Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தர்மம் செய்தால்
 
பக்தி கதைகள்
தர்மம் செய்தால்

ஒவ்வொரு உயிரிலும் ஆண், பெண் என்ற பாகுபாடு உண்டு. ஆனால் மனிதனிடம் பறவையோ, விலங்கோ பிறப்பதில்லை. அதே போல் யானையின் வயிற்றில் சிங்கமோ, சிங்கத்தின் வயிற்றில் புலியோ, புலியின் வயிற்றில் பாம்போ பிறப்பதில்லை. சிந்தனை என்ற ஒன்று மட்டும் மனிதனுக்கு உள்ள சிறப்பான குணம்.  இது மனிதனை எப்படி எல்லாம் ஆட்டிப்படைக்கிறது என்பது யோசிக்க வேண்டிய விஷயம். மனிதனுக்குரிய மற்றொரு சிறப்பு குணம் நகைச்சுவை.  அனுபவித்துச் சிரிக்க, ரசிக்க மனிதனுக்கு மட்டுமே தெரியும். மற்றவற்றுக்கு இரை தேடி அலைந்து பசியை தீர்த்துக் கொள்ளத் தான் தெரியும்.

மனிதன் மட்டும் உயர்ந்த இடத்தில் இருக்கிறான் என்பதற்கு அழகான பாட்டு உண்டு. மனிதனை உயர்ந்த சிம்மாசனத்தில் உட்கார வைக்கும் பாட்டு அது. “மனிதன் என்பவன் தெய்வமாகலாம்” என்பது அதன் முதல் வரி. மனிதன் தெய்வமானால் தெய்வங்களுக்கு என்ன வேலை? மனிதன் குணத்தால் அந்நிலைக்கு உயரலாம். வாரி கொடுத்தால் வள்ளல் ஆகலாம். வாழை போல தன்னைத் தந்து தியாகியாகலாம். உருகியோடும் மெழுகைப் போல ஒளியை வீசலாம். மனிதனால் மட்டுமே இதை எல்லாம் செய்ய முடியும். வாரிக் கொடுக்க நல்ல மனம் வேண்டும். ஆனால் ஒரு பாட்டி இருந்தாள். எச்சில் கையால் கூட காக்கை ஓட்டாத கருமி. இறப்புக்கு பின்னர் சிவபெருமானின் முன்னிலையில் நிறுத்தப்பட்டாள். அவளது பாவபுண்ணிய ஏட்டை எடுத்தார் சித்திரகுப்தர். சொர்க்கமா நரகமா என தீர்ப்பளிக்கும் நேரம் வந்தது. பாட்டிக்கோ சிவனைக் கண்டதும் ஆனந்தம் பொங்கியது.

அவசரக் குடுக்கையான அவள்,  தனக்கு வேண்டிய வரங்களை தரப் போகிறார் என நினைத்தாள். “ சுவாமி... நான் சொர்க்கத்துக்குப் போக வேண்டும்” என்றாள். அப்போது சிவன் ““சித்திரகுப்தா, பாட்டியின் கணக்கை பார்த்தாயா?” என்றார்.

“சுவாமி...ஒரு புண்ணியம் கூட இவள் செய்யவில்லையே” என்றார்.

இடைமறித்த பாட்டி, “பொய் சொல்லுகிறார்” என கத்தினாள்.
“சித்திரகுப்தர் பொய் சொல்ல மாட்டார். களவு, காமம், பொய்க்கு சொர்க்கலோகத்தில் இடம் கிடையாது. ஏதாவது புண்ணியம்  செய்திருந்தால் மட்டுமே அங்கு போகலாம்” என்றார் சிவன்.

“சுவாமி ஒருமுறை என்னிடம் இரு வாழைப்பழங்கள் இருந்தன. ஒன்று அழுகியும், இன்னொன்று அழுகும் நிலையிலும் இருந்தது. நல்ல பழத்தை தின்றுவிட்டு, சுமாரான பழத்தைப் பிச்சைக்காரனுக்கு கொடுத்தேன்” என்றாள் பாட்டி.

புன்னகை புரிந்தார் சிவன். அதையே சொர்க்கத்திற்குப் போகும் அங்கீகாரமாக எண்ணி மகிழ்ந்தாள் அவள்.

“சித்திரகுப்தா... எம் ஐந்தெழுத்து மந்திரத்தை ஒரு முறையாவது கூறியதுண்டா இவள்?” எனக் கேட்டார் சிவன்.

கிழவியை சட்டென்று நரகத்திற்கு அனுப்பாமல், கேள்வி கேட்டு நேரத்தைக் கடத்துகிறாரே என எண்ணிய சித்திரகுப்தர், “சுவாமி, அக்கம்பக்கத்தில் சண்டை போடவே  கிழவிக்கு நேரம் போதாது.  சிவநாமம் சொல்ல நேரமேது?” என்றார்.சிவனாரின் கேள்வி தொடர்ந்தது.

“பாட்டி சேர்த்த பணக்குவியல் எங்கே இருக்கிறது?”

“தன்னுடைய பணத்தை எடுத்துக் கொள்ள திட்டமிடுகிறாரோ” என சந்தேகம் கொண்ட பாட்டி, “அதைப் பத்தி இப்ப என்ன கேள்வி? சொர்க்கத்திற்கு அனுப்ப முடியுமா? முடியாதா?” என கறாராக கேட்டாள்.

“இன்று உன்னுடையதாக இருக்கும் செல்வம் நாளை வேறு ஒருவருடையதாகி விடும். புதைத்த பணம் உயிரோடு
இருக்கும் வரை தான் பயனளிக்கும். இறந்த பின்னும் அதை தன்னுடையதாக கருதும் பாட்டியின் மூடத்தனத்தை என்ன சொல்வது?” என எண்ணிய சிவன் தன் திருவிளையாடலை தொடங்கினார். கையை நீட்டி  வாழைப்பழத்தை வரவழைத்து, பாட்டியிடம் கொடுத்தார்.

“இந்த பழத்துடன் நிதானமாக சொர்க்கலோகம் போகலாம்” என்றார்.

பழத்துடன் மெல்ல மேலே பறந்தாள் பாட்டி.

அழுகிய பழத்தை கொடுத்த எனக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா... பூமியில் முட்டாள் ஜனங்கள் தானம், தர்மம் என்ற பெயரில்  ஏதேதோ பண்ணுகிறார்களே... நான் எவ்வளவு புத்திசாலி? என மகிழ்ந்தாள்.

போகும் வழியில்  நரகத்தை தாண்ட வேண்டியிருந்தது. பாட்டி சொர்க்கம் போவதை அறிந்த நரகவாசியான இளைஞன் ஒருவன் சட்டென எம்பி பாட்டியின் கால்களைப் பிடித்துக் கொண்டான்.

“டேய் என்னை விடுடா...நானே ஒரு அழுகின பழத்தை தர்மம் பண்ணியதால் சொர்க்கம் போறேன். அதைக் கூட தர்மம் பண்ணாத நீ சொர்க்கத்தை நினைச்சுக் கூட பார்க்கக் கூடாது” என்று சொல்லி காலை உதறியும் இளைஞன் விழவில்லை. அந்தளவிற்கு உடும்புப் பிடியாக பிடித்திருந்தான்.   

இங்கே பாட்டி தன்னை அறியவில்லை. இளைஞன் பாட்டியை அறியவில்லை. “உன்னை அறிந்து கொள்” என்று யாரும் அவர்களுக்கு சொல்லவில்லை. இளைஞனை சொர்க்கத்திற்கு அழைத்துப் போகும் நல்லகுணம் பாட்டிக்கு இல்லையே? பாட்டி பழத்தை விட்டு விட்டாள். இருவரும் நரகத்தில் விழுந்தனர்.

தனக்கு இரு கண்கள் போனாலும், மற்றவனுக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என நினைப்பது கூடாது. தன்னை அறிந்து சுயபரிசோதனை செய்தால் மட்டுமே மற்றவர்களை அறிய முடியும். உலகமும் நம் கண்ணுக்கு பளிச்சென்று தெரியும். மற்றவர் துன்பத்தை உணர்பவன் தான் நல்ல மனிதன். இதை எல்லாம் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே பெற்றோர் சொல்லித் தர வேண்டும்.

பள்ளிக்கூடம் ஒன்றை பார்வையிட முக்கிய பிரமுகர் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தார்.  மாணவர்கள் சிலரைக் கண்ட அவர் அதிர்ச்சியில் ஆழ்ந்தார். சிலர் கண்களைக் கட்டியபடி பார்வையற்றவர்களாக நடந்தனர். சிலர் கால் இல்லாதவர்கள் போல தடுமாறிச் சென்றனர். ஒரு மாணவனை அவர் அழைக்க, அவன் கேட்புத்திறன் அற்றவனாக போனான்.

ஒரு மாணவியை அழைத்து, “என்னம்மா இதெல்லாம்?” எனக் கேட்டார். அவளும் “பெப்பே” என சைகை காட்டினாள். தலைமையாசிரியரிடம் விசாரித்தார் பிரமுகர். “மாற்றுத்திறனாளிகளின் கஷ்டம் தெரிந்து உதவி பண்ணனும்னு, நாங்க தான் மாணவர்களை மாற்றுத்திறனாளிகள் போல நடிக்க வைக்கிறோம்.” என்றார் அவர்.  மற்றவர் கஷ்டங்களை உணர பயிற்சி தேவை தானா? கடவுள் மட்டும் தான் மனிதர்களின் துயரைத் தீர்க்க வேண்டுமோ! மனிதர்களே  ஒருவருக்கொருவர் உதவி செய்தால் கடவுளாகலாமே!   – லட்சுமி ராஜரத்னம்


 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.