Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நல்லவன் வாழ்வான்
 
பக்தி கதைகள்
நல்லவன் வாழ்வான்

மதிய உணவிற்குச் செல்லலாம் என எழுந்தபோது புயலாக நுழைந்தான் நண்பன் ராமமூர்த்தி. அரசு அலுவலகத்தில் வேலை செய்கிறான். “யோவ் இனி பச்சைப்புடவைக்காரி பத்தி எழுதின வெட்டிப் போட்ருவேன். நாம கத்தறது எதுவும் அவ காதுல விழாது.  உலகத்துல நடக்கற எந்த அநியாயமும் அவ கண்ணுக்குத் தெரியாது. அவளப் போய்க் கருணைக்கடல்...அது இதுன்னு...” அழுகையை அடக்கியபடி, “என்னாச்சு?” “எங்க செக் ஷன்ல 12 பேர் வேலை செய்யறோம். எங்க ஆபீஸ்ல மேஜை, நாற்காலி கூட லஞ்சம் வாங்கும். ஆனா நான் வாங்கினது கிடையாது. ஆனா எனக்கு வர வேண்டிய ப்ரமோஷனை, பத்துவருஷ ஜூனியர் ஒருத்தனுக்குக் கொடுத்துட்டாங்க.  என்ன ஓசூருக்குத் துாக்கியடிச்சிட்டாங்க. என்ன செய்வேன்? பச்சைப்புடவைக்காரியால கிடைச்சது இதுதானா...”

அன்று மாலை என் மனைவிக்குப் புடவை வாங்கச் சென்றிருந்தேன். புடவை தேர்வு செய்ய ஒரு மணி நேரமாகும் என்பதால்  கையில் இருந்த புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன். கல்லாப்பெட்டியில் இருந்த பெண் கடை முதலாளியாக இருக்க வேண்டும். அவள் புன்னகைத்த போது தான் ’ஆஹா! இந்தப் பிரபஞ்சத்துக்கே முதலாளியாயிற்றே இவள்’  என்பதை உணர்ந்தேன். “என்ன! நண்பனின் புலம்பல் இன்னும் காதில் ஒலிக்கிறதோ?” “ஆம் தாயே! பலரின் பிரச்னையும் இது தான். தப்பு செய்தவன் நன்றாக இருக்கிறான். ஆனால் நேர்மையானவன் கஷ்டப்படுவது. ஏன் தாயே?” ”அங்கே நடப்பதைப் பார்”

மகேஸ்வரிக்கு விவாகரத்தாகி விட்டது. அரசு அலுவலகத்தில் பணிபுரியும் அவள், ஆன்மிகச் சொற்பொழிவு செய்வாள்.
பத்திரிகைகளில் கட்டுரை எழுதுவாள். அவளது ஒரே மகன் ரிஷி கல்லூரியில் படிக்கிறான். மகனுக்கு ஆன்மிக உணர்வையும், ஒழுக்கத்தையும் ஊட்டி வளர்த்தாள் மகேஸ்வரி. தினமும் கல்லூரி விட்டு வந்ததும், அங்கு  நடந்ததை எல்லாம் சொல்வான்.  ஒவ்வொரு மாணவனின் நடவடிக்கையையும் ஆராய்ந்து பார்த்து அவன் செய்தது சரியா, தவறா எனச் சொல்வாள் மகேஸ்வரி.  ஒருநாள் சீக்கிரமாகவே வந்தான் ரிஷி. மகேஸ்வரி ஆபிஸ் முடிந்து வர இரவு ஏழானது. தாயைப் பார்த்ததும் ஓடிவருபவன் சற்று விலகியே நின்றான். ஏதோ பிரச்னை என்பது புரிந்தது. அவனுக்காக சில ஏற்பாடுகளைச் செய்திருந்தாள். இந்நிலையில் எல்லாம் சொதப்பலாகி விடுமே எனத் தோன்றியது. “ரிஷி என் கூடக் கொஞ்சம் வெளியே வர்றியா?”

தாயின் கோரிக்கையை தட்ட மனமில்லை. மகேஸ்வரி கார் ஓட்ட அருகில் அமர்ந்தான் ரிஷி. “ ரிஷி ஏன் உம்முன்னு இருக்க? எங்கிட்ட சொல்லு. முடிஞ்சா ஹெல்ப் பண்றேன்.” “அம்மா, இன்னிக்குக் காலேஜ்ல ஒரு பார்ட்டி. அருண் தெரியும்ல? தொழிலதிபர் ராமகிருஷ்ணனோட மகன். அவன் கொடுக்கற பிறந்தநாள் பார்ட்டி. மொத்த க்ளாசும் போகுது. எல்லாருக்கும் வாட்ச், கூலிங் கிளாஸ் கிப்ட் கொடுக்கப் போறாங்களாம்.” “உன்னை கூப்பிடலியா?” “இல்லம்மா. வெக்கத்தவிட்டு அவன்கிட்ட கேட்டேன். ஆனா அவன்...” “என்ன சொன்னான்?” “மிஸஸ் மகேஸ்வரியோட மகன் வர்ற மாதிரி பார்ட்டி இல்ல இது. இன்னொரு நாள் உனக்கு தயிர்ச்சாதம், மாங்கா ஊறுகாயும் வச்சி ஒரு பார்ட்டி கொடுக்கறேன். அதுக்கு நீ சீப் கெஸ்ட்னு கேலி பண்ணாம்மா. எல்லாரும் சிரிச்சாங்க.”
மகேஸ்வரி காரை ஓரம் கட்டினாள்.  ரிஷி ஏன் ஒதுக்கப்படவேண்டும்?  கோபம் வந்தாலும் பின்னர் மனம் தெளிந்தாள்.  ரிஷியின் தோளில் கைவைத்து, “ பார்ட்டில ஏதோ வில்லங்கம் இருக்கப்போகுதுன்னு தெரியுது. பசங்க சிகரெட் குடிப்பாங்களோ?”

“நிச்சயமாம்மா.”
“தண்ணி?”
“அதுவும் இருக்கும்.”
“நாம ஏத்துக்கிட்டு இருக்கற வாழ்க்கை விதிகள்ல சிகரெட், தண்ணி இதையெல்லாம் தள்ளி வச்சிருக்கோம்ல?”
“ஆமாம்மா.”
“ஒருவேளை வாழ்வில விதிகளே இல்லாம இருந்திருந்தா நல்லா இருக்கும்ல?”
மவுனம் சாதித்தான் ரிஷி.
“உனக்கு 18 வயசாச்சு ரிஷி. நீ மேஜர். அதனால இந்த விதிகள் பிடிக்கலேன்னா வேண்டாம்ப்பா. விட்ரு. அம்மா தப்பா நினைக்கமாட்டேன்.”
அம்மாவின் கண்களைப் பார்த்தான் ரிஷி. ’எனக்காக மறுமணம் செய்யாமல் என்னை வளர்ப்பதை தவமாகச் செய்து கொண்டிருக்கிறாள். இரவு பகல் பாராமல் எனக்காக உழைக்கிறாள்.   இவள் வகுத்த கடுமையான விதிகளினால் தானே  தொடர்ந்து  முதல் மாணவனாக என்னால் இருக்க முடிகிறது? ஒளிமயமான எதிர்காலம் எனக்கு இருக்குன்னு ஆசிரியர்கள் சொல்வதற்கும் இவள் தானே காரணம்? “அம்மா!  பிரண்ட்ஸ் என்னை ஒதுக்கி வைச்சாலும், இந்த விதிகள் எனக்கு பிடிச்சிருக்கும்மா. பரிட்சை வைக்கிறது கஷ்டம் தான் என்றாலும் எழுதாம இருக்கமுடியுமா? அப்பறம் எப்படி பாஸ் பண்றது?” மகனை கட்டிக் கொண்டாள் மகேஸ்வரி.  அன்பால் கட்டுண்ட மகேஸ்வரி கடிகாரத்தைப் பார்த்தாள்.  “நேரமாச்சு ரிஷி. நாம கிளம்பலாம்” “எங்கம்மா?” “போனா தன்னால தெரியும்.”  குறும்புச் சிரிப்புடன் சொன்னாள். ஒரு ஓட்டலின் முன் நின்றது கார். அங்கிருந்த அரங்கம் வண்ணத் தோரணம், பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மகேஸ்வரியும், ரிஷியும் உள்ளே நுழைந்ததும் இருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர். ரிஷியின் ஆசிரியர்கள், அவனுடன் படிக்கும் மாணவர்கள் பலர் இருந்தனர். பெரிய கேக் ஒன்றும் இருந்தது.  “என்னம்மா இதெல்லாம்?” “நட்சத்திரப்படி இன்னிக்கு உனக்கு 18வது பிறந்த நாள். அதான் இந்த கொண்டாட்டம்.  உனக்காக வாங்கியிருக்கற புது டிரஸ், ரொம்ப நாளா நீ கேட்டுக்கிட்டு இருந்த லேப்டாப் கூட இருக்கு. போய் டிரசை போட்டுட்டு வா!”

’அம்மா’ என  விம்மலுடன்  கட்டிக்கொண்டான் ரிஷி. நானும் ரிஷியின் மனநிலையில் இருந்தேன். “உன் நண்பனிடம் என்ன சொல்லப் போகிறாய்?”
“முட்டாள்... லஞ்சம் வாங்குவோரின் கொண்டாட்டத்தில் உன்னைச் சேர்க்கவில்லையே என என் தாயைத் திட்டினாயே, நன்றி கெட்டவனே!  அந்தத் தாய்  உனக்கென கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறாளடா. அதில் நல்லவர்கள் மட்டுமே கலந்துகொள்ளப் போகிறார்களடா.  உன் வாழ்வே ஒளிமயமாக்கும் பரிசை தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறாளடா. அவளை நாக்கில் நரம்பில்லாமல் பேசினாயே! “ இனி நடப்பதையும் காட்டுகிறேன். நண்பனிடம் சொல்ல வேண்டாம்.’ ராமமூர்த்தி வேலை பார்த்த மதுரை அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் லஞ்சம் வாங்கியவர்கள்  சிக்கிக் கொண்டனர். மதுரைப் பிரிவுக்கு  தலைமை அதிகாரியாக ராமமூர்த்தி மாற்றப்பட்டார். அதிக சம்பளம், கார், விமானப்பயணம் என நல்ல வாழ்க்கை காத்திருந்தது. “இதெல்லாம் நடக்க ஐந்தாண்டு ஆகும். அதுவரை உன் நண்பன் ஒழுங்காக இருந்தால் கிடைக்கும். ஏதோ கேட்க வேண்டும் எனத் தோன்றுகிறதோ?” “ஆம் தாயே! குலசேகராழ்வார் கேட்டது தான். வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாக் காதல் நோயாளன் போல் மகாமருத்துவச்சியான நீங்கள் என்னை அறுத்தாலும், சுட்டாலும் உங்களையே நினைக்கும் உள்ளம் வேண்டும்.”

“இந்தாங்க புடவை பில்லு. பணம் கட்டிருங்க.” மனைவி வந்தாள். கல்லாவில் பணத்தை கட்டிய போது எனக்கு மட்டும் தெரியும்விதத்தில் கண்சிமிட்டினாள் அந்தக் கனகாம்பிகை.


 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.