தினமலர் முதல் பக்கம்
| Get Font |  RSS Feed
 
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
 
 
 

முதல் பக்கம் > வரவிருக்கும் பண்டிகை > ஓணம் பண்டிகை
ஓணம் பண்டிகை
ஓணம் பண்டிகையில் மிகவும் பிரசித்தி பெற்றது பூக்கோலம். தும்பை, காக்கப்பூ, தேச்சிப்பூ, முக்குட்டி, செம்பருத்தி, கொங்கினிப்பூ, அனுமன் கிரீடம், சேதிப்பூ ஆகியவற்றால் கோலத்தை அலங்கரிப்பர். கேரள மக்கள் மகாபலி மன்னரை வரவேற்கும் விதத்தில், வாசலில் பூக்கோலம் வரைகின்றனர். நறுமணம் கமழும் பூக்களைப் போல, உள்ளத்திலும் இல்லத்திலும் பக்திமணம் கமழ வேண்டும் என்பதும் இதன் நோக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் பூக்கோலம் கலையுணர்வை வெளிப்படுத்தும். தும்பைப் பூவிற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அளவில் மிகச் சிறிய இது சிவனுக்கு உரியது. லட்சுமி கடாட்சத்திற்காகவும் பூக்கோலம் இடுவதுண்டு. கேரளாவின் பண்பாட்டுச் சின்னமாக பூக்கோலம் திகழ்கிறது.

அறுவடைத்திருநாள்: கேரளாவின் பெரிய பண்டிகை ஓணம். ஆவணி மாதம் அஸ்தநட்சத்திரம் தொடங்கி பத்துநாட்கள் கொண்டாடப்படும். பெருமாள் வாமன அவதாரம் எடுத்து மகாபலி மன்னனை ஆட்கொண்டதை நினைவுபடுத்தும் வகையில், விழா நடக்கிறது. ஒரு காலத்தில் இதை அறுவடைத் திருநாளாக கொண்டாடினர். தமிழில் முதல் மாதமான சித்திரை போல, சிங்கமாதம் என்னும் ஆவணியே மலையாளத்தின் முதல் மாதம். இதனால், இதை புத்தாண்டு விழாவாகவும் கொண்டாடுகின்றனர். சங்ககாலத்தில் இருந்தே இவ்விழா நடந்ததற்கான ஆதாரம் உண்டு. தமிழகத்தில் மதுரையில் இவ்விழா கொண்டாடப்பட்டதாகவும், அந்நாளில் யானைச்சண்டைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தகவல் உண்டு. 8ம் நூற்றாண்டில் மன்னராக இருந்த குலசேகர ஆழ்வார் காலத்தில் ஓணம் நடந்ததை அறியமுடிகிறது. விழாவின் போது ஓணக்கொடி என்னும் புத்தாடையை ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வர்.

மன்னருக்கு வரவேற்பு: மகாபலி மன்னர் மலைநாடாக விளங்கிய கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். அவரது ஆட்சி செழிப்பாக இருந்தது. தானம், தர்மங்கள் செய்வதில் சிறந்து விளங்கினார். அவரது ஆட்சி போல், இன்றும் தங்கள் மண் செழிப்புடன் திகழ வேண்டும் என்ற கருத்தில், மகாபலியை நினைவு கூர்ந்து, அவரை மீண்டும் வரவேற்கும் வகையில் ஓணம் திருவிழா கொண்டாடப்படுகிறது.

கண்கவரும் யானை பட்டாளம்: தெருவில் ஒரு யானை வந்தாலே குழந்தைகள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பர். கேரளாவில் ஓணத்திருவிழாவில் யானைப்பட்டாளத்தையே கண்டு ரசிக்கலாம். அவற்றின் நெற்றியை தங்கத்தட்டினாலான முகப்படாமினால் அழகுபடுத்தி இருப்பர். பாரம்பரியம் மிக்க பட்டாடைகள், ஒயிட்மெட்டல், வெள்ளியால் செய்யப்பட்ட குடைகள், பட்டுக்கயிறு, பிரத்யேக அணிகலன்கள், உடலில் வரையப்பட்டிருக்கும் அலங்காரம் என கலைநயத்துடன் யானைகள் அணிவகுத்துச் செல்வது தனியழகு. இங்கு நடக்கும் மரத் தொழிலுக்கு யானைகள் மிகவும் உதவுகின்றன. மேலும், இவை விநாயகரின் அம்சம் என்பதால் தெய்வீகமானவை. எனவே, அவற்றிற்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் ஊர்வலம் நடத்துகின்றனர்.

மண்ணுக்கும் விண்ணுக்கும்: மகாபலி சக்கரவர்த்தி அஸ்வமேத யாகம் செய்ய தேர்ந்தெடுத்த இடம்  நர்மதை நதிக்கரை. நர்மதை சாதாரண நதியல்ல. நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும், நர்மதையை இதுவரை பார்க்காதவர்களாக இருந்தாலும் பரவாயில்லை...அந்த நதியை மனதார நினைத்தாலே போதும். பெரிய புண்ணியம் கிடைக்கும். பாம்பு, தேள் முதலான  விஷப்பூச்சிகள் இந்த நதியை நினைப்பவர்களை அண்டாது. நர்மதையை தினமும் வணங்க வேண்டும் என்று சாஸ்திரங்களும் சொல்கின்றன. அப்படிப்பட்ட புண்ணிய நதிக்கரையில் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது யாகம். சுக்ராச்சாரியார் போன்ற சிறப்பு அழைப்பாளர்கள் அங்கே  அமர்ந்திருக்கின்றனர். அப்போது, குறள் போன்ற குறுகிய வடிவில், மகாதேஜஸ்வியாக வருகிறார் ஒரு அந்தணர். அவர் வேறு யாருமல்ல! சாட்சாத் மகாவிஷ்ணுவே தான்! மகாபலி அவரை வரவேற்றான். யாகம் நடக்கும் இந்த  நல்வேளையில் வரும் தங்களை வரவேற்கிறேன். தாங்கள் யார் என நான் அறிந்து கொள்ளலாமா? என கேட்கிறான் அவன்.

நானா...நான் அபூர்வமான வன். இதற்கு முன் என்னை நீ பார்த்திருக்க முடியாது, மகாவிஷ்ணு துடுக்குத்தனமாய் பதிலளிக்கிறார்.  இப்போது பார்க்கிறேனே!  தங்கள் ஊர் எது? என கேட்கிறான் மகாபலி. எந்த ஊர் என்றவனே! எனக்கென்று எந்த ஊரும் இல்லை. பிரம்மா ஸ்தாபித்த எல்லா ஊரும் எனது ஊர் தான்,... அடுத்து வந்த பதிலிலும் அதே  துடுக்குத்தனம். சரி ஐயா! தங்களின்  பெற்றோர் எங்கே இருக்கிறார்கள்? அவர்களைப் பற்றியாவது நான் தெரிந்து கொள்ளலாம்  இல்லையா? இதற்கு, குள்ளவடிவான  மகாவிஷ்ணுவிடமிருந்து  பதில் இல்லை. கையை மட்டும் விரிக்கிறார். ஓ...இவர் பெற்றவர்களையும் இழந்து விட்டார் போலும்!

பாவம்... அநாதையாய் தவிக்கும் அந்தணர். ஒரு அடி இடம் கூட தனக்கென சொந்தமாக  இல்லாதவர்... மகாபலியின் அசுர மனதுக்குள் இப்படித்தான் இரக்க எண்ணம் ஓடியது.  அதே நேரம் கர்வமும்  தலை தூக்குகிறது. யாக வேளையில், தானம் பெறுவதற்கு தகுதியான  ஆள் வேண்டும். ஆம்...இவர் பரம ஏழை...ஏதுமே இல்லாதவர். அநாதையும் கூட. இவருக்கு  தர்மம் செய்தால், யாகத்தின் நோக்கம் நிறைவேறும்...  இப்படி எண்ணியவாறே,  வெகு தோரணையுடன்,  சரி...இப்போது உமக்கு என்ன வேண்டும், கேளும், கேட்டதைத் தருவேன், என்கிறான் மகாபலி. குறுகிப் போய் நின்ற விஷ்ணு, தன் சின்னஞ்சிறு காலை தூக்கி, இந்த காலடிக்கு மூன்றடி நிலம் தந்தால் போதும், கேட்டு விட்டு அமைதியாகி விட்டார். மகாபலிக்கு குழப்பம். சின்ன காலடியால் மூன்றடி நிலம்...இவர் யாராக இருக்கும்! இந்த சிந்தனை மகாபலிக்கு ஓடியது போல, நமக்குள்ளும் ஓடும். பகவான் விஷ்ணு, அநாதியானவர். அவருக்கு தாய் தந்தை ஆதி அந்தம் ஏதுமில்லை என்பது உண்மை. ஆனால், பூலோகத்தில் அவதாரம் செய்யும் போது மட்டும் தாய் தந்தையை அவர் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. அவர் வாமனராய் பூமிக்கு வந்த போதும் அவ்வாறே செய்தார்.  ஒரு காலத்தில், பிருச்னி என்ற பெண்ணையும், சுதபஸ் என்பவரையும் படைத்த பிரம்மா,  நீங்கள் போய்  உலகத்தை விருத்தி செய்யுங்கள், என்று சொல்லி அனுப்பினார். அவர்களோ, அதைச் செய்யாமல், விஷ்ணுவை எண்ணி தியானம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

பத்தாயிரம் ஆண்டுகள் தவம் சென்றது. மகாவிஷ்ணு மகிழ்ச்சியுடன் கருடசேவை தந்து, உங்களுக்கு என்ன வரம் வேண்டும்? என்றார். பகவானே! நீயே எங்கள் பிள்ளையாக வேண்டும்  என்றனர் இருவரும். விஷ்ணுவும் அதை ஏற்று  பிருச்னி கர்பன் என்ற  பெயருடன் அவர்களின் பிள்ளையானார். அடுத்து வந்த மற்றொரு பிறவியில் அதிதி என்ற பெயரில் பிருச்னியும், கஷ்யபர் என்ற பெயரில் சுதபஸும் பிறந்தனர். அவர்களுக்கு வாமனன் என்ற பெயரில் அவதாரம் செய்தார் பரமாத்மா.  அதன்பிறகு வந்த மற்றொரு பிறவியில் இருவரும் தேவகி, வசுதேவராகப் பிறந்து கண்ணனைப் பெற்றெடுத்தனர்.  ஒருவனுக்கு ஒருத்தி என்பது ராமாவதாரத்தில் சொல்லப்பட்ட முக்கியக் கருத்து. இங்கே,  எத்தனை பிறவிகள் மாறினாலும் பிருச்னி-சுதபஸ் தம்பதிகள் ஒன்றாகவே பிறந்து கணவன், மனைவி ஆனார்கள். அந்யோன்யமாய் இருக்கும் தம்பதிகளுக்கு மட்டுமே இத்தகைய பாக்கியம் கிடைக்கும். வீட்டுக்குள் எந்நேரமும் சண்டை போட்டுக் கொண்டு ஒற்றுமையின்றி இருப்பவர்கள் அடுத்த பிறவியில் வேறொரு வருக்கு தான் வாழ்க்கைப்பட நேரிடும் என்பது வாமனர் வரலாறு மூலம் நாம் அறியும் செய்தி. இந்தக் கதையெல்லாம் மகாபலிக்கு புரியவில்லை. மூன்றடி நிலம் கேட்கிறீரே! இது போதுமா உமக்கு! என்று இளக்காரமாக கேட்டான். இருந்தாலும் தருவதற்கு சம்மதித்து விட்டான். தன் மனைவி விந்த்யாவளியை அழைத்து, தாரை வார்த்து கொடுக்க தயாராகிறான்.

தானம் செய்யும் போது, மனைவியுடன் இணைந்து செய்தால் தான் பலனுண்டு.  மகாபலியின் குரு சுக்ராச்சாரியாருக்கு வந்திருப்பது யாரென்பது புரிந்து விட்டது. அவர் மகாபலியைத் தடுத்தார். அவனிடம் உள்ள எல்லா சொத்துகளுமே சுக்ராச்சாரியார் ஆலோசனையின் பேரில் சம்பாதிக்கப்பட்டவை. அந்த உரிமையுடன், மகாபலி...கொடுக்காதே என தடுக்கிறார். அவன் கேட்கவில்லை. அடேய்! குரு வார்த்தையை நிந்தித்த உனக்கு ஒன்றுமே இல்லாமல் போகட்டும், என்று சாபம் கொடுத்து விட்டார்.  பகவான் எதிர்பார்த்ததும் இந்த சாபத்தைத் தான்! மகாபலி அசுரன். அவன் நினைத்திருந்தால், கொடுத்த வாக்கை காப்பாற்றி இருக்க வேண்டாம். உலகமும் அவனைத் தூற்றி இருக்காது. ஏனெனில், அசுரபுத்தி உள்ளவன் அப்படித்தானே செய்வான் என்று சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கும்! ஆனால், அந்த அசுரனுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நல்ல புத்தி எப்படி வந்தது  என்றால், அவனது தாத்தா பிரகலாதனால் வந்தது! இரணியன் விஷ்ணுவை தூஷித்தவன். அவனது பிள்ளை பிரகலாதனோ அவரை நரசிம்மராகத் தரிசித்த பாக்கியவான். அவரது  திருவடியால் தீட்சை பெற்றவன். அப்போது, பிரகலாதன் கேட்கிறான். சுவாமி! என் தந்தையோடு போகட்டும்! இனி என் வம்சத்தில் வருபவர்களை நீ அழிக்கக்கூடாது, என்று. விஷ்ணுவும் சம்மதித்து விட்டார். பிரகலாதனின் மகன் விரோசனன். அவனது பிள்ளை மகாபலி. அதனால் தான் குள்ளமாய் வந்தவர், விக்ரமனாய் வளர்ந்து இரண்டடியால் உலகளந்து, மூன்றாம் அடியால், மகாபலியை பாதாள லோகத்துக்கு உயிருடன் அனுப்பி வைத்தார்.  வாமன அவதாரம் யாசிக்க வந்த அவதாரம். பகவான் நம்மிடம் சோறு கொடு, கறி கொடு, பால் பாயாசம்  நைவேத்யம் போடு என்றெல்லாம் கேட்கவில்லை. உன்னையே கொடு என்று யாசிக்கிறான். ஆம்...வாமனனாய் வந்து, ஓங்கி உலகளந்த அந்த உத்தமனிடம் நம்மையே யாசகப்பொருளாய் ஒப்படைப்போம். அவனது திருவடி நிழலில் வாழும் பேறு பெறுவோம்.
 
  தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
 
 
 
 
 
 
 
 
Copyright 2020 www.dinamalar.com. All rights reserved.