தினமலர் முதல் பக்கம்
| Get Font |  RSS Feed
 
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
 
 
 

முதல் பக்கம் > வரவிருக்கும் பண்டிகை > பரசுராம ஜயந்தி
பரசுராம ஜயந்தி
ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகா தேவிக்கும் புதல்வராய் அவதரித்தவர் பரசுராமர். தவறு செய்த தனது தாயைக் கொல்லுமாறு தந்தை பிறப்பித்த ஆணையை சிரமேற் கொண்டு நிறைவேற்றியவர் இவர். மாஹிஷ்மதி நகரைத் தலைநகராகக் கொண்டு ஹைஹைய நாட்டை ஆண்டு வந்த ஸஹஸ்ரார்ஜுனன் என்று அழைக்கப்பட்ட கார்த்தவீர்யார்ஜுனன் தனது தந்தையைக் கொன்றபோது, அவனை வதம் செய்தார். அதோடு, செருக்குற்று மக்களுக்குத் துன்பங்கள் புரிந்த க்ஷத்ரிய மன்னர்களை பூண்டோடு அழிப்பதாக சபதம் செய்து, தனது கோடரியால் அழித்த பரசுராமர், மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ஆறாவதாகப் போற்றப்படுபவர்.

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், அத்திராலா என்ற இடத்தில் பரசுராமருக்கு தனி கோயில் அமைந்துள்ளது. செய்யாறு என்று அழைக்கப்படும் பஹுதா நதியின் கரையில் அமைந்துள்ள அத்திராலா இயற்கை சுழல் மிக்க அழகிய சிறிய கிராமமாகும். தந்தையின் ஆணைப்படி தாய் ரேணுகாவை தனது கோடரியால் கொன்றதனால் ஏற்பட்ட பாவம் நீங்க அவர் தீர்த்த யாத்திரை வந்தபோது, இந்த பஹுதா நதியில் புனித நீராடி, அருகில் இருந்த திரேதேஸ்வரர் சிவன் கோயிலில் சிவபெருமானை வணங்க, அவரது பாவம் விலகியது. மேலும், இந்த பஹு நதியில்தான் அவர் தனது கோடரியைக் கழுவியதாகவும் கூறப்படுகிறது. எனவே, இத்தலம் ‘ஹத்திராலா ’ (மாத்ரு ஹத்தி பாவம்) என்று அழைக்கப்பட்டு, அதுவே அத்திராலா என்று மருவியதாகத் தல புராணம் தெரிவிக்கிறது. கல்வெட்டுக்களில் இந்த ஊர் தெலுங்கில் அர்த்ரி ரேவுலா, அரட்டு ரேவுலா என்றும், தமிழில் திருவறத்துறை என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள சிறிய குன்றின் அடிவாரத்தில் பரசு ராமருக்கு தனிக் கோயிலும், குன்றின் மீது மஹாவிஷ்ணு கதாதரர் என்ற திருநாமத்தில் எழுந்தருளியிருக்கும் கோயிலும், திரேதா யுகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கருதப்படும் திரேதேஸ்வரர் சிவன்கோயிலும், துர்கை கோயிலும் அமைந்துள்ளன. வரிசைக்கு 12 தூண்கள் வீதம் ஆறு வரிசைகள் கொண்ட மிக விசாலமான சதுரக் கல் மண்டபத்துக்கு நேர் எதிரில் பரசுராமேச்சுரம் என்று கல்வெட்டுக்களில் கூறப்படும் இந்த கோயில் அமைந்துள்ளது. பத்தாவது நூற்றாண்டைச் சேர்ந்ததாகக்  கருதப்படும் இந்த கோயிலில் சோழ, சாதவாகன, காகதீய மற்றும் விஜய நகர மன்னர்கள் திருப்பணிகள் செய்துள்ளனர். இந்த கோயிலில் காணப்படும் ஒன்பது கல்வெட்டுக்களில் எட்டு தமிழ் மொழியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நுழைவாயிலின் மீது கோபுரம் போன்ற அமைப்பு ஏதும் இல்லை. இரு புறங்களிலும் துவாரபாலகர் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. உள்ளே கல் தூண்களோடு கூடிய விசாலமான மண்டபம், அடுத்து கருவறை என்று மிக எளிமையாக அமைந்துள்ள இந்தப் பழைமையான கோயில்க் கருவறையின் சுற்றுச் சுவர்களில் மிக நுணுக்கமாக வடிக்கப்பட்ட பிட்சாடனர், பார்வதி திருக்கல்யாணம், விநாயகர், முருகப்பெருமான், காளி போன்ற சிற்பங்களைக் காணலாம். இந்த கோயிலைச் சுற்றிலும் அகழ்வாராய்ச்சியின்போது கண்டெடுக்கப்பட்ட பல பழங்காலத்து சிற்பங்கள் கருவறையைச் சுற்றி வைக்கப்பட்டுள்ளன.

அக்காலத்தில் இந்த ஊரில் வாழ்ந்த ஏகதாத்தய்யா என்ற செல்வந்தர் ஒருவர் தன் செல்வங்கள் அனைத்தையும் இந்த கோயில் கட்டுமானப் பணிக்குச் செலவழித்தார் என்றும், கோயில் முற்றுப் பெறாமல் போனபோது பரசுராமரை வேண்டிக்கொண்ட பின்னரே திருப்பணி நிறைவு பெற்றது என்றும் கூறப்படுகிறது. பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் கையில் சின் முத்திரையோடு கருவறை முன்பாகக் காணப்படும் ஏகதாத்தய்ய சிலையை தொட்டு தங்கள் தலையை விக்ரஹத்தின் தலையோடு வைத்து வணங்கி வழிபடுகின்றனர். இவ்வாறு வழிபட்டால் தலை நோய்கள் தீரும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. மேலும், அவரது கரத்தில் ரூபாய் நாணத்தை வைத்து ஆசீர்வாதமாக எடுத்துக் கொள்கின்றனர். கருவறையில் பரசுராமர் இரண்டு கரங்களுடன், ஒரு கையில் கோடரி மற்றொரு கையில் வில் ஏந்தி மேற்கு திசை நோக்கி காட்சி தருகிறார். கருவறையின் மீது கஜப்பிருஷ்ட (யானை அமர்ந்திருப்பது போன்று) அமைந்துள்ள விமானத்தில் ஏராளமான புடைப்புச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு விமானத்தில் கற்சிற்பங்களைக் காண்பது அரிது.

அத்திராலா பரசுராமர் கோயிலுக்கு சற்றுத் தொலைவில் பைரவாசலம் என்ற குன்றின் மீது காமாட்சி சமேத திரேதேஸ்வரர் கோயில் கோபுரம், கொடிமரம், முன் மண்டபம், கருவறையோடு அமைந்துள்ளது. திரேதாயுகத்தில் இங்கு வாழ்ந்த திரேதாசுரன் என்ற அரக்கன் முனிவர்களையும் மக்களையும் துன்புறுத்தியபோது, நாரதரின் தலைமையில் முனிவர்கள் ஒரு யாகம் செய்ய, அந்த யாக குண்டத்திலிருந்து ஒளிப்பிழம்பாக சிவபெருமான் தோன்றி அசுரனை வதம் செய்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற இந்த குன்று திரேதாசலம் என்றும் சிவபெருமான் திரேதாசலேஸ்வரர் என்றும் குறிப்பிடப்படுகிறார்.

இக்கோயிலில் ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் மஹாசிவராத்திரி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். சிவராத்திரி நாளன்று அருகில் குன்றின் மீதுள்ள தீபஸ்தம்பத்தில் தீப ஜோதி ஏற்றப்படுகிறது. தேவகிரி யாதவராஜு மற்றும் பொத்தப்பி மன்னன் ஸ்ரீகண்ட சோழன் ஆகியோர் இந்த கோயிலுக்கு நிபந்தங்கள் வழங்கியிருப்பதாகக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. அருகில் மஹாவிஷ்ணு கதாதரேஸ்வரர் என்ற திருநாமத்தில் எழுந்தருளியிருக்கும் அழகிய சிறிய கோயில் உள்ளது. மிகவும் சிதிலமடைந்த இந்த இரண்டு கோயில்களும் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. அத்திராலாவிலிருந்து 2 கி.மீ. தொலைவில், தட்சப்பிரஜாபதி யாகம் செய்த இடம் ஒன்றை பக்தர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் பரசுராமர் கோயிலுக்கும் இதன் அருகில் உள்ள திரேதேஸ்வரர் மற்றும் கதாதரர் கோயில்களுக்கும் ஏராளமான பக்தர்கள் விஜயம் செய்கின்றனர். அமைவிடம்: கடப்பாவிலிருந்து 55 கி.மீ., ராஜம் பேட்டையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
 
  தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
 
 
 
 
 
 
 
 
Copyright 2015 www.dinamalar.com. All rights reserved.