ராமானுஜர் பகுதி-24 | 1000th year celebrations of holy Sri Ramanuja Acharya | ராமானுஜரின் 1000வது நட்சத்திர வைபவம்

ராமானுஜர் பகுதி-24

ஜூன் 17,2011



கும்பலாக வந்தவர்கள் அந்த காட்டில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட குலத்தினர். அவர்களது கையில் பழங்களும், விறகும் இருந்தன. அவற்றை ராமானுஜர் முன்பு அவர்கள் வைத்தனர். ஜாதியில் தாழ்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களது அன்பான காணிக்கையை ஏற்றுக்கொண்டார் ராமானுஜர். இதனிடையே ராமானுஜருக்குப் பதிலாக மன்னன் கிரிமிகண்டனிடம் சிக்கி கண்களை இழந்த கூரத்தாழ்வான், ராமானுஜரைத் தேடி வந்தார். இச்சம்பவத்துக்கு பிறகு கிரிமிகண்டன் இறந்து விட்டதாக அவர் அறிந்தார். ராமானுஜருக்கு இனி எந்த ஆபத்தும் ஏற்படாது என்பதை உணர்ந்த அவர் ராமானுஜரை தரிசித்தார். தனக்காக கண் இழந்த கூரத்தாழ்வானை ராமானுஜர் அன்புடன் தழுவிக் ண்டார்.  கூரத்தாழ்வா! கலங்காதே, உனக்கு மீண்டும் கண் கிடைக்கும். நீ காஞ்சிபுரத்திற்கு சென்று வரதராஜப்பெருமாளிடம், கண்களை மீண்டும் தா எனக்கேள். அவன் உனக்கு கொடுப்பான்,என்றார்.  அதன்படியே கூரத்தாழ்வான் அங்கு சென்று கண்களைப்பெற்றார். இரண்டாண்டுகள் இப்படியே கழிந்தன. கூரத்தாழ்வான் நோய்வாய்ப்பட்டார். படுத்த படுக்கையான அவர் பெருமாளின் திருவடிகளை அடைந்தார். அவரது மறைவால் ராமானுஜர் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானார். கண்களில் நீர் பெருக,கூரத்தாழ்வானின் மகன் பராசர பட்டர் இனி உங்களது தலைவராக இருப்பார். அவரை ஏற்றுக்கொள்ளுங்கள்,என்று கூறி தலையில் மலர்க்கிரீடம் சூட்டினார். அவரை அணைத்துக் கொண்டு தன் சக்தி முழுவதையும் அவருக்குள் செலுத்தினார். இந்த சம்பவம் நடந்த போது ராமானுஜருக்கு 60 வயது ஆகியிருந்தது. அதன் பிறகு அவர் ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியே எங்கும் செல்லவில்லை. 120 வயது வரை அங்கேயே இருந்தார்.  ஒருநாள் தன்னுடைய சீடர்களிடம் பல ஆன்மிக ரகசிய தத்துவார்த்தங்கள் பற்றி விளக்கி கொண்டிருந்தார்.

திடீரென யாரும் எதிர்பாராத வகையில் மவுனமானவர், ஜடம் போல அசைவற்று இருந்தார். சீடர்கள் கலங்கிப்போனார்கள். அவரை அசைத்துப்பார்த்தும் பலனில்லாமல் போனது.  பதைபதைப்புடன், அவர் சுயநினைவுக்கு வரும் வரையில் பொறுத்திருந்தனர். சற்று நேரம் கழித்து அவர் கண் திறந்த பிறகே, அவர்களுக்கு சென்ற உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது. திடீரென ஜடநிலைக்கு சென்றது குறித்து அவர்கள் அவரிடம் விசாரித்தனர். அன்பர்களே! என்னை யாரோ கட்டிப்போட்டது போல இருந்தது. கண்மூடி அதுபற்றி சிந்தித்தேன். என்னையே மறந்து விட்டேன். நான் பிறந்த ஸ்தலமான ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அன்பர்கள் எனக்கு ஒரு விக்ரகம் செய்துள்ளனர். கல்லால் செய்யப்பட்ட அந்த விக்ரகத்தை சற்று முன் பிரதிஷ்டை செய்து, அவர்களது அன்பால் என்னைக்கட்டிப்போட்டு விட்டனர். அதனால் தான் அப்படி இருந்தேன்,என்றார்.  இப்படி 120 ஆண்டுகள் இந்த உலகத்தில் ராமராஜ்யத்தை நடத்திய ராமானுஜர் பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்கு சித்தமானார். தன்னுடைய சீடர்கள் அனைவரையும் அழைத்து தன் கருத்தை சொன்னார். சீடர்களும் பக்தர்களும் அதைக்கேட்டு மனம் குலைந்தனர். கண்ணீர் விட்டு அழுதனர்.  ராமானுஜர் அவர்களை தேற்றினார்.  என் அன்புக்குரிய குழந்தைகளே! ஞானிகள் மரணம் கண்டு துன்பப்படுவதில்லை. ஆனால், நீங்கள் ஏதோ மயக்கத்தில் இப்படி நடந்து கொள்கிறீர்கள். மரணத்திற்காக யாரும் அழக்கூடாது,என்றார். சீடர்களால் ஆறுதல் அடைய முடியவில்லை. அழுது கொண்டே இருந்தனர். குருவே! உங்கள் பிரிவைத் தாங்கும் சக்தி எங்களிடம் இல்லை. இன்னும் சில நாட்களாவது எங்களோடு இருந்து அருள் செய்ய வேண்டும். உங்கள் திருமேனி இவ்வுலகில் வாழும் காலத்தை நீட்டிக்க வேண்டும்,என்றனர். 

ராமானுஜர் அவர்களிடம்,உங்கள் கோரிக்கையை ஏற்கிறேன். ஆனால், இன்னும் 3 நாட்கள் மட்டுமே உங்களுடன் இருப்பேன்,என்றார்.  அந்த 3 நாட்களிலும் தன் சீடர்களுக்கு 74 போதனைகளை செய்தார். இந்த உபதேசங்களில் ஏதாவது ஒன்றையாவது பின்பற்றி நற்கதி அடைய வலியுறுத்தினார். இதைக்கேட்டபிறகு சீடர்களின் மனம் தெம்படைந்தது. மரணம் குறித்த பயம் நீங்கியது. அவர்கள் ராமானுஜரின் பாதங்களில் பணிந்து,குருவே! தங்கள் திருமேனி அழிந்தாலும் கூட அது அழியக்கூடாது. அத்திருமேனியைத் தினமும் தரிசிக்கும் பாக்கியம் எங்களுக்கு வேண்டும், என பணிவுடன் கேட்டனர். ராமானுஜர் அதற்கு ஒப்புக்கொண்டார். மூன்றே நாட்களில் அவரைப்போன்ற சிலை வடிக்கப்பட்டது. அந்த சிலையை காவிரியில் நீராட்டினர். அதை ஒரு பீடத்தில் நிலை நிறுத்தினர். தன் சீடர்களிடம்,அன்புக்குழந்தைகளே! இது எனது இரண்டாவது ஆத்மா. நானும் இந்த வடிவமும் ஒன்றே. எனது நிஜமான திருமேனி வயது காரணமாக மெலிந்து விட்டது. எனவே இந்த புதிய திருமேனியில் நான் குடியிருக்கப் போகிறேன்,என்றார். தனது தலையை தனது சீடர் கோவிந்தன் எனப்படும் எம்பாரின் மடியில் சாய்த்துக்கொண்டார். திருவடிகளை மற்றொரு சீடரான வடுகநம்பியின் மடியில் வைத்தார். தனது குருவான ஆளவந்தாரின் இரண்டு பாதுகைகளையும் பார்த்தபடியே தியானத்தில் ஆழ்ந்தார். அந்த நிலையிலேயே பரமபதத்தை அடைந்தார்.  அன்று சக ஆண்டு 1059 (கி.பி. 1137) மாசி மாதம் வளர்பிறை தசமி திதியாகும். இதன் பிறகு அவர் நியமித்த பராசர பட்டரின் தலைமையில் வைணவர்கள் ராமானுஜரின் நல்லாசியுடன் எம்பெருமானுக்கு திருத்தொண்டு செய்து பேறு பெற்றனர்.

ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கு தாய்வீட்டு சீதனம்!

மேலும்