Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பெண் தெய்வம்
 
பக்தி கதைகள்
பெண் தெய்வம்

அந்த ஜோசியரின் எதிரே அமர்ந்திருந்தாள் ஜானகி! பெண் ஜோசியர். சமீபத்தில் பழக்கமாகி குடும்பத்தோடு மிகவும் நெருங்கிவிட்ட பெண் ஜோசியர்! 50 வயதை நெருங்கிய பெண்மணி! நல்ல பால்கோவா நிறத்துடன் தளதளப்பான உருவம் கண்களில் அசாத்திய வெளிச்சம்! இது மூன்றாவது சந்திப்புதான்! முதலில் பையனின் கல்யாணத்துக்காக ஜாதகம் பார்த்தபோது அறிமுகம்! அவர் சொன்ன சில பரிகாரங்களையும் பூஜைகளையும் செய்தபோது, அவர் குறித்துக் கொடுத்த சகலத்தையும், சிரத்தையாக நிறைவேற்ற கல்யாணம் சொன்னபடி நடந்து விட்டது. ஜானகியின் கணவர் வெங்கட்டுக்கும், மகன் பிரசாத்துக்கும் கடவுள் நம்பிக்கையே குறைச்சல்தான்! அதுவும் ஜோசியம் என்றால் காத தூரம் ஓடுவார்கள். கடுமையாக விமர்ச்சிப்பார்கள். கொஞ்சம் கேலியும் தெறிக்கும்! ஆனால் ஜானகி நேரெதிர். எந்த நேரமும் கோயில்கள், பூஜை, வீட்டில் ஹோமங்கள் பரிகாரங்கள் என அலைந்து கொண்டிருப்பாள். “ஒரு குடும்பத்தலைவியாக நான் உங்களுக்கு ஒரு குறையும் வைக்கலை! என் கடமைல தவறலை! என்னோட நம்பிக்கைகளை விமர்சனம் பண்ணாதீங்க! வீட்டுச் செலவுக்கு நீங்க தர்ற பணத்துல சிக்கனமா குடித்தனம் நடத்தி, சேமிச்சு, அதுலதான் கோயில்களுக்கு ஜாதக சங்கதிகளுக்கு நான் செலவழிக்கிறேன்!”

அதுதான் நிஜம்! இரண்டாவது முறையாக கணவர் வெங்கட் படுத்த படுக்கையாக கிடந்த போது ஜோசியரை சந்தித்து பூஜை பரிகாரங்களைக் கேட்டாள். அதற்கும் நல்ல பலன் கிடைத்தது! அதில வெங்கட்டுக்கும் கொஞ்சம் நம்பிக்கை வேர் விடத் தொடங்கி விட்டது! வந்த மருமகளுக்கு மாமியார் அளவுக்கு பக்தி இல்லாவிட்டாலும், அதை விமர்சிக்க மாட்டாள். சொன்னதைக் கேட்கும் பெண்தான். கல்யாணமாகி 2 வருடங்கள் முடிந்து விட, குழந்தை உருவாகவில்லை! மருத்துவ ரீதியான அணுகுமுறை தொடங்க, பல பரிசோதனைகள் நடந்தன! இருவரிடமும் எந்தக் குறைபாடும் இல்லை. ஆனாலும் டாக்டர்கள் விட்டு வைப்பார்களா? வரிசையாக பரிசோதனைகளைச் செய்து, அதனால் உடம்பாலும், மனதாலும் பெரிதும் பாதிக்கப்பட்டாள் அனுஷா - மருமகள். செலவும் லட்சங்களில்! டாக்டர்கள் மேலும் மேலும் அடுத்தடுத்த கட்டங்களுக்குப் போக, சலிப்பு உண்டாகி விட்டது. செலவும் தாள முடியவில்லை! இதற்கிடையில் அம்மா வரிசையாக பட்டியலிட்டு கோயில் பிரவேசங்களையும் செய்ய, எதுவும் புதிதாக நிகழ்ந்து விடவில்லை வீட்டிலும் பூஜைகளுக்காக ஒரு சில ஆயிரங்கள் கரைந்தது. உறவு, நட்பு வட்டாரத்தின் கேள்விகள்.. விமர்சனங்கள்..

உதவாத ஆலோசனைகள் - அனுதாபங்கள் -சீண்டிப் பார்க்கும் சொற்கள் என தொடர் கதையாக, இருவரும் அடிபட்டுப் போக. பிரசாத்துக்கு  கோபமே வந்து விட்டது. ஒரு கட்டத்தில்! சத்தம் போடத் தொடங்கி விட்டான். “இனிமே கோயில்களுக்கு நான் செலவழிக்க மாட்டேன். பாக்காத கோயில்கள் இல்லை. எந்த ஒரு பலனும் இல்லை! அடுத்தபடியா டாக்டர்களை பாக்க வேண்டாம். எங்களை வச்சு அவங்க கத்துக்கறாங்க நல்லா சம்பாதிக்கறாங்க. தயவு செஞ்சு ஜாதக கட்டங்களை வச்சிட்டு பொய் சொல்ற ஜோசியர்களை உள்ளே விடாதீங்க. அப்புறமா நான் மிருகம் ஆயிடுவேன்!” ரகளை செய்து விட்டான். அம்மா அதற்கு விளக்கம் சொல்ல, இவன் போட்ட கூச்சலில் அம்மா அழ. அனுஷா மாமியாருக்கு வக்காலத்துக்கு வர, அவளுக்கும் டோஸ் விழுந்தது. “உன் லீவெல்லாம் தீர்ந்தாச்சு! என் சேமிப்பு மொத்தமும் கரைஞ்சாச்சு! இனி தெருவுலதான் நிக்கணும்! உனக்கு சம்மதமா?” “இதப்பாருங்க! நாம நல்லா வாழணும்னு தான் அத்தை இந்தப்பாடு படறாங்க! நம்மை கஷ்டப்படுத்த அவங்க நினைக்கமாட்டாங்க! ரிஞ்சுக்குங்க!” “விட்ரு அனுஷா! அவன் கோபத்துலேயும் நியாயம் இருக்கு. சலிப்பு வந்துட்டா, மனசு வாடிப் போயிடும். முயற்சிகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் ஒரு எல்லை உண்டு! இதையே புடிச்சிட்டு எத்தனை காலம் வாழ முடியும்?” அப்பா சொல்ல,

அடங்கிப் போனார்கள். இதோ திரும்பவும் ஒரு ஆறு மாதம் கழிந்த பிறகு ஜானகி மனசு பொறுக்க முடியாமல் அந்த பெண் ஜோசியரிடம் மூன்றாவது முறையாக வீட்டில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக வந்து எதிரே பவ்யமாக நிற்கிறாள். “ஒக்காருங்க! பேரப்பிள்ளைக்காக தவமிருந்து இங்கே வந்து நிக்கிறீங்க!” “ஆமாம் மாதாஜி!” ஜாதகத்தை எடுத்தாள். “உங்க கணவர் ஜாதகம் இருக்கா?” “புரியலை குழந்தை பற்றித் தெரிய -பிள்ளை, மருமகள் ஜாதகம்தானே வேணும்?”
“ஆமாம்! வம்சமில்லையா? வேரைப் பாத்துட்டா நல்லதில்லையா?” “தர்றேன்!  ஜானகி எடுத்துத்தந்தாள். “இவருக்கு ஒடம்பு முடியாதப்ப, பார்த்திருக்கேன் ஜாதகத்தை!”
“ஆமாம் மாதாஜி! இப்பப் பாருங்க!” அந்த மாதாஜி ஆராய்ந்தாள். பத்து நிமிடங்களாக! “ஜானகி! உங்க குல தெய்வத்துக்கு நீங்க எதுவுமே செய்யலை. அதுதான் கோளாறு!
“என்ன சொல்றீங்க! வருஷா வருஷம் கண்ணூர் பக்கத்துல உள்ள தளிபரம்பால குடியிருக்கற அருள்மிகு ராஜராஜேஸ்வரன் கோயிலுக்கு குடும்பத்தோட போய். பொன்குடம், மற்ற வழிபாடுகளை எடுத்துச் செய்யாம இருந்த தில்லையே! கடந்த 15 வருடங்களா இது நடக்குதே! இதுக்கு மேல என்ன செய்யணும்? புரியலை!” மாதாஜி ஒரு நொடி மவுனம் சாதித்து விட்டு, “உங்க குலதெய்வம் தொடர்பா உங்ககிட்ட இதுவரைக்கும் நான் பேசினதில்லை!” “ஆமாம் மாதாஜி!

மாதாஜி சோழி போட்டு ஏதோ கணக்கெடுத்தார்!

“உங்க குலதெய்வம் - பெண் தெய்வம் ஜானகி!”

“இல்லைம்மா! ராஜராஜேஸ்வரன் கோயில்ல பெண் தெய்வம் தனியா இல்லையே!”

“நான் அதைச் சொல்லலை, உங்க குலதெய்வம் பெண் தெய்வம்!”

“எங்க முன்னோர் அப்படிச் சொல்லலியே! நாங்க இப்ப எப்படி அதைக் கண்டுபுடிக்கிறது?”

“உங்க ஊர் எது?”

“பல்லசேனா - பாலக்காட்டுக்குப் பக்கத்துல - அரை மணி நேரப் பயணம்.

“அங்கே போனதுண்டா!”

“இதுவரைக்கும் இல்லை மாதாஜி!”

“அங்கே போங்க! ஏதோ ஒரு அற்புதம் நிகழும் எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் போங்க! ராஜராஜேஸ்வரன் உங்க குலசாமியா இருக்கட்டும். ஆனா இதுவும் உங்க குலதெய்வம்தான். அங்கே போய் வழிபாடுகளைச் செய்யுங்க! அங்கே போன பிறகு இன்னொரு அற்புதமும் நிகழும்!”

“அந்த ஊர் தெய்வம் எது?”

“மீன் குளத்தி பகவதி அம்மன்! செவ்வாய். வெள்ளிக்கிழமைகள்ல சந்தனம். குங்குமம் வைத்து விளக்கேற்றி மலர் வைத்து பூஜித்தால்... சகல தோஷங்களும் நீங்கி நினைத்தது நடக்கும்!”

“சரி மாதாஜி! அப்படியே செய்யறோம்!”

ஜானகி வெளியே வந்தாள்.

‘கண்டிப்பாக கோயில் வழிபாடு என்றால், பிரசாத் சம்மதிக்க மாட்டான். கோபப்படுவான். என்ன செய்து அவன் மனசை திருப்பி அங்கு போக முடியும்?’

யோசனையோடு வீட்டுக்கு வந்தாள்.

மகன், மருமகள் இருவரும் வேலைக்குப் போயிருந்தார்கள் -கணவரும்தான்.

இரவு ஏழு மணிக்கு திரும்பி விட்டார்கள்.

“அம்மா! நாளைக்கு நான் பாலக்காடு போகணும்!”

சிலிர்த்தது ஜானகிக்கு!

“எதுக்குப்பா?”

“ஆபீஸ் வேலை 2 நாள் அங்கே இருக்கு!”

“என்னங்க! நாமளும் போகலாமா?”

“அவன் வேலையா போறான், நாம எதுக்குடி?”

“உங்க சொந்த ஊர் பல்லசேனா!

நாம யாரும் அந்த ஊரைப் பார்த்ததில்லை. பிறந்த ஊரை பாக்கலைனா எப்படீங்க?”

“அங்கே நமக்கு யாரும் இல்லை ஜானகி?”

“ஏன்? அம்மா இருக்காளே!”

“யாருடி? உங்கம்மா, எங்கம்மா ரெண்டு பேரும் இப்ப உயிரோட இல்லை.

“மனசுல இருக்காங்க! போதும்! அங்கே ஒரு நடை போயிட்டு வரலாம்! பிரசாத் சொல்லுடா!”

“சரிப்பா! போய்த்தான் பாக்கலாமே! கிராமத்தைப் பார்க்க எனக்கும் ஆசைதான்!”

படக்கென சம்மதித்து விட்டான்! உடனே ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்து மற்ற சங்கதிகளையும் அப்பாவை விட்டுப் பார்க்க வைத்து, இரவு தனியாக அவரிடம் விவரம் சொல்லி, ஜானகி பயணத்துக்குத் தயாராகி விட்டாள்!

‘பிரசாத் தடுக்காதது  நல்ல சகுனமாக தெரிந்தது!’

‘பகவதி அம்மா அழைக்கிறாள்! சந்தேகமே இல்லை!’

முதல் நாள் ஆலப்புழை எக்ஸ்பிரசில் புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு பாலக்காட்டில் இறங்க.

“இங்கேய ஓட்டல்ல ரூம் போட்ரலாமாப்பா?”

“முதல்ல நம்ம ஊருக்குப் போகலாம்டா பிரசாத்!”

“அங்கே என்ன வசதிகள் இருக்கோ... தெரியலியேம்மா!”

“இருக்குடா, தங்கிக்க ஓட்டல் இருக்கும் ரூம் போட்டு குளிச்ச பிறகு ஊரை ஒரு பார்வை பார்த்துடடு, அப்புறமா முடிவெடுக்கலாம்!

நான் நெட்ல பார்த்துட்டேன்!”

“அப்பா! சொந்த ஊர்னு வந்தப்ப, தனி வைப்ரேஷனா?”

“சந்தோஷமா இருக்குடா! நம்ம ஊருடா! நானே 55 வயசுலதான் வர்றேன். ஆனா நீ முப்பதுல வந்துட்டே! எங்கம்மா சொன்ன பழைய கதைகள் ஊரைப் பற்றி நிறைய, அங்கே போன பிறகு சொல்றேன்!”

காரை ஏற்பாடு செய்து கொண்டு அரைமணியில் பல்லசேனா ஊரை அடைந்தார்கள்.

மிகச்சிறிய ஊர் கோயில் மட்டுமே பிரதானம்!

லாட்ஜ் இருந்தது! ரூம்களும் இருக்க, உடனே பதிவு செய்து உள்ளே போனார்கள்.

குளித்தார்கள்.

“அப்பா! பசிக்குது!”

“இரு பிரசாத்! சொந்த ஊருக்கு வந்திருக்கோம்! பகவதி அம்மாவை பார்த்து வணங்கிட்டு, அப்புறமா சாப்பிடலாம்!”

“சரிம்மா!”

சகலத்துக்கும் சம்மதிக்கிறான்!

கோயிலுக்குள் நாலு பேரும் நுழைந்தார்கள். கூட்டமாக இருந்தது! ஏராளமான ஆண்களும் பெண்களும்!

ஸ்பெஷல் டிக்கெட், அர்ச்சனைக்கான பொருட்கள் என அங்குள்ள விசேஷ சங்கதிகளை பெற்றுக் கொண்டு சிறப்பு வழியில் நுழைய, பகவதி அம்மாவின் காலடியில் கொண்டு போய் நிற்க வைத்தார்கள்.

ஒரு பாத்திரத்தில் நாணயங்களை கொட்டி வைத்து, அதை அள்ளி இன்னொன்றில் போடும் வழிபாடு!

“தம்பதிகளா சேர்ந்து செய்ங்க! நினைச்சது நடக்கும்!”

“பிரசாத் - அனுஷாவை அம்மா நிற்க வைத்து அதை செய்யச் சொல்ல, எங்கிருந்தோ வந்த நாலைந்து வயது சிறுவன் - கொழு - கொழு வென கிருஷ்ண விக்ரகம் போல இருந்தான். கள்ளச்சிரிப்பு! அனுஷாவை உரசியபடி நின்றான்.

இவர்களுடன் பிரார்த்தனை முடிக்கும் வரை நின்று விட்டு, எங்கே போனான் என்றே தெரியவில்லை.

ஜானகிக்கு சிலிர்த்தது.

பிறகு பிராகாரத்தை சுற்றி வந்து அழகான அந்தக் குளத்தை நெருங்கி, இறங்கி, படித்துறையில் கால் பதித்து நின்று காலைக் காற்றை அனுபவித்து, கோயில் மணமும், பகவதி அம்மனின் அருளும் புடைசூழ, பிரசாத்தே ஒரு மாதிரி லயித்து விட்டான்.

அங்கு என்ன வழிபாடு உண்டோ, அதை செய்து முடித்தார்கள். பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளியே வந்த போது, குளிர்ந்த காற்று முகத்தை வருட.

“இங்கே வேறென்ன இருக்கு?” பிரசாத்தே கேட்க.

“ரெண்டு கிலோ மீட்டர் தூரத்துல ஒரு சந்தான கோபாலகிருஷ்ணன் கோயில் இருக்கு. ரொம்ப விசேஷம். இன்னிக்கு திருவோண நட்சத்திரம்! சிறப்பு” ஒருவர் சொல்ல.

“என்னங்க! நம்ம பிரசாத்தோட நட்சத்திரம்!”

“பாத்துடலாம்!”

காரில் பயணித்து சந்தான கோபால கிருஷ்ணன் கோயிலில் நுழைந்தார்கள்.

அழகான அந்த தெய்வத்தை வழிபட்டார்கள்.

“பால்பாயச நைவேத்தியம்!”

ஒரு ஊரே சாப்பிடும் அளவுக்கு மிகப் பெரிய பாத்திரத்தில் நுரை பொங்க பால்யாசம்!”

தரிசனம் முடித்து வரும் அத்தனை பேருக்கும் பாத்திரங்களில் பால் பயாசம் வழங்கப்பட,

இவர்கள் நாலு பேரும் டம்ளர்களில் பெற்றுக் கொள்ள.

அன்றைய முதல் உணவு!

காலை குளித்து வழிபட்ட பிறகு பச்சைத் தண்ணீர் கூட குடிக்காமல் முதன் முதலாக வயிற்றில் நேராக இறங்கும் சூடான பால்பாயசம்!

அங்கே போன பிறகு இன்னொரு அற்புதமும் நிகழும்!

மாதாஜி சொன்னது... நிகழ்ந்து விட்டது.

மீன் குளத்தி பகவதி அம்மா -தாய்மையைத் தருவாள்.

சந்தான பாக்யத்தை அருளும் குழந்தை தெய்வம்! பாலூட்டும் பாக்யத்தை வழங்கப்போவதற்கு முன்னுரையாக பால்பாயசம் முதல் உணவாக!

கோயிலை விட்டு வெளியே வந்ததும் அடக்க முடியாமல் ஜானகி அழுது விட்டாள்.

உணர்ச்சிவசப்பட்ட அழுகை!

ஏன் அழுகிறாள் என்று மற்ற மூவரும் கேட்கவில்லை. காரணம் புரிந்து விட்டது. பல சமயம் மவுனத்தை விட சிறந்த பதில் வேறு இருக்க முடியாது.

வராத மகனை வரவழைத்து.

தராத தரிசனத்தைத் தந்து, பாலூட்டும் அன்னையாக நின்று விட்டாள் பகவதி அம்மா!

கோயில்களுக்குச் செல்ல ஆண்டவனின் அனுமதி வேண்டும்!

தலைகீழாக நின்றாலும் தெய்வம் அனுமதிக்கா விட்டால், அங்கு போக முடியாது!

வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாலும், நீ வந்துதான் தீரவேண்டும் என்றால், தெய்வம் வரவழைத்து விடும்!”

சந்தானத்தை அந்த கோபாலகிருஷ்ணன் தருவான் என்ற நம்பிக்கை ஜானகிக்கு வந்து விட்டது.

பால்பாயசம் வீரியம் தரும்!

பால்பாயசம் கர்ப்பக் கதவுகளைத் திறக்கும்!

நம்பிக்கை என்றுமே பொய்யாவதில்லை!


 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.