Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீமத்பகவத் கீதை தாயாரின் பிரம்மோத்ஸவம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இராமனும் - வான்மீகியும் வசிட்டனும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2018
04:04

இராமனும் பாலகாண்டமும்: கம்பன் தனது காவிய நாயகன் இராமனின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் பாலகாண்டம் திருஅவதாரப் படலத்தில் நமக்குக் காட்டுகின்றான். தனக்கு நெடுங்காலமாக மகப்பேறின்மை குறித்துத் தயரதன் தன் குருவான வசிட்டனிடம் வருந்திக் கூறுதலில் தொடங்கி, கலைக்கோட்டு முனிவனின் வருகையில் வளர்ந்து புத்திர காமயாகத்தில் உயர்ந்து இராமனின் திருஅவதாரத்தில் சிறந்து சீதையின் மணத்தில் நிறைவு பெறுகிறது.

வான்மீகி இராமனின் தோற்றமும் ஏறக்குறைய இம்முறையிலேயே அமைந்திருந்தாலும் கம்ப இராமனும் வான்மீகி இராமனும் பல முக்கிய வேறுபாடுகளைக் கொண்டுள்ளனர்.

இராமனும் வான்மீகியும்:

கம்பன் இப்படலத்தில் செய்திருக்கும் மாற்றத்தை ஆராய்வதற்கு முன் வான்மீகி கூறும் கதைப்போக்கினை உணர்ந்து கொள்வது அவசியமாகும்.

தனக்கு நீண்ட நாட்களாக மகவு இல்லாக் குறையைப் போக்க, தசரதன் தனது அமைச்சன் சுமந்திரனின் அறிவுரையின்படி அசுவமேத யாகம் செய்ய முற்படுகின்றான். பின்னர், தனிமையில் தசரதனைச் சந்தித்த சுமந்திரன் கலைக்கோட்டு முனிவனின் வரலாற்றை அவனுக்குக் கூறி அம்முனிவனை அயோதிக்கு அழைத்து வந்து புத்திர காமயாகம் செய்வித்தால் திருமாலே நான்கு புத்திரர்களாக வந்து அவனுக்கு மகவாகத் தோன்றுவான் என்று கூறி இச்செய்தியைச் சனற்குமாரர் தன்னிடம் கூறியதாகவும் தெரிவிக்கின்றான். அதன்படியே கலைக்கோட்டு முனிவன் வரவழைக்கப்பட்டு அவன் முன்னிலையில் அசுவமேத யாகம் நடைபெறுகின்றது. விரிவாக நடைபெறும் யாகச் சடங்குகளில் கோசலை யாகக் குதிரையை மூன்று வாட்களால் மகிழ்ச்சி பொங்கக் கொல்கிறாள். பிறகு வேறு ஒரு குதிரையோடு ஓர் இரவு தனியே தங்குகின்றாள்.

அசுவமேதயாகம் முடிந்ததும் புத்திரகாமேஷ்டி யாகத்தை நடத்துமாறு கலைக்கோட்டு முனிவனைத் தசரதன் வேண்ட அவனும் அவ்யாகத்தைச் செய்கின்றான். அந்த யாகத்தில் கொடுக்கப்படும் அவிர்பாகங்களைப் பெற்றுக்கொள்ள எல்லாத் தேவர்களும் வந்தனர். பிரமனும் வந்தான். தேவர்கள் அவனிடம் இராவணன் கொடுமையைக் கூறி அவனைக் கொல்லும் உபாயத்தை அருளும்படி வேண்டுகின்றனர்.

இராவணனைத் தேவர், அசுரர், அரக்கர் முதலியோரால் கொல்ல முடியாது. மனிதனால் தான் கொல்ல முடியும் என்று பிரமன் கூறுகின்றான். அப்போது விஷ்ணு பகவான் அங்கு வந்து தோன்ற யாவரும் அவரை வணங்கி இராவணனைக் கொல்ல வேண்டிச் சரண் புகுந்தனர்.

மகாவிஷ்ணுவை நோக்கி, தர்மங்களை பூரணமாயறிந்து, யாசகர்களுக்கு வேண்டிய வரையில் கொடுக்கும் அயோத்யாதிபதியான தசரதர் மகரிஷிகளைப் போன்றவர்; ஹ்ரீ, ஸ்ரீகீர்த்தி (நாணம், செல்வம், புகழ்) என்பவைகளே உருக்கொண்ட அவருடைய மூன்று பத்தனிகளிடத்தில் தாங்கள் நான்கு அம்சங்களாய் அவதரித்து, மனுஷ்ய ரூபத்துடன் துஷ்ட இராட்சசர்களைக் கொல்ல வேண்டும். தங்களைத் தவிர வேறுகதி எங்களுக்கு இல்லை என்று தேவர்கள் இறைஞ்சினார்கள். மகாவிஷ்ணுவும் அவ்வாறே வரம் கொடுத்துத் தம்மை நான்கு பாகமாகச் செய்து கொண்டு தசரதனைப் பிதாவாக இச்சித்துப் பின் மறைந்தார்.

அதன் பின் ஓம குண்டத்திலிருந்து வெளிவந்த ஒரு பூதம் அளித்த பாயசத்தில் கோசலைக்கும், நாலில் ஒரு பாகத்தைச் சுமித்திரைக்கும், எட்டிலொரு பாகத்தைக் கைகேயிக்கும் கொடுத்தது. தேவிமார் கருவுற்றனர். பிறகு மற்றத் தேவர்கள் வானரர்களாகவும் திருமால், இராமன் பரதன் இலக்குவன் சத்ருக்னன் என்னும் நான்கு குழந்தைகளாகவும் வந்து பிறக்கின்றனர். இவ்வாறு கூறுகிறது வான்மீகம்.

இராமனும் வசிட்டனும்:

வான்மீகம் கூறும் இச்செய்திகளைக் கம்பன் தான் எடுத்துக் கையாளும் முறையில் பற்பல மாற்றங்களைச் செய்துள்ளான்.

திருமாலே தசரதனுக்குப் புதல்வர்களாக வந்து அவதாரம் செய்யப்போகிறான் என்ற தேவரகசியத்தைத் தசரதனின் அமைச்சன் சுமத்திரன், சனற்குமாரர் என்ற முனிவர் மூலம் அறிந்திருந்தான் என்றும் இந்தச் செய்தியைத் தெரிந்து கொண்ட சுமத்திரன் தசரதனிடம் இதை ரகசியமாகச் சொல்வதாகவும் வான்மீகி கூறுகின்றார். இந்தச் செய்தி பாலகாண்டம் 9-ஆவது சருக்கத்தில் முனிவரால் விரிவாகக் கூறப்படுகின்றது. ஆனால் கம்பனோ இந்தச் செய்தியைச் சொல்லாது விடுத்திருக்கிறான். இன்னும் சொல்லப் போனால் கம்பன் பெயரளவில் கூடச் சுமத்திரனை இப்படலத்தில் குறிப்பிடவில்லை. ஆனால், வான்மீகியோ இப்பகுதியில் சுமத்திரனைத் தசரதனின் அமைச்சன், சாரதி, நண்பன் என்ற முறையில் முக்கியத்துவம் கொடுத்துப் பல சுலோகங்களை யாத்துள்ளார்.

இதற்கு நேர்மாறாக, சுமத்திரனை இப்படலத்தில் காட்டாத கம்பன் இன்னொரு முக்கிய மாற்றத்தையும் செய்துள்ளான். சுமந்திரனுக்குப் பதிலாகத் தசரதனின் குருவாக விளங்கும் வசிட்டனுக்கு மிக முக்கியத்துவம் அளித்துள்ளான். வான்மீகி தசரதன், என் வம்சத்தை விருத்தி செய்வதற்குப் புத்திரனிதல்லாமல் புலம்பும் எனக்கு இந்த ராஜ்யமும் தனமும் அதிகாரமும் இருந்து என்ன சுகம் என்று தனது அமைச்சன் சுமந்திரனிடம் புலம்புகின்றான்.

ஆனால், ஏறக்குறைய இதே கருத்தைக் கம்பனின் தசரதன், சுமந்திரனிடம் கூறி வருந்துவதற்குப் பதில், தனது குருவான வசிட்டனிடம் சொல்லி ஏங்குகின்றான்.

அறுபதினாயிரம் ஆண்டும் மாண்டுஉற
உறுபகை ஒடுக்கி, இவ் உலகை ஓம்பினேன்
பிறிது ஒரு குறை இலை; என் பின் வையம்
மறுகுவது என்பது ஓர் மறுக்கம் உண்டு. அரோ (182)

என்ற கம்பனின் பாடல் இதனை நமக்குக் காட்டுகின்றது. மேலும் கம்பன் இதற்கும் மேலாகச் சென்று,

ஆயவன், ஒரு பகல் அயனையே நிகர்
வாய மா முனிவனைத் தொழுது, தொல்குலத்
தாயரும், தந்தையும், தவமும், அன்பினால்
மேய வான் கடவுளும் பிறவும் வேறும்நீ (180)

என வசிட்டனைத் தயரதன் தொழுது, தாயரும் தந்தையும் தவமும் கடவுளும் பிறவும் மற்றவர்க்கு வேறு வேறாகும். ஆனால், எனக்கு இவை எல்லாம் நீயே என்று மனமுறுகி நிற்பதாகவும் கம்பன் காட்டுவது நோக்கத்தக்கதாகும்.

முக்காலத்தையும் உணர்ந்த சனற்குமாரர், தயரதன் மகனாகத் திருமால் நிகழ்த்தப் போகும் தேவரகசியமான இராமாவதாரத்தைத் தனது ஞானத்தால் உணர்ந்து முனிவர்களிடம் கூறியதை மன்னன் தயரதன் அறியாது இருக்கவும். அமைச்சனான சுமந்திரன் அதை அறிந்து கூறுவதாகவும் வான்மீகத்தில் அமைந்திருப்பது பொருத்தமல்ல என்ற காரணத்தால் சுமந்திரனை இப்பகுதியிலிருந்து நீக்கிவிட்டார் என்று கருதத் தோன்றுகின்றது. மேலும் இராமாவதாரம் என்ற நாரணன் விளையாட்டை உலகியலில் உழன்று நிற்கும் சுமந்திரன் என்ற அமைச்சன் அறிந்திருந்தான் என்று கூறுவதைவிட, முக்காலமும் உணர வல்ல வசிட்டமுனிவன் அறிந்திருந்தான் என்று கதையில் அமைப்பதே மிகவும் பொருத்தமாக இருக்கும் என்ற எண்ணத்தால் வசிட்டன் ஒருவன் மட்டுமே தேவர்களுக்குத் திருமால் அருளியதை உணர்ந்திருந்தவன் என்று காவியத்தில் ஒரு புதிய களத்தைக் கம்பன் அமைத்துள்ளான் என்றே இங்கு எண்ணத் தோன்றுகிறது. எனவே தான் காவியத் தொடக்கத்தில் வசிட்டனுக்குத் தயரதன் வாயிலாகப் புகழ்மாலைகளைக் கம்பன் சூட்டுகின்றான்.

திருமால் இராமனாக அயோத்தியில் பிறக்கப் போவதைச் சனற்குமாரர் சுமந்திரனுக்குச் சொல்ல, சுமந்திரன் அதைத் தயரதனுக்குக் கூற அதனையொட்டியே தயரதன் புத்திரகாமேஷ்டி யாகத்தை நடத்துகின்றான். ஆனால் புத்திரகாமேஷ்டி யாகத்தின் போது அவிர்பாகம் பெற வந்த தேவர்கள் அவ்விடத்தே பிரமனிடமும் திருமாலிடமும் இராவணன் கொடுமையைக் கூறி முறையிடுவதும், திருமாலை மனிதனாகப் பிறக்கும்படி வேண்டுவதும், உடனே திருமால் அவ்வாறே வரங்கொடுத்து அதன்படியே பிறப்பதும் ஆகிய செய்திகள் வான்மீகத்தில் அமைந்து விளங்குகின்றன.

ஆனால், கம்பன் மேற்சொன்ன அந்நிகழ்ச்சிகள்யாவும் முன்னரே வைகுந்தத்தில் நடந்து விட்டனவாகவும் பின்னர் வசிட்டன் அவற்றை மனத்தால் நினைந்து, தயரதனுக்குக் கூறாது தன் மனத்தில் அடக்கிக் கொண்டு அவற்றை நடைமுறையில் செயற்படுத்துவதற்கு வேண்டிய வழிவகைகளை ஆராய்ந்து, தயரதனுக்கு யாகம் நடத்துவதற்கு உரிய ஆலோசனைகளைக் கூறினான் என்றும் கதையை மாற்றி அமைத்துள்ளான். பரம்பொருளான திருமாலே தனக்கு மகனாகப் பிறந்திருக்கின்றான் என்று தயரதன் முன்னரே அறிந்திருந்தால் மகன் தந்தைக்குள்ள இயல்பான தொடர்பின் போக்குத் தடைபடக்கூடும் என்று உணர்ந்து கம்பன் இங்கு இம்மாற்றத்தைச் செய்திருப்பான் என்று எண்ணத் தோன்றுகிறது.

அலைகடல் நடுவண், ஓர் அனந்தன் மீசிசை மலை என விழி துயில் வளரும் மாமுகில் கொலை தொழில் அரக்கர்தம் கொடுமை தீர்ப்பென் உலைவுறும் அமரர்க்கு உரைத்த வாய்மையை (185)

விரைசெறி கமல மென் பொகுட்டு மேவிய வர சரோருகன் மகன் மனத்தில் எண்ணினான் (184)

என்று வசிட்டன், தேவர்களுக்குத் திருமால் அருளியதைத் தம்மனத்தே சிந்தித்ததையும்.

ஈது முன் நிகழ்ந்தவண்ணம் என முனி
இதயத்து எண்ணி
மாதிரம் பொருந திண்தோள் மன்ன! நீ
வருந்தல்; ஏழ் ஏழ்
பூதலம் முழுவதும் தாங்கும் புதல்வரை
அளிக்கும் வேள்வி.
தீது அற முயலின், ஐய! சிந்தை நோய் தீரும்

என்று இனி வரப்போகும் இராமாவதார ரகசியத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்திருந்ததையும் மேற்காணும் பாடல்கள் மூலம் கம்பன் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றான்.

இராமன்தான் திருமால் என்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டால் இராமனுக்கும் பிற பாத்திரங்களுக்கும் இடையே ஏற்படும் உறவின் போக்கு இயல்பாகவும் உலகியல் அடிப்படையில் அமையாது என்ற நோக்கத்திலேயே கம்பன் திருவதாரப் படலத்தில் வான்மீகியின் செய்திகளுக்கு மாறுபட்டுக் களம் அமைந்துள்ளான் எனலாம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar