கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்). திருநிறைச் செல்விகளுக்கு திறந்தாச்சு திருமண வாசல்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2016 12:07
அன்புக்கு கட்டுப்பட்டு நடக்கும் கடக ராசி அன்பர்களே!
குருபகவான் இதுவரை ராசிக்கு 2ம் இடத்தில் இருந்து நன்மைகளை தந்து கொண்டு இருந்தார். உங்களை எதிர்த்தவர்கள் உங்களை சரண் அடையும் நிலை ஏற்பட்டு இருக்கும். துணிச்சலுடன் செயலாற்றி சாதனை படைத்திருப்பீர்கள். பொருளாதார வளம் சிறப்பாக இருந்திருக்கும். புதிதாக வீடு, மனை கூட சிலர் வாங்கி இருக்கலாம். இவ்வளவு நன்மை தந்த குருபகவான் 2ம் இடத்தில் இருந்து 3ம் இடமான கன்னி ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. உங்கள் நிலையில் தடுமாற்றம் ஏற்படலாம். இப்படியானால் குருவால் பிற்போக்கான பலன்கள் மட்டுமே நடக்கும் என்று பயம் கொள்ள வேண்டாம். காரணம் குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் குருவின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன. குருபகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9வது பார்வைகளால் மனைவி, தந்தை, லாப ஸ்தானங்களைப் பார்ப்பதால் அந்த வழிகளில் நன்மை அதிகரிக்கும். குறிப்பாக குருவின் 5ம் இடத்துப் பார்வையால் சுப விஷயங்களுக்காக வீட்டில் மேளச் சத்தம் இனிதே ஒலித்திடும். திருநிறைச்செல்விகளுக்கு திருமணவாசல் திறந்து விட்டதைக் கண்டு பெற்றோர் மனம் சந்தோஷம் கொள்ளும். இதையே ஜோதிடத்தில் குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும் என்று குறிப்பிடுவர். ராகு தற்போது ராசிக்கு 2ம் இடமான சிம்மத்தில் இருந்து குடும்பத்தில் சில பிரச்னையையும், துõரதேச பயணத்தையும் ஏற்படுத்துவார். கேது 8ம் இடமான கும்பத்தில் இருப்பதும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவரால் உடல்நலக்குறைவு அவ்வப்போது வர வாய்ப்புண்டு.
சனி பகவான் தற்போது 5ம் இடத்தில் இருப்பது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. 5ல் சனி இருக்கும் போது குடும்ப பிரச்னைகளைத் தருவார். ஆனால் அவரது 7ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளதால் நன்மை படிப்படியாக கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர். பொதுவாக எந்த ஒரு புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது, ஒன்றுக்கு பத்து முறை சிந்தித்து செயல்படுத்துங்கள். குடும்ப பெரியோர்களின் ஆலோசனை, அறிவுரைகளை கேட்டுப் பின்பற்றுங்கள். சமூகத்தில் ஓரளவு மதிப்பு, மரியாதை உண்டாகும். கையில் பணம் புழங்குவதால் குடும்பத் தேவை பூர்த்தி ஆகும். அதே சமயம் வீண் செலவும் அதிகரிக்கும். சிக்கனத்தைக் கடைபிடிப்பது அவசியம். புதிய வீடு, மனை வாங்கும் எண்ணம் சிலகாலம் தடைபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும். சனியால் மனைவி, மக்கள் மத்தியில் வீண் குழப்பம் உருவாகலாம். மனதில் அவ்வப்போது இனம் புரியாத வேதனை உண்டாகலாம். பொறுமையுடன் குடும்பத்தினருடன் ஆலோசித்தால் நல்ல தீர்வு கிடைக்கப் பெறுவீர்கள். சிலர் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். உங்கள் முன்னேற்றத்துக்கு பெண்கள் உறுதுணையாக இருப்பர். உடல்நலம் சிறப்பாக இருக்கும். கேதுவால் உஷ்ணம், பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் அவ்வப்போது தலைதுõக்கலாம். சிலர் வீண் மன உளைச்சலுக்கு ஆளாகலாம். பயணத்தின் போது விழிப்புடன் இருப்பது நல்லது.
தொழில், வியாபாரம்: தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். கடந்த காலத்தை விட அதிகமாக அலைச்சலும், பணிச்சுமையும் ஏற்படும். தேவை பூர்த்தியாகும் விதத்தில் வருமானம் சீராக இருக்கும். உங்கள் முன்னேற்றத்துக்கு உதவிகரமாக இருந்தவர்களே சமயத்தில் பிரச்னைக்கு உரியவராக மாற வாய்ப்புண்டு. எனவே யாரையும் முழுமையாக நம்பி விட வேண்டாம். சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி பணம், நேரத்தை விரயமாக்கலாம். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்க வாய்ப்பில்லை. புதிய தொழில் தொடங்குவதை விட இருப்பதைச் சிறப்பாக நடத்துவது நல்லது. புதிய தொழில் ஆரம்பிக்க விரும்பினால் குறைந்த முதலீட்டில் தொடங்கலாம்.
பணியாளர்கள்: பணியாளர்கள் விடாமுயற்சி, கடின உழைப்பை செலுத்த வேண்டியதிருக்கும். ஆனாலும் அதற்கான பலன் உங்களுக்கு கிடைக்காமல் போகாது. திடீர் இட, பணிமாற்றத்திற்கு ஆளாக நேரிடலாம். புதிய இடமாற்றம் ஆரம்பத்தில் பிடிக்காமல் போனாலும் பின்னர் அதுவே வளர்ச்சிக்கு வழிகாட்டுவதாக அமைந்திருக்கும். வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்க தடையேதும் இல்லை. அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். குருவின் பார்வையால் வேலை இன்றி இருப்பர்களுக்கு நியாயமான சம்பளத்தில் வேலை கிடைக்கும்.
கலைஞர்கள்: தீவிர முயற்சியின் பேரில் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். திறமைக்கு ஏற்ற புகழ், பாராட்டு கிடைக்காமல் போகாது. தொழில் விஷயமாக வெளியூர், வெளிநாடு செல்லும் சூழ்நிலை உருவாகும். சக கலைஞர்களின் ஆதரவு ஓரளவே கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள் சீரான வளர்ச்சி காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்க வாய்ப்பிருக்காது. அதே நேரம் உங்கள் கவுரவத்துக்கு பங்கம் வரும் நிலை உருவாகாது. பிரதிபலன் எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். தொண்டர்களின் நலனுக்காக பணம் செலவழிக்க நேரிடும்.
விவசாயிகள்: விவசாயிகள் சுமாரான நிலையில் இருப்பர். உழைப்பிற்குத் தகுந்தாற்போல் இல்லாமல் சற்று குறைந்த ஆதாயம் மட்டுமே கிடைக்கும். மானாவாரி போன்ற பயிர்களில் அதிக சாகுபடி கிடைக்கப் பெறுவீர்கள். அதிக செலவு பிடிக்கும் பயிர்களை தவிர்ப்பது அவசியம். புதிய சொத்து வாங்க நினைப்பவர்களின் எண்ணம் நிறைவேறாமல் போகலாம். வழக்கு, விவகாரத்தில் இழுபறி நிலையே நீடிக்கும். பிரச்னை உருவாகும் போது பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பது நல்லது.
மாணவர்கள்: கடந்த கல்வி ஆண்டில் சிறப்பான வளர்ச்சி கிடைக்கப் பெற்றிருப்பீர்கள். அதன் மூலம் தேர்விலும் நல்ல மதிப்பெண்ணும் கிடைத்திருக்கும். ஆனால் வரும் கல்வி ஆண்டு அதே போல் சிறப்பான நன்மையை எதிர்பார்க்க முடியாது. அளவுக்கு மீறி பாடுபட வேண்டியதிருக்கும். அதே சமயத்தில் உழைப்புக்கு ஏற்ற பலன் நிச்சயம் கிடைக்கும்.
பெண்கள்: பெண்கள் வாழ்வில் சீரான பலன் கிடைக்கப் பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். குடும்பத்தை பொறுத்தவரை விட்டு கொடுத்து போவது நல்லது. குருவின் பார்வையால் தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்புண்டு. பிள்ளைகளின் செயல்பாடு கண்டு பெருமை கொள்வீர்கள்.
பரிகாரம்: சூரியனை வழிபட்டால் துன்பம் வெயில் கண்ட பனியாக மறையும். சனீஸ்வரர், ராகு, கேது சாதகமாக இல்லாததால் அவர்களுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். ஆஞ்சநேயரையும், பத்ரகாளியையும் வணங்கி வாருங்கள்.
மேலும்
குரு பெயர்ச்சி பலன்கள் (1.5.2024 முதல் 10.5.2025 வரை) »