SS தண்டபாணி மூர்த்தி பதிகம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> தண்டபாணி மூர்த்தி பதிகம்
தண்டபாணி மூர்த்தி பதிகம்
தண்டபாணி மூர்த்தி பதிகம்

(சிரவையாதீனம் இரண்டாம் குருமகாசந்நிதானம்
தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அருளியது)

காப்பு வெண்பா

சீல நிறைவார் சிரவணந கர்க் கணிசை
கோல தண்ட பாணிக் குருபரன்றோண் - மேலமையச்
சூட்டும் பதிகத் துணையாகுந் தொண்டர்திருத்
தாட்டுணையிற் றோய்மகரந் தம்.

நூல் - எண்சீர் விருத்தங்கள்

1. வரம்பொலிபுன் முறுவலணிச் செவ்வாயுங் கருணை
மழைவிழியுந் திகழ்காமர் வதனமுஞ்செங் கடம்பா
ருரம்பொலிவை வேற்படையுந் தண்டமுடன் றொடைமீ
துற்றதிருக் கரங்களும்பண் பெற்றவரு மறையின்
சிரம்பொலிமோ லியிலிசைபொற் பங்கயத்தாள் களுமென்
சிந்தைவிழிப் பாலமைந்து திகழவைத்தாண் டருள்வாய்
குரம்பொலிமா விசைமறுகார் சிரவைநகர்க் கோயில்
கொண்டதண்ட பாணியருட் குமரகுரு பரனே.

2. அவிவிருந்தா ரமரர்கட்கு மாயுள்வரம் பொழியு
மவிவிருந்த தெனக்கலைக ளளவுணர்த்து மென்னிற்
புவிவிருந்தா மாக்கைபெறும் போக்கையொரு பொருளாப்
புகன்றிடவிங் கென்னுளதுன் புகழ்பரந்து சிறந்த
கவிவிருந்தா னந்தமதைச் செவிமதகுட் செலுத்திக்
கருத்தமைக்குந் தவஞானக் கண்ணியற்கண் ணியருட்
குவிவிருந்தாங் காட்சிநல்காய் சிரவைநகர்க் கோயில்
கொண்டதண்ட பாணியருட் குமரகுரு பரனே.

3. தத்தமது கன்மமுற்றும் விளைவாய்ப்பின் பயனைத்
தந்திடுதன் முக்காலுஞ் சத்தியமென் றுணர்ந்தும்
பித்தமதா லோமாயா மயக்காலோ கன்மப்
பிணிப்பாலோ வெதனாலோ பெரும்பாவம் புரியச்
சித்தமமைந் தனரவருட் சேர்ந்தயரா துண்மைச்
சிறப்புறுகௌ மாரர்தம்மு ளுறப்புரிவாய் வாசக்
கொத்தமர்பூங் கடம்புரத்தாய் சிரவைநகர்க் கோயில்
கொண்டதண்ட பாணியருட் குமரகுரு பரனே.

4. ஆலமெலாந் திரண்டுருண்டோர் மானிடமாய்ப் புவிமீ
தடைந்ததென மயக்கெவர்க்கு மளித்துமக மாயா
சாலமெலாம் புரிந்துகொடும் பாவியென நாமந்
தாங்கிமடிந் திடத்துணிவார் தம்முறவால் வீணே
காலமெலாங் கழித்தயர்ந்துன் கழற்கபய மானேன்
கடைக்கணருள் சுரந்தருண்மெய்க்கௌமாரர் பாற்றோய்
கோலமெலாங் கொடுத்தருள்வாய் சிரவைநகர்க் கோயில்
கொண்டதண்ட பாணியருட் குமரகுரு பரனே.

5. இச்சையற்றோ ரேபெரியோ ரென்றுணர்ந்தும் புவிமீ
தெவைகளையு மென்னுடைய தென்றிடவே திரிந்து
மிச்சைமனப் பேயாட்டச் சதமெனவே நம்பும்
வெண்மையறி வுடையேனுள் ளுண்மையுணர் வடையப்
பச்சைமயிற் பரிமிசையாங் காட்சியளித் துன்பொற்
பாதமலரென் சிரத்தின் மீதமைத்தாண்ட ருள்வாய்
கொச்சைநக ரென்னவணிச் சிரவைநகர்க் கோயில்
கொண்டதண்ட பாணியருட் குமரகுரு பரனே.

6. நிணம்பொருந்துந் தூலவுட லிங்கிதுகொண் டெய்தும்
நித்தியத்தோ டனித்தியந்தேர் நினைவமையேன் றுத்திப்
பணம் பொருந்து மரவினைவாய்க் கௌவிமிதித் தகவும்
பச்சைமயில் பெற்றமைமெய்ப் பண்பறியே னதன்மேல்
மணம்பொருந்தி யவிர்தருநின் றாட்டுணைகன் டதனுள்
வயங்கிடுநின் மெஞ்ஞான மயமறிந்துய் குவனோ
குணம்பொருந்து மன்பர்தொழச் சிரவைநகர்க் கோயில்
கொண்டதண்ட பாணியருட் குமரகுரு பரனே.

7. கீரனைத்துன் புறப்பிடித்த பேய்வரையி னோடுங்
கெடவடிவேற் படைவிடுத்த கிருபைமகோ ததியே
பாரனைத்து மெனையலைக்கு மலமாயா கன்மப்
பகையொழித்துத் திருநெடுமால் பண்ணவர்கட் கோதுஞ்
சீரனைத்தும் பலபடவே விதந்துவியந் தேத்திச்
சித்தாடல் புரிந்தாவித் திரள்களின்றுன் பொழித்துட்
கோரனைத்துங் கொடுக்கவருள் சிரவைநகர்க் கோயில்
கொண்டதண்ட பாணியருட் குமரகுரு பரனே.

8. மானந்த விழிமாதர் தங்காதன் மோக
வாரிகடந் துற்ற தமிழ் வாரிதியப் பாலா
ரானந்தக் கடலாடி யான்றானென் றிடல்போ
மருணகிரி நாதன்விழி யருந்தும்விருந் தாகும்
வானந்த வருட்சோதி மயத்திருத்தாண் முடிமேல்
வைப்பாய் நாயேனெய்ப்பில் வைப்பாய்வாழ் வுறவே
கூனந்தன் மதிச்சிகரிச் சிரவைநகர்க் கோயில்
கொண்டதண்ட பாணியருட் குமரகுரு பரனே.

9. ஆன்மாவிற் சிறந்துளதா முரிமையுளத் துணர்ந்துள்
ளணிபொலிநாட் டமைந்து றுந்தம் மவயச்சீ ருணரார்
கான்மாவிற் பற்பலுயிர் கொன்றுநிண மென்பு
கறித்துழல்வார்த் திருத்துசித்திக் கணமெனக்கீந் தருள்வாய்
தேன்மாவிற் கலந்திடுமென் னம்மைகலந் தின்பந்
திளைக்குமணி மார்பிடத்திற் சிறக்குமருணை கொளெங்
கோன்மாவிற் பனத்துதியாய் சிரவைநகர்க் கோயில்
கொண்டதண்ட பாணியருட் குமரகுரு பரனே.

10. ஞாலப்போக் கினிலலைந்து பொன்றேடித் தருக்கு
நரர்பொருளா மதியாதே நகைத்திகழும் படியோர்
காலப்போக் கினிலுனது பணிபுரியுங் தொண்டர்
கணங்களிப்ப வொருதாய்போற் காணுமட்ட சித்திச்
சீலப்போக் கினனையளித் திக்கலிகா லத்தின்
றிருக்கினைப்பொய்த் தருக்கினைப்புன் செருக்கினைமாய்த் தின்பக்
கோலப்போக் கினையருள்வாய் சிரவைநகர்க் கோயில்
கொண்டதண்ட பாணியருட் குமரகுரு பரனே.

11. வண்டாடுங் குழல்வள்ளி தெய்வானைக் கின்பார்
மணவாளா நின்றிருத்தாண் மணக்குமலை முற்றுந்
தொண்டாடுங் கௌமாரர் சூழவணைந் தன்பாற்
சுவைத்துதிப்பா மாலையினஞ் சூட்டிநின்மெய்க் கோலங்
சுண்டாடும் வரமளிக்க நினதுதிரு வுள்ளங்
கனிந்திரங்கி யருள்புரியுங் காலமெதோ திடுவாய்
கொண்டாடுந் தவர்க்கருள்வான் சிரவைநகர்க் கோயில்
கொண்டதண்ட பாணியருட் குமரகுரு பரனே.

12. மலவிருளை நீக்கவருண் மலயமுனி கலையாய்
வந்தவிரா மானந்த வள்ளலென வுள்ளங்
குலவியிசை யணிபொருந்துஞ் சிரவைநகர்க் கோயில்
கொண்டதண்ட பாணியருட் குமரகுரு பரனை
யிலவிதழார் கலவிமய லொழிந்தகவு மார
ரிணைப்பாதத் துகள்கொள்கந்த சாமிதுதித் தணிபா
நிலவியவா யுடையவர்சே யுடையதிருப் பாத
நீழலிலெந் நாளுமின்பாய் வாழவல்லார் நிசமே.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar