ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் அவதார விழா நிறைவு | 1000th year celebrations of holy Sri Ramanuja Acharya | ராமானுஜரின் 1000வது நட்சத்திர வைபவம்

ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் அவதார விழா நிறைவு

மே 04,2017



ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுாரில், ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில், பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் கந்த பொடி எனும் மஞ்சள் பொடியை துாவி கொண்டாடினர். ஸ்ரீபெரும்புதுாரில் அவதரித்த மகான் ஸ்ரீராமானுஜரின், ஆயிரமாவது ஆண்டு விழா, ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், 22ம் தேதி துவங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், 30ம் தேதியும், சாற்றுமுறை விழா, இம்மாதம், 1ம் தேதியும் விமரிசையாக நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராமானுஜரை வழிபட்டனர்.

ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவின் நிறைவு விழாவான நேற்று முன்தினம் மதியம், சாற்று முறை தீர்த்தமும், கந்தபொடி சேவையுடன், சுவாமி புறப்பாடு நடந்தது. இதில், பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் கந்த பொடி எனும் மஞ்சள் பொடியை துாவி கொண்டாடி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதையடுத்து, 108 திவ்ய தேசங்களில் இருந்து, ராமானுஜருக்கு மரியாதை செலுத்த அனுப்பப்பட்ட திருமாலை மற்றும் திருபரிவட்டம், ராமானுஜருக்கு மேள தாளத்துடன் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து ராமானுஜர், ஆண்டாள் சன்னிதியை சென்றடைந்தார். இரவு, ஆண்டாள் சன்னிதியில் இருந்து சுவாமி புறப்பாடும், நள்ளிரவு, ராமானுஜர் மஞ்சத்தில் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்வுகளை தொடர்ந்து, ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு பெற்றது.

ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கு தாய்வீட்டு சீதனம்!

மேலும்