சபரிமலையில் சுத்திகிரியை பூஜைகள் தொடக்கம்

ஜனவரி 11,2018



சபரிமலை: சபரிமலையில் மகரவிளக்குக்கு முன்னோடியாக சுத்திகிரியை பூஜைகள் நாளை தொடங்குகிறது. நாளை திருவாபரணம் பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு புறப்படுகிறது. மகரஜோதி நாளில் முக்கிய பூஜை மகர சங்கரம பூஜை. இதற்கு முன்னோடியாக சுத்திகிரியைகள் நாளை தொடங்குகிறது. நாளை மாலை தீபாரதனைக்கு பின்னர் பிரசாத சுத்தி பூஜைகள் நடைபெறும். நாளை மறுநாள் உச்சபூஜைக்கு முன்பாக பிம்ப சுத்தி பூஜைகள் நடைபெறும். தந்திரி கண்டரு மகேஷ் மோகனரரு தலைமையில் மேல்சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி மற்றும் பூஜாரிகள் இந்த பூஜைகளை நடத்துவர். இந்த ஆண்டு மகர விளக்கு சீசனில் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். இதனால் மகரவி ளக்குக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சன்னிதானத்தில் மட்டும் 3000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நெரிசல் ஏற்படும் இடங்களில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு வருகிறது. ஜோதி தெரியும் இடங்களுக்கு பக்தர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மகரஜோதி தரிசனத்துக்கு பின்னர் திருவாபரணம் அணிந்த ஐயப்பனை வணங்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதனால் வடக்கு வாசல் வரிசை பாதுகாப்பில் மத்திய அதிவிரைவு படையினர், பேரிடர் தடுப்பு நிவாரணப்படையினர் அதிக அளவில் ஈடுபடவுள்ளனர். ஜோதி தரிசனம் முடிந்ததும் பக்தர்கள் ஊருக்கு திரும்ப வசதியாக கேரள அரசு போக்குவரத்துக்கழகம் 1200 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பம்பை, நிலக்கல் தவிர்த்து பத்தணந்திட்டை, எருமேலி போன்ற இடங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டிருக்கும். புல்மேட்டில் ஜெனரேட்டர் மூலம் மின்விளக்குகள் அமைக்கப்படுகிறது. இங்கும் தடுப்பு வேலிகள்அமைக்கப்படுகிறது. இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு பம்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் தகவல் கிடைத்துள்ளதால் கூடுதல் பாதுகாப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்