Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

குறிஞ்சேரியில் ஆண்டாள் நாச்சியாருக்கு திருக்கல்யாணம் குறிஞ்சேரியில் ஆண்டாள் ... வைரமுத்துவுக்கு எதிராக வெகுண்டெழுந்த பக்தர்கள் வைரமுத்துவுக்கு எதிராக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள்: கடமையை செய்... உயர்வுக்கு வழிவகுக்கும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2018
11:39

“இந்தியாவை நீங்கள் அறிய வேண்டுமானால், சுவாமி விவேகானந்தரைப் படியுங்கள். அவரிடம் எல்லாம் ஆக்கபூர்வமானவை; அவரிடம் எதிர்மறை எதுவும் இல்லை,” என கவியரசர் ரவீந்தரநாத் தாகூர் கூறினார். விவேகானந்தரிடம் குறுகிய மனப்பான்மை, எதிர்மறைக் கருத்துகள் ஒரு போதும் இருந்ததில்லை. அவர் மற்றவர்களும் குறுகிய மனப்பான்மையைக் கைவிட்டு, நடைமுறையில் நன்மை தரும் செயல்களில் ஈடுபட வேண்டும்; பரந்த மனப்பான்மையுடன் வாழ வேண்டும் என வலியுறுத்தினார். ஒரு முறை கர்நாடக மாநிலம் பெல்காமில் விவேகானந்தர் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு 29 வயது. அங்கு அவரை அறிஞர்கள், உயர் அதிகாரிகள், தெய்வபக்தி உள்ளவர்கள், தெய்வபக்தி இல்லாதவர்கள், பண்டிதர்கள், பாமரர்கள் என பலர் சந்தித்து பேசினர்.சிலர் நியாயமில்லாத கருத்தை உறுதியாகப் பிடித்துக்கொண்டு ‘நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்’ என்றனர். சிலர் தங்கள் கருத்து தவறு என்று தெரிந்த பிறகும், ‘அதுதான் சரி’ என்றனர்.

விவேகானந்தர் சொன்ன கதை

அவர்களுக்குப் படிப்பினை தரும் வகையில் விவேகானந்தர் பின்வரும் கதையைக் கூறினார்: ஓர் அரசன் நாட்டை ஆட்சி செய்தான். திடீரென்று ஒரு நாள் அவன் நாட்டை, பக்கத்து நாட்டு அரசன் படையெடுத்து வந்து முற்றுகையிட்டான். உடனே அரசன் எல்லோரையும் அழைத்து, “பகைவர்களின் படை விரைந்து வந்துகொண்டிருக்கிறது! அவர்களை எப்படி எதிர்கொள்வது? இப்போது நாம் என்ன செய்யலாம்?” என்று ஆலோசனை கேட்டான். அங்கிருந்த பொறியியல் வல்லுநர்கள், “நம் தலைநகரைச் சுற்றிலும் பெரிய ஒரு மண் சுவர் எழுப்பி, அதைச் சுற்றி ஓர் அகழி அமைக்க வேண்டும்” என்றனர். சிலர், “மண் சுவர் பயனற்றது, மழை வந்தால் கரைந்துவிடும். மரத்தினால் சுவர் அமைக்க வேண்டும்” என்று கூறினர். வேறு சிலர், “இரண்டும் பயனற்றவை. தோலால் தலைநகரத்தைச் சுற்றிலும் சுவர் அமைப்பது போன்று பாதுகாப்பானது வேறு எதுவுமில்லை” என்றனர்.

வேறு சிலர், “நீங்கள் சொல்வது எதுவும் சரியில்லை. இரும்புச்சுவரைப் போன்று ஒரு பாதுகாப்பை வேறு எதனாலும் தர முடியாது. இரும்பினால்தான் மதிற்சுவரைக் கட்ட வேண்டும்” என்று குரலிட்டனர். அப்போது அங்கே வந்த சட்ட நிபுணர்கள், “நாம் பகையரசனிடம் ‘நீங்கள் இப்படி வலுவில் வந்து எங்கள் நாட்டின் மீது படையெடுப்பது முறையல்ல. இது சட்டத்திற்குப் புறம்பானது. எதையும் சட்டப்பூர்வமாக அணுகுவதுதான் சிறப்பு. எனவே நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின்படி நீங்கள் நடப்பது தான் நியாயமாகும்’ என்று, அவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும்,” என்று வாதிட்டனர்.  பின் அரசாங்கப் பூஜாரிகள் வந்தார்கள். அவர்கள் அது வரையில் ஆலோசனை கூறிய எல்லோரையும் பார்த்து ஏளனமாகச் சிரித்தனர். அவர்கள்,  “ முதலில் யாகங்கள் செய்து தேவர்களை மகிழ்விக்க வேண்டும். அப்படிச் செய்தால் நம்மை யாராலும் வெல்ல முடியாது!” என்றார்கள். இப்படி அவர்கள்  நாட்டைக் காப்பாற்றுவதற்குப் பதில்  வீண் வாக்குவாதம் செய்வதிலும், தங்களுக்குள் சண்டையிடுவதிலும் காலத்தை வீணாக்கினர். இதற்குள் பகை அரசன் புயல்போல் தன் படைகளுடன் தலைநகரத்திற்குள் புகுந்தான். அவன் எந்த எதிர்ப்பும் இன்றி, மிகவும் சுலபமாகத் தலைநகரத்தைக் கைப்பற்றி இடித்துத் தரைமட்டமாக்கினான்.

உண்மை ஏது

நம்மில் பலர் இப்படித்தான் நடந்து கொள்கிறோம் என்று விவேகானந்தர் கதையை கூறி முடித்தார்.  ‘உண்மை எது?’ என்று நாம் சரியாகத் தெரிந்துகொள்ளும் பொருட்டு, மற்றவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவது நல்லது. ஆனால் தெரிந்து வேண்டுமென்றே வீண் வாக்குவாதங்களிலும், வீம்புப் பேச்சுக்களிலும் ஈடுபடுவது வரவேற்கத்தக்கதல்ல. ஒரு பிரச்னை என்று வரும் போது, அதைத் தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான ஒரு வழியைக் கண்டறிந்து செயல்படுத்தி பிரச்னையைத் தீர்ப்பது தான் - வெற்றி பெறுவதுதான் அறிவுடைமையாகும். இதற்கு மாறாக புரிந்துகொள்ளாமல் விவாதம் செய்வது, திக்குத் தெரியாத காட்டில் நுழைவது போன்றது. சமுதாய நலனில் ஒவ்வொருவருக்கும் உண்மையான ஈடுபாடு இருக்க வேண்டும். சமுதாய உணர்வுடன் ஒவ்வொருவரும் நாட்டு நலனுக்குத் தங்களால் இயன்ற தொண்டு செய்ய வேண்டும். ‘சமுதாயத்திற்கு நன்மை செய்ய வேண்டும்’ என்று பேசினால் மட்டும் போதுமா? அது செயலிலும் இருக்க வேண்டுமா என்பதை, விவேகானந்தர் மற்றொரு கதை மூலம் விளக்கியிருக்கிறார்.அரசன் ஒருவன் இருந்தான். அவன் அரசவையில் அதிகாரிகள் பலர்  இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், “நான் தான் அரசனிடம் ஈடுபாடு கொண்டிருக்கிறேன். அரசனுக்காக என் உயிரையும் கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறேன்” என்று கூறிக் கொண்டிருந்தார்கள். அரசவைக்கு துறவி ஒருவர் வந்தார்.

அரசன் அவரிடம், “இந்த அளவுக்கு ஈடுபாடு உடைய அதிகாரிகளைப் பெற்ற அரசன் என்னைப்போல் வேறு யாரும் இருக்க இயலாது” என்றான். துறவி புன்சிரிப்புடன், “நீ சொல்வதை நான் நம்பவில்லை,” என்றார். அரசன், “நீங்கள் வேண்டுமானால் அதைச் சோதித்துக்கொள்ளலாம்” என்றான். சிறிய ஒரு சோதனை வைத்தார் துறவி. ‘‘அரசனின் ஆயுளும் ஆட்சியும் பல்லாண்டுகள் நீடிப்பதற்கு, நான் பெரிய ஒரு வேள்வி செய்யப் போகிறேன். அதற்குத் தேவையான பாலுக்காக ஓர் அண்டா வைக்கப்படும். அதில் அதிகாரிகள் ஒவ்வொருவரும் இரவில் ஒரு குடம் பால் ஊற்ற வேண்டும்,” என துறவி கூறினார். அரசன் புன்முறுவலுடன், “இதுதானா சோதனை?” என இகழ்ச்சியாகக் கேட்டான். பால்–தண்ணீர் பின்  அரசன், அதிகாரிகளை அழைத்து நடக்க இருப்பதைக் கூறினான். அந்த யோசனைக்கு அதிகாரிகள் அனைவரும் தங்களின் மனபூர்வமான சம்மதத்தைத் தெரிவித்தனர். நள்ளிரவில் எல்லோரும் அந்த அண்டாவின் அருகில் சென்று, தங்கள் குடங்களில் இருந்ததை அதற்குள் ஊற்றினார்கள். மறுநாள் காலையில் பார்த்தபோது அண்டா நிறையத் தண்ணீர்தான் இருந்தது! திடுக்கிட்ட அரசன் அதிகாரிகளை அழைத்து விசாரித்தான். அப்போது, ‘எல்லோரும் பாலைத்தான் ஊற்றப் போகிறார்கள். நான் ஒருவன் மட்டும் அதில் தண்ணீர் ஊற்றினால், அது மற்றவர்களுக்கு எப்படித் தெரியப்போகிறது?’ என்று ஒவ்வொருவரும் நினைத்து, எல்லோரும் தண்ணீரையே ஊற்றினார்கள் என தெரிய வந்தது. துரதிர்ஷ்டவசமாக நம்மில் பலருக்கும் இதே எண்ணம்தான் இருக்கிறது.  உலகத்தில் சமத்துவக் கருத்து நிறைந்திருக்கும்போது, நான் ஒருவன் மட்டும் கொண்டாடும் தனிச்சலுகை யாருக்குத் தெரியப் போகிறது என்கிறார் ஒருவர். எனவே எல்லா மக்களையும் சமமாக நினைக்கும் ஞானத்தைப் பெற முயற்சிக்க வேண்டும். நம்முன் இருக்கும் கடமைகளைச் செய்வதுதான், உயர்வு பெறுவதற்கு ஒரே வழி. நம் கடமை களைச் செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கும் வலிமையைப் பெருக்கிக்கொண்டே சென்று, இறுதியில் உயர்ந்த நிலையை அடைந்துவிடலாம். சுவாமி விவேகானந்தர் காட்டிய வழியில் வீறுநடை போடுவோம்...

-சுவாமி கமலாத்மானந்தர்
தலைவர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மதுரை
0452– -268 0224.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
திருச்சி: ஸ்ரீரங்கம் கோவிலில் நேற்று திறக்கப்பட்ட சொர்க்கவாசல், வரும், 27 வரை திறந்திருக்கும் என, ... மேலும்
 
temple
 ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ... மேலும்
 
temple
சென்னை: வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை, திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாள், திருநீர்மலை ... மேலும்
 
temple
சபரிமலை: நீலிமலை, அப்பாச்சிமேடு போன்ற செங்குத்தான மலை ஏற்றம் ஏறாமல், சபரிமலை செல்ல முடியும். கேரள ... மேலும்
 
temple
திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயிலில் வைகுண்ட ஏகாதசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.