சிஷ்யனால் மீண்ட சொர்க்கம்! | 1000th year celebrations of holy Sri Ramanuja Acharya | ராமானுஜரின் 1000வது நட்சத்திர வைபவம்

சிஷ்யனால் மீண்ட சொர்க்கம்!

மே 03,2017



திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் அஷ்டாக்ஷர மந்திரம் கற்க வேண்டி, ராமானுஜர் சென்றார். நம்பிகளைச் சந்தித்து தன் இஷ்ட பூர்வத்தைத் தெரிவித்தார். நம்பிகள், பிறகு பார்க்கலாம் என்று ராமானுஜரை திருப்பி அனுப்பிவிட்டார். இதுபோல் 18 முறை சொல்லி, ராமானுஜரின் பொறுமையையும் உறுதியையும் சோதித்தார் நம்பிகள். ராமானுஜரும் அசராமல் திரும்பத் திரும்ப வந்து நம்பிகளைச் சந்தித்து ரஹஸ் யார்த்தத்தை கேட்டறிய விரும்பினார். இறுதியில், ராமானுஜருக்கு அஷ்டாக்ஷர மந்திரத்தைக் கற்றுக் கொடுத்துவிட்டு, இந்த ரஹஸ்ய மந்திரத்தை எவருக்கும் கூறலாகாது என்றார் நம்பிகள்.

ஆனால், ஆசையுள்ளவர்கள் இந்த மந்திரத்தினால் நன்மை அடையும் பொருட்டு அருகில் இருந்த சவுமிய நாராயணர் கோயில் தளத்தின் மேல் ஏறி நின்று மக்களை அழைத்து, அந்த உபதேசத்தை வெளியிட்டார் ராமானுஜர். ஆச்சார்யரின் உத்தரவை மீறினால் தமக்கு நரகம்தான் என்பதையும் மீறி, அன்பர்கள் நன்மை பெற வேண்டும் என்பதே ராமானுஜரின் விருப்பம்.

சில காலம் சென்றன. ராமானுஜரின் பரம சிஷ்யர் கூரத்தாழ்வான், ராமானுஜரை விட்டுப் பிரியாமல் வாழ்ந்து வந்தார். கூரத்தாழ்வானின் ஆச்சார்ய பக்தியை அளவிட்டுக் கூற முடியாது. சிவ பக்தனான சோழ மன்னன், ராமானுஜரின் வைஷ்ணவ பிரச்சாரத்தை விரும்பாமல், அவரை தண்டிக்க விரும்பினான். ஆனால் கூரத்தாழ்வான் தானே ராமானுஜர் என்று கூறி, தண்டனையை ஏற்றுக்கொண்டு தமது இரு கண்களையும் இழந்தார்.

ஒருநாள் திருவாய்மொழி காலக்ஷேபம் கேட்டுக் கொண்டிருந்தார் கூரத்தாழ்வான். முடியுடைவனாவர் முறை முறை எதிர்கொள்ள என்கிற பாசுரத்தில் முன்னாலே பரமபதம் சென்றவர்கள். பிற்பட்டு வருபவர்களை எதிர்கொண்டு உபசரித்து வரவேற்பர். என்று அருளிச் செய்ததை ஆழ்வான். உடையவர் ராமானுஜருக்கு பிற்பட்டு நாம் பரமபதம் செல்ல நேர்ந்தால் உடையவர் அங்கிருந்து நம்மை வரவேற்று உபசரிக்கும்படியும், அதனால் நமக்கு அபசாரம் விளையுமாதலால் நாமே பரமபதத்துக்கு முன்னே செல்ல முற்பட வேண்டும் என்று எண்ணி, நம்பெருமாள் முன்பு சுலோகங்களைச் சொல்லி உருக்கமாக உபாசனை செய்து விண்ணப்பம் செய்தார்.

பெருமாளும் திருவுளம் செய்து உமக்கு வேண்டியதைக் கேளும் தருகிறோம் என்று கூறி நிர்பந்திக்க, இந்த அழுக்குடம்பை விடுவித்து, நித்ய விபூதியான வைகுண்டத்தைத் தந்தருளவேணும் என்று பிரார்த்தித்தார். இந்த வரம் விட்டு வேறே வேண்டிக்கொள்ளும் என்று பெருமாள் சொல்ல, அடியேன் வேண்டியதை தந்தருள வேணும் என்று ஆழ்வானும் பிரார்த்திக்க பெருமாளும் உமக்கும், உம்முடைய திருநாமம் சொல்பவருக்கும், உம்முடைய சம்பந்தம் பெற்றவர்க்கும் மேல் வீடு தந்தோம் என்று திருவாய் மலர்ந்தருளி, திருப்பரிவட்டமும், பூந்தண்டு மாலையும், திருக்கை மலர்ந்தும் பிரசாதித்து விடை கொடுத்து அனுப்பினார்.

ஆழ்வான் திருநாட்டுக்கு வரம் பெற்றதை ராமானுஜர் கேட்டறிந்து மனம் வேதனைப்பட்டாலும், உம்முடன் சம்பந்தம் உடையவர்களுக்கும் மோக்ஷம் தந்தோம் என்று நம்பெருமாள் கூறியதைக் கேட்டறிந்த ராமானுஜர், திருக்கோஷ்டியூர் நம்பிகளின் கட்டளையை மீறினதால் கிடைத்த நரகம் ஆழ்வானோடு சம்பந்தம் கொண்டதால் மோட்சம் பெற நமக்கும் வழி கிடைத்தது ஆழ்வான் அநுக்ரகத்தால்தான் என்று களித்து மகிழ்ச்சி அடைந்தார்.

எம்பெருமானுக்கு அடிமை செய்திருப்பதைவிட ஆச்சார்யனுக்கு அடிமை செய்து கொண்டிருப்பதே மிகச் சிறந்தது என்பது, இதுபோன்ற மஹாபுருஷர்களால் நாம் அறிந்து கொள்வது நாம் பெற்ற பேறு!

ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கு தாய்வீட்டு சீதனம்!

மேலும்