தினமலர் முதல் பக்கம்
| Get Font |  RSS Feed
 
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
 
 
 

முதல் பக்கம் > வரவிருக்கும் பண்டிகை > நரசிம்ம ஜெயந்தி
நரசிம்ம ஜெயந்தி
விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் மிக உயர்ந்தது நரசிம்ம அவதாரம். ஏனெனில், ஒரு பக்தனின் சொல்லைக் காப்பாற்ற விஷ்ணு இந்த அவதாரத்தை நிகழ்த்தினார். மனிதனுக்கு வாக்கு சுத்தம் மிக முக்கியம். ஒன்றைச் சொன்னால், அதைச் செய்தாக வேண்டும். வாக்கு தவறினால் அவனுக்கு மதிப்பு போய்விடும். தசரதர் கைகேயிக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற, தன் உயிரையும் கொடுத்ததால் தான், இன்றும் நம் உள்ளங்களில் உயர்ந்து நிற்கிறார்.இதே போல, பிரகலாதனின் வார்த்தையைக் காப்பாற்ற கம்பத்தை உடைத்துக் கொண்டு வெளிப்பட்டார் நரசிம்மன். ""அடேய் பிரகலாதா! எங்கேயடா இருக்கிறான் உன் விஷ்ணு? என்று கேட்கிறான் இரண்யன். ""தந்தையே! அவன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான். ஏன்...எங்கும் வியாபித்திருக்கிறான். ஒவ்வொரு துகளிலும் அவன் உட்கார்ந்திருக்கிறான், என்றான் பிரகலாதன்.இதைக்கேட்ட விஷ்ணு பரபரப்பாகி விட்டார். ""இந்தப் பொடியன், நாம் எங்கிருக்கிறோம் என கையைக் காட்டுவானோ! அங்கிருந்து உடனே வெளிப்பட்டாக வேண்டுமே! எனவே, எல்லாப் பொருள்களிலும் நிறைந்து காத்துக் கிடந்தான்.

பிரகலாதன் தூணைக் கை காட்ட, இரணியன் அதை உடைத்தான். மனித உடலும், சிம்ம முகமும் கொண்டு நரசிம்மனாய் அவன் வெளிப்பட்டான். "நரன் என்றால் "மனிதன். "சிம்மம் என்றால் "சிங்கம். இதனால் தான் அவனை "நரசிம்மன் என்றும், "நரசிங்கன் என்றும் சொல்வார்கள். மதுரை அருகே அவன் கோயில் கொண்டுள்ள ஊருக்கே "நரசிங்கம் என்று பெயர் வைத்துள்ளனர்.தூணிலிருந்து வெளிப்பட்ட அந்தக் கருணைக்கடல், இரணிய வதத்தை முடித்த பிறகு, பிரகலாதனிடம், ""நீ ஏன் தூணைக் காட்டினாய், துரும்பைக் காட்டியிருக்கக் கூடாதா? என்றான். ""ஏன் இப்படி சொல்கிறீர்கள்? என்ற பிரகலாதனிடம், தூண் என்பதால், இரணியன் அதை உடைக்கும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. துரும்பு என்றால் அதைக் கிள்ளியெறிந்தவுடன் பிரசன்னமாகி இருப்பேனே! என்றானாம்.ஆம்.. நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை. அவரிடம் வைக்கும் கோரிக்கை உடனுக்குடன் நிறைவேறும். லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை தினமும் 108 தடவைசொல்லி வழிபடுவோர் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

நவ நரசிம்மமூர்த்திகள்

ஜ்வாலாஹோபில மாலோல க்ரோடா காரஸ் ச பார்கவ
யோகா நந்தஸ் சத்ரவடு: பாவனோ நவமூர்த்தய:

பகவான் நரசிம்மராக ஆவிர்பவித்து ஒன்பதுவித வடிவங்களில் நவ நரசிம்மர்களாக  அஹோபில க்ஷேத்திரத்தில் காட்சி தருகிறார். அந்த நவரூபங்களைத் தியானிப்போம். ஜ்வாலா நரசிம்மர்: எங்கிருக்கிறான் உன் நாராயணன் என்ற ஹிரண்யகசிபுவின் அறைகூவலுக்குப் பதிலாக, பிரகலாதன், தூணிலும் இருப்பார்! துரும்பிலும் இருப்பார்! என்றவுடன், கோபத்தின் உச்சியில் அவன் தன் கதையினால் தனது ஆயிரம் தூண்கள் கொண்ட அரண்மனையில் ஒரு தூணைத் தாக்க, அதே நொடியில் சிம்ம முகமும், மனித உடலும், வஜ்ரநகங்களும் கொண்டு தோன்றிய கோலம்.

அஹோபில நரசிம்மர்: கருடன் செய்த கடும் தவத்திற்கு மெச்சி, ஹிரண்யகசிபுவைத் தனது மடியில் போட்டு வதை செய்யும் கோலத்தில், சக்தி ஸ்வரூபனாக, மலைக் குகையில் நெருப்பின் உக்கிரத்தோடு ஸ்வயம்புவாகத் தோன்றிய மூர்த்தி.

மாலோல நரசிம்மர்: மா என்றால் திருமகள். லோலா என்றால் காதல். லக்ஷ்மிமேல் காதல் கொண்டவர். மகாலக்ஷ்மி தாயாருடன் ஸ்ரீய: பதியாய் லக்ஷ்மி நரசிம்மராகச் சேவை சாதிக்கும் பெருமாள். தாயாரும் பெருமாளின் இடத்தொடையில் ஆலிங்கன கோலத்தில் அமர்ந்து ஆனந்தமாகச் சேவை சாதிக்கிறார்.

க்ரோடா நரசிம்மர்: க்ரோடா என்றால் கோரைப்பல். கோர வராகமாகத் தோன்றி, ஹிரண்யகசிபுவின் சகோதரன் ஹிரண்யாக்ஷன் பாதாளத்தில் ஒளித்து வைத்த மண்மகளான தனது பிராட்டியாரைக் கோரைப் பற்களில் ஏந்தி வந்து அவருக்கு சரம
ஸ்லோகத்தை உபதேசிக்கும் கோலத்தில் சேவை சாதிக்கும் மூர்த்தி.

காரஞ்ச நரசிம்மர்: காரஞ்ச என்றால் தெலுங்கில் புங்க மரம் என்று பொருள். அனுமன் செய்த தவத்திற்கு மெச்சி ராமராகச் சேவை சாதிக்க, வனத்தில் சுயம்புவாகத் தோன்றியவர். விஷ்ணுவாக அல்ல ராமனாகவே தரிசிக்க விரும்புகிறேன் என்று அனுமன் வேண்ட, வில், அம்பு தாங்கி நரசிம்மர் ராமனாகவும், ஆதிசேஷன் குடைபிடிக்க வைகுண்ட நாதனாகவும் சேவை சாதிக்கிறார்.

பார்கவ நரசிம்மர்: பார்கவர் என்ற முனிவர், திருமகள் தன் குழந்தையாக வரவேண்டும் என்று தவம் செய்து ஸ்ரீயை மகளாகப் பெற்றவர். இவர் பெருமாளை நரசிம்மமூர்த்தியாகத் தரிசிக்க வேண்டுமென்று தவம் செய்ய, ஹிரண்யகசிபுவைத் தன் மடியில் வைத்து குடலை மாலையாகப் போடும் உக்ர நரசிம்மராக அருகில் கைகூப்பி பெருமாளின் கருணையை வியந்த வண்ணம் பிரகலாதன் நிற்க. சேவை சாதிக்கும் மூர்த்தி.

யோகானந்த நரசிம்மர்: பிரகலாதனுக்கு குருவாக அமர்ந்து யோக நெறியைக் கற்பித்த நரசிம்மர். ஆதிசேஷன் மேல் கால்களை மடக்கி யோககோலத்தில் யோக முத்திரையில் சேவை சாதிக்கும் பெருமான்.

சத்ரவட நரசிம்மர்: சத்ரம் என்றால் குடை. வடம் என்றால் ஆலமரம். ஒரு பெரிய ஆலமரத்தின் மடியில் ஆனந்தமாக பத்மாசனத்தில் அமர்ந்து, ஹாஹா ஹூஹூ என்னும் இது கந்தவர்களின் இனிமையான சங்கீதத்தைச் செவிமடுத்தப்படித் தாளம்போடும் கோலத்தில் சாந்த நரசிம்மராக சேவை சாதிக்கும் பெருமாள்.

பாவன நரசிம்மர்: நம்முடைய வினைகளைத் தீர்த்து இந்த பவசாகரச் சுழலிலிருந்து நம்மைக் கரையேற்றி,  இப்பிறவிப் பிணியிலிருந்து நம்மைக் காப்பாற்றுபவர். முருகன் வேடர் குலப் பெண் வள்ளியைத் திருமணம் செய்து கொண்டது போல செஞ்சு இனத்தில் பிறந்த பெண்ணை திருக்கல்யாணம் செய்து கொண்டு செஞ்சுலக்ஷ்மி தாயாருடன் காட்சி தரும் நரசிம்மர்.

பிரகலாதன் சொன்ன சொல்லை நிரூபிப்பதற்காக மகாவிஷ்ணு உடனே எடுத்தது நரசிம்ம அவதாரம். அத்தகைய சிறந்த பக்தனான பிரகலாதன் முற்பிறவியில் கயவனாக - கள்வனாக - மக்களுக்கு துன்பங்கள் இழைத்த மகாபாவியாக வாழ்ந்து வந்தான். அப்பொழுது அவன் பெயர் சுவேதன். அவன் தன் இறுதிக் காலத்தில் தவறுகளை எண்ணி வருந்தி, தன்னை மன்னித்தருளுமாறு மகாவிஷ்ணுவிடம் பிரார்த்தித்தான். தனக்கு எந்த வடிவிலாவது காட்சி தந்து அருளுமாறு வேண்டினான். ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை ஜெபித்துக்கொண்டேயிருந்தான். அப்போது ஓர் அசரீரி வாக்கு, இந்தப் பிறவியில் நீ என்னை தரிசிக்க இயலாது; உன் அடுத்த பிறவியில் நீ அழைத்ததும் வருவேன் என்று ஒலித்தது. குரல் வந்த திசை நோக்கி கைகூப்பியவண்ணம் உயிர்விட்டான் சுவேதன்.

இந்த சுவேதன்தான் அடுத்த பிறவியில் இரணியனுக்கு மகனாகப் பிறந்தான். யார் இந்த இரணியன்? வைகுண்டத்தில் துவாரபாலகர்களாக ஜயனும் விஜயனும் சேவகம் செய்தார்கள். இருவரும் ஒரே உருவ அமைப்பு கொண்டவர்கள். வைகுண்டத்தில் ஏழு வாசல்கள் உண்டு. ஏழாவது வாசலைக் கடந்தால்தான் உள்ளே அரியாசனம் ஹரியான மகாவிஷ்ணுவின் ஆசனம். அந்த வாயிலின் இரு பக்கத்திலும் ஜயனும் விஜயனும் துவாரபாலகர்களாக இருக்கும்போது, சனகாதி முனிவர்கள் இளம் பாலகர்கள் வடிவத்தில் அங்கு வந்தார்கள். அந்த முனிவர்களை உள்ளே அனுமதிக்காமல் ஜயனும் விஜயனும் தடுத்தனர். அதனால் கோபம்கொண்ட முனிவர்கள், காமம், குரோதம், லோபம் என்ற மூன்று சத்ருக்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பூலோகத்தில் பன்னிரண்டு பிறவிகள் எடுக்கக் கடவீர்கள் என்று சபித்தனர். இதையறிந்த மகாவிஷ்ணு அங்கே வந்தார். முனிவர்கள், மகாவிஷ்ணுவை வணங்கி நடந்ததைக் கூறினர்.

முனிவர்களின் சாபத்தை ஜயனும் விஜயனும் அனுபவித்தே ஆகவேண்டும். இருந்தாலும் அவ்விருவரும் தங்கள் தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்கவே, அவர்களுக்கு இரங்கிய பகவான், துவாரபாலகர்களே, என்னைப் போற்றி வழிபட்டு பன்னிரண்டு பிறவிகள் பூலோகத்தில் வாழ்ந்து அதன்பின் வைகுண்டம் திரும்பிவர விருப்பமா? அல்லது பூலோகத்தில் மூன்று பிறவிகள் எடுத்து என்னை நிந்தித்து வைகுண்டம் திரும்பிவர விருப்பமா? என்று கேட்டார். பகவானே தங்களைப் பிரிந்து பூலோகத்தில் பன்னிரண்டு பிறவிகள் இருக்கமுடியாது. உங்களை நிந்தனை செய்தாலும் பரவாயில்லை; மூன்று பிறவிகள் போதும். தங்கள் திருக்கரங்களால் வதமாகி வைகுண்டம் வரவிரும்புகிறோம் என்றனர். மகா விஷ்ணுவும் அருளினார்.

இந்த நிலையில் பூவுலகில் பிரஜாதிபதி என்னும் முனிவர் மாலை நேர பூஜை செய்துகொண்டிருந்தார். அச்சமயம் அவரது மனைவி திதி அவரைக் கட்டித் தழுவினாள். அதன்விளைவால் அவர்களுக்கு இரண்டு அசுர குணம்கொண்ட மக்கள் பிறந்தார்கள். அவர்களே இரண்யாட்சன், இரண்ய கசிபு என்ற இரணியன். பிறக்கும்போதே அவர்கள் கரிய நிறமும் முரட்டு குணம் கொண்டவர்களாகவும் திகழ்ந்தார்கள். அவர்கள் வளரவளர தேவர்கள் அஞ்சினர். இந்த இருவரும் கடுந்தவம் புரிந்து அரிய வரங்களைப் பெற்றார்கள். ஒரு சமயம் இரண்யாட்சன், மகாவிஷ்ணுவுக்கு எவ்வளவு பலம் உள்ளதென்று அறிய வைகுண்டம் சென்றான். அங்கே அவர் இல்லை. தேடிப் பார்த்தான். அப்போது பூமி உருண்டையாக இருப்பதைக் கண்டான். அதைத் தூக்கிச்சென்று பாதாள உலகில் ஒளித்து வைத்தான். பூமாதேவி, பகவானே காப்பாற்று என்று அபயக்குரல் கொடுத்தாள்.

உடனே மகாவிஷ்ணு பூமி எங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து, வராக (பன்றி) அவதாரம் எடுத்து பாதாளம் சென்று, இரண்யாட்சனைக் கொன்றுவிட்டு, பூமியை தன் கொம்பால் எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். (மகாவிஷ்ணு வராகராய் காட்சி தந்ததைக் கண்ட பூமாதேவி, அவரை ஆரத்தழுவினாள். அதனால் மகிழ்ந்த ஸ்ரீவராகர் அவளைத் தானும் தழுவினார். இப்படி அவர்கள் ஆலிங்கனம் செய்து கொண்ட காலம் தேவ வருஷம் என்கிறது புராணம். அதன்விளைவாக ஒரு மகன் பிறந்தான். அவன்தான் நரகாசுரன்.) இரண்யாட்சன் வதம் செய்யப்பட்டதை அறிந்து இரணியன் மகாவிஷ்ணுமீது கடுங்கோபம் கொண்டான். அவரை அழிக்க எண்ணிய அவன், அதற்கான வலிமைபெற தவம் செய்வதற்காக மந்தாரமலையின் குகையினுள் நுழைந்து அமர்ந்தான். அப்போது, அவன் மனைவி லீலாவதி கர்ப்பவதியாக இருந்தாள்.

இதுதான் தக்கசமயமென்று நராத முனிவர் இரணியனின் அரண்மனைக்கு வந்தார். அப்போது லீலாவதி மஞ்சத்தில் படுத்து நன்கு உறங்கிக்கொண்டிருந்தாள். உடனே நாரதர் கர்ப்பத்திலிருக்கும் சிசுவுக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தார். ஸ்ரீமன் நாராயணன் தான் ஈரேழு உலகத்திற்கும் அதிபதி என்று உபதேசித்ததுடன், ஓம் நமோ நாராயணாய என்ற மகாவிஷ்ணுவின் மூல மந்திரத்தையும் உபதேசித்தார். தாயின் கர்ப்பத்திலிருந்த குழந்தை நாரதரின் உபதேசத்தை உன்னிப்பாகக் கேட்டதுடன், அப்பொழுதே ஓம் நமோ நாராயணாய என்று முணுமுணுக்க ஆரம்பித்தது. இரணியனின் மனைவி லீலாவதி பிரசவித்தாள். ஓர் அழகிய தெய்வாம்சம் நிறைந்த குழந்தை சுபநாளில் பிறந்தது. அந்தக் குழந்தைதான் பிரகலாதன். தவம் செய்து பல வரங்கள் பெற்ற இரணியன், அனைவரும் தன்னைத்தான் வணங்கவேண்டும் என்று கட்டளையிட்டான். அவன் கட்டளைக்கு அடிபணியாதவரை பாதாளச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினான். வருடங்கள் கடந்தன. பிரகலாதன் அசுர குலத்தில் பிறந்தாலும் ஓம் நமோ நாராயணாய என்று எட்டெழுத்து மந்திரத்தை எப்போதும் ஜெபித்துக் கொண்டிருந்தான். இதனைக்கண்ட இரணியன், அந்தப் பெயரை உச்சரிக்காதே. இந்த உலகங்கள் அனைத்திற்கும் நானே அதிபதி. என் பெயரைச் சொல். இரண்யாய நமஹ என்று சொல் என்று கட்டாயப்படுத்தினான். ஆனால் பிரகலாதனோ மகா விஷ்ணுவே தெய்வம் என்பதில் உறுதியாக இருந்தான். எத்தகைய அச்சுறுத்தலுக்கும் தண்டனைக்கும் அவன் அஞ்சவில்லை. வெறுத்துப்போன இரணியன் தன் தங்கை ஹோலிகாவை அழைத்து, இவனை நெருப்பு வளையத்திற்குள் அழைத்துச் சென்று பஸ்பமாக்கிவிடு என்று உத்தரவிட்டான்.

இந்த ஹோலிகா நெருப்பால் பாதிக்கப்படாத வரம்பெற்றவள். அவள் அண்ணன் சொல்படி பயங்கரமாக எரிந்துகொண்டிருந்த நெருப்பு  வளையத்திற்குள் பிரகலாதனை அழைத்துச்சென்றாள். அப்போதும் பிரகலாதன் கைகளைக் கூப்பிக்கொண்டு ஓம் நமோ நாராயணாய என்று ஜெபித்துக் கொண்டே சென்றான். ஆனால், தீய எண்ணத்துடன் நெருப்பு வளையத்திற்குள் நுழைந்த ஹோலிகா பஸ்பமானாள். நாராயணன் திருநாமத்தை ஜெபித்துக்கொண்டே சென்ற பிரகலாதன் பொலிவுடன் வெளிவந்தான். இரணியனின் கோபம் எல்லை கடந்தது. அவன் பிரகலாதனிடம், உன் நாராயணன் எங்கே உளான்? அவனைக் காட்டு என்று கையில் வைத்திருந்த கதையைச் சுழற்றினான். ஸ்ரீமன் நாராயணன் தூணிலும் உளான்; துரும்பிலும் உளான் என்றதும், அருகிலிருந்த தூணில் பலம்கொண்டு தன்கதையால் தாக்கினான். அந்த வேளை பிரதோஷ காலமாகும். பகல்பொழுது மறையும் காலம். இரவும் பகலும் இல்லாத வேளை. நரசிம்மர் அந்தத் தூணிலிருந்து வெளிவந்தார். இரணியன் பெற்ற வரத்தினை அறிந்த நரசிம்மர் அந்தப் பிரதோஷ வேளையில் அறைக்கு உள்ளேயும் வெளியேயும் இல்லாமல் ஆகாயத்திலும் பூமியிலும் இல்லாமல் தம் மடியின்மீது படுக்கவைத்து, ஆயுதத்தால் கொல்லாமல் தன் கூர்மையான கைகளின் நகங்களால், அவன் மார்பினைப் பிளந்து, குடலை உருவி மாலையாகப் போட்டுக்கொண்டு இரணியனை சம்ஹாரம் செய்தார். இந்தக் காட்சியைக் கண்ட பிரகலாதன், தன் எதிரே சிங்கமுகத்துடனும் மனித உடலுடனும் காட்சிதந்த நரசிம்மமூர்த்தியை கைகூப்பி வணங்கினான். அப்போது தன் முற்பிறவி நினைவுக்கு வந்தது.

பகவானே, கடந்த பிறவியில் நான் வேண்டிக்கொண்டதன் பயனால் இப்பிறவியில் எனக்காக நரசிம்ம அவதாரம் எடுத்து அருள்புரிந்தீர் என்று தாள்பணிந்தான் பிரகலாதன். மனித உடலும் சிங்கமுகமும் கொண்ட நரசிம்மமூர்த்தி சில திருத்தலங்களில் வித்தியாசமாகவும் காட்சி தருகிறார். அவற்றுள் சில: பெரும்பாலும் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சிதரும் நரசிம்மர், திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் வட்டத்திலுள்ள பொன்னியன் மேடு என்ற திருத்தலத்தில் நின்ற கோலத்தில் அபய ஹஸ்தத்துடன் அருள்புரிகிறார். ஏழு அடி உயரத்தில் காட்சிதரும் இவர் நான்கு கரங்களுடன் திகழ்கிறார். சேலம் மாவட்டம், நாமக்கல் குடைவரைக் கோவிலில் நரசிம்மர் மூலவராக வீராசனத்தில் அமர்ந்த நிலையில் காட்சிதருகிறார். இரணியன் வயிற்றைப் பிளந்த கைகள் என்பதற்கேற்ப சிவப்பு நீரோட்டத்துடனும் நகங்கள் ரத்தக்கறைச் சிவப்புடனும் உள்ளதை தரிசிக்கலாம்.
 
  தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
 
 
 
 
 
 
 
 
Copyright 2015 www.dinamalar.com. All rights reserved.