Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » காஞ்சிப்பெரியவர்
 
பக்தி கதைகள்
காஞ்சிப்பெரியவர்

நடமாடும் தெய்வம், கலியுக தெய்வம், கண்கண்ட தெய்வம் என்னும் அடைமொழிகள் எல்லாம் காஞ்சிப்பெரியவரை மட்டுமே குறிக்கக் கூடியவை. லட்சக்கணக்கான பக்தர்கள் அவருக்கு சூட்டி அழகு பார்த்த திருநாமங்கள் இவை. ஆதிசங்கரர் நிறுவிய பீடங்களுள் ஒன்று காஞ்சி காமகோடிபீடம். ஆதிசங்கரரை முதல் குருவாகக் கொண்ட இந்த பீடத்தில், 68வது பீடாதிபதியாக விளங்கியவர் காஞ்சிப்பெரியவர் என்னும் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.  யாத்திரையிலோ, மடத்திலோ, வெளியூர் முகாமிலோ பெரியவரைத் தரிசிக்கும் பேறு பெற்ற பக்தர்கள், ’தெய்வத்தை நான் நேரில் தரிசித்திருக்கிறேன்’ என பெருமையுடன் சொல்லி மகிழலாம்.  பெரியவரை எவ்வளவு தூரத்தில் இருந்து பார்த்திருந்தாலும் இது பொருந்தும்.  அந்த அளவுக்கு வாழ்ந்த அப்பழுக்கற்ற மகான் இவர். எளிமை, தூய்மை, பரோபகாரம், மனிதநேயம் என நற்பண்புகளை எல்லாம் எண்ணம், சொல், செயல்களில் பின்பற்றியவர்.  சந்நியாசம், சனாதன தர்மத்தில் என்ன விதித்திருக்கிறதோ... அதில் இம்மியும் பிசகாமல் வாழ்ந்தவர். இவர் போல் இன்னொருவர் வாழ முடியுமா? இவர் மாதிரி ஒருவர் அவதரிப்பாரா? எனில் அதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். மகாப்பெரியவர் மகாப்பெரியவர் தான்!

ஒரு சூரியன். ஒரு சந்திரன். ஒரு மகாப்பெரியவர். நூறாண்டுகளைப் பூர்த்தி செய்வதற்கு நான்கு மாதங்களுக்கு முன் ஸித்தி அடைந்தார்.  அவரது பிரிவைத் தாங்காமல் மக்கள் கண்ணீர் விட்டு அழுதனர். அன்று கல்வீச்சு இல்லாத கடையடைப்பு காஞ்சிபுரத்தில்.  அஞ்சலி செலுத்திய பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்குத் தன்னார்வத் தொண்டர்கள்  தாமே முன்வந்து உணவு வழங்கினர்.  கடைசியாக அந்த மகானின் திருமுகத்தை  பார்க்க வேண்டும் எனக் கண்ணீருடன் காத்திருந்த அஞ்சலிக் கூட்ட வரிசை பல கிலோமீட்டர் தொலைவுக்கு நின்றது. தமிழக சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானமும் நிறைவேறியது.  இன்றும் இவரது பிருந்தாவனத்தை (ஜீவ சமாதி) தரிசிக்க தினமும்  பக்தர்கள் காஞ்சிபுரத்திற்கு வருவதோடு இயன்ற காணிக்கைகளை வழங்கி ஆசி பெறுகின்றனர்.   பெரியவரின் திருவடிகளைப் பற்றி நிற்பவர்கள் ஒரு நாளும் கைவிடப்பட்டதில்லை.
’ஏழைகளுக்கு எல்லாமும் கிடைக்க வேண்டும்’ என எப்போதும் சிந்தித்தார். அந்த மகானின் ஆராதனை தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில் அவருடன் தொடர்புடைய ஒரு அனுபவத்தைப் பார்ப்போம். முருகபக்தர் சாண்டோ சின்னப்பதேவர் ’தெய்வம்’ என்னும் திரைப்படத்தைத் தயாரித்து  வெளியிட்டிருந்தார்.  புராணத் திரைப்படங்களை ரிலீஸ் செய்யும் காலம் அது. ’தெய்வம்’ படம் ஊரெல்லாம் சக்கைப்போடு போட்டது. அறுபடை வீட்டு முருகன் கோயில்களில் நடக்கும் திருவிழா, முருகனின் திருவிளையாடல்கள் மற்றும் ஆறுபடை வீடுகளிலுள்ள தெய்வத் திருமேனிகளை தத்ரூபமாக வடிவமைத்துப் படமாக்கியிருந்தார் தேவர்.  படத்தைப் பார்த்தவர்கள் பக்திப்பரவசம் கொண்டனர்.  முருகன் திரையில் தோன்றும் நேரமெல்லாம், கண்கள் பனிக்க  கன்னத்தில் இட்டுக் கொண்டனர்.  சிலர் கற்பூரம் காட்டி ஆராதித்தனர்.  இந்த தகவல்கள் பெரியவரின் காதுக்கும் போகவே, படத்தை பார்த்த பக்தர்களை அழைத்து விபரம் அறிந்தார்.   அவரது மனதில் ஓர் எண்ணம் உதித்தது.

அது ஒரு ஐப்பசி மாத கந்தசஷ்டி விரதக்காலம். காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் சஷ்டி விழா தொடங்கியது.  காஞ்சிபுரம் பக்தர்கள் ஆறுபடை முருகன் கோயிலுக்கு  போயிருப்பார்களா என்ன? இவர்களில் எத்தனை பேர் ஏழைகளாக இருப்பார்கள்... அவர்களுக்கு குமரக்கோட்டம் குமரன் தான் எல்லாம்! எனவே கந்தசஷ்டிக்கு குமரக்கோட்டம் முருகனைத் தரிசிக்க வருவோருக்கு ஆனந்த அதிர்ச்சி தர வேண்டும் எனத் தீர்மானித்தார்.  எப்படி தெரியுமா? ’தெய்வம்’  படத்தில் உலா வந்த அறுபடைவீட்டு முருகனின் திருமேனிகளை எடுத்து வந்து அலங்காரமாக அமைக்க விரும்பினார்.  சின்னப்பதேவரை சந்திக்க சென்னைக்கு ஆள் அனுப்பினார். மருதமலைக்கு கிளம்பிக் கொண்டிருந்த தேவர் மடத்தின் ஊழியரைக் கண்டு மனம் பூரித்தார். கைகளை கூப்பி காஞ்சிப்பெரியவரை வழிபட்டு, “நான் என்ன செய்ய வேண்டும்?” எனக் கேட்டார்.

எல்லாவற்றையும் விரிவாக எடுத்துச் சொன்னார் ஊழியர்.  தெய்வமே! எனக்கு அளித்த பேறு இது! வாகினி ஸ்டூடியோவில் தான் முருகன் சிலைகள் உள்ளன. உடனே ஆள் அனுப்பி லாரியில் காஞ்சிபுரம் அனுப்பறேன்” என மனம் நெகிழ்ந்தார் தேவர்.  தன் மேற்பார்வையில் எல்லாம் சிறப்பாக நடக்கும் என சொன்னதோடு, தன் பணியாளர்களை அனுப்பி விஷயத்தை தெரிவித்தார்.  வாகினி ஸ்டூடியோ புறப்பட்ட அவர்கள், சிலைகளை ஜாக்கிரதையாக எடுத்துக் கொண்டு காஞ்சிபுரம் பயணித்தனர். பிறகென்ன... படத்தில் எப்படி அமைத்தார்களோ, அது போல முருகன் சன்னதிகளை தத்ரூபமாக அமைத்தனர். கந்தசஷ்டியன்று குமரக்கோட்டத்தில் அறுபடை வீட்டு முருகனையும் பரவசத்துடன் தரிசித்த பக்தர்கள் மனம் நெகிழ்ந்தனர்.  காணிக்கைகளை வாரி வழங்கினர். அப்பணத்தில் அன்னதானம் அளிக்க உத்தரவிட்டார் காஞ்சிப்பெரியவர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.