சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பதில் கேரள அரசு உறுதி

நவம்பர் 16,2018



திருவனந்தபுரம் : மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைகளுக்காக, சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடை, இன்று திறக்கப்பட உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், அனைத்து வயது பெண்களையும், கோவிலில் அனுமதிப்பதில், கேரள அரசு உறுதியாக உள்ளது. பெண்கள் தரிசனம் செய்வதற்காக, குறிப்பிட்ட சில நாட்களை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக, சபரிமலையில், 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள, சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 - 50 வயதுள்ள பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல போராட்டங்கள் நடந்தன. கடந்த மாதம், மாதாந்திர பூஜைகளுக்காக கோவிலின் நடை திறக்கப்பட்ட போது, பல பெண்கள் வந்தனர்; ஆனால், பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்கள் திரும்பச் சென்றனர்.

ஒத்துழைப்பு : அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, அடுத்த ஆண்டு, ஜன., 22ல் விசாரிப்பதாக, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கூறியுள்ளது. இந்நிலையில், மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைகளுக்கு, சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடை, இன்று திறக்கப்பட உள்ளது. இதையடுத்து, இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க, அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு, முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்திருந்தார். திருவனந்தபுரத்தில், நேற்று நடந்த இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் மாநில அரசு உள்ளதால், அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுத்தன. நீண்ட நேரம் நடந்த விவாதங்களில், ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. தங்கள் கோரிக்கைகளை, மாநில அரசு ஏற்காததைக் கண்டித்து, காங்., மற்றும் பா.ஜ., இந்தக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தன.

இது குறித்து, காங்., மூத்த தலைவர், ரமேஷ் சென்னிதலா கூறியதாவது: தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்கு, உச்ச நீதிமன்றம் சம்மதித்துள்ளது. இந்நிலையில், ஏற்கனவே அளித்த தீர்ப்பை நிறைவேற்ற, கூடுதல் அவகாசம் கேட்டிருக்க வேண்டும். கிடைத்த நல்ல வாய்ப்பை பயன்படுத்த, மாநில அரசு தவறிவிட்டது. கோவிலின் பாரம்பரியத்துக்கு எதிரான முடிவை ஏற்க மறுத்து, வெளிநடப்பு செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ., கேரள மாநில தலைவர், ஸ்ரீதரன் பிள்ளை கூறியதாவது:
ஏற்கனவே திட்டமிட்டு, மாநில அரசு செயல்படுகிறது. பக்தர்களின் உணர்வுகளை மதிக்காமல், சபரிமலையை போர்க்களமாக்கும் முயற்சியில் அரசு உள்ளது. அதனால், எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். அனைத்து கட்சிக் கூட்டம் குறித்து, முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: பக்தர்களுக்கு ஆதரவாகவே, மாநில அரசு உள்ளது. அதே நேரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது; இதை பக்தர்களும், அரசியல் கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசு திட்டவட்டம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படுவர்; அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படும். தேவைப்பட்டால், தனி நாளில், பெண்களை அனுமதிப்பது குறித்தும் ஆராயப்படும். பெண்கள் தரிசனம் செய்வதற்காக, சில குறிப்பிட்ட நாட்களை ஒதுக்குவது குறித்து பரிசீலிக்கப் படும். அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து, தந்திரிகளுடனும், பந்தளம் அரசக் குடும்பத்தாருடனும் பேச உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைகளுக்காக, அய்யப்பன் கோவிலின் நடை இன்று திறக்கப்பட உள்ள நிலையில், அனைத்து கட்சிக் கூட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. அதே நேரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படுவர் என்பதில், மாநில அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. இதற்கிடையே, ஐப்பசி மாத பூஜையின்போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள் போல், இந்த முறை நடந்து விடக்கூடாது என்பதில், கேரள அரசு உறுதியாக உள்ளது. இதையடுத்து, நிலக்கல், பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில், 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

பக்தர்களுக்கு அடிப்படை வசதி : சபரிமலையில், மண்டல பூஜைக்கு, இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. இடுக்கி மாவட்டம், புல்மேடு வழியாக காட்டுப் பாதையில், சபரிமலைக்கு நடந்து செல்லலாம் என்பதால், அங்கு பக்தர்களுக்கு தேவையான வசதிகளை, கேரளா வன உயிரின துறையினர் செய்து வருகின்றனர். பெரியாறு புலிகள் காப்பக மேற்கு பிராந்திய உதவி இயக்குனர், ஹாபி கூறியதாவது: அழுதகடவு- - சிறியானைவட்டம், சத்திரம் -- சன்னிதானம் ஆகிய காட்டுப் பாதைகள் சீரமைக்கப்பட்டு, நடைபாதையாக மாற்றி, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அழுதகடவு- வழியில் அழுதகடவு, கள்ளிடம் குன்று, வள்ளித்தோடு, புதுச்சேரி, கரிமலை ஆகிய பகுதிகளில் தங்குமிடங்கள் அமைக்கப்படும். அங்கு மூலிகை குடிநீர், கழிப்பறை, வெளிச்சம், உணவு ஆகிய வசதிகள் செய்யப்படும். காட்டு யானைகளை கண்காணிக்கும் பணியில், வனத்துறையினர் ஈடுபடுவர். இவ்வாறு அவர் கூறினார்.

பாலின பாகுபாடல்ல!

நம் நாட்டில், பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு சமூகத்தில் உயர்வான இடமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், குறிப்பிட்ட வயது பெண்களுக்கு அனுமதி மறுப்பது என்பது, பாலின பாகுபாடாகக் கருத முடியாது. இது பாரம்பரியம்; பக்தர்களின் மத நம்பிக்கை; அதை மதிக்க வேண்டும். - ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர், தலைவர், வாழும் கலை அமைப்பு.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்