Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஒரு பைத்தியக்காரியின் பிதற்றல்
 
பக்தி கதைகள்
ஒரு பைத்தியக்காரியின் பிதற்றல்


அன்று வெள்ளிக்கிழமை என்றாலும்  மீனாட்சியம்மன் கோயிலில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. மீனாட்சி சன்னதி கொடிக்கம்பத்தின் கீழே ஒரு முதியவள் நின்று கொண்டிருந்தாள். அன்னையைப் பார்த்துக் கைகூப்பியபடி சத்தமாக என்னமோ சொல்லிக் கொண்டிருந்தாள். ‘வஜுபி ஹமாடி டிமாண்டி கண்டி ஜுஜாதி யமி உமி ஹம்ஜுபி’ பாவம் சித்தம் கலங்கிவிட்டது போலும். வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருக்கிறாள். இவள் கோயிலுக்கு வரவில்லை என்று யார் அழுதார்கள்? மீனாட்சி சன்னதியின் முன்  இதனை அனுமதிக்கலாமா? சில நிமிடங்களில் நான் அம்மன் சன்னதியில் அன்னையின் அழகுக் கோலத்தைப்பார்த்தபடி மெதுவாக நகர்ந்து கொண்டிருந் தேன். அன்னையை விட்டுப் பிரிய மனமில்லாமல் செல்ல முயன்ற போது, என் பின்னால் வந்த பெண்மணி என்னைப் பலமாக இடித்தாள். கதிகலங்கி விட்டேன்.
கோபத்துடன் திரும்பிப் பார்த்தேன். நிலைகுலைந்து போனேன். ஆமாம். பச்சைப்புடவைக்காரியே தான். தன்னையே தான் வணங்குவது போல் இன்று வேஷம் போடுகிறாள். அவள் கை என் மேல் இடித்த இடத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டேன்.

‘என்னுடன் வா’ என்று சைகை காட்டிய படி முன்னே சென்றாள். அவளைப் பின் தொடர்ந்தேன். மீனாட்சி சன்னதி பெரிய பிரகாரத்தில் ஆளரவம் இல்லாத இடத்தில் அமர்ந்தாள். அவள் காலடியில் அமர்ந்தேன். “என்னைக் கேலி செய். பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். என்  பக்தர்களைக் கேலி செய்தால் பத்ரகாளியாகி சம்ஹாரம் செய்து விடுவேன்”“ஒன்றுமே புரியவில்லை தாயே”“வஜுபி ஹமாடி டிமாண்டி கண்டி ஜுஜாதி யமி உமி ஹம்ஜுபி” “இப்போது புரிகிறதா?” “அது பிதற்றல்.” “நமக்குப் புரியாத மொழியைப் பிதற்றல் என்று சொல்வது அறிவீனத்தின் உச்சம்.” “அது என்ன மொழி தாயே?” “தமிழ் தான்.” ‘தமிழா? என்ன தாயே இன்று என்னுடனேயே விளையாட்டா?  தொல்காப்பியர் ஏற்கனவே உறுதியாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார் – ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்று. அந்த முதியவள் சொன்ன ஏதாவது ஒரு சொல்லிற்குப் பொருள் கூறுங்கள் பார்க்கலாம்.” “மகனே உனக்குத் தெரிந்ததெல்லாம் நேரடிப் பொருள். அதாவது அகராதியில் இருக்கும் சொற்களுக்கு என்ன பொருள் என்று நீ அறிவாய். அது போக இறைச்சிப் பொருள் என்று ஒன்று இருக்கிறது.”

“அது என்னம்மா?”

“ஒரு சொல்லின் பொருள், அதனால் பெறப்படும் குறிப்புப் பொருள், இரண்டுக்கும் மேலாக மேலும் ஒரு குறிப்புப் பொருள் புலப்படுமாயின் அதுவே இறைச்சிப் பொருள்.
ஒரு தாய் தன் குழந்தையை அர்த்தமில்லாத வார்த்தைகளால் கொஞ்சுவாள். புஜ்ஜிம்மா. ஜிங்கிலி போன்ற கொஞ்சல் மொழிக ளுக்கு அகராதிப் பொருள் இல்லை. என்றாலும் அவற்றுள் தூய்மையான தாயன்பு என்னும் இறைச்சிப் பொருள் இருக்கிறது. சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானைப் பார்த்து ‘பித்தா’ என்று பாடியபோது அதை மேலோட்டமாகப் பார்த்து இறைவனையே பைத்தியக்காரன் என்று கேலி செய்வது போலிருக்கும். அதன் இறைச்சிப் பொருள்:  தன் அடியார்களைப் பித்துப் பிடித்தவனைப் போல் நேசிக்கும் அன்புத் தெய்வம் சிவபெருமான்.

பேச ஆரம்பிக்காத குழந்தை, தாயின் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப வெவ்வேறு ஒலிகளை எழுப்பும். தாய்க்கு மட்டும் தான் அந்த ஒலிகளுக்கு அர்த்தம் தெரியும்.
‘குழந்தைக்குப் பசிக்கிறது’, ‘ குழந்தை எதையோ பார்த்து பயந்துவிட்டது’ என்று புரிந்து கொள்வாள். அங்கே கொடிக்கம்பத்தின் அருகே நின்று பினாத்திக் கொண்டிருக்கிறாளே அவள் என் குழந்தை... எத்தனையோ வருடங்கள் என் முன் நின்று பல ஸ்தோத்திரங்களைச் சொல்லியிருக்கிறாள். இப்போது முதுமை. எல்லாம் மறந்து விட்டது. மனநிலையும் நன்றாக இல்லை. என்ற போதிலும் என் கோயிலுக்குத் தினமும் வந்து எதையாவது சொல்லிவிட்டுப் போகிறாள். உன்னைப் போல் அகந்தை பிடித்தவர்கள் சொல்லும் வேத மந்திரங்களைவிட இந்த முதியவளின் பிதற்றல் பிடித்திரு க்கிறது...” “ஆஹா! ஏதோ இன்று இவள் அருளால் உடலும் மனமும் நன்றாக இருக்கிறது. நினைத்த நேரத்தில் லலிதா ஸஹஸ்ரநாமமோ, அபிராமி அந்தாதியோ, மீனாட்சி பஞ்சரத்தின ஸ்தோத்திரமோ சொல்லமுடிகிறது. ஒரு காலத்தில் என்னால் பேச முடியாத நிலை
ஏற்பட்டால்...”

கண்களில் குபுக்கென்று கண்ணீர் பெருக்கெடுத்தது.“கவலைப்படாதே. உன்னால் பேசமுடியவில்லையென்றால் உன் மனதில் தோன்றும் எண்ணங்களையே வழிபாடாக எடுத்துக் கொள்வேன்.”“ஒருவேளை அந்த முதியவளைப் போல் என் மனநிலையும் பாதிக்கப்பட்டால்...” “உன் ஆழ்மனதில் தோன்றும் உணர்வுகளை நான் வழிபாடாகக் கொள்வேன். ஒரு கட்டத்தில் அந்த உணர்வும் இல்லாமல் போகும். அப்போதும் உன் ஆன்மாவின் ஆழத்தில் இருப்பது எனக்குத் தெரியும். பேச்சு, எண்ணம், உணர்வு எதுவுமற்ற அந்த ஆழ்ந்த அமைதிநிலையே அன்பின் பரிபூரண வெளிப்பாடு. அன்பு கனிந்த கனிவு அது. அதைத்தான் பாரதி அன்பு கனிந்த கனிவே சக்தி என்று பாடினான்.” “தாயே,  இறக்கும்போது ஒருவேளை உங்களை நினைக்க முடியவில்லையென்றால்...” “நீயே சொல்லேன்.”

“உங்கள் அருள் இருந்தால்தான் இதற்கு விடை சொல்லமுடியும்.”
என் தலையில்  மிக லேசாகக் கைவைத்தாள் அன்னை. சிலிர்த்தேன். நின்றேன். வணங்கினேன்.

“தாயே உங்களை மறக்கும் நிலையே மரணம். உங்களை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மரணமே இல்லை.

உங்களை அன்பு வடிவாக வழிபடுபவர்கள் என்றென்றும் வாழ்கிறார்கள். சில சமயம் இந்த உடம்புடன். சில சமயம் இது இல்லாமலும். அன்பு கனிந்த கனிவே சக்தி.”

“சபாஷ்”

“போகும்போது அந்த முதியவளை விழுந்து வணங்கிவிட்டுச் செல்லப் போகிறேன்.”

“அவள் அங்கே இருந்தால்தானே.”

“பின்?”

“அதுதான் என்னை வணங்கிவிட்டாயே. உனக்கு இந்தப் பாடத்தைப் புகட்டவே நான் முதியவள் வேஷம் போட்டு வாய்க்கு வந்தபடி பிதற்றினேன்.”வேரறுந்த மரம்போல் அவள் காலில் விழுந்து வணங்கினேன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.