Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மாசில்லாத மாணிக்கம்
 
பக்தி கதைகள்
மாசில்லாத மாணிக்கம்

மனதால் கூட மற்றவருக்கு தீங்கு நினைக்காதவர் ஆயர்குலத்தலைவர் அரியகோன்.  குழந்தை இல்லாத குறையை எண்ணி மனைவி கண் கலங்கும் போது, அவரது மனம் அல்லல் பட்டது. ஒருநாள் கவலை மறந்து இயற்கை அழகை ரசிக்க காட்டுக்கு புறப்பட்டார். காட்டின் எல்லையில் கால் வைத்ததும், “இந்தப் பக்கம் வா! இந்தப் பக்கம் வா!” என்பது போல, முல்லைப்பூக்களின் மணம் ஈர்த்தது. அந்த வழியில் நடந்தவர், பூக்களின் நடுவில் மனம் கவரும் விதத்தில் சிவலிங்கம் இருக்கக் கண்டார்.  அவரை அறியாமல் கண்களில் நீர் சுரந்தது. “ஈசனே! அடியேன் குலம் விளங்க குழந்தை வரம் அருள்வாயாக” என வழிபட்டு வீடு திரும்பினார். ‘வேண்டத்தக்கது அறிவோய் நீ! வேண்ட முழுதும் தருவோய் நீ!’ என்னும் திருமுறையின் வாக்கு பலித்தது . ஆம்! அரியகோனின் மனைவி கருவுற்றாள். பத்து மாதம் கழிந்ததும், அழகான பெண்குழந்தை பிறந்தது. குணவதி எனப் பெயர் இட்டனர். சிவனருளால் பிறந்த குழந்தை அல்லவா? பேசத் தொடங்கிய நாள் முதல் வாய் திறந்தாலே சிவநாமம் தான். நெற்றியில் திருநீறு, களையான முகம், எந்நேரமும் சிவ சிந்தனையுடன்  வளர்ந்த குணவதி பருவ வயதை அடைந்தாள்.  சொந்த பந்தமெல்லாம் சும்மா இருக்குமா? மணம் பேச வந்தனர்.  வந்தவர்கள் குணவதியைப் பார்த்து,“ என்ன இது... இவள் மானிடப்பெண்தானா!  அலங்காரம் செய்து, அர்ச்சனைக்கு  காத்திருக்கும் அம்மன் போல் இருக்கிறாளே...” என்று நினைத்தனர். அதோடு மட்டுமல்ல... “பெண்ணல்ல இவள்...பேசும் தெய்வம்! அருள் பொங்கும் இவளைக் கண்டால் கும்பிடலாமே தவிர, அவள் கை பிடித்து வாழ யாருக்கும் தகுதியில்லை” என்று ஒதுங்கினர். இப்படி ஒரு வகையினர் என்றால், மற்றொரு வகையினரோ, “என்ன இது? நெத்தியில  திருநீறு!

முட்டைய அடை காக்கிற கோழி மாதிரி ரெண்டு கண்ணு; ஓயாம சிவ சிவாங்கறாளே! இவளை கைபிடிச்சா உருப்படுமா குடும்பம்?” என்று சொல்லி பாவத்தைச் சுமந்தனர். மகளுக்குத் திருமணம் ஆகவில்லையே என வருத்தத்தில் அரியகோன் இறந்தார். கணவர் போன துயரம் தாங்காமல் மனைவியும் இறந்தாள். பெற்றோரை இழந்த குணவதி தனி மரமானாள். பக்தியுடன் விரக்தியும் வளர்ந்தது அவளுக்கு.‘தர்மம் ஒன்றே தக்க துணை’ என்று நினைத்தாள் குணவதி. தன்னிடம் இருந்த பணத்தில் தண்ணீர்ப் பந்தல், தர்மச்சத்திரம், அன்னதானம் என செய்யத் தொடங்கினாள். ஒருநாள் அதிகாலையில் குணவதிக்கு கனவு வந்தது. அதில் காட்சியளித்தார் சிவன். “யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?‘ எனக் கேட்டாள் குணவதி. “நீ தானம்மா வேண்டும். யாம் இருப்பது திருப்பாச்சூர் என்னும் திருத்தலத்தில்.  எம் பக்தனான அரியகோன் வேண்டியதால், எம் சக்திகளில் ஒன்றான, உன்னை அவனுக்கு குழந்தையாக அளித்தேன்.  எனக்குரியவள் நீ! அதனால் உன்னை மணம் பேச வந்தவர்களை திருப்பி அனுப்பினேன். என்னை மறந்து விட்டாயே! வா என் பின்னால்!” என்று சொல்லிக்கொண்டே நடந்தார்.  குணவதியும்  பின் தொடர்ந்தாள். முல்லை மணம் கமழும் சோலை எதிர்ப்பட்டது. அழைத்துப் போனவர் அங்கிருந்த  சிவலிங்கத்திற்குள் மறைந்தார். கனவு கலைந்து திடுக்கிட்டு எழுந்தாள் குணவதி.

“சிவனே!  உன் அருளை மறப்பேனா? இதோ வருகிறேன்”என்று கனவில் கண்ட இடம் நோக்கி புறப்பட்டாள்.  சோலையில் இருந்த சிவலிங்கத்தை அடைந்தாள். அடியார்கள் பாடிக் கொண்டிருந்தனர்.  அதைக் கண்டு  மகிழ்ந்த குணவதி அவர்களிடம், “என்னிடம் பசுக்கள் ஏராளமாக இருக்கின்றன. பாலுக்கு பஞ்சமில்லை. ஆனால் அபிஷேகம் செய்து பூஜை நடத்த குருக்கள் வேண்டுமே!” என்றாள்.  “கவலைப்படாதே!  நீ பாலை அனுப்பிவை! பூஜையை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்ற படியே எடுப்பான தோற்றத்துடன் குருக்கள் ஒருவர் வந்தார். அவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது. குணவதியும் வாக்களித்தபடி தினமும் பால் அனுப்பினாள்.  வழிபாடு சிறப்பாக நடந்தது. காலம் எப்போதும் ஒரே மாதிரியாகவா போகிறது? இல்லையே... மழை பொய்த்தது. பஞ்சம் தலை காட்டியது. ஆனாலும் குணவதி பூஜைக்கான பால் அனுப்ப தவறவில்லை.

இந்நிலையில் குருக்கள்,“அம்மா! குணவதி... எங்கும் பஞ்சம் பரவிக் கிடக்கிறது. நீயும் கஷ்டப்படக் கூடாதல்லவா? அதனால் பாலுக்கு ஈடாக இந்த பொற்காசை பெற்றுக் கொள்”  என்றார். குணவதியும் மறுக்கவில்லை.  பொற்காசை வாங்கியவள், அந்த ஊரிலுள்ள நிதிபதி என்னும் வியாபாரியிடம் அதை விற்கச் சென்றாள். வியாபாரியோ, “இது
பத்தரை மாற்று பொன்” என்று சொல்லி அதற்கு ஈடான பணத்தை வழங்கினார்.  தினமும் இது தொடரவே, குணவதி அதன் மூலம் ஏழைகளுக்கு வாரி கொடுத்தாள்.  ஆனால் குணவதியின் பணியாளர்கள் பேராசையால் பாலில் தண்ணீர் அதிகம் கலந்தனர். சிவன் அபிஷேகத்திற்கும் தண்ணீர்ப்பாலே அனுப்பப்பட்டது. ஆனால் கோயில் குருக்கள் பொற்காசை தொடர்ந்து அளித்தார்.

ஒருநாள் குணவதி வியாபாரியிடம் சென்ற போது, அவரது மகன் இருந்தான். அவன், “அம்மா! வியாபார விஷயமாக அப்பா வெளியூர் போயிருக்கிறார். உங்களைப் பற்றி அப்பா சொல்லியிருக்கிறார்” என்று சொல்லி பொற்காசுக்குரிய பணத்தைக் கொடுத்தான். சில நாட்கள் கழிந்தன. வியாபாரி ஊர் திரும்பியதும் பொற்காசுகளை ஒப்படைத்தான் மகன். அவற்றைப் பார்த்த  வியாபாரி, “என்னடா இது? எல்லாம் மட்டமான தங்கமாக இருக்கிறதே? ” என அதிர்ந்தார். அந்த நேரத்தில் குணவதியும் வந்து சேர்ந்தாள்.“ என்ன அம்மா... என் மகனிடம் மட்டரகமான பொன்னை தந்திருக்கிறீர்களே” என்று கேட்க,  குணவதிக்கு நடுக்கம் வந்தது. கோயிலுக்கு சென்று குருக்களிடம், “சுவாமி! நீங்கள் தந்த பொன் மட்டரகம் என்கிறாரே வியாபாரி” என்று சொல்லி நடந்ததை விவரித்தாள்.ஆனால் குருக்களோ, “ அபிஷேகத்திற்கு தரும் பால் கலப்படமாக இருக்கும் போது, தங்கமும் கலப்படமாகத் தானே இருக்கும்?” என்றார். குணவதி பதிலேதும் சொல்லாமல் புறப்பட்டாள். பணியாளர்களை விசாரித்த பின்னரே, அவளுக்கு பாலில் தண்ணீர் கலந்த உண்மை தெரிய வந்தது.  மோசடி செய்த பணத்தை பணியாளர்கள் வியாபாரியிடம் ஒப்படைத்த பின் பிரச்னை தீர்ந்தது. கோயிலுக்கு சென்ற குணவதி, “ குருக்கள் சுவாமி! பணியாளர்கள் செய்த பிழையை பெருந்தன்மையுடன் மன்னித்தருள வேண்டும்”  ன்று வருந்தினாள்.  “மாசில்லாத மாணிக்கமே! உனது அன்பை நன்கு அறிவேன். உலகிற்கு அதை உணர்த்தவே இவ்வாறு செய்தோம்‘ என்று சொல்லிய குருக்கள் சிவலிங்கத்தில் மறைந்தார். அது கண்ட குணவதியின் உயிரும் ஈசனுடன் கலந்தது. இக்கோயிலே ’திருப்பாச்சூர்’  என்னும் சிவத்தலமாக விளங்குகிறது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.