Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அவள் தேர்ந்தெடுத்த வாழ்க்கை
 
பக்தி கதைகள்
அவள் தேர்ந்தெடுத்த வாழ்க்கை

மதுரையில் ஒரு நட்சத்திர ஓட்டலின் அரங்கில் அமர்ந்திருந்தேன். உறவினரின் மகளுக்கு நிச்சயதார்த்தம். மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட்டார்கள்.

மணப்பெண்ணை அலங்காரம் செய்து அழைத்து வந்தனர்.  பூரணி லட்சணமான பெண். இலக்கியத்தில் முதுகலை படித்தவள்.
அடுத்தவர் துன்பப்படுவதை ஒருபோதும் சகிக்க மாட்டாள்.

அவள் முகம் பார்த்ததும் திடுக்கிட்டேன். சுரத்தேயில்லை.
பூரணிக்கு மாப்பிள்ளையைப் பிடித்ததால் தானே நிச்சயதார்த்தம் அளவிற்கு வந்திருக்கிறது?  இல்லை மாப்பிள்ளைப் பையனுடன் ஏதும் பிரச்னையா?

பூரணியின் அலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்.
“உன் முகம் சரியாக இல்லையே என்னாச்சு?”

ஒரே நொடியில் பதில் வந்தது.

“ உங்களிடம் பேச வேண்டும் பெரியப்பா. பத்து மணிக்கு ஓட்டலில் நான் இருக்கும் அறைக்கு வாருங்கள்..”சென்றேன்.

என்னைப் பார்த்ததும் அழுதாள்.

“ஏம்மா கல்யாணம் பிடிக்கலையா?”

“கல்யாணமே பிடிக்கல.. பெரியப்பா! பயமா இருக்கு.”

எனக்குத் தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. திடீரென இப்படிச் சொன்னால்?

“கஜா புயல் நிவாரணம் அளிக்க தஞ்சாவூர் பக்கத்தில் சில கிராமங்களுக்குப் போனேன். மக்கள் வாழறதைப் பாத்து வெறுத்துப் போயிட்டேன்.

அவசரத்துக்கு ஒரு மருத்துவமனை இல்ல. சாலை வசதியில்ல. சுத்தமான குடிதண்ணீர் இல்ல. அடிப்படை சுகாதார வசதிகளே இல்ல.

மழை பெய்யலேன்னா அவங்களுக்குப் பொழப்பும் இல்ல,
பெரியப்பா!”

“என்னம்மா நியூஸ் வாசிக்கற மாதிரி சொல்லிக்கிட்டு இருக்க?”

“பெரியப்பா. கல்யாணம், குடும்பம்,  குழந்தை எதுலயும் எனக்கு நாட்டமும் இல்ல.”

“அப்புறம்?”

“மக்கள்  கஷ்டப்படும்போது நான், என் குடும்பம்னு குறுகிய புத்தியோட வாழ எனக்கு பிடிக்கல பெரியப்பா.”

“அப்புறம்?”   “அப்பாவிடம் சொல்லி எப்படியாவது கல்யாணத்த நிறுத்துங்க. புண்ணியமாப் போகும். என்னை என் போக்குல வாழ வழிவிடுங்க”

“நீ சொல்றது எனக்கு சரியாப் படலம்மா.”

“உங்க பச்சைப்புடவைக்காரிகிட்ட கேட்டுச் சொல்லுங்களேன். அவ என்னைக் ’கல்யாணம் பண்ணிக்கோ’ன்னு சொன்னா நான் அப்புறம் ஒரு வார்த்தை பேச மாட்டேன்”

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

இரவு மணி பதினொன்று. ஓட்டலின் வாசலைக் கடக்கும் போது யாரோ ஒரு பெண் என் பெயரைச் சொல்லி அழைத்தாள்.

அருகே போனதும் தெரிந்தது. பச்சைப்புடவைக்காரி.

“பூரணியின் பிரச்னையில் மனம் உடைந்து போய் விட்டாயா?”

“ஆம், தாயே. பூரணியின் தந்தை எனக்குத் தம்பிமுறை வேண்டும். விஷயம் தெரிந்தால் அவ்வளவு தான்”

“அதற்காக விருப்பம் இல்லாத பெண்ணை வற்புறுத்திக் கல்யாணம் செய்து வைக்கப் போகிறீர்களா?”

“பாவம் தாயே! பூரணி சிறியவள். குழந்தை. அவளுக்கு விவரம் போதாது.”

“அவளுக்கு 28 வயது. அதை விட முக்கியம், அவள் மனதில் கருணை இருக்கிறது. மற்றவர் படும் துன்பத்தைப் பார்த்து வாடும் தூய உள்ளம்  இருக்கிறது. பெரிய வரமப்பா.”

“இல்லை, தாயே! கல்யாணம் முடிந்து இரண்டு குழந்தை வந்தால் எல்லாம் சரியாகிவிடும்.”

“சரி.. பூரணியை நினைத்து வருந்தாதே. ஒரு அழகான காட்சியைக் காட்டுகிறேன் பார்.”

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர். ஆரஞ்சு பழத் தோட்டங்கள். மரங்களில் பச்சையும் மஞ்சளுமாக ஆயிரம் ஆயிரம் பழங்கள். பண்ணையாட்கள் பழங்களைப் பறித்து சாக்கில் கட்டிக் கொண்டிருந்தனர்.

“சற்று தள்ளி இருக்கும் அந்த நிலத்தைப் பார்.”

பார்த்தேன். அதுவும் ஆரஞ்சுத் தோட்டம்தான். அங்கும் 1000 மரங்கள் இருக்கும். ஆனால் என்ன அதிசயம்! ஒரு மரத்திலும் பிஞ்சு கூட இல்லை. ஏன் என்னாச்சு?

அடுத்த காட்சியில் காய்க்காத தோட்டத்தின் சொந்தக்காரர் நண்பரிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.

“ஒரு நாளா, ரெண்டு நாளா! ஏழு வருஷமாச்சு! சின்னப் பிஞ்சு கூடக் காணோம்யா!  

வாங்கின கடனுக்கு என்ன செய்யப் போறேன்னு தெரியல!”

அந்த நண்பர் வேளாண்துறையில் விற்பன்னராக இருக்க வேண்டும். தோட்டத்தைச் சுற்றியபடி ஆங்காங்கே  மண்ணை சேகரித்தபடியே நடந்து வந்தார்.

“ இந்த மண்ணை சோதிச்சு பார்த்து உனக்கு விபரம் சொல்றேன்.”
காட்சி மாறியது.

இரண்டு நாட்கள் கழித்ததும் நண்பரை சந்திக்க வந்தார்.

“ஆரஞ்சு மரத்தை நடுவதற்கு முன்னாலேயே மண்ணைச் சோதிச்சிருக்கணும். இதுல ஆரஞ்சு மரம் வளரும். ஆனா பிஞ்சு, காய் எதுவும் வராது. அதுக்கான சக்தி மண்ணுக்கு இல்லை”

“ரோட்டுக்கு அந்தப்பக்கம் இருக்கிற தோட்டத்துல பழம் நிறைய விளையுதே”

“அது வேற மண்ணு. இது வேற மண்ணு. இதில் ஆரஞ்சு வராது.  சோயா பீன்ஸ் நட்டா நல்லா வரும்னு சொல்றாங்க!”

“இப்ப என்ன செய்யறது?”

“இந்த ஆரஞ்சு மரங்கள வெட்டி விட்டு மண்ணை நல்லா ஒருமுறை உழுதுட்டு பீன்ஸ் நடுவதை தவிர வழியில்லை”

“பத்து லட்சம் நஷ்டமாகுமே”

“அதுக்கு என்ன செய்ய முடியும்?”

பச்சைப்புடவைக்காரியே விளக்கம் அளிக்க ஆரம்பித்தாள்.

“நீயும், உன் தம்பியும் செய்த புண்ணியம் பூரணியின் வாழ்க்கையில் திருமணம் என்ற பயிரை நடும் முன்பாக மண்வளப் பரிசோதனை நடந்து விட்டது. அந்த மண் திருமணத்திற்கும், குடும்ப வாழ்விற்கும் ஏற்றதல்ல என்பது தெரிகிறது.

“.. ”

“அடுத்தவர் படும் துன்பத்தைக் காணச் சகிக்காத பூரணி துறவு வாழ்வுக்கு ஏற்றவள். அவள்  வீட்டில் விளக்கேற்றவில்லையே என நீங்கள்  எல்லாம் கவலைப்படுகிறீர்கள்.

அவளோ மக்கள் மனங்களில் விளக்கேற்ற வந்திருக்கிறாள்.

அவள் போக்கில் விடுங்கள். இதை உறவினருக்கு புரிய வைப்பது உன் பொறுப்பு.

“அது சரி... நீ எந்த மாதிரியான பயிருக்கு ஏற்றவன் என தெரிய வேண்டாமா?”

“தேவை இல்லை தாயே. இது உங்கள் பூமி. இதைப் பொன் விளையும் பூமியாக வைத்திருப்பதோ, பாலைவனமாக வைத்திருப்பதோ உங்கள் இஷ்டம் தான்”

சிரித்தபடி அன்னை மறைந்தாள். நான் அழுது கொண்டிருந்தேன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.