Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
2. மனையறம்படுத்த காதை 4. அந்திமாலைச் சிறப்புசெய் காதை
முதல் பக்கம் » சிலப்பதிகாரம்
3. அரங்கேற்று காதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜன
2012
03:01

(நிலைமண்டில ஆசிரியப்பா)

அஃதாவது - கண்ணகியும் கோவலனும் இல்லறம் நிகழ்த்தி வருங்காலத்தே புகார் நகரத்தே புகழ்மிக்க நாடகக் கணிகையாகிய மாதவி ஆடற்கலை பயின்று அரசன் முன்னிலையில் அரங்கேறிக் காட்டிய செய்தியையும் அவள் ஆடலினும் பாடலினும் அழகினு மயங்கிய கோவலன் அவளுடைய கேண்மையைப் பெற்ற செய்தியையும் கூறும் பகுதி என்றவாறு.

தெய்வ மால்வரைத் திருமுனி அருள
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய
மலைப்புஅருஞ் சிறப்பின் வானவர் மகளிர்
சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய  5

பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை
தாதுஅவிழ் புரிகுழல் மாதவி தன்னை
ஆடலும் பாடலும் அழகும் என்றுஇக்
கூறிய மூன்றின் ஒன்றுகுறை படாமல்
ஏழாண்டு இயற்றிஓர் ஈராறு ஆண்டில்  10

சூழ்கடல் மன்னற்குக் காட்டல் வேண்டி,
இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்
பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும்
விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்துஆங்கு  15

ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்
கூடிய நெறியின கொளுத்துங் காலைப்
பிண்டியும் பிணையலும் எழிற்கையும் தொழிற்கையும்
கொண்ட வகைஅறிந்து கூத்துவரு காலைக்
கூடை செய்தகை வாரத்துக் களைதலும்  20

வாரம் செய்தகை கூடையிற் களைதலும்
பிண்டி செய்தகை ஆடலிற் களைதலும்
ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும்
குரவையும் வரியும் விரவல செலுத்தி
ஆடற்கு அமைந்த ஆசான் தன்னொடும்,  25

யாழும் குழலும் சீரும் மிடறும்
தாழ்குரல் தண்ணுமை ஆடலொடு இவற்றின்
இசைந்த பாடல் இசையுடன் படுத்து
வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கித்
தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்துத்  30

தேசிகத் திருவின் ஓசை எல்லாம்
ஆசுஇன்று உணர்ந்த அறிவினன் ஆகிக்
கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும்
பகுதிப் பாடலும் கொளுத்துங் காலை
வசைஅறு கேள்வி வகுத்தனன் விரிக்கும்  35

அசையா மரபின் இசையோன் தானும்,
இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத்
தமிழ்முழுது அறிந்த தன்மையன் ஆகி
வேத்தியல் பொதுவியல் என்றுஇரு திறத்தின்
நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்து  40

இசையோன் வக்கிரித் திட்டத்தை உணர்ந்துஆங்கு
அசையா மரபின் அதுபட வைத்து
மாற்றார் செய்த வசைமொழி அறிந்து
நாத்தொலைவு இல்லா நன்னூல் புலவனும்,
ஆடல் பாடல் இசையே தமிழே  45

பண்ணே பாணி தூக்கே முடமே
தேசிகம் என்றுஇவை ஆசின் உணர்ந்து
கூடை நிலத்தைக் குறைவுஇன்று மிகுத்துஆங்கு
வார நிலத்தை வாங்குபு வாங்கி
வாங்கிய வாரத்து யாழும் குழலும்  50

ஏங்கிய மிடறும் இசைவன கேட்பக்
கூர்உகிர்க் கரணம் குறிஅறிந்து சேர்த்தி
ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமைச்
சித்திரக் கரணம் சிதைவுஇன்றி செலுத்தும்
அத்தகு தண்ணுமை அருந்தொழில் முதல்வனும்,  55

சொல்லிய இயல்பினிற் சித்திர வஞ்சனை
புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின்
வர்த்தனை நான்கும் மயல்அறப் பெய்துஆங்கு
ஏற்றிய குரல்இளி என்றுஇரு நரம்பின்
ஒப்பக் கேட்கும் உணர்வினன் ஆகிப்  60

பண்அமை முழவின் கண்ணெறி அறிந்து
தண்ணுமை முதல்வன் தன்னொடு பொருந்தி
வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்துஆங்கு
இசையோன் பாடிய இசையின் இயற்கை
வந்தது வளர்த்து வருவது ஒற்றி  65

இன்புற இயக்கி இசைபட வைத்து
வார நிலத்தைக் கேடுஇன்று வளர்த்துஆங்கு
ஈர நிலத்தின் எழுத்துஎழுத்து ஆக
வழுவின்று இசைக்கும் குழலோன் தானும்,
ஈர்ஏழ் தொடுத்த செம்முறைக் கேள்வியின்  70

ஓர்ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி
வன்மையிற் கிடந்த தார பாகமும்
மென்மையிற் கிடந்த குரலின் பாகமும்
மெய்க்கிளை நரம்பிற் கைக்கிளை கொள்ளக்
கைக்கிளை ஒழித்த பாகமும் பொற்புடைத்  75

தளராத் தாரம் விளரிக்கு ஈத்துக்
கிளைவழிப் பட்டனள், ஆங்கே கிளையும்
தன்கிளை அழிவுகண்டு அவள்வயிற் சேர
ஏனை மகளிரும் கிளைவழிச் சேர
மேலது உழையிளி கீழது கைக்கிளை  80

வம்புஉறு மரபின் செம்பாலை ஆயது
இறுதி ஆதி ஆக ஆங்குஅவை
பெறுமுறை வந்த பெற்றியின் நீங்காது
படுமலை செவ்வழி பகர்அரும் பாலைஎனக்
குரல்குரல் ஆகத் தற்கிழமை திரிந்தபின்  85

முன்னதன் வகையே முறைமையின் திரிந்துஆங்கு
இளிமுத லாகிய ஏர்படு கிழமையும்
கோடி விளரி மேற்செம் பாலைஎன
நீடிக் கிடந்த கேள்விக் கிடக்கையின்
இணைநரம்பு உடையன அணைவுறக் கொண்டுஆங்கு  90

யாழ்மேற் பாலை இடமுறை மெலியக்
குழல்மேற் கோடி வலமுறை மெலிய
வலிவும் மெலிவும் சமனும் எல்லாம்
பொலியக் கோத்த புலமை யோனுடன்,
எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது  95

மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு
புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக்
கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு
நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோல்அளவு இருபத்து நால்விரல் ஆக  100

எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து
ஒருகோல் உயரத்து உறுப்பினது ஆகி
உத்தரப் பலகையொடு அரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோல் ஆக
ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்  105

தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்தப்
பூதரை எழுதி மேல்நிலை வைத்துத்
தூண்நிழல் புறப்பட மாண்விளக்கு எடுத்துஆங்கு
ஒருமுக எழினியும் பொருமுக எழினியும்
கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்துஆங்கு  110

ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து
மாலைத் தாமம் வளையுடன் நாற்றி
விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கத்துப்
பேர்இசை மன்னர் பெயர்ப்புறத்து எடுத்த
சீர்இயல் வெண்குடைக் காம்புநனி கொண்டு  115

கண்இடை நவமணி ஒழுக்கி மண்ணிய
நாவல்அம் பொலம்தகட்டு இடைநிலம் போக்கிக்
காவல் வெண்குடை மன்னவன் கோயில்
இந்திர சிறுவன் சயந்தன் ஆகென
வந்தனை செய்து வழிபடு தலைக்கோல்  120

புண்ணிய நன்னீர் பொற்குடத்து ஏந்தி
மண்ணிய பின்னர் மாலை அணிந்து
நலம்தரு நாளால் பொலம்பூண் ஓடை
அரசுஉவாத் தடக்கையில் பரசினர் கொண்டு
முரசுஎழுந்து இயம்பப் பல்இயம் ஆர்ப்ப  125

அரைசொடு பட்ட ஐம்பெருங் குழுவும்
தேர்வலம் செய்து கவிகைக் கொடுப்ப
ஊர்வலம் செய்து புகுந்துமுன் வைத்துஆங்கு,
இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்
குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப,  130

வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து
வலத்தூண் சேர்தல் வழக்குஎனப் பொருந்தி
இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த
தொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும்
சீர்இயல் பொலிய நீர்அல நீங்க  135

வாரம் இரண்டும் வரிசையில் பாடப்
பாடிய வாரத்து ஈற்றில்நின்று இசைக்கும்
கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம்
குழல்வழி நின்றது யாழே, யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே, தண்ணுமைப்  140

பின்வழி நின்றது முழவே, முழவொடு
கூடிநின்று இசைத்தது ஆமந் திரிகை
ஆமந் திரிகையொடு அந்தரம் இன்றிக்
கொட்டுஇரண்டு உடையதுஓர் மண்டிலம் ஆகக்
கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி  145

வந்த முறையின் வழிமுறை வழாமல்
அந்தரக் கொட்டுடன் அடங்கிய பின்னர்,
மீத்திறம் படாமை வக்காணம் வகுத்துப்
பாற்பட நின்ற பாலைப் பண்மேல்
நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து  150

மூன்றுஅளந்து ஒன்று கொட்டி அதனை
ஐந்துமண் டிலத்தால் கூடை போக்கி
வந்தவா ரம்வழி மயங்கிய பின்றை,
ஆறும் நாலும் அம்முறை போக்கிக்
கூறிய ஐந்தின் கொள்கை போலப்  155

பின்னையும் அம்முறை பேரிய பின்றை,
பொன்இயல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென
நாட்டிய நன்னூல் நன்குகடைப் பிடித்துக்
காட்டினள் ஆதலின், காவல் வேந்தன்
இலைப்பூங் கோதை இயல்பினில் வழாமைத்  160

தலைக்கோல் எய்தித் தலைஅரங்கு ஏறி
விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண்கழஞ்சு
ஒருமுறை யாகப் பெற்றனள் அதுவே
நூறுபத்து அடுக்கி எட்டுக்கடை நிறுத்த
வீறுஉயர் பசும்பொன் பெறுவதுஇம் மாலை,  165

மாலை வாங்குநர் சாலும்நம் கொடிக்குஎன
மான்அமர் நோக்கிஓர் கூனிகைக் கொடுத்து
நகர நம்பியர் திரிதரு மறுகில்
பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த,
மாமலர் நெடுங்கண் மாதவி மாலை  170

கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு
மணமனை புக்கு மாதவி தன்னொடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி
விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்.
வடுநீங்கு சிறப்பின்தன் மனையகம் மறந்துஎன்.  175

(வெண்பா)

எண்ணும் எழுத்தும் இயல்ஐந்தும் பண்நான்கும்
பண்ணின்ற கூத்துப் பதினொன்றும் - மண்ணின்மேல்
போக்கினாள் பூம்புகார்ப் பொற்றொடி மாதவிதன்
வாக்கினால் ஆடரங்கில் வந்து.

உரை

1-7 : தெய்வமால் ........... மாதவிதன்னை

(இதன்பொருள்) தெய்வமால்வரைத் திருமுனி - கடவுட்டன்மையுடைய பெரிய மலையாகிய பொதியிலின்கண் எஞ்ஞான்றும் வதிகின்ற தலைசிறந்த முனிவனாகிய அகத்தியனாலே முன்பொரு காலத்தே சபிக்கப்பட்டு; எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு - தன்னோடு ஒருங்கே எய்திய சாபத்தையுடைய இந்திரன் மகனாகிய சயந்தன் என்பவனோடு மண்ணுலகத்தே பிறப்பெய்தி; அருள - அம்முனிவனே அற்றைநாள் அவர்க்கிரங்கிச் சாபவிடை செய்தருளியபடியே; தலைக்கோல் தானத்து (இந்திர சிறுவனொடு) சாபம் நீங்கிய - இம்மண்ணுலகத்தே நாடக அரங்கின்கண்ணே (அச்சயந்தனோடு ஒருங்கே) சாபம் நீங்கிப்போன (உருப்பசியாகிய மங்கை மாதவியின் வழிமுதற்றோன்றிய) மலைப்பு அருஞ் சிறப்பின் - ஒப்பில்லாத சிறப்புண்மை காரணமாக; வானவர் மகளிர் சிறப்பின் குன்றாச் செய்கையொடு பொருந்திய - வானவருலகத்து உருப்பசி முதலிய அந்நாடக மகளிர்க்குரிய சிறப்பின் கண் சிறிதும் குறையாத நாடகத் தொழிற்றிறத்தோடு கூடிய; பிறப்பின் குன்றா - அவ்வுருப்பசி மரபிற் பிறந்த பிறப்பு நலங்களானும் ஒரு சிறிதும் குறையாத; பெருந்தோள் மடந்தை-தோள் முதலிய மூன்றுறுப்புக்களும் பெருகிய மடந்தை ஆகிய; தாது அவிழ் புரிகுழல் மாதவி தன்னை - தாதுவிரிகின்ற மலர்களையுடைய கடை குழன்று சுருண்ட கூந்தலையுடைய மாதவி என்னும் நாடகக் கணிகையை என்க.

(விளக்கம்) தெய்வவரை, மால்வரை எனத் தனித்தனி யியையும். திருமுனி-அகத்தியன். கம்பநாடரும் ஈண்டு அடிகளோதியவாறே தென்றமிழ் நாட்டகன் பொதியில் திருமுனிவன் (நாடவிட்ட - 31) என வோதுதல் உணர்க. திரு, ஈண்டுச் சிறப்பின் மேற்று.

இனி இக்காதையில் இவ்வேழடிகளும் பொருட் பொருத்தமின்றி நிற்றலுணர்க. இவற்றுள் சாபம் நீங்கிய என்புழி நீங்கிய என்னும் பெயரெச்சம் (4) வானவர் மகளிர் எனவரும் பெயரையாதல் (7) மாதவி என்னும் பெயரையாதல் கொண்டு முடிதல் வேண்டும். அங்ஙன முடிப்பின் வரலாற்றோடு பொருந்தாது. இங்ஙனம் பொருந்தாமை கண்ட பழைய வுரையாசிரியரிருவரும் பெரிதும் இடர்ப்படுவர். அவருள் அரும்பதவுரையாசிரியர், இந்திரகுமரனோடு என்றதனால் சயந்தகுமாரனோடே உருப்பசியும் சாபம் நீங்கிப்போனாள், என்க, எனவும். வானவர் மகளிர் - தளியிலார் எனவும், உருப்பசி வந்து சாபத்தாற் பிறக்கையால் அவள் வழியுள்ளாரையும் வானவர் மகளிர் என்றார், எனவும் ஓதுவர். இனி அடியார்க்கு நல்லார் வானவர் மகளிர் என்பதற்கு அரம்பையர் எனப் பொருள்கொண்டு, பின்னரும் உருப்பசியாகிய அம்மாதவி மரபில்வந்த... மாதவி என்பர். இவ்வாறு இடப்பாடுறும்படி அடிகளார் செய்யுள் செய்தனர் என்று நினைத்தற்கும் இடமில்லை. ஆகவே, இப்பழைய வுரையாசிரியர் காலத்திற்கு முன்பே நீங்கிய என்னும் பெயரெச்சத்தைக் கொண்ட பெயரும் பிறவும் அடங்கிய ஒன்று அல்லது இரண்டடிகள் விழ வெழுதினர் பண்டு ஏடெழுதியவர் என்று கருதுதல் மிகையன்று.

இனி, மலைப்பருஞ் சிறப்பின் வானவர் மகளிர் என்புழி வானவர் மகளிர் என்பதற்குப் பழைய உரையாசிரியரிருவரும் ஒருவருக்கொருவர் மாறுபட்டு உரை கூறுதல்தானும் அச்சொல் அவ்விடத்தே நிற்றல் பொருந்தாமை கண்டு இருவரும் இடர்ப்பட்டே ஒருவாறு ஒல்லுமாற்றாற் கூறிய வுரைகளே என்பது தேற்றம். ஆகவே, அச்சொல் வானவர் மகளின் என்னும் ஒருமைச் சொல்லே எழுதுவோர் பிழையால் வானவர் மகளிர் எனப் பன்மைச் சொல்லாய்த் திரிந்தது எனக் கொள்வோமாயின் வானவர் மகள் என்பது உருப்பசியைக் குறிப்பதாய் மேலே சாபநீங்கிய என்புழிக்கிடந்த பெயரெச்சத்திற்கும் பொருத்தமான முடிக்குஞ் சொல்லாவதைக் காணலாம். இங்ஙனம் கொள்ளவே இந்த ஏழடிகளின் பொருளும் இடர்ப்பாடு சிறிதுமின்றி ஆற்றொழுக்காக நடத்தலையும் காண்டல் கூடும். இத்திரிவுதானும் பழைய உரையாசிரியர் காலத்திற்கு முன்னரே நிகழ்ந்ததென்றே கொள்ளவேண்டும். இஃது எங்கருத்து மட்டுமேயாகலின் யாமும் பழைய உரையாசிரியர் போன்றே வானவர் மகளிர் என்ற பாடமே கொண்டு அதற்கு அவரினும் சிறப்ப வருவித்தும் வலிந்தும் பொருள் கூறுவோமாயினேம்.

இனி வானவர் மகளின் என்றே பாடங்கொள்ளின், சாபநீங்கிய மலைப்பருஞ் சிறப்பினையுடைய உருப்பசியாகிய வானவர் மகளினுக்குரிய சிறப்பிற்குன்றாச் செய்கையொடு பொருந்திய மரபிற் பிறந்த நலத்திற் சிறிதும் குன்றாத மடந்தையாகிய மாதவி தன்னை, எனப் பொருள் சிறிதும் முட்டுப்பாடின்றி நடத்தலுமுணர்க.

இனி, அகத்திய முனிவன் சாபத்திற்கிலக்காகி உருப்பசி மண்ணகத்தே பிறந்து மாதவியென்னும் பெயருடையளாய்ச் சயந்தனொடு சாபநீங்கிய வரலாற்றினை அடிகளாரே கடலாடு காதைக்கண் ஓதுவர். ஆங்கு அதுபற்றி விளக்கமாகக் கூறப்படும்.

தலைக்கோல் தானம் - நாடக வரங்கு. சிறப்பிற்குன்றாச் செய்கை யென்றது தனக்குரிய இலக்கணத்திற் சிறிதும் குறையாத கூத்துத் தொழிலை. இதனால் அடிகளார் இய மண்ணுலகத்துக் கணிகையரினும் காட்டில், மாதவிக்கே ஆடற்கலை சிறந்துரிமையுடைய மாண்பினை விதங்தார் ஆயிற்று. நாடக மகளிர்க்கியன்ற ஆடல் பாடல் அழகு என்னும் மூன்று பண்புகளுள் ஆடலும் பாடலும் பயிற்சியால் நிரம்புவனவாக அழகு பருவத்தால் நிரம்புவதாகலின் அதுதானும் நிரம்பினமை தோன்ற பெருந்தோள் மடந்தை தாதவிழ் புரிகுழல் மாதவி என விதந்தார். என்னை? தோளின் பருமை கூறவே அகலல்குல் கண்ணென மூவழிப் பெருகினமையும் இனஞ்செப்பு மாற்றால் கொள்ளக் கூறியவாறாயிற்று. பின்னும் மகளிர்க்குப் பேதைப்பருவத்துக்கூழை, கூந்தலாய் வளர்ந்து கடை குழன்று அழகானிரம்புவதும் பெதும்பைப் பருவத்தே ஆகலின் அப் பருவம் வந்தெய்தியமை தோன்றத் தாதவிழ் புரிகுழல் மாதவி என்றார்.

8-9 : ஆடலும் பாடலும் ............ குறைபடாமல்

(இதன்பொருள்) ஆடலும் பாடலும் அழகும் என்று கூறிய இம்மூன்றின் - நாடக மகளிர்க்கு இன்றியமையாதன, கூத்தும் பாட்டும் அழகும் ஆகிய இம்மூன்றுமாம் என்று கூத்தநூலாராற் கூறப்பட்ட இந்த மூன்று நலங்களுள் வைத்து; ஒன்று குறைபடாமல் - ஒன்றேனும் குறைபடாமைப் பொருட்டு என்க.

(விளக்கம்) நாடக மகளிர்க்கு வேண்டுவன வேறு பல நலங்களும் உளவாயினும் அவற்றுள்ளும் இம்மூன்றும் தலைசிறந்த நலங்களாதலின் இவற்றைமட்டும் விதந்தோதினர். இம்மூன்றும் அவர்க்கின்றியமையாவென்பதை,

நாடவர் காண நல்லரங் கேறி
ஆடலும் பாடலும் அழகுங் காட்டிச்
சுருப்புநாண் கருப்புவில் அருப்புக்கணை தூவச்
செருக்கயல் நெடுங்கட் சுருக்குவலைப் படுத்துக்
கண்டோர் நெஞ்சம் கொண்டகம் புக்கு

எனவரும் மணிமேகலையானும் (18 : 103-107) உணர்க.

இஃது, ஏழாண்டியற்றியோரீராண்டிற்....... காட்டல் வேண்டி என்பதற்குக் குறிப்பேதுவாய் நின்றது. இவை குறைவுபடாமைக்குக் காரணம் உடையளாகலின் என்பர் அடியார்க்குநல்லார். அவர் இவள் உருப்பசி மரபில் பிறந்தமை கருதி அக்காரணத்தின் காரியம் இவை என்கின்றார்.

10-11: ஏழாண்டியற்றி.......வேண்டி

(இதன்பொருள்) ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈர் ஆறு ஆண்டில்-ஐயாட்டைப் பருவமாகிய பேதைப் பருவத்திலேயே தண்டியம் பிடிப்பித்து ஏழாண்டுகள் இடையறாது பயிற்றுவித்து மேற்கூறிய ஆடலும் பாடலும் பயிற்சியால் நிரம்பா நிற்க இயற்கையான் அழகும் நிரம்பிய பன்னீராட்டைப் பருவமாகிய மங்கைப்பருவத்தே; சூழ்கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி - வீரக்கழல் சூழ்ந்த சோழமன்னனுடைய நல்லவைக்கண் அரங்கேறிக் காட்டுதலை விரும்பி என்க.

(விளக்கம்) இளமையிற் கல் என்பதுபற்றி ஐயாண்டிற்றண்டியம் பிடித்தல் வேண்டிற்று. இதனை,

பண்ணியம்வைத் தானேமுகன் பாதம் பணிந்துநாட்
புண்ணிய வோரை புகன்றனகொண்-டெண்ணியே
வண்டிருக்குங் கூந்தன் மடவரலை யையாண்டில்
தண்டியஞ்சேர் விப்பதே சால்பு (அடியார்க்-மேற்கோள்)

எனவரும் வெண்பாவானுணர்க.

இனி, ஏழாண்டியற்றி என்றதனால் அக்கூத்துக்கலையின் அருமை பெருமைகளும் விளங்கும். இயற்றுதல்-பயிற்றுவித்தல், தண்டியம் பிடித்தல் ஆடற்கலைக்குக் கால்கோள் செய்யும் ஒரு சடங்கு, கல்விக்குக் கால்கோடலை மையோலை பிடித்தல் என்பதுபோல வென்க. தண்டியம் - தண்டு கோல்.

இனி, பரத சேனாபதியார்,

வட்டணையும் தூசியும் மண்டலமும் பண்ணமைய
எட்டுட னீரிரண்டாண் டெய்தியபின் - கட்டளைய
கீதக் குறிப்பு மலங்கார முங்கிளரச்
சோதித் தரங்கேறச் சூழ்

எனவும்,
நன்னர் விருப்புடையோள் நற்குணமு மிக்குயர்ந்தோள்
சொன்னகுலத் தாலமைந்த தொன்மையளாய்ப் - பன்னிரண்டாண்
டேய்ந்ததற்பின் ஆடலுடன் பாடலழ கிம்மூன்றும்
வாய்ந்தவரங் கேற்றல் வழக்கு

எனவும் ஓதிய வெண்பாக்கள் ஆடற்கலை பயிற்றுமாறும் அக்கலைக்குரிய தலையாய மாணவி மாண்பும் அரங்கேறும் பருவமும் அறிவித்தல் உணர்க.

ஆடலாசிரியன் அமைதி

12-25 : இருவகைக்கூத்தின் ........... ஆசான்றன்னொடும்

(இதன்பொருள்) இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து வேத்தியல் என்றும் பொதுவியல் என்றும் இரு வேறு வகையாகக் கூறப்பட்ட கூத்துக்களின் இலக்கணங்களையும் ஐயந்திரிபற அறிந்து; பலவகைக்கூத்தும் விலக்கினிற் புணர்த்து - இவ்விரு வகைக் கூத்துக்களினின்றும் விரிவகையால் பல்வேறுவகைப்பட்டு நிகழுகின்ற கூத்துக்களை யெல்லாம் விலக்குறுப்புக்களோடு பொருந்தப் புணர்க்கவும் வல்லனாகி, பதினோராடலும் பாட்டுங் கொட்டும் விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து ஆங்கு-முற்கூறிய இருவகைக் கூத்துக்களையன்றியும், அல்லிய முதற்கொடு கொட்டி யீறாகக்கிடந்த பதினொருவகை ஆரியக்கூத்துக்களையும் அக்கூத்துக்களுக்குரிய பாட்டுக்களையும் அவற்றிற்குரிய இசைக் கருவிகளையும் அவற்றிற்குரிய இலக்கண விதியினால் மாட்சிமையுடைய நூல்களின் வாயிலாய் ஐந்திரிபற நன்றாக அறிந்தவனாய்த் தான் அறிந்தவாறே; ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும் கூடிய நெறியின கொளுத்துங் காலை - கூத்தும் பாட்டும் தாளங்களும் அவற்றின் வழிவந்த தூக்குக்களும் தம்மிற்கூடிய நெறியையுடையனவாகிய முற்கூறப்பட்ட பல்வேறு வகைப்பட்ட கூத்துக்களையும் மாணவர்க்குப் பயிற்றுவிக்கும்பொழுது பிண்டியும் பிணையலும் எழிற்கையும் தொழிற்கையும் கொண்ட வகை அறிந்து-பிண்டிக்கை பிணையற்கை எழிற்கை தொழிற்கை என்று சொல்லப்பட்ட நான்கனையும் நூலினகத்துக்கொண்ட கூறுபாட்டை யறிந்து; கூத்துவருகாலை - கூத்துக்கள் நிகழுமிடத்தே; கூடை செய்த கை வாரத்துக் களைதலும் - கூடைக்கதியாகச் செய்த கை வராக்கதியுட் புகாமலும்; வாரஞ் செய்த கை கூடையில் களைதலும்- வாரக்கதியாகச் செய்த கை கூடைக்கதியுட் புகாமலும்; பிண்டி செய்தகை ஆடலில் களைதலும் - அவி நயம் செய்த கை ஆடல் நிகழுமிடத்தே நிகழாமலும்; ஆடல் செய்த கை பிண்டியில் களைதலும் - அவிநயம் நிகழுமிடத்தே ஆடல் நிகழாமலும் பேணி; குரவையும் வரியும் விரவல செலுத்தி-குரவைக் கூத்தும் வரிக்கூத்தும் தம்மில் கலவாதபடி நிகழ்த்தி; ஆடற்கு அமைந்த ஆசான் தன்னொடும் - பயிற்றுந் திறமுடைய ஆடற்கலைக்குச் சிறந்த ஆசிரியனோடும் என்க.

(விளக்கம்) (12) இருவகைக் கூத்தாவன-வேத்தியற் கூத்தும் பொதுவியற் கூத்துமாம். என்னை? வேத்தியல் பொதுவியல் என்று, இருதிறத்தின் (34) என அடிகளாரே பின்னர் விளக்கமாக வோதுதலான் ஈண்டு அடிகளார் கூறிய இருவகைக் கூத்திற்கு இப்பொருளே பொருந்துவதாம். இவரோ டொருகாலத்தவராகிய மணி மேகலையாசிரியர் தாமும் வேத்தியல் பொதுவியல் என்றிருதிறத்துக் கூத்தும், (2.18-16) என இங்ஙனமே ஓதுதலுமுணர்க. இதற்குப் பழைய வுரையாசிரியரிருவரும் கூறும் உரைகள் தம்முள் மாறுபடுவனவாயினும் அவையும் நம்மனோரால் அறியற்பாலனவேயாம் ஆதலால் அவற்றையும் கீழே தருவாம். அரும்பதவுரையாசிரியர் தேசி; மார்க்கம் என இவை என்பர். அடியார்க்கு நல்லார்-இருவகைக் கூத்தாவன-வசைக்கூத்து, புகழ்க்கூத்து; வேத்தியல் பொதுவியல்; வரிக்கூத்து, வரிச்சாந்திக்கூத்து; சாந்திக்கூத்து, விநோதக்கூத்து; ஆரியம்; தமிழ்; இயல்புக்கூத்து, தேசிக்கூத்து என, (இவ்விரண்டாகக் கூறப்படுகின்ற) பலவகைய, இவை விரிந்த நூல்களிற் காண்க. எனவும்,

ஈண்டு இருவகையாவன சாந்தியும் விநோதமும்; என்னை? அவை தாம், சாந்திக் கூத்தும் விநோதக் கூத்துமென் றாய்ந்துற வகுத்தனன் அகத்தியன்றானே என்றாராகலின், எனவும்,

இவற்றுள், சாந்திக் கூத்தே தலைவன் இன்பம் ஏத்தி நின்றாடிய வீரிரு நடமவை சொக்க மெய்யே அவிநயம் நாடகம், என்றிப்பாற்படூஉம் என்மனார் புலவர், என்பதனால் நாயகன் சாந்தமாக ஆடிய கூத்துச் சாந்திக் கூத்தெனப்படும். எனவும் இவற்றுள், சொக்கமென்றது சுத்த நிருத்தம். அது நூற்றெட்டுக்கரணமுடைத்து-மெய்க்கூத்தாவது-தேசி வடுகு சிங்களம் என மூவகைப்படும். இவை மெய்த்தொழிற் கூத்தாகலின் மெய்க்கூத்தாயின. இவை அகச்சுவைபற்றி யெடுத்தலின், அகமார்க்கம் என நிகழ்த்தப்படும் எனவும்,

அகச்சுவையாவன - இராசதம், தாமதம், சாத்துவிகம் என்பன. குணத்தின் வழிய(து) அகக்கூத் தெனப்படுமே என்றார் குண நூலுடையார்; அகத்தெழு சுவையான் அகமெனப் படுமே என்றார் சயந்த நூலுடையாருமெனக் கொள்க எனவும்,

அவிநயக் கூத்தாவது: -கதை தழுவாது பாட்டினது பொருளுக்குக் கைகாட்டி வல்லபஞ் செய்யும் பலவகைக்கூத்து, எனவும்.

நாடகம் - கதை தழுவிவருங்கூத்து. எனவும்,

விநோதக் கூத்தாவது-குரவை, கலிநடம், குடக்கூத்து, கரணம், நோக்கு, தோற்பாவை என்பர் எனவும் இவற்றுள்,

குரவையென்பது - காமமும் வென்றியும் பொருளாகக் குரவைச் செய்யுள் பாட்டாக எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின்மரேனும் கைபிணைந்தாடுவது; குரவை என்பது கூறுங்காலைச் செய்தோர் செய்த காமமும் விறலும் எய்த வுரைக்கும் இயல்பிற் றென்ப என்றாராகலின் எனவும், குரவை - வரிக்கூத்தின் ஓருறுப்பு. கலிநடம் என்றது கழாய்க் கூத்து. குடக்கூத்து - மேற்பதினொராடலுட் காட்டப்படும் எனவும், கரணமாவது - படிந்த ஆடல். நோக்கென்பது பாரமும் நுண்மையும் மாயமு முதலானவற்றையுடையது. தோற்பாவை என்றது தோலாற் பாவை செய்து ஆட்டுவிப்பது: இன்னும் நகைத்திறச்சுவை யென்பதனோடு கூட்டி ஏழென்பாருமுளர்; அஃதாவது விதூடகக்கூத்து. இதனை வசைக்கூத்தென்பாருமுளர் எனவும்,

வசை. வேத்தியல் பொதுவியலென இரண்டு வகைப்படும். அவை முந்து நூல்களிற் கண்டு கொள்க எனவும், வெறியாட்டு முதலாகத் தெய்வமேறி யாடுகின்ற அத்திறக்கூத்துக்களுங் கூட்டி ஏழென்பாரு முளர். என்னை? எழுவகைக்கூத்து மிழிகுலத்தோரை ஆடவகுத்தனனகத்தியன் றானே என்றாராகலின் எனவும், இவற்றின் இலக்கணங்களாவன - அறுகை நிலையும் ஐவகைக் பாதமும் ஈரெண்வகைய வங்கக்கிரியையும் வருத்தனை நான்கும் நிருத்தக்கை முப்பதும் அத்தகு தொழில வாகும் என்ப, இவை விரிப்பிற் பெருகும், எனவும் ஓதுவர்.

13 - பல்வகைக்கூத்து. வேத்தியல் பொதுவியல் என்னும் இருவகைக் கூத்துக்களினும் விரிவகையாற் பல வேறு வகைப்பட்டு நிகழும் கூத்துக்களையும் என்க.

(அடியார்க் - உரை) பல்வகைக் கூத்தாவன - வென்றிக்கூத்து, வசைக்கூத்து, விநோதக்கூத்து முதலியன. என்னை? பல்வகை யென்பது பகருங்காலை வென்றி வசையே விநோத மாகும் என்றாராகலின்.

அவற்றுள் மாற்றா னொடுக்கமும் மன்ன னுயர்ச்சியும் மேற்படக் கூறும் வென்றிக் கூத்தே.

பல்வகை யுருவமும் பழித்துக் காட்ட வல்லவனாதல் வசையெனப்படுமே. என இவை (என்று கூறப்பட்ட வென்றிக்கூத்தும் வசைக் கூத்தும்) தாளத்தினியல்பினவாகும் (தாளத்தோடு நிகழும் இயல்) புடையன என்றவாறு).

விநோதக் கூத்து வேறுபா டுடைத்து, வென்றி விநோதக் கூத்தென விளம்புவர். இதன் கருத்து: கொடித்தேர் வேந்தரும் குறுநில மன்னரு முதலாகவுடையோர் பகை வென்றிருந்தவிடத்து விநோதங்காணுங் கூத்தென்பதாம்.

ஈண்டு அடியார்க்கு நல்லார் பல்வகைக்கூத்தும் என்பதற்கு. முற் கூறப்பட்ட இருவகைக் கூத்தினும் வேறாகிய பல வேறு வகைக்கூத்துக்களும் என்பதுபட வுரைத்தாரேனும் இவையெல்லாம் வேத்தியல் பொதுவியல் என்னும் இருவகைக்கூத்தின் விகற்பங்களாகவே கொள்க.

விலக்கு - விலக்கென்னும் உறுப்புக்கள், விலக்கினின் என்புழி இன் சாரியை, இதனைச் சாரியை என்ற பின் மூன்றனுருபு ஐந்தனோடு மயங்கிற்று எனல் மாறுகொளக் கூறலாதலறிக. சாரியை நிற்ப உருபு தொக்க தெனலே நேரிதாம்.

பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்தலாவது - நகைக்கூத்து முதலாகப் பலவகைப்பட்ட புறநடங்களையும், வேந்து விலக்கும், படை விலக்கும் ஊர்விலக்கு மென்று சொல்லாநின்ற விலக்குக்களாகிய பாட்டுக்களுக்குறுப்பாய் வருவனவற்றுடனே பொருந்தப்புணர்த்தல். அஃதாவது அவற்றைப் பாட்டுக்களில் வருமாறு செய்தல்.

விலக்குறுப்புக்கள் பதினான்கு வகைப்படும்: அவையிற்றை,

விலக்குறுப் பென்பது விரிக்குங் காலை
பொருளும் யோனியும் விருத்தியும் சந்தியும்
சுவையுஞ் சாதியுங் குறிப்பும் சத்துவமும்
அபிநயம் சொல்லே சொல்வகை வண்ணமும்

வரியுஞ் சேதமும் உளப்படத் தொகைஇ
இசைய வெண்ணின் ஈரே ழுறுப்பே

எனவரும் நூற்பாவான் அறிக. இவ்வுறுப்புக்கள் இசைத்தமிழ் ஆகுங் காலத்தே விலக்குண்டு அப்பாடலே நாடகத் தமிழாகுங் காலத்தே பாட்டொடு புணர்க்கப்படுமாகலின் இப்பெயர் பெற்றன போலும்.

இவற்றுள், (1) பொருள் அறம் பொருள் இன்பம் வீடு என நான்கு வகைப்படும். இந்நாற் பொருளும் நாடகத்தின்கண் பிரிந்தும் கூடியும் வருமாற்றால் அந்நாடகந்தாமும் நான்கு வகைப்படும். அவையாவன- அறமுதலிய நான்கும் அமைந்தது நாடகம் எனவும், அறம்பொருள் இன்பம் ஆகிய மூன்றமைந்தது பிரகரணப் பிரகரணம் எனவும், அறமும் பொருளுமே அமைந்தது பிரகரணம் எனவும், அறம் ஒன்றுமே அமைந்தது அங்கம் எனவும் கொள்ளப்படும். மேலும் இவற்றை நிரலே அந்தணச் சாதி முதலிய நால்வகைச்சாதி நாடகங்களாகவும் ஓதுப. இவை நான்கும் நாடகம் என்னும் பெயர்க்குரியனவாகும்.

(2) யோனி என்பதும், நான்கு வகைப்படும். அவையாவன-உள்ளோன் தலைவனாக உள்ளதொரு பொருண்மேற்செய்தலும், இல்லோன் தலைவனாக உள்ளதொரு பொருண்மேற் செய்தலும், உள்ளோன் தலைவனாக இல்லதொரு பொருண்மேற் செய்தலும், இல்லோன் தலைவனாக இல்லதொரு பொருண்மேற் செய்தலும் எனவிவை. என்னை?

உள்ளோற் குள்ளதும் இல்லோற் குள்ளதும்
உள்ளோற் கில்லதும் இல்லோற் கில்லதும்
எள்ளா துரைத்தல் யோனி யாகும்

எனவரும் நூற்பாவும் காண்க.

விருத்தியும் நான்கு வகைப்படும். அவை: சாத்துவதி, ஆரபடி, கைசிகி, பாரதி என்பனவாம். இவற்றுள் - சாத்துவதி, அறம்பொருளாகத் தெய்வமானிடர் தலைவராக வருவதாம். ஆரபடி, பொருள் பொருளாக வீரராகிய மானிடர் தலைவராக வருவது. கைசிகி, காமம் பொருளாகக் காமுகராகிய மக்கள் தலைவராக வருவது. பாரதி. கூத்தன் தலைவனாகக் கூத்தனும் கூத்தியும் பொருளாகக் காட்டியும் உரைத்தும் வருவதாம்.

இவற்றுள் பாரதி விருத்தி மூன்றும் போலப் பிறிதின் தலைவர் பிறிது பொருள்பற்றி விருத்தி கூறாது பொருளாலே விருத்தி கூறும் என்பர்.

சந்தி ஐந்துவகைப்படும். அவையாவன: முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல் என்பனமாம். இவற்றுள் முகம் எனப்படுவது பண்படுத்தப்பட்ட நிலத்திலிட்ட வித்துப் பருவஞ்செய்து முளைத்து முடிவது போல்வதாம். பிரதிமுகம் - அங்ஙனம் முளைத்தலை முதலாகக் கொண்டு தோடு தோன்றி நாற்றாய் முடிவது போல்வது. கருப்பம்-அந்நாற்று முதலாய்க் கருவிருந்து பெருகித் தன்னுட் பொருள் பொதிந்து கருப்ப முற்றி நிற்பது போல்வது. விளைவு-கருப்ப முதலாய் விரிந்து கதிர் திரண்டிட்டுக் காய்த்துத் தாழ்ந்து முற்றி விளைந்து முடிவது போல்வது. துய்த்தல் - விளைந்த பொருளை அறுத்துப் போரிட்டுக் கடாவிட்டுத் தூற்றிப் பொலி செய்து கொண்டுபோய் உண்டு மகிழ்வது போல்வது. இவை ஐந்து சந்தியும் நாட்டியக் கட்டுரை.

சுவை ஒன்பது வகைப்படும்; அவையாவன: நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, நடுவுநிலை என்பன.

சாதி நான்கு வகைப்படும், அவையாவன : நாடகம், அந்தணர்சாதி பிரகரணப் பிரகரணம், அரசர்சாதி; பிரகரணம், வணிகர்சாதி; அங்கம் சூத்திரச்சாதி. குறிப்பு, நகை முதலிய சுவையுணர்வு பிறந்தவழி அவற்றால் தோன்றும் உள்ள நிகழ்ச்சி. எனவே, இஃது ஒன்பது வகைப்படும் என்பது பெற்றாம்.

சத்துவம், உள்ளத்தின்கண் சுவையுணர்வு பிறந்தவழி கண்ணீரரும் பல் மெய்ம்மயிர் சிலிர்த்தல் முதலாக வுடம்பின்கண் நிகழும் வேறுபாடுகள். சத்துவம் எனினும் விறல் எனினும் ஒக்கும். விறல் தானும் பத்துவகைப்படும்; அவையாவன: மெய்ம்மயிர் சிலிர்த்தல், கண்ணீர் வார்தல், நடுக்கமெடுத்தல், வியர்த்தல், தேற்றம், களித்தல், விழித்தல், வெதும்பல், சாக்காடு, குரற்சிதைவு என்னுமிவை.

இவ்விறல்களும் சுவையவிநயம் எனவும்படும். அவை வருமாறு:

(1) நகை: நகையி னவிநயம் நாட்டுங் காலை, முகைபடு நகையது பிறர் நகை யுடையது, கோட்டிய முகத்தது.....விட்டுமுரி புருவமொடு விலாவிறுப் புடையது, செய்வது பிறிதாய் வேறுசே திப்பதென்றையமில் புலவர் ஆய்ந்தனரென்ப.

(2) அழுகை அவலத் தவிநயம் அறிவரக் கிளப்பின். கவலையொடு புணர்ந்த கண்ணீர் மாரியும், வாடிய நீர்மையும் வருந்திய செலவும். பீடழி யிடும்பையும் பிதற்றிய சொல்லும், நிறைகை யழிதலும் நீர்மையில் கிளவியும் பொறையின் றாகலும் புணர்த்தினர் புலவர்.

(3) இனிவரல்: இழிப்பி னவிநய மியம்புங் காலை, இடுக்கிய கண்ணும் எயிறுபுறம் போதலும், ஒடுங்கிய முகமு முஞற்றாக் காலும், சோர்ந்த யாக்கையுஞ் சொன்னிரம் பாமையும், நேர்ந்தன வென்ப நெறியறிந் தோரே.

(4) மருட்கை : அற்புத வவிநய மறிவரக் கிளப்பிற், சொற்சோர்வுடையது சோர்ந்த கையது, மெய்ம்மயிர் குளிர்ப்பது வியத்தக வுடைய தெய்திய திமைத்தலு மிகவாதென்றையமில் புலவரறைந்தன ரென்ப.

(5) அச்சம்: அச்ச வவிநயம் ஆயுங்காலை ஒடுங்கிய வுடம்பு நடுங்கிய நிலையு மலங்கிய கண்ணும் கலங்கிய வுளனும், கரந்துவர லுடைமையுங் கையெதிர் மறுத்தலும், பரந்த நோக்கமு மிசைபன் பினவே.

(6) பெருமிதம்: வீரச்சுவை யவிநயம் விளம்புங் காலை, முரிந்த புருவமுஞ் சிவந்த கண்ணும், பிடித்த வாளும் கடித்த வெயிறும் மடித்த வுதடுஞ் சுருட்டிய நுதலும், திண்ணென வுற்றசொல்லும் பகைவரை, எண்ணல் செல்லா விகழ்ச்சியும் பிறவும், நண்ணு மென்ப நன்குணர்ந்தோரே.

(7) வெகுளி: இதற்குரிய நூற்பா மறைந்தொழிந்தது ஆதலான், அதற்குரிய மெய்ப்பாடுகட்கு, கைபிசையா வாய்மடியாக் கண்சிவவா வெய்துயிரா மெய்குலையா, வேரா வெகுண்டெழுந்தான் எனவரும் தண்டியலங்காரத்து மேற்கோள் (70) அதற்குப் பொருந்துமாதலின் அதனைக் கொள்க.

(8) உவகை: காம வவிநயங் கருதுங் காலைத் தூவுள்ளுறுத்த வடிவுந் தொழிலும், காரிகை கலந்த கடைக்கணுங் கவின்பெறு மூரன் முறுவல் சிறுநிலா வரும்பலு, மலர்ந்த முகனு மிரந்தமென் கிளவியும் கலந்தன பிறவுங் கடைப்பிடித் தனரே.

(9) நடுவுநிலை: (சமனிலை) நாட்டுங்காலை நடுவுநிலை யவிநயம், கோட்பா டறியாக் கொள்கையு மாட்சியு, மறந்தரு நெஞ்சமு மாறிய விழியும், பிறழ்ந்த காட்சியு நீங்கிய நிலையும், குறிப்பின் றாகலுந் துணுக்க மில்லாத் தகைமிக வுடைமையுந் தண்ணென வுடைமையும், அளத்தற் கருமையு மன்பொடு புணர்தலும், கலக்கமொடு புணர்ந்த நோக்குங் கதிர்ப்பும் விலக்கா ரென்ப வேண்டுமொழிப் புலவர்.

இனி, இம்மெய்ப்பாடுகள் தாம் அவ்வச் சுவைகளில் எண்ணம் வந்தால் உடம்பிற் றோன்றும் உடம்பினும் காட்டில் முகத்தின்கண் மிகத்தோன்றும்; முகத்தினும் காட்டின் கண்ணில் மிகத்தோன்றும், கண்ணிடத்தும் கடையகத்தே மிகத்தோன்றும் என்பர்.

இனி, அவிநயம் என்றது பாவகத்தை; அஃது இருபத்து நான்கு வகைப்படும் என்ப; அவை வருமாறு:-

(1) வெகுண்டோ னவிநயம் விளம்புங்காலை, கடித்த வாயும் மலர்ந்த மார்பும், துடித்த புருவமுஞ் சுட்டிய விரலும், கன்றின வுள்ள மொடு கைபுடைத் திடுதலும், அன்ன நோக்கமோ டாய்ந்தனர் கொளலே.

(2) பொய்யில் காட்சிப் புலவோ ராய்ந்த (2) ஐயமுற்றோ னவிநய முரைப்பின் வாடிய வுறுப்பு மயங்கிய நோக்கமும், பீடழி புலனும் பேசா திருத்தலும், பிறழ்ந்த செய்கையும் வான்றிசை நோக்கலும், அறைந்தனர் பிறவு மறிந்திசி னோரே.

(3) மடியி னவிநயம் வகுக்குங் காலை, நொடியொடு பலகொட்டாவி மிகவுடைமையு, மூரி நிமிர்த்த முனிவொடு புணர்தலும், காரணமின்றி யாழ்ந்துமடிந் திருத்தலும், பிணியு மின்றிச் சோர்ந்த செலவோ டணிதரு புலவ ராய்ந்தன ரென்ப.

(4) களித்தோ னவிநயம் கழறுங் காலை, ஒளித்தவை யொளியா னுரைத்த லின்மையும் கவிழ்ந்துஞ் சோர்ந்துந் தாழ்ந்துந் தளர்ந்தும் வீழ்ந்தசொல்லொடு மிழற்றிச் செய்தலும், களிகைக் கவர்ந்த கடைக்கணோக் குடைமையும், பேரிசை யாளர் பேணினர் கொளலே.

(5) உவந்தோ னவிநய முரைக்குங் காலை, நிவந்தினி தாகிய கண்மலருடைமையும், இனிதி னியன்ற வுள்ள முடைமையும், முனிவி னகன்ற முறுவனகை யுடைமையும், இருக்கையுஞ் சேறலுங் கானமும் பிறவும் ஒருங்குட னமைந்த குறிப்பிற் றன்றே.

(6) அழுக்கா றுடையோ னவிநய முரைப்பின் இழுக்கொடு புணர்ந்த விசைப்பொருளுடைமையும் கூம்பிய வாயுங் கோடிய வுரையும். ஓம்பாது விதிர்க்குங் கைவகை யுடைமையும் ஆரணங்காகிய வெகுளி யுடைமையும், காரணமின்றி மெலிந்தமுக முடைமையு, மெலிவொடு புணர்ந்த விடும்பையு மேவரப், பொலியு மென்ப பொருந்து மொழிப் புலவர்.

(7) இன்பமொடு புணர்ந்தோ னவிநய மியம்பில், துன்ப நீங்கித் துவர்த்த யாக்கையும், தயங்கித் தாழ்ந்த பெருமகிழ் வுடைமையு, மயங்கி வந்த செலவுநனி யுடைமையும், அழகுள்ளுறுத்த சொற்பொலி வுடைமையும், எழிலொடு புணர்ந்த நறுமல ருடைமையுங், கலங்கள் சேர்ந் தகன்ற தோண்மார் புடைமையு, நலங்கெழு புலவர் நாடினர் என்ப.

(8) தெய்வ முற்றோ னவிநயஞ் செப்பிற் கைவிட் டெறிந்த கலக்க முடைமையு, மடித்தெயிறு கௌவிய வாய்த்தொழி லுடைமையும், துடித்த புருவமுந் துளங்கிய நிலையுஞ், செய்ய முகமுஞ் சேர்ந்த செருக்கும், எய்து மென்ப வியல்புணர்ந் தோரே.

(9) ஞஞ்ஞை யுற்றோ னவிநய நாடிற் பன்மென் றிறுகிய நாவழிவுடைமையு, நுரை சேர்ந்து கூம்பும் வாயு நோக்கினர்க் குரைப்போன் போல வுணர்விலாமையும், விழிப்போன் போல விழியா திருத்தலும், விழுத்தக வுடைமையு மொழுக்கி லாமையும், வயங்கிய திருமுக மழுங்கலும் பிறவும், மேவிய தென்ப விளங்குமொழிப் புலவர். இஃது ஏமுறு மாக்கள விநயம்; அஃதாவது, மயக்கமுற்றோ னவிநயம் என்க.

(10) சிந்தையுடம் பட்டோ னவிநயத் தெரியின் முந்தை யாயினும், பீடித்தகைமே லடைத்த கவினும், முடித்த லுறாத கரும நிலைமையும் சொல்லுவது யாது முணரா நிலைமையும், புல்லு மென்ப பொருந்து மொழிப் புலவர்.

(11) துஞ்சா நின்றோ னவிநயத் துணியின் எஞ்சுத லின்றி யிருபுடை மருங்கு, மலர்ந்துங் கவிழ்ந்தும் வருபடை யியற்றியும், அலர்ந் துயிர்ப்புடைய வாற்றலும் ஆகும்.

(12) இன்றுயி லுணர்ந்தோ னவிநய மியம்பின், ஒன்றிய குறுங் கொட் டாவியு முயிர்ப்பும், தூங்கிய முகமுந் துளங்கிய வுடம்பும், ஓங்கிய திரிபு  மொழிந்தவுங் கொளலே.

(13) செத்தோ னவிநயஞ் செப்புங்காலை, அத்தக வச்சமும், அழிப்பு மாக்கலும், கடித்த நிரைப்பலின் வெடித்துப் பொடித்துப் போந்த துணி வுடைமையும் வலிந்த வுறுப்பு, மெலிந்த வகடு மென்மை மிக வுடைமையும் வெண்மணி தோன்றக் கருமணி கரத்தலும் உண்மையிற் புலவ ருணர்ந்த வாறே.

(14) மழை பெய்யப் பட்டோ னவிநயம் வகுக்கின், இழிதக வுடைய வியல்புநனி வுடைமையும், மெய்கூர் நடுக்கமும் பிணித்தலும் படாத்தை மெய்பூண் டொடுக்கிய முகத்தோடு புணர்த்தலும், ஒளிப்படு மன்னி லுலறிய கண்ணும், விளியினுந் துளியினு மடிந்த செவி யுடைமையும், கொடுகிவிட்டெறிந்த குளிர்மிக வுடைமையும், நடுங்கு பல்லொலி யுடைமையு முடியக் கனவுகண் டாற்றா னெழுதலு முண்டே. 

(15) பனித்தலைப் பட்டோ னவிநயம் பகரின், நடுக்க முடைமையு நகைபடு நிலைமையுஞ், சொற்றளர்ந் திசைத்தலு மற்றமி லவதியும், போர்வை விழைதலும் புந்திநோ வுடைமையும், நீறாம் விழியுஞ் சேறு முனிதலும், இன்னவை பிறவு மிசைந்தனர் கொளலே.

(16)உச்சிப் பொழுதின் வந்தோ னவிநயம், எச்ச மின்றி யியம்புங் காலை, சொரியா நின்ற பெருந்துய ருழந்து, தெரியா நின்றவுடம் பெரியென்னச் சிவந்த கண்ணு மயர்ந்த நோக்கமும் பயந்த தென்ப பண்புணர்ந் தோரே.

(17) நாண முற்றோ னவிநய நாடின், இறைஞ்சிய தலையு மறைந்த செய்கையும், வாடிய முகமுங் கோடிய வுடம்பும், கெட்ட வொளியுங் கீழ்க்க ணோக்கமும் ஒட்டின ரென்ப வுணர்ந்திசி னோரே.

(18) வருத்த முற்றோ னவிநயம் வகுப்பிற், பொருத்த மில்லாப் புன்க ணுடைமையும், சோர்ந்த யாக்கையுஞ் சோர்ந்த முடியும், கூர்ந்த வியர்வுங் குறும்பல் லுயர்வும், வற்றிய வாயும் வணங்கிய வுறுப்பும் உற்ற லென்ப வுணர்ந்திசி னோரே.

(19) கண்ணோ வுற்றோ னவிநயங் காட்டி, னண்ணிய கண்ணீர்த் துளிவிரற் றெறித்தலும், வளைந்தபுரு வத்தொடு வாடிய முகமும், வெள்ளிடை நோக்கின் விழிதரு மச்சமும், தெள்ளிதிற் புலவர் தெளிந்தனர் கொளலே.

(20) தலைநோ வுற்றோ னவிநயஞ் சாற்றி, னிலைமை யின்றித் தலையாட் டுடைமையுங், கோடிய விருக்கையுந் தளர்ந்த வேரொடு, பெருவிர லிடுக்கிய நுதலும் வருந்தி, ஒடுங்கிய கண்ணொடு பிறவும், திருந்து மென்ப செந்நெறிப் புலவர்.

(21) அழற்றிறம் பட்டோ னவிநய முரைப்பின், நிழற்றிறம் வேண்டு நெறிமையின் விருப்பும், அழலும் வெயிலுஞ் சுடரு மஞ்சலும், நிழலு நீருஞ் சேறு முவத்தலும், பனிநீ ருவப்பும் பாதிரித் தொடையலும், நுனிவிர லீர மருநெறி யாக்கலும், புக்க துன்பமொடு புலர்ந்த யாக்கையும், தொக்க தென்ப துணிவறிந் தோரே.

(22) சீத முற்றோ னவிநயஞ் செப்பி, னோதிய பருவரலுள்ளமோ டுழத்தலும், ஈர மாகிய போர்வை யுறுத்தலும், ஆர வெயிலுழந் தழலும் வேண்டலும், உரசியு முரன்று முயிர்த்து முரைத்தலும், தக்கன பிறவுஞ் சாற்றினர் புலவர்.

(23) வெப்பி னவிநயம் விரிக்குங் காலைத், தப்பில் கடைப்பீடித் தன்மையுந் தாகமும், எரியி னன்ன வெம்மையோ டியைவும், வெருவரு மியக்கமும் வெம்பிய விழியும், நீருண் வேட்கையு நிரம்பா வலியும், ஒருங் காலை யுணர்ந்தனர் கொளலே.

(24) கொஞ்சிய மொழியிற் கூரெயிறு மடித்தலும், பஞ்சியின் வாயிற் பனிநுரை கூம்பலும். தஞ்ச மாந்தர் தம்முக நோக்கியோர், இன்சொ லியம்புவான் போலியம் பாமையும், நஞ்சுண் டோன்ற னவிநய மென்ப. சொல்லிய வன்றியும் வருவன வுளவெனிற், புல்லுவழிச் சேர்த்திப் பொருந்துவழிப் புணர்ப்ப, எனவரும்.

இனி, சொல் லென்னும் விலக்குறுப்புத் தானும் மூன்றுவகைப்படும். அவையாவன: உட்சொல், புறச்சொல், தானே கூறல் என்பன. இவற்றை நெஞ்சொடு கூறல் கேட்போர்க் குரைத்தல் தஞ்சம்வர அறிவு தானே கூறலென் றம்மூன் றென்ப செம்மைச் சொல்லே என வரும் நூற்பாவான் அறிக. இவற்றுள் தானே கூறல் என்பதனை ஆகாயச் சொல் என்பர் (அடியார்க்.)

சொல்வகை நான்கு வகைப்படும். அவையாவன: சுண்ணம் (நான் கடியான் வருவது) சுரிதகம் (எட்டடியான் வருவது) வண்ணம் (பதினாறடியான் வருவது) வரிதகம் (முப்பத்திரண்டடியான் வருவது) என்பன.

இவற்றுள் வண்ணம் என்பது (முப்பத்திரண்டடிகளாலியன்ற பாடல்) ஆறாய் வரின், பெருவண்ணம் எனவும் இருபத்தொன்றாய் வரின் இடை வண்ணம் எனவும், நாற்பத்தொன்றாய் வரின் வனப்பு வண்ணம் எனவும்படும். இவ்வாற்றால் வண்ணம் என்பது சொல்வகையினுள் ஒன்றாதலோடன்றி விலக்குறுப்புக்களுள் பாடல் வகையால் ஓருறுப் பாதலுமறிக.

இனி, வரி எட்டு வகைப்படும். அவையாவன : கண் கூடுவரி, காண்வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சிவரி, காட்சிவரி, எடுத்துக் கோள் வரி என்பன. இவற்றை, கண்கூடுவரி காண்வரி உள்வரி, புறவரி, கிளர்வரியைந்தோ டொன்ற வுரைப்பிற், காட்சி தேர்ச்சி யெடுத்துக் கோளென மாட்சியின் வரூஉ மெண்வகை நெறித்தே எனவரும் நூற்பாவானு முணர்க. இவற்றினியல் பெல்லாம் கானல் வரியினும் வேனிற் காதையினும் கூறப்படும், அவற்றை ஆண்டுக் காண்க.

இனி, இவ்வரி யென்பதனைப் பல்வரிக் கூத்து என்பாரு முளர். அவை வருமாறு :-

சிந்துப் பிழுக்கை யுடன்சக்தி யோர்முலை
கொந்தி கவுசி குடப்பிழுக்கை - கந்தன்பாட்
டாலங்காட் டாண்டி பருமண னெல்லிச்சி
சூலந் தருநட்டந் தூண்டிலுடன் - சீலமிகும்
ஆண்டி யமண்புனவே டாளத்தி கோப்பாளி
பாண்டிப் பிழுக்கையுடன் பாம்பாட்டி - மீண்ட
கடவுட் சடைவீர மாகேசங் காமன்
மகிழ்சிந்து வாமன ரூபம் - விகடநெடும்
பத்திரங் கொற்றி பலகைவாள் பப்பரப்பெண்
தத்தசம் பாரம் தகுணிச்சங் - கத்து
முறையீண் டிருஞ்சித்து முண்டித மன்னப்
பறைபண் டிதன்புட்ப பாணம் - இறைபரவு
பத்தன் குரவையே பப்பறை காவதன்
பித்தனொடு மாணி பெரும்பிழுக்கை - எத்துறையும்
ஏத்திவருந் கட்களி யாண்டு விளையாட்டுக்
கோத்த பறைக்குடும்பு கோற்கூத்து - மூத்த
கிழவன் கிழவியே கிள்ளுப் பிறாண்டி
அழகுடைய பண்ணிவிக டாங்கந் - திகழ்செம்பொன்
அம்மனை பத்து கழங்காட லாலிக்கும்
விண்ணகக் காளி விறற் கொந்தி - அல்லாத
வாய்ந்த தனிவண்டு வாரிச்சி பிச்சியுடன்
சாந்த முடைய சடாதாரி - ஏய்ந்தவிடை
தக்கபிடார் நீர்த்தந் தளிப்பாட்டுச் சாதுரங்கந்
தொக்க தொழில்புனைந்த சோணாண்டு - மிக்க
மலையாளி வேதாளி வாணி குதிரை
சிலையாடு வேடு சிவப்பத் - தலையில்
திருவிளக்குப் பிச்சி திருக்குன் றயிற்பெண்
டிருண்முகத்துப் பேதை யிருளன் - பொருமுகத்துப்
பல்லாங் குழியே பகடி பகவதியாள்
நல்லார்தந் தோள்வீச்சு நற்சாழல் - அல்லாத
உந்தி யவலிடி யூராளி போகினிச்சி
குந்திவரும் பாரன் குணலைக்கூத் - தந்தியம்போ
தாடுங் களிகொய்யு முள்ளிப்பூ வையனுக்குப்
பாடும்பாட் டாடும் படுபள்ளி - நாடறியுங்
கும்பீடு நாட்டங் குணாட்டங் குணாலையே
துஞ்சாத கும்பைப்பூச சோனக - மஞ்சரி
ஏற்ற வுழைமை பறைமைமுத லென்றெண்ணிக்
கோத்தவரிக் கூத்தின் குலம்.

என அடியார்க்கு நல்லார் அரிதின் எடுத்துக்காட்டிய இச்செய்யுளால் சிலப்பதிகாரகாலந் தொடங்கி அவ்வுரையாசிரியர் காலமீறாக இச் செந்தமிழ் நாட்டு மக்கள் மகிழ்ந்தாடிக்களித்த வரிக்கூத்துக்களை அறியலாம். இவையிற்றுட் சில வரிக் கூத்திற்கியன்ற பாடல்கள் இந்நூலகத்துக்கும் வருதலை ஆங்காங்குக் காட்டுதும்.

இனி, சேதம் என்னும் விலக்குறுப்பு ஆரியம் தமிழ் என இருவகைப்படும். வடமொழிக் கதையை யாதல் தமிழ் மொழியிலியன்ற கதையை யாதல் நாடக மாடுதற்கியைய விடவேண்டிய பகுதியை விட்டுக் கொள்ளவேண்டியவற்றைக் கொள்ளுதலால் இதுவும் நாடகத்திற்குறுப்பாயிற்று. பெயர்க் காரணமும் இதனால் விளங்கும் இதனை,

ஆரியந் தமிழெனுஞ் சீர்நட மிரண்டினும்
ஆதிக் கதையை யவற்றிற் கொப்பச்
சேதித் திடுவது சேதமென் றாகும்.

எனவரும் நூற்பாவான் உணர்க. இவையெல்லாம் விலக்குறுப்புகளின் விளக்கமாகும்.

இனி, விலக்குறுப்பு என்ற சொற்குத் தலைவன் செலுத்துகின்ற கதையை (நாடகத்திற்கியைய விலக்க வேண்டுவனவற்றை) விலக்கியும் (கொள்ள வேண்டியவற்றைக் கொண்டு) அக்கதையையே நடாத்தியும் (இயற்புலவனால்) முன்பு செய்த இயற்றமிழ் அல்லது ஆரியக் கதைகட்கே நாடகத் தமிழாங்கால் உறுப்பாகுவது என்பதாம்.

(14-15) பதினோராடலும்.......அறிந்தாங்கு என்புழிக் கூறப்பட்ட பதினோராடலாவன:

கடையமயி ராணிமரக் கால்விந்தை கந்தன்
குடைகுடிமால் அல்லியமற் கும்பம் - சுடர்விழியாற்
பட்டமதன் பேடுதிருப் பாவையரன் பாண்டரங்கம்
கொட்டியிவை காண்பதினோர் கூத்து

எனவரும் வெண்பாவானறிக. இவற்றைத் தெய்வவிருத்தி என்பர். இவை நின்றாடல், படிந்தாடல் என இருவகைப்படும், அவற்றை,

அல்லியங் கொட்டி குடைகுடம் பாண்டரங்கம்
மல்லுட னின்றாடல் ஆறு

எனவும்,

துடி கடையம் பேடு மரக்காலே பாவை
வடிவுடன் வீழ்ந்தாடல் ஐந்து

எனவும் வரும் செய்யுள்களானறிக.

இனி இப்பதினோராடலும் அசுரரைக் கொல்ல அமரர் ஆடின என்ப. எனவே, இவை ஆரியக் கூத்துக்கள் என்பது பெற்றாம். அகப் பொருளும் புறப்பொருளும் தழுவிவரும் கூத்துக்களே தமிழ்க் கூத்துக்களாம் என்றுணர்க.

இனி இவற்றிற்குரிய உறுப்புகளையும், இவற்றை அமரர் ஆடியதற் கியன்ற காரணங்களையும்,

அல்லிய மாயவ னாடிற் றதற்குறுப்புச்
சொல்லுப ஆறாமெனல்

எனவும்,

கொட்டி கொடுவிடையோ னாடிற் றிதற்குறுப்
பொட்டிய நான்கா மெனல்

எனவும்,

அறுமுகத்தோ னாடல் குடைமற் றதற்குப்
பெறுமுறுப்பு நான்கா மெனல்

எனவும்,

குடத்தாடல் குன்றெடுத்தோ னாடலதனுக்
கடைக்குப வைந்துறுப் பாய்ந்து

எனவும்,

பாண்டரங்க முக்கணா னாடிற் றதற்குறுப்
பாய்ந்தன வாறா மெனல்

எனவும்,

நெடியவ னாடிற்று மல்லாடன் மல்லிற்
கொடியா வுறுப்போரைந் தாம்

எனவும்,

துடியாடல் வேன்முருக னாட லதனுக்
கொடியா வுறுப்போரைந் தாம்

எனவும்,

கடைய மயிராணி யாடிற் றதனுக்
கடைய வுறுப்புக்க ளாறு

எனவும்,

காமன தாடல்பே டாட லதற்குறுப்பு
வாய்மையி னாராயி னான்கு

எனவும்,

மாயவ ளாடன் மரக்கா லதற்குறுப்பு
நாமவகை யிற்சொலுங்கா னான்கு

எனவும்,

பாவை திருமக ளாடிற் றதற்குறுப்
போவாம லொன்றுடனே யொன்று

எனவும், வரும் நூற்பாக்கள் ஆடியோர் பெயரும் உறுப்பும் உணர்த்தின.

இனி, அமரர் இவற்றை நிகழ்த்தியதற்கியன்ற காரணங்களை அடிகளார் கடலாடு காதைக்கண் விரித்தோதுவர். அன்றியும்,

புரமெரித்தல் சூர்மாத் துளைபடுத்தல் கஞ்ச
னுரனெரித்தல் வாணனைவா னுய்த்தல் - பெரிய

அரன்முத லாகவே லன்முதன் மாயோன்
அமர்முத லாடிய வாறு

எனவரும் வெண்பாவானு முணர்க.

(14) பாட்டும் என்றது அகநாடகங்கட்கும் புறநாடகங்கட்குமுரிய உருக்களும் என்றவாறு. இவற்றை உருக்கள் என்று வழங்குவது இசை நூலோர் வழக்கும், கூத்த நூலோர் வழக்கும் என்றுணர்க இற்றைநாளும் அவர் உருப்படி என்று வழங்குதல் காணலாம்.

அகநாடக வுருக்கள், கந்தமுதலாகப் பிரபந்த மீறாகவுள்ள இருபத்தெட்டும் என்பர்; இவற்றுள் கந்தம் என்பது அடிவரையறை யுடைத் தாய் ஓருதாளத்தாற் புணர்ப்பது. பிரபந்தம் அடிவரையறையின்றிப் பல தாளத்தாற் புணர்ப்பது; புறநாடகங்களுக்குரிய உருக்கள், தேவபாணி முதலாக அரங்கொழி செய்யுளீறாகவுள்ள செந்துறை விகற்பங்கள் எல்லாம் என்க.

(14) கொட்டும் என்றது கூத்துக்களுக்குரிய இடைக்கருவிகளை; அவை தாமும் கீதாங்கம் நிருத்தாங்கம் உபயாங்கம் என்பன; இவற்றுள் கீதாங்கம் இசைப்பாவிற்குக் குயிலுவன; நிருத்தாங்கம் கூத்திற்குக் குயிலுவன; உபயாங்கம் இரண்டிற்கும் குயிலப்படுவன.

(15) விதிமாண் கொள்கை - இலக்கண விதியால் மாட்சிமையுடைய நூல் விளங்க அறிதலாவது ஐயந்திரிபற விளங்கும்படி பயின்றறிதல். ஆங்கு - அசையெனினுமாம்.

ஆடல் - கூத்துக்கள். அவை அகக்கூத்தும் புறக்கூத்தும் என முற் கூறப்பட்டன. அவற்றுள் அகக்கூத்திற்குத் தேசிக்குரிய கீற்று கடிசரி முதலிய கால்களும்; சுற்றுதல் எறிதல் உடைத்தல் முதலிய வடுகிற்குரிய கால்களும் உடற்றூக்கு முதலிய உடல வர்த்தனைகளும் உரியனவாம்.

இனி, சிங்களம் என்று ஒரு கூத்துளது என்றும் அதற்கு அகக்கூத்திற்குரிய கால்களே உரியனவாதலால் அடிகளார் அதனைக் கூறிற்றிலர் என்பர் அடியார்க்கு நல்லார். எனவே, தேசி வடுகு சிங்களம் என மூவகைக் கூத்துக்கள் தமிழகத்தே ஆடப்பட்டன என்பது பெற்றாம். தேசி - தமிழ்க்கூத்து.

(15) புறக்கூத்திற்குரிய ஆடல்கள் - பெருநடை, சாரியை பிரமரி முதலாயினவும் முற்கூறப்பட்ட அல்லிய முதலிய பதினோராடலிற் கூத்துக்களுமாம் என்பர். இவ்வகையால் அகக்கூத்துக்களுக்கும் புறக் கூத்துக்களுக்குமுரிய ஆடலை யெல்லாம் விளங்க அறிந்தவனாய் என்றவாறு.

(16) பாடலும் என்றது, பண்ணல் முதலிய எட்டுவகைப்பட்ட குறிக்கோளும், இன்பம் தெளிவு நிறை ஒளி வன்சொல் இறுதி மந்தம் உச்சம் என்னும் எண்வகைப் பயனும் உடைய பாடலின் இயல்பும் என்றவாறு.

பாணி - தாளம், இது மாத்திரை வகையால் கொட்டு, அசை, தூக்கு, அளவு என நால்வகைப்படும். இதனை,

கொட்டு மசையும் தூக்கு மளவும்
ஒட்டப் புணர்ப்பது பாணி யாகும்

எனவரும் நூற்பாவானுணர்க. இவை மாத்திரப் பெயர்கள். இவற்றுள் கொட்டு - அரைமாத்திரை; இதனை க என்னும் குறியீட்டினால் குறிப்பர். அசை - ஒரு மாத்திரை, இதற்கு எ குறியீடு. தூக்கு - இரண்டு மாத்திரை; இதற்கு உ குறியீடு. அளவு - மூன்று மாத்திரை; இதற்கு ஃ குறியீடு. இதனை,

ககரங் கொட்டே எகர மசையே
உகரந் தூக்கே யளவே யாய்தம்

எனவரும் நூற்பாவாலறிக. இவற்றின் தொழில் வருமாறு: கொட்டாவது - அமுக்குதல். அசை-தாக்கி யெழுதல்: தூக்கு - தாக்கித் தூக்குதல். அளவு-தாக்கின வோசை மூன்று மாத்திரை ஒலிக்குமாறு செய்தல்.

இனி, தாளங்களுள் வைத்து, அரை மாத்திரையுடைய ஏகதாள முதலாகப் பதினாறு மாத்திரையுடைய பார்வதி லோசனம் ஈறாகப் கூறப்பட்ட நாற்பத்தொரு தாளமும் புறக்கூத்திற்குரியன என்ப. ஆறன்மட்ட மென்பனவும், எட்டன் மட்டமென்பனவும் தாள வொரியல் என்பனவும், தனி நிலை யொரியலென்பனவும், ஒன்றன் பாணி முதலாக எண் கூத்துப்பாணி யீறாகக்கிடந்த பதினொரு பாணி விகற்பங்களும் முதனடை வாரமுதலாயினவும் அகக்கூத்திற்குரியன எனவும் கூறுப.

(16) தூக்கும் என்றது, இத்தாளங்களின் வழிவரும் செந்தூக்கு, மதலைத்தூக்கு, துணிபுத்தூக்கு, கோயிற்றூக்கு, நிவப்புத்தூக்கு, கழாற்றூக்கு, நெடுந்தூக்கெனப்பட்ட ஏழு தூக்குக்களும் என்ப. இவற்றினியல்பினை,

ஒருசீர் செந்தூக் கிருசீர் மதலை
முச்சீர் துணிபு நாற்சீர் கோயில்
ஐஞ்சீர் நிவப்பா மறுசீர் கழாஅலே
எழுசீர் நெடுந்தூக் கென்மனார் புலவர்

எனவரும் நூற்பாவான் அறிக.

(17) கூடிய நெறியின - கூத்தும் பாட்டும் தாளமும் தம்மிற் கூடிய நெறியினையுடைய இருவகைக் கூத்துக்கள் என்க.

கொளுத்துதல் - கொள்வித்தல்; பயிற்றுதல்.

(18) பிண்டி - ஒற்றைக்கை. முற்கூறப்பட்ட உட்சொல், புறச்சொல் ஆகாயச்சொல் என்னும் மூன்றனையும் அவிநயத்தோடு நாட்டிச் செய்யுங்கால் அதற்குக் கருவியாவன, கையும் கருத்தும் மிடறும் உடம்பும் என்னும் இந் நான்குமே. இவற்றை,

அவைதாம், கையே கருத்தே மிடறே சரீரமென்
றெய்தமுன் பமைத்த விவையென மொழிப

எனவரும் நூற்பாவினாலறிக. இனி, கையென்பது ஒற்றைக்கை. இரட்டைக்கை என்றும், இரண்டு வகைப்படும். இவற்றை, இணையா வினைக்கை எனவும் இணைக்கை எனவும் வழங்குதலுண்டு. இன்னும், இவற்றோடு, ஆண்கை, பெண்கை, அலிக்கை, பொதுக்கை என்னும் நான்கினையும் கூட்டி ஆறுவகைப்படும் என்பாருமுளர்.

இனி, இவற்றுள் இணையா வினைக்கை (ஒற்றைக்கை) முப்பத்து மூன்று வகைப்படும். அவற்றை,

இணையா வினைக்கை யியம்புங் காலை
அணைவுறு பதாகை திரிபதா கையே
கத்தரிகை தூபம் அராளம் இளம்பிறை
சுகதுண் டம்மே முட்டி கடகம்
சூசி பதும கோசிகந் துணிந்த
மாசில்காங் கூலம் வழுவறு கபித்தம்
விற்பிடி குடங்கை அலாபத் திரமே
பிரமரந் தன்னொடு தாம்பிர சூடம்
பிரகாசம் முகுளம் பிண்டி தெரிநிலை
பேசிய மெய்ந்நிலை உன்னம் மண்டலம்
சதுரம் மான்றலை சங்கே வண்டே
அதிர்வில் இலதை கபோதம் மகரமுகம்
வலம்புரி தன்னொடு முப்பத்து மூன்றென்
றிலங்குமொழிப் புலவ ரிசைத்தனர் என்ப

எனவரும் நூற்பாவிற் காண்க.

இவற்றுள் பிண்டி யென்றது ஒற்றைக்கைக்கு ஆகுபெயர். பிணையல் - இணைதல் ஆதலால் இணைக்கையாயிற்று.

இனி, பிண்டிக்குரிய முப்பத்து மூன்று வகைக் கைகட்கும் செய்முறைகளை வருகின்ற நூற்பாக்களில் காண்க.

1-பதாகை

பதாகை யென்பது பகருங் காலை
பெருவிரல் குஞ்சித் தலாவிர னான்கு
மருவி நிமிரு மரபிற் றென்ப

2-திரிபதாகை

திரிப தாகை தெரியுங் காலை
யறைப தாகையி னணிவிரன் முடக்கினஃ
தாமென மொழிப வறிந்திசி னோரே

3-கத்தரிகை

கத்தரி கையே காண்டக விரிப்பின்
அத்திரி பதாகையின் அணியின் புறத்தைச்
சுட்டக மொட்ட விட்டுநிமிர்ப் பதுவே

4-தூபம்

தூப மென்பது துணியுங் காலை
விளங்குகத் தரிகை விரலகம் வளைந்து
துளங்கு மென்ப துணிபறிந் தோரே

5-அராளம்

அராள மாவ தறிவரக் கிளப்பிற்
பெருவிரல் குஞ்சித்துச் சுட்டுவிரன் முடக்கி
விரல்கண் மூன்று நிமிர்த்தகம் வளைத்தற்
குரிய தென்ப வுணர்ந்திசி னோரே

6-இளம்பிறை

சுட்டும் பேடு மநாமிகை சிறுவிரல்
ஒட்டியகம் வளைய வொசித்த பெருவிரல்
விட்டு நீங்கும் விதியிற் றென்ப

7-சுகதுண்டம்

சுகதுண்ட மென்பது தொழில்பெறக் கிளப்பிற்
சுட்டு விரலும் பெருவிர றானும்
ஒட்டி யுகிர்நுனை கௌவி முன்வளைந்
தநாமிகை முடங்கப் பேட்டொடு சிறுவிர
றான்மிக நிமிர்ந்த தகுதித் தென்ப

8-முட்டி

முட்டி யென்பது மொழியுங் காலைச்
சுட்டு நடுவிர லநாமிகை சிறுவிர
லிறுக முடக்கி யிவற்றின்மிசைப் பெருவிரன்
முறுகப் பிடித்த முறைமைத் தென்ப

9-கடகம்

கடக முகமே கருதுங் காலைப்
பெருவிர னுனியுஞ் சுட்டுவிர னுனியு
மருவ வளைந்தவ் வுகிர்நுனி கௌவி
யொழிந்த மூன்றும் வழிவழி நிமிர
மொழிந்தன ரென்ப முடிபறிந் தோரே

10-சூசி

சூசி யென்பது துணியுங் காலை
நடுவிரல் பெருவிர லென்றிவை தம்மி
லடைவுட னொற்றிச் சுட்டுவிர னிமிர
வொழிந்த மூன்றும் வழிவழி நிமிர
மொழிந்தன ரென்ப முடிபறிந் தோரே

11-பதுமகோசிகம்

பதும கோசிகம் பகருங் காலை
யொப்பக் கைவளைத் தைந்து விரலு
மெய்ப்பட வகன்ற விதியிற் றாகும்

12-காங்கூலம்

காங்கூ லம்மே கருதுங் காலைச்
சுட்டும் பேடும் பெருவிரல் மூன்று
மொட்டிமுன் குவிய வநாமிகை முடங்கிச்
சிறுவிர னிமிர்ந்த செய்கைத் தாகும்

இது, குவிகாங்கூலம், முகிழ்காங்கூலம், மலர்காங்கூலம் என மூவகைப்படும். அவற்றுள், இது குவிகாங்கூலமாம். முகிழ்காங்கூலம்-

முகிழ் காங்கூலம் முந்துற மொழிந்த
குவிகாங்கூலம் குவிவிழந் ததுவே

மலர்காங்கூலம்-

மலர்காங்கூல மதுமலர்ந் ததுவே

13-கபித்தம்

கபித்த மென்பது காணுங் காலைச்
சுட்டுப் பெருவிர லொட்டிநுனி கௌவி
யல்ல மூன்று மெல்லப் பிடிப்பதுவே.

14-விற்பிடி

விற்பிடி யென்பது விரிக்குங் காலைச்
சுட்டொடு பேடி யநாமிகை சிறுவிர
லொட்டி யகப்பால் வளையப் பெருவிரல்
விட்டு நிமிரும் விதியிற் றாகும்.

15-குடங்கை

குடங்கை யென்பது கூறுங் காலை
யுடங்குவிரற் கூட்டி யுட்குழிப் பதுவே

16-அலாபத்திரம்

அலாபத் திரமே யாயுங் காலைப்
புரைமையின் மிகுந்த சிறுவிரன் முதலா
வருமுறை யைந்தும் வளைந்துமறி வதுவே.

17-பிரமரம்

பிரமர மென்பது பேணுங் காலை
யநாமிகை நடுவிர லறவுறப் பொருந்தித்
தாம்வலஞ் சாயத் தகைசால் பெருவிர
லொட்டிய நடுவுட் சேரச் சிறுவிரல்
சுட்டு வளைந்துபின் றோன்றிய நிலையே.

18-தாம்பிர சூடம்

தாம்பிர சூடமே சாற்றுங் காலைப்
பேடே சுட்டுப் பெருவிர னுனியொத்துக்
கூடி வளைந்து சிறுவிர லணிவிர
லுடனதின் முடங்கி நிமிரநிற் பதுவே.

19-பசாசம்

பசாசம் என்பது மூன்று வகைப்படும். அவையாவன: அகநிலைப் பசாசம், முகநிலைப் பசாசம், உகிர்நிலைப் பசாசம் என்பன. அவை வருமாறு:-

பசாசம் என்பது பாற்படக் கிளப்பின்
அகநிலை முகநிலை யுகிர்நிலை யென்னத்
தொகநிலை பெற்ற மூன்றுமென மொழிப

அவைதாம்,

சுட்டுவிர னுனியிற் பெருவிர லகப்பட
வொட்டி வளைத்த தகநிலை முகநிலை
யவ்விர னுனிகள் கௌவிப் பிடித்தல்
செவ்வி தாகுஞ் சிறந்த வுகிர்நிலை
யுகிர்நுனை கௌவிய தொழிந்த மூன்றுந்
தகைமையி னிமிர்த்தலம் மூன்றற்குந் தகுமே.

20-முகுளம்

முகுள மென்பது மொழியுங் காலை
ஐந்து விரலுந் தலைகுவிந் தேற்ப
வந்து நிகழு மாட்சித் தாகும்.

21-பிண்டி

பிண்டி யென்பது பேசுங் காலைச்
சுட்டுப் பேடி யநாமிகை சிறுவிரல்
ஒட்டி நெகிழ முடங்கவவற் றின்மிசை
விலங்குறப் பெருவிரல் விட்டுங் கட்டியு
மிலங்குவிரல் வழிமுறை யொற்றலு மியல்பே.

22-தெரிநிலை

தெரிநிலை யென்பது செப்புங் காலை
யைந்து விரலு மலர்ந்துகுஞ் சித்த
கைவகை யென்ப கற்றறிந் தோரே.

23-மெய்ந்நிலை

மெய்ந்நிலை யென்பது விளம்புங் காலைச்
சிறுவிர லநாமிகை பேடொடு சுட்டிவை
யுறுத லின்றி நிமிரச் சுட்டின்மிசைப்
பெருவிரல் சேரும் பெற்றித் தென்ப.

24-உன்னம்

உன்ன நிலையே யுணருங் காலைப்
பெருவிரல் சிறுவிர லென்றிவை யிணைய
வருமுறை மூன்று மலர்ந்துநிமிர் வதுவே.

25-மண்டலம்

மண்டல மென்பது மாசறக் கிளப்பிற்
பேடு நுனியும் பெருவிர னுனியுங்
கூடி வளைந்துதம் முகிர்நுனை கௌவி
யொழிந்த மூன்று மொக்க வளைவதென
மொழிந்தன ரென்ப முழுதுணர்ந் தோரே.

26-சதுரம்

சதுர மென்பது சாற்றுங் காலை
மருவிய மூன்று நிமிர்ந்தகம் வளையப்
பெருவிர லகமுறப் பொற்பச் சேர்த்திச்
சிறுவிரல் பின்பே நிமிர்ந்த செவ்வியின்
இறுமுறைத் தென்ப வியல்புணர்ந் தோரே.

27-மான்றலை

மான்றலை யென்பது வகுக்குங் காலை
மூன்றிடை விரலு நிமிர்ந்தக மிறைஞ்சிப்
பெருவிரல் சிறுவிர லென்றிவை நிமிர்ந்து
வருவ தென்ப வழக்கறிந் தோரே.

28-சங்கு

சங்கெனப் படுவது சாற்றுங் காலைச்
சிறுவிரன் முதலாச் செறிவிர னான்கும்
பெறுமுறை வளையப் பெருவிர னிமிர்ந்தாங்
கிறுமுறைத் தென்ப வியல்புணர்ந் தோரே.

29-வண்டு

வண்டென் பதுவே வகுக்குங் காலை
யநாமிகை பெருவிர னனிமிக வளைந்து
தாநுனி யொன்றித் தகைசால் சிறுவிரல்
வாலிதி னிமிர மற்றைய வளைந்த
பாலின தென்ப பயன்றெரிந் தோரே.

30-இலதை

இலதை யென்ப தியம்புங் காலைப்
பேடியுஞ் சுட்டும் பிணைந்துட னிமிர்ந்து
கூடிய பெருவிரல் கீழ்வரை குறுகக்
கடையிரு விரலும் பின்னர் நிமிர்ந்த
நடையின தென்ப நன்னெறிப் புலவர்.

31- கபோதம்

காணுங் காலைக் கபோத மென்பது
பேணிய பதாகையிற் பெருவிர னிமிரும்.

32-மகரமுகம்

மகரமுக மென்பது வகுக்குங் காலைச்
சுட்டொடு பெருவிரல் கூட வொழிந்தவை
யொட்டி நிமிர்ந்தாங் கொன்றா வாகும்.

33-வலம்புரி

வலம்புரிக் கையே வாய்ந்த கனிட்ட
னலந்திகழ் பெருவிர னயமுற நிமிர்ந்து
சுட்டுவிரன் முடங்கிச் சிறுவிர னடுவிரல்
விட்டுநிமிர்ந் திறைஞ்சும் விதியிற் றென்று
கூறுவர் தொன்னூற் குறிப்புணர்ந் தோரே.

இவை யெல்லாம் பிண்டிக்கை வகை. பிண்டிக்கை எனினும் ஒற்றைக் கை யெனினும் இணையா வினைக்கை யெனினும் ஒக்கும்.

(18) பிணையல் என்னும் இரட்டைக்கை பதினைந்து வகைப்படும். இணைக்கை யென்பதுமது. இவை வருமாறு:

எஞ்சுத லில்லா இணைக்கை யியம்பில்
அஞ்சலி தன்னொடு புட்பாஞ் சலியே
பதுமாஞ் சலியே கபோதங் கற்கடகம்
நலமாஞ் சுவத்திகங் கடகா வருத்தம்
நிடதந் தோர முற்சங்க மேம்பட
வுறுபுட் பபுட மகரஞ் சயந்த
மந்தமில் காட்சி யபய வத்தம்
எண்ணிய வருத்த மானந் தன்னொடு
பண்ணுங் காலை பதினைந் தென்ப

எனவரும் நூற்பாவானுணர்க.

இனி இவ்விணைக்கையின் தொழின் முறைகளை வருகின்ற நூற்பாக்களானறிக. அவையாவன:

1-அஞ்சலி

அஞ்சலி யென்ப தறிவுறக் கிளப்பி
னெஞ்ச லின்றி யிருகையும் பதாகையாய்
வந்தகம் பொருந்து மாட்சித் தென்றனர்
அந்தமில் காட்சி யறிந்திசி னோரே

2-புட்பாஞ்சலி

புட்பாஞ் சலியே பொருந்தவிரு குடங்கையுங்
கட்டி நிற்குங் காட்சிய தென்ப

3-பதுமாஞ்சலி

பதுமாஞ் சலியே பதும கோசிக
மெனவிரு கையு மியைந்துநிற் பதுவே

4-கபோதம்

கருதுங் காலை கபோத வினைக்கை
யிருகையுங் கபோத மிசைந்துநிற் பதுவே

5-கற்கடகம்

கருதுங் காலைக் கற்கட கம்மே
தெரிநிலை யங்குலி இருகையும் பிணையும்

6-சுவத்திகம்

சுவத்திக மென்பது சொல்லுங் காலை
மணிக்கட் டமைந்த பதாகை யிரண்டையு
மணிக்கட் டேற்றி வைப்ப தாகும்

7-கடகாவருத்தம்

கருதிய கடகா வருத்தக் கையே
யிருகையுங் கடக மணிக்கட் டியைவது

8-நிடதம்

நிடத மென்பது நெறிப்படக் கிளப்பின்
முட்டி யிரண்டுகை யுஞ்சம மாகக்
கட்டி நிற்குங் காட்சித் தென்ப

9-தோரம்

தோர மென்பது துணியுங் காலை
யிருகையும் பதாகை யகம்புற மொன்ற
மருவி முன்றாழும் வழக்கிற் றென்ப

10- உற்சங்கம்

உற்சங்க மென்ப துணருங் காலை
யொருகை பிறைக்கை யொருகை யராளந்
தெரிய மணிக்கட்டி லேற்றிவைப் பதுவே

11-புட்பபுடம்

புட்பபுட மென்பது புகலுங் காலை
யொத்த விரண்டு குடங்கையு மியைந்து
பக்கங் காட்டும் பான்மைத் தென்ப

12-மகரம்

மகர மென்பது வாய்மையி னுரைப்பிற்
கபோத மிரண்டு கையு மகம்புற
மொன்ற வைப்பதென் றுரைத்தனர் புலவர்

உச்சித்தம் என்பதும் இதனது பெயரேயாம்.

13-சயந்தம்

சயந்த மென்றது .... ..... ....

14-அபயவத்தம்

அபயவத் தம்மே யறிவுறக் கிளப்பின்
வஞ்சமில் சுகதுண்ட மிருகையு மாட்சியின்
நெஞ்சற நோக்கி நெகிழ்ந்துநிற் பதுவே

15-வருத்தமானம்

வருத்த மானம் வகுக்குங் காலை
முகுளக் கையிற் கபோதக் கையை
நிகழச் சேர்த்து நெறியிற் றென்ப

எனவரும். இவை பதினைந்தும் பிணையற்கை யெனக் கொள்க.

இணைக்கை, இரட்டைக்கை, பிணையல் என்பன ஒரு பொருளன.

18 -எழிற்கை - அழகு பெறக் காட்டுங் கை; தொழிற்கை - தொழில் பெறக் காட்டும் கை. உம்மையால், பொருட்கை என்பதுங் கொள்ளற்பாற்று; என்னை?

எழிற்கை யழகே தொழிற்கை தொழிலே
பொருட்கை கவியிற் பொருளா கும்மே

என்னும் நூற்பாவுங் காண்க.

19-கொண்ட வகை யறிதலாவது பிண்டியும் பிணையலும் புறக் கூத்திற்குக் கொள்ளப்பட்டவை என்றும், எழிற்கையும் தொழிற்கையும் அகக் கூத்திற்குக் கொள்ளப்பட்டவை என்று மறிதல்.

20-21: கூடை வாரம் என்பன பலபொருள் ஒரு சொற்கள். ஈண்டு அவற்றுள், கூடை என்பதற்கு, ஒற்றைக்கை என்றும், வாரம் என்பது இரட்டைக்கை எனவும் பழைய வுரையாசிரியர் பொருள் கொள்கின்றனர். இனி, கூடை செய்தகை வாரத்திற் களைதலும் வாரஞ்செய்தகை கூடையிற் களைதலும் என்பதற்குப் பாட்டிற்கியைய ஆடவேண்டுதலின் பாட்டுக் கூடை கதியினதாகக் கையும் அக்கதிக்கியையக் கூடை கதியின தாகச் செய்தல் அன்றி வாரகதியினதாகாமற் பார்த்தும் அங்ஙனமே வாரப்பாடல் நிகழுங்கால் அப்பாட்டிற்கு அபிநயம் கூடைகதி யாகாமல் அவ்வக்கூத்திற் கியையச் செய்தலும் என்பதே அடிகளார் கருத்தாதலும் கூடும் என்று கருதலாம். பாட்டிற்கியன்ற கூடை முதலிய இயக்கங்கள் பின்னர்க் கூறப்படும்.

இதற்கு அகக்கூத்து நிகழுமிடத்து ஒற்றையிற் செய்த கைத் தொழில் இரட்டையிற் புகாமலும், இரட்டையிற் செய்த கைத்தொழில் ஒற்றையிற் புகாமலும் களைதல். இன்னும் தேசியிற் கைத்தொழில் மார்க்கத்துப் புகாமலும் மார்க்கத்துக் கைத்தொழில் தேசியிற் புகாமலும் களைதல் என்றுமாம். ஒற்றையும் இரட்டையும் தேசியிற் கூறாகலானும் இரட்டையும் இரட்டைக் கிரட்டையும் வடுகிற் கூறாகலானு மென்க என்பது பழைய வுரை.

22-3. பிண்டி செய்த கை பாட்டின் பொருள் தோன்ற அவி நயங்காட்டிய கை; ஆடல் கூத்தின்பொருட்டுக் காட்டப்படும் ஒற்றைக் கை இரட்டைக் கைகட்கு ஆகுபெயர். இதனாற் கூறியது, ஆடற்குரிய கை காட்டும்பொழுது அவை, அவிநயக் கையாகாமலும் அவிநயங் காட்டும் கைகள் ஆடற் கைகள் ஆகாமற் பேணியும் என்பதாம்.

24. குரவை - குரவைக்கூத்திற்குரிய கால்கள் என்க. அது, காமமும் வென்றியும் பொருளாக எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின்மரேனும் கைபிணைந்தாடுவது என்ப. இதனை,

குரவை யென்பது கூறுங் காலைச்
செய்தோர் செய்த காமமும் விறலு
மெய்த வுரைக்கு மியற்பிற் றென்ப.

எனவும்,

குரவை யென்ப தெழுவர் மங்கையர்
செந்நிலை மண்டலக் கடகக் கைகோத்
தந்நிலைக் கொட்பநின் றாட லாகும்

எனவும் வரும் நூற்பாக்களா னறிக.

வரி - வரிக்கூத்திற்குரிய கால்கள், ஆகுபெயர். வரிக்கூத்து னியல்பினை,

வரியெனப் படுவது வகுக்குங் காலைப்
பிறந்த நிலனும் சிறந்த தொழிலும்
அறியக் கூறி ஆற்றுழி வழங்கல்

என வரும் நூற்பாவான் உணர்க.

25. ஆடற்கு அமைந்த ஆசான்றன்னோடும் என்றது, இவ்வாற்றான் கூத்திலக்கணத்தை விளங்க அறிந்தமையாலே அவற்றுடனே பொருந்த ஆடவும் மாணவரை ஆட்டுவிக்கவும் தகுதியுடைய ஆடலாசிரியனோடும் என்றவாறு. அறிந்து புணர்த்து விளங்க அறிந்து செலுத்தி ஆடற்கு அமைந்த அசான் என இறைக்க.

இசையாசிரியரின் அமைதி

26-36 : யாழுங் குழலுஞ் ......... இசையோன்றானும்

(இதன்பொருள்) யாழும் குழலும் சீரும் மிடறும் தாழ்குரல் தண்ணுமை ஆடலொடு யாழ்ப்பாடலும் குழற்பாடலுந் தாளவகைகளும் மிடற்றப் பாடலும் தாழ்ந்த இசையினையுடைய தண்ணுமையும் கூத்தாடுதலும் பயின்று வல்லவனாய், இவற்றின் இசைந்த பாடல் இசையுடன் படுத்து இவற்றோடு பொருந்திய தாகச் செய்யப்பட்ட உருக்களை (இசைப்பாடல்களை) இசை கொள்ளும்படியும் சுவைபொருந்தும்படியும் புணர்க்கவும் வல்லவனாய்; வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கி - இசைப்பாட்டிற்கும் கூத்திற்கும் உரிய திணைப் பொருள் தோன்ற மூவகை யியக்கத்தானும் இயக்கவும் வல்லனாய்; தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்து-நந்தாய் மொழியாகிய செந்தமிழின் செல்வங்களாகின்ற இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்னும் நான்கு வகைப்பட்ட சொற்களினும் செந்தமிழோசையே திகழ்வதைக் கடைப்பிடியாகக் கொண்டு; தேசிகத் திருவின் ஓசையெல்லாம் ஆசின்று உணர்ந்த அறிவினன் ஆகி - நந்தாய் மொழிக்கியல்பான செப்பலோசை முதலிய இசையிலக்கணங்களையும் குற்றந்தீரப் பயின்றுணர்ந்த அறிவினையும் உடையனாய்; கவியது குறிப்பும் பகுதிப் பாடலும் கொளுத்துங்காலை - இயற் புலவன் நினைவும், நாடகப் புலவன் ஈடு வரவுகளும் இவற்றுக்கு அமைந்த பாடல்களும் தம்மிற் புணர்ப்பிக்குமிடத்தே; வசையறு கேள்வி வகுத்தனன் விரிக்கும் - குற்றந்தீர்ந்த நூல்வழக்காலே வகுக்கவும் விரிக்கவும் வல்லனுமாயுள்ள; அசையாமரபின் இசை யோன்தானும் - தளராத ஊக்கத்தையுடைய இசைப்புலவனும் என்க.

(விளக்கம்) யாழ் குழல் என்பன ஆகுபெயர். அவை கருவியாகப் பாடுகின்ற பாடல்களைக் குறித்து நின்றன. யாழ் குழல் என்னும் இவையும் தண்ணுமை முதலியனவும் நந்தமிழகத்திலேயே மிகப் பழைய காலத்திலே தோன்றிய இன்னிசைக் கருவிகளாகும். சங்க நூல்களிலே பேரியாழ் என்றும் சீறியாழ் என்றும் இருவகை யாழ்களும் குழலும் கூறப்பட்டுள்ளன. பெரும்பாணாற்றுப்படையும் சிறு பாணாற்றுப்படையும் பேரியாழும் சீறியாளும் உடைய பாணர்களைப் பற்றிய ஆற்றுப் படைகளேயாகும். பத்துப்பாட்டின்கண் யாழ் குழல் முதலிய இசைக் கருவிகளின் அமைப்பும் அவற்றின் உறுப்புகளும் பல் வேறிடங்களிலே விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. இவற்றை யன்றி முல்லை நிலத்தில் வாழும் ஆயர் குழலும் வில்வடிவமான யாழும் செய்து அவற்றைக் குயின்று இசைபாடி மகிழ்ந்திருந்த செய்தியும் பத்துப்பாட்டிற் காணப்படுகின்றது. இதனை,

தொடுதோல் மரீஇய வடுவாழ் நோனடி
விழுத்தண் டூன்றிய மழுத்தின் வன்கை
உறிக்கா வூர்ந்த மறுப்படு மயிர்ச்சுவல்
மேம்பா லுரைத்த வோரி யோங்குமிசைக்
கோட்டவும் கொடியவும் விரைஇக் காட்ட
பல்பூ மிடைந்த படலைக் கண்ணி
ஓன்றம ரூடுக்கைக் கூழா ரிடையன்
கன்றமர் நிரையொடு கானத் தல்கி
அந்நு ணவிர்புகை கமழக் கைமுயன்று
ஞெலிகோற் கொண்ட பெருவிறல் ஞெகிழிச்
செந்தீத் தோட்ட கருந்துளைக் குழலின்
இன்றீம் பாலை முனையின் குமிழின்
புழற்கோட்டுத் தொடுத்த மரற்புரி நரம்பின்
வில்யா ழிசைக்கும் விரலெறி குறிஞ்சிப்
பல்காற் பறவை கிளைசெத் தோர்க்கும்
புல்லார் வியன்புலம் போகி

எனவரும் பெரும்பாணாற்றுப் படைப் பகுதியால் அறியலாம் (176-84)

கன்றமர் நிரையொடு கானத்தே வதியும். ஒன்றமர் உடுக்கையோடு கூழ் ஆரும் இவ் வெளிய இடையன் தான் தீக்கடைகின்ற (கொள்ளிக்கட்டை) ஞெலி கோலாலே மூங்கிலிலே பல துளைகளை இட்டுக்கொண்டு பாலைப்பண் என்னும் இசையைப் பாடினன் எனவும் அங்ஙனமே உட்டுளையுடைய குமிழங் கொம்பினை வில்லாக வளைத்து மரற்புரி நரம்பினை நாணாகக் கட்டி அந்த நாணைத் தனது விரலாலே தெறித்துப் பல்வேறிசைகளையும் எழுப்பிக் குறிஞ்சி என்னும் பண்ணை இசைத்தான் எனவும் இச்செய்யுள் கூறுகின்றது. இதனையே வில்யாழ் என்று பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது.

ஒப்பற்ற இசைக் கருவிகளாக வரலாறறியாத காலந்தொட்டுத் தமிழகத்திலே வழங்கி வருகின்ற குழலையும் யாழையும் முதன் முதலாகக் கண்டுபிடித்த பெருமை நிரலே முல்லைநில மக்களாகிய ஆயர்க்கும் குறிஞ்சி நிலமக்களாகிய வேட்டுவர்க்குமே உரியதாம் என்னும் ஓருண்மையை மேலே காட்டிய பெரும்பாணாற்றுப்படையீனின்றும் யாம் தெரிந்து கொள்கின்றோம்.

காட்டின்கண் உலர்ந்த மூங்கிலிலே வண்டுகள் துளைத்த துளையின் வழியே காற்றுப் புகும்போது இன்னிசை பிறப்பதனை அறிந்த ஆயர்கள் அம் மூங்கிலைத் துணித்துத் தாமே தீக்கடை கோலாலே பல துளைகளையிட்டு ஊதிப் பல்வேறு வகையான இசைகளை எழுப்பி மகிழ்வாராயினர். அங்ஙனமே விலங்குகளை வேட்டை யாடுவோர் வில்லினது நாணினின்று அதனை விரலாற்றெறிக்கும் போது இன்னிசை பிறத்தலை அறிந்து அவ்வொலி தானும் உட்டுளையுடைய குமிழங் கொம்பை வில்லாக வளைத்துக்கட்டிய வழி, பின்னும் இனிமையுடையதாதலை யுணர்ந்த பின்னரே அதனையும் ஓரிசைக் கருவியாக ஆயர்கள் பயன்படுத்தலாயினர்.

இனி, குழலிலே பல துளை யிடுவதன் வாயிலாகப் பல்வேறிசைகளை உண்டாக்குதல் கூடுமாகலான் இக் கூழாரிடையன் தானே இயற்றிக் கொண்ட கருந்துளைக் குழலின் குரல் துத்தம் முதலிய பல்வேறு இசைகளை எழுப்பிப் பாலைப்பண்ணை வாசித்தல் பொருந்துமன். குமிழங் கொம்பிற் கட்டிய ஒற்றை நாணில் (நரம்பில்) பல்வேறு இசை வேண்டுகின்ற குறிஞ்சிப்பண்ணை எழுவி இசைத்தான் என்றல் பொருந்தா தென்னின்; அறியாது கூறினை, அவ்வொற்றை நரம்பில் ஏழிசையும் எஞ்சாது பிறப்பித்தல் கூடும். எங்ஙனம் எனின், நாண்குரலைக் குரலிசையாகச் சுதிசெய்து கட்டிய பின்னர் :

வில்யாழினது ஒரு நுனியை மார்பிலே ஊன்றவைத்து மற்றொரு நுனியை இடக்கையாற் றழுவிக்கொண்டு தெறிக்குங்கால் அவ்விடக்கை விரலாலே கீழ்நோக்கி நரம்பை வில்லில் அழுத்த ஒலி வேறுபடுமன்றே? இங்ஙனமே கீழ்க் கீழ் இறங்கி ஆறிடங்களிலே நரம்பை அழுத்தி வலக்கை விரலாற் றெறிக்க எஞ்சிய ஆறிசைகளும் பிறக்குமாகலின் இவ்வாற்றானே அவ்விடையன் குறிஞ்சிப்பண் இசைத்தனன் என்க. இந் நுணுக்கமறியாது ஆசிரியர் விபுலானந்த வடிகளார் இவ்வில்யாழைப்பற்றிப் பயனிலாது தம் மனம் போனவாறு பொருந்தாத கற்பனை பலவும் செய்து போந்துளார். அதனை அவர் தம் யாழ் நூலிலே காண்க.

இனி, முல்லை நிலத்தும் குறிஞ்சியினும் எளிய ஆயரிடத்தும் வேடரித்தும் பிறந்து பின்னர்ப் பல்வேறு சீர்திருத்தங்களும் பெற்ற யாழ்கள் பேரியாழும் சீறியாழும் என இருவகைப்படும். இவற்றுள் பேரியாழ் வலிவும் மெலிவும் சமனுமாகிய மூவகை யியக்கத்திற்கும் இயக்கொன்றிற்கு ஏழ் நரம்பாக மூவேழ் - அஃதாவது இருபத்தொரு நரம்புகளையுடையதாம். சீறியாழ் ஏழ் நரம்புகளை யுடையதாம். ஈண்டு நரம்பென்பது கோல்களை. அவையாவன: நரம்புகளை அழுத்துங் கருவிகளை. அவற்றை இக்காலத்தார் மெட்டுக்கள் என்பர். பேரியாழ் இருபத்தொரு மெட்டுக்களையும் சீறியாழ் ஏழு மெட்டுக்களையும் உடையன என்க. இவை சங்ககாலத்து யாழ்கள்.

இனி, சிலப்பதிகாரத்துக் காலத்தே சீறியாழ் பின்னும் சீர் திருத்தம் செய்யப் பெற்றுப் பதினான்கு கேள்விகளை (மெட்டுக்களை) உடையதாயிற்று. அடிகளார் இங்ஙனம் திருத்தம் பெற்ற யாழினைச் செம்முறைக் கேள்வி என்று குறிப்பிடுவர். இது பதினான்கு கேள்விகளையுடையது. ஆதலால் இதனை ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வி என்பர். இனி, பழைய வுரையாசிரியர் தங்கள் காலத்து வழக்கிலிருந்த யாழ்களைப்பற்றியே உரை விரிக்கின்றனர். அவை அனைத்தும் சிலப்பதிகாரத்திற்குப் பொருந்துவனவாகக் கோடற்கிடமில்லை. பொருந்துவனவற்றைக் கொள்க, பொருந்தாதனவற்றை விடுக. அப்பழைய வுரை வருமாறு:

26. யாழ் நால்வகைப்படும் : அவை பேரியாழ், மகர யாழ், சகோட யாழ், செங்கோட்டி யாழ் என்பன. இவை நாலும் பெரும்பான்மைய. சிறுபான்மையான் வருவன பிறவுமுள. என்னை?

பேரியாழ் பின்னு மகரஞ சகோடமுடன்
சீர்பொலியுஞ் செங்கோடு செப்பினார் - தார்பொலிந்து
மன்னுந் திருமார்ப வண்கூடற் கோமானே
பின்னு முளவே பிற

என்றாராகலின்

இந்நால்வகை யாழிற்கும் நரம்பு கொள்ளுமிடத்துப் பேரியாழுக்கு இருபத்தொன்றும் மகர யாழிற்குப் பத்தொன்பதும் சகோட யாழிற்குப் பதினாலும் செங்கோட்டியாழிற்கு ஏழுங் கொள்ளப்படும். என்னை?

ஒன்று மிருபது மொன்பதும் பத்துடனே
நின்றபதி னான்கும் பின்னேழும் - குன்றாத
நால்வகை யாழிற்கு நன்னரம்பு சொன்முறையே
மேல்வகை நூலோர் விதி

என்றாராகலின்

இனி, இவ்வியா ழென்னும் ஒன்றிற்கு அமைந்த பலவுறுப்பாகிய

கோட்டின தமைதியுங் கொளுவிய வாணியும்
ஆட்டிய பத்தரின் வகையும் மாடகமும்
தந்திரி யமைதியும் சாற்றிய பிறவும்
முந்திய நூலின் முடிந்த வகையே

என்றொரு நூற்பாவை எடுத்துக்காட்டி அடியார்க்கு நல்லார் வகுக்கப் பட்டனவெல்லாம் கானல் வரியில் குற்றம் நீங்கிய யாழ் என்பதன்கண் விரியக் கூறுதும் என்றனர். அவ்வுரை கிடைத்திலது.

26. குழல் என்றது குழல் கருவியாகப் பாடும் பாடலை. ஆகு பெயர்.

(யாழின் பெயரை வீணை என்ற வடமொழியாக மாற்றி அதனையே இக்காலத்துப் பயில வழங்குதல் போன்று பழைய உரையாசிரியர் காலத்தே குழல் என்னும் இனிய தமிழ்ப்பெயரை விடுத்து அதனை வங்கியம் என்று இசைவாணர்கள் பயில வழங்கியமையால் அடியார்க்கு நல்லார் குழல் என்ற தமிழ்ச் சொல்லிற்கு வங்கியம் எனப் பொருள் எழுதுதல் வேண்டிற்று. இச்சொல் நூலின்கண் யாண்டும் காணப்பட்டிலது.)

(அடியார்க்) குழல் வங்கியம்; அதற்கு மூங்கில் சந்தனம் வெண்கலம் செங்காலி கருங்காலி யென ஐந்துமாம், என்னை?

ஓங்கிய மூங்கி லுயர்சந்து வெண்கலமே
பாங்குறுசெங் காலி கருங்காலி - பூங்குழலாய்
கண்ண னுவந்த கழைக்கிவைக ளாமென்றார்
பண்ணமைந்த நூல்வல்லோர் பார்த்து

என்றாராகலின்

இவற்றுள் மூங்கிலாற் செய்வது உத்தமம். வெண்கலம் மத்திமம் ஏனைய அதமமாம். மூங்கில் பொழுது செய்யும்; வெண்கலம் வலிது; மரம் எப்பொழுதும் ஒத்து நிற்கும்.

இதன்கண் மூங்கில்பொழுது செய்யும் என்றது வெப்பதட்பங்களால் மாறுபடுகின்ற வேனில் முதலிய பெரும் பொழுதுகளையும் வைகறை முதலிய சிறு பொழுதுகளையும், வேய்ங்குழலின் இசை தனது மாற்றத்தாலே காட்டும் என்றவாறு. இதனால் இதுவே தலையாயது என்றவாறு. என்னை? பொழுதுகட்கும் இசைக்கும் இயைபுண்மையால் அவ்வியை பினை வேய்ங்குழலிற் காண்டல் கூடும் என்பது கருத்து என்க.

(அடியார்க்) இக் காலத்துக் கருங்காலி செங்காலி சந்தனம் இவற்றாற் கொள்ளப்படும்; கருங்காலி வேண்டும் என்பது பெரு வழக்கு. இவை (இம் மூன்று வகை மரங்களையும்) கொள்ளுங்கால் உயர்ந்த ஒத்த நிலத்திற் பெருக வளர்ந்து நாலு காற்று மயங்கின் நாதமில்லை. யாமாதலான், மயங்கா நிலத்தின்கண், இளமையும் நெடும் பிராயமும் (முதுமையும்) ஒரு புருடாயுப்புக்க (நூறாண்டு) பெரிய மரத்தை வெட்டி ஒரு புருடாகாரமாக ஓராட்பருமனும் நீளமும் உடையதாகச் செய்து, அதனை நிழலிலே ஆற இட்டுவைத்துத் திருகுதல் பிளத்தல் போழ்ந்துபடுதலின்மையை யறிந்து ஓர் யாண்டு சென்ற பின் இலக்கண வகையான் வங்கியம் செய்யப்படும். என்னை?

உயர்ந்த சமதலத் தோங்கிக்கா னான்கின்
மயங்காமை நின்ற மரத்தின் - மயங்காமே
முற்றிய மாமரந் தன்னை முதறடிந்து
குற்றமிலோ ராண்டிற் கொளல்

என்றாராகலின்.

இதன் பிண்டி யிலக்கணம் (பிண்டி-துண்டு) நீளம் இருபது விரல், சுற்றளவு நாலரை விரல். இது துளையிடுமிடத்து நெல்லரிசியில் ஒரு பாதி மரனிறுத்திக் கடைந்து வெண்கலத்தாலே அணைசுபண்ணி (அணைசு-மூடி) இடமுகத்தை யடைத்து வலமுகம் வெளியாக விடப்படும். என்னை?

சொல்லு மிதற்களவு நாலைந்தாஞ் சுற்றளவு
நல்விரல்க ணாலரையா நன்னுதலாய் - மெல்லத்
துளையளவு நெல்லரிசி தூம்பிட மாய
வளைவலமேல் வங்கிய மென்

என்றாராகலின்

இனித் துளையளவிலக்கணம்: - அளவு (நீளம்) இருபது விரல்; இதிலே தூம்பு முகத்தின் இரண்டு நீக்கி முதல்வாய் விட்டு, இம்முதல் வாய்க்கு ஏழங்குலம் விட்டு, வளைவாயினும் இரண்டு நீக்கி நடுவில் நின்ற ஒன்பது விரலினும் எட்டுத் துளையிடப்படும். இவற்றுள் ஒன்று முத்திரை யென்று கழித்து நீக்கி நின்ற ஏழினும் ஏழுவிரல் வைத்து ஊதப்படும். துளைகளின் இடைப்பரப்பு ஒரு விரலகலம் கொள்ளப்படும்; என்னை?

இருவிரல்க ணீக்கி முதல்வாயேழ் நீக்கி
மருவு துளையெட்டு மன்னும் - பெருவிரல்கள்
நாலஞ்சு கொள்க பரப்பென்ப நன்னுதலாய்
கோலஞ்செய் வங்கியத்தின் கூறு

என்றாராகலின்

இவ் வங்கியம் ஊதுமிடத்து வளைவாய் சேர்ந்த துளையை முத்திரையென்று நீக்கி முன்னின்ற ஏழினையும் ஏழு விரல்பற்றி வாசிக்க.

ஏழு விரலாவன - இடக்கையிற் பெருவிரலும் சிறு விரலும் நீக்கி மற்றை மூன்று விரலும், வலக்கையிற் பெருவிரலொழிந்த நான்கு விரலும் ஆக ஏழு விரலுமென்க. என்னை?

வளைவா யருகொன்று முத்திரையாய் நீக்கித்
துளையேழி னின்ற விரல்கள் - விளையாட்
டிடமூன்று நான்குவல மென்றார்கா ணேகா
வடமாரு மென்முலையாய் வைத்து

ஏழிசையாவன: சட்டம் ரிடபம் காந்தாரம் மத்திமம் பஞ்சமம் தைவதம் நிடாதமென்பன. இவை பிறந்து இவற்றுள்ளே பண்கள் பிறக்கும். என்னை?

சரிக மபதநியென் றேழெழுத்தாற் றானம்
வரிபரந்த கண்ணினாய் வைத்துத் - தெரிவரிய
ஏழிசையுந் தோன்று மிவற்றுள்ளே பண்பிறக்கும்
சூழ்முதலாஞ் சுத்தத் துளை

என்றாராகலின். இத்தன்மைத் தாகிய குழலுமென்க.

ஈண்டுக் குழல்பற்றி இதுகாறும் கூறப்பட்டவை அடியார்க்கு நல்லார் உரை விளக்கமாம்.

இனி, இளங்கோவடிகளார் தம் காப்பியத்தின்கண், ஈண்டுச் சட்சம் முதலாகக் கூறப்படுகின்ற இசையின் பெயர்களை யாண்டும் கூறிற்றிலர்.

இவற்றை நிரலே குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் பெயர்களாற் குறிப்பிடுதலே பண்டைத் தமிழ் நூலோர் வழக்கமாம்.

இனி, அடிகளார் இந்நூலிலேயே கூறியுள்ள முல்லைக்குழல், ஆம்பற்குழல் கொன்றைக்குழல் என்னும் இக் குழல்களைப்பற்றிப் பழைய உரையாசிரியர் யாதும் அறிந்திலாமை ஆய்ச்சியர் குரவைக் கண் இவற்றிற்கு இவர்கள் கூறுகின்ற உரைகளே உணர்த்துகின்றன. அவற்றை ஆண்டுக் காண்பாம்.

26. சீர் - தாளத்தின் அறுதி. இது முத்தமிழ்க்கும் பொதுவாகும். அதனானன்றே ஆசிரியர் தொல்காப்பியனார் செய்யுளியலின்கண் ஈரசை கொண்டு மூவசை புணர்ந்துஞ் சீர் இயைந்து இற்றது சீரெனப் படுமே என்றோதுவாராயினர். அசையும் சீரும் இசையொடு சேர்த்தி வகுத்தனர் உணர்த்தலும் வல்லோ ராறே என்றோதியதும் சீர் முத்தமிழ்க்கும் பொதுவாம் என்பதை வலியுறுத்தும். மற்றுத் தாளம் என்பது பாணி தூக்கு சீர் என மூவகை உறுப்புடையதென்ப. பாணி-தாளந் தொடங்குங் காலம். தூக்கு-தாளம் நிகழுங்காலம். சீர்-தாளம் முடியுங்காலம் என்று நுண்ணிதின் இவற்றிற்கு வேறுபாடு கூறுவர்.

இனி, இடைத்தமிழில் சீர் என்பது செம்முறை உறழ்பே மெய்ந் நிலை கொட்டல், நீட்டல், நிமிர்த்தல் என்று கூறப்படுகின்ற வண்ணக் கூறுபாட்டையும் நாடகத் தமிழில் அகக் கூத்திற்கும் புறக்கூத்திற்கும் உரிய இருவகைத் தாளக் கூறுபாட்டையும் குறிக்கும் என்க. இச் சீர் தானே பாலைகளையும் பண்களையும் நிலைப்படுத்துத் தூய்தாகக் காட்டுங் கருவி என்ப. ஈண்டுப் பாலை என்றது குரல் முதலிய கேள்விகளை என்றுணர்க.

26. மிடறு - மிடற்றுப்பாடல். மாந்தர் உடம்பும் இசைக்குத் தலைசிறந்த கருவியாதலின், மிடற்றினைச் சாரீர வீணை என்பர். சரீர வீணை (எனப் பாட வேற்றுமையும் உண்டு) வடமொழியாளர் பிரம வீணை என்பதும் இக்கருத்துடையதே என்க. அஃதாவது இறைவனாற் படைக்கப்பட்ட இசைக்கருவி என்றவாறு. இறைவனாற் படைக்கப்பட்ட மாந்தருடம்பாகிய கருவியில் இசை பிறக்குங்கால்,

உந்தி முதலா முந்துவளி தோன்றித் தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ பின்னர் மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும் எனவும், இவ்வாறு அகத்தெழு வளியிசை அரில்தப நாடி அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே, எனவும், இசை அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர் என்பர் ஆசிரியர் தொல்காப்பியனார்.

ஈண்டு நரம்பின்மறையென்றது இசைத்தமிழிலக்கண நூலை என்க.

இயற்கையிலமைந்த இசைக்கருவியாகிய மக்கள் மிடற்றில் இசையைப் பிறப்பிக்குங்கால் மூலாதாரந் தொடங்கிய மூச்சைக் காலாற் கிளப்பிக் கருத்தால் இயக்கி ஒன்றெனத் தாக்கி இரண்டெனப் பகுத்துப் பண்ணீர்மைகளைப் பிறப்பித்தல் வேண்டும் என்பது அரும்பதவுரையாசிரியர் கூற்றால் அறியப்படும்.

இனி, இங்ஙனம் மூலாதாரந் தொடங்கிய எழுத்தின் நாதம், ஆளத்தியாய்ப்பின் இசையென்றும் பண்ணென்றும் பெயராம் எனவும்,

பாவோ டணைத லிசையென்றார் பண்ணென்றார்
மேவார் பெருந்தானம் எட்டானும் - பாவாய்
எடுத்தன் முதலா விருநான்கும் பண்ணிப்
படுத்தமையாற் பண்ணென்று பார்

எனவும், பல இயற்பாக்களுடனே நிறத்தை இசைத்தலால் இசை யென்று பெயராம் எனவும் அடியார்க்கு நல்லார் ஓதுவர்.

இதனால் பண் இசை என்பன காரணப் பெயர்கள் என்பது பெற்றாம். பண் எனினும் இராகம் எனினும் ஒக்கும். ஆளத்தி என்பதனை இக்காலத்தார் ஆலாபனம் என்று வழங்குவர்.

இனி, இசையை ஆளத்தி செய்யும்பொழுது மரகவொற்றால் அஃதாவது ம்ம் எனத் தொடங்கிப் பின்னர்க் குற்றெழுத்தாலும் நெட்டெழுத்தாலும் பாரித்துப் பாடவேண்டும் என்பர். இதனை,

மகரத்தின் ஒற்றாற் சுருதி விரவும்
பகருங் குறினெடில்பா ரித்து - நிகரிலாத்
தென்னா தெனாவென்று பாடுவரேல் ஆளத் நி
மன்னாவிச் சொல்லின் வகை

எனவரும் வெண்பாவான் உணர்க.

இதன்கண், தென்னா தெனா என்று பாடுவர் என்றதற்கு, தென்னா என்றும் தெனா வென்றும் இரண்டசைகளையும் தனித் தனியும் தென்னாதெனா என்று இரண்டனையும் கூட்டியும் பாடுவர் என்பது கருத்து.

இனி ஆளத்தி செய்தற்குரிய குற்றெழுத்துக்கள், அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்துமாம் எனவும், நெட்டெழுத்துக்கள் ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்னும் ஐந்துமாம் எனவும், மெய்யெழுத்துக்களுள் மகரமும் னகரமும் தகரமும் ஆகிய மூன்றுமே ஆளத்திக்குப் பொருந்தும் ஏனைய பதினைந்து மெய்களும் பொருந்தாதனவாம் என்றும் வரையறுத்தோதுவர். இக்காலத்தே தரன்னா, லலா ரார என்றெல்லாம் புகழ்படைத்த இசைவாணரும் பாடக் கேட்கின்றோம். ஆதலால், இவ்வரையறை கைவிடப்பட்டமை அறியலாம், இனி இவ்வரையறை யுண்மையை,

குன்றாக் குறிலைந்துங் கோடா நெடிலைந்தும்
நின்றார்ந்த மன்னகரந் தவ்வொடு - நன்றாக
நீளத்தா லேழு நிதானத்தா னின்றியங்க
ஆளத்தி யாமென் றறி

எனவரும் வெண்பாவானுணர்க.

ஈண்டு மந்நகரந் தவ்வொடு எனக் காணப்படுகின்ற (உ-வே-சா. ஐயரவர்கள் பதிப்பு) பாடம் பிழை என்பதும், அது மன்னகரம் எனத் திருத்திக் கோடற்பாலதென்பதும் ஆளத்தி தென்னா தெனா வென்று பாடுவர் என்பதனாலே உணரப்படும். இன்னும், இதனால் இக்காலத்தார் இராக ஆலாபனஞ் செய்யுமிடத்து அதனோடு விரவி வருகின்ற ச, ரி, க, ப, நி என்னும் ஐந்தெழுத்தும் பண்டைத் தமிழிசைக்கு விலக்குண்டமையும் நுண்ணுணர்வாற் கண்டு கொள்க.

இனி பெருந்தானம் எட்டானும்... எடுத்தன் முதலா இருநான்கும் பண்ணிப் படுத்தலாற் பண் என்று பார் என்றது, நெஞ்சும் மிடறும் நாக்கும் மூக்கும் அண்ணாக்கும் உதடும் பல்லும் தலையும் ஆகிய இசை பிறத்தற்குரிய எட்டானும், எடுத்தல் படுத்தல் நலிதல் கம்பிதம் குடிலம் ஒலி உருட்டு தாக்கு என்னும் எண்வகைத் தொழிலானும் பண்ணுதலாலே பண் என்று பெயராயிற்று என்று அறிக என்றவாறாம். பண் பிறக்குமிடம் பலவாயினும் சிறப்புப்பற்றி ஆகுபெயரால் மிடறு என்றோதப்பட்டது.

27. தாழ்குரல் தண்ணுமை-தாழ்ந்த இசையினையுடைய மத்தளம் என்னுந் தோற்கருவி. ஈண்டுத் தண்ணுமை என்றது அதனை யுள்ளிட்ட தோற்கருவிகள் அனைத்தையும் குறித்தபடியாம். அவற்றை,

பேரிகை படகம் இடக்கை உடுக்கை
சீர்மிகு மத்தளம் சல்லிகை கரடிகை
திமிலை குடமுழாத் தக்கை கணப்பறை
தமருகம் தண்ணுமை தாவில் தடாரி
அந்தரி முழவொடு சந்திர வளையம்
மொந்தை முரசே கண்விடு தூம்பு
நிசானம் துடுமை சிறுபறை அடக்கம்
மாசில் தகுணிச்சம் விரலேறு பாகம்
தொக்க உபாங்கம் துடிபெரும் பறையென
மிக்க றநூலோர் விரித்துரைத் தனரே

எனவரும் நூற்பாவானுணர்க.

இவை, அகமுழவு அகப்புறமுழவு, புறமுழவு, புறப்புறமுழவு, பண்ணமை முழவு, நாண்முழவு, காலை முழவு என ஏழுவகைப்படும் என்பர்.

அவற்றுள் அகமுழவாவன-முன் சொன்ன மத்தளம் சல்லிகை இடக்கை கரடிகை பேரிகை படகம் குடமுழா என்பனவாம்.

அகப்புற முழவு-முன்சொன்ன மத்திமமான தண்ணுமை தக்கை தகுணிச்சம் முதலாயின.

புறமுழவு-அதமக் கருவியான கணப்பறை முதலாயின.

ஈண்டுக் கூறப்படாத நெய்தற்பறை முதலியன புறப்புறமுழவு எனப்படும்.

பண்ணமை முழவு என்பன-முரசு நிசாளம் துடுமை திமிலை என்னும் நான்குமாம். இவற்றை வீரமுழவு என்றும் விளம்புவர்.

நாண்முழவு - நாட்பறை. அஃதாவது நாழிகைப்பறை.

காலைமுழவு - துடி.

இனி, ஈண்டு அடிகளார் தண்ணுமை என்றது மத்தளத்தை. மத்து-ஓசை; தளம்-இடம். ஆகவே இசையிடனாகிய கருவிகட்கெல்லாம் தள மாதலான் மத்தளமென்று பெயராயிற்று என்பர் அடியார்க்குநல்லார். இக்காலத்தார் மிருதங்கம் என்பதும் இதுவேயாம். மத்தளம் முதலிய தோற்கருவிகள் மிடற்றுப் பாடல் கேட்போர்க்கு இனிது விளங்குதற் பொருட்டு அப்பாடலிசைக்கு அடங்கி ஒலித்தல் வேண்டுமாதலின் அவற்றைத் தாழ்ந்த இசையுடையனவாகச் சுதி கூட்டிக் குயிலுவர். ஆதலின், தாழ்குரற்றண்ணுமை என்றார். தண்ணுமை முதலிய தோற்கருவிகளைச் சுதிகூட்டுங்கால் அவற்றின் இடக்கண் இளியாய் (ப) வலக் கண் குரலாக (ச)க் கூட்டவேண்டும் என்பர். இதனை,

இடக்க ணிளியாய் வலக்கண் குரலாய்
நடப்பது தோலியற் கருவி யாகும்

எனவருஞ் செய்யுளானும் (சிந்தா-செய் 675-நச்சி உரை) அறியலாம்.

27- வரி- உருக்கள் (இசைப் பாடல்கள்) ஆடல் என்றது முற்கூறப்பட்ட அகக்கூத்தும் புறக்கூத்தும் பிறவுமாகியவற்றை. உரிப்பொருள் என்றது அகத்திற்குரிய புணர்தல் முதலியனவுமாம், புறத்திற்குரிய வஞ்சி முதலியனவுமாம். இசையாசிரியனாகலின் தன திசைக்குயிராகிய இவ்வுரிப்பொருளையும் நன்கு புலப்படுத்த வேண்டுமாகலின் உரிப்பொருளியக்கி என்றார். பழைய வுரையாசிரியர்கள் உரிமைப் பொருளாயமைந்த இயக்கம் நான்குமே ஈண்டு உரிப்பொருள் எனப்பட்டதாகக் கருதுவர்.

30. தேசிகத்திரு-நாட்டு மொழியாகிய செல்வம். அதன் ஓசை கடைப்பிடித்தலாவது, வடமொழி முதலிய வேற்றுமொழி வந்து விரவுங்கால் அவற்றைத் தமிழோசைப்படுத்து இசைத்தலை உறுதியாகக் கடைப்பிடித்தொழுகுதல். இயற்சொல் திரிசொல் திசைச் சொல் வடசொல் என்று சொல்லப்பட்ட சொற்கள் இசை பூணும் படியைக் கடைப்பிடித் தென்பர் பழையவுரையாசிரியரிருவரும்.

33. கவி-இயற்புலவன். இதனால் இசைவாணர்க்கும் கூத்தர்க்கும் பாடல் யாத்துக்கொடுப்போர் இயற்புலவரே யென்பது பெற்றாம். இயற்புலவன் அப்பாடலாலே வெளிப்படுத்த நினைத்த கருத்தின்னதென அறிந்து கோடல் இசைப்புலவனுக்கு இன்றியமையாமையின் கவியது குறிப்பும்...கொளுத்துங்காலை என்றார்.

34. கொளுத்துதல் - தனதிசை கொள்ளும்படி செய்தல்.

35. கேள்வி : ஆகுபெயர்; நூல் என்க. கேள்விக்கியைய வகுக்கவும் விரிக்கவும் வல்ல இசையோனும் என்க.

கவிஞன் அமைதி

(அஃதாவது மாதவி கூத்திற்குப் பாடலியற்றிய இயற்புலவனுடைய தன்மை என்றவாறு.)

37-38: இமிழ்கடல் ......... தன்மையனாகி

(இதன்பொருள்) இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறிய - முழங் குதலையுடைய கடல்சூழ்ந்த நிலவுலகத்தின்கண் வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு மிந்த நாட்டின்கண் வாழ்கின்ற சான்றோரனைவரானும் அறியப்படுதற்குக் காரணமான; தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி - இயல் இசை நாடகம் என்னும் முத்திறத்துத் தமிழ்மொழியையும் எஞ்சாது கற்றுத் துறைபோய அறிவினையுடைய தன்மையையுடையவனாகி என்க.

(விளக்கம்) இமிழ்கடல் - வினைத்தொகை எனினுமாம். கடல் வரைப்பு - நிலவுலகம். நிலவுலகத்துள்ள நாடுகள் பலவற்றுள்ளும் தமிழகம் சிறந்ததொரு நாடு என்பது தோன்ற, இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் என வேண்டா கூறி வேண்டியது முடித்தார். தமிழகம் அந்நாட்டின்கண் வாழும் சான்றோர்க்கு ஆகுபெயர். என்னை? அறிவார் அவரேயாதலின்.

இனி, வடவேங்கடம் தென்குமரி யாயிடைக் கிடந்த தமிழ் கூறு நல்லுலகம் என்பது தோன்ற கடல்வரைப்பில் தமிழகம் என்றார். கடல் வரைப்பையுடைய நிலவுலகத்துள் வேங்கட முதலிய வரைப்பினையுடைய தமிழகம் என்பது கருத்தென்க.

இனித் தமிழ்தானும் இயல் இசை நாடகம் என முத்திறத்ததாய் முழுதும் அறிதற்கருமைத்தாகலின் அவ்வருமை தோன்றத் தமிழ் முழுதும் அறிந்த தன்மையன் என்றார். இப்பொருட்கு முழுதும் என்ற சொல்லை விதந்தெடுத்தோதி யுணர்க.

36-44: வேத்தியல் ......... நன்னூற்புலவனும்

(இதன்பொருள்) வேத்தியல் பொதுவியல் என்று இருதிறத்தின் நாட்டிய நன்னூல் கடைப்பிடித்து - வேத்தியல் என்றும் பொதுவியல் என்றும் இரு கூறுபடுத்துக் கூறப்பட்ட நாடக நூலிலக் கண விதிகளை நன்றாகக் கடைப்பிடித்து; இசையோன் வக்கிரித்து இட்டத்தை உணர்ந்து - இசைப்புலவன் ஆளத்தி செய்து அதன்கண் அவன் எய்தவைத்த பண்ணினது இயல்பினை நன்குணர்ந்து; ஆங்கு அசையாமரபின் அதுபட வைத்து - அவ்விசைப்புலவன் வைத்தபடியே தளராத இலக்கணமுறைப்படி அப்பண்ணினது நிறம் தனது கவியினிடத்தும் நன்கு விளங்கித் தோன்றவைக்க வல்லனாய்; மாற்றோர் செய்த வசைமொழி அறிந்து - பகைவர்களாற் செய்யப்பட்ட வசையின் அளவுகளையும் அறிந்து; நாத் தொலைவு இல்லாத நல்நூல் புலவனும் - அவை தன் கவியிடத்தே புகுதாவண்ணம் நாடகக்கவி செய்யவல்லவனும் அக் காரணத்தாற் பகைவர்க்குத் தோலாதவனும் இவற்றிற்கெல்லாம் காரணமாகிய நல்ல நூல்களையுணர்ந்த இயற்புலவனு மென்க.

(விளக்கம்) எழுத்துச் சொல் பொருள் முதலிய இயற்றமிழ்க்கியன்ற இலக்கணமெல்லாம் ஏனைய இசைத்தமிழ் நாடகத்தமிழாகிய இரண்டற்கும் வேண்டிய உருக்கள் என்னும் இசைப்பாடல்கட்கும் இன்றியமையாமையின் ஈண்டுக் கூறப்படும் புலவன் முத்தமிழும் கற்றுத்துறை போயவன் என்றார்.

இனி, வேத்தியல், பொதுவியல் என்பன நிரலே அகம்புறம் என்னும் இருவகைப் பொருணெறிப்பட்டவை என்பது அடியார்க்கு நல்லார் குறிப்பானும் உணரலாம்.

40. நாட்டிய நன்னூல் என்பதற்கு வேத்தியல் பொதுவியல் என்றிருவகைப்படுத்து நிறுவிய நல்ல நாடக நூல் எனக் கோடலுமாம். இசையோன் - இசைப்புலவன். வக்கிரித்து அதன்கண் இட்டத்தை என்க. வக்கிரித்தல், ஆளத்தி செய்தல். இட்டதை எனற்பாலது இட்டத்தை என விகாரமுற்றது. இட்டது - வைத்த பண்ணீர்மை என்க. அதனை உணர்தலாவது பண்ணுக்குரிய முதலும் முறைமையும் முடிவும் நிறைவும் குறைவும் கிழமையும் வலிவும் மெலிவும் சமனும் வரையறையும் நீர்மையும் என்னும் பதினொரு பாகுபாட்டினானும் அறிதல்.

இவற்றுள் முதல் என்பது, குரல் முதலிய ஏழிசைகளுள் வைத்து இன்ன பண்ணுக்கு இன்ன இசை முதலாகும் என்றறிவது. முறை-பண்கள் தோறும் அவ்விசைகள் நிற்கவேண்டிய முறை என்க. முடிவு-ஒவ்வொரு பண்ணையும் முடித்தற்குரிய இசைகள் என்க. நிறை முழுமையுடைய பண்கள். குறை - பண்ணியல் திறம் திறத்திற முதலியன என்க. கிழமை இன்ன பண்ணிற்கு இன்ன இசை பயிலப் பயின்றுவரும் உரிமையுடைத் தென்றறிதலென்க. வலிவு முதலிய மூன்றும் இயக்கவகைகள். வரையறை - இந்தப் பண் இந்தப் பொழுதிற் பாடப்படுவது என்னும் காலவரையறையும் இன்ன திணைக்கு இன்ன பண் உரித்தென்னும் வரையறையும் இன்னோரன்ன பிறவுமாம் என்க. நீர்மை என்றது இலக்கண வகையானன்றி ஒவ்வொரு பண்ணிற்கும் தனித்தனியே அமைந்ததோரின் பப்பண்பு, என்க. பாடலியற்றும் நன்னூற்புலவன் ஈண்டுக் கூறப்பட்ட பண்ணீர்மையறியானாயின் பண்ணுக்கியையப் பாடலியற்றலாகாமையின் இசையோன் வக்கிரித் திட்டத்தை யுணர்ந்து ஆங்கு அசையா மரபின் அதுபடவைத்து என்றார். அது என்றது பண்ணீர்மையை. பழைய வுரையாசிரியர் இருவரும் இதனையே தாள நிலையில் எய்த வைத்த நிறம் என்றார். நிறம் போறலின் நிறம் என ஆகுபெயராற் பெயர் மாத்திரையாலோதி யொழிந்தார் என்க. அதுபடவைத்தலாவது, இப்பாட்டிற்கு இந்தப் பண்ணே சிறந்துரிமையுடைய தென்று யாவரும் அறியும்படி பாட்டினை இயற்றுதல் என்க. பண்ணினமைந்த இப்பண்ணீர்மையையே திருவள்ளுவனார் கண்ணோடியைந்த கண்ணோட்டம் போல்வதெனக் கருதி இந்த நீர்மை பாட்டினது நீர்மையோடு இயைதல் வேண்டும் என்னும் கருத்துடையர் என்பதனை பண்ணென்னாம் பாடற்கியைபின்றேல் கண்ணென்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் எனவரும் திருக்குறளால் உணர்தல் கூடும்.

வசை - பாட்டுடைத் தலைவனுக்குச் சாவு முதலிய தீமைபயக்கும் தீச்சொற்கள். பாட்டினாலே தீமை செய்பவர் பகைவராதலின் மாற்றோர் செய்த வசைமொழி என்றார். அதனை அறிந்தென்றது அறிந்து அத்தகைய தீச்சொல் விரவாமல் பாட்டியற்ற வல்ல நன்னூற் புலவன் என்பதுபடக் கூறியபடியாம். நாத்தொலைதல் - பாட்டின்கண் இழுக்குக் கூறுவார்க்குத் தோற்றல். நாத்தொலைவில்லாமைக்கு நன்னூல் குறிப்பேதுவாய் நின்றது. குற்றமில்லாத வழியும் குற்றங்கூறும் புன்புலவர்க்கு நன்னூல் விதிகாட்டி வெல்லும் ஆற்றலுடைய புலவன் என்பது கருத்தென்க.

இன்னன் அல்லோன் செய்குவ னாயின்
தேற்றா மாந்தர் ஆரியம் போலக்
கேட்டார்க் கெல்லாம் பெருநகை தருமே

எனப் பழையவுரையாசிரியர் எடுத்துக்காட்டிய நூற்பாவும் ஈண்டுணரற்பாற்று.

தண்ணுமையோன் அமைதி

45-55: ஆடல் பாடல் ...... முதல்வனும்

(இதன்பொருள்)ஆடல் பாடல் இசையே தமிழே - முற்கூறப்பட்ட பல்வேறு வகைப்பட்ட கூத்துக்களும் பாட்டுக்களும் பல்வேறு வகைப்பட்ட இசைகளும் இயலிசை நாடகம் என்னும் மூன்று வகைப்பட்ட தமிழ்களும்; பண்ணே பாணி தூக்கே முடமே-எல்லாப் பண்களும் இருவகைத் தாளங்களும் எழுவகைத் தூக்குக்களும் இவற்றின் குற்றங்களும்; தேசிகம் - இயற்சொல் முதலிய நால்வகைச் சொற்கூறுபாடு; என்று இவை ஆசின் உணர்ந்து - என்று கூறப்பட்ட இவையிற்றி னியல்பெலாம் நுண்ணிதின் அறிந்து; கூடை நிலத்தைக் குறைவு இன்றி மிகுத்து - இசையாசிரியன் யாதானும் தான் பாடுகின்ற பாட்டினை இரட்டிக் கிரட்டியாகச் சேர்த்துப் பாடிய விடத்தே; அப்பாட்டு நெகிழாதபடி நிரம்ப நிறுத்தவும்; ஆங்கு வார நிலத்தை வாங்குபு வாங்கி - அவ்விடத்தே பெறுகின்ற இரட்டியை இசையாசிரியன் பகுத்துப் பாடிய வழி, அவன் பகுத்தவாறே நிற்குமளவு நிறுத்திக் கழிக்க வேண்டுமளவு கழிக்கவும் வல்லனாய்; வாங்கிய வாரத்து யாழுங் குழலும் ஏங்கிய மிடறும் இசைவன கேட்ப- இங்ஙனம் பாடப்படுகின்ற பாட்டின்கண் யாழிசையும் குழலிசையும் மிடற்றிசையும் இயைந்து நடக்கின்ற படியைக் கேட்போர் செவிக் கொள்ளும்படி; கூர் உகிர்க்கரணம் குறியறிந்து சேர்த்தி - தனது தண்ணுமையைத் தன் விரற்றொழிலாலே செவ்வியறிந்து முற்கூறப்பட்ட இசைகளோடு சேரும்படி குயின்று; ஆக்கலும் அடக்கலும் - அங்ஙனங் குயிலுங் கால் ஏனைய கருவிகளிற் குறையை நிரப்புதலும் மிகுதியை அடக்குதலும்; மீத்திறப்படாமை செய்து - குயில்வதோடன்றித் தனது தண்ணுமையிசை ஏனைய கருவிகளின் இசைகட்கு மிகாமற் குயிலுதலும் செய்து; சித்திரக்கரணம் சிதைவின்று செலுத்தும் - அங்ஙனம் செய்யுமிடத்துத் தனது கைத்தொழிலும் அழகுபெறச் செய்து காட்டலும் வல்லனாய்; அத்தகு தண்ணுமை அருந்தொழில் முதல்வனும் - அழகு தக்கிருக்கின்ற தண்ணுமைக் கருவியினையும் பிறராற் செயற்கரிய தொழிற்றிறமும் அமைந்த ஆசிரியனு மென்க.

(விளக்கம்) ஆடல் பாடல் இசை தமிழ் பண் பாணி தூக்கு என்பன அவையிற்றின் இலக்கணங்களுக்கு ஆகுபெயராய் நின்றன. முடம் - குற்றம்.

48. கூடை நிலம் - இசையை இரட்டித்துப் பாடுமிடம் என்க. கூடை - ஐகார விகுதிபெற்ற தொழிற்பெயர். இரட்டிக்கிரட்டி - முன்னர் இரட்டித்ததனையே மீண்டும் இரட்டித்தல்.

49. வாரநிலம் - இரட்டிக்கும் வழி முழுவதும் இரட்டியாமல் ஒரு பகுதியை மட்டும் இரட்டிக்குமிடம் என்க. வாங்குபு வாங்கலாவது அங்ஙனம் பகுத்து இரட்டிக்கும்பொழுது இசையின்பம் கெடாமல் விடுமளவிற்கு விட்டுக்கொள்ளுமளவே கொண்டு இசைத்தல்.

50-52. யாழ் முதலியவற்றின் இசையைத் தனது தண்ணுமையிசை விழுங்கிவிடாமல் அவையோர் அவற்றை நன்கு கேட்கும்படி அடக்கி இசைக்க வல்லனாய் என்பார் வார நிலத்தை ......... சேர்த்தி, என்றார்.

இனி, இங்ஙனம் பிற குயிலுவக் கருவிகளின் இசையைக் கேட்போர் நன்கு கேட்கும்படி தண்ணுமையோன் தனது விரலானும் உகிரானுமே குயில்வதியல்பாகலின் கேட்பக் கூருகிர்க்கரணம் குறியறிந்து சேர்த்தி என்றார்.

53. மீத்திறம்படுதலாவது - தண்ணுமையிசை ஏனைய இசைகளை விழுங்கி விடுமளவிற்கு மிகுதல்.

54. தண்ணுமையோன் தொழில் செய்யும்பொழுது காட்சிக் கினிதாகச் செய்தல் இன்றியமையாமையின் சித்திரக்கரணம் என்றார்.

55. அத்தகு தண்ணுமை என்பதனை அங்ஙனம் குயிலுதற்குத் தகுந்த தண்ணுமை எனவும், அழகு தக்கிருக்கின்ற தண்ணுமை எனவும் இரட்டுற மொழிந்து இருபொருளுங் கொள்க.

குழலோன் அமைதி

56-69: சொல்லிய ............... குழலோன்றானும்

(இதன்பொருள்) சொல்லிய இயல்பினில் - இசை நூல்களிற் சொன்ன முறைமையாலே; சித்திர வஞ்சனை புல்லிய அறிந்து - சித்திரப் புணர்ப்பும் வஞ்சனைப் புணர்ப்பும் என்று சொல்லப்பட்ட இரண்டு கூற்றினையும் அறிந்து; புணர்ப்போன் பண்பின் - இசைக் கேள்விகளைப் புணர்க்கும் இசையாசிரியனை ஒத்த இசை யறிவுடையனாகி; வர்த்தனை நான்கும் மயல் அறப் பெய்து - ஏற்றம் இறக்கம் என்னும் இருவகையானும் இயல்கின்ற நான்கு வகைப்பட்ட வர்த்தனைகளானும் நூற்றுமூன்று பண்ணீர்மைகளையும் தந்நிலை குலையாமல் குயின்று காட்டவல்லனாய்; (ஆங்கு) ஏற்றிய குரல் இளி என்று இரு நரம்பின் ஒப்பக்கேட்கும் உணர்வினனாகி - இசை கூட்டப்பட்ட குரலும் இளியும் தம்முளியையத் தன் எஃகுச் செவியாலே கேட்டுணரும் ஆராய்ச்சி என்னும் தொழில்வன்மையுடையவனும்; பண் அமை முழவின் கண் நெறியறிந்து தண்ணுமை முதல்வன் தன்னொடும் பொருந்தி - பண்ணுதல் அமைந்த முழவின் இடக்கண் வலக்கண் இசைநெறியினையும் அறிந்து மேலும் தண்ணுமையாசிரியனோடும் தாளநிலையிலே பொருந்தி; வண்ணப்பட்டடை யாழ்மேல் வைத்து - பண்ணீர்மை மிக்க இளிக்கிரமமாக இசையை யாழிடத்தே நரம்பணிந்து; ஆங்கு இசையோன் பாடிய இசையின் இயற்கை - அவ்வழியே இசையாசிரியன் பாடிய பாட்டின் இயல்பை; வந்தது வளர்த்து வருவது ஒற்றி இன்புற இயக்கி-பாடுகின்ற பண்ணுக்குரியதாக வந்த கேள்வியைக் குறைவுபடாமல் நிறைவுசெய்தும் அப்பண்ணிற்குரியவல்லாத அயற்கேள்விகளின் வரவு நிகழாமற் பார்த்தும் அப்பண்ணிற்குரிய இன்பம் மிகும்படி செய்து; இசைபட வைத்து - இசைக்குரிய இலக்கணம் பதினொன்றனையும் நிரம்பக் காட்டி; வாரநிலத்தைக் கேடின்று வளர்த்து-நால்வகை இயக்கங்களுள் கேள்விக்கினிய வாரநடையினை மிகவும் வளர்வித்து; ஆங்கு ஈர நிலத்தின் எழுத்து எழுத்தாக வழு இன்று இசைக்கும் குழலோன் தானும் - அவ்வாறு வளர்த்துக் குயிலுங்கால் சொல்லொழுக்கமும் இசை யொழுக்கமும் பொருள்புலப்பாடு முடைமையால் பண்ணீர்மை மிக்க அவ்வார நடையிடத்தே மிடற்றுப் பாடலிற்போல இசையெழுத்துக்களை எழுத்துருவந் தோன்றுமாறு வழுவின்றிக் குயிற்றவல்லவனும் ஆகிய குழலாசிரியனும் என்க.

(விளக்கம்) (56-7) சித்திரமாகவும் வஞ்சனையாகவும் பொருந்திய புணர்ப்புக்கள் என்க. இவற்றுள் சித்திரப்புணர்ப்பாவது - இசை கொள்ளும் எழுத்துக்களின் மேலே வல்லொற்று வந்தவழி மெல்லொற்றுப்போல நெகிழ்த்துப் பண்ணீர்மையுண்டாக நிறுத்துவது. வஞ்சனைப் புணர்ப்பாவது-இசைகொள்ளா எழுத்துக்களின்மேலே வல்லொற்று வந்தவழி (இசைகொள்ளா எழுத்துக் கரப்ப ஒற்றினை) மெல்லொற்றுப் போல நெகிழ்த்துப் புணர்த்தல். புணர்ப்போன் - பாடலாசிரியன்.

58. வர்த்தனை - குரல் முதலிய ஏழிசைகளையும் படிப்படியாக ஏற்றி இசைத்தலும் அங்ஙனமே படிப்படியாக இறக்கி இசைத்தலுமாம். இவை வலமுறையாக ஏறுதலும் மீண்டும் இறங்குதலும் இடமுறையாக இறங்குதலும் மீண்டும் ஏறுதலும் என நான்காயின என்க. இவற்றை ஆரோகணம் அவரோகணம் என்னும் பெயர்களானும் வழங்குவர்.

ஏற்றிய குரல் இளி என்றிரு நரம்பின் ஒப்பக்கேட்கும் உணர்வினன் ஆகி என்றது, இசை கூட்டப்பட்ட குரலிசையானது இளியிசையோடு பொருந்துவதனைத் தனது எஃகுச் செவியால் ஆராய்ந்து கேட்டறிகின்ற சிறந்த இசையுணர்வுடையவனும் ஆகி என்றவாறு. இதனால் ஆராய்தல் என்னும் இசைக்கரணத்திறம் கூறப்பட்டது. இதனைக் கானல் வரியின்கண் விளக்கிக் கூறுவாம்.

62. பண் - பண்ணுதல். அஃதாவது - இடக்கண் இளியாய் வலக்கண் குரலாய் இசை கூட்டப்படுதல். இனி, பல்வேறு வகை முழவுகளுள் வைத்துப் பண்பாடுதற்குக் குயில்தற்கமைந்த முழவு எனினுமாம். கண்நெறி அதன் இரண்டு கண்களினின் றெழுகின்ற இசைமுறைமை என்க.

தண்ணுமை, இதனை அடியார்க்கு நல்லார் மத்திமமான தண்ணுமை தக்கை தகுணிச்சம் முதலாயின என மத்திமமான கருவி என்பர். நூலாசிரியர் தண்ணுமையையே முதன்மையாகக் கொள்கின்றனர் என்பது அவர் செய்யுளால் அறியப்படும். இதுவே உத்தமமான மத்தளம் என்று கொள்க.

தண்ணுமை முதல்வன் றன்னொடும் என்ற உம்மையால் பொருந்து இடமும் பொருந்தி என்க.

வண்ணப்பட்டடை யாழ்மேல் வைத்து என்றது இசைகளை இளிக்கிரமமாக யாழின்கண் நிரல்பட அமைத்து என்றவாறு. அஃதாவது- குரல் முதல் தாரம் ஈறாகவுள்ள ஏழு கேள்விகட்குமுரிய நரம்புகள் இளிக்கிரமமாய் ஒலிக்குமானால் அவை பட்டடை எனப்படும் என்க. யாழின் தகைப்பில் ஒலிக்கும் நாண்குரலுக்கு இணைந்து இளியில் ஒலிக்கும் ஒலிக்கியைய ஒரு நரம்பழுத்துங்கோலை (மெட்டினை) வைத்துக் கட்டினால் அஃதொரு பட்டடை ஆகும். இங்ஙனம் வைத்த பட்டடையைக் குரலாகக் கொண்டு அதற்கு இளியாக இணைகின்ற ஒலியை ஆராய்ந்து மற்றுமொரு கோலை அமைத்துக் கட்ட அஃதொரு பட்டடையாகும். இக்கோலில் ஒலி துத்தமாக வமையும். இங்ஙனமே முறைப்படுத்து யாழின்கண் ஏழிசைகளையும் அமைப்பதே பட்டடையை யாழ்மேல் வைப்பதென்றறிக. இவ்வமைப்பினால் ஏழிசைகளும் தத்தம் நிறந்தோன்ற இசைக்குமாதலின் இதனை வண்ணப் பட்டடை என அடிகளார் ஓதினர். பட்டடை - அடிமணை. கோல் என்பதும் திவவு என்பதும் இப்பட்டடைகளையேயாம். இவை பண்டைக்காலத்தே வார்க்கட்டுகளாலே அமைக்கப்பட்டன. இத்திவவுகளில் இசை நரம்பினை அழுத்தி இசையை மாறுபடச் செய்வர் ஆதலின் திவவு நரம்பு துவக்கப்படுவது எனவும்; இத்திவவின்கண் அழுத்துவதனால் நரம்பினது இசை வலிவுபெறுவதலாலே திவ வென்பது - நரம்புகளை வலிபெறக் கட்டும் வார்க்கட்டு எனவும், (ஈண்டு நரம்பு இசைக்கு ஆகுபெயர்) பழையவுரையாசிரியர் உரைவரைந்தனர். இன்னும் இதுபற்றிய விளக்கங்களை இந்நூலில் எமது ஆராய்ச்சி முன்னுரையில் கண்டுதெளிக. ஈண்டுரைப்பிற் பெருகும். வண்ணப்பட்டடை யாழ்மேல் வைத்து ஆங்கு இசையோன் பாடிய இசை என இயைக்க.

65. வந்தது - இசையோன் பாடிய இசைக்கு நூன்முறைமையாலே வந்த கேள்வி. (சுரம்) வந்தது - சாதியொருமை. வருவது என்பதுமது.

66. இசை - இசைக்குரிய முதலும் முறையுமுதலாய பதினொரு வகைப்பட்ட இலக்கணம்: ஆகுபெயர்.

67. வாரநிலம் - நால்வகை இயக்கங்களுள் ஒன்று. முதனடை வாரம், கூடை, திரள் என்னும் நான்கும் இசையியக்கங்களாகும். இவற்றுள் முதனடை என்பது மிகவும் தாழ்ந்த செலவினை உடையதாம். அஃதாவது மிகுந்த காலச் செலவினையுடையதாம். இதனை விளம்ப காலம் என்றும் முதற்காலம் என்றும் இக்காலத்தார் கூறுவர். வாரம் என்பது அம்முதனடையினும் சிறிது முடுகி நடப்பது; இதனை, மத்திம காலம் என்றும் இரண்டாங்காலம் என்றும் கூறுவர். திரள் அதனினும் முடுகி நடப்பது. இதனைத் துரிதகாலம் அல்லது மூன்றாங் காலம் என்று வழங்குவர். திரள் மிகவும் முடுகிய நடையுடையது. இதனை, அதிதுரிதகாலம் அல்லது நான்காம்காலம் என்று இக்காலத்தார் கூறுவர். இவற்றுள், முதனடை மிகுந்த காலச் செலவுடையதாய் மெல்ல நடத்தலாலே கேட்போர்க்கு இன்பம் பயவாதொழிவதாம். நான்காவதாகிய திரள் நடை தனது மிகையான முடுகியல் நடை காரணமாகப் பாட்டின் பொருள் புலப்பாடும் இன்பஅமைதியும் இலதாம். ஆகவே இசைவாணரும் கேட்போரும் இடையிலுள்ள வார நடையினையும் கூடை நடையினையுமே பெரிதும் விரும்பிப் பாடுதலும் கேட்டலும் இயல்பாம். இவற்றுள்ளும் வாரப்பாடலை சொல்லொழுக்கமும் பொருள் புலப்பாடும் பெரிதும் இசையமைதியும் உடைத்தாம். இக்காரணத்தால் இவ்வார நடையையே பெரிதும்  பாரித்துப் பாடுவர். கூடைநடை, சொற்செறிவும் இசைச்செறிவும் உடைத்தாயினும் பொருள்புலப்பாடிலதாம். இந்நடையை இடையிடையே இசைவாணர் சிறிது சிறிது மேற்கொள்ளுவர். ஈண்டு வாரநிலத்தைக் கேடின்று வளர்த்து எனவே, கூடை நிலத்தை இன்றியமையாத விடத்தே சுருக்கிப் பாடவேண்டும் என்பதும் கூறினாராயிற்றென்க. ஆங்கு ஈரநிலம் என்றது அவ்வாரநிலமாகிய பண்ணீர்மை கெழுமிய நடையிலே என்றவாறு. இசைமாத்திரையா யொழியாது இசைகட்குரிய எழுத்துருவமும் தோன்றக் குயிலும் ஆற்றலுடைய குழலோன் என்பார், எழுத்தெழுத்தாக வழுவின்றிசைக்கும் குழலோன் என்றார். இதனால் குழல் யாழ் முதலிய குயிலுவக் கருவியாளர் மிடற்றுப்பாடல் போன்று எழுத்துருவம் தோன்றத் தங் கருவிகளைக் குயிலுதல் வேண்டும் என்பது அடிகளார் கருத்தாத லுணரப்படும். ஆசிரியர் திருத்தக்கதேவர் தாமும் சிந்தாமணியின்கண் (காந்தருவதத்தை)

கருங்கொடிப் புருவ மேறா கயனெடுங் கண்ணு மாடா
அருங்கடி மிடறும் விம்மா தணிமணி யெயிறுந் தோன்றா
இருங்கடற் பவளச் செவ்வாய் திறந்திவள் பாடி னாளோ
நரம்பொடு வீணை நாவின் நவின்றதோ என்று ரைத்தார்

என்புழி இக்கருத்துடையார் என்பது நுண்ணிதின் உணர்க.

யாழாசிரியன் அமைதி செம்முறைக் கேள்வி

70-71: ஈரேழ் ......... வேண்டி

(இதன்பொருள்) ஈர் ஏழ் தொடுத்த - குரல் முதலிய ஏழிசைகளையும் இரண்டு தொடையலாக அமைத்து யாழ்களில் சிறந்த யாழாகச் செய்யப்பட்டமையாலே; செம்முறைக் கேள்வியின் - செம்முறைக் கேள்வியென்னும் சிறப்புப்பெயர் பெற்று விளங்கும் யாழ்க் கருவியினிடத்தே; ஓர் ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி - ஒப்பற்ற இனிமையுடைய செம்பாலை முதலிய ஏழு பாலைப் பண்களையும் அவற்றினிடையே பிறக்கும் ஐந்து அந்தரப்பாலை என்னும் பண்களையும் அவற்றிற்குரிய இணைநரம்புகளையும் அணைவுறக் கொண்டு இயைத்து இசைத்தமிழுக்குரிய இலக்கணங்களிற் குறைபாடு சிறிதுமின்றி வட்டப்பாலையாக இசைத்து அந்நல்லவையின் கண் அரங்கேற்றிக் காட்டுதலைப் பெரிதும் விரும்பி என்க.

(விளக்கம்) ஈர் ஏழ் - பதினான்கிசைகள். ஏழிசைகளை இருநிரலாகத் தொடுக்கப்படுதல் தோன்றப் பதினான்கு தொடுத்த என்னாது ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வி என்றார். அடிகளார் காலத்திற்கு முற்பட்ட சங்ககாலத்தே சீறியாழ், பேரியாழ் என இருவகை யாழ்களே இருந்தன. சீறியாழ் ஏழிசைகளையே உடையது. பேரியாழோ இருபத்தோரிசைகளை உடையதாயிருந்தது. மெலிவும் சமனும் வலிவும் ஆகிய மூவகை இயக்கங்களுக்கும் ஏழு நரம்புடைய யாழில் மென்மையாக வருடியும் சமனாக வருடியும் வலிந்து வருடியும் இசைவாணர்கள் பண் இசைத்து வந்தனர். இம்முறை முழுமையான இன்பந்தாராமை கண்டு ஓர் இயக்கத்திற்கு ஏழிசையாக மூன்றியக்கிற்கும் இருபத்தோரிசைகளைத் தொடையல் செய்து அமைத்துக்கொண்ட யாழே பேரியாழ் எனப்பட்டது. மற்று இந்த இருபத்தோரிசைகளையும் மிகவும் பயிற்சியுடைய ஆடவர்கள் மட்டுமே ஆரோசையாக மிடற்றும் பாடலிலே இசைக்க முடியும்; மகளிர் பாடுதற்கு இப்பேரியாழ் தகுதியுடையதாக இருக்கவில்லை. இக்காரணத்தாலே பெண்டிரும் எளிதிற் பாடுதற்கேற்றதாக யாழ்க் கருவியைப் பின்னரும் சீர்திருத்தம் செய்தல் இன்றியமையதாயிற்று. அங்ஙனம் சீர்திருத்தம் செய்யப்பட்ட யாழே ஈண்டு அடிகளார் கூறுகின்ற செம்முறைக் கேள்வி என்னும் செவ்விய யாழ் ஆகும். இதனை அடிகளார் ஈரேழ் கோவை என்றும் ஓரோரிடங்களில் செங்கோட்டியாழ் என்றும் வழங்குவர். அடிகளார் காலத்தே சகோடயாழ் என்னும் வழக்கிருந்திலது. இந்நூலில் ஓரிடத்திலேனும் அடிகளார் இப்பெயரை வழங்காமையே இதற்குச் சான்றாம்.

பேரியாழில் மூன்று கோவையாக மெலிவும் சமனும் வலிவுமாக நின்ற மூவகையியக்கமும் இச்செம்முறைக்கேள்வியில் மெலிவு நான்கும் சமன் ஏழும் வலிவு மூன்றுமாய்ப் பதினான் கிசைகளுள் அடங்கி நின்றன. இக்காரணத்தால் மெல்லியலாராகிய பெண்டிர்க்கும் இந்த யாழை யிசைத்துத் தம்மிடற்றானும் இனிதே பாடுதற்குத் தகுதியுடையதாயிருந்தது. மகளிர் பாடுதற் கேற்றதாக்க வேண்டும் என்னும் கருத்தாலேயே யாழ் இங்ஙனம் சீர்திருத்தப்பட்டமையின் பழைய உரையாசிரியரிருவரும் இந்த யாழினை, பெண்டிர்க்குரிய தானமுடைய பரடலியல் பொத்து அமைந்த சிறப்புடைத்து என்றுரை வகுப்பாராயினர் விபுலானந்தரை யுள்ளிட்ட பிற்காலத்து ஆராய்ச்சியாளரும் உரையாசிரியரும் இக் கருத்துணராது இதனைச் சகோட யாழ் எனவும், இது வடவர்நாட்டு இசைக் கருவி எனவும், பிறவும் தத்தம் வாய் தந்தன கூறுவாராயினர்.

இனி ஈர் ஏழ் என்றது இசைகளையே யன்றி நரம்புகளை அன்று. இக்காலத்தே இவை மெட்டுகள் என்று வழங்கப்படுகின்றன. ஆகவே, குரல் முதலிய ஏழிசைகளும் நரம்பு என்று வழங்கப்படும்போது அவ்வவற்றிற்குரிய மெட்டுகள் ஆகுபெயரால் அங்ஙனம் கூறப்படுகின்றன என்று குறிக்கொண்டுணர்ந்து கோடல் வேண்டும். மெட்டுகள் நிரலாகத் தொடுக்கப்படுதலின் அவை கோவை என்றும் தொடை என்றும் வழங்கப்படுதலும் உண்டு. இதுகாறும் கூறியவாற்றால் அடிகளார் கூறும் செம்முறைக் கேள்வி என்பது பதினான்கு மெட்டுக்களமைந்த ஒருவகை யாழ் என்பதுணரப்படும்.

பாலை - பெரும்பாலைகள். பாலை என்பது இசைத்தமிழில் குரல் முதலிய இசைகளையும் இவற்றாலியன்ற பண்களையும் குறிக்கும் என்றுணர்க. என்னை? இந்நரம்பில் பாலை பிறக்குமிடத்துக் குரல் நான்கு மாத்திரை பெறும் என்புழி இசையைக் குறித்தல் காண்க. (ஆய்ச்சியர் குரவை. 14. அடியார்க்குநல்லார் விளக்கவுரை) தாரத்துழை தோன்றப் பாலையாழ் என்புழிப் பண்ணைக் குறித்தலறிக. பாலையைக் கேள்வி என்றும் வழங்குவர். இக்காலத்தார் சுரம் என்பர். ஏழு பாலைகளையும் இக்காலத்தார் இராகம் என்பர். யாழை, வீணை என்னும் வழக்கு அடிகளார் காலந்தொட்டே யுளது. இஃதுணராதார் சிலர் யாழ் வேறு என்றும் வீணை வேறு என்றும் இப்பொழுது இங்குக் காணப்படும் வீணை வடநாட்டவர் கருவி. நமது யாழ் இறந்துபட்டது எனவும் கூறுவர். அவர் அளியரோ! அளியர்! அவர் கூற்று நமது பழைய காலத்து நீர் இறந்துபோயிற்று, இப்பொழுது நமது காவிரியில் ஓடுவது வடவாரியர் கொணர்ந்த சலமே என்றாற்போல்வதொரு பிதற்றுரையேயன்றிப் பிறிதில்லை யென்றொழிக.

இனி, பெரும்பாலைகள் ஏழாம், அவையாவன : செம்பாலை, படுமலைப் பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை விளரிப்பாலை மேற் செம்பாலை என்பன. இவ்வேழும் ஏழிசைகளானும் இயல்வன ஆதலின் இவற்றைப் பெரும்பாலைகள் என்பர். இக்காலத்தே சம்பூரண இராகங்கள் என்பர்.

இப்பாலைப்பண்கள் ஆயப்பாலை, திரிகோணப்பாலை, சதுரப்பாலை, வட்டப்பாலை என நால்வகைப்படும். பழைய வுரையாசிரியர் ஈண்டு ஆயப்பாலையாய் நின்ற பதினாற் கோவை என்றது, குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் எனக் குரல் முதலாகத் தாரமீறாக நிரல்பட்டு நின்ற இரண்டு நிரல்களை என்க. ஆயப்பாலை எனினும் நேரிசைப்பாலை எனினும் ஒக்கும் ஆயப்பாலைக்கு இசைகள் குரல் முதற் றாரமீறாக நிற்கும் என்பதனை, குரல் முதல் தாரம் இறுவாய்க் கிடந்த நிரல் ஏழும் செம்பாலை நேர் எனவரும் (அடியார்க்கு நல்லார் உரை ஆய்ச்சியர் குரவை - 14) என்பதனால் அறிக.

இனி, ஆயப்பாலையாய் நின்ற இவ்வீரேழ் கோவையை வட்டப் பாலையாக இயக்குங்கால் இவ் வேழுபாலைகளும் பன்னிருபாலைகளாக இயக்கப்படும். ஈண்டு அடிகளார் யாழாசிரியனின் புலமைத் திறத்தை இவ்வட்டப்பாலையை இயக்குமாற்றால் அறிவுறுத்துகின்றார். வட்டப்பாலைகள் பன்னிரண்டாம். அவை பன்னிரண்டிராசிகளிடத்தும் பிறப்பனவாகக் கொள்ளப்படும். அங்ஙனம் கொள்ளுங்கால் இராசி மண்டிலங்கீறி அம்மண்டிலத்துள் ஏழு வீடுகளில் குரல் முதலிய ஏழிசைகளும் நிற்பனவாகவும் எஞ்சிய ஐந்து வீடுகளில் அந்தரக் கோல்கள் நிற்பனவாகவும் கருதிக் கொள்ளப்படும். அங்ஙனம் கொள்ளுங்கால் அவை இவ்வாறு நிற்கும்.

இனி இவையிற்றை யாழிற் கொள்ளுமிடத்து யாழினது (மேருவில்) தகைப்பில் இளியும் ஏனைய அதனைத் தொடர்ந்து நிற்பனவாகவும் தகைப்பினின்று இடபவிராசி முதலியன தொடர்ந்து நிற்பனவாகவும் கொள்ளப்படும்.

...............................................................................................................................................
இடபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு  மகரம்  கும்பம்  மீனம்  மேடம்
-------  -------  -----   ------- ------  ------ ----------  ------  -----   -------  ------   -------
இளி      ---       விளரி   தாரம்   ----      குரல்     ---         துத்தம்  ---   கைக்கிளை உழை  ---
...............................................................................................................................................

என, இங்ஙனம் கொள்க. கோடிட்ட இடங்கள் அந்தரக்கோல்களாகும்.

தாரத் தாக்கம்

72-81 : வன்மையில் ........... செம்பாலையாயது

(இதன்பொருள்) வன்மையில் கிடந்த தார பாகமும் - வட்டப் பாலையின் முடிவிடமாகிய வலிவியக்கில் நின்ற தாரம் என்னும் இசையணங்கிற்குரிய இரண்டலகில் ஓரலகினையும்; மென்மையில் கிடந்த குரலின் பாகமும் - அப்பாலை தொடங்குமிடமாகிய குரல் என்னும் இசைமகளுக்குரிய நாலலகில் இரண்டலகையும் கூட்டி இரண்டற்கும் இடைநின்ற; மெய்க்கிளை நரம்பில் - அந்தரக் கோலிலே மூன்றலகுடைய இசையை உண்டாக்கிய வழி அவ்விடத்தில்; கைக்கிளை கொள்ள-கைக்கிளை என்னும் இசையணங்கு தோன்றா நிற்பள்; பொற்புடைத் தளராத் தாரம் - பொலிவும் வலிவுமுடைய அத்தாரம் என்னும் இசையன்னை; கைக்கிளை ஒழிந்த பாகமும் விளரிக்கீத்து - அக்கைக்கிளை கொண்டு தன்பால் எஞ்சி நின்ற ஓரலகையும் தன்மருங்கே நின்ற விளரி என்பாளுக்கு வழங்கிவிட்டு; கிளைவழிப்பட்டனள் - தன் மகள் இல்லத்தை எய்தினள்; அங்கே கிளையும் - அவ்வில்லத்து வாழ்ந்த உழை என்பாளும்; தன் கிளை அழிவுகண்டு அவள் வயின் சேர-தன் மகளாகிய குரல் என்பாள் தன தலகில் இரண்டலகை யிழந்து அழிந்தமையாலே அவளிருந்த வீட்டை எய்தினள்; ஏனை மகளிரும் கிளைவழிச் சேர - இங்ஙனமே எஞ்சிய இசைமகளிர் தாமும் தத்தம் கிளைஞர் இல்லத்தை எய்தா நிற்றலாலே; மேலது உழையுளி கீழது கைக்கிளை - பண்டு குரல் முதலாகநின்ற இசை நிரலிரண்டும் இம்மாற்றத்தாலே உழைமுதலாகக் கைக்கிளை இறுதியாக அமைந்து நிரலே மெலிவு நான்கும் சமன் ஏழும் வலிவு மூன்றுமாய் உழைமுதலாக; வம்புறுமரபில் செம்பாலை யாயது-புதியதொரு முறைமையாலே செம்பாலை முதலிய பண்கள் தோன்றுவன வாயின என்க.

(விளக்கம்) 72-81; வன்மையிற் கிடந்த என்பது தொடங்கி அடிகளார் தாரத்தாக்கம் கூறுகின்றார். தாரத் தாக்கமாவது - தார விசையிலிருந்து இசை நிரல்களை மாறுபடுத்திக் கொள்ளுமாறு இசைக்கரணம் என்க. (80) மேலது உழையிளி என்பது, மேலது என்னும் ஒருமையோடு பொருந்தாமையின் இப்பாடம் பிழைபட்ட பாடம் என்று தோன்றுகின்றது. ஆய்ச்சியர் குரவை-14 அரும்பதவுரையில் உழையிளி என்பது உழைக்குப் பெயர், என ஒரு குறிப்புக் காணப்படுதலின் அதுவே, உழையிளி என ஈண்டுத் திரித்து எழுதப்பட்டதாகக் கருத இடனுளது. அதற்குக் காரணம் எமது முன்னுரையிற் காண்க. இனி இஃது என் சொல்லியவாறோ எனின்:

பண்டு குரல் முதலாக நின்ற இசை நிரலின்கண் இறுதியில் நின்ற தாரத்தில் ஓரலகையும் தொடக்கத்தில் நின்ற குரலில் இரண்டலகையும் கூட்டி இரண்டற்கு மிடையே மூன்றலகுடைய கைக்கிளை யிசையைத் தோற்றுவித்தக்கால் தார இசை அழிவுறும். மேனின்ற விளரி தாரத்தில் எஞ்சிய ஓரலகைப்பெற்றுத் துத்தமாகும்; இளி குரலாகும், உழை தாரமாகும், பண்டைக் கைக்கிளை விளரியாகும், துத்தம் இளியாகும், உழைகுரலாகும். இங்ஙனமாதற்கு இவற்றின் அலகுகளும் பொருந்துதலுணர்க. இதன் பயன் ஒவ்வோரிசையையும் ஐந்திடம் மேலேற்றி நிறுத்துதல் என்க. இதனை இக்காலத்தார் ச-ப, முறை என்பர். பண்டைக் காலத்தே வண்ணப்பட்டடை வைத்தல் என்ப. ஈண்டு அடிகளார் இசைகளை மகளிராக உருவகித்து அழகுற ஓதியுள்ளமை உணரற்பாலதாம்.

இசை திரிந்தவழிப் பாலைகள் திரிதல்

82-89 : இறுதியாதி ......... கிடக்கையின்

(இதன்பொருள்) இறுதி ஆதியாக ஆங்கு அவை பெறுமுறை வந்த பெற்றியின் நீங்காது-ஈற்றில் நின்ற (தாரத்தாக்கத்தாலே) கைக்கிளை முதலாக இடமுறைப்பாலைகளுக்கு நூல் கூறிய முறைக் கிணங்க அவ்வவ்விசைகள் தாம்தாம் பெறுவதற் கியன்ற முறைமையாலே வந்த தன்மையில் நீங்காமல்; படுமலை செவ்வழி பகர் அரும்பாலை என - கைக்கிளை துத்தம் குரல் என்னும் மூன்றிசைகளும் நிரலே படுமலைப் பாலையாகவும் செவ்வழிப் பாலையாகவும் அடுத்துக் கூறப்படுகின்ற அரும்பாலையாகவும்; குரல் குரலாகத் தற்கிழமை திரிந்தபின் - ஒவ்வொன்றும் குரலாகத் தனக்குத் தனக்குரிய பாலைகளாகத் திரிவு பெற்ற பின்னர் (ஆங்கு); முன்னதன் வகையே - அவ்விடத்தே முன் போலவே; இளி முதலாகிய எதிர்படு கிழமையும் - எஞ்சிய இளி முதலிய மூன்றிசைகளும் இடமுறைப் பாலைகளுக்குத் தமக்குரிய முறையாலே; கோடி விளரி மேற்செம்பாலை என - இளிகுரலாக மேற் செம்பாலையும் விளரி குரலாக விளரிப்பாலையும் தாரம் குரலாகக் கோடிப்பாலையும் ஆகத் திரிந்தன; நீடிக்கிடந்த கேள்விக் கிடக்கையின் - இவ்வாறு படுமலைப்பாலை முதலாக மேற் செம்பாலை ஈறாகத் தொடர்ந்து கிடந்த இசைத் தொடரையுடைய யாழினிடத்தே என்க.

(விளக்கம்) இறுதி (பண்டு தாரம்) இப்பொழுது கைக்கிளை - ஈறு முதலாக எனவே, இவை இடமுறைப்பாலைகள் என்பது பெற்றாம். செம்பாலை முதலியன இடமுறையினும் வலமுறையினும் ஒரேவகையாகத் தொடர்ந்து வருதலை இதனாலறியலாம். இங்ஙனம் வருதலையே அடிகளார் வம்புறுமரபு என்றார் இஃதுணராது அடிகளார் ஈண்டுக் கூறியது வலமுறைப்பாலை என்பார் உரை போலியாம். இனி இவ்வாறு தாரத் தாக்கம் பெற்றபின்னர் இராசி மண்டலத்தில் இசைகள் மாறி நிற்பதனைக் கீழே காட்டிய இவ்விராசி மண்டிலத்தே காண்க.

...............................................................................................................................................
  --        இணை  ---        ---    இணை  ---     இணை     ---      இணை  ---      ---       இணை
-------  -------  -----   ------- ------  ------ ----------  ------  -----   -------  ------   -------
குரல்     துத்தம்  துத்தம்  கைக்கி கைக்கி உழை  உழை       இளி   விளரி   விளரி   தாரம்   தாரம்
-------  -------  ------  ------- ------  ------ ----------  ------  -----   -------  ------   -------
இடபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு  மகரம்  கும்பம்  மீனம்  மேடம்
...............................................................................................................................................

இன்னும் இப்பாலைகளினியல்பை ஆய்ச்சியர் குரவையில் விளக்குதும். ஆண்டுக் காண்க.

இணை நரம்பும் இயக்கும் மரபும்

90-94 : இணை நரம்புடையன ........ புலமையோனுடன்

(இதன்பொருள்) இணைநரம்பு உடையன அணைவுறக்கொண்டு - இந்த ஈரேழ் கோவையில் இணையிசையுடைய இசைகட்கு அவ்வவற்றிற்குரிய இணையிசையையும் இயைத்துக் கொண்டு; ஆங்கு - அவ்வழி, யாழ் மேற் பாலை இடமுறை மெலிய - யாழாசிரியன் தனது யாழின்கண் இயக்கும் அரும்பாலை முதலிய பாலைகளை இடமுறைப் பாலைகளாக இசைத்துச் செல்லாநிற்ப, குழல்மேல் கோடி வலமுறை வலிய-குழலோன் கோடிப்பாலை முதலிய பாலைகளைத் தனது குழலின்கண் வலமுறையாக இசைத்துச் செல்ல; வலிவும் சமனும் மெலிவும் எல்லாம் - வலிவியக்கும் சமனியக்கும் மெலிவியக்கும் என்று கூறப்படுகின்ற மூவகை யியக்கங்களை யுடைய இசைக் கூறுபாடுகளுக்கு எல்லாம்; பொலியக் கோத்த புலமையோனுடன் - நரப்படைவு கெடாமலும் பண்ணீர்மை முதலாயின கெடாமலும் அழகுறப் புணர்க்கவல்லனாய் இசை செய்யவல்ல யாழாசிரியனும் என்க.

(விளக்கம்) 90. இணை நரம்பு - இணைந்து நிற்கும் இரண்டிசைகள். முதலும் முடிவுமாய் நிற்கும் இசையுமாம். இணைநரம்பு எனினும் இணையிசை எனினும் இரட்டை யிசை எனினும் ஒக்கும். இணைகரம் புடையன அணைவுறக் கொண்டெனவே செம்பாலை முதலிய பெரும் பாலைகட்கு ஈற்றினும் தொடங்கிய இசை புணர்க்கப்படும் என்பது பெற்றாம்; மேலும் இணைநரம்பில்ல தனவும் சிலவுள என்பது பெற்றாம். அவை குரலும் இளியுமாம் என்பது பழையவுரையாசிரியர் உரையினாற் பெற்றாம். அது வருமாறு : இணைநரம்புடையன அணைவுறக் கொண்டாங்கென்றது. இப் பதினாற்கோவைப்பாலை நிலையினும் பண்ணுநிலையினும் இரட்டித்த குரல் குரலாகிய அரும்பாலையும், இளிகுரலாகிய மேற் செம்பாலையும்போல அல்லாத ஐந்துபாலையும் உழைகுரலாகச் செம்பாலைக்கு உழை பெய்தும் கைக்கிளை குரலாகப் படுமலைப் பாலைக்குக் கைக்கிளை பெய்தும் துத்தம் குரலாகச் செவ்வழிப் பாலைக்குத் துத்தம் பெய்தும் தாரம் குரலாகக் கோடிப்பாலைக்குத் தாரம் பெய்தும் பாடப்படும் என்றவாறு எனவரும்.

எனவே, குரலும் இளியும் இரட்டிக்கும் என்பது பெற்றாம். பெறவே யாழோன் தாரத்தாக்கத்தால் குரல் குரலாகிய அரும்பாலையிற் றொடங்கி நிரலே கோடிப்பாலை முதலியவற்றைத் தொடர்ந்து இடமுறையாக இசைத்து முடிக்கும்பொழுது அரும்பாலையிலே முடிப்பான் என்பதும் இங்ஙனமே குழலோன் தாரத்தாக்கஞ் செய்யப்படாது நின்ற இளிகுரலாகிய கோடிப்பாலையிற் றொடங்கி விளரிப்பாலை முதலியவற்றை நிரலே வலமுறைப்பாலைகளாக இடையிடையே இசைத்து இறுதியிலே தான் தொடங்கிய கோடிப்பாலையிலே முடிப்பான் என்பதும் பெற்றாம். பாலைநிலையில் இரட்டித்தலாவது - குரல் குரலாகவும் அக்குரலே தாரமாகவும் (ஈறாகவும்) கோடலாம். பண்ணுநிலையிலே இரட்டித்தலாவது அரும்பாலையிலே தொடங்கி முடிக்கும்பொழுதும் அரும்பாலையிலே முடித்தலாம். குழலோன் திறத்திலும் இளியும் கோடிப்பாலையும் இங்ஙனமே இரட்டும் என்க. இக்கருத்தறியாமல் விபுலானந்தர் தமது யாழ் நூலின்கண் இப்பகுதியில் பழையவுரையாசிரியர் மயங்கினார் எனத் தமது மயக்கத்தை அவ்வாசிரியர்பால் ஏற்றினர். இனி யாழோனும் குழலோனும் மாறி மாறி இடமுறையானும் (அவரோகணத்தானும்) வலமுறையானும் (ஆரோகணத்தானும்) மாறி மாறி இயக்குங்காலத்தே பாலைகள் கீழ் வருமாறு பிறப்பனவாம்.

யாழோன், இடமுறை குழலோன், வலமுறை

குரல்-அரும்பாலை .................
தாரம்-கோடிப்பாலை இளி-கோடிப்பாலை
விளரி-விளரிப்பாலை விளரி- விளரிப்பாலை
இளி-மேற்செம்பாலை தாரம்-மேற்செம்பாலை
உழை-செம்பாலை குரல்-செம்பாலை
கைக்கிளை-படுமலைப்பாலை துத்தம்-செவ்வழிப்பாலை
துத்தம்-செவ்வழிப்பாலை கைக்கிளை-படுமலைப்பாலை
குரல்-அரும்பாலை உழை-அரும்பாலை
...........  இளி-கோடிப்பாலை

இப்பாலைகள் வலமுறையானும் இடமுறையானும் ஒன்றிவந்து முதலும் முடிவும் இணைந்து வட்டமாய் முடிவதனைக் கூர்ந்துணர்க. அந்தரக்கோல்களை இயக்கியவழி அவையைந்தும் பிறக்கும் என்க.

இனி அடிகளார் கூறியாங்குத் தாரத்தாக்கம் செய்து இணை நரம்பு அணைவுறக் கொள்ளுங்கால் அவை இராசி மண்டிலத்தே-இவ்வாறமையும்.

...............................................................................................................................................
இடபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு  மகரம்  கும்பம்  மீனம்  மேடம்
-------  -------  -----   ------- ------  ------ ----------  ------  -----   -------  ------   -------
குரல்    துத்தம்  துத்தம்  கைக்கி கைக்கி உழை  உழை       இளி    விளரி   விளரி   தாரம்   தாரம்
-------  -------  -----   ------- ------  ------ ----------  ------  -----   -------  ------   -------
  --      அந்தரம்  ---        ---   அந்தரம்  ---    அந்தரம்     ---     அந்தரம்  ---      ---      அந்தரம்
...............................................................................................................................................

பண்டைக் காலத்தே குரல் முதலியனவாகக் கூறப்பட்ட இக்கேள்விகள் இக்காலத்தே சட்சம் முதலிய பெயர்பெற்று நிற்றலைக் காணலாம். பெயர் மாற்றமேயன்றிப் பிற மாறுபாடில்லை. அவை:

குரல்          சட்சம்

துத்தத்தினந்தரம்          சுத்த இடபம்
துத்தம்          சதுசுருதி இடபம்
கைக்கிளை          சாதாரண காந்தாரம்
கைக்கிளையினந்தரம்   அந்தர காந்தாரம்
உழை           சுத்தமத்திமம்
உழையினந்தரம்           பிரதிமத்திமம்
இளி           பஞ்சமம்
விளரியந்தரம்           சுத்ததைவதம்
விளரி           சதுசுருதி தைவதம்
தாரம்           கைசிகி நிடாதம்
தாரத்தினந்தரம்           காகலி நிடாதம்
குரல்            சட்சம்

எனநிற்கும்.

இவற்றை நோக்கின் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே நந் தமிழிசை இற்றைநாள் இருந்தவாறே இருந்தவுண்மை தெரியவரும்.

இனி மேலே காட்டிய இசைகளில் அந்தரங்களை நீக்கிப் பன்னிருகால் தாரத்தாக்கம் செய்துழி 12*7: 84-ம் இறுதியில் இணைக்கும் பாலைகள் பன்னிரண்டும் இயல்பினமைந்த பாலை ஏழுமாய்ப் பண்கள் நூற்றுமூன்றாதலறிக. இவ்வாறன்றிப் பிறவாற்றானும் கூட்டித் தொகை செய்வாருமுளர்.

அரங்கின் அமைதி

95-113 : எண்ணிய நூலோர் ......... அரங்கத்து

(இதன் பொருள்) எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு - ஆராய்ந்து வரையப்பட்ட சிற்ப நூலாசிரியர் இலக்கணங்களிற் சிறிதும் வழுவாதபடி நாடகவரங்கம் அமைத்தற்கு முதற்கண் நிலத்தை ஓரிடத்தே வரையறை செய்துகொண்டு; புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழை கண்இடை ஒருசாண் வளர்ந்ததுகொண்டு-பொதியின் மலை முதலாய புண்ணியமுடைய மலைப்பக்கங்களிலே நெடிதாகி உயர வளர்ந்த மூங்கிலிடத்தே ஒரு கணுவிற்கும் மற்றொரு கணுவிற்கும் ஒருசாணீளமுடைத்தாக வளர்ந்த பகுதியைக் கைக்கொண்டு; நூல் நெறி மரபின் அரங்கம் அளக்கும் கோல் இருபத்து நால் விரல் ஆக-சிற்ப நூல்களில் விதித்தமுறைப் படி அரங்கம் அமைத்தற்கு நிலம் அளக்கின்ற கோல் தலையாய வளர்ச்சியை யுடையவன் கைப்பெருவிரல் இருபத்துநாலு கொண்டது ஒருகோலாக நறுக்கி; எழுகோல் அகலத்து எண் கோள் நீளத்து ஒருகோல் உயரத்து உறுப்பினது ஆகி-இக் கோலால் எழுகோல் அகலமும் எண்கோல் நீளமும் ஒருகோல் குறட்டுயரமும் உடையதாய்; உத்தரப் பலகையொடு அரங்கின் பலகை வைத்த இடைநிலம் நால்கோல் ஆக-தூணின்மிசை வைத்த உத்தரப் பலகைக்கும் அரங்கினது அகலத்திற்கிட்ட பலகைக்கும் இடைநின்ற நிலம் நான்கு கோலாக உயரங் கொண்டு; ஏற்ற வாயில் இரண்டுடன் பொலிய - இத்தன்மையவாகிய அளவிற்குப் பொருந்தவமைத்த இரண்டு வாயில்களுடனே விளங்கும்படி; தோற்றிய அரங்கில் செய்யப்பட்ட அவ்வரங்கினிடத்தே; தொழுதனர் ஏத்தப் பூதரை எழுதி மேல் நிலை வைத்து-கண்டோரெல்லாம் கைகுவித்து வணங்கிப் புகழுமாறு நால்வகை - வருணப்பூதரையும் ஓவியமாக வரைந்து மேலிடத்தே வைத்து, தூண் நிழல் புறப்பட மாண் விளக்கு எடுத்து - தூண்களின் நிழல நாயகப் பத்தியின்கண்ணும் அவையின்கண்ணும் விழாமற் புறத்தே விழுமாறு மாண்புடைய நிலைவிளக்கினை நிறுத்தி; ஆங்கு ஒருமுக எழினியும் பொருமுக எழினியும் கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்து ஆங்கு - இடத்தூணிலையிடத்தே உருவு திரையாக ஒருமுக எழினியும் இரண்டு வலத்தூணிடத்தும் உருவுதிரையாகப் பொருமுக வெழினியும் மேற்கட்டுத் திரையாகக்  கரந்துவரல் எழினியும் செயற்றிறத்தோடே வகுத்து; ஓவிய விதானத்து - ஓவியம் பொறிக்கப்பட்ட விதானத்தையும் உடைத்தாக; உரைபெறு நித்திலத்து மாலைத் தாமம் வளைவுடன் நாற்றி - புகழ்பெற்ற முத்துக்களாலியன்ற சரியும் தூக்கும் தாமமு மாகிய மாலைகளைத் தூங்கவிட்டு; விருந்து படக் கிடந்த அருந்தொழில் அரங்கத்து - புதுமை யுடைத்தாக அமைக்கப்பட்ட செயற்கரிய தொழில் மாண்புடைய அவ்வரங்கத்தின்கண்ணே, என்க.

(விளக்கம்) (95) நூலோர் என்றது சிற்ப நூல்வல்லோரை, அவர் தாமும் அரங்கு செய்தற்கு நிலங்கொள்ளுங்கால் தெய்வத்தானமும் பள்ளியும் அந்தணரிருக்கையும் கூபமும் குளனும் காவுமுதலாகவுடையன நீக்கி, அழியாத இயல்பினையுடைத்தாய் நிறுக்கப்பட்ட குழிப்பூழி குழிக்கொத்துக் கல்லப்பட்ட மண், நாற்றமும் மதுரநாறி இரதமும் மதுரமாகித் தானும் திண்ணிதாய் என்பும் உமியும் பரலும் சேர்ந்த நிலம் களித்தரை உவர்த்தரை ஈளைத்தரை பொல்லாச் சாம்பல்தரை, பொடித்தரை என்று சொல்லப்பட்டன ஒழிந்து ஊரின் நடுவணதாகித் தேரோடும் வீதிகள் எதிர்முகமாக்கிக் கொள்ளல்வேண்டும் என்க.

இவற்றை:-

தந்திரத் தரங்கிங் கியற்றுங் காலை
அறனழித் தியற்றா வழகுடைத் தாகி
நிறைகுழிப் பூழி குழிநிறை வாற்றி
நாற்றமும் சுவையு மதுரமு மாய்க்கனம்
தோற்றிய திண்மை சுவட துடைத்தாய்
என்புமி கூர்ங்கல் களியுவ ரீளை
துன்ப நீறு துகளிவை யின்றி
ஊரகத் தாகி யுளைமான் பூண்ட
தேரகத் தோடுந் தெருவுமுக நோக்கிக்
கோடல் வேண்டு மாடரங் கதுவே

எனவரும் நூற்பாவான் உணர்க.

இனி நிலந்தான் வன்பால் மென்பால் இடைப்பாலென்று மூன்று வகைப்படும். வன்பாலாவது - குழியின் மண் மிகுவது; மென்பாலாவது - குறைவது; இடைப்பாலாவது - ஒப்பு. இவை பெரும்பான்மையாற் கொள்ளப்படும்.

இனி, இதன்கண் நாற்றம் - மண்ணினது நாற்றம்; சுவையும் மண்ணினது சுவையே என்றறிக. மதுரம் - இனிப்பு. மண் இனிப்புச் சுவையுடைத்தாதல் வேண்டும்; வேறு சுவைகள் தீமை பயப்பன என்ப; இதனை,

உவர்ப்பிற் கலக்கமாம் கைப்பின்வருங் கேடு
துவர்ப்பிற் பயமாஞ் சுவைகள் - அவற்றிற்
புளிநோய் பசிகாழ்ப்புப் பூங்கொடியே தித்திப்
பனிபெருகு மாவ தரங்கு

எனவரும் வெண்பாவா னறிக.

இனி, நாற்றம் என்பன கொள்ளிலை, செந்நெல், சண்பகம், சுரபுன்னை என்னும் இவற்றைப்போல் நாற்றமுடைய நிலம் சிறப்பாகும் என்ப. மற்றவை தீமைப்பால என்ப.

97. புண்ணிய நெடுவரை என்றது - பொதியின் மலைபோன்ற கடவுட் டன்மையுடைய மலைகளை.

100. விரல் - ஈண்டுக் கழிய நெடுமையும் கழியக் குறுமையு மில்லாத ஆடவர் கைப்பெருவிரல் என்க. இதனை,

ஒத்த வணுமுத லுயர்ந்துவரு கணக்கின்
உத்தமன் பெருவிரல் இருபத்து நாலுன
கோலே கோடல் குறியறிந் தோரே  - பரதசேனாபதியார்.

எனும் நூற்பாவான் உணர்க.

இனி, அரங்கின் அகலம் நீளம் உயரம் இவற்றின் அளவுகளை,

அக்கோல் ஏழகன் றெட்டு நீண்டும்
ஒப்பால் உயர்வு மொருகோ லாகும்  - செயிற்றியனார்.

என்பதனாலும், இத்தகைய அரங்கிற்கேற்ற வாயில்களின் உயரத்தை,

நற்கோல் வேந்தன் நயக்குறு வாயில்
முக்கோல் தானு முயரவு முரித்தே  - செயிற்றியனார்.

என்பதனானும் அறிக.

105. அரங்கிற்குட் புகவும் புறப்படவும் இரண்டு வாயில் வேண்டுதலின் வாயில் இரண்டுடன் என்றார். ஏற்ற என்பதனை ஆண்டைக்குப் பொருந்திய இடங்கள் பிறவற்றையும் என்று பொருள்கொண்டு அடியார்க்குநல்லார் கரந்து போக்கிடனும் கண்ணுளர் (கூத்தர்) குடிஞைப் பள்ளியும் அரங்கமும் அதனெதிர் மன்னர் மாந்தரோடிருக்கும் அவையரங்கமும் இவற்றினைச் சூழ்ந்த புவிநிறை மாந்தர் பொருந்திய கோட்டியும் முதலாயினவும் கொள்க என்பர்.

106. தோற்றிய - செய்யப்பட்ட. தொழுதனர்; முற்றெச்சம். காண்போர் யாவரும் தொழுது ஏத்த என்றவாறு.

107. பூதர் - வருணப்பூதர், அவர் வச்சிரதேகன், வச்சிர தந்தன், வருணன், இரத்தகேசுரன் எனப்படுவார். இப்பூதர் நால்வரும் நிரலே நால்வகை வருணத்திற்கும் உரியர் என்ப. இப்பூதர்களின் உண்டியும் அணியும் ஆடையும் மாலையும் பிறவும் அழற்படு காதைக் கண் விளக்கமாகக் கூறப்படும். இங்ஙனம் பூதமெழுதி வைத்தலை,

கூறிய வுறுப்பிற் குறியொடு புணர்ந்தாங்கு
ஆடுநர்க் கியற்றும் அரங்கின் நெற்றிமிசை
வழுவில் பூத நான்கு முறைப்பட
எழுதின ரியற்ற லியல்புணர்ந் தோரே

எனவரும் நூற்பாவான் உணர்க.

108. புறத்தேயுள்ள விளக்குக் காரணமாக அரங்கின்கண் தூணிழல் வீழ்தலியல்பாகலின் அந்நிழலை அகற்றுதற் பொருட்டு அகத்தே நிலைவிளக்கு வைக்கப்படுமாதலின் தூணிழல் புறப்பட மாண் விளக்கு எடுத்து என்றார்.

109. ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி என்பன திரைச்சீலைகளின் வகை. இவற்றுள் ஒருமுக எழினி என்பது இடத்தூணிடத்தே தூங்கவிடப்பட்டுக் கயிற்றை உருவியவழி வலத் தூண் காறுஞ் சென்று மறைப்பது என்றும், பொருமுக எழினி என்பது வலத்தூண்கள் இரண்டின் மருங்கும் தூங்கவிடப்பட்ட இரண்டு திரைகள் என்றும், இவை உருவிய வழி இரண்டு பக்கலினுமிருந்து வந்து நடுவண் ஒன்றனோடொன்று இணையும் என்பதும் கரந்துவரல் எழினி என்பது கூத்தர் அவையோர்க்குப் புலப்படாமல் மறைந்து நின்று அமரர்கள் பேசுமாறு பேசுதற்கமைந்த திரைச்சீலை என்றும் பழையவுரையாசிரியர் உரைகளால் ஊகிக்கலாம்.

விதானம்-பந்தல். இப்பந்தலின்கண் ஓவியமெழுதி அழகுசெய்யப்படுதலின் சித்திரவிதானம் எனப்பட்டது.

111. உரைபெறு நித்திலத்து என்புழி உரை - புகழ்.

112. மாலை, தாமம், வளை என்பன முத்துமாலை வகைகள். இவற்றை நிரலே சரி, தூக்கு, தாமம் என்பர் அடியார்க்குநல்லார்.

113. விருந்து - புதுமை.

தலைக்கோல் அமைதி

114-128 : பேரிசை மன்னர் .......... வைத்தாங்கு

(இதன்பொருள்) பேரிமை மன்னர் பெயர் புறத்து எடுத்த சீர் இயல் வெள்குடை காம்பு நனி கொண்டு - பெரிய புகழையுடைய அரசர் எதிர்ந்து வந்து போர் செய்து ஆற்றாமையால் புறமிட்டு ஓடிய விடத்தே அவர் விட்டுப்போன அழகிய இயல்பினையுடைய அவருடைய வெண்கொற்றக் குடையினது காம்பினை நன்கு தலைக்கோலாக நறுக்கி எடுத்து; கண் இடை நவமணி ஒழுக்கி - கணுக்கள் தோறும் ஒன்பான்வகை மணிகளை ஒழுங்குறப் பதித்து; மண்ணிய நாவலம் பொலம் தகட்டு இடைநிலம் போக்கி - தூய்மை செய்த சாம்பூநதம் என்னும் பொன் தகட்டினாலே கணுக்கட்கு இடையிலுள்ள பகுதியை எதிர் எதிராக (வலம் புரியும் இடம் புரியுமாகச்) சுற்றிக்கட்டி; காவல் வெண்குடை மன்னவன் கோயில் இந்திர சிறுவன் ஆக என-சோழ மன்னனுடைய அரண்மனைக்கண் காப்பமைத்து வைத்து இக்கோல் இந்திரன் மகன் சயந்தன் ஆகுக என்று நினைத்து; வந்தனை செய்து வழிபடு தலைக்கோல் - மறை மொழியாலே வாழ்த்தி வழிபடப் பெற்ற அந்தத் தலைக்கோலை; பொற் குடத்துப் புண்ணிய நல்நீர் ஏந்தி மண்ணிய பின்னர் - பொன்னாலியன்ற குடத்தின்கண் புண்ணியம் பயக்கும் காவிரியாற்றின் நீரை முகந்து கொணர்ந்து நீராட்டிப் பின்பு; மாலை அணிந்து - மலர் மாலை சூட்டி; நலம் தரும் நாளால் - இச்சடங்கிற்குப் பொருந்திய நல்ல நாளில்; பொலம் பூண் ஓடை அரசு உவா தடக்கையில் பரசினர் கொண்டு-பொன்னாற் செய்த பூண்களையும் பட்டத்தையுமுடைய பட்டவருத்தனமென்னும் அரச யானையினது கையில் வாழ்த்துடனே கொடுத்து; முரசு எழுந்து இயம்பப் பல்லியம் ஆர்ப்ப அரைசொடு பட்ட ஐம்பெருங் குழுவும்-வீர முரசு முதலியன மூன்று முரசுகளும் ஒரு சேர எழுந்து முழங்கவும், இன்னிசைக் கருவிகள் பலவும் ஒரு சேர முழங்கவும் அரசனும் அவனோடு தொடர்புடைய அமைச்சர் முதலிய ஐம்பெருங் குழவினோடும்; அப் பட்டத்தி யானையோடும் தேர்வலம் செய்து - அணி செய்து மறுகிலே நிறுத்தப்பட்டுள்ள தேரினை வலம்வந்து; கவி கைக்கொடுப்ப - அத் தேர் மிசை நின்ற கவிஞனின் கையிலே அத்தலைக்கோலை அளிப்ப; ஊர்வலம் செய்து புகுந்து முன் வைத்து ஆங்கு - அக்கவிஞன்றானும் மன்னர் முதலியவரோடே ஊர்வலமாக வந்து அரங்கின்கட் புகுந்து அத்தலைக்கோலை எதிர்முகமாக வைத்தபின்னர், என்க.

(விளக்கம்) 114-5. பேரிசை மன்னர் என்றது பண்டு பற்பல போர்களினும் பகைவென்று வாகை சூடிப் பெரும்புகழ்படைத்திருந்த மன்னரை என்பதுபட நின்றது.

115. சீரியல் வெண்குடை என்றது - குடை மங்கலம் என்பது தோன்ற நின்றது, அஃதாவது:

தன்னிழலோர் எல்லோர்க்கும் தண்கதிராம் தற்சேரா வெந் நிழலோர் எல்லோர்க்கும் வெங்கதிராம், இன்னிழல்வேல் மூவா விழுப்புகழ்.... கோவாய் உயர்த்த குடை எனவரும், (புறப் - வெண்பா 222) பேரிசை மன்னர் என்றதற்கேற்பக் குடைக்கும் மங்கலம் கூறுவார் சீரியல் வெண்குடை என்றார்.

இனி, பேரிசை மன்னராகிய பகைவர் எயிற்புறத்து மிளைக்கண் கொண்ட மூங்கில் எனினுமாம் என்பார் அடியார்க்குநல்லார்.

இங்ஙனம் கூறியது ஆடுதற்குரிய கூத்து வேத்தியல் ஆதலின் பொதுவியலுக்கு மலையிற் கொண்ட மூங்கிலே அமையும் என்பர்.

116. நாவலம் பொலம்தகடு என்றது சாம்பூநதம் என்னும் பொன்னாலியன்ற தகட்டினை. பொற்றகட்டால் மலக்கமாகக் கட்டி என்பர் (அடியார்க்) மலக்கம் - மாறுபாடு; அஃதாவது வலமாகவும் இடமாகவும் சுற்றுதல் என்க.

119. இந்திரன் மகன் சயந்தன் என்பான் திருமுனி சாபத்தால் மண்ணிடை வந்து மூங்கிலாகித் தலைக்கோலுமாகிச் சாபநீங்கினன் என்பது வரலாறாகலின் தலைக்கோலை இந்திரன் மகனாக நினைத்து வழிபாடு செய்வது மரபாயிற்று.

120. இத்தலைக்கோலின் அளவினை,

புண்ணியமால் வெற்பிற் பொருந்துங் கழைகொண்டு
கண்ணிடைக் கண்சாண் கனஞ்சாரும் - எண்ணிய
நீளமெழு சாண்கொண்டு நீராட்டி நன்மைபுனை
நாளிற் றலைக்கோலை நாட்டு  - பரதசேனாபதியார்.

எனவரும் வெண்பாவா னுணர்க.

121. புண்ணிய நன்னீர் என்றது காவிரி முதலிய கடவுட்டன்மை யுடைய யாற்றுநீரை.

122. முற்கூறிப் போந்த ஆடலாசிரியன் முதலாயினோர் அரங்கத்தின்கண்ணே இத்தலைக் கோலை வைத்துப் பொற்குடத்தால் நீராட்டிய பின் மாலைசூட்டி என்றியையு காண்க.

123. நலந்தரு நாள் என்றது ஆடற்கலைக்கு ஆக்கமான நலந்தரும் நன்னாள் என்றவாறு. அவை, பூராடம் கார்த்திகை பூரம் பரணி இரேவதி திருவாதிரை அவிட்டம் சித்திரை விசாகம் மகம் என்னும் இவை என்ப. நலந்தரு நாள் என்ற இலேசினால், இடபம் சிங்கம் துலாம் கற்கடகம் விருச்சிகம் மிதுனம் ஆகிய ஓரைகளும் கொள்க என்ப. என்னை?

பூராடங் கார்த்திகை பூரம் பரணிகலம்
சீராதி ரைஅவிட்டஞ் சித்திரையோ - டாருமுற
மாசி யிடப மரிதுலை வான்கடகம்
பேசிய தேள்மிதுனம் பேசு  - மதிவாணர்.

என்பவாகலான் என்க.

123. பொலம்பூணும் ஓடையும் என உம்மை விரித்தோதுக. ஓடை - முகபடாம்; பட்டம் என்பதுமது.

124. அரசுவா - பட்டத்தியானை. பரசினர் - முற்றெச்சம்.

125. முரசு எழுந்து இயம்ப பல்லியம் எழுந்து ஆர்ப்ப என ஒட்டுக. எழுந்து இயம்பல் - மிக்கு ஒருசேர முழங்குதல். பல் இயம் என்றது இன்னிசைக் கருவிகளை,

126. அரைசு: போலி. ஐம்பெருங்குழு - அமைச்சர் முதலிய ஐந்துவகையான அரசியற் சுற்றம்.

127. தேரை வலம் செய்து அதன்கணின்ற கவிஞன் கையிற் கொடுப்ப என்க.

128. அரங்கினுட் புகுந்து என்க. இதற்கு,

பிணியுங் கோளு நீங்கிய நாளால்
அணியுங் கவினு மாசற வியற்றித்
தீதுதீர் மரபிற் றீர்த்த நீரான்
மாசது தீர மண்ணுநீ ராட்டித்
தொடலையு மாலையும் படலையுஞ் சூட்டிப்
பிண்ட முண்ணும் பெருங்களிற்றுத் தடக்கைமிசைக்
கொண்டு சென்றுறீஇக் கொடியெடுத் தார்த்து
முரசு முருடு முன்முன் முழங்க
அரசுமுத லான வைம்பெருங் குழுவும்
தேர்வலஞ் செய்து கவிகைக் கொடுப்ப
ஊர்வலஞ் செய்து புகுந்த பின்றைத்
தலைக்கோல் கோட றக்க தென்ப

என்றார் செயிற்றியனார் என, அடியார்க்குநல்லார் நூற்பா வொன்றனை எடுத்துக் காட்டியுள்ளார்.

அரங்கிற் புகுந்து ஆடுகின்ற இயல்பு

129-142: இயல்பினின் .............. ஆமந்திரிகை

(இதன்பொருள்) இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்-அரசன் முதலியோர் யாவரும் தத்தம் தகுதிக்கேற்ற இருக்கைகளில் முறைமைப்படி அமர்ந்த பின்னர்; குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப-குயிலுவக் கருவியாளர் தாம் நிற்கக்கடவ முறைமை தோன்ற அவரவர்க் கியன்றவிடத்தே நிற்ப; வலக்கால் முன் மிதித் தேறி அரங்கத்து வலத்தூண் சேர்தல் வழக்கு எனப் பொருந்தி - நாடகக் கணிகையாகிய அரங்கேறுகின்ற மாதவி (அரங்கத்திலே கூத்தியர் வலக்கால் முற்பட இட்டேறிப் பொருமுக வெழினிக்கு நிலையிடனான வலப்பக்கத்துத் தூணிடத்தே சேர்தல் மரபு என்பதுபற்றி) அவ்விடத்தே சேர்ந்து; இ நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த தொல் நெறி இயற்கைத் தோரிய மகளிரும் - மாதவி நூன் மரபிற் கிணங்க ஏறியவாறே இடத்தூண் நிலையிடமாகிய ஒருமுக வெழினியிடம் பற்றிய பழைய நெறியியற்கையையுடைய தோரிய மடந்தையரும்; சீர் இயல் பொலிய நீர் அல நீங்க வாரம் இரண்டும் வரிசையில் பாட - நன்மையுண்டாகவும் தீமை நீங்கவும் வேண்டித் தெய்வப்பாடல் இரண்டினையும் மரபுப்படி பாடாநிற்ப; பாடிய வாரத்து ஈற்றில் நின்று இசைக்கும் கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம் - அத் தெய்வப்பாடலின் இறுதியிலே இசைத்தற்குரிய இன்னிசைக் கருவிகள் எல்லாம் கூடிநின்று இசையா நிற்கும்; (அவை, எவ்வாறிசைத்தனவோ வெனின்) குழல்வழி நின்றது யாழ்-வேய்ங் குழலிசை வழியே யாழ் இசை நின்றது; யாழ்வழி தண்ணுமை தக நின்றது - அந்த யாழிசைக்குத் தக தண்ணுமையாகிய மத்தளவிசை நின்றது; தண்ணுமைப் பின்வழி நின்றது முழவு - மத்தளவிசையின் பின்வழியே குடமுழா என்னும் கருவியின் இசை நின்றது; முழவொடு கூடிநின்று இசைத்தது ஆமந்திரிகை-அம் முழவிசையோடு கூடிநின்று அவ்விசைக் கருவிகளின் இசைக் கூறுகளை ஆமந்திரிகை என்னும் கருவி அமைப்பதாயிற்று; என்க.

(விளக்கம்) 129. இயல்பினின் வழாஅ இருக்கை முறைமை என்றது அரசன் முதலியோர் அரங்கின் முன்னர் அவைக்கண் அவரவர் தகுதிக்கேற்ப வீற்றிருக்கும் முறைமையை என்க.

130. குயிலுவ மாக்கள் என்றது இடக்கை முதலிய தோற்கருவியாளரை. முறைமையிலே நிற்றலாவது. ஆடிடம் முக்கோல் ஆட்டுவார்க்கு ஒருகோல் பாடுநர்க் கொருகோல் குயிலுவர் நிலையிடம் ஒருகோல், என நாடக நூலிற் கூறிய முறைப்படி நிற்றல் என்க.

121-2. நாடகக் கணிகையர் அரங்கேறுங்கால் வலக்காலை முற்பட வைத்தேறி வலத்தூணிடத்தே நிற்றல் வேண்டும் என்பது நூல் வழக்கு ஆதலால் அவ்வழக்கிற் கிணங்க மாதவியும் ஏறினள் என்பது கருத்து.

133-4. மாதவி ஏறியவாறே தோரிய மகளிரும் தமக்கு நூல் கூறிய மரபிற்கேற்ப ஏறி இடத்தூணிடம் பற்றி நின்றனர் என்றவாறு.

தோரிய மகளிர் ஆவார் ஆடிமுதிர்ந்தவர் இதனை,

இந்நெறி வகையால் இடத்தூண் சேர்வோன்
தொன்னெறி மரபிற் றோரிய மகளே

எனவும்;

தலைக்கோல் அரிவை குணத்தொடு பொருந்தி
நலத்தகு பாடலு மாடலு மிக்கோள்
சொலப்படு கோதைத் தோரிய மகளே

எனவும், வரும் நூற்பாக்களானறிக.

135. சீரியல் பொலிய நிரல நீங்க என்பதற்குத் தாளவியல்பு பொலிவு பெறவும் அவதாளம் நீங்க எனவும் பொருள் கோடலுமாம்.

136. வாரம் இரண்டாவன - ஓரொற்றுவாரமும் ஈரொற்று வாரமுமாகிய செய்யுள் இரண்டுமாம். அவை தாளத்து ஒருமாத்திரையும் இரண்டுமாத்திரையும் பெற்றுவரும் என்பர். ஈண்டு வாரம் என்பது தெய்வப் பாடலை. அப்பாடலின் இறுதியிலே கூடிநின்றிசைக் கற்பாலனவாகிய கருவிகள் எல்லாம் இசைத்தன என்பது கருத்து.

தோரிய மகளிர் பாட என்றதனால் மிடற்றுப் பாடலும் கூறியவாறாயிற்று.

142. ஆமந்திரிகை - இடக்கை. இஃது இவ்விசைத் தொடரை முற்றுவிக்கும் ஒரு கருவிபோலும்.

இதுவுமது

143-159 : ஆமந்திரிகை ........... காட்டினர் ஆதலின்

(இதன்பொருள்) ஆமந்திரிகையோடு அந்தரமின்றி - இந்த ஆமந்திரிகை இசையினோடே முன்சொன்ன குயிலுவக் கருவிகளின் இசையெல்லாம் பருந்தும் நிழலும்போல ஒன்றாய்நிற்ப; கொட்டு இரண்டு உடையது ஓர் மண்டில ஆகம்-ஒரு தாளத்திற்கு இரண்டு பற்றாக; கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி - பஞ்சதாளப் பிரபந்தமாகக் கட்டப்பட்ட தேசியொத்தை ஒரு தாளத்திற்கு இரண்டு பற்றாகப் பத்தும் தீர்வு ஒன்றுமாகப் பதினொரு பற்றாலே தேசிக்கூத்தை ஆடிமுடித்து; வந்த முறையின் வழிமுறை வழாமல் - இப்படிச் செய்தல் நாடக நூல்களின் அமைந்த முறைமையாகலான் அம்முறைமை வழுவாமல்; அந்தரக் கொட்டுடன் அடங்கிய பின்னர் - அந்தரக்கொட்டென்னும் இவ்வொத்து ஆடிமுடித்த பின்னர்; மீத்திறம் படாமை வக்காணம் வகுத்துப் பால்பட நின்ற பாலைப் பண்மேல் - மங்கலப்பண்ணாய் நரப்படைவு முடைத்தாயிருக்கிற பாலைப்பண்ணை அளவு கெடாதபடி ஆளத்தியிலே வைத்து அதன்மேல்; நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து - மங்கலச் சொல்லையுடைத்தாய் நாலுறுப்பும் குறைபாடிலாத உருவுக்குச் சொற்படுத்தியும் இசைப்படுத்தியும் நன்கு அறிந்து பாட்டும் கொட்டும் கூத்தும் நிகழ்த்தி; மூன்று அளந்து ஒன்று கொட்டி - மூன்றொத்துடைய மட்டத்திலே எடுத்து ஏகதாளத்திலே முடித்து; ஐது மண்டிலத்தால் - அழகிய மண்டிலநிலையால்; கூடை போக்கி - தேசிக்கு ஒற்றித்து ஒத்தலும இரட்டித்து ஒத்தலுமேயாகலின் தேசிக் கூறெல்லாம் ஆடிமுடித்து; ஆறும் நாலும் அம்முறை போக்கி - பஞ்சதாளப் பிரபந்தமாகக் கட்டப்பட்ட வடுகில் ஒத்தையும் தேசியில் ஒத்தைக் காட்டினாற்போல இரட்டிக் கிரட்டியாக ஆடி; கூறிய ஐந்தின் கொள்கைபோலப் பின்னையும் அம்முறை பேரிய பின்றை - சொல்லிப் போந்த தேசிபோல வடுகும் மட்டதாள முதலாக ஏகதாளம் அந்தமாக வைசாகநிலையிலே ஆடிமுடித்த பின்னர்; பொன் இயல் பூங்கொடி புரிந்துடன் வகுத்து என- பொலிவினை யுடையதொரு பொற்கொடியானது கூத்தாடினாற் போல; நாட்டிய நல்நூல் நன்கு கடைப்பிடித்துக் காட்டினள் ஆதலின் - தாண்டவம் நிருத்தம் நாட்டியம் என்னும் மூன்று கூறுபாட்டிலும் நாட்டியம் என்னும் புறநடத்தை நூல்களில் சொன்ன முறைமை வழுவாமல் அவிநயங்காட்டிப் பாவகந் தோன்ற விலக்குறுப்புப் பதினாலினும் வழுவாமல் ஆடிக்காட்டினளாதலின் என்க.

(விளக்கம்) 143. அந்தரம் - இடையீடு; வேறுபாடு.

144. கொட்டு - பற்று. தேசிக்கூத்து பதினொரு பற்றுடையது என்பது இதனாற் பெற்றாம்.

146. போக்குதல் - செய்து முடித்தல்.

144. அந்தரக் கொட்டு, முகம், ஒத்து என்பன ஒருபொருள் குறித்தன. எனவே, கூத்தாடுவோர் தோற்றுவாய் செய்வது இவ்வந்தரக் கொட்டென்பது பெற்றாம். இக்கூத்தாடிய பின்னரே உருக் காட்டப்படும். ஈண்டு இசற்கு அடியார்க்குநல்லார் முகம் ஆடுதல் திரிலோகப் பொருட்டே என்றொரு நூற்பாவடியை எடுத்துக் காட்டினர்.

145. மீத்திறம்படுதல் - அளவு மிகுதல். வக்காணம்-ஆளத்தி, இதனை ஆலாபனை என இக்காலத்தார் வழங்குவர். இராகவாலாபனம் செய்வோர் அஃது அளவின் மிகுத்துழிக் கேட்போர் உணர்வு சலிக்குமாகலின், மீத்திறம்படாமை வக்காணம் வகுத்து என்றார்.

149. பாலைப்பண் - பெரும்பண் நான்கனுள் ஒன்று. என்னை?
பாலை குறிஞ்சி மருதம் செவ்வழி
நால்வகை யாழா நாற்பெரும் பண்ணே

எனவரும் பிங்கல நிகண்டும் நோக்குக.

பாலைப்பண் - மங்கலப்பண்ணுமாம், குரல் முதல் தாரம் இறுவாய் நரப்படைவு முடைத்தாதல் பற்றிப் பாற்பட நின்ற பாலைப் பண் என்றார். பண்களுள் வைத்துச் சிறந்த பகுதிப்பண் என்பது கருத்து என்க.

150. நான்கு - ஈண்டு உக்கிரம், துருவை, ஆபோகம். பிங்கலை என்னும் உறுப்புக்கள் என்க. நான்குறுப்பிற் குறைந்தவை மங்கலத்துக்குப் பொருந்தாமையின் நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து என விதந்தோதினர். நான்கின் ஒரீஇயவை என்க. அவை மூன்றுறுப்புடையன முதலியன மங்கலச் சொல்லையுடைத்தாய் உறுப்புக் குறைவிலதாய், உருவுக்குச் சொற்படுத்தியும் இசைப்படுத்தியும் அறிந்து என்பது பட நன்கனம் அறிந்து என்றார்.

151. மூன்று - மூன்றொத்துடைய மட்டதாளம் - ஒன்று - ஓரொத்துடைய ஏகதாளம்.

152. ஐது - அழகிய. கொண்ட தேசிப் பகுதியெல்லாம் மண்டில நிலையின் வருதகவுடைத்தே என்பதுபற்றி ஐது.....போக்கி என்றார். கூடை - தேசிக்கூத்து ஒற்றித்தொத்தலும் இரட்டித் தொத்தலுமே உடைத்தாகலின் அவற்றையுடைய கூடை, (தேசி) என்க.

155. ஐந்து, ஆகுபெயர். தேசிக்கூத்து.

158. நாட்டிய நன்னூல்...... ஆதலின் என்பதற்கு இக்கதையிற் கூறிய முத்தமிழ் வகையையும் காட்டினாளாதலின் என்றுமாம் என்பர் பழைய உரையாசிரியரிருவரும்:

மாதவி சிறப்புப் பெறுதல்

149-163 : காவல் ......... பெற்றனள்

(இதன்பொருள்) காவல் வேந்தன் - மன்பதை காக்கும் அச்சோழ மன்னன்பால்; இலைப்பூங்கோதை - அவனது பசும் பொன்னாலியன்ற பச்சைமாலையுடனே, இயல்பினின் வழாமை - மாதவி தன் கூத்துக்கும் பாட்டுக்கும் அழகுக்கும் ஏற்ற முறையில் வழுவாமல்; தலைக்கோல் எய்தி - தலைக்கோலி என்னும் சிறப்புப் பெயரும் சூட்டப்பெற்று; தலையரங்கு ஏறி - முன்னரங்கு ஏறப்பெற்று; விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு ஒருமுறை ஆகப் பெற்றனள் - நூலின்கண் விதித்துள்ள கோட்பாட்டிற்கிணங்க ஆயிரத்தெண் கழஞ்சு ஒருநாட் பரியமாகப் பெற்றனள்; என்க.

(விளக்கம்) 160. இலைத்தொழிலமைந்த பொன்னாலியன்ற மாலை என்க, இது மன்னனுடைய மாலை; இலைப் பூங்கோதை - மாதவி எனினுமாம். அரசனுடைய இலைப்பூங்கோதையின் மதிப்பு ஆயிரத்தெண் கழஞ்சு ஆதலால் அதனைப் பெறுமாற்றால் ஆயிரத்தெண் கழஞ்சு பொன் பெற்றாள் என்பது கருத்தாகக் கொள்க. அதுவே நாடக மகளிர்க்கு ஒருநாட்பரியப் பொருளும் ஆகும் என்க. தலைக்கோல்- தலைக்கோல் என்னும் ஒரு சிறப்புப் பெயர். அது பெற்றவர் தலைக்கோலி என்று அழைக்கப்படுவர் என்பது கல்வெட்டுக்கள் வாயிலாய் அறியப்பட்டுளது.

முட்டில் பாணரும் ஆடியன் மகளிரும்
எட்டொடு புணர்ந்த ஆயிரம் பொன்பெறுப

என்பது நாடக நூல் விதிமுறைக் கொள்கை என்க. ஆயிரம் பரிசத்திற்கும் எண்கழஞ்சு மெய்ப் போகத்தும் ஆக நிச்சயித்து என்க என்பர் அடியார்க்குநல்லார். எண்கழஞ்சு அழிவுக்குமாக என்பர் அரும்பத உரையாசிரியர்.

கோவலன் மாதவியை எய்துதல்

163-175 : அதுவே ......... மறந்தென்

(இதன்பொருள்) அதுவே - அவ்வளவு பொன்னே என்மகட்கு ஒருநாட் பரியம் என்று கருதி மாதவியின் தாய்; வீறுயர் நூறு பத்து அடுக்கி எட்டுக் கடை நிறுத்த பசும்பொன் பெறுவது இந்த மாலையாம் - மாற்றற்ற ஆயிரத்தெண் கழஞ்சு பொன்னை விலையாகப் பெறுவது இந்த மாலையாகும். ஆகவே; மாலை வாங்குநர் நங்கொடிக்குச் சாலும் என - இம்மாலையை அவ்விலைக்கு வாங்கிச் சூட்டுவோர் மாதவியாகிய நங்கள் பூங்கொடிக்கு மணவாளப்பிள்ளையாதற்கு அமையும் என்றுகூறிக் கொடுத்தற் பொருட்டு; நகர நம்பியர் திரிதரு மறுகில் - அந்நகரத்துக் கொழுங்குடி மக்கள் வழங்குதற் கியன்றதொரு பெருந்தெருவிலே; மான் அமர் நோக்கி ஓர் கூனி கைக்கொடுத்து - மான்விழி போன்ற அழகிய நோக்குடையாள் ஒரு கூனியின் கையில் அந்த மாலையைக் கொடுத்து; பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த-விலைக்கு விற்பாரைப் போல்வதொரு பண்பினாலே அக்கூனியை நிறுத்தாநிற்ப; மாமலர் நெடுங்கண் மாதவி மாலை கோவலன் வாங்கி-பெரிய தாமரை மலர்போன்ற அழகிய நெடிய கண்ணையுடைய மாதவியின் மாலையாகிய அந்த மாலையைக் கோவலன் அக்கூனி கூறிய அத்துணைப் பொன்னையும் கொடுத்து வாங்கி; கூனி தன்னொடு மணமனை புக்கு-அக்கூனியோடு சென்று அம்மாதவியை மணத்தற்கியன்ற அவள் மனையினுட் புகுந்து; மாதவி தன்னொடு அணையுறு வைகலின் - தான் விரும்பியவாறே அம் மாதவியை மணந்த அப்பொழுதே ஊழ்வினை காரணமாக அயர்ந்து மயங்கி; விடுதல் அறியா விருப்பினன் ஆயினன் - அம் மாதவியை விட்டுப்பிரிய வொண்ணாத விருப்பத்தை யுடையவனாயினன் ஆதலாலே; வடுநீங்கு சிறப்பின் தன் மனை அகம் மறந்து-குற்றமற்ற சிறப்பினையுடைய தன் மனைவியாகிய கண்ணகியையும் தான் மேற்கொண்டிருந்த இல்லற வாழ்க்கையையும் துவர மறந்து அம் மாதவியின் மனையிலேயே வதிவானாயினன் என்க.

(விளக்கம்) 163. அதுவே என்றது அவ்வளவு பொன்னே அவட்குப் பரியமாகக் கருதி என்பதுபட நின்றது.

164-5. அப்பரியப் பொருளின் மிகுதி ஓதுபவர் உள்ளத்தே நன்கு புலப்படுதற் பொருட்டு அடிகளார் நூற்றுப்பத்து அடுக்கி எட்டுக் கடைநிறுத்த வீறுயர் பசும் பொன் என விதந்தெடுத்தோதும் நயம் உணர்க. வீறுயர் - மற்றொன்றற் கில்லாத சிறப்பினால் உயர்ந்த மாற்றற்ற பசும்பொன் என்க. இம்மாலையின் விலை இது இதனை வாங்கிச் சூடுவோர் எங்கள் மாதவிக் கொடிபடர்தற்குக் கொள்கொம் பாகுவர் என்பது தோன்ற மாலை வாங்குநர் சாலும் நங்கொடிக்கு என்றார். என-என்று கூறிக்கொடுத்தற் பொருட்டு என்க. பாட்டிடை வைத்த குறிப்பினால் நிறுத்துதற்குச் சித்திராபதி என்னும் எழுவாய் பெய்து கூறுக. சாலும் என்ற பயனிலைக்கேற்ப மணமகனாதல் அமையும் என்று விரித்தோதுக.

167. மறுகிற் போவார் மயங்கி ஈதென்கொலோ என்று ஆராய்தற் பொருட்டுச் சித்திராபதி மானவர் நோக்குடையாளொரு கூனியைத் தேர்ந்து நிறுத்தினள் என்பது கருத்து.

168. வேறிடங்களில் அவ்வளவு பொன் கொடுப்பார் அரியர் என்பது தோன்ற நகர நம்பியர் திரிதரு மறுகில் என விதந்தோதினர்.

169. பகர்வனர் - விற்போர். பான்மை - பண்பு.

170. மாதவி ஆடிய கூத்தின்கண் அவள் கண்கள் கோவலன் நெஞ்ச முழுவதும் கவர்ந்துகொண்டன எனக் காரணம் தோன்ற மாமலர் நெடுங்கண் மாதவி மாலை என அடிகளார் விதந்தோதுகின்ற நயமுணர்க. அவனையன்றி மற்றொருவனை விரும்பிநோக்காத சிறப்புடைய கண் என்பது நினைந்து அடிகளார் மாமலர் நெடுங்கண் மாதவி என்று விதந்தனர் எனினுமாம்.

171. நல்லோர் நெறிபற்றி அவரொடு படர்தற்குரிய கோவலன் இங்ஙனம் மெய்யும் கோடிய ஒரு கூனியைப் பின்பற்றிக் கொடுநெறிக்கட் செல்வானாயினன் என்பது தோன்றக் கோவலன் வயந்தமாலையொடு புக்கு என்னாது, கூனி தன்னொடு புக்கு என்றார்.

172. மாதவியோடு அணைவுறுமப்பொழுதே தனது குடிப்பெருமையை அயர்ந்தனன் என்க. அவள்பால் மயங்கி என்றது வடுநீங்கு சிறப்பின் தன் மனையையும் அகத்தையும் மறந்து என்பதற்கு ஏதுவாய் நின்றது. அவள் மனையில் அவளோடு வதிவானாயினன் என்பது குறிப்புப் பொருள்.

வெண்பாவுரை

எண்ணும் எழுத்தும் ........ வந்து

(இதன்பொருள்) பூம்புகார்ப் பொற்றொடி - அழகிய புகார் நகரத்தே உருப்பசியாகிய மாதவி மரபின் வந்த பொன்வளையலணிந்த நாடகக் கணிகையாகிய மாதவி என்பாள்; ஆடு அரங்கின் வந்து - கூத்தாடுதற்கியன்ற அரங்கின்கண் புகுந்து; எண்ணும் எழுத்தும் - கணிதத்தின் சிறப்பினையும் எழுத்துக்களின் சிறப்பினையும் அவற்றாலாய; இயல் ஐந்தும் - இயற்றமிழின் ஐந்து கூறுபாட்டையும்; பண் நான்கும் - இசைத்தமிழுக்கியன்ற நால்வகைப் பண்களின் பெருமையினையும்; பண்ணின்ற - அப்பண்களோடுகூடிய; கூத்து பதினொன்றும் - பதினொருவகைக் கூத்துக்களையும் ஆடி; தன் வாக்கினால் - தனது மொழியாலே; மண்ணின் மேற் போக்கினாள் - பாடி இம்மண்ணுலக முழுதும் புகழும்படி செய்தனள்; என்க.

பா - நிலை மண்டிலம்

அரங்கேற்றுகாதை முற்றிற்று.

 
மேலும் சிலப்பதிகாரம் »
temple news
தமிழில் முதலில் தோன்றிய காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். சிலப்பதிகாரத்தை இயற்றியவர் சேரன் ... மேலும்
 
temple news
1. மங்கல வாழ்த்துப் பாடல் (சிந்தியல் வெண்பாக்கள்) திங்களைப் போற்றுதும் திங்களைப் ... மேலும்
 
(நிலைமண்டில ஆசிரியப்பா) உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின்பரதர் மலிந்த பயம்கெழு மாநகர்முழங்குகடல் ... மேலும்
 
(நிலைமண்டில ஆசிரியப்பா) அஃதாவது - கோவலன் மாமலர் நெடுங்கண் மாதவிக்கு அவள் பரிசிலாகப் பெற்ற மாலைக்கு ... மேலும்
 
(நிலைமண்டில ஆசிரியப்பா) அஃதாவது புகார் நகரத்தே இந்திரனுக்கு விழா நிகழ்த்திய செய்தியும் பிறவும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar