Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
26. வஞ்சிமாநகர் புக்க காதை 28. கச்சிமாநகர் புக்க காதை
முதல் பக்கம் » மணிமேகலை
27. சமயக்கணக்கர் தந்திறங் கேட்ட காதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2012
05:01

அஃதாவது-இதன்கண் வஞ்சிமா நகரத்தின்கண் புகுந்து பொலிவுற்றிருந்த மணிமேகலை சமயக்கணக்கர் பலரையும் கண்டு அவரவர் சமயத்திற்கியன்ற காட்சிகளைக் கேட்டுணர்தற்குப் பெரிதும் விரும்பி அவர்களைத் தனித்தனியே கண்டு அவற்றை வினவித் தெரிந்து கொண்ட செய்திகளைக் கூறுகின்ற செய்யுள் என்றவாறு.

நவை அறு நன் பொருள் உரைமினோ என
சமயக் கணக்கர் தம் திறம் சார்ந்து
வைதிக மார்க்கத்து அளவை வாதியை
எய்தினள் எய்தி நின் கடைப்பிடி இயம்பு என
வேத வியாதனும் கிருதகோடியும்
ஏதம் இல் சைமினி எனும் இவ் ஆசிரியர்
பத்தும் எட்டும் ஆறும் பண்புறத்
தம் தம் வகையால் தாம் பகர்ந்திட்டனர்
காண்டல் கருதல் உவமம் ஆகமம்
ஆண்டைய அருத்தாபத்தியோடு இயல்பு  27-010

ஐதிகம் அபாவம் மீட்சி ஒழிவறிவு
எய்தி உண்டாம் நெறி என்று இவை தம்மால்
பொருளின் உண்மை புலங்கொளல் வேண்டும்
மருள் இல் காட்சி ஐ வகை ஆகும்
கண்ணால் வண்ணமும் செவியால் ஓசையும்
நண்ணிய மூக்கால் நாற்றமும் நாவால்
சுவையும் மெய்யால் ஊறும் எனச் சொன்ன
இவை இவை கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று
துக்கமும் சுகமும் எனத் துயக்கு அற அறிந்து
உயிரும் வாயிலும் மனமும் ஊறு இன்றி  27-020

பயில் ஒளியொடு பொருள் இடம் பழுது இன்றி
சுட்டல் திரிதல் கவர்கோடல் தோன்றாது
கிட்டிய தேசம் நாமம் சாதி
குணம் கிரியையின் அறிவது ஆகும்
கருத்து அளவு ஆவது
குறிக்கொள் அனுமானத்து அனுமேயத்
தகைமை உணரும் தன்மையது ஆகும்
மூ வகை உற்று அது பொது எச்சம் முதல் ஆம்
பொது எனப்படுவது சாதன சாத்தியம்
இவை அந்நுவயம் இன்றாய் இருந்தும்  27-030

கடம் திகழ் யானைக் கான ஒலி கேட்டோன்
உடங்கு எழில் யானை அங்கு உண்டு என உணர்தல்
எச்சம் என்பது வெள்ள ஏதுவினால்
நிச்சயித்து அத் தலை மழை நிகழ்வு உரைத்தல்
முதல் என மொழிவது கருக்கொள் முகில் கண்டு
இது மழை பெய்யும் என இயம்பிடுதல்
என்னும் ஏதுவின் ஒன்று முக் காலம்
தன்னில் ஒன்றில் சார்ந்து உளதாகி
மண்ட உயிர் முதல் மாசு இன்றாகி
காண்டல் பொருளால் கண்டிலது உணர்தல்  27-040

உவமம் ஆவது ஒப்புமை அளவை
கவய மா ஆப் போலும் எனக் கருதல்
ஆகம அளவை அறிவன் நூலால்
போக புவனம் உண்டு எனப் புலங்கொளல்
அருத்தாபத்தி ஆய்க்குடி கங்கை
இருக்கும் என்றால் கரையில் என்று எண்ணல்
இயல்பு யானைமேல் இருந்தோன் தோட்டிற்கு
அயல் ஒன்று ஈயாது அதுவே கொடுத்தல்
ஐதிகம் என்பது உலகு மறை இம் மரத்து
எய்தியது ஓர் பேய் உண்டு எனத் தௌிதல்  27-050

அபாவம் என்பது இன்மை ஓர் பொருளைத்
தவாது அவ் இடத்துத் தான் இலை என்றல்
மீட்சி என்பது இராமன் வென்றான் என
மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல்
உள்ள நெறி என்பது நாராசத் திரிவில்
கொள்ளத் தகுவது காந்தம் எனக் கூறல்
எட்டு உள பிரமாண ஆபாசங்கள்
சுட்டுணர்வொடு திரியக் கோடல் ஐயம்
தேராது தெளிதல் கண்டு உணராமை
எய்தும் இல் வழக்கு உணர்ந்ததை உணர்தல்  27-060

நினைப்பு என நிகழ்வ சுட்டுணர்வு எனப்படுவது
எனைப் பொருள் உண்மை மாத்திரை காண்டல்
திரியக் கோடல் ஒன்றை ஒன்று என்றல்
விரி கதிர் இப்பியை வெள்ளி என்று உணர்தல்
ஐயம் என்பது ஒன்றை நிச்சயியா
மையல் தறியோ? மகனோ? என்றல்
தேராது தெளிதல் செண்டு வெளியில்
ஓராது தறியை மகன் என உணர்தல்
கண்டு உணராமை கடு மாப் புலி ஒன்று
அண்டலை முதலிய கண்டும் அறியாமை  27-070

இல் வழக்கு என்பது முயற்கோடு ஒப்பன
சொல்லின் மாத்திரத்தால் கருத்தில் தோன்றல்
உணர்ந்ததை உணர்தல் உறு பனிக்குத் தீப்
புணர்ந்திடல் மருந்து எனப் புலம் கொள நினைத்தல்
நினைப்பு எனப்படுவது காரணம் நிகழாது
நினக்கு இவர் தாயும் தந்தையும் என்று
பிறர் சொலக் கருதல் இப் பெற்றிய அளவைகள்
பாங்குறும் உலோகாயதமே பௌத்தம்
சாங்கியம் நையாயிகம் வைசேடிகம்
மீமாஞ்சகம் ஆம் சமய ஆசிரியர்   27-080

தாம் பிருகற்பதி சினனே கபிலன்
அக்கபாதன் கணாதன் சைமினி
மெய்ப்பிரத்தியம் அனுமானம் சாத்தம்
உவமானம் அருத்தாபத்தி அபாவம்
இவையே இப்போது இயன்று உள அளவைகள்
என்றவன் தன்னை விட்டு இறைவன் ஈசன் என
நின்ற சைவ வாதி நேர்படுதலும்
பரசும் நின் தெய்வம் எப்படித்து? என்ன
இரு சுடரோடு இயமானன் ஐம் பூதம் என்று
எட்டு வகையும் உயிரும் யாக்கையுமய்க்  27-090

கட்டி நிற்போனும் கலை உருவினோனும்
படைத்து விளையாடும் பண்பினோனும்
துடைத்துத் துயர் தீர் தோற்றத்தோனும்
தன்னில் வேறு தான் ஒன்று இலோனும்
அன்னோன் இறைவன் ஆகும் என்று உரைத்தனன்
பேர் உலகு எல்லாம் பிரம வாதி ஓர்
தேவன் இட்ட முட்டை என்றனன்
காதல் கொண்டு கடல்வணன் புராணம்
ஓதினன் நாரணன் காப்பு என்று உரைத்தனன்
கற்பம் கை சந்தம் கால் எண் கண்   27-100

தெற்றென் நிருத்தம் செவி சிக்கை மூக்கு
உற்ற வியாகரணம் முகம் பெற்றுச்
சார்பின் தோன்றா ஆரண வேதக்கு
ஆதி அந்தம் இல்லை அது நெறி எனும்
வேதியன் உரையின் விதியும் கேட்டு
மெய்த்திறம் வழக்கு என விளம்புகின்ற
எத் திறத்தினும் இசையாது இவர் உரை என
ஆசீவக நூல் அறிந்த புராணனை
பேசும் நின் இறை யார்? நூற்பொருள் யாது? என
எல்லை இல் பொருள்களில் எங்கும் எப்பொழுதும்  27-110

புல்லிக் கிடந்து புலப்படுகின்ற
வரம்பு இல் அறிவன் இறை நூற்பொருள்கள் ஐந்து
உரம் தரும் உயிரோடு ஒரு நால் வகை அணு
அவ் அணு உற்றும் கண்டும் உணர்ந்திடப்
பெய் வகை கூடிப் பிரிவதும் செய்யும்
நிலம் நீர் தீ காற்று என நால் வகையின
மலை மரம் உடம்பு எனத் திரள்வதும் செய்யும்
வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும்
அவ் வகை அறிவது உயிர் எனப் படுமே
வற்பம் ஆகி உறும் நிலம் தாழ்ந்து   27-120

சொற்படு சீதத்தொடு சுவை உடைத்தாய்
இழினென நிலம் சேர்ந்து ஆழ்வது நீர் தீத்
தெறுதலும் மேல் சேர் இயல்பும் உடைத்து ஆம்
காற்று விலங்கி அசைத்தல் கடன் இவை
வேற்று இயல்பு எய்தும் விபரீதத்தால்
ஆதி இல்லாப் பரமாணுக்கள்
தீதுற்று யாவதும் சிதைவது செய்யா
புதிதாய்ப் பிறந்து ஒன்று ஒன்றில் புகுதா
முது நீர் அணு நில அணுவாய்த் திரியா
ஒன்று இரண்டாகிப் பிளப்பதும் செய்யா  27-130

அன்றியும் அவல்போல் பரப்பதும் செய்யா
உலாவும் தாழும் உயர்வதும் செய்யும்
குலாம் மலை பிறவாக் கூடும் பலவும்
பின்னையும் பிரிந்து தம் தன்மைய ஆகும்
மன்னிய வயிரமாய்ச் செறிந்து வற்பமும் ஆம்
வேய் ஆய்த் துளைபடும் பொருளா முளைக்கும்
தேயா மதி போல் செழு நில வரைப்பு ஆம்
நிறைந்த இவ் அணுக்கள் பூதமாய் நிகழின்
குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின்
ஒன்று முக்கால் அரை கால் ஆய் உறும்  27-140

துன்று மிக்கதனால் பெயர் சொலப்படுமே
இக் குணத்து அடைந்தால் அல்லது நிலன் ஆய்ச்
சிக்கென்பதுவும் நீராய் இழிவதும்
தீயாய்ச் சுடுவதும் காற்றாய் வீசலும்
ஆய தொழிலை அடைந்திடமாட்டா
ஓர் அணுத் தெய்வக் கண்ணோர் உணர்குவர்
தேரார் பூதத் திரட்சியுள் ஏனோர்
மாலைப் போதில் ஒரு மயிர் அறியார்
சாலத் திரள் மயிர் தோற்றுதல் சாலும்
கருமம் பிறப்பும் கரு நீலப் பிறப்பும்  27-150

பசும்ம் பிறப்பும் செம்ம் பிறப்பும்
பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும்
என்று இவ் ஆறு பிறப்பினும் மேவி
பண்புறு வரிசையின் பாற்பட்டுப் பிறந்தோர்
கழி வெண் பிறப்பில் கலந்து வீடு அணைகுவர்
அழியல் வேண்டார் அது உறற்பாலார்
இது செம்போக்கின் இயல்பு இது தப்பும்
அது மண்டலம் என்று அறியல் வேண்டும்
பெறுதலும் இழத்தலும் இடையூறு உறுதலும்
உறும் இடத்து எய்தலும் துக்க சுகம் உறுதலும்  27-160

பெரிது அவை நீங்கலும் பிறத்தலும் சாதலும்
கருவில் பட்ட பொழுதே கலக்கும்
இன்பமும் துன்பமும் இவையும் அணு எனத் தகும்
முன் உள ஊழே பின்னும் உறுவிப்பது
மற்கலி நூலின் வகை இது என்ன
சொல் தடுமாற்றத் தொடர்ச்சியை விட்டு
நிகண்ட வாதியை நீ உரை நின்னால்
புகழும் தலைவன் யார்? நூற்பொருள் யாவை,
அப் பொருள் நிகழ்வும் கட்டும் வீடும்
மெய்ப்பட விளம்பு என விளம்பல் உறுவோன்  27-170

இந்திரர் தொழப்படும் இறைவன் எம் இறைவன்
தந்த நூற்பொருள் தன்மாத்திகாயமும்
அதன்மாத்திகாயமும் கால ஆகாயமும்
தீது இல் சீவனும் பரமாணுக்களும்
நல்வினையும் தீவினையும் அவ் வினையால்
செய்வுறு பந்தமும் வீடும் இத் திறத்த
ஆன்ற பொருள் தன் தன்மையது ஆயும்
தோன்று சார்வு ஒன்றின் தன்மையது ஆயும்
அநித்தமும் நித்தமும் ஆகி நின்று
நுனித்த குணத்து ஓர் கணத்தின் கண்ணே  27-180

தோற்றமும் நிலையும் கேடும் என்னும்
மாற்று அரு மூன்றும் ஆக்கலும் உரித்தாம்
நிம்பம் முளைத்து நிகழ்தல் நித்தியம்
நிம்பத்து அப் பொருள் அன்மை அநித்தயம்
பயற்றுத் தன்மை கெடாது கும்மாயம்
இயற்றி அப் பயறு அழிதலும் ஏதுத்
தருமாத்திகாயம் தான் எங்கும் உளதாய்
பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமா
அப்படித்தாகி அதன் மாத்திகாயமும்
எப் பொருள்களையும் நிறுத்தல் இயற்றும்   27-190

காலம் கணிகம் எனும் குறு நிகழ்ச்சியும்
ஏலும் கற்பத்தின் நெடு நிகழ்ச்சியும்
ஆக்கும் ஆகாயம் எல்லாப் பொருட்கும்
பூக்கும் இடம் கொடுக்கும் புரிவிற்று ஆகும்
சீவன் உடம்போடு ஒத்துக் கூடி
தா இல் சுவை முதலிய புலன்களை நுகரும்
ஓர் அணு புற்கலம் புற உரு ஆகும்
சீர்சால் நல்வினை தீவினை அவை செயும்
வரு வழி இரண்டையும் மாற்றி முன்செய்
அரு வினைப் பயன் அனுபவித்து அறுத்திடுதல்  27-200

அது வீடு ஆகும் என்றனன் அவன்பின்
இது சாங்கிய மதம் என்று எடுத்து உரைப்போன்
தனை அறிவு அரிதாய் தான் முக் குணமாய்
மன நிகழ்வு இன்றி மாண்பு அமை பொதுவாய்
எல்லாப் பொருளும் தோன்றுதற்கு இடம் எனச்
சொல்லுதல் மூலப் பகுதி சித்தத்து
மான் என்று உரைத்த புத்தி வெளிப்பட்டு
அதன்கண் ஆகாயம் வெளிப்பட்டு அதன்கண்
வாயு வெளிப்பட்டு அதன்கண் அங்கி
ஆனது வெளிப்பட்டு அதன்கண் அப்பின்  27-210

தன்மை வெளிப்பட்டு அதில் மண் வெளிப்பட்டு
அவற்றின் கூட்டத்தில் மனம் வெளிப்பட்டு
ஆர்ப்புறு மனத்து ஆங்கார விகாரமும்
ஆகாயத்தில் செவி ஒலி விகாரமும்
வாயுவில் தொக்கும் ஊறு எனும் விகாரமும்
அங்கியில் கண்ணும் ஒளியும் ஆம் விகாரமும்
தங்கிய அப்பில் வாய் சுவை எனும் விகாரமும்
நிலக்கண் மூக்கு நாற்ற விகாரமும்
சொலப்பட்ட இவற்றில் தொக்கு விகாரமாய்
வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் என  27-220

ஆக்கிய இவை வெளிப்பட்டு இங்கு அறைந்த
பூத விகாரத்தால் மலை மரம் முதல்
ஓதிய வெளிப்பட்டு உலகாய் நிகழ்ந்து
வந்த வழியே இவை சென்று அடங்கி
அந்தம் இல் பிரளயம் ஆய் இறும் அளவும்
ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியம் ஆம்
அறிதற்கு எளிதாய் முக் குணம் அன்றி
பொறி உணர்விக்கும் பொதுவும் அன்றி
எப் பொருளும் தோன்றுதற்கு இடம் அன்றி
அப் பொருள் எல்லாம் அறிந்திடற்கு உணர்வாய்  27-230

ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியமாய்
நின்று உள உணர்வாய் நிகழ்தரும் புருடன்
புலம் ஆர் பொருள்கள் இருபத்தைந்து உள
நிலம் நீர் தீ வளி ஆகாயம்மே
மெய் வாய் கண் மூக்கு செவி தாமே
உறு சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்மே
வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம்
ஆக்கும் மனோ புத்தி ஆங்கார சித்தம்
உயிர் எனும் ஆன்மா ஒன்றொடும் ஆம் எனச்
செயிர் அறச் செப்பிய திறமும் கேட்டு  27-240

வைசேடிக! நின் வழக்கு உரை என்ன
பொய் தீர் பொருளும் குணமும் கருமமும்
சாமானியமும் விசேடமும் கூட்டமும்
ஆம் ஆறு கூறு ஆம் அதில் பொருள் என்பது
குணமும் தொழிலும் உடைத்தாய் எத் தொகைப்
பொருளுக்கும் ஏது ஆம் அப் பொருள் ஒன்பான்
ஞாலம் நீர் தீ வளி ஆகாயம் திசை
காலம் ஆன்மா மனம் இவற்றுள் நிலம்
ஒலி ஊறு நிறம் சுவை நாற்றமொடு ஐந்தும்
பயில் குணம் உடைத்து நின்ற நான்கும்  27-250

சுவை முதல் ஒரோ குணம் அவை குறைவு உடைய
ஓசை ஊறு நிறம் நாற்றம் சுவை
மாசு இல் பெருமை சிறுமை வன்மை
மென்மை சீர்மை நொய்ம்மை வடிவம்
என்னும் நீர்மை பக்கம் முதல் அனேகம்
கண்ணிய பொருளின் குணங்கள் ஆகும்
பொருளும் குணமும் கருமம் இயற்றற்கு
உரிய உண்மை தரும் முதல் பொதுத்தான்
போதலும் நிற்றலும் பொதுக் குணம் ஆதலின்
சாதலும் நிகழ்தலும் அப் பொருள் தன்மை  27-260

ஒன்று அணு கூட்டம் குணமும் குணியும் என்று
ஒன்றிய வாதியும் உரைத்தனன் உடனே
பூத வாதியைப் புகல் நீ என்னத்
தாதகிப் பூவும் கட்டியும் இட்டு
மற்றும் கூட்ட மதுக் களி பிறந்தாங்கு
உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும்
அவ் உணர்வு அவ் அப் பூதத்து அழிவுகளின்
வெவ் வேறு பிரியும் பறை ஓசையின் கெடும்
உயிரொடும் கூட்டிய உணர்வு உடைப் பூதமும்
உயிர் இல்லாத உணர்வு இல் பூதமும்  27-270

அவ் அப் பூத வழி அவை பிறக்கும்
மெய் வகை இதுவே வேறு உரை விகற்பமும்
உண்மைப் பொருளும் உலோகாயதன் உணர்வே
கண்கூடு அல்லது கருத்து அளவு அழியும்
இம்மையும் இம்மைப் பயனும் இப் பிறப்பே
பொய்ம்மை மறுமை உண்டாய் வினை துய்த்தல்
என்றலும் எல்லா மார்க்கமும் கேட்டு
நன்று அல ஆயினும் நான் மாறு உரைக்கிலேன்
பிறந்த முன் பிறப்பை எய்தப் பெறுதலின்
அறிந்தோர் உண்டோ? என்று நக்கிடுதலும்  27-280

தெய்வ மயக்கினும் கனா உறு திறத்தினும்
மையல் உறுவார் மனம் வேறு ஆம் வகை
ஐயம் அன்றி இல்லை என்றலும் நின்
தந்தை தாயரை அனுமானத்தால் அலது
இந்த ஞாலத்து எவ் வகை அறிவாய்?
மெய்யுணர்வு இன்றி மெய்ப் பொருள் உணர்வு அரிய
ஐயம் அல்லது இது சொல்லப் பெறாய் என
உள்வரிக் கோலமோடு உன்னிய பொருள் உரைத்து
ஐவகைச் சமயமும் அறிந்தனள் ஆங்கு என்  27-289

உரை

1-4 : நவை..........இயம்பென

(இதன் பொருள்) சமயக் கணக்கர் தம் திறம் சார்ந்து-இவ்வாறு வஞ்சிமா நகரத்தின்கண் புகுந்து மாதவன் வடிவில் பொலிவுற்றிருந்த மணிமேகலை அந்நகரத்தின் கண் சமய நூலுணர்ந்த ஆசிரியர்மார்கள் தம் பக்கலிலே சென்று; நவையறுகன் பொருள் உரைமினோ என எய்தினள்-அச்சமயக்கணக்கர்களைத் தனித்தனியே கண்டு நும்முடைய சமயத்தில் உயிரின் பிறவிப்பிணி அறுதற்குக் காரணமான மெய்ப்பொருளைக் கூறுமின் என வினவப் புகுந்தனள்; வைதிக மார்க்கத்து அளவைவாதியை எய்தி-முதன் முதலாக வேதநெறியினை மேற்கொண்டொழுகும் அளவைவாதியின்பாற் சென்று அவனை நோக்கி; நின் கடைப்பிடி இயம்பு என-ஐயனே! நீ நின் சமயத்தில் கடைப்பிடித்தொழுகும் நின் நூற்பொருளை எனக்குக் கூறுவாயாக என வேண்டாநிற்ப என்க.

(விளக்கம்) நவை-துன்பம்; அஃதீண்டுப் பிறப்பின் மேனின்றது. நன்பொருள்-ஈண்டுத் தத்துவம். சமயக் கணக்கர்-சமய நூலுணர்ந்து அதனைப் பரப்புபவர். உரைமினோ என எய்தினவளாகிய மணிமேகலை என்க. வைதிக மார்க்கம்-வேதத்தின்கண் கூறப்பட்டுள்ள சமயநெறி. அளவை வாதி-காட்சி முதலிய அளவைகளால் ஆராய்ந்தே மெய்ப்பொருளை அறிதல் கூடும் என்னும் கொள்கை உடையவன். கடைப்பிடி-துணிபொருள்.

அளவை வாதியின் கூற்று அளவைகளும் அவற்றின் ஆசிரியர்களும்

5-13 : வேதவியாதனும்..........வேண்டும்

(இதன் பொருள்) வேதவியாதனும் கிருதகோடியும் ஏதம் இல்சைமினி எனும் இவ்வாசிரியர்-அதுகேட்ட அளவைவாதி (மணிமேகலையாகிய) மாதவனை நோக்கித் துறவியே அவ்வாறே கூறுவேன் என்று கூறுபவன் வேதவியாதனும் கிருதகோடியும் குற்றமில்லாத சைமினியும் என்று கூறப்படுகின்ற எம்மாசிரியன்மார் நிரலே; பத்தும் எட்டும் ஆறும் தத்தம் வகையால் தாம் பண்புஉற பகர்ந்திட்டனர்-பத்தளவையும் எட்டு அளவையும் ஆறளவையும் ஆகத் தாம் தாம் ஆராய்ந்து கண்ட முறைமையினாலே அவரவரே விளக்கிக் கூறினர். எங்ஙனம் கூறினர் எனின்; காண்டல் கருதல் உவமம் ஆகமம் ஆணடைய அருத்தாபத்தியோடு இயல்பு ஐதிகம் அபாவம் மீட்சி ஒழிவறிவு எய்தி உண்டாம் நெறி என்று-காட்சியும் கருதலும் ஆகமமும் ஆகிய இவற்றின் அப்பாலாகிய அருத்தாபத்தியும் ஐதிகமும் மீட்சி ஒழிவறிவும் எய்தி உண்டாம் நெறியும் அளவைகள் என்று அறிவித்து; இவை தம்மால் பொருளின் உண்மை புலங்கொளல் வேண்டும்-இப்பத்தளவைகளாலும் அளந்து மெய்ப்பொருளின் இயல்பினை மாந்தர் அறிந்து கொள்ளவேண்டும் என்று செவியறிவுறுத்தனர் என்றான் என்க.

(விளக்கம்) வியாதன் என்னும் பெயருடைய முனிவர் பலர் உளராதலின் இவ்வியாதன் அவருள் வேதத்தை வகுத்துமுறை செய்த வியாதனை என்பது தோன்ற வேதவியாதன் என்று விதந்தோதினர் என்னை? மாயாவாதமும் பாற்கரியவாதமும் கிரீடாப்பிரமவாதமும் சத்தப்பிரமவாதமும் சத்தப்பிரமவாதமும் என்னும் நால்வேறுவகைப்பட்ட ஏகான்மவாத நூல் செய்த வியாசனும் உத்தர மீமாஞ்சை மதநூல் செய்த வியாதனும் மகாபாரதம் என்னும் இதிகாசமியற்றிய வியாதனும் என இப்பெயருடைய வியாத முனிவர் பலர் உளராதலும் இவர்க்கெல்லாம் பத்தளவைகள் உடம்பாடன்மையின் ஈண்டுக் கூறப்பட்ட, வேதவியாதர் அவர்களுள் ஒருவர் அல்லாமை அறிக. கிருதகோடி என்பவரைப் போதாயனர் எனவும் கிருதகோடி கவி எனவும் கூறுவார் உளர் என்பாரும் உளர். சைமினி என்பவர் வேதத்தில் கருமகாண்ட ஆராய்ச்சி செய்தற்கெழுந்த நூலாசிரியர் என்பர். வேதவியாதன் பத்தளவையும், கிருதகோடி எட்டளவையும், சைமினி ஆறளவையும், பகர்ந்திட்டனர் என்க. காண்டல் எனினும் காட்சி எனினும் ஒக்கும் கருதல் எனினும் கருத்து எனினும் ஒக்கும். அனுமானம் என்பதுமது நியாய நுலாசிரியர் ஆகிய கவுதம முனிவர் முதலியோர் உவமம் காண்டல் முதல் ஆகமம் ஈறாக உள்ள நான்களவைகளுள் ஏனைய அளவைகள் அடங்கும் ஆதலின் இவையே சிறப்புடையன. பிற சிறப்பில்லன என்பாரும் உளர் என்பது பற்றி ஆண்டைய அருத்தாபத்தியோடு எனப் பிரித்துக் கூறினர். ஐதிகம்-உலகுரை. அபாவம்-இன்மை. மீட்சியொழிவறிவு-மீட்சியினால் ஒழிந்த பொருளை அழியும் அளவை; பாரிசேடம் என்பதும் அது அபாவம்: இன்மையால் ஒரு பொருளை இல்லை என்று துணிவது. உண்டாம் நெறி எனினும் சம்பவம் எனினும் ஒக்கும் என்று செவியறிவுறுத்தனர் என்க.

1-காட்சியளவையின் வகை முதலியன

14-24 : மருளில்.................அறிவதாகும்

(இதன் பொருள்) மருள்இல் காட்சி ஐவகையாகும்-மயங்குதற்கு இடனில்லாத காட்சி அளவைதானும் ஐந்து வகைப்படுவதாம் அவை வருமாறு: கண்ணால் வண்ணமும் செவியால் ஓசையும் மூக்கால் நாற்றமும் நாவால் சுவையும் மெய்யால் ஊறும் நண்ணிய இவை எனச் சொன்ன இவை-கண் செவி மூக்கு நா மெய் என்னும் ஐம்பொறிகளுள் வைத்துக் கண்ணால் நிறமும் செவியால் ஓசையும் மூக்கினால் நாற்றமும் நாவினால் சுவையும் மெய்யினால் ஊறும் ஆகிய இப்புலன்கள்; நண்ணிய எனச் சொன்ன-வந்துற்ற பொழுது அவ்வப் பொறிகளாலே இப்புலன்கள் உணரப்படும் என்று சான்றோரால் சொல்லப்பட்ட படி இப்பொறிகளால் நிரலே; கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று-பார்த்தும் கேட்டும் மோந்தும் உண்டும் தீண்டியும்; துக்கமும் சுகமும் என துயக்கு அற அறிந்து-உணர்ந்து பார்த்து இப்புலன்கள் தரும் நுகர்ச்சியைத் துன்பமென்றாதல் இன்பமென்றாதல் தடை சிறிதுமின்றி உணர்ந்து; உயிரும் வாயிலும் மனமும் ஊறு இன்றி-உயிரும் கருவிகளும் நெஞ்சும் ஆகிய இவை பழுதில்லாமலும்; பயில் ஒளியொடு பொருள் இடம் பழுது இன்றியும்-பொருளில் பயின்றுணரும் உணர்ச்சியினோடே பயிலப்படுகின்ற பொருளும் இடமும் ஆகிய இவற்றானும் பழுதில்லாமலும்; சுட்டல் திரிதல் கவர்கோடல் தோன்றாது-சுட்டலும் பிறழ்தலும் இரட்டுற நினைதலும் ஆகிய குற்றம் பிறவாமலும்; கிட்டிய தேசம் நாமம் சாதிகுணம் கிரியையின் அறிவதாகும்-காணப்படும் பொருளைச் சார்ந்த இடம் பெயர் சாதி குணம் தொழில் என்னும் இவற்றால் நன்கறியும் அறிவே காட்சியளவை எனப்படுவதாம் என்க.

(விளக்கம்) மயக்கக் காட்சி அளவை ஆகாதென்பதற்கு மருளில் காட்சி என விதந்தார்; மருள் காட்சியாவது

பொருளல் லவற்றைப் பொருளென் றுணரு
மருளானு மாணாப் பிறப்பு  (குறள்-351)

என்பதனானும் உணர்க. காட்சி ஐந்தே இவற்றின்மேல் இல்லை என்பார் ஐந்து வகை ஆகும் என்று தொகுத்துக்கூறி மேலே அவற்றை வகுத்தோதுகின்றனர்.

இனி, காண்டல் என்பது கண்ணினது தொழிலாகவும் ஏனையவற்றிற்கும் பொருந்துவ தெங்ஙனமெனின்; ஈண்டுக் காண்டல் என்பது விளங்கவறிதல் என்னும் பொருள்மேனின்றது. என்னை! வேதங்கரை கண்டான் என்புழியும் காலமுன்று மவை கண்டு கூறியவன் என்புழியும், கண்டுரைப்பின் என்புழியும், சூத்திரப் பொருள் கண்டான் என்புழியும்,

செயிரிற் றலைப்பிரிந்த காட்சியா ருண்ணா
ருயிரிற் றலைப் பிரிந்த வூன்      (குறள்-258)

என்புழியும் அஃதப் பொருட்டாதலுணர்க.

கண் முதலிய பொறிகள் ஐந்தும் காட்சி முதலிய புலன்கள் ஐந்தும் அளவைவாதிகள் தோன்றுதற்கு முன்பே உலக வழக்கில் வழங்கப்பட்டு வருதல் தோன்ற கண்ணால் வண்ணமும்........ஊறும் எனச் சொன்ன இவை என்று முன்னையோர் மேலிட்டுக் கூறினர். நண்ணிய என்பதனை வண்ணம் முதலிய புலன்கள் ஐந்தனோடும் பொருந்த இடைநிலை விளக்கமாக்கிக் கூறிக்கொள்க. என்னை? நிறம் முதலிய புலன்கள் பொறிகளை வந்துற்றபொழுது அறிவதல்லது அவை வாராதபொழுது அறியமாட்டாமையின் என்க. இனி செவி முதலிய பொறிகட்கும் இஃதொக்கும். கட்பொறி சேய்மையிற் சென்றும் தனக்குரிய புலனைப் பற்றும் என்பாரும் உளராலோ எனின் அற்றன்று. அவர் கொள்கை போலி என்றொழிக. கண் முதலியவற்றோடு காணல் முதலியவற்றை நிரல் நிரையாகக் கொள்க. துயக்கு-தடை; சோர்வு எனினுமாம். வாயில் ஆகிய கருவிகள் பழுதுபட்டிருந்தால் காட்சியளவை பயனின்றாதலின் ஊறின்றி என்றார். ஒளி என்றது உயிரினது உணர்வை இஃதுணராதார் ஒளி ஞாயிறு திங்கள் தீ ஆகிய ஒளிகள் என்றார். இவ்வுரை போலி. என்னை? கண்ணொழிந்த செவி மூக்கு நா மெய் என்னும் நான்கு பொறிகளும் தத்தம் புலன்களைக் கோடற்கண் ஞாயிறு முதலியவற்றின் ஒளி வேண்டாமை நுண்ணிதின் உணர்க. இதனை,

இருளாக மூடுஞ்சு ழுத்தியி லிராத்திரியி
லிரவிசுட ரற்ற பொழுது
மருளாமலிருளையும் பொருளையுந் தெரிகின்ற
வகைகொண்டு சித்தாகுமே  (கைவல்யம்-414)

எனவரும் செய்யுளால் உணர்க. பொருள்-காட்சிப் பொருள். சுட்டல்-பொருள் உண்மை மாத்திரை காண்டல். திரிதல்-ஒன்றை மற்றொன்றாகக் கருதல். கவர் கோடல்-கண்டபொருளை இரட்டுறவே கருதல் (ஐயுறுதல்). சாதி-ஒருநிகரனவாகிய பல பொருட்குப் பொதுவாவதொருதன்மை.

2. கருத்தளவு

25-28: கருத்தளவு.............முதல்ஆம்

(இதன் பொருள்) கருத்தளவாவது-இனி அனுமான அளவை எனப்படுவது; குறிக்கொள் அனுமானத்து அனுமேயத் தகைமை உணரும் தன்மையதாகும்-ஏதுவுக்குப் பிறப்பிடமான குறியாகக் கொண்டு ஆராய்ச்சியினாலே சாதிக்கப்படும் பொருளின் உண்மையை உணர்த்தும் தன்மையுடையதாகும்; அது-இங்ஙனமாகிய அக்கருத்தளவை; மூவகை உற்று பொது எச்சம் முதல்ஆம்-பொது வென்றும் எச்சமென்றும் முதலென்றும் மூன்று பெயர் பெறுவனவாம்.

(விளக்கம்) கருத்தளவு-அனுமானப் பிரமாணம். அனுமானமாவது சாத்தியத்தை ஒழியச் சம்பவியாததாகிய சாதனத்தால் சாத்தியத்தைப் பற்றிப் பிறக்கும் ஞானமாகும் என்பர் நீலகேசி உரையாசிரியர் (நீலதரும-செய் 92). அனுமேயம் ஆராய்ந்துணரப்படுவது. அது மூவகை உற்று என மாறுக.

இதுவுமது

29-40 : பொது..............உணர்தல்

(இதன் பொருள்) பொது வெனப்படுவது-இவற்றுள் பொதுக் கருத்தளவை என்று கூறப்படுவது; சாதன சாத்தியம் இவை அந்நுவயம் இன்றாய் இருந்தும்-ஏதுவும் துணி பொருளும் ஆகிய இவை இரண்டும் தம்முள் தொடர்பின்றி இருந்தவிடத்தும்; கானம் கடம் திகழ்யானை ஒலி கேட்டோன்-காட்டில் நின்றும் வருகின்ற மதத்தால் விளங்கும் யானையினது பிளிற்றொலியைக் கேட்டவன் ஒருவன்; உடங்கு எழில் யானை அங்கு உண்டென உணர்தல்-அவ்வொலியோடு ஒருங்கே எழுச்சியுடைய மானையானது அக்காட்டின்கண் உண்டு என்று உணர்ந்து கொள்ளுதலாம்; எச்சம் என்பது வெள்ள ஏதுவினால் அத்தலை மழை நிகழ்வு நிச்சயித்து உரைத்தல்-இனி எச்சம் என்னும் கருத்தளவை மாற்றில் பெருகிவரும் வெள்ளமாகிய ஏதுவினால் அவ்வியாது தோன்றுதற்கிடனான சேயதாகிய அவ்விடத்தே மழை பெய்திருக்க வேண்டும் என்று துணிந்து கூறுதல்; முதல் என மொழிவது-இனி முதல் என்று கூறப்படும் கருத்தளவையாவது; கருகொள் முகில் என்று கூறப்படும் கருத்தளவையாவது; கருகொள் முகில் கண்டு இது மழை பெய்யும் என இயம்பிடுதல்-சூல்கொண்டு வருகின்ற மேகத்தைப் பார்த்து இம்மேகம் ஒருதலையாக மழை பொழியும் என்று துணிந்து கூறுதலாம்; என்னும் ஏதுவின் ஒன்று முக்காலம் தன்னில் ஒன்றின் சார்ந்து உளது ஆகி-என்று இங்ஙனம் கூறப்படுகின்ற மூன்று ஏதுக்களுள் வைத்து யாதேனும் ஒன்று இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று காலங்களுள் வைத்து ஒரு காலத்தைப் பொருத்தி உளதாகா நிற்பவும்; மாண்ட உயிர் முதல்-அறிவினால் மாட்சிமைப்பட்ட உயிராகிய வினை முதலும் முன் காண்டல் அளவைக்குக் கூறப்பட்டபடி உணர்வும் கருவிகளும் ஆகிய இவற்றால் குற்றம் இலதாய் இருந்து; காண்டல் பொருளால் கண்டிலது உணர்தல்-தான் காட்சியால் கண்ட பொருளை ஏதுவாகக் கொண்டு ஆராய்ந்து, கண்டிலாத பொருளுண்மையை உணர்ந்து கொள்ளுதலாம் என்றான் என்க.

(விளக்கம்) பொது-இதனைக் காரணனுமானம் எனவும் பூர்வானுமானம் எனவும் கூறுப. பொது முதலிய இம்மூன்றன் இயல்பையும்,

இடித்து மின்னி இருண்டு மேக
மெழுந்த போதிது பெய்யுமென்
றடுத்த தும்அகில் சந்த முந்தி
அலைத்துவார்புனல் ஆறுகொண்
டெடுத்து வந்திட மால்வ ரைக்க
ணிருந்து கொண்டல் சொரிந்ததென்று
முடித்ததும் இவை காட்சி யன்றனு
மான மென்று மொழிந்திடே

எனவரும் (சிவ, சித்தி. பரபக்கம் உலோகாயதன் மதமறுதலை, 2) செய்யுளானும் உணர்க. அந்நுவயம்-சேர்க்கை. அஃதாவது காரண காரியங்களுக் கிடையே இயற்கையாக அமைந்த தொடர்பு. கடம்-மதம். கானம்-காடு. உடங்கு-ஒருங்கு. எச்சம்-இதனைச் சேடானுமானம் எனவும் காரியானுமானம் எனவும் கூறுப. வெள்ளம் ஆகிய ஏது என்க. மழைநிகழ்வு-மழைபெய்தமை. கருக்கொள் முகில்-சூல் கொண்ட மேகம். இது-இம்மேகம். காண்டற் பொருள்-கண்ணால் கண்ட பொருள். கண்டிலது-காணப்படாத பொருள்.

3. உவமம், 4. ஆகமம், 5. அருத்தாபத்தி, 6. இயல்பு, 7. ஐதிகம்.

41-50 : உவமை...................தெளிதல்

(இதன் பொருள்) உவம மாவது-உவமஅளவை என்று சொல்லப்படுவது; ஒப்புமை அளவை-கண்டதும் காணாததுமாகிய இரண்டு பொருள்களின்கண் கிடந்த பொதுத்தன்மைகொண்டு கேள்வி அறிவினால் பண்டு காணாத பொருளை உணர்ந்து கொள்ளுதலாம், அஃதாவது; கவயமா ஆபோலும் என-கவயமா என்னும் காட்டு விலங்கினை அறியாதான் ஒருவனை அது பசுவைப் போன்றிருக்கும் என்று கேள்வியுற்றிருந்தவன் பின்னர்க் காட்டின்கண் ஆப்போன்றதொரு விலங்கைக் கண்டு இதுவே கவயமா என; கருதல்-துணிதலாம்; ஆகம அளவை-இனி நூல் அளவையாவது; அறிவன் நூலால் போக புவனம் உண்டு என புலங்கொளல்-வினையின் நீங்கி விளங்கிய அறிவினையுடைய நூலாசிரியன் நூலின்கண் ஓதியிருத்தல் கண்டு இவ்வுலகிற்கப்பால் துறக்கமும் நரகமுமாகிய வேறு உலகங்களும் உண்டு என்று துணிதல்; அருத்தாபத்தி-அருத்தாபத்தி என்னும் அளவையாவது; ஆய்க்குடி கங்கையிருக்கும் என்றால்-ஒருவன் இடையர் வாழும் சேரி கங்கையின்கண் உளது என்று கூறியவழி; கரையில் என்று எண்ணல்-அது கேட்டவன் கங்கை என்னும் சொல் கரை என்னும் பொருட்டு ஆகும். ஆதலின் கங்கையாற்றின் கரையில் இடைச்சேரி உளது என்று துணிதல்; இயல்பு-இனி இயல்பு என்னும் அளவையாவது; யானைமேல் இருந்தோன்-யானைமேல் ஏறி அதனைச் செலுத்துதற்கு அமைந்திருந்தோன் ஒருவன் கொடு என்று கையை நீட்டிய பொழுது அது கேட்டோன் அவன் கேட்கும் பொருள் தோட்டியே என்றறிந்து; தோட்டிக்கு அயல் ஒன்று ஈமாது அதுவே கொடுத்தல்-தான் துணிந்த தோட்டிக்கு வேறாக மற்றொன்றனையும் கொடாமல் அத்தோட்டியையே கொடுத்தல் ஆகும்; ஐதிகம் என்பது உலகுரை-இனி ஐதிக அளவை என்பது செவி வழியாக வருகின்ற உலகுரையே ஆம் அஃதாவது; இம்மரத்து எய்தியது ஓர் பேய் உண்டு என-உலகத்தோர் ஒரு மரத்தைக் குறித்து இம்மரத்தின்கண் உறைவதொரு பேய் உளது என்று நெடுநாளாகக் கூறிவருதலால் அது கேட்டோர் அங்ஙனமே அம்மரத்தில் ஒரு பேய் உளது என்று துணிதலாம் என்றான் என்க.

(விளக்கம்) உவமை-இருபொருளின்கண் கிடந்த ஒப்புமைத்தன்மை. இதனை ஒக்கும் இது எனக் கேட்டிருந்த ஒருவன் இதற்கும் அதற்கும் உள்ள ஒப்புமையைக் கண்டு பண்டு கண்டறியாத அதனை அவ்வொப்புமை காரணமாக அறிந்து கொள்ளுதல். கவயமா-ஆமா-காட்டுப்பசு. இது நாவால் நக்கியே பிறஉயிரைக் கொன்றுவிடும் ஒரு கொடிய விலங்கு. இக்காரணத்தால் இதுபற்றி உணர்த்தலும் உணர்தலும் வேண்டிற்று கண்ணன் கருமுகில் போல் வண்ணன் எனக் கேட்டவன் அவ்வுவமையால் அக்கண்ணனை அவ்வண்ணமுடையோனாகக் கருதி உணரும் உணர்ச்சியும் இவ்வளவையின் பாற்படும். ஆகமம்-முதனூல். அறிவன் என்றது வினையின் நீங்கி விளங்கிய அறிவனை. என்னை? அவனே நூல் செய்யும் தகுதி உடையன் ஆகலின் என்க. இதனை,

வினையி னீங்கி விளங்கி வறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும்  (தொல்.மரபி.96)

என்பதனானு முணர்க. போகபுவனம்-உயிர்கள் இவ்வுலகத்தே செய்யும் நல்வினை தீவினைகட்குரிய பயனாகிய இன்பதுன்பங்களை நுகர்தற்குரிய உலகங்கள், இப்போகபுவனங்கள் சமயங்கள்தோறும் மாறுபடும் எனினும் எல்லாச் சமயத்தார்க்கும் பொருந்தப் பொதுமறை செய்த அறிவன் நூலாகிய திருக்குறளினும்,

அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமை
யாரிரு ளுய்த்து விடும்          (குறள்-121)

எனவரும் குறளின்கண் போகபுவனம் கூறப்பட்டிருத்தலும் உணர்க. இனி அருத்தாபத்தியின் இயல்பை வரும் செய்யுளால் உணர்க.

அடுத்துல கோதும் பொருளருத் தாபத்தி யாமதுதா
னெடுத்த மொழியினஞ் செப்புவ தாகுமிவ் வூரிலுளர்
படைத்தவ ரென்னிற் படையா தவருமுண் டென்றுமிவன்
கொடுப்பவனென்னிற் கொடாதாரு முண்டென்றுங் கொள்வதுவே (சிவ.சித்தி.அளவை-உரை)

எனவரும்,

பகலுண்ணான் பருத்திருப்பான் என்புழி இவன் இரவில் நன்கு உண்ணுவான் என்றுணர்வதும் அஃது. இயல்பளவைக்கு இங்ஙனமே,

மாமே லிருந் தொருகோறா வெனிற்சுள்ளிக் கோறாலும்
சோமே லிருந்தொரு கோறாவெனிற் றரலே துணிந்து
பூமேவு கண்ணமுத் தங்கோல் கொடுத்தலும் பூதலத்தே
நாமேவி யல்பென்று கூறுவர் நல்லசொன் னாவலரே

(என்றும் வரும் மேற்படி சிவசித்தி அளவை உரை மேற்கோள்) எனவரும் செய்யுளினும் கூறப்பட்டிருத்தல் உணர்க. இனி ஐதிக அளவைக்கு,

கொன்பயில் வேலைக் கடல்புடை சூழுங் குவலயத்தோ
ரன்புட னாலி லலகையுண் டென்பர்க ளென்பதுவு
மின்பயில் புற்றில் விடநாக முண்டென்ப ரென்பதுவும்
என்பர்க ணாவல ரென்பது மைதிக மென்பர்களே

எனவரும் செய்யுளின்கண் வேறுமோர் எடுத்துக்காட்டு வருதலும் உணர்க.

8. அபாவம், 9. மீட்சிஒழிவறிவு, 10. உண்டாம் நெறி, என்னும் அளவைகள்

51-56 : அபாவம்..............கூறல்

(இதன் பொருள்) அபாவம் என்பது-அபாவ வளவை என்று சொல்லப்படுவது; இன்மை ஓர் பொருளை அவ்விடத்துத் தவாது தான் இலை என்றல்-அஃதாவது ஒரு பொருள் ஓரிடத்தில் உளதாகத் துணிந்து அங்கு நன்கு தேடியபின் அப்பொருள் அங்கு இல்லாமை கண்டு அப்பொருள்தான் தேடிய அவ்விடத்தே இல்லை என்று துணிந்து அப்பொருளைத் தான் தேடிய அவ்விடத்தே தனது தெளிவு கெடாதபடி தானே இல்லையென்று துணிதல்; மீட்சி என்பது-மீட்சி அளவை என்று சொல்லப்படுவது வருமாறு; இராமன் வென்றான் என-இராமன் வெற்றி பெற்றனன் என்ற சொல் கேட்டவளவிலே; மாட்சிஇல் இராவணன் தோற்றமை மதித்தல்-அறமாண்பில்லாத இராவணன் தோற்றொழிந்தான் என்பதனையும் துணிதல்; உள்ள நெறி என்பது-உண்டாம் நெறி என்று கூறப்பட்ட அளவையாவது; நாராசத் திரிவில் கொள்ளத்தகுவது காந்தமெனக் கூறல்-இருப்புக்கோலின் சுழற்சியினாலே அறிந்து கொள்ளத்தக்கது அவ்விரும்பின்கண் காந்தம் உண்மை என்று துணிதல்;

(விளக்கம்) ஓரிடத்தே ஒருபொருள் இருக்கக்கூடும் என்று ஆராய்பவன் அப்பொருள் அங்கு இல்லை என்று துணிதலுக்கு அப்பொருளின் இன்மையே காரணமாதலின் அதுவும் ஓர் அளவையாயிற்று. தவாது என்றது தனது துணிவு பிழைபடாமல் என்றவாறு. துணிவாவது அப்பொருள் அவ்விடத்து இல்லை என்பது. இவ்வளவையை என்று மபாவம் முன் அபாவம் ஒன்றினென்றபாவம் எனப் பல்வேறுவகையானும் வகுத்து ஆராய்தலும் உண்டு. மீட்சியொழிவு அறிவு என்பதனை ஈண்டு மீட்சி என்றே ஓதியது மீட்சி அளவை என்றும் அது வழங்கப்படும் என்பது அறிவித்தற்கு. இதனை ஒழிபளவை எனவும் பாரிசேடவளவை எனவும் கூறுப. இவ்வளவைக்குச் சித்தியாரில் மறைஞான தேசிகர் எடுத்துக்காட்டும் செய்யுள் வருமாறு-

சீரா ரொழிபென்று செப்பப் படுவது திண்புவிமேற்
போராடி நின்று பொருதா ரிருவர்தம் போர்க்களத்துப்
பாரா ரிராகவன் வென்றா னெனிற்றன் பரிசழிந்து
நேரா மிராவணன் றேற்றசொல் லாகி நிகழ்வதுவே

எனவரும், இனி உண்டாநெறி எனினும் உள்ளநெறி எனினும் சம்பவ அளவை எனினும் ஒரு பொருளன. இதன் இயல்பினைச் சிவ.சித்தி-சுப அளவை மேற்கோளாக வரும்.

துயக்கற வுண்மை யென நா வலர்க டுணிந்துரைப்ப
தியற்கைப் பொருளினை யிற்றென லாமிது தானுரைக்கின்
வியக்குற்ற கால்சலிக் குந்தீச் சுடும்விய னீர்குளிரும்
வயக்குற்ற மண்வலி தென்றுபட் டாங்கு வழங்குவதே

எனும் பாட்டானுணர்க.

பிரமாண பாசங்கள்

57-61 : எட்டுள............நிகழ்வ

(இதன் பொருள்) பிரமாண பாசங்கள்-அளவைப் போலிகளும்; எட்டு உள-எட்டு இருக்கின்றன, அவையாவன; சுட்டு உணர்வொடு திரியக்கோடல் ஐயம் தேராதுதெளிதல் கண்டுணராமை-சுட்டுணர்வும் திரியக்கொள்ளுதலும் ஐயமும் தேராதுதெளிதலும் கண்டும் உணராமையும் ஆகிய இவற்றோடு; எய்தும் இல்வழக்கு உணர்ந்ததை உணர்தல் நினைப்பு என நிகழ்வ-சேரும் இல்வழக்கும் உணர்ந்ததை உணர்தலும் நினைப்பும் என்று நிகழ்கின்ற இவ்வெட்டுமாம் என்றான் என்க.

(விளக்கம்) பிரமாணபாசங்கள் எட்டுள என மாறுக. இது தொகுத்துக் கூறல் என்னும் உத்தி. பிரமாணபாசங்கள்-அளவைப் போலிகள். மேலே சுட்டுணர்வு.......நினைப்பன நிகழ்வ என்னுந்துணையும் வகுத்து மெய்ந்நிறுத்தல் என்னும் உத்தி.

அளவைப் போலியின் இலக்கணம்

61-77 : சுட்டுணர்வு...............அளவைகள்

(இதன் பொருள்) சுட்டுணர்வு எனப்படுவது-இனி இவ்வளவைப் போலிகள் எட்டனுள் வைத்துச் சுட்டுணர்வென்னும் அளவைப் போலியாவது; ஏனைபொருளுண்மை மாத்திரை காண்டல்-அறியப் புகுந்த எல்லாப் பொருள்களையும் அவற்றின் உண்மை மாத்திரம் கண்டொழிதலாம்; திரியக்கோடல் ஒன்றை ஒன்று என்றல்-திரியக்கோடல் என்பது ஒன்றை மற்றொன்றாகக் கருதல்; விரிகதிர் இப்பியை வெள்ளியென்று உணர்தல்-அஃதாவது விரிகின்ற ஒளியையுடைய சிப்பியைச் சிப்பி என்றுணராமல் வெள்ளி என்னும் உலோகமாக உணர்வது போல்வனவாம்; ஐயம் என்பது-ஐயம் என்னும் அளவைப் போலியாவது; ஒன்றை நிச்சயியா-கண்டதொரு பொருளைத் தேற்றமாகக் காணாத; மையல் தறியோ மகனோ என்றல்-மயக்கத்தால் தான் கண்ட பொருள் கட்டையோ மகனோ என்று ஐயுற்றுமொழிதல் போல்வது; தேராது தெளிதல்-தேராது தெளிதல் என்னும் அளவைப் போலியாவது; செண்டு வெளியில் தறியை ஓராது மகன் என உணர்தல்-செண்டு வெளியின்கண் நடப்பட்டுள்ள கட்டையை ஆராய்ந்து பாராமல் மகன் என்று உணர்ந்தொழிதல் போல்வதாம்; கண்டு உணராமை-கண்டுணராமையாவது ஒரு பொருளைக் கண்ணாற் கண்டு வைத்து அப்பொருளின் இயல்பு உணராதொழிதலாம், அது வருமாறு; கடுமா புலி ஒன்று அண்டல் கண்டும் அறியாமை-ஒருவன் தன்னைக் கொன்றொழிக்கும் கொடிய விலங்காகிய புலி ஒன்று அணுகி வருதல் கண்டும் அதனால் வரும் தீமையை உணராமை முதலிய போலிக் காட்சியாம்; இல்வழக்கு என்பது-இல்வழக்கென்னும் அளவைப் போலியாவது; முயல் கோடு ஒப்பன சொல்லின் மாத்திரத்தான் கருத்தில் தோன்றல்-முயற்கொம்பு என்பது போலும் பொருள்கள் வாய்மையில் இல்பொருளாகவும் சொற்கேட்ட துணையால் ஓர் உள் பொருள் போலக் கருத்திற்குப் புலப்படுதலாம்; உணர்ந்ததை உணர்தல்-உணர்ந்ததை உணர்தல் என்னும் அளவைப் போலியாவது ஒருவன் நன்குணர்ந்ததனேயே வாளாது மீண்டும் அளவை கூறி உணர்த்துதல், அஃதாவது; உறுபனிக்கு தீப்புணர்ந்திடல் மருந்து என புலங்கொள நினைத்தல்-பிறன் ஒருவனுக்கு மிக்க பனிதரும் துன்பத்திற்குத் தீக்காய்தல் மருந்தென்று கூற முற்படுதல் போல்வன; நினைப்பு எனப்படுவது-நினைத்தல் என்னும் அளவைப் போலியாவது; பிறர் காரணம் நிகழாது நினக்கு இவர் தாயுந் தந்தையும் என்று சொல கருதல்-ஒருவன் காரணமின்றியே உனக்கு இவர் தாயும் தந்தையுமென்று அறிவித்தல் கேட்டு அக்கூற்றினைத் துணிதலாம்; இப்பெற்றிய அளøவைகள்-யான் கூறிய அளவைகள்இத்தன்மையன என்றான்; என்க.

(விளக்கம்) எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பது பற்றி ஒரு பொருளின் உண்மை மட்டும் கண்டொழிதலால் பயனில்லை ஆகலின் சுட்டு அளவைப் போலியாயிற்று. திரியக்கோடல்-இதனை விபரீதக் காட்சி எனவும் கூறுப. ஐயம்: ஒரு பொருளைச் சுட்டுணர்வால் கண்டவன் அதனை அதுவோ இதுவோ என்று ஐயுறுதல். இவையெல்லாம் காட்சிப் போலிகள் என்னை? மெய்க்காட்சி மாசறு காட்சி ஐயம் திரிவு இன்றி விகற்பம் முன்னா ஆசு அற அறிவதாகும், என்பவாகலின் இவையெல்லாம் போலி ஆயின என்க. தேராது தெளிதல் என்பது-ஆராயாது தெளிதலும் பிழைபடுதல் உண்டாதலின் போலியாயிற்று. அளவைகள் நன்மை எய்தும் பொருட்டாகலின் புலியைக் கண்டவன் அதனால் தனக்குவரும் கேட்டை உணராமையால் அதுவும் போலியாயிற்று. அண்டலை என்புழி ஐகாரம் சாரியை. அதனால் எய்தும் தீமையை நன்குணர்த்தும் பொருட்டுப் புலியை எடுத்துக்காட்டினார். பரத்தை முதலியோரைக் கண்டு காமுறுவோர் காட்சியும் அவரால் வரும் தீமை உணராமையின் அக்காட்சியும் அளவைப் போலி என்றற்கு முதலிய கண்டும் அறியாமை என்றார். முயற்கோடு ஒப்பன என்றது ஆகாயப்பூ கழுதைக்கொம்பு காக்கைப் பல் முதலிய இல்பொருள் வழக்குகளையும் அகப்படுத்து நின்றது. இவை சொற்றொடர் மாத்திரையே அன்றிப் பொருள் இல்லாதன ஆகவும் பொருள் போல உள்ளத்தில் தோன்றுதலின் போலியாயிற்று. இக்காட்சி மானதக் காட்சி ஆதலின் கருத்தில் தோன்றல் என்றார். அளவையின்றியும் உலகத்தார் உணர்தற்கு எளிய பொருளை அளவையால் உணர்த்துதலும் போலி என்பார் உணர்ந்ததை உணர்த்தல் என்றார். இஃதுணராது உணர்ந்ததை உணர்தல் எனப்பாடந்திருத்தி உணர்ந்திருந்ததனையே மறித்தும் உணர்தல் என்று உரை கூறி அதனைக் குற்றம் என்று கூறுவார் உரை போலியாம் என்க. என்னை? உணர்ந்ததனை மறித்தும் உணராதார் இவ்வுலகத்தே வாழ்தல் அரிதாகலின் அஃது போலியாதல் எங்ஙனம்? இனி, தான் உணர்ந்ததனை ஆராய்ந்து தெளிய முற்படுவார் யாரே உளர்? இங்ஙனம் இதற்குக் கூறும் விளக்கமும் போலி என்க. நினைப்பு-பிறர் சொன்னதனை நினைத்தல். பிறர் கூற்று பொய்யாதலும் கூடுமாதலின் அதனால் உண்டான நினைப்பும் போலியாயிற்று.

சமயக்கணக்கர்களும் அளவைகளும்

78-86 : பாங்குறும்..............தன்னைவிட்டு

(இதன் பொருள்) பாங்கு உறும்-இவ்வளவைப் பகுதியை மேற்கொள்ளுகின்ற சமயங்கள்; உலோகாயதம் பவுத்தம். சாங்கியம் வைசேடிகம் மீமாஞ்சகமாம்-உலோகாயதமும் பவுத்தமும் சாங்கியமும் வைசேடிகமும் மீமாஞ்சையும் ஆகும்; சமய ஆசிரியர் தாம்-முறையே இச்சமயங்களுக்கு ஆசிரியர் ஆவார்; பிருகற்பதி சினன் கபிலன் அக்கபாதன் கணாதன் சைமினி-பிருகற்பதியும் புத்தனும் கபிலனும் அக்கபாதனும் கணாதனும் சைமினியும் என்னும் இம்முனிவர்களாவார்; மெயப்பிரத்தியம் அனுமானம் சாத்தம் உவமானம் அருத்தாபத்தி அபாவம்-இச்சமயங்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற அளவைகள் தாமும் மெய் முதலிய பொறிகளால் உணரப்படும் காட்சியளவையும் கருதலளவையும் நூலளவையும் உவம அளவையும் அருத்தாபத்தி அளவையும் அபாவ அளவையும் ஆகிய; இப்போது இயன்றுள அளவைகள்-இந்த ஆறு அளவைகளே இப்பொழுது நிரலே அச்சமயக்கணக்கர்களால் வழங்கப்பட்டு வருகின்ற அளவைகளாகும்; என்றவன் தன்னைவிட்டு-என்று அறிவித்தவனாகிய அளவை வாதியை விட்டு மாதவன் வடிவில் அப்பால் செல்லும் மணிமேகலை என்க.

(விளக்கம்) பாங்கு-பகுதி. இவ்வளவைகளின் பகுதி என்க. இவற்றை நிரலே உலோகாயத சமயத்திற்கு ஆசிரியன் பிருகற்பதி, அச்சமயத்திற்கு அளவை காட்சி அளவை மட்டுமே எனவும், பவுத்தத்திற்குப் புத்தன் ஆசிரியன் எனவும் காட்சியும் கருதலும் பவுத்த சமயத்திற்கு அளவை எனவும், சாங்கியத்திற்கு ஆசிரியன் கபிலன் எனவும், அளவைகள் காட்சி கருதல் நூல் ஆகிய மூன்றும் எனவும், நையாயிகத்திற்கு ஆசிரியன் அக்க பாதன், அளவைகள் காட்சி கருதல் நூல் உவமை ஆகிய நான்கும் எனவும், வைசேடிகத்திற்கு ஆசிரியன் கணாதன் எனவும், அளவைகள் காட்சி கருதல் நூல் உவமை அருந்தாபத்தி ஆகிய ஐந்தும் எனவும், மீமாஞ்சகத்திற்கு ஆசிரியன் சைமினி எனவும், அளவைகள், சாட்சி முதல் அபாவம் ஈறாகக் கூறப்பட்ட ஆறுமாம் எனவும் கொள்க. இவையே இப்போது வழங்குவன. எனவே ஏனைய நான்கு அளவைகள் கைவிடப்பட்டன என்றவாறும் ஆயிற்று. மீமாஞ்சையின் ஆசிரியரான சைமினி என்பவர் தாம் கண்ட ஆறளவைகளையும் கைக்கொண்டனர் என்பதனை மீமாஞ்சைச் சருக்கம் (மெய்ஞ்ஞான விளக்கம்-39) மூன்றாம் செய்யுளில்,

காணுதல் கருத லொப்புக் கட்டுரை பொரு ளபாவ
மேணுறு பிரமாணங்க ளிவை யாறே

என்பதனானும் உணர்க. என்றவன்-அளவை வாதி.

சைவவாதி

86-95 : இறைவன்.............உரைத்தனன்

(இதன் பொருள்) இறைவன் ஈசன் என நின்ற சைவவாதி நேர்படுதலும் எவ்வுலகத்திற்கும் முழு முதற்கடவுள் பரசிவமே என உட்கொண்டு அந்நெறி நின்றொழுகும் சைவவாதி தன் எதிரே வருதலும் அவனே நோக்கி; பரசும் நின் தெய்வம் எப்படித்து என்ன-ஐயனே! நீ வழிபடுகின்ற கடவுள் எத்தகையது கூறுக என்று வினவ; இயமானன் இருசுடரோடு ஐம்பூதம் என்று எட்டு வகையும் உயிரும் யாக்கையுமாய் கட்டி நிற்போனும்-உயிரும் ஞாயிறும் திங்களும் ஆகிய இரண்டு ஒளி மண்டிலங்களோடு நிலம் நீர் தீ வளி வெளி ஆகிய இவ்வெட்டு வகைப்பொருள்களும் தனக்கு உயிரும் உடம்புமாகப் படைத்துக் கொண்டு அவற்றின் உள்ளும் புறமும் தன் ஆணையால் கட்டி அவையே தானாய் நிற்பவனும்; கலை உருவினேனும்-மறைமொழியே தனக்கு உருவமாக உடையவனும்; படைத்து விளையாடும் பண்பினேனும்-உலகங்களைப் படைத்தல் முதலிய ஐந்து தொழில்களையும் இடையறாது செய்து விளையாடுகின்ற அருட்பண்பை உடையவனும்; துடைத்து துயர்தீர் தோற்றத்தோனும்-உயிர்களின் மலத்தைத் துடைத்துத் துன்பத்தைத் தீர்க்கின்ற பெருந்தகைமையை உடையோனும்; தன்னில் வேறு தான் ஒன்று இல்லோனும்-தன்னில் பிறிதாக வேறு ஒரு பொருளும் இல்லாதவனும் ஆகிய; அன்னோன் இறைவன் ஆகும் என்று உரைத்தனன்-அத்தகைய சிவபெருமானே எமக்குக் கடவுளாவான் என்று கூறினன் என்க.

(விளக்கம்) பரசுதல்-வழிபடுதல். எப்படித்து-எத்தன்மைத்து. இருசுடர்-ஞாயிறும் திங்களும். இயமானன்-உயிர். இருசுடரோடு........கட்டிநிற்போனும் எனவரும் இதனோடு,

இரு நிலனாய்த் தீயாகி நீரும் ஆகி
இயமானனாய் எறியுங் காற்றும் ஆகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
ஆகாச மாய்அட்ட மூர்த்தி ஆகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறர் உருவும் தம் உருவும் தாமே யாகி
நெருநிலையாய் இன்றாகி நாளை ஆகி
நிமிர்புன் சடையடிகள் நின்றவாறே

எனவரும் திருநாவுக்கரசருடைய திருத்தாண்டகம் ஒப்புநோக்கற்பாலது. உயிரும் இருசுடரோடு என முன்னர்க் கூட்டுக. உயிர்களே தனக்கு உயிராகவும் ஏனைய பூதங்கள் தனக்குடம்பாகவும் என்பான் இயமானனும் ஐம்பூதமும் இருசுடரும் உயிரும் யாக்கையுமாய்க் கட்டி நிற்போனும் என்றான். இக்கருத்தினை அவையே தானாய் எனவரும் சிவஞான போதத்தானும் உணர்க. கலை என்றது-மறைமொழியை. அஃதாவது திருவைந்தெழுத்து மந்திரத்தை என்க. இதனை,

மந்திர மதனிற் பஞ்ச மந்திரம் வடிவ மாகத்
தந்திரம் சொன்ன வாறிங் கென்னெனிற் சாற்றக் கேள்நீ
முந்திய தோற்றத்தாலும் மந்திர மூலத் தாலும்
அந்தமில் சத்தி யாதிக் கிசைத்தலு மாகு மன்றே

எனவரும் (சிவ-சித்தி-சுப-செய்-79) செய்யுளானும் உணர்க.

இனி, கலை 38-என்றும் இவை சிவபெருமானுடைய உறுப்புகளாக உள்ளவை என்பவாதலின் கலை உருவினேன் என்றானெனினுமாம். என்னை? ஐயாற தன்மிசை எட்டுத்தலையிட்ட மையில்வான் கலை மெய்யுடன் பொருந்தி என வருதலும் காண்க (திருச்சிற்றம்பல-1.பேர்). படைத்து விளையாடும் பண்பினோன் என்பதனோடு, காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி எனவரும் திருவெம்பாவையை ஒப்பு நோக்குக துடைத்தல்-மூலமலத்தை நீக்குதல். துயர்-பிறவித்துன்பம். தோற்றம்-பெருந்தகைமை. தான் ஒன்றிலோன் என்புழி, தான்:அசை.

பிரமவாதி

96-97 : பிரமவாதி............என்றனன்

(இதன் பொருள்) பிரமவாதி பேர் உலகு எல்லாம்-பெரிய அண்டங்களாகிய உலகங்கள் எல்லாம்; ஓர் தேவன் இட்ட முட்டை என்றனன்-ஒப்பற்ற பிரமதேவனால் இடப்பெற்ற முட்டைகள் என்று கூறினன் என்க.

(விளக்கம்) மணிமேகலை சைவவாதியைவிட்டு அப்பால் எதிர்ப்பட்ட பிரமவாதியை வினவ அவன் இங்ஙனம் கூறினன் என்பது கருத்து. பின்வருவனவற்றிற்கும் இஃதொக்கும்.

வைணவவாதி

98-99 : காதல்...............உரைத்தனன்

(இதன் பொருள்) கடல்வணன் புராணம் காதல் கொண்டு ஓதினன்-கடல் போலும் நீலநிறமுடைய விட்டுணுவின் புராணத்தை அன்புற்று ஓதியுணர்ந்த வைணவவாதி இவ்வுலகமெல்லாம்; நாரணன் காப்பு என்று உரைத்தனன் திருமாலால் காக்கப்படுதலின் அவனே முழுமுதற் கடவுள் என்று கூறினான் என்க.

(விளக்கம்) காதல்-இறையன்பு. அவனே முழுமுதற் கடவுள் என்பது குறிப்புப் பொருள். ஓதினன்-பெயர்.

வேதவாதி

100-105 : கற்பம்................கேட்டு

(இதன் பொருள்) கற்பம் கை சந்தம் கால் எண்கண் தெற்று என் நிருத்தம் செவி சிக்கை மூக்கு உற்ற வியாகரணம் முகம் பெற்று-கற்பம் கையாகவும் சந்தோவிசிதி காலாகவும் சோதிடம் கண்ணாகவும் தெளிவாக உள்ள நிருத்தம் காதாகவும் சிக்கை முக்காகவும் அதனையுடைய வியாகரணம் முகமாகவும் இவ்வாறு உறுப்புகளையும் பெற்று; சார்பின்-தோன்றா ஆரணவேதக்கு ஆதி அந்தம் இல்லை-தான் ஒன்றினின்றும் பிறவாத சிறப்பினையுடைய ஆரணமாகிய வேதத்திற்குத் தோற்றமும் இறுதியும் இல்லை ஆதலின்; அது நெறி எனும் வேதியன் உரையின் விதியும் கேட்டு-அது கூறும் நெறியே வீடெய்துவிக்கும் நன்னெறி என்று கூறுகின்ற வேதவாதியின் விதியையும் கேட்டறிந்த பின்னர் என்க.

(விளக்கம்) கற்பம் முதலிய ஆறும் வேதாங்கம் என்பவாதலின் இங்ஙனம் உருவகிக்கப்பட்டன. சந்தம்-சந்தோவிசிதி. எண் என்றது சோதிடத்தை. இனி, இது பற்றி ஆசிரியர் நச்சினார்க்கினியர் இம்முறைமையினைச் சிறிது வேறுபடுத்தி ஆறங்கமாவன உலகியற் சொல்லையொழித்து வைக்கச் சொல்லையாராயும் நிருத்தமும், அவ்விரண்டையு முடனாராய்ந்த ஐந்திரத் தொடக்கத்து வியாகரணமும், போதாயனீயம், பாரத்துவாசம், ஆபத்தம்பம், ஆத்திரேயம் முதலிய கற்பங்களும், நாராயணீயம் வராகம் முதலிய கணிதங்களும் எழுத்தாராய்ச்சியாகிய பிரமமும் செய்யுளிலக்கணமாகிய சந்தமுமாம் (தொல்-புறத்-20-உரை) என்பர். சார்பில் தோன்றாமையாவது அனாதிநித்தியம் என்றவாறு. இதனை நீலகேசியின்கண்,

நாத்திக மல்லது சொல்லலை
யாயின்மு னான்பயந்த
சாத்திர மாவது வேதகின்
றேவாது தான்சயம்பு
சூத்திரி நீயது வல்லைய
லாமையிற் சொல்லுகிலாய்
போத்தந்தி யோவதன் றீமையென்
றான்பொங்கிப் பூதிகனே    (வேத 826)

எனவரும் பூதிகன் கூற்றாலும்,

முன்னுள மறைகள் எனவரும் சங்கற்ப மாயாவதி மதத்தானும் வேதம் அநாதி நித்தியம் எனவரும் பரிமேலழகர் (குறள்-543) உரையானும் உணர்க. வேதக்கு: சாரியையின்றி உருபு புணர்ந்தது. வேதியன், வேதவாதி.

மணிமேகலை உட்கோளும் செயலும்

106-109 : மெய்த்திறம்.............யாதென

(இதன் பொருள்) மெய்த்திறம் வழக்கு என விளம்புகின்ற எத்திறத்தினும் இவர் உரை இசையாது என-அது கேட்ட மணிமேகலை நூல் வழக்கும் உலக வழக்கும் எனக்கூறப்படுகின்றவற்றுள் எந்த வழக்கத்திற்கு அளவைவாதி முதலிய இச்சமயக்கணக்கர் மொழிகள் பொருந்தா என்றுணர்ந்தவளாய் அப்பால்; ஆசிவக நூல் அறிந்த புராணனை-ஆசீவக சமய நூலை நன்கு கற்றுணர்ந்த புராணன் என்னும் தலைவனை அணுகி, பேசும் நின் இறை யார் நூற்பொருள் யாது என-ஐய நின்னாற் கூறப்படும் உன்னுடைய இறைவன் யார் நின் நூல் கூறும் நன்பொருள் யாது என்று வினவா நிற்ப என்க.

(விளக்கம்) மெய்த்திறம்-நூல் வழக்கு. வழக்கென்றது உலக வழ்கினை. மெய்த்திறம் வழக்கு நன்பொரள் வீடெனும் இத்திரம் தத்தம் இயல்பினின் காட்டும் சமயக்கணக்கரும் என விழாவறை காதையினும் (11-13) வருதல் உணர்க. ஆசீவக நூல் நன்குணர்ந்த சமயக்கணக்கர் தலைவனைப் புராணன் என்று வழங்குவது வழக்கம் என்பது நீலகேசியில் துறவோர் தலைவனைப் பூரணன் என்பதனாலும் ஈண்டும் பூரணன் என்பதே புராணன் எனக் கோடற்கும் இடன் இருந்தலானும் உணரலாம்.

காரணம் வேண்டாக் கடவுட் குழாந்தன்னிற்
பேருணர் வெய்திப் பெரிதும் பெரியவன்
பூரண னென்பான் பொருவறக் கற்றவ
னாரணங் கன்னாட்கறிய வுரைக்கும் (நீலகேசி, ஆசீவக-668)

எனவே பூரணன் என்பதே விகாரத்தாலாதல் பிழைபட்டதால் ஈண்டுப் புராணன் என்றாயிற்று என்று கோடல் மிகையன்று என்க.

ஆசிவகவாதி

110-119 : எல்லையில்............படுமே

(இதன் பொருள்) எல்லைஇல் பொருள்களில் எங்கும் எப்பொழுதும் புல்லிக் கிடந்து புலப்படுகின்ற வரம்பில் அறிவன் இறை-அது கேட்ட ஆசீவக சமயத் தலைவனாகிய புராணன் அவ்வினாக்களுக்கு விடை இறுப்பவன்:-எல்லையில்லாமல் கிடக்கின்ற பொருள்களில் எல்லாம் அங்கிங்கெனாதபடி எங்கும் எக்காலத்தும் பொருந்திக் கிடந்து பொறிகளுக்குப் புலப்படுகின்ற அனந்தஞானம் உடையவனாகிய மற்கலிதேவன் என்பவனே எம்மால் வழிபடுகின்ற கடவுளாவான்; நூல் பொருள்கள் ஐந்து-எமது நூலாகிய நவகதிர் என்பதன்கண் கூறப்பட்ட பொருள்கள் ஐந்தேயாம், அவைதாம்; உரம் தரும் உயிரோடு ஒரு நால்வகை அணு-அறிவைத் தருகின்ற உயிரணுவோடு நான்கு வகை அணுக்களுமாம்; அவ்வணு உற்றும் கண்டும் உணர்ந்திட-அவ்வுயிரணுவானது தீண்டியும் பார்த்தும் உணர்த்திடும்படி; பெய் வகை கூடி பிரிவதும் செய்யும் நிலம், நீர், தீ, காற்று என நால்வகையின-ஊழ் கூட்டியவாறு தம்முள் கூடிப்பின் பிரிதலையும் செய்யும் நிலஅணுவும் நீரணுவும் தீயணுவும் காற்று அணுவும் என்று கூறப்படும் நாலுவகை அணுக்களும்; மலை மரம் உடம்பு என திரள்வதும் செய்யும் வெவ்வேறாகி விரிவதும் செய்யும்-அவ்வணுக்கள் மலை எனவும் மரம் எனவும் உடம்புகள் எனவும் கூறுங்கால் கூடி ஒன்றாகத் திரள்வதனையும் செய்யும், பிரியுங்கால் வேறு வேறாகி விரிவதனையும் செய்யும்; அவ்வகை அறிவது உயிரெனப்படும்-இங்ஙனம் ஆவதனை அறிவதுதான் உயிர் என்று சொல்லப்படும் என்றான் என்க.

(விளக்கம்) பொருள்கள்-காட்சிப்பொருள்கள். வரம்பில் அறிவு-அனந்தஞானம். இறைவன் என்றது மற்கலி தேவனை. நூல் என்றது அச்சமய நூலாகிய நவகதிர் என்பதனை. அந்நூல் ஒன்பது அதிகாரங்களை உடைத்தாகலின் அப்பெயர் பெற்றது. பொருள்கள் என்றது தத்துவங்களை. இவர் உயிரையும் அணுவென்றே கொள்வர். ஏனை அணுக்களோடு கூடுங்கால் ஏனைய அணுக்களுக்கும் அறிவூட்டும் அணு உயிரணுவே என்பான் உரந்தரும் உயிரோடு என அதனைப் பிரித்தோதினான். அவ்வணு என்றது உயிரணுவை. உயிரணு கூடுவதும் பிரிவதும் ஊழின் செயல் என்பான் பெய்வகைக் கூடிப்பிரிவதும் செய்யும் என்றான். உயிரணு மலை முதலியனவாக ஏனைய அணுக்களோடு கூடித் திரள்வதும் விரிவதும் செய்யும் என்றான். அறிவது உயிர் எனப்படுமே என்றதனால் ஏனை அணுக்கள் அறிவில்லா அணுக்கள் என்றானும் ஆயிற்று. இதுகாறும் உயிரோடு கூடிய ஏனைய அணுக்களையும் அவற்றுள் உயிரணுவின் இயல்பினையும் உணர்த்தியபடியாம். மேலே ஏனை நால்வகை அணுக்களின் இயல்பு கூறுகின்றான்.

நில அணுக்கள் முதலியவற்றின் இயல்பு

120-124 : வற்பம்.........கடன்

(இதன் பொருள்) நிலம் வற்பமாகி உறும்-நிலஅணு வன்மை உடையதாய்ச் செறியும்; நீர் தாழ்ந்து சொல்படு சீதத்தொடு சுவை உடைத்தாய் இழின் என நிலம் சேர்ந்து ஆழ்வது-நீரணு வீழ்ச்சியுற்றுச் சொல்லப்படுகின்ற தன்மையோடு சுவையும் உடையதாய் இழின் என்னும் ஒலியோடு நிலத்தைச் சேர்ந்து அதன்கண் அழுந்திப் போவதாம்; தீ தெறுதலும் மேல் சேர் இயல்பும் உடைத்து-இனித் தீ அணு சுடுதலும் மேனோக்கிச் செல்லுதலும் ஆகிய இயல்புகளை உடையதாம்; காற்று விலங்கி அசைத்தல் கடன்-காற்றிற்குக் குறுக்காக இயங்கிப் பிற பொருள்களை அசைப்பது இயல்பாம் என்றான் என்க.

(விளக்கம்) இவ்வணுக்களின் இயல்பை,
நிலநீ ரெரிகாற் றுயிரி னியல்பும்
பலநீ ரவற்றின் படுபா லவைதாம்
புலமா கொலியொன் றெழிய முதற்காஞ்
சலமா யதுதண் மையையே முதலாம்  (நீல.ஆசீவ-675)

எனவும்,

எறித்தன் முதலா யினதீ யினவாம்
செறித்த லிரையோ டிவைகாற் றினவா
மறித்தல் லறிதல் லவைதா முயிராம்
குறித்த பொருளின் குணமா லிவையே   (நீல.ஆசிவ-676)

எனவும் வரும் செய்யுளானும் இவற்றிற்கு யாம் எழுதிய உரைகளானும் விளக்கங்காண்க. வற்பம்-வன்மை. உறும்-செறியும். இழின்என என்பது ஒலிக்குறிப்பு. மேற்சேரியல்பு-மேலெழும் இயல்பு. அசைத்தல் என்றமையால் பிறபொருளை அசைத்தல் என்க. கடன்-ஈண்டு இயல்பு என்னும் பொருட்டு.

இதுவுமது

124-134 : இவை...........ஆகும்

(இதன் பொருள்) ஆதிஇல்லா பரம அணுக்கள் இவை-அனாதியாக உள்ள மிகவும் நுணுகிய இவ்வணுக்கள் கூடிப்பிரியும் செயல்களால் மரம் மலை உடம்பு முதலியனவாய்; வேறு இயல்பு எய்தும் விபரீதத்தால்-வேறு வேறாகும் தன்மையால் உண்டாகும் மாற்றங்காரணமாக; யாவதும் தீது உற்று சிதைவது செய்யா புதிதாய்ப் பிறந்து ஒன்று ஒன்றில் புகுதா-தம்மியல்பில் சிறிதும் கெடுதலும் சிதைதலும் இல்லை அன்றியும், இக்கூட்டரவினால் புதிதாகத் தோன்றுதலும் ஓரணு மற்றோர் அணுவினுள் புகுவதும் இல்லை; முதுநீர் அணுநில அணுவாய் திரியா ஒன்று இரண்டாகி பிளப்பதும் செய்யா அன்றியும் அவல் போல் பரப்பதும் செய்யா-அனாதியாகிய இவ்வணுக்களுள் நீரணு நிலவணுவாகத் திரியவும் மாட்டா ஓரணு இரண்டாகப் பிளந்து போதலும் இல்லை, அல்லாமலும் இவை தமக்கியல்பான வட்ட வடிவத்தினின்று (நெருக்குண்ணுதல் காரணமாக) அவல் போன்ற தகட்டு வடிவமாய் விரியவும் மாட்டா; பலவும் உலாவும் தாமும் உயர்வதும் செய்யும் குலாம் மலை பிறவா கூடும்-இவ்வணுக்கள் பலவும் இயங்குதலும் தாழ்தலும் உயர்தலும் ஆகிய இச்செயல்களைச் செய்யும், மேலும் தம்முள் கூடும் மலையும் பிறவுமாகிய பொருள்களாகவும் கூடும்; பின்னையும் பிரிந்து தம் தன்மையவாகும்-மறுபடியும் பிரிந்துழித் தமக்கியல்பான நுண்ணணுக்களாகி விடும் என்றான் என்க.

(விளக்கம்) காற்றணுக்கள் உலாவும் நீரணு தாமும் ஆழும் தீயணு உயரும் நிலஅணு குலாம் என்று கொள்க. மலை முதலிய உலகப்பொருள்களாகக் கூடும் என்பது கருத்து. தந்தன்மை-தமக்கியல்பான நுண்ணணுவாம் தம்மை என்க. இனி இதனை,

அணுமே யினவைந் தவைதா மனைத்துங்
குணமே யிலவாங் குழுவும் பிரியு
முணன்மே யினுமுள் புகுதல் லுரையேங்
கணமே யெனினும் மொருகா லமிலை        (நீல.ஆசீவ-677)

எனவரும் செய்யுளானும் உணர்க.

இதுவுமது

134-145: மன்னிய..............மாட்டா

(இதன் பொருள்) மன்னிய வயிரமாய் செறிந்து வற்பமும் ஆம்-இவ்வணுக்கள் நிலைபெற்ற காழ்ப்பாய்த் தம்முள் செறிந்து பெரிதும் வன்மை உடைய மரமுமாம்; வேயாய்த் துளைபடும் பொருளா முளைக்கும்-மூங்கில் போன்ற உட்டுளையுடைய புற்களாகவும் முளைக்கும்; தேயாமதிபோல் செழுநில வரைப்பாம்-நிறைத் திங்கள் போன்று வளமான நில உலகமாகவும் திரளும்; நிறைந்த இவ்வணுக்கள் பூதமாய் நிகழின் குறைந்தும் ஒத்தும் கூடாவரிசையின்-இவ்வாறு செறிந்த இவ்வணுக்கூட்டம் தமக்கு வேண்டிய அளவில் குறைந்தாதல் ஒத்தாதல் கூடமாட்டா, அவை கூடுங்கால் தமக்குரிய முறைமையாலே; ஒன்று முக்கால் அரை காலாய் உறும்-ஒன்றும் முக்காலும் அரையும் காலும் ஆகக்கூடும்; துன்றும் மிக்கதனால் பெயர் சொல்லப்படும்-இங்ஙனம் கூடுமிடத்தே அக்கூட்டத்துள் மிகுந்துள்ள அணுக்களாலே பெயர் கூறப்படும்; இக்குணத்து அடைந்தால் அல்லது-ஈண்டுக் கூறப்பட்ட பண்பினால் தம்முள் கூடினாலலலது இவை நிலனாய் சிக்கென்பதுவும் நீராய் இழிவதும் தீயாய் சுடுவதும் காற்றாய் வீசலும் ஆயதொழிலை அடைந்திட மாட்டா-நிலமாகிச் செறிவதும் நீராகி ஒழுகுவதும் நெருப்பாகிச் சுடுவதும் காற்றாகி வீசுவதும் ஆகிய இத்தொழில் செய்யும் ஆற்றலை அடைந்திட மாட்டா என்றான் என்க.

(விளக்கம்) வைரம் என்றது மரத்தின் காழ்ப்பினை. துளை-உள் துளை. வேய் முதலிய பொருளாய் முளைக்கும் என்க. நிலமாகுங்கால் வட்ட வடிவிற்றாய்த் திரளும் என்பான் தேயாமதிபோல் என்று உவமை எடுத்தோதினான். இதனால் நிலம் வட்டவடிவிற்று என்னும் அறிவு பண்டைக்காலத்தும் இருந்தமை புலனாம். இனி, பூதமாய் நிகழ்வதாவது-நிலனாய் நீராய்த் தீயாய்க் காற்றாய் ஒலியாய் நிகழ்வது. இவ்வணுக்கள் பூதங்களாய் ஆகும்போது அவ்வவ்வணுத்திரள் அவ்வப்பூதமாதற்கு வேண்டிய அளவில் கூடும், குறைந்து கூடமாட்டா; பிற அணுக்களின் கூட்டத்தோடு ஒப்பவும் கூடா என்பான் குறைந்தும் ஒத்தும் கூடும் கூடா வரிசையில் கூடும் என்றான். வரிசை-முறைமை. கூடுங்கால், உயிரை ஒழிந்த ஏனைய அணுக்கள் கூடும் இடத்து நிலம் முதலிய நான்கு அணுக்களும் கூடும் ஓரணுவை விட்டு மூன்றணு தம்மில் கூடி நில்லாது, இரண்டணுக்களோடு இரண்டணுவாகக் கூடும். இரண்டும் மூன்றுமாகக் கூடா என்பது கருத்து. இனி ஒன்று முக்கால் அரை காலாய் உறும் என்னும் இதனையே பிறிதோர் ஆற்றால் கூறுவதும் உண்டு. அம்முறைமையாவது நிலத்தில் நாற்றம் உருவம் பரிசம் என்னும் நான்கும் நீரில் சுவை உருவம் ஊறு என்னும் மூன்றும் தீயில் உருவம் ஊறு என்னும் இரண்டும் காற்றில் ஊறு மட்டும் பொருந்தும் என வேறுவாய்பாட்டானும் கூறுப. அஃதாவது நான்கும் மூன்றும் இரண்டும் ஒன்றும் என்றது ஈண்டு ஒன்று முக்கால் அரை காலாய் உறும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை

ஒன்றினை ஒருவி மூன்றங் குற்றிடா திரண்டு விட்டு
நின்றிடா திரண்டு கூடும் நெறி நிலம் நான்கு நீர் மூன்று
இன்றிரண் டழல்கா லொன்றாய் இசைந்திடும் பூமி யிவ்வா
றென்றுநீர் தீகா லாகி ஈண்டுவ தென்றி யம்பும் (சிவ,சித்தி.பரபக்கம்.ஆசிவகன் மதம். 7)

எனவரும் செய்யுளான் உணர்க. மிக்கதனால் பெயர் சொல்லுவதாவது நில அணுமிக்கிருந்தால் நிலம் என்றும் நீரணுயிக்கிருந்தால் நீர் என்றும் இவ்வாறு மிக்கதனால் பெயர் பெறும் என்றவாறு. மேலே சொன்ன முறைப்படி இவ்வணுக்கள் கூடாவிடின் நிலம் முதலியன வன்மையுற்றுத் தாங்குதல் ஒழுகுதல் முதலிய தத்தம் தொழிலைச் செய்யும் திறம் பெறா என்று கொள்க.

இதுவுமது

146-157 : ஓரணு..............இயல்பு

(இதன் பொருள்) ஓர் அணு தெய்வக் கண்ணோர் உணர்குவர்-இவ்வணுக்களில் தனித்ததோர் அணுவைக் கேவலஞானம் என்னும் தெய்வக்கண் உடையோர் மட்டுமே காண்பர்; ஏனோச் அத்தெய்வக்கண் பெறாத மாந்தர் அவ்வணுக்கள்; பூதத்திரட்சியுள் தேரார்-பூதமாகத் திரண்ட வழியும் ஓரணுவைக் கண்டுணரார், இஃது எங்ஙனமெனின்; மாலைப்போதில் ஒரு மயிர் அறியார்-ஒளி மழுங்கிய மாலைப்பொழுதின்கண் தனித்து ஒரு மயிரை அறியமாட்டாதார்க்கு; சாலத்திரள் மயிர் தோற்றுதல் சாலும்-மிகத் திரண்ட மயிர்க்கற்றை காணப்படுதல் போலாம்; கரும்ம் பிறப்பும் கருநீலப் பிறப்பும் பசும்ம் பிறப்பும் செம்ம் பிறப்பும் போன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும் என்று இ துறு பிறப்பினும் மேவி-கரியபிறப்பும் கருநீலப் பிறப்பும் பசிய பிறப்பும் செம் பிறப்பும் பொன் பிறப்பும் வெண் பிறப்பும் என்று கூறப்படும் இந்த ஆறுவகைப் பிறப்புகளினும் பொருந்தி; பண்பு உறு வரிசையின்பால் பட்டுப் பிறந்தோர்-தன்மையால் ஒன்றற்கொன்று மிகுகின்ற ஈண்டுக் கூறிய முறைமையின்படி பிறவியுட்பட்டுப் பிறந்தவர்கள், இறுதியாக; கழிவெண் பிறப்பில் கலந்து வீடு அணைகுவர்-வெண் பிறப்பினுள்ளும் மிக்க வெண் பிறப்பில் பிறந்து இறுதியாக வீட்டுலகத்தில் புகுவர்; அழியல் வேண்டார் அது உறற்பாலார்-துன்பம் உற்று நெஞ்சழிதலை விரும்பாத மக்களே அவ்வீட்டுலகத்தை எய்துதற்குரியராவார். இது செம்போக்கின் இயல்பு-இங்ஙனம் கூறும் இது பிறப்புற்றுப் படிப்படியாக உயர்ந்து போகும் நெரிய போக்கின் தன்மையாம் என்றான் என்க.

(விளக்கம்) இதனோடு,

வெண்மைநன் பொன்மை செம்மை நீல்கழி வெண்மை பச்சை
உண்மையிவ் வாறின் உள்ளும் கழிவெண்மை ஓங்கு வீட்டின்
வண்மைய தாகச் சேரும் மற்றவை உருவம் பற்றி
உண்மையவ் வொட்டுத் தீட்டுக் கலப்பினில் உணரும் என்றான்  (சிவ.சித்தி.பரபக்கம், ஆசீவகன்மதம், அ)

எனவரும் செய்யுளையும்,

மணிபுயிர் பொன்னுயிர் மாண்ட வெள்ளியின்
அணியுயிர் செம்புயி ரிரும்பு போலவாம்
பிணியுயி ரிறுதியாப் பேசி னேனினித்
துணிமின் மெனத்தொழு திறைஞ்சி வாழ்த்தினார்  (சீவக-3111)

எனவரும் செய்யுளையும் நினைக. கரும்ம் பிறப்பு முதலிய ஆறு பிறப்புகளும் ஒன்றற்கொன்று உயர்ந்த பிறப்பாம். இங்ஙனமே ஆருகத சமயத்திலும் ஒன்றறிவுயிர் முதலாக உயிர்கள் பிறந்து உயர்வன என்னும் கொள்கையும் உண்டு. கழிவெண் பிறப்பு என்றது மக்கட் பிறப்பினும் மெய்யுணர்வு உடைய மேலாய பிறப்பினை என்க.

இதுவுமது

157-166 : இதுதப்பும்.........விட்டு

(இதன் பொருள்) இதுதப்பும் அது மண்டலம் என்று அறியல் வேண்டும்-இவ்வாறு உயிர்கள் பிறப்புற்றுச் செம்போக்காக உயரும். இம்முறை தவறினால் பின்னரும் கீழ்க் கீழ்ப் பிறப்புகளில் புகுந்து சுழல்வதாம், அங்ஙனம் சுழல்வதனை மண்டலித்தல் என்று அறிந்து கொள்ளுதல் வேண்டும்; பெறுதலும் இழத்தலும் இடையூறு உறுதலும் உறுமிடத்து எய்தலும் துக்க சுகம் உறுதலும் பெரிது அவை நீக்கலும்-உயிர்கள் இவ்வாறு பிறந்துழலுங்கால் அவை செல்வம் முதலியவற்றைப் பெறுதலும் அவற்றை இழத்தலால் வறுமை உறுதலும் இவை வந்துறும் காலத்தே தப்பாமல் வந்துறுதலும் இவற்றால் இன்பதுன்பங்களை நுகர்தலும் மிகவும் அவ்வின்ப துன்பங்கள் நீங்கிப் போகலும்; பிறத்தலும் சாதலும் கருவிற்பட்ட பொழுதே கலக்கும்-பிறத்தலும் இறத்தலும் ஆகிய இவையெல்லாம் நிகழ்தற்குக் காரணமான பழவினைகளும் அவ்வுயிர்கள் தாம் வயிற்றில் கருவாகும் பொழுதே அவ்வுயிரோடு கலந்துவிடும்; இன்பமும் துன்பமும் இவையும் அணு எனத்தகும்-பிறந்தபின் நுகரும் இன்பங்களும் துன்பங்களும் ஆகிய இவை தாமும் அணுக்கள் என்றே கொள்ளத்தகும்; முன் உள ஊழே பின்னும் உறுவிப்பது-உயிர்கள் முற்பிறப்பிலே செய்தமையால் உளதாகிய பழவினையே பின்னர்ப் பிறக்கும் பிறப்பின்கண் ஊட்டுவதாம்; மற்கலி நூலின் வகை என்ன-எங்கள் இறைவனாகிய மற்கலி தேவனுடைய நூலாகிய நவகதிரில் கூறப்பட்ட பொருளின் வகை இதுவேயாம் என்று அறிவுறுத்த; தடுமாற்ற சொல் தொடர்ச்சியைவிட்டு-முன்னுக்குப்பின் முரணுகின்ற அந்த ஆசீவக வாதியோடு சொல்லாடுகின்ற தொடர்பினைக் கைவிட்டு அப்பால் என்க.

(விளக்கம்) பெறுதல்-உணவு உடை உறையுள் முதலிய பேறுகள். இடையூறு-நல்குரவு பிணி முதலியன. உறும் இடம்-அவை வந்தெய்தும் செவ்வி. அவை என்றது பேறுமுதலாகச் சுகம் ஈறாக உள்ளவற்றை. உயிர் கருவில்பட்டபொழுது கலக்கும் என்க. இன்பதுன்பம் பொறி புலன் முதலியவற்றால் ஆதலின் அவையும் அணுவாகும் என்றவாறு. தடுமாற்றச்சொல் தொடர்ச்சி என மாறுக. இதனை,

பேறிழ விடையூ றின்பம் பிரிவிலா திருக்கை மற்றும்
வேறொரு நாட்டிற் சேறல் விளைந்திடு மூப்புச் சாதல்
கூறிய எட்டும் முன்னே கருவினுட் கொண்டதாகும்
தேறிய ஊழிற் பட்டுச் செல்வதிவ் வுலகம் என்றான்

எனவும்,

புண்ணிய பாவம் என்னும் இரண்டணுப் பொருந்த வைத்தே
எண்ணிய இவற்றி னோடும் ஏழென எங்களோடு
நண்ணிய ஒருவன் கூறும் ஞானமிவ் வாற தென்று
கண்ணிய கருத்தி னோர்கள் கதியினைக் காண்பா யென்றான்

எனவும் வரும் செய்யுமோடு ஒப்பு நோக்குக. (சிவ-சித்தி-பர-ஆசீவ-1-10).

நிகண்டவாதி

167-176 : நிகண்ட....................திறத்த

(இதன் பொருள்) நிகண்டவாதியை நின்னால் புகழும் தலைவன் யாக நூல் பொருள் யாவை நீ உரை-அப்பால் மாதவன் வடிவில் நின்ற அம்மணிமேகலை நிகண்டவாதியை எய்தி ஐய! நின்னால் வணங்கி வாழ்த்தப்படுகின்ற கடவுள் யார்? உனது நூலும் அவை கூறும் பொருள்களும் யாவை? அவற்றை எனக்குக் கூறுதி, மேலும்; அப்பொருள் நிகழ்வும் கட்டும் வீடும் மெய்ப்பட விளம்பு என-அப்பொருள் நிகழ்ச்சிகளையும் கட்டு வீடு என்னும் இவற்றின் இயல்புகளையும் வாய்மையாக விளக்கிக் கூறுவாயாக என்று வேண்டா நிற்ப; விளம்பல் உறுவோன்-அது கேட்ட அந்நிகண்டவாதி அவ்வேண்டுகோட்கிணங்கி அவற்றை விளக்கிக் கூறத் தொடங்குபவன்; இந்திரர் தொழப்படும் இறைவன் எம் இறைவன்-தேவேந்திரனாலும் தொழப்பெறுகின்ற சிறப்பையுடைய அருகனே எங்கள் கடவுளாவான்; தந்த நூல்-அவன் அருளிய நூல் அங்காகமம் முதலிய மூன்றுமாம், அவற்றில் கூறப்பட்ட; பொருள்-பொருள்களாவன; தன்ம அத்திகாயம் கால ஆகாயமும் தீது இல் சீவனும் பரம அணுக்களும்-தன்மாத்தி காயமும் அதன்மாத்தி காயமும் காலமும் ஆகாயமும் அழிவற்ற உயிரும் நுண்ணணுக்களும்; நல்வினையும் தீவினையும்-நல்வினைகளும் தீவினைகளும்; அவ்வினையால் செய்உறு பந்தமும் வீடும் இத்திறத்த-அந்த இருவகை வினைகளாலும் செய்து கொள்ளுகின்ற கட்டும் வினையை ஒழித்தலால் உண்டாகின்ற வீடும் என்னும் இப்பத்து வகையினவாம் என்றான் என்க.

(விளக்கம்) நிகண்டவாதி-சமண சமயத்துள் இரண்டுவகை உண்டு. முற்கூறப்பட்ட ஆசீவகர் ஒருவகை. நிகண்டவாதிகள் ஒருவகை. திகம்பரத்துவத்தால் இருவரும் ஒத்து, அனேகாந்தவாதத்தில் மாறுபடுதலால் இவர் இருவகையினர் ஆயினர் என்க. இந்திரர் பவணேந்திரர் முதலியோர். இவர் பவணேந்திரர் நாற்பத்திருவரும் வியந்தரேந்திரர் முப்பத்திருவரும் கற்பேந்திரர் இருபத்திருவரும் திங்கள் ஞாயிறும் நரேந்திரனும் மிருகேந்திரனும் ஆகிய நூற்றுவரும் ஆவர். நூல் அங்காகமம் பூர்வாகமம் பகுசுருதி ஆகமம் என்னும் மூன்றுமாம். காலால காயம்-காலமும் ஆகாயமும் என்க. உயிர் நித்தியம் என்பான் தீதில் சீவனும் என்றான். தீதில் பரம அணுக்களும் என இரண்டற்கும் இயைப்பினும் ஆம். பந்தம்-கட்டு. நல்வினையும் தீவினையும் ஆகிய இருவினையும் பந்தத்திற்குக் காரணமாகலின் நல்வினையும் தீவினையும் ஆகிய அவ்வினைகளால் செய்யுறு பந்தமும் என்றான். பந்தம் அறுதலே வீடாகலின் வீடு என்று வாளா கூறினான். இவற்றை,

ஆண்டவ னோது நூல்களிற் பதார்த்த மையிரண் டுளவவை யனாதி
காண்டகு காலஞ் சீவன்றன் மாத்தி காயமோ டதன்மாத்தி காயம்
வேண்டுவ தான புண்ணியம் பாவம் விசும்புபுற் கலம்பந்தம் வீடென்
றீண்டுத லுறுமா லின்னவை படைப்ப தின்றியே யியலுமற் றன்றே

எனவரும் (மெய்ஞ்ஞான விளக்கம் 7) செய்யுளானும் உணர்க.

இதுவுமது

177-182 : ஆன்ற...............உரித்தாம்

(இதன் பொருள்) ஆன்ற பொருள் தன் தன்மையதாயும் தோன்று சார்வு ஒன்றின் தன்மையதாயும்-இங்ஙனம் அமைந்த பொருள் தனக்கியல்பாகிய பண்புடையதாயும், தனக்குச் சார்பாகத் தோன்றிய பொருள் ஒன்றனது பண்பை உடையதாயும்; அநித்தமும் நித்தமும் ஆகி நின்று நுனித்த குணத்து-நிலையாமையும் நிலையுதலும் உடையதாகி நின்று இத்தகையதாக ஆராய்ந்தறியப்பட்ட பண்பு காரணமாக; ஓர் கணத்தின் கண்ணே தோற்றமும் நிலையும் கேடு என்னும்-ஒரு கணப்பொழுதிலே காணப்படுதலும் நிலைபெறுதலும் அழிதலும் என்று கூறப்படுகின்ற; மாற்று அரும் மூன்றும் ஆக்கலும் உரித்தாம்-தவிர்க்கவியலாத இந்த மூன்று பண்புகளையும் உண்டாக்குதற்கும் உரிமை உடையதாம் என்க.

(விளக்கம்) இதனை, பொருளோடு நிலையுதலுடைய குணமும்; நிலையாமையுடைய குணமும் பொருளும், காட்டல் வேண்டுமெனின்; கடல் என்னும் பொருளில் நீரின் குணமாகிய குளிர் முதலியன அதன் நிலைக்குணங்களாம். கடலின் முழக்க முதலியன நிலையாக் குணங்கள், இவ்விரு வேறு குணங்களையுடைய கடல் பொருளாம். அன்றியும், பொன் என்னும் பொருளில் நிறமும் திண்மையும் கவர்ச்சியும் முதலாயின நிலைக்குணமாம். வள்ளம் முடி வளை முதலியன நிலையாக் குணங்களாம்; இங்ஙனம் இருவேறு குணங்களையும் உடைய பொன், பொருளாம். இவற்றுள் நிலைக்குணங்களின் நிலையுதற்றன்மையையும் நிலையாக் குணங்களின் நிலையாமையையும் உணர்க. இங்ஙனமாதலின் பொருள் நிலைத்தலும் நிலையாமையும் உடைத்தாம் என்றவாறு. (நீலகேசி: 114)

இனி ஓர் கணத்தில் ஒரு பொருள் தோற்றமும் நிலையும் கேடும் ஆகிய மூன்றனையும் எய்தும் என்பதனை-

உருவப் பிழம்பப் பொருளென்
றுரைப்பனிப் பாறயிர்மோர்
பருவத்தி னாம்பரி யாயப்
பெயரென்பன் பாலழிந்து
தருவித் துரைத்த தயிருரு
வாய்மும்மைத் தன்மையதாந்
திருவத்த தென்பொரு ளாதலைத்
தேர தெளியிதென்றாள்  (நீல-327)

எனவரும் செய்யுளானும் அதற்கு உருவப் பிழம்பாகிய புற்கலத்தைப் பொருள் என்பேன், பால் தயிர் முதலாயின அதனது பரியாயம் என்பேன், பாற்பரியாயத்து நின்ற புற்கலப் பொருள் தயிர்ப் பரியாயமடைந்து பரிணமித்தலின் தோற்றம் நிலையுறுதி என்னும் மூன்றையும் உடையதாய் நின்னாற் குற்றங்கூறப்படாத பெருமைத்தாம் என் பொருள் இதனைத் தெளி, என்றாள் என்க. எனவரும் எமதுரையானும் உணர்க.

இதுவுமது

183-194 : நிம்பம்..................புரிவிற்றாகும்

(இதன் பொருள்) நிம்பம் முளைத்து நிகழ்தல் நித்தியம்-வேம்பின் வித்து வேம்பாகவே முறைத்து வளர்வது அதன் நிலையுதல் பண்பாம்; நிம்பத்து அப்பொருள் அன்மை அநித்தியம்-முளையின்கண் விதை காணா தழிதல் நிலையாமையாம்; பயற்றுத்தன்மை கெடாது கும்மாயம் இயற்றி அப்பயறு அழிதலும் காண்க-இனி, பயறு தன்மை கெடாமலே கும்மாயத்தை உண்டாக்கித் தனது உருவம் கெட்டொழிதலும் காண்க; ஏதுத்தருமாத்திகாயம்-இந்நிகழ்ச்சிக்குக் காரணமான தருமாத்திகாயம் என்பது; தான் எங்கும் உளதாய் பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியம் ஆம்-அவ்வாறு நடத்துதற்கு ஏற்ப அதுவும் நித்தியப்பொருளாம்; அதன்மாத்திகாயமும் அப்படித்தாகி-அதன்மாத்திகாயம் என்னும் பொருளும் அப்படியே நித்தியப் பொருளாய்; எப்பொருள்களையும் நிறுத்தல் இயற்றும்-எல்லாப் பொருள்களையும் நிலைநிறுத்துதலைச் செய்யும்; காலம் கணிகம் எனும் குறு நிகழ்ச்சியும் மேலும் கற்பத்தின் நெடு நிகழ்ச்சியும் ஆக்கும்-இனி, காலம் என்பது கணம் என்னும் குறிய நிகழ்ச்சியையும் அப்பாலும் அக்கணத்தைக் கொண்டு கற்பம் என்று சொல்லுகின்ற நீண்டதொரு நிகழ்ச்சியையும் உண்டாக்குவதாம்; ஆகாயம் எல்லாப் பொருட்கும் பூக்கும் இடங்கொடுக்கும்-ஆகாயம் என்பது எல்லாப் பொருள்களும் மலர்தற்கு இடங்கொடுக்கின்ற பண்புடையதாகும் என்றான் என்க.

(விளக்கம்) இனி, நிம்பம்-வேம்பு. நிம்பம்........அழிதலும் என்னும் இப்பகுதியை,

உருவப் பிழம்பப் பொருளென்
றுரைப்பனிப் பாறயிர்மோர்
பருவத்தி னாம்பரியாயப்
பெயரென்பன் பாலழிந்து
தருவித் துரைத்த தயிருரு
வாய்மும்மைத் தன்மையதாந்
திருவத்த தென்பொரு ளாதலைத்
தேர தெளியிதென்றாள்       (நீல-327)

எனவரும் செய்யுளானும்,

பெற்றது தானுங்கும் மாயத்
திரிபு பயற்றியல்பே
யிற்ற திதுவென திட்டமென்
பாயிவ் விருமையினுந்
தெற்றெனத் தீர்ந்தோர் பொருளென்னை
தேற்றனித் தேற்றலையேன்
மற்றது வாமை மயிரெனச்
சொல்லுவன் மன்னுமென்றான்   (நீல-322)

எனவும் வரும் செய்யுளானும் உணர்க. இனி, பொருள் நிகழ்ச்சிக்கு ஏதுவெனக் கூறிய தருமாத்திகாயம் அதன்மாத்திகாயங்களின் இயல்புகளை,

அத்தியாய மூர்த்தியா யளவி றேசியாய்
ஒத்தள வுலகினோ டுலக லோகமாம்
தத்துவந் தனைச் செய்து தம்மத் தம்மமா
மத்திகள் செலவோடு நிலையிற் கேதுவாம்

எனவும்,

அச்சுநீர் தேரொடு மீனை யீர்த்திடா
அச்சுநீ ரன்றியத் தேரு மீன்செலா
அச்சுநீர் போலத்தம் மத்தி சேறலை
இச்சையு முயற்சியு மின்றி யாக்குமே

எனவும், அந்தரத் தறுபத்து மூன்ற தாகிய
இந்திர படலமு நிரைய மேழ்களு
மந்திர மலைமண்ணு மற்று நின்றிடா
அந்தமி னிலையதம் மத்தி யில்லையேல்

எனவும்,

பறவையின் சிறகொடு பாத நின்றுழி
நெறியினாற் செலவொடு நிலையை யாக்குமால்
உறவிபுற் கலமிவை யோட நிற்றலைச்
செறிவுறத் தம்மத்தம் மத்தி செய்யுமே

எனவும் வரும் (மேரு மந்தர. வைசய 88, 10, 11, 12) செய்யுள்களானும் உணர்க. கணம் எனினும் கணிகம் எனினும் ஒக்கும். கற்பம்-ஊழி. ஈண்டுக்கூறிய காலத்தின் சிற்றளவினையும், பேரளவினையும் கால நீ வேண்டாயாய் கணிகமும் கற்பமும் சாலமும் புனைந்துரைத்தி என வரும் (நீல-297) செய்யுட்கு வரும் விளக்க உரையின்கண்-

இனி, கணம் என்பது ஏழு செங்கழு நீரிதழை யொரு குறட்டிலடுக்கி வலியுடையோனொருவன் மிகவுங் கூரியதோர் உளி வைத்துக் கூடமிட்டுப் புடைத்தால் ஆறாம் புரையற்று ஏழாம் புரையிற் செல்லும் கால வளவாம்; கற்பமாவது ஒரு யோசனை யகன்றுயர்ந்ததொரு வைரமலை. கருவுடையாள் பட்டாடை தேய்க்கப்பட்டுக் கையறத் தேயும் கால வளவாம் என்பது பவுத்தர் கொள்கை என்பதனானும் உணர்க. பூக்கும் இடம்-விரியும் இடம். புரிவு-தன்மை, செயல் எனினுமாம். உளவென்ற பொருட்கெலாம் இடங்கொடுத்துடன் தளர்வின்றி நிற்பது ஆகாயம் என்பது மேருமந்தர புராணம். ( செய்.63)

இதுவுமது

195-201: சீவன்.............அவன்

(இதன் பொருள்) சீவன் உடம்போடு ஒத்துக்கூடி தா இல் சுவை முதலிய புலன்களை நுகரும்-உயிரானது பழவினையால் தனக்கெய்திய உடம்போடு இரண்டறக் கலந்து கெடாத சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் புலகன்களை நுகரும்; ஓர் அணு புற்கலம் புறஉரு ஆகும்-உயிரல்லாத ஓர் அணு புற்கலம் ஆம் இவ்வணுவே உயிர்க்கு உடம்பாகவும் ஐம்பெரும் பூதங்களாகவும் திரண்டுள்ள புறப்பொருள்களாகும்; சீர்சால் நல்வினை தீவினை அவை செய்யும் வருவழி. இரண்டையும் மாற்றி-உயிர்க்குச் சிறப்புப் பொருந்துகின்ற நல்வினையையும் துன்பம் தருகின்ற அவை செய்வதற்கும் வருவதற்கும் வாயில்களாகிய ஊற்று செறிப்பு இரண்டனையும் அடைத்து மாற்றி; முன் செய் அருவினைப் பயன் அனுபவித்து அறுத்திடுதல்-முன்னே செய்யப்பட்ட விலக்குதற்கரிய பழவினைகளை நுகர்ந்து அவற்றலாய கட்டை அவிழ்த்து விடுதல்; அது வீடு ஆகும் என்றனன் அவன்-அங்ஙனம் கட்டற்ற அந்நிலையே உயிர்க்கு வீடாகும் என்று கூறினன் நிகண்டவாதி என்க.

(விளக்கம்)

ஓர் அணுவே புற்கலமாம் அவ்வணுவின் திரட்சியே உயிருக்கு உடம்பும் நுகரும் பொருள்களும் ஆகிய புறஉருவங்களாம் என்றவாறு. எனவே அணுக்களின் திரட்சியே சுவை முதலிய புலன்களும் அவற்றின் நிலைக்களனாகிய ஐம்பெரும் பூதங்களும் ஆகிய உயிரில் பொருள்கள் என்றனாம். சீர்சால் நல்வினை எனவே பழிசால் தீவினை எனக் கொள்ளவைத்தான். செய்யும் வழி வரும்வழி என இரண்டையும் என்க. செய்யும் வழி அவா வரும் வழி-அஃது ஊற்று எனப்படும். மாற்றுதல்-அது செறிப்பு எனப்படும் பழவினையை நுகர்ந்து அறுத்திடுதல் உதிர்ப்பு எனப்படும். வீடு காதி அகாதி என்னும் வினைகளினின்றும் நீங்கி விடுதலை பெறுதல். அது-அங்ஙனம் அறுத்திட்டநிலை. அவன்-அந்நிகண்டவாதி. இதனை,

பெரும்பாவ மறத்துய்த்துப் பெறுதும்யாம் வீடென்னோ
மரும்பாவ காரிநீ யாவர்வா யதுகேட்டாய்
வரும்பாவ மெதிர்காத்து மன்னுந்தம் பழவினையு
மொருங்காக வுதிர்த்தக்கா லுயிர்த்தூய்மை வீடென்றாள் (நீல-313)

எனவரும் செய்யுளோடு ஒப்புக்காண்க.

சாங்கியவாதி

201-211 : பின்............வெளிப்பட்டு

(இதன் பொருள்) பின்-அப்பால் மணிமேகலை அந்நிகண்டவாதியை விட்டுச் சாங்கிய சமயத் தலைவனை எதிர்ப்பட்டு வினவிய வழி அவன்; இது சாங்கிய மதம் என்று எடுத்து உரைப்போன்-யான் கூறப்போவது எம்முடைய சாங்கிய மதத்திற்கியன்ற நன்பொருள் என்று சொல்லி அவற்றை எடுத்துச் சொல்லுபவன்; தனை அறிவரிதாய் தான் முக்குணமாய் மனநிகழ்வு இன்றி-தான் அருவமாதலின் மனத்தால் பற்றப்படாததாய்; மாண்பு அமை பொதுவாய் எல்லாப் பொருளும் தோன்றுதற்கு இடமெனச் சொல்லுதல் மூலப்பகுதி சித்தத்து-எப்பொருளுக்கும் தானே காரணம் சிறப்பமைந்த பொதுப் பொருளாய்க் கருத்துப் பொருளும் காட்சிப்பொருளும் ஆகிய எல்லாப் பொருள்களும் பிறத்தற்கிடன் என்று எம்முடைய நூலாற் சொல்லப்பட்டது மூலப்பகுதி என்னும் சித்தமாம்; (சித்தத்து) மான் என்று உரைத்த புத்தி வெளிப்பட்டு-மான் என்று கூறப்பட்ட புத்தி தத்துவம் வெளிப்பட; அதன்கண் அங்கி ஆனது வெளிப்பட்டு-அவ்வான வெளியினூடே காற்றுத்தோன்றா நிற்ப அக்காற்றினின்றும் தீயானது வெளிப்பட; அதன்கண் அப்பின் தன்மை வெளிப்பட்டு-அத்தீயினின்றும் நீரின் தன்மை வெளிப்பட; அதின் மண் வெளிப்பட்டு-அந்நீரினின்றும் மண்ணின் தன்மை வெளிப்பட இவ்வாறு ஐம்பெரும்பூதங்களும் வெளிப்பட்டனவாக என்க.

(விளக்கம்) தனை என்றது மூலப்பகுதியை. முக்குணம்-சாத்துவீகம், இராசதம், தாமதம் என்பன. இனை மனத்திற்கும் முதலாதலின் அதனாற் பற்றப்படா தென்பான் மன நிகழ்வின்றி என்றான். மாண்பு-தான் ஒன்றின் காரியம் ஆகாமல் தானே எல்லாப் பொருளுக்கும் முதலாம் சிறப்பு. முக்குணங்களின் பிழம்பே மூலப்பகுதியாதலின் பொதுவாய் என்றான். மூலப்பகுதி ஆகிய சித்தத்து என்க. எனவே சித்தம் என்பதும் அதற்குப் பெயர் என்பது பெற்றாம். சொல்லுதல்-சொல்லப்படுவது. மான்-மகத்தத்துவம். அதனை மகான் எனவும் கூறுப. புத்தி என்பதும் அதற்கொரு பெயர் என்பான் மானென்றுரைத்த புத்தி என்றான். வெளிப்பட்டு எனவரும் செய்தெ னெச்சங்களைச் செயவென் னெச்சங்களாகத் திரித்துக் கொள்க. அங்கி-தீ. அப்பின் தன்மை என்றது அப்பு என்னும் பெயராந் துணையாக நின்றது. அப்பு-நீர்.

இதுவுமது

212-221: அவற்றின்.............வெளிப்பட்டு

(இதன் பொருள்)  அவற்றின் கூட்டத்தின் மனம் வெளிப்பட்டு ஆர்ப்புறு மனத்து ஆங்கார விகாரமும்-அவ்வைம்பூதக் கூட்டரவின்கண் மனம் என்னும் தத்துவம் தோன்றா நிற்பப் புலன்களோடு கட்டுண்ணும் மனத்தினின்றும் அகங்கார வேற்றுமைகளும்; ஆகாயத்தின் செவி ஒலி விகாரமும்-ஆகாயத்தின் பண்பாகிய செவிக்குப் புலப்படும் ஒலி வேற்றுமைகளும்; வாயுவின் தொக்கும் ஊறு எனும் விகாரமும்-காற்றினின்றும் மெய்யென்னும் பொறியும் அதற்குப் புலனாகும் ஊற்றுப் புலவேற்றுமைகளும்; அங்கியில் கண்ணும் ஒளியுமாம் விகாரமும்-நெருப்பினின்றும் கட்பொறியும் அதற்குப் புலனாம் ஒளி வேற்றுமையும்; தங்கிய அப்பில் வாய்சுவை எனும் விகாரமும்-நிலத்தின்கண் தங்கியுள்ள நீரினின்றும் வாய் என்னும் பொறியும் அதற்குப் புலனாம் சுவை என்னும் புலவேற்றுமையும்; நிலக்கண் மூக்கு நாற்ற விகாரமும்-மண்ணினின்றும் மூக்கு என்னும் பொறியும் அதற்குப் புலனாம் நாற்றப்புல வேற்றுமையும் பிறக்கும் என; சொலப்பட்டு அவற்றில் தொக்கு விகாரமாய்-எமது நூலின்கண் சொல்லப்பட்டுப் பின்னரும் ஈண்டுச் சொல்லப்பட்ட பொறிகளுள் வைத்து மெய்யின் வேறுபாடாய்; வாக்கு பாணி பரத பாயுரு உபத்தம் என ஆக்கிய இவை வெளிப்பட்டு-சொல்கைகால் எருவாய் கருவாய் என்ற தொழிற்கருவிகள் ஆக வியற்றப்பெற்ற இவ்வைந்தும் தோன்றும் என்றான் என்க.

(விளக்கம்) அவற்றின் கூட்டம் என்றது ஐம்பெரும் பூதக்கூட்டம் என்றவாறு ஆங்கார விகாரம் நான் என்னும் செருக்கின் வேற்றுமை. அவையாவன: நான் அந்தணன்  அரசன் எனவும் செல்வன் வறியவன் என்பனவும் போன்ற வேற்றுமைகள் உண்மையால் ஆங்காரம் என்றொழியாது விகாரமும் என்றான். பின்னர் ஒலி முதலியவற்றோடு வருகின்ற விகாரங்களுக்கும் அவ்வவற்றிற்குப் பொருந்திய விகாரம் உண்மையை நுண்ணிதின் ஆராய்ந்து கொள்க. ஆகாய முதலியவற்றில் செவி முதலிய பொறிகளும் அவற்றிற்குப் புலனாம் ஒலி முதலிய புலன்களும் தோன்றும் எனப்பூதங்கள் தோறும் தோன்றும் பொறி புலன்களின் விகாரமும் நுண்ணிதின் ஆராய்ந்து கண்டு கொள்க. இப்புலன்களால் கட்டுப்படுதல் மனத்திற்கியல்பாகலின் ஆர்ப்புறு மனம் என்றான். இஃதுணராது ஆரவாரம் பொருந்திய மனம் எனவும் ஆகாயத்தில் செவியும் ஒலியும் என்று கூறாமல் செவிக்குப் புலனாகும் ஒலியாகிய விகாரமும் என இங்ஙனமே ஏனைப் பூதங்களுக்கும் உரை கூறுவாரும் உளர். இனி ஈங்குக் கூறப்படுகின்ற தத்துவத் தோற்றங்களுக்கும் இதற்குக் காலத்தால் பிற்பட்ட நீலகேசியின்கண் இம்முறை சிறிது மாறுபட்டிருத்தலை,

மன்னுயிர் தெற்றென வில்லது மான்செருக்
கென்னவு மிந்திய மைந்தைந் தொருமன
மன்னதன் மாத்திரை யைந்தைந்து பூதமும்
பன்னிய வையைம் பதப்பொரு ளென்றான்   (நீல-734)

நங்காய்! எம்தத்துவங்கள்-உயிரும், பிரகிருதியும், மானும், சேருக்கும், அறிகருவி ஐந்தும், செயற்கருவி ஐந்தும், மனமும், தன் மாத்திரைகள் ஐந்தும், பூதங்கள் ஐந்தும் ஆகிய இந்த இருபத்தைந்துமாம் என்றான் என்றவாறு எனவும் வருதல் காண்க. இனி இவற்றையே பகுதியும், பகுதிவிகுதியும் விகுதியும் என வகுத்தோதுவாரும் உளர். இதனைப் பரிமேலழகர் 27. சுவை ஒளி எனவரும் திருக்குறள் உரை விளக்கத்தின்கண்-

தத்துவ மிருபத்தைந்தனையுந் தெரிதலாவது, மூலப்பகுதி ஒன்றிற்றோன்றிய தன்மையிற் பகுதியே யாவதல்லது விகுதியாகா தெனவும்; அதன்கட்டோன்றிய தன்மாத்திரைகளுமாகிய ஏழும் தத்தமக்கு முதலாயதனை நோக்க விகுதியாதலும் தங்கட் டோன்றுவனவற்றை நோக்கப் பகுதியாதலுமுடைய வெனவும், அவற்றின்கட் டோன்றிய மனமும் ஞானேந்திரியங்களும் கன்மேந்திரியங்களும் பூதங்களுமாகிய பதினாறும் தங்கட்டோன்றுவன வின்மையின் விகுதியே யாவதல்லது பகுதியாகா வெனவும் வரைந்திருத்தலானும் உணர்க. வாக்குப்பாணி முதலியன ஐந்தும் தொழிற்கருவி.

இதுவுமது

221-232: இங்கறைந்த.............புருடன்

(இதன் பொருள்) இங்கு அறைந்த பூதவிகாரத்தான் மலைமரம் முதல் ஓதிய வெளிப்பட்டு உலகாய் நிகழ்ந்து-இங்குக் கூறப்பட்ட பூதங்களின் விகாரத்தால் மலை முதலிய உயிரில் பொருள்களும் ஒன்றறி உயிராகிய மரம் முதலிய உயிர்ப் பொருள்களும் என்று முன்னோரால் கூறப்பட்டனவாகிய பொருள்கள் வெளிப்பட்டு உலகமாக நடைபெற்றுத் தத்தம் கால எல்லையிலே: இவை-இப்பொருள்கள்; வந்த வழியே சென்று அடங்கி-தாம் பிறந்த வழியாகவே ஒன்றனுள் ஒன்று புகுந்து ஒடுங்கி; அந்தம்இல் பிரளயமாய் இறும் அளவும்-முடிவில்லாத ஊழிக்காலமாய் ஒழிந்துபோம் அளவும்; ஒன்றாய்-தான் ஒன்றேயாய்; எங்கும் பரந்து நித்தியமாம்-எவ்விடத்தும் பரவி நித்தியப் பொருளாய் இருக்கும்; புருடன் இனி புருடதத்துவமானது; அறிதற்கு எளிதாய்-அறிந்து கொள்ளுதற்கு எளிதாக; முக்குணம் அன்றி-முக்குணத்திற்கு வேறாய்; பொறி உணர்விக்கும் பொதுவும் அன்றி-பொறியினால் உணரும் உணர்ச்சிக்கு மூலப்பகுதியோடு சிறிதும் பொதுத்தன்மை இல்லாததாய்; எப்பொருளும் தோன்றுதற்கு இடமின்றி-தன்னிடத்தினின்றும் யாதொரு பொருளும் பிறத்தற்குத் தான் நிலைக்களம் ஆகாததாய்; அப்பொருள் எல்லாம் அறிந்திடற்கு உணர்வாய்-மூலப்பகுதியினின்றும் தோன்றும் என்று கூறப்பட்ட அந்தப் பொருள்களை எல்லாம் அறிந்து கொள்ளுதற்கு வேண்டிய அறிவாய்; ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியமாய்-அம்மூலப் பகுதியோடு ஒன்றாய் எவ்விடத்தும் பரவி நிலையுதலுடையதாய், நின்றுள உணர்வாய்-நின்று உளத்தின்கண் உணர்ச்சியாய், நிகழ்தரும்-நிகழ்தலைச் செய்யும் என்றான் என்க.

(விளக்கம்) மலை உயிரில் பொருள்களுக்கும் மரம் உயிர்ப்பொருளுக்கும் ஆக மலைமரம் முதல் ஓதிய என்றான். ஓதிய: பலவறிச்சொல். வந்த வழிமூலப்பகுதியினின்றும் ஒன்றன் ஒன்றாக வந்தவாறே அடங்கும் போதும் மண் அப்பினும் அப்பு அங்கியினும் இவ்வாறே சென்று அடங்கும் என்றவாறு. பிரளயம்-ஊழி அவற்றிற்கும் எல்லையின்மையின் அந்தம் இல் பிரளயம் என்றான் (227) அறிதற் கெளிதாய்...........(232) புருடன் என்னுமளவும் சீவன் இலக்கணம் கூறுகின்றது. சீவன் இலக்கணத்தை,

எத்திறத் தின்னுஞ் செய்யான்குண மொன்றிலன்
றத்துவ னின்பன பேதன லேபக
னித்திய னெங்கு முளனெடுங் காட்சியன்
றுத்த லுடையனென் றோன்றலு மென்றான்  (நீல-736)

எனவரும் செய்யுளானும் உணர்க.

இதுவுமது

233-240 : புலமார்.............கேட்டு

(இதன் பொருள்)  புலம் ஆர் பொருள்கள் இருபத்தைந்து உள-இவ்வாறு எமது நூலில் பொருந்திய பொருள்கள் இருபத்தைந்து உள்ளன. அவைதாம்; நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் மெய்வாய் கண் மூக்குச் செவிதாம்-நிலமும் நீரும் தீயும் வளியும் வெளியும் என்னும் பூதங்கள் ஐந்தும் மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் பொறி ஐந்தும்; உறுசுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்-இவற்றோடு பொருந்திய சுவையும் ஒளியும் ஊறும் ஓசையும் நாற்றமும் ஆகிய புலன் ஐந்தும்; வாக்கு பரணி பாதம் பாயுரு உபத்தம்-வாக்கும் கையும் காலும் எருவாயும் கருவாயும் ஆகிய தொழிற்கருவியைந்தும்; ஆக்கும் மனபுத்தி ஆங்கார சித்தம்-உண்ணின்று செயற்படுத்தும் மனமும் புத்தியும் அகங்காரமும் சித்தமும் ஆகிய அகக் கருவிகள் நான்கும்; உயிர் எனும் ஆன்மா வொன்றொடும் ஆம் என-உயிர் என்று சொல்லப்படுகின்ற ஆன்மாவாகிய ஒன்றனோடும் அவ்விருபத்தைந்து பொருள்களும் ஆகும் என்று; செயிர் அறச்செப்பிய திறமுங் கேட்டு-குற்றமற அச்சாங்கியவாதி விளம்பிய அவனது நூற்பொருளையும் நன்கு கேட்ட பின்னர் என்க.

(விளக்கம்) சாங்கிய தத்துவம் இருபத்தைந்தினையும் பிற்காலத்தே வைதீக சமயத்தார் பலரும் தத்தம் சமயத்திற்கு ஆக்கமாகத் தழுவிக் கொண்டனர். மாயாவாதத்திற்கு இச்சாங்கிய வாதமே அடிப்படை என்று தோன்றுகிறது. சைவ வைணவ சமயங்களும் இச்சாங்கிய தத்துவங்களைத் தமக்கு வேண்டுமளவும் மேற்கொண்டுள்ளன. பின்னும் இத்தத்துவங்களின் விளக்கம் காண விரும்புவோர் மெய்ஞ்ஞான விளக்கம் சாங்கிய மதச்சருக்கம்-41, சாங்கிய காரிகை முதலிய வடநூல்களுள்ளும் கண்டு கொள்க. ஈண்டுரைப்பின் பெருகும்.

வைசேடிகவாதி

241-248 :வைசேடிக............மனம்

(இதன் பொருள்) வைசேடிக நின் வழக்கு உரை என்ன-அப்பால் செல்லும் மாதவன் வடிவங் கொண்டுள்ள மணிமேகலை வைசேடிக வாதியை எய்தி ஐய நின் சமய நூல் வழக்கினைக் கூறுக என்று வினவ அதற்குடன்பட்ட அவ்வைசேடிகனும் கூறுவேன் எனக்கூறுபவன் எமது சமயத்தின் பொருள்; பொய்தீர் பொருளும் குணமும் கருமமும் சாமானியமும் விசேடமும் கூட்டமும் ஆம் ஆறு கூறாம்-எம்முடைய நூற்பொருள் அழியாத பொருளும் குணமும் செயலும் பொதுவும் சிறப்பும் கூட்டமும் என்று வகுத்துக் கூறப்படுகின்ற ஆறுவகையின்கண் அடங்கும்; அதில் பொருள் என்பது குணமும் தொழிலும் உடைத்தாய்-அவற்றுள் பொருள் என்று சொல்லப்படுவது பண்பும் செயலும் உடையதாய்; எத்தொகைப் பொருளுக்கும் ஏதுவாம்-எந்தத் தொகுதிப் பொருள்களுக்கும் காரணமாகும்; அப்பொருள் ஞாலம், நீர், தீ, வளி, ஆகாயம், திசை, காலம், ஆன்மா, மனம் ஒன்பான்-அத்தொகைப் பொருள் நிலமும் நீரும் தீயும் வளியும் வெளியும் திசையும் காலமும் உயிரும் மனமும் என்னும் இவ்வொன்பதுமாம் என்றான் என்க.

(விளக்கம்) வைசேடிகம்-தருக்க மதத்தில் ஒருவகை. பொருள் முதலியவற்றைத் திரவியம், குணம், தொழில், சாதி, விசேடம், சமவாயம் என்பர். பின்னர் இன்மை என்பதனையுங் கூட்டிப்பொருள் ஏழு என்பாரும் உளர். அதில் பொருள் என்பது பிற்கூறப்பட்ட குணத்திற்கும் செயலுக்கும் வேறாய் அவற்றை அவாவிய ஒன்பது வகைப்படும். தொகைப் பொருளுக்கும் ஏதுவாம் என்க. அவ்வொன்பது பொருளாவன நிலம், நீர், தீ, வளி, வெளி, காலம், திசை, உயிர், மனம் என்னும் இவ்வொன்பதுமாம். இதனை, மெய்ஞ்ஞான விளக்கம்-

சார்ந்த திரவியங் குணங்கன்மஞ்
சாமானி யத்தோடு தகுவிசேட
மார்ந்த சமவாய மென்னுமாறு
பதார்த்தங்களோ டபாவ மென்று
சேர்ந்தது வைசேடிக மாமவ்வேழிற்
றிரவியத்தின் றிறமைம் பூத
மோர்ந்திடுங் காலந்தி சையான்மா
மனமென்றித் தகைய வொன்பதாமே  (42-தார்க்கிக-1)

என்னுஞ் செய்யுளானு முணர்க.

248-256: இவற்றுள்...................ஆகும்

(இதன் பொருள்) இவற்றுள் நிலம் ஒலி ஊறு நிறம் சுவை நாற்றமொடு ஐந்தும் பயில் குணம் உடைத்து-இவ்வொன்பதனுள் முன்னின்ற நிலமும் ஒலியும் ஊறும் நிறமும் சுவையும் நாற்றமும் ஆகிய ஐந்தும் எஞ்சாது தன்பால் பயிலுகின்ற குணங்களை உடையது; நின்ற நான்கும்-எஞ்சி நின்ற நீரும் தீயும் வளியும் வெளியும் ஆகிய நான்கும்; அவை-அவ்வைந்து குணங்களுள் நிரலே; சுவை முதல் ஒரோ குணம் குறை உடைய-சுவை முதலிய குணங்களுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம் குறைவாக உடையன; இனி, கண்ணிய பொருளின் குணங்கள்-ஈண்டுக் கூறப்பட்ட பொருள்களின் குணங்கள் தாமும்; ஓசை ஊறு நிறம் நாற்றம் சுவை மாசு இல் பெருமை சிறுமை வன்மை-ஓசையும் ஊறும் நிறமும் நாற்றமும் சுவையும் குற்றமில்லாத பெருமையும் சிறுமையும் வன்மையும்; மென்மை சீர்மை நொய்ம்மை வடிவம் என்னும் நீர்மை பக்கம் முதல் அனேகம்-மென்மையும் சீர்மையும் நொய்ம்மையும் வடிவம் என்னும் தன்மையும் பக்கமும் முதலிய பலவகைப்படுவனவாம் என்றான் என்க.

(விளக்கம்) இவற்றுள் என்றது ஞாலம் முதலிய இவற்றுள் என்றவாறு. ஞாலம்-நிலம். நிலம் ஒலி ஊறு முதலிய ஐந்து குணங்களையும் உடைத்து, நீர் ஒலி முதலிய நான்கு குணங்களையும் தீ ஒலி முதலிய மூன்று குணங்களையும் வளி ஒலி முதலிய இரண்டினையும் வெளி ஒலி ஒன்றனையும் உடையன என்பது கருத்து. இனி ஒலி முதலிய இவையேயன்றிப் பெருமை சிறுமை முதலிய வேறுபல குணங்களும் பொருள்களுக்கு உண்டு என்பது கருத்து.

இக்குணங்களை இருபத்து நான்காக நிரலே எண்ணித் தொகை கூறுவாரும் உளர்.

மன்னுகுண முருச்சுவை கந்தம் பரிசங்கணனை பரிமாணம் பேதம்
பன்னுசை யோகம் விபாகம் பரத்வம பரத்வமா பாரம் பின்னுஞ்
சொன்ன திரவத்வம்ஸ் னேகஞ் சத்தம் புத்தி சுகந்துக்க மிச்சை
முன்னது வேடம் முயற்சியற மதன்மம் வாசனையிம்மூ வெட்டாமால்        (மெய்ஞ்ஞான விளக்கம். தார்க்கி 1-2)

என்பது காண்க.

இதுவுமது

257-262 : பொருளும்............உரைத்தனன்

(இதன் பொருள்) பொருளும் குணமும் சருமம் இயற்றற்குரிய-ஈண்டு விரிவகையால் ஓதப்பட்ட பொருளும் குணமுமாகிய இரண்டும் தொழில் செய்தற்கு உரியன; முதல் பொது உண்மை தரும்-பொது இரண்டனுள் முதன்மையுடைய பொது என்பது பொருள்களின் உண்மைத்தன்மையை உணர்த்தும்; போதலும் நிற்றலும் பொதுக்குணம் ஆதலின் சாதலும் நிகழ்தலும் அப்பொருள் தன்மை- போதலும் வருதலும் எல்லாப்பொருள்களுக்கும் பொதுக்குணம் ஆதலால் சாதலும் நிகழ்தலும் அப்பொருளுக்கெல்லாம் பொதுத்தன்மையேயாம், ஆகவே இப்பொதுத்தன்மை முதன்மையில்லாத பொதுத்தன்மை எனப்படும்; ஒன்று அணு-இனிச் சிறப்பாவது ஒன்றாகிய அணுவேயாம்; கூட்டம் குணியும் குணமும் என்று-இனிக் கூட்டமாவது பொருளுங் குணமும் ஆகத் தம்முள் கூடுவதே என்று; ஒன்றிய வாதியும் உரைத்தனன்-அவ்விசேடவாதியும் கூறினன் என்க.

(விளக்கம்) இனி, கரும நிகழ்ச்சிக்குக் காரணமாவது பொருளும் குணமுமேயாம் என்பான் அவை கருமம் இயற்றற்குரிய என்றான். முதற்பொது-முதன்மையுடைய பொது. அதுபொருள் குணம் என்னும் இவற்றின் உண்மைத் தன்மையைத் தரும் என்க. போதலும் நிற்றலும் பொதுக்குணம் என்புழி பொதுக்குணம் என்றது முதன்மையில்லாப் பொதுக்குணம் என்றவாறு. பொருள்கள் போவதும் வருவதும் இந்தப் பொதுக் குணத்தால் ஆதலின் சாதலும் நிகழ்தலும் போதலும் நிற்றலும் போல்வன ஆதலின் இவையெல்லாம் முதன்மையல்லாத அப்பொதுத்தன்மையாம். ஒன்று-சிறப்பு. சிறப்பாவது அணுவாம் தன்மையே என்றவாறு. கூட்டம் என்றது பொருளும் குணமும், குணமும் குணியுமாக இயைதல் என்றவாற. பொதுவை மகாசாமானியமும் அவாந்தர சாமானியமும் என்றும், பரசாமானியமும் அரசாமானியமும் என்றும் வாளாது முதல் பொது என்றும் பொது வென்றும் ஓதுப. இவற்றினியல்பையெல்லாம் நீலகேசியில்,

பூதமைந் தொடுதிசை மனம் பொழுதுயி
ரோதினப் பொருள்கடா மொன்ப தாமவை
நீதியிற் குணமவற்ற றியல்பு செய்கையும்
போதரும் பொருட்புடை பெயர்ச்சி யாகுமே  (நீல-786)

எனவும்,

பெரியதும் பின்னது மாய தப்பொது
உரிதினிற் பொருள்களைச் செலுத்து மொற்றுமை
தெரிவுற வருவது சிறப்ப தாங்குணக்
கிரியைக ளிதற்கெனக் கிளத்தல் கூட்டமே   (நீல-787)

எனவும் வரும் செய்யுளானும்,

முதன்மையுடையதும் அஃதில்லதும் என இருவகைப்பட்ட அந்தப்பொது என்னுந் தத்துவங்களுள் வைத்து முதற்பொது என்பது பொருள்களின் உண்மைத் தன்மை முதலியவற்றை உணர்தற்குக் காரணமாவதாம். முதன்மையில்லாப் பொது வென்பது பொருட்டன்மை குணத்தன்மை முதலியவற்றை உணர்தற்குக் காரணமாவதாம். இவ்விரு வகைப்பட்ட பொது வென்னுந் தத்துவம் நிலைப்பும் பரப்பும் உடைய தாய்ப் பொருள்களுக்கு ஓர் ஒற்றுமையைச் செய்வதாம். இனி, சிறப்பென்பது பொருள்களுள் வைத்து ஒன்றற்கொன்று வேறுபாட்டைச் செய்வதொன்றாம். இனி, கூட்டம் என்பது பொருள்களுக்கும் குணஞ்செயல்களுக்கும் உள்ள இயைபினை உணர்த்துமொரு தத்துவமாகும். இதுவும் நிலைப்பும் பரப்புமுடையது என அவற்றிற்கு யாம் எழுதிய உரையினின்றும் உணர்க.

பூதவாதி

262-273: உடனே...........உணர்வே

(இதன் பொருள்) உடனே பூதவாதியை புகல் நீ என்ன வைசேடிகன் திறம் கேட்ட மணிமேகலை அப்பொழுதே அவனை விட்டுப் போய் பூதவாதியைத் தலைப்பட்டு ஐயனே உன்னுடைய சமய நன்பொருளை எனக்குக் கூறுவாயாக நீ என்று கேட்ப அவ்வேண்டுகோட்கிணங்கிக் கூறுபவன்: தாதகிப் பூவும் கட்டியும் இட்டு மற்றும் கூட்ட மதுக்களி பிறந்தாங்கு-ஆத்திப்பூவும் கருப்புக் கட்டியும் இட்டுப் பிறவும் கூட்ட வேண்டிய பொருள்களை கூட்டிச் சமைத்த கள்ளின்கண் களிப்பு என்னும் ஓர் ஆற்றல் பிறந்தாற் போல; உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும்-நிலம் முதலிய ஐந்து பூதங்களின் கூட்டரவின் கண் அறிவு தோன்றும்; அவ் உணர்வு அவ்வப்பூதத்தின் அழிவுகளின்-அந்த அறிவு அவ்வப்பூதங்கள் அழியும் பொழுது; வெவ்வேறு பிரியும் பறை ஓசையில் கெடும்-வேறு வேறாகப் பிரிகின்ற பறையினது ஒலி போலக் கெடுவதாம்; உயிரொடும் கூட்டிய உணர் உடைப்பூதமும்-உயிரோடும் கூட்டப்பட்டமையால் அறிவுடையதாகிய பூதமும்; உயிர் இல்லாத உணர்வில் பூதமும்-உயிரற்றமையால் உணர்வு பிறவாத பூதங்களும்; அவ்வப்பூதவழி அவை பிறக்கும்-அவ்வப் பூதங்களின் வழியாக அவ்விருவகைப் பூதங்களும் பிறக்கும்; மெய்வகை இதுவே-எங்கள் பூதவாத நூலிற் கூறப்படும் பொருள்வகை யான் கூறிய இதுவேயாம் இங்ஙனமன்றி; வேறு உரை விகற்பமும்-வேறுவிதமாகக் கூறப்படுகின்ற உரை வேறுபாடுகளும்; உண்மைப்பொருளும்-உண்மையான பொருள்களும் எம்மில் வேறாகிய; உலோகாயதன் உணர்வே-உலோகாயதனுடைய அறிவின்பால் பட்டனவே, எமது பூதவாத நூலின்கண் படுவன அல்ல என்றான் என்க.

(விளக்கம்) பூதவாதி, ஐம்பெரும் பூதங்களே பொருள்; இவற்றின் கூட்டரவில் உணர்ச்சி தோன்றும்; மாமுதலிய ஐந்து பொருள்களையும் கூட்டிச் சமைத்த கள்ளின்கட் களிப்புத் தோன்றுமாறு போலே, நில முதலிய ஐம்பெரும் பூதங்களின் கூட்டத்தின்கண் அறிவு இன்ப முதலியன தோன்றி அவை வளரத் தாமும் வளர்ந்து, அந்தப் பூதங்கள் பிரிந்தால் முன்பு சொன்ன அப்பொறிபுலன்கள் தம்மினமாகிய பூதங்களிற் சேரும்; சேரவே, அறிவு இன்ப முதலியன குடமும் விளக்கும் இன்னவழிப் புக்கன வென்றறியாமல் அழிந்தவாறு போல அழியும் என்பது பூதவாதியின் கொள்கை. உயிரொடும் கூட்டிய உணர்வுடைப் பூதம் என்புழி, கூட்டிய என்னும் சொல் பிழைபட்ட சொல். கூடிய என்னும் சொல்லே அங்ஙனம் பிழைபட சொல். கூடிய என்னும் சொல்லே அங்ஙனம் பிழைபட எழுதப்பட்டது என்று கருதுதற்கு இடன் உளது; இங்ஙனம் கொள்ளின் உயிர் தோன்றுதற்கு வேண்டுமளவு தம்முள் கூடிய உணர்வுடைப் பூதமும் என்று பொருள் கொள்ள வேண்டும். அவ்வழி உணர்வுடைப் பூதம் என்றது உயிரினங்களின் உடம்புகளைக் குறிப்பதாம்; உயிரில்லாத உணர்வில் பூதம் என்றது நிலம் முதலிய பூதங்களை என்று கொள்ளல் வேண்டும். அவ்வப்பூதவழி பிறக்கும் என்பதற்கு, தீ முதலியவற்றினின்று ஒளி முதலிய புலன்களும் கண்ணறிவும் முதலியன பிறக்கும் என்று கொள்ளல் வேண்டும். மெய் என்றது பிருகற்பதியார் செய்த பூதவாத நூலை. இந்த நூலின் பொருளை இம்மணிமேகலையினும் கூறப்பபடுவனவாம் எவ்று அறிதல் வேண்டும். இவற்றை,

திண்ணென் றீநில நீர்வளி காயத்தாற்
கண்ணு மூக்கொடு நாமெய் செவிகளாய்
வண்ண நாற்றஞ் சுவையினொ டூறெலி
யெண்ணுங் காலை யியைந்துழி யெய்துமே   (நீல-857)

எனவும்,

ஐந்துங் கூடி யறிவின்ப மாதியாய்
வந்து தோன்றி மதுமயக் காற்றலி
னந்தி நாளுங் குடஞ்சுடர் நாட்டம்போற்
சிந்தி னாலவை சென்றினஞ் சேருமே   (நீல-858)

எனவரும் வரும் செய்யுள்களானும் உணர்க.

இனி இப்பூதவாதத்தின் தத்துவங்களினும் சிறிது சிறிது வேறுபடுவாரும் உளர். இவ்வேறுபாடு காரணமாக அவர் உலோகாயதர் எனவும் சாருவாகர் எனவும் வேறு வேறு பெயர் பெறுவாராயினர். இவருள் தேகான்ம வாதிகளும் இந்திரியான்ம வாதிகளும் பிராணன்மவாதிகளும் அந்தக் கரணான்ம வாதிகளும் எனப் பலதரப்படுவர் ஆகலின் அவர் கொள்கையும் எமக்குடன்பாடன்று என்பான் வேறுரை விகற்பமும் உண்மைப் பொருளும் உலோகாயதன் உணர்வே என்றான். எனவே அவர்க்கு முதல்நூல் இல்லை என்றானும். அவ் உலோகாயத உணர்வில் எழுந்த உரை விகற்பங்களை மாதவச் சிவஞானயோகியார்:

உலகாயதமாவது-காண்டலளவை ஒன்றே அளவையாம், நிலம், நீர், தீ, வளி என நான்கே தத்துவங்கள்; இவை நித்தப் பொருள்கள். இவற்றின் கூட்டமேயுடம்பு. பாகடையும் சுண்ணாம்பும் கூடிய வழிச் செவ்வண்ணம் பிறக்குமாறு போல இவற்றின் கூட்டரவின் ஓருணர்வுண்டாம். அவ்வுணர்வு உடம்பு வளர வளரும் தேயத்தேயுமாகலின், உடம்பிற்கு வேறே உயிர் என்பதும் பொய். உடம்பிற்கு இன்ப துன்பங்கள் இயல்பாயுள்ளன. இவற்றிற்குக் காரணம் வினையென்பதும் பொய்; மயிலைச் சித்திரித்தாரையும், குயிலைக் கூவுவித்தாரையுங் காணாமையின் கடவுள் உண்டென்பதும் பொய்.

இம்மையின் மங்கைப் பருவத்து மகளிரொடு மணந்து உண்டுடுத்து வாழ்வதே துறக்கவின்பம். அது பெறாது பகைவரால் நோயால் வறுமையால் நூல்களால் வருந்துவதே நிரயத்துன்பம். வேறே துறக்க நிரயம் உள என்பதும் பொய். நாலு பூதக் கூட்டரவிற் பிராணவாயு ஒன்று நீங்கில் உணர்விழந்து உடம்பு நாசமாம். அதுவே வீடுபேறு, வேறே வீடுபேறுண்டென்பதும் பொய்.

இவ்வுண்மையுணராத மடவோர் மறுமையுண்டெனக் கொண்டு தவங்கள் பட்டினி முதலியவற்றான் வருந்துவர். கற்பு முதலிய சங்கேத நூல்கள் மதுகையின்றி மதியுடையோராற் செய்யப்பட்டன. பொன் நிலம் உணவு முதலிய தானங்களை உயர்த்துக் கூறும் நூல்கள் பசியால் வருந்தி நல்கூர்ந்தோராற் செய்யப்பட்டன. தேவகுலம் தண்ணீர்ப்பந்தர் கூவல் பொய்கை சோலை முதலியன செய்தலை உயர்த்துக் கூறும் நூல்கள் வழிச் செல்வோராற் கூறப்பட்டன. ஆதலான் இவற்றைக் கைவிட்டு, உழவு, பசுக்காவல், வாணிகம், செங்கோன் முறைமை முதலியனவாக ஆன்றோர் காட்டிய நெறியினின்றும் இம்மையின் பங்களை நுகர்ந்து வாழ்தல் உறுதிப் பயன் என்பதாம் என்பர்.

இதுவுமது

274-283: கண்..............என்றலும்

(இதன் பொருள்) கண்கூடு அல்லது கருத்து அளவு அழியும்-கண்ணாலும் பிற பொறிகளாலும் நேரே அறிவதாகிய காட்சி அளவை மட்டுமே வாய்மை ஆவதல்லது கருத்து அளவு முதலியன பொய்யாய் ஒழிதலும் உண்டாதலின் எமக்குக் காட்சி அளவை ஒன்றுமே அளவையாம் ஆகவே காட்சி அளவையினால் காணப்படுகின்ற; இம்மையும் நுகருகின்ற மாதர் இன்பம் முதலிய பயன்களுமே பிறவிப் பயனாம் பிறந்த இப்பிறப்பே வாய்மையுமாம் இஃதன்றி, மறுமை உண்டாய் வினை துய்த்தல் பொய்ம்மை-மாய்ந்தபின் மற்றும் பிறப்பு உண்டாகி இம்மையின் செய்த வினையின் பயனை அம் மறுபிறப்பில் நுகர்தல் என்பது பொய்ம்மையே என்பது எமது துணி பொருளாம்; என்றலும்-என்று அப்பூதவாதி தனது நூற்பொருளை உரைத்தலும்; எல்லா மார்க்கமும் கேட்டு நன்றல வாயினும்-மணிமேகலை இவ்வாறு அளவை வாதி முதலாகப் பூதவாதி ஈறாக உள்ள எல்லாச் சமயக்கணக்கர் நெறிகளையும் கேட்டறிந்த பின்னர் அப்பூதவாதியை ஐயனே யான் கேட்ட சமய நெறிகளெல்லாம் நன்னெறிகளல்ல ஆயினும்; நான் மாறு உரைக்கிலேன் என்று கூறியவள் இப்பிறப்பே வாய்மை மறுபிறப்பு முதலியன பொய்யே யாம் எனக்கேட்டு; பிறந்த முன் பிறப்பை எய்தப் பெறுதலின்-தான் பிறந்திருந்த முற்பிறப்பை அறிந்திருத்தலால் அஃதறியாத அப்பூதவாதியின் பேதைமைக் கிரங்கி ஐயனே; அறிந்தோர் உண்டோ என்று நக்கிடுதலும்-அம்மறுமை முதலியன இல்லை என்பதை நன்கறிந்தவர்கள் உளரேயோ? என்று சொல்லி நகைத்தலும் அதுகேட்ட பூதவாதி மணிமேகலையை நோக்கித் துறவியே நீ எற்றிற்கு நகைத்தனை மறுமை முதலியன உண்டென்பார் கூற்றினை உண்மை என்று கொண்டு என் மொழியை எள்ளி நகைக்கின்றாய் போலும் என அது கேட்ட மணிமேகலை யானே என் முற்பிறப்பை அறிந்துளேன் காண் என அது கேட்ட அப்பூதவாதி துறவியே நீ அறிந்தாயேனும், அவ்வறிவுதானும்; தெய்வ மயக்கினும் கனாஉறு திறத்தினும் மையல் உறுவார் மனம் வேறாம் வகை-தெய்வ மயக்கத்தாலாதல் கனுக்காணுதலாலாதல் மயக்கம் உறுவோர் மனம் வேறுபட்டுக் கூறுமாறு போல; ஐயம் அன்றி-ஐயுறுதற்கு இடமாதலன்றி; இல்லை என்றலும்-அக்கூற்று வாய்மையாமாறில்லை என்று மறுத்தலும் என்க.

(விளக்கம்) கண்கூடு-காட்சியளவை கருத்தளவை முதலியன என்க. இப்பிறப்பே வாய்மை என்று ஒரு சொல் பெய்து கொள்க. துய்த்தல் பொய்மை என மாறுக. பிறந்த என்பது தொடங்கி இப்பகுதியில் விரித்துரைக்கப்பட்டவையெல்லாம் பாட்டிடை வைத்த குறிப்புப் பொருளாகப் பெய்துரைக்கப்பட்டன. இக்குறிப்புப் பொருள்:-

இறைவனு மில்லை யிறந்தோர் பிறவார்
அறனோ டென்னையென் றறைந்தோன் தன்னை
பிறவியும் அறவியும் பெற்றியி னுணர்ந்த
நறுமலர்க் கோதை எள்ளினை நகுதி
எள்ளினை போலும் இவ்வுரை கேட்டிங்
கொள்ளிய துரையென உன்பிறப் புணர்த்துவை
ஆங்குநிற் கொணர்ந்த அருந்தெய்வம் மயக்கக்
காம்பன தோளி கனாமயக் குற்றனை
என்றவ னுரைக்கும் இளங்கொடி நல்லாய்
அன்றென் றவன்முன் அயர்ந்தொழி வாயலை
தீவினை யுறுதலுஞ் செத்தோர் பிறத்தலும்
வாயே யென்று மயக்கொழி மடவாய்    (21:103-114)

என நூலாசிரியர் விரித்துக் கூறிப்போந்த பொருளையே ஈண்டுக் குறிப்பாகக் கொள்ள வைத்தலின் அஃதறிந்து ஈண்டு இவ்வாறு விரித்தாம் என்க. அறிந்தோர் உண்டோ என்புழி ஓகாரம் எதிர்மரை ஓகாரமாய், யானே அறிந்துள்ளேனே என்னும் பொருளையும், தெய்வ மயக்கினும் என்னும் பதவாதியின் கூற்றால் மணிமேகலை யான் ஒரு தெய்வத்தின் திருவருளால் அறிந்துளேன் என, அதுகேட்ட அப்பதவாதி அத்தகைய தெய்வ மயக்கத்தால் நீ கூறுவனவும் ஐயமின்றி உண்மையாதலில்லை என்றான் என்னும் குறிப்புப் பொருள் தோன்றுதலும் உணர்க. இக்குறிப்புப் பொருள் பாட்டிடைத் தோன்றுதலின் இத்தகையவற்றை ஆசிரியர் தொல்காப்பியனார் பாட்டிடை வைத்த குறிப்பு (தொல்-செய்யு-171) என்று ஓதுதலும் உணர்க.

மணிமேகலை கூற்று

283-289 : நின்.............ஆங்கென்

(இதன் பொருள்) நின்தந்தை தாயரை அனுமானத்தால் அலது இந்த ஞாலத்து எவ்வகை அறிவாய்-ஐயனே காட்சி அளவை அல்லது ஏனைய அளவை கொள்ளேன் என்னும் நீ நின்னுடைய தந்தை தாய் என்னும் இவரைக் கருத்தளவையால் அறிந்து கொண்டதல்லது இவ்வுலகத்தில் வேறு எவ்வாற்றால் அறிந்து கொள்வாய் கூறவல்லையோ இது நிற்க. மெய் உணர்வு இன்றி மெய்ப்பொருள் உணர்வு அரிய-மெய்யுணர்வில்லாத வழி அவ்வுணர்ச்சிக்கே புலப்படுக்கின்ற மெய்ப்பொருள்களையும் உணர்ந்து கோடல் அரிய செயல்களேயாம். ஆகவே இம்மை மறுமை உம்மை முதலியவை உண்டு என்று; இது ஐயம் அல்லது-யான் கூறும் இக்கூற்று ஐயத்திற்கிடயல்லாத வாய்மையே ஆதலின்; சொல்லப்பெறாய்-நீ அவ்வாறு கூறுதற்கு இடம் பெறாய்; என-என்று அப்பூதவாதிக்குக் கூறி; உள்வரிக் கோலமோடு-தான் தன் உருவத்தை மறைத்து மாதவன் உருவத்தோடு சென்று; உன்னிய பொருள்-தான் கேட்க விரும்பிய பிற சமயக்கணக்கர் நன்பொருள்களைக் கேட்க விரும்பிய தன் விருப்பத்தை; உரைத்து அச்சமயக் கணக்கர்பால் சொல்லி வினவுமாற்றால்; ஐவகை சமயமும் அறிந்தனன் ஆங்கு என்-அறுவகைச் சமயங்களுள் வைத்துத் தான் மேற்கொண்டுள்ள பவுத்தம் ஒழிந்த ஏனைய ஐந்து வகைப்பட்ட சமயக்கணக்கர் தம் திறமெல்லாம் அறிந்து கொண்டனள் அவ்வஞ்சிமாநகர்ப் புறத்தே என்க.

(விளக்கம்) தந்தை தாயரை அனுமானத்தால் அல்லது அறியவியலாமை நினைந்துணர்க. மெய்யுணர்வு-யாதொரு பொருள் யாதோர் இயல்பிற்றாய்த் தோன்றினும் அத்தோற்றத்தைக் கண்ட மாத்திரையே ஒழியாது அப்பொருளின்கண் நின்று அதன் இயல்பை ஆராய்ந்து உள்ளவாறு உணர்தல். இவ்வாறுணர்வார்க்கன்றிப்  பொருளியல்புகள் உணர்தற்கரியன என்றவாறு. சொல்ல இடம் பெறாய் என்க. உள்வரிக்கோலம்-வேற்றுருக் கோடல். உன்னிய பொருள்-கேட்க விரும்பிய பொருள். அவையாவன பிற சமயக்கணக்கர் தத்துவங்கள். அளவையாதம் ஐந்தும் ஒருவகைச் சமயமாகவும், ஆசீவகவாதம் நிகண்டவாதம் என்னும் இரண்டும் ஒருவகைச் சமயமாகவும் கோடலின், இக்காதையில் கூறப்பட்ட பத்துச் சமயங்களையும் ஐவகைச் சமயங்களுள் அடக்கி ஐவகைச் சமயமும் அறிந்தனள் என்றார்.

இனி இக்காதையை மணிமேகலை நன்பொருள் உரைமினோ எனச் சமயக்கணக்கர் தம் திறம் சார்ந்து, அவருள் அளவை வாதியை எய்தி நின் கடைப்பிடி இயம்பென அவனும் இவையே இப்போது இயன்றுள அளவைகள் என, அவனை விட்டுச் சைவவாதியை நின் தெய்வம் எப்படித்தென்ன அவனும் அன்னோன் இறைவன் ஆகும் என்றுரைத்தனன். பிரமவாதி முட்டை என்றனன். கடல்வணன் புராணம் ஓதினன். நாரணன் காப்பென்றுரைத்தனன். வேதியின் உரையின் வீதியுங் கேட்டு, இசையாது இவர் உரையென புராணனைப் பொருள் யாது என, அவன் இது என்ன, நிகண்ட வாதியை நீ உரை என, அவன் அது வீடாகும் என்றனன். பின் சாங்கிய மதம் என்று எடுத்துரைப்பவன், செப்பிய திறமும் கேட்டு வைசேடிக நின் வழக்குரை என்ன, அவன் உரைத்தனன். உடனே பதவாதியை நீ புகல் என்ன, அவன் மறுமை உண்டாய் வினை துய்த்தல் பொய்ம்மை என்றலும் கேட்டு நக்கிடுதலும், அவன் ஐயம் அன்றியில்லை என்றலும், மணிமேகலை நீ எவ்வகை அறிவாய் சொல்லப் பெறாய் என, கோலமோடு உரைத்து ஐவகைச் சமயமும் அறிந்தனன் ஆங்கு என முடிவு செய்க.

சமயக்கணக்கர் தந்திறங் கேட்ட காதை முற்றிற்று.

 
மேலும் மணிமேகலை »
temple news
தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் மணிமேகலை ஆகும். இந்நூல் பவுத்த மத சார்புடைய நீதிகளை எடுத்துச் ... மேலும்
 

1. விழாவறை காதை நவம்பர் 11,2011

முதலாவது விழாவறைந்த பாட்டு அஃதாவது: பூம்புகார் நகரத்து வாழ்கின்ற சமயக் கணக்கர் முதலிய பெரியோர் ... மேலும்
 
இரண்டாவது ஊரலருரைத்த பாட்டு அஃதாவது விழாவறைதல் கேட்ட மாந்தர் மாதவியை நினைந்து நாடகக் கணிகை துறத்தல் ... மேலும்
 
மூன்றாவது மலர்வனம் புக்கபாட்டு அஃதாவது-மாதவியும் வயந்த மாலையும் சொல்லாட்டம் நிகழ்த்தும் பொழுது ... மேலும்
 
நான்காவது மணிமேகலை உதயகுமரனைக் கண்டு பளிக்கறை புக்க பாட்டு அஃதாவது -உவவனத்தினுட் சுதமதியோடு மணிமேகலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar