை ரிஷிகேசில் கண்டு பிடித்தனர். தெய்வத்தைக் கண்டதை போல் அவர் கால்களில் விழுந்து வணங்கினர். கண்ணீர் மல்க அவரை வினவினர், ஐயா! எங்கள் மகளுக்கு உயிர்ப்பிச்சை அளித்த நீங்கள் இப்படி சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்டீர்களே! இது நியாயமா? உங்களை எங்கெல்லாம் தேடித் தேடி அலைவது? என்று ஆற்றாது அழுதனர். இதில் என் பங்கு என்ன இருக்கிறது? இறைவன் ஒருவனே அனைத்தையும் செய்பவன். நான் வெறும் கருவி மட்டுமே. உங்கள் மகள் என் மூலம் பிழைக்க வேண்டும் என்று இறைவன் விரும்பினான். அவ்வளவே. என்னைச் செல்ல விடுங்கள் என்று அவர்களின் வற்புறுத்தலில் இருந்து ஒதுங்க நினைத்த அந்த மகாத்மாவை அவர்கள் விடவில்லை. ஸ்வாமி! எங்கள் அனைத்துச் செல்வத்தையும் தங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறோம். தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், என்று மன்றாடினர்.

சாது சிரித்தார். நானோ ஊர் ஊராகத் திரியும் ஒரு சன்னியாசி. எனக்கு எதற்குப் பணமும் சொத்தும்? என்றார். ஆனாலும் அவர்கள் விடவில்லை. ஐயா உங்களுக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. வேறு யாருக்காவது உபயோகப்படும் எந்த வேலையினாலும் சரி சொல்லுங்கள், என்று மன்றாடினர். காலி கம்பளி வாலா மனமிரங்கி, ஆம். இதுவும் கடவுளின் இச்சையே. ஆகட்டும். அப்படியே செய்யுங்கள், என்று சொல்லி ஹரித்துவாரிலிருந்து மலைமேலே ஒவ்வொரு ஐந்து மைலுக்கும் ஒரு யாத்ரிகர்கள் தங்கும் சத்திரத்தைக் கட்டும்படி அந்த முஸ்லீம் தம்பதிகளைப் பணித்தார். நினைத்துப் பாருங்கள் - எந்த வசதியும் இல்லாத அந்தக் காலத்தில் வெறும் காடுகள் அடர்ந்த அந்த மலை மேல் ஐந்து ஐந்து மைல்களுக்கு ஒரு சத்திரம் கட்டுவது என்றால் சாமான்யமா? ஆனால் நன்றி மிகுந்த அச்செல்வந்தர் அதற்கு ஒப்புக்கொண்டு கட்டத் தொடங்கினார். சாதுக்களுக்கும் சன்னியாசிகளுக்கும் இலவச இருப்பிடமும் உணவும் அங்கு அளிக்கப்பட்டது. இல்லறத்தார் செல்லும் போது அவர்கள் அங்கு தங்கி சமையல் செய்யவும், படுத்து ஓய்வெடுத்துக் கொள்ளவும் வசதி செய்து கொடுக்கப்பட்டது.

ஒருவர் ரிஷிகேஷில் இருந்து யாத்திரையைத் தொடங்கி ஒரு நாளில் நடந்து சென்று களைத்துப் போகும்போது அவருக்கு உடனே ஒரு காலி கம்பளி வாலா சத்திரம் கண்ணில் படும். அங்கு சென்று குளித்து சாப்பிட்டு ஓய்வெடுத்து மீண்டும் கிளம்பினால் அடுத்த முறை களைத்துப் போகும்போது மீண்டும் அடுத்த ஐந்து மைலில் இன்னுமொரு காலி கம்பளி வாலா சத்திரத்தில் சென்று உணவருந்தி உறங்க முடியும். இவ்வாறாக யாத்திரிகர்களின் வசதியை உணர்ந்து அன்று தொடங்கப்பட்ட காலி கம்பளி வாலா சத்திரத்தினால் நிறையபேர் பயனுறுவதைக் கண்ட செல்வந்தர்கள் பலரும் உதவ முன்வந்ததன் காரணமாக காலி கம்பளி வாலா டிரஸ்ட் ஏற்படுத்தப்பட்டு இன்று வட இந்தியாவின் கிட்டத்தட்ட எல்லா க்ஷேத்திரங்களிலும் காலி கம்பளி வாலா சத்திரங்களைக் காண முடிகிறது.

யார் இந்தத் காலி கம்பளிவாலா சாது? இவர் 1831-ஆம் ஆண்டு பிறந்தவர். திருமணத்திற்குப்பின் தன் முப்பத்தி இரண்டாம் வயதில் உலகியல் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு சன்னியாசியானார். இவருடைய சன்யாச திருநாமம் விஷுதானந்தா என்பது. ஆனாலும் இவருடைய பெயர் கருப்புக் கம்பளி அணிந்த சாது என்றே சரித்திரத்தில் நிலைத்து விட்டது. இன்று காலி கம்பளி வாலா சத்திரத்தில் தினமும் ஆயிரக்கணக்கான சாதுக்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. பாபா காலி கம்பளி வாலா ட்ரஸ்டின் மூலம் மிகப் பெரிய ஆசரமங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. வருடம் முழுவதும் ஆயிரக்கணக்கான யாத்ரிகர்களும், சாதுக்களும், சன்னியாசிகளும் இங்கு வந்து தங்கி உணவுண்டு இளைப்பாறிச் செல்கிறார்கள். காலி கம்பளி வாலா டிரஸ்ட் மூலம் யாத்ரீகர்களுக்கான மருத்துவமனைகளும், லைப்ரரிகளும், தண்ணீர் பந்தல்களும், ஸம்ஸ்க்ருதகல்லுரிகளும், ஆன்மீக வழிகாட்டி நிலையங்களும், பசுத் தொழுவங்களும் கூட நடத்தப்படுகின்றன.

காலி கம்பளி வாலா பாபா இன்னும் ஒரு மிக முக்கியமான சேவையையும் செய்துள்ளார். அது என்னவென்றால் லக்ஷ்மண் ஜூலாவை சீர்செய்ததுதான். முன்பு இந்த பிரிட்ஜ் வெறும் கயிற்றால் நெய்யப்பட்டிருந்தது. இந்த இடத்தில் மிகவும் உக்ரமாக பிரவகித்து ஓடும் கங்கையின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் யாத்ரீகர்கள் சிரமப்படுபவர். காலி கம்பளி வாலா, சூரஜ்மால் என்ற செல்வந்தர் சேவை செய்ய முன்வந்தபோது, இந்த லக்ஷ்மண் ஊஞ்சலை தற்போது உள்ளது போல் சீர் செய்யும்படி பணித்து மக்களுக்கு மிகுந்த தொண்டாற்றி உள்ளார். காலி கம்பளி வாலா பாபா என்று அன்புடன் அழைக்கப்படும் சுவாமி விஷுதானந்த மகாராஜின் சீடரான சுவாமி ஆத்ம பிரகாஷானந்த, ஸ்வர்காஷ்ரம் என்ற ஆசிரமத்தை ஆரம்பித்து அதில் நிரந்தரமாகத் தங்கியுள்ள சாதுக்களுக்காக ஓர் அன்ன சத்திரத்தை நடத்தி வருகிறார். இந்த ஸ்வர்காச்ரம் ரிஷிகேஷ் சுவாமி சிவானந்த ஆஸ்மரத்தின் அருகில் உள்ளது. பரமார்த் நிகேதன், கீதா பவன், ச்வர்காஷ்ரம், வேத நிகேதன், வானப்ரச்த ஆசிரமம் போன்ற பல புகழ் பெற்ற ஆசிரமங்கள் காலி கம்பளி வாலா ஆசிரமத்தைச் சுற்றி உள்ளன. இவை எல்லாம் ராம் ஜூலாவிற்கு எதிர்ப்புறம் கங்கைக் கரையில் அமைந்துள்ளன. ராம் ஜூலாவைச் சுற்றியுள்ள இந்த கங்கைக் கரை மிகவும் அமைதியான இடமாகவும் பஜனையும் ஜபமும் செய்வதற்கு ஏற்ற இடமாகவும் உள்ளது.

காலி கம்பளி வாலா அமைப்பின் முதன்மை அலுவலகம் ரிஷிகேசில் உள்ளது. துணை அலுவலகங்கள் கார்வால் பகுதியில் உள்ள அனைத்துத் தலங்களிலும் மற்றும் இமயமலையின் மிக அதிக உயரமான இடங்களிலும் கைலாஷ் வரை உள்ளன. இந்த ஆச்ரமங்களின் முக்கிய உத்தேசம் யாத்திரிகர்களுக்கு வசதி சௌகர்யங்களை ஏற்படுத்தித் தருவதே. நம் பாரத நாட்டின் அழியா பொக்கிஷங்களான இமயமலைச் சாரலும், அதனைக் கைவிடாமல் அணைத்துத் தொடர்ந்து ஓடி வரும் கங்கையும் பார்க்கப் பார்க்கத் தெவிட்டுவதில்லை. இங்குள்ள இமயமலைச் சாரலில் உள்ள குகைகளில் இன்னமும் நிறைய சாதுக்கள் நமக்காக தவம் இயற்றி வருகிறார்கள். அவர்களையெல்லாம் நமஸ்கரித்து ஆன்மிக உணர்வைப் பெறுவோம்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar