சபரிமலையில் போலீஸ்: பக்தர்களுக்கு தொல்லை

நவம்பர் 08,2018



சபரிமலை : சபரிமலையில், 28 மணி நேர பாதுகாப்புக்கு வந்த, 2500 போலீசார் சாதித்தது என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. தேவை இன்றி, பஸ்களை தடுத்து, பக்தர்களுக்கு, வீண் தொல்லைகள் ஏற்படுத்தியதை தவிர, கேரள அரசின் போலீசால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை என, பெரும்பாலான மக்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.

அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவால், ஐப்பசி மாத பூஜையின் போது நடைபெற்ற தடியடி, மறியல் போன்ற சம்பவங்களை கருத்தில் வைத்து, சித்திரை ஆட்ட திருநாள் பூஜையின் போது, 28 மணி நேர பாதுகாப்புக்கு கமாண்டோக்கள் உட்பட, 2500 போலீசார் நியமிக்கப்பட்டனர். கடந்த, 5-ம் தேதி நடை திறப்புக்கு ஒரு நாள் முன்னதாகவே, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது; 4-ம் தேதி மாலையே போலீசார் வந்து விட்டனர். அன்று முதல் நிலக்கல்லுக்கு முன்னதாக இலவங்கல்லில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது. பம்பையில் புனரமைப்பு பணியில் ஈடுபட்டவர்கள் மற்றும் அட்டதோட்டில் வசிக்கும் குடும்பத்தினர் மட்டுமே இங்கிருந்து அனுப்பப்பட்டனர். பஸ்கள் இல்லை : கடந்த, 5-ம் தேதி, காலை, 8:00 மணிக்கு பின், பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் பம்பை செல்வதற்கு முன், ஆயிரம் தடைகளை தாண்ட வேண்டியிருந்தது. அதன் பின், பக்தர்கள் நிலக்கல் செல்ல அனுமதிக்கப்பட்டாலும், இங்கிருந்து பம்பைக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. போலீஸ் சொன்னால் பஸ்களை இயக்குவோம் என, கேரள அரசு போக்குவரத்து அதிகாரிகள் பரிதாபமாக பேசினர்.நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு பஸ்கள் இயக்கப்படாததை கண்டித்து, எருமேலி, கொல்லம், திருவனந்தபுரம் என பல இடங்களில் சாலை மறியலில், பா.ஜ.,வினர் ஈடுபட்டனர். பின், காலை, 11.30 மணிக்கு, பம்பைக்கு பஸ்கள் அனுப்பப்பட்டன. பம்பையில் எவரையும் நிற்க அனுமதிக்காமல் சன்னிதானத்துக்கு போலீசார் அனுப்பினர். இப்படிப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள், பக்தர்களின் நாமஜெபபோராட்டத்தை தவிர்க்கவே என்று கூறப்பட்டது.

பம்பையில் பந்தா போலீஸ் :
ஆனால், சேர்த்தலாவில் இருந்து அஞ்சு என்ற பெண் வந்துள்ளார் என்று தெரிந்த அடுத்த நிமிடத்தில், நுாற்றுக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் பம்பையில் நாமஜெப போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுவரை, பந்தா காட்டி கொண்டிருந்த போலீஸ் கை கட்டி நிற்க வேண்டி வந்தது. காரணம், கோயில் வளாகம் என்பதால் அவர்களை விரட்ட முடியாத நிலையில் போலீசார் இருந்தனர். சபரிமலையில் உயர் அதிகாரம் உடைய, தந்திரி கண்டரரு ராஜீவரருவை, வீட்டுக்காவலில் வைத்தது போல் அறைக்காவலில் வைத்தனர். அவரது அறை முன்பு ஜாமர் கருவி வைக்கப்பட்டு, டி.எஸ்.பி. தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டது. அவர் பேட்டியளிக்க கூடாது, போலீசுக்கு தெரிவிக்காமல் எங்கும் செல்லக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.இப்படி, போலீஸ் ராஜ்யம் நடந்து கொண்டிருந்தபோது திருச்சூரை சேர்ந்த, 52 வயது பெண், லலிதா, தரிசனத்துக்கு வந்த போது, சந்தேகத்தின் பேரில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் அவரை சூழ்ந்து போராட்டம் நடத்தினர். இங்கும் போலீசார் கைகட்டியே நிற்க வேண்டி வந்தது. அவரது வயது உறுதி செய்யப்பட்ட பின் கூட, போலீசால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி வல்சன் தில்லங்கரி, போலீஸ் மைக்கில் பேசி தொண்டர்களை கட்டுப்படுத்திய பின்பே நிலைமை சீரானது. இதனால், 2500 போலீசார் வந்தும், என்ன பயன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு பெண்தான் வந்தார். அவரை பயத்தின் உச்சிக்கு அழைத்து சென்று, போலீசார் திருப்பி அனுப்பினர். போராட்டம் நடத்தியவர்களை தடுக்க முடியவில்லை. அப்படியானால், பஸ்களை தடுக்கவும், பக்தர்களை அலைக்கழிக்கவும் தான் போலீஸ் வரவழைக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. மொத்தத்தில், இரண்டாவது முறையாக ஐயப்பனின் பக்தர் படைக்கு முன்னர் கேரள போலீஸ், அப்பட்டமாக தோல்வியை தழுவியது என்றுதான் சொல்ல வேண்டும்.

144 தடை தேவையா? :
சபரிமலை போன்ற மிகப்பெரிய புண்ணிய தலத்தில், 144 தடை உத்தரவு, தவறான முன் உதாரணம். 144 தடை என்றால் கூட்டம் கூடக்கூடாது என்பது தான்; அது, இங்கு சாத்தியமற்றது. அப்படி இருக்க பினராயி தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு இப்படி ஒரு மோசமான முடிவை எடுத்து ஏன். அரசியல் போர்க்களமாக சபரிமலை மாறக்கூடாது என்பது, உண்மையான பக்தர்களின் ஆதங்கம். இதை பினராயி அரசு உணர்ந்து உச்சநீதிமன்ற உத்தரவை வேகமாக அமல்படுத்தும் செயல்பாட்டில் இருந்து பின்வாங்க வேண்டும் என்பதுதான் பக்தர்களின் பிரார்த்தனை. இந்நிலையில், 13- ம் தேதி மறுசீராய்வு மனு விசாரணையில், உச்சநீதிமன்றம் என்ன சொல்ல போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மண்டல, மகரவிளக்கு காலம், கடந்த ஆண்டுகளை போல், பெண்களுக்கான வயது கட்டுப்பாடுடன் நடக்க வேண்டும்; அதற்கு, அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பதுதான் அய்யப்ப பக்தர்களின் விருப்பம். சபரிமலையில் நடக்கும் சம்பவங்களும் அதனையே உணர்த்துகின்றன.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்