Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பங்குனி உத்திரம்
 
பக்தி கதைகள்
பங்குனி உத்திரம்

பங்குனி உத்திர நாளில், சந்திரன் தன் ஒளியை முழுமையாக பூமிக்கு வழங்குகிறான். எனவே பங்குனி மாத நிலவின் குளிர்ச்சியான ஒளி உடல், மனதிற்கு பலம் அளிக்க வல்லதாக உள்ளது. மேலும் சூரியனுக்குரிய  உத்திர நட்சத்திரத்துடன், சந்திரனும் இணைவாதல் இந்நாள் முக்கியத்துவம் பெறுகிறது.  இந்நாளில் சூரியன், சந்திரனுக்கு சன்னதிகள் உள்ள கோயில்களில் வழிபடுவது சிறப்பு. அம்பிகை வழிபாடு கூடுதல் பலன் தரும். இதை விட சிறப்பு, தெய்வீகத் திருமணங்கள் எல்லாம் இந்நாளில் நடந்தவையே!
இறந்த பூம்பாவையை உயிர்ப்பிக்கும் போது ஞானசம்பந்தர், ’பங்குனி உத்திர நாளில் சிவபெருமானின் திருக்கல்யாணம் சென்னை, மயிலாப்பூரில் கோலாகலமாக நடக்குமே... அதைக் காணாமல் போனாயே” என்று தேவாரப் பாடலில் பாடியுள்ளார்.

● மலையரசனின் மகளாக பார்வதி என்ற பெயருடன் அவதரித்தாள் அம்பிகை. சிவனை மணம் புரிய வேண்டும் என்பதற்காக காஞ்சிபுரத்தில் கம்பையாற்றங் கரையில் மாமரத்தின் அடியில் ஆற்று மணலில் சிவலிங்கம் அமைத்து வழிபட்டாள்.  ஆற்றில் வெள்ளத்தைப் பெருகச் செய்தார் சிவன். சிவலிங்கம் அடித்துச் செல்லுமோ என்ற பயத்தில் தன் மார்போடு  அணைத்தாள் பார்வதி. அப்போது சிவலிங்கத்தில் இருந்து சுவாமி வெளிப்பட்டு, பார்வதியை மணந்தார். இந்த சம்பவம் நிகழ்ந்தது பங்குனி உத்திர நாளில். இவரே ’ஏகாம்பரநாதர்’ என்ற திருநாமத்தோடு காஞ்சிபுரத்தில் அருள்புரிகிறார்.

● மகாலட்சுமி பாற்கடலில் பிறந்த நாள் பங்குனி உத்திரம்.  கையில் ஒரு பூமாலையுடன் தோன்றிய அவள், அதை  திருமாலுக்கு அணிவித்து மணாளனாக ஏற்றாள். பிறந்த நாளிலேயே மணவிழாவையும் கொண்டாடினாள் மகாலட்சுமி.  

● ராமர், லட்சுமணர், பரதர், சத்ருக்னர் ஆகிய சகோதரர் நால்வருக்கும் சீதை, ஊர்மிளை, மாண்டவி, சுருதகீர்த்தியோடு ஒரே மேடையில் திருமணம் நிகழ்ந்தது இந்நாளில் தான்.

● ஆண்டாள் –ரங்கமன்னார், இந்திராணி – இந்திரன் திருமணம்  நிகழ்ந்ததும் இதே நாள் தான்!

● அஸ்வினி, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திர தேவியர்களை சந்திரனும், லோபாமுத்திரையை அகத்தியரும் மணம் புரிந்தது இன்று தான்!

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கும், தெய்வானைக்கும் இந்த நாளில் தான் திருமணம் நிகழ்ந்தது.

இத்திருமணக் கோலத்தை திருப்பரங் குன்றம் குடவரைக் கருவறையில் தரிசிக்கலாம். திருமணத்துக்கு வந்தவர்கள் அதே கோலத்துடன் நமக்கும் தரிசனம் தருகின்றனர்.  பவளக்கனிவாய் பெருமாள், முருகப்பெருமான், துர்கை, கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், ஆவுடையநாயகி, அன்னபூரணி என அடுத்தடுத்து ஒரே கருவறையில் காட்சியளிக்கின்றனர்.  மாப்பிள்ளையாக முருகன் பீடத்தில் அமர்ந்திருக்க... கீழே ஒருபுறம் தெய்வானை, மறுபுறம் நாரதர் காட்சி தருகின்றனர். மேல் சுவரில் சூரியனும், சந்திரனும் இருக்கின்றனர். திருப்பரங்குன்றத்தில் தெய்வானை திருக்கல்யாணம் என்றால், திருச்செந்தூரில் வள்ளி திருக்கல்யாணம் இந்நாளில் நடக்கிறது. முருகனும் வள்ளியும் மாலை மாற்றியதும் பக்தர்கள் வள்ளிக்கு தினை மாவில் விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர்.  

திருமணம் ஆகாதவர்கள் கோயில்களில் நடக்கும் திருக்கல்யாண வைபவத்தைத் தரிசித்தால், விரைவில் மாலை சூடும் வைபவம் நடக்கும். இந்நாளில் குலதெய்வத்தை வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறக்கும். மனதில் நிம்மதி நிலைக்கும். புனிதமான ஆறு, கடல்களில் பங்குனி உத்திரத்தன்று நீராடினால்  பாவம் போகும்; புண்ணியம் சேரும். இஷ்ட தெய்வத்தை நினைத்து விரதமிருந்தால் விருப்பம் நிறைவேறும். குறிப்பாக திருமண ஆகாத பெண்கள் அனுஷ்டிப்பது சிறப்பு. ஆண்டுதோறும் பங்குனி உத்திர விரதமிருந்தால், மறு பிறவி கிடைக்காது. இந்நாளில் செய்யும் தானம் ஒருவரின் பரம்பரைக்கே புண்ணியம் கொடுக்கும். பங்குனியில் தண்ணீர் பந்தல், மோர் பந்தல் வைத்து தாகசாந்தி செய்வர்.   பங்குனி உத்திரத்தன்று  பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் இளநீர், பால், பன்னீர், புஷ்பம், கொடுமுடி தீர்த்தத்தை காவடியில் சுமந்து வந்து பழநி முருகனுக்கு அர்ப்பணிப்பர். செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள திருத்தலமான திருக்கழுக்குன்றம் மலையடிவாரத்தில் பக்தவத்சலேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு உள்ள திரிபுரசுந்தரியம்மன் சன்னதியில் பங்குனி உத்திரத்தன்று சிறப்பு அபிஷேகம் நடக்கும்.  தமிழக தென் மாவட்டங்களில் சாஸ்தா எனப்படும் ஐயப்பன் கோயில்களில் பங்குனி வழிபாட்டுக்காக திரளான பக்தர்கள் ஒன்று கூடுவர். பங்குனி உத்திர நாளில் விரதமிருந்து வழிபாட்டால் செய்த பாவம், தோஷம் அனைத்தும், தீயிலிட்ட பஞ்சாக பொசுங்கும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.