Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சோதனை மேல் சோதனை!
 
பக்தி கதைகள்
சோதனை மேல் சோதனை!

என் நண்பரின் மகனிடமிருந்து வந்திருந்தது  மின்னஞ்சல். அவன் வாழ்வில் பிரச்னைகள் உண்டு என தெரியும். ஆனால் இவ்வளவு மோசமாக இருக்கும் என  எதிர்பார்க்கவில்லை.
முத்து படிப்பில் கெட்டிக்காரன். ப்ளஸ் டூவில் நல்ல மதிப்பெண் எடுத்தான். மருத்துவம் படிப்பதில் உறுதியாக இருந்தான்.  தமிழகத்தில் இடம் கிடைக்காததால் கர்நாடகா குல்பர்காவிலுள்ள கல்லூரியில் சேர்ந்தான்.  

இரண்டாவது வருடம் படித்த போது இனம்புரியாத நோய் தாக்கியது. தாங்க முடியாத வயிற்றுவலி, தலைசுற்றல், கவனம் சிதறுதல் என பல சிரமங்கள். அங்கு சிகிச்சை செய்தும் பலன் இல்லை. ஊருக்குக் கூட்டி வந்தார்கள். நல்லவேளை ஆறு மாதத்தில் குணமானான். ஆனால் இனி அங்கு போக மறுத்து விட்டான்.

அரசு ஊழியரான அவனது தந்தை பி.காம்., சேர்த்து விட்டார். படிப்பு முடிந்ததும் தனியார் வங்கியில் வேலை வாங்கிக் கொடுத்தார்.  முத்து நன்றாக வேலை பார்த்து இரண்டே ஆண்டில் அதிகாரியானான். நல்ல சம்பளம், கவுரவம் என வாழ்வதற்குள் பிரச்னை முளைத்தது. முத்துவின் உயரதிகாரி பண மோசடியில் சிக்கினார்.  பழியை முத்துவின் மீது விழச் செய்தார். வழக்கு தொடர்ந்தனர். முத்து நிரபராதி என்று தீர்ப்பு வந்தாலும் வேலை போனது.

முத்துவிற்கு முப்பது வயதான போது தந்தை ஓய்வு பெற்றார். அவருக்குக் கிடைத்த பி.எப்., பணத்தில் தொழில் செய்ய சொன்னார்.  நண்பன் ராகவனுடன் சேர்ந்து பருப்பு மொத்த வியாபாரம் தொடங்கினான். விரைவில் தொழில் சூடுபிடித்தது.
முதன் முறையாக முத்துவின் கையில் பணம் புழங்கியது.  முத்துவுக்கு பெண் பார்த்து நிச்சயம் செய்தார் தந்தை. இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் என்ற நிலையில் முத்துவின் தலையில் இடி விழுந்தது.

முத்துவின் கூட்டாளி ராகவன் ஏமாற்றி ஓடிவிட்டான். ஊரெல்லாம் நிறுவனத்தின் பெயரில் கடன் வாங்கியிருந்தான்.  முத்துவின் தந்தை வீட்டை அடமானம் வைத்து கடனைத் தீர்த்தார். ஆனாலும் நிச்சயித்த திருமணம் நின்றது.
வேலை தேடினான். சொற்ப சம்பளத்தில் பிழை திருத்தும் பணி கிடைத்தது.  

முத்துவிற்கு 32 வயதானது. தந்தை நோய்வாய்ப்பட்டார். கையில் காசுமில்லை. மனதில் நம்பிக்கையும் இல்லை. இந்நிலையில் முத்துவுக்கு நான் என்ன ஆறுதல் சொல்வது என யோசித்தபடி புத்தக கண்காட்சிக்கு சென்றேன். அங்கு இளவயது பெண்ணாக நின்ற பச்சைப்புடவைக்காரியை சந்தித்தேன்.   

“தாயே, நீங்களா?”

“என்னுடன் வா. முத்துவின் பிரச்னை பற்றி பேசுவோம்.”
அவள் பின்னால் நடந்தேன்.

“முத்துவின் கர்மவினை காரணமாகத் தான் தோல்வியைச் சந்தித்தான். மருத்துவம் படிக்கும் போது நோய் தாக்கியதில் அவன் மனம் ஏகத்துக்குத் துவண்டு விட்டது.  மனக்கதவுகள் இறுக்கமாக மூடிவிட்டன. எதிர்மறை எண்ணங்கள் அதிகமானது. தான் செய்யும் வேலை எதுவும் விளங்காது என எண்ணத் தொடங்கி விட்டான். இதை மாற்றாவிட்டால் இன்னும் துன்பப்படுவான்.”

“அவன் என்ன செய்ய வேண்டும் தாயே!”

“நான் ஒரு காட்சியைக் காட்டுகிறேன். அதன் உள்வாங்கி விட்டு அவனிடம் பேசு. மனதை மாற்று.”

அவர் ஸ்பெயின் நாட்டு கலாரசிகர். நல்ல ஓவியங்கள் உலகின் எங்கு இருந்தாலும் அங்கு போய் அவற்றின் முன் நேரம் போவது தெரியாமல் ரசிப்பது அவரது வழக்கம்.

ஒருமுறை தொலைதூர தீவிலுள்ள கலைக்கூடத்தில்  அபூர்வ ஓவியங்கள் இருப்பதாக தகவல் வந்தது.

தீவை நோக்கிப் பயணப்பட்டார். தீவை அடைய இரண்டு நாள் கடல் பயணம்.  தீவிலோ போக்குவரத்து வசதி இல்லை. மலைப்பாதையில் கழுதை மீது உட்கார்ந்து போக வேண்டிய நிர்பந்தம். பார்க்கப் போகும் பொக்கிஷத்தை நினைத்துக் கொண்டு துன்பத்தை பொறுத்துக் கொண்டார்.

கலைக்கூடத்தை அடைந்ததும் அங்கிருந்த ஓவியங்களைப் பார்க்க ஓடினார். ஆனால் அவருக்கு ’சே’ என்றாகி விட்டது. சாதாரணமாக இருந்தன. அங்கிருந்த முதியவர் ஒருவருக்கு அவரது எண்ணம் புரிந்தது.  

’ ஏமாந்து விட்டதாக நினைக்கிறீர்களா?’

’ஆமாம். இந்த ஓவியங்களைக் காணவா இவ்வளவு கஷ்டப்பட்டேன்?’

’சரி, இப்போது பாருங்கள்’ என்ற முதியவர் ஓவியங்களுக்கு முன்னால், பக்கவாட்டில் இருந்த  சில ஜன்னல் கதவுகளைத் திறந்தார். அவ்வளவுதான் அந்த கலைக்கூடமே ஒளியில் மின்னியது.

சாதாரணமாகத் தென்பட்ட ஓவியங்கள் மீது சூரிய ஒளி பட்டு அதன் வண்ணங்களை அழகாக்கின. ஓவியத்தின் வண்ண வேறுபாடுகள் பளிச் என்று தெரிந்த போது  சாதாரணக் கிறுக்கல்களாக தென்பட்டவை அமரகாவியங்களாக மாறின.
இப்போது சிலிர்த்துப் போய்ச் சிலையாக நின்றிருந்தார் கலாரசிகர். நேரம் போவது தெரியாமல் ஓவியங்களை
ரசித்தார் அவர்.

“முத்துவின் மனக்கதவுகள் திறந்து, இறையருள் என்ற ஒளி பட்டால் போதும். அவனது வாழ்வே வண்ண ஓவியமாகி விடும்”

“அடுத்து முத்துவின் வாழ்க்கை எப்படி போகும் என்று..”

“சொல்கிறேன். அவனிடம் சொல்லாதே. அவன் தந்தை இறந்து விடுவார். பிழைப்பு தேடிச் சென்னை செல்வான். அங்கே   பாடல்கள் எழுதும் வாய்ப்பு கிடைக்கும். பெரிய கவிஞன் என புகழ் பெறுவான். ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்வான். ஐம்பது வயதில் என்னைப் பற்றி ஒரு காவியம் படைப்பான். அது காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.”

“தாயே ஒரே ஒரு நொடி உங்கள் மனதில் ஓடும் எண்ணத்தை அறியும் சக்தியை கொடுங்களேன்.” என் தலையில் கை வைத்து கேட்டதைத் தந்தாள்.

“தாயே இப்போது புரிகிறது. முத்துவிற்குக் காவியம் படைக்கும் பாக்கியத்தைத் தருவது என எப்போதோ முடிவு செய்து விட்டீர்கள். அவன்  நினைத்தபடி  மருத்துவம் படித்திருந்தால் தொழில் வல்லமை, பணம் சம்பாதித்தல், குடும்பம் என வாழ்வு முடிந்திருக்கும்.  அதிலிருந்து அவனைத் திசை திருப்ப நோயைக் கொடுத்தீர்கள். வங்கி வேலையில் படிப்படியாக உயர்ந்து அவன் வங்கியின் தலைவராகக் கூட ஆகியிருப்பான். ஆனால் உங்களைப் பொறுத்தமட்டில் அதுவும் சாதாரணமானது தான்.   

அதனால் நேர்மையற்ற அதிகாரியின் வலையில் அவனை சிக்க வைத்தீர்கள்.  அவன் ஒரு வியாபாரியாகி பத்தோடு பதினொன்றாக வாழ்வதையும் நீங்கள் விரும்பவில்லை. அதனால் மோசமான கூட்டாளியைக் கொடுத்தீர்கள்.

அவன் நெஞ்சில் துன்பம் என்னும் மண்வெட்டியால் ஆழமாகக் குழி தோண்டிக் கொண்டிருக்கிறீர்கள். அவனைத் துன்புறுத்த அல்ல; அந்தக் குழியை  மகிழ்ச்சியால் நிரப்பப் போகிறீர்கள்.  அவன் மீது மொத்த அன்பையும் கொட்டி விட்டு என்னிடம் வந்து அவன் மனக்கதவு திறக்கவில்லை; இதய ஜன்னல் மூடியிருக்கிறது என கதைவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.” கலகலவென சிரித்தபடி மறைந்தாள் பச்சைப்புடவைக்காரி.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.