Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வராகமாக வந்த கிருஷ்ணன்
 
பக்தி கதைகள்
வராகமாக வந்த கிருஷ்ணன்

வேதங்கள் கற்ற பண்டிதர் ஒருவர், ஆற்றைக் கடக்க முற்பட்டார். வழக்கத்திற்கு மாறாக, ஆற்றின் நடுவில் ஆழம் சற்று அதிகமாக தெரிந்தது. நடுவழியில் திரும்பவும் முடியாமல், அதே சமயம் எதிர் கரைக்கு செல்லவும் முடியாமல் தவித்தார். என்ன செய்வது? வேதங்கள் கற்றவர் அல்லவா? பளிச்சென ஒரு எண்ணம் தோன்றியது. “துறவு மேற்கொண்டால்,  அது மறுபிறவிக்குச் சமம். அந்நிலையில் துன்பம் ஒருவரை தொடர்வதில்லை என்று சாஸ்திரம் சொல்கிறதே. ஆகவே துறவு மேற்கொள்வது என்று மனதிற்குள் உறுதி கொண்டார்.

மரணம் விலகி விடும் என்ற எதிர்பார்ப்புடன், அவர் துறவு மேற்கொள்ள நீர்ப்பெருக்கு குறைந்தது. பிறகென்ன? அந்த பண்டிதர் எதிர்க்கரையை அடைந்தார். கரையேறியதும்  அவருக்கு புது பிரச்னை முளைத்தது. “துறவு ஏற்பதாகத் தீர்மானித்து, உயிர் பிழைத்து விட்டோம். இதை எப்படி மனைவியிடம் சொல்வது?” என்று சிந்தித்தபடி வீடு திரும்பினார். ஆனால்  வீட்டை அடையும் முன்பே அதற்கான ஏற்பாட்டை தெய்வமே செய்து விட்டது.  அவரைக் கண்ட மனைவி திகைத்தாள். “ காணாததைக் கண்டவள் போல  நிற்கிறாயே! காரணம் என்ன?” எனக் கேட்டார்.“காவி ஆடை, கையில் தண்டம், மொட்டைத் தலை... இது என்ன துறவுக்கோலம்?” என்று சொல்லி மனைவி அழுதாள்.

இதைக் கேட்ட பிறகே, பண்டிதர் வெலவெலத்துப் போனார்.  மனதிற்குள் துறவு மேற்கொண்டதை  உன்னிடம் எப்படி தெரிவிப்பது என குழப்பி நின்றேன். ஆனால், தெய்வமோ என்னைத் துறவியாக உன் கண்களுக்கு காட்டி விட்டதே” என்று வியந்த தோடு, நடந்ததை எல்லாம் எடுத்துச் சொன்னார். வேறு வழியின்றி பண்டிதர் துறவு மேற்கொள்ள அனுமதி  
அளித்தார் மனைவி. அந்த பண்டிதரே ஸ்ரீநாராயண தீர்த்தர். அவரை இனி ‘ஸ்ரீதீர்த்தர்’ என்றே குறிப்பிடலாம். இல்லறத்தில் இருந்து விலகிய ஸ்ரீதீர்த்தர், பல திருத்தலங்களை தரிசித்தபடி திருப்பதி மலையை அடைந்தார். அங்கேயே சிலகாலம் தங்கி விட்டார். ஒருநாள்...சிறுவன் ஒருவன், ஸ்ரீதீர்த்தரின் எதிரில் வந்தான். கைகளில் தின்பண்டங்களுடன் வந்த அவன், அவற்றை   சாப்பிட ஆரம்பித்தான். பார்த்துக் கொண்டே இருந்த ஸ்ரீதீர்த்தரிடம், “என்ன தெரியலியா? ஒங்கூட சேந்து ஒன்னாப் படிச்ச கோபாலன் தான் நான். மறந்து
விட்டாயா?” என்றான். அது மட்டுமல்ல! பள்ளிப்பருவ நிகழ்ச்சி களில் சிலவற்றைச் சொல்லவும் செய்தான். வேறுவழியில்லாமல் ஒப்புக் கொண்ட ஸ்ரீதீர்த்தருக்கு குழப்பம் உண்டானது. நீ சொல்றது எல்லாம் சரி! ஆனா இப்போ கோபாலனும் பெரியவனாகி இருப்பானே! நீ மட்டும் சின்ன பையனா இருக்கியே” என்று கேட்டார் ஸ்ரீதீர்த்தர்.
“ஆமா! நான் அப்பிடியே தான் இருக்கேன்” என்று பதில் அளித்த சிறுவன், தின்பதில் மும்முரம் காட்டினான். நிறைய தின்றால் வயிற்றுக்கு ஏதாவது ஆகி விடுமே என்ற எண்ணத்தில் ஸ்ரீதீர்த்தர்,“குழந்தே....வயிறு வலிக்குமே” என்றார். ஆனால் சிறுவனோ, “என்ன? வயத்த வலிக்கறதா ஒனக்கு?” என்று கேட்டான்.

அதே விநாடியில், ஸ்ரீதீர்த்தர் வயிற்று வலியால் துடிக்க ஆரம்பித்தார். எதிரில் இருப்பது சிறுவனல்ல; ஸ்ரீ கிருஷ்ணனே தனக்கு அருள் புரிய வந்திருப்பதை புரிந்து கொண்டார்.
அதைக் கண்ட கிருஷ்ணா, “ஒன்னோட வயத்துல கையை வெக்கறேன். வலி போயிடும்” என்று சொல்ல தடுத்தார் ஸ்ரீதீர்த்தர். “கிருஷ்ணா... வயிற்று வலி இருந்துட்டு போகட்டும்! என் தலமேல கை வை” என வேண்டினார். ஸ்ரீதீர்த்தரின் தலையில்  கையை வைத்த கிருஷ்ணர் அங்கிருந்து மறைந்தார். ஆனால் ஸ்ரீதீர்த்தரின் வயிற்று வலி மறையவில்லை. அதற்காக அவர் வருந்தவும் இல்லை. அதன் பின் அங்கிருந்து புறப்பட்ட ஸ்ரீதீர்த்தர்  யாத்திரையை தொடர்ந்தார். ஒருநாள் இரவில் கண்டியூர் –  திருக்காட்டுப்பள்ளி சாலையில் ஸ்ரீதீர்த்தர் சென்ற நேரம், வயிற்றுவலி அதிகமானது. அருகில் இருந்த விநாயகர்  கோயிலில் அமர்ந்தவர், அப்படியே உறக்கத்தில் ஆழ்ந்து விட்டார். கனவில் தோன்றிய கிருஷ்ணர், “நாளை காலை கண் விழித்தவுடன் முதலில் யாரைப் பார்க்கிறாயோ, அவரின் பின்னால் செல்! வயிற்று வலி தீரும்‘ என்று சொல்லி மறைந்தார். அதிகாலையில் விழித்த ஸ்ரீதீர்த்தரின் கண்ணில் ஒரு பன்றி செல்வது தெரிந்தது. ஸ்ரீதீர்த்தரும் அந்த பன்றியை பின் தொடர,  அந்த ஊரிலுள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலில் நுழைந்தது. ஸ்ரீதீர்த்தரும் பின் சொல்ல பன்றி (வராகம்) மறைந்தது.  அப்போது “அன்பனே! உன்னை அழைத்து வந்தது நானே”என்று அசரீரி ஒலித்தது. வராகமாக(பன்றியாக) வந்து அருள் புரிந்ததால் அந்த ஊர் ‘வரகூர்’ எனப்பட்டது. அப்படியே ஸ்ரீதீர்த்தரின் வயிற்று வலி மறைந்தது. கிருஷ்ணரின் லீலைகளை பாடல்களாக ஸ்ரீதீர்த்தர் பாட, சுவாமியும் நடனமாடி மகிழ்ந்தார். அப்பாடல்கள் ‘கிருஷ்ண லீலா தரங்கிணி’ என்று பெயர் பெற்றன. வரகூரிலேயே சித்தி அடைந்தார் ஸ்ரீதீர்த்தர். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வரகூரில் உறியடி உற்ஸவம் சிறப்பாக நடக்கும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.