தினமலர் முதல் பக்கம் iPaper | RSS Feed
 
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
 
 
 

முதல் பக்கம் > வரவிருக்கும் பண்டிகை > கிருஷ்ண ஜெயந்தி
கிருஷ்ண ஜெயந்தி
கண்ணன் பிறந்த ஆவணி மாத ரோகிணி நட்சத்திரம், மற்றும் பிறந்த திதியான அஷ்டமியைக் கணக்கிட்டு கிருஷ்ணர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இவ் விழாவை வட நாட்டினர் சிறப்பாக கொண்டாடுகின்றனர் அன்று கண்ணன் லீலைகளை சித்தரிக்கும் பொம்மைகளை வைத்து வீடுகளில் கொலு பிரதானமாக இடம்பெறும்.

விரதமுறை: கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், வெண்ணெய், அவல், பழங்கள் மற்றும் வெண்ணெய் சர்க்கரை கலந்த நவநீதம் என்னும் கலவையை நிவேதனமாகப் படைக்க வேண்டும் வெல்லச்சீடை, உப்பு சீடை, முறுக்கு, லட்டு, மைசூர்பாகு, தேன்குழல், மனோகரம், திரட்டுப்பால், பர்பி போன்றவற்றையும் படைக்கலாம்  இந்நாளில் தன்னை அழைக்கும் பக்தர்களின் வீட்டிற்கு கண்ணன் வருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை எனவே, அன்று வீட்டைச் சுத்தப்படுத்தி, அலங்கரித்து, வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரையில், சின்னக்கண்ணன் நடந்து வருவது போல், அவனது பாதச்சுவடுகளை மாக்கோலமிட்டு வரவேற்கலாம் கண்ணனை பற்றிய துதிப்பாடல் பாடுவது, தோத்திர பாடல்கள் பாட வேண்டும்.

பலன்: கிருஷ்ண ஜெயந்தியன்று பிள்ளை பேறு இல்லாதவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம ஸ்காந்தம் படித்து பாராயணம் செய்தால், அழகான ஆண் குழந்தை பிறக்கும் என்னும் நம்பிக்கை இன்றும் உள்ளது.

வருகிறான் கண்ணன்: கண்ணபிரான் கருணையே வடிவமானவர். தனக்கொரு அவப்பெயர் வந்தாலும் பரவாயில்லை. தன் பக்தர்களை அவர் கைவிட்டதில்லை. துரியோதனன் தன் தளபதியாக பீஷ்மரை நியமித்திருந்தான். குரு÷க்ஷத்திர யுத்தத்தில் அவர் பாண்டவர்களுக்கு சாதகமாகச் செயல் படுகிறாரோ என்று சந்தேகப்பட்டு, மனம் அவர்களிடமும் உடல் இங்கேயும் இருக்கிறதோ என்று கோபப்பட்டான். பீஷ்மரும் கோபமடைந்து, இன்று நான் அர்ஜுனனைப் படுத்தும் பாட்டில்,  ஆயுதம் ஏந்தமாட்டேன் என்று சபதம் செய்துள்ள கண்ணனைக் கூட ஆயுதம் எடுக்க வைக்கிறேன் பார், என்றார். அதன்படி கடும் போர் புரிந்து அர்ஜுனனனை மயக்கமடையச் செய்தார். கோபமடைந்த கண்ணன், சக்கரம் ஏந்தி பீஷ்மரை நோக்கிப் பாய்ந்தார். கிருஷ்ண பக்தரான பீஷ்மர், சக்கரத்துடன் வரும் பரமாத்மாவை வணங்கி, தன் தலை கொடுக்க தயாராக நின்றார். அப்போது அர்ஜுனன் கண்விழித்து, கண்ணா! இது தகுமா! ஆயுதம் எடுக்கமாட்டேன் என்ற சபதத்தை மீறிவிட்டாயே. இது அவமானமல்லவா? என்றான். அர்ஜுனா! எனக்கு வரும் அவமானம் முக்கியமல்ல! என் பக்தனின் உறுதிமொழி காக்கப்பட வேண்டும். பீஷ்மர் துரியோதனனிடம் இன்று என்னை ஆயுதம் எடுக்க வைப்பதாக உறுதியளித்தார். அதைக் காப்பாற்றவே அப்படி செய்தேன், என்றார். பக்தனுக்காக தன்னையே தாழ்த்திக் கொள்ளும் கருணைக் கடல் அவர்.

பகவத்கீதையின் பொருள்: பகவத்கீதையை பகவத் கீதை என்று பிரிப்பர்.  பகவத் என்றால் கடவுள். கீதை என்பது கீதம். ஆம்..இதற்கு கடவுளின் பாட்டு எனப் பொருள். அர்ஜூனனுக்கு குரு÷க்ஷத்ர களத்தில், தர்மம் தவறி நடந்த தன்  உறவினர்களை பாசம் காரணமாகக் கொல்லத் தயங்கிய நேரத்தில், பகவான் கிருஷ்ணர் இனிமையாக இசைத்த ஸ்லோகங்களே பகவத்கீதை. குரு÷க்ஷத்திர களத்தில் அர்ஜுனன் பாசம் என்ற சிக்கலில் விழுந்து தவித்தது போல, இன்று வரை ஒவ்வொரு மனிதனும் மனைவி, குழந்தை, தாய், தந்தை, அக்கா, தம்பி, அண்ணன், நண்பன்...இன்னும் எத்தனையோ உறவு முறைகளில் சிக்கித் தவிக்கிறார்கள். இவர்களையும் அந்த பந்தத்தில் இருந்து விடுவித்து, தாமரை இலை தண்ணீர் போல வாழ வைக்க உதவும் கருத்துக்களைத் தருவது கீதை. இதன் மூலம் மனிதன் துன்பம் நீங்கி இறைவன் மட்டுமே உண்மை என்று உணருகிறான்.

அவரே மிகுந்த பலசாலி: பகவான் கிருஷ்ணர் நான் மட்டுமே உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு லீலையை நிகழ்த்தினார். கண்ணனுக்கு ஏழு வயது நடந்தது. அவரது தாய்மாமன் கம்சன் அவரைக் கொல்ல பல வழிகளிலும் முயற்சித்தான். கிருஷ்ணரைப் பிடிக்கப் பாய்வான். ஆனால், அவர் வேறு எங்காவது போய் நிற்பார். அங்கே ஓடினால், பழைய இடத்திற்கே வந்து விடுவார். சிரமப்பட்டு பிடிக்க அருகில் நெருங்கினால் பத்து பதினைந்து இடங்களில் நின்று சிரிப்பார். அதில் யார் உண்மைக் கண்ணன் என தெரியாமல் கம்சன் விழிப்பான். ஒரு கட்டத்தில், நீ மாயம் செய்து என்னிடம் இருந்து தப்பிக்கிறாய். என் பலத்தை மீறி தப்பிக்க முடியுமா? என்று ஆவேசமாகக் கேட் டான். குழந்தைக் கண்ணன் கம்சனைக் கீழே தள்ளினார். கம்சன் மல்லாக்க விழுந்தான். அவனது மார்பின் மேல் கண்ணன் ஏறி அமர்ந்தார். கம்சனால் அந்த எடையைத் தாங்கவே முடியவில்லை. ஐயோ! என்ன இது! குழந்தையாக இருந்து இப்படி கனமாக இருக்கிறாயே! என்னை விட்டுவிடு எனக் கதறினான். மாமா! இப்போது புரிகிறதா! நான் செய்தது மாயமல்ல என்று! என் தாய், தந்தையர், எனக்கு முன் பிறந்தோரை இம்சை செய்த நீ அழிந்து போ, என்று சொல்லி கொன்றார். பகவான் கிருஷ்ணர் மட்டுமே உலகில் மிகுந்த பலசாலி. அவரை மீறி எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களும் ஏதும் செய்ய முடியாது.

குழந்தையிடம் ஆசி பெறுவோம்: நம் வீட்டு குழந்தைகளுக்கு பிறந்தநாள் என்றால், பெரியவர் களெல்லாம் இணைந்து வாழ்த்துச் சொல்வோம். ஆனால், இந்தச் சின்னக்கண்ணன் நமக்கெல்லாம் ஆசி தருபவன்.  ஏனெனில், அவனே இந்த உலகில் எல்லாமாக இருக்கிறான். நாம் அவனை உறவினனாக பார்க்கலாம். ஆம்...தாயாய், தந்தையாய், குருவாய், குழந்தையாய், நண்பனாய், அரசனாய், சீடனாய், மந்திரியாய்,  நல்லாசிரியனாய், தெய்வமாய்,  சேவகனாய்...எப்படி வேண்டுமானாலும் அவனைக் காணும் உரிமையை அவன் நமக்கு அளித்துள் ளான். அவனது அவதார நன்னாளில்,  மகாகவி பாரதியார் பாடிய கண்ணன் பிறப்பு பாடலை நாமெல்லாம் பாடி மகிழ்வோமா!

கண்ணன் பிறந்தான் எங்கள்
கண்ணன்பிறந்தான் இந்தக்
காற்றதை எட்டுத்திசையிலும் கூறிடும்
திண்ணமுடையான் மணி
வண்ணமுடையான் உயர்
தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்
பண்ணை இசைப்பீர் நெஞ்சிற்
புண்ணை யொழிப்பீர் இந்தப்
பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை
எண்ணிடைக் கொள்வீர் நன்கு
கண்ணை விழிப்பீர் இனி
ஏதும் குறைவில்லை; வேதம் துணையுண்டு.
 
  தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
 
 
 
 
 
 
 
 
Copyright 2022 www.dinamalar.com. All rights reserved.