Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கடவுள் இருந்திருந்தால்...
 
பக்தி கதைகள்
கடவுள் இருந்திருந்தால்...

“நீ நம்பற மாதிரி ஒரு கடவுள் இருந்து அவரும் நீ நினைக்கற மாதிரி அன்பா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் இல்ல? கடவுள் இருந்தா  அக்கிரமம், அநியாயம் எல்லாம் நடக்காதுல்ல? ஆனா உன்னை மாதிரி ஆளுங்க கல்லுல கடவுளைப் பாக்கறாங்க. என்னை மாதிரி ஆளுங்களுக்கு அப்படியே கடவுள் இருந்தாலும் அந்தாளு மனசு கல்லு மாதிரித்தான் இருக்கும்னு தோணுது. இந்தப் பேப்பரப் பாரு.”

பேசியது என் எழுத்தாள நண்பன். அவன் ஒரு நாத்திகவாதி.
அவன் காட்டிய செய்தித்தாளில் பயங்கர செய்திகள் நிறைந்திருந்தன.  சிறுமி கற்பழித்துக் கொலை, மூவர் கொலை, - கள்ளக்காதல் எதிரொலி, ஜப்பானில் நிலநடுக்கம் – 3000 பேர் சாவு.

எனக்கு என்ன சொல்வதென தெரியவில்லை.
பச்சைப்புடவைக்காரியிடம் சரணடைந்தபின்  யார் மீதம் கோபம் வருவதில்லை. அழுகை தான் வருகிறது. நண்பன் நாத்திக வாதங்களை அடுக்கிக் கொண்டே போனான். எதிர்வாதம் செய்ய எனக்கு மனம் வரவில்லை. அங்கிருந்து கிளம்பி கோயிலுக்கு புறப்பட்டேன். சன்னதிக்குப் போகாமல் பொற்றாமரைக் குளத்தில் அமர்ந்தேன்.

கண்களில் கண்ணீர் சொரிந்தது. வயிறு பசித்தது. மனம் வலித்தது.
அன்று கோயிலில் கூட்டம் இல்லை.

“பூ வேணுமாய்யா? பட்டு ரோசாங்க...”

“ஆமாம்மா. அது ஒண்ணு தான் குறைச்சல்.”

“யாரோ பேசினதுக்கு என் மேல் எரிஞ்சு விழறியே? அந்த எழுத்தாளன் என்னை இல்லை என மறுத்ததால் துவண்டு விட்டாயோ?”

பூக்காரி அடுத்த நொடியே பச்சைப் புடவைக்காரியாக மாறினாள். அவளின் காலடியில் நான் அமர்ந்தேன்.

“அடிக்கடி என்னை நேரில் பார்க்கும் நீயே அவனது பேச்சால் கலங்குகிறாயே.”

“அண்ட சராசரம் எல்லாம் கட்டிக் காக்கும் அகிலாண்டேஸ்வரி இந்த அடிமையிடம் சரிசமமாக அமர்ந்து பேசுவதைப் பார். இதை விடச் சிறந்த அன்பை உன்னால் காட்ட முடியுமா?” என்று சொல்ல என் மனம் துடிக்கிறதம்மா.

“அப்படி சொன்னால் அவன் நம்புவானா? இந்த பூச்சாண்டி வேலைக்கு மயங்கமாட்டேன் என்பான்” இன்னும் அழுகை அதிகமானது.  

“நான் பார்க்கப்படும் பொருள் அல்ல. நான் பார்வை. பார்வைக்குள் இருக்கும் சக்தி. மனதால் நினைக்கப்படும் பொருள் அல்ல. மனதிற்குச் சிந்திக்கும் ஆற்றல் தரும் மாகாளி.” புரிந்தும் புரியாதது போல் இருந்தது.

“இந்த ரோஜா மலரைப் பார். என்ன தெரிகிறது?” என்று கேட்டாள் மலரினும் அழகிய மகேஸ்வரி.

அன்னை தந்த மலர் என்பதால் நேர்த்தியாக இருந்தது.  சிவப்பு நிறத்தில் அடுக்கடுக்காக இதழ்கள். மலரை தாங்கிய பச்சைத் தண்டில் ஓரிரு முட்கள். இதழ்களின் வெளிப்புறத்தில் அங்கங்கே பனித்துளி.

“தாயே! மலரில் தெரியும் அழகு இறைவனின் வடிவம். மலர் அழகு. அதை விட அதை ஏந்தி நிற்கும் நீங்கள் அழகுக்கெல்லாம் அழகு சேர்க்கும் பூரண அழகு.

“பூ அழகாக இருக்கிறது என்றாயே. குறிப்பாக எந்த இடத்தில் அழகு இருக்கிறது என்று காட்டமுடியுமா?”

“அது...அது எப்படியம்மா முடியும்? அழகு பூ முழுவதிலும் விரவி இருக்கிறது.”

“ஒருவேளை இதழ்களை அக்கக்காகப் பிரித்து பார்த்தால் அழகு என்பது தனியாகக் கிடைக்குமா?”

“ சத்தியமாகக் கிடைக்காது தாயே!

“ இந்தப் பூவினில் அழகு விரவியிருப்பது போல்  இந்த பிரபஞ்சத்தில் நான் விரவியிருக்கிறேன். பூவிற்குள் குறிப்பாக எந்த இடத்தில் அழகு இருக்கிறது என சொல்ல முடியாதது போல பிரபஞ்சத்தில் எங்கு இருக்கிறேன் என்பதை யாராலும் சொல்ல முடியாது. ”

அழகி சொல்லும் அழகின் தத்துவம் எனக்கு உறைக்க ஆரம்பித்தது.

“ பூவைப் பிய்த்து பார்த்தால் அழகு தெரியாது. அதுவரை தெரிந்த அழகும் காணாமல் போகும். விஞ்ஞானத்தின் ஆரம்பக் கட்டத்தில் மனிதர்கள் இதையே செய்தார்கள். ரோஜாவில் ஒளிந்திருக்கும் அழகை ஆராய்ச்சிக்கூடங்களில் தேடினார்கள். கடவுள் இருக்கிறாரா என்று பூதக்கண்ணாடியின் வழியாகப் பார்த்து விட்டுக் கடவுள் இல்லை என  பிரகடனம் செய்தார்கள்..”

“ இந்த உலகில் நடக்கும் தீமைகள்...கொலை, கற்பழிப்பு, வெள்ளம் போன்றவை...”

“ ரோஜா மலரின் அடியிலுள்ள முள்ளைப் போல உலகில் தீமைகள் இருக்கின்றன. இந்த ரோஜா முழுமையாக வளர்ந்து நிறைவான அழகைப் பெற முள்ளும் அவசியம். இது மலருக்கு ஒரு பாதுகாப்புக் கவசம். அதுபோல் உனக்கு வரும் துன்பங்களே ஆன்மிக வளர்ச்சி கெடாமல் பார்த்துக் கொள்கிறது.”

“தாயே இப்போதே போய் நண்பனின் தோளை உலுக்கி இந்த உண்மையை சொல்லி விட்டு வருகிறேன்.”

“ஏன் அவனிடம் முட்டாள் பட்டம் வாங்க வேண்டும் என்று ஆசை வந்து விட்டதா?”

“தாயே!”

“பிறவியிலேயே பார்வையில்லாத ஒருவனுக்கு ரோஜா மலர் அழகானது என்று எப்படி புரிய வைப்பாய்?”

“அது...அது...”

“முதலில் அவனுக்கு நிறம் என்பதே தெரியாதே! எதையுமே பார்க்க முடியாத ஒருவனுக்கு சிவப்புக்கும், பச்சைக்கும் உள்ள வேறுபாடு எப்படி புரியும்? ரோஜா மலர் என்று ஒன்று இருக்கிறது என்பதை புரிய வைப்பதே கடினம். அதனுள் இருக்கும் அழகை எப்படிப் புரிய வைப்பதாம்?

“அடுத்த கேள்வி. மலரின் அழகைப் பார்த்து ரசித்து உணர்ந்து கொள்ள என்னவெல்லாம் வேண்டும்?”

“முதலில் இந்த அழகு மலர் வேண்டும்.”

“அப்புறம்?”

“பார்ப்பதற்குக் கண் வேண்டும்.”

“அப்புறம்?”

“அப்புறம் என்ன? அவ்வளவு இருந்தால் போதுமே!”

“போதாது. உன் மனதில் அழகுணர்வு வேண்டும். அப்போது தான் இந்த மலரில் இருக்கும் அழகு தெரியும். சொல்லப்போனால் அந்த அழகு உணர்வே  அவசியம்.

மனதில் அழகுணர்வு ஆழமாக இருந்து விட்டால் மலர் இல்லா விட்டாலும், ஏன் பார்வையே இல்லாவிட்டாலும் கூட அழகை ரசிக்க முடியும். பிறவியில் பார்வை இல்லாத எத்தனையோ கவிஞர்கள் அழகைப் பற்றிக் கவிதைகள் படைத்தது அப்படித்தான்.”

“ஆஹா!”

“அழகு என்பது பார்ப்பவர் கண்ணில் இருக்கிறது என்ற சொலவடையே அதனால் தான் வந்தது. உன் மனதிலுள்ள அழகுணர்வே நான். உன் நண்பனின் மனதில் அந்த அழகுணர்வு இல்லை. அதை நான் அவனுக்குக் கொடுக்கவில்லை அதனால்  என் இருப்பு நிலையை அவனால் உணரமுடியவில்லை. ”

“சரி அடுத்த கட்டத்திற்குப் போவோம். இந்த மலர் நிரந்தரமா என்ன?”

“இல்லை தாயே. அதிகபட்சம் நாளை காலைக்குள் வாடி விடும்.”

“அதோடு அழகு செத்துவிடுமா என்ன? அதன் பின் அழகே இல்லாமல் போகுமா என்ன?

“ இல்லை தாயே!”

“அழகு என்ற தேவதை இப்போது அணிந்திருக்கும் ஆடை இந்தப் பட்டு ரோஜா. அவள் நாளை வேறொரு ஆடை அணிவாள். அவளுக்கு ஆயிரம் ஆயிரம் ஆடைகள். முழு நிலவின் தோற்றம், குழந்தையின் சிரிப்பு, கடலின் அலைகள்.  இப்படி எத்தனையோ ஆடைகள். வெளியில் தெரியும் அழகு தோன்றி மறையும். மனதில் இருக்கும் அழகுணர்ச்சி என்றும் அழியாதது. அந்த அழகுணர்ச்சி தான் நான்.  நான் இந்த மீனாட்சி கோயிலில் மரகதச் சிலையாக இருக்கலாம். இதோ உன்முன் உருவெளிப்பாடாக இருக்கலாம். நீ பசியால் துடிக்கும் போது சுவையான உணவாக இருக்கலாம். நீ சொல்லும் சொல், எழுதும் எழுத்து நினைக்கும் நினைவு எல்லாம் நானே.  நான் மட்டுமே நிரந்தரம்.

நீ பார்க்கும் பிரபஞ்சம் அல்ல. நன்றாக என்னைப் பார்.
வானத்திற்கும் பூமிக்குமாக விரிந்தது அன்னை மாகாளியின் அழகுருவம். ஒருகணம் இந்த உலகில் அவள் இருந்தாள். அடுத்த கணமே இந்த உலகம், இது தவிர இன்னும் உள்ள ஆயிரம் கோடிப் பிரபஞ்சங்கள் அவள் கால் நகத்தின் இடுக்கில் தென்பட்டன.
பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரணானந்தமாகத் தோன்றினாள். அதைப் பார்க்கும் கண்ணாகவும் உணரும் மனமாகவும் ஆவிர்பவித்தது அவளே!
கண்களை ஒருமுறை சிமிட்டிப் பார்த்தேன். மீண்டும் பூக்காரியாகத் தோன்றினாள்.

“அந்த நாத்திகனிடம் என்ன சொல்லப் போகிறாய்?”

“ அவனை நெஞ்சாரத் தழுவி கண்ணீர் மல்க நன்றி சொல்லப் போகிறேன் தாயே. அவன் என்னைக் காயப்படுத்தாவிட்டால் நான் உங்களின் விஸ்வரூப தரிசனத்தைப் பார்த்திருக்க முடியுமா? இல்லை  உபதேசத்தை கேட்டிருக்க முடியுமா?”

என்னை  அழவிட்டு விட்டு அந்த அழகி சிரித்தபடி மறைந்தாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.