Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » யாருக்கு யார் உதவுகிறார்கள்?
 
பக்தி கதைகள்
யாருக்கு யார் உதவுகிறார்கள்?

அது ஒரு சிக்கலான வழக்கு...ஒரு தேசிய வங்கியின் முகவருக்கு வருமானவரித்துறையிலிருந்து ஓலை வந்திருந்தது.. யாரோ அனுப்பிய தவறான தகவல் அடிப்படையில் அந்தப் பிள்ளைப்பூச்சி மீது நடவடிக்கை எடுத்தனர் வருமான வரித்துறையினர்.
ஆயிரம் கேள்விகள் கேட்டிருந்தனர்.  ஆயிரம் ஆவணங்கள் கொடுக்க வேண்டியிருந்தது. “உங்களுக்கு பீஸ் கொடுக்க என்கிட்ட காசில்லை சார்”  என சொன்னவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. அவரது கண்ணில் கண்ணீர்.

ஒருவாரம் போராடி அவருக்காக  ஆஜராகி ஆவணங்கள் சமர்ப்பித்தேன்.  அவரை இனியும் தொந்தரவு செய்யாதீர் என கேட்டுக் கொண்டேன். “உங்கள் வாடிக்கையாளருக்கு சிரமமில்லாமல் காப்பது என் பொறுப்பு.” என்றார் அதிகாரி.

“ஆஹா! நம்மால் நல்ல விஷயம் நடந்ததே!” என மனதின் ஓரத்தில் லேசாக கர்வம் எழுந்தது தப்பு தான். ஆனால் அதற்காக இப்படியா?..

“என்னய்யா...ஆணவமா? நீ என்ன கிழிச்ச? தொலைச்சிருவேன் தொலைச்சி! எங்கிட்ட வெளையாடாத!?” யாரோ ஒரு வருமானவரித்துறை ஊழியை மற்றொரு ஊழியரிடம் சண்டையிடும்போது அவர்களைக் கடக்க முயன்றேன். சட்டென என் கையைப் பற்றினாள் அந்த ஊழியை. அவளுடன் இருந்த ஊழியர் மாயமாக மறைந்தார்.

“என்னுடன் வா!”

பக்கத்திலுள்ள அறைக்கு  இழுத்துச் சென்ற போதே அடையாளம் தெரிந்தது. அவள் பச்சைப்புடவைக்காரி.

“எப்போது இந்த கர்வம் வந்தது?”

அவளின் கால்களில் விழுந்தேன். “முனிவர், யோகியைக் கூட  விட்டு வைக்காத இந்த ஆணவம், இன்று இந்தக் கொத்தடிமையை பீடித்ததே... மன்னியுங்கள் தாயே!”

“கவலை வேண்டாம். உன் மனதில் அன்போடு சேர்த்து ஒரு புரிதலையும் உண்டாக்குகிறேன். அங்கே நடப்பதைப் பார்.
பெரிய கார்ப்பரேட் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு.  நெஞ்சை உலுக்கும் மரணத்தின் நெடி.

அறைக்கு வெளியே முப்பது வயதுப் பெண் ஒருத்தி கதறி அழ, அவளின் ஏழு வயது மகன் ரிஷி உள்ளே உயிருக்குப் போராடினான். அவனது தொண்டையில் துளையிடும் அறுவை சிகிச்சையை மறுநாளே செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்..  

அந்தப் பெண்ணுக்கு அழக் கூடத் தெம்பில்லை. மதுரையைச் சேர்ந்த அவள்,  பச்சைப்புடவைக்காரியிடம்  மனதைப் பறிகொடுத்தவள். இக்கட்டான அந்நிலையிலும் தெய்வத்தை பழிக்கவில்லை.  

“எனக்கென விதித்ததை அனுபவிக்கிறேன். ஆனால் அடுத்து என்ன செய்வது என மனம் தடுமாறுகிறது. வழிகாட்ட வேண்டும் தாயே”
இரவு ஒன்பது மணி. தீவிர சிகிச்சைப் பிரிவின் வெளியே அப்பெண் மட்டும் அழுதபடி நின்றாள்.

ரிஷிக்குப் பிறவியிலிருந்தே சர்க்கரை நோய் இருந்ததால் அதற்கான மருத்துவம் பார்க்க வந்திருந்தார். பரிசோதனை முடித்து விட்டு வந்தவரின் கால்களில் விழுந்தாள் ரிஷியின் தாய்.

“டாக்டரய்யா உங்களுக்கு தெரியுமா? நாளைக்கு என் செல்லத்துக்குப் பிறந்தநாளுங்க. ஒவ்வொரு வருஷமும் நிறைய பலூன்  பொம்மை எல்லாம் வாங்கி கேக் வெட்டி கொண்டாடு வோங்க.

இந்தப் பிறந்தநாளைக்கு அவன் தொண்டையையே வெட்டப்போறாங்களாயா... இது என்ன கொடுமை! ஆப்ரேஷன்ல ஏதாச்சும் ஆச்சுன்னா..”

“ கவலைப்படாதீங்க... என்னால என்ன செய்ய முடியும்னு பாக்கறேன்”

தலையாட்டினாள்  பாவப்பட்ட அந்தப் பெண்.காலை மணி ஆறு இருக்கும்.

“டாக்டர் உங்கள உள்ளே வரச் சொன்னாங்க” - தூங்கிய அப்பெண்ணை எழுப்பி உள்ளே அழைத்துச் சென்றாள்  நர்ஸ் ஒருத்தி.

ரிஷி இருந்த படுக்கையைச் சுற்றி பலூன்கள் கட்டப்பட்டிருந்தன. அறை முழுவதும் தோரணங்கள். அங்கு சிகிச்சை பெற வந்த சில குழந்தைகள் ரிஷியை வாழ்த்தியபடி நின்றனர்.  

இரண்டு கிலோ சாக்லேட் கேக் ஒன்றை ஸ்ட்ரெச்சரில் வைத்தபடி வந்தாள் ஒரு நர்ஸ்.

ரிஷியின் முன் கேக் வைக்கப்பட்டதும், குழந்தைகள் மெல்லிய குரலில் “ஹேப்பி பர்த்டே” பாடினர்.

“பாத்தியாம்மா?” ரிஷியின் குரலில் சந்தோஷம்.

ரிஷி கேக் வெட்ட எல்லோரும் கை தட்டினர். அந்த மருத்துவர் ரிஷிக்கு ஒரு பொம்மை பரிசு கொடுத்தார். மற்றவர்களுக்கும் பரிசுகள் கொடுக்கப்பட்டன.

அந்த தருணம் ரிஷி அனுபவித்த உண்மையான மகிழ்ச்சி அவனது உடலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது.  

சிறிது நேரம் கழிந்ததும் மருத்துவர்கள், தொண்டையில் துளையிடும் அறுவை சிகிச்சை தேவையில்லை எனக் கூறினர்.
ரிஷியின் தாய் அந்த மருத்துவரின் கால்களை கண்ணீரால் கழுவினாள். அவளின் சோதனை அத்துடன் முடியவில்லை.
ரிஷியின் தங்கைக்கும் அதே நோய் எனத் தெரிந்தவுடன் அவளுடைய கணவர் குடும்பத்தை விட்டு ஓடினார்.  பாவம் அவ்வளவாகப் படிக்காத அப்பெண் கஷ்டப்பட்டுத் தன் குழந்தைகளை வளர்த்து வருகிறாள்.  பச்சைப்புடவைக்காரியின் மீது பக்தியுடன் வாழ்கிறாள்,  

அவளது நிலை கண்ட  மருத்துவர் மனம் துடித்தார். ஏதாவது செய்ய வேண்டும் என பரபரத்தார். கண் எதிரில் துன்பப்படுபவர்களை அலட்சியப்படுத்தி விட்டு, லட்ச லட்சமாகச் சம்பாதிப்பதில் என்ன பயன் என வருந்தினார்.   

அறநிலையம் ஆரம்பித்து அதன் மூலம் சர்க்கரை நோய் பீடித்த குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளித்தால்... நோயால் வாடும் குழந்தைகளைக் காப்பாற்றுவதையே வாழ்வின் நோக்கமாக ஏற்றால்... அந்த கணப்பொழுது முதல் மருத்துவரின் மனதில் வேறு சிந்தனை எழவில்லை.

என் கண்ணில் வழிந்த நீரைத் துடைத்தேன்.

“உங்களின் கருணைக்கு உவமை சொல்லக் கூட பிரபஞ்சத்தில் எதுவுமில்லை தாயே! தவித்து நின்ற அந்த பெண்ணுக்கு உதவ தகுதியானவரை சரியான நேரத்தில் அனுப்பினீர்கள்.”

“யார் யாருக்கு உதவினார்கள் என நினைக்கிறாய்?”

“இதில் என்ன குழப்பம்? மருத்துவர் தானே அப்பெண்ணிற்கு உதவினார்”

“அது தான் இல்லை. அப்பெண்ணே மருத்துவருக்கு உதவினாள்.  மருத்துவமனையில் இரவு பகலாக உழைத்த அவருக்கு நல்ல வருமானம். நேர்மையான வாழ்க்கை.  ஆனால் இப்படிப் பணம் சம்பாதிப்பது, ஆடம்பரமாக செலவழிப்பது  என மாறி மாறிப் போகும் தன் வாழ்வுக்கு அர்த்தம் வேண்டும் என அவர் பிரார்த்தித்தார்.  உதவி புரிய இப்பெண்ணை அனுப்பினேன்.

நீ பார்த்த நிகழ்வு நடந்த சில நாட்களில், அவர் அந்த வேலையை உதறி விட்டு வேறொரு ஊருக்குச் சென்றார். சர்க்கரை நோயாளிகளுக்கு அறக்கட்டளை தொடங்கி நடத்துகிறார். இத்தனை காலம் கிடைக்காத மனநிறைவை இப்போது பெற்று விட்டார்.  அந்தப் பெண் போல பலருக்கும் உதவுகிறார். என் வாழ்வுக்கு அர்த்தம் கொடுத்தீர்கள் தாயே என தினமும் நன்றி கூறுகிறார்.

“ஒருவேளை அந்த மருத்துவர் கவனக்குறைவாக இருந்து, கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டால்... இல்லை என்னைப் போல் ஆணவத்தால் ஆடியிருந்தால்...”

“அவருக்கான வழியை தேர்ந்தெடுக்கும் வரை விடமாட்டேன். வாய்ப்பளித்துக் கொண்டேயிருப்பேன். சிலசமயம் அவர் நிலையை உணர்த்த வலி, வேதனையைக் கூடத் தருவேன். ”

“தெரியும் தாயே!  துன்பங்கள் எங்களை வாழ்விக்கத்தான் என்பது புரியாமல் நாங்கள் உங்களைக் “கல்நெஞ்சுக்காரி” என சொல்கிறோம். அதையும் வழிபாடாக கருதி ஏற்பீர்கள். உங்களின் அன்புக்குக் கொஞ்சமும் தகுதியற்றவர்கள் நாங்கள்! எங்களை உய்விக்கவே இவ்வளவு பாடுபடுகிறீர்கள்.”

“என்ன செய்வதப்பா? குழந்தை சாப்பிட மாட்டேன் என்றால் சும்மா விட முடியுமா?  சத்தான உணவைச் சாப்பிடும் வரை  ஓய மாட்டாள் தாய். சுவையில் குறைந்த சத்துணவு  உடலை எப்படி உறுதிப்படுத்துமோ அதே போல் துன்பம், சோதனைகள் உன் மனம், அறிவை உறுதிப்படுத்தும். இதை உணர்ந்தால் அகந்தை நோய் உன்னைத் தீண்டாது. அப்போது அந்தப் புத்தகத்தின் முத்தாய்ப்பான அத்தியாயத்தை எழுத முடியும்.”

யாருமே இல்லாத அறையில் என்னைத் தனியாக அழச் செய்துவிட்டு அவள் காற்றோடு கலந்தாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.