Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ரத சப்தமி
 
பக்தி கதைகள்
 ரத சப்தமி

உயிர்களையும், பயிர்களையும் வாழ வைக்கும் சூரிய பகவானுக்கு ஆண்டுக்கு இரண்டு திருவிழாக்கள் நடக்கும். ஒன்று தைப்பொங்கல், மற்றொன்று ரதசப்தமி.

உத்தராயண புண்ணிய காலமான தை மாத அமாவாசைக்குப் பின்வரும் ஏழாம் நாளில் அதாவது சப்தமியன்று ’ரதசப்தமி’  கொண்டாடுகிறோம். சூரியன் இந்நாளில் அவதரித்தார். அதாவது சூரியனின் பிறந்தநாள்  ரத சப்தமி’. ஏழு குதிரைகள் பூட்டிய தேரில், சூரியன் வலம் வருவதால் அன்று வாசலில் தேர்க்கோலம் இடுவர்.

ரத சப்தமிக்கு இன்னொரு சிறப்புண்டு. இந்த நிகழ்வு பிதாமகரான பீஷ்மருடன் தொடர்புடையது. மகாபாரதப் போரில் அம்புகளால் துளைக்கப்பட்ட பின்னும் பீஷ்மரின் உயிர் பிரியவில்லை. ஏனெனில் தான் விரும்பிய நேரத்தில் மரணத்தை எதிர்கொள்ளும் வரத்தை பெற்றிருந்தவர் அவர்.   உத்தராயண புண்ணிய காலமான தைமாதத்தில் உயிர் பிரிய வேண்டும் என விரும்பினார். அதற்காக உடம்பில் தைக்கப்பட்ட அம்புகளுடன் காத்திருந்தார்.  ஆனால், தை பிறந்த பின்னும் உயிர் பிரியவில்லை.  வரத்தின்படி நடக்காதது ஏன் எனக் குழம்பினார். இந்நிலையில் வியாச மகரிஷி போர்க்களத்திற்கு வந்தார். “வரத்தின்படி என் மரணம் இன்னும் நிகழவில்லையே வியாச பகவானே?” எனக் கேட்டார் பீஷ்மர்.

“பிறருக்கு  தீமை செய்யாமல் இருப்பது எப்படி  ண்ணியமாகுமோ அது போல பிறருக்கு தீமை, அநீதி நேரும் போது தடுக்காவிட்டால் பாவம் சேரும். அநீதியைத் தட்டிக் கேட்காததற்கான தண்டனை ஏற்படும். அதையே இப்போது அனுபவிக்கிறீர்கள் பீஷ்மரே...” என்றார். “ஆம் வியாசரே... தாங்கள் சொல்வதன் காரணம் புரிகிறது” என கம்மிய குரலில் கூறினார் பீஷ்மர்.   அரசபையில்  துச்சாதனன் துகில் உரிந்த போது திரவுபதிக்கு யாரும் உதவ முன்வரவில்லை. பீஷ்மர் உள்ளிட்ட அனைவரையும் பார்த்து அபயக் குரல் எழுப்பினாள் அவள்.  தர்மத்தை உணர்ந்த பீஷ்மர் கூட தலைகுனிந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். தட்டிக் கேட்கவோ, தடுக்கவோ வரவில்லை. உண்மையை உணர்ந்த பீஷ்மரின் கண்களில் ஈரம் கசிந்தது.  “தவறு தான். அன்று நான் செயல்படாமல் இருந்ததை நினைத்தால் மனம் கூசுகிறது வியாசரே... நான் விரும்பியபடி உயிர் பிரிய என்ன செய்ய வேண்டும்?” எனக் கேட்டார்.  “ பெரும் தவறை செய்து விட்டீர்கள். மனதார வருந்தும் போது மன்னிப்பும் கிடைக்கும். பாவமும் அகலும். இருந்தாலும்....”
வியாசர் மெல்ல இழுக்க, பீஷ்மர் கவலையுடன் என்ன சொல்லப் போகிறாரோ எனப் பார்த்தார். “இந்த அவையில் என்னைக் காப்பாற்ற யாரும் இல்லையா?’ எனக் கதறினாள் திரவுபதி. தவறுக்கு துணை போனது உமது கண்கள். அந்த அபயக் குரலைக் கேட்டும் உம் செவிகள் பொருட்படுத்தவில்லை. இந்தத் தவறை எதிர்த்துப் பேசவில்லை உமது வாய். தோள் வலிமையிருந்தும்  தவறுக்கு உடன் போனது உமது தோள்கள். ஆயுதம் இருந்தும் அநீதியை எதிர்க்காத உமது கைகள், கயவனைத் தண்டிக்க முயற்சிக்காத கால்கள்... இப்படி உமது உடலின் எல்லா உறுப்புக்களும் கயவர்களுக்கு துணை போயிருக்கின்றன. இவை  தண்டனை பெற்றாக வேண்டுமே...” நீண்ட மூச்சுடன் நிறுத்தினார் வியாசர்.

“நான் என்ன செய்ய வேண்டும். சொல்லுங்கள்...” கெஞ்சினார் பீஷ்மர். கையில் இருந்த எருக்க இலைகளை பீஷ்மரின் உடல் முழுவதும் அடுக்கிய வியாசர், “பீஷ்மரே... ’அர்க்க பத்ரம்’ என்னும் இந்த எருக்க இலைகள் சூரியனின் சக்தியைக் கொண்டவை. இவை உமது பாவங்களைப் போக்கி புனிதப்படுத்தும். அதன் பின், நீர் விரும்பிய வண்ணம் நடக்கும்” என்றார். அதன்படியே பீஷ்மரின் பாவங்களை எருக்க இலைகள் போக்க...அவர் விரும்பியபடி மரணம் உண்டானது. ரதசப்தமிக்கு மறுநாளில் அஷ்டமியன்று உயிர் பிரிந்தது. இந்நாள் ’பீஷ்மாஷ்டமி’ எனப்படுகிறது.    “பீஷ்மர் பிரம்மச்சாரியாக ஆயிற்றே...அவருக்கு பிதுர் கடன் செய்வது யார்?” என வருந்தினார் தர்மர். “கவலை வேண்டாம் தர்மரே... ஒழுக்கம் தவறாத உத்தம பிரம்மச்சாரி, துறவி என்பதால் பீஷ்மருக்கு பிதுர்கடன் செய்யத் தேவையில்லை. ஆனாலும், ரதசப்தமியன்று  உடம்பின் மீது எருக்க இலைகளை வைத்து நீராடுவோர் அனைவரும்  பீஷ்மருக்கு புண்ணியம் சேர்ப்பார்கள். மேலும் செய்த பாவங்களில் இருந்தும் அவர்களும் விடுபடுவர்” என்றார் வியாசர்.
இந்நாளில் சூரியனுக்கு சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை  படைப்பர். சூரியனுக்குரிய ஸ்லோகம், ஸ்தோத்திரம் சொல்லலாம். ’ஓம் ஸ்ரீஆதித்யாய நம:’ என்ற மந்திரத்தை சொல்லலாம்.  இன்று செய்யும் தானம் அளவற்ற புண்ணியம் தரும். சூரியனுக்குரிய தானியமான கோதுமையில் செய்த உணவுகளை ஏழைகளுக்கு கொடுக்கலாம்.   தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள சூரியனார்கோவில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் உள்ள வேதபுரீஸ்வரர், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம், திருப்பதி போன்ற தலங்களைத் தரிசியுங்கள். 


 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.