| இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் கிரிவலம் நடைபெறுகிறது. தல விருட்சம் வன்னிமரம் 1700 ஆண்டுகள் பழமையானது. இத்தலத்தில் பிறந்தால், வாழ்ந்தால், வழிபட்டால், நினைத்தால், இறந்தால் என இந்த ஐந்தில் ஏதேனும் ஒன்று நடந்தால் கூட முக்தி நிச்சயம்.
முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் ராஜகோபுரத்தை அடுத்து இடது பக்கம் உள்ள ஆழத்து விநாயகர் சன்னதி விநாயகரின் இரண்டாவது படை வீடாகும். காளஹஸ்தியில் உள்ளது போல, இவர் 18 படியிறங்கி சென்று தரிசிக்கும்படி அமர்ந்துள்ளார். இந்த ஆழத்து விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவர். ஒருமுறை உலகம் அழிந்த போது இந்தத்தலம் மட்டும் அழியாமல் இருந்தது என்ற புராணச் சிறப்பைப் பெற்றது. சிவத்தலங்கள் அனைத்திலும் 1008 தலங்கள் சிறப்பானதாக கூறப்படும். இதில் நான்கு தலங்கள் முக்கியமானவை. அதில் விருத்தாசலமும் ஒன்று.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 220 வது தேவாரத்தலம் ஆகும்.
. | |
|