ராமானுஜர் பகுதி-18 | 1000th year celebrations of holy Sri Ramanuja Acharya | ராமானுஜரின் 1000வது நட்சத்திர வைபவம்

ராமானுஜர் பகுதி-18

ஜூன் 17,2011



ஒருவழியாக பேரருளாளன் வரதராஜன் கண் திறந்தான். பெருமாள் அரையர் வரதராஜனிடம் ராமானுஜரை தன்னோடு அனுப்பும்படி கேட்டுக் கொண்டார். பெருமாளுக்கு அதில் இஷ்டமே இல்லை. மிகுந்த பிரயாசையின் பேரில், பெருமாளிடம் அனுமதி பெற்றார் அரையர். ராமானுஜரும் அரையருடன் ஸ்ரீரங்கம் புறப்பட்டார். உலகமே போற்றும் மாபெரும் சகாப்தத்தைப் படைப்பதற்காக ஸ்ரீரங்கத்துக்கு அந்த மகான் சென்று கொண்டிருந்தார்.  அங்கு சென்றதும் பெரியநம்பியையே தன் குருவாக ஏற்றுக் கொண்டார். பெரியநம்பிக்கு ராமானுஜர் மடம் வந்து சேர்ந்ததில் அலாதி மகிழ்ச்சி. தன் மகன் புண்டரீகாட்சரை ராமானுஜரின் சீடனாக்கினார் என்றால் அவர் மீது நம்பி கொண்டிருந்த பாசத்திற்கு எல்லை கூறுவதற்கில்லை. இப்படியிருக்க ராமானுஜருக்கு தன் தம்பி கோவிந்தரைப் பற்றிய நினைவு வந்தது. இவர் ராமானுஜரின் சித்தி மகன் என்பது ஏற்கனவே அறிந்த விஷயம் தான். ராமானுஜர் யாதவப்பிரகாசருடன் காசி சென்ற போது, அவர் ராமானுஜரைக் கொலை செய்ய முயற்சித்த தகவலை சொல்லிக் காப்பாற்றி விட்டு, காளஹஸ்தியில் சிவ வழிபாட்டில் இறங்கி விட்டார். அக்காலத்தில் சைவர்கள், வைணவர்கள் கடுமையாக மோதிக் கொள்வார்கள். ஒரு வைணவனை பார்த்தாலே போதும்! ஒரு சைவன் எங்காவது குளித்து விட்டுத்தான் வீட்டுக்கு போவான். அந்த அளவுக்கு இந்து மதத்திற்குள்ளேயே இரு பிரிவாக பிளவுபட்டிருந்த நேரம். ராமானுஜர் கோவிந்தனை வைணவத்துக்கு திருப்ப விரும்பினார். கோவிந்தன் தன் அருகில் இருப்பது மிகப்பெரிய பலம் என கருதினார். அப்போது திருமலையில் (திருப்பதி) பெரிய திருமலை நம்பி என்பவர் வெங்கடாசலபதிக்கு தொண்டு செய்து கொண்டிருந்தார். அவருக்கு ராமானுஜர் கடிதம் எழுதினார்.

கடிதத்தில், தாங்கள், காளஹஸ்தியில் சிவப்பணியில் ஈடுபட்டுள்ள என் தம்பி கோவிந்தனுக்கு தக்க அறிவுரை சொல்லி ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பி வையுங்கள், என குறிப்பிட்டிருந்தார். பெரிய திருமலை நம்பி கோவிந்தரை சந்திக்கச் சென்றார். கோவிந்தர் அங்குள்ள குளக்கரையில் தினமும் மலர் பறிக்க வருவார். ஒருநாள் வெண்தாடியுடன் வைணவப் பெருமகனார் ஒருவர் குளக்கரையில் தன் சீடர்களுக்கு, பல்வேறு சாஸ்திரங்கள் குறித்து போதனை செய்து கொண்டிருந்தார். கோவிந்தன் ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து அவர்கள் பேசுவதைக் கேட்டார். அந்தப் பெரியவரின் பேச்சு அவரை மிகவும் கவர்ந்தது. பின்னர் மரத்தில் இருந்து இறங்கி, மலர்களுடன் அவர் இருந்த இடத்தைக் கடந்து சென்றார். வயதில் மிகவும் சிறியவராயினும் கூட பெரிய திருமலை நம்பி கோவிந்தனை. மகாத்மாவே, இங்கு வாருங்கள் என மரியாதையுடன் அழைத்தார். கோவிந்தனும் பணிவுடன் அவர் அருகே சென்றார். இருவருக்கும் அருமையான உரையாடல் நிகழ்ந்தது. சுற்றியிருந்தவர்களுக்கு தேனாய் இனித்தது அந்த உரையாடல். விஷ்ணு, சிவன் ஆகிய தெய்வங்களின் பெருமையை நாவினிக்க அவர்கள் பேசினர். தம்பி! இந்த பூக்களை யாருக்கு கொண்டு செல்கிறீர்கள்? என்றார் பெரியவர். சுவாமி! சிவனை வழிபடுவதற்காக இதனைப் பறித்துச் செல்கிறேன், என்றார் கோவிந்தன். நம்பி: சிவனுக்கு பூ வழிபாடு சரியாக இருக்காது. அவர் ஆசைகளை வேரறுத்து எரித்து அதனை வெண்ணீறாக பூசியிருப்பவர் அல்லவா? அவருக்கு இந்த பூக்களின் மீது ஆசையிருக்க வாய்ப்பில்லை. மேலும் அவர் மயானத்தில் வசிப்பவர். நாராயணன் மீது அபிமானம் உள்ளவர். இந்த பூக்கள் கல்யாண குணங்கள் கொண்ட திருமாலுக்கு தானே பொருத்தமாக இருக்க முடியும்?

கோவிந்தன்: பெரியவரே! தாங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். இறைவன் என்பவன் எல்லாம் உடையவன். அவன் தான் நமக்கு கொடுப்பவனே ஒழிய, நம்மால் பக்தியை மட்டுமே அவனுக்கு திருப்பி செலுத்த இயலும். சிவன் விஷத்தைக் குடித்து உலகத்தைக் காத்தவர். அவருக்கு நாம் நன்றி சொல்லியாக வேண்டும். அதற்கு இந்த மலர்களும் தேவையில்லாமல் இருக்கலாம். வெறும் வணக்கம் மட்டுமே போதும். உள்ளத்தில் இருந்து பக்தி பூக்களைச் சொரிந்தால் போதும். இருப்பினும் மலர் தூவி வழிபடும் சம்பிரதாயம் மூலம் பக்தி வளருமென்று கருதுகிறேன் பெரியவரே.  நம்பி: நீங்கள் சொல்வது மிகமிக சரி. அறிஞர்கள் மட்டுமே இவ்வாறான கருத்தைக் கூற முடியும். உன் பக்தி மெச்சத்தகுந்தது. பகவான் ஹரி வாமனின் தான் என்ற அகந்தையை அடக்க வந்தவர். அவரிடமே நம்மை ஒப்படைக்க வேண்டும் என்பதே என் கருத்து. அது மட்டுமல்ல. கீதையில் பகவான் ஒருவன் அவனது சொந்த தர்மத்தை பின்பற்றி நடக்க வேண்டும் என சொல்லியுள்ளார். அதன்படி பார்த்தால், நீங்கள் பகவான் ஹரியை வழிபடுவதே முறையானது. கோவிந்தன்: திருமாலுக்கும், சிவனுக்கும் தாங்கள் பேதம் கற்பிக்க வேண்டாம். கண்டாகர்ணன் என்ற பக்தனின் கதை தங்களுக்கு தெரியாததல்ல. அவனைப் போன்ற பக்தியுள்ளவன் என என்னை எண்ணாதீர்கள். கண்டாகர்ணன் சிவனை மட்டுமே வழிபட்டான். சிவன் அவனை திருத்த எண்ணி, நாராயணனின் உடலைத் தன்னோடு சேர்த்து, சங்கர நாராயணனாக காட்சியளித்தார். அப்போதும் அவன் சிவன் இருந்த பகுதியை மட்டுமே வணங்கினான். தான் காட்டிய தூபத்தின் வாசனை சிவனின் பக்கமே செல்லும் வகையில் விசிறினான். இதற்காக சிவன் அவனை தண்டித்து ஒரு கிராமத்தில் துன்பம் நிறைந்த வாழ்க்கையைக் கொடுத்து வாழ வைத்தார். என்ன துன்பம் தெரியுமா? ஒரு வைணவக் கிராமத்தில் தங்க வைத்தார். அங்கிருந்தவர்கள் விஷ்ணுவைப் புகழ்ந்து பாடினர். அப்போதும் திருந்தாத அவன் தன் காதுகளில் கண்டாவைக் (மணி) கட்டிக் கொண்டு, விஷ்ணு என்ற சப்தம் விழாமல் இருக்க அடித்துக் கொண்டே இருந்தானாம். இப்படிப்பட்ட ஒரு சார்ந்த பக்தி தேவையில்லை எனக் கருதுகிறேன். இப்படியாக அவர்களின் உரையாடல் தினமும் தொடர்ந்தது. பெரிய திருமலை நம்பி, கோவிந்தனை விடுவதாக இல்லை.

ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கு தாய்வீட்டு சீதனம்!

மேலும்