Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் ... 12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் பகுதி-7 | திருத்தொண்டர் புராணம் 12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் ...
முதல் பக்கம் » பனிரெண்டாம் திருமறை
12ம் திருமுறையில் பாடிய பாடல்கள் பகுதி-6 | திருத்தொண்டர் புராணம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 செப்
2011
02:09

2461. வானாகி நிலனாகி அனலு மாகி
மாருதமாய் இருசுடராய் நீரு மாகி
ஊனாகி உயிராகி உணர்வு மாகி
உலகங்கள் அனைத்துமாய் உலகுக் கப்பால்
ஆனாத வடிவாகி நின்றார் செய்ய
அடிபரவி அன்றிரவு துயிலும் போது
கானாடு கங்காளர் மிழலை மூதூர்
காதலித்தார் கனவில்அணைந் தருளிச் செய்வார்.

தெளிவுரை : வானமும் மண்ணும் தீயும் காற்றும் சூரிய சந்திரர் என இரு சுடர்களும் நீரும் ஆகியும் ஊனும் உயிரும் உணர்வுமாகியும், உலகங்கள் எல்லாம் ஆகியும், உலகங்களுக்கு அப்பாற்பட்ட கேடில்லாத வடிவாகி நின்ற இறைவரின் சிவந்த திருவடிகளைத் துதித்து உறங்கும்போது, சுடுகாட்டில் ஆடும் கங்காளராய் (எலும்பு அணிந்தவராய்) திருவீழி மிழலை என்ற முதிய ஊரினை விரும்பி வீற்றிருக்கும் இறைவர் அவர்களின் கனவில் தோன்றி அருள் செய்வாராய்.

2462. உலகியல்பு நிகழ்ச்சியால் அணைந்த தீய
உறுபசிநோய் உமையடையா தெனினும் உம்பால்
நிலவுசிவ நெறிசார்ந்தோர் தம்மை வாட்டம்
நீங்குதற்கு நித்தம் ஒரோர் காசு நீடும்
இலகுமணிப் பீடத்துக் குணக்கும் மேற்கும்
யாமளித்தோம் உமக்கிந்தக் காலந் தீர்ந்தால்
அலகில்புக ழீர்தவிர்வ தாகும் என்றே
அருள்புரிந்தார் திருவீழி மிழலை ஐயர்.

தெளிவுரை : இந்த உலக இயல்பு நிகழ்வினால் வந்து அணைந்த தீமை பொருந்திய பசி நோய் உங்களை அடையாது என்றாலும், உங்களைச் சேர்ந்த அடியார்களின் வருத்தம் நீங்குவதற்காக, நித்தமும் ஒவ்வொரு பொன் காசினைக் கிழக்கிலும் மேற்கிலும் விளங்கும் அழகிய பலிபீடங்களில் உங்களுக்கு அளிப்போம். அளவற்ற புகழை உடையவர்களே ! இந்தப் பஞ்ச காலம் நீங்கினால் அது நிறுத்தப்படும் எனத் திருவீழி மிழலை இறைவர் உரைத் தருளினார்.

2463. தம்பிரான் அருள் புரிந்து கனவின் நீங்கச்
சண்பையார் இளவேறு தாமு ணர்ந்து
நம்பிரான் அருள்இந்த வண்ணம் என்றே
நாவினிசை யரசரொடுங் கூட நண்ணி
வம்புலா மலரிதழி வீழி நாதர்
மணிக்கோயில் வலஞ்செய்யப் புகுந்த வேலை
அம்பிகா பதியருளால் பிள்ளை யார்தாம்
அபிமுகத்துப் பீடிகைமேற் காசு கண்டார்.

தெளிவுரை : தம் இறைவர் இங்ஙனம் கனவில் உரைத்து நீங்கிடவும், சீகாழியில் தோன்றி இளைய ஏறு போன்ற சம்பந்தர் துயில் உணர்ந்து நம் இறைவரின் அருள் இருந்த வண்ணம் இவ்வாறு ! என்று வியப்புக் கொண்டவராய், (அவ்வாறே இறைவர் அருளப் பெற்றுத் துயிலுணர்ந்த) நாவுக்கரசரோடு கூடச் சேர்ந்து, மணம் கமழும் கொன்றை மலர் சூடிய திருவீழி நாதரின் மணிக் கோயிலை வலமாக வரப் புகுந்த போது, உமையம்மையாரை ஒரு பாகத்தில் கொண்ட இறைவரின் திருவருளால், பிள்ளையார் தாம் கிழக்குத் திசையில் உள்ள பலிபீடத்தின் மீது பொன்காசைக் கண்டார்.

2464. காதலொடுந் தொழுதெடுத்துக் கொண்டு நின்று
கைகுவித்துப் பெருமகிழ்ச்சி கலந்து பொங்க
நாதர்விரும் படியார்கள் நாளும் நாளும்
நல்விருந்தா யுண்பதற்கு வருக வென்று
தீதில்பறை நிகழ்வித்துச் சென்ற தொண்டர்
திருவமுது கறிநெய்பால் தயிரென் றின்ன
ஏதமுறா தினி துண்ண ஊட்டி அங்கண்
இருதிறத்துப் பெருந்தவரும் இருந்த நாளில்.

தெளிவுரை : பக்தியுடனே வணங்கி அந்தப் பொற் காசை எடுத்துக் கொண்டு, நின்று கைகளைக் குவித்து வணங்கிப், பெரு மகிழ்ச்சி உள் நிறைந்து பொங்க, இறைவர் விரும்பும் அடியார்கள் ஒவ்வொரு நாளும் நல்ல விருந்தாய் உணவு உண்பதற்கு வருக ! என்று தீமை இல்லாத பறையறைந்து, அங்ஙனம் வந்த தொண்டர் திருவமுதும் கறிகளும் நெய்யும் பாலும் தயிரும் என்று உள்ள இவற்றைக் குறைவில்லாதபடி இனிதாய் உண்ணும்படி உண்பித்து அத்திருநகரில் இருபக்கத்துப் பெருந்துறவியரும் தங்கியிருந்தனர். அந்நாட்களில்,

2465. நாவினுக்கு வேந்தர்திரு மடத்திற் தொண்டர்
நாட்கூறு திருவமுது செய்யக் கண்டு
சேவுகைத்தார் அருள்பெற்ற பிள்ளை யார்தந்
திருமடத்தில் அமு தாக்கு வாரை நோக்கித்
தீவினைக்கு நீர்என்றும் அடைவி லாதீர்
திருவமுது காலத்தால் ஆக்கி இங்கு
மேவுமிக்க அடியவருக் களியா வண்ணம்
விளைந்தவா றென்கொலோ விளம்பும் என்றார்.

தெளிவுரை : திருநாவுக்கரசரின் மடத்தில் தொண்டர் உச்சிப் போதிற்கு முன் திருவமுது செய்து முடிப்பதைப் பார்த்துக் காளையையுடைய சிவபெருமானின் திருவருள் பெற்ற சம்பந்தர் தமது மடத்தில் உணவு சமைக்கும் பரிவாரங்களை நோக்கி, தீய தொழிலுக்கு நீங்கள் எப்போதும் இடம் அளிக்க மாட்டீர் அல்லீரோ ! ஆனால் காலத்தால் உணவு சமைத்து இங்கு வரும் அடியவர்களுக்கு அளிக்காதபடி விளைந்த காரணம்தான் என்ன? சொல்லுங்கள் என வினவினார்.

2466. திருமறையோர் தலைவர்தாம் அருளிச் செய்யத்
திருமடத்தில் அமுதமைப்போர் செப்பு வார்கள்
ஒருபரிசும் அறிந்திலோம் இதனை உம்மை
உடையவர்பாற் பெறும்படிக்கா சொன்றுங் கொண்டு
கருதியஎல் லாங்கொள்ள வேண்டிச் சென்றால்
காசுதனை வாசிபட வேண்டும் என்பார்
பெருமுனிவர் வாகீசர் பெற்ற காசு
பேணியே கொள்வரிது பிற்பா டென்றார்..

தெளிவுரை : அந்தணர்களின் தலைவரான பிள்ளையார் மேற்கண்ட வண்ணம் உரைசெய்ய, மடத்தில் உணவைச் சமைப்பவர் சொல்வார், இதை நாங்கள் ஒருவித்திலும் அறியோம் ! உம் இறைவரிடம் பெறுகின்ற படிக்காசு ஒன்றைக் கொண்டு அமுது ஆக்க வேண்டிய பொருள்களை யெல்லாம் வாங்குதற்குச் சென்றால், கடை வீதியில் உள்ள வணிகர்கள் காசுக்கு வட்டம் தரவேண்டும் என்று உரைக்கின்றனர். பெரு முனிவரான திருநாவுக்கரசர் பெற்ற காசினை அங்ஙனம் கூறாது, மிக்க விருப்புடனே ஏற்றுக் கொள்கின்றனர். இதுவே கால தாமதம் ஆவதற்குக் காரணம், என்று உரைத்தனர்.

2467. திருஞான சம்பந்தர் அதனைக் கேட்டுச்
சிந்திப்பார் சிவபெருமான் நமக்குத் தந்த
ஒருகாசு வாசிபட மற்றக் காசு
நன்றாகி வாசிபடா தொழிவான் அந்தப்
பெருவாய்மைத் திருநாவுக் கரசர் தொண்டால்
பெறுங்காசாம் ஆதலினாற் பெரியோன் தன்னை
வருநாள்கள் தருங்காசு வாசி தீரப்
பாடுவன்என் றெண்ணிஅது மனத்துட் கொண்டார்.

தெளிவுரை : திருஞான சம்பந்தர் உணவு சமைப்பவர் கூறிய அதனைக் கேட்டு, எண்ணுபவராய், இறைவர் நமக்குத் தந்த ஒரு காசு வாசிபட, மற்ற ஒருகாசு வாசிபடாததற்குக் காரணம், அந்தப் பெருவாய்மையுடைய திருநாவுக்கரசர் கைத் தொண்டினால் பெறும் காசாகும். ஆதலால் இனி வரும் நாளில் தரும் காசு வாசிபடாது தீர்வதற்காக இறைவரைப் பாடுவேன் ! எனத் துணிந்து அதைத் தம் மனத்துள் கொண்டார்.

2468. மற்றைநாள் தம்பிரான் கோயில் புக்கு
வாசிதீர்த் தருளும்எனப் பதிகம் பாடிப்
பெற்றபடி நற்காசு கொண்டு மாந்தர்
பெயர்ந்துபோய் ஆவணவீ தியினிற் காட்ட
நற்றவத்தீர் இக்காசு சால நன்று
வேண்டுவன நாந்தருவோம் என்று நல்க
அற்றைநாள் தொடங்கிநாட் கூறு தன்னில்
அடியவரை அமுதுசெய்வித் தார்வ மிக்கார்.

தெளிவுரை : அடுத்த நாளில் ஞானசம்பந்தர் தம் இறைவரின் கோயிலுள் புகுந்து வாசிதீர்த்தருளும் என்று வேண்டிப் பதிகம் பாடினார். அதன் பயனாகப் பிள்ளையார் பெற்ற நல்ல படிக்காசினைக் கைக்கொண்டு பரிவாக மக்கள் கடைத் தெருவுக்குச் சென்று வணிகர்களிடம் காட்டினர். அதைக் கண்ட வணிகர், நல்ல தவத்தைச் செய்தவர்களே ! இந்தக் காசு மிக நல்லது ! நீங்கள் வேண்டுவனவற்றை நாங்கள் தருவோம் ! எனச் சொல்லி அங்ஙனமே வேண்டும் எல்லாப் பண்டங்களையும் தர, அந்த நாள் தொடங்கி நாள் பகுதியான முற்பகலில் அடியவர்களுக்கு உணவு உண்ணும்படி செய்வித்து அன்பு பெருக்கினர்.

2469. அருவிலையிற் பெறுங்காசும் அவையே யாகி
அமுதுசெய்யத் தொண்டர்அள விறந்து பொங்கி
வருமவர்கள் எல்லார்க்கும் வந்தா ருக்கும்
மகிழ்ந்துண்ண இன்னடிசில் மாளா தாகத்
திருமுடிமேல் திங்களொடு கங்கை சூடும்
சிவபெருமான் அருள்செய்யச் சிறப்பின் மிக்க
பெருமைதரு சண்பைநகர் வேந்தர் நாவுக்
கரசர்இவர் பெருஞ்சோற்றுப் பிறங்கல் ஈந்தார்.

தெளிவுரை : அரிய விலைக்கும் பெறவதற்குரிய காசும் அவைகளேயாகி, அமுது செய்வதற்குரிய தொண்டர்கள் அளவில்லாது மேலும் மேலும் அதிகரித்து வருபவர்கள் எல்லாருக்கும் முன்பு வந்தவர்களுக்கும் மகிழ்ச்சியுடன் உணவு உண்ண இனிய அடிசில் குறைவின்றி இருக்குமாறு, சடையில் திங்களும் பாம்பும் அணியும் இறைவர் திருவருள் செய்ய, சிறப்பால் மிக்க சீகாழி நகரின் அரசரான பிள்ளையாரும் வாக்கின் அரசரான திருநாவுக்கசரசரும் என்ற இருவரும் பெருஞ்சோற்று மலைகளை அமுதமாய்த் தந்தருளினார்.

2470. அவனிமிசை மழைபொழிய உணவு மல்கி
அனைத்துயிருந் துயர்நீங்கி அருளி னாலே
புவனமெலாம் பொலிவெய்துங் காலம் எய்தப்
புரிசடையார் கழல்பலநாள் போற்றி வைகித்
தவமுனிவர் சொல்வேந்த ரோடுங் கூடத்
தம்பிரான் அருள்பெற்றுத் தலத்தின் மீது
சிவன்மகிழுந் தானங்கள் வணங்கப் போவார்
தென்திருவாஞ் சியமூதூர் சென்று சேர்ந்தார்.

தெளிவுரை : இவ்வுலகத்தில் மழை பெய்ததால் உணவுப் பொருள்கள் பெருகி, அதனால் எல்லா வூர்களும் துன்பம் நீங்கித் திருவருளினால் உலகம் முற்றும் செழிப்பு அடையும் நற்காலம் வரவே, பிள்ளையார், சுருண்ட சடையையுடைய இறைவரின் திருவடிகளைப் பல நாட்கள் போற்றி அங்கு எழுந்தருளியபின்பு, தவமுனிவரான நாவுக்கரசரோடும் கூடத் தம் இறைவர் திருவருள் பெற்றுக் கொண்டு, உலகத்தில் சிவபெருமான் எழுந்தருளியுள்ள இடங்கள் பலவற்றையும் வணங்கச் செல்பவராய், அழகிய திருவாஞ்சியம் என்ற பழைய பதியைப் போயடைந்தனர்.

2471. நீடுதிரு வாஞ்சியத்தில் அமர்ந்த முக்கண்
நீலமிடற் றருமணியை வணங்கிப் போற்றிப்
பாடொலிநீர்த் தலையாலங் காடு மாடு
பரமர்பெரு வேளூரும் பணிந்து பாடி
நாடுபுகழ்த் தனிச்சாத்தங் குடியில் நண்ணி
நம்பர்திருக் கரவீரம் நயந்து பாடித்
தேடுமறைக் கரியார்தம் விளமர் போற்றித்
திருவாரூர் தொழநினைந்து சென்று புக்கார்.

தெளிவுரை : நிலை பெறும் திருவாஞ்சியத்தில் விரும்பி எழுந்தருளிய மூன்று கண்களும் திருநீலகண்டமும் உடைய அரிய மணியான இறைவரை வணங்கித் துதித்துப் பாடு பெறும் ஒலியுடைய நீர் சூழ்ந்த திருத்தலையாலங்காடும் அதன் பக்கத்தில் உள்ள இறைவரின் திருப்பெருவேளூரும் பாடி, நாடும் புகழையுடைய ஒப்பில்லாத திருச்சாத்தங்குடியில் போய் அடைந்து இறைவரின் திருக்கர வீரத்தையும் விரும்பிப் பாடியருளித் தேடுகின்ற மறைகளுக்கும் எட்டாத இறைவரின் திருவிளமரையும் துதித்துப் பின் திருவாரூரைத் தொழுவதற்கு நினைந்து சென்று அவர் நகரத்தினுள் புகுந்தார்.

2472. நம்பர்மகிழ் திருவாரூர் வணங்கிப் போந்து
நலங்கொள்திருக் காறாயில் நண்ணி யேத்தி
பைம்புனல்மென் பணைத்தேவூர் அணைந்து போற்றி
பரமர்திரு நெல்லிக்காப் பணிந்து பாடி
உம்பர்பிரான் கைச்சினமும் பரவித் தெங்கூர்
ஓங்குபுகழ்த் திருக்கொள்ளிக் காடும் போற்றிச்
செம்பொன்மதில் கோட்டூரும் வணங்கி யேத்தித்
திருமலிவெண் டுறைதொழுவான் சென்று சேர்ந்தார்.

தெளிவுரை : சிவபெருமான் மகிழும் திருவாரூரை வணங்கிப் போய், நன்மை கொண்ட திருக்காறாயிலைச் சேர்ந்து வணங்கி, பசுமையான நீரையுடைய மென்மையான வயல்கள் சூழ்ந்த திருத்தேவூரினை அணைந்து போற்றி இறைவரின் திருநெல்லிக் காவினைப் பணிந்து திருப்பதிகத்தைப் பாடிச் சென்று, தேவ தேவரின் கைச்சின்னத்தையும் துதித்துச் சென்று மிக்க புகழையுடைய திருக் கொள்ளிக் காடும் போற்றி, மேலே சென்று, செம்பொன்னால் அழகு படுத்தப்பட்ட மதில்களையுடைய திருக்கோட்டூரினை வணங்கிச் சென்று, திருமலிகின்ற திருவெண்துறையினைத் தொழும் பொருட்டுப் போய்ச் சேர்ந்தார்.

2473. மற்றவ்வூர் தொழுதேத்தி மகிழ்ந்து பாடி
மாலயனுக் கரியபிரான் மருவுந் தானம்
பற்பலவும் சென்று பணிந் தேத்திப் பாடிப்
பரவுதிருத் தொண்டர்குழாம் பாங்கின் எய்தக்
கற்றவர்வாழ் தண்டலைநீள் நெறியுள் ளிட்ட
கனகமதில் திருக்களருங் கருதார் வேள்வி
செற்றவர்சேர் பதிபிறவும் சென்று போற்றித்
திருமறைக்காட்டதன் மருங்கு சேர்ந்தா ரன்றே.

தெளிவுரை : அந்தத் திருவெண்துறை என்ற நகரத்தை வணங்கித் துதித்து மகிழ்ந்து பதிகம் பாடி, நான்முகன் திருமால்களுக்கு அறிவதற்கு அரியவரான இறைவர் வீற்றிருக்கும் தலங்கள் பலவற்றையும் சென்று துதித்துப் பதிகங்களும் பாடி, பரவும் தொண்டர் கூட்டம் பக்கத்தில் வர, கற்றவர் வாழ்வதற்கு இடமான திருத்தண்டலை நீள்நெறி முதலான தலங்களும் பொன் மதிலையுடைய திருக்களரும் பகைவரின் வேள்வியை அழித்த இறைவர் எழுந்தருளிய மற்றப் பதிகளையும் சென்று போற்றி அப்போதே திருமறைக்காடு என்ற தலத்தின் பக்கத்தைச் சேர்ந்தனர்.

2474. கார்அமண்வெஞ் சுரமருளாற் கடந்தார் தாமும்
கடற்காழிக் கவுணியர்தந் தலைவர் தாமும்
சேரஎழுந் தருளியஅப் பேறு கேட்டுத்
திருமறைக்காட் டகன்பதியோர் சிறப்பிற் பொங்கி
ஊரடைய அலங்கரித்து விழவு கொள்ள
உயர்கமுகு கதலிநிறை குடந்தீ பங்கள்
வார்முரச மங்கலநா தங்கள் மல்க
எதிர்கொள்ள அடியருடன் மகிழ்ந்து வந்தார்.

தெளிவுரை : கரிய சமணரான கொடிய பாலை நிலத்தைத் திருவருள் துணைக் கொண்டு கடந்து வந்த திருநாவுக்கரசரும், கடலின் சார்பையுடைய சீகாழிப் பதியினர்க்குத் தலைவரான சம்பந்தரும் ஒன்றாய் எழுந்தருளி வருகின்றதைச் செவியேற்றுத் திருமறைக்காடு என்ற பதியில் உள்ளவர்கள் சிறப்பால் மிக்கவராய் ஊரை முற்றும் அலங்காரம் செய்து, திருவிழாக் கொண்டாடும்படி எதிர்கொள்ள, உயர்ந்த பாக்கு மரங்களும், வாழை மரங்களும், நிறைந்த நீர்க்குடங்களும், விளக்குகளும், வார் முரசும் முதலான மங்கல ஒலிகளும் பெருகி வரவேற்க, அடியார்களுடனே கூட மகிழ்ந்து வந்தனர்.

2475. முன்னணைந்த திருநாவுக் கரசர் தம்மை
முறைமையால் எதிர்கொண்டு களிப்பின் மூழ்கிப்
பின்னணைய எழுந்தருளும் பிள்ளை யார்தம்
பெருகியபொற் காளத்தின் ஓசை கேட்டுச்
சென்னிமிசைக் கரங்குவித்து முன்பு சென்று
சேணிலத்து வணங்குதலுந் திருந்து சண்பை
மன்னவரும் மணிமுத்தின் சிவிகை நின்று
வந்திழிந்து வணங்கியுடன் மகிழ்ந்து போந்தார்.

தெளிவுரை : அந்நகரில் முன்னால் வந்த திருநாவுக்கரசரை முறைப்படி எதிர்கொண்டு வரவேற்றுப் பெருமகிழ்ச்சி அடைந்து, பின்னால் சேர வருகின்ற சம்பந்தரின் பெருகிய காளம் முதலான சின்னங்களின் ஓசையினைக் கேட்டுத் தலைமீது கைகளைக் குவித்துக் கொண்டு போய்த் தொலைவில் நிலத்தின் மேல் விழுந்து வணங்குதலும் திருந்தும் சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரும் அழகான முத்துப் பல்லக்கினின்று இறங்கி வணங்கி, அவர்களுடன் மகிழ்ச்சியுடன் சென்றார்.

2476. சொல்லரச ருடன்கூடப் பிள்ளை யாரும்
தூமணிநீர் மறைக்காட்டுத் தொல்லை மூதூர்
மல்குதிரு மறுகின்கட் புகுந்த போது
மாதவர்கள் மறையவர்கள் மற்று முள்ளோர்
எல்லையில்லா வகைஅரஎன் றெடுத்த ஓசை
இருவிசும்பும் திசையெட்டும் நிறைந்து பொங்கி
ஒல்லொலிநீர் வேலையொலி அடக்கி விண்மேல்
உம்பர்நாட் டப்புறத்தும் உற்ற தன்றே.

தெளிவுரை : திருநாவுக்கரசருடன் ஞானசம்பந்தரும் தூய மணிகளையுடைய நீர் சூழ்ந்த திருமறைக்காடு என்ற பழம் பதியின் திருவீதியில் புகுந்தபோது, மாதவர்களும் அந்தணர்களும் மற்றும் உள்ளர்களும் அளவில்லாதபடி அரகர என்று முழங்கிய ஒலியானது, பெரிய வானமும் எட்டுத் திக்குகளும் நிறைந்து, மேல் எழுந்து, ஒலி பொருந்திய நீரையுடைய கடல் ஒலியையும் அடக்கி வானத்தின் மேல் உள்ள விண் உலகத்தின் அப்பாலும் அப்போதே சென்றது.

2477. அடியவரும் பதியவரும் மருங்கு போற்ற
அணிமறுகின் ஊடெய்தி அருகு சூழ்ந்த
கொடிநுடங்கு செழுந்திருமா ளிகையின் முன்னர்க்
கோபுரத்தைத் தாழ்ந்திறைஞ்சிக் குறுகிப் புக்கு
முடிவிலிமை யவர்முனிவர் நெருங்குந் தெய்வ
முன்றில்வலம் கொண்டுநேர் சென்று முன்னாள்
படியின்மறை அருச்சித்துக் காப்புச் செய்த
பைம்பொன்மணித் திருவாயிற் பாங்கு வந்தார்

தெளிவுரை : அடியவர்களும் ஊர்மக்களும் பக்கத்திலே துதித்தவாறு வர, அழகிய தெருக்களின் வழியே வந்து சேர்ந்து, பக்கத்தில் சுற்றியுள்ள கொடிகள் திகழும் செழிப்பான திரு மாளிகையின் முன் உள்ள பெரிய கோபுரத்தின் முன் தாழ்ந்து வணங்கி உள்ளே புகுந்து, முடிவற்ற தேவர்களும் முனிவர்களும் நெருங்கும் தெய்வத்தன்மையுடைய திருமுன்றிலை வலமாய் வந்து, திருமுன்பு நேராகச் சென்று, முற்காலத்தில் இம் மண்ணுலகத்தில் வேதங்கள் வழிபாடு செய்து திருக்காப்புச் செய்து வைத்த பசும்பொன் அணிந்த மணிகளையுடைய வாயிலின் பக்கத்தில் வந்தனர்.

2478. அருமறைகள் திருக்காப்புச் செய்து வைத்த
அக்கதவந் திறந்திடஅம் மறைகளோதும்
பெருகியஅன் புடைஅடியார் அணைந்து நீக்கப்
பெறாமையினால் அன்றுமுத லாகப் பின்னை
ஒருபுடைஓர் வாயில்அமைத் தொழுகுந் தன்மை
உள்ளபடி கேட்டருளி உயர்ந்த சண்பைத்
திருமறையோர் தலைவர்வியப் பெய்தி நின்று
திருநாவுக் கரசருக்குச் செப்பு கின்றார்.

தெளிவுரை : அரிய மறைகள் காப்புச் செய்து மூடிவைத்த அத்திருக்கதவைத் திருக்காப்பு நீக்கித் திறப்பதற்கு, அந்த மறைகள் ஓதும் பெருமையுடைய அன்புடைய அடியார்கள் வந்து சேர்ந்து, கதவு காப்பு நீக்கப் பெறாத காரணத்தால் அந்நாள் தொடங்கி, ஒரு பக்கத்தில் வேறு ஓர் வாயில் அமைத்துக்கொண்டு வழிபட்டு ஒழுகும் இயல்பை உள்ளபடியாய்க் கேட்டு, உயர்வான சீகாழித் தலைவரான ஞான சம்பந்தர் வியப்புக் கொண்டு திருநாவுக்கரசரிடம் சொல்லலானார்.

2479. அப்பரே வேதவனத் தையர் தம்மை
அபிமுகத் திருவாயில் திறந்து புக்கே
எப்பரிசும் நாம்இறைஞ்ச வேண்டும் நீரே
இவ்வாயில் திருக்காப்பு நீங்குமாறு
மெய்ப் பொருள்வண் டமிழ்பாடி அருளும் என்ன
விளங்குமொழி வேந்தரது மேற்கொண் டென்னை
இப்பரிசு நீரருளிச் செய்தீ ராகில்
இதுசெய்வேன் எனப்பதிகம் எடுத்துப் பாட.

தெளிவுரை : அப்பரே ! திருமறைக் காட்டின் இறைவரை, நேர் முன் உள்ள திருவாயிலைத் திறந்து புகுந்து எவ்வகையானும் நாம் வணங்க வேண்டும். இந்த வாயில் காப்பு நீங்கும்படி நீரே மெய்ப் பொருளில் அமைந்த வண்மையுடைய தமிழைப் பாடுக ! என்றார். விளங்கும் சொல்லரசும் அதைச் சம்மதித்து ஏற்றுக் கொண்டு என்னை இது செய்யும்படி கூறுவீரானால் அதனைச் செய்வேன் ! எனக் கூறித் திருப்பதிகத்தைத் தொடங்கிப் பாடினார்.

2480. பாடியஅப் பதிகப்பாட் டான பத்தும்
பாடல்நிரம் பியபின்னும் பைம்பொன் வாயிற்
சேடுயர்பொற் கதவுதிருக் காப்பு நீங்காச்
செய்கையினால் வாகீசர் சிந்தை நொந்து
நீடுதிருக் கடைக்காப்பில் அரிது வேண்டி
நின்றெடுக்கத் திருக்காப்பு நீக்கங் காட்ட
ஆடியசே வடியார்தம் அடியார் விண்ணோர்
ஆர்ப்பெழுந்த தகிலாண்டம் அனைத்தும் மூழ்க.

தெளிவுரை : பாடிய அந்தத் திருப்பதிகத்தின் தொகையான பத்துப் பாடல்களும் நிரம்பிய பின்னும் பசும் பொன் அணிந்த திருவாயிலின் பெருமையுடைய பொன் கதவு நீங்காதிருந்த செய்கையால், அப்பதிகத்தின் திருக் கடைக் காப்பில், அரிதாக வருந்தி வேண்டிக் கொண்டு நின்று பாடத், திருக் காப்பு நீங்குவதைக் காட்டவே, அருள் திருக் கூத்து ஆடிய திருவடிகளையுடைய சிவபெருமானின் அடியார்களும் விண்ணோர்களும் எழுப்பிய அரவொலி முழக்கம் அகிலாண்டங்கள் எல்லாம் மூழ்குமாறு எழுந்தது.

2481. மற்றது கண்ட போதே வாக்கின்மன் னவரை நோக்கிப்
பொற்புறு புகலி மன்னர் போற்றிட அவரும் போற்றி
அற்புத நிலையி னார்கள் அணிதிரு மறைக்கா டாளுங்
கொற்றவர் கோயில் வாயில் நேர்வழி குறுகிப் புக்கார்.

தெளிவுரை : இறைவர் திருக்காப்பு நீங்கும் அதனைக் காட்ட, அதனைக் கண்டபொழுதே, நாவுக்கரசசை நோக்கி, அழகிய சீகாழியரசு போற்ற அவரும் போற்ற, அற்புதம் அடைந்த நிலையுடையவர் ஆயினர். ஆகி திருமறைக்காட்டில் ஆளும் இறைவரின் திருக்கோயில் வாயில் முன்புள்ள நேர்வழியில் உள்ளே சென்றனர்.

2482. கோயிலுட் புகுவார் உச்சிகுவித்தசெங் கைக ளோடும்
தாயினும் இனிய தங்கள்  தம்பிரா னாரைக் கண்டார்
பாயுநீர் அருவி கண்கள் தூங்கிடப் படியின் மீது
மேயின மெய்ய ராகி விதிர்ப்புற்று விரைவின் வீழ்ந்தார்.

தெளிவுரை : அங்ஙனம் கோயினுள் புகுந்து இருபெரும் மக்களும் தலைமீது கூப்பிய கைகளுடன் போய்த் தாயினும் இனிமையான தம் இறைவரைக் கண்டனர். அவர்களின் கண்களினின்றும் அருவியைப் போல் பாயும் நீர் வழிந்திட நிலத்தின் மீது பொருந்திய திருமேனியை யுடையவர்களாய் உடல் விதிர்த்து விரைவில் எழுந்து வணங்கினர்.

2483. அன்பினுக் களவு காணார் ஆனந்த வெள்ளம் மூழ்கி
என்புநெக் குருக நோக்கி இறைஞ்சிநேர் விழுந்த நம்பர்
முன்புநிற் பதுவும் ஆற்றார் மொழிதடு மாற ஏத்தி
மின்புரை சடையார் தம்மைப் பதிகங்கள் விளம்பிப் போந்தார்.

தெளிவுரை : அன்புக்கு எல்லை காணாதவர் ஆகி, ஆனந்தமாகிய வெள்ளத்துள் மூழ்கி எலும்பும் நெகிழ்ந்து உருக நோக்கி, மீண்டும் எழுவதும் திருமுன்பு வீழுவதுமாய்ப் பின் இறைவரின் திருமுன்பு நிற்பதுங் கூட இயலாதவராய்ச் சொல் தடுமாறும் நிலையில் துதித்து, மின்னல் போல் விளங்கும் சடையுடைய இறைவரைத் திருப்பதிகங்களினால் துதித்து வெளியே வந்தனர்.

2484. புறம்புவந் தணைந்த போது புகலிகா வலரை நோக்கி
நிறங்கிளர் மணிக்க பாடம் நீக்கமும் அடைப்பும் நிற்கத்
திறந்தவா றடைக்கப் பாடி யருளும்நீர் என்றார் தீய
மறம்புரி அமணர் செய்த வஞ்சனை கடக்க வல்லார்.

தெளிவுரை : வெளியே வந்து சேர்ந்த போது சீகாழித் தலைவரான பிள்ளையாரை நோக்கி, பொல்லாத மறச் செயல்களைச் செய்கின்ற சமணர்கள் செய்த வஞ்சனைகளை எல்லாம் கடக்க வல்லவரான நாவுக்கரசர், பல நிறங்களையுடைய மணிகள் பதித்த கதவு திறத்தலும் அடைத்தலுமாகிய செயல்கள் எப்போதும் வழங்கும் பொருட்டாய்த் திறந்தவாறே அடைக்கும்படி பாடியருளிக ! என்று கூறியருளினார்.

2485. அன்றர சருளிச் செய்ய அருமறைப் பிள்ளை யாரும்
வென்றிவெள் விடையார் தம்மை விருப்பினாற் சதுரம் என்னும்
இன்றமிழ்ப் பதிகப் பாடல் இசைத்திட இரண்டு பாலும்
நின்றஅக் கதவு காப்பு நிரம்பிட அடைத்த தன்றே.

தெளிவுரை : அன்று அப்படி நாவுக்கரசர் கூறியருள, அரிய மறையில் வல்ல சம்பந்தரும் வெற்றியுடைய காளையை ஊர்தியாகக் கொண்ட இறைவரை வேண்டிய விருப்பத்துடன் சதுரம் மறை எனத் தொடங்கும் இனிமையான தமிழ்ப் பதிகத்தின் முதல் பாட்டை அருளிச் செய்தவுடனே, இரண்டு பக்கத்தும் திறந்து நின்ற அந்தக் கதவு காப்பு நிரம்பிட அடைத்தது.

2486. அடைத்திடக் கண்டு சண்பை ஆண்டகை யாரும் அஞ்சொல்
தொடைத்தமி ழாளி யாருந் தொழுதெழத் தொண்டர் ஆர்த்தார்
புடைப்பொழிந் திழிந்த தெங்கும் பூமழை புகலி வேந்தர்
நடைத்தமிழ்ப் பதிக மாலை நிரம்பிட நவின்று போற்றி.

தெளிவுரை : அவ்வாறு அடைபடக் கண்டு, சீகாழிப் பெருந்தகையரான ஞானசம்பந்தரும் அழகிய சொல்தொடைத் தமிழை ஆள்கின்றவராகிய நாவுக்கரசரும் தொழுது நின்றார். அப்போது அடியார்கள் ஆரவாரம் செய்தனர். பக்கங்களில் எங்கும் கற்பகமலர் மழைபெய்தது. சீகாழித் தலைவரான சம்பந்தரும் நல்ல நடையை உணர்த்தும் தம் தமிழ்த் திருப்பதிக மாலையை மேல் பத்துப் பாடல்களும் நிரம்புமாறு பாடி முடித்தார்.

2487. அத்திரு வாயில் தன்னில் அற்றைநாள் தொடங்கி நேரே
மெய்த்திரு மறைகள் போல மேதினி புக்குப் போற்ற
வைத்தெதிர் வழக்கஞ் செய்த வரம்பிலாப் பெருமை யோரைக்
கைத்தலங் குவித்துத் தாழ்ந்து வாழ்ந்தது கடல்சூழ் வையம்.

தெளிவுரை : அன்றிலிருந்து அந்த வாயில் வழியாக நேரே போய் மெய் வடிவான மறைகளைப் போலவே உலகத்தவர்களும் புகுந்து துதிக்கும்படி கூட்டிவைத்து எதிர்காலத்திலும் இவ்வாறு வழங்குமாறு செய்த எல்லையில்லாத பெருமையுடைய அந்த இருபெரு மக்களையும் கைகூப்பி வணங்கிக் கடல் சூழ்ந்த உலகம் வாழ்வை அடைந்தது.

2488. அருமறை யான வெல்லாம் அகலிரு விசும்பில் ஆர்த்துப்
பெருமையின் முழங்கப் பஞ்ச நாதமும் பிறங்கி ஓங்க
இருபெருந் தகையோர் தாமும் எதிரெதிர் இறைஞ்சிப் போந்து
திருமடங் களின்முன் புக்கார் செழும்பதி விழவு கொள்ள.

தெளிவுரை : அரிய மறைகளும் அவற்றின் வழியாயினவும் ஆகிய எல்லாம் இடம் அகன்ற பெரிய வானத்தில் ஆரவாரித்துப் பெருமையுடன் முழங்க, ஐந்து துந்துபிகள் என்னும் தேவ வாத்தியங்களும் விளங்கி ஒலிக்க, பெருந்தகையினரான அவ்விரு பெரியார்களும் எதிர் எதிர் வணங்கிச் சென்று செழுமையான அந்த நகரம் விழா எடுக்கத் தத்தமக்கு அமைந்த மடங்களிலே புகுந்தனர்.

2489. வேதங்கள் எண்ணில் கோடி மிடைந்துசெய் பணியை மிக்க
ஏதங்கள் நம்பால் நீப்பார் இருவருஞ் செய்து வைத்தார்
நாதங்கொள் வடிவாய் நின்ற நதிபொதி சடையார் செய்ய
பாதங்கள் போற்றும் மேலோர் பெருமையார் பகரும் நீரார்.

தெளிவுரை : எண்ணற்ற மறைகள் ஒன்றுகூடி நெருங்கிச் செய்த பணியை (திறக்கவும் மூடவுமான பணியை) உயிர்களான நம்மிடம் வரும் குறைபாடுகளை யெல்லாம் நீக்குபவர்களாகி அரசும் பிள்ளையாரும் செய்து வைத்தனர். தாம் மேற்கொள்ளும் திருமேனி நாதமேயாகக் கொண்ட கங்கை தங்கிய சடையையுடைய இறைவரின் திருவடிகளைப் போற்றும் இப்பெரியவரின் பெருமையை யார் அளவிட்டுச் சொல்ல வல்லார்? எவருமிலர் !

2490. திருமறை நம்பர் தாமுன் பருள்செய்த அதனைச் செப்பும்
ஒருமையில் நின்ற தொண்டர் தம்பிரா னார்பால் ஒக்க
வரும்அருட் செய்கை தாமே வகுத்திட வல்லோ ரென்றால்
பெருமறை யுடன்மெய்த் தொண்டர்க் கிடையீடு பெரிதா மன்றே.

தெளிவுரை : வேதங்களின் இறைவர் முன்காலத்தில் இயற்றியருளிய வேதத் தொகுதியையே சொல்லும் ஒன்றித்த உணர்வுடன் நின்ற தொண்டர்கள், தம் பெருமானிடம் உள்ள அருட்செய்கை போல் தாமே செய்ய வல்லவர் ஆவார் என்றால் பெரிய வேதங்களுடன் மெய்த் தொண்டர்களுக்கு உள்ள ஒற்றுமை மிகவும் பெரிதே அன்றோ !

2491. இவ்வகை திரும றைக்காட் டிறையவர் அருளை யுன்னி
மெய்வகை தெரிந்த வாக்கின் வேந்தர்தாம் துயிலும் போதில்
மைவளர் கண்டர் சைவ வேடத்தால் வந்து வாய்மூர்
அவ்விடை யிருத்தும் அங்கே வாஎன அருளிப் போக.

தெளிவுரை : இவ்வாறு நினைத்துத் திருமறைக் காட்டு இறைவரின் திருவடிகளின் இயல்பை நினைந்து கொண்டு மெய்மைத் திறம் தெரிந்து ஒழுகும் நாவுக்கரசர் உறங்கும் போதில், திருநீலகண்டரான சிவபெருமான் சைவக் கோலத்தில் எழுந்தருளி, அவருக்குக் காட்சியளித்துத் திருவாய் மூரில் நாம் இருப்போம் ! அங்குத் தொடர வா ! எனக் கூறி முன்னே போக,

2492. கண்டஅப் போதே கைகள் குவித்துடன் கடிது செல்வார்
மண்டிய காத லோடு மருவுவார் போன்றுங் காணார்
எண்டிசை நோக்கு வாருக் கெய்துவார் போல எய்தா
அண்டர்தம் பிரானார் தம்பின் போயினார் ஆர்வத் தோடும்.

தெளிவுரை : அவ்வாறு கண்ட அப்போதே எழுந்து கைகளைக் கூப்பி விரைவாக உடன் செல்பவரான நாவுக்கரசர், நிரம்பிய பேரன்புடன் பொருந்துவார் போன்றிருந்தும் காணாதவராய் எட்டுத்திசையிலும் தேடிப் பார்த்தவருக்குக் கிட்டுவார் போலிருந்து கிட்டாதவராய் நின்ற தேவ தேவரான பெருமானின் பின்பு மிகுந்து எழுகின்ற அன்புடனே சென்றார்.

2493. அங்கவர் ஏகச் சண்பை ஆண்டகை யாரும் அப்பர்
எங்குற்றார் என்று கேட்ப எய்தினார் திருவாய் மூரில்
பொங்கிய காத லால்என்று உரைத்திடப் போன தன்மை
சங்கையுற் றென்கொல் என்று தாமும்அங் கணையப் போந்தார்.

தெளிவுரை : திருநாவுக்கரசர் அந்த இடத்துக்குச் செல்ல, சீகாழித் தலைவரான சம்பந்தரும் அப்பர் எங்குச் சென்றுள்ளார் என்று வினவினார். அறிந்தவர் மேன் மேல் பொங்கிய அன்பின் மேலீட்டால் திருவாய் மூருக்குச் சென்றார் என்று கூறினர். அப்பர் அங்ஙனம் போன காரணம் தான் என்னவோ என்று ஐயம் கொண்டு அங்குத் தாமும் சேரச் செல்லானார்.

2494. அந்நிலை அணைந்த போதில் அம்பிகை யுடனே கூட
மன்னிய ஆடல் காட்டத் தளரிள வளரும் பாடிச்
சென்னியால் வணங்கி வாய்மூர் அரசொடுஞ் சென்று புக்கங்
கின்னியல் புறமுன் கூடி இருவரும் போற்றி செய்தார்.

தெளிவுரை : அவ்வாறுபோய் நாவுக்கரசர் இருந்த இடத்தை அடைந்தபோது இறைவர் அம்மையுடனே கூடிய திருக்கூத்தைக் காட்டியருளவே, தளரிளவளர் என்ற தொடக்கத்தையுடைய பதிகத்தைப் பாடியருளித் தலை சாய்த்து வணங்கி அரசோடும் திருவாய் மூரிலே போய்ப் புகுந்து திருத்தொண்டின் இனிய இயல்பு பொருந்தக் கூடி இருவரும் இறைவரைத் துதித்தனர்.

2495. நீடுசீர்த் திருவாய் மூரில் நிலவிய சிவனார் தம்மைப்
பாடுசொற் பதிகந் தன்னால் பரவியப் பதியில் வைகிக்
கூடுமெய் அன்பு பொங்க இருவருங் கூடி மீண்டு
தேடுமா மறைகள் கண்டார் திருமறைக் காடு சேர்ந்தார்.

தெளிவுரை : மிக்க இயல்புடைய திருவாய்மூரில் நிலைபெற்றெழுந்தருளிய இறைவரைப் பாடும் சொல் பதிகத்தால் துதித்து, அந்தப் பதியில் தங்கி, பொருந்திய அன்பு மேன் மேலும் அதிகரிக்க இருபெரு மக்களும் கூடித் தங்கியிருந்து பின் அங்கிருந்து மீண்டு, தேடும் பெரிய மறையினால் வணங்கிக் காணப் பெற்ற இறைவரின் திருமறைக் காட்டில் சேர்ந்தனர்.

2496. சண்பைநா டுடைய பிள்ளை தமிழ்மொழித் தலைவ ரோடு
மண்பயில் கீர்த்திச் செல்வ மாமறைக் காட்டு வைகிக்
கண்பயில் நெற்றி யார்தங் கழலிணை பணிந்து போற்றிப்
பண்பயில் பதிகம் பாடிப் பரவிஅங் கிருந்தா ரன்றே.

தெளிவுரை : சீகாழிப் பதியினரான ஞானசம்பந்தர் தமிழ் மொழித் தலைவரான நாவுக்கரசருடன் கூடி உலகில் பொருந்திய பெருஞ்சிறப்புடைய செல்வம் நிறைந்த திருமறைக் காட்டில் தங்கியிருந்து, நெற்றிக் கண்ணையுடைய இறைவரின் திருவடியை வணங்கிப் பண் பொருந்திய திருப்பதிகங்களைப் பாடித் துதித்துக் கொண்டே அங்கு எழுந்தருளியிருந்தனர்.

2497. இவ்வகை இவர்கள் அங்கண் இருந்தனராக இப்பால்
செய்வகை இடையே தப்பும் தென்னவன் பாண்டி நாட்டு
மெய்வகை நெறியில் நில்லா வினைஅமண் சமய மிக்குக்
கைவகை முறைமைத் தன்மை கழியமுன் கலங்குங் காலை.

தெளிவுரை : இங்ஙனம் இந்த இருபெரு மக்களும் அந்தப் பதியில் தங்கியிருந்தனர். இஃது இவ்வாறாக, இனி இந்நாளில் இயற்றும் நல்லொழுக்க நெறியினின்றும் இடைக்காலத்தே தவறிய பாண்டியனின் நாட்டில், உண்மை நெறியில் நில்லாத தீவினைப் பகுதியான சமண சமயம் மிகுந்து, நல்லொழுக்க நெறிமுறை நீங்கியதால் முன் கலங்கிய காலத்திலே,

2498. தென்னவன் தானும் முன்செய் தீவினைப் பயத்தி னாலே
அந்நெறிச் சார்வு தன்னை அறமென நினைந்து நிற்ப
மன்னிய சைவ வாய்மை வைதிக வழக்க மாகும்
நன்னெறி திரிந்து மாறி நவைநெறி நடந்த தன்றே.

தெளிவுரை : பாண்டியனும் முன் செய்த தீவினையின் பயனால் அந்தச் சமண நெறியின் சார்பையே நல்ல அறம் என எண்ணி அந்த வழியிலே ஒழுகினான். ஒழுக, நிலை பெற்ற வைதிக வழக்கமாகும் சைவத்தின் மெய்மையுடைய நல்ல நெறி மக்களிடம் வழக்கில் இல்லாதுமாறி, அப்போதே குற்றம் பொருந்திய தீயநெறி ஒழுக்கம் பரவியது.

2499. பூழியர் தமிழ்நாட் டுள்ள பொருவில்சீர்ப் பதிக ளெல்லாம்
பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவு மாகிச்
சூழிருட் குழுக்கள் போலத் தொடைமயிற் பீலி யோடு
மூழிநீர் கையிற் பற்றி அமணரே யாகி மொய்ப்ப.

தெளிவுரை : பாண்டியரின் நாடான தமிழ் நாடான பாண்டிய நாட்டின் ஒப்பில்லாத சிறப்புடைய எல்லாத் தலங்களிலும் சூழ்ந்த இருள் கூட்டம் போல் கட்டிய மயில் பீலியுடன் நீர்க் கமண்டலங்களையும் கையில் கொண்டு சமணர்களே எங்கும் காணும்படி மொய்க்க,

2500. பறிமயிர்த் தலையும் பாயும் பீலியும் தடுக்கும் மேனிச்
செறியுமுக் குடையு மாகித் திரிபவ ரெங்கு மாகி
அறியும்அச் சமய நூலின் அளவினில் அடங்கிச் சைவ
நெறியினிற் சித்தஞ் செல்லா நிலைமையில் நிகழுங் காலை.

தெளிவுரை : மயிர் பறித்த தலையுடனே பாயையும் தடுக்கையும் தாங்கி உடலின் மேல் செறிந்த முக்குடையையும் கொண்டு திரியும் சமண ஆசாரியர்கள் எங்கும் நிறைந்து, தத்தம் அறிவில் அறிந்தவாறே அச்சமயத்தினது நூல் அளவில் அடங்கிச் சைவநெறியிலே உள்ளம் சொல்லாத நிலையில் அந்த நாட்டில் உள்ளவர் வாழ்கின்ற காலத்திலே.

2501. வரிசிலைத் தென்ன வன்தான் உய்தற்கு வளவர் கோமான்
திருவுயிர்த் தருளுஞ் செல்வப் பாண்டிமா தேவி யாரும்
குரைகழல் அமைச்ச னாராங் குலச்சிறை யாரும் என்னும்
இருவர்தம் பாங்கு மன்றிச் சைவம்அங் கெய்தா தாக.

தெளிவுரை : கட்டப்பட்ட வில்லையுடைய பாண்டிய மன்னன் உய்யும் பொருட்டுச் சோழன் பெற்ற மங்கலமான செல்வம் பொருந்திய பாண்டிமா தேவியான மங்கையர்க் கரசியாரும் ஒலிக்கும் வீரக்கழலை அணிந்த அமைச்சரான குலச்சிறையாரும் ஆகிய இந்த இருவருடைய பக்கதே அல்லாமல் அந்நாட்டில் சைவநெறி வழங்கவில்லை.

2502. ஆங்கவர் தாங்கள் அங்கண் அரும்பெறல் தமிழ்நா டுற்ற
தீங்கினுக் களவு தேற்றாச் சிந்தையிற் பரிவு கொண்டே
ஓங்கிய சைவ வாய்மை ஒழுக்கத்தில் நின்ற தன்மை
பூங்கழற் செழியன் முன்பு புலப்படா வகைகொண் டுய்த்தார்.

தெளிவுரை : அந்த நிலையில் அந்த இருவரும் பெறுதற்கு அரிய தமிழ்நாடு அடைந்த தீமையின் பொருட்டுத் தங்கள் உள்ளத்தில் அளவற்ற துன்பம் கொண்டவர்களாகித் தாங்கள் ஓங்கிய சைவ நெறியில் நின்று ஒழுகிய தன்மை, கழலை அணிந்த பாண்டியன் முன்பு வெளிப்படா வகையில் கொண்டு செலுத்தினர்.

2503. இந்நெறி யொழுகு கின்றார் ஏழுல குய்ய வந்த
மன்னிய புகலி வேந்தர் வைதிக வாய்மைச் சைவச்
செந்நெறி விளக்கு கின்றார் திருமறைக் காடு சேர்ந்த
நன்னிலை கன்னி நாட்டு நல்வினைப் பயத்தாற் கேட்டார்.

தெளிவுரை : இவ்வாறு ஒழுகி வந்த மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும், ஏழுலகம் உய்யுமாறு தோன்றிய நிலை பெற்ற சீகாழியில் தோன்றிய ஞானசம்பந்தர் நிலையான வேத உள்ளுறையைக் கொண்ட சைவமான செந்நெறியை உலகில் விளங்கச் செய்பவராய், விளங்கித் திருமறைக் காட்டில் அப்போது தங்கியிருக்கும் நன்மைதரும் நிலையைத் தம் பாண்டி நாட்டின் நல்வினைப் பயனால் கேட்டு அறிந்தனர்.

2504. கேட்டஅப் பொழுதே சிந்தை கிளர்ந்தெழு மகிழ்ச்சி பொங்க
நாட்பொழு தலர்ந்த செந்தா மரைநகை முகத்த ராகி
வாட்படை அமைச்ச னாரும் மங்கையர்க் கரசி யாரும்
சேட்படு புலத்தா ரேனுஞ் சென்றடி பணிந்தார் ஒத்தார்.

தெளிவுரை : அங்ஙனம் கேட்ட போதே வாளையுடைய குலச்சிறையார் என்ற அமைச்சரும் அரசமாதேவியாரான மங்கையர்க்கரசியாரும், உள்ளத்தில் பொங்கி எழுகின்ற மகிழ்ச்சி மேலும் மிகுவதால் அன்று காலை மலர்ந்த தாமரை போன்ற முகத்தையுடையர்களாகி, தொலைவில் உள்ளவர்களாயினும் நேரில் சென்று அவருடைய திருவடிகளை வணங்கியவரைப் போன்றவர் ஆயினர்.

2505. காதலால் மிக்கோர் தாங்கள் கைதொழு கருத்தி னாலே
போதவிழ் சோலை வேலிப் புகலிகா வலனார் செய்ய
பாதங்கள் பணிமின் என்று பரிசன மாக்கள் தம்மை
மாதவஞ் சுருதி செய்த மாமறைக் காட்டில் விட்டார்.

தெளிவுரை : மிக்க விருப்பம் கொண்ட அந்த இருவரும் தாங்கள் நேரே கண்டு தொழும் கருத்தால் மலர்கள் மலர்தற்கு இடமான சோலைகள் சூழ்ந்த சீகாழித் தலைவரான சம்பந்தரின் திருவடிகளைச் சென்று வணங்கி வேண்டிக் கொள்ளுங்கள் என்று ஆணையிட்டுத், தம் பரிவார மக்களை வேதங்கள் மாதவம் செய்து வழிபட்ட திருமறைக்காட்டிற்குச் செல்லுமாறு அனுப்பினர்.

2506. ஆங்கவர் விடமுன் போந்த அறிவுடை மாந்தர் அங்கண்
நீங்கிவண் தமிழ்நாட் டெல்லை பிற்பட நெறியின் ஏகி
ஞாங்கர்நீர் நாடும் காடும் நதிகளும் கடந்து வந்து
தேங்கமழ் கைதை நெய்தல் திருமறைக் காடு சேர்ந்தார்.

தெளிவுரை : அங்ஙனம் அந்த இருவரும் அனுப்ப, முன்சென்ற அந்த அறிவுடைய ஏவல்மக்கள், அந்த இடத்தினின்றும் நீங்கிச் சென்று, வளமையுடைய தமிழ்நாட்டின் எல்லை பின் நிற்குமாறு வழியில் போய்ச் சோழ நாட்டில் மருத நிலங்களையும் காடுகளையும் ஆறுகளையும் கடந்து வந்து, தேன் பொருந்திய தாழைகள் பூக்கும் நெய்தல் நிலப் பகுதியான திருமறைக் காட்டின் வெளிப்பகுதியை அடைந்தனர்.

2507. திருமறைக் காடு நண்ணிச் சிரபுர நகரில் வந்த
அருமறைப் பிள்ளையார் தாம் அமர்ந்தினி தருளுஞ் செல்வப்
பெருமடத் தணைய வந்து பெருகிய விருப்பில் தாங்கள்
வருமுறைத் தன்மை எல்லாம் வாயில்கா வலர்க்குச் சொன்னார்.

தெளிவுரை : திருமறைக் காட்டில் சேர்ந்து, சீகாழிப்பதியில் தோன்றிய அரிய மறையவரான பிள்ளையார் விரும்பி இனிதாய் எழுந்தருளியிருக்கும் செல்வப் பெருமடத்தை அடைந்து, மேல்மேல் பெருகிய விருப்பினால் தாங்கள் வரும் முறைமையுடைய தன்மைகளையெல்லாம் அறியுமாறு வாயில் காவலர்களிடம் கூறினர்.

2508. மற்றவர் சென்று புக்குவளவர்கோன் மகளார் தென்னர்
கொற்றவன் தேவி யாரும் குலச்சிறை யாரும் ஏவப்
பொற்கழல் பணிய வந்தோம் எனச்சிலர் புறத்து வந்து
சொற்றனர் என்று போற்றித் தொழுதுவிண் ணப்பஞ் செய்தார்.

தெளிவுரை : அந்த வாயிற்காவலர்கள் மடத்துக்குள்போய்த் திருஞானசம்பந்தரிடம் சோழன் மகளாரும் பாண்டிய மன்னரின் மனைவியாருமான மங்கையர்க்கரசியாரும் அமைச்சர் குலச்சிறையாரும் அனுப்பத் தங்களின் பொற் கழல் அணிந்த திருவடிகளை வணங்குதற்கு வந்தோம் என்று சிலர் வெளியே வந்து கூறினர் என்று வணங்கி விண்ணப்பம் செய்து கொண்டனர்.

2509. புகலிகா வலர்தாங் கேட்டுப் பொருவிலா அருள்முன் கூர
அகமலர்ந் தவர்கள் தம்மை அழையும்என் றருளிச் செய்ய
நகைமுகச் செவ்வி நோக்கி நற்றவ மாந்தர் கூவத்
தகவுடை மாந்தர் புக்குத் தலையினால் வணங்கி நின்றார்.

தெளிவுரை : சீகாழிப்பதியில் அவதரித்த ஞானசம்பந்தர் வாயில் காவலர் கூறியதைச் செவியேற்று ஒப்பில்லாத அருள் மிகுதலால் உள்ளம் மிக மகிழ்ந்து அவர்களை இங்கு அழைத்து வாருங்கள் ! என்று அருள் செய்தார்; செய்ய ஞானசம்பந்தரின் நகை முகத்தின் செம்மையான இயல்பைப் பார்த்து, நல்ல தவ மக்களான தொண்டர்கள் சென்று அழைக்க, நல்ல தன்மை பொருந்திய பாண்டிய நாட்டு ஏவலர் உள்ளே புகுந்து சம்பந்தரைத் தலையால் வணங்கி எழுந்து நின்றார்.

2510. நின்றவர் தம்மை நோக்கி நிகரில்சீர்ச் சண்பை மன்னர்
மன்றலங் குழலி யாராம் மானியார் தமக்கும் மானக்
குன்றென நின்ற மெய்ம்மைக் குலச்சிறை யார்த மக்கும்
நன்றுதான் வினவக் கூறி நற்பதம் போற்று வார்கள்.

தெளிவுரை : மேற் கூறிய வண்ணம் வணங்கி எழுந்து நின்ற அவர்களைப் பார்த்துச் சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் மங்கையர்க்கரசியார்க்கும் பெருமையுடைய மலை போன்ற மெய்யடிமைத் திறத்தில் ஒழுகி நின்ற குலச்சிறையார்க்கும் நன்மை பொருந்திய நிலையைப் பற்றி வினவ, அந்த நன்மை நிலையைப் பற்றிக் கூறி, பின் பிள்ளையாரின் நல்ல திருவடிகளைத் துதிப்பவராய்,

2511. கன்னிநா டமணர் தம்மாற் கட்டழிந் திழிந்து தங்கள்
மன்னனும் அவர்கள் மாயத் தழுந்தமா தேவி யாரும்
கொன்னவில் அயில்வேல் வென்றிக் குலச்சிறை யாரும் கூடி
இந்நிலை புகலி வேந்தர்க் கியம்புமென் றிறைஞ்சி விட்டார்.

தெளிவுரை : சமணர்களால் பாண்டிய நாடு தன் நிலைமை அழிந்து, தங்கள் மன்னனும் அவர்களின் மாயத்துக்குட்பட்டு அழுந்த, அதைப் பார்த்து மாதேவியாரும் அச்சம் தரும் கூர் வேலை ஏந்திய வெற்றியுடைய குலச்சிறையாரும் கூடி இந்த நிலைமையைச் சென்று சீகாழி மன்னவருக்குக் சொல்லுங்கள் எனக் கூறி வணங்கி எங்களை அனுப்பினர்.

2512. என்றவர்கள் விண்ணப்பஞ் செய்த பின்னை
ஏறுயர்த்த சிவபெருமான் தொண்ட ரெல்லாம்
நன்றுநமை ஆளுடைய நாதன் பாதம்
நண்ணாத எண்ணில் அமண் குண்டர் தம்மை
வென்றருளி வேதநூல் நெறியே யாக்கி
வெண்ணீறு வேந்தனையும் இடுவித் தங்கு
நின்றசெயல் சிவனடியார் செயலே யாக
நினைந்தருள வேண்டும்என நின்று போற்ற.

தெளிவுரை : என்று இங்ஙனம் அவர்கள் சொன்ன பின்னர் காளைக் கொடியையுயர்த்திய சிவபெருமானின் தொண்டர் எல்லாம் நன்றாக நம்மை ஆளுடைய இறைவரின் திருவடிகளைச் சாராத அளவற்ற சமணர்களாகிய குண்டர்களை வெற்றி கொண்டு, வேத நெறியே எங்கும் விளங்கச் செய்து, அங்கு நிகழும் ஒழுக்கங்கள் எல்லாம் சிவனடியார்களின் செயல்களே ஆகும்படி தங்கள் திருவுள்ளத்தில் எண்ணங் கொள்ளல் வேண்டும் என்று வேண்டிக் கொண்டு நின்று துதித்தனர்.

2513. மற்றவர்கட் கருள்புரிந்து பிள்ளை யாரும்
வாகீச முனிவருடன் கூடச் சென்று
பெற்றமுயர்த் தவர்பாதம் பணிந்து போந்து
பெரியதிருக் கோபுரத்துள் இருந்து தென்னா
டுற்றசெயல் பாண்டிமா தேவி யாரும்
உரிமைஅமைச் சரும்உரைத்து விட்ட வார்த்தை
சொற்றனிமன் னவருக்குப் புகலி மன்னர்
சொல்லியெழுந் தருளுதற்குத் துணிந்த போது.

தெளிவுரை : இவ்வாறு வேண்டிக் கொண்ட அந்த இரு திறந்தவர்க்கும் அருள் செய்து, சம்பந்தரும் நாவுக்கரசருடன் போய்ச் காளைக் கொடியையுயர்த்திய இறைவரின் திருவடிகளை வணங்கி வெளியேவந்து, பெரிய கோபுரத்துள் இருவரும் எழுந்தருளியிருந்து கொண்டு, பாண்டிய நாடு அடைந்த நிலையைப் பற்றிப் பாண்டிமாதேவியாரும் அமைச்சர் குலச்சிறையாரும் தமக்குக் கூறியனுப்பிய சொல்லை ஒப்பில்லாத நாவுக்கரசர்க்குக் கூறி, அதன் பொருட்டாகப் பாண்டி நாட்டுக்குத் தாம் செல்வதற்குத் துணிந்த போது,

2514. அரசருளிச் செய்கின்றார் பிள்ளாய் அந்த
அமண்கையர் வஞ்சனைக்கோர் அவதி யில்லை
உரைசெய்வ துளதுறுகோள் தானுந் தீய
எழுந்தருள உடன்படுவ ஒண்ணா தென்னப்
பரசுவத நம்பெருமான் கழல்கள் என்றால்
பழுதணையா எனப்பகர்ந்து பரமர் செய்ய
விரைசெய்மலர்த் தாள்போற்றிப் புகலி வேந்தார்
வேயுறுதோ ளியை எடுத்து விளம்பினாரே.

தெளிவுரை : திருநாவுக்கரசரும் ஐயனே ! சமண வஞ்சரின் வஞ்சகச் செயல்களுக்கு ஓர் அளவு இல்லை. மேலும் யாம் சொல்வது ஒன்றுண்டு. கோள் நிலைகளும் தீயனவாய் உள்ளன. அங்கே செல்வதற்குச் சம்மதிப்பது தகாது ! என்று உரைத்து இறைவனின் திருவடிகளைத் துதித்தார். சீகாழித் தலைவரான பிள்ளையார் வேயுறு தோளி பங்கன் என்று திருப்பதிகத்தை அருளிச் செய்தார்.

2515. சிரபுரத்துப் பிள்ளையார் அருளிச் செய்த
திருப்பதிகங் கேட்டதற்பின் திருந்து நாவுக்
கரசும்அதற் குடன்பாடு செய்து தாமும்
அவர்முன்னே எழுந்தருள அமைந்த போது
புரமெரித்தார் திருமகனார் அப்பர் இந்தப்
புனல்நாட்டில் எழுந்தருளி இருப்பீர் என்று
கரகமலங் குவித்திறைஞ்சித் தவிர்ப்ப வாக்கின்
காவலருந் தொழுதரிதாங் கருத்தில் நேர்ந்தார்.

தெளிவுரை : சீகாழியில் அவதரித்த பிள்ளையார் பாடியருளிய அப்பதிகத்தைக் கேட்ட பின்னர், திருந்திய திருவுள்ளம் கொண்ட திருநாவுக்கரசரும் பிள்ளையார் பாண்டிய நாட்டுக்குச் செல்ல உடன்பட்டார். முன்னெல்லாம் நிகழ்வது போல் தாம் முன்னாகச் செல்ல அவர் எண்ணும் போது, திரிபுரம் எரித்த இறைவரின் மகனாரான பிள்ளையார், அப்பரே ! இந்த நீர் நாடான சோழ நாட்டில் எழுந்தருளியிருப்பீர் ! எனக் கூறிக் கைம்மலர்களைக் கூப்பி வணங்கி அவரது செயலைத் தவிருமாறு செய்தார். நாவுக்கரசர் தாமும் எதிர் வணங்கி அரிய திருவுள்ளத்துடன் இசைந்தார்.

2516. வேதம்வளர்க் கவுஞ்சைவம் விளக்கு தற்கும்
வேதவனத் தருமணியை மீண்டும் புக்குப்
பாதமுறப் பணிந்தெழுந்து பாடிப் போற்றிப்
பரசியருள் பெற்றுவிடை கொண்டு போந்து
மாதவத்து வாகீசர் மறாத வண்ணம்
வணங்கியருள் செய்துவிடை கொடுத்து மன்னுங்
காதலினால் அருமையுறக் கலந்து நீங்கிக்
கதிர்ச்சிவிகை மருங்கணைந்தார் காழி நாதர்.

தெளிவுரை : வேத நெறியை வளரச் செய்வதற்கும் சைவத்தை விளக்கம் செய்வதற்கும் திருமறைக்காட்டின் இறைவரை மீண்டும் புகுந்து நிலத்தில் விழுந்து வணங்கி எழுந்து பாடியும் போற்றியும், அவரது அருள் விடையைப் பெற்றுக் கொண்டு வெளியே வந்து, மாதவமுடைய நாவுக்கரசர் மறுக்க ஒண்ணாதபடி அவரை வணங்கி, அருள் செய்துவிடை தந்து நிலைபெற்ற விருப்பத்துடன், அருமை பொருந்த அளவளாவி நீங்கிச் சென்று ஒளியுடைய முத்துச் சிவிகையின் பக்கத்தில் சீகாழித் தலைவர் வந்தார்.

2517. திருநாவுக் கரசரும் அங்கிருந்தார் இப்பால்
திருஞான சம்பந்தர் செழுநீர் முத்தின்
பெருநாமச் சிவிகையின்மீ தேறிப் பெற்றம்
உயர்த்தவர்தாள் சென்னியின்மேற் பேணும் உள்ளத்
தொருநாமத் தஞ்செழுத்தும் ஓதி வெண்ணீற்
றொளிவிளங்குந் திருமேனி தொழுதார் நெஞ்சில்
வருநாமத் தன்புருகுங் கடலாம் என்ன
மாதவரார்ப் பொலிவையம் நிறைந்த தன்றே.

தெளிவுரை : திருநாவுக்கரசரும் அங்கேயே தங்கியிருந்தார். இங்குத் திருஞானசம்பந்தர் செழுமையான தன்மையுடைய முத்துக்கள் நிறைந்த பெரும்புகழையுடைய சிவிகையின் மீது ஏறிக், காளைக் கொடியை உயர்த்திய இறைவரின் திருவடிகளைத் தலை மேற்கொண்டு, பேணும் உள்ளத்துடன் இறைவரின் ஒப்பில்லாத பெயரான திருவைந் தெழுத்தை ஓதி இறைவரின் திருநீற்றுடன் விளங்கும் திருமேனியை எண்ணிக் கை தொழுதனர். உள்ளத்தில் எப்போதும் வரும் இறைவர் பெயரால் அன்பு உருகிப் பெருக, கடல் ஓசை போல அடியார்களின் அரகர ஒலியான ஆரவார ஒலி அப்போதே உலகம் எங்கும் நிறைந்தது.

2518. பொங்கியெழுந் திருத்தொண்டர் போற்றிசைப்ப நாற்றிசையும்
மங்கலதூ ரியந்தழங்க மறைமுழங்க மழைமுழங்கும்
சங்கபட கம்பேரி தாரைகா ளந்தாளம்
எங்குமெழுந் தெதிரியம்ப இருவிசும்பு கொடிதூர்ப்ப.

தெளிவுரை : பெருகி எழுகின்ற திருத்தொண்டர்கள் துதிகளைப் போற்றவும், நான்கு திக்குகளிலும் மங்கல வாத்தியங்கள் ஓங்கி இசைக்கவும், மேகம் போல் ஒலிக்கும் சங்குகளும் படகங்களும் எதிரே முழங்கவும், பெரிய வான வெளியைக் கொடிகள் மறைக்கவும்.

2519. மலர்மாரி பொழிந்திழிய மங்கலவாழ்த் தினிதிசைப்ப
அலர்வாசப் புனற்குடங்கள் அணிவிளக்குத் தூபமுடன்
நிலைநீடு தோரணங்கள் நிரைத்தடியார் எதிர்கொள்ளக்
கலைமாலை மதிச்சடையார் இடம்பலவுங் கைதொழுவார்.

தெளிவுரை : மங்கல மலர் மழையைப் பொழிந்தும், மங்கல வாழ்த்துகளை இனிதாக இசைத்தும், பூக்கள் இட்ட மணமுடைய நீர்நிறைந்த குடங்களையும், அழகிய விளக்குகளையும், தூபங்களுடனே ஏந்தி நிலைகளில் நீண்ட தோரணங்களை வரிசையாய் அமைத்து, அடியார்கள் வரவேற்கச் சென்று, கலையுடைய மாலை மதியத்தைச் சூடிய இறைவரின் பதிகள் பலவற்றையும் வணங்குவாரானார்.

2520. தெண்டிரைசூழ் கடற்கானல் திருவகத்தி யான்பள்ளி
அண்டர்பிரான் கழல்வணங்கி அருந்தமிழ்மா மறைபாடிக்
கொண்டல்பயில் மணற்கோடு சூழ்கோடிக் குழகர்தமைத்
தொண்டருடன் தொழுதணைந்தார் தோணிபுரத் தோன்றலார்.

தெளிவுரை : தெளிவான அலைகள் சூழ்ந்த கடற்கரையில் உள்ள திருவகத்தியான் பள்ளியில் வீற்றிருக்கும் தேவதேவரான இறைவரின் திருவடிகளை வணங்கி, அரிய தமிழ்ப் பெருமறையான தேவாரப் பதிகத்தைப் பாடி, மேகங்கள் தங்குவதற்கு இடமான மணற்குன்றுகள் சூழ்ந்த திருக்கோடிக் குழகரை அடியார்கள் சூழத்தொழுது கொண்டு சீகாழித் தலைவர் மேலே சென்றார்.

2521. கண்ணார்ந்த திருநுதலார் மகிழ்ந்தகடிக் குளம்இறைஞ்சி
எண்ணார்ந்த திருவிடும்பா வனமேத்தி எழுந்தருளி
மண்ணார்ந்த பதிபிறவும் மகிழ்தரும்அன் பால்வணங்கிப்
பண்ணார்ந்த தமிழ்பாடிப் பரவியே செல்கின்றார்.

தெளிவுரை : விழியுடைய நெற்றியுடைய இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் திருக்கடிக் குளம் என்ற பதியை வணங்கி, மக்களின் எண்ணம் நிறைந்த திரு இடும்பாவனம் என்ற பதியையும் ஏத்திச் சென்று, இவ்வுலகத்தில் நிறைந்துள்ள பிற பகுதிகளையும் மகிழ்வுடன் கூடிய அன்பினால் வணங்கி, அங்கங்குப் பண் பொருந்திய தமிழ்ப் பதிகங்களைப் பாடி வணங்கிய வண்ணமே செல்பவராய்.

2522. திருவுசாத் தானத்துத் தேவர்பிரான் கழல்பணிந்து
மருவியசெந் தமிழ்ப்பதிகம் மால்போற்றும் படிபாடி
இருவினையும் பற்றறுப்பார் எண்ணிறந்த தொண்டருடன்
பெருகுவிருப் பினராகிப் பிறபதியும் பணிந்தணைவார்.

தெளிவுரை : திருஉசாத்தானம் என்ற பதியில் இறைவரின் திருவடிகளைப் பணிந்து, பொருந்திய செந்தமிழ்ப் பதிகங்களை அப்பதியில் திருமால் வழிபட்ட விதத்தை வைத்துப் பாடித், தம்மை வந்து அடையும் அடியார்களுக்கு நல்வினை தீவினை என்ற இரண்டும் பற்றுதலை அறுக்கும் ஞானசம்பந்தர், அளவில்லாத திருத்தொண்டர்களுடனே, பெருகும் விருப்பத்தை உடையவராய், மற்ற பதிகளையும் வணங்கிப் போவாராய்.

2523. கருங்கழிவே லைப்பாலைக் கழிநெய்தல் கடந்தருளித்
திருந்தியசீர்ப் புனல்நாட்டுத் தென்மேல்பால் திசைநோக்கி
மருங்குமிடை தடஞ்சாலி மாடுசெறி குலைத்தெங்கு
நெருங்கிவளர் கமுகுடுத்த நிறைமருத வழிச்சென்றார்.

தெளிவுரை : கருமையான உப்பங்கழிகளையும் கடலின் பக்கத்தில் உள்ள நெய்தல் நிலத்தையும் கடந்து போய்த் , திருந்திய சிறப்புடைய காவிரி நாடான சோழ நாட்டின் தென் மேற்குத் திசையை நோக்கிப், பக்கங்களில் நெருங்கிய தூறு கொண்டு எழும் பெரிய சாலி என்னும் நெற்பயிர்களையும், எவ்விடத்தும் நெருங்கிய காய்க்குலைகளையுடைய தென்னைகளையும், நெருக்கமாக வளரும் பாக்கு மரங்களையும், சூழக் கொண்ட நிறைந்த மருத நிலத்தின் வழியே போனார்.

2524. சங்கங்கள் வயலெங்கும் சாலிகழைக் கரும்பெங்கும்
கொங்கெங்கும் நிறைகமலக் குளிர்வாசத் தடமெங்கும்
அங்கங்கே உழவர்குழாம் ஆர்க்கின்ற ஒலியெங்கும்
எங்கெங்கும் மலர்ப்படுகர் இவைகழிய எழுந்தருளி.

தெளிவுரை : சங்குகள் நிரம்பிய வயல்களில் எங்கும் நெல்லும் கரும்பும் உள்ளன. மணம் எங்கும் கமழும் பரவி வீசும் தாமரைகள் நிறைந்த குளிர்ந்த மணமுடைய பொய்கைகள் எங்கும் உள்ளன. அங்கங்கே உழவர் கூட்டங்கள் ஆரவாரம் செய்யும் ஒலி எங்கும் நிறைந்துள்ளன. பூக்கள் நிறைந்த பள்ளமான நிலங்கள் எங்கெங்கும் உளளன. இவற்றையெல்லாம் ஞானசம்பந்தர் நீங்கி,

2525. தடமெங்கும் புனல்குடையும் தையலார் தொய்யில்நிறம்
இடமெங்கும் அந்தணர்கள் ஓதுகிடை யாகநிலை
மடமெங்கும் தொண்டர்குழாம்மனையெங்கும் புனைவதுவை
நடமெங்கும் ஒலியோவா நற்பதிகள் அவைகடந்து.

தெளிவுரை : பொய்கைகள் எங்கும் நீராடும் மகளிரின் தொய்யில் குழம்பின் நிறம், நகர்ப்புறத்தின் இடங்கள் எங்கும் அந்தணர் ஓதும் கிடைகள், வேள்விச் சாலைகளில் தொண்டரின் கூட்டங்கள், இல்லங்களில் எங்கும் செய்கின்ற மணங்கள், ஆடலின் உடன் எங்கும் பாடலின் ஒலிகள், இவ்வாறுள்ள தன்மைகள் எல்லாம் நீங்காமல் நிறைந்துள்ள நல்ல ஊர்களையும் ஞானசம்பந்தர் கடந்து சென்றார்.

2526. நீர்நாடு கடந்தருளி நெடும்புறவிற் குறும்புதல்கள்
கார்நாடு முகைமுல்லைக் கடிநாறு நிலங்கடந்து
போர்நாடுஞ் சிலைமறவர் புன்புலவைப் பிடைபோகிச்
சீர்நாடு தென்பாண்டி நன்னாடு சென்றணைவார்.

தெளிவுரை : இங்ஙனம் சென்று நீர் நாட்டைக் கடந்து போய், அதன் பின்னர், பெரிய புறவங்களில் சிறு புதர்களில் கார் காலத்தை நாடும் முல்லையரும்புகளின் மணம் கமழும் முல்லை நிலங்களைக் கடந்து, போரை நாடும் வில் ஏந்திய மறவர் பயின்று வாழுகின்ற புன் புலங்களான பாலை சார்ந்த இடங்களின் நடுவே போய், சீரை விரும்பும் தென் பாண்டி நல்ல நாட்டைப் போய் அடைவாராய்.

2527. மன்றல்மலர்ப் பிறங்கல்மருங் கெறிந்துவரு நதிகள்பல
சென்றணைந்து கடந்தேறித் திரிமருப்பின் கலைபுணர்மான்
கன்றுதெறித் தெனவுகைக்கும் கானஅதர் கடந்தணைந்தார்
கொன்றைநறுஞ் சடைமுடியார் மகிழ்ந்ததிருக் கொடுங்குன்றம்.

தெளிவுரை : மணமுடைய பூக்குவியல்களை இரண்டு பக்கங்களிலும் அலைவீசி வருகின்ற பல ஆறுகளையும் சென்றடைந்து கடந்து போய், முறுக்குடைய கொம்புகள் பொருந்திய கலை மான்களும் அவற்றுடன் இணைந்து வரும் பெண் மான்களும் அவற்றின் கன்றுகளும் கூட்டமாய்த் துள்ளிப் பாய்கின்ற நாடுகளின் இடையே உள்ள வழிகளைக் கடந்து, கொன்றை மலர்களின் மணமுடைய சடையையுடைய இறைவர் வீற்றிருக்கும் திருக்கொடுங்குன்றத்தைச் சேர்ந்தார்.

2528. கொடுங்குன்றத் தினிதமர்ந்த கொழும்பவளச் செழுங்குன்றை
அடுங்குன்றம் உரித்தானை வணங்கிஅருந் தமிழ்பாடி
நெடுங்குன்றம் படர்கானும் நிறைநாடுங் கடந்துமதி
தொடுங்குன்ற மதில்மதுரைத் தொன்னகர்வந் தணைகின்றார்.

தெளிவுரை : திருக்கொடுங் குன்றத்தில் இனிதாய் விரும்பி வீற்றிருக்கும் கொழுவிய பவளமலை போன்றவரான, யானையை உரித்த இறைவரை வணங்கி, அரிய தமிழ் மாலைகளைப் பாடி, நீண்ட குன்றுகளையும் படர்ந்த காடுகளையும் நிறைந்த நாடுகளையும் கடந்து போய்ச், சந்திரனைத் தீண்டுமாறு உயர்ந்த மலை போன்ற மதில்களையுடைய நகரத்தை ஞானசம்பந்தர் வந்து சேரலானார்.

2529. இந்நிலை இவர்வந் தெய்த எண்பெருங் குன்றம் மேவும்
அந்நிலை அமணர் தங்கட் கழிவுமுன் சாற்ற லுற்றுப்
பன்முறை வெருக்கொண் டுள்ளம் பதைப்பத்தீக் கனாக்க ளோடும்
துன்னிமித் தங்கள் அங்கு நிகழ்ந்தன சொல்ல லுற்றாம்.

தெளிவுரை : இவ்வாறு ஞானசம்பந்தர் எய்துவாராக ஆனை மலை முதலிய எட்டுப் பெரிய குன்றங்களில் மேவிய அந்நிலையில், சமணர்களுக்கு உண்டாக இருக்கும் அழிவை முன்னால் அறியுமாறு செய்து, பல முறையும் காரணம் இன்றி அச்சம் கொண்டு மனம் பதைக்குமாறு தீக்கனவுகளுடன் அங்குத் தீய நிமித்தங்கள் நிகழ்வனவற்றை இனி யாம் சொல்வோம்.

2530. பள்ளிகள் மேலும் மாடு பயில்அமண் பாழி மேலும்
ஒள்ளிதழ் அசோகின் மேலும் உணவுசெய் கவளங் கையில்
கொள்ளும்மண் டபங்கள் மேலும் கூகையோ டாந்தை தீய
புள்ளின மான தம்மில் பூசலிட் டழிவு சாற்றும்.

தெளிவுரை : சமணரின் கோயில்கள் மேலும் அவற்றின் பக்கத்தில் சமண குருமார் தங்கும் குகைகளின் மேலும், ஒள்ளிய இதழ்களையுடைய அசோக மரங்களின் மேலும், உணவு செய்யும் கவளங்களைக் கையில் ஏந்திக் கொள்வதற்குரிய மண்டபங்களின் மேலும், கோட்டான்களுடன் ஆந்தைகளும் மற்றத் தீய பறவைக் கூட்டமும் தமக்குள் போர் செய்து, பின்னால் வர இருக்கும் கேட்டைப் புலப்படுத்தும்.

2531. பீலியும் தடுக்கும் பாயும் பிடித்தகை வழுவி வீழக்
கால்களுந் தடுமா றாடிக்  கண்களும் இடமே யாடி
மேல்வரும் அழிவுக் காக வேறுகா ரணமுங் காணார்
மாலுழந் தறிவு கெட்டு மயங்கினர் அமண ரெல்லாம்.

தெளிவுரை : மயிர்பீலியும், தடுக்கும், பாயும், அவற்றைப் பிடித்த கைப்பிடி முதலியவற்றினின்றும் தாமே நழுவி விழுந்திடவும், கால்களும் பின்னி தடுமாற்றத்தை அடையவும், கண்களும் இடப்பக்கமாய்த் துடிக்கவும், சமணர்கள் எல்லாம் பின்னால் தமக்கு வரும் அழிவை நீக்குவதற்கு வேறு ஒரு காரணம் ஒன்றையும் அறியாதவர்களாய் மயக்கம் அடைந்தனர்.

2532. கந்தியர் தம்மில் தாமே கனன்றெழு கலாங்கள் கொள்ள
வந்தவா றமணர் தம்மில்மாறுகொண் டூறு செய்ய
முந்தைய உரையிற் கொண்ட பொறைமுதல் வைப்பும் விட்டுச்
சிந்தையிற் செற்ற முன்னாந் தீக்குணந் தலைநின் றார்கள்.

தெளிவுரை : சமணத் தவப்பெண்கள் தங்களுக்கும் தாங்களே சினந்து எழும் கலகங்களைச் செய்தனர்; நேர்ந்த சமணமுனிவர்களும் தம்முள் மாறுபட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் ஊறு செய்தனர்; தங்கள் பழைய நூல்களில் விதித்த பொறுமை முதலியவற்றையும் கைவிட்டு, உள்ளத்தில் சினம் முதலான தீய குணங்களில் சிறந்து நின்றனர்.

2533. இப்படி அமணர் வைகும் எப்பெயர்ப் பதியும் எய்தும்
ஒப்பில்உற் பாத மெல்லாம் ஒருவரின் ஒருவர் கூறி
மெய்ப்படு தீக்க னாவும் வேறுவே றாகக் கண்டு
செப்புவான் புறத்து ளோரும் தென்னவன் மதுரை சேர்ந்தார்.

தெளிவுரை : இங்ஙனம் சமணர் தங்கும் எவ்வகைப்பட்ட பதிகளிலும் பொருந்திய ஒப்பில்லாத தீய நிமித்தங்களை யெல்லாம் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் சொல்லிக் கொண்டு, பலன் அளிக்கக்கூடிய தீய கனவுகளையும் வெவ்வேறாகக் கண்டு அவற்றையும் சொல்லும் பொருட்டு வெளியே உள்ளவர்களும் பாண்டியனின் மதுரையைச் சேர்ந்தனர்.

2534. அந்நகர் தன்னில் வாழ்வார் புறம்புநின் றணைவார் கூடி
மன்னவன் தனக்குங் கூறி மருண்டவுள் ளத்த ராகித்
துன்னிய அழுக்கு மெய்யில் தூசிலார் பலரும் ஈண்டி
இன்னன கனவு கண்டோம் எனஎடுத் தியம்ப லுற்றார்.

தெளிவுரை : அந்த மதுரை நகரத்தில் உள்ளவரும் வெளியிலிருந்து வருபவரும் கூடி மன்னனுக்கு அறிவிப்பு அனுப்பிச் சென்று, மருண்ட மனம் உடையவராய் அழுக்குடைய உடலில் துணி இல்லாத சமணர் பலரும் நெருங்கிக் கூடி, இன்னின்ன கதவுகளைக் கண்டோம் எனக் கூறினர்.

2535. சீர்மலி அசோகு தன்கீழ் இருந்தநந் தேவர் மேலே
வேரொடு சாய்ந்து வீழக் கண்டனம் அதன்பின் னாக
ஏர்கொள்முக் குடையுந் தாமும் எழுந்துகை நாற்றிப் போக
ஊருளோர் ஓடிக் காணக் கண்டனம் என்று ரைப்பார்.

தெளிவுரை : சிறப்புடைய அசோக மரத்தின் கீழ் அமர்ந்தருளிய நம் அருகக் கடவுளின் மீது அம்மரம் வேரொடு சாய்ந்து விழப் பார்த்தோம். அதன் பின்பு, அழகிய முக்குடையும் தாமுமாக அத்தேவர் எழுந்து கைகளைத் தொங்கவிட்டுப் போகவும், ஊரவர் ஓடிச்சென்று காணவும் கண்டோம் என்று கூறினர்.

2536. குண்டிகை தகர்த்துப் பாயும் பீறியோர் குரத்தி யோடப்
பண்டிதர் பாழி நின்றுங் கழுதைமேற் படர்வார் தம்பின்
ஒண்டொடி இயக்கி யாரும் உளையிட்டுப் புலம்பி யோடக்
கண்டனம் என்று சொன்னார் கையறு கவலை யுற்றார்.

தெளிவுரை : கமண்டலத்தை உடைத்துப், பாயையும் கிழித்து ஒருபெண் குரு ஓட, புலவர்களாகிய சமண முனிவர்கள் தம் குகைகளிலிருந்து கழுதைகள் மேல் ஏறிச் செல்பராக, அவர்களின் பின்னால் ஒளியுடைய வளையலை அணிந்த தவப்பெண்களும் ஊளையிட்டு அழுது கொண்டு ஓடக் கண்டோம் என்று கவலை கொண்டவர்களாய் உரைத்தனர்.

2537. கானிடை நட்ட மாடும்கண்ணுதல் தொண்ட ரெல்லாம்
மீனவன் மதுரை தன்னில் விரவிடக் கண்டோ மென்பார்
கோனவன் தானும் வெய்ய கொழுந்தழல் மூழ்கக் கண்டோம்
ஆனபி னெழவுங் கண்டோம் அதிசய மிதுவாம் என்பார்.

தெளிவுரை : சுடுகாட்டில் நடனம் ஆடும் நெற்றிக்கண் உடைய சிவனின் அடியார் எல்லாம் மீன் கொடியையுடைய பாண்டியனின் மதுரையில் வந்திடக் கண்டோம் என்றனர் சிலர். மதுரையின் மன்னனும் வெவ்விய கொழுந்து விடும் தீயில் முழுகக் கண்டோம். அங்ஙனம் அவன் முழுகிய பின்பு அதனின்று மேலே எழுவதைப் பார்த்தோம் என்றனர் சிலர்.

2538. மழவிடை இளங்கன் றொன்று வந்துநங் கழகந் தன்னை
உழறிடச் சிதறி யோடி ஒருவருந் தடுக்க அஞ்சி
விழவொரு புகலு மின்றி மேதினி தன்னை விட்டு
நிழலிலா மரங்கள் ஏறி நின்றிடக் கண்டோம் என்பார்.

தெளிவுரை : இளமையுடைய சேங்கன்று ஒன்று வந்து தம் சங்கத்தைச் சுழல மிதித்துக் கலக்க, அதனால் சிதறுண்டு ஓடி, யாரும் அதைத் தடுக்க அஞ்சி, அடைக்கலமாய் விழுந்து ஒளிக்க வேறு ஒரு புகலிடமும் இல்லாது பூமியை விட்டு, நிழல் இல்லாத மரங்ளின் மீது ஏறி நிற்கவும் பார்த்தோம் என்று உரைத்தனர்.

2539. ஆவதென் பாவி காள்இக் கனாத்திறம் அடிகள் மார்க்கு
மேவிய தீங்கு தன்னை விளைப்பது திடமே என்று
நோவுறு மனத்த ராகி நுகர்பெரும் பதமும் கொள்ளார்
யாவது செயலென் றெண்ணி இடர்உழன் றழுங்கி னார்கள்.

தெளிவுரை : பாவிகளே ! இக்கனவின் முடிவு தான் யாதோ ? இந்தக் கனவின் விளைவு நம் அடியார்களுக்குப் பொருந்திய தீமையை விளைவிப்பது உறுதியேயாகும் ! எனத் துணிந்து சொல்லித் துன்பம் உடைய மனம் கொண்டவராய், உண்ணத் தக்க உணவுகளையும் உண்ணாதவர்களாய், என்ன செய்வது? என்று நினைத்துத் துன்பமடைந்து இவற்றைக் கேட்பவர்கள் வருந்தினார்கள்.

2540. அவ்வகை அவர்க ளெல்லாம் அந்நிலை மையர்க ளாகச்
சைவநன் மரபில் வந்த தடமயில் மடமென் சாயல்
பைவளர் அரவுஏர் அல்குல் பாண்டிமா தேவி யார்க்கும்
மெய்வகை அமைச்ச னார்க்கும் விளங்குநன் னிமித்தம் மேன்மேல்.

தெளிவுரை : அவ்வாறு அந்த அமணர்கள் எல்லாம் அத்தகைய நிலைமை உடையர்களாகிடச் சைவ நல்ல மரபில் தோன்றிய மாமயில் போன்ற இளமையாகிய மெல்லிய சாயலையும் பாம்பின் படத்தைப் போன்ற அல்குலையும் உடைய பாண்டிமாதேவியரான மங்கையர்கரசியாருக்கும், உண்மை நெறியில் நிற்கும் குலச்சிறையாருக்கும் நல்ல நிமித்தங்கள் மேலும் மேலும் நிகழ்ந்தன.

2541. அளவிலா மகிழ்ச்சி காட்டும் அரும்பெரு நிமித்தம் எய்த
உளமகிழ் வுணருங் காலை உலகெலாம் உய்ய வந்த
வளரொளி ஞானம் உண்டார் வந்தணைந் தருளும் வார்த்தை
கிளர்வுறும் ஓகை கூறி வந்தவர் மொழியக் கேட்டார்.

தெளிவுரை : அளவற்ற மகிழ்ச்சியை யுண்டாக்கும் அத்தகைய அரிய பெரிய நல்ல நிமித்தங்கள் வந்து பெருக, மனத்தில் மகிழ்ச்சியை உணரும் அச்சமயத்தில், உலகம் உய்யும் பொருட்டாக வந்து அவதரித்த வளரும் ஒளியுடைய ஞான அமுது உண்ட ஞான சம்பந்தர் வந்து கொண்டிருக்கும் சொல்லை, கிளர்ச்சி பொருந்திய உவகைச் செய்தியை அறிவித்துக் கொண்டு வந்தவர் கூற, அம்மையாரும் குலச் சிறையாரும் கேட்டனர்.

2542. அம்மொழி விளம்பி னோர்க்கு வேண்டுவ அடைய நல்கி
மெய்ம்மையில் விளங்கு காதல் விருப்புறு வெள்ளம் ஓங்கத்
தம்மையும் அறியா வண்ணம் கைமிக்குத் தழைத்துப் பொங்கி
விம்மிய மகிழ்ச்சி கூர மேவிய சிறப்பின் மிக்கார்.

தெளிவுரை : அத்தகைய சொல்லைக் கூறியவர்க்கு அவர்கள் வேண்டுவனவற்றை நிறையத் தந்து, மெய்ம்மையில் விளங்கும் விருப்பம் பொருந்திய அன்பு வெள்ளமானது பெருகி ஓட, தம்மையும் அறியாதபடி எல்லை கடந்து பொங்கித் திரண்ட மகிழ்ச்சி பெருக, இவ்வாறு பொருந்திய சிறப்பு மிக்கவர் ஆனார்.

2543. மங்கையர்க் கரசி யார்பால் வந்தடி வணங்கி நின்ற
கொங்கலர் தெரிய லாராம் குலச்சிறை யாரை நோக்கி
நங்கள்தம் பிரானா ராய ஞானபோ னகர்முன் பெய்தி
இங்கெழுந் தருள உய்ந்தோம் எனஎதிர் கொள்ளும் என்றார்.

தெளிவுரை : மங்கையர்க்கரசியார் தம்மிடம் வந்து அடியை வணங்கி நின்ற குலச்சிறையாரை நோக்கி, நம் பெருமானாரான ஞான அமுது உண்டவர் திருமுன்பு சென்று சேர்ந்து இங்குத் தாங்கள் வந்தமையால் யாங்கள் உய்வு பெற்றோம் என்று கூறி வரவேற்பீராக ! என மொழிந்தார்.

2544. மன்றலங் குழலி னாரை வணங்கிப் போந் தமைச்சனாரும்
வென்றிவே லரச னுக்கும் உறுதியே எனநி னைந்து
பொன்திகழ் மாட வீதி மதுரையின் புறத்துப் போகி
இன்தமிழ் மறைதந் தாரை எதிர்கொள எய்துங் காலை.

தெளிவுரை : அமைச்சரான குலச்சிறையாரும் மணம் பொருந்திய கூந்தலையுடைய மங்கையர்கரசியாரை வணங்கி, வெளியே வந்து, வெற்றியுடைய மன்னர்க்கும் இச்செயல் உறுதியை அளிப்பதே ஆகும் என்று மனத்தில் எண்ணிப், பொன் வேலைப் பாடுகள் பொருந்திய விளங்கும் மாடங்களையுடைய திருவீதிகளின் பக்கத்தில் விரைவாகப் போய், இனிய தமிழால் வேதங்களை அருளிச் செய்து தந்து சம்பந்தரை வரவேற்கும் பொருட்டாய்ச் செல்லும் போது,

2545. அம்புய மலராள் போல்வாள் ஆலவாய் அமர்ந்தார் தம்மைக்
கும்பிட வேண்டு மென்று கொற்றவன் தனக்கும் கூறித்
தம்பரி சனங்கள் சூழத் தனித்தடை யோடும் சென்று
நம்பரை வணங்கித் தாமும் நல்வர வேற்று நின்றார்.

தெளிவுரை : தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகனைப் போன்ற மங்கையர்க்கரசியார், திருவாலவாயில் வீற்றிருக்கும் பெருமானைத் தாம் போய்க் கும்பிட வேண்டும் என்று மன்னனுக்கும் கூறித் தம் பணிமக்கள் சூழ்ந்து வரத் தனித்த காவலுடன் போய்த் தாமும் ஞான சம்பந்தரை வரவேற்க நின்றார்.

2546. திருநிலவு மணிமுத்தின் சிவிகையின்மேல் சேவித்து
வருநிலவு தருமதிபோல் வளரொளிவெண் குடைநிழற்றப்
பெருகொளிய திருநீற்றுத் தொண்டர்குழாம் பெருகிவர
அருள்பெருக வருஞானத் தமுதுண்டார் அணைகின்றார்.

தெளிவுரை : சிவனது அருட்செல்வம் பொருந்திய அழகிய முத்துச் சிவிகையின் மேலே நின்று வணங்கிக் கொண்டு வருகின்ற நிலவு பொழியும் மதி போல் வளரும் ஒளி முத்து வெண்குடை நிழலைச் செய்யவும், பெருகும் ஒளியுடைய திருநீற்றுக் கூட்டம் சூழ்ந்தபடி வரவும், திருவருள் பெருகும் படி தோன்றிய சிவஞான அமுது உண்ட சம்பந்தர் மதுரையை வந்தடைவாரானார்.

2547. துந்துபிகள் முதலாய தூரியங்கள் கிளராமே
அந்தணராம் மாதவர்கள் ஆயிரமா மறையெடுப்ப
வந்தெழும்மங் கலநாதம் மாதிரம்உட் படமுழங்கச்
செந்தமிழ்மா ருதம்எதிர்கொண் டெம்மருங்குஞ் சேவிப்ப.

தெளிவுரை : துந்துபி முதலான வாத்தியங்களில் ஓசை மேலே எழாமல் அந்தணர்கள் மறை முனிவர்கள் பல வேதங்களை எடுத்துச் சொல்லவும், வந்து எழுகின்ற மங்கல ஒலிகள் எல்லாத் திக்குகளிலும், ஒலிக்கவும் செந்தமிழுடன் வரும் தென்றற் காற்றும் எதிர் கொண்டு வரவேற்று எல்லாப் பக்கங்களிலும் சேவிக்கவும்.

2548. பண்ணியவஞ் சனைத்தவத்தால் பஞ்சவன்நாட் டிடைப்பரந்த
எண்ணில்அமண் எனும்பாவ இருஞ்சேனை இரிந்தோட
மண்ணுலக மேயன்றி வானுலகம் செய்தபெரும்
புண்ணியத்தின் படையெழுச்சி போலெய்தும் பொலிவெய்த.

தெளிவுரை : செய்த வஞ்சணை பொருந்திய தவம் முன்னிலையாகப் பாண்டிய நாட்டிலே பரவிய எண் இல்லாத சமணம் என்ற பாவமான பெரிய படை உடைந்து ஓடும்படியாக இவ்வுலகம் அல்லாமல் வான் உலகமும் கூடிச் செய்ததான பெரும் புண்ணியமான படை எழுச்சியைப் போலப் பொருந்திய பொலிவு உண்டாகவும்,

2549. துன்னும்முழு வுடல்துகளால் சூழும்உணர் வினில்துகளால்
அன்னெறியிற் செறிந்தடைந்த அமண்மாசு கழுவுதற்கு
மன்னியொளிர் வெண்மையினால் தூய்மையினால் வழுதியர்தம்
கன்னிநாட் டிடைக்கங்கை அணைந்ததெனுங் கவின்காட்ட.

தெளிவுரை : நெருங்கிப் பொருந்தியுள்ள உடல் அழுக்கினாலும் தீய சூழ்ச்சியை யுடைய உணர்வின் மாசினாலும் நெறியில்லாத நெறியில் முழுதும் சேர்ந்த சமணம் என்ற அழுக்கைத் கழுவித் தூய்மை ஆக்குவதற்காக நிலைபெற்று விளங்கும் வெண்மையாலும் தூய தன்மையாலும் கங்கையாறே பாண்டியரின் கன்னி நாட்டில் வந்து சேர்ந்ததைப் போன்ற அழகை எடுத்துக் காட்டவும்,

2550. பானல்வயல் தமிழ்நாடு பழிநாடும் படிபரந்த
மானமிலா அமண்என்னும் வல்லிருள்போய் மாய்வதனுக்
கானபெரு கொளிப்பரப்பால் அண்டமெலாம் கொண்டதொரு
ஞானமணி விளக்கெழுந்து வருவதென நலம்படைப்ப.

தெளிவுரை : குவளை மலர்களையுடைய வளையல்கள் சூழ்ந்த தமிழ் நாடானது பழியை அடையும்படி அங்கே பரந்து சூழ்ந்த மானம் இல்லாத சமணர் என்னும் வன்மையான இருளானது கெட்டுப் போய் மாய்வதற்காக ஆன பெருகிய ஒளியின் மரப்பினால் எல்லா அண்டங்களையும் தன் நிறைவுள் அடக்கிக் கொண்டதான ஒப்பில்லாத ஞான விளக்கு எழுந்து வருவதைப் போன்ற நன்மையைச் செய்யவும்,

2551. புரசைவயக் கடகளிற்றுப் பூழியர்வண் டமிழ்நாட்டுத்
தரைசெய்தவப் பயன்விளங்கச் சைவநெறி தழைத்தோங்க
உரைசெய்திருப் பேர்பலவும் ஊதுமணிச் சின்னமெலாம்
பரசமய கோளரிவந் தான்என்றுபணிமாற.

தெளிவுரை : கழுத்துப் கயிற்றையும் வெற்றியையும் மதத்தையும் உடைய யானையை உடைய பாண்டியரின் தமிழ்நிலம் செய்த தவத்தின் பயன் விளங்கவும், சைவநெறி தழைத்தோங்கவும், எடுத்துக் கூறும் எல்லாப் பெயர்கள் பலவற்றையும் ஊதும் முத்துச் சின்னங்கள் யாவும் பரசமய கோளரி வந்தார் என இயம்பவும்,

2552. இப்பரி சணையும் சண்பையர் பெருமான் எழுந்தரு ளும்பொழு திசைக்கும்
ஒப்பில்நித் திலப்பொன் தனிப்பெருங் காளம் உலகுய்ய ஒலித்தெழும் ஓசை
செப்பரும் பெருமைக் குலச்சிறை யார்தம் செவிநிறை அமுதெனத் தேக்க
அப்பொழு தறிந்து தலத்தின்மேற் பணிந்தே அளப்பருங் களிப்பின ரானார்.

தெளிவுரை : இத்தகைய இயல்புடன் அணைகின்ற சீகாழித் தலைவர் வரும்போது, இசைக்கின்ற ஒப்பில்லாத முத்துக்களால் ஆன அழகிய தனிக் காளமானவை உலகம் உய்ய எடுத்துச் சொல்வதால் எழும் ஓசையானது சொல்வதற்கு அரிய பெருமையுடைய குலச்சிறையாரின் திருச்செவிகளில் நிறையும் அமுதம்போல் பெருகிட, அப்போது அறிந்து நிலத்தின் மீது உடல்பட விழுந்து பணிந்து, அளப்பதற்கு அரிய மகிழ்ச்சி உடையவர் ஆயினார்.

2553. அஞ்சலி குவித்த கரங்களும் தலைமேல் அணைந்திடக் கடிதுசென் றணைவார்
நஞ்சணி கண்டர் தந்திரு மகனா ருடன்வரு நற்றவக் கடலை
நெஞ்சினில் நிறைந்த ஆர்வமுன் செல்லக் கண்டு நீள் நிலத்திடைத் தாழ்ந்து
பஞ்சவர் பெருமான் மந்திரித் தலைவர் பாங்குற அணைந்துமுன் பணிந்தார்.

தெளிவுரை : அஞ்சலியாய்க் கூப்பிய கைகளும் தலையின் மேலே சேர விரைந்து போய் அணைவாராகி, விடத்தை உண்ட கண்டரான இறைவரின் மகனாருடன் வரும் நல்ல தவமுடைய அடியாரின் கடல் போன்ற திருக்கூட்டத்தை உள்ளத்தில் நிரம்பிய ஆசை முன்னால் செல்ல, அக நோக்கில் அறிந்தாராதலால், நீண்ட நிலத்தின் மீது திருமேனி பொருந்த விழுந்து பாண்டிய மன்னரின் அமைச்சருள் தலைவராகிய குலச்சிறையார் பாங்குறச் சென்று வணங்கினார்.

2554. நிலமிசைப் பணிந்த குலச்சிறை யாரை நீடிய பெருந்தவத் தொண்டர்
பலரும்முன் னணைந்து வணங்கிமற் றவர்தாம் படியின்நின் றெழாவகை கண்டு
மலர்மிசைப் புத்தேள் வழிபடும் புகலி வைதிகச் சேகரர் பாதம்
குலவிஅங் கணைந்தார் தென்னவ னமைச்சர் குலச்சிறை யார்எனக் கூற.

தெளிவுரை : தரைமீது விழுந்து வணங்கிய குலச்சிறையாரை நீண்ட பெருந்தவத்தவரான தொண்டர்கள் பலரும் முன் வந்து சேர்ந்து வணங்கி, மற்றுஅவர் நிலத்தில் விழுந்தவர் எழாமல் சீகாழித் தலைவரான சம்பந்தரின் திருவடிகளை வணங்கி, அங்குப் பாண்டிய மன்னரின் அமைச்சரான குலச்சிறையார் வந்துள்ளார் எனக் கூற,

2555. சிரபுரச் செல்வர் அவருரை கேட்டுத் திருமுகத் தாமரை மலர்ந்து
விரவொளி முத்தின் சிவிகைநின் றிழிந்து விரைந்து சென் றவர்தமை அணைந்து
கரகம லங்கள் பற்றியே எடுப்பக் கைதொழு தவரும்முன் நிற்ப
வரமிகு தவத்தால் அவரையே நோக்கி வள்ளலார் மதுரவாக் களிப்பார்.

தெளிவுரை : சீகாழித் செல்வரான பிள்ளையார் அவர்கள் சொன்னச் சொல்லைக் கேட்டு முகமான தாமரை மலர்ந்து, பொருந்திய ஒளியுடைய முத்துச் சிவிகையினின்று இறங்கி விரைவாகப் போய் அக்குலச்சிறையாரும்கை தொழுதுதிரு முன்பு நிற்க, வரம்மிகும் செவ்விய தன்மையுடன் நின்ற அவரது தவம் காரணமாக அவரையே பார்த்துச் சம்பந்தர் இனிய திருவாக்கை அளிப்பவராய்.

2556. செம்பியர் பெருமான் குலமக ளார்க்குந் திருந்திய சிந்தையீர் உமக்கும்
நம்பெரு மான்தன் திருவருள் பெருகும் நன்மைதான் வாலிதே என்ன
வம்பலர் அலங்கல் மந்திரி யாரும் மண்மிசைத் தாழ்ந்தடி வணங்கித்
தம்பெருந் தவத்தின் பயனனை யார்க்குத் தன்மையாம் நிலையுரைக் கின்றார்.

தெளிவுரை : சோழ மன்னரின் மகளாரான மங்கையர்க்கரசி அம்மையாருக்கும் திருந்திய சிந்தையுடைய உமக்கும் சிவ பெருமானின் அருள்தான் நிறைந்துள்ளதே ! எனக் கூற மணம் கமழும் மாலை சூடிய அமைச்சரும் நிலமுற வணங்கி நின்று தம் பெருந்தவத்தின் பயனைப் போன்ற சம்பந்தருக்கு, அந்நாட்டில் நிகழ்ந்த நிலைமையை எடுத்துச் சொல்வாராய்,

2557. சென்றகா லத்தின் பழுதிலாத் திறமும்
இனிஎதிர் காலத்தின் சிறப்பும்
இன்றெழுந் தருளப் பெற்றபே றிதனால்
எற்றைக்குந் திருவருள் உடையேம்
நன்றியில் நெறியில் அழுந்திய நாடும்
நற்றமிழ் வேந்தனும் உய்ந்து
வென்றிகொள் திருநீற் றொளியினில் விளங்கும்
மேன்மையும் படைத்தனம் என்பார்.

தெளிவுரை : சென்ற காலத்தில் பழுது இன்றி நின்ற இயல்பும், இனி எதிர்காலத்தில் வரும் சிறப்புடைய திறமும், இன்று இங்குத் தாங்கள் எழுந்தருளப் பெற்றதால் விளங்கும். இதனால் முக்காலத்திலும் திருவருள் உடையோம். நன்மையில்லாத சமண சமயத்திலே அழுந்திய இந்த நாடும் நற்றமிழ் மன்னனும் உய்வு பெற்று வெற்றி கொள்ளும் திருநீற்றின் ஒளியில் விளங்கும் மேன்மையையும் பெற்றோம் என்பவராய்,

2558. இங்கெழுந் தருளும் பெருமைகேட் டருளி
எய்துதற் கரியபே றெய்தி
மங்கையர்க் கரசி யாரும்நம் முடைய
வாழ்வெழுந் தருளிய தென்றே
அங்குநீர் எதிர்சென் றடிபணி வீர்என்
றருள்செய்தார் எனத்தொழு தார்வம்
பொங்கிய களிப்பால் மீளவும் பணிந்து
போற்றினார் புரவலன் அமைச்சர்.

தெளிவுரை : இங்குத் தாங்கள் எழுந்தருளியதைக் கேட்டவுடனே மங்கையர்க்கரசி அம்மையாரும் நம்முடைய வாழ்வு எழுந்தருளி வருகின்றது என இயம்பி, அங்கு நீவிர் எதிர் சென்று வரவேற்றுத் திருவடிகளைப் பணிவீர் என அருள் செய்தார் என்று அன்பு பொருந்திய களிப்பினால் மீளவும் வணங்கி அரசனின் அமைச்சரான குலச்சிறையார் துதித்தார்.

2559. ஆங்ஙனம் போற்றி அடிபணிந் தவர்மேல்
அளவிலா அருள்புரி கருணை
தாங்கிய மொழியால் தகுவன விளம்பித்
தலையளித் தருளும்அப் பொழுதில்
ஓங்கெயில் புடைசூழ் மதுரைதோன் றுதலும்
உயர்தவத் தொண்டரை நோக்கி
ஈங்குநம் பெருமான் திருவால வாய்மற்
றெம்மருங் கினதென வினவ.

தெளிவுரை : அவ்வாறு சொல்லித் திருவடியை வணங்கியவர் மீது சம்பந்தர் அளவற்ற அருள் புரிகருணை மிக்க சொற்களால் தகுந்தவற்றைச் சொல்லி, அருள் செய்த போது, உயர்ந்த மதில்கள் பக்கங்களில் சூழ்ந்த மதுரையம்பதி கண்ணில் புலப்படக் கண்டு உயர்ந்த தவத்தையுடைய தொண்டரைப் பார்த்து இவ்விடத்துநம் இறைவர் எழுந்தருளுகின்ற திருவாலவாயானது எந்தப்பக்கத்தில் உள்ளது? என வினவினார்.

2560. அன்பராய் அவர்முன் பணிந்தசீ ரடியார்
அண்ணலார் அடியிணை வணங்கி
முன்புநின் றெடுத்த கைகளாற் காட்டி
முருகலர் சோலைகள் சூழ்ந்து
மின்பொலி விசும்பை அளக்குநீள் கொடிசூழ்
வியனெடுங் கோபுரந் தோன்றும்
என்பணி அணிவார் இனிதமர்ந் தருளுந்
திருவால வாய்இது வென்றார்.

தெளிவுரை : அங்ஙனம் வினவிய சம்பந்தர் முன்பணிந்த சிறப்புடைய அடியவரான குலைச்சிறையார், சம்பந்தரின் இருதிருவடிகளை வணங்கித் திருமுன்பு நின்று, எடுத்த கைகளால் சுட்டிக் காட்டி, மணம் கமழும் சோலைகளால் சூழப்பட்டு பின் பொலியும் வானை அளக்கும்படி நீண்ட கொடிகள் சூழ்ந்தபெரிய நீண்ட கோபுரங்கள் தோன்றும் இது எலும்பு அணியை அணிந்த இறைவர் இனிதாய் விரும்பி வீற்றிருக்கும் திருவாலவாய் ஆகும், என உரைத்தார்.

2561. தொண்டர்தாம் போற்றிக் காட்டிடக் கண்டு
துணைமலர்க் கரங்குவித் தருளி
மண்டுபே ரன்பால் மண்மிசைப் பணிந்து
மங்கையர்க் கரசிஎன் றெடுத்தே
எண்டிசை பரவும் ஆலவாய் ஆவ
திதுவேஎன் றிருவர்தம் பணியும்
கொண்டமை சிறப்பித் தருளிநற் பதிகம்
பாடினார் குவலயம் போற்ற.

தெளிவுரை : பெருந்தொண்டரான குலச்சிறையார் தாமே இவ்வாறு போற்றிக் காட்டக் கண்டு, மலர் போன்ற கைகளைத் தலைமீது குவித்து நிறைந்த மிக்க அன்பினால் தரையின் மீது விழுந்து பணிந்து எழுந்து நின்று, மங்கையர்க்கரசி எனத் தொடங்கி, எட்டுத் திக்கில் உள்ளவரும் துதிக்கும் திருஆலவாய் ஆவது இதுவே, என்ற மகுடம் பொருந்திய அம்மையாரும் அமைச்சருமாகிய இருவரின் தொண்டுகளையும் சிறப்பித்து அருளி நல்ல திருப்பதிகத்தைப் பாடியருளினார்.

2562. பாடிய பதிகம் பரவியே வந்து
தேடுமால் அயனுக் கரியவர் மகிழ்ந்த
திருவால வாய்மருங் கணைந்து
நீடுயர் செல்வக் கோபுரம் இறைஞ்சி
நிறைபெரு விருப்புடன் புக்கு
மாடுசூழ் வலங்கொண் டுடையவர் கோயில்
மந்திரி யாருடன் புகுந்தார்.

தெளிவுரை : அவ்வாறு பாடிய திருப்பதிகத்தால் துதித்தபடி வந்து, அரிய பண்புடைய அடியவரோடும், தேடும் திருமாலுக்கும் நான்முகனுக்கும் அரிய இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் திருவாலவாய்க் கோயிலின் பக்கத்தை அடைந்து நீண்டு உயர்ந்த கோபுரத்தை வணங்கிப் புகுந்து, நிறையும் பெரு விருப்பத்துடன் உள்ளே புகுந்து, பக்கத்தே உள்ள மாளிகையை வலமாகச் சூழ்ந்து வந்து, இறைவரின் கோயிலுள் அமைச்சர் குலச்சிறையாருடன் புகுந்தார்.

2563. ஆளும் அங்கணர் ஆலவாய் அமர்ந்தினி திருந்த
காள கண்டரைக் கண்களின் பயன்பெறக் கண்டு
நீள வந்தெழும் அன்பினால் பணிந்தெழ நிறையார்
மீள வும்பல முறைநில முறவிழுந் தெழுவார்.

தெளிவுரை : ஆளுகின்ற அழகிய கண்ணை உடையவராய் ஆலவாயில் விரும்பி இனிதாக வீற்றிருக்கும் கரிய கண்டத்தை உடைய இறைவரைக் கண்கள் பெற்ற இனிய பயனை அடையுமாறு தரிசித்தும், நீள வந்து எழும் அன்பினால் பணிந்து எழுந்தும், அமைதி பெறாதவராய்த், திரும்பவும் நிலமிசை பலமுறை விழுந்து வணங்கி எழுவார் ஆனார்.

2564. அங்கம் எட்டினும் ஐந்தினும் அளவின்றி வணங்கிப்
பொங்கு காதலின் மெய்ம்மயிர்ப் புளகமும் பொழியும்
செங்கண் நீர்தரும் அருவியுந்திகழ்திரு மேனி
எங்கு மாகிநின் றேத்தினார் புகலியர் இறைவர்.

தெளிவுரை : எட்டு உறுப்புகளாலும் ஐந்து உறுப்புக்களாலும் அளவில்லாதபடி வணக்கங்கள் செய்து, உள்ளத்தில் நிறைந்து பொங்கி எழும் அன்பின் மிகுதியால் உடலில் மயிர்க் கூச்செறிதலும், சிவந்த கண்கள் பொழிகின்ற நீர் அருவி போன்ற பெருக்கும் திருநீற்றின் ஒளி விளங்கும் திருமேனி முழுவதும் பொருந்துமாறு நின்று, சீகாழித் தலைவர் வணங்கித் துதித்தார்.

2565. நீல மாமிடற் றாலவா யான்என நிலவும்
மூல மாகிய திருவிருக் குக்குறள் மொழிந்து
சீல மாதவத் திருத்தொண்டர் தம்மொடும் திளைத்தார்
சாலு மேன்மையில் தலைச்சங்கப் புலவனார் தம்முன்.

தெளிவுரை : நீலமாமிடற்கு ஆலவாயான் எனத் தொடங்கி நிலவும் மூலமான திரு இருக்குக் குறள் பதிகத்தைப் பாடிப் பொருந்திய மேன்மையுடைய தலைச் சங்கப் புலவரான சோமசுந்தரப் பெருமான் திருமுன்பு, ஒழுக்கத்தால் மிக்க மாதவமுடைய தொண்டரான குலச்சிறையாருடன் கூடி அன்பினுள் மகிழ்ந்தார்.

2566. சேர்த்தும் இன்னிசைப் பதிகமுந் திருக்கடைக் காப்புச்
சார்த்தி நல்லிசைத் தண்தமிழ்ச் சொல்மலர் மாலை
பேர்த்தும் இன்புறப் பாடிவெண் பிறையணி சென்னி
மூர்த்தி யார்கழல் பரவியே திருமுன்றில் அணைய.

தெளிவுரை : சேர்க்கின்ற இனிய இசையுடைய பதிகத்தையும் திருக்கடைக் காப்புச் சாத்தி நிறைவாக்கி, நல்ல இசையுடைய தமிழ்ச் சொல்லால் ஆன மலர் மாலையைத் திரும்பவும் இன்பம் பொருந்திப் பாடி, வெண்மையான பிறைச் சந்திரனை அணிந்த முடியை யுடையவரின் திருவடியைத் துதித்துத் திருமுன்றிலை வந்து அணையும் போதில்,

2567. பிள்ளையார் எழுந் தருளிமுன் புகுதும்அப் பொழுது
வெள்ள நீர்பொதி வேணியார் தமைத்தொழும் விருப்பால்
உள்ள ணைந்திட எதிர்செலா தொருமருங் கொதுங்கும்
தெள்ளு நீர்விழித் தெரிவையார் சென்றுமுன் பெய்த.

தெளிவுரை : முன்னால் சம்பந்தர் கோயிலுள் எழுந்தருளிப் புகுந்தபோது, கங்கையாறு தங்கிய சடையினரான இறைவரை வணங்கும் ஆர்வத்தோடும் உள்ளே சேர்தலால் அவர் எளிதில் செல்லாது ஒரு பக்கத்தில் ஒதுங்கிய தெள்ளும் நீரில் பொருந்திய கண்களை யுடைய தெரிவையரான மங்கையர்க்கரசியார், அவரது திருமுன்பு சேர்ந்தார்.

2568. மருங்கின் மந்திரி யார்பிள்ளை யார்கழல் வணங்கிக்
கருங்கு ழற்கற்றை மேற்குவி கைத்தளிர் உடையார்
பருங்கை யானைவாழ் வளவர்கோன் பாவையார் என்னப்
பெருங்க ளிப்புடன் விரைந்தெதிர் பிள்ளையார் அணைந்தார்.

தெளிவுரை : பக்கத்தில் வந்த குலச்சிறையார் சம்பந்தப் பெருமானின் திருவடிகளை வணங்கி நின்று, கரிய கூந்தலின் மீது கூப்பிய கைத் தளிர்களையுடைய அம்மையார் பருத்த கையையுடைய யானைகள் வாழ்கின்ற சோழ மன்னரின் மகளார் என்று சொல்லப், பெருமகிழ்ச்சியுடன் விரைந்து, அவ்வம்மையார் எதிரே அவர் சேர்ந்திட,

2569. தென்ன வன்பெருந் தேவியார் சிவக்கன்றின் செய்ய
பொன்ன டிக்கம லங்களிற் பொருந்தமுன் வீழ்ந்தார்
மன்னு சண்பையர் வள்ளலார் மகிழ்சிறந் தளிக்கும்
இன்ன ருட்பெருஞ் சிறப்பொடுந் திருக்கையால் எடுத்தார்.

தெளிவுரை : பாண்டிய மன்னனின் மனைவியாரான மங்கையர்க்கரசியார் சிவக்கன்றான ஞானசம்பந்தரின் அடித் தாமரைகளில் பொருந்த முன் விழுந்தார். நிலையான சீகாழிப் பதித்தலைவர் மகிழ்ச்சி மிக அளிக்கும் இனிய அருளுடைய பெருஞ்சிறப்பினோடும் திருக்கைகளால் அவரை எடுத் தருளினார்.

2570. ஞான போனகர் எதிர்தொழு தெழுந்தநற் றவத்து
மானி யார்மனக் கருத்துமுற் றியதென மதித்தே
பான லங்கண்கள் நீர்மல்கப் பவளவாய் குழறி
யானும் என்பதி யுஞ்செய்த தவமென்கொல் என்றார்.

தெளிவுரை : ஞான அமுது உண்ட சம்பந்தரின் எதிரில் வணங்கி எழுந்த நல்ல தவத்தையுடைய அம்மையாரான மங்கையர்க்கரசியார் தம் மனத்துள் கொண்ட கருத்தான சைவநிலைபேறும் பாண்டிநாட்டு மீட்சியும் நிறைவு பெற்றன என்றே துணிவு கொண்டு நீலமலர் போன்ற கண்களில் நீர் பொருந்திய பவளம் போன்ற வாய் குழறி யானும் எனது பதியும் தாங்கள் இங்கு எழுந்தருளும் இப்பேற்றைப் பெரும் பொருட்டு முன்செய்த பெருந்தவம்தான் என்னே? எனக் கூறினார்.

2571. யாழின் மென்மொழி யார்மொழிந் தெதிர்கழல் வணங்கக்
காழி வாழவந் தருளிய கவுணியர் பிரானும்
சூழு மாகிய பரசம யத்திடைத் தொண்டு
வாழு நீர்மையீர் உமைக்காண வந்தனம் என்றார்.

தெளிவுரை : யாழ் போன்ற இனிய மென்மையான மொழியையுடைய அம்மையார் இவ்வாறு கூறி மீண்டும் தம் திருவடிகளை வணங்கிடச் சீகாழி வாழுமாறு வந்து தோன்றிய கவுணியர் தலைவரும் அவர் சொன்னதைக் கேட்டு, சுற்றிலும் பரவிய பரசமயச் சூழலிடையே திருத்தொண்டின் நெறியில் விடாமல் வாழ்கின்ற தன்மையுடையவர்களே ! உங்களைக் காணும் பொருட்டு வந்தோம் ! என்று அருள்செய்தார்.

2572. இன்ன வாறருள் செய்திடத் தொழுதடி வீழ்ந்தார்
மன்னு மந்திரி யார்வரு திறமெலாம் மொழிய
அன்ன மென்னடை யார்தமக் கருள்செய்து போக்கித்
துன்னு மெய்த்தொண்டர் சூழவந் தருளும்அப் பொழுது.

தெளிவுரை : இங்ஙனம் ஞானசம்பந்தர் அருள் செய்திடவே மங்கையர்க்கரசியார் அவருடைய திருவடிகளில் விழுந்து வணங்கினார். நிலைபெற்ற அமைச்சரான குலச்சிறையார் நாட்டில் நேர்ந்த துன்பமான நிலைகளை எல்லாம் எடுத்துச் சொல்ல, அவற்றையெல்லாம் கேட்டு, ஞானசம்பந்தர் அன்னம் போன்ற நடையுடைய மங்கையர்க்கரசியார்க்கு அருள்செய்து விடைதந்து அனுப்பினார். பின், நெருங்கிய மெய்த்தொண்டர்கள் சூழ்ந்து வர அவர் எழுந்தருளி வரும்போது,

2573. செல்வம் மல்கியதிரு வால வாயினிற் பணிசெய்
தல்கு தொண்டர்கள் பிள்ளையார் மருங்கணைந் திறைஞ்சி
மல்கு கார்அமண் இருள்கெட ஈங்குவந் தருள
எல்லை யில்தவஞ் செய்தனம் எனஎடுத் திசைத்தார்.

தெளிவுரை : செல்வம் பெருகிய திருஆலவாய்க் கோயிலில் தொண்டு செய்யும் தொண்டர்கள் பிள்ளையார் பக்கத்தில் சேர்ந்து வணங்கி, வந்து சேர்ந்த சமணர்கள் இருள்கெட, இங்குத் தாங்கள் முழுமதிபோல் எழுந்தருளியதற்கு எல்லையில்லாத பெருந்தவம் செய்தோம் ! எனக் கூறித் துதித்தனர்.

2574. அத்தி ருத்தொண்டர் தங்களுக் கருள்முகம் அளித்து
மெய்த்த காதலின் அவரொடும் புறத்தினில் மேவிச்
சித்தம் இன்புறும் அமைச்சனார் திருமடம் காட்டப்
பத்தர் போற்றிடப் பரிசனத் தொடும்இனி தமர்ந்தார்.

தெளிவுரை : அவ்வாறு கூறிய அத்தொண்டர்களுக்கு அருள் முகத்துடன் ஆணைகள் தந்து உண்மை பொருந்திய விருப்புடன் அவர்களுடனே கோயிலின் வெளியே வந்து, உள்ளத்தில் இன்பம் பொருந்திய அமைச்சரான குலச் சிறையார் ஞானசம்பந்தர் இருத்தற்குரிய திருமடத்தைக் காட்ட, அடியார்கள் சூழ்ந்து போற்றத் தம் பரிவாரங்களுடன் அவர் தங்கியிருந்தார்.

2575. பரவு காதலில் பாண்டிமா தேவியார் அருளால்
விரவு நண்பொடு குலச்சிறை யார்விருந் தளிப்பச்
சிரபு ரத்துவந் தருளிய செல்வர்அங் கிருந்தார்
இரவி மேற்கடல் அணைந்தனன் எல்லிவந் தணைய.

தெளிவுரை : போற்றும் பக்தியால் மங்கையர்க்கரசியாரது அருளால் அமைத்து அளிக்க, சீகாழியில் தோன்றியருளிய செல்வரான ஞானப்பிள்ளையார் அத்திருமடத்தில் தங்கியிருந்தார், அப்போது கதிரவன் மேலைக்கடலில் போய் அடைந்தான். அதன்பின் இரவு வந்தது.

2576. வழுதி மாநகர் அதனிடை மாமறைத் தலைவர்
பழுதில் சீரடி யாருடன் பகல்வரக் கண்ட
கழுது போல்வருங் காரமண் குண்டர்கள் கலங்கி
இழுது மையிருட் கிருளென ஈண்டினர் ஒருபால்.

தெளிவுரை : பாண்டியனின் சிறந்த நகரத்தில் சிறந்த அந்தணர் தலைவரான ஞானசம்பந்தர் குற்றம் இல்லாத சிறப்புடைய அடியார்களுடன் பகலில் வரக் கண்ட, பேய் போன்று வரும் கரிய அமணர் கலக்கத்தை அடைந்து குழம்பான மை போன்ற இருளுக்கும் மேம்பட்ட இருள்போல ஒரு பக்கத்தில் கூடினர்.

2577. அங்கண் மேவிய சமணர்கள் பிள்ளையார் அமர்ந்த
துங்க மாமடந் தன்னிடைத் தொண்டர்தங் குழாங்கள்
எங்கும் ஓதிய திருப்பதி கத்திசை எடுத்த
பொங்கு பேரொலி செவிப்புலம் புக்கிடப் பொறாராய்.

தெளிவுரை : அந்த இடத்தில் கூடிய சமணர்கள், ஞானசம்பந்தர் எழுந்தருளிய பெருந்திரு மடத்தில் திருத்தொண்டர் கூட்டங்கள் எங்கும் கூடிப் பெருகி ஓதிய திருப்பதிகத்து இசை ஓங்கி மேலெழும் பேரொலியானது தம் செவிகளில் புக, அதைப் பொறுக்க மாட்டாதவர் ஆகி.

2578. மற்றிவ் வான்பழி மன்னவன் மாறனை எய்திச்
சொற்றும் என்றுதம் சூழ்ச்சியும் ஒருபடி துணிவார்
கொற்ற வன்கடை காவலர் முன்சென்று குறுகி
வெற்றி வேலவற்கு எங்களை விளம்புவீர் என்றார்.

தெளிவுரை : இந்தப் பெரும்பழியினைப் பாண்டியனை அடைந்து சொல்வோம். என்று எண்ணிக்கொண்டு தம் சூழ்ச்சியையும் ஒருபடியாகத் துணிவு கொள்வாராகி, மன்னனின் வாயில் காப்போர்முன் போய் அடைந்து, வெற்றியுடைய வேல் ஏந்திய மன்னனுக்கு யாங்கள் வந்த செய்தியைத் தெரிவியுங்கள் ! என இயம்பினர்.

2579. வாயில் காவலர் மன்னவன் தனைஎதிர் வணங்கி
ஆய மாகிவந் தடிகள்மார் அணைந்தனர் என்ன
ஏயி னான்அணை வாரென அவருஞ்சென் றிசைத்தார்
பாயி னால்உடல் மூடுவார் பதைப்புடன் புக்கார்.

தெளிவுரை : வாயில் காவலர் உள்ளே சென்று அரசன் முன்பு வணங்கி, அடியார்கள் எல்லாரும் கூட்டமாய் வந்துள்ளனர் ! என்றனர், அந்தச் சமணத் துறவியருடன் ஒத்த கருத்துடையவனான மன்னன் அவர்கள் வருவார்களாக ! என்ன, அக் காவலர்களும் வெளியே போய்ச் சமணத் துறவிகளிடம் அதனை உரைத்தனர். பாய் உடுக்கையால் உடலை மூடும் அவர்கள் பதற்றத்துடன் உள்ளே வந்தனர்.

2580. புக்க போதவர் அழிவுறு மனத்திடைப் புலர்ச்சி
மிக்க தன்மையை வேந்தனும் கண்டெதிர் வினவி
ஒக்க நீர்திரண் டணைவதற் குற்றதென் என்னத்
தக்க தல்லதீங் கடுத்தது சாற்றுதற் கென்றார்.

தெளிவுரை : சமண முனிவர்கள் அவ்வாறு புகுந்த சமயத்தில் அவர்களின் வருந்தும் உள்ளத்தின் வாட்டம் மிக்கிருந்த தன்மையினை மன்னன் கண்டு நீங்கள் யாவரும் ஒன்றாகத் திரண்டு இங்கு வந்ததற்குக் காரணம் யாது? என்று வினவ, அம் முனிவர்கள், சொல்லத் தகாத தீமை வந்தது என மொழிந்தனர்.

2581. ஆவ தேல்நுமக் கடுத்தது கூறுவீர் என்று
காவ லன்பரிந் துரைத்தலும் கார்அமண் கையர்
மாவ லாய்உன்றன் மதுரையிற் சைவவே தியர்தாம்
மேவ லால்இன்று கண்டுமுட் டியாமென்று விளம்ப.

தெளிவுரை : அங்ஙனமானால் உமக்கு நேர்ந்ததை எடுத்துக் கூறுங்கள் ! என்று பாண்டியன் அன்புடனே உரைக்க, கரிய சமண வஞ்சர்கள், யானை வீரனான மன்ன ! உம் மதுரை மாநகரத்தில் சைவ வேதியர்கள் வந்து பொருந்தியதைக் கண்டதால் இன்று யாங்கள் கண்டு முட்டு ஆனோம் என்று கூறினர்.

2582. என்று கூறலும் கேட்டுமுட் டியானும்என் றியம்பி
நன்று நல்லறம் புரிந்தவா நானென்று நகுவான்
கன்றும் உள்ளத்த னாகிஅக் கண்ணுதல் அடியார்
இன்றுஇம் மாநகர் அணைந்ததென் அவர்கள்யார் என்றான்.

தெளிவுரை : என்று அச்சமண முனிவர்கள் உரைக்கவும், யானும் அதனைக் கேட்டமையால் கேட்டு முட்டு ஆயினேன் என்று கூறி நான் நல்லறம் புரிந்தவாறு நன்றாக இருந்தது ! என இகழ்ந்து நகைத்துக், கறுவு கொண்ட உள்ளத்துடன் அந்த நெற்றிக் கண்ணையுடைய சிவனடியார்கள் இன்று இந்தப் பெருநகரத்தை அடைந்த காரணம் யாது? அவர்கள் யாவர்? என வினவினான்.

2583. மாலை வெண்குடை வளவர்சோ ணாட்டுவண் புகலிச்
சூல பாணிபால் ஞானம்பெற் றானென்று சுருதிப்
பாலன் அன்பர்தங் குழாத்தொடும் பனிமுத்தின் சிவிகை
மேல ணைந்தனன் எங்களை வாதினில் வெல்ல.

தெளிவுரை : ஆத்தி மாலையும் வெண்கொற்றக் குடையும் கொண்ட சோழரின் வளமையுடைய சீகாழியில் சூலத்தைக் கையில் கொண்ட சிவனிடத்தில் ஞானம் பெற்றான் என்று அந்தணச் சிறுவன் அடியார் கூட்டத்துடன் குளிர்ந்த முத்துச் சிவிகையின் மேல் எங்களையும் வாதில் வெல்ல வந்துள்ளான் !

2584. என்று கூறுவார் இத்திற முன்புதா மறிந்த
தொன்றும் அங்கொழி யாவகை உரைத்தலும் தென்னன்
மன்ற லம்பொழிற் சண்பையார் வள்ளலார் நாமம்
சென்று தன்செவி நிறைத்தலும் செயிர்த்துமுன் சொல்வான்.

தெளிவுரை : என்று இவ்வாறு கூறுவராய், இத்திறங்களை தாம் முன்னம் அறிந்த செய்திகள் ஒன்றையும் விடாமல் கூறினர். மணமுடைய அழகிய சோலைகள் சூழ்ந்த சீகாழி வள்ளலாரின் திருப்பெயர் சென்று செவியில் சேரவும் சினம் கொண்டு முற்படக் கூறுவானாகி,

2585. மற்ற மாமறை மைந்தன்இம் மருங்கணைந் தானேல்
உற்ற செய்தொழில் யாதுசெய் கோம்என உரைப்பச்
செற்ற மீக்கொண்ட சிந்தையும் செய்கையும் உடையோர்
கொற்ற மன்னவன் மொழிக்கெதிர் குறித்துரை செய்வார்.

தெளிவுரை : அந்த அந்தணச் சிறுவன் அங்ஙனம் இங்கு வந்தானாகில், செய்தொழிலாய்ப் பொருந்தியவற்றை யாது செய்யலாம்? என மன்னன் வினவ, சினம் மேலே பொங்கி எழும் மனமும் தொழிலும் கொண்ட அந்தச் சமணர், வெற்றியுடைய மன்னன் மொழிகளுக்கு விடையாய்க் குறித்துக் கூறுபவராய்.

2586. வந்த அந்தணன் தன்னைநாம் வலிசெய்து போக்கும்
சிந்தை யன்றிஅச் சிறுமறை யோனுறை மடத்தில்
வெந்த ழற்பட விஞ்சைமந் திரத்தொழில் விளைத்தால்
இந்த மாநகர் இடத்திரான் ஏகும்என் றிசைத்தார்.

தெளிவுரை : இங்கு வந்த அந்தணனை வலிமை செய்து போக்கும் எண்ணம் இன்றி அந்த அந்தணச் சிறுவன் தங்கியுள்ள மடத்தில் வெம்மையான அழல் சேருமாறு விஞ்சை மந்திரச் செயல் செய்வோமானால், இந்த நகரத்தில் இல்லாது வெளியே போய்விடுவான் ! எனக் கூறினர்.

2587. ஆவதொன் றிதுவே யாகில் அதனையே விரைந்து செய்யப்
போவதென் றவரைப் போக்கிப் பொய்ப்பொரு ளாகக்கொண்டான்
யாவது உரையா டாதே எண்ணத்திற் கவலை யோடும்
பூவணை அமளி புக்கான் பொங்கெழில் தேவி சேர்ந்தாள்.

தெளிவுரை : செய்யக் கூடியது இது வொன்றே ஆனால் அதையே விரைந்து செய்யச் சொல்வீராக ! எனக் கூறி அவர்களைப் போகும்படி அனுப்பிப் பொய்யினைப் பொருள் என்று கொண்ட மன்னன், யாதும் எவரிடமும் பேசாமல் உள்ளத்தில் நிறைந்த கவலையுடன் மலர்கள் பரப்பிய படுக்கையில் சேர்ந்தான். மிக்க எழிலையுடைய பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார் அங்குச் சேர்ந்தார்.

2588. மன்னவன் உரைப்ப தின்றி இருக்கமா தேவி யார்தாம்
என்னுயிர்க் குயிராய் உள்ள இறைவநீ உற்ற தென்னோ
முன்னுள மகிழ்ச்சி இன்றி முகம்புலர்ந் திருந்தாய் இன்று
பன்னிய உள்ளத் தெய்தும் பருவரல் அருள்செய் என்றார்.

தெளிவுரை : அரசன் இங்ஙனம் பேசாமல் இருத்தலைக் கண்டு, அம் மாதரசியார், என் உயிர்க்கு உயிராய் உள்ள நாயகரே ! நீவிர் எத்துன்பத்தை அடைந்தீர் ! முன் உள்ள மகிழ்ச்சியில்லாமல் முகம் வாடியுள்ளீர் ! இன்று இவ்வாறு எண்ணமிடும் உம் உள்ளத்தில் பொருந்திய வருத்தத்தை உரைப்பீராக ! என்றாள்.

2589. தேவியார் தம்மை நோக்கித் தென்னவன் கூறு கின்றான்
காவிநீள் கண்ணி னாய்கேள் காவிரி நாட்டின் மன்னும்
தாவில்சீர்க் கழும லத்தான் சங்கர னருள்பெற் றிங்கு
மேவினான் அடிகள் மாரை வாதினில் வெல்ல என்று.

தெளிவுரை : தம் மனைவியை நோக்கிப் பாண்டிய மன்னன் கூறுவானாய், குவளை மலர் போன்ற நீண்ட விழியை உடையவளே ! கேட்பாயாக ! காவிரி பாயும் நாட்டில் நிலை பெற்றுள்ள குற்றம் அற்ற சிறப்பையுடைய சீகாழிப் பதியினன் சங்கரனின் அருள் பெற்று இங்கு நம் சமண் அடிகளை வாதில் வெல்வதன் பொருட்டாக வந்துள்ளனன் என்று.

2590. வெண்பொடி பூசுந் தொண்டர் விரவினார் அவரை யெல்லாம்
கண்டுமுட் டடிகள் மார்கள் கேட்டுமுட் டியானுங் காதல்
வண்டுணத் துதைந்த கோதை மானியே இங்கு வந்த
பண்புமற் றிதுவே யாகும் பரிசுவே றில்லை என்றான்.

தெளிவுரை : வெண்மையான திருநீற்றைப் பூசும் சிவனடியார்கள் இங்கு வந்துள்ளனர். அவர்களையெல்லாம் கண்டதால் அடிகள் கண்டு முட்டு அச்செய்தியைக் கேட்டதால் நானும் கேட்டு முட்டு, என் அன்புக்குரியவளாய் வண்டுகள் தேன் உண்ணும் பொருட்டு நெருங்கிச் சூடிய மாலை சூடிய மானியே; இங்குக் கூடிய தன்மை இதுவாகும் ! வேறு ஒன்றும் இல்லை ! என்றான்.

2591. மன்னவன் உரைப்பக் கேட்டு மங்கையர்க் கரசி யார்தாம்
நின்னிலை யிதுவே யாகில் நீடிய தெய்வத் தன்மை
அன்னவர் வாது செய்தால் வென்றவர் பக்கஞ் சேர்ந்து
துன்னுவ துறுதி யாகும் சுழிவுறேல் மன்ன என்றார்.

தெளிவுரை : இங்ஙனம் பாண்டியன் உரைக்க அதனைக் கேட்டு மங்கையர்க்கரசியார் உம் நிலைமை இதுவேயானால் வருந்தாமல், நீடிய தெய்வத்தன்மை விளங்கும்படி அவர்கள் வந்துவாதம் செய்தால் அதில் வென்றவரின் பக்கம் சேர்ந்து பொருந்துவதே நன்மை தருவதாகும் ! ஆதலின் வருந்த வேண்டா ! என்றார்.

2592. சிந்தையிற் களிப்பு மிக்குத் திருக்கழு மலத்தார் வேந்தன்
வந்தவா றெம்மை யாள எனவரு மகிழ்ச்சி யோடும்
கொந்தலர் குழலார் போதக் குலச்சிறை யார்அங் கெய்த
இந்தநன் மாற்றம் எல்லாம் அவர்க்குரைத் திருந்த பின்னர்.

தெளிவுரை : உள்ளத்தில் மகிழ்ச்சி மிகுந்து திருக்கழு மலத்தவரின் தலைவர் எம்மை ஆளும் பொருட்டு வந்த விதந்தான் என்னே ! என்று எண்ணுவதால் உண்டாகும் மகிழ்ச்சியுடன், மலரும் மலர்களைச் சூடிய கூந்தலையுடைய மங்கையர்க்கரசியார் வந்தபோது அமைச்சர் குலச்சிறையார் அங்கு வந்து சேர, இந்த நல்ல சொற்களை எல்லாம் அவரிடம் சொல்லிப் பின்னர்,

2593. கொற்றவன் அமைச்ச னாரும் கைதலை குவித்து நின்று
பெற்றனம் பிள்ளை யாரிங் கணைந்திடப் பெறும்பே றென்பார்
இற்றைநாள் ஈசன் அன்பர் தம்மைநாம் இறைஞ்சப் பெற்றோம்
மற்றினிச் சமணர் செய்யும் வஞ்சனை அறியோம் என்றார்.

தெளிவுரை : மன்னவரின் அமைச்சரான குலச் சிறையாரும் கைகளைத் தலைமீது குவித்து வணங்கி நின்று, பிள்ளையார் இங்கு வந்து சேர்வதற்குப் பெரும் பேறு தான் பெற்றோம் ! எனக் கூறத் தொடங்கி, இன்று இறைவரின் அடியாரை நாம் கண்டு வணங்கப் பெற்றோம் ! இனிச் சமணர் செய்யக் கூடிய வஞ்சனை எதுவோ, அறியோம்! எனக் கூறினார்.

2594. மானியார் தாமும் அஞ்சி வஞ்சகப் புலையர் தாங்கள்
ஈனமே புரிய வல்லார் செய்வதென் நாம்என் றெண்ணி
ஞானசம் பந்தர் தம்பால் நன்மையல் லாத செய்ய
ஊனம்வந் தடையில் யாமும் உயிர்துறந் தொழிவ தென்றார்.

தெளிவுரை : அரச மாதேவியாரும் அச்சம் கொண்டு, வஞ்சர்களாகிய அப்புலையர்கள் ஈனமான செயல்களையே செய்ய வல்லார் ! அதற்கு நாம் என்ன செய்வது? என எண்ணி ஞான சம்பந்தரிடம் நன்மையல்லாத செயல்களை இவர்கள் செய்து அதன் மூலம் கேடு வருமானால் நாமும் உயிர் துறப்போம் ! என்று இயம்பினார்.

2595. இவர்நிலை இதுவே யாக இலங்குவேல் தென்ன னான
அவன்நிலை யதுவாம் அந்நாள் அருகர்தம் நிலையா தென்னில்
தவமறைந் தல்ல செய்வார் தங்கள்மந் திரத்தால் செந்தீ
சிவநெறி வளர்க்க வந்தார் திருமடஞ் சேரச் செய்தார்.

தெளிவுரை : இவ்விரவர் நிலைமை இவ்வண்ணமாக, விளங்கும் வேல் ஏந்திய பாண்டியனான அவன் நிலை அதுவே யாகும். அன்றைய நாளில் சமணர்களின் நிலை யாது என்றால் தவவேடத்துள் மறைந்து நின்று தீய செயல்களைச் செய்பவர்களான அவர்கள் தம் மந்திரத்தால், சிவநெறி வளர்க்கத் தோன்றியுள்ள ஞான சம்பந்தரின் மடத்தில் செந்தீ சேருமாறு செயலைச் செய்தனர்.

2596. ஆதி மந்திரம் அஞ்செழுத் தோதுவார் நோக்கும்
மாதி ரத்தினும் மற்றைமந் திரவிதி வருமே
பூதி சாதனர் மடத்தில்தாம் புனைந்தசா தனைகள்
சாதி யாவகை கண்டமண் குண்டர்கள் தளர்ந்தார்.

தெளிவுரை : ஆதி மந்திரமான திருவைந்தெழுத்தை ஒதுகின்றவர் பார்க்கின்ற திசையில் மற்ற மந்திரச் செயல்கள் போய்ச் சேருமோ? சேரா. திருநீற்றுச் சந்தனம் பூண்ட ஞான சம்பந்தரின் திருமடத்தில் தாம் புனைந்த சாதனைகள் ஏவியபடி குறித்த பயனைத் தாராது ஒழிந்ததைப் பார்த்து அந்தச் சமண முனிவர்களாகிய கீழ் மக்கள் தளர்ச்சி கொண்டனர்.

2597. தளர்ந்து மற்றவர் தாஞ்செய்த தீத்தொழில் சரியக்
கிளர்ந்த அச்சம்முன் கெழுமிய கீழ்மையோர் கூடி
விளங்கு நீள்முடி வேந்தன் ஈதறியின்நம் மேன்மை
உளங்கொ ளான்நமர் விருத்தியும் ஒழிக்குமென் றுணர்வார்.

தெளிவுரை : அவர்கள் தாம் செய்த அந்தத் தீத்தொழில் பயன் அளிக்காமல் விழுவதைக் கண்டு மனம் தளர்ந்து எழுந்த அச்சமானது முன்னே மிகுந்ததால், கீழான அந்த அமணர்கள் ஒன்றாகக் கூடி விளங்கும் நீண்ட முடி மன்னனான பாண்டியன் இதை அறிந்தால் நம் மேம்பாட்டில் மனம் கொள்ள மாட்டான். நம் பிழைப்பு வழியையும் ஒழித்து விடுவான் என்று உணரலாயினர்.

2598. மந்தி ரச்செயல் வாய்த்தில மற்றினிச் செய்யும்
புந்தி யாவதிங் கிதுஎனப் பொதிதழல் கொடுபுக்
கந்தண் மாதவர் திருமடப் புறத்தயல் இருள்போல்
வந்து தந்தொழில் புரிந்தனர் வஞ்சனை மனத்தோர்.

தெளிவுரை : மந்திரச் செயல், குறித்த பயனைத் தரவில்லை ! இனிமேல் ஆலோசனையாவது இதுவேயாகும் ! எனத் துணிந்து பொதியும் அனலை எடுத்துக் கொண்டு புகுந்து, அழகிய குளிர்ச்சியுடைய மாதவர்களாகிய சிவனடியார்கள் உறங்கும் திருமடத்தின் வெளிப் பக்கத்தில் வஞ்சனை நிறைந்த மனத்தையுடைய அந்தச் சமணர்கள் இருள் போல் வந்து தம் செயலைச் செய்தனர்.

2599. திரும டப்புறச் சுற்றினில் தீயபா தகத்தோர்
மருவு வித்தஅத் தொழில்வெளிப் படுதலும் மறுகிப்
பரிச னத்தவர் பதைப்பொடும் சிதைத்தது நீக்கி
அருகர் இத்திறம் புரிந்தமை தெளிந்துசென் றணைவார்.

தெளிவுரை : அம்மடத்தின் புறச்சுற்றிலே அத்தீய பாதகர்களான சமணர்கள் சேர்த்த அந்தத் தீத்தொழில் வெளிப் படுதலும், பரிவாரங்கள் கலக்கம் கொண்டு சுழன்று பதைப்புடனே அத்தீயை அணைத்துப் போக்கிச் சமணர்களே இங்ஙனம் செய்தனர் எனத் தெளிந்து போய் அணைவாராய்,

2600. கழும லப்பதிக் கவுணியர் கற்பகக் கன்றைத்
தொழுது நின்றமண் குண்டர்செய் தீங்கினைச் சொன்ன
பொழுது மாதவர் துயிலும்இத் திருமடப் புறம்பு
பழுது செய்வதோ பாவிகாள் எனப்பரிந் தருளி.

தெளிவுரை : சீகாழித் தலத்தில் கவுணியர் குடியில் தோன்றிய கற்பகக் கன்றான பிள்ளையாரை அவர்கள் வணங்கித் தொழுது நின்று, சமணர் செய்த கீழான செயலைச் சொன்ன போது, சிவனடியார்களாகிய மாதவர் உறங்கும் இந்த மடத்தின் வெளிப் பக்கத்தில் தீமை செய்வதோ ! பாவிகளே ! என்று பரிவு கொண்டருளி,

2601. என்பொ ருட்டவர் செய்ததீங் காயினும் இறையோன்
அன்ப ருக்கெய்து மோஎன்று பின்னையும் அச்சம்
முன்பு றப்பின்பு முனிவுற முத்தமிழ் விரகர்
மன்பு ரக்குமெய்ம் முறைவழு எனமனங் கொண்டார்.

தெளிவுரை : இச்செயல் என் பொருட்டாக அவர்கள் செய்த தீங்காகும், என்றாலும் சிவபெருமானின் அடியவர்க்குப் பொருந்துமோ? என உட்கொண்டு மேலும் அச்சம் முன்னே வரப்பின்பு கோபமும் வர, முத்தமிழ் வல்லுநரான அப்பிள்ளைப் பெருமான், அரசன் காவல் செய்யும் நீதி முறை தவறியது என்று மனத்தில் எண்ணம் கொண்டார்.

2602. வெய்ய தீங்கிது வேந்தன்மேற் றெனும்விதி முறையால்
செய்ய னேதிரு வாலவாய் எனுந்திருப் பதிகம்
சைவர் வாழ்மடத் தமணர்கள் இட்டதீத் தழல்போய்ப்
பைய வேசென்று பாண்டியற் காகெனப் பணித்தார்.

தெளிவுரை : எனவே, வெம்மையான இத்தீங்கு வேந்தன் மேல் ஆகும் என்ற விதிமுறையால் செய்யனே! திரு ஆலவாய் எனத் தொடங்கும் திருப்பதிகத்தைச் சிவனடியார் வாழும் மடத்தில் சமணர் வைத்ததீ மெல்லச் சென்று பாண்டியனுக்கு ஆகுக ! என்றுபாடி ஆணையிட்டருளினார்.

2603. பாண்டிமா தேவியார் தமது பொற்பிற்
பயிலுநெடு மங்கலநாண் பாது காத்தும்
ஆண்தகையார் குலச்சிறையார் அன்பி னாலும்
அரசன்பால் அபராதம் உறுத லாலும்
மீண்டுசிவ நெறியடையும் விதியினாலும்
வெண்ணீறு வெப்பகலப் புகலி வேந்தர்
தீண்டியிடப் பேறுடைய னாத லாலும்
தீப்பிணியைப் பையவே செல்க என்றார்.

தெளிவுரை : பாண்டிமாதேவியாரின் அழகிய நீண்ட திருமங்கல நாண் பாதுகாக்கப்பட வேண்டியதாலும், ஆண்மையுடைய குலச்சிறையாரது அன்பினாலும், அசரனிடம் சிவ அபராதம் உண்டாதலாலும், மீண்டும் சிவநெறி அடையும் விதி இருத்தலாலும், வெப்பு நோய் தீருமாறு மன்னனின் மேனியைத் தீண்டித் திருவெண்ணீற்றைச் சீகாழி மன்னவர் இடும் பேறு அரசன் உடைமையாலும் அந்தத் தீய நோயை மெல்லவே சென்று சேர்க என்று பணித்தார்.

2604. திருந்தி சைப்பதி கத்தொடை திருவால வாயில்
மருந்தி னைச்சண்பை மன்னவர் புனைந்திட அருளால்
விரிந்த வெந்தழல் வெம்மைபோய்த் தென்னனை மேவிப்
பெருந்த ழற்பொதி வெதுப்பெனப் பெயர்பெற்ற தன்றே.

தெளிவுரை : சீகாழியில் தோன்றிய தலைவரான ஞானசம்பந்தர் திரு ஆலவாய் என்ற கோயிலில் வீற்றிருக்கின்ற மருந்து வடிவமான இறைவரை, திருந்தும் இசையையுடைய திருப்பதிகம் புனைந்து போற்றிட அவரது திருவருளால் விரிந்து செலுத்தப்பட்ட öவ்வவிய தீத்தொழில் முழுவதும் கூடிய வெம்மையின் தொகுதி போய்ப் பாண்டியனை அடைந்து பெரிய தீயின் பொறியான வெப்பு நோய் எனப் பெயர் பெற்றது.

2605. செய்ய மேனியர் திருமக னார்உறை மடத்தில்
நையும் உள்ளத்த ராய்அமண் கையர்தாம் நணுகிக்
கையி னால்எரி இடவுடன் படும்எல்லி கரப்ப
வெய்ய வன்குண கடலிடை எழுந்தனன் மீது.

தெளிவுரை : சிவந்த மேனியையுடைய சிவபெருமானின் மகனாரான ஞானப் பிள்ளையார் வீற்றிருக்கும் மடத்தில் கவலையினால் வாடும் மனம் உடையவர்களாய்ச் சமணரான கீழ்மக்கள் பக்கத்தில் வந்து கையினால் கொண்டு போய்த் தீயை இட, உடனிருந்து உடன்பட்ட இரவுப் போது மறையக் கதிரவன் கிழக்குக் கடலின் மீது தோன்றினான்.

2606. இரவு பாதகர் செய்ததீங் கிரவிதன் மரபில்
குரவ ஓதியார் குலச்சிறை யாருடன் கேட்டுச்
சிரபு ரப்பிள்ளை யாரைஇத் தீயவர் நாட்டு
வரவ ழைத்தநாம் மாய்வதே எனமனம் மயங்கி.

தெளிவுரை : முன் நாளின் இரவில் பாதகரான சமணர் செய்த இத்தீங்கைச் சூரிய மரபில் தோன்றிய குராமலரை அணிந்த கூந்தலையுடைய மங்கையர்க்கரசியார் குலச்சிறை யாருடன் கேட்டுச் சீகாழிப் பிள்ளையாரை இத்தீயவர் நாட்டில் வருமாறு அழைத்த நாம் உயிர்துறந்து விடுவதே இதற்குக் கழுவாயாகும் ! என உள்ளம் மயங்கினர்.

2607. பெருகும் அச்சமோ டாருயிர் பதைப்பவர் பின்பு
திரும டப்புற மருங்குதீ தின்மையில் தெளிந்து
கருமு ருட்டமண் கையர்செய் தீங்கிது கடைக்கால்
வருவ தெப்படி யாமென மனங்கொளும் பொழுது.

தெளிவுரை : மேலும் மேலும் பெருகும் அச்சத்துடன் அரிய உயிர் பதைக்கும் அவர்கள் இருவரும் அதன் பின்பு திரு மடத்தின் வெளியில் தீமை இல்லாமைக் கேட்டதால் தெளிவடைந்து கரிய முருட்டு உடல் உடைய சமணர்கள் செய்த இந்தத் தீங்கு இதன் மூலமாக விளைவது எப்படி யாகுமோ ? என்று உள்ளத்தில் கொள்ளும்போது,

2608. அரச னுக்குவெப் படுத்ததென் றருகுகஞ் சுகிகள்
உரைசெ யப்பதைத் தொருதனித் தேவியார் புகுத
விரைவும் அச்சமும் மேற்கொளக் குலச்சிறை யாரும்
வரைசெய் பொற்புய மன்னவன் மருங்குவந் தணைந்தார்.

தெளிவுரை : மன்னனுக்கு வெப்பு நோய் உண்டாயிற்று என்று அவன் அருகில் இருக்கும் சுஞ்சுகமார்கள் வந்து சொல்லத்துடித்து, ஒப்பில்லாத அரசமாதேவியார் அரசனது இருப்பிடத்தில் புகுந்தார். விரைந்த செலவும் அச்சமும் பொருந்தக் குலச்சிறையாரும் மலைபோன்ற அழகிய தோள்களையுடைய மன்னனின் பக்கத்தில் வந்து சேர்ந்தார்.

2609. வேந்த னுக்குமெய் விதிர்ப்புற வெதுப்புறு வெம்மை
காந்து வெந்தழற் கதுமென மெய்யெலாங் கவர்ந்து
போந்து மாளிகைப் புறத்துநின் றார்களும் புலர்ந்து
தீந்து போம்படி எழுந்தது விழுந்துடல் திரங்க.

தெளிவுரை : மன்னனுக்கு உடல் நடுக்கம் வர வெதுப்புறும் நோயின் வெம்மை, எரிதலால் வெப்பத்தை வீசும் தீப்போல விரைவாய் உடல் எல்லாம் உள் அடங்கப் புறத்திலும் பரவி, அரண்மனை உறையுளின் புறத்தே நின்றவர்களும் வாடித் தீய்ந்து போகுமாறு உடல் கருகி உலற மேலே எழுந்தது.

2610. உணர்வும் ஆவியும் ஒழிவதற் கொருபுடை ஒதுங்க
அணையல் உற்றவர் அருகுதூ ரத்திடை அகலப்
புணர்இ ளங்கத லிக்குருத் தொடுதளிர் புடையே
கொணரி னுஞ்சுருக் கொண்டவை நுண்துக ளாக.

தெளிவுரை : உணர்வும் உயிரும் ஒழிவதற்காக ஒருபக்கமாய் ஒதுங்கி நிற்கவும், பக்கத்தில் வருபவர் தொலைவாய்ச் சென்று அகலவும், பொருந்தும் வாழையின் இளங்குறுத்தும் தளிரும் பக்கத்தில் கொண்டு வந்தாலும் வெப்பத்தால் காய்ந்து சுருங்கி அவை நுட்பமான துகளாக ஆகவும்,

2611. மருத்து நூலவர் தங்கள்பல் கலைகளில் வகுத்த
திருத்த குந்தொழில் யாவையும் செய்யவும் மேன்மேல்
உருத்தெ ழுந்தவெப் புயிரையும் உருக்குவ தாகக்
கருத்தொ ழிந்துரை மறந்தனன் கௌரியர் தலைவன்.

தெளிவுரை : மருத்துவ நூலில் வல்லவர் தம் பல கலைகளிலும் வகுத்துக் கூறப்பட்ட சிறந்த தக்க மருத்துத் தொழில்கள் எல்லாவற்றையும் செய்யவும், அந்நோய் மேலும் முடுகி எழுந்து, உயிரையும் உருக்குவதாய் ஆக. நினைவு ஒழிந்து பேச்சின்றி மன்னன் கிடந்தான்.

2612. ஆன வன்பிணி நிகழ்வுழி அமணர்க ளெல்லாம்
மீன வன்செயல் கேட்டலும் வெய்துயிர்த் தழிந்து
போன கங்குலிற் புகுந்ததின் விளைவுகொல் என்பார்
மானம் முன்தெரி யாவகை மன்னன்மாட் டணைந்தார்.

தெளிவுரை : இங்ஙனம் வன்மையான அந்த நோய் மூண்டு நிகழும் போது சமணர்கள் எல்லாம் மன்னனின் நிலைமையைக்கேட்டலும் பெருமூச்சு விட்டு வருத்தம் அடைந்து, கடந்த இரவில் செய்த செயலால் வந்த விளைவுதானே இது? என்று ஐயம்கொண்டு, தமக்கு உண்டான அவமானம் முன் தெரியாதபடி மறைத்து அரசனிடம் வந்து சேர்ந்தனர்.

2613. மால்பெருக்குஞ் சமண்கையர் மருங்கு சூழ்ந்து
வழுதிநிலை கண்டழிந்து வந்த நோயின்
மூலநெறி அறியாதே தங்கள் தெய்வ
மொழிநவில்மந் திரங்கொண்டு முன்னும் பின்னும்
பீலிகொடு தைவருதற் கெடுத்த போது
பிடித்தபீ லிகள்பிரம்பி னோடுந் தீந்து
மேலெரியும் பொறிசிதறி வீழக் கண்டு
வெப்பினதி சயம்நோக்கி வெருவின் மிக்கார்.

தெளிவுரை : மயக்கத்தைப் பெருக்கும் சமணரான வஞ்சர் பக்கத்தில் வந்து சூழ்ந்து பாண்டியனின் நோய் முற்றிய நிலையைப் பார்த்து உள்ளம் அழிந்து, அவனுக்கு நேர்ந்த நோயின் மூலத்தை அறியாமலேயே தங்கள் தெய்வத்தின் மொழியை எடுத்துச் சொல்லிக் கொண்டு மயில் இறகால் முன்னும்பின்னுமாகத் தடவுவதற்கு எடுத்தபோது, கையில் பிடித்த பீலிகள் அவற்றுடன் சேர்ந்து பிரம்போடும் தீப்பற்றி எரிதலால் தீப்பொறிகள் சிதறி விழக் கண்டு வெப்பத்தின் அதிசயத்தை நோக்கி மிகவும் சினந்தனர்.

2614. கருகியமா சுடையாக்கைத் தீயோர் தங்கள்
கைத்தூங்கு குண்டிகைநீர் தெளித்துக் காவாய்
அருகனே அருகனே என்றென் றோதி
அடல்வழுதி மேல்தெளிக்க அந்நீர் பொங்கிப்
பெருகும்எரி தழற்சொரிந்த நெய்போ லாகிப்
பேர்த்துமொரு தழல்அதன்மேற் பெய்தாற் போல
ஒருவரும்இங் கிருமருங்கும் இராது போமென்
றமணரைப்பார்த் துரைத்தரசன் உணர்வு சோர்ந்தான்.

தெளிவுரை : கருகிய அழுக்குடைய யாக்கையை உடைய தீயவரான சமணர் தம் கையில் தொங்குகின்ற குண்டி கையின் நீரை மேலே தெளித்து அருகனே ! காப்பாயாக ! காப்பாயாக ! என்று கூறிப் பாண்டியனின் மேல்தெளித்தனர். அந்த நீர் பொங்கிப் பெருகி எரியும் தீயின் மேல் சொரிந்த நெய் போல் ஆகி, அதன் மேலும் ஒரு நெருப்பினை வாரித் தூவியது போல் ஆக, நீங்கள் எவரும் இங்கு இல்லாது அகன்று செல்லுங்கள் என்று மன்னன் சமணரைப் பார்த்துச் சொல்லி உணர்வு தளர்ந்து மயக்கமாயினான்.

2615. பாண்டிமா தேவி யாரும் பயமெய்தி அமைச்சர் பாரம்
பூண்டவர் தம்மை நோக்கிப் புகலியில் வந்து நம்மை
ஆண்டுகொண் டவர்பாற் கங்குல் அமணர்தாம் செய்த தீங்கு
மூண்டவா றினைய தாகி முடிந்ததோ என்று கூற.

தெளிவுரை : அரசமாதேவியாரும் அச்சத்தை அடைந்து அமைச்சுப் பாரத்தை மேற்கொண்ட குலச்சிறையாரைப் பார்த்துச் சீகாழியில் தோன்றி நம்மை ஆளாகக் கொண்ட சம்பந்தரிடத்து இரவில் சமணர்கள் செய்த தீங்குதான் இங்ஙனம் முடிந்ததோ ! என்று சொல்ல,

2616. கொற்றவன் அமைச்ச னாராம் குலச்சிறை யாருந் தாழ்ந்து
மற்றிதன் கொடுமை இந்த வஞ்சகர் மதில்கள் மூன்றும்
செற்றவர் அன்பர் தம்பாற் செய்ததீங் கரசன் பாங்கு
முற்றிய திவர்கள் தீர்க்கின் முதிர்வதே யாவ தென்பார்.

தெளிவுரை : மன்னனின் அமைச்சரான குலச்சிறையாரும் பணிந்து இதன் கொடுமை இந்தச் சமணவஞ்சர் மதில்கள் மூன்றையும் எரித்து அழித்த இறைவரின் அன்பரான ஞான சம்பந்தரிடம் செய்தது. இங்கு அரசனிடம் இவ்வாறு வந்து நிரம்பியது. இவர்கள் தீர்க்க முயன்றால் இது மேலும் பெருகி முடுகுவதே ஆகும் என்று உரைத்தார்.

2617. இருதிறத் தவரும் மன்னன் எதிர்பணிந்து இந்த வெப்பு
வருதிறம் புகலி வந்த வள்ளலார் மதுரை நண்ண
அருகர்கள் செய்த தீய அநுசித மதனால் வந்து
பெருகிய திதற்குத் தீர்வு பிள்ளையார் அருளே என்று.

தெளிவுரை : இரண்டு திறத்தவரும் மன்னனை வணங்கி, இந்த வெப்புநோய் வரும் திறவாமது சீகாழி என்ற பதியில் அவதரித்த வள்ளலாரான சம்பந்தர் மதுரையில் வந்து தங்க, அதைப் பொறாமல் சமணர் செய்த தீங்கானது இவ்வாறு விளைந்து பெருகியது. இதற்குத் தீர்வு செய்ய வல்லது சம்பந்தரின் அருளேயாகும் ! என்று எடுத்துச் சொல்லி.

2618. காயமும் மனமும் மாசு கழுவுதல் செய்யார் செய்யும்
மாயமும் இந்த நோயை வளர்ப்பதே வளர்வெண் திங்கள்
மேயவே ணியர்பால் ஞானம் பெற்றவர் விரும்பி நோக்கில்
தீயஇப் பிணியே அன்றிப் பிறவியுந் தீரு மென்றார்.

தெளிவுரை : உடலிலும் மனத்திலும் பொருந்திய அழுக்கைக் கழுவாத சமணர்கள் செய்யும் மாயத்திறங்களும் இந்த நோயை வளர்ப்பதே அல்லாமல் குறைத்தல் செய்யா. வளரும் பிறைச் சந்திரனை அணிந்த சடையையுடைய இறைவரிடம் ஞானத்தைப் பெற்ற அப்பிள்ளையார் விரும்பிப் பார்த்தாரானால் தீய இந்த நோயே அல்லாது பிறவி நோயும் நீங்கும் என்று கூறினர்.

2619. மீனவன் செவியி னூடுமெய்யுணர் வளிப்போர் கூற
ஞானசம் பந்த ரென்னும் நாமமந் திரமுஞ் செல்ல
ஆனபோ தயர்வு தன்னை அகன்றிட அமண ராகும்
மானமில் லவரைப் பார்த்து மாற்றமொன் றுரைக்க லுற்றான்.

தெளிவுரை : பாண்டிய மன்னனின் செவியிலே மெய்யுணர்வு அளிப்பவரான மங்கையர்க்கரசியாரும் அமைச்சர் குலச்சிறையாரும் மேற்கொண்டவாறு சொல்ல, அதனுள் திருஞானசம்பந்தர் என்னும் திருப்பெயரான திருமந்திரமும் உடன் செல்ல, அப்போது தளர்ச்சி நீங்குதலால் சமணர்கள் என்னும் மானம் இல்லாத மக்களைப் பார்த்து ஒரு பார்த்து ஒரு செய்தியைச் சொல்லத் தொடங்கினான்.

2620. மன்னவன் அவரை நோக்கி மற்றிவர் செய்கை எல்லாம்
இன்னவா றெய்தும் நோய்க்கே ஏதுவா யினஎன் றெண்ணி
மன்னிய சைவ நீதி மாமறைச் சிறுவர் வந்தால்
அன்னவர் அருளால் இந்நோய்அகலுமேல் அறிவேன் என்றான்.

தெளிவுரை : பாண்டிய மன்னன் இவர் செயல்கள் எல்லாம் இத்தகைய நோய்க்கே காரணமாயின என்று மனத்தில் எண்ணி, அச் சமணர்களைப் பார்த்து, நிலைபெற்ற சைவ நீதியின் பெருமறைச் செல்வரான பிள்ளையார் இங்கு வந்தால், அவரது அருளால் இந்த நோய் நீங்குமேயானால் ! தெளிவு பெறுவேன் ! என இயம்பினான்.

2621. என்றுமுன் கூறிப் பின்னும்யானுற்ற பிணியைத் தீர்த்து
வென்றவர் பக்கம் சேர்வன் விரகுண்டேல் அழையும் என்ன
அன்றவர் உவகை பொங்கி ஆர்வத்தால் அணையை நூக்கிச்
சென்றநீர் வெள்ளம் போலுங் காதல்வெள் ளத்தில் செல்வார்

தெளிவுரை : என முதலில் சொல்லிப்பின், யான் அடைந்த நோயைப் போக்கி வெற்றி கொள்பவரின் பக்கம்சேர்வேன். வழியுண்டானால் அவரை அழையுங்கள் ! என்று தேவியாரையும் அமைச்சரையும் நோக்கிச் சொல்லிட, அன்று அவர்கள், அணையை உடைத்துச் சென்ற வெள்ளம் போல், பேரன்பு என்ற வெள்ளத்துடன் செல்பவராய்.

2622. பாயுடைப் பாத கத்தோர் திருமடப் பாங்கு செய்த
தீவினைத் தொழிலை நோக்கி உள்ளழி திருவுள் ளத்தால்
மேயஅத் துயரம் நீங்கவிருப்புறு விரைவி னோடு
நாயகப் பிள்ளை யார்தம் நற்பதம் பணிவா ராகி.

தெளிவுரை : பாயை உடையாய்க் கொண்ட சமணர்களாகிய பாதகர்கள் திருமடத்தில் செய்த தீவினைச் செயலை எண்ணி உள் அழியும் திருவுள்ளத்தில் பொருந்திய அத்துன்பம் நீங்குமாறு, விருப்பம் மிக்க விரைவுடன் தம் தலைவரான பிள்ளையாரின் நல்ல திருவடிகளைப் பணிபவர்களாய்.

2623. மன்னவன் இடும்பை தீர மற்றவன் பணிமேற் கொண்டே
அன்னமென் டையி னாரும் அணிமணிச் சிவிகை யேறி
மின்னிடை மடவார் சூழ வேற்படை அமைச்ச னாரும்
முன்னணைந் தேகச் சண்பை முதல்வனார் மடத்தைச் சார்ந்தார்.

தெளிவுரை : அரசனின் துன்பம் நீங்குமாறு அவனது பணியை மேற்கொண்டு அன்னம் போன்ற மென்மையான நடையுடைய மங்கையர்க்கரசியார், அழகிய மணிகள் பதித்த சிவிகையின் மேல் அமர்ந்து மின்போன்ற இடையை யுடைய பெண்கள் சூழ்ந்து வர, வேல்படையையுடைய அமைச்சரான குலச்சிறையார் முன்னால் செல்ல, இங்ஙனம் சீகாழித்தலத் தலைவர் இருக்கும் திருமடத்தைச் சேர்ந்தனர்.

2624. திருமடஞ் சாரச் சென்று சேயரிக் கண்ணி னார்முன்
வருபரி இழிந்து நின்ற அமைச்சனார் வந்த பான்மை
சிரபுரப் பிள்ளை யார்க்கு விண்ணப்பஞ் செய்வீர் என்னப்
பரிசனத் தவரும் புக்குப் பதமறிந் துணர்த்து கின்றார்.

தெளிவுரை : திருமடத்தைச் சேர நெருங்கிச் சென்ற பின், சிவந்த வரிகள் படர்ந்த கண்களையுடைய அம்மையாரின் முன்பு ஏறி வந்த குதிரையினின்றும் இறங்கி நின்ற அமைச்சர். நாங்கள் இங்கு வந்துள்ளதைச் சீகாழிப் பிள்ளையாரிடம் கூறுங்கள் ! எனக் கூற, பணிமாக்களும் உள்ளே போய் விண்ணப்பிக்க தக்க சமயத்தை அறிந்து கூறுபவராய் ஆயினர்.

2625. பாண்டிமா தேவி யாரும் பரிவுடை அமைச்ச னாரும்
ஈண்டுவந் தணைந்தா ரென்று விண்ணப்பஞ் செய்யச் சண்பை
ஆண்டகை யாரும் ஈண்ட அழையுமென் றருளிச் செய்ய
மீண்டுபோந் தழைக்கப் புக்கார் விரைவுறு விருப்பின் மிக்கார்.

தெளிவுரை : பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியாரும் அன்புடைய அமைச்சரான குலச்சிறையாரும் மீண்டும் வந்துள்ளனர் என்று பரிவாரத்தினர் உரைத்தனர். உரைக்க, சீகாழித் தவத்தலைவரும் அவர்களை விரைவாய் இங்கு அழைத்து வாருங்கள் என்று அருள் செய்தார். அவர்கள் மீண்டும் சென்று, மங்கையர்க்கரசியார் குலச்சிறையாரிடம் வரும்படி அழைக்க, விரைவுடைய விருப்பத்துடன் உள்ளே அவர்கள் புகுந்தனர்.

2626. ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்துணையை
வானத்தின் மிசையன்றி மண்ணில்வளர் மதிக்கொழுந்தைத்
தேனக்கமலர்க் கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும்
கானத்தின் எழுபிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள்.

தெளிவுரை : சிவஞானமாய் அமைந்த திருவுருத்தை, நான்கு மறைகளின் ஒப்பற்ற துணையாயினவரை, வானத்தின் மேலே அல்லாது மண் உலகத்தில் வளரும் பிறைச்சந்தின் போன்றவரை, தேன் ஊறி வழியும் கொன்றை மலரையணிந்த சிவந்த சடையுடைய சிவபெருமானது சீர்களைத் தொடுகின்ற கானத்தின் ஏழு பிறப்புக்கு இடமான பிள்ளையாரைக் கண்கள் களிப்படையுமாறு பார்த்தனர். 

2627. கண்டபொழு தமண்கொடியோர் செய்தகடுந் தொழில்நினைந்தே
மண்டியகண் ணருவிநீர் பாயமலர்க் கைகுவித்துப்
புண்டரிகச் சேவடிக்கீழ்ப் பொருந்தநில முறவிழுந்தார்
கொண்டகுறிப் போடுநெடி துயிர்த்தழிந்த கொள்கையராய்.

தெளிவுரை : அங்ஙனம் பார்த்தபோது சமணரான கொடியவர் செய்த கொடிய தொழிலை எண்ணி, கண்களினின்று அருவிபோல மிகுந்த நீர் சொரி, மலர் போன்ற கைகளைக் கூப்பி, பிள்ளையாரின் தாமரை மலர் போன்ற சிவந்த திருவடிகளின் கீழே பொருந்தும்படி நிலத்தில் பொருந்த விழுந்து வணங்கியவர்களாய் உட்கொண்ட குறிப்புடன் பெருமூச் செறிந்த உள்ளம் அழிந்த நிலைமையினராய்.

2628. உரைகுழறி மெய்ந்நடுங்கி ஒன்றும்அறிந் திலராகித்
தரையின்மிசைப் புரண்டயர்ந்து சரணகம லம்பற்றிக்
கரையில்கவ லைக்கடற்கோர் கரைபற்றி னார்போன்று
விரைவுறுமெய் அன்பினால் விடாதொழிவார் தமைக்கண்டு.

தெளிவுரை : சொல் தடுமாறி உடல் நடுங்கி உள்ளம் கலங்கியதால் ஒன்றும் அறியாதவர்களாகி, நிலத்தின் மீது புரண்டு தளர்ச்சி கொண்டு பிள்ளையாரின் திருவடித் தாமரைகளைப் பற்றிக் கொண்டு, எல்லை இல்லாத கவலையான கடலில் விழுந்து தளர்பவர்கள் அதினின்று ஏறுவதற்கு உரிய கரையை பற்றிக் கொண்டவர் போல், விரைகின்ற உள்ளம் அன்பு காரணமாக விடாமல் பற்றிய படியே கிடந்த அவர்களைப் பார்த்து,

2629. அருமறைவாழ் பூம்புகலி அண்ணலார் அடிபூண்ட
இருவரையுந் திருக்கையால் எடுத்தருளித் தேற்றிடவும்
தெருமந்து தெளியாதார் தமைநோக்கிச் சிறப்பருளித்
திருவுடையீர் உங்கள்பால் தீங்குளதோ எனவினவ.

தெளிவுரை : அரிய வேதங்கள் வாழ்வதற்காகச் சீகாழியில் வந்து அவதரித்த அண்ணலாரான பிள்ளையார், தம் திருவடிகளைப் பற்றிக் கொண்டு கிடந்த அந்த இருவரையும் தம் கைகளால் எடுத்துத் தேறுதல் செய்யவும், உள்ளம் அழன்று தெளிவடையாமல் கலங்கி நின்ற அவர்களைப் பார்த்தருளிச் சிறப்பு செய்து, திருவுடையவர்களே ! உங்களிடம் ஏதேனும் தீமை வந்திருக்கின்றதோ ? என வினவ,

2630. வெஞ்சமணர் முன்செய்த வஞ்சனைக்கு மிகஅழிந்தே
அஞ்சினோம் திருமேனிக் கடாதென்றே அதுதீர்ந்தோம்
வஞ்சகர்மற் றவர்செய்த தீத்தொழில்போய் மன்னவன்பால்
எஞ்சலிலாக் கொடுவெதுப்பாய் எழாநின்ற தெனத்தொழுது.

தெளிவுரை : கொடிய சமணர் முன்பு செய்த வஞ்சனைகளைப் பற்றி மிகவும் கலங்கி அச்சம் கொண்டோம் ! தங்கள் திருமேனிடம் அவை ஒன்றும் தீங்கு செய்ய முடியாது எனத் துணிந்து அந்த அச்சம் தவிர்ந்தோம், வஞ்சர்களாகிய அவர்கள் செய்த தீய செயல் போய் மன்னனிடம் அளவில்லாத கொடி வெப்பு நோயாய் உருக் கொண்டு நின்றது ! எனக் கூறி வணங்கி,

2631. வெய்யதொழில் அமண்குண்டர் விளைக்கவரும் வெதுப்பவர்தாஞ்ம்
செய்யுமதி மாயைகளால் தீராமைத் தீப்பிணியால்
மையலுறு மன்னவன்முன் மற்றவரை வென்றருளில்
உய்யும்எம துயிரும் அவன் உயிரும்என உரைத்தார்கள்.

தெளிவுரை : கொடிய செயல் செய்யும் சமணர்களான கீழ் மக்கள் செய்தவற்றால் உண்டான வெப்பு நோயானது அவர்கள் செய்யும் மாயத் தீர்வுத் தொழில்களாலே நீங்காத படியால் தீய நோயால் மயக்கம் அடைந்த அரசன் முன்பு அவர்களை வென்று அருளிச் செய்தால் எம் உயிரும் மன்னவர் உயிரும் உய்யும் ! என்று உரைத்தனர்.

2632. என்றவர் உரைத்த போதில் எழில்கொள்பூம் புகலி வேந்தர்
ஒன்றும்நீர் அஞ்ச வேண்டா உணர்விலா அமணர் தம்மை
இன்றுநீர் உவகை எய்த யாவருங் காண வாதில்
வென்றுமீ னவனை வெண்ணீ றணிவிப்பன் விதியால் என்றார்.

தெளிவுரை : என இங்ஙனம் அவர்கள் உரைத்த போது, அழகுடைய பூப்போன்ற சீகாழித்தலைவரான பிள்ளையார், நீவிர் ஒன்றுக்கும் அஞ்ச வேண்டா ! உணர்வற்ற சமணர்களை இன்று நீவிர் மகிழ்ச்சியடையுமாறு எல்லாரும் காணும்படி வென்று பாண்டியனைத் திருநீறு அணியும்படி இறைவன் ஆணையினால் செய்வேன் ! என மொழிந்தருளினார்.

2633. மொழிந்தருள அதுகேட்டு முன்னிறைஞ்சி முகமலர்வார்
அழுந்தும்இடர்க் கடலிடைநின் றடியோமை எடுத்தருளச்
செழுந்தரளச் சிவிகையின்மேல் தென்னாடு செய்தவத்தால்
எழுந்தருளப் பேறுடையோம்என்பெறோம் எனத்தொழலும்.

தெளிவுரை : இவ்வாறு ஞானசம்பந்தர் உரைத்ததை அவர்கள் கேட்டுத் திருமுன்பு வணங்கி முகம் மலர்ச்சி கொண்டு ஆழ்ந்து கிடந்த துன்பமான கடலினின்றும் அடியேமை மேலே எடுத்தருளும் பொருட்டுச் செழுமையான முத்துச் சிவிகையின் மீது தென்நாடு செய்த பெருந்தவப் பயனால் எழுந்தருளும் பெரும் பேறு பெற்றோம். எனவே என்ன பேறுதான் பெறமாட்டோம் ! என்று சொல்லி வணங்கியதும்,

2634. ஆவதும் அழிவும் எல்லாம் அவர்செயல் அமண ராகும்
பாவகா ரிகளை நோக்கும் பழுதுடன் நீங்க வெல்லச்
சேவுயர் கொடியி னார்தந் திருவுள்ளம் அறிவே னென்று
பூவலர் பொழில்சூழ் சண்பைப் புரவலர் போது கின்றார்.

தெளிவுரை : ஆக்கம் அழிவு ஆகிய அவையெல்லாம் அவர் என்று வேதங்கள் எல்லாம் சுட்டிக் கூறும் இறைவரின் செயலே ஆகும், சமணர் என்ற பாவம் செய்பவர்களைப் பார்க்கவும் பேசவும் மற்றச் செயல் செய்யவும் நேர்தலால் வரும் குற்றம் அந்தச் செயல்களுடன் நீங்கவும், அவர்களை வெல்லவும் காளைக் கொடியை யுயர்த்திய சிவபெருமானின் திருவுள்ளக் குறிப்பை அறிவேன், எனக் கூறி, மலர்கள் மலர்கின்ற சோலைகள் சூழ்ந்த சீகாழித் தலைவரான பிள்ளையார் பாண்டியனிடம் செல்பவராய்,

2635. வையகம் உய்ய வந்த வள்ளலார் மடத்தி னின்று
மெய்யணி நீற்றுத் தொண்டர் வெள்ளமும் தாமும் போந்து
கையிணை தலையின் மீது குவியக்கண் மலர்ச்சி காட்டச்
செய்யவார் சடையார் மன்னும் திருவால வாயுள் புக்கார்.

தெளிவுரை : இவ்வுலகம் உய்ய வந்த ஞானசம்பந்தர் தாம் இருந்த மடத்தினின்று உடலில் திருநீற்றை அணிந்து கொண்டுள்ள தொண்டரின் வெள்ளமும் தாமும் சென்று, இருகைகளும் தலைமீது குவியவும், கண்கள் மலர்ச்சியைக் காட்டவும், சிவந்த சடையையுடைய இறைவர் நிலைபெற எழுந்தருளியிருக்கின்ற திருவாலவாய்க் கோயிலுக்குள் புகுந்தனர்.

2636. நோக்கிட விதியி லாரை நோக்கியான் வாது செய்யத்
தீக்கனல் மேனி யானே திருவுள மேஎன் றெண்ணில்
பாக்கியப் பயனாய் உள்ள பாலறா வாயர் மெய்ம்மை
நோக்கிவண் டமிழ்செய் மாலைப் பதிகந்தான் நுவலலுற்றார்.

தெளிவுரை : தீயைப் போன்ற மேனியையுடையவனே ! நோக்குதற்கு விதியில்லாத சமணரை நோக்கி யான் வாது செய்தற்குத் தங்களுக்குத் திருவுள்ளமோ? என்று எண்ணில்லாத பாக்கியங்களின் பயனாய் உள்ள பாலறா வாயறான சம்பந்தர் உண்மைத்திறத்தை நோக்கி, வளமை பொருந்திய தமிழால் ஆகிய மாலையான திருப்பதிகத்தைப் பாடி,

2637. கானிடை ஆடு வாரைக் காட்டுமா வுரிமுன் பாடித்
தேனலர் கொன்றை யார்தம் திருவுளம் நோக்கிப் பின்னும்
ஊனமில் வேத வேள்வி என்றெடுத் துரையின் மாலை
மானமில் அமணர் தம்மை வாதில்வென் றழிக்கப் பாடி.

தெளிவுரை : சுடுகாட்டில் நடனம் செய்பவரான இறைவரை காட்டு மாவுரி எனத் தொடங்கிப் பாடித், தேன் சிந்துகின்ற கொன்றை மலர் சூடிய இறைவரின் திருவுள்ளக் குறிப்பை அறிந்து கொண்டு, மேலும் ஊனத்தை இல்லையாகச் செய்யும் வேதவேள்வி எனத் தொடங்கிச் சொல்பதிகத்தை மானம் இல்லாத சமணர்களை வாதத்தில் வென்று அழிக்கப் பாடினார்.

2638. ஆலமே அமுத மாக உண்டுவா னவர்க்க ளித்துக்
காலனை மார்க்கண் டர்க்காக்காய்ந்தனை அடியேற் கின்று
ஞாலம்நின் புகழே யாக வேண்டும்நான் மறைக ளேத்துஞ்
சீலமே ஆல வாயில் சிவபெரு மானே என்றார்.

தெளிவுரை : நான்கு வேதங்களும் போற்றும் சீலமானவரே ! திருவாலவாயில் எழுந்தருளிய சிவபெருமானே ! தாங்கள் நஞ்சையே அமுதமாய் உண்டு தேவர்க்கு அருள் செய்ததுடன் மார்க்கண்டேயருக்காகக் காலனையும் உதைத்து உருட்டினீர் ! இன்று அடியேனுக்கு இந்த நிலவுலகம் முழுதும் தங்களது புகழே ஆகப் பரவ வேண்டும் ! என வேண்டிக் கொண்டார்.

2639. நாதர்தம் அருள்முன் பெற்று நாடிய மகிழ்ச்சி பொங்கப்
போதுவார் பணிந்து போற்றி விடைகொண்டு புனித நீற்று
மேதகு கோலத் தோடும் விருப்புறு தொண்டர் சூழ
மூதெயில் கபாடம் நீடு முதல்திரு வாயில் சார்ந்தார்.

தெளிவுரை : இறைவரின் திருவருளை முன்னே பெற்றுக் கொண்டு, நாடிய அருள் உணரப் பெற்றமையால் பெற்ற மகிழ்ச்சி பொங்கச் செல்பவராய், வணங்கித் துதித்து, வாதில் வெல்ல இறைவர் அருள் பெற்றுக்கொண்டு, தூய திருநீற்றின் திருக்கோலப் பொலிவுடன் அன்புடைய தொண்டர்கள் சூழ்ந்து வரப் பழைமையான மதில்வாயில் பொருந்திய முதல் திருவாயிலை அடைந்தார்.

2640. அம்மலர்க் குழலி னார்க்கும் அமைச்சர்க்கும் அருள வேண்டிச்
செம்மணிப் பலகை முத்தின் சிவிகைமேற் கொண்ட போதில்
எம்மருங் கினிலும் தொண்டர் எடுத்தஆர்ப் பெல்லை இன்றி
மும்மைநீ டுலக மெல்லாம் முழுதுடன் நிறைந்த தன்றே.

தெளிவுரை : அழகிய மலர்களைச் சூடிய கூந்தலையுடைய மங்கையர்க்கரசியாருக்கும் குலச்சிறையாருக்கும் அருள் செய்ய வேண்டிச் சிவந்த மணிகள் பொருந்தி பலகை யுடைய முத்துச்சிவிகை மீது சம்பந்தர் ஏறியருளியபோது, எல்லாப் பக்கங்களிலும் தொண்டர்கள் எழுப்பிய ஆரவார ஒலி, அப்போதே, அளவில்லாது பெருகி, மூன்றாய் உள்ள உலகங்களிலும் நிறைந்தது.

2641. பல்லிய நாதம் பொங்கப் படர்திரு நீற்றின் சோதி
நல்லொளி வட்ட மாகி நண்ணிமேல் வருவ தென்ன
வில்வளர் தரளக் கோவை வெண்குடை நிழற்றி வெவ்வே
றெல்லையில் முத்தின் காளம் தாரைசங் கெங்கும் ஊத.

தெளிவுரை : பலவகையான வாத்தியங்களின் ஒலி மிகுந்து ஒலிக்க, எங்கும் படர்ந்து பெருகும் திருநீற்றின் ஒளியானது நல்ல ஒளிவட்டமாய் உருக்கொண்டு பொருந்தி மேலே வருவதுபோல் ஒளி பெருகும் முத்துக் கோவைகளையுடைய வெண்குடையானது மேலே நிழலைச் செய்ய, வேறுவேறாக அளவில்லாத முத்துக் காளமும் தாரையும் சங்குகளும் எங்கும் ஒலித்தன.

2642. கண்ணினுக் கணியாய் உள்ளார் எழுச்சியிற் காட்சி பெற்றார்
நண்ணிய சமயம் வேறு நம்பினர் எனினும் முன்பு
பண்ணிய தவங்கள் என்கொல் பஞ்சவன் தஞ்சம் மேவிப்
புண்ணிய மூர்த்தி வந்து மதுரையில் புகுத என்றார்.

தெளிவுரை : கண்ணுக்கு அணியாக விளங்கும் பிள்ளையாரின் திருவெழுச்சியின் காட்சியைப் பெற்ற அந்த நகர மக்கள் தாங்கள் சார்ந்த சமணமான வேற்றுச் சமயத்தை நம்பினராயினும், பாண்டிய மன்னன் அடைக்கலம் புகும் பொருளாய்ப் பொருந்திப் புண்ணிய வடிவினரான இவர் மதுரையில் வந்து புகுதற்கு, இந்தப் பாண்டியன் முன்னே செய்த தவங்கள்தாம் எவையோ? எனவுரைத்தனர்.

2643. தென்னவன் தேவி யாரும் திருமணிச் சிவிகை மீது
பின்வர அமைச்சர் முன்பு பெருந்தொண்டர் குழாத்துச் செல்லப்
பொன்னணி மாட வீதி யூடெழுந் தருளிப் புக்கார்
கன்னிநா டுடையான் கோயில் காழிநா டுடைய பிள்ளை.

தெளிவுரை : பாண்டியனின் மனைவியாரும் அழகிய மணிகளையுடைய சிவிகையில் அமர்ந்து பின்னால் வர, அமைச்சரான குலச்சிறையார் தம் திருமுன்பு தொண்டர் கூட்டத்துடன் கலந்து செல்ல, இவ்வாறு பொன் அணிகளையுடைய மாடவீதியின் வழியாய் எழுந்தருளிச் சென்று, சீகாழி நாட்டுத் தலைவரான சம்பந்தர், கன்னி நாட்டரசனான பாண்டியனின் அரண்மனைக்குள் புகுந்தார்.

2644. கொற்றவன் தன்பால் முன்பு குலச்சிறை யார்வந் தெய்திப்
பொற்றட மதில்சூழ் சண்பைப் புரவலர் வரவு கூற
முற்றுயர் சிறிது நீங்கி முழுமணி அணிப்பொற் பீடம்
மற்றவன் முடியின் பக்கத் திடுகென வல்ல னானான்.

தெளிவுரை : பாண்டியனிடம் முன்னால் குலச்சிறையார் வந்து சேர்ந்து, பொன்னால் ஆன மதில் சூழ்ந்த சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரின் வருகையை அறிவித்தார்; முன் உண்டாகியிருந்த துன்பம் சிறிது நீங்கப்பெற்ற அந்தப் பாண்டியன் முழுதும் மணிகள் பதித்த பொன் பீடத்தைத் தன் தலைப்பக்கத்தில் இடுவீராக ! என்று சொல்லவல்ல ஆற்றில் உடையவன் ஆனான்.

2645. மந்திரி யாரைப் பின்னும் எதிர்செல மன்னன் ஏவச்
சிந்தையுள் மகிழ்ந்து போந்தார் செயலையான் சமயத் துள்ளோர்
பைந்துணர் அலங்கல் மன்னன் பரிசுகண் டிதுவோ பண்பால்
நந்தனிச் சமயந் தன்னை நாட்டுமா றென்று பின்னும்.

தெளிவுரை : மேலும், தன் அமைச்சரைச் சென்று ஞான சம்பந்தரை அழைத்து வரும்படியாய் ஏவிட, அவரும் மனத்தில் மகிழ்ச்சியுடையவராய்ச் சென்றார். அசோகினனான அருகனது சமயத்தில் உள்ள சமணர்கள் பசிய பூங் கொத்துகளால் ஆன வேப்பமாலையை அணிந்த மார்பையுடைய பாண்டிய மன்னனின் தன்மையைப் பார்த்து, நம் ஒப்பற்ற சமயத்தைப் பண்பாய் நாட்டும் வழி இதுவோ ! எனக் கூறி மேலும் சொல்வார்களாய்,

2646. நின்அற நெறியை நீயே காத்தருள் செய்தி யாகில்
அன்னவர் தம்மை இங்கே அழைத்தனை அவரும் யாமும்
முன்னுற ஒக்கத் தீர்க்க மொழிந்துமற் றவரால் தீர்ந்த
தென்னினும் யாமும் தீர்த்தோ மாகவும் இசைவா யென்றார்.

தெளிவுரை : உம் அறநெறியான சமயத்தை நீயே காத்தருள் செய்வாயானால், அவரை இங்கே வரும்படி அவ்வாறு அழைப்பினும் அவரும் நாங்களும் உன் முன்னே ஒருங்குகூடி, இந்நோயைத் தீர்க்கும்படி சொல்லி அவரால் நோய் தீர்ந்தால், நாங்களும் தீர்த்தோம் என்று கூற, உடன்படுவாயாக ! எனக் கூறினர்.

2647. பொய்தவ மாகக் கொண்ட புன்தலைச் சமணர் கூறச்
செய்தவப் பயன்வந் தெய்தும் செவ்விமுன் னுறுத லாலே
எய்திய தெய்வச் சார்வால் இருதிறத் தீருந் தீரும்
கைதவம் பேச மாட்டேன் என்றுகை தவனுஞ் சொன்னான்.

தெளிவுரை : பொய்யை மெய்த்தவமாகக் கொண்ட புன்மையான தலையையுடைய சமணர்கள் சொல்ல, முன் செய்த தவத்தின் பயன் வந்து பயன் அளிக்கும் காலம் பொருந்துவதனால் சேர்ந்த உங்கள் தெய்வங்களின் சார்பினால் இரு பக்கத்தவரும் தீருங்கள் ! நான் நடுவு நிலையினின்று தவறி வஞ்சம் பேச மாட்டேன் ! எனப் பாண்டியன் கூறினான்.

2648. என்றவன் உரைப்பக் குண்டர் எண்ணங்கெட் டிருந்த எல்லைத்
தென்தமிழ் நாடு செய்த செய்தவக் கொழுந்து போல்வார்
வன்தனிப் பவனம் முன்னர் வாயிலுள் அணைந்து மாடு
பொன்திகழ் தரளப் பத்திச் சிவிகைநின் றிழிந்து புக்கார்.

தெளிவுரை : என அந்தப் பாண்டியன் உரைக்க அமணர்கள் தம் கருத்துக் குலைந்து மனம் குன்றியிருந்தனர். அவ்வளவில், தென்தமிழ் நாடான பாண்டிய நாடு முன் செய்த தவத்தின் கொழுந்து போன்ற ஞானசம்பந்தர் வலிய ஒப்பில்லாத அரண்மனையின் முன் உள்ள வாயிலை அடைந்து பக்கங்களில் பொன்பூண்டு விளங்கும் முத்துக்களையுடைய பல்லக்கினின்றும் இறங்கி உள்ளே சென்றார்.

2649. குலச்சிறை யார்முன் பெய்தக் கொற்றவன் தேவி யாரும்
தலத்திடை இழிந்து சென்றார் தண்டமிழ் நாட்டு மன்னன்
நிலத்திடை வானி னின்று நீளிருள் நீங்க வந்த
கலைச்செழுந் திங்கள் போலும் கவுணியர் தம்மைக் கண்டான்.

தெளிவுரை :  மன்னனிடம் அறிவித்த பின்பு குலச்சிறையார் ஞானசம்பந்தரின் திருமுன்பு வந்து சேர, அரசமாதேவியாரும் அரண்மனையுள் வந்து தம் சிவிகையினின்றும் இறங்கிச் சென்றனர். தன்மையுடைய தமிழ்நாட்டின் மன்னனான பாண்டியன், வானத்தினின்று நீண்ட இருள் நீங்கும்படி நிலத்தில் வந்த நிறைந்த கலைகளைக் கொண்ட செழித்த சந்திரனைப் போன்ற கவுணியர் பெருமானான பிள்ளையாரைக் கண்டான்.

2650. கண்டஅப் பொழுதே வேந்தன் கையெடுத் தெய்த நோக்கித்
தண்துணர் முடியின் பாங்கர்த் தமனியப் பீடங் காட்ட
வண்டமிழ் விரகர் மேவி அதன்மிசை இருந்தார் மாயை
கொண்டவல் லமணர் எல்லாம் குறிப்பினுள் அச்சங் கொண்டார்.

தெளிவுரை : பார்த்த அப்போதே மன்னன் கைகளைத் தூக்கி வழிபடும் பண்பு பொருந்தும்படி நோக்கிக் குளிர்ந்த மலர்களையுடைய தன் முடியின் பக்கத்தில் இடப்பட்ட பீடத்தில் அமருமாறு கைகளைக் காட்டிட, வன்மையுடைய தமிழ் வல்லுநரான ஞானசம்பந்தர் அப்பீடத்தின் மீது அமர்ந்தார். மாயங்களைக் கொண்ட அமணர்கள் எல்லாரும் தம் மனத்துள் எழுந்த குறிப்பால் அச்சம் கொண்டனர்.

2651. செழியனும் பிள்ளை யார்தம் திருமேனி காணப் பெற்று
விழியுற நோக்க லாலே வெம்மைநோய் சிறிது நீங்கி
அழிவுறும் மனம் நேர்நிற்க அந்தணர் வாழ்வை நோக்கிக்
கெழுவுறு பதியா தென்று விருப்புடன் கேட்ட போது.

தெளிவுரை : பாண்டியனும் ஞானசம்பந்தரின் திருமேனியைக் காணப் பெற்றவனாய் விழி பொருந்த நோக்கியதால் வெப்பு நோய் மேலும் சிறிது நீங்கப் பெற்று, ஒரு நிலையில் நில்லாது வசம் இழப்பதும் பின வசம் உறுவதுமாகி நின்ற மனம், ஒரு வகையிலே நேரே நிற்கவுமான தன்மை பெற்று, அந்தணர் வாழ்வாய் அவதரித்த ஞானசம்பந்தரைப்பார்த்து, வாழ்வு பொருந்துதலைப் பெற்ற உமது ஊர் யாது? என்று விருப்புடன் வினவியபோது,

2652. பொன்னிவளந் தருநாட்டுப் புனற்பழனப் புறம்பணைசூழ்
கன்னிமதிற் கழுமலம்நாம் கருதுமூர் எனச்சிறந்த
பன்னிரண்டு பெயர்பற்றும் பரவியசொல் திருப்பதிகம்
தென்னவன்முன் பருள்செய்தார் திருஞான சம்பந்தர்.

தெளிவுரை : காவிரியாறு பாய்ந்து வளத்தை அளிக்கும் சோழ நாட்டில் நீர் நிறைந்த வயல்களையுடைய மருத நிலம் சூழ்ந்த அழியாத மதிலால் சூழப்பெற்ற திருக்கழுமலம் (சீகாழி) என்பது எமது ஊராகும் என்று சிறப்புடைய பன்னிரண்டு பெயர்களையும் பற்றிப் போற்றிய கருத்துடைய திருப்பதிகத்தை ஆளுடைய பிள்ளையார் அம் மன்னனின் முன்பு பாடியருளினார்.

2653. பிள்ளையார் செம்பொன்மணிப் பீடத்தில் இருந்தபொழு
துள்ளநிறை பொறாமையினால் உழையிருந்த காரமணர்
கொள்ளுமனத் திடையச்சம் மறைத்துமுகங் கோபத்தீத்
துள்ளியெழும் அனற்கண்கள் சிவந்துபல சொல்லுவார்.

தெளிவுரை : ஞானசம்பந்தர் பொன் பீடத்தில் அமர்ந்திருந்தபோது உள்ளத்தில் உண்டான பொறாமையினால், பக்கத்தில் இருந்த கருநிறமுடைய சமணர், தம் மனத்திடை கொண்ட அச்சத்தை மறைத்து முகத்தில் சினத்தீயானது துள்ளி எழுவதுபோல் கண்கள் சிவந்து பலவகையாய்ச் சொல்வாராய்.

2654. காலையெழுங் கதிரவனைப் புடைசூழுங் கருமுகில்போல்
பீலிசேர் சமண்கையர் பிள்ளையார் தமைச்சூழ்வார்
ஏலவே வாதினால் வெல்வதனுக் கெண்ணித்தாம்
கோலுநூ லெடுத்தோதித் தலைதிமிர்ப்பக் குரைத்தார்கள்.

தெளிவுரை : காலையில் தோன்றும் கதிரவனைச் சூழ்ந்த கருமையான முகில் கூட்டத்தைப் போல் மயில் இறகை ஏந்திய சமணக் கூட்டத்தவர் பிள்ளையாரைச் சூழ்பவராய்ப் பொருந்தும்படி வாதில் வெல்வதற்கு எண்ணம் கொண்டு தாம் போற்றும் ஆருகத நூலில் கண்ட பொருள்களை எடுத்துக் கூறித் தலைகள் அசைத்துக் குரைத்தார்கள்.

2655. பிள்ளையார் அதுகேளாப் பேசுகநும் பொருளெல்லை
உள்ளவா றென்றருள ஊத்தைவாய்ப் பறிதலையர்
துள்ளிஎழுந் தநேகராய்ச் சூழ்ந்துபத றிக்கதற
ஒள்ளிழையார் அதுகண்டு பொறாராகி உள்நடுங்கி.

தெளிவுரை : ஞானசம்பந்தர் அதனைக் கேட்டு, உங்கள் கொள்கையின்படியுள்ள பொருள் முடிவுகளை உள்ளபடி கூறுங்கள் என்று அருள, ஊத்தை வாயையும் பறித்த தலையையும் உடைய சமணர் துள்ளிப் பலராக எழுந்து பிள்ளையாரைச் சூழ்ந்து பதறிக் கதறவே, ஒளியுடைய அணிகளை அணிந்த மங்கையர்க்கரசியார் அதைக் கண்டு பொறாமல் உள்ளம் நடுங்கி,

2656. தென்னவன் தன்னை நோக்கித் திருமேனி எளியர் போலும்
இன்னருட் பிள்ளை யார்மற்  றிவர் உவர் எண்ணி லார்கள்
மன்னநின் மயக்க மெங்கள்வள்ளலார் தீர நல்கும்
பின்னையிவ் வமணர் மூள்வார் வல்லரேல் பேச என்றார்.

தெளிவுரை : பாண்டிய மன்னனைப் பார்த்து, இனிய அருளையுடைய பிள்ளையாரான இவர் சிறுவர். ஆனால் சமணர்களாகிய இவர்கள் எண் இல்லாதவர். மன்ன ! உம் வெப்பு நோயின் மயக்கத்தை எங்கள் பிள்ளையார் நீங்கும்படி அருள் செய்வார். அதன்பின் இந்த அமணர் வாது செய்ய வல்லவரானால் பேசுவாராக ! எனக் கூறினார்.

2657. மாறனும் அவரை நோக்கி வருந்தல்நீ என்று மற்று
வேறுவா தென்கொல் என்மேல் வெப்பொழித் தருகர் நீரும்
ஆறணி சடையி னாருக் கன்பராம் இவரும் நீங்கள்
தேறிய தெய்வத் தன்மை என்னிடைத் தெரிப்பீர் என்றான்.

தெளிவுரை : பாண்டியனும் மங்கையர்க்கரசியாரைப் பார்த்து, நீ வருந்தாதே ! எனக் கூறி, பின் பிற வாது என்ன வேண்டும் ? அருகர்களாகிய நீங்களும் கங்கையை அணிந்த சடையுடையவர்க்கு அடியவரான இவரும், என் மீது உள்ள இந்த வெப்பு நோயை ஒழியச் செய்து, நீங்கள் அவ்வவர் தெளிந்த தெய்வங்களின் உண்மைத் தன்மையை என்னிடத்தில் விளக்குக ! எனக் கூறினான்.

2658. ஞானஆ ரமுத முண்டார் நற்றவத் திருவை நோக்கி
மானினேர் விழியி னாய்கேள் மற்றெனைப் பால னென்று
நீநனி அஞ்சவேண்டா நிலையிலா அமணர்க் கென்றும்
யான்எளி யேன லேன்என் றெழுந்திருப் பதிகம் பாடி.

தெளிவுரை : ஞான அமுதை உண்ட ஞானசம்பந்தர் நல்ல தவச் செல்வியான மங்கையர்க்கரசியாரை நோக்கி மானின் நேர்விழியாய்! கேட்பாயாக ! என்னைச் சிறுவன் என்று எண்ணி அச்சம் கொள்ள வேண்டியதில்லை. நல்ல நிலையில்லாத சமணர்களுக்கு என்றும் நான் எளியன் அல்லேன் என்ற கருத்துப்பட எழுகின்ற திருப்பதிகத்தைப் பாடி.

2659. பெற்றியால் அருளிச் செய்த பிள்ளையார் தமக்கும் முன்னம்
சுற்றுநின் றழைத்தல் ஓவா அருகர்க்கும் தென்னர் கோமான்
இற்றைநாள் என்னை உற்ற பிணியைநீர் இகலித் தீரும்
தெற்றெனத் தீர்த்தார் வாதில் வென்றனர் என்று செப்ப.

தெளிவுரை : திருவருளைப் பற்றிய தன்மையால் அவ்வாறு திருப்பதிகம் பாடியருளிய பிள்ளையாருக்கும் தன் முன்பு சூழ்ந்து நின்று குரைப்பதைக் கைவிடாத சமணர்களுக்கும், ஒன்று போலவே, இன்று என்னை அடைந்த இந்த வெப்பு நோயை நீவிர் இருவரும் தனித்தனி வேறாகி இகல் வைத்து ஓட்டித் தீருங்கள். தெளிவுபெறத் தீர்த்தவர்களே வெற்றியுற்றவர் ஆவர் ! என்று பாண்டிய மன்னன் உரைத்தான்.

2660. மன்னவன் மாற்றங் கேட்டு வடிவுபோல் மனத்து மாசு
துன்னிய அமணர் தென்னர் தோன்றலை நோக்கி நாங்கள்
உன்னுடம்பு அதனில் வெப்பை ஒருபுடை வாம பாகம்
முன்னம்மந் திரித்துத் தெய்வ முயற்சியால் தீர்த்து மென்றார்.

தெளிவுரை : பாண்டிய மன்னனின் சொல்லைக் கேட்டு வடிவத்தைப் போன்றே மனமும் மாசுடைய அமணர்கள் பாண்டிய மன்னனைப் பார்த்து, நாங்கள் உம் உடலில் ஒரு பக்கத்தில் இடப்பாகத்து வெப்பு நோயை மந்திரித்துத் தெய்வ முயற்சியால் நீக்குவோம் என்றனர்.

2661. யாதும்ஒன் றறிவி லாதார் இருளென அணையச் சென்று
வாதினில் மன்ன வன்தன் வாமபா கத்தைத் தீர்ப்பார்
மீதுதம் பீலி கொண்டு தடவிட மேன்மேல் வெப்புத்
தீதுறப் பொறாது மன்னன் சிரபுரத் தவரைப் பார்த்தான்.

தெளிவுரை : சற்றும் உண்மை நிலையை அறியாதவரான சமணர்கள் இருளைப் போல் மன்னனைக் கிட்டிச் சென்று வாதத்தின் பொருட்டு முற்பட்டு மன்னனின் இடப்பாகத்து நோயைத் தீர்க்கத் தொடங்கி, அவனது உடலின் மீது தம் மயில்பீலிக் கற்றையை மந்திரித்துத் தடவ, வெப்பு நோய் மேன் மேலும் அதிகரித்துத் தீமை செய்ததால் அதை ஆற்ற மாட்டாதவனாகி, மன்னன், சீகாழித் தலைவரை வாதில் தன் பிணியைப் போக்க வேண்டும் என்ற குறிப்புடன் நோக்கினான்.

2662. தென்னவன் நோக்கங் கண்டு திருக்கழு மலத்தார் செல்வர்
அன்னவன் வலப்பால் வெப்பை ஆலவாய் அண்ணல் நீறே
மன்னும்மந் திரமு மாகி மருந்துமாய்த் தீர்ப்ப தென்று
பன்னிய மறைக ளேத்திப் பகர்திருப் பதிகம் பாடி.

தெளிவுரை : பாண்டியனின் பார்வையின் கருத்தை உணர்ந்து சீகாழிச் செல்வரான ஞானசம்பந்தர் அவனது வலப்பக்க நோயைத் திருவாலவாய் இறைவரின் திருநீறே நிலையான மந்திரமும் மருந்துமாகித் தீர்ப்பதாகும் என்று மனத்துள் கொண்டு, கூறிய வேதங்களின் கருத்தைப் போற்றி எடுத்துக் கூறுகின்ற மந்திரமாவது நீறு எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி,

2663. திருவளர் நீறு கொண்டு திருக்கையால் தடவத் தென்னன்
பொருவரு வெப்பு நீங்கிப் பொய்கையிற் குளிர்ந்த தப்பால்
மருவிய இடப்பால் மிக்க அழலெழ மண்டு தீப்போல்
இருபுடை வெப்புங் கூடி இடங்கொளா தென்னப் பொங்க.

தெளிவுரை : திருவளரும் திருநீற்றைக் கொண்டு ஞான சம்பந்தர் திருக்கையினால் மன்னனின் உடலில் தடவிட, அப்பாண்டியன் ஒப்பில்லாத வெப்பு நோயினின்றும் நீங்கியதால் அந்த வலப்பக்கம் தண்ணீர்ப் பொய்கை போல் குளிர்ந்தது. பொருந்திய இடப்பக்கம் மேலும் மிகுந்த அனலின் தன்மை எழுந்ததால் செறிந்த தீயைப்போல இரு பக்கத்து வெப்பும் கூடி இடம் கொள்ள மாட்டாது என்று பெருகிட, 

2664. உறியுடைக் கையர் பாயின் உடுக்கையர் நடுக்க மெய்திச்
செறிமயிற் பீலி தீயத் தென்னன்வெப் புறுதீத் தம்மை
எறியமா சுடலுங் கன்றி அருகுவிட் டேற நிற்பார்
அறிவுடை யாரை ஒத்தார் அறிவிலா நெறியில் நின்றார்.

தெளிவுரை : உறியைக் கையில் கொண்ட, பாயினை உடைய சமணர்கள் நடுக்கம் அடைந்து, செறிந்த மயில்பீலி தீந்துபோக மன்னனின் வெப்பு நோயின் வெப்பம் தம்மைத் தாக்குதலால் மாசு கொண்ட உடல் மேலும் கருகி வெதும்பியதால் மன்னனிடமிருந்து அகன்று தொலைவில் சென்று நிற்பவர்களான அவ்வமணர்கள் அறிவில்லாத நெறியில் முன் நின்றவராயினும் அறிவுடையாரைப் போன்று விளங்கினர்.

2665. பலர்தொழும் புகலி மன்னர் ஒருபுடை வெப்பைப் பாற்ற
மலர்தலை யுலகின் மிக்கார் வந்ததி சயித்துச் சூழ
இலகுவேல் தென்னன் மேனி வலமிடம் எய்தி நீடும்
உலகினில் தண்மை வெம்மை ஒதுங்கினால் ஒத்த தன்றே.

தெளிவுரை : பலராலும் வணங்கப்படும் சீகாழித் தலைவரான பிள்ளையார், அரசனின் வலப்பக்கத்து வெப்பத்தைப் போக்க, மலர் தலையுடைய உலகில் அறிவால் சிறந்தவர் அதிசயித்து வந்து சூழ, வேல் ஏந்தும் பாண்டியனின் உடல் வலப்பக்கத்தின் வெம்மையும் இடப்பக்கத்தில் கூடியதால், நீண்ட உலகில் தண்மையும் வெம்மையும் ஒன்றுபட ஒதுங்கினாற் போல் அப்போது விளங்கியது.

2666. மன்னவன் மொழிவான் என்னே மதித்தஇக் காலம் ஒன்றில்
வெந்நர கொருபா லாகும் வீட்டின்பம் ஒருபா லாகும்
துன்னுநஞ் சொருபா லாகும் சுவையமு தொருபா லாகும்
என்வடி வொன்றி லுற்றேன் இருதிறத் தியல்பும் என்பான்.

தெளிவுரை : பாண்டிய வேந்தன், என்னே, வியப்பு? குறிப்பிட்ட ஒரே நேரத்தில் கொடிய நரகம் ஒரு பக்கத்தில் உளதாகும், முத்தியின்பம் ஒருபக்கத்தில் உளதாகும். மிக்க நஞ்சின் நுகர்ச்சி ஒரு பக்கத்தில் உளதாகும். சுவையுடைய அமுதின் நுகர்ச்சி மற்றொரு பக்கத்தில் உளதாகும். என் உடல் ஒன்றிலேயே இங்ஙனம் மாறுபட்ட இருவேறு தன்மைகளையும் நான் அடையப் பெற்றேன் என்பவனாய்,

2667. வெந்தொழில் அருகர் தோற்றீர் என்னைவிட் டகல நீங்கும்
வந்தெனை உய்யக் கொண்ட மறைக்குல வள்ள லாரே
இந்தவெப்பு அடைய நீங்க எனக்கருள் புரிவீ ரென்று
சிந்தையால் தொழுது சொன்னான் செல்கதிக் கணிய னானான்.

தெளிவுரை : கொடிய தொழிலையுடைய அருகர்களே ! நீங்கள் தோற்றீர்கள் ! என்னைவிட்டு நீங்கிச் செல்லுங்கள் ! இங்கு வந்து என்னை உய்யுமாறு ஆட் கொண்டருளிய அந்தணர் குலத்து வள்ளலாரே ! இந்த வெப்பு நோய் முழுதும் நீங்கும்படி எனக்கு அருள் செய்க ! என மனத்தால் வணங்கி நற்கதிக்கு நெருங்கியவனான பாண்டியன் உரைத்தான்.

2668. திருமுகங் கருணை காட்டத் திருக்கையால் நீறு காட்டிப்
பெருமறை துதிக்கு மாற்றால் பிள்ளையார் போற்றிப் பின்னும்
ஒருமுறை தடவ அங்கண் ஒழிந்துவெப் பகன்று பாகம்
மருவுதீப் பிணியும் நீங்கி வழுதியும் முழுதும் உய்ந்தான்.

தெளிவுரை : திருமுகத்தின் பொலிவு உள்ளத்தில் நிறைந்த கருணையினை வெளியே புலப்படுத்தத் திருக்கையினால் திருநீற்றைக் காட்டிப் பெரிய வேதங்கள் துதிக்கும் வகையால் ஞானசம்பந்தர் துதித்துப் பின்னும் ஒரு முறை பாண்டியன் உடலில் தடவிட, வெப்பு நோயானது அப்போதே உடலை விட்டு முழுதும் நீங்கியது. அதனால் இடப்பக்கத்தில் முன் பொருந்திய வெப்பு நோயும் நீங்கிப் பாண்டியனும் முழுதும் உய்வு அடைந்தான்.

2669. கொற்றவன் தேவி யாரும் குலச்சிறை யாரும் தீங்கு
செற்றவர் செய்ய பாதத் தாமரை சென்னி சேர்த்துப்
பெற்றனம் பெருமை யின்று பிறந்தனம் பிறவா மேன்மை
உற்றனன் மன்னன் என்றே உளங்களித் துவகை மிக்கார்.

தெளிவுரை : பாண்டியனின் மனைவியாரும் குலச்சிறையாரும் தீமையை அழித்த பிள்ளையாரின் சிவந்த திருவடித் தாமரைகளைத் தம் முடிமீது அணிந்து வணங்கி, நாங்கள் பெருமை பெற்றோம், இன்றே உறுதி பெறப் பிறந்தவர் ஆனோம். மன்னன் இனிப் பிறவியில்லாத மேன்மையை அடைந்தான் ! என்று கூறி மனம் களிப்படைந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

2670. மீனவன் தன்மேல் உள்ள வெப்பெலாம் உடனே மாற
ஆனபே ரின்ப மெய்தி உச்சிமே லங்கை கூப்பி
மானமொன் றில்லார் முன்பு வன்பிணி நீக்க வந்த
ஞானசம் பந்தர் பாதம் நண்ணிநான் உய்ந்தேன் என்றான்.

தெளிவுரை : பாண்டிய மன்னன் தன்மீது உள்ள வெம்மை முழுவதும் நீங்கியதனால் உண்டான பெரிய இன்பத்தை அடைந்து, தலையின் மீது கைகளைக் குவித்துக் கொண்டு, மானம் ஒன்றும் இல்லாத சமணர்கள் முன்னே, வலிய நோய் நீங்குமாறு வந்தருளிய ஞானசம்பந்தரின் திருவடிகளைச் சேர்ந்து நான் உய்ந்தேன் ! எனக் கூறித் துதித்தான்.

2671. கந்துசீறு மாலியானை மீனவன் கருத்துநேர்
வந்துவாய்மை கூறமற்று மாசுமேனி நீசர்தாம்
முந்தைமந் திரத்துவிஞ்சை முற்றம்எஞ்ச அஞ்சியே
சிந்தைசெய்து கைவருந் திறந்தெரிந்து தேடுவார்.

தெளிவுரை : கட்டுத் தறியைச் சீறிவரும் மதயானை போல் பாண்டியன் கருத்துக் கட்டுநீங்கி நேர்பட வந்து உண்மை நிலையைக் கூற, அழுக்குப்படிந்த உடலை உடைய நீசர்களான சமணர்கள், தாம் முன்னால் கைக் கொண்ட மந்திரத்தின் வித்தை முழுதும் வலியில்லாததாகி ஒழியக்கண்டு, அச்சம் கொண்டு, சிந்தித்துத் தாம் வெற்றியடையும் திறத்தை ஆராயலானார்.

2672. சைவமைந்தர் சொல்லின்வென்றி சந்தஇன்சொல் மாலையால்
கைதவன்தன் வெப்பொழித்த தன்மைகண் டறிந்தனம்
மெய்தெரிந்த தர்க்கவாதம் வெல்லல்ஆவ தன்றுவே
றெய்துதீயின் நீரில்வெல்வ தென்றுதம்மில் எண்ணினார்.

தெளிவுரை : சைவ மகனாரான பிள்ளையாரின் சொற்களின் வெற்றிச் சிறப்பை, அவருடைய சொல் மாலை பதிகத்தால் பாண்டியன் வெப்பு நோய் முழுவதும் ஒழிந்து போயின தன்மையைக் கண்டதால் அறிந்தோம். ஆதலால் உண்மை தெரிந்த தருக்க வாதத்தில் வெற்றி பெறுவது இயல்வதன்று, பொருந்திய தீயிலும் நீரிலும் வெற்றி பெற முயல்வோமாக ! எனக் தங்களுக்குள் எண்ணினர்.

2673. பிள்ளையாரும் உங்கள்வாய்மை பேசுமின்கள் என்றலும்
தள்ளுநீர்மை யார்கள்வேறு தர்க்கவாதி னுத்தரம்
கொள்ளும் வென்றிஅன்றியே குறித்தகொள்கை உண்மைதான்
உள்ளவாறு கட்புலத்தில் உய்ப்பதென்ன ஒட்டினார்.

தெளிவுரை : ஞானசம்பந்தர் சமணர்களைப் பார்த்து உங்கள் சமய உண்மையினைப் பேசுங்கள். என்று சொல்ல அதைக் கேட்டு, தள்ளப்படும் இயல்புடைய அந்தச் சமணர்கள், வேறு தருக்க உருவமாக கடா விடைகளால் வரும் வெற்றியன்றி, அவரவர் குறிக்கோளைக் கொண்ட கொள்கைகளின் உண்மைத் தன்மையை உள்ளவாறு கண்முன் நிறுத்திக் காட்டுதல் இப்போது செய்யத்தக்கது எனச் சபதம் கூறினர்.

2674. என்றுவாது கூறலும் இருந்ததென்னர் மன்னனும்
கன்றிஎன் உடம்பொடுங்க வெப்புநோய் கவர்ந்தபோ
தொன்றும்அங் கொழித்திலீர்கள் என்னவா துமக்குஎனச்
சென்றுபின்னும் முன்னும்நின்று சில்லிவாயர் சொல்லுவார்.

தெளிவுரை : என்று சமணர் தங்கள் வாதத்தைக் கூற நோய் நீங்கப் பெற்ற பாண்டியனும் அவர்களைப் பார்த்து, என் உடல் முழுதும் வெதும்பி வெப்பு நோய் என்னை முழுதும் உள்ளாக்கிய போது, அங்கு ஒரு சிறிதும் நோயைத் தீர்க்காது தோற்றீர்கள். ஆதலால் இனி உங்களுக்கு வாது என்ன இருக்கின்றது? எனக் கூற, மன்னனுக்கு முன்னும் பின்னுமாகச் சென்று அணுகி நின்று கொண்டு ஓட்டை வாயர்களான சமணர் கூறுவார்களாய்.

2675. என்னவாது செய்வதென் றுரைத்ததே வினாவெனாச்
சொன்னவா சகந்தொடங்கி ஏடுகொண்டு சூழ்ச்சியால்
மன்னுதம் பொருட்கருத்தின் வாய்மைதீட்டி மாட்டினால்
வெந்நெருப்பின் வேவுறாமை வெற்றியாவ தென்றனர்.

தெளிவுரை : நீங்கள் செய்வதற்கு என்ன வாது இருக்கின்றது என்று (தோல்வியுற்ற உமக்கு வாதம் ஒன்றுமில்லை என்ற குறிப்புபடச் சொன்னதையே) தம்மை என்ன வாது என்று வினவியதாகக் கொண்டு, ஏட்டைக்கையில் கொண்டு அறிவால் சூழ்ந்து நிலைபெறும் தம் தம் சமய உண்மைப் பொருட் கருத்தினை எழுதி இட்டால் வெப்பமான நெருப்பில் வேகாது இருப்பதுவே வெற்றியாம் என்று கூறினர்.

2676. என்றபோது மன்னன்ஒன் றியம்புமுன்பு பிள்ளையார்
நன்றுநீ ருரைத்தவாறு நாடுதீயி லேடுதான்
வென்றிடிற் பொருட்கருத்து மெய்ம்மையாவ தென்றிரேல்
வன்றனிக்கை யானைமன்னன் முன்புவம்மின் என்றனர்.

தெளிவுரை : என்று சமணர் உரைத்த போது அதற்கு விடையாய் மன்னன் ஒன்று சொல்வதன் முன்பு ஞானசம்பந்தர் நீங்கள் கூறிய வழிநன்று ! தீயில் ஏடு தான் வேகாது இருக்கின்றமை காட்டி வென்றால் அதில் எழுதிய பொருட்கருத்து உண்மையுள்ளதாகும் எனக் கூறுவீராயின், வலிய ஒற்றைக் கையையுடைய யானை மன்னர் முன்னர் அவ்வாறே வாதம் செய்து முடிவு கொள்ள வாருங்கள் ! என்றுரைத்தார்.

2677. அப்ப டிக்கெதிர் அமணரும் அணைந்துறும் அளவில்
ஒப்பில் வண்புகழ்ச் சண்பையர் காவலர் உரையால்
செப்ப ருந்திறல் மன்னனும் திருந்தவை முன்னர்
வெப்பு றுந்தழல் அமைக்கென வினைஞரை விடுத்தான்.

தெளிவுரை : அங்ஙனமே எதிர் ஏற்றுச் சமணர்களும் வந்து பொருந்தும் போது ஒப்பில்லாத உண்மையையும் புகழையும் உடைய சீகாழித் தலைவரின் சொல்லால், சொல்வதற்கரிய வன்மையுடைய மன்னனும், திருந்தும் அரச சபையின் முன்பு வெம்மையுடைய தீயை அமைப்பீராக ! என்று ஏவி அதற்கான பணிமக்களை அனுப்பினான்.

2678. ஏய மாந்தரும் இந்தனங் குறைத்துடன் அடுக்கித்
தீய மைத்தலும் சிகைவிடு புகைஒழிந்து எழுந்து
காயும் வெவ்வழற் கடவுளும் படரொளி காட்ட
ஆயும் முத்தமிழ் விரகரும் அணையவந் தருளி.

தெளிவுரை : தீயை அமைக்க ஏவப்பட்ட பணி மக்களும் விறகை வெட்டி உடனே அடுக்கித் தீயினை அமைக்கவும், சிகை போல எழும் புகையானது எழுந்து பின் அது மாறப் பெற்றுச் சுடும் வெம்மையான தீக் கடவுளும் படரும் ஒளியினைக் காட்ட உயர்ந்தோர் ஆய்கின்ற முத்தமிழ் வல்லுநரான பிள்ளையாரும் அந்தத் தீயினுக்கு அருகே நெருங்கி வந்து,

2679. செங்கண் ஏற்றவ ரேபொருள் என்றுதாம் தெரித்த
பொங்கி சைத்திருப் பதிகநன் முறையினைப் போற்றி
எங்கள் நாதனே பரம்பொருள் எனத்தொழு தெடுத்தே
அங்கை யால்முடி மிசைக்கொண்டு காப்புநாண் அவிழ்த்தார்.

தெளிவுரை : சிவந்த கண்களையுடைய காளையூர்தியுடைய சிவபெருமானே உண்மைப் பொருளாவார் என உலகம் அறிய உபதேசித்தருளிய பொங்கும் இசையுடன் கூடிய திருப்பதிகங்களை எழுதிய நல்ல திருமுறைச் சுவடியைத் துதித்து, எங்கள் தலைவரான சிவபெருமானே முழுமுதற் கடவுளாய் எல்லார்க்கும் மேலான பரம் பொருளாவார் என்று வணங்கி, உள்ளங்கையால் எடுத்துத் திருமுடி மேற் கொண்ட பின்பு அதன் காப்பான கயிற்றை அவிழ்த்தனர்.

2680. சாற்று மெய்ப்பொருள் தருந்திரு முறையினைத் தாமே
நீற்று வண்கையால் மறித்தலும் வந்துநேர்ந் துளதால்
நாற்ற டம்புயத் தண்ணலார் மருவுநள் ளாறு
போற்றும் அப்பதிகம் போக மார்த்தபூண் முலையாள்.

தெளிவுரை : வணங்கும் மெய்ப் பொருளைத் தரும் திருமுறையினைத் தாமே திருநீறு பொருந்திய வன்மையுடைய கையினால் மறித்து எடுத்த போது நான்கு பெரிய தோள்களையுடைய இறைவர் எழுந்தருளிய திரு நள்ளாற்றினைப் போற்றிய அந்தப் பதிகம் நேர்பட வந்து, அதனுள், போக மார்த்த பூண் முலையாள் எனத் தொடங்கும் திருப்பதிகம் எழுந்தது.

2681. அத்தி ருப்பதி கத்தினை அமர்ந்துகொண் டருளி
மைத்த வெங்கடு மிடற்றுநள் ளாறரை வணங்கி
மெய்த்த நற்றிரு ஏட்டினைக் கழற்றிமெய்ம் மகிழ்ந்து
கைத்த லத்திடைக் கொண்டனர் கவுணியர் தலைவர்.

தெளிவுரை : அந்தத் திருப்பதிகத்தை விரும்பி மேற் கொண்டு இருண்ட வெவ்விய நஞ்சு பொருந்திய கண்டத்தையுடைய திருநள்ளாறு இறைவரைத் துதித்து உண்மை பொருந்திய நல்ல அந்த ஏட்டைத் திருமறைச் சுவடியினின்றும் பிரித்து எடுத்து மெய்ம் மகிழ்ந்து ஞான சம்பந்தர் கையில் வைத்துக் கொண்டார்.

2682. நன்மை உய்க்கும்மெய்ப் பதிகத்தின் நாதனென் றெடுத்தும்
என்னை ஆளுடை ஈசன்தன் நாமமே என்றும்
மன்னும் மெய்ப்பொரு ளாமெனக் காட்டிட வன்னி
தன்னி லாகெனத் தளிரிள வளரொளி பாடி.

தெளிவுரை : நன்மையில் செலுத்தும் மெய்யான அந்தப் பதிகத்தால் போற்றப்பட்ட இறைவன் என மேல் எடுத்துக் கொண்டு, என்னை ஆளாக உடைய இறைவரின் நாமமே எப்போதும் நிலைபெறும் பொருளாம், எனக் காட்டும்படி தீயில் வேகாது இருப்பதாகுக ! என்று தளிரிள வளரொளி எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி,

2683. செய்ய தாமரை அகவித ழினும்மிகச் சிவந்த
கையி லேட்டினைக் கைதவன் பேரவை காண
வெய்ய தீயினில் வெற்றரை யவர்சிந்தை வேவ
வையம் உய்ந்திட வந்தவர் மகிழ்ந்துமுன் னிட்டார்.

தெளிவுரை : செந்தாமரை மலரின் அக இதழை விட மிக சிவப்பு நிறம் கொண்ட கையில் கொண்ட அந்த ஏட்டைப் பாண்டியனின் அவையினர் காணும்படி, ஆடையில்லாத அரையை உடைய சமணர்களின் மனங்கள் வெந்து அழியுமாறு, உலகம் உய்யும்படி வந்தவரான கவுணியர் தலைவர் வெம்மைமிக்க தீயிடத்தில் மகிழ்ச்சியுடன் முன்னால் இட்டார்.

2684. இட்ட ஏட்டினில் எழுதிய செந்தமிழ்ப் பதிகம்
மட்டு லாங்குழல் வனமுலை மலைமகள் பாகத்
தட்டமூர்த்தியைப் பொருளென உடைமையால் அமர்ந்து
பட்ட தீயிடைப் பச்சையாய் விளங்கிய தன்றே.

தெளிவுரை : ஞான சம்பந்தர் தம் கையால் தீயில் இட்ட ஏட்டில் எழுதப்பட்ட திருநள்ளாற்றுப் பதிகம் மணம் வீசும் கூந்தலையும் அழகிய கொங்கைகளையும் உடைய மலை மகளான உமையம்மையாரை ஒரு பாகத்தில் கொண்ட அட்டமூர்த்தியான சிவபெருமானையே பொருளாகக் கொண்டமையால் பொருந்திக் கிடந்த தீயிடையே வேகாமல் இருந்ததுடன் பச்சையாயும் அப்போதே விளங்கியது.

2685. மையல் நெஞ்சுடை அமணரும் தம்பொருள் வரைந்த
கையில் ஏட்டினைக் கதுவுசெந் தீயினில் இடுவார்
உய்யு மோஇது வெனஉறும் கவலையாம் உணர்வால்
நையும் நெஞ்சின ராகியே நடுங்கிநின் றிட்டார்.

தெளிவுரை : மயக்கம் கொண்ட மனமுடையவர்களான சமணர்களும் தம் சமய உண்மைப் பொருளை எழுதிய தம் கையில் கொண்ட ஏட்டை வெம்மை மிக்குக் காய்கின்ற தீயில் இடுபவராய் இது தீயிலே வேகாது எஞ்சியிருக்குமோ? என்ற கவலை கொண்ட உணர்வால், அழிகின்ற உள்ளத்தை உடையவராய் நடுங்கியபடி தீயில் இட்டனர்.

2686. அஞ்சும் உள்ளத்த ராகியும் அறிவிலா அமணர்
வெஞ்சு டர்ப்பெருந் தீயினில் விழுத்திய ஏடு
பஞ்சு தீயிடைப் பட்டது படக்கண்டு பயத்தால்
நெஞ்சு சோரவும் பீலிகை சோர்ந்திலர் நின்றார்.

தெளிவுரை : அச்சம் கொண்ட உள்ளம் உடையவர் ஆயினும் அதனால் அறிவு பெறாத சமணர்கள் வெம்மையான தீயில் இட்ட ஏடு, தீயிலே பஞ்சு விழுந்தால் எரிந்து அழிவதைப் போல, அழிந்ததைக் கண்டு, அச்சத்தினால் மனம் தளர்வடைந்த பின்பும் கையில் ஏந்திய மயிற் பீலிக் கற்றையைக் கையினின்று விடாதவராய் நின்றனர்.

2687. மான மன்னவன் அவையின்முன் வளர்த்தசெந் தீயின்
ஞானம் உண்டவர் இட்டஏ டிசைத்தநா ழிகையில்
ஈனம் இன்மைகண் டியாவரும் வியப்புற எடுத்தார்
பான்மை முன்னையிற் பசுமையும் புதுமையும் பயப்ப.

தெளிவுரை : ஞான அமுது உண்டவரான சம்பந்தர், பெருமையுடைய பாண்டியனின் அவை முன்பு வளர்க்கப் பட்ட தீயிலே இட்ட ஏடு, குறிப்பிட்ட நாழிகையளவில் அழிவு பெறாமல் இருந்ததைப் பார்த்து, முன்னைவிடப் பசுமையான தன்மையும் புதிய தன்மையும் உள்ளதாய் இருக்க அனைவரும் வியப்படையத் தீயினின்று எடுத்தார்.

2688. எடுத்த ஏட்டினை அவையின் முன் காட்டிஅம் முறையில்
அடுத்த வண்ணமே கோத்தலும் அதிசயித் தரசன்
தொடுத்த பீலிமுன் தூக்கிய கையரை நோக்கிக்
கடுத்து நீரிட்ட ஏட்டினைக் காட்டுமின் என்றான்.

தெளிவுரை : அங்ஙனம் தீயினின்று எடுக்கப்பட்ட அந்த ஏட்டை அவையின் முன் காட்டி முன் பிரித்து எடுத்த முறையிலே மீளப் பொருந்தும்படி சுவடியுள் கோத்தலும், பாண்டியன் வியப்படைந்து, கற்றையாய்க் கட்டிய மயிற்பீலியையுடைய கையைக் கொண்ட அமணர்களைப் பார்த்துச் சினந்து, நீவிர் தீயில் இட்ட ஏட்டைக் காட்டுங்கள் ! என்றான்.

2689. அருகர்தாம் இட்ட ஏடு வாங்கச்சென் றணையும் போதில்
பெருகுதீக் கதுவ வெந்து போந்தமை கண்ட மன்னன்
தருபுனல் கொண்டு செந்தீத் தணிப்பித்தான் சமணர் அங்குக்
கருகிய சாம்ப ரோடும் கரியலால் மற்றென் காண்பார்.

தெளிவுரை : சமணர் தாம் இட்ட ஏட்டைத் தீயினின்றும் எடுக்கச் சென்று அணுகியபோது, பெருகிய தீ சுட்டமையால், உடல் வெந்து புடை பெயர்ந்து சென்றதைப் பார்த்த மன்னன், கொண்டு தரப்படும் நீரைப் கொண்டு தீயைத் தணியச் செய்தான். சமணர்கள் அங்கே கருகிய சாம்பலும் கரியுமல்லாமல் வேறு எதனைக் காண்பார்?

2690. செய்வதொன் றறிகி லாதார் திகைப்பினால் திரண்ட சாம்பல்
கையினாற் பிசைந்து தூற்றிப் பார்ப்பது கண்ட மன்னன்
எய்திய நகையி னோடும் ஏடின்னம் அரித்துக் காணும்
பொய்யினால் மெய்யை யாக்கப் புகுந்தநீர் போமின் என்றான்.

தெளிவுரை : மேல் செய்யக்கூடியது இன்னது என்று ஒன்றையும் அறிய மாட்டாதவர்களாகிய அந்த அமணர்கள், திகைப்பால் அங்கே திரண்ட சாம்பலைக் கையால் பிசைந்தும் தூற்றியும் ஏட்டைத் தேடிப் பார்த்தனர். அதைக் கண்ட மன்னன் பொருந்திய புன்சிரிப்புடன் இன்னும் ஏட்டை அரித்துப் பாருங்கள். பொய்மை நெறியைத் துணையாய்க் கொண்டு அதனை மெய்ப் பொருளாக விளக்கப் புகுந்த நீங்கள் அகன்று செல்லுங்கள் என்று சொன்னான்.

2691. வெப்பெனுந் தீயில் யான்முன் வீடுபெற் றுய்ய நீங்கள்
அப்பொழுது அழிந்து தோற்றீர் ஆதலால் அதுஆ றாக
இப்பொழு தெரியில் இட்ட ஏடுய்ந்த தில்லை என்றால்
துப்புர வுடையீர் நீங்கள் தோற்றிலீர் போலு மென்றான்.

தெளிவுரை : வெப்பு நோயான தீயினின்று நான் முன் சம்பந்தரால் வீடு பெற்று உய்ந்திட நீங்கள் வாதில் அழிந்து தோற்றீர்கள். ஆகையால், அதன் வழியாகவே தொடர்ந்து இப்போது தீயில் இட்ட ஏடு நிலை பெறாமல் ஒழிந்து விட்டது என்றால், வல்லமை மிக்கவர்களே ! நீங்கள் தோற்க வில்லை போலும் ! எனக் கூறினான்.

2692. தென்னவன் நகையுட் கொண்டு செப்பிய மாற்றந் தேரார்
சொன்னது பயனாக் கொண்டு சொல்லுவார் தொடர்ந்த வாது
முன்னுற இருகாற் செய்தோம் முக்காலில் ஒருகால் வெற்றி
என்னினும் உடையோம் மெய்ம்மை இனியொன்று காண்ப தென்றார்.

தெளிவுரை : பாண்டியன் இகழ்ச்சியான புன்சிரிப்பைக் கொண்டு சொல்லிய மாற்றங்கள் உள்ளத்துள் தெளிந்து கொள்ளாதவராய்ச் சொன்ன சொல் மாத்திரையே அதன் பொருள் என மேற்கொண்டு கூறுபவர்களாய்த் தொடர்ந்த வாதமாக, முன்பு இரண்டு முறை செய்தோம் முன்று முறையில் ஒரு முறையேனும் வெற்றியடைவோம் ! ஆதலால் உண்மைத் திறம் இனியும் ஒரு முறை காண்பது தக்கதாகும் ! என்றனர்.

2693. தோற்கவும் ஆசை நீங்காத் துணிவிலார் சொல்லக் கேட்டிம்
மாற்றமென் னாவ தென்று மன்னவன் மறுத்த பின்னும்
நீற்றணி விளங்கு மேனி நிறைபுகழ்ச் சண்பை மன்னர்
வேற்றுவா தினியென் செய்வ தென்றலும் மேற்கோள் ஏற்பார்.

தெளிவுரை : ஒரு முறைக்கு இரண்டு முறை தோற்கவும் ஆசை நீங்கப் பெறாத உண்மைத் துணிவிலாத சமணர் இவ்வாறு கூறக் கேட்டு, மன்னன் இந்த மாற்றத்தால் ஆவதென்ன ? என்று கூறி மறுத்தான். அதன் பின்பும் திரு நீற்றின் அழகு விளங்கும் திருமேனியையுடைய நிறைந்த புகழையுடைய சீகாழித் தலைவர், இனிச் செய்யக் கூடிய வேறு வாது யாது? என வினவவும், வாதம் செய்வதை மேற்கொண்டவராய்.

2694. நீடுமெய்ப் பொருளின் உண்மை நிலைபெறுந் தன்மை எல்லாம்
ஏடுற எழுதி மற்றவ் வேட்டினை யாமும் நீரும்
ஓடுநீர் ஆற்றில் இட்டால் ஒழுகுதல் செய்யா தங்கு
நாடிமுன் தங்கும் ஏடு நற்பொருள் பரிப்ப தென்றார்.

தெளிவுரை : நிலையான மெய்ப்பொருளின் வாய்மை யானது நிலை பெறும் தன்மை எல்லாம் தொகுத்து ஏட்டில் பொருந்த எழுதி அந்த ஏடுகளை நாங்களும் நீரும் ஓடிக் கொண்டிருக்கின்ற நீரினையுடைய ஆற்றில் இடுவோமானால், நீருடனே ஓடுவதன்றி, இட்ட அந்த இடத்தைப் பற்றி முன்னர்த் தங்கும் எதுவோ அதுவே நல்ல பொருளை உடையதாகும் ! என்று உரைத்தனர்.

2695. என்றமண் கையர் கூற ஏறுசீர்ப் புகலி வேந்தர்
நன்றது செய்வோம் என்றங் கருள்செய நணுக வந்து
வென்றிவேல் அமைச்ச னார்தாம் வேறினிச் செய்யும் இவ்வா
தொன்றினுந்தோற்றார் செய்வ தொட்டியே செய்வ தென்றார்.

தெளிவுரை : என்று சமணரான கீழானவர் சொல்ல, மேன் மேலும் பெருகும் சிறப்பையுடைய சீகாழித்தலைவர், நல்லது ! அதுவே செய்வோம் ! என்று அருளிச் செய்தார். வெற்றியுடைய வேல் ஏந்திய அமைச்சரான குலச்சிறையார் பக்கத்தில் வந்து, வேறு இனிச் செய்யப்புகும் இந்த வாதம் ஒன்றிலும் தோற்பவர் அதன்பின் செய்வது இது என்று சபதம் செய்தல் வேண்டும் என்று இயம்பினர்.

2696. அங்கது கேட்டு நின்ற அமணரும் அவர்மேற் சென்று
பொங்கிய வெகுளி கூரப் பொறாமைகா ரணமே யாகத்
தங்கள்வாய் சோர்ந்து தாமே தனிவாதில் அழிந்தோ மாகில்
வெங்கழு ஏற்று வான்இவ் வேந்தனே யென்று சொன்னார்.

தெளிவுரை : அங்கு அவர் உரைத்தைக் கேட்ட சமணர்கள் அந்த அமைச்சர் மீது பொங்கிய சினம் மிகுவதால், பொறாமை என்னும் தீய குணம் மிக்க காரணத்தால், தம்வாய் சோர்ந்ததால் இந்த ஒரு வாதத்திலும் தோற்றேம் என்றால் இம்மன்னனே எங்களைக் கொடிய கழுவில் ஏற்றுவானாக ! என்று தாங்களே கூறினர்.

2697. மற்றவர் சொன்ன வார்த்தை கேட்டலும் மலய மன்னன்
செற்றத்தால் உரைத்தீர் உங்கள் செய்கையும் மறந்தீ ரென்று
பற்றிய பொருளின் ஏடு படர்புனல் வைகை யாற்றில்
பொற்புற விடுவ தற்குப் போதுக என்று கூற.

தெளிவுரை : சமணர்கள் அங்ஙனம் உரைத்ததைக் கேட்ட பாண்டிய மன்னன் நீங்கள் சினம் மிகுதியினால் இங்ஙனம் கூறிவிட்டீர்கள். உங்கள் செய்கைகளையும் மறந்துவிட்டீர்கள் ! என்று சொல்லிப்பின், உண்மை பற்றியபொருளை உட்கொண்ட உம் ஓலைகளை ஓடும் நீரையுடைய வைவையாற்றில் அழகு பொருந்த விடுதவற்குச் செல்லுங்கள் என்று சொன்னான்.

2698. பிள்ளையார் முன்னம் பைம்பொற் பீடத்தின் இழிந்து போந்து
தெள்ளுநீர்த் தரளப் பத்திச் சிவிகைமே லேறிச் சென்றார்
வள்ளலார் அவர்தம் பின்பு மன்னன்மா ஏறிச் சென்றான்
உள்ளவாறு உணர்கி லாதார் உணர்வுமால் ஏறிச் சென்றார்.

தெளிவுரை : ஞானசம்பந்தர் பசும் பொன்னால் ஆன பீடத்னின்றும் முன்னம் எழுந்து, வெளியில் வந்து, தெளிந்த நீர்மையுடைய முத்து வரிசைகளையுடைய சிவிகையின் மீது ஏறிச் சென்றார். வள்ளலாரான அவர் பின்பு மன்னன் குதிரை மீது ஏறிச் சென்றான். உண்மையை உள்ளபடி உணர்ந்து ஒழுகுகின்ற ஆற்றல் அற்ற சமணர்கள் தம் உணர்வினில் மயக்கத்தை மேற்கொண்டு சென்றனர்.

2699. தென்னவன் வெப்புத் தீர்ந்து செழுமணிக் கோயில் நீங்கிப்
பின்னுற அணைந்த போது பிள்ளையார் பெருகுஞ் செல்வம்
மன்னிய மதுரை மூதூர் மறுகில்வந் தருளக் கண்டு
துன்னிய மாதர் மைந்தர் தொழுதுவே றினைய சொன்னார்.

தெளிவுரை : பாண்டியன் வெப்புநோய்நீங்கிச் செழுமையான அரண்மனையினின்றும் புறப்பட்டுத் தம் பின்னே பொருந்த அணைந்த போது, பெருகும் செல்வம் நிலையாக நிறைந்த மதுரையான பழம் பதியின் தெருவில் பிள்ளையார் வருவதைக் கண்டு தத்தமக்குத் தோன்றியவாறே வெவ்வேறு விதம்பட பின் வரும் இத்தகைய சொற்களைச் சொன்னார்கள்.

2700. மீனவன் கொண்ட வெப்பை நீக்கிநம் விழுமந் தீர்த்த
ஞானசம் பந்தர் இந்த நாயனார் காணும் என்பார்
பானறுங் குதலைச் செய்ய பவளவாய்ப் பிள்ளை யார்தாம்
மானசீர்த் தென்னன் நாடு வாழவந் தணைந்தார் என்பார்.

தெளிவுரை : பாண்டியன் அடைந்த வெப்பு நோயை நீக்கி நம் வருத்தத்தை நீக்கியருளிய திருஞானசம்பந்தர் இந் நாயனார் ! பாருங்கள் ! என்பார்கள். பால் மணம் கமழும் குதலைச் சொல் எழும் பவளம் போன்ற வாயையுடைய பிள்ளையார் பெருமையாய், சிறப்புடைய பாண்டியனின் நாடு வாழும் பொருட்டு இங்கு வந்து சேர்ந்தார், எனக் கூறுவார்கள்.

2701. எரியிடை வாதில் தோற்ற திவர்க்குநம் அருகர் என்பார்
புரிசடை அண்ணல் நீறே பொருளெனக் கண்டோம் என்பார்
பெருகொளி முத்தின் பைம்பொற் சிவிகைமேற் பிள்ளை யார்தாம்
வருமழ கென்னே என்பார்தி வாழ்ந்தன கண்கள் என்பார்.

தெளிவுரை : தீயில் செய்த வாதத்தில் நம் சமண குருமார் தோற்றது இவர்க்கு ! என்பர். புரிந்த சடையையுடைய சிவபெருமானின் திருநீறே மெய்ப் பொருளாவது என்பதைக் கண்ணாரக் கண்டோம் ! என்பார். பெருகும் ஒளியுடைய முத்து நிரைத்த பசும் பொன்னால் இயன்ற சிவிகையில் மேலே பிள்ளையார் வரும் அழகுதான் என்னே! என்பார். இக்காட்சியைக் கண்டு நம் கண்கள் வாழ்ந்தன ! என்பார்.

2702. ஏதமே விளைந்த திந்த அடிகள்மார் இயல்பா லென்பார்
நாதனும் ஆல வாயில் நம்பனே காணு மென்பார்
போதமா வதுவும் முக்கட் புராணனை அறிவ தென்பார்
வேதமும் நீறு மாகி விரவிடும் எங்கும் என்பார்.

தெளிவுரை : இந்தச் சமண குருமார்கள் இயல்பால் தீமையே உண்டானது? என்பார். முழு முதற்கடவுள் ஆலவாயில் எழுந்தருளியுள்ள இறைவனே என்று கண்டு கொள்ளுங்கள் ! என்று உரைப்பர். மூன்று கண்களையுடைய பழைமையான சிவபெருமானை அறிவதே ஞானமாகும் எனக் கூறுவர். வேதமும் திருநீறுமே எங்கும் நிறைந்தனவாகிப் பரவிடும் ! எனவுரைப்பர்.

2703. அடிகள்மார் முகங்கள் எல்லாம் அழிந்தன பாரீர் என்பார்
கொடியவஞ் சனைகள் எல்லாம் குலைந்தன போலும் என்பார்
வடிகொள்வேல் மாறன் காதல் மாறின வண்ணம் என்பார்
விடிவதாய் முடிந்த திந்த வெஞ்சமண் இருளும் என்பார்.

தெளிவுரை : சமண அடிகளின் முகங்கள் யாவும் வாடி விட்டன பாருங்கள் ! எனவுரைப்பர். கொடிய வஞ்சனைகள் எல்லாம் அழிந்தன போலும் ! எனவுரைப்பார். கூர்மையான வேலையுடைய மாறன் சமண அடிகள் மேல் வைத்திருந்த பற்று மாறிவிட்ட வண்ணம்தான் என்னே ! என்பார். இந்தக் கொடிய சமணமான இருளும் இன்று புலர்ந்து விடிவதாய் முடிந்தது ! என்பர்.

2704. நெருப்பினில் தோற்றார் தாங்கள் நீரில்வெல் வர்களோ என்பார்
இருப்புநெஞ் சுடைய ரேனும் பிள்ளையார்க் கெதிரோ என்பார்
பருப்பொரு ளுணர்ந்தார் தாங்கள் படுவன பாரீர் என்பார்
மருப்புடைக் கழுக்கோல் செய்தார் மந்திரி யார்தா மென்பார்.

தெளிவுரை : தீ (அனல்) வாதத்தில் தோற்றவர் நீர் (புனல்) வாதத்தில் வெல்வார்களோ ! என்பார். இப்பிள்ளையார்க்கு இரும்பு மனம் உடையவராயினும் எதிராக நிற்க வல்லவரோ ! என்பார். நுட்பமான பொருள் அல்லாத பருப் பொருளை மட்டும் உணர்ந்த அவ்வளவில் அடங்கிய சமணர் பட இருக்கும் முடிவினைப் பாருங்கள் ! என்பார். கொம்புகள் போல் கூர்மையான கழுமரங்களை அமைச்சரான குலச்சிறையார் செய்துள்ளார் ! என்பார்.

2705. ஏடுகள் வைகை தன்னில் இடுவதற் கணைந்தார் என்பார்
ஓடுநீ ருடன்செ லாது நிற்குமோ ஓலை என்பார்
நீடிய ஞானம் பெற்றார் நிறுத்தவும் வல்லர் என்பார்
நாடெலாங் காண இங்கு நண்ணுவர் காணீர் என்பார்.

தெளிவுரை : வைகை ஆற்றில் ஏடுகளை இடுவதற்காக வந்தார்கள் என்று உரைப்பர். ஓடுகின்ற நீருடன் ஓடாமல் அதில் இடப்பட்ட ஓலை ஓரிடத்தில் நிற்குமோ ! என்று வினவுவர். பெரிய ஞானம் கைவரப் பெற்றவர் அவ்வாறு ஓலையை ஓடும் நீரிலே இட்டு நிறுத்தவும் வல்லவர் ஆவார் என்று விடை சொல்வர். நாடெல்லாம் காண இவர்கள் வருவார் பாருங்கள் ! என்று பகர்வர்.

2706. தோற்றவர் கழுவி லேறத் துணிவதே அருகர் என்பார்
ஆற்றிய அருளின் மேன்மைப் பிள்ளையார்க்கு அழகி தென்பார்
நீற்றினால் தென்னன் தீங்கு நீங்கிய வண்ணங் கண்டார்
போற்றுவா ரெல்லாஞ் சைவ நெறியினைப் போற்று மென்பார்.

தெளிவுரை : தோல்வியுற்றவர் கழுவில் ஏறச் சமணர் துணியலாமோ? எனவுரைப்பர். செய்து காட்டிய அருளின் மேம்பாட்டினையுடைய பிள்ளையாருக்கு இஃது அழகேயாகும் என்று மொழிவர். திருநீற்றினால் பாண்டியர் தீங்கினின்றும் நீங்கிய தன்மையைக் கண்டவர் யாவரும் சைவத் திறத்தைப் போற்றுவர். ஆதலால் எல்லாரும் சைவ நெறியினையே போற்றுங்கள் ! என்று இயம்புவர்.

2707. இன்னன இரண்டு பாலும் ஈண்டினர் எடுத்துச் சொல்ல
மின்னொளி மணிப்பொற் காம்பின் வெண்குடை மீது போதப்
பன்மணிச் சிவிகை தன்மேற் பஞ்சவ னாட்டு ளோர்க்கு
நன்னெறி காட்ட வந்தார் நான்மறை வாழ வந்தார்.

தெளிவுரை : தெருவின் இரண்டு பக்கங்களிலும் நின்றவர்கள் இத்தகையவற்றைக் கூறினர். கூற, மின் போன்ற ஒளியுடைய அழகான பொற் காம்பையுடைய வெண் குடை மேலே நிழற்றப் பல மணிகள் பதித்த சிவிகையின் மீது பாண்டிய நாட்டில் உள்ளவர்களுக்கு நன்னெறியைக் காட்டும் பொருட்டு வந்தருளினார்; நான்கு வேதங்களும் வாழும் பொருட்டு வந்தருளினார்.

2708. தென்றமிழ் விளங்க வந்த திருக்கழு மலத்தான் வந்தான்
மன்றுளார் அளித்த ஞான வட்டில்வண் கையன் வந்தான்
வென்றுல குய்ய மீள வைகையில் வெல்வான் வந்தான்
என்றுபன் மணிச்சின் னங்கள் எண்டிசை நெருங்கி ஓங்க.

தெளிவுரை : அழகிய தமிழ் விளங்குமாறு அவதரித்த திருக்கழுமலத்தோரான பிள்ளையார் வந்தருளினார். அம்பல வாணர் அளித்த சிவஞானப்பாலையுடைய பொற்கிண்ணத்தைப்பெற்ற வண்மை பொருந்திய திருக்கங்கையையுடைய பிள்ளையார் வந்தருளினார். முதலில் சுரவாதத்திலும் அனல் வாதத்திலும் வெல்பவரான பிள்ளையார் வையைப்புனல் வாதத்திலும் வெல்ல வந்தருளினார் ! என்று இவ்வாறு பல அழகிய முத்துச் சின்னங்கள் எட்டுத் திசைகளிலும் நெருங்கி ஒலிக்க.

2709. பன்மணி முரசம் சூழ்ந்த பல்லியம் இயம்பப் பின்னே
தென்னனும் தேவி யாரும் உடன்செலத் திரண்டு செல்லும்
புன்னெறி அமணர் வேறோர் புடைவரப் புகலி வேந்தர்
மன்னிய வைகை யாற்றின் கரைமிசை மருவ வந்தார்.

தெளிவுரை : பல அழகான முரசுகளுடன் இணைந்த பலவகை வாத்தியங்களும் ஒலிக்க, தம் பின்பு அரசனும் அரசமாதேவியாரும் சேர்ந்து வர, கூட்டமாகத் திரண்டு செல்லும் புல்லிய நெறியில் நின்ற சமணர்கள் வேறு ஒரு பக்கத்தில் வர, சீகாழி வேந்தரான ஞானசம்பந்தர் நிலை பெற்ற வைகையாற்றின் கரைமீது பொருந்தும்படி எழுந்தருளி வந்தார்.

2710. கார்கெழு பருவம் வாய்ப்பக் காமுறு மகளிர் உள்ளம்
சீர்கெழு கணவன் தன்பால் விரைவுறச் செல்லு மாபோல்
நீர்கெழு பௌவம் நோக்கி நிரைதிரை இரைத்துச் செல்லும்
பார்கெழு புகழின் மிக்க பண்புடை வைகை யாறு.

தெளிவுரை : கார் காலம் வந்ததும் விருப்பம் மிக்க மகளிரின் மனம் சிறப்புடைய தம் கணவரிடம் விரைந்து செல்வதைப் போல உலகில் புகழால் மிக்க பண்புடைய வைகையாறு, நீர் மிக்க கடலை நோக்கி வரிசையான அலைகளால் ஆரவாரம் செய்து செல்லும்.

2711. ஆற்றில்நீர் கடுக வோடும் மருங்குற அரசன் நோக்கி
நீற்றணி திகழ்ந்த மேனி நிறைமதிப் பிள்ளை யாரும்
வேற்றுரு அருகர் நீரும் விதித்தஏ டிடுக என்றான்
தோற்றவர் தோலா ரென்று முன்னுறத் துணிந்திட் டார்கள்.

தெளிவுரை : ஞானசம்பந்தரும் மற்றமுள்ளவரும் ஆற்றின் நீர் வேகமாகச் செல்லும் வைகையாற்றின் பக்கத்தைச் சேர்ந்தனர். அப்போது பாண்டியன், திருநீற்றின் அழகு விளங்கிய நிறைமதி போன்ற சம்பந்தரும் அதற்கு வேறான உருவு கொண்ட அருகர்களாகிய நீங்களும் ஒப்புக் கொண்டபடி உங்கள் ஏடுகளை இந்த ஆற்றிலே இடுங்கள், என்று சொன்னான். அப்போது சமணர்கள் முதலில் தோற்றவர்கள் பின்னால் தோற்க மாட்டார்கள் என்ற உலகியல் வழக்கை எண்ணி, முன்னால் ஏட்டை ஆற்றில் இடத்துணிந்தனர்.

2712. படுபொரு ளின்றி நெல்லிற் பதடிபோல் உள்ளி லார்மெய்
அடுபவர் பொருளை அத்தி நாத்திஎன் றெழுதி ஆற்றில்
கடுகிய புனலைக் கண்டும் அவாவினாற் கையிலேடு
விடுதலும் விரைந்து கொண்டு வேலைமேற் படர்ந்த தன்றே.

தெளிவுரை : உள்ளே உண்மை உள்ளதைப்போல் தோன்றும் பொருள் இல்லாததால் நெற்பதர் போன்ற மெய்மையான உள் ஈடு இல்லாத அமணர், மெய்ப் பொருளைப் பொய்ப் பொருள் எனக் கூறுபவரான ஆருகத நூலில் கூறும் பொருள் தொகுதியை அத்தி நாத்தி என்று ஏட்டில் எழுதினர். ஆற்றில் விரைந்தோடும் நீரைக் கண்டும் கையில் கொண்ட ஏட்டைப் பேராசையால் ஆற்றில் இட்டனர். இடவும் அந்த ஆற்றின் வெள்ளம் அப்போதே அதைக் கொண்டு கடலை நோக்கி விரைந்து சென்றது.

2713. ஆறுகொண் டோடும் ஏட்டைத் தொடர்ந்தெதி ரணைப்பார் போலத்
தேறுமெய் யுணர்வி லாதார் கரைமிசை ஓடிச் சென்றார்
பாறுமப் பொருள்மேற் கொண்ட பட்டிகை எட்டா தங்கு
நூறுவிற் கிடைக்கு முன்னே போனது நோக்கிக் காணார்.

தெளிவுரை : இழுத்துக் கொண்டு ஓடுகின்ற ஏட்டைத் தொடர்ந்து சென்று எதிரே ஓடாமல் அணைப்பவர் போல் தெரியும் உண்மை அறிவு இல்லாத அமணர், ஆற்றுக் கரையின் மேல் ஓடிச் சென்றனர். அந்த அழியும் பொருளை மேற்கொண்ட அந்த ஏடு கிட்டாது அங்குக் கீழ் நோக்கி நூறுவிற்கிடை அளவு தொலைவு எல்லைக்கு மேல் போய்விட்டது. கண்ணால் அதனைக் காணவும் இயலாதவர் ஆயினர்.

2714. காணவும் எய்தா வண்ணம் கடலின்மேற் செல்லும் ஏடு
நாணிலா அமணர் தம்மை நட்டாற்றில் விட்டுப் போகச்
சேணிடைச் சென்று நின்றார் சிதறினார் திகைத்தார் மன்னன்
ஆணையில் வழுவ மாட்டாது அஞ்சுவார் அணைய மீண்டார்.

தெளிவுரை : காணவும் இயலாத வண்ணம் கடலின் முகமாகச் செல்லும் அந்த ஏடு, நாணம் என்பது இல்லாத சமணரை நட்டாற்றில் கைவிட்டு அகன்று போய் விட்டது. அந்த அமணர் தொலைவில் சென்றவர்களும் பலவாறு சிதறுண்டவர்களும் திகைப்படைந்தவர்களுமாகி மன்னனின் ஆணையில் தப்பமாட்டாது அஞ்சுபவராய் அவன் பக்கத்தில் திரும்பவும் வந்தனர்.

2715. வேறொரு செயலி லாதார் வெருவுற்று நடுங்கித் தம்பால்
ஈறுவந் தெய்திற் றென்றே மன்னவன் எதிர்வந் தெய்தி
ஊறுடை நெஞ்சில் அச்சம் வெளிப்பட வொளிப்பார் போன்று
மாறுகொண்ட வரும் இட்டால் வந்தது காண்டும் என்றார்.

தெளிவுரை : வேறு செயல்ஒன்றும் இல்லாதவரான சமணர்கள் அச்சம் கொண்டு நடுங்கித் தங்களுக்கு இறுதி வந்து சேர்ந்து விட்டது என்றே துணிந்து, மன்னன் முன் வந்து சேர்ந்து, புண்பட்ட தம் உள்ளத்தில் அச்சம் வெளிப்பட்டு வர அதனை மறைப்பவர் போல், எங்களுடன் மாறுபட்ட பிள்ளையாரும் ஏட்டினை ஆற்றில் இட்டால் அதன் பின்பு வரும் முடிவைக் காணுங்கள் என்று கூறினர்.

2716. மாசுசேர் அமணர் எல்லாம் மதியினில் மயங்கிக் கூற
ஆசிலா நெறியிற் சேர்ந்த அரசனும் அவரை விட்டுத்
தேசுடைப் பிள்ளை யார்தந் திருக்குறிப் பதனை நோக்கப்
பாசுரம் பாட லுற்றார் பரசம யங்கள் பாற.

தெளிவுரை : அழுக்கு மிக்க அமணர்கள் அனைவரும் இங்ஙனம் அறிவு மயங்கிக் கூறக் குற்றத்தை நீக்கும் நெறியில் சேர்ந்த பாண்டிய மன்னனும் அந்தச் சமணர்களை விட்டுச் சிவஞான ஒளியுடைய ஞானசம்பந்தரின் திருவுள்ளக் குறிப்பு யாதோ? என அறிந்து கொள்ளுமாறு அவரைப் பார்க்க, அவர் பர சமயங்களால் நேர்ந்த மயக்கம் அழியுமாறு திருப்பதிகத்தைப் பாடியருளினார்.

2717. தென்னவன் மாறன் தானுஞ் சிவபுரத் தலைவர் தீண்டிப்
பொன்னவில் கொன்றை யார்தந் திருநீறு பூசப் பெற்று
முன்னைவல் வினையும் நீங்கி முதல்வனை யறியுந் தன்மை
துன்னினான் வினைக ளொத்துத் துலையென நிற்ற லாலே.

தெளிவுரை : தென்னவனான பாண்டியனும் சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரால் தீண்டிப் பொன் போன்ற கொன்றையைச் சூடிய சிவபெருமானின் திருநீற்றைப் பூசப் பெற்றதால், இருவினைகளும் ஒத்துப் பொருளைச் சமமாக்கிக் காட்டுகின்ற துலாக் கோலைப் போல் நின்றதால், முன்னைய கொடிய வினையினின்றும் நீங்கியவனாய் முதல்வனான இறைவனை அறிந்து கொள்ளும் இயல்பைப் பெற்றவன் ஆனான்.

2718. உலகியல் வேதநூல் ஒழுக்கம் என்பதும்
நிலவுமெய்ந் நெறிசிவ நெறிய தென்பதும்
கலதிவாய் அமணர்காண் கிலார்க ளாயினும்
பலர்புகழ் தென்னவன் அறியும் பான்மையால்.

தெளிவுரை : உலகியில் நடை வேத நூலின் விதித்த ஒழுக்கமே என்பதையும், அழியாமல் நிலை பெறுகின்ற வீடுபேற்றை அடையும் உண்மை நெறி சிவநெறியேயாகும், என்பதையும் அழிவு பெறும் சமணர்கள் அறிய மாட்டாராயினும் பலராலும் புகழப்படுகின்ற பாண்டியன் அறியும் பான்மையால்,

2719. அலரும் விரைசூழ் பொழிற் தாழியுளாதி ஞானம்
மலருந் திருவாக்குடை வள்ளலார் ருள்ள வண்ணம்
பலரு முணர்ந்துய்யப் பகர்ந்து வரைந்தி யாற்றில்
நிலவுந் திருவேடு திருக்கையா னீட்டி யிட்டார்.

தெளிவுரை : மலர்கள் மலர்தலால் உண்டாகும் மணம் சூழ்ந்த சோலையுடைய சீகாழிப்பதியில் அவதரித்த சிவஞானம் மலரும் திருவாக்கினையுடைய வள்ளலான ஞான சம்பந்தர், உண்மைப் பொருள் நிலையினைப் பலரும் அறிந்து உய்யுமாறு அருளிச் செய்து எழுது வித்து என்றும் அழியாத மெய்ப்பொருளை உடைய அத்திரு ஏட்டினை வைகையாற்றிலும் தம் திருக்கையினால் இட்டார்.

2720. அந்தணர் தேவர்ஆ னினங்கள் வாழ்கஎன்
றிந்தமெய்ம் மொழிப்பயன் உலகம் இன்புறச்
சந்தவேள் விகள்முதல் சங்க ரர்க்குமுன்
வந்தஅர்ச் சனைவழி பாடு மன்னவாம்.

தெளிவுரை : அந்தணர்களும் தேவர்களும் பசுக்களும் வாழ்க என்று சொன்ன இந்த மெய்ம்மொழியின் பயனாவது, உலகத்து உயிர்கள் துன்பம் நீங்கி இன்பத்தை எய்தும் பொருட்டுச் சந்தத்துடன் கூடிய மந்திரங்களை யுடைய சிவவேள்விகள் முதலாகச் சிவபெருமானுக்கு முதன்மை சொல்லப்பட்ட அர்ச்சனைகளும் வழிபாடுகளும் ஆகியவை நிலைபெறுதலாகும்.

2721. வேள்வி நற்பயன் வீழ்புன லாவது
நாளு மர்ச்சனை நல்லுறுப் பாதலால்
ஆளும் மன்னனை வாழ்த்திய தர்ச்சனை
மூளும் மற்றிவை காக்கு முறைமையால்.

தெளிவுரை : நல்ல வேள்விகளின் பயன் மழை தவறாமல் பெய்தலாகும் என்று அருள் செய்தது, அது நாள் தோறும் இறைவரின் அருச்சனைக்கு உறுப்பாதலால் ! உலகை ஆளும் வேந்தனை ஒங்குக என்று வாழ்த்தியது, அருச்சனை முதலாக வரும் இவற்றைக் காக்கின்ற முறையினால் ஆகும் !

2722. ஆழ்க தீயதென் றோதிற் றயல்நெறி
வீழ்க என்றது வேறெல்லாம் அரன்பெயர்
சூழ்க என்றது தொல்லுயிர் யாவையும்
வாழி அஞ்செழுத் தோதி வளர்கவே.

தெளிவுரை : ஆழ்க தீயது என்று அருளியதன் பொருளாவது, வேதாகமங்களுக்குப் புறம்பான நெறிகள் வன்மையில்லாது ஒழிக என்பதாகும். வேறாக எல்லாம் அரன் நாமமே சூழ்க என்றது, பழங்காலம் தொட்டு வரும் உயிர்கள் எல்லாம் வாழ்வைத் தருகின்ற திருவைந் தெழுத்தை ஓதி வளர்க என்ற பொருளாம்.

2723. சொன்ன வையக முந்துயர் தீர்கவே
என்னும் நீர்மை இகபரத் தில்துயர்
மன்னி வாழுல கத்தவர் மாற்றிட
முன்னர் ஞானசம் பந்தர் மொழிந்தனர்.

தெளிவுரை : கூறிய வையகமும் துயர் தீர்க்கவே என்றதன் கருத்தாவது, இம்மையிலும் மறுமையிலும் நிலைத்து நிற்கும் உலகத்தவர்களான உயிர்கள் துன்பம் நீங்குதலாகும். இக்கருத்துகள் தோன்ற முதலில் திருஞான சம்பந்தர் உரைத்தருளினார்.

2724. அரிய காட்சியர் என்பதவ் வாதியைத்
தெரிய லாநிலை யால்தெரி யாரென
உரிய அன்பினிற் காண்பவர்க் குண்மையாம்
பெரிய நல்லடை யாளங்கள் பேசினார்.

தெளிவுரை : முன்செய்யுளில் அரன் என்று உரைத்து, ஆதியைப் பாசஞான பசு ஞானங்களால் அறியப் படாத நிலைமையை யுடைய காரணத்தால் அரிய காட்சியர் எனக் கூறுவதாகும். அங்ஙனம் பாச பசு ஞானங்களால் அறிய மாட்டாதவர் என்று அறிந்து காண்பதற்கான அன்பின் திறத்தால் காண்கின்ற பக்குவம் உடைய அடியவர்களுக்கு அங்கை எரி, ஏறு, கரியகண்டம், காடுறை வாழ்வு முதலிய அடையாளங்களைக் கொண்டவராய் அவர் காட்சியளிப்பர்.

2725. ஆயி னும்பெரி யாரவர் என்பது
மேய இவ்வியல் பேயன்றி விண்முதற்
பாய பூதங்கள் பல்லுயிர் அண்டங்கள்
ஏயும் யாவும் இவர்வடி வென்றதாம்.

தெளிவுரை : அந்த இறைவர் முன் கூறப்பட்ட அடையாள நிலைகளைக் கொண்டவராய்க் காணப்படுவராயினும், அக்காட்சியுடன் அடங்காத பெருமையுடையவர் எனக் கூறப்படும் இயல்பாவது மேற்கொண்ட முன் சொன்ன எரியை உடையவராய் இருத்தல் முதலான தன்மைகளை உடைமையோ அல்லது விண் முதலான பரந்த ஐந்து பூதங்களும், பல உயிர்களும், அண்டங்களும், மற்றுமுள்ளவையும் இவர் பெருவடிவில் அமைவன என்று கூறியதாம்.

2726. பின்பும் ஆரறி வாரவர் பெற்றியே
என்ப தியாருணர் வானும்சென் றெட்டொணா
மன்பெ ருந்தன்மை யாரென வாழ்த்தினார்
அன்பு சூழ்சண்பை ஆண்டகை யாரவர்.

தெளிவுரை : மேலும் அவரது இயல்பை எவர் அறிவார்? என்று கூறியருளும் இயல்பாவது எவரது உணர்வினாலும் சென்று எட்டுவதற்கு இயலாத நிலைமையுடைய தன்மையை உடையவர் அவர் என்று அன்புடைய சண்பை என்ற சீகாழி ஆண் தகையார் உரைத்தருளினார்.

2727. வெந்த சாம்பல் விரையென் பதுதம
தந்த மில்லொளி யல்லா வொளியெலாம்
வந்து வெந்தற மற்றப் பொடியணி
சந்த மாக்கொண்ட வண்ணமும் சாற்றினார்.

தெளிவுரை : வெந்த சாம்பல் விரை எனப் பூசியே என்ற பதிகத்தின் மூன்றாம் பாடலில் அவர் கூறும் முதல் அடிப் பகுதியில், தம் அழிவற்ற நித்தியமான சிவ ஒளி அல்லாத மற்ற ஒளிப் பொருள்கள் எல்லாம் படைப்புக் கிரமத்தில் தோன்றிச் சங்காரத் கிரமத்தில் வெந்து, நீறாகி அழிய, வேறான அந்தச் சாம்பலை இறைவர் அழகாகிய சந்தனமாய்க் கொண்ட இயல்பினையும் எடுத்துச் சொன்னார்.

2728. தமக்குத் தந்தையர் தாயிலர் என்பதும்
அமைத்திங் கியாவையும் ஆங்கவை வீந்தபோ
திமைத்த சோதி அடக்கிப்பின் ஈதலால்
எமக்கு நாதர் பிறப்பிலர் என்றதாம்.

தெளிவுரை : மேலே சொன்ன அப்பாட்டில் இரண்டாம் அடியில் (இறைவர்) தமக்குத் தந்தை யாரொடுதாய் இவர் என்று அருளியதன் கருத்தும் தம் ஒளி ஒளியல்லா ஒளிப்பொருள்கள் எல்லாவற்றையும் சங்கரித்தபின் தமக்குள்ளே ஒடுக்கி, பின்னரும் புனர் உற்பவத்தில் மறுபடியும் அவற்றை உள்ளனவாக்குதலால் எம் இறைவர் பிறப்பில்லாதவர் எனக் கூறிய படியாம்.

2729. தம்மையே சிந்தி யாவெனுந் தன்மைதான்
மெய்ம்மை யாகி விளங்கொளி தாமென
இம்மை யேநினை வார்தம் இருவினைப்
பொய்ம்மை வல்லிருள் போக்குவர் என்றதாம்.

தெளிவுரை : தம்மையே சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால் எனக் கூறும் பதிகப் பகுதியில் கூறியதன் தன்மையாவது உண்மையாகி விளங்கும் பொருள் தாமே என்று கண்டு நினைப்பவர்களின் இருவினைகள் தொடர்வதற்குக் காரணமான பொய்ம்மையை விளைத்து நிற்கும் மலஇருளை இம்மையே நீக்குவார் என்பதாம்.

2730. எந்தை யாரவர் எவ்வகை யார்கொலென்
றிந்த வாய்மைமற் றெப்பொருட் கூற்றினும்
முந்தை யோரைஎக் கூற்றின் மொழிவதென்
றந்தண் பூந்தராய் வேந்த ரருளினார்.

தெளிவுரை : எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ ! என்ற பதிகப்பாட்டின் இறுதியடியில் கூறிய உண்மையாவது, வேறு எந்தப் பொருளைப் பற்றிய சொற் பகுதியுள்ளும் அநாதி முத்த சித்துருவாகிய இறைவரையே எவ்வகை மொழிகளாலும் சொல்லப்படாது என அழகிய குளிர்ந்த பூந்தராய் என்ற சீகாழித்தலைவர் அருளிச் செய்தார்.

2731. ஆதி ஆட்பா லவர்க்கரு ளுந்திறம்
நாதன் மாட்சிமை கேட்க நவிலுங்கால்
ஓது மெல்லை உலப்பில வாதலின்
யாதும் ஆராய்ச்சி இல்லையாம் என்றதாம்.

தெளிவுரை : ஆளாகின்ற தொண்டர்களுக்கு அப்பெருமான் அருள் செய்கின்ற திறங்களையும்  இறைவரின் மாண்பையும் பற்றிக் கேட்கலானால், அதற்கு விடை கூறும்போது சொல்லும் எல்லை அளவில்லாது விரியும். எனவே, எவ்வகையாலும் அது ஆராய்ச்சி தன்மை கொண்டவை அல்ல என்று கூறியவாறாம்.

2732. அன்ன ஆதலில் ஆதியார் தாளடைந்
தின்ன கேட்கவே ஏற்றகோட் பாலவும்
முன்னை வல்வினை யும்முடி வெய்துமத்
தன்மை யார்க்கென் றனர்சண்பை காவலர்.

தெளிவுரை : இங்ஙனமாக உண்மை நிலை முன் செய்யுளிலே கூறியதாதலால், ஆதியாம் இறைவரின் திருவடிகளை அடைந்து, இவ்வுண்மைகளைக் கேட்கலானால், அத்தன்மை பெற்ற அடியவர்க்கு ஏற்ற மலமும் வாதனையும் ஆகிய பீடைகளும் பழைய வினை வலிகளும் முடிவு பெறும் என்று சண்பை என்ற சீகாழித் தலைவரான சம்பந்தர் கூறியருளினார்.

2733. மன்னும் ஏதுக்க ளாலெனும் வாய்மைதான்
தன்ன தொப்புவே றின்மையில் சங்கரன்
இன்ன தன்மையை ஏது எடுத்துக்காட்
டன்ன வாற்றால் அளப்பில னென்றதாம்.

தெளிவுரை : நிலைபெற்ற ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா என்று பதிகத்தில் உரைத்ததன் உண்மையாவது, தனக்கு உதாரணமாகக் காட்டக் கூறிய பொருள் வேறு ஏதும் இல்லை. ஆகையால் சங்கரன் தனது முன்கூறிய வண்ணமும் மாண்பும் உடைய தன்மையை ஏதுக்களாலும் நிறுத்தும் உதாரணங்களாலும் அவை போன்ற மற்ற அளவைகளாலும் அளக்கப்படாதவன் என்று விளக்கியபடியாம்.

2734. தோன்று காட்சி சுடர்விட் டுளன்என்ப
தான்ற அங்கிப் புறத்தொளி யாய்அன்பில்
ஊன்ற உள்ளெழும் சோதியாய் நின்றனன்
ஏன்று காண்பார்க் கிதுபொரு ளென்றதாம்.

தெளிவுரை : தோன்று காட்சி சுடர் விட்டுளன் என்ற பதிகத்தில் நவின்றதன் பொருளாவது, அமைந்த அக்கினியில் புற ஒளியாய்க் காணப்பட்டு அன்பின் உறைப்பில் அதில் அழுந்திப் பார்க்க, உள்ளே எழும் ஒளியாய் அவன் உள்ளான். அவனது ஒளிவழி நின்று காண்பவர்க்கு இது பொருளாகும் என்று அவர் விளக்கியபடியாம்.

2735. மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றும் என்ப
தாதிச் சுடர்ச்சோ தியைஅன்பி னகத்துள் ளாக்கிப்
போதித்த நோக்குற் றொழியாமற் பொருந்தி வாழ்ந்து
பேதித்த பந்தப் பிறப்பின் நெறி பேர்மின் என்றாம்.

தெளிவுரை : மா துக்கம் நீங்கல் உறுவீர் மனம் பற்றும் என்ற பதிகத் தொடரின் பொருள், மூலமான சுடர்ச் சோதியை அன்பால் ஆன்மாவில் கண்டு ஐந்தெழுத்தால் அகப்பூசை செய்து, ஞானசிரியரால் போதிக்கப்பட்ட திருவருள் வழிபட்ட உள் நோக்கில் கண்டு கூடிய சிவ யோகத்தினால், இடையறாமல் கூடிச் சிவஞான வாழ்க்கையிலே வாழ்ந்து அநாதியே தொடர்ந்து அறிவை மறைத்து வேறுபடுத்திய ஆணவத்தால் ஆன பிறவியிலே வரும் நெறியினின்று நீங்கள் நீங்குவீர் ஆவீர் என்று விளக்கியதாம்.

2736. ஈண்டுச் சாதுக்கள் என்றெடுத் தோதிற்று
வேண்டும் வேட்கைய வெல்லாம் விமலர்தாள்
பூண்ட அன்பினிற் போற்றுவீர் சார்மின்என்
றாண்ட சண்பை அரச ரருளினார்.

தெளிவுரை : சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே என்று இங்குப் பதிகத்தில் ஓதியதால், விரும்பும் வேட்கைகளான எல்லாம் இயல்பாகவே பாசங்களினின்று நீங்கிய இறைவரின் திருவடிகளையே மேற் கொண்ட அன்பினால் வணங்குபவர்களே, வந்து சாருங்கள் ! என்று சண்பையின் (சீகாழியின்) மன்னர் விளக்கியருள் செய்தார்.

2737. ஆடும் எனவருந் திருப்பாட்டில் அமைத்த மூன்றும்
நீடும் புகழோ பிறர்துன்ப நீத்தற்கோ என்று
தேடும் உணர்வீர் உலகுக்கிவை செய்த தீசர்
கூடுங் கருணைத் திறமென்றனர் கொள்கை மேலோர்.

தெளிவுரை : ஆடும் என்றும் அருங் கூற்றம் உதைத்து வேதம் பாடும் என்றும் வரும் பதிகத்தின் பகுதி குறித்த பொருளான ஆடும் என்றதும், அருங்கூற்றம் உதைத்து என்றதும், வேதம் பாடும் என்றதும் ஆகிய மூன்றும், புகழுக்காகவோ, அன்றி உயிர்களின் துன்பம் நீக்குவதற்கோ என்று, ஆராய்கின்ற உணர்வு கொண்டவர்களே ! இவற்றை இறைவர் செய்தது உலகத்தின் மீது வைத்த பேரருளின் திறம் என்ற கொள்கையால் மேன்மையுடைய பிள்ளையார் அருள் செய்தனர்.

2738. கருதுங் கடிசேர்ந்த எனுந்திருப் பாட்டில் ஈசர்
மருவும் பெரும்பூசை மறுத்தவர்க் கோறல் முத்தி
தருதன் மையதாதல் சண்டீசர் தஞ்செய்கை தக்கோர்
பெரிதுஞ் சொலக்கேட் டனம்என்றனர் பிள்ளை யார்தாம்.

தெளிவுரை : கருதும் கடி சேர்ந்த எனத் தொடங்கும் திருப்பாட்டில் இறைவர் விரும்பி ஏற்று வீற்றிருந்தருளும் பெரும் பூசையைச் சிதைத்தவர்களைக் கொல்லுதல் தீயசெயலாவதன்றி முத்தியளிக்கும் நல்ல செயலாவதைச் சண்டீசர் தம் வரலாற்றால் தக்கவரான பெரியோர் சொல்லக் கேட்டோம் என்று ஞானப் பிள்ளையார், உரைத்தருளினார்.

2739. வேத முதல்வன் எனும் மெய்த் திருப்பாட்டினில்நேர்
ஆதி உலகோர் இடர்நீங்கிட ஏத்த ஆடும்
பாத முதலாம் பதினெண் புராணங்கள் என்றே
ஓதென் றுரைசெய் தனர்யாவும் ஓதா துணர்ந்தார்.

தெளிவுரை : வேத முதல்வன் எனத் தொடங்கும் உண்மை பொதிந்த திருப்பதிகத்தில் புலப்பட வரும் பொருளாவது. சிறந்த பிரமாணமான வேதத்தால் குறிக்கப்படும் இவர் உலக உயிர்கள் தம்தம் பிறவித் துன்பம் நீங்கவும் அறிந்து ஏத்தவும் கூத்தாடுகின்ற திருவடிகளையுடைய சிவபெருமானே யாவார். அவரே முதற் கடவுள் பதினெட்டுப் புராணங்கள் அவ்வுண்மையைத் தெளிவாய் விளக்குவனவாம் எனத் துணிந்த அவற்றை ஓதுவாயாக ! என்று யாவற்றையும் ஓதாமல் உணர்ந்தவரான ஞானசம்பந்தர் உரைத்தருளினார்.

2740. பாவுற்ற பாராழி வட்டத் திருப்பாட்டி னுண்மை
காவல் தொழிலான் எனும் கண்ணனும் காவல்பெற்ற
தியாவர்க்கு மேலாய ஈசன் அருள்ஆழி பெற்று
மேவுற்ற சீருற் றதுவென்றனர் வேத வாயர்.

தெளிவுரை : திருப்பதிகத்தில் பொருந்திய பாராழி வட்டம் எனத் தொடங்கும் பாட்டின் உண்மையாவது, உலகம் காக்கும் தொழிலை மேற்கொண்ட திருமால் அந்தக் காவல் தொழில் கிடைக்கப் பெற்ற வரலாறாவது, எல்லாருக்கும் மேலானவரான சிவபெருமான் அருளும் சக்கரமும் பெற்றுப் பொருந்திய சிறப்பைப் பெற்றதால் ஆகும் என்று வேதங்கள் வெளிப்படும் வாக்கையுடைய சம்பந்தர் அருள் செய்தார்.

2741. மாலா யவன்என்ன வருந்திருப் பாட்டில் மாலுந்
தோலா மறைநான் முகனுந் தொடர்வாம் அமரர்
ஏலா வகைசுட்ட நஞ்சுண் டிறவாமை காத்த
மேலாங் கருணைத்திறம் வெங்குரு வேந்தர் வைத்தார்.

தெளிவுரை : மாலாயவனும் எனத் தொடங்கும் திருப்பதிகத்தில் திருமாலும், தோல்வியில்லாத மறைகளைப் படைத்த நான்முகனும், அவர்களைத் தொடர்ந்த தேவர்களும் பொருந்த மாட்டாதபடி சுட்ட நஞ்சினைத் தாம் உண்டு அவர்கள் இறவாத வண்ணம் காத்த மேலான பெருங்கருணையின் வெற்றிப் பாட்டினை வெங்குரு என்ற சீகாழித் தலத்தவரான பிள்ளையார் அறிய வைத்தார்.

2742. ஆனஅற் றன்றி என்ற அத்திருப் பாட்டில் கூடல்
மாநக ரத்துச் சங்கம் வைத்தவன் தேறத் தேறா
ஈனர்க ளெல்லைக் கிட்ட ஏடுநீர் எதிர்ந்து செல்லில்
ஞானம்ஈ சன்பால் அன்பே என்றனர் ஞானம் உண்டார்.

தெளிவுரை : பதிகத்தின் நிறைவான அற்றன்றி அந்தண் எனத் தொடங்கும் பாட்டில், நான்மாடக்கூடல் என்ற மதுரையில் மூன்று சங்கங்களை நிறுவிய பாண்டியன் தெளிவு பெறவும், தெளிவு பெறாத கீழ் மக்களான சமணர்கள் வாதில் சொன்ன எல்லையில் முடிவு காணுமாறு இட்ட ஏடு நீரில் எதிர்த்து மேலே செல்லுமானால், அதனால் உறுதியாய் கொள்ளப்படும் உண்மையாவது, ஈசனிடத்து அன்பேயாகும் ! என்று சிவஞான அமுது உண்ட சம்பந்தப் பிள்ளையார் விளக்கியருளினார்.

2743. வெறியார் பொழிற்சண் பையர்வேந்தர் மெய்ப்பா சுரத்தைக்
குறியே றியஎல்லை அறிந்துகும் பிட்டேன் அல்லேன்
சிறியேன் அறிவுக்கவர் தந்திருப் பாதந் தந்த
நெறியே சிறிதியான் அறிநீர்மைகும் பிட்டேன் அன்பால்.

தெளிவுரை : மணம் வீசுகின்ற சோலை சூழ்ந்த சீகாழி மன்னவரான சம்பந்தர் மெய்ப்பொருள் விரித்த பதிகத்தை அதன் அருட்குறிப்புச் செல்லும் அளவு அறிந்து போற்றினேன் அல்லேன். ஆயின் இதுவரை போற்றி உரைத்தது என்ன என்றால் சிறியவனான என் சிற்றறிவுக்கு அவர் தமது திருவடிகள் உணர்த்திய வழியே நின்று, சிறிய அளவில் நான் அறிந்த தன்மை பற்றுக் கோடாகக் கொண்டு அறிவு பூர்வமாக அன்றி அதன்பால் அன்பு காரணமாகக் கும்பிட்டு வணங்கினேன்.

2744. திருவுடைப் பிள்ளை யார்தந் திருக்கையால் இட்ட ஏடு
மருவிய பிறவி யாற்றில் மாதவர் மனஞ்சென் றாற்போல்
பொருபுனல் வைகை யாற்றில் எதிர்ந்துநீர் கிழித்துப் போகும்
இருநிலத் தோர்கட் கெல்லாம் இதுபொரு ளென்று காட்டி.

தெளிவுரை : சைவ மெய்த்திருவையுடைய ஞானசம்பந்தர் தம் திருக்கையினால் ஆற்றுநீரில் செலுத்திய அந்த ஏடு, பொருந்திவரும் பிறவியான ஆற்றிலே மாதவரின் உள்ள மானது எதிர்த்துச் செல்வதைப் போன்று, மிகுந்து ஓடும் நீரையுடைய வைகை ஆற்றில், பெரிய இவ்வுலகத்தில் வாழ்பவர்களுக் கெல்லாம் இதுவே உண்மைப் பொருள் உடையது என்று எடுத்துக்காட்டிக் கீழ்நோக்கி ஓடும் ஓட்டத்தை எதிர்த்து நீரின் நடுவில் அதைக் கிழித்துக் கொண்டு மேல்நோக்கிச் செல்லலாயிற்று.

2745. எம்பிரான் சிவனே எல்லாப் பொருளும்என் றெழுதும் ஏட்டில்
தம்பிரா னருளால் வேந்தன் தன்னைமுன் ஓங்கப் பாட
அம்புய மலராள் மார்பன் அநபாயன் என்னுஞ் சீர்த்திச்
செம்பியன் செங்கோ லென்னத் தென்னன்கூன்நிமிர்ந்த தன்றே.

தெளிவுரை : எம் இறைவரான சிவபெருமானே முழுமுதற் பொருளாவார் என்று எழுதிய அந்த ஏட்டிலே தம் இறைவரின் அருளாலே வேந்தனும் ஓங்குக என்று மன்னனை ஓங்கும்படி பாடிய காரணத்தால், திருமகளை மார்பில் உடைய அனபாயன் என்னும் பெயர் உடைய சிறப்புப் பொருந்திய சோழ மன்னனின் செங்கோலைப்போல் பாண்டியனின் கூனும் அப்போதே நிமிர்ந்தது.

2746. ஏடுநீ ரெதிர்ந்து செல்லும் பொழுதிமை யோர்கள் எல்லாம்
நீடிய வாழ்த்திற் போற்றி நிறைந்தபூ மாரி தூர்த்தார்
ஆடியல் யானை மன்னன் அற்புத மெய்தி நின்றான்
பாடுசேர் அமண ரஞ்சிப் பதைப்புடன் பணிந்து நின்றார்.

தெளிவுரை : ஞானசம்பந்தர் இட்ட ஏடு வையை ஆற்றின் நீரில் முன் கூறியபடி எதிர்த்துச் செல்லும்போது வானவர்கள் எல்லாம் நீண்ட வாழ்த்து மொழிகளால் வாழ்த்தி மிக்க மலர்மழை பொழிந்து நிலத்தை மறைத்தனர். வெற்றிபெறும் இயல்புடைய யானைப் படையுடைய பாண்டிய மன்னன் வியப்படைந்து நின்றான். அறிவு அழிய நின்ற சமணர் எல்லாம் பயந்து பதைப்புடன் தலை குனிந்து நின்றனர்.

2747. ஆற்றின்மேற் செல்லும்ஏடு தொடர்ந்தெடுப் பதற்கு வேண்டிக்
காற்றென விசையிற் செல்லும் கடும்பரி ஏறிக் கொண்டு
கோற்றொழில் திருத்த வல்ல குலச்சிறை யார்பின் சென்றார்
ஏற்றுயர் கொடியி னாரைப் பாடினார் ஏடு தங்க.

தெளிவுரை : ஆற்றின் நடுவில் நீரை எதிர்த்து மேல் நோக்கிச் சென்ற அந்த ஏட்டைத் தொடர்ந்து போய் எடுப்பதற்காக, ஆட்சியைத் திருந்தச் செய்யவல்ல குலச்சிறையார் என்ற அமைச்சர் காற்றைப் போல் விரைவாய்ச் செல்லும் குதிரை மீது ஏறி அந்த ஏட்டின் பின் சென்றார். ஞானசம்பந்தர், காளைக் கொடியையுடைய சிவபெருமானை அந்த ஏடு மேற்கொண்டு செல்லாது ஓரிடத்தில் தங்கி நிற்குமாறு பாடினார்.

2748. ஏடகம் பிள்ளை யார்தாம் வன்னிஎன் றெடுத்துப் பாடக்
கூடிய நீரில் ஏடு குலச்சிறை யாருங் கூடிக்
காடிட மாக ஆடும் கண்ணுதல் கோயில் மாடு
நீடுநீர் நடுவுட் புக்கு நின்றஏ டெடுத்துக் கொண்டார்.

தெளிவுரை : ஞானசம்பந்தர் அவ்வேடகத் திருப்பதிகத்தை வன்னியும் அத்தமும் எனத் தொடங்கிப் பாடியருளவும், ஆற்று நீருள் கூடி வந்த ஏட்டினிடம் குலச்சிறையாரும் போய்ப் பொருந்திப் பெருஞ் சுடுகாடே இடமாய் ஆடுகின்ற நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமானின் நடுவில் புகுந்து, மேலே செல்லாமல் நின்ற ஏட்டை எடுத்துக் கொண்டார்.

2749. தலைமிசை வைத்துக் கொண்டு தாங்கரும் மகிழ்ச்சி பொங்க
அலைபுனற் கரையில் ஏறி அங்கினி தமர்ந்த மேருச்
சிலையுடை யவர்தாள் போற்றி மீண்டுசென் றணைவார் தெய்வ
மலைமகள் குழைத்த ஞானம் உண்டவர் தம்பால் வந்தார்.

தெளிவுரை : குலச்சிறையார் எடுத்த ஏட்டைத் தம் தலைமீது வைத்துக் கொண்டு, தாங்குவதற்கரிய மகிழ்ச்சி மேன்மேலும் பெருக, தாங்குவதற்கரிய மகிழ்ச்சி வையை ஆற்றின் கரையில் ஏறி, மீண்டுபோய் மதுரையைச் சேர்பவராய், உமையம்மையார் குழைத்து ஊட்டிய சிவஞான அமுதை உண்டருளிய பிள்ளையாரிடம் வந்து சேர்ந்தார்.

2750. மற்றவர் பிள்ளை யார்தம் மலரடி வணங்கிப் போற்றிக்
கொற்றவன் முதலா யுள்ளோர் காணமுன் கொணர்ந்த ஏடு
பற்றிய கையி லேந்திப் பண்பினால் யார்க்குங் காட்ட
அற்றருள் பெற்ற தொண்டர் அரவொலி எழுந்த தன்றே.

தெளிவுரை : வந்து சேர்ந்த குலச்சிறையார் பிள்ளையாரின் தாமரை மலர் போன்ற திருவடிகளைத் துதித்து நின்று, அரசன் முதலாக அங்கிருந்தவர் காணுமாறு, முற்படத் தம் தலைமீது வைத்துக்கொண்டு எடுத்து வந்த ஏட்டைப் பிடித்த கையில் ஏந்திப் பண்பால் அனைவர்க்கும் காட்டவே, இகபரப் பற்றுக்களை அறுத்தலால் திருவருளைப் பெற்ற தொண்டர்கள் செய்யும் அரகர என்ற ஒலி முழக்கம் அப்போதே எங்கும் எழுந்தது !

2751. மன்னவன் மாறன் கண்டு மந்திரி யாரை நோக்கித்
துன்னிய வாதில் ஒட்டித் தோற்றஇச் சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளை யார்பால் அநுசிதம் முற்றச் செய்தார்
கொன்னுனைக் கழுவில் ஏற முறைசெய்க என்று கூற.

தெளிவுரை : பாண்டிய மன்னனான நின்றசீர் நெடுமாறன் அதைப் பார்த்துத் தம் அமைச்சரான அவரை நோக்கிப், பொருந்திய வாதத்தில் தாமே போட்டியிட்டுத் தோற்ற இந்தச் சமணர்கள், அங்ஙனம் சபதம் இட்டுத் தோற்றதால், தண்டனைக்குரிய வராகின்றனர். அன்றியும், முன்பே சம்பந்தரிடத்தில் செய்யத் தகாத தீயசெயலைச் செய்துள்ளனர். ஆதலால் அவர்களைக் கழுவில் ஏற்றி நீதி முறைப்படி தண்டிக்கவும் எனக் கூற.

2752. புகலியில் வந்த ஞானப் புங்கவர் அதனைக் கேட்டும்
இகலிலர் எனினும் சைவர் இருந்துவாழ் மடத்தில் தீங்கு
தகவிலாச் சமணர் செய்த தன்மையாற் சாலு மென்றே
மிகையிலா வேந்தன் செய்கை விலக்கிடா திருந்தவேலை.

தெளிவுரை : சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தர், அங்ஙனம் மாறன் ஆணையிட்டதைக்கேட்டும் சமணரிடத்துப் பகைமை இல்லாதவராயினும் சைவத் தொண்டர்கள் இருந்து வாழும் மடத்தில் தீங்கைச் செய்த சமணர்களின் தகுதியற்ற தன்மையினால் இத்தண்டனை பொருத்தமானதேயாகும் என்று எண்ணி நீதி முறையில் மிகைபடாத மன்னரின் ஆணைச் செய்தியை விலக்காமல் இருந்தார். அப்போது,

2753. பண்புடை அமைச்ச னாரும் பாருளோர் அறியு மாற்றால்
கண்புடை பட்டு நீண்ட கழுத்தறி நிரையி லேற்ற
நண்புடை ஞானம் உண்டார் மடத்துத்தீ நாடி யிட்ட
எண்பெருங் குன்றத் தெண்ணா யிரவரும் ஏறி னார்கள்.

தெளிவுரை : நல்ல பண்புடைய அமைச்சரும் உலகத்தில் உள்ளவர் அறியும்படியாய்க் கணுக்களைப் பக்கங்களில் வெட்டிக் கூர்மையான கழுக்களின் வரிசையில் ஏற்றிட, அன்புடைய ஞானசம்பந்தர் எழுந்தருளிய மடத்தில் தீயைக் கொளுத்த வேண்டும் எனச் சூழ்ச்சி செய்து கொளுத்திய எட்டுப் பெருங் குன்றுகளில் இருந்த வந்த எண்ணாயிரம் சமண குருமார்களும் கழுவில் ஏறினர்.

2754. தோற்றவர் கழுவில் ஏறித் தோற்றிடத் தோற்றுந் தம்பம்
ஆற்றிடை அமணர் ஓலை அழிவினால் ஆர்ந்த தம்பம்
வேற்றொரு தெய்வம் இன்மை விளக்கிய பதாகைத் தம்பம்
போற்றுசீர்ப் பிள்ளை யார்தம் புகழ்ச்சயத் தம்ப மாகும்.

தெளிவுரை : வாதத்தில் தோற்றவர்களான சமணர் எண்ணாயிரம் பேரும் கழுவில் ஏறிட அவ்வாறு யாவரும் காணும்படி காணப்பட்ட அக்கழுமரங்கள், ஆற்றில் சமணர் இட்ட ஓலை அழிந்து போன காரணத்தால் நிறுத்திய தம்பங்களாம். சிவனையன்றி வேறு ஒரு கடவுள் இல்லை என்ற உண்மையினை உலகத்துக்கு விளக்கிக் காட்டியுயர்த்திய கொடித் தம்பங்களாகவும் அவை விளங்கின. உலகம் போற்றும் சிறப்பையுடைய புகழைப் புலப்படுத்திய தம்பங்களாகவும் அவை விளங்கின.

2755. தென்னவன் தனக்கு நீறு சிரபுரச் செல்வர் ஈந்தார்
முன்னவன் பணிந்து வாங்கி முழுவதும் அணிந்து நின்றான்
மன்னன்நீ றணிந்தான் என்று மற்றவண் மதுரை வாழ்வார்
துன்னிநின் றார்கள் எல்லாம் தூயநீ றணிந்து கொண்டார்.

தெளிவுரை : பாண்டிய மன்னனுக்குச் சீகாழிச் செல்வரான பிள்ளையார் திருநீறு அளித்தார். அவன் அதனை வணங்கி ஏற்றுத் தன் உடல் முழுதும் விதிப்படி அணிந்து கொண்டான். மன்னன் திருநீறு அணிந்து கொண்டான் என்றதால் அவனுடைய மதுரையில் வாழ்பவராய் நெருங்கிய மக்கள் எல்லாரும் தூயதிருநீற்றைத்தாமும் அணிந்து கொண்டனர்.

2756. பூதிமெய்க் கணிந்து வேந்தன் புனிதனாய் உய்ந்த போது
நீதியும் வேத நீதி யாகியே நிகழ்ந்த தெங்கும்
மேதினி புனித மாக வெண்ணீற்றின் விரிந்த சோதி
மாதிரந் தூய்மை செய்ய அமணிருள் மாய்ந்த தன்றே.

தெளிவுரை : ஞானப் பிள்ளையார் அளித்தருளிய திருநீற்றை உடலுக்கு மருந்தாக அணிந்து கொண்டு மன்னன் தூயவனாகப் பெற்று உய்வு பெற்ற அப்போது, அரசநீதி முறையும் வேதங்களில் விதித்த நீதியேயாக நாடு எங்கும் நிகழலாயிற்று. உலகம் தூய்மையாகும்படி திருவெண்ணீற்றின் விரிந்த பேரொளியானது திக்குகளை யெல்லாம் தூய்மை செய்தலால் அப்போதே உயிர்களைச் சூழ்ந்திருந்த சமணமான இருளும் அழிந்தது.

2757. மீனவற் குயிரை நல்கி மெய்ந்நெறி காட்டி மிக்க
ஊனமாஞ் சமணை நீக்கி உலகெலாம் உய்யக் கொண்ட
ஞானசம் பந்தர் வாய்மை ஞாலத்திற் பெருகி ஓங்கத்
தேனலர் கொன்றை யார்தந் திருநெறி நடந்த தன்றே.

தெளிவுரை : மன்னனுக்கு உயிரைத் தந்ததுமன்றி உண்மை நெறியையும் காட்டி மிக்க கேட்டை விளைவிக்கும் சமண சமயத்தைப் போக்கி உலகம் எல்லாம் உய்யும்படி ஆட்கொண்ட திருஞானசம்பந்தரின் மெய்ந்நெறி உலகத்தில் பெருகி ஓங்குவதால் வண்டுகள் ஒலிப்பதற்கு இடமான கொன்றை மலர் மாலையைச் சூடிய சிவபெருமானது திருநெறி அப்போதே நடந்தது.

2758. மறையவர் வேள்வி செய்ய வானவர் மாரி நல்க
இறைவன் நன்னெறியின் ஓங்க இகத்தினில் அவனி இன்பம்
குறைவில தெனினும் கூற்றை உதைத்தவர் நாமம் கூறி
நிறைகடற் பிறவித் துன்பம் நீங்கிடப் பெற்ற தன்றே.

தெளிவுரை : அந்தணர்கள் வேள்விகளைச் செய்ய, அது காரணமாகத் தேவர்கள் மழைபெய்யச் செய்ய, அது காரணமாக மன்னன் நல்ல நெறியில் நிற்க, இவ்வாறு உலகம், இவ்வுலக வாழ்வாகிய இம்மையிலே, அனுபவிக்கும் இன்பங்கள் குறைவின்றியிருந்தது, அங்ஙனமாயினும் பிறவித்துன்பத்துக்கு ஏதுவாதலின்றிக் கூற்றுவனைக் காலால் உதைத்தவரான சிவபெருமானின் திருநாமத்தைக் கூறுதலால் நிறைந்த கடல் அலை போல் மேலும் மேலும் தொடர்ந்து வரும் பிறவியான துன்பத்தினின்றும் அன்றே உலகம் நீங்கப் பெற்றது.

2759. அங்கயற் கண்ணி தன்னோ டாலவாய் அமர்ந்த அண்ணல்
பங்கயச் செய்ய பாதம் பணிவன்என் றெழுந்து சென்று
பொங்கொளிச் சிவிகை ஏறிப் புகலியர் வேந்தர் போந்தார்
மங்கையர்க் கரசி யாரும் மன்னனும் போற்றி வந்தார்.

தெளிவுரை : அங்கயற்கண்ணியம்மையாருடனே திருவால வாயில் விரும்பி வீற்றிருக்கின்ற பேரருளாளரான இறைவரின் தாமரை போன்ற திருவடிகளை வணங்குவேன், என்று வைகைக் கரையினின்று எழுந்து போய் மேன்மேலும் ஒளியுடைய முத்துச்சிவிகையினை மேற்கொண்ட சீகாழி மன்னவர் வந்தருளினார். மங்கையர்க்கரசியாரும் நின்றசீர் நெருமாறனாரும் போற்றிக் கொண்டு சீகாழி மன்னவர் வந்தருளினார். மங்கையர்க்கரசியாரும் நின்றநீர் நெருமாறனாரும் போற்றக் கொண்டு அவர் பின் வந்தனர்.

2760. எண்ணரும் பெருமைத் தொண்டர் யாவரும் மகிழ்ச்சி எய்திப்
புண்ணியப் பிள்ளை யாரைப் புகழ்ந்துடன் போற்றிப் போத
மண்ணெலாம் உய்ய வந்த வள்ளலார் தம்மைக் கண்டு
கண்ணினாற் பயன்கொண் டார்கள் கன்னிநாட் டவர்க ளெல்லாம்.

தெளிவுரை : எண்ணுதற்கரிய பெருமையுடைய தொண்டர் எல்லாரும் மகிழ்ந்து சிவ புண்ணியப் பிழம்பான பிள்ளை யாரைப் புகழ்ந்து அவருடைய திருவடிகளை வணங்கித் துதித்துக் கொண்டுவர, பாண்டிய நாட்டவர் அனைவரும் உலகங்கள் எல்லாம் உய்யும் பொருட்டே அவதரித்த ஞான சம்பந்தரை நேரே காணப் பெற்றதால் கண்கள் படைத்த பயன்களை அடைந்தவர் ஆயினர்.

2761. ஆலவாய் அண்ணல் கோயில் அங்கண்முன் தோன்றக் கண்டு
பாலறா வாயர் மிக்க பண்பினால் தொழுது சென்று
மாலுநான் முகனும் போற்ற மன்னினார் கோயில் வாயில்
சீலமா தவத்தோர் முன்பு சிவிகைநின் றிழிந்து புக்கார்.

தெளிவுரை : இறைவரின் ஆலவாய் என்னும் கோயிலானது அங்குத் தோன்றக் கண்டு பிள்ளையார் மிக்க அடிமைப் பண்பினால் வணங்கிச் சென்று, திருமாலும் நான்முகனும் துதிக்க நிலைபெற எழுந்தருளிய இறைவரின் கோயிலின் திருவாயில் முன்பு ஒழுக்கமுடைய அடியார்களின் முன்னம் முத்துச்சிவிகையினின்று இறங்கி உள்ளே புகுந்தார்.

2762. தென்னவன் தானும் எங்கள் செம்பியன் மகளார் தாமும்
நன்னெறி அமைச்ச னாரும் ஞானசம் பந்தர் செய்ய
பொன்னடிக் கமலம் போற்றி உடன் புகப் புனிதர்கோயில்
தன்னைமுன் வலங்கொண் டுள்ளால் சண்பையர் தலைவர் புக்கார்.

தெளிவுரை : பாண்டிய மன்னனும் எங்கள் சோழ மன்னரின் மகளாரான மங்கையர்க்கரசியாரும் உலகை நன்னெறிப்படுத்துகின்ற குலச்சிறை நாயனாரும் திருஞானசம்பந்தரின் செம்மையான பொன் திருவடியினைப் போற்றி எனத் துதித்துக் கொண்டு உள்ளே புக, திருஞானசம்பந்தர், புனிதரான இறைவரின் திருக்கோயிலை வலமாய் வந்து உள்ளே புகுந்தார்.

2763. கைகளுந் தலைமீ தேறக் கண்ணில்ஆ னந்த வெள்ளம்
மெய்யெலாம் பொழிய வேத முதல்வரைப் பணிந்து போற்றி
ஐயனே அடிய னேனை அஞ்சலென் றருள வல்ல
மெய்யனே என்று வீட லாலவாய் விளம்ப லுற்றார்.

தெளிவுரை : இரு கைகளும் தலைமீது ஏறிக் குவிந்திடவும், கண்ணினின்று பெருகும் நீர் வெள்ளம் திருமேனி முழுவதும் பொழியவும், மறைமுதல்வரான இறைவரைப் பணிந்து துதித்து ஐயனே ! அடியனான என்னை அஞ்சேல் என்று அருளிச் செய்து ஆட்கொள்ள வல்ல மெய்ப் பொருளானவரே ! என்று வீடலாலவாய் எனத் தொடங்கும் திருப்பதிகத்தை அருளிச் செய்தார்.

2764. ஒன்றுவே றுணர்வு மில்லேன் ஒழிவற நிறைந்த கோலம்
மன்றிலான் மறைக ளேத்த மானுடர் உய்ய வேண்டி
நின்றுநீ ஆடல் செய்கை நினைப்பதே நியம மாகும்
என்றுபூம் புகலி மன்னர் இன்தமிழ்ப் பதிகம் பாட.

தெளிவுரை : பற்றும் வேறு உணர்வு ஒன்றும் இல்லேனாய், நீக்கம் இல்லாது எங்கும் நிறைந்த அழகிய சிற்றம் பலத்தில் நான்கு மறைகளும் போற்றும்படி மக்கள் உய்யும் பொருட்டாய் நீ அருட்கூத்து ஆடுவதை இடைவிடாமல் எண்ணுவதே என் நியமமாகும் என்ற கருத்துடன் அழகிய சீகாழியின் தலைவரான ஞானசம்பந்தர் இனிய தமிழ்ப் பதிகத்தைப் பாடியருளினார்.

2765. தென்னவன் பணிந்து நின்று திருவால வாயில் மேவும்
மன்னனே அமணர் தங்கள் மாயையால் மயங்கி யாதும்
உன்னையான் அறிந்தி லேனை உறுபிணி தீர்த்தாட் கொள்ள
இன்னருட் பிள்ளை யாரைத் தந்தனை இறைவ என்றான்.

தெளிவுரை : பாண்டியன் வணங்கி எழுந்து நின்று, திருவாலவாய்க் கோயிலுக்குள் எழுந்தருளியே அரசே ! சமணர்களின் வஞ்சனைக்கு ஆளாகி மயங்கி உன் அருட் பெருமையினை ஒரு சிறிதும் அறியாத என்னை, இறைவரே ! உற்ற நோயைத் தீர்த்து ஆட்கொள்ள இனிய அருள் உருவான திருஞானசம்பந்தரை எனக்கு அளித்து அருள் செய்தீர் ! என வணங்கினான்.

2766. சீருடைப் பிள்ளை யாரும் சிறப்புடை அடியா ரோடும்
காரினிற் பொலிந்த கண்டத் திறைவர்தாள் வணங்கிக் காதல்
ஆரருள் பெற்றுப் போற்றி அங்குநின் றரிது நீங்கி
ஏரியல் மடத்தின் உள்ளால் இனிதெழுந் தருளிப் புக்கார்.

தெளிவுரை : சிறப்புடைய ஞானப்பிள்ளையார் சிறப்புடைய அடியாருடனே மேகம் போன்று விளங்கும் கண்டத்தையுடைய சிவபெருமானின் திருவடிகளை வணங்கி, அன்பினால் திருவருள் பெற்றுத் துதித்து அங்கிருந்து அரிதாய் நீங்கி அழகுற அமைந்த திருமடத்தின் உள்ளே இனிதாய் எழுந்தருளிப் புகுந்தார்.

2767. நீடுசீர்த் தென்னர் கோனும் நேரியன் பாவை யாரும்
மாடுசென் றிறைஞ்சிநோக்கி மாளிகை தன்னிற் போகக்
கூடிய மகிழ்ச்சி பொங்கக் கும்பிடும் விருப்பி னாலே
நாடியங் கிருந்து தங்கள் நாதரைப் பாட லுற்றார்.

தெளிவுரை : மிக்க சிறப்பையுடைய பாண்டிய அரசரும் சோழரின் மகளாரான மங்கையர்க்கரசியாரும் பக்கத்தே போய் வணங்கி, பின்தம் அரண்மனைக்குள் சென்றனர். மிகுந்த மகிழ்ச்சி மேலும் அதிகரிக்க வழிபடும் விருப்பினால் நாடி அங்கிருந்து தம் இறைவரைப் பாடுபவராகி,

2768. திருஇய மகத்தி னுள்ளும் திருநீல கண்டப் பாணர்க்
கருளிய திறமும் போற்றி அவரொடும் அளவ ளாவித்
தெருளுடைத் தொண்டர் சூழத் திருத்தொண்டின் உண்மை நோக்கி
இருள்கெட மண்ணில் வந்தார் இனிதமர்ந் திருந்தா ரன்றே.

தெளிவுரை : திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு இறைவர் அருள்செய்த திறத்தைத் திருவியமகத் திருப்பதிகத்துள் வைத்துத் துதித்து அவருடனே உரையாடியிருந்து, அறிவுத் தெளிவையுடைய தொண்டர் பலரும் சூழ்ந்திருக்கத் திருத்தொண்டின் அழியாத உண்மைத்திறத்தை நோக்கிமகிழ்ந்து. இருள் கெடுமாறு மண்ணுலகில் தோன்றியருளிய பிள்ளையார் அங்கு இனிதாய்த் தங்கியிருந்தருளினார்.

2769. பூழியன் மதுரை யுள்ளார் புறத்துளார் அமணர் சேரும்
பாழியும் அருகர் மேவும் பள்ளியு மான எல்லாம்
கீழுறப் பறித்துப் போக்கிக் கிளரொளித் தூய்மை செய்தே
வாழியப் பதிக ளெல்லாம் மங்கலம் பொலியச் செய்தார்.

தெளிவுரை : பாண்டிய மன்னனின் மதுரை நகரத்தில் உள்ளவர்களும் மதுரையின் புறத்துப் பல இடங்களிலும் உள்ள மக்களும், சமணத்துறவியர் தங்கியிருந்த பாழிகளும், அவர் தம் இறைவர் இடம் கொண்ட பள்ளிகளும் என்ற எல்லாவற்றையும் கீழ்நிலம் காண அகழ்ந்து போக்கி ஒளி பெருகத் தூய்மை செய்து, வாழ்வு பெறும் அப்பதிகள் எல்லாவற்றிலும் சிவத்துவமாகிய சின்னங்களை விளங்கச் செய்தார்கள்.

2770. மீனவன் தேவி யாரும் குலச்சிறை யாரும் மிக்க
ஞானசம் பந்தர் பாதம் நாள்தொறும் பணிந்து போற்ற
ஆனசண் பையர்கோ னாரும் ஆலவாய் அமர்ந்தார் பாதம்
ஊனமர்ந் துருக ஏத்தி உளங்களித் துறையும் நாளில்.

தெளிவுரை : பாண்டியனின் மனைவியாரான மங்கையர்க்கரசியாரும் குலச்சிறை நாயனாரும் மிக்க சிவ ஞானசம்பந்தரின் திருவடிகளை நாள்தோறும் வணங்கிப் போற்றினர். சீகாழித் தலைவரான பிள்ளையாரும் திருவாலவாயில் விரும்பி வீற்றிருக்கும் இறைவரின் திருவடிகளை ஊன் எல்லாம் உருகுமாறு துதித்துக் கொண்டு உள்ளம் மகிழ்ந்து அங்குத் தங்கியிருந்த நாட்களில்,

2771. செய்தவத்தாற் சிவபாத இருதயர்தாம் பெற்றெடுத்த
வைதிகசூ ளாமணியை மாதவத்தோர் பெருவாழ்வை
மைதிகழுந் திருமிடற்றார் அருள்பெற்ற வான்பொருளை
எய்தியபூம் புகலியிலே இருந்தநாள் மிகநினைந்தார்.

தெளிவுரை : முன்னர்ச் செய்த தவத்தால் பெற்றெடுத்த வைதிகர்களின் சிரமணி போன்றவரை, மாதவத்தோர்களாகிய சிவஞானியர்களின் பெரு வாழ்வாகியவரை, நஞ்சுடைய திருக்கண்டத்தை உடைய இறைவரின் திருவருள் பெற்ற மெய்ப் பொருளாய் விளங்குபவரைத் தாம் தங்கியிருந்த அந்த நாட்களில் சிவபாத இருதயர் மிகவும் நினைத்தார்.

2772. ஆனபுகழ்த் திருநாவுக் கரசர்பால் அவஞ்செய்த
மானமிலா அமணருடன் வாதுசெய்து வெல்வதற்கும்
மீனவன்தன் நாடுய்ய வெண்ணீறு பெருக்குதற்கும்
போனவர்பாற் புகுந்தபடி அறிவனெனப் புறப்படுவார்.

தெளிவுரை : உண்டான புகழையுடைய திருநாவுகரசரிடம் பிழை செய்த, மானம் இல்லாத சமணர்களுடன் வாதம் செய்து அவரை வெற்றி கொள்வதற்கும் பாண்டியனின்நாடு உய்யும் வண்ணம் திருநீற்றைப் பெருக ஆக்குதற்கும் சென்றருளிய பிள்ளையாரிடம் நிகழந்தவற்றை அறிவேன் என்று சிவபாத இருதயர் புறப்படுபவராகி,

2773. துடியிடையாள் தன்னோடும் தோணியில் வீற்றிருந்தபிரான்
அடிவணங்கி அலர்சண்பை அதனின்றும்வழிக்கொண்டு
படியின்மிசை மிக்குளவாம் பரன்கோயில் பணிந்தேத்தி
வடிநெடுவேல் மீனவன்தன் வளநாடு வந்தணைந்தார்.

தெளிவுரை : துடியைப் போன்ற இடையுடைய பெரிய நாயகியம்மையாருடனே திருத்தோணியில் எழுந்தருளியிருந்த சிவபெருமானின் திருவடிகளை வணங்கி அழகிய சீகாழியினின்றும் புறப்பட்டு வழியில் சென்று, அங்ஙனம் செல்லும் வழியிலே இம்மண்ணுலகில் மேம்பட்டு விளங்கும் சிவபெருமான் கோயில்கள் பலவற்றையும் வணங்கித் துதித்துச் சென்று, கூரிய வேல் ஏந்திய பாண்டியனின் வளப்பம் வாய்ந்த நாட்டில் வந்து சேர்ந்தார்.

2774. மாமறை யோர் வளம்பதிகள் இடைத்தங்கி வழிச்செல்வார்
தேமருவு நறும்பைந்தார்த் தென்னவன்தன் திருமதுரை
தாமணைந்து திருவால வாயமர்ந்த தனிநாதன்
பூமருவுஞ் சேவடிக்கீழ்ப் புக்கார்வத் தொடுபணிந்தார்.

தெளிவுரை : சிறந்த அந்தணரான சிவபாத இருதயர் வளம் வாய்ந்த பாண்டிய நாட்டுப் பதிகளுள் தங்கிச் செல்பவராய்த், தேன் பொருந்திய மணம் கமழும் பசுமையான வேப்ப மாலையையுடைய பாண்டியனின் தலைநகரமான மதுரையை அடைந்து, திருவாலவாயில்விரும்பி வீற்றிருக்கும் ஒப்பற்ற முதல்வரான சொக்கநாதப் பெருமானின் பூக்கள் பொருந்திய சிவந்த திருவடிகளின் கீழ்ப்புகுந்து மிக்க ஆர்வத்துடன் வணங்கினார்.

2775. அங்கணரைப் பணிந்துபோந் தருகணைந்தார் தமைவினவ
இங்கெம்மைக் கண்விடுத்த காழியார் இளவேறு
தங்குமிடம் திருநீற்றுத் தொண்டர்குழாஞ் சாருமிடம்
செங்கமலத் திருமடம்மற் றிதுவென்றே தெரிந்துரைத்தார்.

தெளிவுரை : இறைவரை வணங்கி வெளியே வந்து, பக்கத்தில் வந்து சேர்ந்த நகர மக்களான அடியார்களை ஞானசம்பந்தர் தங்கியுள்ள மடம் பற்றி வினவ, இங்குக் குருடராய் இருந்த எம்மைக் கண் திறக்கச் செய்து ஒளி நெறி காட்டிய சீகாழிப் பதியினரின் இளஞ்சிங்கமான ஞானசம்பந்தர் தங்கும் இடமாவது திருநீற்றுத் தொண்டர் கூட்டம் சேரும் இடமாய்ச் செங்கமலம் போன்ற திருமடம் இதுவே யாகும் என அவர்கள் அறிந்து கூறினர்.

2776. செப்புதலும் அதுகேட்டுத் திருமடத்தைச் சென்றெய்த
அப்பர்எழுந் தருளினார் எனக்கண்டோர் அடிவணங்கி
ஒப்பில்புகழ்ப் பிள்ளையார் தமக்கோகை உரைசெய்ய
எப்பொழுது வந்தருளிற் றென்றெதிரே எழுந்தருள.

தெளிவுரை : அவர்கள் அங்ஙனம் கூறவும் அதைக் கேட்டுச் சிவபாத இருதயர் அம்மடத்தில் சென்று சேர, அங்கு அவரைக் கண்டவர்கள் அவரை அடி வணங்கிச் சென்று ஒப்பில்லாத புகழையுடைய ஞான சம்பந்தருக்கு அந்த மகிழ்ச்சிக்குரிய செய்தியைக் கூறவே, அவர் எப்போது வந்தருளியது? என வினவிக் கொண்டு எதிரில் எழுந்தளிவர,

2777. சிவபாத இருதயர்தாம் முன்தொழுது சென்றணையத்
தவமான நெறியணையுந் தாதையார் எதிர்தொழுவார்
அவர் சார்வு கண்டருளித் திருத்தோணி அமர்ந்தருளிப்
பவபாசம் அறுத்தவர்தம் பாதங்கள் நினைவுற்றார்.

தெளிவுரை : சிவபாத இருதயர் தாம் அப்பிள்ளையார் முன்பு தொழுது சென்றருள, தவநெறியில் சேர்ந்த தந்தையார் எதிரில் தாமும் தொழுவாராகிய பிள்ளையார், அவரைக் கண்ட அளவில் திருத்தோணியில் எழுந்தருளியிருக்கும் பவ பாசங்களை அறுத்தருளியவரான தோணியப்பரின் பாதங்களை வணங்கினார்.

2778. இருந்தவத்தோர் அவர்முன்னே இணைமலர்க்கை குவித்தருளி
அருந்தவத்தீர் எனையறியாப் பருவத்தே எடுத்தாண்ட
பெருந்தகையெம் பெருமாட்டி உடனிருந்த தேயென்று
பொருந்துபுகழ்ப் புகலியின்மேல் திருப்பதிகம் போற்றிசைத்தார்.

தெளிவுரை : பெரிய தவத்தினரான அந்தச் சிவபாத இருதயர் முன்னே, மலர் போன்ற இரண்டு கைகளையும் கூப்பியருளி, அரிய தவத்தையுடையவரே ! என்னை அறியாப் பருவத்தில் எடுத்தாண்ட பெருந்தகையரான தோணியப்பர் எம் பெரிய நாயகி அம்மையாருடன் நன்கு எழுந்தருளியிருந்ததே ! என்ற கருத்துடன் பொருந்தும் புகழையுடைய சீகாழியின் மேல் திருப்பதிகத்தினால் பாடுபவராய்.

2779. மண்ணில்நல்ல என்றெடுத்து மனத்தெழுந்த பெருமகிழ்ச்சி
உண்ணிறைந்த காதலினால் கண்ணருவி பாய்ந்தொழுக
அண்ணலார் தமைவினவித் திருப்பதிகம் அருள்செய்தார்
தண்ணறும்பூஞ் செங்கமலத் தாரணிந்த தமிழ்விரகர்.

தெளிவுரை : மண்ணின் நல்ல என்று தொடங்கித் திருவுள்ளத்தில் எழுந்த பெரு மகிழ்ச்சியுடன் உள்ளே நிறைந்த ஆசைப் பெருக்கால் கண்களிலிருந்து அருவி போல் கண்ணீர் பாய்ந்து வழியத் தோணியப்பர் இனிதாய் இருந்தமை பற்றித் தம் தந்தையை வினவிக், குளிர்ந்த மணமுடைய அழகிய செந்தாமரை மாலையை அணிந்த தமிழ் வல்லுநரான பிள்ளையார் திருப்பதிகத்தைத் திருவாய் மலர்ந்தருளினார்.

2780. திருப்பதிகந் திருக்கடைக்காப் புச்சாத்திச் சிறப்பின்மிகு
விருப்பினால் அவர்தமக்கு விருந்தளித்து மேவுநாள்
அருப்புறுமெய்க் காதல்புரி அடியவர்கள் தம்மோடும்
பொருப்புறுகைச் சிலையார்சேர் பதிபிறவும் தொழப்போவார். 

தெளிவுரை : அந்தப் பதிகத்தில் கண்ட காப்புச் சாத்தி, மிக்க விருப்பத்துடன் அத்தந்தையார் தமக்கு விருந்து அளித்துக் களித்துப் பொருந்தியிருக்கும் நாளில் அரும்பு போல் புதிதாய் மலர்ந்த உண்மையன்பு மிகுதியால் திருத்தொண்டை இடையறாது நினைந்து செய்யும் அடியவர்களோடும் மலையை வில்லாகக் கொண்ட இறைவர் வீற்றிருக்கும் மற்றப் பதிகளையும் போய் வணங்குவதன் பொருட்டாகப் போவாராய்.

2781. ஆலின்கீழ் நால்வர்க்கன் றறமுரைத்த அங்கணனை
நூலின்கட் பொருள்பாடி நூலறிவார்க் கீந்தானைக்
காலம்பெற் றினிதிறைஞ்சிக் கைதொழுது புறம்போந்தார்
சீலங்கொள் தென்னவனும் தேவியரும் உடன்போத.

தெளிவுரை : கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து அக்காலத்தில் நான்கு முனிவர்கட்கு அறம் உரைத்த இறைவரைத், தமிழ் நூல்களுள் சிறந்த பொருள் இலக்கணத்தைப் பாடி நூலறியும் சங்கப் புலவர்களுக்குத் தந்தருளியவரை, உரிய காலம் அறிந்து சேரப்பெற்று இனிதாக வணங்கிக் கையால் தொழுது சைவ ஒழுக்கத்தை மேற்கொண்ட பாண்டியனும் அவரது தேவியாரும் உடன்வர, ஞான சம்பந்தர் வெளியே வந்தருளினார்.

2782. தேன்நிலவு பொழில் மதுரைப் புறத்துப் போந்த
தென்னவனார் தேவியார் அமைச்சர் சிந்தை
ஊன்நெகிழும் படியழிந்தங் கொழுகு கண்ணீர்
பாய்ந்திழிய உணர்வின்றி வீழக் கண்டே
யான்உம்மைப் பிரியாத வண்ணம் இந்நாட்
டிறைவர்பதி யெனைப்பலவும் பணிவீ ரென்று
ஞானமுணர் வார்அருள அவரும் போத
நம்பர்திருப் பரங்குன்றை நண்ணி னாரே.

தெளிவுரை : தேனையுடைய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த மதுரை மாநகரின் வெளியே வந்த பாண்டியரும் தேவியாரான மங்கையர்க்கரசியாரும், அமைச்சரான குலச்சிறையாரும், தம் ஊன் உருகும் வண்ணம் உள்ளம் அழிந்து அங்கு வடியும் கண்ணீர் இடையறாது ஒழுகி விழ, உணர்வு மங்கி விழுந்ததைக் கண்டு நான் உங்களைப் பிரியாதவாறு இந்நாட்டின் இறைவரது பதிகள் பலவற்றையும் வணங்கு வீர்களாக ! எனச் சிவஞானம் உணர்வாரான பிள்ளையார் உரைத்தருள, அவ்வாறே அதற்கு இசைந்து அவர்களும் உடன்செல்ல, இறைவரின் திருப்பரங்குன்றத்தைப் போய் அடைந்தார்.

2783. ஆறணிந்தார் தமைவணங்கி அங்குப் போற்றி
அணிஆப்ப னூரணைந்து பணிந்து பாடி
நீறணிந்த செல்வர்பதி பிறவுஞ் சேர்ந்து
நிலவுதிருப் பதிகங்கள் நிகழப் பாடிச்
சேறணிந்த வயற்பழனக் கழனி சூழ்ந்த
சிரபுரத்து வந்தருளுஞ் செல்வர் செங்கண்
ஏறணிந்த வெல்கொடியார் திருப்புத் தூரை
எய்திஇறைஞ் சிச்சிலநாள்அங் கிருந்தா ரன்றே.

தெளிவுரை : கங்கையாற்றைச் சூடிய சிவபெருமானை அப்பதியில் போற்றி, அழகிய ஆப்பனூரை அடைந்து வணங்கிப் பாடி, திருநீறு பூசிய இறைவரின் பதிகள் பலவற்றையும் சேர்ந்து, பொருந்திய பதிகங்கள் நிகழுமாறு பாடி, சேறு பொருந்திய வயல்கள் சூழ்ந்த சீகாழியில் வந்து தோன்றிய செல்வரான பிள்ளையார் சிவந்த கண்ணையுடைய காளையை கொடியாய் உடைய இறைவரின் திருப்புத்தூரினை இனிதாய் அடைந்து, வணங்கிச் சிலநாட்கள் அங்குத் தங்கியிருந்தார்.

2784. பற்றார்தம் புறங்கள்மலைச் சிலையால் செற்ற
பரமனார் திருப்புத்தூர் பணிந்து போந்து
புற்றாரும் பணிபூண்ட புனித னார்தம்
பூவணத்தைப் புக்கிறைஞ்சிப் புகழ்ந்து பாடிக்
கற்றார்கள் தொழுதேத்துங் கானப் பேரும்
கைதொழுது தமிழ்பாடிச் சுழியல் போற்றிக்
குற்றாலங் குறும்பலாக் கும்பிட் டேத்திக்
கூற்றுதைத்தார் நெல்வேலி குறுகினாரே.

தெளிவுரை : பகைவரின் திரிபுரங்களை மலையான வில்லினால் அழித்த இறைவரின் திருப்புத்தூரைப் பணிந்து சென்று, புற்றில் வாழும் இயல்புடைய பாம்பை அணிந்த தூயவரின் திருப்பூவணம் என்ற தலத்துள் புகுந்து இறைவரை வணங்கிப், புகழ்ந்து பாடிக், கற்றவர் வணங்கித் துதிக்கும் திருக்கானப்பேர் என்ற பதியையும் வணங்கித் தமிழ்ப் பதிகம் பாடி திருச்சுழியலைப் போற்றி, அதன்பின் திருக்குற்றாலத்தையும் கும்பிட்டு வணங்கிக் கூற்றுவனை உதைத்தருளிய இறைவரின் திருநெல்வேலியை அடைந்தார்.

2785. புண்ணியனார் நெல்வேலி பணிந்து போற்றிப்
புரிசடையார் திருப்பதிகள் பிறவும் சென்று
நண்ணியினி தமர்ந்தங்கு நயந்துபாடி
நற்றொண்ட ருடன்நாளும் போற்றிச் செல்வார்
விண்ணவரைச் செற்றுகந்தான் இலங்கை செற்ற
மிக்கபெரும் பாதகத்தை நீக்க வேண்டித்
திண்ணியபொற் சிலைத்தடக்கை இராமன் செய்த
திருவிரா மேச்சரத்தைச் சென்று சேர்ந்தார்.

தெளிவுரை : புண்ணியரான சிவபெருமானின் திருநெல்வேலியை வணங்கித் துதித்து, முறுக்கிய சடையையுடைய இறைவரின் திருப்பதிகள் பலவற்றையும் சென்று பொருந்தி, விரும்பி அங்கங்கும் பாடி, நல்ல தொண்டர்களுடனே நாளும் துதித்துச் செல்பவரான பிள்ளையார், தேவர்களை அழித்துமகிழ்ந்த இராவணனின் இலங்கையை அழித்த மிகுதியான பெரும் பாதகத்தைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு வலிய அழகிய வில்லை ஏந்திய பெரிய கையையுடைய இராமன் நிறுவிய திரு இராமேச்சரத்தைக் சென்றடைந்தார்.

2786. செங்கண்மால் வழிபட்ட கோயில் நண்ணித்
திருமுன்பு தாழ்ந்தெழுந்து தென்ன னோடும்
மங்கையர்க்கு நாயகியார் தாமும் மெய்ம்மை
மந்திரியா ரும்சூழ மணிநீள் வாயில்
பொங்கியெழும் விருப்பினால் உடனே புக்குப்
புடைவலங்கொண் டுள்ளணைவார் போற்றி செய்து
பங்கயச் செங் கைகுவித்துப் பணிந்து நின்று
பாடினார் மன்னவனும் பரவி யேத்த.

தெளிவுரை : சிவந்த கண்ணையுடைய திருமால் வழிபட்ட அந்த இராமேச்சரத்தை அடைந்து, அதன் திருமுன்பு வீழ்ந்து இராமேச்சரத்தை அடைந்து, அதன் திருமுன்பு வீழ்ந்து எழுந்து, பாண்டியனோடும் மங்கையர்க்கரசியாரும் உண்மை ஒழுக்கத்துடன் நிற்கும் அமைச்சரான குலச்சிறையாரும் தம்மைப் பின்பற்றித் தொடர்ந்து வர, அவர்களுடனே அழகிய நீண்ட வாயிலுள் மேலும் மேலும் எழுகின்ற விருப்பத்தினால் புகுந்து, உள்ளே சேர்பவராய் மன்னனும் வணங்கிப் போற்றத் துதி செய்து, தாமரை போன்ற கைகளைக் கூப்பி வணங்கி நின்று பாடியருளினார்.

2787. சேதுவின்கண் செங்கண்மால் பூசை செய்த
சிவபெருமான் தனைப்பாடிப் பணிந்து போந்து
காதலுடன் அந்நகரில் இனிது மேவிக்
கண்ணுதலான் திருத்தொண்டர் ஆனார்க் கெல்லாம்
கோதில்புகழ்ப் பாண்டிமா தேவி யார்மெய்க்
குலச்சிறையார் குறைவறுத்துப் போற்றிச் செல்ல
நாதர்தமை நாள்தோறும் வணங்கி ஏத்தி
நளிர்வேலைக் கரையில்நயந் திருந்தா ரன்றே.

தெளிவுரை : சேது விடத்தில் சிவந்த கண்களையுடைய திருமால் வணங்கிய சிவபெருமானை வணங்கிப் பாடி வந்து விருப்பத்துடன் அந்தநகரத்தில் தங்கியிருந்து நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமானின் தொண்டர்களெல்லாம் குற்றமற்ற புகழையுடைய பாண்டிமாதேவியாரும் உண்மை நெறி நிற்கும் குலச்சிறை நாயனாரும் குறைவின்றி வேண்டுவனவற்றையெல்லாம் தந்து பாதுகாத்துத் துதித்து வர, இராமநாதரான இறைவரை நாள்தோறும் வணங்கித் துதித்துக் கொண்டு, குளிர்ந்த கடற்கரை நகரில் விருப்புடன் ஞானசம்பந்தர் தங்கியிருந்தார்.

2788. அந்நகரில் அமர்ந்தங்கண் இனிது மேவி
ஆழிபுடை சூழ்ந்தொலிக்கும் ஈழந் தன்னில்
மன்னுதிருக் கோணமலை மகிழ்ந்த செங்கண்
மழவிடையார் தமைப்போற்றி வணங்கிப் பாடிச்
சென்னிமதி புனைமாட மாதோட்டத்தில்
திருக்கேதீச் சரத்தண்ணல் செய்ய பாதம்
உன்னிமிகப் பணிந்தேத்தி அன்பரோடும்
உலவாத கிழிபெற்றார் உவகை யுற்றார்.

தெளிவுரை : அந்தத் தலத்தில் தங்கி இனிதாய்ப் பொருந்திக் கடல் சூழ்ந்து பக்கத்தே ஒலிக்கின்ற இலங்கையில் பொருந்தியுள்ள திருக்கோண மலையில் மகிழ்ந்து வீற்றிருக்கும் சிவந்த கண்ணையுடைய இளமை பொருந்திய காளையை ஊர்தியாகக் கொண்ட இறைவரை வணங்கிப் பதிகம் பாடி, உச்சியில் பிறைச் சந்திரனைச் சூடும்படி உயர்ந்த மாடங்களையுடைய மாதோட்ட நகரத்தின் திருக்கேதீச்சம் என்ற கோயிலில் வீற்றிருக்கும் இறைவரின் செம்மையான திருவடிகளை மிகவும் நினைந்து துதித்துப் பணிந்து, இறைவனிடம் முன்னம் பொன் முடிப்புப் பெற்ற ஞானப்பிள்ளையார் அன்பர்களுடன் கூடியிருந்து மகிழ்ந்தார்.

2789. அப்பதியைத் தொழுதுவட திசைமேற் செல்வார்
அங்கையனல் தரித்தபிரான் அமருங் கோயில்
புக்கிறைஞ்சிப் பலபதியும் தொழுது போற்றிப்
புணரிபொரு தலைகரைவாய் ஒழியப் போந்தே
செப்பரிய புகழ்த்திருவா டானை சேர்ந்து
செந்தமிழ்மா லைகள்சாத்திச் சிவனார் மன்னும்
ஒப்பரிய புனவாயில் போற்றி செய்து
வணங்கினார் உலகுய்ய ஞானம் உண்டார்.

தெளிவுரை : அந்தப் பதியை வணங்கி, அங்கிருந்து நீங்கி, பின் வடக்குத் திக்கில் செல்பவராய் அழகிய கையில் தீயை ஏந்திய, இறைவர் விரும்பி வீற்றிருக்கும் கோயிலுக்குள் புகுந்து வணங்கிப் பல பதிகளையும் வணங்கிச் சென்று, கடல் அலைகள் புரண்டு வரும் அந்த எல்லைகள் பிற்படக் கடந்து போய், கூறுவதற்கு அரிய புகழையுடைய திருவாடானை என்னும் பதியை அடைந்து, செந்தமிழ் மாலைகளைச் சாத்தி, உலகம் உய்யும் பொருட்டுச் சிவ ஞானம் உண்ட பிள்ளையார் ஒப்பில்லாத திருப்புன வாயிலைத் தாழ்ந்து வணங்கினார்.

2790. பதிநிலவு பாண்டிநா டதனில் முக்கட்
பரமனார் மகிழ்விடங்கள் பலவும் போற்றி
விதிநிலவு வேதநூல் நெறியே ஆக்கி
வெண்ணீற்றின் சார்வினால் மிக்குயர்ந்த
கதியருளிக் காழிநகர் வாழவந்தார் கண்ணுதலான்
திருத்தொண்டர் பலருஞ் சூழ
மதிநிலவு குலவேந்தன் போற்றிச் செல்ல
மந்திரியார் பதிமணமேற் குடியில் வந்தார்.

தெளிவுரை : பல பதிகளும் விளங்கும் பாண்டிய நாட்டில் மூன்று கண்களையுடைய சிவபெருமான் மகிழ்ந்து எழுந்தருளிய இடங்கள் பலவற்றையும் வணங்கி, விதிகள் பலவற்றையும் விளங்க உணர்கின்ற வேத நூல்களின் நெறியையே எங்கும் எவரும் பின்பற்றும்படி செய்து, வெண்மையான திருநீற்றின் சார்பு பெற்றதால் உயர்ந்த கதியை அதனிடை பெறும்படி அருள் செய்து, சீகாழிப் பதி வாழ் அதனிடை வந்தருளிய சம்பந்தப் பெருமான் இறைவரின் திருத்தொண்டர் பலரும் சூழ்ந்து வரவும், சந்திர குலமரபில் வந்த பாண்டியன் போற்றி உடனே வரவும் போய், அமைச்சர் குலச்சிறையாரின் பதியான திருமண மேற்குடியில் வந்தருளினார்.

2791. அந்நகரில் இனிதமர்வார் அருகு சூழ்ந்த
பதிகளில்நீ டங்கணர்தங் கோயில் தாழ்ந்து
மன்னுதிருத் தொண்டருடன் மீண்டு சேர்ந்து
மன்னவனும் மங்கையருக் கரசி யாரும்
கொன்னவில்வேற் குலச்சிறையார் தாமுங் கூடிக்
குறைகழல்கள் பணிந்துகுறை கொண்டு போற்றச்
சென்னிவளர் மதியணிந்தார் பாதம் போற்றிச்
சிரபுரத்துச் செல்வர்இனி திருந்த நாளில்.

தெளிவுரை : அந்த மணமேற் குடியில் இனிதாய் விரும்பி எழுந்தருளுவாராய்ப் பக்கத்தில் சுற்றியுள்ள பதிகளில் உள்ள இறைவரின் திருக்கோயில்களைப் போய் வணங்கிப் பொருந்திய தொண்டர்களுடனே மீண்டும் வந்து சேர்ந்து, பாண்டியரும் மங்கையர்க்கரசியாரும், கொல்லன் உலையில் வடித்த கூர்மையான வேலையுடைய குலச்சிறையாரும் சேர்ந்து ஒலிக்கும் வீரக்கழல் அணிந்த திருவடிகளைப் பணிந்து ஏவல் செய்து போற்றச் சீகாழிச் செல்வரான ஞானசம்பந்தர் தலையில் பிறையைச் சூடிய இறைவர் திருவடிகளைப் போற்றி இனிதாக அமர்ந்திருந்தார். அந்நாட்களில்,

2792. பொங்குபுனற் காவிரிநா டதனின் மீண்டு
போதுதற்குத் திருவுள்ள மாகப் பெற்று
மங்கையருக் கரசியார் தாமும் தென்னர்
மன்னவனும் மந்திரியார் தாமுங் கூட
அங்கவர்தந் திருப்பாதம் பிரிய லாற்றா
துடன்போக ஒருப்படும்அவ் வளவுநோக்கி
இங்குநான் மொழிந்ததனுக் கிசைந்தீ ராகில்
ஈசர்சிவ நெறிபோற்றி இருப்பீ ரென்று.

தெளிவுரை : பெருகும் நீர்ப்பெருக்கையுடைய காவிரி பாய்கின்ற நாடான சோழ நாட்டில் திரும்பிச் செல்வதற்கு உள்ளம் கொண்டு, மங்கையர்க்கரசி யம்மையாரும் பாண்டிய மன்னரும் அமைச்சரும் கூட அவர்தம் திருவடிகளைப் பிரிய மாட்டாதவர்களாகி உடன் வருகின்ற மனம் துணியும் அந்நிலையினைப் பார்த்து, இங்கு நான் கூறுவதைக் கேட்டு அதன்படி ஒழுக இசைந்தீரானால், இறைவரின் சிவநெறியைப் பாதுகாத்துக் கொண்டிருப்பீர்களாக ! என்று உரைத்து,

2793. சாலமிகத் தளர்வாரைத் தளரா வண்ணம்
தகுவனமற் றவர்க்கருளிச் செய்த பின்பு
மேலவர்தம் பணிமறுக்க அவரும்அஞ்சி
மீள்வதனுக் கிசைந்துதிரு வடியில் வீழ்ந்து
ஞாலமுய்ய வந்தருளும் பிள்ளை யாரைப்
பிரியாத நண்பினொடும் தொழுது நின்றார்
ஆலவிட முண்டவரை அடிகள் போற்றி
அந்நாட்டை அகன்றுமீண் டணையச் செல்வார்.

தெளிவுரை : பிரிவாற்றாமல் மிகவும் அதிகமாய்த் தளர்பவர்களாய் ஆன அவர்களைத் தளர்ச்சியடையாதபடி தக்க சொற்களைச் சொல்லித் தேற்றினார். பின்பு, அவர்கள், மேன்மையான அவரது ஏவலை மறுக்க அஞ்சி, அவர் சோழ நாட்டுக்குப் பிரிந்து செல்வதற்கு இசைந்து அவரிடம் விடை பெற்றுக் கொள்ளும் வகையால் அவருடைய திருவடிகளில் விழந்து வணங்கி உலகம் உய்வதன் பொருட்டு வந்து அவதரித்த அப்பெருமகானாரைப் பிரியமாட்டாத நண்புடன் வணங்கி நின்றனர். அப்பிள்ளையாரும் விடை பெற்றுக் கொண்டு ஆலகால நஞ்சை உண்ட இறைவரை வணங்கித் துதித்து அந்நாட்டை விட்டு நீங்கித் தம் நாட்டில் திரும்பவும் செல்பவராய்.

2794. பொன்னிவளந் தருநாடு புகுந்து மிக்க
பொருவில்சீர்த் திருத்தொண்டர் குழாத்தி னோடும்
பன்னகப்பூ ணணிந்தவர்தங் கோயில் தோறும்
பத்தருடன் பதியுள்ளோர் போற்றச் சென்று
கன்னிமதில் திருக்களரும் போற்றிக் கண்டங்
கறையணிந்தார் பாதாளீச் சுரமும் பாடி
முன்னணைந்த பதிபிறவும் பணிந்து போற்றி
முள்ளிவாய்க் கரையணைந்தார் முந்நூல் மார்பர்.

தெளிவுரை : காவிரியாறு வளம் செய்கின்ற சோழநாட்டில் புகுந்து ஒப்பில்லாத மிகுந்த சிறப்புகளையுடைய தொண்டர் கூட்டத்துடன், பாம்பை யணியாய்ப் பூண்ட இறைவரின் திருக்கோயில்கள் தோறும் அன்பர்களுடன் அந்த அந்தப் பதியில் உள்ளவர்களும் எதிர் கொண்டு போற்றச் சென்று, பகைவரால் கட்டழிக்கப்படாத மதிலில் சிறப்புடைய திருக்களர் என்ற பதியையும் துதித்துப் பின்பு, கண்டத்தில் நஞ்சுடைய இறைவரின் பாதாளீச்சுரத்தினையும் பாடி வணங்கி, முன்னே வழிபட்டுச் சென்ற மற்றப் பதிகளையும் வணங்கித் துதித்து, முந்நூல் அணிந்த மார்பையுடைய ஞானசம்பந்தர் முள்ளி வாய்க்கரையைச் சேர்ந்தனர்.

2795. மலைவளர்சந் தனம்அகிலும் தேக்கு முந்தி
மலர்ப்பிறங்கல் வண்டிரைப்பச் சுமந்து பொங்கி
அலைபெருகி ஆள்இயங்கா வண்ணம் ஆறு
பெருகுதலால் அத்துறையில் அணையும் ஓடம்
நிலைபுரியும் ஓடக்கோல் நிலையி லாமை
நீர்வாழ்நர் கரையின் கண் நிறுத்திப் போகக்
கலைபயிலுங் கவுணியர்கோன் அதனைக் கண்டக்
கரையின்கண் எழுந்தருளி நின்ற காலை.

தெளிவுரை : மலையிலே வளர்கின்ற சந்தனம், அகில், தேக்கு முதலிய மரங்களை உந்து அலைத்துக் கொண்டு மலைபோன்ற மலர்க் குவியல்களை வண்டுகள் ஒலிக்கச் சுமந்து பெருகி மிக்கு ஆள்கள் இயங்காதபடி ஆறு பெருகிவருவதால், அந்தத்துறையில் அணையும் ஓடத்தை நீரில் நிலை கொண்டு செலுத்தும் துருப்பு நிலைக்க மாட்டாது போனதால், நீர் வாழ் மக்களான சாதியினர் கரையில் நிறுத்தி விட்டுச் சென்றுவிடவே, கலைகள் பொருந்திய கவுணியர் தலைவரான பிள்ளையார் அதைப் பார்த்து அந்தக் கரையில் எழுந்தருளி நின்றபோது,

2796. தேவர்பிரான் அமர்ந்ததிருக் கொள்ளம் பூதூர்
எதிர்தோன்றத் திருவுள்ளம் பணியச் சென்று
மேவுதலால் ஓடங்கள் விடுவா ரின்றி
ஒழிந்திடவும் மிக்கதோர் விரைவால் சண்பைக்
காவலனார் ஓடத்தின் கட்ட விழ்த்துக்
கண்ணுதலான் திருத்தொண்டர் தம்மை ஏற்றி
நாவலமே கோலாக அதன்மே னின்று
நம்பர் தமைக் கொட்டமென நவின்று பாட.

தெளிவுரை : தேவர்களின் தலைவரான இறைவர் வீற்றிருக்கும் திருக்கொள்ளம் பூதூர் என்ற தலம் எதிரில் தோன்ற, அதைப் பார்த்து, அதனிடம் சென்று பணிவதற்கு உள்ளம் எண்ணியதால், ஓடம் செலுத்துபவர்கள் அங்கே இல்லாமல் போகவும், மிக்க வேகத்தால் சீகாழித் தலைவரான பிள்ளையார் ஓடத்தைக் கட்டியிருந்த கட்டை அவிழ்த்து நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமானின் தொண்டர் களை அந்த ஓடத்தில் ஏற்றி தன் நாவின் வல்லமையே கோலாகக் கொண்டு அந்த ஓடத்தின் மீது நின்று இறைவரை கொட்டமே எனத் தொடங்கும் பதிகத்தைப் பாட,

2797. உம்பருய்ய நஞ்சுண்டார் அருளால் ஓடம்
செலச்செல்ல உந்துதலால் ஊடு சென்று
செம்பொனேர் சடையார்தங் கொள்ளம் பூதூர்
தனைச்சேர அக்கரையிற் சேர்ந்த பின்பு
நம்பரவர் தமைவணங்க ஞான முண்ட
பிள்ளையார் நற்றொண்ட ருடனி ழிந்து
வம்பலரும் நறுங்கொன்றை நயந்தார் கோயில்
வாயிலின் முன் மகிழ்ச்சியொடு வந்து சார்ந்தார்.

தெளிவுரை : வானவர் உய்யும் வண்ணம் நஞ்சை உண்டருளிய இறைவரின் திருவருளினால், அந்த ஓடம் செல்லும் படி உந்தப்படுதலால், செம்பொன் போன்ற சடையுடைய இறைவரின் திருக்கொள்ளம் பூதூரினைச் சேரும் வண்ணம் அக்கரையில் சேர்ந்தபின்பு, நம்பரான சிவபெருமானை வணங்குதற்கு ஞானப்பால் உண்ட ஞானசம்பந்தர் நல்ல திருத்தொண்டர்களுடனே ஓடத்தலிருந்து கீழே இறங்கிப் போய், நல்ல மணமுடைய கொன்றை மலரை விரும்பிச் சூடிய சிவபெருமானின் திருக்கோயில் வாயிலின் முன் மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார்.

2798. நீள்நிலைக்கோ புரமதனை இறைஞ்சிப் புக்கு
நிகரிலாத் தொண்டருடன் நெருங்கச் சென்று
வாள்நிலவு கோயிலினை வலங்கொண் டெய்தி
மதிச்சடையார் திருமுன்பு வணங்கி நின்று
தாணுவே ஆற்றின்கண் ஓடம் உய்க்குந்
தன்மையால் அருள்தந்த தலைவா நாகப்
பூணினாய் களிற்றுரிவை போர்த்த முக்கட்
புனிதனே எனப்பணிந்து போற்றி செய்தார். 

தெளிவுரை : நீண்ட நிலைகளைக் கொண்ட திருக்கோபுரத்தை வணங்கி வாயிலுள் புகுந்து, ஒப்பில்லாத தொண்டர்களுடன் கூட நெருங்கிச் சென்று ஒளியுடைய திருக்கோயிலை வலங்கொண்டு வந்து சேர்ந்து, பிறைச்சந்திரனைச் சூடிய சடையையுடைய இறைவரின் திருமுன்பு வணங்கி நின்று, தாங்குபவரே ! ஆற்றிடையே ஓடம் செலுத்தித் தந்ததால் அருள் தந்த தலைவரே ! பாம்புகளை அணியாய் அணிந்தவரே ! யானையின் தோலைப் போர்த்திக் கொண்ட மூன்று கண்களையுடைய தூயவரே ! என்று பணிந்து துதித்தார்.

2799. போற்றிசைத்துப் புறம்போந்தங் குறையும் நாளில்
பூழியன்முன் புன்சமயத் தமணர் தம்மோ
டேற்றபெரு வாதின்கண் எரியின் வேவாப்
பதிகமுடை இறையவரை இறைஞ்ச வேண்டி
ஆற்றவும்அங் கருள்பெற்றுப் போந்து முன்னம்
அணைந்தபதி களும்இறைஞ்சி அன்பர் சூழ
நாற்றிசையும் பரவுதிரு நள்ளா றெய்தி
நாடுடைநா யகர்கோயில் நண்ணினாரே.

தெளிவுரை : இங்ஙனம் இறைவரைத் துதித்து வெளியில் வந்து அந்தப் பதியில் தங்கியிருந்த நாள்களில் பாண்டியனின் முன்னிலையில் புன்மையான சமயத்தவரான சமணர்களுடன் மேற்கொண்ட பெரிய வாதத்தில் தீயில் வேகாமல் இருந்து வெற்றி தந்த திருப்பதிகத்தின் தலைவரான திருநள்ளாற்றின் இறைவரை வணங்க வேண்டி, வழியில் முன் சென்று வணங்கிய பதிகளையும் திரும்பவும் வணங்கி, அன்பர் கூட்டம் சூழ்ந்து வரப் போய், நான்கு திக்கிலும் போற்றும் திருநள்ளாற்றை சார்ந்து, நாடுடை நாயகரின் கோயிலை ஞானசம்பந்தர் அடைந்தார்.

2800. நீடுதிருத் தொண்டர்புடை சூழ அங்கண்
நித்திலயா னத்திடைநின் றிழிந்து சென்று
பீடுடைய திருவாயில் பணிந்து புக்குப்
பிறையணிந்த சென்னியார் மன்னுங் கோயில்
மாடுவலங் கொண்டுள்ளால் மகிழ்ந்து புக்கு
மலர்க்கரங்கள் குவித்திறைஞ்சி வள்ள லாரைப்
பாடகமெல் லடியெடுத்துப் பாடி நின்று
பரவினார்கண்ணருவி பரந்து பாய.

தெளிவுரை : மிக்க தொண்டர்கள் பக்கத்தில் சூழ்ந்து வர அங்கு முத்துப் பல்லக்கினின்று இழிந்தருளிப் போய்ப் பெருமையுடைய வாயிலை வணங்கி உள்ளே புகுந்து பிறைச் சந்திரனைச் சூடிய தலையையுடைய இறைவர் நிலைபெற்று வீற்றிருக்கும் கோயிலின் உள்பக்கங்களில் வலமாகச் சுற்றி வந்து மகிழ்வுடன் உள்ளே புகுந்து வள்ளலாரான இறைவரைப் பாடக மெல்லடி எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி நின்று கண்களினின்று நீர் அருவி பெருகத் துதித்தார்.

2801. தென்னவர்கோன் முன்அமணர் செய்த வாதில்
தீயின்கண் இடுமேடு பச்சை யாக்கி
என்னுள்ளத் துணையாகி ஆல வாயில்
அமர்ந்திருந்த வாறென்கொல் எந்தாய் என்று
பன்னுதமிழ்த் தொடைசாத்திப் பரவிப் போந்து
பண்பினிய தொண்டருடன் அங்கு வைகி
மன்னுபுகழ்ப் பதிபிறவும் வணங்கச் சண்பை
வள்ளலார் நள்ளாறு வணங்கிச் செல்வார்.

தெளிவுரை : பாண்டிய மன்னன் முன்பு, சமணர் செய்த வாதில் தீயில் இட்ட ஏடு பச்சையாக இருக்கச் செய்தும் என் மனத்திலே துணையாகியும், வாயிலில் வெளிப்பட வந்தருளி விரும்பியிருந்த தன்மைதான் என்ன அதிசயம் ! எந்தையே ! என்று நயம் பெறப் போற்றி நலம் குலாவிப் பன்முறையும் எடுத்துக் கூறும் தமிழ்த் தொடையான திருப்பதிகத்தைப் பாடித் துதித்து வெளியே வந்து அடிமைப் பண்பினால் இனிமை தருகின்ற தொண்டர்களுடன் கூடி அந்தத் தலத்தில் தங்கியருளி, நிலையான புகழையுடைய தலங்கள் மற்றவற்றையும் வணங்குதற்காகச் சம்பந்தர் திருநள்ளாற்றினை வணங்கி விடைபெற்றுச் சென்றார்.

2802. சீர்நிலவு திருத்தெளிச்சே ரியினைச் சேர்ந்து
சிவபெருமான் தனைப்பரவிச் செல்லும் போது
சார்வறியாச் சாக்கியர்தம் போதி மங்கை
சார்தலும்மற் றதுஅறிந்த சைவ ரெல்லாம்
ஆர்கலியின் கிளர்ச்சியெனச் சங்கு தாரை
அளவிறந்த பல்லியங்கள் முழக்கி ஆர்த்துப்
பார்குலவு தனிக்காளஞ் சின்ன மெல்லாம்
பரசமய கோளரிவந் தான்என் றூத.

தெளிவுரை : சிறப்புக்கள் பொருந்திய திருத்தெளிச் சேரி யைச் சேர்ந்து இறைவரைத் துதித்து மேலே செல்லும் போது, நற்சார்பு இல்லாத சாக்கிய (பௌத்தர்) தங்கும் போதி மங்கை என்ற ஊரின் அணித்தாக வருதலும், அச் செய்தியை அறிந்த சைவர் எல்லாரும் கடல் கிளர்ந்து எழுந்தது போல் தாரை சங்கு முதலான அளவற்ற பல இயங்களையும் முழக்கி ஒலித்து, உலகம் விளங்கும்படி எக்காளம் திருச்சின்னம் எல்லாவற்றையும், பரசமய கேரளரி வந்தார் என்று சொல்லி யூத.

2803. புல்லறிவிற் சாக்கியர்கள் அறிந்தார் கூடிப்
புகலியர்தம் புரவலனார் புகுந்து தங்கள்
எல்லையினில் எழுந்தருளும் பொழுது தொண்டர்
எடுத்தஆர்ப் பொலியாலும் எதிர்முன் சென்று
மல்கியெழுந் திருச்சின்ன ஒலிக ளாலும்
மனங்கொண்ட பொறாமையினால் மருண்டு தங்கள்
கல்வியினில் மேம்பட்ட புத்த நந்தி
முதலான தேரர்க்குங் கனன்று சொன்னார்.

தெளிவுரை : புல்லிய அறிவுடைய சாக்கியர்களுள் அறிந்தவர் ஒன்று சேர்ந்து, சீகாழியினரின் காவலரான ஞான சம்பந்தர் ஊரின் எல்லையுள் புகுந்த போது, திருத்தொண்டர்கள் எடுத்த சிவ ஒலிகளின் முழக்கத்தாலும் அவர்களின் எதிரே முன் அணியின் போய்த் திரண்டு எழுந்து ஒலிக்கும் திருச்சின்னம் எக்காளம் என்ற இவற்றின் ஒலிகளாலும், தம் உள்ளத்துள் கொண்ட பொறாமையால் மயக்கம் அடைந்து, தம் கல்வியிலே மேம்பட்ட புத்தநந்தி முதலானவர்க்கும் சினத்துடன் கூறினார்.

2804. மற்றவர்கள் வெவ்வுரையும் பிள்ளை யார்முன்
வருசின்னப் பெருகொலியும் மன்னுந் தொண்டர்
பொற்புடைய ஆர்ப்பொலியுஞ் செவியினூடு
புடைத்தநா ராசமெனப் புக்க போது
செற்றமிகு முள்ளத்துப் புத்த நந்தி
செயிர்த் தெழுந்து தேரர்குழாஞ் சூழச்சென்று
வெற்றிபுனை சின்னங்கள் வாதி லெம்மை
வென்றன்றோ பிடிப்பதென வெகுண்டு சொன்னான்.

தெளிவுரை : அவர்களின் கொடிய சொல்லும், அப்போது ஞானசம்பந்தர் முன் வரும் திருச்சின்னங்களின் பெருகிய ஒலியும், நிலைபெற்ற தொண்டர்களின் ஆராவர ஒலியும் கூடி ஒருசேர வந்து தம் காதினுள் காய்ச்சி அடித்த இரும்புச் சலாகை போல் புகுந்த போது சினம் மிகுந்த புத்த நந்தி மேலும் சினந்து தம் கூட்டத்திடையே போய், வெற்றிக் கறிகுறியாக முழக்கப்படும் சின்னங்கள் எம்மை வாதத்தில் வென்ற பின்னன்றோ பிடித்தல் வேண்டும் ! எனக் கடுமையாகச் சினந்து சொன்னான்.

2805. புத்தரினம் புடைசூழப் புத்த நந்தி
பொருவில்ஞா னப்புனிதர் திருமுன் பூதும்
மெய்த்தவிறற் சின்னங்கள் விலக்குங் காலை
வெகுண்டெழுந்த திருத்தொண்டர் வெறுத்து நோக்கி
இத்தகைய செயற்கிவரைத் தடிதல் செய்யா
திதுபொறுக்கில் தங்கணிலை ஏற்ப ரென்று
முத்துநிரைச் சிவிகையின் மேல் மணியை வந்து
முறைபணிந்து புகுந்தபடி மொழிந்து நின்றார்.

தெளிவுரை : புத்தர் கூட்டம் தன்னைச் சூழ்ந்து வரப், புத்த தந்தி ஒப்பற்ற ஞானமுடைய தூய பிள்ளையாரின் திருமுன்பு ஊதப்பட்ட உண்மைத் திறம் உடைய திருச்சின்னங்களை விலக்கிய போது, சினத்துடன் எழுந்த திருத்தொண்டர்கள் அவனது செய்கையை வெறுத்துப் பார்த்து, இவ்வாறு செய்யும் கொடிய செயலுக்கு இவர்களைத் தண்டிக்காது பொறுத்துக் கொண்டு போவோமானால் தங்கள் நிலையையே மேலும் மேற்கொண்டொழுகுவர். என எண்ணி, முத்துக்களின் வரிசைபட உள்ள சிவிகையில் அமர்ந்துள்ள மணியான பிள்ளையாரிடம் வந்து அவரை முறையாய்த் தொழுது நேர்ந்த விதத்தைக் கூறி நின்றனர்.

2806. வருமிடத்தில் அழகிதாம் நமக்கு வாதில்
மற்றிவர்தம் பொருள்நிலைமை மறாத வண்ணம்
பொருமிடத்தில் அறிகின்றோம் புத்த நந்தி
பொய்ம்மேற்கோள் எனப்புகலி வேந்தர் கூற
அருமுறைசொல் திருப்பதிகம் எழுது மன்பர்
ஆளுடைய பிள்ளையார் திருவாக் காலே
உருமிடித்து விழப்புத்தன் உத்த மாங்கம்
உருண்டுவீழ் கெனப்பொறா உரைமுன் விட்டார்.

தெளிவுரை : வரும் இடத்தில் இது நேர்தல் நமக்கு அழகியதே ! மாறுபாடு கொண்ட இவர்களது பொருள் நிச்சயம் மறுக்க இயலாதபடி வாதிடும் இடத்தில் புத்தநந்தியின் பொய்பினை மேற்கொண்டு வரும் கொள்கையின் நிலையை உள்ளபடி காட்டுவோம் என்று சீகாழித் தலைவர் உரைத்தார். அரிய திருமுறைகளாகிய திருப்பதிகங்களை எழுதும் வழக்கத்தையுடைய சம்பந்த சரணாலயர் என்பவர் ஆளுடைய பிள்ளையாரின் திருவாக்கின் ஆணையால், புத்த நந்தியின் தலை, இடி வீழ்வதால் உருண்டு விழுவது போல் விழக்கடவது எனப் பொறுக்க மாட்டாத சொல்லை முன் கூறிச் செல்ல விட்டார்.

2807. ஏறுயர்த்தார் சைவநெறி ஆணை உய்க்க
எதிர்விலக்கும் இடையூற்றை எறிந்து நீக்கும்
மாறில்வலி மந்திரமாம் அசனி போல
வாய்மைஉரைத் திருத்தொண்டர் வாக்கி னாலே
வேறுமொழிப் போர் ஏற்பான் வந்த புத்தன்
மேனியையும் தலையினையும் வெவ்வே றாகக்
கூறுபட நூறியிடப் புத்தர் கூட்டம்
குலைந்தோடி விழுந்துவெருக் கொண்ட தன்றே.

தெளிவுரை : காளைக் கொடியையுயர்த்திய சிவபெருமானின் சைவ மார்க்கத்தின் ஆணையை உலகெங்கும் நடத்த எதிரே வந்து அடையும் இடையூறுகளை வேர் அறக்களைந்து நீக்கும் ஒப்பில்லாத வலிமையுடைய மந்திரமான இடிபோன்ற உண்மைத் திருவாக்கான தேவராத்துடன் கூடிய சம்பந்தரின் தொண்டரது திருவாக்கு, வேறுபட்ட மொழிகளால் செய்யும் போரை மேற்கொண்டு வந்த புத்த நந்தியின் உடம்பையும் தலையையும் வெவ்வேறு கூறுபடச் சிதைவுபடுத்தியது. அப்போதே பௌத்தர்களின் கூட்டம் விரைந்து அஞ்சி ஓடித் திடுக்கிட்டு நடுங்கியது.

2808. மற்றவர்கள் நிலைமையையும் புத்த நந்தி
வாக்கின்போர் ஏற்றவன்தன் தலையும் மெய்யும்
அற்றுவிழ அத்திரவாக் கதனால் அன்பர்
அறுத்ததுவுங் கண்டஅர னடியார் எல்லாம்
வெற்றிதரும் பிள்ளையார் தமக்குச் சென்று
விண்ணப்பஞ் செயவெதிர்ந்த விலக்கு நீங்க
உற்றவிதி அதுவேயாம் அரஎன் றெல்லாம்
ஓதுகென அவ்வொலிவான் உற்ற தன்றே.

தெளிவுரை : அந்தப் பௌத்தர்களின் நிலைமையையும் வாக்கால் போர் செய்ய வந்து, புத்தநந்தியின் தலையும் உடலும் வேறாய் அறுபட்டு விழுமாறு அம்பு போன்ற வாக்கினால் தொண்டர் செய்த செயலையும் கண்ட சிவனடியார் கூட்டம் எல்லாம், அவ்வெற்றியை அளிக்கும் ஞானசம்பந்தருக்குச் சென்று கூறினர்; எதிர்ப்பட்ட இடையூறு நீங்கும்படி பொருந்திய இறைவரின் அருள் விதியே அதுவாகும். ஆதலால் சிவபெருமானை வணங்கி அரகர என்று எல்லாரும் சிவன் நாமத்தை ஓதி முழக்கம் செய்க ! என்று பிள்ளையார் உரைத்தார். அனைவரும் அரகர என்று முழங்கினர். அந்த ஒலியானது வானத்தில் அப்போதே போய்ப் பொருந்தியது.

2809. அஞ்சிஅகன் றோடியஅப் புத்த ரெல்லாம்
அதிசயித்து மீண்டுமுடன் அணைந்து கூடி
வஞ்சனையோ இதுதான்மற் றவர்தஞ்சைவ
வாய்மையோ எனமருண்டு மனத்திற் கொள்வார்
எஞ்சலின்மந் திரவாத மன்றி எம்மோ
டெதிர்ந்து பொருள் பேசுவதற் கிசைவ தென்று
தஞ்செயலின் மிக்குள்ள சாரிபுத்தன்
தன்னையே முன்கொண்டு பின்னுஞ் சார்ந்தார்.

தெளிவுரை : அச்சம் கொண்டு ஓடிய அந்தப் பௌத்தர் எல்லாம் வியப்படைந்து, மீண்டும் தம்முன் ஒன்று கூடி, அந்நிகழ்ச்சிதான் வஞ்சனையால் உண்டானதோ? அல்லது அவர்களது சைவ சமயத்தின் உண்மைத் திறத்தால் விளைந்ததோ என்று மயக்கம் கொண்டு மனத்தில் அதை எண்ணிக், குறைவில்லாத மந்திர வாதத்தாலன்றி எம்முடன் எதிர்த்து உண்மைப் பொருள் இது என்று பொருள் நிச்சயம் பேசி வாதம் செய்வதற்கு இசைவீராக ! என்று தம் சமய நிலையில் மிக்க வன்மையுடைய சாரிபுத்தன் என்பவனையே தலைவனாக முன் வைத்துக் கொண்டு பின்னும் வந்து சார்ந்தனர்.

2810. அத்தன்மை கேட்டருளிச் சண்பை வந்த
அடலேறு திருவுள்ளத் தழகி தென்று
மெத்தமகிழ்ச் சியினோடும் விரைந்து சென்று
வெண்தரளச் சிவிகையினின் றிழிந்து வேறோர்
சத்திரமண் டபத்தின் மிசை ஏறி நீடு
சைவருடன் எழுந்தருளி இருந்து சாரும்
புத்தர்களை அழைக்கவெனத் திருமுன் நின்றார்
புகலிகா வலர்ஏவல் போற்றிச் சென்றார்.

தெளிவுரை : அவர்கள் கூறிய அதனைச் சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தர் திருவுள்ளத்தில் இது அழகிது ! என்று கொண்டு, மிக்க மகிழ்ச்சியோடும் விரைவாகச்சென்று, வெண்மையான முத்துச் சிவிகையினின்று இறங்கி, வேறு ஒரு சத்திர மண்டபத்தில் ஏறி, மிக்க சைவர்களுடனே அமர்ந்து எழுந்தருளி வீற்றிருந்து கொண்டு, முன் கூறிய வண்ணம் எதிர்ந்து பொருள் பேசச் சார்கின்ற பௌத்தர்களை அழையுங்கள் ! என்று சொல்ல, அவரது திருமுன்பு நின்ற தொண்டர்கள், சீகாழித் தலைவரின் அந்த ஏவலைப் போற்றி அவ்வாறே பௌத்தரை அழைக்கச் சென்றனர்.

2811. சென்றவர்கள் தேரர்குழாம் அணைந்து நீங்கள்
செப்பிவரும் பொருள் நிலைமை தெரிக்க எங்கள்
வென்றிமழ இளங்களிறு சண்பை யாளி
வேதபா லகன்மும்மைத் தமிழின் வேந்தன்
நன்றுமகிழ்ந் தழைக்கின்றான் ஈண்ட நீரும்
நண்ணுமெனக் கூறுதலும் நன்மை சாராத்
தன்தகைமைப் புத்தருடன் சாரி புத்தன்
சத்திரமண் டபமுன்பு சார வந்தான்.

தெளிவுரை : ஞான சம்பந்தரின் ஆணைப்படி சென்ற அடியார்கள், பௌத்த கூட்டத்தை அடைந்து, நீங்கள் கூறி வருகின்ற பொருளின் உண்மை நிலையைத் தெரிவிக்குமாறு எங்களின் வெற்றியுடைய இளங்களிறும் சண்பை நகரத்தவரும் வேதத் தலைவரும் முத்தமிழ் மன்னருமான ஞான சம்பந்தர்ப்பெருமான் மகிழ்ந்து அழைக்கின்றார். நீங்கள் பொருந்தும்படி வாருங்கள் ! எனக் கூறவும், அதைக் கேட்டு நல்ல நெறியை இதுவரை சாராத தன்மையைக் கொண்ட புத்தர்களுடனே கூடிச் சாரிபுத்தன் சத்திர மண்டபத்தின் முன்னே வந்தான்.

2812. அங்கணைந்து மண்டபத்துப் புத்த ரோடும்
பிள்ளையார் அருகணைய நின்ற போதில்
எங்குநிகழ் திருச்சின்னந் தடுத்த புத்தன்
இருஞ்சிரத்தைப் பொடியாக்கும் எதிரில் அன்பர்
பொங்குபுகழ்ப் புகலிகா வலர்தம் பாதம்
போற்றிஅரு ளாற்சாரி புத்தன் தன்னை
உங்கள்தலை வனும்பொருளும் உரைக்க என்ன
உற்றவா தினைமேற்கொண் டுரைசெய் கின்றான்.

தெளிவுரை : அங்குச் சென்று சாரிபுத்தன் மண்டபத்தில் புத்தர்களுடன் கூடிப் பிள்ளையார் அருகில் நெருங்கி நின்ற போதிலே, எங்கும் ஆணை செலுத்துகின்ற திருச்சின்னத்தைத் தடுத்த புத்த நந்தியின் பெரிய தலையை அழிவு செய்த ஒப்பில்லாத அன்பரான சம்பந்த சரணாலயர் மேல் மேல் பெருகும் புகழையுடைய சீகாழித் தலைவரான ஞான சம்பந்தரின் திருவடிகளைத் துதித்து, அவரது அருளைப்பெற்று வாதத்தில் புகுவாராய்ச் சாரிபுத்தனைப் பார்த்து, உங்கள் தலைவனான கடவுளையும் அவன் கூறும் பொருளான முத்தியினையும், இன்னபடி எனப் பேசுவாயாக என்று சொல்ல, பொருந்திய சமய வாதத்தை மேற்கொண்டு அச் சாரிபுத்தன் சொல்கின்றவனாய்,

2813. கற்பங்கள் அனைத்தினிலும் பிறந்து வீந்து
கதிமாறுங் கணபங்க இயல்பு தன்னில்
பொற்புடைய தானமே தவமே நன்மை
புரிந்தநிலை யோகமே பொருந்தச் செய்ய
உற்பவிக்கும் ஒழிவின்றி உரைத்த ஞானத்
தொழியாத பேரின்ப முத்தி பெற்றான்
பற்பலரும் பிழைத்துய்ய அறமுன் சொன்ன
பான்மையான் யாங்கள்தொழும் பரமன் என்றான்.

தெளிவுரை : அளவற்ற எல்லாக் கற்பங்களிலும் அளவற்ற யோனிகளில் பிறந்தும் இறந்தும் அக்கதியினின்றும் மாறி வீடு பெறுகின்ற கணபங்க இயல்பு கூறும் புத்த சமயத்தில் அழகுடைய தானம், தவம், பண்பு மிகுந்த யோகம் என்னும் இவற்றைத் தான் பொருந்தும்படி செய்யவே, அதனால் உண்டாகும் நீங்குதல் இல்லாத நிலையால் சொன்ன ஞானத்தால் அழியாத பேரின்பம் தரும் கந்த வீடு பெற்றவன் பலப்பல பிறவித் துன்பத்தினின்றும் நீங்கி உய்யும் பொருட்டாக அறங்களை முன்னே சொன்ன அருளுடையவன், அவனே நாங்கள் தொழும் கடவுளாவான் எனச் சொன்னான்.

2814. என்றுரைத்த சாரிபுத்தன் எதிர்வந் தேற்ற
இருந்தவத்துப் பெருந்தன்மை அன்பர் தாமும்
நன்றுமது தலைவன்தான் பெற்றா னென்று
நாட்டுகின்ற முத்திதான் யாவ தென்றார்
நின்றவுரு வேதனையே குறிப்புச் செய்கை
நேர்நின்ற ஞானமென நிகழ்ந்து ஐந்தும்
ஒன்றியகந் தத்தழிவே முத்தி யென்ன
உரைசெய்தான் பிடகத்தின் உணர்வு மிக்கான்.

தெளிவுரை : இவ்வாறு கூறிய தன் தலைவன் தன்மை பற்றி விடை சொன்ன சாரிபுத்தன் முன்னம் வாதத்தை ஏற்று நின்ற பெரிய தவத்தையும் பெருந்தன்மையையும் உடைய அன்பரும் உங்கள் தலைவன் தான் அடைந்தான் என்று உங்கள் சமயம் நிச்சயித்துக் கூறும் முத்தியின் இயல்புதான் யாது? என வினவினார். நின்ற உரு வேதனை, குறிப்பு, செய்கை, நேரே நின்ற ஞானம் என நிகழும் ஐந்தும் கூடிய பஞ்ச கந்தத்தின் அழிவே முத்தியாவது எனத் திரிபிடகம் என்ற பௌத்த சமய நூலில் அறிவு மிக்க சாரிபுத்தன் கூறினான்.

2815. ஆங்கவன்தான் உரைத்தமொழி கேட்ட அன்பர்
அதனைஅனு வாதஞ்செய் தவனை நோக்கித்
தாங்கியஞா னத்துடனாம் கந்தம் ஐந்தும்
தாம்வீந்து கெட்டனவேல் தலைவன் தானும்
ஈங்குளன் என் றவனுக்கு விடயமாக
யாவையுமுன் இயற்றுதற்கு விகார மேசெய்
தோங்குவடி வமைத்துவிழ வெடுக்கும் பூசை
கொள்வார்ஆர் உரைக்கவென உரைக்க லுற்றான்.

தெளிவுரை : அப்போது அந்தச் சாரிபுத்தன் உரைத்ததைக் கேட்ட அன்பரான சம்பந்த சரணாலயர் அவன் கூறிய மொழியைத்தாம் அனுவாதித்துக் கொண்டு அவனைப் பார்த்து அவன் (புத்தன்) முன் தங்கியிருந்தஞானம் முதலான ஐந்துகந்தங்களும் தாம் ஒருங்கே அழிந்து கெட்டவனானால் தலைவன்தானே இங்கு வீற்றிருக்கின்றார் என்று கொண்டு, அவன் கொள்ளும்படி எல்லாவற்றையும் செய்வதற்காக விகாரம் என்னும் கோயில் எடுப்பித்து அதனுள் அவனது பெரிய வடிவத்தையும் வைத்து விழாச் செய்யும் பூசையை ஏற்றுக் கொள்பவர் யார் கூறுக ? என்று வினவ, சாரிபுத்தன் சொல்லத் தொடங்கினான்.

2816. கந்தமாம் வினையுடம்பு நீங்கி எங்கோன்
கலந்துளன்முத் தியில்என்றான் என்னக் காணும்
இந்திரியங் கண்முதலாம் கரணந் தானும்
இல்லையேல் அவனுணர்ச்சி யில்லை யென்றார்
முந்தையறி விலனாகி உறங்கி னானை
நிந்தித்து மொழிந் துடல்மீ தாடினார்க்கு
வந்தவினைப் பயன்போல வழிபட் டார்க்கும்
வருமன்றோ நன்மையென மறுத்துச் சொன்னான்.

தெளிவுரை : இருவினை காரணமாய்ப் பஞ்ச கந்தவுடம்பு கெட எம் தலைவன் முத்தியில் சேர்ந்திருக்கின்றான். அதனால் கோயிலும் விழாவும் எடுப்பது பொருந்தும் என்று சாரிபுத்தன் உரைத்தான். அவன் இவ்வாறு உரைக்கவே, அங்ஙனம் முத்தியில் சேர்ந்ததும் உன் தலைவனுக்குப் பொருள்களை உணரும் கருவிகளான கண் முதலான கரணங்கள் இல்லாது ஒழிந்ததால் அவனுக்கு உணர்வு உதித்தல் இல்லையாகும்? என்று சம்பந்த சரணாலயர் மறுத்துச் சொன்னார். முற்பட்ட உணர்வு கெட்டு உறங்குபவனை நிந்தனை செய்து அவன் உடலின் மீது மிதித்தாடிய ஒருவனுக்கு, அதனால் தீவினைப் பயன் வருவதைப்போல், ஐந்து கந்தமும் கெட்டு முக்தியடைந்த எம் முதல்வனை வணங்கியவர்க்கும் அந்த நல்வினைப் பயன் வரும் அன்றோ ! எனச் சாரிபுத்தன் மறுத்துச் சொன்னான்.

2817. சொன்னவுரை கேட்டருளி அன்பர் தாமும்
தொடர்ந்தவழி பாடுபல கொள்கின் றானுக்
கன்னவற்றி னுடன்பாடும் எதிர்வு மில்லை
ஆனபோ தவன்பெறுதல் இல்லை யென்றார்
முன்னவற்றி னுடன்பாடும் எதிர்வுமின்றி
முறுகுதுயில் உற்றானை முனிந்து கொன்றால்
இன்னுயிர்போய்க் கொலையாகி முடிந்த தன்றோ
இப்படியால் எம்மிறைவற் கெய்தும் என்றார்.

தெளிவுரை : மேற்கண்டபடி சொன்ன சாரிபுத்தனின் மறுமொழியைக் கேட்டு அன்பரான சம்பந்த சரணாலயரும் நீ தொடர்ந்த வழிபாட்டை ஏற்றுக்கொள்ளும் உன் தலைவனுக்கு, உணர்ந்து கொள்வதற்குரிய கருவிகள் இல்லாமையால் அவற்றில் விரும்பும் வெறுப்பும் இல்லை. அங்ஙனமானால் அந்த வழிபாட்டை ஏற்றுக்கொள்வதும் இல்லை ! என்று சொன்னார். தன் முன்புள்ள விடயங்களில் விருப்பும் வெறுப்பும் இன்றி நல்ல உறக்கத்தை உடைய ஒருவனைச் சினந்து ஒருவன் கொன்றால் அங்ஙனம் கொல்லப்பட்டவனுக்கு உயிர் போகும். கொன்றவனுக்கு வந்து கொலைப்பழியும் சேரும் அன்றோ? இவ்வாறே எம் இறைவனுக்கும் எம் வழிபாடு சென்று பொருந்தும், என்று சாரிபுத்தன் உரைத்தான்.

2818. இப்படியால் எய்துமென இசைத்துநீ இங்கு
எடுத்துக்காட் டியதுயிலும்இயல்பி னான்போல்
மெய்ப்படிய கரணங்கள் உயிர்தா மிங்கு
வேண்டுதியா னும்மிறைவற் கான போது
செப்பியஅக் கந்தத்தின் விளைவின் றாகித்
திரிவில்லா முத்தியிற்சென் றிலனும் ஆனான்
அப்படியக் கந்தத்துள் அறிவுங் கெட்டால்
அம்முத்தி யுடன்இன்ப மணையா தென்றார்.

தெளிவுரை : இங்ஙனம் வழிபாட்டில் பயன் தருதல் எம் தலைவன்பாலும் பொருந்தும் என்று நீ இங்கு மேற்கோளாக எடுத்துக் காட்டிய உடன்பாடும் மறுப்பும் இல்லாது - உறங்குபவனின் தன்மைபோல, உடம்பில் உள்ள கரணங்களும் உயிரும் ஈண்டு இச்செயலுக்கு வழிபாடு கொண்டு பயன்படும் நிலைக்கு உன் தலைவனுக்கு இருக்கவேண்டும் அன்றோ ! அங்ஙனம் உடலும் கரமும் உயிரும் வழிபாடு கொள்ளும் நிலையில் உள்ளவன் ஆனபோது உன்னால் முன்பு கூறப்பட்ட ஐந்து கந்தத்தின் விளைவு இல்லாது போகவே, உம் தலைவனான அவன் முத்தியில் சேர்ந்தவன் அல்லன் ஆகின்றான். அங்ஙனம். அக்கந்தத்தின் அறிவும் கெடுமே ஆனால் அந்த முத்தியுடன் இன்பம் சேராது என்று சம்பந்த சரணாலயர் மொழிந்தார்.

2819. அவ்வுரைகேட் டெதிர்மாற்றம் அறைவ தின்றி
அணைந்துளன் அம் முத்தியெனும் அதுவும் பாழாம்
கவ்வையில்நின் றவனையெதிர் நோக்கி ஞானக்
கடலமுதம் அனையவர்தங் காத லன்பர்
பொய்வகையே முத்தியினிற் போனான் முன்பே
பொருளெல்லாம் உணர்ந்துரைத்துப் போனான் என்றாய்
எவ்வகையால் அவனெல்லாம் உணர்ந்த தீதும்
இல்லதுரைப் பாய்எனினும் ஏற்போ மென்றார்.

தெளிவுரை : சம்பந்த சரணாலயர் கூறிய அந்த மொழியைக் கேட்டு அதற்கு எதிராக ஒன்றும் கூறுவதற்கின்றி அந்த முத்தியில் தலைவன் சேர்ந்துள்ளான் எனச் சொல்லப்பட்டதும் பாழாய் முடிந்த சிறுமையுடன் வருத்தத்தோடு சாரிபுத்தன் நின்றான். அத்தகையவனை மீண்டும் பார்த்து ஞானம் என்ற கடலில் கடைந்தெடுத்த அமுதம் போன்ற ஆளுடைய பிள்ளையாரின் அன்பரான சம்பந்த சரணாலயர் கந்தங்கள் அவிந்து பொய்யாய் முடிந்தபின் முத்தியில் சேர்பவனான உன் தலைவன் அதற்கு முன்பே எல்லாப் பொருள்களையும் உணர்ந்து அறம் உரைத்துச் சென்றான் என்று கூறினாய் ! அவன் அவ்வாறு எல்லாவற்றையும் எங்ஙனம் முழுதும் உணர்ந்து கொண்டான் ? எனவே உணர்ந்து கொண்டான் என்பது இல்லையாகின்றது ! இதற்கு மறுமொழி கூறுவாயாயின் அதனை யாம் ஏற்றுக்கொள்வோம் ! என்று சொன்னார்.

2820. உணர்வுபொதுச் சிறப்பென்ன இரண்டின் முன்ன
துளவான மரப்பொதுமை உணர்தல் ஏனைப்
புணர்சிறப்பு மரங்களில்வைத் தின்ன தென்றல்
இப்படியால் வரம்பில்லாப் பொருள்கள் எல்லாம்
கொணரும்விற கினைக்குவைசெய் திடினும் வேறு
குறைத்தவற்றைத் தனித்ததனியே இடினும் வெந்தீத்
துணர்கதுவிச் சுடவல்ல வாறு போலத்
தொகுத்தும்விரித் துந்தெரிக்குந் தொல்லோன் என்றான்.

தெளிவுரை : உணர்வு என்பது பொது, சிறப்பு என இரண்டு வகைப்படும். அவற்றுள் முதலில் உள்ள பொதுவுணர்வு ஒரு காட்டில் உள்ளது மரம் எனப் பொதுவாய் உணர்வது. மற்றச் சிறப்பு உணர்வாவது, அக்காட்டில் உள்ள மரங்களை இன்னவை என்று பிரித்து உணர்வது. இங்ஙனமே எல்லாப் பொருள்களின் உணர்வுமாகும். கொண்டு வரும் விறகுகளைக் கூட்டித் தீயில் மொத்தமாக இட்டாலும் அங்ஙனமில்லாது வெவ்வேறாக வெட்டித் தனித்தனியே தீயில் இட்டாலும் வெப்பமுடைய தீயின் கொழுந்து அதைச் சுட்டு நாசமாக்க வல்லவாறு போல் தொகையாய்க் கூட்டியும் தனித்தனியாக விரித்தும் பழையவனான எம் இறைவன் தெரிவிப்பான் எனச் சாரிபுத்தன் சொன்னான்.

2821. எடுத்துரைத்த புத்தனெதிர் இயம்பு மன்பர்
எரியுணர்வுக் கெடுத்துக்காட் டாகச் சொன்னாய்
அடுத்தவுணர் உருவுடைய தன்று சொன்ன
அனல்வடிவிற் றாம் அதுவும் அறிதி நுங்கோன்
தொடுத்தநிகழ் காலமே யன்றி ஏனைத்
தொடர்ந்தஇரு காலமுந்தொக் கறியுமாகில்
கடுத்தஎரி நிகழ்காலத் திட்ட தல்லால்
காணாத காலத்துக் கதுவா தென்றார்.

தெளிவுரை : இங்ஙனம் எடுத்துக்காட்டி விடை கூறிய சாரிபுத்தன் எதிரில் வாதம் கூறும் அன்பரான சம்பந்த சரணாலயர் நீதியின் செயலுக்கு உதாரணமாக உணர்வின் செயலைக் கூறினாய். ஆனால் பொருள்களை அடுத்து நின்ற உணர்வு வடிவம் கொண்டதன்று. அந்த உணர்வுக்கு எடுத்துக்காட்டாக நீ கூறிய தீயோ வடிவம் உடையது. அதையும் நீ அறிவாயாக ! உம் இறைவன் தொடுக்கப்பட்ட நிகழ்காலமே அல்லாது மற்ற இறந்த காலமும் எதிர் காலமும் தொடுத்து அறிபவனானால், அவன் அவ்வாறு அறியும் முக்கால உணர்வுக்கு நீ எடுத்துக்காட்டிய பொருளான எரிக்கும் தீயானது நிகழ்காலத்தில் இட்ட போது சுடுவதே அல்லாது மற்ற ஏனைஇரண்டு காலத்தும் சுடாதாகும் என்றார் சம்பந்த சரணாலயர்.

2822. ஆதலினால் உன்னிறைவன் பொருள்கள் எல்லாம்
அறிந்ததுநும் முத்திபோல் ஆயிற் றன்றே
ஏதமாம் இவ்வறிவால் உரைத்த நூலும்
என்றவனுக் கேற்குமா றருளிச் செய்ய
வாதமா றொன்றின்றித் தோற்றான் புத்தன்
மற்றவனை வென்றருளிப் புகலி மன்னர்
பாததா மரைபணிந்தார் அன்பர் தங்கள்
பான்மையழி புத்தர்களும் பணிந்து வீழ்ந்தார்.

தெளிவுரை : ஆதலால், உதாரணமாகக் காட்டிய பொருள் பொருத்தமானதாக இல்லாததால், உம் தலைவன் எல்லாப் பொருள்களையும் முழுவதும் ஒருங்கே உணர்ந்த செய்தியும், நீ கூறிய முத்தி இலக்கணம் பாழாய் முடிந்தவாறு போல், இதுவும் பாழாய் முடிந்தது. இத்தகைய நிரம்பாத அறிவால் அவன் உரைத்த உம் பிடகநூலும் குற்றமுடையதாகும் ! என்று அந்தச் சாரிபுத்தனுக்கு ஏற்கும் வகையால் உண்மையை உணர்த்திடச் சாரிபுத்தன் அதன்மேல் வாதிடுவதற்கு ஒன்றுமின்றித் தோல்வியுற்றான். அன்பரான சம்பந்த சரணாலயர் மாறுபட்ட அவனை இங்ஙனம் வென்று அருளிச் சீகாழி மன்னரான பிள்ளையாரின் திருவடித் தாமரைகளை வணங்கினார். தங்கள் சமயத்தன்மை அழிந்த புத்தர்களும் ஞானசம்பந்தரின் திருவடியில் பணிந்து விழுந்தனர்.

2823. புந்தியினால் அவருரைத்த பொருளின் தன்மை
பொருளன்றாம் படியன்பர் பொருந்தக் கூற
மந்தவுணர் வுடையவரை நோக்கிச் சைவம்
அல்லாது மற்றொன்றும் இல்லை யென்றே
அந்தமில்சீர் மறைகள்ஆ கமங்கள் ஏனை
அகிலகலைப் பொருளுணர்ந்தார் அருளிச் செய்யச்
சிந்தையினில் அதுதெளிந்து புத்தர் சண்பைத்
திருமறையோர் சேவடிக்கீழ்ச் சென்று தாழ்ந்தார்.

தெளிவுரை : அறிவையே பற்றுக் கோடாகக் கொண்டு அந்தப் பௌத்தர்கள் கூறிய பொருள்களின் தன்மைகள் உண்மைப் பொருள்கள் அல்லாவாகி முடியும் இயல்பைச் சம்பந்த சரணாலயர் பொருத்தமாக எடுத்துச் சொல்ல, மந்தமான அறிவுடைய அந்தப் பௌத்தர்களைப் பார்த்துச் சைவத் திறமே அல்லாது மற்றொன்றும் இல்லை ! என்று அழிவற்ற சிறப்புடைய வேதங்களையும் ஆகமங்களையும் அவற்றின் வழிவரும் மற்ற அளவற்ற கலைப் பொருள்களையும் உணர்ந்த ஞானசம்பந்தர் அருளிச் செய்தார். அதனால் உள்ளத்தில் அந்த வுண்மைகளைத் தெரிந்துகொண்ட பௌத்தர்கள் சீகாழியில் வந்த அந்தணரான பிள்ளையாரின் செம்மையான திருவடிகளைப் போய் வணங்கினர்.

2824. அன்றவர்க்குக் கவுணியர்கோன் கருணை நோக்கம்
அணை தலினால் அறிவின்மை அகன்று நீங்கி
முன்தொழுது விழுந்தெழுந்து சைவ ரானார்
முகைமலர்மா ரியின்வெள்ளம் பொழிந்த தெங்கும்
நின்றனவும்சரிப்பனவும் சைவ மேயாம்
நிலைமையவர்க் கருள்செய்து சண்பை வேந்தர்
சென்றுசிவ னார்பதிகள் பணிய வேண்டித்
திருக்கடவூர் அதன்மருங்கு சேர வந்தார்.

தெளிவுரை : அன்று அந்தப் பௌத்தர்களுக்குச் சீகாழித் தலைவரான பரமாசாரியரின் அருட்பார்வை பட்டதால் அறிவை மறைக்கும் தன்மையுடைய ஆணவம் தம்மை விட்டு நீங்கிய காரணத்தால், அந்தப் பௌத்தர்கள், ஞானசம்பந்தரின் திருமுன்பு விழுந்து வணங்கி எழுந்து அவரால் திருநீறு தரப் பெற்று அணிந்து கொண்டனர். சைவர் ஆயினர். தேவ மலர் மழை எங்கும் பொழிந்தது. நிற்பனவும் உலவுவனவும் என்று கூறப்படும் எல்லா உயிர் வகைகளும் சைவமேயாகும் என்ற நிலைமையை அந்தப் பௌத்தர்கள் அறிந்து உய்யும்படி அருளிச் செய்து, சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர், சிவபெருமான் எழுந்தருளிய மற்றப் பதிகளுக்கும் சென்று வணங்கும் பொருட்டுத் திருக்கடவூரின் பக்கத்தில் சேருமாறு வந்தார்.

2825. அந்நகரில் அடியார்கள் எதிர்கொள்ள புக்கருளிக்
கொன்னவிலுங் கூற்றுதைத்தார் குரைகழல்கள் பணிந்தேத்தி
மன்னியமர்ந் துறையுநாள் வாகீச மாமுனிவர்
எந்நகரில் எழுந்தருளிற் றென்றடியார் தமைவினவ.

தெளிவுரை : அந்தத் திருக்கடவூரில் தொண்டர்கள் தம்மை வரவேற்க ஞானசம்பந்தர் அதன் உள்ளே எழுந்தருளினார். உயிரைப் பிரிக்க வரும் இயமனை உதைத்த இறைவரின் ஒலிக்கும் கழல் அணிந்த திருவடிகளை வணங்கிப் போற்றி விரும்பி அங்குத் தங்கியிருந்தார். அந்நாளில், திருநாவுக்கரசு நாயனார், எந்தத் திரு நகரில் எழுந்தருளியுள்ளார்? என்று அடியார்களை அவர் கேட்டருளினார்.

2826. அங்கவரும் அடிபோற்றி ஆண்டஅர செழுந்தருளிப்
பொங்குபுனற் பூந்துருத்தி நகரின்கண் போற்றிசைத்துத்
தங்குதிருத் தொண்டுசெயும் மகிழ்ச்சியினாற் சார்ந்தருளி
எங்குநிகழ்ந் திடஇருந்த படியெல்லாம் இயம்பினார்.

தெளிவுரை : அப்போது அந்த அடியார்களும் ஞானசம்பந்தரின் திருவடிகளை வணங்கித் துதித்து நின்று, ஆண்ட அரசு, பெருகும் நீர் வளம் உடைய காவிரியாறு சூழ்ந்த திருப்பூந்துருத்தியில் எழுந்தருளி இறைவரைத் துதித்துத் தங்கி அங்குத் திருத்தொண்டு செய்யும் மகிழ்ச்சியால் சேர்ந்து எங்கும் தம் புகழ் தங்கியிருந்த படியை எல்லாம் எடுத்து மொழிந்தனர்.

2827. அப்பரிசங் கவர்மொழிய ஆண்டஅர சினைக்காணும்
ஒப்பரிய பெருவிருப்பு மிக்கோங்க ஒளிபெருகும்
மைப்பொருவு கறைக்கண்டர் கழல்வணங்கி அருள்பெற்றுச்
செப்பரிய புகழ்ப்புகலிப் பிள்ளையார் செல்கின்றார்.

தெளிவுரை : திருநாவுக்கரசின் இயல்பை அவ்வடியார்கள் அவ்வாறு கூற, அந்த நாவுக்கரசரைக் காண்கின்ற ஒப்பில்லாத அரிய பெரு விருப்பம் மிக்கு ஓங்க, ஒளி மிகும் கருமை பொருந்திய கண்டத்தையுடைய சிவபெருமானின் அடிகளை வணங்கி அவரது அருள் விடையைப் பெற்றுச், சொல்வதற்கரிய புகழையுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தர் செல்கின்றவராகி,

2828. பூவிரியுந் தடஞ்சோலை புடைபரப்பப் புனல்பரக்கும்
காவிரியின் தென்கரைபோய்க் கண்ணுதலார் மகிழ்ந்தஇடம்
மேவிஇனி தமர்ந்திறைஞ்சி விருப்புறுமெய்த் தொண்டரொடு
நாவரசர் உழைச்சண்பை நகரரசர் நண்ணுவார்.

தெளிவுரை : மலர்கள் மலரும் பெரிய சோலை பக்கத்தில் பரவி நிகழுமாறு நீர்பரந்து ஓடுகின்ற காவிரி ஆற்றின் தென்கரை வழியாய்ச் சென்று, நெற்றிக் கண்ணையுடைய இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் தலங்களை அடைந்து, இனிதாய் விரும்பி வணங்கிச் சென்று, விருப்பம் பொருந்திய உண்மை அடியார்களுடன் நாவுக்கரசரிடம் ஞானசம்பந்தப் பெருமான் நண்ணுவாராகி.

2829. அந்தணர்சூ ளாமணியார் பூந்துருத்திக் கணித்தாக
வந்தருளும் பெருவார்த்தை வாகீசர் கேட்டருளி
நந்தமையா ளுடையவரை நாம்எதிர்சென் றிறைஞ்சுவது
முந்தைவினைப் பயனென்று முகமலர அகமலர்வார்

தெளிவுரை : மறையவரின் சிகாமணி போன்ற ஞானசம்பந்தரும் திருப்பூந்துருத்திக்கு அண்மையாய் வந்தருளுகின்ற பெருமொழியைக் கேட்டு நாவரசு முனிவர் செவியேற்றருளி நம்மை ஆளுடைய பிள்ளையாரை நாம் எதிர் கொண்டு சென்று வணங்குவது முற்பிறவியில் செய்த நல்வினையின் பயனாகப் பெறக் கூடிய தாகும் என எண்ணி முகம் மலர்ச்சி கொள்ள உள்ளம் மலர்ந்து,

2830. எதிர்சென்று பணிவனென எழுகின்ற பெருவிருப்பால்
நதிதங்கு சடைமுடியார் நற்பதங்கள் தொழுதந்தப்
பதிநின்றும் புறப்பட்டுப் பரசமயஞ் சிதைத்தவர்பால்
முதிர்கின்ற பெருந்தவத்தோர் முன்னெய்த வந்தணைந்தார்.

தெளிவுரை : எதிரே கொண்டு வணங்குவேன் என்று தம் உள்ளத்தில் மேலும் மேலும் எழும் பெரிய விருப்பத்தால் கங்கை சூடிய சடையாரின் நல்ல அடிகளைத் தொழுது, அந்தத் தலத்தினின்று புறப்பட்டுச் சென்று, பர சமயங்களின் கேட்டை அழித்த பிள்ளையாரிடத்து, முதிரும் பெருந்தவத்தவர்களான அடியார்களின் முன் பொருந்த வந்து சேர்ந்தார்.

2831. திருச்சின்னம் பணிமாறக் கேட்டநாற் றிசையுள்ளோர்
பெருக்கின்ற ஆர்வத்தால் பிள்ளையார் தமைச்சூழ்ந்த
நெருக்கினிடை யவர்காணா வகைநிலத்துப் பணிந்துள்ளம்
உருக்கியெழு மனம்பொங்கத் தொண்டர்குழாத் துடன்அணைந்தார்.

தெளிவுரை : முத்துச் சின்னம் முழங்கக் கேட்டவர்களான நான்கு திக்குகளிலிருந்து வந்த அன்பர்கள் பெருகும் ஆசையால் ஞானசம்பந்தரைச் சூழ்ந்து வரும் நெருக்கத்தில், (ஞானசம்பந்தர்) காணாத வகையில் நிலத்தில் விழுந்து பணிந்து, உள்ளத்தை உருக்கி எழும் மனம் ஒங்கத் திருத்தொண்டர் கூட்டத்துடன் சேர்ந்தார்.

2832. வந்தணைந்த வாகீசர் வண்புகலி வாழ்வேந்தர்
சந்தமணித் திருமுத்தின் சிவிகையினைத் தாங்கியே
சிந்தைகளிப் புறவருவார் திருஞான சம்பந்தர்
புந்தியினில் வேறொன்று நிகழ்ந்திடமுன் புகல்கின்றார்.

தெளிவுரை : அங்ஙனம் வந்து சேர்ந்த திருநாவுக்கரசர் வாய்ந்த சீகாழியினர் வாழத் தோன்றியருளிய அழகிய முத்துச் சிவிகையைத் தாங்குகின்றவருடன் கூடித் தாங்கி (சுமந்து) உள்ளக் களிப்புடனே வந்தார். திருஞானசம்பந்தர் தம் உள்ளத்தில் வேறொரு உணர்ச்சி உண்டானதால் முன் சொல்பவராய்.

2833. அப்பர்தாம் எங்குற்றார் இப்பொழுதென் றருள்செய்யச்
செப்பரிய புகழ்த்திருநா வுக்கரசர் செப்புவார்
ஒப்பரிய தவஞ்செய்தேன் ஆதலினால் உம்மடிகள்
இப்பொழுது தாங்கிவரப் பெற்றுய்ந்தேன் யான்என்றார்.

தெளிவுரை : அப்பர்தாம் (திருநாவுக்கரசர்) இப்போது எங்கு எழுந்தருளினார் ? என்று வினவியருள, சொல்வதற்கரிய புகழையுடைய திருநாவுக்கரசர் விடை தருவராய், நிகரில்லாத தவத்தை முன்னே செய்தேனாதலின் இப்போது உம் திருவடிகளைத் தாங்கும் பெரும்பேற்றை அடைந்து உய்ந்தேன் என்று அருளிச் செய்தார்.

2834. அவ்வார்த்தை கேட்டஞ்சி அவனியின்மேல் இழிந்தருளி
இவ்வாறு செய்தருளிற் றென்னாம்என் றிறைஞ்சுதலும்
செவ்வாறு மொழிநாவர் திருஞான சம்பந்தர்க்
கெவ்வாறு செயத்தகுவ தென்றெதிரே இறைஞ்சினார்.

தெளிவுரை : அங்ஙனம் சொன்ன அப்பரின் திருமொழிகளைக் கேட்டருளி அச்சம் கொண்டு ஞானசம்பந்தர் சிவிகையினின்று இறங்கியருளி, இப்படித் தாங்கள் செய்தால் என்ன ஆவது ? எனப் பதைப்புடன் கூடி வணங்குதலும், செம்மையே மொழியும் நாவையுடைய அரசு திருஞான சம்பந்தருக்கு, வேறு எவ்வாறு செய்தல் தக்கதாகும்? எனக் கூறி வணங்கினார்.

2835. சூழ்ந்துமிடைந் தருகணையுந் தொண்டரெல்லாம் அதுகண்டு
தாழ்ந்துநில முறவணங்கி எழுந்துஅங்கை தலைகுவித்து
வாழ்ந்துமனக் களிப்பினராய் மற்றிவரை வணங்கப்பெற்
றாழ்ந்தபிறப் புய்ந்தோம்என் றண்டமெலாம் உறஆர்த்தார்.

தெளிவுரை : சூழ்ந்து நெருங்கி அணையும் உண்மைத் தொண்டர்கள் எல்லாம் அதைப் பார்த்துத் தாழ்ந்து நிலத்தில் பொருந்த வணங்கி எழுந்து தலைமீது கைகளைக் குவித்து உள்ளக் களிப்புடையவராய் இவரை வணங்கப் பெற்றதால் நாம் ஆழ்ந்துள்ள பிறவிக் கடலினின்றும் ஈடேறி உய்யப் பெற்றோம் என மொழிந்து அண்டங்கள் எல்லாம் பொருந்த ஆரவாரம் செய்தனர்.

2836. திருஞான சம்பந்தர் திருநாவுக் கரசர்தமைப்
பெருகார்வத் தொடும்அணைந்து தழீஇக்கொள்ளப் பிள்ளையார்
மருவாரும் மலரடிகள் வணங்கியுடன் வந்தணைந்தார்
பொருவாரும் புனற்சடையார் மகிழ்ந்ததிருப் பூந்துருத்தி.

தெளிவுரை : திருஞான சம்பந்தப் பெருமான் பெருகும் விருப்பத்தோடும் திருநாவுக்கரசரை அணைந்து தழுவிக் கொள்ள நாவுக்கரசர் மணம் கமழும் மலர் போன்ற பிள்ளையாரின் அடிகளை வணங்கி உடன் வர, அலைகள் மோதுகின்ற கங்கை நீரைச் சடையில் கொண்ட இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கின்ற திருப்பூந்துருத்தியில் வந்து சேர்ந்தார்.

2837. அன்பர்குழாத் தொடும்செல்வார் ஆனேற்றார் மகிழ்கோயில்
முன்பணித்தா கச்சென்று கோபுரத்தை முன்னிறைஞ்சித்
துன்பமிலாத் திருத்தொண்ட ருடன்தொழுது புக்கருளி
என்புருக வலங்கொண்டு பணிந்தேத்தி இறைஞ்சினார்.

தெளிவுரை : அடியார் கூட்டத்துடன் செல்பவரான ஞானசம்பந்தர் காளைக் கொடியையுடைய இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் திருக்கோயில் முன்பு அருகில் சென்று, கோபுரத்தை முன் வணங்கித், துன்பம் இல்லாத தொண்டருடன் தொழுத வண்ணமே, உள்ளே போய், எலும்பு உருகுமாறு கோயிலுள் வலமாக வந்து பணிந்து வணங்கித் துதித்தார்.

2838. பொய்யிலியா ரைப்பணிந்து போற்றியே புறத்தணைவார்
செய்யசடை யார்கோயில் திருவாயில் முன்னாக
மையறுசீர்த் தொண்டர்குழாம் வந்துபுடை சூழஉல
குய்யவரு வார்தங்க ளுடன்மகிழ்ந்தங் கினிதிருந்தார்.

தெளிவுரை : திருப்பூந்துருத்தியில் வீற்றிருக்கும் பொய்யிலி அப்பரை வணங்கித் துதித்துப் பின்னர்ப் புற முற்றத்தில் சேர்பவரான ஞானசம்பந்தர் சிவந்த சடையையுடைய இறைவரின் கோயிலின் வாயில் முன்பு குற்றமறும் சிறப்புடைய தொண்டர் கூட்டம் வந்து, தம்மைச் சுற்றிச் சூழ்ந்து வர, உலகம் உய்யும் பொருட்டு வருகின்ற நாயன்மார் இருவரும் அடியார்கள் சூழ அவர்களுடன் மகிழ்ந்து அங்கு இனிதாய் விரும்பித் தங்கியிருந்தார்.

2839. வாக்கின் தனிமன்னர் வண்புகலி வேந்தர்தமைப்
போக்கும் வரவும் வினவப் புகுந்ததெல்லாம்
தூக்கின் தமிழ்விரகர் சொல்லிறந்த ஞானமறை
தேக்குந் திருவாயால் செப்பி யருள்செய்தார்.

தெளிவுரை : வாக்குக்கு ஒப்பில்லாத அரசரான திருநாவுக்கரசர் வளமையுடைய சீகாழி மன்னரான ஞானசம்பந்தரை அவர் பாண்டி நாட்டுக்குச் சென்றருளியதும் அங்கு நின்று மீண்டதும் ஆகிய வரலாறுகளை வினவ, அங்கு நிகழ்ந்த வரலாறு தொகுதி முழுவதையும், தமிழ்ப்பாட்டின் தலைவரான பிள்ளையார் கூறுவதற்கு அரிய ஞான மறைகளைத் தேக்கும் தம் திருவாக்கால் உரைத்தருளினார்.

2840. காழியினில் வந்த கவுணியர்தம் போரேற்றை
ஆழிமிசைக் கல்மிதப்பில் வந்தார் அடிவணங்கி
வாழிதிருத் தொண்டென்னும் வான்பயிர்தான் ஓங்குதற்குச்
சூழும் பெருவேலி யானீர்எனத் தொழுதார்.

தெளிவுரை : சீகாழியில் தோன்றியருளிய கவுணியர் குலத்தவரின் போர் ஏறு போன்ற ஞான சம்பந்தரை, கடல் மீது கல்லையே மிதப்பாகக் கொண்டு வந்தருளிய திருநாவுக்கரசர் வணங்கி, வாழ்வை அளிக்கும் திருத்தொண்டு என்னும் பெரிய பயிர் ஓங்கி வளர்ந்து பயன் தரச் செய்வதற்கு உரியதாய்ச் சூழும் பெரிய வேலிபோல் நீவிர் ஆயினீர் எனக் கூறித் தொழுதனர்.

2841. பிள்ளையார் தாமும்அவர் முன்தொழுது பேரன்பின்
வெள்ள மனையபுகழ் மானியார் மேன்மையையும்
கொள்ளும் பெருமைக் குலச்சிறையார் தொண்டினையும்
உள்ள பரிசெல்லாம் மொழிந்தங் குவந்திருந்தார்.

தெளிவுரை : ஞான சம்பந்தப் பெருமானார் நாவுக்கரசர் முன் தொழுது பெரிய அன்பின் வெள்ளத்தைப் போன்ற புகழையுடைய மங்கையர்க்கரசியரின் மேம் பாட்டையும் பெருமையையுடைய குலச் சிறையாரின் திருத்தொண்டின் சிறப்பையும் இவற்றின் தன்மைகளையெல்லாம் கூறியருளி அங்கு மகிழ்ந்திருந்தார்.

2842. தென்னற் குயிரோடு நீறளித்துச் செங்கமலத்
தன்னம் அனையார்க்கும் அமைச்சர்க்கும் அன்பருளித்
துன்னுநெறி வைதிகத்தின் தூநெறியே ஆக்குதலான்
மன்னுபுகழ் வாகீசர் கேட்டு மனமகிழ்ந்தார்.

தெளிவுரை : பாண்டிய மன்னருக்கு உயிருடனே திருநீற்றை அளித்தும் செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் அன்னப்பறவை போன்ற மங்கையர்க்கரசி அம்மையாருக்கும் குலச்சிறை அமைச்சர்க்கும் அன்பை அளித்தருளியும், தூய வைதீகச் சைவ நெறியே பொருந்தும் நெறியால் ஆக்கியதால் நிலைபெற்ற புகழையுடைய திருநாவுக்கரசர் அதனைக் கேட்டு மகிழ்ந்தார்.

2843. சொல்லின் பெருவேந்தர் தொண்டைவள நாடெய்தி
மல்கு புகழ்க்காஞ்சி ஏகாம் பரமன்னும்
செல்வர் கழல்பணிந்து சென்றதெல்லாஞ் செப்புதலும்
புல்குநூன் மார்பரும்போய்ப் போற்றுந்திறம் புரிந்தார்.

தெளிவுரை : சொல்லரசரான திருநாவுக்கரசர் திருத்தொண்டை வளநாட்டைச் சேர்ந்து, மிக்க புகழையுடைய காஞ்சிபுரத்தில் நிலை பெற வீற்றிருக்கின்ற செல்வரான ஏகம்பநாதரின் திருவடிகளை வணங்கிச் சென்று வந்த வரலாற்றை யெல்லாம் கூறியருளவும், பொருந்திய நூலையுடைய மார்பரான பிள்ளையாரும் அங்குப் போய் வணங்கத் திருவுள்ளம் பற்றினார்.

2844. அங்கணரைப் போற்றியெழுந் தாண்ட அரசமர்ந்த
பொங்கு திருமடத்திற் புக்கங் கினிதமர்ந்து
திங்கட் பகவணியும் சென்னியார் சேவடிக்கீழ்த்
தங்கு மனத்தோடு தாம்பரவிச் செல்லுநாள்.

தெளிவுரை : ஞான சம்பந்தர் இறைவரை வணங்கி எழுந்து ஆளுடைய அரசர் விரும்பி எழுந்தருளிய அன்பு பொங்கும் திருமடத்தில் போய்ச் சேர்ந்து, அங்கு விரும்பி வீற்றிருந்தருளித், திங்களின் பிளவைப் போன்ற பிறையைச் சூடிய தலையையுடைய இறைவரின் சேவடியின்கீழ் தங்கும் திருவுள்ளத்துடன் தாமும் துதித்து எழுந்தருளியிருந்த காலத்தில்,

2845. வாகீச மாமுனிவர் மன்னுதிரு வாலவாய்
நாகம் அரைக்கசைத்த நம்பர் கழல் வணங்கப்
போகும் பெருவிருப்புப் பொங்கப் புகலியின்மேல்
ஏகும் பெருங்காதல் பிள்ளையார் ஏற்றெழுவார்.

தெளிவுரை : வாகீச முனிவரான நாவுக்கரசுக்கு நிலைபெற்ற திருவாலவாயில் எழுந்தருளி வீற்றிருக்கின்ற, பாம்பை அரையில் கட்டிய இறைவரின் திருவடிகளை வணங்குவதற்காகச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் மேலும் மேலும் எழவும் ஞானசம்பந்தர் சீகாழியில் போய்ச் சேரும் பெருகிய காதலை மேற் கொண்டவராய்.

2846. பூந்துருத்தி மேவும் புனிதர்தமைப் புக்கிறைஞ்சிப்
போந்து திருவாயில் புறத்தணைந்து நாவினுக்கு
வேந்தர் திருவுள்ளம் மேவவிடை கொண்டருளி
ஏந்தலார் எண்ணிறந்த தொண்டருடன் ஏகினார்.

தெளிவுரை : திருப்பூந்துருத்தியில் வீற்றிருக்கும் இறைவரைத் திருக்கோயிலுள் புகுந்து வணங்கிப் போந்து, வாயில் பக்கத்தை அடைந்து, திருநாவுக்கரசின் உள்ளம் பொருந்த அவரிடம் விடைபெற்றுக் கொண்டு பெருமையுடைய பிள்ளையார் அளவில்லாத தொண்டர்களுடன் சென்றார்.

2847. மாடுபுனற் பொன்னி இழிந்து வடகரையில்
நீடுதிரு நெய்த்தானம் ஐயாறு நேர்ந்திறைஞ்சிப்
பாடுதமிழ் மாலைகளும் சாத்திப் பரவிப்போய்
ஆடல் புரிந்தார்திருப் பழனம் சென்றணைந்தார்.

தெளிவுரை : பக்கத்தில் உள்ள காவிரியில் இறங்கிப் போய், ஆற்றின் வடகரையில் நிலைபெற்றிருக்கும் திருநெய்த் தானத்தையும் திருவையாற்றையும் சேர்ந்து, பணிந்து, பெருமையுள்ள தமிழ் மாலைகளையும் கட்டளையிட்டுத் துதித்துச் சென்று நடனம் இயற்றும் இறைவரின் திருப்பழனத்தை போய்ச் சேர்ந்தார்.

2848. செங்கண் விடையார் திருப்பழனஞ் சேர்ந்திறைஞ்சிப்
பொங்கிய காதலின்முன் போற்றும் பதிபிறவும்
தங்கிப்போய்ச் சண்பைநகர் சார்ந்தார் தனிப்பொருப்பின்
மங்கை திருமுலைப்பால் உண்டருளும் வள்ளலார்.

தெளிவுரை : சிவந்த கண்ணையுடைய காளையூர்தியையுடைய இறைவரின் திருப்பழனத்தை அடைந்து வணங்கிப் பொங்கிய காதலின் முன் போற்றும் தலங்கள் பிறவும் தங்கிச் சென்று, ஒப்பில்லாத பொன்மலை வல்லியான அம்மையாரின் திருமுலைப் பாலையுண்டருளிய வள்ளலான பிள்ளையார் சீகாழிப் பதியினைச் சாரலானார்.

2849. தென்னாட் டமண்மா சறுத்துத் திருநீறே
அந்நாடு போற்றுவித்தார் வந்தணையும் வார்த்தைகேட்
டெந்நாள் பணிவதென ஏற்றெழுந்த மாமறையோர்
முன்னாக வேதம் முழங்க எதிர்கொண்டார்.

தெளிவுரை : பாண்டிய நாட்டில் சமணம் என்ற குற்றங்களை அழித்துத் திருநீற்றினை அந்நாடு முழுதும் அணியும்படி செய்தருளிய ஞானசம்பந்தர் வருகின்ற சொல்லைக் கேட்டு எந்நாளில் அவரைப் பணியப் பெறுவோம்? என்று ஆர்வம் கொண்டிருந்த மறையவர்கள், வேதங்கள் முழங்க அவர் முன் சென்று எதிர் கொண்டனர்.

2850. போத நீடுமா மறையவர் எதிர்கொளப் புகலிகா வலருந்தம்
சீத முத்தணிச் சிவிகைநின் றிழிந்தெதிர் செல்பவர் திருத்தோணி
நாதர் கோயில்முன் தோன்றிட நகைமலர்க் கரங்குவித் திறைஞ்சிப்போய்
ஓத நீரின்மேல் ஓங்குகோ யிலின்மணிக் கோபுரஞ் சென்றுற்றார்.

தெளிவுரை : ஞானம் மிக்க மாமறையவர்கள் தம்மை எதிர் கொண்டு வரவேற்க சீகாழித் தலைவரான பிள்ளையாரும் குளிர்ந்த முத்துக்களால் இயன்ற சிவிகையினின்று இறங்கி அவர்களின் எதிரே செல்பவராய், அப்போது திருத்தோணியில் வீற்றிருக்கும் கோயில் முன்னம் தோன்றப் புதியதாய் மலர்ந்த தாமரை போன்ற கைகளைக் கூப்பி இறைஞ்சிச் சென்று, ஊழி வெள்ளத்தில் மேலே மிதந்த அக்கோயிலின் அழகிய கோபுரத்தைச் சென்றடைந்தார்.

2851. அங்கம் மாநிலத் தெட்டுற வணங்கிப்புக் கஞ்சலி முடியேறப்
பொங்கு காதலிற் புடைவலங் கொண்டுமுன் பணிந்துபோற் றெடுத்தோதித்
துங்க நீள்பெருந் தோணியாம் கோயிலை அருளினால் தொழுதேறி
மங்கை யோடுடன் வீற்றிருந் தருளினார் மலர்க்கழல் பணிவுற்றார்.

தெளிவுரை : தரையில் எட்டு உறுப்புகளும் பொருந்த வணங்கிக், கோயிலுக்குள் புகுந்து, கைகள் அஞ்சலியாய்க் குவித்தபடி திருமுடியின் மீது ஏற, மிகுந்து மேல் மேல் எழும் அன்புடன் திருக்கோயிலைச் சூழ்ந்து வலமாக வந்து, திருமுன்னர்ப் பணிந்து, பெரிய நீண்ட பெருந்தோணியான கோயிலை அருளால் தொழுது, மலையின் மீது ஏறி, அம்மையாருடன் எழுந்தருளிய இறைவரின் தாமரைப் போன்ற திருவடிகளை வணங்கியவராய்.

2852. முற்றும் மெய்யெலாம் புளகங்கள் முகிழ்த்தெழ முகந்துகண் களிகூரப்
பற்றும் உள்ளம்உள் ளலைத்தெழும் ஆனந்தம் பொழிதரப் பணிந்தேத்தி
உற்றுமை சேர்வ தெனுந்திரு வியமகம் உவகையால் எடுத்துஏத்தி
வெற்றி யாகமீ னவன்அவை எதிர்நதி மிசைவரு கரனென்பார்.

தெளிவுரை : திருமேனி முழுவதும் மயிர்ப்புளகம் முகிழ்த்து உண்டாகவும், முன்னுறக் காணும் கண்கள் களிப்புக் கொள்ளவும், அதனால் பற்றிக் கொண்ட திருவுள்ளத்தில் உள்ளே அலையச் செய்து ஆனந்தம் பொங்கி வழியவும் வணங்கி உற்றுமை சேர்வது எனத் தொடங்கும் திரு இமயத் திருப்பதிகத்தை மகிழ்வுடன் எடுத்துப் போற்றி, வெற்றி ஆகும்படி பாண்டியனின் சபையிலும், நீர் எதிர்த்துச் செல்ல வைகையாற்றிலும் வரும் திருவருள் செயல் கொண்டவர் எனப் போற்றுபவராய்,

2853. சீரின் மல்கிய திருப்பதி கத்தினில் திருக்கடைக் காப்பேற்றி
வாரின் மல்கிய வனமுலை யாளுடன் மன்னினார் தமைப்போற்றி
ஆரும் இன்னருள் பெற்றுமீண் டணைபவர் அங்கையால் தொழுதேத்தி
ஏரின் மல்கிய கோயில்முன் பணிந்துபோந் திறைஞ்சினர் மணிவாயில்.

தெளிவுரை : சீரால் நிறைந்த திருப்பதிகத்தில் திருக்கடைக்காப்பும் சாத்திக் கச்சணிந்த அழகிய கொங்கையை யுடைய பெரிய நாயகியம்மையாருடன் நிலைபெற்ற தோணியப்ப இறைவரை வணங்கி நிறைந்த அவரது இனிய அருளைப் பெற்று மீண்டு அணைபவராகி அங்கைகள் கூப்பித் தொழுது துதித்து அழகால் நிறைந்த திருக்கோயிலை முன்னால் வணங்கிப் போய்த் திருவாயிலை அடைந்து தொழுவார்.

2854. தாதை யாரும்அங் குடன்பணிந்து அணைந்திடச் சண்பையார் தனியேறு
மூதெ யில்திரு வாயிலைத் தொழுதுபோய் முகைமலர்க் குழலார்கள்
ஆதரித்துவாழ்த் துரையிரு மருங்கெழ அணிமறு கிடைச்சென்று
காத லித்தவர்க் கருள்செய்து தந்திரு மாளிகைக் கடைசார்ந்தார்.

தெளிவுரை : அப்போது அவருடைய தந்தையார் சிவபாத இருதயரும் பணிந்து உடன் அணைந்திடச் சீகாழிப் பதியினரின் ஏற்றைப்போன்ற பிள்ளையார், பழைமையான மதிலுடன் கூடிய வாயிலை வணங்கிச் சென்று, மலர்களை அணிந்த கூந்தலையுடைய மங்கையர் அன்புடனே வாழ்த்தும் உரைகள் இரு பக்கமும் திரண்டெழ, அழகிய வீதியில் போய் அன்புடன் வந்தவர்க்கு அருள்செய்து திருமாளிகையின் முன் வாயிலைச் சேர்ந்தார்.

2855. நறவம் ஆர்பொழிற் புகலியில் நண்ணிய திருஞான சம்பந்தர்
விறலி யாருடன் நீலகண் டப்பெரும் பாணர்க்கு மிகநல்கி
உறையு ளாம்அவர் மாளிகை செலவிடுத் துள்ளணை தரும்போதில்
அறலி னேர்குழ லார்மணி விளக்கெடுத் தெதிர்கொள அணைவுற்றார்.

தெளிவுரை : தேன் பொருந்திய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த சீகாழியை அடைந்தருளிய திருஞான சம்பந்தர் பாடினியாருடனே திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு மிகவும் அருள் முகம் அளித்து அவர்தம் இருக்கையான திருமாளிகைக்குப் போகும்படி விடையளித்துத் தம் திருமாளிகைக்குப் எழுந்தருளும் போது கரிய மணல் போன்ற கூந்தலையுடைய பெண்கள் அழகான விளக்குகளை ஏந்தி வரவேற்க அவர் உள்ளே சென்றருளினார்.

2856. அங்க ணைந்தரு மறைக்குலத்தாயர்வந் தடிவணங் கிடத்தாமும்
துங்க நீள்பெருந் தோணியில் தாயர்தாள் மனங்கொளத் தொழுவாராய்த்
தங்கு காதலின் அங்கமர்ந் தருளுநாள் தம்பிரான் கழல்போற்றிப்
பொங்கும் இன்னிசைத் திருப்பதி கம்பல பாடினார் புகழ்ந்தேத்தி.

தெளிவுரை : அங்குச் சேர்ந்து அரிய மறையவர் குலத்தில் வந்த தாயாரான பகவதியார் வந்து அடிவணங்கித் தாமும் தூய்மையான நீண்ட பெரிய திருத்தோணியில் எழுந்தருளிய தாயாரான பெரியநாயகி யம்மையாரின் திருவடிகளை உள்ளத்தில் கொண்டு, எதிர் தொழுவார். அங்கே தங்கும் ஆசையினால் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற நாள்களில் தம் இறைவனின் திருவடிகளைத் துதித்து பெருகும் இனிய இசையுடைய பல திருப்பதிகங்களையும் புகழ்ந்து பாடினார்.

2857. நீல மாவிடந் திருமிடற் றடக்கிய நிமலரை நேரெய்தும்
கால மானவை அனைத்தினும் பணிந்துடன் கலந்தஅன் பர்களோடும்
சால நாள்கள்அங் குறைபவர் தையலாள் தழுவிடக் குழைகம்பர்
கோல மார்தரக் கும்பிடும் ஆசைகொண் டெழுங்குறிப் பினர்ஆனார்.

தெளிவுரை : நீல நிறமான பெரிய நஞ்சைத் திருக்கழுத்தில் அடக்கிய குற்றமற்றவரான தோணியப்பரை நேரே போய்க் கும்பிடுவதற்குரிய காலங்களில் எல்லாம் போய் வணங்கி, உடன் கலந்த அடியார்களோடும் கூடிப் பல நாள்கள் அந்தச் சீகாழிப்பதியில் தங்கினார் ஞானசம்பந்தர்; அவர் காமாட்சி அம்மையார் தழுவத் திருமேனி குழைந்து காட்டிய ஏகம்பநாதரின் திருக்கோலத்தைப் போய் நிறைவு பெறக் கும்பிடவேண்டும் என்னும் ஆசை மேற்கொண்டு எழும் உள்ளக் குறிப்பு உடையவரானார்.

2858. தண்ட கத்திரு நாட்டினைச் சார்ந்துவந்து எம்பிரான் மகிழ்கோயில்
கண்டு போற்றிநாம் பணிவதென் றன்பருக் கருள்செய்வார் காலம்பெற்
றண்ட ருக்கறி வரும்பெருந் தோணியில் இருந்தவர் அருள்பெற்றுத்
தொண்டர் சூழ்ந்துடன் புறப்படத் தொடர்ந்தெழுந் தாதையார்க் குரைசெய்வார்.

தெளிவுரை : தண்டகத் திருநாடு என்று அழைக்கப்படும் தொண்டை நாட்டைச் சேர்ந்து போய் நம் இறைவர் வீற்றிருக்கும் கோயில்களைக் கண்டு துதித்து நாம் வணங்குவோம் என அடியார்களுக்கு அருள் செய்பவராய், தக்க காலத்தில் நேர்பட்டுத் தேவர்களுக்கும் அரிய பெரிய திருத்தோணியில் வீற்றிருக்கும் இறைவர்பால் விடைபெற்றுத் திருத்தொண்டர் தம்முடன் சூழ்ந்து வரப் புறப்படத் தாமும் உடன்வரும் பொருட்டாகப் புறப்பட்ட தந்தையாருக்கு உரை செய்வாராய்.

2859. அப்பர் நீர்இனி இங்கொழிந் தருமறை அங்கிவேட் டன்போடுந்
துப்பு நேர்சடை யார்தமைப் பரவியே தொழுதிரு மெனச்சொல்லி
மெய்ப்பெருந் தொண்டர் மீள்பவர் தமக்கெலாம் விடைகொடுத் தருளிப்போய்
ஒப்பி லாதவர் தமைவழி யிடைப்பணிந் துருகுமன் பொடுசெல்வார்.

தெளிவுரை : அப்பரே நீங்கள் இனி எம்முடன் வருவதைக் கை விடுக. இங்கு அருமறை விதிப்படி தீ வளர்த்து வேள்வி செய்துகொண்டு அன்புடன் பவளம் போன்ற சடையையுடைய இறைவரைத் துதித்துத் தங்கியிருப்பீராக ! எனக் கூறிப் பெருமையுடைய மெய்த் தொண்டர்களுள் தம்முடன் வாராது தங்குகின்றவர்க்கெல்லாம் விடை தந்து, தமக்கு ஒப்பில்லாத இறைவரை வழியில் வணங்கிக் கொண்டு, உருகும் அன்புடனே மேலே செல்பவராய்.

2860. செல்வம் மல்கிய தில்லைமூ தூரினில் திருநடம் பணிந்தேத்திப்
பல்பெ ருந்தொண்ட ரெதிர்கொளப் பரமர்தந் திருத்தினை நகர்பாடி
அல்கு தொண்டர்கள் தம்முடன் திருமாணி குழியினை அணைந்தேத்தி
மல்கு வார்சடை யார்திருப் பாதிரிப் புலியூரை வந்துற்றார்.

தெளிவுரை : ஞானசம்பந்தர் செல்வம் நிறைந்த தில்லை என்ற பழைய பெரும்பதியில் இறைவரின் திருக்கூத்தை வணங்கித் துதித்தார். பெருந்தொண்டர்கள் பலரும் வரவேற்கச் சென்று இறைவரின் திருத்தினை நகரத்தை அடைந்து பாடிப் போய், அத்தொண்டர்களுடன் திருமாணிகுழியினை அடைந்து துதித்து, செறிந்து பொருந்திய நீண்ட சடையை உடைய இறைவரின் திருப்பாதிரிப்புலியூரை வந்து அடைந்தார்.

2861. கன்னி மாவனங் காப்பென இருந்தவர் கழலிணை பணிந்தங்கு
முன்ன மாமுடக் கால்முயற் கருள்செய்த வண்ணமும் மொழிந்தேத்தி
மன்னு வார்பொழில் திருவடு கூரினை வந்தெய்தி வணங்கிப்போய்ப்
பின்னு வார்சடை யார்திரு வக்கரை பிள்ளையார் அணைவுற்றார்.

தெளிவுரை : ஞானசம்பந்தர், பெரிய கன்னிவனத்தைத் தம் காவலிடமாகக் கொண்டு எழுந்தருளிய சிவபெருமானின் இரண்டு திருவடிகளையும் பணிந்து, அப்பதியில் முன் நாளில் முடங்கிய காலுடன் முயலாய்ச் சபிக்கப்பட்ட மங்கண முனிவர் சாபநீக்கம் பெற அருள்செய்த தன்மையையும் பதிகத்தில் மொழிந்து துதித்துச் சென்று நீண்ட சோலைகள் சூழ்ந்த திருவடுகூரினை அடைந்து நீண்ட சடையையுடைய இறைவரின் திருவக்கரை என்ற பதியை அடைந்தார்.

2862. வக்க ரைப்பெரு மான்தனை வணங்கிஅங் கமருநாள் அருளாலே
செக்கர் வேணியார் இரும்பைமா காளமும் சென்றுதாழ்ந் துடன்மீண்டு
மிக்க சீர்வளர் அதிகைவீ ரட்டமும் மேவுவார் தம்முன்பு
தொக்க மெய்த்திருத் தொண்டர்வந் தெதிர்கொளத் தொழுதெழுந் தணைவுற்றார்.

தெளிவுரை : அந்தத் திருவக்கரையில் ஞானசம்பந்தர் இறைவனை வணங்கித் தங்கியிருந்தார். அந்நாட்களில் திருவருட் குறிப்பினால் சிவந்த வானம் போன்ற சடையையுடைய இறைவரின் திருவிரும்பை மாகாளத்தையும் போய் வணங்கி, உடனே திரும்பி, மிக்க சிறப்புகளை வளர்க்கின்ற திருவதிகை வீரட்டானத்தைச் சென்று சேர்பவரான அவர், தமக்கு முன் கூடிய உண்மைத் திருத்தொண்டர்கள் வந்து எதிர்கொள்ளத் தொழுது அங்கு அணைந்தார்.

2863. ஆதி தேவர்அங் கமர்ந்தவீ ரட்டானஞ் சென்றணை பவர்முன்னே
பூதம் பாடநின் றாடுவார் திருநடம் புலப்படும் படிகாட்ட
வேத பாரகர் பணிந்துமெய் உணர்வுடன் உருகிய விருப்போடும்
கோதி லாஇசை குலவுகுண் டைக்குறட் பூதம்என் றெடுத்துஏத்தி.

தெளிவுரை : ஆதிதேவரான சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கின்ற திருவீரட்டானத்தைப் போய் அடைபவரான சம்பந்தர் முன்பு, பூதகணங்கள் பாட நின்றாடும் இறைவர் தம் திருநடனத்தைக் கண்ணுக்குப் புலனாகும்படி காட்டவே, வேதம் வல்லவரான அவர் வணங்கி மெய்யுணர்வுனுடன் உள்ளம் உருகிய விருப்பத்துடன் குற்றம் அற்ற இசையுடன் கூடிய குண்டைக் குறள் பூதம் என்று தொடங்கித் துதித்து,

2864. பரவி ஏத்திய திருப்பதி கத்திசை பாடினார் பணிந்தங்கு
விரவும் அன்பொடு மகிழ்ந்தினி துறைபவர் விமலரை வணங்கிப்போய்
அரவ நீர்ச்சடை அங்கணர்தாம்மகிழ்ந் துறைதிரு வாமாத்தூர்
சிரபு ரத்துவந் தருளிய திருமறைச் சிறுவர்சென் றணைவுற்றார்.

தெளிவுரை : போற்றித் துதித்த அப்பதிகத்தின் இசையினைப் பாடிட, பணிந்து அங்குத் திருப்பதியில் பொருந்திய அன்புடனே மகிழ்ந்து இனிதாகத் தங்கியவரான, சீகாழியில் வந்து தோன்றிய அந்தணர் குலத்துப் பிள்ளையார் பாம்பும் நீரும் தங்கிய சடையையுடைய இறைவர் மிக்க மகிழ்ச்சியுடன் எழுந்தருளிய திருஆமாத்தூரினைப் போய்ச் சேர்ந்தார்.

2865. சென்ற ணைந்துசிந் தையின்மகிழ் விருப்பொடு திகழ்திரு வாமாத்தூர்ப்
பொன்ற யங்குபூங் கொன்றையும் வன்னியும் புனைந்தவர் அடிபோற்றிக்
குன்ற வார்சிலை யெனுந்திருப் பதிகமெய் குலவிய இசைபாடி
நன்று மின்புறப் பணிந்துசெல் வார்திருக் கோவலூர் நகர்சேர்ந்தார்.

தெளிவுரை : போய்ச் சேர்ந்து, உள்ளத்தில் மகிழ்ச்சி கொண்ட விருப்பத்துடனே, விளங்கும் திருஆமாத்தூரின் பொன் போல் விளங்கும் கொன்றையையும் வன்னியையும் அணிந்து வீற்றிருக்கும் இறைவரின் திருவடிகளைத் துதித்துக் குன்றவார் சிலை எனத் தொடங்கும் திருப்பதிகத்தை மெய்ம்மை விளங்கும் இசையுடன் பாடி மிகவும் இன்பம் பொருந்த வணங்கிச் செல்பவரான ஞானசம்பந்தர் திருக்கோவலூரை அடைந்தார்.

2866. கோவல் நீடிய வீரட்டம் அமர்ந்தவர் குரைகழல் பணிந்தேத்தி
ஆவின் ஐந்துகந் தாடுவார் அறையணி நல்லூரை அணைந்தேத்திப்
பாவ லர்ந்தசெந் தமிழ்கொடு பரவுவார் பரவுசீர் அடியார்கள்
மேவு மன்புறு மேன்மையாம் தன்மையை விளங்கிட அருள்செய்தார்.

தெளிவுரை : திருக்கோவலூரில் திருவீரட்டக் கோயிலில் விரும்பி எழுந்தருளிய இறைவரின் ஒலிக்கும் கழல் அணிந்த திருவடிகளை வணங்கித் துதித்து ஆன்ஐந்து பொருள்களையும் விரும்பியாடுபவரான இறைவரின் திருவறையணி நல்லூரைப் போய் அடைந்து, போற்றிப் பாட்டுகளாக மலர்ந்த தமிழ்ப் பதிகத்தினால் போற்றுபவரான பிள்ளையார் இறைவரின் புகழ்களையே துதித்து வாழும் தொண்டர்களின் பொருந்திய அன்பினால் உளதாகும் மேம்பாடான தன்மையை உலகம் அறிந்து உய்யுமாறு அருளிச் செய்தார்.

2867. சீரின் மன்னிய பதிகம்முன் பாடிஅத் திருவறை யணிநல்லூர்
வாரின் மல்கிய கொங்கையாள் பங்கர்தம் மலைமிசை வலங்கொள்வார்
பாரின் மல்கிய தொண்டர்கள் இமையவர் நாடொறும் பணிந்தேத்துங்
காரின் மல்கிய சோலைஅண்ணாமலை அன்பர்காட் டிடக்கண்டார்.

தெளிவுரை : சீரால் நிலைபெற்ற திருப்பதிகத்தைப் பாடி அந்தத் திரு அறையணிநல்லூரில் கச்சணிந்த கொங்கையையுடைய உமையம்மை பாகரான சிவபெருமானின் மலையின் மீது வலம் வந்த சம்பந்தர், இந்தவுலகில் மிக்க தொண்டர்களும் தேவர்களும் நாள்தோறும் பணிந்து வணங்குகின்ற மேகங்கள் தவழ்வதற்கு இடமான சோலைகளால் சூழப்பட்ட திருவண்ணாமலையை அன்பர்கள் காட்டக் கண்டார்.

2868. அண்ணா மலைஅங் கமரர்பிரான் வடிவு போன்று தோன்றுதலும்
கண்ணால் பருகிக் கைதொழுது கலந்து போற்றுங் காதலினால்
உண்ணா முலையாள் எனும்பதிகம் பாடித் தொண்ட ருடன்போந்து
தெண்ணீர் முடியார் திருவண்ணா மலையைச் சென்று சேர்வுற்றார்.

தெளிவுரை : அந்த இடத்தினின்று திருவண்ணாமலை தோன்றும் காட்சி, தேவர் தலைவரான சிவபெருமானின் வடிவம் போல் தோன்றவும், கண்ணால் கண்டு, பருகுதல் போல நுகர்ந்து, கைகளால் தொழுது கலந்து, போற்றும் பெருவிருப்பத்தால் உண்ணா முலையாள் என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடித் தொண்டருடன் சென்று தெளிந்த நீரைத் தலையிலே சூடிய இறைவரின் திருவண்ணாமலையைச் சேர்ந்தார்.

2869. அங்கண் அணைவார் பணிந்தெழுந்து போற்றி செய்தம் மலைமீது
தங்கு விருப்பில் வீற்றிருந்தார் தாள்தா மரைகள் தம்முடிமேல்
பொங்கும் ஆர்வத் தொடும்புனைந்து புளகம் மலர்ந்த திருமேனி
எங்கு மாகிக் கண்பொழியும் இன்ப அருவி பெருக்கினார்.

தெளிவுரை : அந்த அண்ணாமலையை அடைபவரான ஞானசம்பந்தர், நிலத்தில் விழுந்து வணங்கி, அந்த மலையின் மீது தங்கும் விருப்புடன் வீற்றிருக்கின்ற இறைவரின் திருவடிகளாகிய தாமரைகளைத் தம் முடியின்மீது , மேல் எழுகின்ற ஆசையுடன் சூடி, திருமேனி முழுதும் மயிர்ப்புளகம் வரப் பெற்றுக்கொண்டு, கண்களில் பொழியும் ஆனந்தக் கண்ணீரை அருவிபோல் பெருக்கினார்.

2870. ஆதி மூர்த்தி கழல்வணங்கி அங்கண் இனிதின் அமருநாள்
பூத நாத ரவர் தம்மைப் பூவார் மலராற் போற்றிசைத்துக்
காத லால்அத் திருமலையிற் சிலநாள் வைகிக் கமழ்கொன்றை
வேத கீதர் திருப்பதிகள் பிறவும் பணியும் விருப்புறுவார்.

தெளிவுரை : ஆதி மூர்த்தியான அண்ணாமலையாரின் திருவடிகளை வணங்கி அங்கு இனிதாய் விரும்பித் தங்கியிருக்கும் நாளில் பூதங்களுக்குத் தலைவரான அவரைப் பூவார் மலர் எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடித் துதித்து விருப்பத்துடன் அந்த மலையில் சில நாட்கள் தங்கி, வேத கீதரான இறைவரின் திருப்பதிகள் மற்றவற்றையும் போய் வணங்கும் விருப்பத்தை மேற் கொள்பவராய்.

2871. மங்கை பாகர் திருவருளால் வணங்கிப் போந்து வடதிசையில்
செங்கண் விடையார் பதிபலவும் பணிந்து புகலிச் செம்மலார்
துங்க வரைகள் கான்பலவும் கடந்து தொண்டைத் திருநாட்டில்
திங்கள் முடியார் இனிதமரும் திருவோத் தூரைச் சேர்வுற்றார்.

தெளிவுரை : ஞான சம்பந்தர் உமையம்மையை ஒரு பாகத்தில் உடைய இறைவரின் திருவருளால் வணங்கி விடை பெற்றுச் சென்று, வடக்கில் சிவந்த கண்ணையுடைய காளையை ஊர்தியாகக் கொண்ட இறைவரின் பதிகள் பலவற்றையும் வணங்கிச் சென்று, பெரிய மலைகளையும் காடுகள் பலவற்றையும் கடந்து திருத்தொண்டை நாட்டில் பிறைச் சந்திரனைத் தலையில் சூடிய இறைவர் இனிதாய் விரும்பி வீற்றிருக்கின்ற திருவோத்தூரைச் சேர்ந்தார்.

2872. தேவர் முனிவர்க்கு ஓத்தளித்த திருவோத் தூரில் திருத்தொண்டர்
தாவில் சண்பைத் தமிழ்விரகர் தாம்அங் கணையக் களிசிறந்து
மேவுங் கதலி தோரணங்கள் விளக்கு நிரைத்து நிறைகுடமும்
பூவும் பொரியுஞ் சுண்ணமும்முன் கொண்டு போற்றி எதிர்கொண்டார்.

தெளிவுரை : தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதங்களை ஓதுவித்து அருள் செய்த திருவோத்தூரிலே வாழும் திருத்தொண்டர்கள், குற்றம் அற்ற சீகாழித் தலத்தில் தோன்றிய தமிழ் வல்லுநரான ஞானசம்பந்தர் அங்கு வரவே, மிகவும் மகிழ்ந்து, வாழைகளையும் தோரணங்களையும் விளக்குகளையும் வரிசையாக அமைத்து, நிறை குடங்களையும் பூவும் பொரியும் சுண்ணமும் என்ற இவற்றையும் முன்னே ஏந்தித் துதி செய்து எதிர்கொண்டனர்.

2873. சண்பை வேந்தர் தண்தரளச் சிவிகை நின்றும் இழிந்தருளி
நண்பின் மிக்க சீரடியார் சூழ நம்பர் கோபுரஞ்சூழ்
விண்பின் னாகமுன் னோங்கும் வியன்பொற் புரிசை வலங்கொண்டு
பண்பு நீடிப் பணிந்தெழுந்து பரமர் கோயில் உள்ளடைந்தார்.

தெளிவுரை : சீகாழியில் அவதரித்த பிள்ளையார் முத்துச் சிவிகையினின்றும் இழிந்து அன்புடைய சிறப்புடைய அடியார் தம்மைச் சூழ்ந்து வர, இறைவரின் கோபுரத்தைச் சூழ்ந்து வானமும் கீழ்ப்படும் வண்ணம் முன்னால் உயர்ந்து விளங்கும் பெரிய பொன் மதிலை வலமாக வந்து, வணங்கிய பண்பில் நீடிப் பணிந்து எழுந்து இறைவரின் திருக்கோயிலுக்குள் சென்றார்.

2874. வார ணத்தின் உரிபோர்த்த மைந்தர் உமையாள் மணவாளர்
ஆர ணத்தின் உட்பொருளாய் நின்றார் தம்முன் அணைந்திறைஞ்சி
நார ணற்கும் பிரமற்கும் நண்ணற் கரிய கழல்போற்றும்
கார ணத்தின் வரும்இன்பக் கண்ணீர் பொழியக் கைதொழுதார்.

தெளிவுரை : யானையின் தோலைப் போர்த்துக் கொண்ட வன்மையுடையவரும், உமையம்மையாரின் கணவரும், வேதங்களின் உட்பொருளாக நின்றவரும் ஆன சிவபெருமானின் திருமுன்பு ஞான சம்பந்தர் சேர்ந்து, வணங்கித் திருமாலுக்கும் நான்முகனுக்கும் சேர்வதற்கு அரிய திருவடிகளைத் துதிக்கின்றதால் வருகின்ற இன்பமான ஆனந்தக் கண்ணீர் கைகூப்பித் தொழுதார்.

2875. தொழுது விழுந்து பணிந்தெழுந்து சொல்மா லைகளால் துதிசெய்து
முழுது மானார் அருள்பெற்றுப் போந்து வைகி முதல்வர்தமைப்
பொழுது தோறும் புக்கிறைஞ்சிப் போற்றி செய்தங் கமர்வார்முன்
அழுது வணங்கி ஒரு தொண்டர் அமணர் திறத்தொன் றறிவிப்பார்.

தெளிவுரை : திருஞான சம்பந்தர் தொழுது நிலத்தில் விழுந்து பணிந்து எழுந்து, சொல் மாலைகளினால் துதித்து, எல்லாமாய், நின்ற இறைவரின் திருவருள் பெற்று வெளியே வந்து தங்கியிருந்தார்; இறைவரைக் காலங்கள் தோறும் புகுந்து வணங்கித் துதித்து அங்கு விரும்பியிருப்பவரான அப்பிள்ளையார் திருமுன்பு, ஒரு தொண்டர் அழுது நின்று சமணர்களின் தன்மை பற்றி ஒரு செய்தியை அறிவிக்கத் தொடங்கி,

2876. அங்கை அனலேற் றவர்க்கடியேன் ஆக்கும் பனைக ளானவெலாம்
மங்கு லுறநீண் டாண்பனையாய்க் காயா வாகக் கண்டமணர்
இங்கு நீரிட் டாக்குவன காய்த்தற் கடைவுண் டோவென்று
பொங்கு நகைசெய் திழித்துரைத்தார் அருள வேண்டு மெனப்புகல.

தெளிவுரை : உள்ளங்கையில் தீயினைக் கொண்ட இறைவர்க்கு அடியவன் நான். இத்தகைய நான் வளர்க்கும் பனை மரங்கள் எல்லாம் மேக மண்டலம் பொருந்த நீண்டு வளர்ந்தும் ஆண் பனைகளாய்க் காய்க்காது இருப்பதைப் பார்த்துச் சமணர்கள், இங்கு நீவிர் வைத்து வளர்க்கும் பனை மரங்கள் காய்ப்பதற்கு வழியுண்டோ? என்று எள்ளி மிகவும் நகைத்து இழிவாய்ப் பேசுகின்றனர். தாங்கள் அந்த இழிவைப் போக்கிப் பனைகள் காய்க்கும்படி அருள் செய்ய வேண்டும் எனக் கூற,

2877. பரம னார்தந் திருத்தொண்டர் பண்பு நோக்கிப் பரிவெய்தி
விரவு காத லொடும்விரைந்து விமலர் கோயில் புக்கருளி
அரவும் மதியும் பகைதீர அணிந்தார் தம்மை அடிவணங்கி
இரவு போற்றித் திருப்பதிகம் இசையிற் பெருக எடுத்தருளி.

தெளிவுரை : சிவபெருமானது தொண்டரின் அடிமைத் திறத்தைப் பார்த்துத் தம் உள்ளத்தில் ஞான சம்பந்தர் இரங்கி, பொருந்திய பெருவிருப்பத்துடன் விரைந்து போய், இறைவரின் திருக்கோயிலுக்குள் புகுந்து, பாம்பையும் பிறைச் சந்திரனையும் பகை நீங்கும்படி தலையில் சூடிய சிவபெருமானை அடிகளில் விழுந்து வணங்கி, திருவருளை இரந்து துதித்துப் பூத்தேர்ந்தாயன எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பண் இசையால் பெருகுமாறு பாடியருளி,

2878. விரும்பு மேன்மைத் திருக்கடைக்காப் பதனில் விமல ரருளாலே
குரும்பை ஆண் பனைஈனும் என்னும் வாய்மை குலவுதலால்
நெருங்கும் ஏற்றுப் பனையெல்லாம் நிறைந்த குலைக ளாய்க்குரு
அரும்பு பெண்ணை யாகி யிடக் கண்டா ரெல்லாம் அதிசயித்தார்.

தெளிவுரை : மேன்மை விரும்பும் திருக்கடைக் காப்பில், இறைவரின் திருவருளால் குரும்பைகளை ஆண்பனைகள் ஈனும் என்னும் வாய்மை பொருந்தி விளங்குதலால், நெருங்கிய அந்த ஆண்பனைகள் எல்லாம் நிறைந்த குலைகளையுடையனவாய்க் குரும்பையுடைய பெண் பனைகளாக, மாறிவிடவே, பார்த்தவர் எல்லாம் வியப்புக் கொண்டனர்.

2879. சீரின் மன்னும் திருக்கடைக்காப் பேற்றிச் சிவனா ரருள்பெற்றுப்
பாரில் நீடும் ஆண்பனைமுன் காய்த்துப் பழுக்கும் பண்பினால்
நேரும் அன்பர் தங்கருத்து நேரே முடித்துக் கொடுத்தருளி
ஆரும் உவகைத் திருத்தொண்டர் போற்ற அங்கண் இனிதமர்ந்தார்.

தெளிவுரை : ஞானசம்பந்தர், சிறப்பால் நிலைப்பெற்ற திருக்கடைக் காப்புச் சேர்த்துப் பதிகத்தை நிறைவாக்கி இறைவரின் திருவருளைப் பெற்று உலகத்தில் நீடிய ஆண்பனைகள் முன்னே காய்த்துப் பழுக்கும் தன்மை வர விரும்பும் அன்பரின் கருத்தை நேர்பட முடித்துத் தந்து, நிறையான மகிழ்ச்சியடையத், திருத்தொண்டர் துதிக்க, அந்தநகரத்தில் இனிதாய்த் தங்கியிருந்தார்.

2880. தென்னாட் டமண்மா சறுத்தார்தம் செய்கை கண்டு திகைத்தமணர்
அந்நாட் டதனை விட்டகல்வார் சிலர்தங் கையிற் குண்டிகைகள்
என்னா வனமற் றிவையென்று தகர்ப்பார் இறைவன் ஏறுயர்த்த
பொன்னார் மேனிப் புரிசடையான் அன்றே என்று போற்றினார்.

தெளிவுரை : பாண்டிய நாட்டில் சமணமான குற்றத்தை நீக்கிய ஞான சம்பந்தரின் இந்தச் செயலைக் கண்டு திகைத்துச் சமணர் அந்நாட்டை விட்டு நீங்கிச் செல்பவர்களாகிச் சிலர் தம் கையில் ஏந்திய தம் சமயச் சின்னமான நீர்க் குண்டிகைகளை இவற்றால் என்ன பயன் உண்டு? என்று கூறி உடைத்தெறிந்து, முழு முதல் கடவுளாவார் காளைக் கொடியை யுயர்த்திய பொன் போன்ற மேனியுடைய புரிந்த சடையையுடைய சிவபெருமானே ! என்று போற்றினர்.

2881. பிள்ளை யார்தந் திருவாக்கில் பிறத்தலால்அத் தாலம்முன்
புள்ள பாசம் விட்டகல ஒழியாப் பிறவி தனையொழித்துக்
கொள்ளு நீர்மைக் காலங்கள் கழித்துச் சிவமே கூடினவால்
வள்ள லார்மற் றவரருளின் வாய்மை கூறின் வரம்பென்னாம்.

தெளிவுரை : திருஞான சம்பந்தரின் உண்மைத் திருவாக்கினால் கூறப்பட்டு வந்து பிறந்த காரணத்தால் அந்தப் பனை மரங்களும் பனையாய்ப் பிறப்பதற்குரியதான முன்னே உள்ள வினை விட்டு நீங்க, ஓயாமல் தொடர்ந்து வருகின்ற பிறவிப் பிணி நீங்கி உடம்பு இருப்பதற்குக் காரணமான பிராரத்தவினை கொள்ளும் கால அளவு கழித்துப்பின், சிவபேற்றை அடைந்தன. வள்ளலாரான பிள்ளையாரின் அருளின் மெய்த்தன்மையை எடுத்துக் கூறுவது என்பது வரம்புக்கு உள்ளாகுமோ?

2882. அங்கண் அமரர் பெருமானைப் பணிந்து போந்தா டரவினுடன்
பொங்கு கங்கை முடிக்கணிந்தார் மகிழும் பதிகள் பலபோற்றி
மங்கை பாகர் அமர்ந்தருளும் வயல்மா கறலை வழுத்திப்போய்க்
கொங்கு மலர்நீர்க் குரங்கணில்முட் டத்தைச் சென்று குறுகினார்.

தெளிவுரை : அங்குத் தேவதேவரான இறைவரை வணங்கிச் சென்று, ஆடும் பாம்புடன் பெருகும் நீரையுடைய கங்கையை முடியில் சூடிய இறைவர் மகிழும் பதிகள் பலவும் போற்றி, உமையம்மையை ஒரு பாகத்தில் கொண்ட இறைவர் வீற்றிருக்கும் வயல்கள் சூழ்ந்த திருமாகறலைப் போற்றிச் சென்று, மணம் பொருந்திய மலர்களையுடைய நீர் சூழ்ந்த திருக்குரங்கணின் முட்டத்தின் அருகில் நெருங்கினார்.

2883. ஆதி முதல்வர் குரங்கணில்முட் டத்தை அணைந்து பணிந்தேத்தி
நீதி வழுவாத் திருத்தொண்டர் போற்ற நிகரில் சண்பையினில்
வேத மோடு சைவநெறி விளங்க வந்த கவுணியனார்
மாதொர் பாகர் தாம்மன்னும் மதில்சூழ் காஞ்சி மருங்கணைந்தார்.

தெளிவுரை : ஆதி முதல்வரான சிவபெருமானின் திருக்குரங்கணின் முட்டத்தைச் சேர்ந்து வணங்கித் துதித்துச் சைவ நெறியில் வழுவாத ஒழுக்கமுடைய திருத்தொண்டர் போற்றச் சென்று, ஒப்பில்லாத சீகாழிப் பதியில் வேத நெறியுடனே சைவ நெறி விளங்குமாறு அவதாரம் செய்தருளிய கவுணியரான ஞான சம்பந்தர், உமையம்மையை ஒரு பாகத்தில் கொண்ட ஏகம்பவாணர் நிலையாக எழுந்தருளியுள்ள மதில் சூழ்ந்த காஞ்சிப் பதியின் பக்கத்தை அடைந்தார்.

2884. நீடுகாஞ்சி வாழ்நரும் நிலாவுமெய்ம்மை அன்பரும்
மாடுசண்பை வள்ளலார் வந்தணைந்த ஓகையால்
கூடுகின்ற இன்பநேர் குலவுவீதி கோலினார்
காடுகொண்ட பூகம்வாழைகாமர்தோ ரணங்களால்.
 
தெளிவுரை : பெருமைமிக்க காஞ்சி நகரத்தில் வாழும் மக்களும், மெய்ம்மை நெறியில் நிலைபெற்ற திருத்தொண்டர்களும், நகரத்தின் அண்மையில் திருஞான சம்பந்தர் வந்து சேர்ந்த மகிழ்ச்சியினால் உண்டான இன்பம் காரணமாய்க் காடுபோல் செறிந்த பாக்குகளும் வாழைகளும் அழகிய தோரணங்களும் என்னும் இவற்றால், நேராக விளங்கிய வீதிகளை அலங்காரம் செய்தனர்.

2885. கொடிநிரைத்த வீதியில் கோலவே திகைப்புறங்
கடி கொள்மாலை மொய்த்தபந்தர் கந்தநீர்த் தசும்புடன்
மடிவில்பொன் விளக்கெடுத்து மாதர்மைந்தர் மல்குவார்
படிவிளக்கும் அன்பரும்பரந்த பண்பில் ஈண்டுவார்.

தெளிவுரை : வரிசையாய் கொடிகளைக் கட்டிய வீதியில் அழகிய திண்ணையின் பக்கத்தில் மணமுடைய பந்தலில் மணநீர் நிறைந்த நிறைகுடங்களுடன் கெடுதல் இல்லாத பொன் விளக்குகளை ஏந்திப் பெண்களும் ஆண்களும் நிறைந்து கூடுவார்களும் பூமி விளக்கம் செய்யும் அன்பர்களும் பரவிய இயல்புடன் வந்து நெருங்குபவர்களாகி,

2886. கோதைமாதர் ஆடலுங் குலாவுதொண்டர் பாடலும்
வேதகீத நாதமும் மிக்கெழுந்து விம்மவே
காதல்நீடு காஞ்சிவாழ்நர் கம்பலைத் தெழுந்துபோய்
மூதெயிற் புறம்புசென் றணைந்துமுன் வணங்கினார்.

தெளிவுரை : மாலை சூடிய பெண்களின் ஆடல் ஓசையும், வேத கீதங்களின் நாதமும் கூடி மிக்கு எழுந்து பெருகப், பெருவிருப்பினால் காஞ்சி வாழும் மக்கள் ஆரவாரித்து ஒலிசெய்து எழுந்து சென்று, பழைமையுடைய மதிலின் வெளியில் போய்க் கூடி முன்னம் வணங்கினர்.

2887. சண்பையாளும் மன்னர்முன்பு தொண்டர்வந்து சார்தலும்
பண்புநீடி யானமுன் பிழிந்திறைஞ்சு பான்மைகண்
டெண்பெருக்கு மிக்கதொண்டர் அஞ்சலித்து எடுத்தசொல்
மண்பரக்க வீழ்ந்தெழுந்து வானம்முட்ட ஆர்த்தனர்.

தெளிவுரை : சீகாழியில் தோன்றிய ஞானசம்பந்தர் முன்பு அந்தத் தொண்டர்கள் வந்து சேர்ந்தபோது, பண்புமிக்கு முத்துச் சிவிகையினின்றும் இறங்கி வணங்கும் இயல்பைப் பார்த்து, எண்ணம் பெருக்கிய தொண்டர்கள் ஆர்த்துத் துதித்த அரகர என்ற ஒலி உலகத்தில் பரவ, நிலத்தில் விழுந்து எழுந்து, வானம் அளாவ ஆரவாரம் செய்தனர்.

2888. சேணுயர்ந்த வாயில்நீடு சீர்சொள்சண்பை மன்னனார்
வாண்நிலாவு நீற்றணி விளங்கிட மனத்தினில்
பூணுமன்பர் தம்முடன் புகுந்திடப் புறத்துளோர்
காணும்ஆசை யிற்குவித்த கைந்நிரை யெடுத்தனர்.

தெளிவுரை : மிக்க சிறப்புக் கொண்ட சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் ஒளி பொருந்திய திருநீற்றுக் கோலம் திருமேனியில் விளங்கிட உள்ளத்தில் சிவனிடம் அன்பே பூணாக உடைய அடியவருடன் வான் அளாவ உயர்ந்த நகரத்து மதில் புற வாயிலுள்ளே புகுந்தபோது, நகர்ப்புறத்தினின்றும் வந்து கூடிய மக்கள் பிள்ளையாரைக் காண்கின்ற ஆசையினால் வரிசையாய்க் கைகளைத் தலைமீது குவித்தனர்.

2889. வியல்நெடுந் தெருவினூடு மிக்கதொண்டர் ஆர்ப்பெழக்
கயல்நெடுங்கண் மாதரும் காதல்நீடு மாந்தரும்
புயல்பொழிந்த தாமெனப் பூவினொடு பொற்சுணம்
இயலுமாறு வாழ்த்தெடுத் திருமருங்கும் வீசினார்.

தெளிவுரை : அகன்ற நீண்ட தெருவின் இடையே கூடிய தொண்டர்களின் முழக்கம் எழ, கயல்மீன் போன்ற நீண்ட கண்களையுடைய பெண்களும் காதலால் மிக்க மக்களும் மேகம் மழை பெய்ததுபோல் பூக்களுடன் பொன் சுண்ணப் பொடியை ஏற்றவாறு வாழ்த்துக் கூறி இரு பக்கங்களிலும் வீசினர்.

2890. இன்னவண்ணம் யாவரும் இன்பமெய்த எய்துவார்
பின்னுவார் சடைமுடிப் பிரான்மகிழ்ந்த கோயில்கள்
முன்னுறப் பணிந்துபோய் மொய்வரைத் திருமகள்
மன்னுபூ சனைமகிழ்ந்த மன்னர்கோயில் முன்னினார்.

தெளிவுரை : இங்ஙனம் எல்லாரும் இன்பம் அடையுமாறு சேர்பவரான ஞானசம்பந்தர் சுருண்ட நீண்ட சடையையுடைய சிவபெருமான் மகிழ்ந்த பல கோயில்களைச் செல்லும் வழியில் வணங்கிப் போய், மலையரசன் மகளான உமையம்மையாரின் நிலைபெற்ற பூசனையை என்றும் மகிழ்ந்து கொண்டு எழுந்தருளுகின்ற ஏகம்பரான இறைவரின் திருக்கோயில் முன்பு சேர்ந்தார்.

2891. கம்பவாணர் கோயில்வாயில் கண்டுகை குவித்தெடுத்
தும்பர்ஓங்கு கோபுரத்தின் முன்னிறைஞ்சி உள்ளணைந்
தம்பொன்மா ளிகைப்புறத்தில் அன்பரோடு சூழவந்
திம்பர்ஞாலம் உய்யவந்த பிள்ளையார் இறைஞ்சுவார்.

தெளிவுரை : ஏகம்ப வாணரான இறைவரின் திருக்கோயில் வாயிலைப் பார்த்துக் கைகளைக் குவித்துத் தலைமீது தூக்கி வணங்கி வானத்தின் மீது ஓங்கும் கோபுரத்தின் முன் வணங்கி, கோயிலுள் போய்ச் சேர்ந்து, அழகிய பொன் மாளிகையின் புறச் சுற்றில் அன்பர்களுடன் வலமாகச் சுற்றி வந்து இந்த வுலகம் உய்யுமாறு தோன்றியருளிய ஞானசம்பந்தர் வணங்குவாராய்.

2892. செம்பொன்மலைக் கொடிதழுவக் குழைந்தருளுந் திருமேனிக்
கம்பரைவந் தெதிர்வணங்கும் கவுணியர்தங் காவலனார்
பம்புதுளிக் கண்ணருவி பாய்ந்துமயிர்ப் புளகம்வரத்
தம்பெருகு மனக்காதல் தள்ளநில மிசைத்தாழ்ந்தார்.

தெளிவுரை : செம்பொன் மலையரசனின் மகளாரான கொடி போன்ற காமாட்சியம்மையார் தழுவக் குழைந்த திருமேனியையுடைய ஏகாம்ப நாதரைத், திருமுன்பு வந்து எதிரே வணங்கும் கவுணியர் தலைவரான ஞானசம்பந்தர் துளிக்குந் துளிகளாகி அருவிபோல் கண்ணீர் பெருகத், திருமேனியில் மயிர்ப்புளகம் ஏற்படத் தம் உள்ளத்தில் நிறைந்து பெருகும் பெருவிருப்பம் உந்த நிலத்தின் மீது விழுந்து வணங்கியவராய்,

2893. பலமுறையும் பணிந்தெழுந்து பங்கயச்செங் கைமுகிழ்ப்ப
மலருமுக மளித்ததிரு மணிவாயால் மறையான்என்
றுலகுய்ய எடுத்தருளி உருகியஅன் பென்புருக்க
நிலவுமிசை முதற்றாளம் நிரம்பியநீர் மையில்நிகழ.

தெளிவுரை : பல முறையும் வணங்கி எழுந்து தாமரை போன்ற சிவந்த கைகுவிய, மலர்கின்ற திருமுகத்தில் தோன்றிய அழகிய ஒளி விளங்கும் வாக்கினால் மறையான் என்று உலகம் உய்யுமாறு தொடங்கி உள்ளம் உருகிய அன்பு எலும்பையும் உருக்குவதாகப் பொருந்திய பண்ணும் தாளமும் கூட நிரம்பிய தன்மையில் அமைய,

2894. பாடினார் பணிவுற்றார் பரிவுறுஆ னந்தக்கூத்
தாடினார் அகங்குழைந்தார் அஞ்சலிதஞ் சென்னியின்மேல்
சூடினார் மெய்ம்முகிழ்த்தார் சூகரமும் அன்னமுமாய்த்
தேடினார் இருவர்க்கும் தெரிவரியார் திருமகனார்.

தெளிவுரை : ஞானசம்பந்தர் பாடினார்; பணிந்தார்; அன்பினால் நிறைந்த ஆனந்தக் கூத்து ஆடினார்; மனம் குழைந்து உருகினார்; கைகளைக் குவித்த அஞ்சலியைத் தலைமேல் கொண்டார்; உடல் எங்கும் மயிர்ப்புளகம் வரப்பெற்றார். பன்றியும் அன்னமுமாய் உருவெடுத்து முறையே அடியும் முடியும் தேடியவர்களான இரண்டு பெருந் தேவர்க்கும் தெரிவதற்கு அரியராய் நிமிர்ந்த இறைவரின் மகனான பிள்ளையார்

2895. மருவியஏ ழிசைபொழிய மனம்பொழியும் பேரன்பால்
பெருகியகண் மழைபொழியப் பெரும்புகலிப் பெருந்தகையார்
உருகியஅன் புள்ளலைப்ப உமைதழுவக் குழைந்தவரைப்
பருகியமெய் உணர்வினொடும் பரவியே புறத்தணைந்தார்.

தெளிவுரை : பொருந்திய ஏழிசைகளையும் வாக்கானது பொழிய, மனத்தினின்றும் மேலிட்டு ஊக்கும் அன்பினால் கண்கள் ஊற்றெடுத்துப் பெருகிய கண்ணீர் மழை பொழிய, பெருமையுடைய சீகாழியில் தோன்றியருளிய பெருந்தகை யாரான பிள்ளையார், உள்ளம் உருகுவதற்குக் காரணமான அன்பு மனத்தை அலையச் செய்ய, காமாட்சியம்மையார் தழுவத் திருமேனி குழைந்த ஏகம்பநாதரை அனுபவித்த மெய் உணர்ச்சியோடும் போற்றி செய்து, கோயில் வெளிப்பாகத்தை அடைந்தார்.

2896. புறத்தணைந்த தொண்டருடன் போந்தமைந்த திருமடத்தில்
பெறற்கரும்பே றுலகுய்யப் பெற்றருளும் பிள்ளையார்
மறப்பரிய காதலுடன் வந்தெய்தி மகிழ்ந்துறைவார்
அறப்பெருஞ்செல் வக்காமக் கோட்டம்அணைந் திறைஞ்சினார்.

தெளிவுரை : வெளியே வந்தருளிய திருத்தொண்டர்களுடன் போய்த் தாம் எழுந்தருளும் பேறு பெற அதற்கென அமைந்த மடத்தில் பெறுவதற்கரிய பேறான சிவஞானத்தை உலகம் உய்யும் பொருட்டாய்ப் பெற்று அவ்வாறே உலகுக்கு அருளும் ஞானசம்பந்தர், இறைவரை மறவாத பெருவிருப்புடன் வந்து மகிழ்ச்சியுடன் தங்கியருள்வார். அறங்கள் எல்லாவற்றையும் வளர்த்து உமையம்மையார் எழுந்தருளியுள்ள பெரிய செல்வம் பொருந்திய காமகோட்டத்தை அடைந்து வணங்கினார்.

2897. திருவேகம் பத்தமர்ந்த செழுஞ்சுடரைச் சேவடியில்
ஒருபோதும் தப்பாதே உள்ளுருகிப் பணிகின்றார்
மருவுதிரு இயமகமும் வளர்இருக்குக் குறள்மற்றும்
பெருகும்இசைத் திருப்பதிகத் தொடைபுனைந்தார் பிள்ளையார்.

தெளிவுரை : திரு ஏகம்பத்தில் விரும்பி வீற்றிருக்கும் செழுமை பொருந்திய ஞானச் சுடரான இறைவரைத் திருவடியின் கீழ் வழிபடவேண்டிய காலங்களில் ஒரு பொழுதும் தவறாது உள்ளம் உருகிப் பணிகின்றவராய், ஞானசம்பந்தர், அணி பொருந்திய திருஇயமகமும் பொருளால் வளர்கின்ற திருவிருக்குக் குறளும் இன்னும் வேறு பெருகுகின்ற இசை பொருந்திய திருப்பதிக மாலையையும் இறைவருக்கு அணிவித்தார்.

2898. நீடுதிருப் பொழில்காஞ்சி நெறிக்காரைக் காடிறைஞ்சிச்
சூடுமதிக் கண்ணியார் துணைமலர்ச்சே வடிபாடி
ஆடுமவர் இனிதமரும் அனேகதங்கா வதம்பரவி
மாடுதிருத் தானங்கள் பணிந்தேத்தி வைகுநாள்.

தெளிவுரை : நீடும் சோலைகள் சூழ்ந்த திருக்கச்சி நெறிக் காரைக்காடு என்னும் திருக்கோயிலைப் போய் வணங்கி, அணியும் பிறையான கண்ணியை யுடைய இறைவரின் துணையான மலர் போன்ற திருப்பாதங்களைப் பாடிக் கூத்தியற்றும் இறைவர் இனிதாய் வீற்றிருக்கும் திருக்கச்சி அனேகதங் காவதம் என்னும் திருப்பதியைத் துதித்துப் பக்கத்தில் உள்ள கோயில்களையும் பணிந்து துதித்துத் தங்கியிருக்கும் நாளில்,

2899. எண்திசையும் போற்றிசைக்கும் திருப்பதிமற் றதன்புறத்துத்
தொண்டருடன் இனிதேகித் தொல்லைவிடம் உண்டிருண்ட
கண்டர்மகிழ் மேற்றளியும் முதலான கலந்தேத்தி
மண்டுபெருங் காதலினால் வணங்கிமீண் டினிதிருந்தார்.

தெளிவுரை : எட்டுத் திக்குகளில் உள்ளவரும் போற்றும் திருத்தலமான காஞ்சிபுரத்தின் புறத்தில் திருத் தொண்டர்களுடன் கூடி இனிதாய்ப் போய் முன் நாளில் நஞ்சை உண்டு அதனால் கருநிறம் உடைய கண்டத்தையுடைய இறைவர் மகிழ்வுடன் வீற்றிருக்கும் திருமேற்றளி முதலான பதிகளில் போய்த் துதித்துச் செறிந்த பெருங் காதலால் வணங்கித் திருக்கச்சி நகரில் மீண்டு இனிதாய் எழுந்தருளித் தங்கியிருந்தார்.

2900. அப்பதியில் விருப்பினொடும் அங்கணரைப் பணிந்தமர்வார்
செப்பரிய புகழ்ப்பாலித் திருநதியின் தென்கரைபோய்
மைப்பொலியுங் கண்டர்திரு மாற்பேறு மகிழ்ந்திறைஞ்சி
முப்புரஞ்செற் றவர்தம்மை மொழிமாலை சாத்தினார்.

தெளிவுரை : அந்தக் காஞ்சி நகரத்தில் மிக்க விருப்புடன் இறைவரை வணங்கிக் கொண்டு விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பிள்ளையார் கூறுவதற்கரிய புகழுடன் கூடிய பாலியாற்றின் தெற்குக் கரையின் வழியில் போய், நஞ்சு விளங்கும் கழுத்தையுடைய சிவபெருமான் வீற்றிருக்கின்ற திருமால் பேற்றை மகிழ்ச்சியுடன் வணங்கி, முப்புரங்களை எரித்த சிவபெருமானைச் சொல் மாலையான திருப்பதிகம் சாத்தியருளினார்.

2901. திருமாற்பே றுடையவர்தம் திருவருள்பெற் றெழுந்தருளிக்
கருமாலுங் கருமாவாய்க் காண்பரிய கழல்தாங்கி
வரும்ஆற்றல் மழவிடையார் திருவல்லம் வணங்கித்தம்
பெருமாற்குத் திருப்பதிகப் பெரும்பிணையல் அணிவித்தார்.

தெளிவுரை : திருமால் பேற்றில் வீற்றிருக்கும் இறைவரின் திருவருளைப் பெற்று, அங்கிருந்து எழுந்தருளிப் போய்க் கரிய நிறம் கொண்ட திருமாலும் தாம் பன்றி எடுத்தும் காண இயலாத திருவடிகளைச் சுமந்து வரும் வலிமை பெற்றுள்ள இளைய காளையையுடைய இறைவரின் திருவல்லம் என்னும் பதியினை வணங்கித் தம் இறைவர்க்குத் திருப்பதிகமான மாலையைச் சூடியருளினார்.

2902. அங்குள்ள பிறபதியில் அரிக்கரியார் கழல்வணங்கிப்
பொங்குபுனற் பாலியாற்றின் புடையில்வட பாலிறைவர்
எங்கும்உறை பதிபணிவார் இலம்பையங்கோட் டூரிறைஞ்சிச்
செங்கண்விடை உகைத்தவரைத் திருப்பதிகம் பாடினார்.

தெளிவுரை : அங்குள்ள தலங்களில் திருமாலுக்கு அரியவரான இறைவரின் திருவடிகளை வணங்கி, பெருகும் நீரைக் கொண்ட பாலியாற்றின் பக்கத்தே வடக்கில் இறைவர் எங்கும் எழுந்தருளிய தலங்களை எல்லாம் வணங்குவாராகித் திரு இலம் பையங் கோட்டூரினைத் தொழுது, சிவந்த கண்களையுடைய காளை ஊர்தியை உடையவரைத் திருப்பதிகம் பாடியருளினார்.

2903. திருத்தொண்டர் பலர்சூழத் திருவிற்கோ லமும்பணிந்து
பொருட்பதிகத் தொடைமாலை புரமெரித்த படிபாடி
அருட்புகலி யாண்டகையார் தக்கோலம் அணைந்தருளி
விருப்பினொடுந் திருவூறல் மேவினார் தமைப்பணிந்தார்.

தெளிவுரை : திருத் தொண்டர் பலரும் தம்மைச் சூழ்ந்து வரப் போய்த் திருவிற் கோலம் என்ற தலத்தைத் தொழுது, மெய்ப் பொருளைப் புலப்படுத்தும் திருப்பதிகமான மாலையினைச் சிவபெருமான் திரிபுரம் எரித்த நிலை பற்றித் துதித்துப் பாடியருளி, அருள் உடைய சீகாழிப் பிள்ளையார் தக்கோலம் என்ற பதியைச் சேர்ந்து விருப்பத்துடன் அங்குத் திருவூறல் என்ற கோயிலில் வீற்றிருக்கும் இறைவரை வணங்கினார்.

2904. தொழுதுபல முறைபோற்றிச் சுரர்குருவுக் கிளையமுனி
வழுவில்தவம் புரிந்தேத்த மன்னினார் தமைமலர்ந்த
பழுதில்செழுந் தமிழ்மாலைப் பதிகஇசை புனைந்தருளி
முழுதும்அளித் தவர்அருளால்போந்தனர்முத் தமிழ்விரகர்.

தெளிவுரை : அங்குத் தொழுது பலமுறையும் வணங்கித் தேவ குருவான வியாழனின் தம்பி சம்வர்த்த முனிவர் குற்றம் இல்லாது தவத்தைச் செய்து போற்ற எழுந்தருளிய இறைவரை அன்பால் மலர்ந்த குற்றம் இல்லாத செழுந்தமிழ் மாலையான பதிக இசையைப் பாடி, எல்லாவற்றையும் படைத்தளித்த இறைவரிடம் விடைபெற்று முத்தமிழ் வல்லுநர் சென்றார்.

2905. குன்றநெடுஞ் சிலையாளர் குலவியபல் பதிபிறவும்
நின்றவிருப் புடனிறைஞ்சி நீடுதிருத் தொண்டருடன்
பொன்தயங்கு மணிமாடப் பூந்தராய்ப் புரவலனார்
சென்றணைந்தார் பழையனூர்த் திருவாலங் காட்டருகு.

தெளிவுரை : மேருமலையை வில்லாகக் கொண்ட சிவபெருமான் விளங்க எழுந்தருளிய பிற பல பதிகளையும் நிலையான விருப்பத்துடன் வணங்கிப் பொன்னால் இயன்ற அழகிய மாடங்களையுடைய சீகாழியின் தலைவரான ஞானசம்பந்தர், அன்பு பெருகிய தொண்டருடன் பழையனூர்த் திருவாலங்காட்டின் அருகில் சென்று சேர்ந்தார்.

2906. இம்மையிலே புவியுள்ளோர் யாருங் காண
ஏழுலகும் போற்றிசைப்ப எம்மை யாளும்
அம்மைதிருத் தலையாலே நடந்து போற்றும்
அம்மையப்பர் திருவாலங் காடாம் என்று
தம்மையுடை யவர்மூதூர் மிதிக்க அஞ்சிச்
சண்பைவருஞ் சிகாமணியார் சாரச் சென்று
செம்மைநெறி வழுவாத பதியின் மாடோர்
செழும்பதியில் அன்றிரவு பள்ளி சேர்ந்தார்.

தெளிவுரை : இப்பிறவியில் இம்மண்ணூலகத்தில் எவரும் நேரில் காணும்படி ஏழ் உலகத்தில் உள்ளவரும் துதிக்கும்படி எம்மை ஆள்கின்ற அம்மையாரான காரைக்கால் அம்மையார் தம் திருத்தலையினால் நடந்து போய் அடைந்து போற்றிய அம்மையப்பர் வீற்றிருக்கின்ற பதி இத்திருவாலங் காடாகும் என்று உள்ளத்தில் எண்ணித் தம்மை ஆளுடைய இறைவரின் பழமை பொருந்திய அந்தவூரைக் காலால் மிதித்து உள்ளே செல்ல அச்சம் கொண்டு, சீகாழியில் தோன்றியருளிய பிள்ளையார் அந்தப் பதியின் அருகில் சாரச் செம்மை நெறியினின்று சற்றும் வழுவாத தூய ஒழுக்கமுடையவர்கள் வாழ்கின்ற அந்தப் பதியின் பக்கத்தில் ஒரு செழுமையான நகரில் அன்று இரவிலே தங்கி உறங்கலானார்.

2907. மாலையிடை யாமத்துப் பள்ளி கொள்ளும்
மறையவனார் தம்முன்பு கனவி லேவந்
தாலவனத் தமர்ந்தருளும் அப்பர் நம்மை
அயர்த்தனையோ பாடுதற்கென் றருளிச் செய்ய
ஞாலமிருள் நீங்கவரும் புகலி வேந்தர்
நடுஇடையா மத்தினிடைத் தொழுது ணர்ந்து
வேலைவிட முண்டவர்தங் கருணை போற்றி
மெய்யுருகித் திருப்பதிகம் விளம்ப லுற்றார்.

தெளிவுரை : மாலை முற்றிய நடு யாமத்தில் பள்ளி கொண்டருளும் வேதியரான பிள்ளையாரின் கனவில் வெளிப்பட்டுத் திருவாலங்காட்டில் வீற்றிருக்கும் இறைவர் நம்மைப் பாடுவதற்கு மறந்தாயோ ? என்று வினவினார். உலகம் இருள் நீங்கி உய்யும் பொருட்டுத் தோன்றியருளிய சீகாழித் தலைவர் நள்ளிருள் யாமத்தில் வணங்கிய படியே உறக்கத்தினின்று உணர்ந்து எழுந்து கடலில் உண்டான நஞ்சை உண்டருளிய சிவபெருமானின் திருவருளைப் போற்றி மெய் உருகித் திருப்பதிகத்தைப் பாடலானார்.

2908. துஞ்சவரு வார்என்றே எடுத்த வோசைச்
சுருதிமுறை வழுவாமல் தொடுத்த பாடல்
எஞ்சலிலா வகைமுறையே பழைய னூரார்
இயம்புமொழி காத்தகதை சிறப்பித் தேத்தி
அஞ்சனமா கரியுரித்தார் அருளா மென்றே
அருளும்வகை திருக்கடைக்காப் பமையச் சாற்றி
பஞ்சுரமாம் பழைய திறங் கிழமை கொள்ளப்
பாடினார் பாரெலாம் உய்ய வந்தார்.

தெளிவுரை : உலகம் உய்யத் தோன்றிய ஞானசம்பந்தர் துஞ்ச வருவாரும் என்று தொடங்கிய ஓசையுடைய வேதத்தின் முறை தவறாதபடி பாடிய பாடலில் குறைவற்ற வகையினால் நீதிமுறையின் வழி பழையனூர் வேளாளர் தாங்கள் கூறிய சொல்லைத் தவறாது காத்து அருள் பெற்ற வரலாற்றைச் சிறப்பாய்ப் பாராட்டிக் கரிய யானையை உரித்த இறைவரின் திருவருளேயாகும் இது என்று அருள் செய்யும் தன்மையைத் திருக்கடைக் காப்பில் வைத்துக் குறிஞ்சி யாழ்ப்பண் அமைதித் திறமும் கிழமையும் பொருந்தப் பாடினார்.

2909. நீடுமிசைத் திருப்பதிகம் பாடிப் போற்றி
நெடுங்கங்கு லிருணீங்கி நிகழ்ந்த காலை
மாடுதிருத் தொண்டர்குழா மணைந்தபோது
மாலையினில் திருவால வனத்து மன்னி
ஆடுமவ ரருள்செய்த படியை யெல்லாம்
அருளிச்செய் தகமலரப் பாடி யேத்திச்
சேடர்பயில் திருப்பதியைத் தொழுது போந்து
திருப்பாசூர் அதன்மருங்கு செல்ல லுற்றார்.

தெளிவுரை : எக்காலத்தும் நிலைபெறும் இறையுடைய திருப்பதிகத்தைப் பாடித் துதித்தபின் நீண்ட இரவின் இருள் புலர்ந்து நீங்கிய போது பக்கத்தில் திருத்தொண்டர் கூட்டம் வந்து சேர்ந்த போது, இரவில் திருவாலங் காட்டுப்பதியில் ஆடுகின்ற இறைவர் தமக்கு அருள் செய்த விதத்தை யெல்லாம் அவர்களுக்குச் சொல்லி, அத்திருப்பதிகத்தைத் திரும்பவும் உள்ளம் மகிழப்பாடித் துதித்தபின் பெரியவர் வாழ்கின்ற அந்தப் பதியை வணங்கி அகன்று போய் திருப்பாசூர் அருகில் செல்லலானார்.

2910. திருப்பாசூர் அணைந்தருளி யங்கு மற்றச்
செழும்பதியோ ரெதிர்கொள்ளச் சென்று புக்குப்
பொருப்பரையன் மடப்பாவை இடப்பா கத்துப்
புராதனர்வே யிடங்கொண்ட புனிதர் கோயில்
விருப்பினுடன் வலங்கொண்டு புக்குத் தாழ்ந்து
வீழ்ந்தெழுந்து மேனியெலா முகிழ்ப்ப நின்றே
அருட்கருணைத் திருவாளன் நாமஞ் சிந்தை
யிடையாரென் றிசைப்பதிகம் அருளிச் செய்தார்.

தெளிவுரை : திருப்பாசூரை அணைந்து அங்கு அந்தச் செழும்பதியினர் வந்து எதிர்கொள்ளப் பதியுள் போய்ப் புகுந்து, மலையரசனின் மகளான பார்வதியம்மையாரை இடப்பாகத்தில் கொண்ட பழமையுடையவரும் மூங்கிலை இடமாகக் கொண்ட வருமான இறைவரின் திருக்கோயிலுள் விருப்பத்துடன் வலமாக வந்து உள்ளே புகுந்து இறைவரின் திருமுன்பு நிலம் பொருந்த விழுந்து வணங்கி எழுந்து, திருமேனி முழுதும் மயிர்க்கூச் செறிப்பு உண்டாக நின்று, அருட்கருணை என்ற செல்வத்தையுடைய இறைவரின் திருநாமத்தைச் சிந்தையிடையார் எனத் தொடங்கி இசையுடன் கூடிய திருப்பதிகத்தைப் பாடியருளினார்.

2911. மன்னுதிருப் பதிகஇசை பாடிப் போற்றி
வணங்கிப்போந் தப்பதியில் வைகி மாடு
பிஞ்ஞகர்தம் வெண்பாக்கம் முதலா யுள்ள
பிறபதிகள் பணிந்தணைவார் பெருகு மன்பால்
முன்னிறைந்த திருவாய்மஞ் சனநீ ராட்டு
முதல்வேடர் கண்ணப்ப நாய னாரை
உன்னியொளிர் காளத்தி மலை வணங்க
வுற்றபெரு வேட்கையுட னுவந்து சென்றார்.

தெளிவுரை : ஞானசம்பந்தர் நிலைபெறும் இசையுடைய திருப்பதிகத்தைப் பாடித் துதித்துச் சென்று அப்பதியில் தங்கியிருந்தார். அத்தலத்தின் பக்கத்தில் இறைவர் எழுந்தருளிய திருவெண்பாக்கம் முதலான மற்றப் பதிகளையும் வணங்கிய வண்ணம் செல்பவராய்ப் பெருகும் அன்பால் முன் திருவாய் நிறைந்த நீரால் இறைவரைத் திருமஞ்சன நீராட்டும் முதல்வரான கண்ணப்ப நாயனாரை எண்ணி, விளங்கும் திருக்காளத்தி மலையைத் தொழுவதற்குப் பொருந்திய பெருவிருப்புடன் மகிழ்ந்து போய் அருளினார்.

2912. மிக்கபெருங் காதலுடன் தொண்டர் சூழ
மென்புனல்நாட் டினையகன்று வெற்பும் கானும்
தொக்கபெரு வன்புலக்கா னடைந்து போகிச்
சூலகபா லக்கரத்துச் சுடரு மேனி
முக்கண்முதல் தலைவனிட மாகி யுள்ள
முகில்நெருங்கு காரிகரை முன்னர்ச் சென்று
புக்கிறைஞ்சிப் போற்றிசைத்தப் பதியில் வைகிப்
பூதியரோ டுடன்மகிழ்ந்தார் புகலி வேந்தர்.

தெளிவுரை : மிக்க பெருவிருப்புடனே தொண்டர் சூழ்ந்து வரப்போய் மெல்லிய தாய்ப் பாய்கின்ற நீர்வளம் கொண்ட பாலியாற்றின் வடகரையில் உள்ள நாட்டின் பகுதியை நீங்கி, மலையும் காடும் போலச் சேர்ந்து நெருங்கிய வலிய நிலம் பரந்த காட்டிடங்களை அடைந்து, சூலமும் கபாலமும் கையில் கொண்டு ஒளிவிளங்கும் திருமேனியையும் மூன்று கண்களையுமுடைய இறைவரின் இடமாகி மேகம் சூழ்ந்த திருக்காரி கரையினை முன்னர் சென்று, கோயிலுள் புகுந்து இறைவரை வணங்கி அந்தப் பதியில் தங்கித் தொண்டருடன் ஞான சம்பந்தர் மகிழ்ந்திருந்தார்.

2913. இறைவர்திருக் காரிகரை யிறைஞ்சி அப்பால்
எண்ணில்பெரு வரைகளிரு மருங்கு மெங்கும்
நிறையருவி நிரைபலவாய் மணியும் பொன்னும்
நிறைதுவலை புடைசிதறி நிகழ்ப வாகி
அறைகழல்வா னவர்க்கிறைவன் குலிச வேற்றால்
அற்றசிறை பெற்றவன்மே லெழுவ தற்குச்
சிறகடித்துப் பறக்கமுயன் றுயர்ந்த போலும்
சிலைநிலத்தி லெழுந்தருளிச் செல்லா நின்றார்.

தெளிவுரை : ஞானசம்பந்தர் சிவபெருமானின் திருக்காரிகரையைத் தொழுது மேல் போய், அளவில்லாத பெரிய மலைகளில் இரு பக்கங்களிலும் எங்கும் நீர் நிறைந்த அருவிகள் பல வரிசையான மணிகளையும் பொன்னையும் நிறைந்த நீர்த்துளிகளைப் பக்கங்களில் நிரம்பச் சிதறி நிகழ்வனவாகி ஒலிக்கின்ற கழலை அணிந்த தேவ அரசனான இந்திரனின் வச்சிரப்படை தாக்குதலால் அறுபட்ட இறகுகளைப் பெற்று அவன் மீது போருக்கு எழுவதற்காகச் சிறகுகளை விரித்துப் பறக்க முயன்று உயர்ந்தன போன்ற காட்சி தரும் மலை சூழ்ந்த நாட்டின் பகுதியில் எழுந்தருளிச் செல்பவராய்,

2914. மாதவர்கள் நெருங்குகுழாம் பரந்து செல்ல
மணிமுத்தின் பரிச்சின்னம் வரம்பின் றாகப்
பூதிநிறை கடல்அணைவ தென்னச் சண்பைப்
புரவலனார் எழுந்தருளும் பொழுது சின்னத்
தீதிலொலி பலமுறையும் பொங்கி யெங்குந்
திருஞான சம்பந்தன் வந்தான் என்னும்
நாதம்நிறை செவியினவாய் மாக்க ளெல்லாம்
நலமருவு நினைவொன்றாய் மருங்கு நண்ண.

தெளிவுரை : சிவனடியார் கூட்டம் பரந்து செல்ல, அழகிய முத்துச்சின்னங்கள் உண்டாக்கும் ஓசை அளவில்லாது எழ, திருநீறு நிறைந்த கடல் அணைவதைப் போல் சீகாழித் தலைவரான ஞான சம்பந்தர் வரும்போது, திருச்சின்னங்களின் ஒப்பில்லாத ஒலி பலமுறையாலும் மேன்மேல் அதிகரித்து எங்கும் திருஞான சம்பந்தர் வந்தார் என்று உண்டாகும் ஒலி நிறைந்த காதுகளை உடையன ஆதலால், ஐந்து அறிவுடைய விலங்கச் சாதிகள் எல்லாம் தம் இயல்பான தீமையின்றி நன்மை பொருந்தும் நினைவு ஒன்றையே மேற்கொண்டு பக்கங்களில் வந்து பொருந்த,

2915. கானவர்தங் குலம்உலகு போற்ற வந்த
கண்ணப்பர் திருப்பாதச் செருப்புத் தோய
மானவரிச் சிலைவேட்டை ஆடும் கானும்
வானமறை நிலைபெரிய மரமும் தூறும்
ஏனையிமை யோர்தாமும் இறைஞ்சி யேத்தி
எய்தவரும் பெருமையவாம் எண்ணி லாத
தானமும்மற் றவைகடந்து திருக்கா ளத்தி
சாரஎழுந் தருளினார் சண்பை வேந்தர்.

தெளிவுரை : வேடுவர் குலத்தை உலகமானது போற்றுமாறு அதில் வந்து அவதரித்த கண்ணப்ப நாயனாரின் திருவடிகளில் அணிந்த செருப்புத் தேயுமாற பெரிய கட்டமைந்தவில் வேட்டையாடும் காடுகளும், வானத்தை மறைக்குமாறு நீண்ட பெரிய மரச் சோலைகளும் தூறுகளும் தேவர்களும் துதிக்க வரும் பெருமையுடைய அளவில்லாத மற்ற இடங்களும் ஆகியவற்றையெல்லாம் கடந்து சென்று திருக்காளத்தி மலையைச் சேரச் சீகாழித் தலைவர் சென்றார்.

2916. அம்பொன்மலைக் கொடிமுலைப்பால் குழைத்த ஞானத்
தமுதுண்ட பிள்ளையார் அணைந்தார் என்று
செம்பொன்மலை வில்லியார் திருக்கா ளத்தி
சேர்ந்ததிருத் தொண்டர் குழாம்அடைய ஈண்டிப்
பம்புசடைத் திருமுனிவர் கபாலக் கையர்
பலவேடச் சைவர்குல வேடர் மற்றும்
உம்பர்தவம் புரிவார்அப் பதியி லுள்ளோர்
உடன்விரும்பி யெதிர்கொள்ள வுழைச்சென் றுற்றார்.

தெளிவுரை : அழகிய பொன் மலை மன்னனின் மகளான கொடி போன்ற உமையம்மையாரின் முலைப் பாலில் குழைந்த ஞான அமுதத்தை உண்ட ஆளுடைய பிள்ளையார் வருகின்றார் என்று எண்ணி, மேரு மலையை வில்லாகக் கொண்ட இறைவரின் திருக்காளத்தியில் சேர்ந்த திருத் தொண்டர் கூட்டம் நெருங்க வந்து, நெருங்கிய சடையுடைய முனிவர்களும் மண்டை ஓட்டை ஏந்தும் கபாலியர்களும், மற்றும் இங்ஙனம் மாவிரதம் முதலான பலபல வேடங்களையுடைய சைவர்களும், மற்றும் மேன்மையான தவம் செய்தவரும், அந்தப் பதியில் உள்ளவருடன் கூடி மகிழ்ந்து, எதிர்கொள்ளப் பக்கத்தில் போய்ச் சேர்ந்தனர்.

2917. திசையனைத்தும் நீற்றினொளி தழைப்ப மண்மேற்
சிவலோகம் அணைந்ததெனச் சென்ற போது
மிசைவிளங்கும் மணிமுத்தின் சிவிகை நின்றும்
வேதபா ரகர்இழிந்து வணங்கி மிக்க
அசைவில்பெருந் தொண்டர்குழாம் தொழுது போற்றி
அரவெனுமோ சையில்அண்டம் நிறைப்ப அன்பால்
இசைவிளங்குந் தமிழ்விரகர் திருக்கா ளத்தித்
திருமலையிம் மலைகளில்யா தென்று கேட்டார்.

தெளிவுரை : எல்லாத் திசைகளிலும் திருநீற்றின் ஒளி பரவ, இந்தவுலகத்தில் சிவலோகம் வந்து சேர்ந்தது எனக் கூறுமாறு சென்ற போது, மேலே விளங்கும் அழகிய முத்துச் சிவிகையினின்றும் இறங்கி வேதத்தில் வல்ல ஞானசம்பந்தர் வணங்கி எதிர்கொண்ட மிக்க அசைவற்ற பெரிய திருத்தொண்டர் கூட்டம் தொழுது வணங்கி அர ! அர ! என்ற பேரொலியால் அண்டம் முழுதும் நிறையுமாறு செய்யப், புகழினால் எங்கும் விளங்கும் தமிழ் வல்லுநரான ஞானசம்பந்தர் அவர்களை நோக்கி, திருக்காளத்தி மலை இங்குத் தோன்றும் மலைகளுள் எது? என்று வினவினார்.

2918. வந்தணைந்த மாதவத்தோர் வணங்கித் தாழ்ந்து
மறைவாழ்வே சைவசிகா மணியே தோன்றும்
இந்தமலை காளனோ டத்தி தம்மில்
இகலிவழி பாடுசெய இறைவர்மேவும்
அந்தமில்சீர்க் காளத்தி மலையாம் என்ன
அவனிமேற் பணிந்தெழுந்தஞ் சலிமேற் கொண்டு
சிந்தைகளி மகிழ்ச்சிவரத் திருவி ராகம்
வானவர்கள் தானவர்என் றெடுத்துச் செல்வார்.

தெளிவுரை : எதிர் கொண்டு வரவேற்ற தொண்டர்கள் ஞானசம்பந்தரை வணங்கி மறையவர்களின் வாழ்வே ! சைவத் தலைவர்களுள் சிறந்தவரே ! நம் எதிரே தோன்றும் இம்மலைதான் முன்நாளில் காளன் என்னும் பாம்பும் யானையும் தமக்குள் மாறுபட்டுத் தம்மைப் பூசை செய்யுமாறு இறைவர் எழுந்தருளியுள்ள கேடில் சிறப்புடைய திருக்காளத்தி மலையாகும் எனவுரைத்தனர். அப்போது ஞானசம்பந்தர் விழுந்து வணங்கி எழுந்து கைகளைத் தலைமீது குவித்து மனத்துள் மிக்க மகிழ்ச்சி எழுதலால் வானவர்கள் தானவர்கள் எனத் தொடங்கும் திருப்பதிகத்தைத் திருவிராக அமைப்பில் பாடிய வண்ணம் மேற்செல்லலானார்.

2919. திருந்தியஇன் னிசைவகுப்பத் திருக்கண் ணப்பர்
திருத்தொண்டு சிறப்பித்துத் திகழப் பாடிப்
பொருந்துபெருந் தவர்கூட்டம் போற்ற வந்து
பொன்முகலிக் கரையணைந்து தொழுது போகி
அருந்தவர்கள் எம்மருங்கும் மிடைந்து செல்ல
ஆளுடைய பிள்ளையார் அயன்மால்தேடும்
மருந்துவெளி யேயிருந்த திருக்கா ளத்தி
மலையடிவா ரஞ்சார வந்து தாழ்ந்தார்.

தெளிவுரை : திருந்திய இனிய பண்ணமைதி வகுப்பினால் திருக்கண்ணப்பரின் திருத்தொண்டைச் சிறப்பித்துப் பாடியருளிப் பொருந்திய பெரிய திருத் தொண்டர் கூட்டம் சூழ்ந்து துதிக்க எழுந்தருளி வந்து, பொன் முகலியாற்றின் கரையை அடைந்து வணங்கிச் சென்று அரிய தவத்தவர்களான திருத்தொண்டர்கள் எப்பக்கமும் நெருங்கிச் செல்ல, ஆளுடைய பிள்ளையார், நான்முகனும் திருமாலும் தேடிக் காண இயலாத மருந்தான இறைவர் வெளிப்பட எழுந்தருளியிருந்த திருக்காளத்தி மலையின் அடிவாரத்தினை அணுக வந்து நிலத்தில் பொருந்த விழுந்து வணங்கினார்.

2920. தாழ்ந்தெழுந்து திருமலையைத் தொழுது கொண்டே
தடஞ்சிலா தலசோபா னத்தா லேறி
வாழ்ந்திமையோர் குழாம்நெருங்கு மணிநீள் வாயில்
மருங்கிறைஞ்சி உட்புகுந்து வளர்பொற் கோயில்
சூழ்ந்துவலங் கொண்டிறைவர் திருமுன் பெய்தித்
தொழுதுதலை மேற்கொண்ட செங்கை போற்றி
வீழ்ந்தெழுவார் கும்பிட்ட பயன்காண் பார்போல்
மெய்வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்.

தெளிவுரை : ஞானசம்பந்தர் தாழ்ந்து எழுந்து அம்மலையை வணங்கிய வண்ணமே பெரிய மலைப்படிகளின் வழியே ஏறிச் சென்று வாழ்வடைந்து தேவர்கூட்டம் நெருங்கியுள்ள மணிகளையுடைய நீண்ட திருவாயிலின் முன் வணங்கிக் கோயிலுள் புகுந்து, அக்கோயிலை வலமாகச் சுற்றி வந்து, இறைவரின் திருமுன்பு சார்ந்து தொழுது தலையின் மேலே கூப்பிய சிவந்த திருக்கைகளுடன் துதித்து நிலம் பொருந்த விழுந்து வணங்கி எழுந்து செல்பவராய், அவ்வாறு கும்பிட்ட தன் பயனைக் காண்பவரைப் போல், மெய்மையான வேடர் பெருமானாம் திருக்கண்ணப்ப நாயனாரைக் கண்டு அவருடைய அடிகளில் வீழ்ந்தார்.

2921. உள்ளத்தில் தெளிகின்ற அன்பின் மெய்ம்மை
யுருவினையும் அவ்வன்பி னுள்ளே மன்னும்
வெள்ளச்செஞ் சடைக்கற்றை நெற்றிச் செங்கண்
விமலரையும் உடன்கண்ட விருப்பும் பொங்கிப்
பள்ளத்தில் இழிபுனல்போல் பரந்து செல்லப்
பைம்பொன்மலை வல்லிபரிந் தளித்த செம்பொன்
வள்ளத்தில் ஞானஆ ரமுத முண்டார்
மகிழ்ந்தெழுந்து பலமுறையும் வணங்கு கின்றார்.

தெளிவுரை : மனத்தில் தெளிவாய்க் கொள்கின்ற அன்பின் மெய்ம்மையான வடிவத்தையும், அந்த அன்பினுள் நிலையாய் வீற்றிருக்கின்ற சிவந்த சடையையும் நெற்றியில் சிவந்த விழியையும் உடைய குற்றமற்ற இறைவரையும் ஒருசேர ஓரிடத்தில் ஒன்றாகக் கண்டதால் ஆன விருப்பமும் மேன் மேல் அதிகரித்து, மேலிடத்தினின்றும் பள்ளத்தில் இழிந்து ஓடும் நீர் போல் விரைவாகச் செல்ல, பசும் பொன் மலை மன்னன் மகளான கொடி போன்ற உமையம்மையார் அருளுடன் அளித்த செம்பொன் கிண்ணத்தில் ஞானமுதை உண்டருளிய ஞானசம்பந்தர் மகிழ்ந்து மேலே பலமுறையும் வணங்குபவராய்.

2922. பங்கயக்கண் ணருவிநீர் பாய நின்று
பரவும்இசைத் திருப்பதிகம் பாடி யாடித்
தங்குபெருங் களிகாதல் தகைந்து தட்பத்
தம்பெருமான் கழல்போற்றுந் தன்மைநீட
அங்கரிதிற் புறம்போந்தங் கயன்மால் போற்ற
அரியார்தந் திருமலைக்கீ ழணைந்தி றைஞ்சிப்
பொங்குதிருத் தொண்டர்மடங் காட்ட அங்குப்
புக்கருளி இனிதமர்ந்தார் புகலி வேந்தர்.

தெளிவுரை : தாமரை போன்ற கண்களினின்றும் கண்ணீர் வழிந்தோட நின்று துதிக்கும் பண் பொருந்திய திருப்பதிகத்தைப் பாடி ஆனந்தக் கூத்தாடி, தம் உள்ளத்துள் தங்கிக் கிடக்கும் பெருங்களிப்பும் காதலும் வலிந்து தம்மை அங்கே தடைப்படுத்தி நிறுத்த, அதனால் தம் பெருமானின் திருவடிகளைப் போற்றி நிற்கும் இயல்பு நீடித்தலால், அங்கிருந்து அரிதாக வெளியே வந்து நான்முகனும் திருமாலும் போற்றுதற்கு அரிய இறைவரின் திருக்காளத்தி மலையின் அடியில் வந்து அணைந்து வணங்கிப் போய்ப் பெருகிய தொண்டர்கள் திருமடத்தைக் காட்டச் சென்று புகுந்த ஞானசம்பந்தர் அங்குத் தங்கியிருந்தார்.

2923. யாவர்களும் அறிவரிய இறைவன் றன்னை
ஏழுலகும் உடையானை யெண்ணி லாத
தேவர்கள்தம் பெருமானைத் திருக்கா ளத்தி
மலையின்மிசை வீற்றிருந்த செய்ய தேனைப்
பூவலரும் பொழில்புடைசூழ் சண்பை யாளும்
புரவலனார் காலங்கள் தோறும் புக்குப்
பாவலர்கொண் டடிபோற்றிப் பருகி யார்ந்து
பண்பினிய திருப்பதியிற் பயிலும் நாளில்.

தெளிவுரை : யாவரும் அறிவதற்கு அரிய இறைவரை, ஏழ் உலகங்களையும் உடையவரை, எண் இல்லாத தேவர்களின் தலைவரை, திருக்காளத்தி மலையின் மீது வீற்றிருக்கும் சிவந்த தேனை, மலர்கள் மலரும் சோலை சூழ்ந்த சீகாழியை ஆளும் வேந்தரான திருஞான சம்பந்தர், உரிய காலங்கள் தோறும் போய்க் கோயிலுள் புகுந்து பதிகம் என்ற மலர் கொண்டு அருச்சனை செய்து துதித்துப் பருகி நிறைவாக அனுபவித்துச் செம்மையான பண்புகளால் இனிய அத் திருப்பதியைப் பொருந்தித் தங்கியிருந்தார் அந்நாளில்,

2924. அங்கண்வட திசைமேலுங் குடக்கின் மேலும்
அருந்தமிழின் வழக்கங்கு நிகழா தாகத்
திங்கள்புனை முடியார்தந் தானந் தோறுஞ்
சென்றுதமிழ் இசைபாடுஞ் செய்கை போல
மங்கையுடன் வானவர்கள் போற்றி சைப்ப
வீற்றிருந்தார் வடகயிலை வணங்கிப் பாடிச்
செங்கமல மலர்வாவித் திருக்கே தாரம்
தொழுதுதிருப் பதிகஇசை திருந்தப் பாடி.

தெளிவுரை : அங்கு, வடக்கிலும் மேற்கிலும் உள்ள நாடுகளில் அரிய தமிழின் வழக்கு நிகழாததால், ஞான சம்பந்தர் பிறைச் சந்திரனைச் சூடிய முடியுடைய இறைவரின் மற்றப் பதிகள் தோறும் போய்ப் போய்த் திருப்பதிக தமிழ் இசைபாடும் செயல் போல், தேவர்கள் தொழுது துதிக்கும்படி எழுந்தருளும் சிவபெருமானின் வடகயிலை மலையை இங்கு இருந்தபடியே வணங்கித் திருப்பதிகம் பாடிச், செந்தாமரை மலர்கள் மலர்வதற்கு இடமான நீர்நிலைகளைக் கொண்ட திருக்கோதாரத்தையும் வணங்கித் திருப்பதிகம் இசையுடன் பாடினார்.

2925. கூற்றுதைத்தார் மகிழ்ந்தகோ கரணம் பாடிக்
குலவுதிருப் பருப்பதத்தின் கொள்கை பாடி
ஏற்றிமிசை வருவார்இந் திரன்றன் நீல
பருப்பதமும் பாடிமகிழ்ந்து இறைவர் தானம்
போற்றியசொன் மலர்மாலை பிறவும் பாடிப்
புகலியர்தம் பெருந்தகையார் புனித மாகும்
நீற்றின்அணி கோலத்துத் தொண்டர் சூழ
நெடிதுமகிழ்ந் தப்பதியில் நிலவு கின்றார்.

தெளிவுரை : இயமனைக் கல்லால் உதைத்த இறைவர் மகிழ்ந்த கோகரணத்தைப் பாடி, காளையின் மீது எழுந்தருளிவரும் இறைவரின் இந்திர நீலப் பருப்பதத்தையும் பாடி, மற்றும் போற்றிய திருப்பதிகள் பிறவற்றையும் பாடிச், சீகாழிப் பதியினரின் தலைவரான ஞானசம்பந்தர், தூய திருநீற்றின் விளக்கம் மிகு கோலமுடைய தொண்டர்கள் சூழ்ந்து வர, மிகவும் மகிழ்ந்து அந்தப் பதியில் தங்கியிருப்பவராய்,

2926. தென்திசையில் கயிலையெனும்திருக்காளத்தி
போற்றிஇனி தமர்கின்றார் திரைசூழ் வேலை
ஒன்றுதிரு வொற்றியூர் உறைவார் தம்மை
இறைஞ்சுவது திருவுள்ளத் துன்னி அங்கண்
இன்தமிழின் விரகரருள் பெற்று மீள்வார்
எந்தையா ரிணையடியென் மனத்த வென்று
பொன்தரளங் கொழித்திழி பொன் முகலிகூடப்
புனைந்ததிருப் பதிகஇசை போற்றிப் போந்தார்.

தெளிவுரை : தெற்குத் திக்கில் உள்ள திருக்கையிலை எனக் கூறப்படுகின்ற திருக்காளத்தியைப் போற்றித் துதித்து இனிதாக அங்குத் தங்கியிருப்பவராய், அலை சூழ்ந்த கடலின் கரை சார்ந்த திருவொற்றியூரிலே வீற்றிருக்கும் இறைவரை சென்று வணங்கும் இயல்பை மனத்தில் கொண்டு அங்கிருந்து இனிய தமிழ் விரகரான ஞானசம்பந்தர் இறைவரின் திருவருள் விடைபெற்று மீண்டு செல்பவராய் எந்தையார் இணையடி என் மனத்துள்ளவே என்ற கருத்துடன் பொன்னும் முத்தும் கொழித்து ஆடிவரும் பொன்முகலியாற்றையும் திருப்பதிக இசையால் போற்றிச் செல்லலானார்.

2927. மன்னுபுகழ்த் திருத்தொண்டர் குழாத்தி னோடும்
மறைவாழ வந்தவர்தாம் மலையுங் கானும்
முன்னணைந்த பதிபிறவும் கடந்து போந்து
முதல்வனார் உறைபதிகள் பலவும் போற்றிப்
பன்மணிகள் பொன்வரன்றி அகிலுஞ் சாந்தும்
பொருதலைக்கும் பாலிவட கரையில் நீடு
சென்னிமதி யணிவார்தந் திருவேற் காடு
சென்றணைந்தார் திருஞான முண்ட செல்வர்.

தெளிவுரை : நிலை பெற்ற புகழையுடைய தொண்டர் கூட்டத்துடன் வேதங்கள் வாழும் படியாய்த் தோன்றிய ஞானசம்பந்தர் மலையும் காடும் முன்னால் சேர்ந்த பதிகள் பலவற்றையும் கடந்து வந்து, முழுமுதல்வராகிய சிவபெருமான் வீற்றிருக்கும் தலங்கள் பலவற்றையும் துதித்துச் சென்று, பலமணிகளையும் பொன்னையும் இழுத்துக் கொண்டு, அகில் சந்தனம் முதலான மரங்களை மோதி அலைத்துக் கொண்டு ஓடும் பாலியாற்றின் வடக்குக் கரையில் நிலை பெற்ற, தலையில் பிறைச் சந்திரனைச் சூடிய இறைவரின் திருவேற்காட்டினைச் சிவஞான அமுது உண்ட செல்வரான பிள்ளையார் போயடைந்தார்.

2928. திருவேற்கா டமர்ந்தசெழுஞ் சுடர்பொற் கோயில்
சென்றணைந்து பணிந்துதிருப் பதிகம்பாடி
வருவேற்று மனத்தவுணர் புரங்கள் செற்றார்
வலிதாயம் வந்தெய் திவணங்கிப் போற்றி
உருவேற்றார் அமர்ந்துறையும் ஓத வேலை
ஒற்றியூர் கைதொழச்சென் றுற்றபோது
பொருவேட்கை தருவாழ்வு பெற்ற தொண்டர்
பெரும்பதியோர் எதிர்கொள்ளப் பேணி வந்தார்.

தெளிவுரை : ஞானசம்பந்தர் திருவேற்காட்டில் விரும்பி வீற்றிருக்கும் செழுஞ்சுடரான இறைவரின் அழகான கோயிலில் போய்ச் சேர்ந்து வணங்கித் திருப்பதிகம் பாடினார். எதிர்த்து வரும் வேறுபட்ட உள்ளமுடைய பகைவரான அவுணரின் திரிபுரங்களை எரித்த இறைவரின் திருவலிதாயத்தில் வந்து துதித்து, வடிவுடைய காளையை யுடைய இறைவர் விரும்பி வீற்றிருக்கும் குளிர்ந்த கடற்கரையில் உள்ள திருவொற்றியூரை வணங்குவதற்குச் சென்ற போது, மிக்கபெரிய விருப்பம் தரும் வாழ்வு பெற்ற தொண்டர்களும் அந்தப் பதியில் உள்ளவர்களும் அவரை எதிர்கொண்டு வரவேற்க அன்புடன் வந்தனர்.

2929. மிக்கதிருத் தொண்டர்தொழு தணையத் தாமும்
தொழுதிழிந்து விடையவனென் றெடுத்துப் பாடி
மைக்குலவு கண்டத்தார் மகிழுங் கோயில்
மன்னுதிருக் கோபுரத்து வந்து தாழ்ந்து
தக்கதிருக் கடைக்காப்புச் சாற்றித் தேவர்
தம்பெருமான் திருவாயி லூடு சென்று
புக்கருளி வலங்கொண்டு புனிதர் முன்பு
போற்றெடுத்துப் படியின்மேற் பொருந்த வீழ்ந்தார்.

தெளிவுரை : மிகுந்த திருத்தொண்டர் தொழுத வண்ணம் வந்து சேரப் பிள்ளையார் தாமும் அவர்களை வணங்கிய வண்ணம் முத்துச் சிவிகையினின்று இழிந்து விடையவன் என்ற தொடக்கத்துடன் கூடிய பதிகத்தை எடுத்துப்பாடி, கருமை பொருந்திய திருக்கண்டத்தையுடைய சிவபெருமான் வீற்றிருக்கும் கோயில் நிலை பெற்றுள்ள கோபுரத்தில் வந்து நிலத்தில் விழுந்து வணங்கித் தகுந்த திருக்கடைக் காப்பினையும்பாடி, இறைவரின் கோயில் வாயிலின் வழியே போய் உள்ளே புகுந்து வலமாகச் சுற்றி வந்து தூயவரான இறைவர் திருமுன்பு துதித்து நிலம் பொருந்த வீழ்ந்து வணங்கினார்.

2930. பொற்றிரள்கள் போற்புரிந்த சடையார் தம்பால்
பொங்கியெழுங் காதல்மிகப் பொழிந்து விம்மிப்
பற்றியெழும் மயிர்ப்புளகம் எங்கு மாகிப்
பரந்திழியுங் கண்ணருவி பாய நின்று
சொல்திகழுந் திருப்பதிகம் பாடி ஏத்தித்
தொழுதுபுறத் தணைந்தருளித் தொண்ட ரொடும்
ஒற்றிநகர் காதலித்தங் கினிது றைந்தார்
உலகுய்ய வுலவாத ஞானம் உண்டார்.

தெளிவுரை : பொன்னின் திரட்சிகள் போன்ற முறுக்கிய சடையையுடைய இறைவர்பால் பெருகி எழுகின்ற பெரு விருப்பம் மிகவும் மேலோங்கி விம்மி, திருமேனியைப் பற்றி மேல் எழுகின்ற மயிர்ப் புளகம் மேனி எங்கும் நிரம்பப், பரவி வழியும் கண்ணீர்ப் பெருக்குப் பாய்ந் தொழுக நின்று, சொற் பொருள் மிகவும் விளங்கும் திருப்பதிகத்தைப் பாடி, உலகம் உய்யும் பொருட்டுக் கெடுதல் இல்லாத சிவஞான அமுதுண்ட சம்பந்தர் திருவொற்றியூரை விரும்பி அங்குத் தங்கியிருந்தார்.

2931. இன்ன தன்மையிற் பிள்ளையார் இருந்தனர் இப்பால்
பன்னு தொல்புகழ்த் திருமயி லாபுரிப் பதியில்
மன்னு சீர்ப்பெரு வணிகர்தந் தோன்றலார் திறத்து
முன்னம் எய்திய தொன்றினை நிகழ்ந்தவா மொழிவாம்.

தெளிவுரை : இங்ஙனம் ஞானசம்பந்தர் எழுந்தருளியிருந்தார். இங்குப் புகழ்ந்து பேசப்படுகின்ற திருமயிலாப்பூர்ப் பதியில் நிலை பெற்ற புகழையுடைய பெரு வணிகர் குடியில் வந்த பெருமையுடையவரின் முன்னே பொருந்திய வரலாற்றை இனிப் புகல்வோம்.

2932. அருநி தித்திறம் பெருக்குதற் கருங்கலம் பலவும்
பொருக டற்செலப் போக்கியப் பொருட்குவை நிரம்ப
வரும ரக்கல மனைப்படப் பணைக்கரை நிரைக்கும்
இருநி திப்பெருஞ் செல்வத்தின் எல்லையில் வளத்தார்.

தெளிவுரை : அரிய செல்வ வகைகளைப் பெருக்கச் செய்வதற்காக அரிய மரக்கலங்கள் பலவற்றையும் அலை மோதும் கடல் மீது சென்று நிகழுமாறு வாணிகத் துறையில் செலுத்தி அவ்வாணிகத்தால் திரட்டிய செல்வக் குவியல்கள் நிரம்பத் தம் இல்லத்தில் சேரும்படி கொணர்ந்து, மரக்கலங்களில் குவியல் வரிசை பெறக் குவிக்கும் பெருநிதி முதலான பெருஞ் செல்வங்களின் எல்லையில்லாத வளங்களையுடையவராய்,

2933. தம்மை யுள்ளவா றறிந்தபின் சங்கரற் கடிமை
மெய்ம்மை யேசெயும் விருப்புடன் மிக்கதோ ரன்பால்
பொய்மை நீக்கியமெய்ப் பொருளிது எனக்கொளு முள்ளச்
செம்மை யேபுரி மனத்தினார் சிவநேசர் என்பார்.

தெளிவுரை : தம்மை உள்ளவாறு அறிந்து கொண்டமையால், அதன்பின் சங்கரரான இறைவரிடத்தில் அடிமைத் திறத்தை மெய்ந் நெறி பிறழாது செய்யும் விருப்பத்துடன் கூடிய அன்பினால், பொய்யைக் கடிந்து மெய்ப் பொருள் இதுவே எனத் தெளிந்து கொண்ட உள்ளத்தில் செம்மை நெறியையே இடைவிடாது எண்ணி ஒழுகும் உள்ளம் உடையவர் சிவநேசர் என்று அழைக்கப்படுவர்.

2934. கற்றை வார்சடை முடியினார் அடியவர் கலப்பில்
உற்ற செய்கையில் ஒழிவின்றி உருகிய மனமும்
பற்றி லாநெறிப் பரசம யங்களைப் பாற்றுஞ்
செற்ற மேவிய சீலமும் உடையராய்த் திகழ்வார்.

தெளிவுரை : கற்றையான நீண்ட சடையையுடைய முடியையுடைய இறைவரின் அடியார்களுடன் கூடிய கூட்டத்துடன் பொருந்திய செய்கையில் இடைவிடாது உருகிய உள்ளத்தையும், இறைவனிடத்தில் அன்பு இல்லாத நெறிகளையுடைய பரசமயங்களை நீக்கும் சினம் பொருந்திய நல்லொழுக்கத்தையும் உடையவராய் விளங்குவார்.

2935. ஆன நாள்செல அருமறைக் கவுணியர் பெருமான்
ஞான போனகம் நுகர்ந்ததும் நானிலம் உய்ய
ஏனை வெஞ்சமண் சாக்கியம் இழித்தழித் ததுவும்
ஊன மில்புகழ் அடியர்பால் கேட்டுவந் துளராய்.

தெளிவுரை : அவ்வாறான நாட்கள் பல செல்ல, அரிய வேதியரான கவுணியர் குலத்தில் தோன்றிய தலைவர் ஞான சம்பந்தப் பெருமான் சிவஞானம் உண்டதையும், உலகம் உய்யும் பொருட்டாகப் பிற சமயங்களான கொடிய சமணம் பௌத்தம் என்ற சமயங்களின் கீழ் நிலையை விளக்கி இழித்து எடுத்துக் காட்டும் வகையில் அவை அடைந்திருந்த தலைமை ஒழித்ததையும், குற்றம் இல்லாத அடியார்கள் வந்து சொல்லக் கேட்டு மகிழ்ந்தவராய்.

2936. செல்வ மல்கிய சிரபுரத் தலைவர்சே வடிக்கீழ்
எல்லை யில்லதோர் காதலின் இடையறா வுணர்வால்
அல்லும் நண்பக லும்புரிந் தவர்அருட் டிறமே
சொல்ல வுஞ்செயல் கேட்கவும் தொழிலின ரானார்.

தெளிவுரை : அருட்செல்வம் நிறைந்த சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரின் திருவடிகளில் விழுந்து அளவில்லாத ஒப்பற்ற பெருவிருப்புடன் இடையறாத அன்பு பூண்ட உணர்ச்சியால் இரவும் பகலும் இடைவிடாமல் எண்ணிக் கொண்டு அவரது அருளின் தன்மையையே தாம் வாக்கினால் புகழ்ந்து பாராட்டுதலும் அருட் செயல்களை அன்பர்களிடமே கேட்டலுமாகிய இவையே தம் வாழ்க்கைக்குரிய செயல்களாக மேற் கொண்டவர் ஆனார்.

2937. நிகழும் மாங்கவர் நிதிப்பெருங் கிழவனின் மேலாய்த்
திகழும் நீடிய திருவினிற் சிறந்துள ராகிப்
புகழும் மேன்மையில் உலகினில் பொலிந்துளா ரெனினும்
மகவி லாமையின்ம கிழ்மனை வாழ்க்கையின் மருண்டு.

தெளிவுரை : அவ்வாறு வாழ்கின்ற அந்தச் சிவநேசர் பெரிய நிதிக்குத் தலைவனான குபேரனைவிட மேம்பட்டு விளங்கும் நீடிய செல்வத்தால் சிறந்தவராகி, புகழ் பொருந்திய மேன்மையோடும் உலகத்தில் விளங்கியிருந்தார் என்றாலும், மகிழ்வுடைய இவ்வாழ்க்கைத் திறத்தால் மக்கட்பேறு பெறாமையால் மருண்டு மயங்கி,

2938. அரிய நீர்மையில் அருந்தவம் புரிந்தரன் அடியார்க்கு
உரிய அர்ச்சனை யுலப்பில செய்தஅந் நலத்தால்
கரிய வாங்குழன் மனைவியார் வயிறெனுங் கமலத்
துரிய பூமக ளெனவொரு பெண்கொடி யுதித்தாள்.

தெளிவுரை : அரிய தன்மையுடன் அருந்தவம் செய்த சிவனடியார்களுக்குரிய அளவற்ற அருச்சனைகளைச் செய்து வந்த அந்த நன்மை காரணத்தால், அவரது கரிய சிறந்த கூந்தலையுடைய மனைவியாரின் வயிறு என்னும் தாமரையிடத்தில் உரிமை பொருந்திய பூமகள் போன்ற பெண் ஒருத்தி பிறந்தாள்.

2939. நல்ல நாள்பெற ஓரையில் நலம்மிக வுதிப்பப்
பல்பெ ருங்கிளை யுடன்பெரு வணிகர்பார் முழுதும்
எல்லை யில்தன முகந்துகொண் டியாவரும் உவப்ப
மல்ல லாவண மறுகிடைப் பொழிந்துளம் மகிழ்ந்தார்.

தெளிவுரை : நல்ல நாள் பெறவும் அந்த நாளில் நல்ல ஓரை பெறவும் அவ்வாறு அக்குழந்தை பிறக்க, பல பெரிய சுற்றத்துடன் பெரு வணிகரான சிவநேசர் அளவற்ற செல்வங்களை முகந்து எடுத்து, எல்லாரும் மகிழச் செழிப்புடைய கடை வீதியில் பொழிந்து உள்ளம் மகிழ்ந்தார்.

2940. ஆறு சூடிய முடியினார் அடியவர்க் கன்பால்
ஈறி லாதபூ சனைகள்யா வையுமிகச் செய்து
மாறி லாமறை யவர்க்குவேண் டினவெலாம் அளித்துப்
பேறு மற்றிதுவே எனும்படி பெருங்களி சிறந்தார்.

தெளிவுரை : கங்கையைச் சூடிய சடையுடைய சிவபெருமானது அடியார்களுக்கு அன்பு மிகுதியினால் எல்லையற்ற பூசைகள் எல்லாவற்றையும் மிகவும் செய்தும், ஒப்பில்லாத வேதியர்களுக்கு அவர்கள் வேண்டியவற்றை எல்லாம் தந்தும், இதுவே பெரும்பேறாகும் என்று சொல்லும்படி உள்ளம் மகிழ்ந்தார்.

2941. சூத நல்வினை மங்கலத் தொழில்முறை தொடங்கி
வேத நீதியின் விதியுளி வழாவகை விரித்த
சாத கத்தொடு சடங்குகள் தசதினம் செல்லக்
காதல் மேவிய சிறப்பினில் கடிவிழா அயர்ந்தார்.

தெளிவுரை : குழந்தை பெற்றவுடன் செய்யப்படுகின்ற நல்ல சடங்குகளை முறைப்படி செய்யத் தொடங்கி, வைதீக நியமப்படி தவறாது விரித்துக் கூறிய சாதகன்மம் முதலாக வரும் சடங்குகள், குழந்தை பிறந்தபின் பத்து நாட்களிலும் செய்ய, பெருவிருப்பம் பொருந்திய சிறப்பால் மங்கல விழாவைச் செய்தனர்.

2942. யாவ ரும்பெரு மகிழ்ச்சியால் இன்புறப் பயந்த
பாவை நல்லுறுப் பணிகிளர் பண்பெலாம் நோக்கிப்
பூவி னாள்என வருதலின் பூம்பாவை யென்றே
மேவு நாமமும் விளம்பினர் புவியின்மேல் விளங்க.

தெளிவுரை : எல்லாரும் பெருமகிழ்ச்சியால் இன்பத்தை அடையப் பெற்றெடுத்த பாவை போன்ற பெண்ணின் அழகு விளங்கும் பண்புகளை எல்லாம் பார்த்து, அவை பூமகளின் பண்புபோல் வருதலால் அப்பெண்ணுக்குப் பூம்பாவை என்றே பொருந்தும் பெயரை உலகத்தில் மேலாய் விளங்குமாறு கூறி இட்டனர்.

2943. திங்கள் தோறுமுன் செய்யும்அத் திருவளர் சிறப்பின்
மங்க லம்புரி நல்வினை மாட்சியிற் பெருக
அங்கண் மாநகர் அமைத்திட ஆண்டெதி ரணைந்து
தங்கு பேரொளிச் சீறடி தளர்நடை பயில.

தெளிவுரை : மாதந்தோறும் முன் செய்யப்படும் அந்தச் செல்வம் வளரும் மங்கலங்களான சடங்குகளும் மற்ற நல்வினைகளும் மாண்பு பொருந்தப் பெருகுமாறு அங்குப் பெரிய நகரத்தினர் அமைத்திட, ஓராண்டு நிறைந்து தங்கும் பேரொளியுடைய சிற்றடிகள் தளர்நடை பழக.

2944. தளரும் மின்னின்அங் குரமெனத் தமனியக் கொடியின்
வளரி ளந்தளிர்க் கிளையென மணிகிள ரொளியின்
அளவி லஞ்சுடர்க் கொழுந்தென அணைவுறும் பருவத்
திளவ னப்பிணை யனையவர்க் ஏழுயாண் டெய்த.

தெளிவுரை : துவளும் மின்னல் முளை போன்றும், பொன்னால் ஆனதோர் கொடியினது வளர்கின்ற இளந் தளிர் இலை போன்றும், இரத்தின மணிகளினின்றும் கிளர்கின்ற ஒளியின் அளவுப்படாத அழகிய சுடர்க் கொழுந்து போன்றும் சார்கின்ற பருவங்களில், இளஅன்னம் போன்ற அவருக்கு ஏழு ஆண்டுகளின் பருவம் எய்த,

2945. அழகின் முன்னிளம் பதமென அணிவிளக் கென்ன
விழவு கொண்டெழும் பேதைய ருடன்விளை யாட்டில்
கழலொடு அம்மனை கந்துகம் என்றுமற் றினைய
மழலை மென்கிளிக் குலமென மனையிடை ஆடி.

தெளிவுரை : அழகு என்று சொல்லப்படுகின்ற பொருளின் முதலில் பெறப்படும் இளம்பதம் எனவும் அழகு விளக்கு எனவும் சொல்லுமாறு வளர்ந்து, விழாக்கொண்டு கூடி, எழும் சிறுமியருடன் சேர்ந்து விளையாடல்பழகுவதில் கழல், அம்மானை பந்து என இத்தகையவற்றை, மழலை ததும்பும் மென்மையான கிளிக் கூட்டங்கள் போல் பாடி ஓடி இல்லத்தினுள் ஆடி,

2946. பொற்றொ டிச்சிறு மகளிர் ஆயத்தொடும் புணர்ந்து
சிற்றில் முற்றவும் இழைத்துட னடுந்தொழிற் சிறுசோ
றுற்ற உண்டிகள் பயின்றொளி மணியூசல் ஆடி
மற்றும்இன்புறு வண்டலாட் டயர்வுடன் வளர.

தெளிவுரை : பொன்னால் ஆன வளையலை அணிந்த சிறு பெண்களின் கூட்டத்துடன் கூடிச் சிற்றில்களை முற்றக் கட்டியும் அதனுடன் சமைக்கும் தொழிலில் சிறு சோற்றுடன் பொருந்திய உணவுகள் அமைத்தும் உண்ணுதலுமான செயல்களைச் செய்தும் ஒளியுடைய மணிகள் கட்டிய ஊசல் ஆடியும், இன்னும் இங்ஙனம் இன்பம் பொருந்தும் வண்டல் பயிலும் ஆடல்களை ஆடியும் வளர,

2947. தந்தை யாரும்அத் தளிரிளம் கொம்பனாள் தகைமை
இந்த வையகத் தின்மையால் இன்புறு களிப்பு
வந்த சிந்தையின் மகிழ்ந்துமற் றிவள்மணம் பெறுவான்
அந்த மில்லென தருநிதிக் குரியனென்று அறைந்தார்.

தெளிவுரை : தந்தையான சிவநேசர் அந்தத் தளிர்த்த இளங்கொம்பைப் போன்ற பெண்ணுக்கு ஒத்த பண்பு இந்தவுலகத்தில் வேறு எவருக்கும் இல்லாததால், இன்பத்துடன் கூடிய களிப்புப் பொங்கிய உள்ளத்தில் மகிழ்ச்சியடைந்து, பேறாகிய இவளை மணம் செய்துகொள்ளும் மணமகனே எனது முடிவற்ற அரிய செல்வங்களுக்கெல்லாம் உரிமை உடையவன் ஆவான் என்று சொன்னார்.

2948. ஆய நாள்களில் அமண்பயில் பாண்டிநா டதனைத்
தூய ஞானமுண் டருளிய தோன்றலார் அணைந்து
மாய வல்லமண் கையரை வாதில்வென் றதுவும்
மேய வெப்பிடர் மீனவன் மேலொழித் ததுவும்.

தெளிவுரை : அத்தகைய நாளில் சமணர்கள் மிக்கிருந்த பாண்டிய நாட்டைத் தூய ஞான அமுது உண்ட ஞானசம்பந்தர் சென்று வஞ்சனையில் வல்ல சமணர்களான கீழ்மக்களை வாதில் வென்றதும் பாண்டியனுக்கு வந்த வெப்பு நோயின் துன்பத்தை நீக்கியதும்,

2949. நெருப்பில் அஞ்சினார் தங்களை நீரில் ஒட்டியபின்
மருப்பு நீள்கழுக் கோலின்மற் றவர்கள் ஏறியதும்
விருப்பி னால்திரு நீறுமீ னவற்களித் தருளிப்
பொருப்பு வில்லியார் சாதனம் போற்றுவித் ததுவும்.

தெளிவுரை : அனல் வாதத்தில் தோற்று அஞ்சிய சமணர்களைப் புனல் வாதத்தால் வென்ற பின்பு கூர்மையான கொம்பைப் போன்ற நீண்ட கழுமரங்களில் அந்தச் சமணர்கள் ஏறியதும் விருப்பத்துடன் பாடிய மன்னனுக்குத் திருநீற்றை அளித்து அதன் மூலம் மலையாகிய வில்லையுடைய சிவபெருமானின் திருநீற்றுச் சாதனத்தைப் பேணியதும்,

2950. இன்ன வாறெலாம் அறிந்துளார் எய்தியங் கிசைப்பச்
சொன்ன வர்க்கெலாம் இருநிதி தூசுடன் அளித்து
மன்னு பூந்தராய் வள்ளலார் தமைத்திசை நோக்கிச்
சென்னி மேற்கரங் குவித்துவீழ்ந் தெழுந்துசெந் நின்று.

தெளிவுரை : (ஆகிய) இத்தகையவற்றை எல்லாம் அறிந்தவர் அங்குச் சேர்ந்து சொல்ல, வந்து சொன்னவர்க்கெல்லாம் பெருநிதியங்களை ஆடைகளுடன் அளித்து நிலை பெற்ற சீகாழிப் பதி வள்ளலாரான ஞானசம்பந்தரை, அவர் இருந்த திசையை நோக்கித் தலைமீது கை குவித்துக் கூப்பிக்கொண்டு நிலமுற விழுந்து வணங்கி எழுந்து நேர் நின்று.

2951. சுற்றம் நீடிய கிளையெலாம் சூழ்ந்துடன் கேட்பக்
கற்ற மாந்தர்வாழ் காழிநா டுடையவர்க் கடியேன்
பெற்றெ டுத்தபூம் பாவையும் பிறங்கிய நிதியும்
முற்றும் என்னையும் கொடுத்தனன் யானென்று மொழிந்தார்.

தெளிவுரை : சுற்றத்தவரும் நீண்ட கிளைஞர்களும் கேட்குமாறு, உரத்த குரலில் கற்றவர்களாகிய மக்கள் வாழ்கின்ற சீகாழிப் பிள்ளையாருக்கு அடியேன் பெற்ற பூம்பாவையாரையும் விளக்கமான என் பெருஞ்செல்வத்தையும், முற்றவும் அடிமையாக என்னையும் யான் தந்தேன் ! என வுரைத்தார்.

2952. எல்லை யில்பெருங் களிப்பினால் இப்பரி சியம்பி
முல்லை வெண்ணகை முகிழ்முலை யாருடன் முடியா
மல்கு செல்வத்தின் வளமையும் மறைவளர் புகலிச்
செல்வ ரேயுடை யாரெனும் சிந்தையால் மகிழ்ந்தார்.

தெளிவுரை : அளவு இல்லாத பெருங்களிப்பினால் இவ்வாறு சிவநேசர் சொல்லி, முல்லையரும்பைப் போன்ற கூர்மையான வெண்மையான பல் வரிசையையும் முகிழ்க்கும் கொங்கையையும் உடைய மகளுடன் எல்லையில்லாமல் நிரம்பிய செல்வ வளங்களையும் மறையவரின் சீகாழிப் பதியில் அவதரித்த செல்வரான ஞானசம்பந்தரே உடையவர் என்று துணிவு கொண்ட உள்ளத்தில் மகிழ்வும் அடைந்தார்.

2953. ஆற்று நாள்களில் அணங்கனார் கன்னிமா டத்தின்
பால்த டம்பொழில் மருங்கினிற் பனிமலர் கொய்வான்
போற்று வார்குழற் சேடிய ருடன்புறம் போந்து
கோற்றொடித் தளிர்க் கையினால் முகைமலர் கொய்ய.

தெளிவுரை : இங்ஙனம் சிவநேசர் செயல் ஆற்றி வரும் நாளில் தெய்வப்பெண் போன்ற பூம்பாவையார் கன்னி மாடத்தில் பால் போன்ற தூயநீர் நிறைந்த பொய்கை அருகில் குளிர்ந்த பூவைக் கொய்வதற்காகத் தம்மைப் போற்றும் நீண்ட கூந்தலையுடைய தோழியருடனே வெளியே போய்த் திரண்ட வளையலை அந்த தளிர் போன்ற கைகளால் முகைக்கும் பருவத்து மலர்களைக் கொய்ய,

2954. அன்பர் இன்புறும் ஆர்வத்தின் அளித்தபாங் கல்லால்
பொன்பி றங்குநீர்ப் புகலிகா வலர்க்கிது புணரா
தென்ப துட்கொண்ட பான்மைஓர் எயிற்றிளம் பணியாய்
முன்ப ணைந்தது போலவோர் முள்ளெயிற்று அரவம்.

தெளிவுரை : அன்பரான சிவநேசர் இன்பம் பொருந்துகின்ற விருப்பத்தால் அளித்த அளவு மட்டுமேயன்றி, பொன் கொழிக்கும் நீரையுடைய சீகாழி ஞானசம்பந்தருக்கு இது சேர்வுறாது என்பதை மனத்துள் கொண்டுள்ள ஊழானது, நச்சுப் பற்களையுடைய ஒரு பாம்பாகி முன் வந்ததைப் போல முள் போன்ற பற்களையுடைய ஓர் பாம்பு,

2955. மௌவல் மாதவிப் பந்தரில் மறைந்துவந் தெய்திச்
செவ்வி நாண்முகை கவர்பொழு தினில்மலர்ச் செங்கை
நவ்வி வாள்விழி நறுநுதற் செறிநெறி கூந்தல்
கொவ்வை வாயவள் முகிழ்விரல் கவர்ந்தது குறித்து.

தெளிவுரை : மல்லிகை முல்லைக் கொடிகள் படர்ந்த பந்தலில் மறைந்து வந்து சேர்ந்து, பூம்பாவையார், பருவத்துப் புதிய அரும்புகளைப் பறிக்கின்றபோது, மான் போன்ற கூர்மையான கண்களையும் நல்ல நெற்றியையும் செறிவும் நெறிவும் உடைய கூந்தலையும், கோவைக் கனி போன்ற வாயையும் உடைய பூம்பாவையரின் மலர் போன்ற கையில் பூக் கொய்யக் கூப்பிய விரலைக் குறித்துக் கடித்தது,

2956. நாலு தந்தமும் என்புறக் கவர்ந்துநஞ் சுகுத்து
மேலெ ழும்பணம் விரித்துநின் றாடிவே றடங்க
நீல வல்விடந் தொடர்ந்தெழ நேரிழை மென்பூ
மாலை தீயிடைப் பட்டது போன்றுள மயங்கி.

தெளிவுரை : நச்சுப் பற்கள் நான்கும் எலும்பளவும் அழுந்தக் கடித்து நஞ்சைச் செலுத்திப்படத்தை விரித்து நின்று ஆடிய அப்பாம்பு வேறு இடத்தில் மறைந்துவிட்டது. அவ்வாறாகவே கரிய கொடிய நஞ்சு அதனைத் தொடர்ந்து மேலே எழுந்ததால், மென்மையான பூமாலையில் தீப்பட்டதைப் போல் நல்ல அணிகளை அணிந்த பூம்பாவையார் உள்ளம் மயங்கி,

2957. தரையில் வீழ்தரச் சேடியர் வெருக்கொண்டு தாங்கி
வரைசெய் மாடத்தின் உட்கொடு புகுந்திட வணிகர்
உரையும் உள்ளமும் நிலையழிந் துறுதுயர் பெருகக்
கரையில் சுற்றமுந் தாமும்முன் கலங்கினார் கலுழ்ந்தார்.

தெளிவுரை : நிலத்தில் விழ, தோழியர் திடுக்கிட்டு அஞ்சித் தாங்கிச் சென்று அவருக்கென்று அமைக்கப்பட்ட கன்னி மாடத்தில் கொண்டு புகுந்தனர். அதனால் சிவநேசர் சொல்லும் மனமும் நிலையழிந்து துன்பம் மேலிட, அளவற்ற சுற்றத்தாரும் தாமும் முன் கலங்கி அழுதனர்.

2958. விடந்தொலைத்திடும் விஞ்சையில் பெரியராம் மேலோர்
அடர்ந்த தீவிடம் அகற்றுதற் அணைந்துளார் அனேகர்
திடங்கொள் மந்திரந் தியானபா வகநிலை முட்டி
தொடர்ந்த செய்வினைத் தொழிலராய்த் தனித்தனிச் சூழ்வார்.

தெளிவுரை : நஞ்சைத் தீர்த்திடும் கலையில் கைவந்த பெரியோரான மேலோர் பலர் கொடிய நஞ்சைப் போக்குதற்குச் சேர்ந்தவர்களாய், வன்மையுடைய மந்திரமும் தியானமும் பாவனையும் முட்டி நிலையுமாய்த் தொடர்ந்த தீர்வுச் செயல்களைத் தனிதனிச் செய்யச் சூழ்ந்து.

2959. மருந்தும் எண்ணில மாறில செய்யவும் வலிந்து
பொருந்து வல்விடம் ஏழுவே கமும்முறை பொங்கிப்
பெருந்த டங்கண் மென் கொடியனாள் தலைமிசைப் பிறங்கித்
திருந்து செய்வினை யாவையுங் கடந்துதீர்ந் திலதால்.

தெளிவுரை : மேற் கூறப்பட்ட நான்குடன் அளவில்லாத இணையற்ற மருந்துகளைச் செய்யவும், வன்மையாய்ப் பற்றிக் கொண்டு கொடிய நஞ்சு ஏழு வேகமும் முறையாய் மேல் ஏறி, அகன்ற கண்களையுடைய மென்மையான கொடி போன்ற பூம்பாவையரின் தலையை மேற்கொண்டு விளங்கத் திருந்துமாறு செய்த தீர்வினைகள் எல்லாவற்றையும் கடந்து தீராமல் போகவே,

2960. ஆவி தங்குபல் குறிகளும் அடைவில வாக
மேவு காருட விஞ்சைவித் தகர்இது விதியென்
றோவும் வேளையில் உறுபெரும் சுற்றமும் அலறிப்
பாவை மேல்விழுந் தழுதனர் படரொலிக் கடல்போல்.

தெளிவுரை : உயிர் உடம்பில் தங்குவதற்குரிய பல குறிகளும் பொருந்தாது போக, வந்து சேர்ந்த காருடக் கலையில் வல்லவரும் இது விதி என்று கைவிடும் வேளையில் பொருந்திய பல சுற்றத்தார்களும், கடலைப் போல் அலறிப் பாவைமீது விழுந்து அழுதனர்.

2961. சிந்தை வெந்துயர் உறுசிவ நேசருந் தெளிந்து
வந்த செய்வினை இன்மையில் வையகத் துள்ளோர்
இந்த வெவ்விடம் ஒழிப்பவர்க்கு ஈகுவன்என் னுடைய
அந்த மில்நிதிக் குவையெனப் பறையறை வித்தார்.

தெளிவுரை : உள்ளத்தில் கொடிய துன்பம் அடைந்த சிவநேசரும், பின்பு தெளிந்து, செய்யக்கூடிய தீர்செயல்கள் ஏதும் இல்லாததால், உலகத்தில் உள்ளவர்களில் யாவராயினும் இந்தக் கொடிய நஞ்சை ஒழித்தால் அவருக்கு இங்குள்ள எல்லை இல்லாத செல்வத் திரள் எல்லாவற்றையும் அளிப்பேன் என்று எங்கும் யாரும் அறியுமாறு பறை சாற்றினார்.

2962. முரசி யம்பிய மூன்றுநாள் அகவயின் முற்ற
அரசர் பாங்குளோர் உட்பட அவனிமே லுள்ள
கரையில் கல்வியோர் யாவரும் அணைந்துதங் காட்சிப்
புரையில் செய்கையில் தீர்ந்திடா தொழிந்திடப் போனார்.

தெளிவுரை : இங்ஙனம் பறை சாற்றிய பின்னர் மூன்று நாள் எல்லையில், அரச அவையில் உள்ளவர் உட்பட உலகத்தில் உள்ள எல்லை இல்லாத கல்வியுடையவர் யாவரும் வந்து சேர்ந்து தாம் தாம் உறுதியாய்க் கண்ட குற்றமற்ற தீர் தொழில்கள் எவற்றாலும் தீராது ஒழியாமற் போக நீங்கிச் சென்றனர்.

2963. சீரின் மன்னிய சிவநேசர் கண்டுளம் மயங்கிக்
காரின் மல்கிய சோலைசூழ் கழுமலத் தலைவர்
சாரும் அவ்வள வும்முடல் தழலிடை யடக்கிச்
சேர என்பொடு சாம்பல்சே மிப்பது தெளிவார்.

தெளிவுரை : அந்த நிலைமையைக் கண்ட சிறப்புப் பொருந்திய சிவநேசர் உள்ளம் மயங்கி மேகம் பொருந்திய சோலைகளால் சூழப்பட்ட சீகாழித் தலைவர் வந்து சேரும் நாள் வரையிலும் பூம்பாவையாரின் உடலைத் தீயில் இட்டு அடங்கச் செய்து அதில் சேரும் எலும்புடன் சாம்பலையும் சேமித்து வைப்பது எனத் தெளிவுடையவராய்,

2964. உடைய பிள்ளையார்க் கெனஇவள் தனைஉரைத் ததனால்
அடைவு துன்புறு வதற்கிலை யாம்நமக் கென்றே
இடரொ ழிந்தபின் அடக்கிய என்பொடு சாம்பல்
புடைபெ ருத்தகும் பத்தினிற் புகப்பெய்து வைப்பார்.

தெளிவுரை : ஞானசம்பந்தர் பெருமானுக்கு இவளை அளித்தேன் என்று கூறிவிட்டதால் இதனால் நமக்குத் துன்பம் அடைவதற்கு இல்லையாம் என்று துணிந்து துன்பம் நீங்கினார். பின் தீயில் எரித்த எலும்பையும் சாம்பலையும் பக்க இடம் அகன்ற குடத்தில் புக இட்டு வைப்பார் ஆனார்.

2965. கன்னி மாடத்தின் முன்புபோல் காப்புற அமைத்துப்
பொன்னு முத்துமே லணிகலன் பூந்துகில் சூழ்ந்து
பன்னு தூவியின் பஞ்சணை விரைப்பள்ளி அதன்மேல்
மன்னு பொன்னரி மாலைகள் அணிந்துவைத் தனரால்.

தெளிவுரை : கன்னி மாடத்தில் முன்போலவே காவல் பொருந்த அக்குடத்தை வைத்துப் பொன்னும் முத்தும் மேல் அணிகலன்களும் அழகான மென்மையான துகில்களும் சுற்றிப் புனைந்து, புகழ்ந்து பேசப்படும் அன்னத்தூவியிட்ட பஞ்சணையான மணம்கமழும் பள்ளியில் வைத்து, அதன் மேல் நிலைபெற்ற பொன்னரியான கழுத்தணி வகைகளையும் அழகு பெறக் கோலம் செய்து வைத்தார்.

2966. மாலை சாந்தொடு மஞ்சனம் நாடொறும் வழாமைப்
பாலி னேர்தரும் போனகம் பகல்விளக்கு இனைய
சாலு நன்மையில் தகுவன நாள்தொறுஞ் சமைத்தே
ஏலு மாசெய யாவரும் வியப்பெய்து நாளில்.

தெளிவுரை : மாலையும் சந்தனத்துடன் திருமஞ்சனமும் நாள்தோறும் விடாமல் பால் சோறும் பகல் விளக்கும் என்ற இவையும் இவை போன்றவற்றையும் பொருந்திய நன்மையினால் தக்கவையாக நாள்தோறும் அமைத்துப் பொருந்தும்படி செய்ய யாவரும் அதைக் கண்டு வியப்பை அடைந்த நாள்களில்,

2967. சண்பை மன்னவர் திருவொற்றி யூர்நகர் சார்ந்து
பண்பு பெற்றநற் றொண்டர்க ளுடன்பணிந் திருந்த
நண்பு மிக்கநல் வார்த்தைஅந் நற்பதி யுள்ளோர்
வண்பு கழ்ப்பெரு வணிகர்க்கு வந்துரை செய்தார்.

தெளிவுரை : சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் திருவொற்றியூர் நகரத்தில் வந்து சார்ந்து பண்பையுடைய நல்ல தொண்டருடனும் இறைவரைப் பணிந்து அங்கே எழுந்தருளியிருந்தார் என்ற நட்புடைய நல்ல சொல்லை, அந்த நல்ல பதியில் உள்ள அடியார்கள் வண்மையும் புகழும் உடைய பெருவணிகர் தோன்றலாரான சிவநேசரிடம் வந்து கூறினர்.

2968. சொன்ன வர்க்கெலாந் தூசொடு காசுபொன் னளித்தே
இன்ன தன்மையர் எனவொணா மகிழ்சிறந் தெய்தச்
சென்னி வாழ்மதி யார்திரு வொற்றியூ ரளவும்
துன்னு நீள்நடைக் காவணந் துகில்விதா னித்து.

தெளிவுரை : அங்ஙனம் ஞானசம்பந்தரைப் பற்றித் தம்மிடம் வந்து கூறியவர்க்கெல்லாம் சிவநேசர், ஆடையும், காசும், பொன்னும், அன்புடனே இன்ன தன்மைதான் பெற்றார் என்று சொல்ல முடியாத மகிழ்ச்சி மேல் ஓங்க, தலையில் வாழ்வு பெறும் மதியைத் தாங்கிய இறைவர் எழுந்தருளிய திருவொற்றியூர் அளவும் நெருங்கிய நடைக்காவணம் இட்டுத் துணியால் விதானமும் கட்டி,

2969. மகர தோரணம் வண்குலைக் கமுகொடு கதலி
நிகரில் பல்கொடித் தாமங்கள் அணிபெற நிரைத்து
நகர நீள்மறுகு யாவையும் நலம்புனை அணியால்
புகரில் பொன்னுல கிழிந்ததாம் எனப்பொலி வித்தார்.

தெளிவுரை : மகர தோரணங்களும் வளம் மிக்க குலைக் கமுகுகளும் வாழைகளும், ஒப்பில்லாத பல கொடிகளும் மாலைகளும் ஆகிய இவற்றை அழகு பொருந்த வரிசையாய் அமைத்து நகரம் முழுமையும் உள்ள நீண்ட தெருக்கள் எல்லாவற்றையும் நன்மை பொருந்தச் செய்த அலங்கராங்களினால் குற்றம் இல்லாத தேவலோகமே கீழ் இறங்கியதாம் எனக் கூறுமாறு அழகு செய்வித்தார் சிவநேசர்.

2970. இன்ன வாறணி செய்துபல் குறைவறுப் பேவி
முன்னம் ஒற்றியூர் நகரிடை முத்தமிழ் விரகர்
பொன்ன டித்தலம் தலைமிசைப் புனைவனென் றெழுவார்
அந்ந கர்ப்பெருந் தொண்டரும் உடன்செல வணைந்தார்.

தெளிவுரை : இவ்வாறு அலங்காரத்தைச் செய்து பலவகையாலும் குறைகள் இல்லாமல் செய்யும் பணியாட்களை ஏவி, முன் சென்று திருவொற்றியூர் நகரில் முத்தமிழ் விரகரான பிள்ளையாரின் பொற் பாதங்களை வணங்கித் தலைமீது சூட்டிக் கொள்வேன் என்று எழுவாராகி அந்த மயிலையில் வாழும் பெருந்தொண்டர்களும் தம்முடன் வரத் திருவொற்றியூரை நோக்கிச் சென்றார்.

2971. ஆய வேலையில் அருமறைப் புகலியர் பிரானும்
மேய ஒற்றியூர் பணிபவர் வியனகர் அகன்று
காயல் சூழ்கரைக் கடல்மயி லாபுரி நோக்கித்
தூய தொண்டர்தம் குழாத்தொடும் எதிர்வந்து தோன்ற.

தெளிவுரை : அந்தச் சமயத்தில் சீகாழித் தலைவரான ஞானசம்பந்தப் பெருமானும் தாம் தங்கியிருந்த திருவொற்றியூரைப் பணிந்து, அந்தப் பெருநகரை விட்டு அகன்று, உப்பளங்கள் சூழ்ந்த கடற்கரையின் துறையையுடைய திருமயிலையை நோக்கித் தூய்மையான தொண்டர்கள் திருக்கூட்டத்தோடும் எதிரில் வந்து தோன்ற,

2972. மாறில் வண்பெரு வணிகரும் தொண்டரும் மலர்ந்த
நீறு சேர்தவக் குழாத்தினை நீளிடைக் கண்டே
ஆறு சூடினார் திருமக னார்அணைந் தாரென்
ஈறி லாததோர் மகிழ்ச்சியி னால்விழுந் திறைஞ்ச.

தெளிவுரை : அச்சமயத்தில் ஒப்பற்ற வண்மையுடைய பெரு வாணிகரான சிவநேசரும் அவருடன் வந்த பெருந்தொண்டர்களும் ஒளி விளங்கும் வெண்ணீறு புனைந்த தவத்தையுடைய அடியார் கூட்டத்தினை நெடுந் தொலைவில் பார்த்துக் கங்கையாற்றைச் சூடிய இறைவரின் மகனார் வந்தனர் என்று இறுதியில்லாத ஒப்பற்ற மகிழ்ச்சியால் நிலத்தில் விழுந்து துதிக்க,

2973. காழி நாடரும் கதிர்மணிச் சிவிகைநின் றிழிந்து
சூழி ரும்பெருந் தொண்டர்முன் தொழுதெழுந் தருளி
வாழி மாதவர் வணிகர்செய் திறஞ்சொலக் கேட்டே
ஆழி சூழ்மயி லாபுரித் திருநகர் அணைந்தார்.

தெளிவுரை : சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரும் ஒளி வீசும் முத்துச் சிவிகையினின்றும் இழிந்து சூழ்ந்த பெரிய தொண்டர் முன்னே தொழுது எழுந்தருளி, வாழ்வுடைய மாதவர்களாகிய அடியார்கள் சிவநேசரின் அடிமைப் பண்பை எடுத்துச் சொல்லக் கேட்டு, கடற்கரை சூழ்ந்த திருமயிலைத் திருநகரைச் சேர்ந்தார்.

2974. அத்தி றத்துமுன் நிகழ்ந்தது திருவுள்ளத்து அமைத்துச்
சித்தம் இன்புறு சிவநேசர் தம்செயல் வாய்ப்பப்
பொய்த்த வச்சமண் சாக்கியர் புறத்துறை அழிய
வைத்த வப்பெருங் கருணைநோக் கால்மகிழ்ந் தருளி.

தெளிவுரை : வாணிகரின் அத்திறத்தின் முன்னே நிகழ்ந்த நிகழ்ச்சியைத் தம் உள்ளத்தில் ஞானசம்பந்தப் பெருமான் அமைத்துக் கொண்டு, உள்ளத்தில் இன்பமடையும் தொண்டரான சிவநேசரின் செயல் வாய்த்திடப், பொய்யான தவத்தை மேற்கொண்டு வருந்தும் சமணர் சாக்கியரின் புறத்துறைகள் அழியத் திருவுளங்கொண்ட அந்தப் பெரிய அருள் நோக்கத்தினால் மகிழ்ந்தருளி,

2975. கங்கை வார்சடை யார்கபா லீச்சரத் தணைந்து
துங்க நீள்சுடர்க் கோபுரம் தொழுதுபுக் கருளி
மங்கை பாகர்தம் கோயிலை வலங்கொண்டு வணங்கிச்
செங்கை சென்னிமேல் குவிந்திடத் திருமுன்பு சேர்ந்தார்.

தெளிவுரை : கங்கையைச் சூடிய நீண்ட சடையையுடைய சிவபெருமான் எழுந்தருளிய, திருக்கபாலீச்சரம் என்னும் திருக்கோயிலைச் சேர்ந்து, உயர்ந்த நீண்ட ஒளியுடைய கோபுரத்தைத் தொழுது புகுந்தருளி, உமையம்மையாரை ஒரு பாகத்தில் கொண்ட இறைவர் கோயிலை வலமாகச் சுற்றி வந்து வணங்கிச் சிவந்த கை தலைமீது குவித்திடத் திருமுன்பு வந்து சேர்ந்தார்.

2976. தேவ தேவனைத் திருக்கபா லீச்சரத் தமுதைப்
பாவை பாகனைப் பரிவுறு பண்பினால் பரவி
மேவு காதலின் விரும்பிய விரைவினால் விழுந்து
நாவின் வாய்மையால் போற்றினார் ஞானசம் பந்தர்.

தெளிவுரை : தேவரின் தலைவராயுள்ள இறைவரை, திருக்கபாலீச்சரத்தில் அமர்ந்த அமுதம் போன்றவரை, தையல் பாகரை, அன்பு பொருந்திய பண்பினால் துதித்துப் பொருந்திய காதலால் விரும்பிய விரைவினால் நிலத்தில் பொருந்த விழுந்து, திருநாவில் பொருந்திய உண்மைத் திருவாக்கினால், ஞானசம்பந்தர் போற்றியருளினார்.

2977. போற்றி மெய்யருள் திறம்பெறு பரிவுடன் வணங்கி
நீற்றின் மேனியில் நிறைமயிர்ப் புளகங்கள் நெருங்கக்
கூற்ற டர்த்தவர் கோயிலின் புறம்புபோந் தருளி
ஆற்றும் இன்னருள் வணிகர்மேற் செலவருள் செய்வார்.

தெளிவுரை : அங்ஙனம் போற்றி மெய்யருள் திறத்தைப் பெறும் இடைவிடாத எண்ணத்துடன் வணங்கித் திருநீறு பூசிய மேனியில் நிறைவாக மயிர்ப் புளகம் தோன்ற இயமனைக் காலினால் உதைத்து உருட்டிய இறைவரின் வெளிப் புறத்தில் சென்று, செய்கின்ற இனிய அருள், வாணிகரின் மீது செல்வதாய் அருளிச் செய்பவராய்.

2978. ஒருமை உய்த்தநல் லுணர்வினீர் உலகவர் அறிய
அருமை யால்பெறும் மகள்என்பு நிறைத்தஅக் குடத்தைப்
பெரும யானத்து நடம்புரி வார்பெருங் கோயில்
திரும திற்புற வாய்தலில் கொணர்கென்று செப்ப.

தெளிவுரை : சிவனடிமைத் திறத்தில் ஒன்றித்து வைத்த உணர்வுடையீர் ! உலகத்தவர் எல்லாம் அறியுமாறு, அரிய தவத்தின் பயனாய்ப் பெற்ற மகளுடைய எலும்பு நிறைந்த அக்குடத்தைப் பெரிய மயானத்தில் கூத்தாடுகின்ற இறைவரின் இப்பெரு கோயிலின் திருமதில்புறத்துத் திருவாயில் முன்னர் கொண்டு வருக எனக்கூறியருள,

2979. அந்த மில்பெரு மகிழ்ச்சியால் அவனிமேல் பணிந்து
வந்து தந்திரு மனையினில் மேவிஅம் மருங்கு
கந்த வார்பொழில் கன்னிமா டத்தினில் புக்கு
வெந்த சாம்பலோ டென்புசேர் குடத்தைவே றெடுத்து.

தெளிவுரை : எல்லை இல்லாத பெருமகிழ்ச்சியால் நிலத்தின் மீது விழுந்து வணங்கிக் கோயிலின்றும் வந்து, தம் திரு இல்லத்துள் சேர்ந்து, அங்கு மணம் பொருந்திய நீண்ட சோலையிடையில் உள்ள கன்னி மாடத்தில் புகுந்து, மகள் உடல் வெந்த சாம்பலுடன் எலும்பை இட்டு வைத்த குடத்தைப் பஞ்சணை முதலியவற்றினின்று வேறாய் எடுத்து வந்து,

2980. மூடு பன்மணிச் சிவிகையுள் பெய்துமுன் போத
மாடு சேடியர் இனம்புடை சூழ்ந்துவந் தணைய
ஆடல் மேவினார் திருக்கபா லீச்சரம் அணைந்து
நீடு கோபுரத் தெதிர்மணிச் சிவிகையை நீக்கி.

தெளிவுரை : பல மணிகள் இழைத்த மூடு சிவிகையுள் அந்தக் குடத்தை இனிதாக அமைத்து வைத்து, அதனை முன்போக விட்டு, பக்கத்தில் தோழியர் கூட்டம் சூழ்ந்து வர, ஆடலைச் செய்யும் இறைவரின் திருக்கபாலீச்சரத்தைச் சேர்ந்து, நீண்ட கோபுரத்தின் வெளியே எதிரில் மணிச் சிவிகையின் திரையை விலக்கி,

2981. அங்க ணாளர்தம் அபிமுகத் தினில்அடி யுறைப்பால்
மங்கை என்புசேர் குடத்தினை வைத்துமுன் வணங்கப்
பொங்கு நீள்புனற் புகலிகா வலர்புவ னத்துத்
தங்கி வாழ்பவர்க் குறுதியாம் நிலைமைசா திப்பார்.

தெளிவுரை : இறைவரின் சன்னதியின் முன்பாக அவரது திருவடியில் பதிந்த அன்பின் உறைப்பால், பெண்ணின் எலும்புடைய அருட்குடத்தை எடுத்து வைத்துத், திருமுன்பு சிவநேசர் வணங்கினார். வணங்க, பொங்கி வரும் பெருநீர்ச் சிறப்புடைய சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் இவ்வுலகத்தில் தங்கி வரும் மக்களுக்கு உறுதிப் பொருள் நிலைமை இதுவாம் என நேரே காட்டியருள,

2982. மாடம் ஓங்கிய மயிலைமா நகருளார் மற்றும்
நாடு வாழ்பவர் நன்றியில் சமயத்தி னுள்ளோர்
மாடு சூழ்ந்துகாண் பதற்குவந் தெய்தியே மலிய
நீடு தேவர்கள் ஏனையோர் விசும்பிடை நெருங்க.

தெளிவுரை : மாடங்கள் ஓங்கிய மயிலைப் பெரு நகரத்தில் உள்ளவர்களும் மற்றும் அந்நாட்டில் உள்ளவர்களும், நன்றி இல்லாத மற்றச் சமயத்தில் உள்ளவர்களும் எப்பக்கங்களினின்றும் சூழ்ந்து, இதன் விளைவைக் காண்பதற்கு வந்து பெருகவும், நீடிய தேவர்களும் மற்றவர்களும் வானத்தில் நெருங்கவும்,

2983. தொண்டர் தம்பெரும் குழாம்புடை சூழ்தரத் தொல்லை
அண்டர் நாயகர் கோபுர வாயில்நேர் அணைந்து
வண்டு வார்குழ லாள்என்பு நிறைந்தமண் குடத்தைக்
கண்டு தம்பிரான் கருணையின் பெருமையே கருதி.

தெளிவுரை : திருத்தொண்டர் கூட்டம் தம் பக்கத்தில் சூழ்ந்து வரவும், பழைமையான தேவரது கோபுர வாயிலின் நேரில் வந்து சேர்ந்து, வண்டுகள் தங்கும் நீண்ட கூந்தலையுடைய பூம்பாவையாரின் எலும்பு நிறைந்த அந்த மண் குடத்தை அருட்பார்வை பார்த்தருளி, இறைவரின் கருணையின் பெருமையை உள்ளத்துள் பாவனை செய்து,

2984. இந்த மாநிலத் திறந்துளோர் என்பினைப் பின்னும்
நந்து நன்னெறிப் படுத்திட நன்மையாந் தன்மை
அந்த என்பொடு தொடர்ச்சியாம் எனவருள் நோக்கால்
சிந்தும் அங்கம்அங் குடையபூம் பாவைபேர் செப்பி.

தெளிவுரை : இந்த வுலகத்தில் இறந்தவரின் எலும்பை மேலும் பெரிய நன்னெறியில் பொருந்தியிட நன்மையாகின்ற தன்மையானது அந்த எலும்புடன் கூடிய தொடர்ச்சியால் ஆவதாகும் என்று எண்ணிய அருள் நோக்கத்தினால், சிந்திய அங்கங்களான அந்த எலும்பை முன்னுடைய உடம்பில் வாழ்ந்த பூம்பாவை என்ற பெயரால் விளித்துச் சொல்லியருளி,

2985. மண்ணி னில்பிறந் தார்பெறும் பயன்மதி சூடும்
அண்ண லார்அடி யார்தமை அமுதுசெய் வித்தல்
கண்ணி னால்அவர் நல்விழாப் பொலிவுகண்டு ஆர்தல்
உண்மை யாம்எனில் உலகர்முன் வருகஎன வுரைப்பார்.

தெளிவுரை : இந்த மண்ணுலகத்தில் வினைக்கு ஈடாக வந்து பிறந்து உயிர்கள் பெறும் பிறவிப் பயனாகிய உறுதிப் பொருளாவன பிறையை அணியும் பெருமானின் அடியவர் தம்மைத் திருவமுது செய்வித்தலும், கண்களால் அந்த இறைவரின் திருவிழாக்களில் பெரும் பொலிவைக் கண்டு மகிழ்தலும் என்ற இவை இரண்டுமே உறுதிப் பொருளாவன என்பது உண்மையானால், ஏ பூம்பாவையே ! உலகத்தார் முன் உடலும் உயிரும் பொருந்த வருவாயாக ! எனச் சூள் செய்து எடுத்துச் சொல்பவராய்.

2986. மன்னு வார்சடை யாரைமுன் தொழுதுமட் டிட்ட
என்னும் நற்பதி கத்தினில் போதியோ என்னும்
அன்ன மெய்த்திரு வாக்கெனும் அமுதமவ் வங்கம்
துன்ன வந்துவந் துருவமாய்த் தொக்கதக் குடத்துள்.

தெளிவுரை : நிலை பெற்ற நீண்ட சடையையுடைய இறைவரைத் தொழுது மட்டிட்ட எனத் தொடங்கும் அந்தத் திருப்பதிகத்தில் போதியோ என்று கூறும் அந்த மெய்த் திருவாக்கு என்னும் அமுதனானது, அக்குடத்தினுள் அந்த எலும்பின் உடம்பினுள்ளே பொருந்த வந்து உருவமாகக் கூடியது.

2987. ஆன தன்மையில் அத்திருப் பாட்டினில் அடைவே
போன வாயுவும் வடிவமும் பொலிவொடு நிரம்பி
ஏனை அக்குடத் தடங்கிமுன் னிருந்தெழு வதன்முன்
ஞான போனகர் பின்சமண் பாட்டினை நவில்வார்.

தெளிவுரை : முன் நான்கு பாட்டுக்களில் கூறிய அத்தகைய தன்மையால் மட்டிட்ட எனத் தொடங்கிய அத்திருப் பாட்டைத் தொடர்ந்து முறையே பாடுந் தோறும் போன உயிரும் உருவம் பெறும் உறுப்புப் பகுதிகளும் அழகும் முறையாய் நிரம்பி, வேறாகிய அந்தக் குடத்தில் முன்பு தொக்குக் கூடியிருந்து உரியபடி வெளிப்பட்டு எழுவதன் முன்பு ஞான அமுது உண்ட சம்பந்தப் பெருமான் பின் முறையாய் அருளும் சமண் பாட்டான பத்தாம் திருப்பாட்டை அருளிச் செய்பவராகி,

2988. தேற்ற மில்சமண் சாக்கியத் திண்ணர்இச் செய்கை
ஏற்ற தன்றென எடுத்துரைப் பார்என்ற போது
கோற்றொ டிச்செங்கை தோற்றிடக் குடமுடைந் தெழுவாள்
போற்று தாமரைப் போதவிழ்ந் தெழுந்தனள் போன்றாள்.

தெளிவுரை : தெளிவு இல்லாத சமண சாக்கியர்களாகிய தீயர்கள் இந்தச் செய்கை ஏற்றதன்று என்று எடுத்துச் சொல்வார்கள் என அப்பாட்டினைப் பாடி அருள் செய்த போது, முன்னம் வளையல் அணிந்த கை வெளிப்பட்டுத் தோன்றிட, அந்தக் குடம் உடைந்து மேல் எழுபவரான பூம்பாவையார், போற்றும் தாமரை அரும்பு இதழ் அவிழ்ந்து அதிலிருந்து எழும் திருமகளைப் போன்று தோன்றினார்.

2989. எடுத்த பாட்டினில்வடிவுபெற் றிருநான்கு திருப்பாட்
டடுத்த அம்முறைப் பன்னிரண் டாண்டள வணைந்து
தொடுத்த வெஞ்சமண் பாட்டினில் தோன்றிடக் கண்டு
விடுத்த வேட்கையர் திருக்கடைக் காப்புமேல் விரித்தார்.

தெளிவுரை : மட்டிட்ட எனத் தொடங்கிய பாட்டில் பாவையார் வடிவத்தைப் பெற்று, அதன்மேல் அருளிய எட்டுத் திருப்பாட்டுகளில் வடிவு எடுத்த நிலையை அடுத்த அம்முறையே, பன்னிரண்டு ஆண்டுகளுக்குரிய வளர்ச்சியைப் பெற்றுத் தொடுத்த கொடிய சமணர் பாட்டை அருளிய அளவில், குடமானது உடைந்து வெளிப்பட்டுத் தோன்றப் பார்த்து, எவ்வித விருப்பும் வெறுப்பும் இல்லாத பிள்ளையார் அதன்பின் திருக்கடைக்காப்பை விரித்துக் கூறியருளினார்.

2990. ஆங்கனம் எழுந்து நின்ற அணங்கினை நோக்கு வார்கள்
ஈங்கிது காணீர் என்னா அற்புத மெய்தும் வேலைப்
பாங்குசூழ் தொண்ட ரானோர் அரகர என்னப் பார்மேல்
ஓங்கிய வோசை யும்பர் நாட்டினை உற்ற தன்றே.

தெளிவுரை : அவ்வாறு தோன்றிய தெய்வநலம் வாய்ந்த பூம்பாவையாரைப் பார்ப்பவர் எல்லாம் இங்கு இதனைப் பாரீர், இங்கு இதனை நன்கு பாரீர் என்று எடுத்துச் சொல்லி, அற்புதத்தை அடைந்தபோது பக்கத்தில் சுற்றும் சூழ்ந்திருந்த திருத்தொண்டர்கள் அரகர என்று இவ்வுலகத்தில் முழங்கிய பேரொலி, அப்போதே சென்று வான் உலகத்தையும் அடைந்தது!

2991. தேவரும் முனிவர் தாமும் திருவருட் சிறப்பு நோக்கிப்
பூவரு விரைகொள் மாரி பொழிந்தனர் ஒழிந்த மண்ணோர்
யாவரும் இருந்த வண்ணம் எம்பிரான் கருணை என்றே
மேவிய கைகள் உச்சி மேற்குவித் திறைஞ்சி வீழ்ந்தார்.

தெளிவுரை : வானத்தில் நெருங்கிய தேவர்களும் முனிவர்களும் முதலானவர் சிவபெருமானின் திருவருள் சிறப்பை நோக்கித் தெய்வ மரங்களின் மலர்களால் ஆன மணமுடைய பூமழையைப் பெய்தனர். முன் கூறப்பட்டவர்கள் ஒழிய மற்றவர் எல்லாரும் இங்ஙனம் விளைவு பொருந்தியிருந்த வண்ணமானது எம் தலைவரான சிவபெருமானின் திருவருளின் விளைவே யாகும்! எனச் சொல்லிப் பொருந்திய கைகளை உச்சி மீது குவித்து வணங்கி நிலத்தில் விழுந்து தொழுதனர்.

2992. அங்கவள் உருவங் காண்பார் அதிசயம் மிகவும் எய்திப்
பங்கமுற் றாரே போன்றார் பரசம யத்தி னுள்ளோர்
எங்குள செய்கை தான்மற் றென்செய்த வாறி தென்று
சங்கையாம் உணர்வு கொள்ளும் சமணர் தள்ளாடி வீழ்ந்தார்.

தெளிவுரை : அங்கு அப்பூம்பாவையின் முன் சொல்லப்பட்டவாறுள்ள வடிவத்தைக் காண்பவரான மற்றச் சமயத்தில் உள்ளவர் மிக்க அதிசயம் அடைந்து, இச்செய்தியால் தம் தம் சமயங்களை நிராகரிக்கப் பெற்று அவ்வவரும் தோல்வியடைந்தவர் போல் ஆயினர். இச்செய்கை எங்குத்தான் உள்ளது? எவ்வாறு செய்யப்பட்டது? எனத் துணிய மாட்டாமல் ஐயம் கொண்ட சமணர் தள்ளாடி நிலத்தில் தடுமாறி விழுந்தனர்.

2993. கன்னிதன் வனப்புத் தன்னைக் கண்களால் முடியக் காணார்
முன்னுறக் கண்டார்க் கெல்லாம் மொய்கருங் குழலின் பாரம்
மன்னிய வதன செந்தா மரையின்மேல் கரிய வண்டு
துன்னிய ஒழுங்கு துற்ற சூழல்போ லிருண்டு தோன்ற.

தெளிவுரை : குடம் உடைந்து எழுந்த கன்னியான பூம்பாவையாரின் அழகு முழுமையும் கண்களால் முற்றக் காணாதவராகித் தம் கண்கொண்ட அளவே கண்டு, அம்மட்டில் அடங்கிக் கண்டு கொண்டவர்க்கு எல்லாம் தோன்றிய நிலையாவது, மொய்த்து வளர்ந்த கருமையான கூந்தலான சுமை பொருந்திய முகமான செந்தாமரையில் கரிய வண்டுக் கூட்டம் நெருங்கி மொய்த்து வரிசையாகச் சூழ்ந்திருந்தாற் போன்று கரிய நிறம் அடைந்து காணப்படவும், (இது கூந்தல் அழகை விரித்தது.)

2994. பாங்கணி சுரும்பு மொய்த்த பனிமலர் அளகப் பந்தி
தேங்கமழ் ஆரம் சேரும் திருநுதல் விளக்கம் நோக்கில்
பூங்கொடிக் கழகின் மாரி பொழிந்திடப் புயற்கீ ழிட்ட
வாங்கிய வான வில்லின் வளரொளி வனப்பு வாய்ப்ப.

தெளிவுரை : பக்கத்தில் அழகிய வண்டுகள் மொய்த்த குளிர்ந்த பூக்களை அணிந்த கூந்தல் பந்தியுடன், மணம் வீசும் திலகம் அணிந்த நெற்றிப் பொலிவைப் பார்க்கில், பூம்பாவையரான பூங்கொடிக்கு அழகின் மழை பொழியும் பொருட்டாக மேகத்தின் கீழே இட்ட வளைந்த வானவில்லின் மிக்க ஒளி பொருந்திய அழகு பொருந்த, (இது நெற்றியழகை விவரிக்கின்றது.)

2995. புருவமென் கொடிகள் பண்டு புரமெரித் தவர்தம் நெற்றி
ஒருவிழி எரியில் நீறா யருள்பெற உளனாம் காமன்
செருவெழும் தனுவ தொன்றும் சேமவில் லொன்றும் ஆக
இருபெருஞ் சிலைகள் முன்கொண் டெழுந்தன போல ஏற்ப.

தெளிவுரை : புருவம் என்ற இரண்டு கொடிகள், முன் காலத்தில் முப்புரம் எரித்த சிவபெருமானின் நெற்றித் தனிக் கண்ணில் வந்த தீயினால் சாம்பலாகிப் பின் அருளும் பெற உள்ளவன் ஆன, காமனின் போரில் ஏந்திய வில் ஒன்றும் சேமமாய் வைக்கப்படும் வில் ஒன்றுமாக, இருபெரு விற்களின் தன்மைகளை முன்னே கொண்டு தோன்றி எழுந்தாற் போல் அழகு செய்ய, (இது புருவ அழகை விரித்தது.)

2996. மண்ணிய மணியின் செய்ய வளரொளி மேனி யாள்தன்
கண்ணிணை வனப்புக் காணில் காமரு வதனத் திங்கள்
தண்ணளி விரிந்த சோதி வெள்ளத்தில் தகைவின் நீள
ஒண்ணிறக் கரிய செய்ய கயலிரண் டொத்து லாவ.

தெளிவுரை : கடைந்தெடுத்த மாணிக்கத்தை விடச் செம்மையாய் வரும் ஒளியுடைய மேனி கொண்ட பாவையாரின் இரண்டு கண்களின் அழகைக் காணுமிடத்து அழகுமிக்க முகமான சந்திரனின் குளிர்ந்த கதிர்கள் விரிந்த நிலவொளியான வெள்ளத்தில் தடுக்கப்படாத நீளமுடைய ஒள்ளிய நிறமும் கருமையும் செம்மையும் கலந்த இரண்டு கயல் மீன்களைப் போன்ற உலவ, (இது கண்களின் அழகை விரித்தது.)

2997. பணிவளர் அல்குல் பாவை நாசியும் பவள வாயும்
நணியபே ரொளியில் தோன்றும் நலத்தினை நாடு வார்க்கு
மணிநிறக் கோபங் கண்டு மற்றது வவ்வத் தாழும்
அணிநிறக் காம ரூபி அனையதாம் அழகு காட்ட.

தெளிவுரை : பாம்பின் படத்தைப் போன்று வளரும் அல்குலையுடைய பாவையாரின் நாசியும் பவளம் போன்ற வாயும் நெருங்க நின்று பெரிய ஒளியுடன் தோன்றும் அழகை நாடி அறிய முயல்வார்க்கு, மாணிக்கம் போன்ற சிவந்த நிறம் கொண்ட இந்திரகோபம் என்ற பூச்சியைப் பார்த்து அதைக் கவரும் பொருட்டுத் தாழ்ந்து வரும் அழகான பல நிறங்களை கொள்ளும் காமரூபி-பச்சோந்தி-சேர்வதான அழகைப் புலப்படுத்த. (இது நாசி, வாய் என்பனவற்றின் அழகை விரித்தது.)

2998. இளமயில் அனைய சாயல் ஏந்திழை குழைகொள் காது
வளமிகு வனப்பி னாலும் வடிந்ததா ளுடைமை யாலும்
கிளரொளி மகர ஏறு கெழுமிய தன்மை யாலும்
அளவில்சீர் அனங்கன் வென்றிக் கொடியிரண் டனைய வாக.

தெளிவுரை : இளம் மயிலைப் போன்ற சாயலையுடைய ஏந்திய இழை அணிந்த பாவையாரின் காதணி அணிந்த காதுகள், வளமான அழகாலும் வடிந்த காதுத் தண்டை உடைமையாலும் மிக்க ஒளியுடைய ஆண் சுறா மீனானது பொருந்திய தன்மையினாலும் அளவில்லாத சிறப்புடைய வெற்றிக்கொடி இரண்டைப் போன்று விளங்க, (இது காது அழகை விரித்தது.)

2999. விற்பொலி தரளக் கோவை விளங்கிய கழுத்து மீது
பொற்பமை வதன மாகும்  பதுமநன் னிதியம் பூத்த
நற்பெரும் பணிலம் என்னும் நன்னிதி போன்று தோன்றி
அற்பொலி கண்டர் தந்த அருட்கடை யாளங் காட்ட.

தெளிவுரை : ஒளி திகழும் முத்துக் கோவைகள் விளங்கும் கழுத்து அதன்மீது அழகமைந்த முகமாகும் பதும நிதியைத் தோற்றுவித்த நல்ல பெரிய சங்கம் என்னும் நல்ல நிதியைப் போல் தோன்றி, இருள்போலும் கரிய நஞ்சு விளங்கிய கழுத்தையுடைய திருநீலகண்டரான இறைவர் தந்த பெருங்கருணைக்கு அடையாளத்தைக் காட்ட, (இது கழுத்து, முகம் என்பனவற்றின் அழகை விரித்தது.)

3000. எரியவிழ் காந்தள் மென்பூத் தலைதொடுத் திசைய வைத்துத்
திரள்பெறச் சுருக்குஞ் செச்சை மாலையோ தெரியின் வேறு
கருநெடுங் கயற்கண் மங்கை கைகளால் காந்தி வெள்ளம்
அருகிழிந் தனவோ என்னும் அதிசயம் வடிவில் தோன்ற.

தெளிவுரை : கரிய நீண்ட கயல்மீன் போன்ற கண்களையுடைய பாவையாரின் கைகள் காரணமாகக் காணும் போது தீயைப் போல் மலர்ந்த மெல்லிய செங்காந்தள் பூக்களைத் தலைத்தலை பொருந்தத் தொடுத்துப் பொருந்துமாறு வைத்து அதன் திரட்சி மேலால் சுருங்கி வருமாறு அமைத்த வெட்சிப் பூமாலையோ அதுவன்றி, வேறொரு வகையால் ஆராயுமிடத்து உடலில் உள்ள மேனியின் ஒளியினது மிகுதி இரு பக்கங்களிலும் மிகுந்து வழிந்தனவோ என்னும் அதிசயம் தோன்ற, ( இது கைகள் அழகை விரித்தது.)

3001. ஏர்கெழு மார்பிற் பொங்கும் ஏந்திளங் கொங்கை நாகக்
கார்கெழு விடத்தை நீக்குங் கவுணியர் தலைவர் நோக்கால்
ஆர்திரு வருளிற் பூரித் தடங்கிய அமுத கும்பச்
சீர்கெழு முகிழைக் காட்டுஞ் செவ்வியில் திகழ்ந்து தோன்ற.

தெளிவுரை : அழகு பொருந்திய மார்பில் பெருகி எழுகின்ற தனங்கள், பாம்பின் கரிய நஞ்சைப் போக்கும் கவுணியர் தலைவரான ஞானசம்பந்தப் பெருமானின் நோக்கத்தால் பொருந்திய திருவருள் என்ற அமுதத்தால் நிறையப் பெற்று அமைந்த கும்பத்தினை மேல் மூடிய முகிழ்போன்ற தன்மையில் விளங்கித் தோன்ற, (இது கொங்கை அழகை விளக்கியது.)

3002. காமவேள் என்னும் வேடன் உந்தியிற் கரந்து கொங்கை
நேமியம் புட்கள் தம்மை யகப்பட நேரி தாய
தாமநீள் கண்ணி சேர்த்த சலாகைதூக் கியதே போலும்
வாமமே கலைசூழ் வல்லி மருங்கின்மேல் உரோம வல்லி.

தெளிவுரை : அழகிய மேகலை என்ற அணியை அணிந்த கொடியைப் போன்ற பூம்பாவையரின் இடையை அடுத்த கொப்பூழினின்று தொடங்கி மேலே போகும் உரோமத்தின் ஒழுங்கு காமன் என்ற வேடன் கொப்பூழுக்குள் மறைந்திருந்து மேலே உள்ள கொங்கைகள் என்ற அழகிய சக்கரவாகப் பறவைகளைப் பிடிப்பதற்கு நேரான கயிற்றில் நீண்ட கண்ணிகளைக் கோத்த ஒரு சலாகையை உயர்த்தியது போல விளங்கிட, (இது கொப்பூழ், மயிர் ஒழுங்கு ஆகியவற்றைப் புனைந்துரைத்தது.)

3003. பிணியவிழ் மலர்மென் கூந்தல் பெண்ணமு தனையாள் செம்பொன்
அணிவளர் அல்குல் தங்கள் அரவுசெய் பிழையால் அஞ்சி
மணிகிளர் காஞ்சி சூழ்ந்து வனப்புடை அல்கு லாகிப்
பணியுல காளும் சேடன் பணம்விரித் தடைதல் காட்ட.

தெளிவுரை : கட்டவிழ்ந்த மலர்களைச் சூடிய மென்மையான கூந்தலையுடைய பெண்களுள் அமுதத்தை ஒத்த செம்பொன் அணிகளை அணிந்த அல்குலானது நாக உலகத்தை ஆளும் ஆதிசேடன் தன் உறவான ஒரு பாம்பு பூம்பாவையைத் தீண்டிய பிழையின் பொருட்டு அச்சம் கொண்டு செம்மணிகள் விளங்கும் காஞ்சி என்னும் எட்டுக் கோவை வடத்தால் சூழப்பெற்று அழகுடைய அல்குலாகிப் படத்தை விரித்துச் சேர்கின்ற தோற்றத்தைக் காட்ட, (இஃது அல்குல் அழகை விளக்கியது)

3004. வரிமயில் அனைய சாயல் மங்கைபொற் குறங்கின் மாமை
கரியிளம் பிடிக்கை வென்று கதலிமென் தண்டு காட்டத்
தெரிவுறு மவர்க்கு மென்மைச் செழுமுழந் தாளின் செவ்வி
புரிவுறு பொற்பந் தென்னப் பொலிந்தொளி விளங்கிப் பொங்க.

தெளிவுரை : வரி பொருந்திய மயில் போன்ற சாயலைக் கொண்ட பாவையரின் பொன் போன்ற தொடைகளின் அழகானது இளம் பெண் யானையின் துதிக்கையின் அழகை வெற்றி கொண்டு வாழையின் மெல்லிய தண்டின் அழகையும் புலப்படுத்திக் காட்டக் காண்பவர்க்கு மென்மையுடைய செழுமையான முழந்தாளின் அழகானது கைத்திறம் அமைந்த பொன்னால் ஆன பந்தைப் போல விளங்கி ஒளி பொருந்திப் பெருக. (இது தொடை, முழந்தாள் அழகை விரித்தது.)

3005. பூவலர் நறுமென் கூந்தல் பொற்கொடி கணைக்கால் காமன்
ஆவநா ழிகையே போலும் அழகினின் மேன்மை எய்த
மேவிய செம்பொன் தட்டின் வனப்பினை மீதிட் டென்றும்
ஓவியர்க் கெழுத ஒண்ணாப் பரட்டொளி ஒளிர்வுற் றோங்க.

தெளிவுரை : மலர்கள் மலர்வதற்கு இடமான மென்மையான கூந்தலையுடைய பொற்கொடி போன்ற பாவையாரின் கணைக்கால் காமனின் அம்பறாத்துணியே போன்ற அழகால் மேன்மை பொருந்த, பொருந்திய செம்பொன்னால் ஆன துலாத்தட்டின் அழகை வெற்றி கொண்டு எக்காலத்தும் சித்திரம் தீட்டுவோர்க்கும் எழுத இயலாத குதிக்காலின் ஒளி விளங்கித் தோன்ற. (இது கணைக்கால், குதிக்கால் என்பனவற்றின் அழகை விளக்கியது.)

3006. கற்பகம் ஈன்ற செவ்விக் காமரு பவளச் சோதிப்
பொற்றிரள் வயிரப் பத்திப் பூந்துணர் மலர்ந்த போலும்
நற்பதம் பொலிவு காட்ட ஞாலமும் விசும்பும் எல்லாம்
அற்புதம் எய்தத் தோன்றி அழகினுக் கணியாய் நின்றாள்.

தெளிவுரை : கற்பக மரம் ஈன்ற சிவந்த அழகிய பவளத்தின் ஒளி வீசும் பொன் திரளுடன் வயிர வரிசைகளையுடைய மலர்க்கொத்துகள் மலர்ந்தவை போல் அழகை நல்ல பாதம் புலப்படுத்த, இம்மண்ணுலகமும் விண்ணுலகமும் மற்ற எல்லா உலகங்களும் அற்புதம் பொருந்தத் தோன்றி அழகுக்கு அழகு செய்யும் பொருளாக நின்றாள். (இது பாதத்தின் அழகை விளக்கியது.)

3007. எண்ணில்ஆண் டெய்தும் வேதாப் படைத்தவள் எழிலின் வெள்ளம்
நண்ணுநான் முகத்தால் கண்டான் அவளினும் நல்லாள் தன்பால்
புண்ணியப் பதினா றாண்டு பேர்பெறும் புகலி வேந்தர்
கண்ணுதல் கருணை வெள்ளம் ஆயிர முகத்தாற் கண்டார்.

தெளிவுரை : அளவற்ற ஆண்டுகளைத் தனக்கு ஆயுளாகக் கொண்ட நான்முகன் தான் படைத்த திலோத்தமை என்ற மங்கையின் அழகின் வண்ணங்களைத் தனக்குள்ள நான்கு முகங்களால் கண்டு மகிழ்ந்தான். அவளை விட மேலான நல்ல தன்மைகள் பூம்பாவையாரிடம் விளங்க, சிவ புண்ணிய விளைவாகிய பதினாறு ஆண்டுச் சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர், நெற்றிக் கண்ணையுடைய  சிவபெருமானின் அருட்பெருக்கையே ஆயிர முகங்களால் காண்பார் ஆனார்.

3008. இன்னணம் விளங்கிய ஏர்கொள் சாயலாள்
தன்னைமுன் கண்ணுறக் கண்ட தாதையார்
பொன்னணி மாளிகைப் புகலி வேந்தர்தாள்
சென்னியிற் பொருந்தமுன் சென்று வீழ்ந்தனர்.

தெளிவுரை : இங்ஙனம் விளங்கிய அழகுடைய மென்மையான சாயலையுடைய பூம்பாவையைக் கண்முன் பார்த்த தந்தையார் சிவநேசர், பொன்னால் அணியப்பட்ட மாளிகைகளையுடைய சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரின் திருவடிகளைத் தம் தலையில் பொருந்தும்படி முன் சென்று வீழ்ந்து வணங்கினார்.

3009. அணங்கினும் மேம்படும் அன்னம் அன்னவள்
பணம்புரி யரவரைப் பரமர் முன்பணிந்
திணங்கிய முகில்மதில் சண்பை யேந்தலை
வணங்கியே நின்றனள் மண்ணு ளோர்தொழ.

தெளிவுரை : திருமகளை விட மேன்மையுடையவராய் அன்னம் போன்றவரான பூம்பாவையார் படம் பொருந்திய ஐந்து தலைப் பாம்பை அரையில் அணிந்த கபாலீசரின் முன் வணங்கி, அதைக் கண்ட உலகத்தவர் தொழுமாறு, மேகம் பொருந்திய மதிலையுடைய சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரை வணங்கி நின்றனர்.

3010. சீர்கெழு சிவநேசர் தம்மை முன்னமே
கார்கெழு சோலைசூழ் காழி மன்னவர்
ஏர்கெழு சிறப்பில்நும் மகளைக் கொண்டினிப்
பார்கெழு மனையினிற் படர்மின் என்றலும்.

தெளிவுரை : சிறப்புப் பொருந்திய சிவநேசரை முன்னம் மேகம் பொருந்தும் சோலை சூழ்ந்த சீகாழித் தலைவர் இனி அழகால் மிக்க சிறப்புடைய உம் மகளை உலகில் ஓங்கி விளங்கும் இல்லத்துக்கு அழைத்துச் செல்வீர்! என்று அருள் செய்தார்.

3011. பெருகிய அருள்பெறும் வணிகர் பிள்ளையார்
மருவுதா மரையடி வணங்கிப் போற்றிநின்
றருமையால் அடியனேன் பெற்ற பாவையைத்
திருமணம் புணர்ந்தருள் செய்யும் என்றலும்.

தெளிவுரை : பெருகி திருவருளைப் பெற்ற வணிகரான சிவநேசர் ஞானசம்பந்தரின் பொருந்திய தாமரை போன்ற திருவடிகளை வணங்கிப் போற்றி நின்று, அடியேன் அருமையாய்ப் பெற்றெடுத்த இந்தப் பூம்பாவைப் பெண்ணை மணம் கொண்டருளும்! என வேண்டிக் கொள்ளவும்.

3012. மற்றவர் தமக்குவண் புகலி வாணர்நீர்
பெற்றபெண் விடத்தினால் வீந்த பின்னையான்
கற்றைவார் சடையவர் கருணை காண்வர
உற்பவிப் பித்தலால் உரைத காதென.

தெளிவுரை : அவ்வாறு வேண்டிக் கொண்ட வணிகரான சிவநேசரைப் பார்த்து வளம் பொருந்திய சீகாழி வாழ்வுடைய ஞானசம்பந்தர், நீவிர் பெற்ற பெண் நஞ்சினால் இறந்த பின்பு, கற்øயான நீண்ட சடையுடைய கபாலீசரின் அருள் விளங்க மீளவும் நான் உயிர் பெறச் செய்தலால், நீவிர் செல்லும் இந்தச் சொல் பொருந்தாது! என்று கூறியருள,

3013. வணிகருஞ் சுற்றமும் மயங்கிப் பிள்ளையார்
அணிமல ரடியில்வீழ்ந் தரற்ற ஆங்கவர்
தணிவில்நீள் பெருந்துயர் தணிய வேதநூல்
துணிவினை யருள்செய்தார் தூய வாய்மையார்.

தெளிவுரை : வணிகரான சிவநேசரும் அவருடைய சுற்றத்தவரும் அதைக் கேட்டு மயங்கி ஞானசம்பந்தரின் அழகிய மலரடிகளில் விழுந்து பலவும் கூறிக் குறையிரந்து அழுது புலம்பக் கண்டு, அப்போது அவர்களின் ஆற்ற இயலாத நீண்ட பெருந்துன்பம் தணியுமாறு தூய்மையான வாய்மையுடைய ஞானசம்பந்தர் வேதநூல்களின் விதியான முடிவுகளை எடுத்துக் கூறித் தேற்றியருளினார்.

3014. தெள்ளுநீ தியின்முறை கேட்ட சீர்கிளை
வெள்ளமும் வணிகரும் வேட்கை நீத்திடப்
பள்ளநீர்ச் செலவெனப் பரமர் கோயிலின்
உள்ளெழுந் தருளினார் உடைய பிள்ளையார்.

தெளிவுரை : தெளிந்த நீதி நூலின் ஒழுக்க முறைகளைக் கேட்ட சிறப்புடைய சுற்றத்தாரான பெருங்கூட்டமும் சிவநேசரும் தாம் கொண்ட விருப்பம் நீங்கிட, மேடான இடத்தினின்று பாயும் நீரின் வேகம் போன்ற விரைவுடன் கோபுர வாயிலினின்றும் இறைவரின் திருக்கோயிலுள் ஞானசம்பந்தர் எழுந்தருளினார்.

3015. பான்மையால் வணிகரும் பாவை தன்மணம்
ஏனையோர்க் கிசைகிலேன் என்று கொண்டுபோய்
வானுயர் கன்னிமா டத்து வைத்தனர்
தேனமர் கோதையும் சிவத்தை மேவினாள்.

தெளிவுரை : முன்னை ஊழ்வினையின் நியதியால் சிவநேசரும் பூம்பாவையாரை மற்றவர் எவர்க்கும் மணம் செய்விக்க நான் சம்மதியேன் என எண்ணித் துணிந்து, வான் அளாவ உயர்ந்த அவரது கன்னி மாடத்தின் வைத்து அங்கு வாழும்படி செய்தார். வண்டுகள் மொய்த்தற்கு இடமான மாலையை அணிந்த பூம்பாவையாரும் சிவபெருமானை அடைந்தார்.

3016. தேவர்பிரான் அமர்ந்தருளும் திருக்கபா லீச்சரத்து
மேவியஞா னத்தலைவர் விரிஞ்சன்முதல் எவ்வுயிர்க்கும்
காவலனார் பெருங்கருணை கைதந்த படிபோற்றிப்
பாவலர்செந் தமிழ்பாடிப் பன்முறையும் பணிந்தெழுவார்.

தெளிவுரை : தேவர்களின் தலைவரான சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கும் திருக் கபாலீச்சரத்தினுள் எழுந்தருளிய ஞானசம்பந்தர் நான்முகன் முதலான எல்லா உயிர்களுக்கும் காவலரான இறைவரின் பெருங்கருணை கைகொடுத்தருளியதைத் துதித்துப் பாக்களான மலர்ந்த செந்தமிழைப் பாடிப் பலமுறையும் பணிந்து எழலானார்.

3017. தொழுதுபுறம் போந்தருளித் தொண்டர்குழாம் புடைசூழப்
பழுதில்புகழ்த் திருமயிலைப் பதியில்அமர்ந் தருளுநாள்
முழுதுலகுந் தருமிறைவர் முதல்தானம் பலஇறைஞ்ச
அழுதுலகை வாழ்வித்தார் அப்பதியின் மருங்ககல்வார்.

தெளிவுரை : ஞானசம்பந்தர், தொழுது வெளியே வந்து திருத்தொண்டர் கூட்டம் பக்கத்தில் சூழ்ந்துவரக் குற்றம் இல்லாத புகழுடைய அந்த மயிலைத் தலத்தில் விரும்பித் தங்கியிருந்தளினார். அந்நாளில், எல்லா உலகங்களையும் தந்து காத்தருளும் இறைவர் எழுந்தருளும் முதன்மையுடைய பதிகள் பலவற்றையும் போய் வணங்குவதற்காக, அழுததால் உலகை வாழ்வித்தவரான ஞானசம்பந்தர் அந்தப் பதியினின்று நீங்கிப் போவார் ஆனார்.

3018. திருத்தொண்டர் அங்குள்ளார் விடைகொள்ளச் சிவநேசர்
வருத்தம்அகன் றிடமதுர மொழியருளி விடைகொடுத்து
நிருத்தர்உறை பிறபதிகள் வணங்கிப்போய் நிறைகாதல்
அருத்தியொடும் திருவான்மி யூர்பணிய அணைவுற்றார்.

தெளிவுரை : அங்கு இருக்கும் தொண்டர்கள் விடைபெற்றுக் கொள்ளச் சிவநேசரின் வருத்தம் நீங்கும்படி அவருக்கு இனிய சொற்களைச் சொல்லி விடை தந்து, சிவபெருமான் வீற்றிருக்கும் மற்றத் தலங்களையும் வணங்கிச் சென்று, நிறைந்த காதலால் விளைந்த அன்புடனே திருவான்மியூரை வணங்கச் செல்லலானார்.

3019. திருவான்மி யூர்மன்னும் திருத்தொண்டர் சிறப்பெதிர
வருவார்மங் கலஅணிகள் மறுகுநிரைத் தெதிர்கொள்ள
அருகாக இழிந்தருளி அவர்வணங்கத் தொழுதன்பு
தருவார்தங் கோயில்மணித் தடநெடுங்கோ புரம்சார்ந்தார்.

தெளிவுரை : திருவான்மியூரில் நிலைபெற்று வாழ்கின்ற தொண்டர்கள் சிறப்பாக வரவேற்க வருபவர்களாய் மங்கலம் பொருந்திய மங்கல அணிகளைத் தெருவில் அலங்கரித்து, எதிர்கொண்டு அருகே வந்தபோது முத்துப் பல்லக்கினின்றும் இறங்கியருளி, அத்தொண்டர்கள் தம்மை வணங்கத் தாமும் அவர்களை வணங்கி, அன்பை அளித்து ஆட்கொள்கின்ற இறைவரின் திருக்கோயிலின் அழகிய பெரிய நீண்ட கோபுரத்தைச் சேர்ந்தார்.

3020. மிக்குயர்ந்த கோபுரத்தை வணங்கிவியன் திருமுன்றில்
புக்கருளிக் கோயிலினைப் புடைவலங்கொண் டுள்ளணைந்து
கொக்கிறகு மதிக்கொழுந்தும் குளிர்புனலும் ஒளிர்கின்ற
செக்கர்நிகர் சடைமுடியார் சேவடியின் கீழ்த்தாழ்ந்தார்.

தெளிவுரை : மிகவும் உயர்ந்த கோபுரத்தை வணங்கிப் பெரிய முற்றத்தினுள் புகுந்து, கோயிலின் உள்பாகத்தை வலமாய்ச் சுற்றி வந்து, உள்ளே போய்ச் சேர்ந்து, கொக்கு இறகும் பிறைச்சந்திரனும் கங்கையும் விளங்கும் அந்தி மாலையின் சிவப்புப் போன்ற சடையையுடைய இறைவரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.

3021. தாழ்ந்துபல முறைபணிந்து தம்பிரான் முன்னின்று
வாழ்ந்துகளி வரப்பிறவி மருந்தான பெருந்தகையைச்
சூழ்ந்தஇசைத் திருப்பதிகச் சொன்மாலை வினாவுரையால்
வீழ்ந்தபெருங் காதலுடன் சாத்திமிக இன்புற்றார்.

தெளிவுரை : நிலத்தில் விழுந்து பலமுறையும் வணங்கி முன் நின்று வாழ்வு பெற்று மகிழ்ச்சி பொருந்தப் பிறவி நோய்க்கு மருந்தான பெருந்தகைமையுடைய இறைவரை, உட்கொண்ட பண் பொருந்திய திருப்பதிகமான சொல் மாலையால், வினாவும் உரையுமாய் வரும் அமைப்பில் மிக்க விருப்புடனே பாடி இன்பம் அடைந்தார். (வினாவும் உரையும் என்பது ஒருவகை யாப்பு)

3022. பரவிவரும் ஆனந்தம் நிறைந்ததுளி கண்பனிப்ப
விரவுமயிர்ப் புளகங்கள் மிசைவிளங்கப் புறத்தணைவுற்
றரவநெடுந் திரைவேலை அணிவான்மி யூர்அதனுள்
சிரபுரத்துப் புரவலனார் சிலநாள்அங் கினிதமர்ந்தார்.

தெளிவுரை : சீகாழித் தலைவர், பரவி வருகின்ற ஆனந்தக் கண்ணீர் விழியினின்று துளித்துப் பெருகவும், பொருந்தும் மயிர்ப்புளகம் மேனி எங்கும் உண்டாகி விளங்கவும் பெற்றுக் கோயிலின் வெளியே சேர்ந்து, ஒலியையுடைய நீண்ட அலைகளையுடைய கடற்கரையில் அமைந்த அழகிய திருவான்மியூரில் சில நாட்கள் இனிதாய்த் தங்கியிருந்தார்.

3023. அங்கண்அமர் வார்உலகா ளுடையாரை அருந்தமிழின்
பொங்கும்இசைப் பதிகங்கள் பலபோற்றிப் போந்தருளிக்
கங்கையணி மணிமுடியார் பதிபலவும் கலந்திறைஞ்சிச்
செங்கண்விடைக் கொடியார்தம் இடைச்சுரத்தைச் சேர்வுற்றார்.

தெளிவுரை : திருவான்மியூரில் தங்கியிருப்பவரான ஞானசம்பந்தர் உலகங்களுக்கெல்லாம் தலைவராகிய இறைவரை அரிய தமிழின் மேன் மேல் வளரும் இசையுடைய பதிகங்கள் பலவற்றால் துதித்து, அங்கிருந்து நீங்கிக் கங்கையை அணிந்த அழகிய சடையையுடைய இறைவரின் தலங்கள் பலவற்றையும் அங்கங்குப் போய்ச் சேர்ந்து வணங்கிச் சிவந்த கண்ணையுடைய காளையைக் கொடியாய்க் கொண்ட சிவபெருமானின் திருவிடைச் சுரத்தை அடைந்தார்.

3024. சென்னியிள மதியணிந்தார் மருவுதிரு இடைச்சுரத்து
மன்னுதிருத் தொண்டர்குழாம் எதிர்கொள்ள வந்தருளி
நன்நெடுங்கோ புரம்இறைஞ்சி உட்புகுந்து நற்கோயில்
தன்னைவலங் கொண்டணைந்தார் தம்பிரான் திருமுன்பு.

தெளிவுரை : ஞானசம்பந்தர், தலையில் பிறையை அணிந்த இறைவர் வீற்றிருக்கின்ற திருவிடைச்சுரத்தில் நிலைபெற வாழ்கின்ற தொண்டர் கூட்டம் எதிர்கொள்ளச் சென்றருளி நன்மை தரும் நீண்ட கோபுரத்தை வணங்கி, உள்ளே புகுந்து, கோயிலை வலமாகச் சுற்றி வந்து, தம் இறைவர் திருமுன்பு வந்தணைந்தார்.

3025. கண்டபொழு தேகலந்த காதலால் கைதலைமேல்
கொண்டுதலம் உறவிழுந்து குலவுபெரு மகிழ்ச்சியுடன்
மண்டியபே ரன்புருகி மயிர்முகிழ்ப்ப வணங்கிஎழுந்
தண்டர்பிரான் திருமேனி வண்ணங்கண்டு அதிசயித்தார்.

தெளிவுரை : தம் இறைவரைக் கண்டபோதே மனம் புகுந்து கலந்து எழுந்த பெரு விருப்பத்தால் கைகளைத் தலைமீது கொண்டு நிலத்தில் விழுந்து பொருந்திய பெருமகிழ்ச்சியுடன் பெருகிய பேரன்பினால் உள்ளம் உருகி உரோமம் புளகம் கொள்ள வணங்கி எழுந்து, தேவதேவரான சிவபெருமானின் திருமேனியின் வண்ணத்தைப் பார்த்து வியப்படைந்தார்.

3026. இருந்தஇடைச் சுரம்மேவும் இவர்வண்ணம் என்னேயென்
றருந்தமிழின் திருப்பதிகத் தலர்மாலை கொடுபரவித்
திருந்துமனங் கரைந்துருகத் திருக்கடைக்காப் புச்சாத்திப்
பெருந்தனிவாழ் வினைப்பெற்றார் பேருலகின் பேறானார்.

தெளிவுரை : உலகத்தவரின் பெரும்பேறாக அவதரித்த ஞானசம்பந்தர், சாரல் விளங்க இருந்த அந்தத் திருவிடைச் சுரத்தில் வீற்றிருக்கும் இப்பெருமானின் வண்ணம்தான் என்ன அதிசயம்! என்று அரிய தமிழால் ஆன இனிய திருப்பதிகத் தமிழ் மாலையால் துதித்துத் திருந்தும் உள்ளம் கரைந்து உருகத் திருக்கடைக் காப்புப் பாடியருளிப் பெரிய ஒப்பில்லாத சிவானந்தப் பெருவாழ்வினில் திளைத்து நின்றார்.

3027. நிறைந்தாரா வேட்கையினால் நின்றிறைஞ்சிப் புறம்போந்தங்
குறைந்தருளிப் பணிகின்றார் உமைபாகர் அருள்பெற்றுச்
சிறந்ததிருத் தொண்டருடன் எழுந்தருளிச் செந்துருத்தி
அறந்தளிகள் பயில்சாரல் திருக்கழுக்குன் றினைஅணைந்தார்.

தெளிவுரை : சிவானந்தப் பெருவாழ்வில் நிறைவுற்று ஆராத வேட்கையினால் நீண்ட நேரம் நின்று வணங்கி வெளியேவந்து, அந்தப் பதியில் ஞானசம்பந்தர் தங்கியிருந்து பணிகின்றவராகி, அவ்விறைவரின் அருள்விடை பெற்றுக் கொண்டு, சிறந்த திருத்தொண்டருடன் எழுந்தருளிப் போய்ச் செந்துருத்தி என்ற பண்ணைப் பாடி, வண்டுகள் மொய்க்கின்ற சாரலையுடைய திருக்கழுக்குன்றத்தை அடைந்தருளினார்.

3028. சென்றணையும் பொழுதின்கண் திருத்தொண்டர் எதிர்கொள்ளப்
பொன்திகழும் மணிச்சிவிகை இழிந்தருளி உடன்போந்து
மன்றல்விரி நறுஞ்சோலைத் திருமலையை வலங்கொண்டு
மின்தயங்கும் சடையாரை விருப்பினுடன் பணிகின்றார்.

தெளிவுரை : அங்ஙனம் திருக்கழுக்குன்றத்தில் போய் அடையும் போதில், அந்தப் பதியில் வாழ்கின்ற தொண்டர்கள் வந்து வரவேற்கவே, பொன் விளங்கும் முத்துச் சிவிகையினின்றும் கீழே இறங்கி, அவர்களுடன் சேர்ந்து, மணம் விரிந்து கமழும் நல்ல மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த அம்மலையைச் சுற்றி வலமாக வந்து, மின்போல விளங்கும் சடையுடைய இறைவரை விருப்பத்தோடு பணிபவராய்,

3029. திருக்கழுக்குன் றத்தமர்ந்த செங்கனகத் தனிக்குன்றைப்
பெருக்கவளர் காதலினால் பணிந்தெழுந்து பேராத
கருத்தினுடன் காதல்செயுங் கோயில்கழுக் குன்றென்று
திருப்பதிகம் புனைந்தருளிச் சிந்தைநிறை மகிழ்வுற்றார்.

தெளிவுரை : அந்தத் திருக்கழுக்குன்றத்தின் மீது விரும்பி விளங்க வீற்றிருக்கும் ஒப்பில்லாத செம்பொன் குன்றம் போன்ற வேதநாயகரான சிவபெருமானை, வளரும் மிக்க விருப்பத்தினால், வணங்கி எழுந்து, பொறாது ஊன்றி வைத்த கருத்துடன் காதல் செயும் கோயில் கழுக்குன்று என்ற கருத்தும் மகுடமும் கொண்ட திருப்பதிகத்தைப் பாடி உள்ளம் நிறைந்த மகிழ்வை அடைந்தார்.

3030. இன்புற்றங் கமர்ந்தருளி ஈறில்பெருந் தொண்டருடன்
மின்பெற்ற வேணியினார் அருள்பெற்றுப் போந்தருளி
என்புற்ற மணிமார்பர் எல்லையிலா ஆட்சிபுரிந்
தன்புற்று மகிழ்ந்ததிரு அச்சிறுபாக் கத்தணைந்தார்.

தெளிவுரை : இன்பம் அடைந்து அந்தத் தலத்தில் விரும்பி எழுந்தருளியிருந்து எல்லை இல்லாத பெருந்தொண்டர்களுடனே மின் போன்ற சடையுடைய சிவபெருமானின் திருவருள் விடைபெற்று, அங்கிருந்து நீங்கி, எலும்பு மாலைகளை அணிந்த அழகான மார்பையுடைய இறைவர் எல்லையில்லாத வண்ணம் ஆட்சி செய்து அன்பு பொருந்தி மகிழ்ந்து எழுந்தருளியுள்ள அச்சிறுப்பாக்கத்தை சேர்ந்தார்.

3031. ஆதிமுதல் வரைவணங்கி ஆட்சிகொண்டார் எனமொழியும்
கோதில்திருப் பதிகஇசை குலவியபா டலில்போற்றி
மாதவத்து முனிவருடன் வணங்கிமகிழ்ந் தின்புற்றுத்
தீதகற்றுஞ் செய்கையினார் சின்னாள்அங் கமர்ந்தருளி.

தெளிவுரை : பழைமையுடைய சிவபெருமானை வணங்கி ஆட்சி கொண்டார் எனக்கூறும் மகுடத்தையுடைய குற்றம் இல்லாத திருப்பதிகத்தைப் பண் பொருந்தி விளங்கும் திருப்பாடல்களால் துதித்து, மாதவமுடைய முனிவர்களுடன் வணங்கி மகிழ்ந்து இன்பம் அடைந்து, தீமையை நீக்குவதே தம் செய்கையாகக் கொண்டருளிய ஞானசம்பந்தர் சில நாட்கள் அங்கே தங்கியிருந்து,

3032. ஏறணிந்த வெல்கொடியார் நீறணிந்த திருத்தொண்டர்
எதிர்கொள்ள நேர்ந்திறைஞ் கடந்தருளி விரிசடையில்
ஆறணிந்தார் மகிழ்ந்ததிரு அரசிலியை வந்தடைந்தார்.

தெளிவுரை : காளையைப் பொறித்த வெற்றி பொருந்திய கொடியுடைய சிவபெருமான் எழுந்தருளிய பிறபதிகள் பலவற்றையும் திருநீறு அணிந்த தொண்டர்கள் அங்கங்கும் வந்து வரவேற்கச் சென்று, விரிந்த சடையில் கங்கையாற்றை அணிந்த இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கின்ற திருவரசிலிப் பதியினை வந்து அடைந்தார்.

3033. அரசிலியில் அமர்ந்தருளும் அங்கண்அர சைப்பணிந்து
பரசியெழு திருப்புறவார் பனங்காட்டூர் முதலாய
விரைசெய்மலர்க் கொன்றையினார் மேவுபதி பலவணங்கித்
திரைசெய்நெடுங் கடலுடுத்த திருத்தில்லை நகரணைந்தார்.

தெளிவுரை : திரு அரசிலியில் விரும்பி வீற்றிருக்கும் இறைவரைப் பணிந்து துதித்துத் திருப்புறவார் பனங்காட்டூர் முதலான மணம் கமழ்கின்ற கொன்றைமலரைச் சூடிய இறைவர் எழுந்தருளியிருக்கின்ற பல பதிகளையும் வணங்கிச் சென்று, அலைகளையுடைய நீண்ட கடல், அணிமையாயச் சூழ்ந்த திருத்தில்லை நகரை அடைந்தனர்.

3034. எல்லையில்ஞா னத்தலைவர் எழுந்தருள எதிர்கொள்வார்
தில்லையில்வா ழந்தணர்மெய்த் திருத்தொண்டர் சிறப்பினொடு
மல்கியெதிர் பணிந்திறைஞ்ச மணிமுத்தின் சிவிகையிழிந்
தல்கு பெருங் காதலுடன் அஞ்சலிகொண் டணைகின்றார்.

தெளிவுரை : அளவில்லாத சிவஞானம் உடையவரான ஞானசம்பந்தர் வந்தருள, அதை அறிந்து அவரை எதிர்கொள்பவராய்த் தில்லைவாழ் அந்தணர்களும் சைவத் தொண்டர்களும் சிறப்புக்களுடனே கூடிச்சென்று அவரை எதிரே வணங்கிட அழகிய முத்துச் சிவிகையினின்றும் இறங்கிப் பெருங்காதலுடன் அஞ்சலி செய்து ஞானசம்பந்தர் அணைபவராய்,

3035. திருவெல்லை யினைப்பணிந்து சென்றணைவார் சேண்விசும்பை
மருவிவிளங் கொளிதழைக்கும் வடதிசைவா யிலைவணங்கி
உருகுபெருங் காதலுடன் உட்புகுந்து மறையினொலி
பெருகிவளர் மணிமாடப் பெருந்திருவீ தியைஅணைந்தார்.

தெளிவுரை : தில்லையின் எல்லையைப் பணிந்து மேற்செல்பவராகி நீண்ட வானத்தைப் பொருந்தி விளங்கும் ஒளி பெருகும் வடக்குத்திக்கு வாயிலை வணங்கி, உள்ளம் உருகும் பெருங்காதலுடன் நகரத்தின் உள்ளே புகுந்து, வேதங்களின் ஒலி பெருகி வளர்வதற்கு இடமான அழகிய மாடங்கள் நிறைந்த பெரிய வீதியை அடைந்தார்.

3036. நலம்மலியும் திருவீதி பணிந்தெழுந்து நற்றவர்தம்
குலம்நிறைந்த திருவாயில் குவித்தமலர்ச் செங்கையொடு
தலம்உறமுன் தாழ்ந்தெய்தித் தமனியமா ளிகைமருங்கு
வலம் உறவந் தோங்கியபே ரம்பலத்தை வணங்கினார்.

தெளிவுரை : ஞானசம்பந்தர், நன்மை மிகவும் செய்யும் நிலத்தில் பொருந்த வணங்கி நல்ல தவத்தவர் குழு நிறைந்த திருவாயிலைச் செங்கைகளைத் தலைமீது குவித்துக் கொண்டு நிலத்தில் விழுந்து தாழ்ந்து வணங்கிப் போய்ப் பொன் மாளிகையான அம்பலத்தின் பக்கத்தே வலமாக வந்து உயர்ந்த பேரம்பலத்தை வணங்கினார்.

3037. வணங்கிமிக மனம்மகிழ்ந்து மாலயனும் தொழும்பூத
கணங்கள்மிடை திருவாயில் பணிந்தெழுந்து கண்களிப்ப
அணங்குதனிக் கண்டருள அம்பலத்தே ஆடுகின்ற
குணங்கடந்த தனிக்கூத்தர் பெருங்கூத்துக் கும்பிடுவார்.

தெளிவுரை : சீகாழிப் பிள்ளையார் பேரம்பலத்தை வணங்கி உள்ளம் மகிழ்ந்து திருமாலும் நான்முகனும் தொழும் பூதகணங்கள் நெருங்கிய திருவணுக்கன் திருவாயிலை வணங்கி எழுந்து, கண்கள் களிப்பச் சிவகாமியம்மையார் தனியாய்க் கண்டருளுமாறு அம்பலத்தில் ஆடல் செய்த குணங்களைக் கடந்த மெய்ஞ்ஞான வெளியில் தனிக்கூத்தரின் பெருங்கூத்தை வணங்குபவராய்,

3038. தொண்டர்மனம் பிரியாத திருப்படியைத் தொழுதிறைஞ்சி
மண்டுபெருங் காதலினால் நோக்கிமுகம் மலர்ந்தெழுவார்
அண்டமெலாம் நிறைந்தெழுந்த ஆனந்தத் துள்ளலைந்து
கண்டபே ரின்பத்தின் கரையில்லா நிலையணைந்தார்.

தெளிவுரை : தொண்டர்களின் மனத்தினின்றும் பிரியாது விளங்கும் திருக்களிற்றுப்படியை வணங்கிச் செறிந்த பெருங்காதலால் நோக்கி, முகமலர்ச்சி பெற்று எழுபவரான ஞானசம்பந்தர், அண்டங்கள் எங்கும் நிறைந்து எழுகின்ற சிவானந்தப் பெருக்கினுள் அலைந்து, அனுபவத்துள் கண்ட பேரின்பத்தில் கரையில்லாத நிலையைச் சேர்ந்தருளினார்.

3039. அந்நிலைமை யடைந்துதிளைத் தாங்கெய்தாக் காலத்தின்
மன்னுதிரு அம்பலத்தை வலங்கொண்டு போந்தருளிப்
பொன்னணிமா ளிகைவீதிப் புறத்தணைந்து போதுதொறும்
இன்னிசைவண் தமிழ்பாடிக் கும்பிட்டங் கினிதமர்ந்தார்.

தெளிவுரை : அத்தகைய நிலையை அடைந்து, அந்த அனுபவத்தில் மூழ்கியிருந்து, அங்குத் தங்காத காலத்தில் நிலையான திருச்சிற்றம்பலத்தை வலமாக வந்து வெளியே சென்று, பொன்னால் அழகுபெற்ற மாளிகையுடைய வீதியின் பக்கத்தை அடைந்து, காலந்தோறும் இனிய இசையுடன் கூடிய பாக்களைப் பாடியருளிக் கும்பிட்டுக் கொண்டு அங்கு இனிதாய்த் தங்கியிருந்தனர்.

3040. திருந்தியசீர்த் தாதையார் சிவபாத இருதயரும்
பொருந்துதிரு வளர்புகலிப் பூசுரரும் மாதவரும்
பெருந்திருமால் அயன்போற்றும் பெரும்பற்றப் புலியூரில்
இருந்தமிழா கரர்அணைந்தார் எனக்கேட்டு வந்தணைந்தார்.

தெளிவுரை : உலகம் திருந்துவதற்குக் காரணமான சிறப்புடைய தந்தை சிவபாத இருதயரும், பொருந்திய சைவத் திருவளர்வதற்கு இடமான சீகாழியில் வாழும் அந்தணர்களும், சிவனடியார்களும், பெருந்திருவுடைய திருமாலும் நான்முகனும் போற்றுகின்ற பெரும்பற்றப்புலியூரில் பெருந்தமிழாகரரான ஞானசம்பந்தர் வந்திருக்கின்றார் எனக் கேட்டுத் தாங்கள் அங்கு வந்தடைந்தனர்.

3041. ஆங்கவரைக் கண்டுசிறப் பளித்தருளி அவரோடும்
தாங்கரிய காதலினால் தம்பெருமான் கழல்வணங்க
ஓங்குதிருத் தில்லைவாழ் அந்தணரும் உடனாகத்
தேங்கமழ்கொன் றைச்சடையார் திருச்சிற்றம் பலம்பணிந்தார்.

தெளிவுரை : அங்ஙனம் அங்கு வந்த சிவபாத இருதயர் முதலியவரைக் கண்டு ஞானசம்பந்தர் அவர்களுக்கு மலர்ந்த முகத்துடன் இனிய சொற்கள் கூறி, அவர்களுடன் கூட ஆராத பெருவிருப்பத்துடன் தம் இறைவரின் திருவடிகளை வணங்குவதற்குத் திருமிக்க தில்லைவாழ் அந்தணர்களும் உடன் வரப் போய்த் தேன் மணம் வீசும் கொன்றைமலர் மாலையைச் சூடிய சடையுடைய இறைவரின் திருச்சிற்றம்பலத்தை வணங்கினார்.

3042. தென்புகலி அந்தணரும் தில்லைவா ழந்தணரும்
அன்புநெறி பெருக்குவித்த ஆண்தகையார் அடிபோற்றிப்
பொன்புரிசெஞ் சடைக்கூத்தர் அருள்பெற்றுப் போந்தருளி
இன்புறுதோ ணியில்அமர்ந்தார் தமைவணங்க எழுந்தருள.

தெளிவுரை : தெற்குத் திசையில் உள்ளதான சீகாழி அந்தணர்களும் தில்லையில் வாழும் அந்தணர்களும், அன்பு நெறியைப் பெருகச் செய்த இறைவரின் திருவடிகளைப் போற்றிய பொன் போன்ற புரிந்த சடையையுடைய கூத்தரின் திருவருள் விடைபெற்று வெளி வந்து, இன்பம் பெய்யும் திருத்தோணியில் வீற்றிருக்கும் தோணியப்பரை வணங்குவதற்காகச் செல்வதன் பொருட்டு,

3043. நற்றவர்தங் குழாத்தோடும் நம்பர்திரு நடம்செய்யும்
பொற்பதியின் திருவெல்லை பணிந்தருளிப் புறம்போந்து
பெற்றம்உயர்த் தவர்அமர்ந்த பிறபதியும் புக்கிறைஞ்சிக்
கற்றவர்கள் பரவுதிருக் கழுமலமே சென்றடைவார்.

தெளிவுரை : நல்ல தவத்தவரின் கூட்டத்துடன் கூடி, இறைவர் திருநடனம் செய்கின்ற அழகிய அந்தப் பதியின் திருஎல்லையை வணங்கிப் புறத்தில் சென்று, காளைக் கொடியையுடைய இறைவர் விரும்பி வீற்றிருக்கின்ற மற்றப் பதிகளையும் போய்த் தொழுது, கற்றவர் துதிக்கின்ற சீகாழி தலத்தைப் போய் அடைபவராய்,

3044. பல்பதிகள் கடந்தருளிப் பன்னிரண்டு பெயர்படைத்த
தொல்லைவளப் பூந்தராய் தூரத்தே தோன்றுதலும்
மல்குதிரு மணிமுத்தின் சிவிகையிழிந் தெதிர்வணங்கிச்
செல்வமிகு பதியதன்மேல் திருப்பதிகம் அருள் செய்வார்.

தெளிவுரை : ஞானசம்பந்தர், பல தலங்களையும் கடந்து போய்ப் பன்னிரண்டு பெயர்களையுடைய பழைமையான வளம் வாய்ந்த சீகாழிப் பதியானது தொலைவில் காணப்படவும் திருந்திய முத்துச் சிவிகையினின்றும் இறங்கி வணங்கி திருவருட் செல்வம் நிறைந்த அந்தச் சீகாழிப் பதியின் மீது திருப்பதிகத்தை அருள்பவராய்,

3045. மன்னுமிசை மொழிவண்டார் குழலரிவை என்றெடுத்து
மின்னுசுடர் மாளிகைவிண் தாங்குவபோல் வேணுபுரம்
என்னும்இசைச் சொன்மாலை எடுத்தியம்பி எழுந்தருளிப்
புன்னைமணங் கமழ்புறவப் புறம்பணையில் வந்தணைந்தார்.

தெளிவுரை : நிலைபெற்ற இசையுடைய வண்டார் குழல் என்ற தொடக்கம் உடைய திருப்பதிகத்தைத் தொடங்கி, ஒளிவீசும் சுடர்களைக் கொண்ட மாளிகைகள் விண் தாங்குவன போல் உள்ளன என்னும் கருத்துக் கொண்ட இசையுடன் கூடிய திருப்பதிகத்தை எடுத்துத் துதித்து மேலே சென்று புன்னை மரங்களின் மணம் வீசுதற்கு இடமான சீகாழியின் புறம்பணையில் வந்து சேர்ந்தார்.

3046. வாழிவளர் புறம்பணையின் மருங்கணைந்து வரிவண்டு
சூழுமலர் நறுந்தீப தூபங்க ளுடன்தொழுது
காழிநகர் சேர்மின் எனக் கடைமுடிந்த திருப்பதிகம்
ஏழிசையி னுடன்பாடி எயில்மூதூர் உட்புகுந்தார்.

தெளிவுரை : உலக வாழ்வாக ஊழியிலும் அழியாது வளர்கின்ற புறம்பணையின் அருகில் சேர்ந்து வரி வண்டுகள் மொய்க்கின்ற மலர்களாலும் நல்ல மணமுடைய தூப தீபங்களாலும் வழிபட்டுத் தொழுது, சீகாழி நகரினுள் சேர்மின்கள் மக்களே! என்ற இறுதிச் சீர்களால் அமைந்த மகுடம் உள்ள திருப்பதிகத்தை ஏழிசைகளுடனே பாடியருளியவாறே, மதிலையுடைய அந்தப் பழைய நகரத்தினுள் புகுந்தார்.

3047. சேணுயர்ந்த திருத்தோணி வீற்றிருந்த சிவபெருமான்
தாள்நினைந்த ஆதரவின் தலைப்பாடு தனையுன்னி
நீள்நிலைக்கோ புரம்அணைந்து நேரிறைஞ்சிப் புக்கருளி
வாள்நிலவு பெருங்கோயில் வலங்கொண்டு முன்பணிந்தார்.

தெளிவுரை : ஞானப்பிள்ளையார், வானத்தில் உயர்ந்த திருத்தோணியில் வீற்றிருக்கும் சிவபெருமானின் திருவடிகளை நினைந்த அன்பின் மேன்மையை எண்ணியவராய், நீண்ட நிலைகளையுடைய கோபுரத்தை அடைந்து எதிரில் நிலத்தில் பொருந்த விழுந்து வணங்கி எழுந்து உள்ளே புகுந்து, ஒளி விளங்கும் பெருந்திருக்கோயிலை வலமாகச் சுற்றி வந்து வணங்கி, அங்கு அதன்முன் தொழுதார்.

3048. முன்னிறைஞ்சித் திருவருளின் முழுநோக்கம் பெற்றேறிப்
பொன்னிமயப் பாவையுடன் புணர்ந்திருந்த புராதனரைச்
சென்னிமிசைக் குவித்தகரம் கொடுவிழுந்து திளைத்தெழுந்து
மன்னுபெரு வாழ்வெய்தி மனங்களிப்ப வணங்குவார்.

தெளிவுரை : கோயிலுள் ஞானசம்பந்தர், பிரமபுரீசர் திருமுன்பு வணங்கி, அவரது திருவருளின் முழு நோக்கமும் பெற்றுத் திருத்தோணியான மலையின்மீது ஏறிச்சென்று, பொன்மலை என்னும் இமயமலை அரசனின் மகளான பெரயிநாயகியம்மையாருடன் வீற்றிருக்கின்ற தோணியப்பரைத் தலைமீது கூப்பிய கைகளுடன் நிலம் பொருந்த விழுந்து திளைத்து எழுந்து, நிலைபெற்ற வாழ்வையடைந்து மனம் மகிழ வணங்குபவராய்,

3049. பரவுதிருப் பதிகங்கள் பலவும்இசை யினிற்பாடி
விரவியகண் ணருவிநீர் வெள்ளத்திற் குளித்தருளி
அரவணிந்தார் அருள்பெருகப் புறம்பெய்தி அன்பருடன்
சிரபுரத்துப் பெருந்தகையார் தந்திருமா ளிகைசேர்ந்தார்.

தெளிவுரை : போற்றுகின்ற திருப்பதிகங்கள் பலவற்றையும் பண்ணுடன் பொருந்தப் பாடிப் பொருந்திய கண்ணீர் வெள்ளத்தில் முழுதும் தோய்ந்தருளிப் பாம்பை அணியாய் அணிந்த இறைவரின் திருவருள் பெருகப் பெற்று வெளியே வந்து, அன்பர்களுடன் சீகாழிப் பதியினரான ஞானசம்பந்தர் தம் திருமாளிகையுள் சேர்ந்தார்.

3050. மாளிகையின் உள்ளணைந்து மறையவர்கட் கருள்புரிந்து
தாள்பணியும் பெருங்கிளைக்குத் தகுதியினால் தலையளிசெய்
தாளுடைய தம்பெருமான் அடியவர்க ளுடன்அமர்ந்து
நீளவரும் பேரின்பம் மிகப்பெருக நிகழுநாள்.

தெளிவுரை : சம்பந்தப் பெருமான் தம் மாளிகையுள் புகுந்து, தம்மைப் பார்க்க வந்த அந்தணர்க்கெல்லாம் அருள் விடை தந்து, தம் திருவடிகளை வணங்கி நின்ற பெரிய சுற்றத்தவர்களுக்குத் தகுதிக்கு ஏற்றவண்ணம் தலையி செய்து விடை தந்து, தம்மை ஆள்கின்ற இறைவரின் அடியாருடனே விரும்பி எழுந்தருளியிருந்து, நீண்டு பெருக வரும் பேரின்பமானது மேலும் மேலும் பெருகும்படி நிகழ்ந்து வரும் நாள்களில்,

3051. காழிநா டுடையபிரான் கழல்வணங்கி மகிழ்வெய்த
ஆழியினும் மிகப்பெருகும் ஆசையுடன் திருமுருகர்
வாழிதிரு நீலநக்கர்முதல் தொண்டர் மற்றெனையோர்
சூழுநெடுஞ் சுற்றமுடன் றோணிபுரந் தொழுதணைந்தார்.

தெளிவுரை : சீகாழி நாட்டின் தலைநகரான ஞானசம்பந்தரின் திருவடிகளை வணங்கி மகிழ்ச்சி எய்த எண்ணி, கடலை விடப் பெரிதாகப் பெருகும் ஆசையுடன், திருமுருக நாயனார் வாழ்வுதரும் திருநீலநக்க நாயனார் முதலிய தொண்டர்களும் மற்றவர்களும் தம்மைச் சூழ்ந்த பெரிய சுற்றத்துடனே வந்து, திருத்தோணிபுரத்தை வணங்கிப் பிள்ளையார்பால் வந்தனர்.

3052. வந்தவரை எதிர்கொண்டு மனமகிழ்ந்து சண்பையர்கோன்
அந்தமில்சீர் அடியார்க ளவரோடு மினிதமர்ந்து
சுந்தரவா ரணங்கினுடன் றோணியில்வீற் றிருந்தாரைச்
செந்தமிழின் பந்தத்தால் திருப்பதிகம் பலபாடி.

தெளிவுரை : அங்ஙனம் வந்தவர்களை எதிர் வரவேற்றுத் திருவுள்ளம் மகிழ்ந்து, சீகாழிப் பெருமான், அளவில்லாத சிறப்புடைய அந்த அடியார்களுடனே இனிதாக விரும்பியிருந்து, அழகின் நிலைக்களமான பெரியநாயகியம்மையாருடன் திருத்தோணியில் வீற்றிருந்த தோணியப்பரைச் செந்தமிழ் யாப்பால் பல பதிகங்களையும் பாடி,

3053. பெருமகிழ்ச்சி யுடன்செல்லப் பெருந்தவத்தால் பெற்றவரும்
மருவுபெருங் கிளையான மறையவரும் உடன்கூடித்
திருவளர்ஞா னத்தலைவர் திருமணம்செய் தருளுதற்குப்
பருவம்இது என்றெண்ணி அறிவிக்கப் பாங்கணைந்தார்.

தெளிவுரை : பெருமகிழ்வுடன் இங்ஙனம் இருக்க, பெரிய தவம் செய்ததன் பயனாக ஞானசம்பந்தரைப் பெற்றெடுத்த தந்தையான சிவபாத இருதயரும், பொருந்திய சுற்றத்தவரான அந்தணர்களும் கூடி முத்திச் செல்வம் வளர்வதற்கு ஏதுவான ஞானத்தின் தலைவராம் பிள்ளையார் திருமணம் செய்தருளுதற்கு ஏற்ற பருவம் இதுவாகும் என நினைத்து, தம் எண்ணத்தைப் பிள்ளையாருக்கு அறிவிக்கும் பொருட்டு அவரை அடைந்தார்.

3054. நாட்டுமறை முறையொழுக்கம் ஞானபோ னகருக்கும்
கூட்டுவது மனங்கொள்வார் கோதில்மறை நெறிச்சடங்கு
காட்டவரும் வேள்விபல புரிவதற்கோர் கன்னிதனை
வேட்டருள வேண்டுமென விண்ணப்பம் செய்தார்கள்.

தெளிவுரை : உலகியல் நிலையில் வைதிக ஒழுக்கத்தை ஞானசம்பந்தருக்கும் இசைவித்தலை உள்ளத்தில் கொண்டு குற்றமில்லாத வேத நெறியில் சொல்லப்படும் சடங்குகளுடன் கூடிய வேள்விகளைச் செய்வதற்கு உரிமையைப் பெறும் பொருட்டுத் தாங்கள் ஒரு கன்னியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டிக் கொண்டனர்.

3055. மற்றவர்தம் மொழிகேட்டு மாதவத்தின் கொழுந்தனையார்
சுற்றமுறு பெரும்பாசத் தொடர்ச்சிவிடு நிலைமையராய்ப்
பெற்றம்உயர்த் தவரருள்முன் பெற்றதனால் இசையாது
முற்றியதா யினுங்கூடா தென்றவர்முன் மொழிந்தருள.

தெளிவுரை : இங்ஙனம் கூறிய அவர்களின் சொல்லைக் கேட்டு மாதவத்தின் கொழுந்தைப் போன்ற ஞானசம்பந்தர் சுற்றங்கள் பொருந்திய பெரிய பாசத் தொடக்கினை விட்டு நீங்குவதற்கான நிலைமை உடையவராகிக் காளைக் கொடியை உயர்த்திய சிவபெருமானின் திருவடி ஞானமான உயர்ந்த சிவஞானத்தை முன்னே பெற்றவர் ஆதலால், அவர்களின் மொழிக்கு இசையாமல் நீங்கள் கூறுவது பொருந்திய மொழியாயினும், அது என்னிடம் கூடாத ஒன்றாகும் எனக் கூறியருள,

3056. அருமறையோர் அவர்பின்னும் கைதொழுதங் கறிவிப்பார்
இருநிலத்து மறைவழக்கம் எடுத்தீர்நீர் ஆதலினால்
வருமுறையால் அறுதொழிலின் வைதிகமா நெறியொழுகும்
திருமணம்செய் தருளுதற்குத் திருவுள்ளம் செய்யுமென.

தெளிவுரை : அந்த மறையவர்கள் மேலும் கைகூப்பித் தொழுது அங்கு ஞானசம்பந்தரிடம் அறிவிப்பவராய்ப் பெரிய மண்ணுலகில் வைதிக வழக்கினை நீர் உயர்த்தியருளினீரானால் அவ்வழி வரும் முறையினால் அந்தணர்க்குரிய ஆறு தொழில்களுடன் கூடிய வைதிகமான பெருநெறியில் ஒழுகும் திருமணத்தைச் செய்தருளுதற்குத் திருவுள்ளம் கொள்ளல் வேண்டும், என்று கூறிட

3057. மறைவாழ அந்தணர்தம் வாய்மையொழுக் கம்பெருகும்
துறைவாழச் சுற்றத்தார் தமக்கருளி உடன்படலும்
பிறைவாழுந் திருமுடியில் பெரும்புனலோ டரவணிந்த
கறைவாழுங் கண்டத்தார் தமைத்தொழுது மனங்களித்தார்.

தெளிவுரை : வேதங்கள் வாழ்வு அடையவும், அந்தணர்களின் வைதிக வாய்மையால் வரும் ஒழுக்கம் பெருகும் துறை வாழ்வடையவும், அந்தச் சுற்றத்தார்களுக்கு அருள் செய்து, அவர்களின் வேண்டுகோளுக்கு ஞானசம்பந்தர் சம்மதம் தெரிவிக்கவும், பிறைச்சந்திரன் வாழ்கின்ற திருமுடியில் பெருநீர்க் கங்கையுடன் பாம்பையும் அணிந்த நீலகண்டரான இறைவரை வணங்கி அந்தச் சுற்றத்தார் மகிழ்ந்தனர்.

3058. திருஞான சம்பந்தர் திருவுள்ளஞ் செய்ததற்குத்
தருவாய்மை மறையவரும் தாதையரும் தாங்கரிய
பெருவாழ்வு பெற்றாராய்ப் பிஞ்ஞகனார் அருளென்றே
உருகாநின்று இன்பமுறும் உளமகிழ்ச்சி எய்துவார்.

தெளிவுரை : திருஞானசம்பந்தர் இவ்வாறு திருவுள்ளம் செய்ததற்காக (மணம் செய்து கொள்வதற்கு உடன்பட்டதற்காக) வாய்மையுடை மறையவர்களும் தந்தையாரான சிவபாத இருதயரும் அளவின்றித் தாங்குவதற்குரிய பெருவாழ்வைப் பெற்றவர் ஆகி, இஃது இறைவரின் திருவருளேயாகும் எனத் துணிந்து உள்ளம் உருகி இன்பம் பொருந்திய மனமகிழ்ச்சியுடையவராகி,

3059. ஏதமில்சீர் மறையவரில் ஏற்றகுலத் தோடிசைவால்
நாதர்திருப் பெருமணத்து நம்பாண்டார் நம்பிபெறும்
காதலியைக் காழிநா டுடையபிரான் கைப்பிடிக்கப்
போதுமவர் பெருந்தன்மை எனப்பொருந்த எண்ணினார்.

தெளிவுரை : குற்றம் இல்லாத மறையவர் மரபிலே பொருந்திய குலம் முதலியவற்றுடன் இசைந்ததாகியதால் இறைவரின் திருப்பெரு மணநல்லூரில் வாழும் நம்பாண்டார் நம்பி பெற்ற திருமகளாரைச் சீர்காழித் தலைவரான பிள்ளையார் மணம் செய்தருளுதற்கு அவரது பெருந்தன்மை தகுதியுடையதாகும் என்று பொருத்தமுற எண்ணினர்.

3060. திருஞான சம்பந்தர் சீர்பெருக மணம்புணரும்
பெருவாழ்வு திருத்தொண்டர் மறையவர்கள் மிகப்பேண
வருவாரும் பெருஞ்சுற்றம் மகிழ்சிறப்ப மகள்பேசத்
தருவார்தண் பணைநல்லூர் சார்கின்றார் தாதையார்.

தெளிவுரை : திருஞானசம்பந்தர் சிறப்புப் பெருகும் திருமணம் செய்து கொள்ளும் பெருவாழ்வைப் பற்றித் தொண்டர்களும் அந்தணர்களும் மிகப் பேணவும், வருவார்களாகிய பெருஞ்சுற்றம் மகிழ்ச்சி மிகப் பெறவும் மகட்கொடை பற்றிப் பேசும் பொருட்டு, மரங்கள் நிறைந்த குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருமணநல்லூரைச் சேர்கின்ற தந்தையார்,

3061. மிக்கதிருத் தொண்டர்களும் வேதியரும் உடன்ஏகத்
திக்குநிகழ் திருநல்லூர்ப் பெருமணத்தைச் சென்றெய்தத்
தக்கபுகழ் நம்பாண்டார் நம்பிதாம் அதுகேட்டுச்
செக்கர்முடிச் சடையார்தம் திருப்பாதம் தொழுதெழுவார்.

தெளிவுரை : தொண்டர்களும் அந்தணர்களும் உடன் செல்ல எல்லாத் திக்குகளிலும் புகழ்கின்ற திருநல்லூர்ப் பெருமணத்தைச் சேரத் தகுந்த புகழையுடைய நம்பாண்டார் நம்பிகளும், அவரின் வருகையைக் கேட்டு அறிந்து சிவந்த வானத்தைப் போன்ற சடையை உடைய சிவபெருமானின் திருவடியை வணங்கி எழுபவராய்,

3062. ஒப்பரிய பேருவகை ஓங்கியெழும் உள்ளத்தால்
அப்புநிறை குடம்விளக்கு மறுகெல்லாம் அணிபெருக்கிச்
செப்பரிய ஆர்வமிகு பெருஞ்சுற்றத் தொடுஞ்சென்றே
எப்பொருளும் எய்தினேன் எனத்தொழுதங் கெதிர்கொண்டார்.

தெளிவுரை : ஒப்பில்லாத பெருமகிழ்ச்சி ஓங்கி மேல் எழும் மனத்துடன் நன்னீர் நிறைந்த குடமும் விளக்கும் வைத்து, வீதியை எங்கும் அலங்காரம் செய்து, சொல்வதற்குரிய ஆசைமிகும் சுற்றத்தாருடன் போய், உறுதிப்பொருள்கள் எல்லாவற்றையும் நான் அடைந்தவன் ஆனேன் எனச் சொல்லித் தொழுது அவர்களை வரவேற்றார்.

3063. எதிர்கொண்டு மணிமாடத் தினில்எய்தி இன்பமுறு
மதுரமொழி பலமொழிந்து வரன்முறையால் சிறப்பளிப்பச்
சதுர்முகனின் மேலாய சண்பைவரு மறையவரும்
முதிருணர்வின் மாதவரும் அணைந்ததிறம் மொழிகின்றார்.

தெளிவுரை : நம்பியாண்டார் நம்பி எதிரே போய் வரவேற்று அழைத்துக் கொண்டு சென்று மணிமாடத்தை அடைந்து இன்பமுடைய மதுர மொழிகள் பலவற்றையும் கூறி முறையாய் உபசாரம் செய்து விருந்து முதலான சிறப்புகளைச் செய்ய, நான்முகனை விட மேன்மையுடைய சிவபாத இருதயரும் முதிர்ந்த உணர்வுடைய திருத்தொண்டர்களும் மற்ற அந்தணர்களும் தாங்கள் வந்த திறத்தைக் கூறுபவர்களாகி,

3064. ஞானபோ னகருக்கு  நற்றவத்தின் ஒழுக்கத்தால்
ஊனமில்சீ லத்தும்பால் மகட்பேச வந்ததென
ஆனபே றந்தணர்பால் அருளுடைமை யாம்என்று
வானளவு நிறைந்தபெரு மனமகிழ்ச்சி யொடுமொழிவார்.

தெளிவுரை : ஞான அமுது உண்ட ஞானசம்பந்தருக்கு நல்ல தவம் பொருந்திய இனிமையான ஒழுக்கத்தால் குற்றமற்ற சிறப்புடைய உம் மகளை மணம் பேசுவதற்கு நாங்கள் வந்துள்ளோம் என்று எடுத்துச் சொல்லவும், இவ்வாறு வரப்பெறுகின்ற பேறு அந்தணரான நீங்கள் என்மீது வைத்த கருணையாலாகும். அன்றி, என் தகுதி பற்றி அன்று! என்று வான் நிறைந்த பெரு மனமகிழ்ச்சியுடன் இருதயரை நோக்கி நம்பாண்டார் நம்பி கூறுவாராகி,

3065. உம்முடைய பெருந்தவத்தால் உலகனைத்தும் ஈன்றளித்த
அம்மைதிரு முலைப்பாலில் குழைத்தஆ ரமுதுண்டார்க்
கெம்முடைய குலக்கொழுந்தை யாமுய்யத் தருகின்றோம்
வம்மின்என உரைசெய்து மனமகிழ்ந்து செலவிடுத்தார்.

தெளிவுரை : உம்பெருந்தவத்தினால், உலகங்கள் எல்லாம் பெற்றெடுத்த உமையம்மையாரின் திருமுலைப்பாலில் குழைத்த சிவஞான நிறைவான அமுதத்தை உண்டருளிய பிள்ளையாருக்கு எம்குலக் கொழுந்தான மகளை யாங்கள் உய்யும் பொருட்டு மணத்தால் தருகின்றோம் வாருங்கள் என்று சொல்லால் சொல்லி, உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கி, அவர்களைச் சீர்காழிக்குச் செல்லுமாறு அனுப்பினார்.

3066. பேருவகை யால்இசைவு பெற்றவர்தாம் மீண்டணைந்து
காருலவு மலர்ச்சோலைக் கழுமலத்தை வந்தெய்திச்
சீருடைய பிள்ளையார்க்கு அவர்நேர்ந்த படிசெப்பிப்
பார்குலவும் திருமணத்தின் பான்மைவினை தொடங்குவார்.

தெளிவுரை : மிக்க மகிழ்ச்சியால் நம்பாண்டவரின் சம்மதத்தைப் பெற்ற சிவபாத இருதயர் முதலியவர் மீண்டு போய் மேகங்கள் தவழ்கின்ற பூஞ்சோலைகள் சூழ்ந்த சீகாழிப் பதியை வந்து அடைந்து, சிறப்புப் பொருந்திய ஞானசம்பந்தரிடம் நம்பாண்டரின் சம்மதம் பற்றி விரிவாகச் சொல்லி, உலகம் விளங்கும் திருமணத்தின் பகுதிகளைத் தொடங்குவார்களாய்,

3067. திருமணஞ்செய் கலியாணத் திருநாளும் திகழ்சிறப்பின்
மருவிய ஓரையுங்கணித மங்கலநூ லவர்வகுப்பப்
பெருகுமண நாள்ஓலை பெருஞ்சிறப்பி னுடன் போக்கி
அருள்புரிந்து நன்னாளில் அணிமுளைப்பா லிகைவிதைத்தார்.

தெளிவுரை : திருமணம் செய்ய நின்ற திருமண நாளையும் விளங்கும் சிறப்புடன் கூடிய ஓரையையும் கணித மங்கல நூல் உணர்ந்த சான்றோர் வகுத்துச் சொல்ல, பெருகும் மணஓலையைப் பெருஞ்சிறப்புடன் மணமகள் வீட்டாருக்கும் மற்றச் சுற்றத்தவர் முதலானவர்க்கும் அனுப்பித் திருவருள் புரிந்து கொடுத்த நல்ல நாளில் அழகிய பாலிகைகளில் அழகான முளையை விதைத்தார்கள்.

3068. செல்வம்மலி திருப்புகலிச் செழுந்திருவீ திகளெல்லாம்
மல்குநிறை குடம்விளக்கு மகரதோ ரணம் நிரைத்தே
எல்லையிலா வொளிமுத்து மாலைகளெங் கணும் நாற்றி
அல்கு பெருந் திருவோங்க அணிசிறக்க அலங்கரித்தார்.

தெளிவுரை : செல்வம் நிறைந்த சீகாழிப் பதியின் செழித்த வீதிகளில் நிறை குடங்களையும் விளக்குகளையும் மகர தோரணங்களையும் வரிசையாய் அமைத்து அளவுபடாத ஒளியுடைய முத்து மாலைகளை எங்கும் தொங்க விட்டு மிக்க பெருந்திரு ஓங்கும்படி அழகு விளங்க அலங்காரம் செய்தனர்.

3069. அருந்தவத்தோர் அந்தணர்கள் அயலுள்ளோர் தாம்உய்யப்
பொருந்துதிரு நாள்ஓலை பொருவிறந்தார் கொண்டணையத்
திருந்துபுகழ் நம்பாண்டார் நம்பிசிறப் பெதிர்கொண்டு
வருந்தவத்தால் மகட்கொடுப்பார் வதுவைவினை தொடங்குவார்.

தெளிவுரை : அரிய தவத்தவர்களான தொண்டர்களும் மறையவர்களும் மற்றும் அயலில் உள்ளவர்களாகிக் கூடிய ஒப்பில்லாத சான்றோர் தாம் உய்யுமாறு பொருந்தும் திருமண நாள் ஓலையை எடுத்துக்கொண்டு வந்து சேர, திருந்தும் புகழையுடைய நம்பாண்டார் நம்பி அச்சிறப்பை முறைமையாக ஏற்றுக் கொண்டு, முன் தொடர்பினால் வரும் தவத்தின் பயனால் தம் மகளாரைப் பிள்ளையாருக்கு மணமகளாகத் தருபவராகித் திருமணத்திற்கான செயல்களைச் செய்யலானார்.

3070. மன்னுபெருஞ் சுற்றத்தார் எல்லாரும் வந்தீண்டி
நன்னிலைமைத் திருநாளுக் கெழுநாளாம் நன்னாளில்
பன்மணிமங் கலமுரசம் பல்லியங்கள் நிறைந்தார்ப்ப
பொன்மணிப்பா லிகைமீது புனிதமுளை பூரித்தார்.

தெளிவுரை : நிலைத்த புகழையுடைய சுற்றத்தவர் அனைவரும் சீகாழியில் வந்து கூடி, திருமணமான நன்னிலை பெறும் நாளுக்கு ஏழுநாட்களுக்கு முன், நல்ல நாளிலே, பல அழகிய மங்கல முரசும் பலவகை வாத்தியங்களும் நிறைந்து ஒலிக்க, பொன் இட்ட அழகிய பாலிகைகளின் மீது தூய முளையை நிறைத்துத் தெளித்தார்கள்.

3071. சேணுயரும் மாடங்கள் திருப்பெருகு மண்டபங்கள்
நீணிலைய மாளிகைகள் நிகரில்அணி பெறவிளக்கிக்
காணவரு கைவண்ணம் கவின்ஓங்கும் படியெழுதி
வாணிலவு மணிக்கடைக்கண் மங்கலக்கோ லம்புனைந்து.

தெளிவுரை : வானத்தில் உயர்ந்த மாடங்களையும் செல்வம் மிகும் மண்டபங்களையும் பெரிய நிலைகளையுடைய மாளிகைகளையும் ஒப்பில்லாத அழகு பெறுமாறு அலங்காரம் செய்து காட்சி பொருந்த வரும் ஓவியத்திலும் அழகு மிகுமாறு சித்தரித்து வடிவங்களை அங்கங்கும் எழுதி, ஒளியுடைய அழகிய மணிகள் பதித்த முதல்கடை வாயிலில் மங்கலக் கோலங்களைச் செய்து,

3072. நீடுநிலைத் தோரணங்கள் நீள்மறுகு தொறும்நிரைத்து
மாடுயரும் கொடிமாலை மணிமாலை இடைப்போக்கிச்
சேடுயரும் வேதிகைகள் செழுஞ்சாந்து கொடுநீவிப்
பீடுகெழு மணிமுத்தின் பெரும்பந்தர் பலபுனைந்தார்.

தெளிவுரை : உயர்ந்த நிலையுடைய தோரணங்களை நீண்ட வீதிகள் தோறும் வரிசையாய் அமைத்துப் பக்கங்களில் உயர்ந்த பசிய கொடி மாலைகளையும் மணி மாலைகளையும் இடையிடையே புக அமைத்து, ஒளியுடைய திண்ணைகளைச் செழுமையுடைய சுண்ணச் சாந்தினால் மெழுகிப் பெருமை விளங்கும் மணி முத்துக்கள் நிறைந்த பெரும் பந்தல்கள் பலவற்றையும் அமைத்தனர்.

3073. மன்றல்வினைத் திருமுளைநாள் தொடங்கிவரு நாளெல்லாம்
முன்றில்தொறும் வீதிதொறும் முகநெடுவா யில்கள்தொறும்
நின்றொளிரும் மணிவிளக்கு நிறைவாசப் பொற்குடங்கள்
துன்றுசுடர்த் தாமங்கள் தூபங்கள் துதைவித்தார்.

தெளிவுரை : திருமணச் செயல்களுள் முளை பூரித்த நாள் தொடங்கி வரும் நாட்களில் எல்லாம் வீதிகள் தோறும், மாடங்களின் முற்றங்கள் தோறும், நீண்ட முன் வாயில் தோறும் விளக்கம் செய்யும் மணி விளக்குகளும், மணமுடைய தூயநீர் நிறைந்த பொன் குடங்களும், நெருங்கிய ஒளியுடைய மாலைகளும், தூபங்களுமாகிய இவற்றை நெருக்கமாக அமைத்தனர்.

3074. எங்கணும்மெய்த் திருத்தொண்டர் மறையவர்கள் ஏனையோர்
மங்கலநீள் மணவினைநாள் கேட்டுமிக மகிழ்வெய்திப்
பொங்குதிருப் புகலிதனில் நாள்தோறும் புகுந்துஈண்ட
அங்கண்அணைந் தவர்க்கெல்லாம் பெருஞ்சிறப்பு மிகவளித்தார்.

தெளிவுரை : எல்லா இடங்களிலும் உண்மைத் தொண்டர்களும் அந்தணர்களும் மற்றவர்களும் மங்கலம் பெருகும் மணச்செயல்கள் நிகழும் நாளைக் கேட்டு, மிக்க மகிழ்ச்சி அடைந்து, திருப்பெருகும் சீகாழிப் பதியில் நாள்தோறும் வந்து நெருங்க, அங்ஙனம் அங்கு வந்து சேர்ந்தவர்க்கெல்லாம் பெரிய சிறப்பை மிகவும் அளித்தனர்.

3075. மங்கலதூ ரியநாதம் மறுகுதொறும் நின்றியம்பப்
பொங்கியநான் மறையோசை கடலோசை மிசைபொலியத்
தங்குநறுங் குறையகிலின் தழைத்தசெழும் புகையினுடன்
செங்கனல்ஆ குதிப்புகையும் தெய்வவிரை மணம்பெருக.

தெளிவுரை : மங்கலம் பொருந்திய வாத்தியங்களின் ஒலி வீதிதோறும் நின்று ஒலிக்க, மேன்மேல் ஓங்கி எழுந்த நான்மறைகளின் ஒலியானது கடல் ஒலியை விட அதிகமாய் விளங்க, தங்கும் நறுமணம் உள்ள அகில் துண்டங்களின் மிக்க செழும்பகையுடன், செந்தீயுடன் கூடிய வேள்விப் புகையும் சேர்ந்து தெய்வீக மணமாய் மணம் பெருகவும்,

3076. மங்கலதூ ரியநாதம் மறுகுதொறும் நின்றியம்பப்
பொங்கியநான் மறையோசை கடலோசை மிசைபொலியத்
தங்குநறுங் குறையகிலின் தழைத்தசெழும் புகையினுடன்
செங்கனல்ஆ குதிப்புகையும் தெய்வவிரை மணம்பெருக.

தெளிவுரை : எண் திசையில் உள்ள மக்களும் அங்கங்கு உள்ள வளப்பொருள்களுடன் நெருங்க, பண்டங்கள் நிறையச் சேமிக்கும் சாலைகளும் பல்வேறு விதமாக விளங்க, மிக்க பெருநிதியின் குவியல்கள் மலை விளங்குதல் போல் மலிய, உணவுத் தொழில்களினின்று எழும் ஓசைகள் இடையறாத ஒலியாய்ப் பெருக,

3077. மாமறைநூல் விதிச்சடங்கின் வகுத்தமுறை நெறிமரபின்
தூமணநல் லுபகரணம் சமைப்பவர்தந் தொழில்துவன்றத்
தாமரையோன் அனையபெருந் தவமறையோர் தாம்எடுத்த
பூமருவு பொற்கலசப் புண்ணியநீர் பொலிவெய்த.

தெளிவுரை : சிறந்த மறைநூல்களில் விதித்த சடங்குகளின் பொருட்டு வகுத்த முறை வழி மரபினால் தூய மணத்துக்குரிய நல்ல வேள்விப் பொருள்களை அமைத்து ஒழுங்குபடுத்தபவர்களின் தொழில் நெருங்க, நான்முகனைப் போன்ற பெருந்தவ மறையவர் எடுத்த பூக்கள் பொருந்திய பொற்குடங்களில் நிறைந்த புண்ணிய நீர் திகழ,

3078. குங்குமத்தின் செழுஞ்சேற்றின் கூட்டமைப்போர் இனங்குழுமப்
பொங்குவிரைப் புதுக்கலவைப் புகையெடுப்போர் தொகைவிரவத்
துங்கநறுங் கர்ப்பூரச் சுண்ணம்இடிப் போர்நெருங்க
எங்குமலர்ப் பிணைபுனைவோர் ஈட்டங்கள் மிகப்பெருக.

தெளிவுரை : குங்குமப் பூவின் கொழுமையான சேறான சந்தனக்குழம்பை அமைப்பவரின் இனங்கள் கூட, மிக்க மணமுடைய மணப்பொருள்கள் கூட்டிய கலவையின் தூபப் புகை எடுப்பவர் கூட்டம் பெருக, உயர்வுடைய நறுமணம் உள்ள கற்பூரச் சுண்ணத்தை இடிப்போர் நெருங்க, எங்கும் மலர்களால் ஆன பிணையல் முதலான பலவகைப்பட்ட மாலைகளைத் தொடுப்பவர் கூட்டம் பெருக.

3079. இனையபல வேறுதொழில் எம்மருங்கும் நிரைத்தியற்று
மனைவளரு மறுகெல்லாம் மணவணிசெய் மறைமூதூர்
நினைவரிய பெருவளங்கள் நெருங்குதலால் நிதிக்கோமான்
தனையிறைவர் தாம்ஏவச் சமைத்ததுபோல் அமைந்துளதால்.

தெளிவுரை : இப்படிப் பலவகைப்பட்ட வெவ்வேறு தொழில்களை எல்லாப் பக்கங்களிலும் ஒழுங்குபடச் செய்யும் மனைகள் உள்ள வீதிகளில் எல்லாம் மணவிழாவை விளக்கமாகக் காட்டும் மறையவர்கள் வாழ்கின்ற அவ்வூர், நினைப்பதற்கும் அரிய பெரிய வளங்கள் நெருங்கிய அதனால், குபேரனைச் சிவபெருமான் ஏவியதால் அவனே வகுத்ததைப் போலவே விளங்கியது.

3080. மாறி லாநிறை வளந்தரு புகலியின் மணமீக்
கூறு நாளின்முன் னாளினில் வேதியர் குழாமும்
நீறு சேர்திருத் தொண்டரும் நிகரிலா தவருக்
காறு சூடினார் அருன்திருக் காப்புநா ணணிவார்.

தெளிவுரை : மாறுபாடில்லாத நிறைந்த வளத்தை அளிக்கும் சீகாழிப் பதியில் திருமணத்தை மேற்கொள்ளும் திருநாளின் முன்நாளில், அந்தணர் கூட்டமும், திருநீறு அணிந்த தொண்டர்களும் கூடி, ஒப்பில்லாத பிள்ளையாருக்குக் கங்கையைத் தலையில் சூடிய இறைவரின் அருள் பொருந்திய திருக்காப்பு நாணை அணிபவராகி,

3081. வேத வாய்மையின் விதியுளி வினையினால் விளங்க
ஓத நீர்உல கியல்முறை ஒழுக்கமும் பெருகக்
காதல் நீள்திருத் தொண்டர்கள் மறையவர் கவினார்
மாதர் மைந்தர்பொற் காப்புநாண் நகர்வலம் செய்தார்.

தெளிவுரை : வேத வாய்மையில் கூறும் விதிகள் இதனால் விளங்கவும் கடல் சூழ்ந்த உலக நடைமுறை ஒழுக்கங்கள் மிகவும், அன்புமிக்க திருத்தொண்டர்களும் வேதியர்களும் அழகான மங்கையர்களும் ஆடவரும் கூடிப் பொன்னால் ஆன காப்புநாணை நகர்வலம் வருமாறு செய்தனர்.

3082. நகர்வ லஞ்செய்து புகுந்தபின் நவமணி யணிந்த
புகரில் சித்திர விதானமண் டபத்தினிற் பொலியப்
பகரும் வைதிக விதிச்சமா வர்த்தனப் பான்மை
திகழ முற்றிய செம்மலார் திருமுன்பு சேர்ந்தார்.

தெளிவுரை : காப்புநணை நகர்வலம் வரச்செய்து புகுந்த பின்பு, நவமணிகளால் ஆன குற்றம் இல்லாத ஓவியங்களால் மேற்கட்டி அமைக்கப்பட்ட மண்டபத்தில் விளங்குமாறு, நூல்களால் எடுத்துக் கூறப்படும் வைதிக விதிகளின்படி சமாவர்த்தனமாகிய தன்மை விளங்கும்படி சிறந்த ஞானசம்பந்தரின் திருமுன்பு வந்து சேர்ந்தனர்.

3083. செம்பொ னின்பரி கலத்தினில் செந்நெல்வெண் பரப்பின்
வம்ப ணிந்தநீள் மாலைசூழ் மருங்குற வமைத்த
அம்பொன் வாசநீர்ப் பொற்குடம் அரசிலை தருப்பை
பம்பு நீள்சுடர் மணிவிளக் கொளிர்தரும் பரப்பில்.

தெளிவுரை : செம்பொன்னால் ஆன தட்டில் செந்நெல்லால் ஆன வெண்பரப்பின் மீது மணம் பொருந்திய நீண்ட மாலைகள் இரண்டு பக்கங்களிலும் சூழ அமைக்கப்பட்ட மணமுடைய நீர் நிறைந்த பொன்குடமும் அரசிலையும் தருப்பையும் பரவிய நீண்ட ஒளியுடைய அழகான விளக்கும் பொருந்திய பரப்பில்,

3084. நாத மங்கல முழக்கொடு நற்றவ முனிவர்
வேத கீதமும் விம்மிட விரைகமழ் வாசப்
போது சாந்தணி பூந்துகில் புனைந்தபுண் ணியம்போல்
மீது பூஞ்சய னத்திருந் தவர்முன்பு மேவி.

தெளிவுரை : வாத்தியங்களின் ஒலியால் ஆன மங்கல முழக்கத்துடனே நல்ல தவமுனிவர்களின் வேதகீத ஒலியும் நிறைய, நறுமணம் வீசும் மலர்களும் சாந்தும் அணிகளும், அழகான ஆடையும் புனைந்த புண்ணியம் போல் அழகிய மலர் அமளி மீது வீற்றிருந்த பிள்ளையாரின் திருமுன்பு அடைந்து,

3085. ஆர்வ மிக்கெழும் அன்பினால் மலர்அயன் அனைய
சீர்ம றைத்தொழிற் சடங்குசெய் திருந்துநூல் முனிவர்
பார்வ ழிப்பட வரும்இரு வினைகளின் பந்தச்
சார்பொ ழிப்பவர் திருக்கையில் காப்புநாண் சாத்த.

தெளிவுரை : ஆர்வம் மிகுந்து எழுவதால் ஆன அன்பால், தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகனைப் போன்ற சிறந்தி மறைவிதித் தொழில் செய்யும் சடங்குகளைச் செய்யும் நூல்வல்ல வேதியர்கள், உலகில் பிறவி எடுக்க வரும் இருவினைகளின் சார்பை நீக்குபவரான ஞானசம்பந்தரின் திருக்கையில் காப்புநாணைக் கட்ட,

3086. கண்ட மாந்தர்கள் கடிமணம் காணவந் தணைவார்
கொண்ட வல்வினை யாப்பவிழ் கொள்கைய வான
தொண்டர் சிந்தையும் வதனமும் மலர்ந்தன சுருதி
மண்டு மாமறைக் குலம்எழுந் தார்த்தன மகிழ்ந்தே.

தெளிவுரை : காப்பு நாணைக் கட்டியதைப் பார்த்தவர்களும் மணத்தைக் காண்பதற்காக வந்தவர்களும் பற்றிய வலிய கட்டை அவிழ்த்து நீக்கும் கொள்கையுடைய தொண்டர்களும் என்னும் இவர்களின் உள்ளமும் முகங்களும் மலர்ச்சி பெற்றன. சுருதிகள் நிறைந்த மறைக்குலங்கள் மகிழ்ச்சி பெற்று மேல் ஓங்கி ஒலித்தன.

3087. நிரந்த கங்குலின் நிதிமழை விதிமுறை யெவர்க்கும்
புரந்த ஞானசம் பந்தர்தாம் புன்னெறிச் சமய
அரந்தை வல்லிருள் அகலமுன் னவதரித் தாற்போல்
பரந்த பேரிருள் துரந்துவந் தெழுந்தனன் பகலோன்.

தெளிவுரை : பரவிய இரவில் வேத விதி முறைப்படி நிதி மழையாகப் பொழிந்து அருளிய ஞானசம்பந்தர் முன் புன்மையான நெறிகளான புறச்சமயங்களின் துன்பம் தரும் வலிய இருள் நீங்க வந்து தோன்றினாற்போல் பரந்த பேரிருளை நீக்கிக் கதிரவன் தோன்றினான்.

3088. அஞ்சி றைச்சுரும் பறைபொழில் சண்பையாண் டகையார்
தம்சி வத்திரு மணஞ்செயத் தவஞ்செய்நாள் என்று
மஞ்ச னத்தொழில் புரிந்தென மாசிருள் கழுவிச்
செஞ்சு டர்கதிர்ப் பேரணி யணிந்தன திசைகள்.

தெளிவுரை : அழகான வண்டுகள் இசைபாடும் பொழில்கள் சூழ்ந்த சீகாழியின் ஆண் தகையரான ஞானசம்பந்தர், சிவத்திருமணம் செய்தற்கிடமாகத் தவம் செய்யப்பெறும் நாள் இது என்று எண்ணித் திருமஞ்சனத் தொழிலைச் செய்தல்போல் மாசுடைய இருளைக் கழுவி நீக்கிப் பகலோனது செஞ்சுடரான கதிர்களின் பேரணியைத் திசைகள் பூண்டு கொண்டன.

3089. பரம்பு தம்வயின் எங்கணும் உள்ளபல் வளங்கள்
நிரம்ப முன்கொணர்ந் தெண்திசை யவர்நெருங் குதலால்
தரங்க டந்தவர் தந்திருக் கல்லியா ணத்தின்
வரம்பில் தன்பயன் காட்டுவ தொத்தது வையம்.

தெளிவுரை : பெருகிய தங்களிடத்தில் எவ்வெவ்விடங்களிலும் உள்ள பல வளங்களையும் மிகுதிப்பட முன்னே கொணர்ந்து எட்டுத் திசைகளிலும் உள்ளவர்கள் நெருங்கி வந்து கூடியதால், ஒப்பில்லாதவரான ஞானசம்பந்தரின் திருமணத்தில், அளவற்ற தன் பயனை நிலம் எடுத்துக் காட்டுவதுபோல் விளங்கியது.

3090. நங்கள் வாழ்வென வருந்திரு ஞானசம் பந்தர்
மங்க லத்திரு மணவெழுச் சியின்முழக் கென்னத்
துங்க வெண்திரைச் சுரிவளை ஆர்ப்பொடு சூழ்ந்து
பொங்கு பேரொலி முழக்குடன் எழுந்தது புணரி.

தெளிவுரை : அடியவரான எங்களின் வாழ்வே உருக்கொண்டு வந்தது போல் வரும் திருஞானசம்பந்தரின் மங்கலமான திருமண எழுச்சியில் மங்கல வாத்தியங்களின் ஒலிபோல், பெரிய வெண்மையான அலைகளுடன் சங்குகளின் சத்தத்துடன் சூழ்ந்து மேன்மேல் எழும் பெரிய ஒலியான முழக்கத்துடனே கடல் எழுந்தது.

3091. அளக்கர் ஏழும்ஒன் றாமெனும் பெருமையெவ் வுலகும்
விளக்கு மாமண விழாவுடன் விரைந்துசெல் வனபோல்
துளக்கில் வேதியர் ஆகுதி தொடங்கிடா முன்னம்
வளர்க்கும் வேதியில் வலஞ்சுழித் தெழுந்தது வன்னி.

தெளிவுரை : கடல்கள் ஏழும் ஒன்றாய்ச் சேர்ந்து எழுந்தன என்ற பெருமை கொண்டு எல்லா உலகங்களையும் விளங்கிடச் செய்கின்ற திருமண நிகழ்ச்சியான விழாவுடனே, தாமும் கூடிப்பயன் பெறும் பொருட்டு விரைவாகச் செல்ல ஒருப்பட்டு எழுபவை போன்று, அசைவில்லாத ஒழுக்கத்தையுடைய வேதியர்கள் ஆகுதியைத் தொடங்குவதற்கு முன்னம், மூன்று தீவளர்வதற்கு இடமான வேதிகைகளில் தீயானது வலம் சுழித்து எழுந்தது.

3092. சந்த மென்மலர்த் தாதணி நீறுமெய் தரித்துக்
கந்தம் மேவுவண்டு ஒழுங்கெனுங் கண்டிகை பூண்டு
சிந்தை தூயஅன் பர்களுடன் திருமணம் போத
மந்த சாரியின் மணங்கொணர்ந் தெழுந்தது மருத்து.

தெளிவுரை : அழகான மெல்லிய பூந்தாதுக்களான திருநீற்றை மெய்யில் தாங்கிக் கொண்டு, கூட்டமாகப் பொருந்தும் வண்டுகளின் வரிசையான உருத்திராட்ச மாலைகளைப் பூண்டு, உள்ளம் தூய்மையான அன்பர்களுடன் கூடித் திருமண எழுச்சியில் கலந்து செல்ல மென்மையான வேகத்தினால் பூமணங்களைச் சுமந்த வண்ணம் காற்று வந்தது.

3093. எண்தி சைத்தலத் தியாவரும் புகலிவந் தெய்தி
மண்டும் அத்திரு மணஎழுச் சியின்அணி வாய்ப்பக்
கொண்ட வெண்ணிறக் குரூஉச்சுடர்க் கொண்டல்கள் என்னும்
வெண்து கிற்கொடி நிரைத்தது போன்றது விசும்பு.

தெளிவுரை : எட்டுத் திசைகளின் பகுதிகளில் வாழ்கின்ற எல்லாத் திறத்தவரும் சீகாழியில் வந்து கூடி நெருங்கி எழுந்த அத்திருமண நிகழ்ச்சியில் அழகு பொருந்தும்படி, மேற்கொண்டு தூக்கி எடுத்த வெண்ணிறம் பொருந்திய ஒளியுடைய பெருவெண் மேகங்களாகிய வெண்மையான துணியால் ஆன கொடிகளை வரிசையாய் அமைத்தாற் போன்று வானம் விளங்கியது.

3094. ஏல இந்நலம் யாவையும் எழுச்சிமுன் காட்டும்
காலை செய்வினை முற்றிய கவுணியர் பெருமான்
மூல மாகிய தோணிமேல் முதல்வரை வணங்கிச்
சீல மார்திரு வருளினால் மணத்தின்மேற் செல்வார்.

தெளிவுரை : பொருந்துமாறு இந்நன்மைகள் யாவும் திருமண எழுச்சியின் முன் காட்டுகின்ற காலையில், செய்யும் கடப்பாட்டை முடித்தருளிய கவுணியார் தலைவரான ஞானசம்பந்தர், மூலமான திருத்தோணியின்மேல் உள்ள இறைவரை வணங்கி ஒளிமிக்க வெண்மையான சுடரையுடைய முத்துச்சிவிகையின் மேல் எழுந்தருளி அமர்ந்தார்.

3095. காழி மாநகர் வேதியர் குழாத்தொடும் கலந்து
சூழும் அன்பர்கள் ஏனையோர் துதைந்துமுன் செல்ல
வாழி மாமறை முழங்கிட வளம்பதி வணங்கி
நீழல் வெண்சுடர் நித்திலச் சிவிகைமேற் கொண்டார்.

தெளிவுரை : சீகாழிப் பதியின் அந்தணர் கூட்டத்துடன் கலந்து சுற்றிச் சூழ்ந்த அன்பர்களும் மற்றவர்களும் நெருங்கி முன்னே செல்லச் சென்று வாழ்வு தரும் பெருமுறைகள் முழங்க வளம் வாய்ந்த சீகாழிப் பதியினை வணங்கி ஒளிமிக்க வெண்மையான சுடரையுடைய முத்துச்சிவிகையின் மேல் எழுந்தருளி அமர்ந்தார்.

3096. ஆன வாகனம் ஏறுவார் யாரும்மேற் கொள்ளக்
கான மாகிய தொங்கல்பிச் சங்குடை கவரி
மேனெ ருங்கிட விசும்பினும் நிலத்தினும் எழுந்த
வான துந்துபி முழக்குடன் மங்கல வியங்கள்.

தெளிவுரை : அவரவர்க்குரிய வாகனங்களில் அமர்ந்து செல்பவர்கள் அவ்வவற்றில் ஏறி அமர, காட்டைப் போன்ற தொங்கல்களும், நீலிக் குஞ்சங்களும், குடைகளும், கவரிகளும், மேலே நெருங்கவும், வானத்திலும் நிலத்திலுமாக முறையே தேவதுந்துபி ஒலியுடன் மங்கல இன்னியங்களின் ஒலியும் ஒருங்கே எழுந்தன.

3097. சங்கொடு தாரை சின்னம் தனிப்பெருங் காளந் தாளம்
வங்கியம் ஏனை மற்று மலர்துளைக் கருவி யெல்லாம்
பொங்கிய ஒலியின் ஓங்கிப் பூசுரர் வேத கீதம்
எங்கணும் எழுந்து மல்கத் திருமணம் எழுந்த தன்றே.

தெளிவுரை : சங்கினோடு தாரை, சின்னம், ஒப்பற்ற பெரிய எக்காளம், தாளம், குழல் என்ற இவை போன்ற நாதம் உண்டாகின்ற கருவிகள் எல்லாமும் மேல் எழுந்த ஒலியினால் ஓங்கி அந்தணர்களின் வேத கீதங்களின் ஒலியுடன் பொருந்தி எங்கும் பெருக, திருமணமானது அன்றே எழுச்சி பெற்றுச் சென்றது.

3098. கோதையர் குழல்சூழ் வண்டின் குழாத்தொலி யொருபால் கோல
வேதியர் வேத வாய்மை மிகும்ஒலி யொருபால் மிக்க
ஏதமில் விபஞ்சி வீணை யாழொலி யொருபால் ஏத்தும்
நாதமங் கலங்கள் கீத நயப்பொலி ஒருபா லாக.

தெளிவுரை : மங்கையரின் கூந்தலைச் சூழ்ந்த வண்டுக்கூட்டங்களின் ஒலி ஒரு பக்கத்திலும், அழகிய மறையவர் ஓதும் வேத வாய்மை மிகும் ஒலி ஒரு பக்கத்திலும்,  குற்றம் இல்லாத மிக்க வீணையும் யாழுமான இவற்றின் ஒலி ஒரு பக்கத்திலும், துதிக்கும் நாதத்துடன் கூடிய மங்கலங்களைக் கீதமாய்ப்பாடும் இனிமையான ஒலி ஒரு பக்கத்திலும்,

3099. விண்ணினை விழுங்க மிக்க வெண்துகில் பதாகை வெள்ளம்
கண்வெறி படைப்ப மிக்க கதிர்விரி கவரிக் கானம்
மண்ணிய மணிப்பூண் நீடும் அரிசனம் மலிந்த பொற்பின்
எண்ணிலா வண்ணத் தூசின் பொதிப்பரப் பெங்கும் நண்ண.

தெளிவுரை : மிக்க வெண் துகில் கொடிகளின் கூட்டம் வானவெளியை மறைக்கவும், மிக்க ஒளி வீசும் சாமரைகளின் கூட்டம் கண்கள் கூசவும் விளங்கும் மணிகளையுடைய அணிகளும், நீடும் மஞ்சள் நிறம் மிக்க அழகிய அளவற்ற துணிப் பொதிகளின் கூட்டமும் எங்கும் பொருந்த,

3100. சிகையொடு மான்தோல் தாங்கும் கிடையும் ஆசானும் செல்வார்
புகைவிடும் வேள்விச் செந்தீ இல்லுடன் கொண்டு போவார்
தகைவிலா விருப்பின் மிக்க பதிகங்கள் விளம்பிச் சார்வார்
வகையறு பகையுஞ் செற்ற மாதவ ரியல்பின் மல்க.

தெளிவுரை : பஞ்ச சிகை கொண்ட தோற்றத்துடன் கரிய மான்தோலைப் பூணூலில் கொண்ட வேதம் ஓதும் சிறுவர்களும் உபாத்தியாயருமாகக் கூடிச் செல்லவும், ஓமப் புகைவிடும் வேள்விச் செந்தீயினைத் தம் தம் மனைவியருடனே கொண்டு அந்தணர் செல்லவும், தடுக்க இயலாத விருப்பத்துடன் பெருமையால் சிறந்த திருப்பதிகங்களை ஓதிக்கொண்டு ஓதுவார் போகவும், ஆறுவகையான பகைகளையும் அறுத்தவர்கள் தம்தம் இயல்புடனே நெருங்கவும்,

3101. அறுவகை விளங்குஞ் சைவத் தளவிலா விரதஞ் சாரும்
நெறிவழி நின்ற வேடம் நீடிய தவத்தி னுள்ளோர்
மறுவறு மனத்தி லன்பின் வழியினால் வந்த யோகக்
குறிநிலை பெற்ற தொண்டர் குழாங்குழாம் ஆகி ஏக.

தெளிவுரை : ஆறு வகையாக உள்ள சைவ உட்சமயங்களில் எண்ணில்லாத விரதங்களைச் சேர்ந்த ஒழுக்க வழிகளிலே உரிய வேடங்களால் நீடிய தவத்தில் நின்றவர்களும் குற்றமற்ற மனத்துடன் அன்பின் வழியினால் சிவயோகக் குறியில் நிலை பெற்றவர்களும் கூட்டம் கூட்டமாகப் போகவும்,

3102. விஞ்சையர் இயக்கர் சித்தர் கின்னரர் மிடைந்த தேவர்
அஞ்சனம் நாட்ட ஈட்டத் தரம்பைய ருடனா யுள்ளோர்
தஞ்சுடர் விமானம் ஏறித் தழைத்த ஆதரவி னோடும்
மஞ்சுறை விசும்பின் மீது மணவணி காணச் சென்றார்.

தெளிவுரை : வித்தியாதரர்களும் இயக்கர்களும் சித்தர்களும் கின்னரர்களும் நெருங்கிய தேவர்களும் மை பூசப்பெற்ற கூட்டமான அரம்பையர்களுடன் உள்ளவர்களும் தங்கள் தங்களுடைய ஒளி பொருந்திய வான விமானங்களில் ஏறிக்கொண்டு மேன்மேல் மிக்க ஆசையுடன் மேகங்கள் தவழும் வான் வழியாகத் திருமண நிகழ்ச்சியைக் காண்பதற்காகச் சென்றனர்.

3103. மற்றிவர் மிடைந்து செல்லும் மங்கல வனப்பின் காட்சி
முற்றஇத் தலத்தி னுள்ளோர் மொய்த்துடன் படரும் போதில்
அற்புத நிகழ்ச்சி எய்த அணைதலால் மணமேற் செல்லும்
பொற்பமை மணத்தின் சாயை போன்றுமுன் பொலியச் செல்ல.

தெளிவுரை : இவ்வாறு தேவர்கள் நெருங்கிச் செல்கின்ற மங்கலமான அழகிய காட்சி, இம்மண்ணுலகத்தவர் யாவரும் நெருங்கிக் கூடித் திருமண எழுச்சியில் செல்லும்போது அற்புதமான தன்மை பொருந்த மேலே உடன் செல்வதால், மண எழுச்சியின் மீது செல்கின்ற அழகு மிக்க ஒரு மணஎழுச்சியின் நிழலைப் போல விளங்குமாறு செல்ல,

3104. தவஅர சாள உய்க்கும் தனிக்குடை நிழற்றச் சாரும்
பவமறுத் தாள வல்லார் பாதம்உள் ளத்துக் கொண்டு
புவனங்கள் வாழ வந்த பூந்தராய் வேந்தர் போந்து
சிவனமர்ந் துறையு நல்லூர்த் திருப்பெரு மணத்தைச் சேர்ந்தார்.

தெளிவுரை : தவ அரசை ஆட்சி செய்வதற்குப் பிடித்தலைப் போன்று ஒப்பில்லாத முத்துக் குடைகள் மேலே நிழல் செய்யச் சாரும் பிறவியை அறுத்து ஆட்கொள்ள வல்ல இறைவரின் திருவடிகளைத் தம் திருவுள்ளத்தில் வைத்துக் கொண்டவராய், உலகங்கள் எல்லாம் வாழ்வடையும் பொருட்டு வந்து தோன்றிய சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் சென்றருளிச் சிவபெருமான் விரும்பி எழுந்தருளிய திருநல்லூர்ப் பெருமணத்தை அடைந்தார்.

3105. பெருமணக் கோயி லுள்ளார் மங்கலம் பெருகு மாற்றால்
வருமணத் திறத்தின் முன்னர் வழியெதிர் கொள்ளச் சென்று
திருமணம் புணர எய்தும் சிரபுரச் செம்ம லார்தாம்
இருள்மறைத்து இலங்கு கண்டத் திறைவர்தங் கோயில் புக்கார்.

தெளிவுரை : திருநல்லூர் பெருமணத்தில் உள்ள கோயிலில் உள்ள தொண்டர்கள் மங்கலம் மிக்குப் பெருகுமாறு, இனி நிகழ உள்ள திருமணத்தின் முன் வழியிலே வந்து எதிர்கொள்ளத் திருமணம் செய்து கொள்ள வருகின்ற ஞானசம்பந்தர் சென்று, கரிய நஞ்சு தன்னுள் விளங்கும் கழுத்தையுடைய இறைவரின் கோயிலுள் புகுந்தார்.

3106. நாதரைப் பணிந்து போற்றி நற்பொருட் பதிகம் பாடிக்
காதல்மெய் யருள்முன் பெற்றுக் கவுணியர் தலைவர் போந்து
வேதியர் வதுவைக் கோலம் புனைந்திட வேண்டும் என்னப்
பூதநா யகர்தங் கோயில் புறத்தொரு மடத்திற் புக்கார்.

தெளிவுரை : அக்கோயிலில் உள்ள இறைவரைப் பணிந்து போற்றி, நல்ல பொருள் பொதிந்த பதிகத்தைப் பாடிப் பெரு விருப்பத்தை விளைக்கின்ற இறைவரின் மெய்யருளை முன் பெற்றவராய்க் கவுணியர் தலைவரான பிள்ளையார் வெளியே வந்தார். அப்போது மறையவர்கள் திருமணக் கோலத்தைக் கொள்ள வேண்டும் என வேண்டிக் கொள்ள அதை அவர் செவியேற்றுப் பூதகணங்களின் தலைவரான இறைவரின் கோயில் பக்கத்தே உள்ள ஒரு மடத்தினுள் புகுந்தார்.

3107. பொற்குடம் நிறைந்த வாசப் புனிதமஞ் சனநீ ராட்டி
விற்பொலி வெண்பட் டாடை மேதக விளங்கச் சாத்தி
நற்றிரு வுத்த ரீய நறுந்துகில் சாத்தி நானப்
பற்பல கலவைச் சாந்தம் பான்மையில் அணிந்த பின்னர்.

தெளிவுரை : பொன் குடத்தில் நிறைந்த மணமுடைய புனிதமான மஞ்சனநீரால் ஞானசம்பந்தரை நீராட்டி, ஒளி விளங்கும் வெண்மையான பட்டாடையை அழகு பெற உடுத்தி, நல்ல உத்தரீயமான நறுமணத் துகிலையும் உடுத்தி, மணம் கமழும் கத்தூரியுடன் பல பொருட்களைக் கூட்டி அமைந்த சாந்தத்தைப் பண்பு அமையச் சாத்திய பின்னர்,

3108. திருவடி மலர்மேற் பூத்த செழுந்தகைச் சோதி யென்ன
மருவிய தரளக் கோவை மணிச்சரி அணையச் சாத்தி
விரிசுடர்ப் பரட்டின் மீது விளங்குபொற் சரட்டில் கோத்த
பெருகொளி முத்தின் தாமம் பிறங்கிய தொங்கல் சாத்தி.

தெளிவுரை : திருவடி மலர்களின் மீது பூத்த செவ்விய விளக்கின் சோதி போன்று பொருந்திய முத்துக் கோவைகளையுடைய மணி வளையை அங்குப் பொருந்தச் சாத்தி, விரிகின்ற ஒளியுடைய பரடுகளின் மேல் விளங்கிய பொன் கம்பியில் கோத்த பெருகும் ஒளியுடைய முத்து மாலையில் விளங்கும் குஞ்சத்தைச் சாத்தி,

3109. தண்சுடர்ப் பரிய முத்துத் தமனிய நாணிற் கோத்த
கண்கவர் கோவைப் பத்திக் கதிர்க்கடி சூத்தி ரத்தை
வெண்சுடர்த் தரள மாலை விரிசுடர்க் கொடுக்கின் மீது
வண்திரு அரையில் நீடு வனப்பொளி வளரச் சாத்தி.

தெளிவுரை : குளிர்ந்த ஒளி வீசுகின்ற பெரிய முத்துக்களைப் பொன் கயிற்றில் கோத்த, பார்ப்பவரின் கண்களைக் கவரத் தக்க கோவை வரிசையையுடைய ஒளி கொண்ட அரைஞாணை, வெண்ணிற ஒளிவீசும்முத்து மாலை விரிந்த சுடர்விடும் கச்சத்தின் மீது வளமை வாய்ந்த அரையில் மிக்க அழகுடனே ஒளிவிளங்க அணிந்து,

3110. ஒளிகதிர்த் தரளக் கோவை யுதரபந் தனத்தின் மீது
தளிர்ஒளி துளும்பு முத்தின் சன்னவீ ரத்தைச் சாத்திக்
குளிர்நில வெறிக்கு முத்தின் பூணநூல் கோவை சாத்தி
நளிர்கதிர் முத்துமாலை நகுசுடர் ஆரஞ் சாத்தி.

தெளிவுரை : ஒளியையுடைய முத்துக் கோவைகளாலான அரைப்பட்டிகையின் மீது தளிர்க்கும் ஒளி மிகும் சன்ன வீரத்தைச் சாத்தி, குளிர்ந்த முத்து ஒளி வீசும் முத்துக்கோவையால் ஆன பூண் நூலை அணிந்து குளிர்ந்த கதிர்களையுடைய முத்து மாலையான ஆரத்தைச் சாத்தி,

3111. வாள்விடு வயிரக் கட்டு மணிவிரல் ஆழி சாத்தித்
தாளுறு தடக்கை முத்தின் தண்டையும் சரியும் சாத்தி
நீளொளி முழங்கைப் பொட்டு நிறைசுடர் வடமும் சாத்தித்
தோள்வளைத் தரளப் பைம்பூண் சுந்தரத் தோள்மேற் சாத்தி.

தெளிவுரை : ஒளிவீசும் வயிரக்கட்டுக் கொண்ட விரல் மோதிரத்தை அணிந்து முழந்தாள் வரையும் நீண்ட வன்மையான கையில் முத்தால் ஆன தண்டையையும் கைச்சரியையும் அணிந்து நீண்ட ஒளி கொண்ட முழங்கைப் பொட்டுடன் வரிசையாய் ஒளி வீசும் மணிவடங்களையும் சாத்தி, தோள் வளையான முத்தால் ஆன அழகிய அணியைத் தோள்மீது சாத்தி,

3112. திருக்கழுத் தாரந் தெய்வக் கண்டிகை மாலை சேரப்
பருத்தமுத் தொழுங்கு கோத்த படரொளி வடமும் சாத்திப்
பெருக்கிய வனப்பின் செவ்வி பிறங்கிய திருவார் காதில்
வருக்கவெண் தரளக் கொத்தின் வடிக்குழை விளங்கச் சாத்தி.

தெளிவுரை : தெய்வத் தன்மை கொண்ட உருத்திராக்க மாலையுடன் சேருமாறு கழுத்தில் அணியும் ஆரமாய்ப் பெரிய முத்துக்களை ஒழுங்காய்க் கோத்த படரும் ஒளியுடைய வடத்தையும் சாத்தி மிக்க அழகோடும் உரிய இலக்கணம் அமைந்த திருப் பொருந்திய காதில், நற்சாதி முத்துக்களால் ஆன மகர குண்டலத்தை விளங்கச் சாத்தி,

3113. நீற்றொளி தழைத்துப் பொங்கி நிறைதிரு நெற்றி மீது
மேற்பட விரிந்த சோதி வெண்சுட ரெழுந்த தென்னப்
பாற்படு முத்தின் பாரப் பனிச்சுடர்த் திரணை சாத்தி
ஏற்பவைத் தணிந்த முத்தின் எழில்வளர் மகுடஞ் சேர்த்தார்.

தெளிவுரை : திருநீற்றின் ஒளி தழைத்துப் பெருகும் நெற்றியின் மீது, விரிந்த சோதியின் வெண்மையான சுடரானது மேல் எழுந்ததைப் போன்று நல்ல தன்மையுடைய முத்தால் ஆன குளிர்ந்த ஒளி விடும் திரணையை அணிந்து, பொருந்துமாறு வைத்து அழகுபடுத்திய முத்தால் ஆன அழகு மிக்க மகுடத்தைச் சாத்தினர்.

3114. இவ்வகை நம்மை யாளும் ஏர்வளர் தெய்வக் கோலம்
கவ்வினை மறையோர் செய்யக் கடிகொள்செங் கமலத் தாதின்
செவ்விநீள் தாம மார்பர் திருவடை யாள மாலை
எவ்வுல கோரும் ஏத்தத் தொழுதுதாம் எடுத்துப் பூண்டார்.

தெளிவுரை : இவ்வாறு நம்மை ஆட்கொள்கின்ற அழகுமிக்க தெய்வத்தன்மை கொண்ட மணக்கோலத்தை அத்தொழிலில் வல்ல அந்தணர் செய்தனர். மணம் பொருந்திய செந்தாமரைத் தாதுக்களையுடைய புதியதாய் மலர்ந்த நீண்ட மாலையை அணிந்த மார்பரான ஞானசம்பந்தர், திருஅடையாள மாலையான உருத்திராக்க மாலையை எல்லா உலகத்தவரும் துதிக்குமாறு வணங்கித் தாமே எடுத்து அணிந்து கொண்டார்.

3115. அழகினுக் கணியாம் வெண்ணீ றஞ்செழுத் தோதிச் சாத்திப்
பழகிய அன்பர் சூழப் படரொளி மறுகி லெய்தி
மழவிடை மேலோர் தம்மை மனங்கொள வணங்கி வந்து
முழுவொலி யெடுப்ப முத்தின் சிவிகைமேல் கொண்ட போது.

தெளிவுரை : அழகுக்கு அழகு செய்கின்ற திருவெண்ணீற்றைப் பஞ்சாட்சரத்தை ஓதி அணிந்து கொண்டு பழகிய அன்பர்கள் சூழ்ந்து வர ஒளியுடைய தெருவில் வந்து இளமையான காளையையுடைய சிவபெருமானை மனமார வணங்கி முழவுகள் ஒலிக்க முத்துச் சிவிகை மீது அமர்ந்து வந்தபோது,

3116. எழுந்தன சங்க நாதம் இயம்பின இயங்கள் எங்கும்
பொழிந்தன விசும்பில் விண்ணோர் கற்பகப் புதுப்பூ மாரி
தொழுந்தகை முனிவர் தொண்டர் சுருதியின் வாழ்த்துப் பொங்கி
வழிந்தன திசைகள் மீது மலர்ந்தன உலகம் எல்லாம்.

தெளிவுரை : எழுந்தன சங்குகள் ஒலி! ஒலித்தன இனிய வாத்தியங்களின் ஒலி! வானத்திலிருந்து தேவர்கள் கற்பகப் பூமழையைப் பொழிந்தனர். தொழுந்தகுதியுடைய முனிவர்களும் தொண்டர்களும் எடுத்தோதும் வேத வாழ்த்தொலிகள் மேல்மேல் எழுந்து எல்லாத் திக்குகளிலும் பரவின. உலகம் மகிழ்ந்தது.

3117. படர்பெருந் தொங்கல் பிச்சம் பைங்கதிர்ப் பீலிப் பந்தர்
அடர்புனை செம்பொற் பாண்டில் அணிதுகிற் சதுக்கம் மல்கக்
கடலின்மீ தெழுந்து நிற்கும் கதிர்நிறை மதியம் போல
வடநிரை யணிந்த முத்தின் மணிக்குடை நிழற்ற வந்தார்.

தெளிவுரை : பரந்த பெரிய குஞ்சங்களும் பிச்சங்களும் பச்சை நிறமுடைய பீலியால் அமைந்த கூட்டங்களும், நெருக்கமாய் அலங்காரம் செய்யப்பட்ட பொன் தகட்டால் ஆன வட்ட அமைப்புடைய அழகிய துணிகளால் அமைந்த மேற்கட்டிகளும் நெருங்கக் கடல்மீது வந்து தோன்றும் கலைகள் நிறைந்த சந்திரன் போல் முத்து வடங்களால் அலங்கரிக்கப்பட்ட முத்துக்குடை மேலே நிழல் செய்ய ஞானசம்பந்தர் வந்தருளினார்.

3118. சீரணி தெருவி னூடு திருமணம் செல்ல முத்தின்
ஏரணி காளம் சின்னம் இலங்கொளித் தாரை யெல்லாம்
பேரொலி பெருக முன்னே பிடித்தன மறைக ளோடு
தாரணி உய்ய ஞான சம்பந்தர் வந்தா ரென்று.

தெளிவுரை : அழகிய தெருவில் திருமண எழுச்சி இவ்வாறு எழுந்து செல்ல முத்தால் ஆன அழகுடைய எக்காளமும் திருச்சின்னமும் ஒளியுடைய தாரையும் என்னும் இவையெல்லாம் வேதங்களுடன் வந்து உய்யும் பொருட்டுத் திருஞானசம்பந்தர் வந்தார் என எடுத்துச் சொல்லிப் பேரொலி முன்னே பெருகுமாறு ஊதின.

3119. மண்ணினுக் கிடுக்கண் தீர வந்தவர் திருநா மங்கள்
எண்ணில பலவும் ஏத்திச் சின்னங்க ளெழுந்த போதவ்
வண்ணலார் வதுவை செய்ய அலங்கரித் தணையப் பெற்ற
புண்ணிய மறையோர் மாட மங்கலம் பொழிந்து பொங்க.

தெளிவுரை : இவ்வுலகத்தில் வாழ்பவரின் துன்பம் நீங்க வந்து தோன்றியருளிய ஞானசம்பந்தரின் திருநாமங்கள் அளவில்லாத பலவற்றையும் எடுத்து ஏத்தித் துதித்துத் திருச்சின்னங்கள் கூறி எழுந்த அச்சமயத்தில், ஞானசம்பந்தர் திருமணம் செய்தற்காக அலங்காரம் செய்து வந்து சேரும் பேறு பெற்ற புண்ணிய அந்தணர் நம்பாண்டாரது திருமாளிகையில் மங்கலங்கள் மிகுந்து மேல் ஓங்கின.

3120. முற்றுமெய்ஞ்ஞானம் பெற்ற மூர்த்தியார் செங்கை பற்ற
நற்பெருந் தவத்தின் நீர்மை நலம்படைத் தெழுந்த தெய்வக்
கற்பகப் பூங்கொம் பன்னார் தம்மையும் காப்புச் சேர்த்துப்
பொற்புறு சடங்கு முன்னர்ப் பரிவுடன் செய்த வேலை.

தெளிவுரை : முற்றிய மெய்ஞ்ஞானத்தையுடைய ஞானசம்பந்தரின் சிவந்த திருக்கையைப் பிடிக்க நல்ல பெரிய தவத்தன்மையால் ஆன நலங்களை எல்லாம் கொண்டு எழுந்த தெய்வக் கற்பகப் பூங்கொம்பு போன்ற அம்மையாரையும் காப்பு அணிந்து அழகிய சங்கற்பம் முதலான சடங்குகளை முன்னர் விருப்பத்துடன் செய்தபோது,

3121. செம்பொன்செய் வாசிச் சூட்டுத் திருமணிப் புனைபூண் செல்வப்
பைம்பொனின் மாலை வேய்ந்த பவளமென் கொடியொப் பாரை
நம்பன்தன் அருளே வாழ்த்தி நல்லெழில் விளங்கச் சூட்டி
அம்பொன்செய் தீப மென்ன அழகலங் கரித்து வைத்தார்.

தெளிவுரை : செம்பொன்னால் ஆன நெற்றி மாலையையும், அழகிய மணிகள் பதித்த தொழிற்பாட்டையுடைய அணிகளையும், செல்வம் பொருந்திய பொன்னரிமாலைகளையும் வரிசை பெறச் சூட்டிய மெல்லிய பவளக் கொடியைப் போன்ற அம்மையாரை, இறைவரின் அருளையே வாழ்த்தி நல்ல அழகு விளங்க அலங்காரம் செய்து, அழகிய பொன்னால் ஆன விளக்கைப் போல் அழகையே அலங்கரித்தாற் போன்று அலங்கரித்தனர்.

3122. மாமறை மைந்தர் எல்லாம் மணத்தெதிர் சென்று மன்னும்
தூமலர்ச் செம்பொற் சுண்ணம் தொகுநவ மணியும் வீசத்
தாமரை மலரோன் போல்வார் அரசிலை தருப்பை தோய்ந்த
காமர்பொற் கலச நன்னீர் இருக்குடன் கலந்து வீச.

தெளிவுரை : சிறந்த அந்தண மைந்தர்கள் அனைவரும் திருமண எழுச்சியின் முன் வந்து பொருந்திய தூய்மையான மலர்களுடன் பொன் சுண்ணத்தையும் தொகுதியான நவமணிகளையும் வீசத் தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகன் போன்ற அந்தணர்கள் அரசிலையும் தருப்பையும் தோய்ந்த அழகிய பொற்குட நல்ல நீரை மந்திரங்களைக் கூறித் தெளித்தனர்.

3123. மாமறை மைந்தர் எல்லாம் மணத்தெதிர் சென்று மன்னும்
தூமலர்ச் செம்பொற் சுண்ணம் தொகுநவ மணியும் வீசத்
தாமரை மலரோன் போல்வார் அரசிலை தருப்பை தோய்ந்த
காமர்பொற் கலச நன்னீர் இருக்குடன் கலந்து வீச.

தெளிவுரை : தேவர்கள் மலர்மாலை வானத்தே ஒளிமிகுமாறு வீச, மண்ணுலகம் நிறைந்த மணத்தையுடைய தென்றல் காற்றையும் வீச, நெருங்கிய ஒளி மிக்க அழகிய தோரணங்களிடையே போய்ப் புண்ணியத்தின் பயனைப் போன்ற சம்பந்தர் பூம்பந்தலின் முன் சேர்ந்தார்.

3124. பொன்னணி சங்கின் வெள்ளம் பொலிவுடன் முழங்கி ஆர்ப்ப
மன்னிய தரளப் பத்தி வளர்மணிச் சிவிகை நின்றும்
பன்மலர் நறும்பொற் சுண்ணம் பரந்தபா வாடைமீது
முன்னிழிந் தருளி வந்தார் மூவுல குய்ய வந்தார்.

தெளிவுரை : பொன்னை அணிந்த சங்குகளின் கூட்டம் அழகுடன் முழங்கி ஒலிக்க, பொருந்திய முத்து வரிசைகள் பெருகி ஒளி செய்து விளங்கிய சிவிகையினின்றும், பல மலர்களும் மணம் கமழும் பொன் சுண்ணமும் பரவியிருந்த பாவாடையின் மேல், முன்னே இறங்கி, மூவுலகமும் உய்யும் பொருட்டுத் தோன்றிய ஞானசம்பந்தர் வந்தருளினார்.

3125. மறைக்குல மனையின் வாழ்க்கை மங்கல மகளி ரெல்லாம்
நிறைத்தநீர்ப் பொற்கு டங்கள் நிறைமணி விளக்குத் தூபம்
நறைக்குல மலர்சூழ் மாலை நகுசுடர் முளைப்பொற் பாண்டில்
உறைப்பொலி கலவை யேந்தி உடன்எதி ரேற்று நின்றார்.

தெளிவுரை : அந்தணர் குலத்தவராய் இல்வாழ்வில் வாழும் மங்கலம் உடைய அந்தண மங்கையர் எல்லாம், நிறைந்த நீரையுடைய பொன்குடங்களையும், வரிசையான அழகிய விளக்குகளையும் தேனையுடைய நல்ல மலர்மாலைகளையும் நல்ல ஒளியுடைய முளைப்பாலிகைகளை இட்டு வைத்த பொன் தட்டுகளையும், உறைத்ததால் விளங்கும் கலவைச் சாந்தையும் ஏந்திக்கொண்டு ஒன்றுகூடி மணமகனாரான ஞானசம்பந்தரை வரவேற்று நின்றார்கள்.

3126. ஆங்குமுன் னிட்ட செம்பொன் அணிமணிப் பீடந் தன்னில்
ஓங்கிய ஞான வெள்ளம் உண்ணிறைந் தெழுவ தென்னத்
தாங்கிய முத்தின் பைம்பூண் தண்ணிலவு எறிப்ப ஏறிப்
பாங்கொளி பரப்பி நின்றார் பரசம யங்கள் வீழ்த்தார்.

தெளிவுரை : அங்கு முன்னமே இட்டு வைத்த செம்பொன்னால் ஆன அழகிய மணிபதித்த பீடத்தில் எல்லாவற்றுக்கும் மேலாக ஓங்கிய சிவஞானப் பெருக்கானது உள்ளே நிறைந்து மேல் எழுந்து பொழிவதைப் போல் அணியாய்ப் பூண்ட முத்தால் ஆன நல்ல அணிகள் குளிர்ந்த ஒளியை வீசுமாறு ஏறிப் பக்கங்களில் ஒளி பரப்பி நின்றார், பர சமயங்களை வென்ற ஞானசம்பந்தர்.

3127. எதிர்வர வேற்ற சாயல் இளமயி லனைய மாதர்
மதுரமங் கலமுன் னான வாழ்த்தொலி யெடுப்ப வந்து
கதிர்மணிக் கரக வாசக் கமழ்புன லொழுக்கிக் காதல்
விதிமுறை வலங்கொண் டெய்தி மேவுநல் வினைகள் செய்தார்.

தெளிவுரை : எதிர்கொண்டு வரவேற்ற சாயலால் இளைய மயில் போன்ற மங்கையர் இனிய மங்கலச் சொற்களை முன் கொண்டு பாடிய வாழ்த்தொலி எங்கும் நிறையுமாறு வந்து, ஒளி பொருந்திய அழகான கரகத்தில் உள்ள மணமுடைய நீரைத் திருமுன் வார்த்து, மிக்க விருப்பத்துடன் விதிமுறைப்படி வலமாகச் சுற்றிப் பொருந்திய நல்ல சடங்குகளைச் செய்தனர்.

3128. மங்கலம் பொலிய ஏந்தி மாதரார் முன்பு செல்லக்
கங்கையின் கொழுந்து செம்பொன் இமவரை கலந்த தென்ன
அங்கவர் செம்பொன் மாடத் தாதிபூ மியினுட் புக்கார்
எங்களை வாழ முன்னாள் ஏடுவை கையினுள் இட்டார்.

தெளிவுரை : எங்களை வாழ்விப்பதற்காக வந்து முன்னாளில் வைகையில் ஏட்டை இட்ட பிள்ளையார், மங்கலப் பொருள்களை எடுத்துக் கொண்டு அந்தண மங்கையர் முன்னால் செல்ல, கங்கையின் கொழுந்து போன்ற வெள்ள ஒழுங்கு சிவந்த பொன் மலையான இமயத்தில் சேர்ந்தாற் போல், அங்கு நம்பாண்டார் நம்பிகளின் அழகான பொன்மாடத்தில் ஆதி பூமி என்ற மணவறையுள் புகுந்தார்.

3129. அகில்நறுந் தூபம் விம்மி அணிகிளர் மணியால் வேய்ந்த
துகில்புனை விதான நீழல் தூமலர்த் தவிசின் மீது
நகிலணி முத்து மாலை நகைமுக மடவார் வாழ்த்த
இகலின்சீர் மறையோர் சூழ இனிதின்அங் கிருந்த வேலை.

தெளிவுரை : மணம் மிகுந்த அகிலின் புகை மிகவும் மணம் வீச, அழகு விளங்கும் மணிகளால் இயன்ற நல்ல பட்டினால் ஆன மேற்கட்டியின் கீழ்த் தூய்மையான மலர்கள் தூவப்பட்ட ஆசனத்தின் மீது, கொங்கைகளின் மேல் முத்து மாலைகளை அணிந்த மலர்ந்த முகத்தையுடைய மங்கையர் வாழ்த்தச் சினம் முதலான பகை இல்லாத சிறப்புக் கொண்ட அந்தணர் சூழ, இனிதாய் அங்கு ஞானசம்பந்தர் எழுந்தருளியிருந்த போது,

3130. திருமகட் கொடுக்கப் பெற்ற செழுமறை முனிவர் தாமும்
அருமையால் முன்செய் மெய்ம்மை அருந்தவ மனைவி யாரும்
பெருமகிழ்ச் சியினாற் பாதம் விளக்குவார் பிள்ளை யார்முன்
உரிமையால் வெண்பால் தூநீர் உடனெடுத் தேந்தி வந்தார்.

தெளிவுரை : தம் மகளை மணமகளாகக் கொண்டு கொடுக்கும் பேற்றைப் பெற்ற செழுமையான மறை முனிவரான நம்பாண்டார் நம்பிகளும், அரிய தன்மையால் முன் செய்த மெய்யான அரிய தவப்பேறுடைய மனைவியாரும் மிக்க மகிழ்வுடன் பிள்ளையாரின் பாதங்களை விளக்குபவராய் ஞானசம்பந்தரின் திருமுன்பு அந்தவுரிமையால் வெண்மையான பசும்பாலையும் தூய்மையான நீரையும் ஒருசேரக் கொண்டு வந்தனர்.

3131. வந்துமுன் னெய்தித் தாம்முன் செய்தமா தவத்தின் நன்மை
நந்துநம் பாண்டார் நம்பி ஞானபோ னகர்பொற் பாதம்
கந்தவார் குழலி னார்பொற் கரகநீர் எடுத்து வார்ப்பப்
புந்தியால் நினைதி யானம் புரிசடை யான்என் றுன்னி.

தெளிவுரை : ஞானசம்பந்தரின் முன் வந்து, தாம் முன்பு செய்த பெருந்தவத்தால் பெற்ற நன்மை பெருகும் நம்பாண்டார் நம்பிகள், மணம் வீசும் நீண்ட கூந்தலையுடைய மனைவியார் பொன் கரகத்தில் எடுத்து வார்க்க, உள்ளத்தால் நினைக்கும் தியானத்தில், நடையையுடைய சிவபெருமானே இவர் என்ற எண்ணத்துடன் ஞானப்பால் உண்ட அவரது அடிகளை,

3132. விருப்பினால் விளக்கி மிக்க புனிதநீர் தலைமேற் கொண்டு
பொருப்புறு மாடத் துள்ளும் புறத்துளுந் தெளித்த பின்னர்
உருப்பொலி உதரத் துள்ளும் பூரித்தார் உவகை பொங்கி
அருப்புறு கிளைஞர் மேலும் தெளித்தனர் ஆர்வத் தோடும்.

தெளிவுரை : விருப்புடன் விளக்கித் தூய நீரைத் தலையின் மேலே தெளித்துக் கொண்டு மலை போன்ற திருமாளிகையினுள்ளும் வெளியேயும் தெளித்த பின்னர், அழகுமிக்க வயிற்றில் கொள்ளுமாறு மிக்க ஆசையுடன் உட்கொண்டனர். மயிர்ப்புளகாங்கிதம் அடையும் உறவினர் மேலும் பெருகும் ஆசையோடு தெளித்தனர்.

3133. பெருகொளி ஞானம் உண்ட பிள்ளையார் மலர்க்கை தன்னில்
மருவுமங் கலநீர் வாசக் கரகம்முன் னேந்தி வார்ப்பார்
தருமுறைக் கோத்தி ரத்தின் தங்குலம் செப்பி என்தன்
அருநிதிப் பாவை யாரைப் பிள்ளையார்க் களித்தேன் என்றார்.

தெளிவுரை : பெருகும் ஞானஅமுது உண்ட சம்பந்தரின் தாமரை மலர் போன்ற கையில் பொருந்திய மணமுடைய நீர் நிறைந்த கமண்டலத்தை முன் ஏந்தி, அதன் மங்கல நீரை வார்ப்பவராய்த் தரும் முறையில் தம் கோத்திரத்துக்குரிய பிரவர முதலிய குலப்பெயரையும் எடுத்துக்கூறி என் அருமையான செல்வமான பாவை போன்ற மகளாரைப் பிள்ளையாருக்குத் தந்தேன் என்று விதிப்படி மும்முறை கூறினார்.

3134. நற்றவக் கன்னி யார்கை ஞானசம் பந்தர் செங்கை
பற்றுதற் குரிய பண்பில் பழுதில்நற் பொழுது நண்ணப்
பெற்றவ ருடன்பி றந்தார் பெருமணப் பிணையன் னாரைச்
சுற்றமுன் சூழ்ந்து போற்றக் கொண்டுமுன் துன்னி னார்கள்.

தெளிவுரை : திருஞானசம்பந்தர், நல்ல தவத்தையுடைய கன்னியாரின் கையைத் தம் செங்கையால் பிடிப்பதற்கு உரிய பண்புடைய குற்றம் இல்லாத நல்ல வேளை வந்து சேர, கன்னியைப் பெற்ற தாய் தந்தையாரும் உடன் பிறந்த சகோதரரும், பெருமையுடைய மணப்பெண்ணான மான் போன்ற கன்னியை உறவினர் முன் சூழ்ந்து போற்ற, அழைத்துக் கொண்டு மணமகனாரான ஞானசம்பந்தர் முன் கொணர்ந்தனர்.

3135. ஏகமாம் சிவமெய்ஞ் ஞானம் இசைந்தவர் வலப்பா லெய்தி
நாகமார் பணபே ரல்குல் நற்றவக் கொழுந்தன் னாரை
மாகமார் சோதி மல்க மன்னிவீற் றிருந்த வெள்ளை
மேகமோ டிசையும் மின்னுக் கொடியென விளங்க வைத்தார்.

தெளிவுரை : ஒன்றாகும் மெய்யான சிவஞானத்தை அடைந்த ஞானசம்பந்தரின் வலப்பக்கத்தில் வந்து, பாம்பின் படத்தைப் போன்ற அல்குல் பொருந்திய நல்ல தவத்தின் கொழுந்தைப் போன்ற கன்னியாரை, வானத்தில் நிறைந்த ஒளி பொருந்த நிலைபெற்று வீற்றிருந்த வெள்ளை மேகத்துடன் பொருந்தும் மின்னல் கொடி போன்று விளங்குமாறு அமரும்படி செய்தனர்.

3136. புனிதமெய்க் கோல நீடு புகலியார் வேந்தர் தம்மைக்
குனிசிலைப் புருவ மென்பூங் கொம்பனா ருடனே கூட
நனிமிகக் கண்ட போதில் நல்லமங் கலங்கள் கூறி
மனிதரும் தேவ ரானார் கண்ணிமை யாது வாழ்த்தி.

தெளிவுரை : தூய்மையான மெய்க் கோலத்துடன் நீடிய சீகாழித் தலைவரான பிள்ளையாரை வளைந்த வில் போன்ற புருவங்களையுடைய மென்மையான பூங்கொம்பைப் போன்ற தேவியாருடன் கூட மிக்க ஆர்வத்துடன் பார்த்த போது, நல்ல மங்கலங்களைக் கூறிக் கண் இமைக்காமல் பார்த்து வாழ்த்தும் வகையால், மக்களும் தேவர்கள் ஆயினர்.

3137. பத்தியிற் குயிற்றும் பைம்பொன் பவளக்கால் பந்தர் நாப்பண்
சித்திர விதானத் தின்கீழ்ச் செழுந்திரு நீல நக்கர்
முத்தமிழ் விரகர் முன்பு முதன்மறை முறையி னோடு
மெய்த்தநம் பெருமான் பாதம் மேவுமுள் ளத்தாற் செய்ய.

தெளிவுரை : வரிசை பெற அழகுபடுத்தப்பட்ட பசும்பொன்னால் ஆன பவளக் கால்களையுடைய பந்தலின் நடுவில் ஓவியம் அமைந்த மேற்கட்டியின் கீழே செழுமையுடைய நீலநக்கநாயனார் ஆசிரியராய் இருந்து முத்தமிழ் வல்லுநரான பிள்ளையாரின் முன், முதன்மையான மறைநூல் விதிச் சடங்குகளை அம்முறைப்படியே மெய்ப்பொருளான நம் பெருமானின் திருவடிகளைப் பொருந்தும் உள்ளத்துடன் செய்ய,

3138. மறையொலி பொங்கி யோங்க மங்கல வாழ்த்து மல்க
நிறைவளைச் செங்கை பற்ற நேரிழை யவர்முன் அந்தப்
பொறையணி முந்நூல் மார்பர் புகரில்வெண் பொரிகை அட்டி
இறைவரை ஏத்தும் வேலை எரிவலங் கொள்ள வேண்டி.

தெளிவுரை : மறை ஒலிகள் மேலும் மேலும் பெருகி ஓங்கவும், மங்கல வாழ்த்தொலிகள் மிகவும், நிறைந்த வளையல்களை அணிந்த மணப்பெண்ணின் சிவந்த கையைப் பிள்ளையார் பற்றும் பொருட்டு, நேரிய அணிகளை அணிந்த அந்தக் கன்னியாரின் முன், பொறுமையை அணியாகக் கொண்ட முந்நூல் அணிந்த மார்பினரான திருநீலநக்க நாயனார், குற்றம் அற்ற நெல் பொரியைக் கையிலே எடுத்து, வேள்வித்தீயில் ஆகுதியாகப் பெய்து, சிவபெருமானை வணங்கும்போது எரியை வலமாக வருவதற்கு எண்ணி,

3139. அருப்புமென் முலையி னார்தம் அணிமலர்க் கைப்பி டித்தங்
கொருப்படும் உடைய பிள்ளை யார்திரு உள்ளந் தன்னில்
விருப்புறும் அங்கி யாவார் விடை உயர்த் தவரே என்று
திருப்பெரு மணத்தை மேவும் சிந்தையில் தெளிந்து செல்வார்.

தெளிவுரை : அரும்பைப் போன்ற மென்மையான கொங்கைகளையுடைய அம்மங்கையின் அழகான மலர் போன்ற கையைப் பிடித்துக் கொண்டு அங்கு ஒருப்பட்ட சம்பந்தர், மனத்தில் விருப்பம் பொருந்தும் அக்கினியானவர் இடபக் கொடியை உயர்த்திய சிவபெருமானே ஆவார் எனத் திருநல்லூர்ப் பெருமணத்தைப் பொருந்திய உள்ளத்திலே தெளிந்ததால் செல்பவராய்,

3140. மந்திர முறையால் உய்த்த எரிவல மாக மாதர்
தந்திருக் கையைப் பற்றும் தாமரைச் செங்கை யாளர்
இந்தஇல் லொழுக்கம் வந்து சூழ்ந்ததே இவள்தன் னோடும்
அந்தமில் சிவன்தாள் சேர்வன் என்னும்ஆ தரவு பொங்க.

தெளிவுரை : மந்திர முறையால் உண்டாக்கி வளர்க்கப்பட்ட எரியை வலம் வரும் பொருட்டு அம்மையாரின் கையைப் பிடிக்கும் தாமரை மலர் போன்ற சிவந்த கைகளையுடைய பிள்ளையார், இந்த இல்வாழ்வான ஒழுக்கநிலை வந்து வாய்த்ததே! இவளுடன் அழிவில்லாத சிவபெருமானின் திருவடிகளை அடைவேன் என்ற ஆசை உள்ளத்தில் பெருக,

3141. மலர்பெருங் கிளையும் தொண்டர் கூட்டமும் மல்கிச் சூழ
அலகில் மெய்ஞ்ஞானத் தொல்லை அடைவுறுங் குறிப்பால் அங்கண்
உலகில்எம் மருங்கும் நீங்க உடன்அணைந் தருள வேண்டிக்
குலமணம் புரிவித் தார்தம் கோயிலை நோக்கி வந்தார்.

தெளிவுரை : மலர்ச்சியையுடைய பெரிய உறவினரும் திருத்தொண்டர் கூட்டமும் ஆகிய இவர்களுடனே கூட, அளவில்லாத மெய்ஞ்ஞானத்தினது எல்லையை அடைய வேண்டும் என்ற உள்ளக் குறிப்பினால், அங்கு உலகப்பற்று தம்மைச் சாராது நீங்க, இறைவருடன் சேர விரும்பி அந்தணர் குலத்துக்குரிய மணத்தைச் செய்வித்த இறைவரின் திருப்பெருமணம் என்னும் திருக்கோயிலை நோக்கி எழுந்தருளி வந்தார்.

3142. சிவனமர்ந் தருளுஞ் செல்வத் திருப்பெரு மணத்துள் எய்தித்
தவநெறி வளர்க்க வந்தார் தலைப்படுஞ் சார்பு நோக்கிப்
பவமற என்னை முன்னாள் ஆண்டஅப் பண்பு கூட
நவமலர்ப் பாதங் கூட்டும் என்னும்நல் லுணர்வு நல்க.

தெளிவுரை : சிவபெருமான் வீற்றிருக்கும் உயிர்களுக்கு அருள் செய்யும் செல்வம் நிறைந்த திருப்பெருமணக் கோயிலுக்குள் போய்த் தவநெறியை வளர்ப்பதற்கென்றே அவதாரம் செய்தவரான ஞானசம்பந்தர் உலகக் காட்சி நீங்கிய வீடுபேற்று நிலையில் சார்வதற்குக் காரணமான அருட்குறிப்பைக் கண்டு,  பிறவியில் வாராமல் என்னை முன்பிறவியில் நம் திருவடியில் ஆளாகக் கொண்ட அத்தன்மைக்கு ஏற்பப் புதிதாக மலர்ந்த தாமரைமலர் போன்ற திருவடிகளை அடைவிக்கும் என்ற மெய் உணர்வானது உள்ளத்தில் பொருந்த,

3143. காதல்மெய்ப் பதிகம் கல்லூர்ப் பெருமணம் எடுத்துக் கண்டோர்
தீதுற பிறவிப் பாசந் தீர்த்தல்செம் பொருளாக் கொண்டு
நாதனே நல்லூர் மேவும் பெருமண நம்பனே உன்
பாதமெய்ந் நீழல் சேரும் பருவம் ஈதென்று பாட.

தெளிவுரை : பக்தியைப் புலப்படுத்தும் உண்மையுடைய திருப்பதிகத்தைக் கல்லூர்ப் பெருமணம் எனத் தொடங்கி, அங்கு அத்திருமணத்தைக் கண்டவரின் தீய பிறவிக்குக் காரணமான கன்மங்களைத் தீர்ப்பதனைச் செம்மைப் பொருளாய்த் திருவுளம் கொண்டு, இறைவரே! திருநல்லூரில் பொருந்திய திருப்பெரு மணக்கோயிலில் எழுந்தருளிய நம்பரே! உம் திருவடிகளாகிய மெய்ம்மை பொருந்திய நிழலை அடையும் பருவம் இதுவேயாகும் என்று பாடினார்.

3144. தேவர்கள் தேவர் தாமும் திருவருள் புரிந்து நீயும்
பூவையன் னாளும் இங்குன் புண்ணிய மணத்தின் வந்தார்
யாவரும் எம்பாற் சோதி இதனுள்வந் தெய்தும் என்று
மூவுல கொளியால் விம்ம முழுச்சுடர்த் தாணு வாகி.

தெளிவுரை : தேவர்களுக்கெல்லாம் தலைவரான சிவபெருமானும் திருவருள் செய்து நீயும் பூவைப் பறவையைப் போன்ற நின் மனைவியும், இங்கு உன் புண்ணியத் திருமணத்தில் வந்தவர் எல்லாரும் எம்மிடத்தில் இந்தச் சோதியுள் வந்து அடையுங்கள் என்று மூன்று உலகங்களும் தம் ஒளியினால் மேலிட்டு விளங்கும்படி முழுமையான சுடர் விட்டெழும் சோதிலிங்கமாய் நிமிர்ந்து எழுந்து,

3145. கோயிலுட் படமேல் ஓங்குங் கொள்கையாற் பெருகுஞ் சோதி
வாயிலை வகுத்துக் காட்ட மன்னுசீர்ப் புகலி மன்னர்
பாயின ஒளியால் நீடு பரஞ்சுடர்த் தொழுது போற்றி
மாயிரு ஞாலம் உய்ய வழியினை அருளிச் செய்வார்.

தெளிவுரை : திருக்கோயில் தன்னகத்துட்பட மேலே பரந்து பெருகி எழுகின்ற அந்தச் சோதியுள் ஒரு வாயிலையும் அமைத்துக் காட்ட, நிலைபெற்ற புகழையுடைய சீகாழித் தலைவர் ஞானசம்பந்தர், பரந்த பேரொளியால் நீண்டு விளங்கும் பரஞ்சுடரான இறைவரை வணங்கித் துதித்து, மிகப்பெரிய உலகத்தில் உள்ள ஆன்மாக்கள் உய்யும் வழியை அருள் செய்வாராய்,

3146. ஞானமெய்ந் நெறிதான் யார்க்கும் நமச்சிவா யச்சொ லாம்என்
றானசீர் நமச்சி வாயத் திருப்பதி கத்தை அங்கண்
வானமும் நிலனும் கேட்க அருள்செய் திம்மணத்தில் வந்தோர்
ஈனமாம் பிறவி தீர யாவரும் புகுக என்ன.

தெளிவுரை : மெய்ம்மையுடைய ஞானநெறிதான் எல்லாருக்கும் நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தான சொல்லே ஆகும் என்று ஆக்கம் பொருந்திய சிறப்புக்கொண்ட நமச்சிவாயத் திருப்பதிகத்தை அங்கு விண்ணோரும் மண்ணோரும் கேட்கும்படி அருள்செய்து, இந்த மணத்தில் வந்தவர் எல்லாரும் இழிவான பிறவி நீங்க யாரும் இவ்வொளியில் புகுக என்று ஆணையிட்டருளினார்.

3147. வருமுறைப் பிறவி வெள்ளம் வரம்புகா ணாத ழுந்தி
உருவெனுந் துயரக் கூட்டில் உணர்வின்றி மயங்கு வார்கள்
திருமணத் துடன்சே வித்து முன்செலுஞ் சிறப்பி னாலே
மருவிய பிறவி நீங்க மன்னுசோ தியினுள் புக்கார்.

தெளிவுரை : முறையாய் இடையறாது வரும் பிறவி என்ற பெருவெள்ளத்தின் எல்லை காணாது அழுந்தி உடல் என்ற துன்பம் நிறைந்த கூட்டினுள் இருந்து உணர்வில்லாது மயங்குபவர்களாகிய அம்மக்கள், பிள்ளையாரின் திருமணத்தை வணங்கி முன்னால் செல்லப் பெற்ற சிறப்பால், பொருந்திய பிறவி நீங்குமாறு நிலையான அந்தப் பேரொளியுள் புகுந்தார்கள்.

3148. சீர்பெருகு நீலநக்கர் திருமுருகர் முதல்தொண்டர்
ஏர்கெழுவு சிவபாத இருதயர்நம் பாண்டார்சீர்
ஆர்திருமெய்ப் பெரும்பாணர் மற்றேனையோர் அணைந்துளோர்
பார்நிலவு கிளைசூழப் பன்னிகளோ டுடன்புக்கார்.

தெளிவுரை : சிறப்புமிகும் திருநீலநக்க நாயனார், திருமுருக நாயனார் முதலிய தொண்டர்களும், தவஒழுக்கத்தின் பொலிவுமிக்க சிவபாத இருதயரும், நம்பாண்டார் நம்பியும், சிறப்பு நிறைந்த உண்மை ஒழுக்கத்தையுடைய திருநீலகண்ட யாழ்ப்பாணரும், மற்றும் அங்கு வந்தவர்களும், உலகில் நிலவிய சுற்றத்தார்கள் சூழ்ந்து வரத் தம்தம் மனைவியாருடன் புகுந்தனர்.

3149. அணிமுத்தின் சிவிகைமுதல் அணிதாங்கிச் சென்றோர்கள்
மணிமுத்த மாலைபுனை மடவார்மங் கலம்பெருகும்
பணிமுற்றும் எடுத்தார்கள் பரிசனங்கள் வினைப்பாசந்
துணிவித்த உணர்வினராய்த் தொழுதுடன்புக் கொடுங்கினார்.

தெளிவுரை : அழகிய முத்துச் சிவிகையைத் தாங்கிச் சென்றவரும் மணிமுத்து மாலைகளைத் தக்கவாறு அலங்காரம் செய்யும் மங்கையரும், மங்கலம் பெருக வரும் மணிகளை எல்லாம் எடுத்து வந்தவர்களும், மற்றும் பணி செய்தவர்களும், வினையால் வரும் பிறவிக்குக் காரணமான பாசங்களையெல்லாம் அறுத்த உணர்வு உடையவராய் வணங்கியபடியே உடன்புகுந்து சோதியுள் ஒடுங்கினர்.

3150. ஆறுவகைச் சமயத்தின் அருந்தவரும் அடியவரும்
கூறுமறை முனிவர்களும் கும்பிடவந் தணைந்தாரும்
வேறுதிரு வருளினால் வீடுபெற வந்தாரும்
ஈறில்பெருஞ் சோதியினுள் எல்லாரும் புக்கதற்பின்.

தெளிவுரை : சைவ சமயத்தின் உட்பிரிவான அறுவகைச் சமய நெறியினும் நின்ற தவத்தவர்களும், சைவத் தொண்டர்களும், வேதவிதி ஒழுகும் முனிவர்களும், கும்பிடும் கருத்துடன் வந்து சேர்ந்தவர்களும், முன்சொன்னவாறு இன்றி எக்காரணமும் அறிய இயலாது திருவருள் வயத்தால் வந்தவர்களும் எல்லை இல்லாத பெரிய சிவச் சோதியுள் எல்லாரும் புகுந்தபின்,

3151. காதலியைக் கைப்பற்றிக் கொண்டுவலம் செய்தருளித்
தீதகற்ற வந்தருளும் திருஞான சம்பந்தர்
நாதன்எழில் வளர்சோதி நண்ணிஅதன் உட்புகுவார்
போதநிலை முடிந்தவழிப் புக்கொன்றி உடனானார்.

தெளிவுரை : தேவியாரைக் கைப்பிடித்தவாறே அந்தச் சோதியை வலமாக வந்து, உலகில் தீமையைப் போக்கிச் சைவம் விளங்க என்றே அவதரித்த திருஞானசம்பந்தர், சிவபெருமானின் அழகியதாய் வளர்ந்து எழுகின்ற சோதியை அடைந்து, அதனுள் புகுபவராய்ப் போதம் தழுவும் நிலை முடிந்ததால் உள்ளே புகுந்து ஒன்றாய்ச் சேர்ந்து சிவானந்த நிறைவாம் தன்மையின் வீடுபேற்றை எய்தினார்.

3152. பிள்ளையார் எழுந்தருளிப் புக்கதற்பின் பெருங்கூத்தர்
கொள்ளநீ டியசோதிக் குறிநிலைஅவ் வழிகரப்ப
வள்ளலார் தம்பழய மணக்கோயில் தோன்றுதலும்
தெள்ளுநீ ருலகத்துப் பேறில்லார் தெருமந்தார்.

தெளிவுரை : ஞானசம்பந்தர் போய் உட்புகுந்து, உடனாகிய பின்னர்ப் பேரானந்தக் கூத்தரான இறைவர், இவ்வாறு மணத்தில் வந்தோரையும் பிள்ளையாரையும் வீடுபேற்றில் உடனாகக் கொள்ளும் அளவும் நீடியிருந்த சோதிக் குறிநிலையும் அதன் உட்புகக் காட்டிய அந்த வாயிலையும் மறையுமாறு செய்யச் சிவலோகத் தியாகரின் பழைய பெருமணக் கோயில் தோன்றவும், தெளிந்த நீருடைய உலகத்தில் இந்தப் பேற்றைப் பெறாதவர் மயங்கி வருந்தினர்.

3153. கண்ணுதலார் திருமேனி உடன்கூடக் கவுணியனார்
நண்ணியது தூரத்தே கண்டுநணு கப்பெறா
விண்ணவரும் முனிவர்களும் விரிஞ்சனே முதலானார்
எண்ணிலவர் ஏசறவு தீரஎடுத் தேத்தினார்.

தெளிவுரை : நெற்றியில் விழியுடைய சிவபெருமான் மேனியுடன் கூடத் திருஞானசம்பந்தர் போய்ச் சேர்ந்ததைத் தாம் தாம் நின்ற தொலைவான இடத்தில் இருந்தவாறே கண்டும், வந்து அடைகின்ற பேறு பெறாத தேவர்களும் முனிவர்களும் நான்முகன் முதலான பெருந்தேவர்களும் என்ற எண்ணில்லாதவர்கள் தம் துக்கம் தீரும்படி எடுத்துத் துதித்தனர்.

3154. அருந்தமிழா கரர்சரிதை அடியேனுக் கவர்பாதம்
தரும்பரிசால் அறிந்தபடி துதிசெய்தேன் தாரணிமேல்
பெருங்கொடையுந் திண்ணனவும் பேருணர்வுந் திருத்தொண்டால்
வருந்தகைமைக் கலிக்காம னார்செய்கை வழுத்துவேன்.

தெளிவுரை : அரிய தமிழுக்கு இருப்பிடமான ஆளுடைய பிள்ளையாரின் சரிதத்தை அடியேனுக்கு அவருடைய திருவடிகள் அறிவித்துத் தந்தருளிய பண்பின் அளவு அறிந்தவாறே வணங்கிக் கூறினேன். இனிப் பெரிய கொடையும் உறுதிப்பாடான வன்மையும் பேருணர்வும் திருத்தொண்டு செய்த காரணத்தால் பெற்ற பண்பும் உடைய ஏயர்கோன் கலிக்காம நாயனார் செய்த திருத்தொண்டின் திறங்களைத் துதித்துச் சொல்வேன்.

திருஞானசம்பந்தர் புராணம் முற்றிற்று.

 
மேலும் பனிரெண்டாம் திருமறை »
temple news
பன்னிரு திருமுறைகளில் சேக்கிழார் எழுதிய பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் புராணம் 12வது ... மேலும்
 
temple news
12ம் திருமுறையில் சேக்கிழாரால் பாடப்பட்ட திருத்தொண்டர் புராணம் 4286 பாடல்களும், அதன் தெளிவுரையும் கீழே ... மேலும்
 
temple news
அமர் நீதி நாயனார் புராணம் சோழநாட்டில் பழையாறை என்ற பதியில் வணிகர் குலத்தில் தோன்றியவர் அமர்நீதி ... மேலும்
 
temple news
4. மும்மையால் உலகாண்ட சருக்கம் இச்சருக்கத்தில் மூர்த்தியார், முருகர், உருத்திர பசுபதியார், திருநாளைப் ... மேலும்
 
temple news
1501. அம்மொழி மாலைச் செந்தமிழ் கேளா அணிசண்பைமைம்மலி கண்டத் தண்டர் பிரானார் மகனாரும்கொய்ம்மலர் வாவித் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar