Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வஞ்சிக் காண்டம்(24. குன்றக் குரவை) 26. கால்கோள் காதை
முதல் பக்கம் » சிலப்பதிகாரம்
25. காட்சிக் காதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜன
2012
05:01

(நிலைமண்டில ஆசிரியப்பா)

அஃதாவது கற்புக்கடவுளாகிய கண்ணகிக்குக் கடவுள் படிவம் சமைத்தற்கு இன்ன மலையில் கற்கொள்ள வேண்டுமென நெஞ்சால் ஆராய்ந்து கண்டதனைக் கூறும் பகுதி என்றவாறு.

மாநீர் வேலிக் கடம்பு எறிந்து, இமயத்து,
வானவர் மருள, மலை வில் பூட்டிய
வானவர் தோன்றல், வாய் வாள் கோதை,
விளங்கு இலவந்தி வெள்ளி மாடத்து,
இளங்கோ வேண்மாளுடன் இருந்தருளி,  5

துஞ்சா முழவின், அருவி ஒலிக்கும்
மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம் என,
பைந் தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு ஈண்டி,
வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன்,
வள மலர்ப் பூம் பொழில் வானவர் மகளிரொடு  10

விளையாட்டு விரும்பிய விறல் வேல் வானவன்
பொலம் பூங் காவும், புனல் யாற்றுப் பரப்பும்,
இலங்கு நீர்த் துருத்தியும், இள மரக் காவும்,
அரங்கும், பள்ளியும், ஒருங்குடன் பரப்பி;
ஒரு நூற்று நாற்பது யோசனை விரிந்த  15

பெரு மால் களிற்றுப் பெயர்வோன் போன்று;
கோங்கம், வேங்கை, தூங்கு இணர்க் கொன்றை,
நாகம், திலகம், நறுங் காழ் ஆரம்,
உதிர் பூம் பரப்பின் ஒழுகு புனல் ஒளித்து,
மதுகரம், ஞிமிறொடு வண்டு இனம் பாட,  20

நெடியோன் மார்பில் ஆரம் போன்று
பெரு மலை விளங்கிய பேரியாற்று அடைகரை
இடு மணல் எக்கர் இயைந்து, ஒருங்கு இருப்ப-
குன்றக் குரவையொடு கொடிச்சியர் பாடலும்,
வென்றிச் செவ்வேள் வேலன் பாணியும்,  25

தினைக் குறு வள்ளையும், புனத்து எழு விளியும்,
நறவுக் கண் உடைத்த குறவர் ஓதையும்,
பறை இசை அருவிப் பயம் கெழும் ஓதையும்,
புலியொடு பொரூஉம் புகர்முக ஓதையும்,
கலி கெழு மீமிசைச் சேணோன் ஓதையும்,  30

பயம்பில் வீழ் யானைப் பாகர் ஓதையும்,
இயங்கு படை அரவமோடு, யாங்கணும், ஒலிப்ப-
அளந்து கடை அறியா அருங்கலம் சுமந்து,
வளம் தலைமயங்கிய வஞ்சி முற்றத்து,
இறைமகன் செவ்வி யாங்கணும் பெறாது,  35

திறை சுமந்து நிற்கும் தெவ்வர் போல;
யானை வெண் கோடும், அகிலின் குப்பையும்,
மான் மயிர்க் கவரியும், மதுவின் குடங்களும்,
சந்தனக் குறையும், சிந்துரக் கட்டியும்,
அஞ்சனத் திரளும், அணி அரிதாரமும்  40

ஏல வல்லியும், இருங் கறி வல்லியும்,
கூவை நூறும், கொழுங் கொடிக் கவலையும்,
தெங்கின் பழனும், தேமாங் கனியும்,
பைங் கொடிப் படலையும், பலவின் பழங்களும்,
காயமும், கரும்பும், பூ மலி கொடியும்,  45

கொழுந் தாள் கமுகின் செழுங் குலைத் தாறும்,
பெரும் குலை வாழையின் இருங் கனித் தாறும்;
ஆளியின் அணங்கும், அரியின் குருளையும்,
வாள்வரிப் பறழும், மத கரிக் களபமும்,
குரங்கின் குட்டியும், குடா அடி உளியமும்,  50

வரை ஆடு வருடையும், மட மான் மறியும்,
காசறைக் கருவும், ஆசு அறு நகுலமும்,
பீலி மஞ்ஞையும், நாவியின் பிள்ளையும்,
கானக்கோழியும், தேன் மொழிக் கிள்ளையும்;
மலைமிசை மாக்கள் தலைமிசைக் கொண்டு-ஆங்கு  55

ஏழ் பிறப்பு அடியேம்; வாழ்க, நின் கொற்றம்!
கான வேங்கைக் கீழ் ஓர் காரிகை
தான் முலை இழந்து, தனித் துயர் எய்தி,
வானவர் போற்ற மன்னொடும் கூடி,
வானவர் போற்ற, வானகம் பெற்றனள்;  60

எந் நாட்டாள்கொல்? யார் மகள் கொல்லோ?
நின் நாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம்;
பல் நூறாயிரத்து ஆண்டு வாழியர்! என-
மண் களி நெடு வேல் மன்னவன் கண்டு
கண் களி மயக்கத்துக் காதலோடு இருந்த  65

தண் தமிழ் ஆசான் சாத்தன் இஃது உரைக்கும்
ஒண் தொடி மாதர்க்கு உற்றதை எல்லாம்,
திண் திறல் வேந்தே! செப்பக் கேளாய்;
தீவினைச் சிலம்பு காரணமாக,
ஆய் தொடி அரிவை கணவற்கு உற்றதும்;  70

வலம் படு தானை மன்னன் முன்னர்,
சிலம்பொடு சென்ற சேயிழை வழக்கும்;
செஞ் சிலம்பு எறிந்து, தேவி முன்னர்,
வஞ்சினம் சாற்றிய மா பெரும் பத்தினி,
அம் சில் ஓதி! அறிக எனப் பெயர்ந்து, 75

முதிரா முலைமுகத்து எழுந்த தீயின்
மதுரை மூதூர் மா நகர் சுட்டதும்;
அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்த
திரு வீழ் மார்பின் தென்னர் கோமான்
தயங்கு இணர்க் கோதை தன் துயர் பொறாஅன்,  80

மயங்கினன் கொல் என மலர் அடி வருடி,
தலைத்தாள் நெடுமொழி தன் செவி கேளாள்,
கலக்கம் கொள்ளாள், கடுந் துயர் பொறாஅள்,
மன்னவன் செல்வுழிச் செல்க யான் என
தன் உயிர்கொண்டு அவன் உயிர் தேடினள்போல்,  85

பெருங்கோப் பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள்;
கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை
இற்று எனக் காட்டி, இறைக்கு உரைப்பனள்போல்,
தன் நாட்டு ஆங்கண் தனிமையின் செல்லாள்,
நின் நாட்டு அகவயின் அடைந்தனள் நங்கை என்று,  90

ஒழிவு இன்றி உரைத்து, ஈண்டு ஊழி ஊழி
வழிவழிச் சிறக்க, நின் வலம் படு கொற்றம் என-
தென்னர் கோமான் தீத் திறம் கேட்ட
மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன்
எம்மோரன்ன வேந்தர்க்கு உற்ற  95

செம்மையின் இகந்த சொல், செவிப்புலம் படாமுன்,
உயிர் பதிப் பெயர்த்தமை உறுக, ஈங்கு என,
வல் வினை வளைத்த கோலை மன்னவன்
செல் உயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது
மழைவளம் கரப்பின், வான் பேர் அச்சம்;  100

பிழை உயிர் எய்தின், பெரும் பேர் அச்சம்;
குடி புர உண்டும் கொடுங்கோல் அஞ்சி,
மன்பதை காக்கும் நன் குடிப் பிறத்தல்
துன்பம் அல்லது, தொழுதகவு இல் என,
துன்னிய துன்பம் துணிந்து வந்து உரைத்த  105

நல் நூல் புலவற்கு நன்கனம் உரைத்து-ஆங்கு,
உயிருடன் சென்ற ஒரு மகள்-தன்னினும்,
செயிருடன் வந்த இச் சேயிழை-தன்னினும்,
நல்-நுதல்! வியக்கும் நலத்தோர் யார்? என,
மன்னவன் உரைப்ப-மா பெருந்தேவி,  110

காதலன் துன்பம் காணாது கழிந்த
மாதரோ பெரும் திரு உறுக, வானகத்து;
அத்திறம் நிற்க, நம் அகல் நாடு அடைந்த இப்
பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும் என-
மாலை வெண்குடை மன்னவன் விரும்பி,  115

நூல் அறி புலவரை நோக்க, ஆங்கு அவர்,
ஒற்கா மரபின் பொதியில் அன்றியும்,
வில் தலைக்கொண்ட வியன் பேர் இமயத்துக்
கல் கால்கொள்ளினும் கடவுள் ஆகும்;
கங்கைப் பேர் யாற்றினும், காவிரிப் புனலினும்,  120

தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்து என-
பொதியில் குன்றத்துக் கல் கால்கொண்டு,
முது நீர்க் காவிரி முன் துறைப் படுத்தல்,
மறத் தகை நெடு வாள் எம் குடிப் பிறந்தோர்க்கு,
சிறப்பொடு வரூஉம் செய்கையோ அன்று;  125

புன் மயிர்ச் சடைமுடி, புலரா உடுக்கை,
முந்நூல் மார்பின், முத்தீச் செல்வத்து
இருபிறப்பாளரொடு பெரு மலை அரசன்
மடவதின் மாண்ட மா பெரும் பத்தினிக்
கடவுள் எழுத ஓர் கல் தாரான் எனின்,  130

வழி நின்று பயவா மாண்பு இல் வாழ்க்கை
கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சியும்,
முது குடிப் பிறந்த முதிராச் செல்வியை
மதிமுடிக்கு அளித்த மகட்பால் காஞ்சியும்,
தென் திசை என்- தன் வஞ்சியொடு வட திசை 135

நின்று எதிர் ஊன்றிய நீள் பெருங் காஞ்சியும்,
நிலவுக் கதிர் அளைந்த நீள் பெரும் சென்னி
அலர் மந்தாரமோடு ஆங்கு அயல் மலர்ந்த
வேங்கையொடு தொடுத்த விளங்கு விறல் மாலை
மேம்பட மலைதலும், காண்குவல் ஈங்கு என, 140

குடைநிலை வஞ்சியும், கொற்ற வஞ்சியும்,
நெடு மாராயம் நிலைஇய வஞ்சியும்
வென்றோர் விளங்கிய வியன் பெரு வஞ்சியும்,
பின்றாச் சிறப்பின் பெருஞ்சோற்று வஞ்சியும்,
குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும்,  145

வட்கர் போகிய வான் பனந் தோட்டுடன்,
புட்கைச் சேனை பொலிய, சூட்டி;
பூவா வஞ்சிப் பொன் நகர்ப் புறத்து, என்,
வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும் என-
பல் யாண்டு வாழ்க, நின் கொற்றம்,ஈங்கு! என, 150

வில்லவன்கோதை வேந்தற்கு உரைக்கும்:
நும் போல் வேந்தர் நும்மொடு இகலி,
கொங்கர் செங் களத்துக் கொடு வரிக் கயல் கொடி
பகைபுறத்துத் தந்தனர்; ஆயினும், ஆங்கு அவை
திகைமுக வேழத்தின் செவிஅகம் புக்கன;  155

கொங்கணர், கலிங்கர், கொடுங் கருநாடர்,
பங்களர், கங்கர், பல் வேல் கட்டியர்,
வட ஆரியரொடு, வண்தமிழ் மயக்கத்து, உன்
கடமலை வேட்டம் என் கண்- புலம் பிரியாது;
கங்கைப் பேர் யாற்றுக் கடும் புனல் நீத்தம்,  160

எம் கோமகளை ஆட்டிய அந் நாள்,
ஆரிய மன்னர் ஈர்- ஐஞ்ஞாற்றுவர்க்கு
ஒரு நீ ஆகிய செரு வெங் கோலம்
கண் விழித்துக் கண்டது, கடுங் கண் கூற்றம்
இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய  165

இது நீ கருதினை ஆயின், ஏற்பவர்
முது நீர் உலகின் முழுவதும் இல்லை;
இமய மால் வரைக்கு எம் கோன் செல்வது
கடவுள் எழுத ஓர் கற்கே; ஆதலின்,
வட திசை மருங்கின் மன்னர்க்கு எல்லாம்  170

தென் தமிழ் நல் நாட்டுச் செழு வில், கயல், புலி,
மண் தலை ஏற்ற வரைக, ஈங்கு, என-
நாவல் அம் தண் பொழில் நண்ணார் ஒற்று நம்
காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா;
வம்பு அணி யானை வேந்தர் ஒற்றே  175

தம் செவிப் படுக்கும் தகைமைய அன்றோ?
அறை பறை என்றே அழும்பில் வேள் உரைப்ப-
நிறை- அரும் தானை வேந்தனும் நேர்ந்து,
கூடார் வஞ்சிக் கூட்டுண்டு சிறந்த
வாடா வஞ்சி மா நகர் புக்கபின்-   180

வாழ்க, எம் கோ, மன்னவர் பெருந்தகை!
ஊழிதொறு ஊழி உலகம் காக்க என,
வில் தலைக் கொண்ட வியன் பேர் இமயத்து, ஓர்
கல் கொண்டு பெயரும் எம் காவலன்; ஆதலின்,
வட திசை மருங்கின் மன்னர் எல்லாம்  185

இடு திறை கொடுவந்து எதிரீர் ஆயின்,
கடல் கடம்பு எறிந்த கடும் போர் வார்த்தையும்,
விடர்ச் சிலை பொறித்த வியன் பெரு வார்த்தையும்,
கேட்டு வாழுமின்; கேளீர் ஆயின்,
தோள்- துணை துறக்கும் துறவொடு வாழுமின்;  190

தாழ் கழல் மன்னன்- தன் திருமேனி,
வாழ்க, சேனாமுகம்! என வாழ்த்தி,
இறை இகல் யானை எருத்தத்து ஏற்றி,
அறை பறை எழுந்ததால், அணி நகர் மருங்கு- என்.

உரை

1-9: மாநீர்..........செல்வோன்

(இதன் பொருள்) மா நீர் வேலிக்கடம்பு எறிந்து இமயத்து வானவர் மலைவில் பூட்டிய-கரிய நீரையுடைய கடலை அரணாகக் கொண்டு அக் கடலின் நடுவே நின்ற கடப்ப மரத்தினை வெட்டி வீழ்த்தி மேலும் இமயமலைகாறும் அரசர் பலரையும் வென்று வாகை சூடிச்சென்று அவ்விமய மலையின் நெற்றியின்கண் தேவர்களும் வியக்கும்படி போர் செய்தற்குக் காரணமான தனது விற்பொறியைப் பொறித்துவைத்த; வானவர் தோன்றல் வாய்வாள் கோதை-சேரர்குலத் தோன்றலாகிய வென்றி வாய்த்த வாளேந்திய சேரன் செங்குட்டுவன்; விளங்கு இலவந்தி வெள்ளி மாடத்து இளங்கோ வேண்மாளுடன் இருந்து-விளங்காநின்ற நீராவியையுடைய வெள்ளிமாடம் என்னும் அரசமாளிகையின்கண் இளங்கோ வேண்மாள் என்னும் தன் கோப்பெருந்தேவியோடு இருந்தபொழுது; அருளி-தன் பரிசனங்களுக்கு அருளிப்பாடு செய்து; துஞ்சா முழவின் அருவி ஒலிக்கும் மஞ்சுசூழ் சோலை மலை காண்குவம் என-இடையறாது முழங்குகின்ற முழவுகள் போல அருவிகள் முழங்குதற்குக் காரணமான முகில் சூழாநின்ற சோலைகளையுடைய மலை வளங்களைச் சென்று கண்டு மகிழ்வேம் எனக் கருதி; பைந்தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு ஈண்டி-பசிய பொன்னாலியன்ற வளையலணிந்த மகளிர் கூட்டத்தோடு பரவி ஒருங்கு கூடி; வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன்-வஞ்சி நகரத்தின் தனது அரண்மனை முற்றத்தினின்றும் புறப்பட்டும் போகின்றவன்; என்க.

(விளக்கம்) மா நீர்-கடல். சேரன் கடலின் கண் சென்று அங்கு நின்ற கடப்ப மரத்தினை வெட்டினான் என்பதனை, வலம்படு முரசிற் சேரலாதன். முந்நீ ரோட்டிக் கடம்பறுத்து எனவும் சால்பெருந்தானைச் சேரலாதன், மால்கடலோடிக் கடம்பறுத்தியற்றிய பண்ணமை முரசு எனவும் வருவனவற்றால் (அகநா, 127. 347) அறிக. வானவர் இரண்டனுள் முன்னது தேவர்; பின்னது சேரர் மலைவில்; வினைத்தொகை. வென்றி வாய்ந்த வாள் என்க. கோதை-சேரன்; ஈண்டுச் செங்குட்டுவன் இலவந்தி-நீராவி; இல்லறத்தினுள் செய்யப்பட்ட நீர் நிலை. இளங்கோ வேண்மாள்-சேரன் செங்குட்டுவன் மனைவியின் பெயர். அருளி என்பது கட்டளையிட்டு என்றவாறு அரும்பதவுரையில் அருளிப்பாடிட்டு என்பது மது. வஞ்சி சேரர் தலைநகரம்

10-16: வளமலர்.......போன்று

(இதன் பொருள்) வளமலர்ப் பூம்பொழில் வானவர் மகளிரொடு விளையாட்டு விரும்பிய விறல் வேல் வானவன்-வளமிக்க மலரையுடைய பூஞ்சோலையினூடே அரம்பையரோடு ஆடுகின்ற விளையாட்டினை விரும்பிய வெற்றியையுடைய வேலேந்திய இந்திரனானவன் அவ்விளையாட்டின் பொருட்டு; பொலம் பூங்காவும் புனல் யாற்றுப் பரப்பும் இலங்கு நீர்த் துருத்தியும் இளமரக் காவும்-அழகிய பூம்பொழில்களையும் நீர் நிரம்பிய மாற்றுப் பரப்பினையும் விளக்கமுடைய நீரின் இடைக் குறையாகிய துருத்திகளையும் இளமரச் சோலைகளையும்; அரங்கும் பள்ளியும் ஒருங்குடன் (களிற்றுப்) பரப்பி-கூத்தாட்டரங்கையும் பள்ளி இடங்களையும் ஒருசேர யானைகளின் மேலேற்றிய பரப்புதலாலே; ஒரு நூற்று நாற்பது யோசனை விரிந்த-நூற்று நாற்பது யோசனை தூரம் விரிந்தனவாகிய விளையாட்டுப் பொருள்களோடே; பெருமால் களிற்றுப் பெயர்வோன் போன்று-மிகப் பெரிய ஐராவதம் என்னும் களிற்று யானையின் மிசை ஏறியூர்ந்து செல்பவனைப் போல என்க. 

(விளக்கம்) வானவன்-இந்திரன். பொலம் பூங்கா. பொன்னிறமான பூக்களையுடைய கற்பகக்காவுமாம். துருத்தி-ஆற்றிடைக்குறை அரங்கு. நாடகமேடை. பள்ளி-படுக்கை. பூங்கா முதலியவற்றைக் களிற்றின்மேல்பரப்பி, என்க. பெருமால் களிறு என்றது ஐராவதத்தை

17-23: கோங்கம்.............இருப்ப

(இதன் பொருள்) கோங்கம் வேங்கை தூங்கு இணர்க்கொன்றை நாகம் திலகம் நறுங்காழ் ஆரம்-கோங்கும் வேங்கையும் தொங்குகின்ற பூங்கொத்துக்களையுடைய கொன்றையும் சுரபுன்னையும் மஞ்சாடியும் நறுமணமுடைய காழுடைய சந்தனமும் ஆகிய; உதிர் பூம்பரப்பின் ஒழுகு புனல் ஒலித்து-இம்மரங்களினின்றும் உதிருகின்ற மலர்களினால் ஆகிய பரப்பினூடே தன்கண் ஒழுகுகின்ற நீர் மறையா நிற்பவும்; மதுகரம் ஞிமிறொடு வண்டினம் பாட-மதுகரமும் வண்டினங்களும் இசை முரலா நிற்பவும்; நெடியோன் மார்பில் ஆரம் போன்று பெருமலை விளங்கிய பேரியாற்று அடை கரை- திருமாலினது மார்பின்கண் அணிந்த மணி ஆரம் போல, பெரிய மலையைக் குறுக்கிட்டுச் செல்லும் பேரியாறு என்னும் யாற்றினது நீரடை கரையாகிய இடுமணல் எக்கர் இயைந்து ஒருங்கு-நீர் கொணர்ந்து குவித்த எக்கராகிய திடரின்கண் தன் பரிசனங்ளோடே பொருந்தி ஒருங்கு குழுமி இருப்ப; என்க.

(விளக்கம்) கோங்கம்..........ஆரம் என்னும் துணையும் மரத்தின் பெயர்கள் அம் மரத்தினின்றும் உதிருகின்ற பரப்பினுள் தன்பால் ஒழுகு புனல் ஒளிப்ப என்க. மதுகரம் ஞிமிறு வண்டு என்பன வண்டின் வகை. நெடியோன்-திருமால். இவன் பெருமலைக்குவமை. ஆரம் ஆற்றுக்குவமை அடைகரையரகிய எக்கர், இடுமணலாகிய எக்கர் எனத் தனித்தனி கூட்டுக. (9) செல்வோன் வானவர் பெயர் வோன் போன்று சென்று எக்கர் இயைந்து இருப்ப என ஒரு சொல் பெய்து முடித்துக் கொள்க.

24-32: குன்ற............ஒலிப்ப

(இதன் பொருள்) குன்றக் குரவையொடு கொடிச்சியர் பாடலும்-குன்றத்தின்கண் குரவைக் கூத்தாடும் ஒலியும், குறமகளிர் பாடுகின்ற குறிஞ்சிப்பண் ஒலியும்; வென்றிச் செல்வேள் வேலன் பாணியும்-வெற்றியையுடைய சிவந்த மேனியையுடைய முருகனை வாழ்த்துகின்ற வேன்மகன் பாடுகின்ற தேவபாணியின் ஒலியும்; தினைக்குறு வள்ளையும்-குறத்தியர் தினையைக் குற்றுகின்ற உலக்கைப் பாட்டொலியும்; புனத்து எழுவிளியும்-தினைப்புனங்களிலே காவல் செய்கின்ற மகளிர் எழுப்புகின்ற ஒலியும் நறவுக்கண் உடைத்த குறவர் ஓதையும்-தேனைத் தம்மிடத்தேயுடைய இறால்களை யழித்த குறவர்கள் மகிழ்ச்சியால் ஆரவாரிக்கின்ற ஒலியும்; பறை இசை அருவி பயம் கெழும் ஓதையும்-பறைமுழக்கம் போன்று முழங்கி விழுகின்ற அருவிகளின் பயன் பொருந்திய ஒலியும்; புலியொடு பொருஉம் புகர்முக ஓதையும் புலிகளோடு போரிடுகின்ற யானைகளின் பிளிற்றொலியும்; மீமிசைச் சேணோன் கலிகெழும் ஓதையும்-மரத்தின்மீது அமைத்த பரணின்மேல் இருப்பவனாகிய கானவன் எடுத்த செருக்குடைய பாட்டொலியும்; பயம்பில் வீழ் யானைப் பாகர் ஓதையும்-தாம் அகழ்ந்த குழியின்கண் வீழ்ந்த யானையைக் கண்ட பாகர்கள் மகிழ்ந்த ஆரவாரிக்கின்ற ஒலியும்; இயங்குபடை வெட்சிப்பூச்சூடிப் பகைப்புலம் நோக்கிச் செல்லுகின்ற படை மறவர் ஆரவாரிக்கின்ற ஒலியோடு கூடி அக்காட்டகத்தின்கண் எவ்விடத்தினும் ஒலியா நிற்ப என்க.

(விளக்கம்) குறிஞ்சி நிலமாதலின் குன்றக்குரவை கூறினார் கொடிச்சியர்-உயர்ந்த குறக்குல மகளிர். பாணி-தேவபாணி குறுவள்ளை-குற்றுகின்ற வள்ளைப் பாட்டு; உலக்கைப் பாட்டு; புனம் தினைப்புனம்; விளி-கூக்குரலுமாம். நறவு-தேன். அருவி-தினை முதலிய பயன் விளைத்தலின் பயங்கெழு மோதை என்றார். புகர்முகம்-யானை. களி. செருக்கு, மீமிசை-உயர்ந்த பரண். சேணோன் மேலிருப்பவன். பயம்பு. யானையை வீழ்த்திப் பீடிக்கும் குழி இயங்கு படைஅரவமென்றது வெட்சித்திணையில் ஒரு துறை

குன்றக்குறவர் சேரன் செங்குட்டுவனைக் காணுதற்குக் கையுறை சுமந்து கொடு வருதல்

33-36: அளந்து.........போல

(இதன் பொருள்) அளந்து கடையறியா அருங்கலம் சுமந்து இவ்வளவென்று கணித்து எல்லை காணுதற்கு இயலாத மதிப்புடைய பேரணிகலன்களைச் சுமந்து கொண்டுவந்து; வளம் தலை மயங்கிய வஞ்சி முற்றத்து-பல்வேறு வளங்களும் விரவிக்கிடக்கின்ற வஞ்சி நகரத்து அரண்மனை முற்றத்தின்கண்; இறை மகன் செவ்வி பெறாது யாங்கணும் திறைசுமந்து நிற்கும் தெவ்வர் போல-சேரன் செங்குட்டுவனைக் காணுதற்குச் செவ்வி கிடைக்கப் பெறாமையால் தாம் கொணர்ந்த அத்திறைப் பொருள்களைச் செவ்வி வந்துறும்பொழுது முந்துற் பொருட்டுச் சுமந்து வண்ணமே நிற்கின்ற பகை மன்னர்களைப்போல, என்க

(விளக்கம்) அருங்கலம்-பெறற்கரிய பேரணிகலன், தலை மயங்குதல்-விரவிக்கிடத்தல் இறை மகன்-அரசன் அத் திறைப் பொருளை என்க. தெவ்வர்-பகைவர். இவர் பின்வரும் குன்றக் குறுவருக்குவமை

குறவர் சுமந்துவரும் பொருள்களின் வகை

37-47: யானை.........தாறும்

(இதன் பொருள்) யானை வெண்கோடும் அகிலின் குப்பையும்-யானையினது வெள்ளிய மருப்பும் அகிலின் குவியலும்; மான் மயிர்க் கவரியும் மதுவின் குடங்களும் சந்தனக் குறையும் சிந்துரக் கட்டியும்-மான் மயிரால் இயன்ற சாமரையும் தேன்குடங்களும் சந்தனக் குறடும் சிந்துரக் கட்டியும்; அஞ்சனத் திரளும் அணி அரி தாரமும் ஏல வல்லியும் இருங்கறி வல்லியும்-அஞ்சனக் கட்டியும் பூசிக்கொள்ளும் அரிதாரமும் ஏலக்கொடியும் கரிய மிளகுக்கொடியும்; கூவை நூறும் கொழுங்கொடிக் கவலையும்-கூவைக்கிழங்கின் நீறும் கொழுவிய கவலைக்கொடியும்; தெங்கின் பழனும் தேமாங்கனியும் பைங்கொடிப் படலையும் பலவின் பழங்களும்-முதிர்ந்த தேங்காயும் இனிய மாம்பழமும் பசிய கோடியையுடைய பச்சிலையும் பலாவினது இனிய பழங்களும், காயமும் கரும்பும் பூமலிகொடியும் கொழுந்தான் கமுகின் செழுங்குலைத் தாறும்-வெள்ளுள்ளியும் கரும்பும் பூக்கள் மிக்க கொடியும் கொழுவிய அடியினையுடைய கமுகினது வளவிய குலையாகிய தாறும் பெருங்குலை வாழையின் இருங்கனித் தாறும். பெரிய குலையினையுடைய மலை வாழையினது பெரும் பழங்களையுடைய தாறும், என்க.

(விளக்கம்) கோடு-மருப்பு (தந்தம்). குப்பை-குவியல் மது-தேன். குறை-குறடு(கட்டை) அஞ்சனம்-ஒருவகை மருந்து மை. அணி-அழகுமாம். நூறு. நீறு(பொடி) கவலை-ஒருவகைக் கொடி. தெங்கு-தென்னை. பழன் என்றது நெற்றினை படலை-பச்சிலை என்னும் ஒரு கொடி. வாழை-மலைவாழை. கமுகம் தாறு-வாழைத்தாறு என்பன மரபுச் சொல்.

குறவர் கொணர்ந்த உயிரினங்கள்

48-55: ஆளியின்............கொண்டாங்கு

(இதன் பொருள்) ஆளியின் அணங்கும் அரியின் குருளையும் வாள்வரிப் பறழும் மதகரிக் களபமும்-ஆளிக்குட்டியும் சிங்கக்குட்டியும் புலிக்குட்டியும் மதயானைக் கன்றும், குரங்கின் குட்டியும் குடாவடி உளியமும் வரையாடு வருடையும் மடமான் மறியும்-குரங்குக் குட்டியும் வளைந்த காலையுடைய கரடிக்குட்டியும் மலையில் ஏறி விளையாடும் வருடை மான்குட்டியும் அழகிய மான்குட்டியும்; காசறைக் கருவும் ஆசு அறு நகுலமும் பீலி மஞ்ஞையும் நாவியின் பிள்ளையும்-கத்தூரிக்குட்டியும் குற்றமற்ற கீரியும் தோகையையுடைய மயிலும் புழுகுப் பூனைக்குட்டியும்; கானக்கோழியும் தேன்மொழிக் கிள்ளையும் மலைமிசை மாக்கள் தலைமிசைக் கொண்டு-காட்டுக்கோழியும் இனிய மொழியையுடைய கிளியும் ஆகிய இப் பொருள்களையெல்லாம் சேரன் செங்குட்டுவனுக்குக் கையுறையாக அம் மலையின் மேல் வாழுகின்ற மாக்களாகிய குறவர் தங்கள் தலையின் மேல் சுமந்துகொண்டு, வந்து என்க.

(விளக்கம்) அணங்கு, குருளை பறழ் களபம் குட்டி மறி பிள்ளை என்பன அவ்வவற்றின் இளமைப் பெயர்கள் என்றுணர்க. ஆளி அரி என்பன சிங்கத்தின் வகைகள். வாள்வரி-புலி: அன்மொழித் தொகை குடாவடி-வளைந்த கால். வருடை ஒருவகை மான். நாவி-புழுகுப்பூனை

செங்குட்டுவனைக் குறவர் கண்டு கூறியது

55-63: ஆங்கு.......வாழியரென்

(இதன் பொருள்) ஆங்கு-சேரன் செங்குட்டுவன் வீற்றிருந்த அவ்விடத்தை அணுகி அவன் திருவடிகளில் விழுந்து வணங்கி ஏழ் பிறப்பு அடியேம் வாழ்க நின் கொற்றம்-ஏழு பிறப்பும் நாங்கள் அடிமையாவேம் வேந்தர் வேந்தே நின்னுடைய அரசுரிமை நெடிது வாழ்வதாக என்று பணிந்த பின்னர் அச் சேரமன்னனை நோக்கிப் பெருமானே! கான வேங்கைக் கீழ் ஓர் காரிகைதான் முலை இழந்து தனித்துயர் எய்தி-நம்முடைய காட்டின் கண்ணதாகிய நெடுவேள் குன்றத்தின் தாழ் வரையில் ஒரு வேங்கை மரத்தின் கீழே ஒப்பற்ற அழகினையுடையாளொருத்தி தன் முலைகளில் ஒன்றனை இழந்து பிறர் யாரும் பட்டறியாத பெருந்துன்பத்தை எய்தி நின்றவள்; வானவர் போற்ற மன்னொடும் கூடி வானவர் போற்ற வானகம் பெற்றனள்-விண்ணுலகத்தினின்றும் இழிந்துவந்த தேவர்கள் அவள் இழந்த கணவனையும் காட்டி மலர்மாரி தூவிப் புகழ்ந்து போற்றி அழைப்ப அக்கணவனொடும் கூடி அவ் வானவர் போற்றி அழைப்ப வானவூர்தியிலேறி எளியேங்கள் கண்டு நிற்கும்பொழுதே விண்ணுலகம் எய்தினள்; எந் நாட்டாள் கொல் யார் மகள் கொல்லோ நின்னாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம்-அவள் தான் எந்த நாட்டினளோ? யார் மகளோ? அறிகின்றிலேம் அவளை நின்னுடைய இத்திருநாட்டின்கண் பிறந்தவளோ என்று எவ்வளவு நினைத்துப் பார்த்தபொழுதும் அறிகின்றிலேம்; பல் நூறாயிரத்து ஆண்டு வாழியர் என-மன்னர்-மன்னனே! எம்பெருமான் பற்பல நூறாயிரம் ஆண்டுகள் வாழ்க என்று கூறி வாழ்த்தா நிற்ப; என்க

(விளக்கம்) பெயர் அறியாமையின் காரிகை யென்றொழிந்தார். முலை இழந்தமை கண்கூடாகக் கண்டு கூறியபடியாம். மண மதுரையோடு அரசு கேடுற வல்வினை வந்து ருத்தகாலைக் கணவனை அங்கு இழந்து போந்த கடுவினையேன் எனக் கண்ணகியாரே அறிவித்தமையால் தனித்துயர் எய்தி என்றார். அவள்தான் யாராக இருக்கலாம் என்று யாங்கள் ஆராய்த்து பார்த்தும் அவளை இந் நாட்டினளாக அறிகின்றிலேம் ஆதலால் அவள் எந்நாட்டாளோ யார் மகளோ என்றனர். இந் நிகழ்ச்சி எமக்குப் பெரிதும் வியப்பைத் தருகின்றது என்பது. குறிப்புப் பொருள், என்க.

தண்டமிழ் ஆசான் சாத்தன் செங்குட்டுவனுக்குக் கூறியது

64-66: மண்கிளி...........உரைக்கும்

(இதன் பொருள்) மண் களி நெடுவேள் மன்னவன் கண்டு-நிலவுலகம் மகிழ்வதற்குக் காரணமான நெடிய வேலையுடைய அரசனாகிய சேரன் செங்குட்டுவனை அப்பொழுது அங்கு வந்து பரிசில் காரணமாகக் கண்டு அவனது தோற்றப் பொலிவினாலே; கண்களி மயக்கத்துக் காதலோடு இருந்த-தனது கண் களித்தற்குக்  காரணமான மருட்கையோடும் அன்போடும் அவன் பக்கலிலே அமர்ந்திருந்த; தண் தமிழ் ஆசான் சாத்தன். இஃது உரைக்கும்-குளிர்ந்த தமிழ் முழுதும் உணர்ந்த பேராசிரியனாகிய சாத்தன் என்னும் புலவன் குன்றக் குறவர் கூறிய செய்தி கேட்டுத் தன்னை வியந்து நோக்கிய அம்மன்னவனுக்கு இவ் வரலாற்றினைக் கூறுவான்; என்க.

(விளக்கம்) மண்களி மன்னவன் நெடுவேல் மன்னவன் எனத் தனித்தனி கூட்டுக. மன்னவனை நட்புடைமை காரணமாக வந்து கண்டு இருந்த சாத்தன் எனினுமாம் கேட்போர் உள்ளம் குளிர்தற்குக் காரணமான தமிழ் என்க. சாத்தன்-மதுரைக் கூல வாணிகன் சாத்தனார் என்னும் பெரும் புலவர்; இவரே மணிமேகலை யென்னும் பெரும் காப்பியத்தை இயற்றியவரும் ஆவார். இச் சிலப்பதிகாரம் தோன்றுவதற்கும் இவரே காரணமாயிருந்தவர் என்பதனை இக் காதை யானும் இந் நூற் பதிகத்தானும் உணரலாம்.

சாத்தனார் கண்ணகி வரலாறு கூறுதல்

67-77: ஓண்டொடி...........சுட்டதும்

(இதன் பொருள்) திண் திறல் வேந்தே ஒள் தொடி மாதர்க்கு உற்றத்தை எல்லாம் செப்பக் கேளாய்-திண்ணிய ஆற்றலுடைய அரசே! அக் குறவர்களால் குறிப்பிடப்பட்ட விண்ணுலகம் புகுந்த நங்கைக்கு நிகழ்ந்த நிகழ்ச்சியை யெல்லாம் யான் அறிகுவன் ஆதலின் அதனை யான் கூறக் கேட்பாயாக என்று தொடங்கி கூறுபவன்; தீவினை சிலம்பு காரணமாக ஆய்தொடி அரிவை கணவற்கு உற்றதும்-முற்பிப்பிற் செய்த தீவினையானது ஒரு சிலம்பு காரணமாக அழகிய வளையலணிந்த அக் கண்ணகியின் கணவனாகிய கோவலனுக்குத் தன் பயனை ஊட்டுதலாலே நிகழ்ந்த நிகழ்ச்சியும்: வலம்படு தானை மன்னன் முன்னர் சிலம்பொடு சென்ற சேயிழை வழக்கும்-வெற்றியையே தோற்றுவிக்கும் படைகளையுடைய பாண்டிய மன்னனாகிய நெடுஞ்செழியன் முன்னிலையில் தன்பால் எஞ்சிய சிலம்பை ஏந்திச்சென்ற அக் கண்ணகி உரைத்த வழக்கும்; செஞ்சிலம்பு எறிந்து தேவி முன்னர் வஞ்சினம் சாற்றிய மாபெரும் பத்தினி-பாண்டியன் வழக்குத் தோற்ற பின்னர்த் தன் கையிலிருந்த செம்பொற் சிலம்பினை எறிந்து அக்கோப்பெருந்தேவி முன்னிலையிலே வஞ்சின மொழிகள் பல கூறிய திருமாபத்தினியாகிய கண்ணகி கூந்தலையுடைய கோப்பெருந்தேவியே ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும் என் பட்டிமையும் காண்குறுவாய் என்று கூறி அவ்விடத்தினின்றும் போய்; முதிரா முலைமுகத்து எழுந்த தீயின் மதுரை மூதூர் மாநகர் சுட்டதும்-தன்னுடைய இளமையுடைய மூலையைக் கையால் திருகி எடுத்துச் சுழற்றியபோது அம்மூலையின் முகத்தினின்று எழுந்த தீயினாலே மதுரை என்னும் பழைய ஊராகிய பெரிய நகரத்தைச் சுட்டொழித்ததும்; என்க

(விளக்கம்) மாதர்-கண்ணகி. உற்றதை-ஐகாரம் சாரியை எல்லாம் எஞ்சாமைப் பொருட்டு, வெயிலெல்லாம் கழிந்தது என்பது போல, இதனை ஒருமைப் பன்மை மயக்கம் என மயங்குவாரும் உளர். அரிவை, சேயிழை என்பன வாளா சுட்டுப் பெயராந் துணையாய் நின்றன. மன்னன்: நெடுஞ்செழியன். ஐம்பால் என்னும் வழக்குப் பற்றி, சில்லோதி என்றார்.

கோப்பெருந்தேவியின் கற்பு மாண்பு

68-86: அரிமான்..............மாய்ந்தனன்

(இதன் பொருள்) அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்த திரு வீழ் மார்பின் தென்னர் கோமான்-சிங்கம் அரசு கட்டிலின் மேல் வீற்றிருந்த திருமகள் விரும்புதற்குக் காரணமான தென்னாட்டவர் மன்னனாகிய தன் கணவன்; தயங்கு இணர்க்கோதை தன் துயர் பொறாஅன் மயங்கினன் கொல்லென-விளங்குகின்ற பூங்கொத்துக்களாலியன்ற மாலையையுடைய கண்ணகியினுடைய துன்பத்தைக் கண்டு பொறுக்கமாட்டாமையால் இங்ஙனம் மயங்கி வீழ்ந்தான் போலும் என்று நினைத்து; மலர் அடி வருடி-அம் மன்னனுடைய மலர்  போன்ற அழகிய அடிகளைத் தன் கையால் வருடி; தலைத்தாள் நெடுமொழி தன் செவி கேளாள்-அப்பொழுது கண்ணகி கூறிய வீர மொழிகளைத் தன் செவியால் கேளாதவளாகவும்; கலக்கங் கொள்ளாள் கடுந்துயர் பொறாள்-மன்னவன் உயிர் நீத்தமை கண்டு திகைத்தமையால் அது கருதி நெஞ்சத்தின்கண் கலக்கமும் கொள்ளாதவளாகவும் கணவன் இறந்தமையால் எய்திய கொடுந்துன்பத்தைப் பொறாதவளாகவும்; மன்னவன் செல்வுழிச் செல்கயான் என-அரசன் உயிர் சென்ற இடத்திற்குச் செல்வதாக என்னுடைய உயிரும் என்று துணிந்து; தன் உயிர் கொண்டு அவன் உயிர் தேடினள் போல் பெருங் கோப்பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள்-தன்னுடைய உயிரைக் கருவியாகக் கொண்டு மாய்ந்த அம் மன்னனுடைய உயிரைத் தேடிப் போவாள் போல, அப்பாண்டிய மன்னனுடைய கோப்பெருந்தேவி தானும் அம்மன்னவனோடு ஒருசேர உயிர் நீத்தனளாக

(விளக்கம்) அரிமான் ஏந்திய அமளி என்றது அரசு கட்டிலை (சிங்காதனத்தை) திருவீழ் மார்பின் தென்னவர்கோ என(சிலப் 20:22-3) முன்னும் கூறினர். தயங்கிணர்க் கோதை-கண்ணகி, மன்னவன் நிலைமை அக் கோப்பெருந்தேவியின் நெஞ்சம் முழுவதையும் கவர்ந்து. கொண்டமையால் கண்ணகியின் வஞ்சினங்களைக் கேளாதவளாயினன் எனவும் கணவன் இறந்த துன்பம் கையறு நிலைமையை எய்துவித்தலால் கலங்கவும் மாட்டாளாய் அப்பொழுதே அக் கோப்பெருந்தேவியும் உயிர் நீத்தனள். அவன் உயிர் நீத்ததறிந்தவுடன் தானும் உயிர் நீத்தலால் தன் உயிர் கொண்டு அவன் உயிர் தேடினள்போல் மாய்ந்தனள் என்றார்.

கண்ணகி சேரனாடு வந்தது

87-92: கொற்ற வேந்தன்..........கொற்றமென

(இதன் பொருள்) கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை இற்று எனக் காட்டி இறைக்கு உரைப்பனள் போல்-வெற்றியையுடைய பாண்டிய மன்னனது கொடுங்கோல் ஆட்சியின் இயல்பு இத்தன்மைத்து என்று தன்பால் நிகழ்ந்தவற்றையே எடுத்துக் காட்டிச் செங்கோல் மன்னனாகிய உனக்குக் கூறக் கருதியவள் போன்று; தன் நாட்டு ஆங்கண் தனிமையில் செல்லாள்-தான் பிறந்த நாடாகிய சோழநாட்டின்கண் கணவனை இழந்து தமியளாய்ச் செல்ல விரும்பாளாய்; நங்கை நின் பாட்டு அகவயின் அடைந்தனள் என்று-அத்திருமா பத்தினி நினக்குரிய இந்த நாட்டினுள்ளே வந்தெய்தினள் என்று அக் கண்ணகியின் வரலாற்றினை அச் சாத்தனார்; ஒழிவின்று உரைத்து ஈண்டு ஊழி ஊழி வழி வழி நின் வலம்படு கொற்றம் சிறக்க என-சிறிதும் ஒழிவில்லாமல் கூறி வேந்தர் பெருமானே ஊழிதோ றூழி வழி வழியாக நின்னுடைய வெற்றியுடைய அரசியல் அறம் சிறப்பதாக என்று அச்சாத்தனார் கூறா நிற்ப, என்க.

(விளக்கம்) இற்று-இத்தன்மைத்து; இறை: முன்னிலைப் புறமொழி; இறையாகிய நினக்கு என்க. தன்னாடு என்றது சோழநாட்டினை கணவனை இழந்தமை தோன்ற தனிமையில் செல்லாள் என்றார் ஈண்டு

தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார்
தோன்றலிற் றோன்றாமை நன்று     (231)

எனவரும் திருக்குறள் நினைக்கத்தகும் நங்கை-மகளிருள் தலை சிறந்தவள் ஒழிவின்று குற்றிய லிகரம் உகரமாயிற்றுச் செய்யுளாதலின் வழிவழிச் சிறக்க நின் வலம்படு கொற்றம் என வாழ்த்துதல் ஒரு மரபு. இதனை மதுரைக் காஞ்சியினும் காண்க, (194)

சேரன் செங்குட்டுவன் பரிவுரை

93-104: தென்னர்............உரைத்து

(இதன் பொருள்) தென்னர் கோமான் தீத்திறங் கேட்ட மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன்-தென்னாட்டவர் வேந்தனாகிய நெடுஞ்செழியனுடைய செங்கோல் வளைந்த தீய செய்தியைக் கேட்டருளிய சேர நாட்டு மன்னர் பெருமானாகிய செங்குட்டுவன் தன் நெஞ்சத்தினுள் பெரிதும் வருந்தி அப் புலவரை நோக்கிக் கூறுபவன்; எம்மோரன்ன வேந்தர்க்கு உற்ற புலவரை நோக்கிக் கூறுபவன்; எம்மோரன்ன வேந்தர்க்கு உற்ற செம்மையின் இகந்த சொல் செவிப்புலம் படாமுன்-எம்மை யொத்த பிற வேந்தர்களுக்குத் தனக்கு எய்திய நடுவுநிலைமையினின்றும் நீங்கிய இப் பழிச்சொல் செவியின்கண் சென்று புகுவதற்கு முன்னர் அப் பாண்டிய மன்னன்; உயிர்பதிப் பெயர்த்தமை ஈங்கு உறுக என-தன் உயிரைத் தன் உடம்பினின்றும் நீக்கிய இச் செய்தி இப்பொழுதே விரைந்து சென்று புகுவதாக என்று கருதி; மன்னவன் வல்வினை வளைத்த கோலை செல் உயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது-அம் மன்னவனுடைய வலிய ஊழ்வினையால் வளைக்கப்பட்ட அவனது கோலை உயிர் அவ்வளைவினை நிமிர்த்து மீண்டும் செங்கோலாக்கிவிட்டது! வாழ்க! அம் மன்னவன் புகழ்; மழை வளம் கரப்பின் வான் பேர் அச்சம் உயிர் பிழை எய்தின் பெரும் பேர் அச்சம்-இயல்பாகவே உலகின்கண் மழை வறந்து வளம் குறைந்தாலும் மக்கள் வன்பழி தூற்றுவரே என்னும் மிகப் பெரிய அச்சம் தோன்றும் உலகின்கண் வாழும் உயிர்கள் தம் ஊழ்வினையாலே வருந்துமிடத்தும் மாந்தர் தம்மைத் தூற்றுவரே என்னும் மிகப் பெரிய அச்சம் தோன்றும்; குடிபுரவுண்டும்-தம் குடிமக்கள் தம்மால் மாந்தர் தம்மைத் தூற்றுவரே-தம் குடிமக்கள் தம்மால் நன்கு புரக்கப்பட்ட வழியும்; கொடுங்கோலாக்கி விடுமோ என ஒவ்வொரு நொடிப்பொழுதும் அஞ்சுதற்குக் காரணமான; மன்பதை காக்கும் நன்குடிப்பிறத்தல் துன்பம் அல்லது தொழுதகவு இல் என-இம் மக்கள் தொகுதியைப் பாதுகாக்கின்ற நல்ல அறக்கடமையை மேற்கொண்ட இவ்வரசர் குடியில் பிறத்தலால் ஒருவனுக்கு எய்துவது துன்பமேயல்லது தொழத்தகுந்த சிறப்பு யாதொன்றுமில்லை என்று; துன்னிய துன்பம் துணிந்து வந்து உரைத்த நன்னூல் புலவற்கு நன்கனம் உரைத்து-கண்ணகி முதலியோர்க்கு ஊழ்வினை காரணமாக வந்துற்ற துன்பங்களை யெல்லாம் அறிந்து தெளிந்து புலவராகிய அச் சாத்தனாருக்குத் தன் பரிவுரைகளை நன்றாக எடுத்துச் சொல்லிய பின்னர் என்க.

(விளக்கம்) தென்னர் கோமான்-நெடுஞ்செழியன் எம்மோ ரன்ன எம்மையொத்த இதுமுதல் ஈங்கென என்னுமளவும் செங்குட்டுவன் உட்கோள் உயிர்பதிப் பெயர்த்தல்-உயிரை அதன் உறையுளாகிய உடம்பினின்றும் நீக்குதல். உண்ணாநோன்போ டுயிர்பதிப் பெயர்த்ததும் என்பர் பின்னும்(27: 83) உண்ணா நோன்போ டுயிர் பதிப் பெயர்ப்புழி என்பது மணிமேகலை (14: 95) இகந்த சொல் செவிப் புலம் படுதற்குமுன் உயிர்பதிப் பெயர்த்த இச் செய்தி அவர் செவிப் புலம் புகுதுக என்றவாறு. வல்வினை தீவினைமேற்று. மழைவளம் கரத்தல், இயற்கை நிகழ்ச்சி. உயிர்பிழை எய்துதல், ஊழ்வினையின் செயல். இவற்றிற்குக் கூட உலகோர் தம்மைப் பழிப்பர் என்று அரசர் அஞ்ச நேருகிறது குடிமக்கள் நன்கு தம்மால் பாதுகாக்கப்படும் பொழுதும் வல்வினை தம் செங்கோலை வளைத்துவிடுமோ என்றும் அவர் அஞ்சிக்கிடக்க நேர்கின்றது. இத்தகைய அச்ச்திற்கே இருப்பிடமாகிய அரசர் குடியிற் பிறத்தல் துன்பமல்லது தொழுதகவில்லை என இவ்வரசர் பெருமான் தனது பட்டறிவினால் உணர்ந்து கூறுகின்ற இம்மொழிகள் சாலவும் பெருந்தகைமையுடையவாக விருத்தல் உணர்ந்து மகிழற்பாலது துணிந்து-தெளிந்து. புலவன்-சாத்தனார் தனது-பெருந்தகைமை தோன்ற உரைத்தமை கருதி நன்கனம் உரைத்து என அடிகளார் பாராட்டினர்.

செங்குட்வேன் தன் பெருந்தேவியை நோக்கி வினவுதல்

106-110: ஆங்கு...............உரைப்ப

(இதன் பொருள்) நன்னுதல்-அழகிய நுதலையுடையோய்!; ஆங்கு உயிருடன் சென்ற ஒரு மகள் தன்னினும் செயிருடன் வந்த இச் சேயிழை தன்னினும்-அம் மதுரையின்கண் தன் கணவன் உயிருடன் தன் உயிரையும் நீத்துப்போன ஒப்பற்ற கற்புடையாளும் சினத்தோடே நமது நாட்டிற்கு வந்த கண்ணகி யென்னும் கற்புடையாளும் ஆகிய இவ்விரண்டு மகளிருள் வைத்து, வியத்தகு நலத்தோர் யார்-நம்மால் வியக்கத்தகுந்த சிறப்புடையோர் யார் என்று; மன்னவன் உரைப்ப-அச்சேரன் செங்குட்டுவன் வினவா நிற்ப, என்க.

(விளக்கம்) இச்சேரன் செங்குட்டுவன் வினவுவதும் ஒரு கற்புடையாளை ஆதலின் தகுந்தவர்பாலே வினவப்பட்டன; இவ்வினாக்களுக்கு விடை கூறுதல் அரிதென்றே நம்மனோர்க்குத் தோன்றுதல் உணர்க. ஆங்கு என்றது மதுரையை. கணவன் உயிருடன் ஒரு சேரத் தன் உயிரும் நீத்துச் சென்ற ஒரு மகள் என்றவாறு. ஒருமகளென்றது அவள் செயலின் அருமை தோன்ற நின்றது.

கோப்பெருந்தேவியின் விடையும் வேண்டுகோளும்

110-114: மாபெருந்தேவி........வேண்டுமென

(இதன் பொருள்) மா பெருந்தேவி காதலன் துன்பம் காணாது கழிந்த மாதரோ பெருந்திரு வானகத்து உறுக-அதுகேட்ட அக்கோப்பெருந்தேவி பெரும! தன் காதலனாகிய அப்பாண்டிய மன்னனுடைய துன்பத்தைக் காணுமுன்பே உயிர்நீத்த அப் பாண்டிமாதேவி கற்புடைமகளிர் பெறுதற்கியன்ற பெருஞ் செல்வத்தை விண்ணவர் உலகத்தின்கண் பெறுவாளாக; அத்திறம் நிற்க-அது கூறவேண்டா; நம் அகல் நாடு அடைந்த இப் பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும் என-நம்முடைய அகன்ற இந்நாட்டிற்குத் தானே வந்தெய்திய இக்கற்புக் கடவுளை யாம் வழிபாடு செய்தல் வேண்டும் என்று கூறாநிற்ப என்க.

(விளக்கம்) காதலன் இறந்துழி இறத்தல் இவ்வுலகத்துக் கற்புடை மகளிர்க்கெல்லாம் இயல்பாதலின் அப் பாண்டியன் தேவியின் செயல் வியத்தற்குரிய தொன்றன்று எனவும். அப் பெருந்தகைச் செயலால் எய்தும் பயனை அவள் எய்துக எனவும் உவந்துரைத்தபடியாம். இவ்விருவருள் வியத்தகும் நலத்தாள் இக்கண்ணகியே என்னும் இவ்விருவருள் வியத்தகும் நலத்தாள் இக்கண்ணகியே என்னும் தன் கருத்தினை உடம்பொடு புணர்த்தி இப்பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும் என இத்தேவி கூறும் விடையும் வேண்டுகோளும் பெரிதும் பாராட்டுதற்குரியன பாண்டியன் தேவி கற்புடைய மகன். கண்ணகி கற்புடை மகளிர்கெல்லாம் கடவுள்; என்று கூறிய இவ்விடையின் கண் இவருள் வியத்தகு நலத்தோள் இவள் என்னும் தன் கருத்து நன்கு விளங்கிக் கிடத்தலுணர்க இதனோடு

காதல ரிறப்பிற் கனையெரி பொத்தி
ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்காது
இன்னுயி ரீவர் ஈயா ராயின்
நன்னீர்ப் பொய்கையின் நளியெரி புகுவர்
நளியெரி புகாஅ ராயின் அன்பரோ(டு)
உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர்
பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்து
அத்திறத் தாளும் அல்லளெம் மாயிழை
கணவற் குற்ற கடுந்துயர் பெறாஅள்
மணமலி கூந்தல் சிறுபுறம் புதைப்பக்
கண்ணீ ராடிய கதிரிள வனமுலை
திண்ணிதிற் றிருகித் தீயழற் பொத்திக் காவலன் பேரூர் கனையெரி யூட்டிய மா பெரும் பத்தினி   (மணிமே: 2: 42-55)

எனவரும் மாதவி கூற்று நினைவிற் கொள்ளற்பாற்று. நம் அகல் நாடு அடைந்த என்பது நாம் செய்த தவத்தால் நம் அகல் நாடு அடைந்த என்பதுபட நின்றது. கடவுள் ஆதலின் பரசல் வேண்டும் என்றாள். எனவே இக் கற்புக் கடவுளுக்குக் கோயிலெடுத்துப் படிமமும் சமைத்து விழாவெடுத்து வழிபாடு செய்தல் வேண்டும் என்பது தேவியின் கருத்தாயிற்று. இக் கருத்துணர்ந்த செங்குட்டுவன் அதற்கிணங்க மேலே கூறுவதும் காண்க.

செங்குட்டுவன் திருவுளக் குறிப்புணர்ந்த அமைச்சர் கூற்று

115-121: மாலை.........உடைத்தௌ

(இதன் பொருள்) மாலை வெண்குடை மன்னவன் விரும்பி நூல் அறி புலவரை நோக்க-பெருந்தேவியின் கருத்தையுணர்ந்த மலர்மாலை சூட்டப்பெற்ற கொற்ற வெண்குடையை யுடைய அச் சேர மன்னனும் அக் கருத்தினைப் பெரிதும் விரும்பி மருங்கிருந்த அமைச்சர்களை நோக்க; ஆங்கவர்-அப்பொழுது அவ்வமைச்சர் தாமும் அம் மன்னனுடைய குறிப்பறிந்து கூறுபவர்; ஒற்கா மரபின் பொதியில் அன்றியும் வில் தலைக்கொண்ட வியன்பேர் இமயத்து கல் கால் கொள்ளினும் கடவுள் ஆகும்-அழியாமல் நிற்கும் முறைமையினையுடைய பொதியில் மலையிலாதல் அல்லாமலும் விற்பொறியைத் தன்னிடத்தே கொண்ட அகன்ற பெரிய இமயமலையிலாதல் கல்லை அடிச்செய்து கைக்கொண்டாலும் இரண்டு கடவுள் படிமம் செய்தற்குத் தகுதியுடையனவே ஆகும்; கங்கைப் பேர்யாற்றினும் காவிரிப் புனலினும் தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்து என-அங்ஙனம் கற்கொள்ளுமிடத்து இமயக் கல்லாயின் கங்கைப் பேரியாற்று நீரினும் அல்லது பொதியமலைக் கல்லாயின் காவிரிப் பேரியாற்று நீரினும் அமிழ்த்திச் செய்யும் மங்கல நீர்முழுக்குத் தகுதியுடையதாகும் என்று கூறாநிற்ப என்க.

(விளக்கம்) ஒற்கா மரபு-நிலைத்து நிற்கும் இயல்பு. இதனை, பொதியிலாயினும் இமயமாயினும்.....ஒடுக்கம் கூறார் என அடிகளார் கூறுமாற்றானும் (க. மங்கல) உணர்க. இமயமும் தமக்குரியது என உரிமை காட்டுவார் வில்தலை கொண்ட இமயம் என்றார். வில்-சேரர்( இலச்சனை) பொறி. கால் கொள்ளுதல்-வரைத்து அடித்தெடுத்துக் கொள்ளுதல். கங்கைப் பேரியாற்றினும் காவிரிப் புனலினும் என்றது எதிர் நிரனிறை. கல்லை நீரில் மூழ்குவித்துச் செய்யும் ஒரு சடங்காதலின் தங்கிய நீர்ப்படை யென்றார்.

செங்குட்டுவன் கூற்று

122 முதலாக, 149- ஈறாக ஒரு தொடர்

122-130: பொதியில்.......எனின்

(இதன் பொருள்) பொதியில் குன்றத்துக் கல்கால் கொண்டு முது நீர்க் காவிரி முன் துறைப்படுத்தல்-பொதியமலையிடத்தே கல் அடிச்செய்து கைக்கொண்டு பழைமையான நீர்வளமிக்க காவிரிப் பேரியாற்றின்கண் துறையிடத்தே நீர்ப்படை செய்தல்; மறத்தகை நெடுவாள் எம்குடிப் பிறந்தோர்க்குச் சிறப்பொடு வரூஉம் செய்கையோ அன்று-மறப் பண்புமிக்க நெடிய வாளையுடைய எம்முடைய சேரர் குடியிற் பிறந்த மன்னர்க்குச் சிறப்போடு பொருந்தி வருகின்றதொரு செயல் ஆகாது; புன மயிர்ச்சடைமுடிப் புலராஉடுக்கை முந்நூல் மார்பின் முத்தீச்செல்வத்து இருபிறப்பாளரொடு-புல்லிய மயிரால் தெற்றிய சடையாலியன்ற முடியினையும் ஈரம்புலராத ஆடையினையும் மூன்றாகிய பூணூலையுடைய மார்பினையும் மூன்று வகைப்பட்ட வேள்வித் தீயாகிய செல்வத்தையும் உடைய அந்தணரோடு; பெரு மலை அரசன் மடவத்தின் மாண்ட மாபெரும் பத்தினிக்குக் கடவுள் எழுத ஓர் கல் தாரான் எனின்-பெரிய மலை அரசன் இளமையிலேயே மாட்சிமையுடைய மிகப் பெரிய பத்தினியாகிய கண்ணகிக் கடவுளுக்குப் படிவம் அமைக்க ஒரு கல் நமக்குக் கொடானாயின் என்க.

(விளக்கம்) பொதியில் நம் தமிழகத்து மலையும் காவிரி தமிழகத்து யாறுமாதலின் அம் மலையில் கற் கொண்டு அக் காவிரியில் நீர்ப்படை செய்தல் நம் வீரத்திற்குச் சிறப்பாக மாட்டாது என்பது கருத்து. முத்தீ-ஆகவனீயம், காருக பத்தியம், தக்கிணாக்கினி. இருப்பிறப்பாளர் அந்தணர். பூணூல் அணிதற்கு முன்னர் மக்கட்டன்மையும், அணிந்த பின்னர்த் தெய்வத் தன்மையும் ஆகிய இருவகைப் பிறப்பினையுமுடையார்; பார்ப்பனர். மடம்-ஈண்டு இளமை. எழுதல்-செய்தல். பெண் கொடுப்போர் பார்ப்பனர் முன்னிலையில் கொடுத்தல் இயல்பாதலின் இரு பிறப்பாளரொடு தாரானெனின் என்றார். மலை அரசன் என்றது இமயமலையை

131-140: வழிநின்று..........ஈங்கென

(இதன் பொருள்) வழிநின்று பயவா மாண்பு இல்வாழ்க்கை கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சியும்-தமது கருத்தின் வழி நிலைத்து நின்று பயன்படாத மக்கள் வாழ்க்கையின் இயல்பை இறந்தோர் இறவாதிருந்தோர்க்கு எடுத்துக் காட்டிய முதுகாஞ்சியும்; முதுகுடிப் பிறந்த முதிராச் செல்வியை மதி முடிக்கு அளித்த மகட்பாற் காஞ்சியும்-அம் மலை அரசன் பழைய தனது குடியிற் பிறந்த மூவாமையையுடைய உமையைப் பிறைசூடிப் பெருமானுக்கு வழங்கிய மகட்பாற் காஞ்சியும்; தென் திசை என்றன வஞ்சியொடு வடதிசை நின்று எதிர் ஊன்றிய நீள் பெரும் காஞ்சியும்-தென்திசையினின்றும் மேற் செல்லுதற்கு இடனான என்னுடைய வஞ்சியோடே அம் மலை அரையன் எதிராக நின்று தடுத்த நீண்ட பெரும் காஞ்சியும்; நிலவுக் கதிர் அளைந்த நீள்பெரும் சென்னி அலர் மந்தாரமொடு ஆங்கு அயல் மலர்ந்த வேங்கையொடு தொடுத்த விளங்கு விறல் மாலை-நிலவின் ஒளி தவழ்ந்த உயர்ந்த பெரிய முடியினிடத்து மலர்ந்த மந்தார மாலையினோடே அவ்விடத்து அதன் பக்கத்தே மலர்ந்த வேங்கை மலரால் புனைந்த விளக்கமுடைய வெற்றிமாலையும்; மேம்பட மலைதலும் ஈங்குக் காண்குவல் என-மேன்மையுண்டாகச் சூடுதலையும் யான் இப்பொழுதே காண்பேனாக என்று கூறி என்க.

(விளக்கம்) கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சி என்றது முதுகாஞ்சியை அஃதாவது நிலையாமையை என்க. இதனைத் தொல் காப்பியனார் கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமை என்பர். மதி முடி-இறைவன்; பிறை சூடியவன் என்பது பொருள். மகட்பாற் காஞ்சி. இதனை நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு மகட்பாடஞ்சிய வலிந்து வந்த அரசனை முது குடித்தலைவர் எதிர்த்தல், என்க. வஞ்சி தன்னை மதியாத வேந்தனை வஞ்சிப்பூ குடிச்சென்று அடர்த்தல் பெருங்காஞ்சி இதனை

தாங்குதிறல் மறவர் தத்தம் ஆற்றல்
வீங்குபெரும் படையின் வெளிப்படுத் தன்று

எனவரும் (புற-மாலை) கொள்வானும் உணர்க. விறல் மாலை-வெற்றி மாலை இமயமலையின் சென்னியில் அமரர் உறைதலின் அவரையும் வென்று இமயக் குன்றிலுறையும் மறவரையும் வென்று மகளாதற்குரிய கல்லை வலிந்துகொள்ளுதலும் ஆகிய வெற்றிக்கு அறிகுறியாகச் சூடப்படுதலின் மந்தார மலரும் வேங்கை மலரும் விரவிச் சூடிக்கொள்ளுகின்ற விறல் மாலை என்றான், காண்குவல் என்பது-செய்து காண்பேன் என்றவாறு.

141-149: குடைநிலை.........சூடுதுமென

(இதன் பொருள்) குடைநிலை வஞ்சியும் கொற்ற வஞ்சியும்-குடை நாட்கோளும் கொற்ற வஞ்சியும்; நெடுமாராயம் நிலைஇய வஞ்சியும்-நெடிய மாராயம் நிலைபெற்ற வஞ்சியும்; வென்றோர் விளங்கிய வியன்பெரு வஞ்சியும்-வெற்றிகொண்டோர் விளங்கிய சிறந்த பெருவஞ்சியும்; பின்றாச் சிறப்பின் பெருஞ் சோற்று வஞ்சியும்-தாழாச் சிறப்பினையுடைய பெருஞ்சோற்று வஞ்சியும்; குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும்; வடகர் போகிய வான்பனக் தோட்டுடன் புட்கைச்சேனை பொலியச்சூட்டி-இடையே முரிதல்லில்லாத  சிறந்த பனந்தோட்டோடு மேற்கோளையுடைய தானை விளங்க அணிவித்து; பூவாவஞ்சிப் பொன்னகர்ப்புறத்து என்வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும் என-அழகிய வஞ்சிநகரின் புறத்தே எனது பகைவரைப் பொருத வினைவாய்த்த வாளிற்கு வஞ்சிமாலை சூடுவேம் என்று கூற;

(விளக்கம்) குடை நிலை வஞ்சி-குடை நாட்கோடல்; பெய்தா மஞ்சுரும்பிமிரப் பெரும்புலவர் புகழ்பாடக், (பு-வெ. 38) கொய்தார் மன்னவன் குடைநாட் கொண்டன்று; வையகம் வணங்க வாளாச் சினனெனச்; செய்கழல் வேந்தன் சீர்மிகுத்தன்று( பு-வெ. 42) மாராய வஞ்சி-அரசனாற் சிறப்பெய்து நிலை; மாராயம் பெற்ற நெடு மொழியானும் (தொல். புறத். 8, இளம், 3) மறவேந்தனிற் சிறப்பெய்திய விறல் வேலோர் நிலையுரைத்தன்று (பு. வெ. 46) பெருவஞ்சி-பகைவர் நாட்டைக் கொளுத்துதல். முன்னடையார் வளநாட்டைப் பின்னருமுடன் றெரிகொளீஇ யன்று(பு. வெ. 57) பெருஞ்சோற்று வஞ்சியும்-வீரர்களுக்குப் பெருஞ் சோறளித்தல்; பிண்டமேய பெருஞ்சோற்று நிலையும்(தொல். புறத். 8, இளம். 3) திருந்தார் தெம்முனை தெறுகுவ ரிவரெனப் பெருஞ்சோ றாடவர் பெறுமுறை வகுத்தன்று( பு. வெ 58) கொற்றவள்ளை-அரசன் புகழைக் கூறுவதுடன் பகைவர் நாடு அழிந்ததற்கு இரங்கல்; குன்றச் சிறப்பிற்கொற்ற வள்ளையும் (தொல். புறத். 8. இளம். 3) மன்னவன் புகழைக் கூறுவதுடன் பகைவர் நாடு குழிந்ததற்கு இரங்கல் குன்றாச் சிறப்பிற்கொற்ற வள்ளையும் (தொல். புறத். 8. இளம்.3) மன்னவன் புகழ்கிளந் தென்னார் நாடழி பிரங்கின்று( பு வெ. 43) வட்கர் போகிய இடையில் முரிதல் இல்லாத; பகைவர்-முதுகிட்டுப் போதற்குக் காரணமான எனினுமாம். வட்கர் போகிய வளர் இளம் போந்தை( புற. நா. 100) என வருதலும் காண்க. அரசர்கள் தமக்குரிய அடையாளப் பூக்களோடு வெட்சி முதலிய உரிப்பொருட்கியன்ற மலரைச் சூடிக்கோடல் வழக்கம். இதனை பொலந்தோட்டுப் பைந்தும்பை மிசை அலங்குளைய உழிஞைப் பவரொடு மிலைந்து, எனவும் வருவனவற்றாலுணர்க. பூட்கை, புட்கை: விகாரம்; மேற்கோள் என்னும் பொருட்டு பூவா வஞ்சி-கருவூர் ஈண்டுச் சேரன் செங்குட்டுவன் யான் இமயமலையின்கண் கல் கொள்ளுமிடத்து ஆண்டுப் பகைவர் தடுப்பார் உளராயின் குடைநிலை வஞ்சி முதலாகப் பெருஞ் சோற்று வஞ்சி ஈறாகத் தன் சேனைக்குச் சூட்டுவேன் என்னும் கருத்தினைப் பொதுவாக, பெருமலை அரசன் கல் தாரான் எனின் இவற்றைச் சூட்டி வாய்வாள் மலைந்த வஞ்சி சூடுதும் என்று கூறினன் என்க. வஞ்சி சூடுதலாவது

வஞ்சி தானே முல்லையது புறனே
எஞ்சா மன்நசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித்தனறே

என்பதனாலுணர்க. இவ்வாற்றால் சேரன் செங்குட்டுவன் யாம் இமயத்தில் கல் கால்கோடற்குப் போங்கால் எதிர்க்கும் மன்னரொடு போர் ஆற்றுதற்கு வஞ்சி சூடிச் செல்வேம் என்றானாயிற்று.

வில்லவன் கோதை வேந்தனுக் குரைத்தல்

150-155: பல்யாண்டு..........புக்கன

(இதன் பொருள்) பல்யாண்டு வாழ்க நின் கொற்றம் ஈங்கு  என வில்லவன் கோதை வேந்தற்கு உரைக்கும்-இங்ஙனம் அமைச்சரை நோக்கி அரசன் கூறியவுடன் அவருள் வில்லவன் கோதை என்னும் பெயருடைய அமைச்சன் வேந்தர் பெருமானே உன்னுடைய வெற்றி இந்நிலவுலகத்தில் பல்லாண்டு பல்லாண்டு வாழ்வதாக! என வாழ்த்தி அவ்வேந்தனுக்குச் சொல்லுவான்; நும் போல் வேந்தர் நும்மோடு இகலி-நும்மோடு ஒத்த வேந்தராகிய சோழனும் பாண்டியனும் ஆகிய இரண்டு மன்னவர்களும் நும்மோடு மாறுபட்டு; கொங்கர் செங்களத்துக் கொடுவரி கயல் கொடி பகைப் புறத்துத் தந்தனராயினும்-கொங்கருடைய நாட்டின்கண் அமைந்த குருதியால் சிவந்த போர்க்களத்தின் கண் நுமக்குத் தோற்றுத் தமக்குரிய புலிக்கொடியையும் மீனக்கொடியையும் பகைத்துப் பொருத அக்களத்திலேயே நுமக்குத் தந்து ஓடினாராயினும்; ஆங்கு அவை திகை முகவேழத்தின் செவிஅகம் புக்கன-அப்போர்க் களத்தில் நிகழ்ந்த வெற்றிப் புகழ்கள் எட்டுத் திசைகளிலும் நிற்கின்ற யானைகளின் செவிகளினூடும் சென்று புகுந்தன; என்றான் என்க.

(விளக்கம்) அரசனுக்கு ஏதேனும் சொல்லத் தொடங்குபவர் அரசனே வாழ்த்தித் தொடங்குதல் மரபு ஆதலால் வில்லவன் கோதை என்னும் அமைச்சன் தன் கருத்துரைப்பவன் பல்யாண்டு வாழ்க நன் கொற்றம் என்று வாழ்த்தித் தொடங்குகின்றான். நும்போல் என்புழிப் பன்மை செங்குட்டுவனையும் அவன் முன்னோரையும் உளப்படுத்திய படியாம். கொடுவரி-புலிக்கொடி. கயல்-மீன்கொடி எனவே வேந்தர் என்றது சோழனையும் பாண்டியனையும் என்பது பெற்றாம். பகைபுறம்: வினைத்தொகை; பகைக்கும் இடம்; (போர்க்களம்) திகை-திசை அவை என்றது பலவகைப்பட்ட வெற்றிப் புகழும் என்றவாறு; செவி புகுவன அவையே யாதலின்.

156-167: கொங்கணர்.........இல்லை

(இதன் பொருள்) கொங்கணர் கலிங்கர் கொடுங் கருநாடர் பங்களர் கங்கர் பல்வேல் கட்டியர் வட ஆரியரொடு-கொங்கணரும் கலிங்கரும் கொடிய கன்னடரும் வங்கரும் கங்கரும் பல வேற்படையே யுடைய கட்டிவரும் வடவாரியரு மாகிய இவ்வேற்று நாட்டுப் படைகள் கூடி வந்த போர்க்களத்தின்கண்; வண்தமிழ் மயக்கத்து-வளவிய நம் தமிழ்ப் படை போராற்றுதற்குப் புகுந்து கலந்த பொழுது; உன் கடமலை வேட்டம் என் கட்புலம் பிரியாது-அப்பகைவருடைய கூட்டத்தில் நீ உனது களிற்று யானையின் மேலேறிச் சென்று ஆடிய வேட்டை என்னுடைய கண்ணை விட்டுப் போகாது; எங்கோ மகளை கங்கைப் பேர் யாற்றுக் கடும்புனல் நீத்தம் ஆட்டிய அந்நாள்-எம்முடைய அரச வன்னையைப் பண்டு யாம் கங்கை யென்னும் பேரியாற்றினது விரைந்து வருகின்ற நீராகிய புண்ணிய தீர்த்தத்தில் ஆடச்செய்த அந்த நாளிலே; ஆரிய மன்னர் ஈர் ஐஞ்ஞாற்றுவர்க்கு ஒரு நீயாகிய செருவெங்கோலம் கண்விழித்துக் கண்டது கடுங்கண்-வட ஆரியராகிய அரசர் ஓராயிரவர்க்கு எதிராக நீ தமியையாய் நின்று ஆற்றிய நினது வெவ்விய போர்க் கோலத்தைக் கண்ணை விழித்துப் பார்த்தது தறுகண்மையுடைய கூற்றம் மட்டுமே யன்றோ; இமிழ் கடல் வேலியைத் தமிழ் நாடு ஆக்கிய இது நீ கருதினை ஆயின் ஏற்பவர்-முழங்குகின்ற கடல் சூழ்ந்த இந்நிலவுலகத்தை முழுதும் தமிழ் நாடாகவே ஆக்கும் பொருட்டு இமயத்தில் கல்கால் கொள்ளுதலாகிய இச்செயலை நீ திருவுளங்கொண்டாயாயின் நின்னைப் பகைத்து எதிர்ப்பவர்; முது நீர் உலகின் முழுவதும் இல்லை-கடல் சூழ்ந்த இவ்வுலகின்கண் யாண்டும் யாரும் இல்லை; என்றான் என்க.

(விளக்கம்) வளைந்த கரு நாடருமாம் (கன்னடர்) பங்களர்-வங்காள நாட்டினர், கொங்கணர் முதலாகக் கட்டியர் ஈறாகக் கூறப்பட்ட நாட்டினர். ஆரியர் அல்லர் என்பது தோன்ற வடவாரியரொடு என விதந்தோதினர் இவருள் கங்கரும் கட்டியரும் தமிழ் நாட்டுக் குறுநில மன்னர் என்பர். இதனை நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி துன்னரும் கடுந்திறல் கங்கன் கட்டி எனவரும் அகநானூற்றானும் உணரலாம். வண்டமிழ் வளவிய தமிழ் நாட்டுப் படை. கடமலை யானை வேட்டம் என்றது பகைப்படையைக் கொன்று ஒழித்ததனை யான் கண்கூடாக நின்று கண்ட காட்சி என் கண்ணை விட்டகலாது என்றவாறு. ஆட்டிய-நீராட்டிய. எங்கோமகள் என்றது செங்குட்டுவன் தாயை. ஈர் ஐஞ்ஞாற்றுவர், மிகுதிக்கு ஓர் எண் அதற்குக்கடுங்கண் உண்மையால் என ஏதுக் காட்டியபடியாம். பிற தேவரும் மக்களும் அச்சத்தால் கண்ணை மூடிக்கொண்டனர் என்பது கருத்து. ஆக்கிய ஆக்குவதற்கு இது-இக்கல் கொள்ளும் செயல் முது நீர்-கடல்.

148-177: இமைய................ஈங்கென

(இதன் பொருள்) இமைய மால்வரைக்கு எங்கோன் செல்வது கடவுள் எழுத ஓர் கற்கே ஆதலின்-இமயமென்னும் பெரிய மலைக்கு எம்பெருமான் போதல் பத்தினித் தெய்வத்திற்குப் படிவம் சமைத்தற்கு ஒரு கல் கொள்ளுதற் பொருட்டேயாதலால்; வடதிசை மருங்கின் மன்னர்க்கு எல்லாம்-வடதிசையின்கண் உள்ள நாடுகள் ஆளும் அரசர்களுக்கெல்லாம்; தென் தமிழ் நல் நாட்டுச் செழுவில் கயல்புலி மண்தலை ஏற்ற ஈங்கு வரைக என-தென்திசையிலுள்ள நல்ல மூன்று தமிழ்நாட்டிற்கு முரிய வளவிய வில்லும் கயலும் புலியும் ஆகிய மூன்றிலச்சினைகளையும் ஒருங்கே இடப்பெற்ற முகப்பையுடைய திருமந்திர ஓலைகளை இப்பொழுதே வரைந்து உய்த்தருளுக என்று வில்லவன் கோதை யென்னும் அவ்வமைச்சன் கூறாநிற்ப என்க.

(விளக்கம்) எங்கோன்: முன்னிலைப் புறமொழி எழுத-அமைக்க. கற்கு-கல் கொள்ளுதற்கு. இத் தெய்வமும் தமிழும் சேர சோழ பாண்டிய நாடு மூன்றற்கும் பொதுவாதலின் இப்பணி முத்தமிழ் நாட்டிற்கும் பொது ஆதலால் வடதிசை மன்னர்க்கு வரையும் ஓலையின் கண் வில்லும் கயலும் புலியும் ஆகிய மூன்றையும் பொறித்தல் வேண்டும் என்பது அவ்வமைச்சன் கருத்து என்று உணர்க. மண் -இலச்சினை ஒற்றும் மண், ஈண்டு ஆகுபெயர். இவை வில்லவன் கோதை கூற்று.

அழும்பில்வேள் என்னும் அமைச்சன் கூறல்

173-180: நாவலந்..............புக்கபின்

(இதன் பொருள்) அழும்பில்வேள் நாவல் அம் தண் பொழில் நண்ணார் ஒற்று நம் காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா-வில்லவன கோதை கருத்துரை கூறிமுடித்தபின் அழும்பில்வேள் என்னும் அமைச்சன் அரசனை நோக்கிக் கூறுபவன், பெருமானே வாழ்க நின் கொற்றம் இந்த நாவலந் தண்பொழிலின்கண் உள்ள நம்முடைய பகை மன்னவருடைய ஒற்றர்கள் நம்முடைய காவல் மிக்க தலைநகரமாகி இவ்வஞ்சியின் முற்றத்திலே எப்பொழுதும் இருப்பர் ஆதலால்; வம்பு அணி யானை வேந்தர் ஒற்றே தம் செவிப்படுக்கும் தகைமைய அன்றோ-கச்சணிந்த யானைகளை யுடைய அப் பகைவருடைய ஒற்றர்களே இச்செய்தியை அவரவர் அரசருடைய செவியின்கண் புகவிடுக்கும் தன்மையை யுடையன ரல்லரோ ஆதலால் அவ்வரசர்களுக்குத் திருமுகம் உய்த்தல் வேண்டா நம் நகரத்திலேயே; பறை அறை என்று உரைப்ப-இச் செய்தியைப் பறை அறைந்து அறிவித்தலே அமையும் ஆதலின் பறை அறைவித்தருளுக என்று அவ்வமைச்சன் தன் கருத்துரையா நிற்ப; நிறை யருந்தானை வேந்தனும் நேர்ந்து-நிறைந்த அரும்பெரும் படைகளையுடைய அவ் வேந்தன்தானும் அவ் விழும்பில் வேளின் கருத்திற் குடன்பட்டு; கூடார் வஞ்சிக் கூட்டுண்டு சிறந்த வாடா வஞ்சிமாநகர் புக்க பின்-பகை மன்னவர்மேல் வஞ்சிப்பூச் சூடிச் சென்று அம்மன்னவர் இறுத்த திறைப் பொருளாலே பெரிதும் சிறந்த தன் தலைநகரமாகிய வஞ்சி நகரத் திற்குச் சென்று புகுந்தபின்னர் என்க.

(விளக்கம்) ஒற்று என அஃறிணைவாய்பாட்டால் கூறினமையின் தகைமைய என்று முடிக்கப்பட்டது. ஒற்று-ஒற்றர் இதனால் பிற நாட்டு ஒற்றர்கள் ஒவ்வொரு நாட்டினும் எப்பொழுதும் பல்வேறு வேடம் புனைந்து வதிந்திருப்பர் என்பது பெற்றாம். அழும்பில் வேள் மற்றோர் அமைச்சன். இந் நிகழ்ச்சியால் பண்டைக்காலத்து அரசர் எச் செயலையும் தம் அமைச்சரொடு ஆராய்ந்து துணியும் வழக்கம் உடையரென்பதும் அறியப்படும். கூடார்-பகைவர். வஞ்சிக்கூட்டு-வஞ்சிப்பூச்சூடிப் படையெடுத்துச் சென்று பகைவரிடத்திலிருந்து திறையாகப் பெற்று ஈட்டிய பொருள். அவற்றை உண்டு சிறந்த என்றது அப்பொருளால் பயன் பெற்றுச் சிறந்த என்றவாறு. வாடா வஞ்சி-வெளிப்படை: வஞ்சி நகரம் என்க. காட்டகத்தினின்றும் மீண்டும் நகர் புக்கபின் என்க.

வள்ளுவர் முரசறைதல்

181-194: வாழ்க...............மருங்கென்

(இதன் பொருள்) வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை-வாழ்க எங்கள் அரசனாகிய மன்னவர் மன்னன்; ஊழி தொறு ஊழி உலகங் காக்கென-ஊழிதோறும் ஊழிதோறும் அப் பெருந்தகையே இவ்வுலகத்தைக் காத்தருளுக என்று தொடக்கத்தே மன்னனை வாழ்த்திச் செய்தி கூறும் வள்ளுவர்; எம் காவலன் வில்தலைக் கொண்ட வியன்பேர் இமயத்து ஓர் கல் கொண்டு பெயரும்-எங்கள் மன்னவனாகிய சேரன் செங்குட்டுவன் பண்டே தனது விற்பொறியைத் தன்னிடத்தே கொண்ட அகன்ற பெரிய இமயமலையின்கண் பத்தினிக் கடவுளுக்கு உருவம் அமைத்தற்கு ஒரு கல்லைக் கைக்கொண்டு மீள்வன்; ஆதலின் வடதிசை மருங்கின் மன்னர் எல்லாம் இடுதிறை கொடுவந்து எதிரீர்-இங்ஙனமாதலின் வடதிசையின்கண் உள்ள அரசர்கள் எல்லீரும் எம்மரசனுக்கு இடக் கடவ திறைப் பொருளையும் கொணர்ந்து வந்து எதிர்கொள்ளக் கடவீர்; எதிரீர் ஆயின் கடல் கடம்பு எறிந்த கடும்போர் வார்த்தையும் கேட்டு வாழுமின்-அவ்வாறு எதிர்கொள்ளீராயின் அத்தகையீர் கடலுள் புகுந்து ஆங்கு எங்கள் அரசன் கடலின் கண்ணதாகிய கடம்பினை வெட்டிய கடிய போரினாலே உண்டான புகழையும் அல்லது மலையின்கண் ஏறி எம்பெருமான் அம் மலை முழைஞ்சின்மேல் தனது விற்பொறியைப் பொறித்தமையால் உண்டான பரந்த பெரிய புகழையும் கேட்டு வாழக்கடவீர்; கேளீராயின் தோள்துணை துறக்கும் துறவொடு வாழுமின்-அவ்வாறு அப் புகழ்களைக் கேளாதொழியின் நுங்கள் தோளுக்குத் துணையாக அமைந்த மனைவிமாரைத் துறந்துபோகின்ற துறவறத் தோடு பொருந்தி வாழக்கடவீர்; தாழ்கழல் மன்னன் தன் திருமேனி வாழ்க சேனாமுகம் என வாழ்த்தி-பகைமன்னர் வந்து வணங்குதற்குக் காரணமான வீரக்கழலையுடைய எங்கள் அரசனுடைய திருமேனியாகிய சேனாமுகம் வாழ்வதாக, என்று இறுதியினும் தம் மன்னனை வாழ்த்தி; இறை இகல் யானை எருத்தத்து ஏற்றி அணிநகர் மருங்கு அறை பறை எழுந்தது-அரச யானையின் பிடரின்கண் ஏற்றி அவ் வள்ளுவர் அழகிய அந் நகரப் பகுதிகளிலே எவ்விடத்தும் முழக்குகின்ற முரசினது ஒலி எழாநின்றது என்க.

(விளக்கம்) அரசனுடைய பணிகளை மக்களுக்கு முரசு அறைந்து அறிவிக்கும் வள்ளுவர் தொடக்கத்திலும் அரசனை வாழ்த்தித் தொடங்குதலும் இறுதியில் வாழ்த்தி முடித்தலும் மரபு. மன்னன் கற்கொண்டு வரும்பொழுது வடநாட்டு மன்னரெல்லாம் திறைப் பொருளோடு வந்து எதிர்கொள்ளல் வேண்டும். எதிர்கொள்ளாதார் கடலில் புகுந்தேனும் மலையில் ஏறியேனும் மறைந்து வாழவேண்டும் அவ்விடங்களிலும் அவன் கடம்பெறிந்த புகழும் சிலை பொறித்த பெரும்புகழும் பேசப்படும் ஆதலால் அதைக் கேட்டே வாழ்தல் வேண்டும். கேட்க மனமில்லாதார் மனைவி மக்களைத் துறந்து வாழவேண்டும். எனவே அவனைப் பகைத்திருப்போர் இவ்வுலகில் வாழ்தல் அரிது என்றவாறாயிற்று. இக் கருத்தினோடு

யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்          (895)

எனவரும் திருக்குளையும் நினைக

விடர்-மலை முழை. மலை ஏறி முழையிற் புகுந்து வாழுமின் என்பார் மலையை விடர் என்ற பெயரால் குறிப்பிட்டார் தோட்டுணை-மகளிர் தாழ்கழல்-பகைவர் வணங்கும் அடிகள். திருமேனியாகிய சேனாமுகம் வாழ்க என மாறுக. இறை இகலி யானை- பட்டத்து யானை. பறை, ஈண்டு முரசு.

பா- நிலைமண்டிலம்

காட்சிக் காதை முற்றிற்று.

 
மேலும் சிலப்பதிகாரம் »
temple news
தமிழில் முதலில் தோன்றிய காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். சிலப்பதிகாரத்தை இயற்றியவர் சேரன் ... மேலும்
 
temple news
1. மங்கல வாழ்த்துப் பாடல் (சிந்தியல் வெண்பாக்கள்) திங்களைப் போற்றுதும் திங்களைப் ... மேலும்
 
(நிலைமண்டில ஆசிரியப்பா) உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின்பரதர் மலிந்த பயம்கெழு மாநகர்முழங்குகடல் ... மேலும்
 
(நிலைமண்டில ஆசிரியப்பா) அஃதாவது - கண்ணகியும் கோவலனும் இல்லறம் நிகழ்த்தி வருங்காலத்தே புகார் நகரத்தே ... மேலும்
 
(நிலைமண்டில ஆசிரியப்பா) அஃதாவது - கோவலன் மாமலர் நெடுங்கண் மாதவிக்கு அவள் பரிசிலாகப் பெற்ற மாலைக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar