Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரம்மச்சரியம்-1 எளிய வாழ்க்கை
முதல் பக்கம் » மூன்றாம் பாகம்
பிரம்மச்சரியம்- 2
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 அக்
2011
03:10

தீர விவாதித்து, ஆழ்ந்து சிந்தித்த பிறகே, 1906-ஆம் ஆண்டில் நான் பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொண்டேன். இது சம்பந்தமாக எனக்கு இருந்த எண்ணங்களைக் குறித்து, அதுவரையில் என் மனைவியிடம் நான் எதுவும் கூறவில்லை. விரதத்தை மேற்கொண்ட சமயத்தில் மாத்திரமே அவளைக் கலந்து ஆலோசித்தேன். அவளுக்கு எவ்வித ஆட்சேபமும் இல்லை. ஆனால், முடிவான தீர்மானத்திற்கு வருவதில் எனக்கு அதிகக் கஷ்டம் இருந்தது. அதற்கு வேண்டிய மனபலம் என்னிடம் இல்லை. எனது சிற்றின்ப இச்சையை அடக்குவது எப்படி? ஒருவன் தன்னுடைய மனைவியிடம் கூடச் சிற்றின்ப உறவைப் போக்கிக் கொண்டுவிடுவது என்பது விசித்திரமானதாகவே அப்பொழுது தோன்றிற்று. ஆனால், ஆண்டவனின் அருள் பலத்தில் பூரண நம்பிக்கை வைத்து, துணிந்து விரதத்தை மேற்கொண்டேன்.

அந்த விரதத்தை அனுசரித்து வந்திருக்கும் இருபது ஆண்டு காலத்தை நான் இப்பொழுது எண்ணிப் பார்க்கும்போது எனக்கு அளவற்ற ஆனந்தமும் ஆச்சரியமுமே உண்டாகின்றன. புலன் அடக்கத்தில் ஏறக்குறைய வெற்றிகரமாக அனுசரித்து வந்திருக்கும் பயிற்சி 1901-ஆம் ஆண்டிலிருந்தே நடந்து வருகிறது. ஆனால், விரதத்தை அனுசரித்த பிறகு எனக்கு ஏற்பட்ட சுதந்திரத்தையும் ஆனந்தத்தையும் 1906-ஆம் ஆண்டிற்கு முன்னால் நான் அனுபவித்ததில்லை. விரதம் கொள்ளுவதற்கு முன்னால் எந்தச் சமயத்திலும் ஆசைக்கு அடிமை ஆகிவிடக்கூடும் என்ற நிலையில் நான் இருந்தேன். ஆனால், இப்பொழுதோ எந்த ஆசையினின்றும் என்னைக் காக்கும் நிச்சயமான கேடயமாக விரதம் இருந்து வருகிறது.

பிரம்மச்சரியத்தின் அபார சக்தி, நாளுக்கு நாள் எனக்குப் புலனாகி வந்தது. நான் போனிக்ஸில் இருந்தபோது, இவ்விரதத்தை மேற்கொண்டேன். வைத்தியப் படைவேலை நீங்கியதும் போனிக்ஸு க்குப் போனேன். பிறகு ஜோகன்னஸ்பர்க்கிற்குத் திரும்பிவிட வேண்டியதாயிற்று. நான் அங்கே திரும்பிய ஒரு மாதத்திற்கெல்லாம் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு அடிகோலப்பட்டது. பிரம்மச்சரிய விரதம், எனக்குத் தெரியாமலே என்னைச் சத்தியாகிரகத்திற்குத் தயார் செய்து கொண்டிருந்தது போல் இருந்தது. சத்தியாக்கிரகம், முன்னாலேயே யோசித்துச் செய்யப்பட்ட திட்டம் அன்று நான் விரும்பாமலே அது தானாக வந்தது. ஆனால், என்னுடைய காரியங்களெல்லாம் அந்த லட்சியத்தில் கொண்டு போய் விட்டன என்பதைக் காண்கிறேன். ஜோகன்னஸ்பர்க்கில் அதிகமாக இருந்து வந்த வீட்டுச் செலவுகளையெல்லாம் குறைத்து விட்டேன். பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொள்வதற்கென்றே போனதைப் போல் போனிக்ஸு க்குச் சென்றேன்.

பிரம்மச்சரியத்தைப் பூரணமாக அனுசரிப்பதே பிரம்மத்தை அடைவதற்கு மார்க்கம் என்ற அறிவு, சாத்திரங்களைப் படித்ததனால் ஏற்பட்டதன்று. அனுபவத்தினால் இந்த அறிவு எனக்கு நாளாவட்டத்தில் மெள்ள மெள்ள வளர்ந்தது. இது சம்பந்தமான சாத்திர நூல்களை என் வாழ்க்கையில் பின்னால்தான் நான் படித்தேன். உடல், மனம், ஆன்மா ஆகியவைகளைக் காப்பதிலேயே பிரம்மச்சரியம் இருக்கிறது. விரதத்தின் ஒவ்வொரு நாளும் என்னை இந்த அறிவுக்குப் பக்கத்தில் கொண்டுபோயிற்று. ஏனெனில், பிரம்மச்சரியம், ஒரு கடுமையான தவமுறையாக எனக்கு இல்லை. ஆறுதலையும், ஆனந்தத்தையும் எனக்கு அளிப்பதாகவே அது இருந்தது. ஒவ்வொரு நாளும் அதில் ஒரு புதிய அழகைக் கண்டேன்.

தினந்தோறும் ஆனந்தத்தை அதிகமாக்கும் விஷயமாகவே அது இருந்தாலும், அது எனக்கு எளிதாக இருந்துவிட்டது என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். எனக்கு ஐம்பத்தாறு வயது ஆகிவிட்ட பிறகும்கூட, அது எவ்வளவு கஷ்டமான காரியம் என்பதை அறிகிறேன். கத்தியின் முனைமீது நடப்பதைப் போன்றது அது என்பதை, ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் அதிகமாக உணருகிறேன். என்றைக்குமே விழிப்புடன் இருந்து வர வேண்டியது அவசியம் என்பதையும் காண்கிறேன். இந்த விரதத்தை அனுசரிப்பதில் அவசியமான முதல் காரியம், ருசி உணர்ச்சியை அடக்குவதாகும். ருசியை முற்றும் அடக்கி விடுவது, பிரம்மச்சரிய விரதத்தை அனுசரிப்பதை எளிதாக்கி விடுகிறது என்று கண்டேன். ஆகவே, சைவ உணவுக்காரன் என்ற வகையில் மாத்திரம் அன்றி பிரம்மச்சாரி என்ற வகையிலும் எனது உணவுப் பரிசோதனைகளை மேற்கொண்டும் நடத்தலானேன். இந்தச் சோதனைகளின் பலனாக, பிரம்மச்சாரியின் உணவு, ஓர் அளவுக்கு உட்பட்டதாகவும், எளிமையானதாகவும், மசாலை முதலியவைகள் கலக்காத தாகவும், சாத்தியமானால் சமைக்கப்படாததாகவும் இருக்க வேண்டும் என்பதைக் கண்டேன்.

பிரம்மச்சாரிக்கு ஏற்ற சிறந்த உணவு, பழங்களும் கொட்டைப் பருப்பு வகைகளுமே என்பதை ஆறு வருட அனுபவத்தில் அறிந்து கொண்டேன். இத்தகைய ஆகாரம் மாத்திரமே சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, சிற்றின்ப இச்சை இல்லாத நிலையை நான் அனுபவித்ததைப்போல் அந்த உணவை மாற்றிவிட்ட பிறகு நான் அனுபவித்ததில்லை. தென்னாப்பிரிக்காவில் பழங்களையும் கொட்டைப் பருப்புகளையும் மாத்திரமே நான் புசித்து வந்தபோது, பிரம்மச்சரியத்திற்கு என் அளவில் எந்தவித முயற்சியும் தேவைப்படவில்லை. ஆனால் நான் பால் சாப்பிட ஆரம்பித்த பிறகு அதிக முயற்சியின் பேரிலேயே பிரம்மச்சரிய விரதத்தைக் காக்கவேண்டியிருந்தது. என் பழ ஆகாரத்திலிருந்து திரும்பவும் பால் சாப்பிட வேண்டிய நிலைமை எப்படி ஏற்பட்டது என்பதைக் குறித்து அதற்கு உரிய இடத்தில் பிறகு கவனிப்போம். பால் ஆகாரம் பிரம்மச்சரிய விரதத்தை அதிகக் கஷ்டமானதாக்குகிறது என்பதை மாத்திரம் இங்கே சொன்னால் போதுமானது. இதிலிருந்து பிரம்மச்சாரிகளெல்லாம் பால் சாப்பிடுவதை விட்டுவிட வேண்டும் என்ற முடிவுக்கு யாரும் வந்துவிட வேண்டாம். பலவகையான ஆகாரங்களும், பிரம்மச்சரியத்தை எவ்விதம் பாதிக்கின்றன என்பதை, அநேக சோதனைகளின் பிறகே முடிவு செய்ய முடியும். பாலைப் போல் தசையை நன்றாக வளர்க்கக்கூடியதும், எளிதில் ஜீரணிக்கக் கூடியதுமான பழம் எதையும் நான் இன்னும் கண்டுபிடித்து விடவில்லை. இது சம்பந்தமாக டாக்டர்கள், வைத்தியர்கள், ஹக்கீம்கள் முதலிய பலரைக் கேட்டும் என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. ஆகையால், பால், காம உணர்ச்சியைத் தூண்டக் கூடியதுதான் என்றாலும், பாலை விட்டுவிடுமாறு இப்போதைக்கு யாருக்கும் நான் யோசனை கூறமாட்டேன்.

பிரம்மச்சரியத்திற்கு உணவைத் தேர்ந்தெடுப்பதும், கட்டுப்படுத்துவதும் எவ்விதம் அவசியமோ, அதேபோல் அதன் புற உதவிக்கு, உண்ணாவிரதம் அவசியம். புலன் உணர்ச்சிகள் கட்டுக்கு அடங்காதவை. மேலும், கீழும், எல்லாப் பக்கங்களிலும் சரியாகத் தடுத்து வைத்தால்தான் அவற்றை அடக்கிவைக்க இயலும். பசி வந்திடப் பத்தும் பறந்து போம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆகையால், உண்ணா விரதம் இருப்பது புலன்களை அடக்குவதில் அதிக உதவியாக இருக்கும் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகமே இல்லை. ஆனால், சிலர் விஷயத்தில் பட்டினி விரதம் பயன்படுவதில்லை. ஏனெனில், சாப்பிடாமல் இருப்பதனால் மாத்திரம் புலன் அடக்கம் கைகூடிவிடும் என்று இவர்கள் நினைத்து விடுகிறார்கள். இவர்கள் உடம்பைத்தான் பட்டினி போடுகிறார்களே அன்றி, உள்ளத்திற்கு விருந்து அளித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். பட்டினிவிரதம் முடிந்ததும் என்ன என்ன ருசியான ஆகாரங்களைத் தின்பது, என்ன என்ன ருசியான பானங்களைப் பருகுவது? என்பதைக் குறித்து எண்ணியவாறே இருக்கிறார்கள். இத்தகைய பட்டினி விரதங்கள், ருசியைக் கட்டுப்படுத்தவோ, காம இச்சையைக் கட்டுப்படுத்தவோ அவர்களுக்கு உதவுவதில்லை.

பட்டினி கிடக்கும் உடலோடு, உள்ளமும் ஒத்து உழைத்தால்தான் பட்டினி விரதம் பயனுள்ளதாகும். அதாவது உடலுக்கு எவை மறுக்கப்படுகின்றனவோ அவைகளின் மீது பட்டினி விரதம் வெறுப்பை வளர்க்கவேண்டும். எல்லாப் புலன் உணர்ச்சிகளுக்கும் வேராக இருப்பது மனம். ஆகையால், பட்டினி விரதம் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் பயன்தரும். பட்டினி விரதம் இருக்கும் ஒருவர், காமக்குரோத உணர்ச்சிகளுக்குத் தொடர்ந்து வயப்பட்டிருப்பவராகவே இருந்துவிடவும் கூடும். என்றாலும், பட்டினி விரதத்தை அனுசரிக்காமல் சிற்றின்ப இச்சையை அழித்து விடுவது சாத்தியமில்லை என்பது பொதுவான விதி என்று சொல்லலாம். அது பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பதற்கு அத்தியாவசியம் என்றும் சொல்லலாம். பிரம்மச்சரியத்தை அனுசரிக்க முற்படுகிறவர்களில், பலர் தவறிவிடுகின்றனர். இவர்கள் மற்றப் புலன்களை உபயோகிப்பதில் பிரம்மச்சாரிகளாக இல்லாமல் இருப்பது தான் இவர்கள் தோல்வியடைவதற்குக் காரணம். ஆகவே, இவர்களுடைய முயற்சி, தகிக்கும் வெயில் காலத்தில், குளிர் காலத்தின் நடுக்கும் குளிரை அனுபவிக்கச் செய்யும் முயற்சியைப் போன்றதாகிறது. பிரம்மச்சாரியின் வாழ்க்கைக்கும், பிரம்மச்சாரிகள் அல்லாத மற்றவர்கள் வாழ்க்கைக்கும் தெள்ளத் தெளிவான வேறுபாடு இருக்கவேண்டும். இவ்விரு பிரிவினரின் வாழ்க்கையும் ஒன்றுபோல் இருப்பதெல்லாம் வெளித்தோற்றத்தில் தான். ஆனால், வித்தியாசம் பட்டப் பகல்போல் வெட்ட வெளிச்சமாக இருந்தாக வேண்டும்.

பிரம்மச்சாரி, பிரம்மச்சாரி அல்லாதவர் ஆகிய இருவரும் கட்புலனை உபயோகித்தே பார்க்கின்றனர். கடவுளின் மகிமையைக் காண்பதற்கே, பிரம்மச்சாரி கட்புலனைப் பயன்படுத்துகிறான். ஆனால், மற்றவனோ, தன்னைச் சுற்றிலும் உள்ள அற்பத்தனங்களைப் பார்க்கவே அதை உபயோகிக்கிறான். இருவரும் தங்கள்காதுகளை உபயோகிக்கின்றனர். இதில் ஒருவன், கடவுளின் புகழுரையைத் தவிர வேறு எதையும் செவிகொடுத்துக் கேட்பதில்லை. மற்றவனுக்கோ, ஆபாசப் பேச்சுக்களைக் கேட்பதே செவிக்கு விருந்தாக இருக்கிறது. இருவரும் இரவில் நீண்டநேரம் கண் விழிக்கின்றனர். ஒருவன், அந்நேரத்தைப் பிரார்த்தனையில் செலவிடுகிறான்; மற்றவனோ, வெறித்தனமான வீண் களியாட்டங்களில் பாழாக்குகிறான். அந்தராத்மாவுக்கு இருப்பிடமான உடலாகிய திருக்கோயிலுக்கே இருவரும் உணவளிக்கின்றனர். ஒருவன், ஆண்டவனின் திருக்கோயிலைப் பழுதுபடாமல் நல்ல நிலையில் வைத்திருப்பதற்கே அதைச் செய்கிறான். மற்றொருவனோ, கண்டவைகளையெல்லாம் அதில் போட்டு நிரப்பி, அந்தத் தெய்வீகப் பாத்திரத்தைத் துர்நாற்றம் அடிக்கும் சாக்கடை ஆக்கிவிடுகிறான். இவ்விதம் ஒருவருக்கொருவர் எவ்விதச் சம்பந்தமும் இன்றித் தொலைவிலேயே வாழ்கின்றனர். நாளாக ஆக இவ்விருவருக்கும் இடையே இருக்கும் தூரம் அதிகமாகுமே அன்றிக் குறையாது.

பிரம்மச்சரியம் என்பது மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றிலும் புலன்களை அடக்குவதேயாகும். மேற்கண்டதைப் போன்ற புலன் அடக்கத்தின் அவசியத்தை ஒவ்வொரு நாளும், மேலும் மேலும் நான் நன்றாக அறிந்துவருகிறேன். பிரம்மச்சரியத்திற்கான சாத்தியங்கள் எவ்விதம் எல்லையற்று இருக்கின்றனவோ, அதே போல் துறவுக்கும் எல்லையில்லாச் சாத்தியங்கள் உண்டு. அத்தகைய பிரம்மச்சரியத்தை ஒரு வரையறைக்கு உட்பட்ட முயற்சியினால் அடைந்துவிடுவது சாத்தியம் அல்ல. அநேகருக்கு அது வெறும் லட்சியமாக மாத்திரமே இருக்க முடியும். பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து ஒழுக விரும்புகிறவர், தம்மிடம் உள்ள குறைபாடுகளை எப்பொழுதும் உணர்ந்தவராக இருப்பார். தமது அடிமனத்தின் மூலை முடுக்குகளில் இருக்கும் ஆசைகளைத் தேடிப்பிடித்து, அவற்றைப் போக்கிக்கொள்ளுவதற்கு இடைவிடாது பாடுபட்டு வருவார். எண்ணங்கள் முற்றும் உறுதி பெற்றாலன்றிப் பூரணமான பிரம்மச்சரியம் சித்திக்காது. தானாகத் தோன்றும் எண்ணம், உள்ளத்தின் ஓர் இச்சையாகும். ஆகையால், எண்ணத்தை அடக்குவது என்பது மனத்தை அடக்குவதுதான் என்று ஆகிறது. மனத்தை அடக்குவதோ, காற்றை அடக்குவதைவிட இன்னும் அதிகக் கஷ்டமானது. என்றாலும், உள்ளத்தினுள் ஆண்டவன் இருந்து வருவதால் மனத்தை அடக்குவதும் சாத்தியமாகிறது. அது கஷ்டமாக இருப்பதால் அது சாத்தியமானதே அல்ல என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். அது மிக உயர்வான லட்சியம். ஆகவே, அதை அடைவதற்கு மிக அதிகமான முயற்சி தேவையாவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

ஆனால், அத்தகைய பிரம்மச்சரியத்தை மனிதப் பிரயத்தனத்தினால் மட்டும் அடைந்துவிடுவது முடியாத காரியம் என்பதை நான் இந்தியாவிற்கு வந்த பிறகே அறியலானேன். அது வரையில், பழ ஆகாரத்தினால் மாத்திரமே, எல்லா ஆசைகளையும் போக்கிக் கொண்டுவிட முடியும் என்ற மயக்கத்தில் இருந்து விட்டேன். அதற்குமேல் நான் செய்ய வேண்டியது எதுவும் இல்லை என்ற நம்பிக்கையில், எனக்குள் நானே பெருமையும் பட்டுக் கொண்டேன். என்னுடைய போராட்டங்களைப் பற்றிய அத்தியாயத்தை நான் முன் கூட்டி இங்கே விவரித்துவிடக் கூடாது. இதற்கு மத்தியில் ஒரு விஷயத்தைத் தெளிவாகக் கூறிவிடுகிறேன். கடவுளை அடைவது என்ற நோக்கத்துடன் பிரம்மச்சரியத்தை மேற்கொள்ளுகிறவர்களுக்குத் தங்களுடைய முயற்சியில் எவ்வளவு நம்பிக்கை இருக்கிறதோ அவ்வளவு நம்பிக்கை கடவுளிடம் இருக்குமாயின், அவர்கள் மனச் சோர்வு அடைய வேண்டியது இல்லை. இந்திரியங்களைத் தடுத்து வைப்பவனுக்கு விஷயானுபவங்கள் இல்லை; ஆனால் ஆசை மட்டும் இருக்கும். பரமாத்மாவைத் தரிசித்த பிறகு அவனுடைய ஆசையும் அழிகிறது. ஆகவே, மோக்ஷத்தை நாடுகிறவனுக்கு ஆண்டவனுடைய திருநாமமும், ஆண்டவனுடைய பேரருளுமே கடைசி ஆதாரங்கள். இந்தியாவுக்குத் திரும்பிய பின்னரே இந்த உண்மை எனக்குப் புலனாயிற்று.

 
மேலும் மூன்றாம் பாகம் »
temple news
நான் மனைவியுடனும் குழந்தைகளோடும் கப்பல் பிரயாணம் செய்வது இதுதான் முதல் தடவை. ஹிந்துக்களில் மத்திய ... மேலும்
 
temple news

புயல் அக்டோபர் 03,2011

டிசம்பர் 18 ஆம் தேதி, இரு கப்பல்களும் டர்பன் துறைமுகம் வந்து சேர்ந்தன என்பதைக் கவனித்தோம். ... மேலும்
 
temple news

சோதனை அக்டோபர் 03,2011

கப்பல்களைக் கரையோரமாகக் கொண்டு போய் நிறுத்தினர், பிரயாணிகளும் இறங்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது திரு ... மேலும்
 
இன்னும் போலீஸ் ஸ்டேஷனை விட்டு, நான் வீட்டுக்குப் போகவில்லை. இரண்டுநாள் கழித்துப் போலீஸ் ஸ்டேஷனில் ... மேலும்
 
1897 ஜனவரியில், டர்பனில் நான் இறங்கியபோது என்னுடன் மூன்று குழந்தைகள் இருந்தார்கள். என் சகோதரியின் பத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar