Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கஞ்சா நகரம் கார்த்திகா சுந்தரேஸ்வரர்
 
பக்தி கதைகள்
கஞ்சா நகரம் கார்த்திகா சுந்தரேஸ்வரர்

கார்த்திகை மாதம், சிவன், முருகன் வழிபாட்டுக்கு உகந்தவை. காரணம்  கார்த்திகை நட்சத்திரத்துக்கு உரிய தெய்வம் முருகன். கார்த்திகை மாதத்துக்கு உரிய கிரகம் சூரியன். சூரியனின் அதிதேவதை சிவன். கார்த்திகை மாதத்தில்  வழிபாட்டோடு புனித நீர்நிலைகளில் நீராடுதல், வறியவருக்கு உதவுதல், ஆதரவற்றோருக்கு நம்மாலான உதவி செய்தல் அளவற்ற புண்ணியம், ஞானத்தை தரும். பணம் இல்லாதவர்கள் கோயிலுக்கு எந்த கைங்கர்யமும் செய்யாவிட்டாலும், ஒரே ஒரு விளக்கு ஏற்றி வழிபட்டாலும்  அனைத்து நலன்களும் ஏற்படும். முருகன், சூரியன், சிவன் ஆகிய தெய்வங்களின் அருளை வழங்கும் கோயில் மயிலாடுதுறைக்கு அருகே ’கஞ்சா நகரம்’ என்னும் கிராமத்தில் உள்ளது. இங்கு குடிகொண்டுள்ள ஈசன் – காத்ர சுந்தரேஸ்வரர் எனும் கார்த்திகா சுந்தரேஸ்வரர். அம்பாள் – துங்க பாலஸ்தனாம்பிகை. சோழ மன்னர்கள் திருப்பணி செய்த இத்தலம், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை  வாய்ந்தது. மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில்  8 கி.மீ. தொலைவில் உள்ளது. பிரதான சாலையில் இருந்து பிரியும் கிளைச் சாலையில் அரை கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம்.

’அதென்ன, கஞ்சா நகரம்?’ என குழம்ப வேண்டாம். பெயருக்கான காரணம் அறிய மேலும் படியுங்களேன்! அசுரர்களின் அட்டகாசம் பூலோகம் எங்கும் தலை விரித்தாடியது. அவர்களைக் கட்டுப்படுத்தி அடக்குவது சிரமமான விஷயம். பஸ்மாசுரன், சிங்கமுகன் உள்ளிட்ட அசுரர் கூட்டம் முனிவர்களை படாதபாடு படுத்தியது. யாகம், தவம் என எங்கு நடந்தாலும், அவற்றை அழித்து ஆரவாரம் செய்தனர் அசுரர்கள். அவர்களின் அட்டூழியம் பொறுக்க முடியாத முனிவர்கள்  பார்வதியிடம் முறையிட்டனர்.   அப்போது சிவன் ’காத்ர ஜோதி’ என்னும் யோக நிலையில் தவம் மேற்கொண்ட தலம் தான் இது. சுவாமியிடம் நேரில் முறையிட முனிவர்கள் அனைவரையும் இந்தத் திருத்தலத்துக்கே  அழைத்து வந்தாள் பார்வதி. யோக நிலையில் இருந்த சிவன் பார்வதியின் திடீர் வரவால் தவம் கலையப் பெற்றார். கோபத்தில் தன் நெற்றிக்கண்களைத் திறந்தார். அதிலிருந்து ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டன. அவை அழகான குழந்தைகளாக மாறின. அவர்களை வளர்க்கும் பேறு பெற்றனர் கார்த்திகைப் பெண்கள்.  சிவனால் தீர்மானிக்கப்பட்ட நேரம் வந்ததும் ஆறு குழந்தைகளும்  ஒரே வடிவமாயின. அவரை ’கார்த்திகேயன்’ என நாம்  வழிபடுகிறோம். இந்தக் கார்த்திகேயன் என்னும் முருகனே அசுரர்களை அழித்து தேவர்களையும், முனிவர்களையும் காத்தான்.

ஆக, இந்த கஞ்சா நகரமே ’கார்த்திகேயன் உருவான சிவத்தலம்’. தனக்கு வடிவம் கொடுத்து ஆட்கொண்ட சிவனை முருகப்பெருமான் கஞ்சா நகரத்தில் எப்போதும் வழிபட்டுக் கொண்டிருக்கிறார். சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து தகதகப்பாக மின்னுகின்ற வகையில் பொன்னிறத்தில் ஒளி (ஜோதி)  வெளிப்பட்டதால் இந்த ஊர் ’பொன் நகர்’  ’காஞ்சன நகர்’ என பெயர் பெற்றது. ’காஞ்சனம்’ என்றால் தங்கம் என்பது பொருள்.  ’காஞ்சன நகர்’ என்பது கஞ்சாறு, கஞ்சாறூர் என்றாகி தற்போது ’கஞ்சா நகரம்’ என மருவியது.  ஆறுபொறிகளை உருவாக்கி கார்த்திகேயனை வழங்கியதால் சிவன் ’கார்த்திகா சுந்தரேஸ்வரர்’ என அழைக்கப்படுகிறார்.  கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்த காரணத்தால், இக்கோயில் கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய பரிகாரத் தலமாக விளங்குகிறது. கார்த்திகை நட்சத்திரம், கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்கள் இங்குள்ள சிவன், அம்மன், முருகனை வணங்கினால் வளம் சேரும்.  வாழ்வில் முன்னேற்றம், தொழிலில் வளர்ச்சி, உயர்ந்த பணி அமைய விரும்புவோர் கார்த்திகா சுந்தரேஸ்வரருக்கு அபிஷேகம் செய்தால் அனைத்தையும் பெற முடியும்.
அற்புதமான சிவலிங்கத் திருமேனி. சுயம்பு வடிவம். பிரதோஷ நாளில் திரளான பக்தர்கள் சிவனை வணங்குகிறார்கள். இங்குள்ள அம்பிகை ’துங்க பாலஸ்தனாம்பிகை’ என வழங்கப்படுகிறார். நான்கு கைகளில் சங்கு, சக்கரம், நீலோத்பல மலர், கிளி ஆகியவற்றை ஏந்தியபடி காட்சி தருகிறாள்.

அம்மனின் கையில் உள்ள கிளியை சர்வேஸ்வரன் என்றும், அது அவளின் காதுகளில் வேதம் ஓதுவதாகவும் சொல்கிறார்கள். வேதநாயகியாக விளங்கும் ’துங்க பாலஸ்தனாம்பிகை’யை வியாச மகரிஷியும், சுகப்பிரம்மரும் தரிசித்து அருள் பெற்றுள்ளனர். விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, முருகன், துர்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் என ஏராளமான சன்னதிகள் இங்குள்ளன. மாதம் தோறும் கார்த்திகை நாளில் முருகனுக்கு விசேஷ அபிஷேகம், வழிபாடுகள்  நடக்கின்றன. அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான மானக்கஞ்சாறர் அவதரித்து முக்தி பெற்ற தலம் இது. கார்த்திகை மாதம் மற்றும் நட்சத்திரத்துக்கு உரிய கஞ்சா நகரம்  கார்த்திகா சுந்தரேஸ்வரரைத் தரிசித்து அருள் பெறுவோம்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.