பெண்ணால் சபரிமலையில் திடீர் பதட்டம்: போராடிய பக்தர்கள் மீது வழக்கு

நவம்பர் 07,2018



சபரிமலை : சபரிமலை சன்னிதானத்தில் நேற்று பெண் ஒருவரின் வருகையால் பதட்டம் ஏற்பட்டது. அவரை எதிர்த்து போராட்டம் நடத்தியதாக 200 பக்தர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது. சித்திரை ஆட்டதிருநாள் பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது. பிரச்னை ஏற்படாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு கேரளாவின் சேர்த்தலாவை சேர்ந்த அஞ்சு 30, என்ற பெண், கணவர் மற்றும் குழந்தைகளுடன் தரிசனத்துக்கு வந்தார். இதை தொடர்ந்து பம்பையில் பக்தர்கள் பஜனை போராட்டத்தை தொடங்கினர்.

பம்பையில் பக்தர்களிடம் கெடுபிடி காட்டப்பட்ட நிலையில், சில நிமிடங்களில் ஏராளமான பக்தர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டது போலீசாரை ஆச்சரியப்படுத்தியது. அவர்களை அகற்ற முடியாமல் போலீசார் தவித்தனர். கோயிலுக்கு செல்லவில்லை என அஞ்சு கூறியதால் பக்தர்களின் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்து நெய் அபிஷேகம் தொடங்கியது. திருச்சூரை சேர்ந்த மூன்று பெண்கள் சன்னிதானம் வந்தனர். இதில் லலிதா என்பவர் இளமையாக இருந்ததால் சன்னிதானத்தில் பக்தர்கள் போராட்டம் நடத்தினர். எனக்கு 52 வயது. மகனின் குழந்தைக்கு சோறு ஊட்டுவதற்காக வந்தேன் என அவர் கூறினார். ஆனால் பக்தர்கள் இதை ஏற்கவில்லை. அவரது ஆதார் அட்டையை காட்டி விளக்கிய பின் போராட்டம் கைவிடப்பட்டது. பின், லலிதா தரிசனம் நடத்தினார். இதையடுத்து போராட்டம் நடத்தியாக 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்துக்கு பின் சன்னிதானம் அமைதியானது. எனினும் போராடும் பக்தர்கள் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர். இரவில் நடை அடைக்கப்பட்ட பின் சன்னிதானத்தில் இருந்து புறப்பட்டனர்.சித்திரை ஆட்ட திருநாள் பூஜை முடிந்து இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. மண்டல கால பூஜைகளுக்காக நவ., 16- மாலை 5:00 மணிக்கு நடை திறக்கிறது.

தந்திரி மீது நடவடிக்கை?: பெண்கள் சன்னிதானத்துக்கு வந்தால் கோயில் நடையை அடைப்பேன் என என்னிடம் ஆலோசனை நடத்திய பிறகே தந்திரி அறிவித்தார் என மாநில பா.ஜ., தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை கூறி இருந்தார். இது சர்ச்சையை கிளப்பியது. முதல்வர் பினராயி விஜயன் இதை கண்டித்தார். இதை தொடர்ந்து கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையே நேற்று செய்தியாளர்களை சந்தித்த தந்திரி கண்டரரு ராஜீவரரு, நான் யாரிடமும் சட்ட ஆலோசனை கேட்கவில்லை. மூத்த தந்திரி கண்டரரு மோகனரருவிடம் மட்டும் ஆலோசனை நடத்தினேன். எனது போன் அழைப்புகளை பரிசோதித்தால் இது தெரியும், என்றார். இது பா.ஜ.,வுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தந்திரியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பதில் கிடைத்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என திருவிதாங்கூர் தேவசம்போர்டு உறுப்பினர் சங்கரதாஸ் கூறினார்.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்