Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நினைத்துப்பார் உண்மை புரியும்
 
பக்தி கதைகள்
நினைத்துப்பார் உண்மை புரியும்

நாம் எங்கிருந்து வந்தோம்? எங்கே போகப் போகிறோம்? பதில் தெரியாத கேள்விகள். மரணம் என்பது தண்டனை என்கிறார்கள் சிலர். ஆனால் உண்மையல்ல. உலகம் என்னும் நாடக மேடையில் நாம் நடிக்க வந்திருக்கிறோம். நாடகம் முடிந்ததும் வேஷத்தை கலைத்து விட்டு இங்கிருந்து விடைபெறுகிறோம். இதை ’வீடுபேறு’ என்கிறது ஆன்மிகம். குடும்பத்தின் புதுவரவாக குழந்தை பிறந்ததும் ஜோசியரிடம் ஜாதகம் கணிப்பார்கள். எதிர்கால வாழ்வு குறித்து அறிவதில் ஆர்வம் காட்டுவார். அப்போது கேட்கும் முக்கிய கேள்வி என்ன தெரியுமா? ”குழந்தையின் ஆயுள் எப்படி? என்பது தான் அது. ”தீர்க்க ஆயுசு...கவலைப்படாதீங்க!” என ஜோசியர் சொல்லும் வரை பெற்றோர் மனம் சும்மா இருக்காது. அவர்களைப் பொறுத்தவரை அது தான் கல்வெட்டுச்செய்தி. இப்படித்தான் ஒருமுறை சோழநாட்டில் ராணி கர்ப்பம் தரித்தாள். அவளுக்கு பிரசவ வலி வரவே மருத்துவச்சிகள் வரவழைக்கப்பட்டனர். மன்னர் பரபரப்புடன் நடை போட்டுக் கொண்டிருந்தார். அரண்மனை ஜோதிடர் உள்ளிட்டோர் ஒன்று கூடினர்.   ”ஜோதிடரே! ராணிக்கு சுகப்பிரசவம் நடக்கும் தானே!”

”கண்டிப்பாக மன்னா சுகப்பிரசவம் தான்! ராணியின் ஜாதகப்படி ஒரு விஷயத்தை சொல்லலாமா?” என்றார் ஜோதிடர்.
”ம்...சொல்லுங்கள்” ”இன்னும் ஒரு முகூர்த்த நேரம் அதாவது ஒன்றரை மணி நேரம் கழித்து குழந்தை பிறக்கும் என கணித்தோம் ’மழைப்பேறும், பிள்ளைப்பேறும் மகேசனுக்கும் தெரியாது’ என பெரியவர்கள் சொல்வது உண்மையாகி விட்டது. ஆனால் நாங்கள் கணித்தநேரத்தில் குழந்தை பிறந்தால் அவன் சிவபக்தனாக  பல திருக்கோயில்களை எழுப்பி எதிர்காலத்தில் புகழ் பெறுவான்” என்றார் ஜோதிடர்.

”குழந்தை நல்லபடியாகப் பிறந்தால் போதும்” என்றார் மன்னர். ராணி இருந்த அறையின் ஜன்னல்கள் திறந்திருந்ததால் ஜோதிடர் சொன்ன விஷயங்கள் ராணியின் காதில் விழுந்தன.   பணிப்பெண்களை அழைத்த ராணி, தன்னை தலைகீழாக கயிற்றால் கட்டி ஒரு முகூர்த்த நேரத்திற்கு தொங்கவிடும்படி உத்தரவிட்டாள். பணிப்பெண்களும் அரைமனதுடன் சம்மதித்தனர். கேள்விப்பட்ட மன்னர் தடுக்க வந்தார். ஆனாலும் ராணி ஏற்கவில்லை.
”என் மகன் சிறந்த சிவபக்தனாக விளங்க வேண்டும்” என்பது ராணியின் கடைசி விருப்பமாக இருந்தது.  குழந்தை பிறந்தது. ஆனால் தாயின் முகம் பார்க்கவில்லை. ”ஒரு முகூர்த்த நேரத்திற்கு முன்னரே பிரசவித்திருந்தால் ராணி உயிரோடு இருந்திருப்பார். ஆனால் சொல்லக்கூடாத ஒன்றை ராணியின் காதுகளில் விழச் செய்ததும் விதியின் கட்டளைபோலும். சில விஷயங்களை வெளிப்படையாக சொல்வது கூடாது.   குழந்தை தாமதமாகப் பிறந்தால் தாயின் உயிருக்கு ஆபத்து நேரும் என்பது தெரிந்தும், அதைச் சொல்லாமல் குழந்தையின் எதிர்காலம் குறித்து மட்டும் சொன்னேன். விதி வகுத்த பாதையில் ராணியும் முடிவைத் தேடிக் கொண்டார்.” என்றார் ஜோதிடர். இந்த குழந்தையே  பிற்காலத்தில் ’கோச்செங்கட்சோழன்’ என்னும் பெயரில் சிவபக்தராக சோழதேசத்தை ஆட்சி செய்தார்.  யானை ஏற முடியாத விதத்தில் 70 மாடக்கோயில்களை எழுப்பினார். விதி விளையாடும் போது அங்குள்ளவர்களின் கண்களைக் கட்டி விடும். இதுவே உலகம் என்னும் நாடக மேடையில் நடக்கும் விதியின் விளையாட்டு.

விதிப்படி நடந்த கதையைப் பார்த்தோம். விதியை மீறி நடந்ததை இனி பார்க்கலாம். இளைஞன் ஒருவன்  மாலைப்பொழுதில் ஜோதிடரைப் பார்க்கச் சென்றான். அவன் மனதில் எத்தனையோ எதிர்பார்ப்புகள். அத்தனைக்கும் விடை கிடைக்கும் என்ற ஆசையில் வேகமாக நடந்தான். ஆனால்  ஜாதகத்தை பார்த்த ஜோதிடர் திடுக்கிட்டார். ஓரிரு நாளில் உயிருக்கு கண்டம் இருப்பதை உணர்ந்தார். ”அப்பா! அவசர வேலையாக வெளியில் செல்ல வேண்டியிருக்கிறது. இன்னும் பத்து நாள் கழித்து வா. விரிவாகப் பலன் சொல்கிறேன்” என்றார். இளைஞனும் புறப்பட்டான். ஊரை கடந்து செல்லும் வழியில் ஈரக்காற்று வீசியது. சிறிது நேரத்தில் வானம் இருண்டது. இடி, மின்னலுடன் மழை ஆரம்பித்தது. ஒதுங்க நினைத்தவன், அருகில் தென்பட்ட சிவன் கோயிலுக்குள் நுழைந்தான். மன்னர் காலத்தைச் சேர்ந்த பாழடைந்த கோயில் அது.  ”எந்த புண்ணியவான் இந்த கோயிலைக் கட்டினாரோ? என்னிடம் மட்டும் பணம் இருந்தால் இக்கோயிலை புதுப்பித்து விமரிசையாக கும்பாபிஷேகம் நடத்துவேனே? ஆனால் இப்போது விளக்கேற்ற எண்ணெய் கூட இல்லாமல் சன்னதி இருண்டு கிடக்கிறதே! ’கோயில் விளங்க குடி விளங்கும்’ என்று பெரியவர்கள் சொல்வார்களே!” இளைஞனின் மனம் வருந்தியது.  கருவறையில் கேட்பாரற்று வீற்றிருந்த சிவனை கைகுவித்து வணங்கி விட்டு முன்மண்டபத்தில் அமர்ந்தான். மீண்டும் ஒருநாள் கோயிலுக்கு வந்து நிம்மதியாக தரிசித்து செல்ல வேண்டும் என எண்ணினான்.  

அப்போது அந்த மண்டபத்தூணின் அருகில் ’உஷ்... உஷ்’ என்ற சப்தம் கேட்டது. ஏதும் தெரியாததால் கூர்ந்து பார்த்தான். பாம்பு ஒன்று படமெடுத்தபடி நெருங்கி வந்தது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தான். மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க வீடு வந்து சேர்ந்தான்.  மனதிற்குள் பாழடைந்த கோயில் படம் போல ஓடியது.  பாம்பு மீது பயம் ஒருபுறம் என்றாலும் சிவன் மீதுள்ள பக்தியால் அந்தக் கோயிலை சீர்படுத்த வேண்டும் என்ற எணணம் மேலிட்டது.
ஜோதிடர் சொன்ன பத்துநாள் முடிந்ததும், மீண்டும் புறப்பட்டான். வழியில் மீண்டும் சிவன் கோயிலுக்குள் நுழைந்தான்.  பக்தியுடன் சுவாமியை வலம் வந்து வணங்கி விட்டு ஜோதிடரை சந்தித்தான். ஜோதிடர் திடுக்கிட்டார். ’ஜாதகத்தில் ஆயுள் பலம் இல்லையே... என் கணிப்பு தப்பாதே! இவன் எப்படி உயிர் பிழைத்தான்?’என சிந்தனையில் ஆழ்ந்தார்.  ” நடந்ததைச் சொல்?” என்றார் ஜோதிடர். ஆனால் இளைஞனோ, ”ஐயா! ஊர்க்கோடியில் இருக்கும் சிவன் கோயிலை புதுப்பிக்கும் பாக்கியம் எனக்கு உண்டா என பார்த்துச் சொல்லுங்கள்” என்றான்.

அதன் பின்னரே ஜோதிடருக்கு நடந்த விஷயம் அனைத்தும் புரிந்தது. விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள் பெரியவர்கள். மனதில் உண்டாகும் நல்ல சிந்தனைகளுக்கு விதியின் போக்கை மாற்றும் சக்தி இருக்கிறது என்பதை ஜோதிடர் உணர்ந்தார். தற்காலத்தில் நாம் புதிதாக கோயில், குளத்தை  உருவாக்க வேண்டாம். முன்னோர்கள் பாடுபட்டு கட்டிய கோயில், குளங்களை பாதுகாக்க முயற்சித்தால் போதும். பொது கண்மாய், குளத்தை  தூர்வாரலாம்.  நந்தவனம் அமைக்கலாம். ஆளுக்கொரு மரத்தை நடலாம். நல்ல எண்ணங்களை மனதில் விதைப்போம். இதனால் முன்வினைப் பாவம் பறந்தோடும். இப்பிறவியில் மட்டுமல்ல. இனி எப்பிறவி தொடர்ந்தாலும் நல்லெண்ணமே நமக்கு உற்ற துணை.


 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.