முதல் பக்கம் >> தியானமும் ஆன்மீகமும்

தியானம் என்பதென்ன?ஜனவரி 10,2013

இயற்கைக்கு அடிமையா யிருப்பதை எதிர்க்க உதவும் சக்தியே தியானம். இயற்கை நம்மை அறை கூவி அழைப்பாள். இதோ பார்! இது எவ்வளவு அழகிய பொருள்! நான் கேட்க மறுக்கிறேன். இப்பொழுது அவள் கூறுகிறாள். இந்தச் சுகந்த வாசனையை முகர்ந்து பார்! நான் எனது நாசிக்குக் கூறுகிறேன், அதை முகர்ந்து பார்க்காதே. நாசியும் முகரவில்லை. கண்களே, அதைப் பார்க்காதீர்! என்று கூறுகிறேன். கண்களும் பார்க்கவில்லை. இயற்கை ஒரு கொடுமையான செயலை விளைவிக்கிறது. என் குழந்தைகளில் ஒன்றைக் கொன்று விட்டு அது கூறுகிறது. அயோக்கிய மனிதனே! அழு, துக்கக் கடலில் முழ்கு! நான் விடையளிக்கிறேன், நான் துக்கப்பட வேண்டியதில்லை. இயற்கையின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெறத் துள்ளுகிறேன், சில வேளைகளிலாவது இவ்வாறு முயன்று பாருங்கள்! இயற்கையினால் ஏற்படும் தளைகளை நிச்சயமாக தியானத்தால், மாற்றிவிடக்கூடும். இந்த ஆற்றல் உங்களிடம் இருந்தால் அதுவே சுவர்க்கம், அதுவே விடுதலை அல்லவா? அதுவே தியானத்தால் பெறும் ஆற்றல்.

இந்த ஆற்றலை எவ்வாறு பெறுவது? இதை வெவ்வேறு முறைகளில் பெற முடியும். ஒவ்வொருவர் மனமும் ஒவ்வொரு வழியில் செல்லும். ஆயினும், பொதுவான நியதி இதுதான்; மனத்தின் எண்ண அலைகளை அடக்குங்கள். மனது நீர் பெருகிய ஓர் ஏரி போன்றது. அதில் விழும் ஒவ்வொரு கல்லும் அலைகளை எழுப்புகிறது. இந்த அலைகளால் நமது பிம்பம் ஏரியின் நீரில் தெரிவதில்லை. பூரணச் சந்திரன் நீரில் பிரதிபலிக்கிறான். அனால் நீர்ப் பரப்பு கலக்கப்பட்டு இருப்பதால் பிம்பம் தெளிவாகத் தெரிவதில்லை. நீர்ப்பரப்பு அமைதி பெறட்டும். அலைகளை எழுப்பும்படி இயற்கையைத் தூண்ட வேண்டாம். சிறிது நேரம் அமைதியாய் இருங்கள். இப்போது இயற்கை ஒடுங்குவதால் நீங்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்கிறீர்கள்.

கடவுள் ஏற்கனவே எங்கும் உள்ளார். ஆனால் மனம் அவரைப் பற்றவில்லை. அது எண்ண அலைகளால் குழப்பம் அடைந்து, புலன்களின் வழியில் எப்பொழுதும் சென்று கொண்டு இருக்கிறது. புலன்களை அடக்க முயற்சி செய்யுங்கள். எண்ண அலைகள் சுழன்று கொண்டுதான் இருக்கின்றன. ஒரு சமயம் மனத்தை அடக்கிவிட்டதாக எண்ணிக் கடவுளைத் தியானிக்கிறேன். மறு நிமிடம் மனம் லண்டனுக்குச் சென்று விடுகிறது. அங்கிருந்து அதைத் திருப்பினால் அது நியூயார்க்கிற்குச் சென்று அங்கு நான் புரிந்த செயல்களை நினைக்கிறது. இந்த எண்ண அலைகளைத் தியானத்தின் ஆற்றலினால்தான் நிறுத்த இயலும்.

Bookmark and Share

மேலும் தியானமும் ஆன்மீகமும்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)