Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கர்வம் அடங்கியது!
 
பக்தி கதைகள்
கர்வம் அடங்கியது!

பிரம்மனின் மகனான தட்சன் தன் தந்தையிடம், தந்தையே! சர்வலோகங்களையும் ஆட்டிப்படைப்பது யார்? என்றான். ஏன் மகனே இதைக் கேட்கிறாய்?. உலகைப் படைக்கும் வல்லவரே! உம்மால் இவ்வுலகம் சிருஷ்டிக்கப்படுகிறது. உலகின் ஒவ்வொரு மனிதனின் தலையெழுத்தையும் நிர்ணயிப்பவர் நீர். இதனால், உமது புகழ் சொல்லவொண்ணாதாக இருக்கிறது. அதை விட உயர்ந்த புகழை எட்ட நான் விரும்புகிறேன். அதற்கு ஓர் உபாயம் சொல்ல வேண்டும், என்றான் தட்சன். அன்புமகனே! உலகம் பராசக்தியால் இயங்குகிறது. பராசக்திக்குள் சர்வமும் அடக்கம். அவளே இச்சக்தியை எனக்கு தந்தவள். விஷ்ணு, சிவன் ஆகிய தெய்வங்களுக்கும் அவளே சக்தியை வழங்குகிறாள். அவளின்றி இவ்வுலகம் நடக்காது. அவள் இப்போது சிவனின் மனைவியாக இருக்கிறாள் என்றார் பிரம்மா. அப்படியா! அப்படியானால் அந்த சக்தியை விட உயர எனக்கு தாங்கள் வரம் தர வேண்டும்,என்றான் தட்சன் கர்வத்துடன். அது எப்படி மகனே சாத்தியம். மும்மூர்த்திகளான நாங்களே, அவளுக்கு கட்டுப்பட்டிருக்கும் போது, இது எங்ஙனம் சாத்தியம்? என்ற பிரம்மனிடம், தந்தையே! இது ஒன்றும் முடியாததல்ல. தங்களுக்கு படைக்கும் ஆற்றல் இருக்கிறது. அந்த ஈஸ்வரியை எனக்கு மகளாக பிறக்கச் செய்து விட்டால், அதன் பின் அவள் எனக்கு கட்டுப்பட்டவள் தானே! தந்தைக்கு மகள் கட்டுப்பட்டாக வேண்டும் என்பது தானே உலக நியதி, என்றான் தட்சன் புத்திசாலித்தனமாக. மகனின் அறியாமையைக் கண்ட பிரம்மன், அவனுக்கு புத்தி புகட்டும் விதத்தில், சரி...உன் விருப்பம் நிறைவேறும், என்றார். தந்தை வாக்களித்தபடியே ஈஸ்வரி தட்சனின் மகளாகப் பிறந்தாள்.

ஈசனைத் திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக பல விரதங்களை இருந்தாள். ஈசன் மருமகனாகி விட்டால், அவரது மாமனார் என்ற முறையில், தனது அதிகாரக் கொடியை இன்னும் பறக்க விடலாம் என தட்சனும் திருமணத்திற்கு சம்மதித்தான். கோலாகலமாக திருமணம் நடந்தது. அதாவது, ஈஸ்வரனிடமிருந்து தட்சனிடம் வந்து சேர்ந்த சக்தி, மீண்டும் ஈஸ்வரனிடமே சென்று விட்டாள். ஒருமுறை தட்சன் மகளைக் காண கைலாயம் சென்றான். ஈஸ்வரனின் மாமனாரும், ஈஸ்வரியின் தகப்பனாரும் ஆன தட்சன் அல்லவா கைலாயத்துக்குள் வருகிறார். அவரை யாராவது தடுப்பார்களா? தட்சன் சர்வ கர்வ லட்சணங்களுடன் கைலாயத்துக்குள் வந்தான். நந்திதேவர் கூட விலகி வழிவிட்டார். தட்சன் மிகுந்த மகிழ்ச்சியுடனும், ஆணவத்துடனும் சிவபெருமான் வீற்றிருக்கும் இடத்திற்கு வந்தான். வாருங்கள் மாமனாரே! தங்கள் வருகையால் கைலாயம் மகிழ்ச்சி கொள்கிறது. ஊரில் தங்கள் தந்தை நலம் தானே! பிரம்மலோகத்தில் அனைவரும் ÷க்ஷமமாக இருக்கிறார்கள் அல்லவா?. தட்சனுக்கு சிவன் விசாரித்தது என்னவோ மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. இருப்பினும், தான் வரும் போது, மாமனார் என்ற வயது அந்தஸ்துக்கு மருமகன் எழுந்து நின்று மரியாதை கொடுக்கவில்லையே, என்று கோபம் ஏற்பட்டது. அவன் பதிலேதும் சொல்லவில்லை. விருட்டென எழுந்து  வெளியே சென்று விட்டான். பார்வதி தந்தையை சமாதானம் செய்தாள். அப்பா! அவர் உலகாளும் ஈசன். பிறப்பும், இறப்பும் இல்லாதவர். அவர் நம்மைப் போன்ற சாதாரண ஜென்மம் அல்லர். அவர், தங்களை எழுந்து நின்று வரவேற்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. அவரது பார்வைக்காக உலகமே ஏங்கிக்கிடக்கும் போது, தாங்களே அவரைப் பணிந்திருக்க வேண்டும், என்றாள். மகளின் போதனை தந்தையின் காதில் ஏறவில்லை. அவன் பிரம்மலோகம் போய் விட்டான். நேராக தந்தையிடம் சென்றான்.

மகன் கோபத்தில் வருகிறான் என்பதை தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்தார் பிரம்மா. அப்பா! அந்த ஈஸ்வரியே உயர்ந்தவள் என்றீர். அவள் என் மகளாகப் பிறந்தாள். ஈசனை மணம் முடித்ததால், அவர் எனக்கு மருமகன் ஆகிறார். அந்த மருமகன் எனது வயதுக்கு மரியாதை தரவில்லையே. அப்படியானால், நான் சாதாரணமாக போய் விட்டேனா? ஈஸ்வரியே அவரை இயக்குவதாக சொன்னீர்கள். இப்போது ஈஸ்வரி, அவருக்கு கட்டுப்பட்டு விட்டாளே! இனி என் அதிகாரம் அவ்வளவு தானா? கலக்கத்துடன் கேட்டான் தட்சன். மகனே! ஈஸ்வரியே என்றும் மகாசக்தி; அவள் தன் கணவனுக்கு மேலான பலம் பெற்றவளாயினும் கூட, கணவனுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற உலக வரைமுறைக்கு தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறாள். தட்சனுக்கு இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தன்னை மதிக்கத் தவறிய சிவனை, எப்படியேனும் அவமானப்படுத்துவது என முடிவு செய்தான். ஆணவம் அவனை ஆட்டிப்படைத்தது. மிகப் பெரிய யாகத்திற்கு ஏற்பாடு செய்தான். சிவனை விட உயர்ந்த அந்தஸ்து வேண்டும் என்பதே யாகத்தின் கோரிக்கை. அனைத்து தேவர்களும் யாகத்திற்கு அழைக்கப்பட்டனர். ஆனால், இறைவனும், இறைவியும் அழைக்கப்படவில்லை. அவமானப்பட்ட தாட்சாயிணி கணவரின் சொல்லையும் மீறி தந்தைக்கு புத்தி சொல்ல புகுந்த வீடு வந்தாள். அவமானப்பட்டாள்; கணவனின் சொல்லை மீறிய குற்றத்திற்காக யாக குண்டத்தில் விழுந்து மாண்டாள். சிவன் ருத்ரனாக மாறி, யாக குண்டத்தை அழித்தார்.  பின்பு தாட்சாயணியின் கருகிய உடலை எடுத்து தோளில் போட்டு, ருத்ர தாண்டவம் ஆடினார். தேவியின் உடல் பாகங்கள் 51 இடங்களில் விழுந்தன. அவை சக்தி பீடங்கள் ஆயின. தட்சனை நசுக்கி விட்டார். அவன் மறுபிறவியில் பத்மாசுரன் என்னும் அரக்கனாக பிறந்து, முருகனால் கொல்லப்பட்டு, சேவல் கொடியாகவும், மயில் வாகனமாகவும் மாறினான். அவன் கொல்லப்பட்ட இடம் திருச்செந்தூர் என்னும் தலமானது. உயர்ந்த பதவியில் இருந்தாலும், உயர்குலத்தில் பிறந்தாலும், எத்தனை வயது ஆனாலும் இறைவனுக்கு மனிதன் கட்டுப்பட்டவன் என்பது புரிகிறதா?


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar