Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனுமனை எவ்வாறு வழிபட வேண்டும்? ஆஞ்சநேயரின் பிற கோயில்களும் அதன் சிறப்பும்! ஆஞ்சநேயரின் பிற கோயில்களும் அதன் ...
முதல் பக்கம் » அனுமன் ஜெயந்தி!
நவமாருதி வழிபாடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 டிச
2011
03:12

ஆஞ்சநேயரும் பிற தெய்வங்களைப் போலவே வடிவங்கள் பல எடுத்தவர் என்கின்றன புராணங்கள். வாயுமகன், வானர வீரன், அஞ்சனாபுத்திரன், கேசரி நந்தனன் என பெயர்களுக்கு ஏற்ப சதுர்புஜ அனுமன், அஷ்டபுஜ அஞ்சநேயன், வீர அனுமன், விஜய மாருதி, கல்யாண ஆஞ்சனேயர், பால மாருதி. பக்த அனுமன் இப்படி எத்தனை எத்தனையோ வடிவங்கள் அவர் எடுத்ததாக சொல்லப்படுகின்றன. நவ வியாக்ரண பண்டிதன் என்று போற்றப்படும் அனுமனின் வடிவங்களுள் ஒன்பது வடிவங்கள் மிகவும் போற்றுதலுக்கு உரியவை என்கின்றன புராணங்கள். ஆஞ்சநேயரின் ஒவ்வொரு வடிவமும் தனித்தனியே வெவ்வேறு காரணங்களுக்காக வழிபடப்பட்டாலும், நவகிரகதோஷங்கள் நீங்கவும், நல்லனயாவும் கிட்டவும் அருள்வது இந்த நவ மாருதி தரிசனம் என்பது ஐதிகம்.

1. கல்யாண அஞ்சனேயர்

அனுமன் பிரம்மசாரியா? திருமணமானவரா? இந்தக் கேள்விக்கு அநேகமாக பலரும் பிரம்மசாரி என்றுதான் பதில் சொல்வீர்கள். ஆனால் அவருக்கு மனைவியும் ஒரு மகனும் உண்டு என்கின்றது புராணம். சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு பறந்தபோது அனுமனின் வியர்வை கடலில் விழுந்தது. அப்போது மீன்வடிவில் கடலில் நீந்திக் கொண்டிருந்த தேவகன்னி ஒருத்தி, அந்த வியர்வையை விழுங்கினாள். அதன் காரணமாக அவளுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது அந்த வேதகன்னிகை  பின்னர் அனுமனை மணந்தாள். இப்படிப் போகிறது. அந்தப் புராணக் கதை. மாருதியின் மனைவி பெயர், சுவர்ச்சலா. (சில புராணங்களில் சுசீலா, அநங்க சுதா என்றும் கூறப்பட்டுள்ளன). மகன், மகரத்வஜன். கல்யாணம் என்பதற்கு சர்வ மங்களம் என்றும் அர்த்தம் உண்டு. இவரை தரிசிப்பது மணப்பேறும், மழலை பாக்கியமும் தரும். தம்பதியரிடையே ஒற்றுமை ஏற்படும்.

2. பஞ்சமுக ஆஞ்சனேயர்

ராம-ராவன யுத்தத்தின்போது ராவணனுக்கு உதவ வந்தான், மயில் ராவணன் மாயைகளில் வல்லவனான அவன், விபீஷணனை ஏமாற்றி ராம லட்சுமணரை மயக்கிக் கவர்ந்து சென்றான். மயில் ராவணனை அழித்து ராம லட்சுணரை மீட்டார் மாருதி. அப்போது ஐந்து முகங்கள் உள்ளவராக அவர் எடுத்ததே பஞ்சமுக அனுமன் வடிவம். அனுமனின் முகத்தோடு வராகர், ஹயக்ரீவர், நரசிம்மர், கருடன் முகங்களும் இணைந்த வடிவம் இது. எனவே இவரை வழிபட்டால் தைரியம், கல்வி, அறிவு, எதரிபயம் இன்மை, சுபகாரியத் தடைவிலகல் ஆகிய நற்பலன்களோடு, தீயசக்திகளால் ஏற்பட்ட பயமும் அகலும்.

3. நிருத்த ஆஞ்சனேயர்

போர்க்கோலத்தில் காட்சிதரும் அனுமன் இவர். ராம ராவணப் போரின்போது அசுரவீரர்களோடு அதி உக்ரமாக சண்டையிட்ட தோற்றம் இது. இவரை வணங்குவதால், வாழ்வில் வரும் பணியிடப் பிரச்னைகளும் முன்னேற்றத் தடைகளும் நீங்கும்.

4. பால ஆஞ்சனேயர்

அஞ்சனை மகனாக அழகாக பாலனாகக் அருட்காட்சி தரும் அனுமன். சில சமயம், தாய் அஞ்சனா தேவியும் இவரோடு இணைந்து இருப்பார். இந்த அனுமனைத் துதித்து வந்தால், பிள்ளை இல்லாக் குறை நீங்கும் மனக் குழப்பங்கள் அகலும்.

5. பக்த ஆஞ்சனேயர்

பக்தர்கள்தான் தெய்வத்தை வணங்குவார்கள். கடவுள் பக்தர்களைக் வணங்குவார்கள். கடவுள் பக்தர்களைக் கும்பிடுவாரா? இதற்கு பதில் சொல்வதுபோல் குவித்த கரங்களுடன் கும்பிடும் பாவத்தில் காட்சி தருபவர், பக்த ஆஞ்சநேயர். தன்னை வணங்குவோர் ராம நாமம் சொல்லிப் பணியும்போது அதனைப் பணிவோடு ஏற்கும் பாவம் இது என்பர். ராமபிரானை எங்கும் எதிலும் காண்பவர் அனுமன் என்பதால், தன் பக்தர்களின் மனதிலும் ராமசந்திரன் உறைவதாகக் கருதி வணங்கும் வடிவம் இது எனவும் சொல்வர் பக்த ஆஞ்சநேயரை வழிபடுவோரின் உள்ளம் அமைதி பெறும். இல்லத்தில் இனிமை நிறையும்.
 
6. வீர ஆஞ்சனேயர்

சிறுவயதில் செய்த குறும்புகளால் முனிவர்களின் சாபத்துக்கு ஆளாகி தன் ஆற்றல் என்ன என்பதையே மறந்தார் மாருதி ராமபிரானுக்காக சீøயைத் கடக்கத் தயங்கி நின்றார். அப்போது ஜாம்பவான், அனுமனுக்கு அவனது வலிமைபற்றி எடுத்துச் சொன்னார். அதைக் கேட்டதும் தனது வீரமும், வலிமையும் நினைவுக்கு வர, விஸ்வரூபம் எடுத்தார் அனுமன். அந்தத் திருவடிவமே வீர ஆஞ்சநேயர், மனதைரியம் அதிகரிக்கவும் தீவினைத் துன்பங்கள் விலகவும் இவரை வணங்குவது நல்லது.

7. யோக ஆஞ்சனேயர்

அவதார நோக்கம் நிறைந்ததும் ராமபிரான் வைகுந்தம் சென்றார். அதன்பின்னர் இடைவிடாத ராம தியானத்தில் மூழ்கினார் ஆஞ்சநேயர், பீமன், திரவுபதிக்காக சவுகந்திக மலரை எடுக்க வந்தபோது இவரைப் பார்த்தான். வயோதிக வானரம் என அற்பமாக நினைத்தான் அதனால் இவரோடு போரிடவும் துணிந்தான். முடிவில் தோற்ற பீமன், தனது அண்ணனே அனுமன் பணிந்தான். அவர் உதவியால் தேவலோக மலரையும் எடுத்துவந்தான். இன்றும் சிரஞ்சீவியாக ராமநாமம் ஒலிக்கும் இடமெல்லாம் சென்று அந்த நாமத் தேனில் திளைத்து மகிழ்ந்து கொண்டிருப்பவர் இவர். ராம நாமம் சொல்லி இவரை வழிப்பட்டால், கேட்பவை யாவும் கிட்டும்; நல்லதே நடக்கும்.

8. சிவ பிரதிஷ்டா ஆஞ்சனேயர்

இராமேஸ்வரத்தில் ராமர் சிவ பூஜை செய்ய விரும்பியபோது அவருக்காக லிங்கத் திருமேனியை எடுத்து வரப்போனார் மாருதி. காலதாமதமாகிவிடவே சீதாதேவி பிடித்த மணல் லிங்கத்தை வழிபட்டார் ராமபிரான். தாமதமாக வந்த மாருதி வருந்தினார். அனுமன் எடுத்து வந்த லிங்கத்தினை அவரையே எடுத்து பிரதிஷ்டை செய்யச் சொல்லி அதனையும் பூஜித்து வாயுமகனின் வாட்டத்தினைப் போக்கினார் ராமர். லிங்கத் திருமேனியை போக்கினார் ராமர். லிங்கத் திருமேனியை ஸ்தாபித்த திருவடிவில் காட்சி தருபவர் இந்த மாருதி. மேலும் சிவனின் அம்சமே அனுமன் எனவும் சொல்வர். விருப்பங்கள் யாவும் ஈடேறவும் சுபகாரியத் தடைகள் நீங்கவும் இவரை பூஜிப்பது சிறப்பு.

9. சஞ்சீவி ஆஞ்சனேயர்

சமய சஞ்சீவியாக செயல்பட்டு ராமபிரானின் வெற்றிக்கு உதவியவர் ஆஞ்சனேயர். போரின்போது மயங்கி வீழ்ந்த லட்சுமணனும், இறந்த வானர வீரர்களும் பிழைத்தெழ அனுமன் சஞ்சீவி மலையை எடுத்து வந்து உதவினார். இந்தக் காரணங்களால் அனுமனுக்கு சஞ்சீவிப்பட்டமும் கிடைத்தது. சஞ்சீவி அனுமனை வழிபட்டால், மன சஞ்சலங்கள் மறையும் நோய்களின் பாதிப்பு குறையும் மறையும் நோய்களின் பாதிப்பு குறையும் ஆயுள் ஆரோக்கியம் நீடிக்கும் என்பது நிச்சியம்!

அனுமனை வணங்குவதன் பலன்

புத்திர்-பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வம் அரோகதா!
அஜாட்யம் வாக்-படுத்வம் ச
ஹநுமத் ஸ்மரணாத் பவேத்!!

பொருள் : அனுமனின் திருநாமங்களைச் சொன்னால், புத்தி, பலமான உடல், புகழ் (யசோ), தைரியம், அஞ்சாநெஞ்சம், ஆரோக்கியம் (அரோகதா), சுறுசுறுப்பு (அஜாட்யம்), நல்வார்த்தை பேசுதல் (வாக்-படுத்வம்) ஆகியவை கிடைக்கும்.

துளசிதாசர்: ராமாயணத்தை ராமசரித மானஸ் என்ற பெயரில் இந்தியில் எழுதியவர் துளசிதாசர். இவர் ஆஞ்சநேயரின் கருணையைப் பெற்றவர். இவரது பக்தியால் ஆஞ்சநேயரே நேரில் காட்சி கொடுத்துள்ளார். துளசிதாசரையே அனுமானின் அவதாரம் என்பர். இவரும் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்.

தளராத முயற்சி வேண்டும்: ஆஞ்சநேயர் என்ற சொல்லுக்கு அகராதியில் வேண்டுமானால் அஞ்சனை மைந்தன் என்று இருக்கும். ஆனால், தளராத முயற்சி என்பதே சரியான பொருள். அவர் பிறந்தவுடன் சூரியனைப் பழமென்று நினைத்து பறிக்கப் போக, இந்திரனிடம் அடி வாங்கினார். ஆனாலும், விடாப்பிடியாக அதே சூரியனிடம் சென்று இலக்கணம் கற்றார். சூரியன் உதிக்கும் உதயகிரியில் இருந்து மறையும் அஸ்தகிரி வரை, சூரியனுக்கு எதிர்த்திசையில் பறந்தபடியே அவர் பாடம் கேட்டார். குரங்கு என்பதால், தன் குணத்துக்கேற்ப ரிஷிகளின் ஆஸ்ரமத்துக்குள் புகுந்து சேஷ்டை செய்தார். அவர்கள் கோபமடைந்து, உன் திவ்ய சக்தி உனக்கே மறந்து போகட்டும், ராமாவதார காலத்தில் தான் அது நினைவுக்கு வரும், என்று சாபமிட்டனர். அதற்காக, அவர் ஒன்றும் சோர்ந்து விடவில்லை. வாலியால் தாக்கப்பட இருந்த சுக்ரீவனைக் காப்பாற்றினார். இலங்கை செல்லும் வழியில்  அரக்கிகளை வென்றார். அங்கே வாலில் தீ வைத்தார்கள். அதை அவர்களுக்கே திரும்ப வைத்தார். ராமலட்சுமணருக்காக ஒரு மருந்து மலையையே தூக்கி வந்தார். இப்படி தளராத முயற்சியுடன் செயல்பட்டவர் அவர். நாமும் அவரது செய்கைகளை அசை போட்டு, தளராத முயற்சியுடன் செயல்களைச் செய்து வெற்றி வாகை சூடுவோம்.

வெற்றி தரும் ஸ்லோகம்: சீதையை கண்டுபிடிக்க, இலங்கை செல்வதற்கு முன், அனுமன் சொன்ன இந்த ஸ்லோகத்தைக் கூறி எந்தச் செயலைத் துவங்கினாலும் அதில் வெற்றி கிடைக்கும். இதோ அந்த ஸ்லோகம்.

நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
தேவ்யை ச தஸ்யை ஜன காத்மஜாயை!
நமோஸ்து ருத்ரேந்திர யமாலி னேப்யோ
நமோஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்யப்!!

ஆனேகுந்தி ஆஞ்சநேயர்: வாயுபகவான் ராமசேவை செய்வதற்காக ஆஞ்சநேயராகவும், கிருஷ்ணருக்கு சேவை செய்ய பீமனாகவும், வியாசருக்கு சேவை செய்ய மத்வராகவும் பிறவி எடுத்ததாகச் சொல்வர். மூவரையும் நினைவூட்டும் வகையில் அவதாரத்ரய அனுமான் கர்நாடகா, கொப்பல் மாவட்டம் ஆனேகுந்தியில் உள்ள நவபிருந்தாவனத்தில் கோயில் கொண்டிருக்கிறார். உருண்டு திரண்ட இரண்டு தோள்களும் பீமனைக் குறிக்கும் வகையில் உள்ளன. பின்புறம் பீமனுக்குரிய கதாயுதம் இருக்கிறது. துவைத சித்தாந்தம் அளித்த மத்வாச்சாரியாரைக் குறிக்கும்விதமாக கையில் சுவடிகள் உள்ளன. இவரது பின்புறத்தில் நரசிம்மர் காட்சி தருகிறார். அகோபிலத்தில் ராமரின்
தரிசனத்திற்காக ஆஞ்சநேயர் தவம் செய்தார். ஆனால், நரசிம்மர் வில், அம்புடன் தோன்றி அருள்புரிந்தார். இவரை வழிபட்டால் மனோபலம், புத்திபலம்,
உடல்பலம் உண்டாகும்.

ஸ்ரீராமஜெய மந்திரம் பிறந்தது எப்படி: ராமனுக்கும் ராவணனுக்கும் யுத்தம் நடக்கும் செய்தி சீதைக்கு தெரியாது. பதினெட்டு நாள் நடந்த போரின் முடிவில் ராமபாணம் ராவணனை கொன்றது. இந்த மகிழ்ச்சியை சீதைக்குத் தெரியப்படுத்த அசோகவனத்திற்கு குதித்தோடி வந்தார். ஓடிவந்த வேகத்தில் மூச்சிறைத்தது. கண்டேன் சீதையை என்ற சுபசெய்தியை ராமனுக்குச் சொல்லிய அனுமன், இப்போதும் காலம் தாழ்த்த விரும்பவில்லை. தேவியின் முன் கிடந்த மணலில் ஸ்ரீராமஜெயம் என்று எழுதிக் காண்பித்தார். இதைக் கண்ட பிராட்டியார் மகிழ்ச்சிக்கடலில் திளைத்தாள். அன்று தொடங்கிய இந்த மந்திரஜெபம் இன்றுவரை எல்லார் நாவிலும் தொடர்கிறது. பல்லாயிரம் பேர் கோடிகோடியாக ராம ஜெயம் எழுதியும் சொல்லியும் வருகின்றனர். அனுமன் எப்படி என்றும் அழியாதவரோ, அதுபோல் அவரால் அருளப்பட்ட இந்த மந்திரமும் சிரஞ்சீவியாக நிலைத்திருக்கிறது.

நல்லவர்க்கு மட்டும் நலம் தரும் மூலிகை: மூலிகை நிறைந்த மலை தாங்கியிருப்பவர் அனுமன். இவரை வழிபட மரணபயம் ஓடிவிடும். ராவணனின் மகனான இந்திரஜித், பிரம்மாஸ்திரம் ஏவி, ராமலட்சுமணர் மற்றும் வானரசேனையை மூர்ச்சையில் ஆழ்த்தினான். இதில் தப்பியவர்கள் அனுமனும், ஜாம்பவானும் மட்டுமே. வயதான ஜாம்பவான், கயிலாயம் சென்று மூலிகை பறித்துவரும்படி அனுமனை அனுப்பினார். அனுமனும் நொடிப்பொழுதில் பறந்து சென்று மூலிகை மலையைப் பெயர்த்து இலங்கை வந்தார். அம்மலையில், இறந்தவரைப் பிழைக்கச் செய்யும் மிருத சஞ்சீவினி, காயத்தை ஆறச் செய்யும் விசல்யகரணீ, நல்லவர்க்கு மட்டும் நலம் தரும் சாவர்யகரணீ, உடைந்த உறுப்பை ஒன்று சேர்க்கும் சந்தானகரணீ ஆகியவை இருந்தன. அதன் பயனாக, ராமலட்சுமணர் வானரவீரர்கள் அனைவரும் புத்துயிர் பெற்றனர். இதன்காரணமாக, அனுமனுக்கு சமயசஞ்சீவி என்ற சிறப்புப் பெயர் உண்டானது.

கோழைகளே இல்லாத உலகம்: இந்தியாவில், அந்நியர் ஆதிக்கம் புகுந்திருந்த வேளையில், கோயில்களை அடித்து நொறுக்கினர். தங்கள் மதத்துக்கு மாறும்படி கட்டாயப்படுத்தினார். இந்த நேரத்தில் துளசிதாசர் இந்தியில் எழுதிய ராமசரித மானஸ் என்ற நூலில் அடங்கிய அனுமன் சாலீஸா மக்களுக்கு வீரத்தை ஊட்டியது. பாதுகாப்பு கவசமாக விளங்கியது. சாலீஸா என்றால் புகழ். ஆஞ்சநேயரின் புகழ்பரப்பும் ஸ்தோத்திரமாக இது விளங்கியது. இதில் 40 ஈரடி ஸ்லோகங்கள் உள்ளன. இதைப் படித்தால் கோழைகளுக்கு கூட உற்சாகம் வந்து விடும். தைரியமான இந்தியாவை உருவாக்கவும், ஊழல் மலிந்துள்ள இந்த வேளையில் நாட்டைக் காக்கவும் அனுமன் சாலீஸாவைக் கூட்டாகப் படிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், ஆஞ்சநேயர் மீண்டும் பிறந்து, இங்கிருக்கும் ராவணர்களையெல்லாம் வதம் செய்து தேசத்தைக் காப்பார். இதன் தமிழாக்கம் இந்த சிறப்பிதழில் தரப்பட்டுள்ளது.

செல்வம் தரும் ஸ்லோகம்

சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலை தாண்டுவதற்கு முன் சொன்ன வரிகள் ஸ்ரீ ஜெய பஞ்சகம் எனப்படும். இதைச் சொல்லி வழிபட்டால், வீட்டில் செல்வம் நிலைத்திருக்கும்.

ஜயத்யதிபலோ ராமோ லக்ஷ்மணஸ்ச
மஹாபல:
ராஜாதி ஜயதி சுக்ரீவோ ராகவேன
அபி பாலித:
தாஸோஹம் கோஸலேந்த்ரஸ்ய
ராமஸ்யாக்லிஷ்ட கர்மன:
ஹனுமான் சத்ரு வைத்யாநாம்
நிஹந்த்ர மாருதாத்மஜ:
ராவண ஸஹஸ்ரம்மே யுத்தே
ப்ரதி பலம் பவேத்
ஸலாபிஸ்து ப்ரஹரத:
பாத வைச்ச ஸஹஸ்ரஸ:

செந்தூர தத்துவம்

ஆஞ்சநேயர் கோயில்களில் பக்தர்களுக்கு செந்தூர பிரசாதம் தருகின்றனர். இதற்கு காரணம் தெரியுமா? இலங்கையில் சீதையை சந்தித்த அனுமன் அவளது
நெற்றியில் செந்தூர திலகம் இட்டிருப்பதைக் கண்டார். அதற்கான காரணத்தை அவளிடம் கேட்டார். ஆஞ்சநேயா! இந்த திலகத்தை இடுவதால் என் கணவர் ராமபிரானுக்கு நலம் உண்டாகும், என சீதாதேவி சொன்னாள். இதைக் கேட்டாரோ இல்லையோ, ராமபக்தரான அனுமன் தன் உடல் முழுவதும் செந்தூரம் பூசிக்கொண்டு அவள் முன்னால் வந்தான். சீதாதேவி அவளைப்பார்த்து சிரித்து, எதற்காக இப்படி செய்தாய்? என கேட்டாள். தாயே! நீங்கள் நெற்றியில் மட்டுமே திலகம் இட்டு ராமனுக்கு ÷க்ஷமம் உண்டாகும்படி செய்வீர்கள் என்றால், அவரது பக்தனான நான் உடல் முழுவதும் பூசிக்கொண்டால் அவருக்கு எவ்வளவு நன்மை உண்டாகும்? என பக்திப் பூர்வமாக சொன்னான். அவனது பக்தியின் ஆழத்தைக் கண்டு சீதாதேவி வியந்து போனாள். செந்தூர திலகத்தை ஆண்கள் இட்டால் செல்வமும், ஆன்மிக உணர்வும் பெருகும் என்பதும், பெண்கள் இட்டால் மாங்கல்ய பாக்கியம் நிலைத்திருக்கும் என்பதும் நம்பிக்கை.

செல்வமும் நிம்மதியும் தரும் அனுமன் சாலீஸா

துளசிதாசர் எழுதிய அனுமான் சாலீஸாவின் பொருளைப் படிப்பவர்கள் நிறைந்த செல்வமும், மனநிம்மதியும், நீடிய ஆயுளும் வாழ்வர்.

நற்குணங்கள் நிரம்பியவனே! கடல் போல விரிந்த நல்லறிவு கொண்டவனே! ஸ்ரீ அனுமனே! உனக்கு வெற்றி உண்டாகட்டும்.

ராமதூதனே! எல்லையற்ற ஆற்றல் கொண்டவனே! அஞ்சனை மைந்தனே! உலகம் முழுமையும் வலம் வருபவனே! உனக்கு நமஸ்காரம்.

வீரனே! நிகரற்ற வலிமை மிக்கவனே! வியத்தகு பேராற்றல் படைத்தவனே! தீய சிந்தனைகளை என்னிடமிருந்து நீயே விலக்கி அருள் வேண்டும்.

உனது முடி பேரழகுடன் திகழ்கிறது. குண்டலம் ஒளிவீசுகிறது. விதம் விதமான ஆடைகளை அணிந்த உனது உடல் பொன்னிறமாக மின்னுகிறது. உனது கரத்திலுள்ளகொடியும், கதாயுதமும் புஜங்களை அலங்கரிக்கின்றன. தோளில் மின்னும் பூணூல் அழகுக்கு அழகூட்டுகிறது.

கேசரியின் மைந்தனே! சிவபெருமானின் அவதாரமே! தேஜஸ்மிக்க ஒளியைக் கொண்ட முகத்தை உடையவனே! உலகமே உன்னை வணங்குகிறது.

புத்திசாலித்தனமும் நற்குணங்களும் உடைய நீ ராமச்சந்திர மூர்த்தியின் சேவைக்காக எந்த நேரமும் காத்திருக்கிறாய்.

ஸ்ரீ ராமபிரானின் சரித்திரத்தை செவிமடுத்தால், நீ மிகுந்த பரவசமடைகிறாய். உனது இதயபீடத்தில் ராமன், லட்சுமணன், சீதை ஆகியோர் எப்போதும் குடியிருக்கிறார்கள்.

விஸ்வரூபம் எடுத்த நீ, இலங்கைக்கு தீ வைத்தாய். ஆனால், சீதாப்பிராட்டியின் முன்னால் மிகவும் அடக்க ஒடுக்கமாக சிறிய உருவத்தில் தோன்றினாய்.

ராமச்சந்திர பிரபுவின் கட்டளையை செயல்படுத்தியவனே! நீ மிகப்பெரிய உருவம் தாங்கி அரக்கர்களை வதம் செய்தாய்.

லட்சுமணனும், ராமனுடன் சென்ற படையினரும் இலங்கையிலே மூர்ச்சை அடைந்தபோது, சஞ்சீவி மலையைத் தோளில் சுமந்து வந்து அனைவரையும் உயிர்ப்பிக்கச் செய்தாய். அதற்காக ஸ்ரீ ரகுவீர ராமபிரான் ஆனந்தமடைந்து உன்னைத் தழுவிக் கொண்டார்.

பரதன் எனது அன்பிற்கு எந்த அளவுக்கு பாத்திரமானவனோ, அதே அளவுக்கு அனுமனும் என் அன்புக்கு பாத்திரமானவன், என ஸ்ரீ ராமபிரான் உன்னை புகழ்ந்து போற்றினார்.

உன்னை மார்போடு தழுவிய ராமபிரான், அனுமனே! ஆயிரம் தலைகள் உடைய ஆதிசேஷன் கூட உனது பெருமையை போற்றினான், என கூறினார்.

மூவுலகத்தையும் சுற்றி வரும் நாரதரும், அவரது அன்னை கலைமகளும், சிவபெருமானும், நான்முகனும், தேவாதி தேவர்களும், சனகர் முதலான முனிவர்களும் உனது புகழை பாட முற்பட்டு தோல்வியே கண்டனர்.

எமதர்மராஜா, செல்வத்தின் அதிபதியான குபேரன், திசைக்காவலர்கள், சான்றோர்கள், கவிஞர்கள் யாராலும் உன்னுடைய புகழை முழுமையாக சொல்ல
முடியவில்லை.

யாருக்கும் கிடைக்காத மிகப்பெரிய உதவியை சுக்ரீவன் பெற்றான் என்றால், அது அவனை நீ ராமபிரானுக்கு அறிமுகம் செய்து வைத்ததால் தான் கிடைத்தது.

உனது ஆலோசனையின் பேரில் தான் விபீஷணனுக்கு இலங்கையின் அரச பதவி கிடைத்தது. இதை உலகமே அறியும்.

பூமியிலிருந்து எவ்வளவோ தொலைவில் இருக்கும் சூரியனை, செக்கச் சிவந்த பழம் என்று கருதி அதை விழுங்க முயன்றாய்.

ஸ்ரீ ராமபிரான் கொடுத்த முத்திரை மோதிரத்தை உனது வாய்க்குள் அடக்கிக் கொண்டு கடலைக் கடந்தது, உனது ஆற்றல்களை கணக்கிடும் போது மிகப்பெரிய செயல் இல்லை என்றே தோன்றுகிறது.

முடிக்கவே முடியாது என்று மற்றவர்களால் ஒதுக்கப்படும் செயலைக்கூட நீ மிக எளிதாக செய்து முடித்துவிடுவாய்.

ராமராஜ்யத்தின் காவலனான உன்னை மீறி, யாராலும் இந்த தேசத்திற்குள் நுழைந்திட முடியாது.

உன்னையே சரணம் என பணிந்தவர்கள் எல்லா இன்பமும் அடைகிறார்கள். அவர்கள் எதைக் கண்டும் பயப்படமாட்டார்கள். அவர்களின் பாதுகாவலனாக என்றும் நீ விளங்குகிறாய்.

மூன்று உலகங்களையும் கதிகலக்கும் உனது சக்தியை, உன்னைத்தவிர வேறு யாராலும் அடக்க முடியாது.

உனது திருநாமத்தை உச்சரிப்பவர் அருகில் பூதங்களோ, பேய், பிசாசுகளோ நெருங்குவதில்லை.

நோயின் துன்பத்தில் துவண்ட ஒருவன் உனது திருநாமத்தை இடைவிடாது சொன்னால் அந்த நோய் ஓடோடிப் போய்விடும்.

வீர அனுமானே! உன்னை மனதாலும், சொல்லாலும், செயலாலும் வணங்குபவர்களுக்கு, நீ எல்லா சிரமங்களிலிருந்தும் விடுதலை தருகிறாய்.

பக்தர்கள் மனம் ஒன்றி உன்னை தியானிக்கும் போது, ஸ்ரீ ராமபிரானைப் போலவே அவர்களது ஆசைகளை நிறைவேற்றி வைக்கிறாய்.

பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் நீ, அவர்கள் ஸ்ரீ õமனின் அனுக்ரகத்தைப் பெறவும் உதவி செய்கிறாய்.

நான்கு யுகங்களிலும் உனது புகழ்பாடப் பெற்றுள்ளது. ஜகமெல்லாம் உனது திருநாமம் கேட்கிறது.

ஸ்ரீ ராமனின் மனதுக்கு பிரியமானவனான நீ, தீய சக்திகளை அழித்து நல்லவர்களுக்கு துணையிருந்து பாதுகாக்கிறாய்.

அஷ்டசித்திகளையும், ஒன்பது விதமான செல்வங்களையும் யார் கேட்கிறார்களோ, அவர்களுக்கு அதை அளிக்க வேண்டுமென சீதாதேவி உனக்கு கட்டளையிட்டிருக்கிறாள்.

ராமபிரானின் வேலைக்காரனான நீ, ராமபக்தியைத் தவிர வேறு எதையுமே அறிந்ததில்லை.

பல பிறவிகளில் தொடர்ந்த தீவினை நீங்கப்பெற்று, உன்னிடம் பக்தி கொண்டவர்கள் ராமபிரானின் பாதத்தை அடைகின்றனர்.

உன்னைப் பாடுவோர் ஹரிபக்தனாக மதிக்கப் பெற்று, வாழ்வின் முடிவில் ராமனின் லோகத்துக்கு செல்கின்றனர்.

உன்னைத்தவிர நான் வேறு எந்த தெய்வத்தையும் நினைத்ததில்லை என சொல்லி உன்னை  சரணடைவோருக்கு சகல இன்பங்களையும் தருகிறாய்.

சர்வ வல்லமை மிக்க உன்னை நினைக்கின்ற பக்தர்களுக்கு துன்பத்தையும் துயரத்தையும் விலக்கி ஓடச் செய்கிறாய்.

ஆஞ்சநேயனே! உனக்கு ஜெயம் உண்டாகட்டும். சர்வ வல்லமை மிக்கவனே! உனது அருள் எங்களுக்கு கிடைக்கட்டும்.

உலக துயரங்கள் நீங்குவதற்கு இந்த துதிகளை நூறு முறை படிக்க வேண்டும்.

ஹனுமான் சாலீஸா என்ற இந்த துதிகளை படிப்போருக்கு சிவபெருமானின் அருளும், பரிபூரண ஞானமும் கிடைக்கிறது.

உனது அடியவனான இந்த துளசிதாசன், ராமபிரான் என்றென்றும் தன் இதயத்தில் எழுந்தருளி இருக்க வேண்டுமென உன் மூலமாக வேண்டுகிறான்.

வாயு புத்ரனும், தேவாதி தேவர்களின் தலைவனும், பக்தர்களின் துன்பத்தை போக்குகின்றவனுமான ஸ்ரீ அனுமானே! நீர் ராமர், லட்சுமணர்,
சீதாதேவியுடன் என் இதயத்தில் எப்போதும் வீற்றிருப்பீராக!

பெண்களின் சாமி

கணவர் பாசமாக இருந்தாலும் மாமியார், மாமனார், நாத்தனார் கொடுமையால் குடும்பத்தை விட்டு பிரிந்து சிரமப்படும் பெண்கள் நிறையவே இருக்கிறார்கள். இவர்களை அபலை என்பர். அபலை என்றால் பலமில்லாதவள். சீதையை விட்டுப் பிரிந்து ராமன் பட்ட துயர் ஒருமடங்கு என்றால், சீதை அசோகவனத்தில் பட்டது கோடி மடங்கு. பிரியமான மனைவி பக்கத்தில் இல்லாத துயரம் மட்டும் தான் ராமனுக்கு... ஆனால், சீதையோ, நாகரிகம் என்பதே இல்லாத ராட்சஷப் பெண்கள் சூழ்ந்திருக்க, காமுகனான ராவணனிடம் சிக்கி அவஸ்தைப் பட்டாள். தன் நிலையை எண்ணி கலங்கி உயிரையும் விட துணிந்து விட்டாள். அசோகமரத்திலேயே உயிரை விட்டு விடுவது என்று முடிவெடுத்து சுருக்குப் போட எண்ணினாள். அந்த தருணத்தில் வந்துசேர்ந்தார் அண்ணல் ஆஞ்சநேயர். மேகம் கூடி வானில் மழை கொட்டினால், பட்டுப்போக இருந்த பயிர் எப்படி தளிர்க்குமோ, அதுபோல் இருந்தது அனுமனின் இலங்கை வரவு. லோகமாதாவான திருமகளின் துன்பத்தையே போக்கி நம்பிக்கை தந்ததால் தான் அவரை பெண்களின் சாமி எனலாம். இவரைத் துதித்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். வருத்தம் தீரும். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். கணவருடன் ஒற்றுமையாக வாழும் பாக்கியம் கைகூடும். கன்னியருக்கு ஸ்ரீராமனைப் போன்ற கணவரும் அமைவார்.

அனுமனுக்கு அவார்டு: இலங்கையிலிருந்து அயோத்தி வந்து சேர்ந்ததற்கு முழுமுதல் காரணம் அனுமன் தான் என நன்றி உணர்வோடு ராமபிரானிடம் எடுத்துச் சொன்னாள் சீதை.  ராமபிரானும் சீதாதேவியிடம், நாம் இருவரும் அனுமனுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன்பட்டிருக்கிறோம், என்றார். பட்டாபிஷேக ஞாபகார்த்தமாக பரிசுப் பொருள்களை ராமன் பலருக்கும் கொடுத்தார். அப்போது சீதை, பிரபு! அனுமனுக்கு ஏதாவது செய்து நம் நன்றி உணர்வைத் வெளிப்படுத்த வேண்டும், என்றாள். ராமன் தான் அணிந்திருந்த முத்துமாலையை சீதையின் கையில் கொடுத்துவிட்டு, மவுனமாக இருந்தார். சீதையும் ராமனின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவளாய், பிரபு! முத்தாரத்தை உங்கள் பரிவாரத்தில் இருக்கும் யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை உங்கள் திருவாயாலேயே சொல்லி விடுங்கள்! என்றாள். பராக்கிரமம், புத்தி, பணிவு யாருக்குப் பூரணமாக இருக்கிறதோ, அவருக்கு கொடு! என்றார் ராமன். சீதாதேவி அனுமனிடம் கொடுத்தாள். அனுமனுக்கு கிடைத்த இந்த அவார்டு அவரே ராமாயணத்தின் அச்சாணி என்பதை நினைவூட்டுகிறது.

 
மேலும் அனுமன் ஜெயந்தி! »
temple news
ராமாவதாரம் நிகழ இருந்த வேளையில், அவருக்கு சேவை செய்ய பறவைகள், விலங்கினங்களெல்லாம் முன் வந்தன. ... மேலும்
 
temple news
அனுமன் பெருமை: சுந்தரகாண்டம் படித்தால் வேண்டுதல்கள் யாவும் ஈடேறும் என்பர். ராமாயணத்தை எழுதிய வால்மீகி ... மேலும்
 
temple news
அனுமனாக அவதரித்த சிவபெருமான்: அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ... மேலும்
 
temple news
அனுமன் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். அனுமன் பிறந்த நாளன்று காலையிலேயே எழுந்து ... மேலும்
 
temple news
ஊருக்கு ஒரு பெயர்: அனுமனை கர்நாடகத்தில் ஹனுமந்தையா, ஆந்திராவில் ஆஞ்சநேயலு, மகாராஷ்டிராவில் மாருதி, சில ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar